இந்த ஆய்வுக் கட்டுரை “போதனை — மெய்யா, பொய்யா? பகுத்துணர்வது எப்படி?” என்ற முக்கியமான கேள்வியை வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்கிறது.
பொய்ப் போதனை எப்போதும் வெளிப்படையான பொய்யாக வருவதில்லை; அது உண்மையின் தோற்றத்தோடும், வேத வசனங்களோடும், இயேசுவின் நாமத்தோடும் வரக்கூடும். அதனால்தான் கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை அறிந்திருப்பதோடு, தாங்கள் கேட்கிற போதனைகளைப் பகுத்துணரவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு போதகரின் பேச்சுத்திறன், புகழ், பெருந்திரளான மக்கள், ஊழியத்தின் வளர்ச்சி, அற்புதங்களைப்பற்றிய செய்திகள் ஆகியவை மெய்ப் போதனைக்கான அளவுகோல்கள் அல்ல. அளவுகோல் மனிதன் அல்ல; கூட்டம் அல்ல; வெற்றி அல்ல; புகழ் அல்ல; தேவனுடைய வார்த்தையே அளவுகோல்.
இந்த ஆய்வு குறிப்பாக 2 பேதுரு 1, 2 அதிகாரங்களை அருகருகே வைத்து மெய்யையும் பொய்யையும் பகுத்துணர முயல்கிறது. போதனையின் தோற்றுவாய், சாராம்சம், போக்கு, போதகரின் வாழ்க்கை, போதனையின் ஈர்ப்பு, கனி, முடிவு ஆகிய ஏழு அம்சங்களில் மெய்யும் பொய்யும் ஆராயப்படுகின்றன.
பொய்யை அடையாளம் காண்பதற்கான சிறந்த வழி பொய்யின் எல்லா வடிவங்களையும் அறிந்துகொள்வது அல்ல; மெய்யை ஆழமாக அறிந்துகொள்வதே. இந்த ஆய்வின் நோக்கம் மற்றவர்கள்மேல் உடனடியாக “பொய்ப் போதகர்” என்று முத்திரை குத்துவது அல்ல; பிறரைச் சோதிக்கிற அதே தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நம்மையும் நிறுத்துவதாகும். மெய்யை அறிந்து, மெய்யை நேசித்து, மெய்யில் நிலைத்திருப்போம்; வேதாகமமே நமக்குப் பதில் சொல்லட்டும்.
போதனை - மெய்யா பொய்யா? — பகுத்துணர்வது எப்படி?
முன்னுரை — கிறிஸ்தவர்கள் விழித்தெழ வேண்டும்
நாம் விழித்தெழ வேண்டும்.
கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கு வெளியேயிருந்து வரும் எதிர்ப்புகளையும் ஆபத்துகளையும்குறித்து அதிகமாகக் கவலைப்படுகிறோம். கிறிஸ்தவ விசுவாசத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகள் இன்று அதிகம் வலம் வருகின்றன. தேவன் இல்லை என்று மறுக்கிற நாத்திகம் இருக்கிறது. கிறிஸ்து யார், இரட்சிப்பு என்றால் என்ன, சத்தியம் என்றால் என்ன என்பதைக்குறித்து வேறுபட்ட பதில்களைக் கொடுக்கும் மதங்களும் தத்துவங்களும் இருக்கின்றன. தேவன் இல்லாமலேயே மனிதன் வாழலாம் என்று சொல்கிற உலகப்பிரகாரமான வாழ்க்கை நம்மைச் சூழ்ந்திருக்கிறது. தேவன் பாவம் என்று சொல்வதை இயல்பானது என்றும், தேவன் தவறு என்று சொல்வதை உரிமை என்றும், தேவன் பரிசுத்தம் என்று சொல்வதைப் பழமையானது என்றும் சொல்லுகிற ஒழுக்கச் சீரழிவும் பெருகிக்கொண்டிருக்கிறது.
இவை உண்மையான ஆபத்துகள்தான். இவைகளைக்குறித்து நாம் நிச்சயமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் இந்த எதிர்ப்புகளையும் ஆபத்துகளையும் அடையாளம் காண்பது ஒப்பீட்டளவில் எளிது.
ஆனால் பொய், உண்மையின் வேடத்தை அணிந்துகொண்டு வந்தால்? பொய், வேதாகமத்தைக் கையில் வைத்துக்கொண்டு வந்தால்? பொய், இயேசுவின் பெயரைச் சொல்லிக்கொண்டு வந்தால்? பொய், சபையை அழிக்க வருகிற எதிரியாகத் தெரியாமல், சபைக்குப் போதிக்க வருகிற போதகராகவே வந்தால்? இதை நாம் எப்படி அடையாளம் காண்போம்? இதுதான் மிகவும் நுட்பமான ஆபத்து.
வெளியேயிருந்து வரும் எதிரி நம்மை நேரடியாக எதிர்ப்பான். ஆனால் சபைக்குள் நுழையும் பொய் நம் விசுவாசத்தை உள்ளிருந்து சிதைத்துவிடும். வெளியேயிருந்து தாக்குதல் வரும் என்று நமக்குத் தெரிவதால் நாம் விழிப்புடன் இருக்கிறோம். ஆனால் உண்மையின் வேடத்தில் வருகிற பொய் நம்மைத் தாலாட்டி, தூங்கவைத்து, வழிதவறச் செய்யும். அதனால்தான் தேவ மக்களுக்குள்ளேயிருந்து எழுகிற பொய்யைக்குறித்து தேவனுடைய வார்த்தை மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறது. பேதுரு எந்தத் தயக்கமும் இல்லாமல்,
“உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்.” — 2 பேதுரு 2:1 என்று சொல்கிறார்.
“உங்களுக்குள்.” இந்த வார்த்தை நம்மை உலுக்க வேண்டும்.
பொய்ப் போதனை “நான் பொய்” என்று சொல்லிக்கொண்டு வராது. அது வேதாகமத்தைத் திறந்து வைத்துக்கொண்டு வரும். வேத வசனங்களை மேற்கோள் காட்டும். இயேசுவின் பெயரைச் சொல்லும். அதில் பல உண்மைகள்கூட இருக்கும். முழுப் பொய்யைவிட மெய்யோடு கலந்த பொய்யை அடையாளம் காண்பது கடினம். நல்ல ரூபாய்த் தாள் பச்சை நிறத்தில் இருந்தால் கள்ள ரூபாய்த் தாள் சிவப்பு நிறத்திலா இருக்கும்?
எனவேதான் ஆவிக்குரிய பகுத்துணர்வு தேவைப்படுகிறது.
இந்த ஆய்வு ஏன் இப்போது அவசியம்?
இந்த ஆய்வு எல்லாக் காலத்திற்கும் தேவையானது. ஆனால் நாம் வாழ்கிற இந்தக் காலத்தில் இதன் அவசியம் இன்னும் அதிகமாகியிருக்கிறது.
ஒரு காலத்தில் ஒரு போதகருடைய செல்வாக்கு பெரும்பாலும் அவர் வாழ்கிற இடத்திற்கும், அவர் ஊழியம் செய்கிற சபைக்கும், அவர் பயணம் செய்கிற பகுதிகளுக்கும் உட்பட்டிருந்தது. இன்று அப்படியல்ல.
உலகத்தின் ஒருமுனையில் ஒருவர் பேசுகிற செய்தி சில நொடிகளில் நம் கைக்குள் வந்துவிடுகிறது. அந்தப் போதகரை நாம் ஒருபோதும் சந்தித்திருக்க வேண்டியதில்லை. அவருடைய வாழ்க்கையை நாம் அறிந்திருக்க வேண்டியதில்லை. அவர் எந்தச் சூழ்நிலையில் பேசுகிறார் என்பதுகூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனாலும் அவருடைய குரல் தினமும் நம் வீட்டுக்குள் வருகிறது. நம் கைபேசியில் வருகிறது. நம் காதுகளில் ஒலிக்கிறது. நாளடைவில் நம் வேதாகமப் புரிதலையும், கிறிஸ்துவைப்பற்றிய நம் எண்ணத்தையும், விசுவாச வாழ்க்கையையும் வடிவமைக்கிறது.
ஒரு காலத்தில் போதனையைத் தேடிச் செல்ல வேண்டியிருந்தது. இன்று போதனை நம்மைத் தேடி வருகிறது.
அதோடு நாம் கேட்கக்கூடிய போதனைகளின் எண்ணிக்கையும் அளவிட முடியாத அளவுக்குப் பெருகியிருக்கிறது.
எனவே இன்று கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை அறிந்திருப்பதோடு, வேதாகமத்தின் வெளிச்சத்தில் தாங்கள் கேட்கிறவைகளைப் பகுத்துணரவும் தெரிந்திருக்க வேண்டும்.
“நமக்குப் போதுமான போதனை கிடைக்கிறதா?” என்பதல்ல இன்றைய முக்கியமான கேள்வி. “நாம் கேட்கிறவைகளில் எது மெய், எது பொய் என்பதைப் பகுத்துணர்கிறோமா?” என்பதுதான் கேள்வி.
இது சில போதகர்களுக்கோ, சபைத் தலைவர்களுக்கோ மட்டும் தேவையான ஆய்வு அல்ல. போதிக்கிறவர்களுக்கும் தேவை. கேட்கிறவர்களுக்கும் தேவை.
ஒருவர் நன்றாகப் பேசுகிறார் என்பதால் அவர் மெய்ப் போதகர் அல்ல. அதிகமான வேத வசனங்களை மேற்கோள் காட்டுகிறார் என்பதால் அவர் மெய்ப் போதகர் அல்ல. திரளான மக்கள் அவருடைய போதனையைக் கேட்கிறார்கள் என்பதால் அவர் மெய்ப் போதகர் அல்ல. அவருடைய ஊழியம் பரந்துவிரிந்திருக்கிறது என்பதாலும், அவருடைய ஊழியத்தில் அற்புதங்கள் நடைபெறுவதாகச் சொல்லப்படுவதாலும் அவர் மெய்ப் போதகர் என்று நிரூபிக்க முடியாது.
அளவுகோல் மனிதன் அல்ல.
அளவுகோல் கூட்டம் அல்ல.
அளவுகோல் வெற்றி அல்ல.
அளவுகோல் புகழ் அல்ல.
அளவுகோல் தேவனுடைய வார்த்தை.
நம்மையும் சோதிப்போம்
பொய்ப் போதகர்களைப்பற்றிப் பேசும்போது இன்னொரு ஆபத்தும் இருக்கிறது.
“அவர் பொய்ப் போதகர்.”
“இவர் பொய்ப் போதகர்.”
“அந்தச் சபை தவறு.”
“இந்த ஊழியம் தவறு,” என்று நம் விரல்கள் உடனே மற்றவர்களை நோக்கித் திரும்பிவிடலாம்.
நான் பிறர்மேல் முத்திரை குத்துவதற்காகப் பேசவில்லை. பொய்யை அடையாளம் காண வேண்டும். பொய்ப் போதனையிலிருந்து சபையைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் பிறரைச் சோதிக்கிற அதே தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நம்மையும் நிறுத்த வேண்டும்.
நான் போதகன் என்றால்—
நான் தேவன் சொன்னதைச் சொல்கிறேனா? அல்லது நான் சொல்ல விரும்புகிறதை வேதாகமத்தைக்கொண்டு சொல்கிறேனா?
நான் கேட்கிறவன் என்றால்—
தேவன் சொல்வதைக் கேட்க விரும்புகிறேனா? அல்லது எனக்குப் பிடித்ததைச் சொல்கிற போதகரைத் தேடுகிறேனா?
எனவே இது பொய்ப் போதகர்களுக்கான எச்சரிக்கை மட்டுமல்ல. பொய்யால் ஏமாந்துவிடக்கூடிய நம் அனைவருக்குமான எச்சரிக்கை. எனக்கான எச்சரிக்கை. உங்களுக்கான எச்சரிக்கை.
ஆனால் எச்சரிக்கையாக இருந்தால் மட்டும் போதாது. எதை வைத்து மெய்யையும் பொய்யையும் பகுத்துணர்வது? ஒரு போதனை மெய்யானதா, பொய்யானதா என்பதை எப்படி அறிந்துகொள்வது? ஒரு போதகர் மெய்ப் போதகரா, பொய்ப் போதகரா என்பதை எப்படி சோதிப்பது?
அதற்கு நமக்கு ஓர் அளவுகோல் வேண்டும். அந்த அளவுகோலை நாம் உருவாக்க வேண்டியதில்லை. தேவனுடைய வார்த்தையே அதை நமக்குக் கொடுக்கிறது.
ஏன் 2 பேதுரு 1, 2?
மெய்ப் போதனை, பொய்ப் போதனை, மெய்ப் போதகர், பொய்ப் போதகர் ஆகியவைகளைப்பற்றி முழு வேதாகமத்திலிருந்தும் நாம் ஆராயலாம்.
பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் இதைக்குறித்துப் பேசுகிறார்கள். இயேசு கிறிஸ்து கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்து எச்சரிக்கிறார். பவுல் தம் நிருபங்களில் பொய்ப் போதகர்களையும் பொய்ப் போதனைகளையும் அடையாளம் காட்டுகிறார். யோவான், யூதா ஆகியோரும் இதைக்குறித்து எச்சரிக்கிறார்கள்.
எனவே இது முழு வேதாகமத்திலும் ஓடுகிற ஒரு பெரிய கருப்பொருள். ஆனால் இந்த ஆய்வில் நாம் முழு வேதாகமத்தையும் எடுத்துக்கொண்டு இந்தப் பொருளை ஆராயப்போவதில்லை.
நம் ஆய்வை 2 பேதுரு முதலாம், இரண்டாம் அதிகாரங்கள் என்ற இரண்டு அதிகாரங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்திக்கொள்ளப்போகிறோம்.
ஏனென்றால் பேதுரு இந்த இரண்டு அதிகாரங்களிலும் மெய்யையும் பொய்யையும் மிகத் தெளிவாக அருகருகே நிறுத்துகிறார். முதலாம் அதிகாரத்தின் வெளிச்சத்தில் இரண்டாம் அதிகாரத்தைப் பார்க்கும்போது, மெய்யையும் பொய்யையும் இன்னும் தெளிவாகப் பகுத்துணர முடிகிறது.
அறிகுறி, அடையாளம், அளவுகோல்
ஒரு நோயை அறிந்துகொள்வதற்கு அறிகுறிகள் இருக்கின்றன. அந்த அறிகுறிகள் உள்ளே என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை அடையாளம் காண உதவுகின்றன. அதுபோல ஆவிக்குரிய காரியங்களிலும் அடையாளங்கள் இருக்கின்றன.
அறிகுறிகள் ஒரு காரியத்தை அடையாளம் காண உதவுகின்றன. ஆனால் மெய்யையும் பொய்யையும் பகுத்துணர நமக்கு ஓர் அளவுகோலும் வேண்டும். போதனை மெய்யா பொய்யா என்பதை எதைக்கொண்டு அளப்பது?
அளவுகோல் மனிதன் அல்ல. கூட்டம் அல்ல. வெற்றி அல்ல. புகழ் அல்ல. நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, அந்த அளவுகோல் தேவனுடைய வார்த்தை.
எனவே பொய்யை அடையாளம் காண வேண்டுமானால் மெய்யை அறிந்திருக்க வேண்டும்.
இந்த ஆய்வின் மையம் மெய்யான விசுவாசியும் போலியான விசுவாசியும் அல்ல. மெய்ப் போதனையும் பொய்ப் போதனையும்;
மெய்ப் போதகரும் பொய்ப் போதகரும்.
2 பேதுரு முதலாம், இரண்டாம் அதிகாரங்களை அருகருகே வைத்துப் பார்க்கும்போது, மெய்ப் போதனையையும் பொய்ப் போதனையையும் பகுத்துணர உதவும் ஏழு முக்கியமான வேறுபாடுகள் நம்முன் வருகின்றன. ஒவ்வொரு குறிப்பிலும் முதலாம் அதிகாரத்தில் பேதுரு காட்டுகிற மெய்யையும், இரண்டாம் அதிகாரத்தில் அதற்கு எதிராக நிற்கிற பொய்யையும் பார்ப்போம்.
1. போதனையின் தோற்றுவாய் — தேவனுடைய வார்த்தை ↔ தந்திரமான வார்த்தைகள்.
2. போதனையின் சாராம்சம் — கிறிஸ்துவை அறிகிற அறிவு ↔ ஆண்டவரை மறுதலித்தல்.
3. போதனையின் போக்கு — கேட்டுக்குத் தப்புதல் ↔ கேட்டுக்கு அடிமையாதல்.
4. போதகரின் வாழ்க்கை — தேவபக்தியான வாழ்க்கை ↔ சீர்கெட்ட வாழ்க்கை.
5. போதனையின் ஈர்ப்பு — தேவனுடைய வசனம் ↔ மாம்சத்தின் இச்சைகள்.
6. போதனையின் கனி — கனியுள்ள வாழ்க்கை ↔ தண்ணீரில்லாத கிணறு.
7. போதனையின் முடிவு — நித்திய அரசு ↔ அழிவு.
2 பேதுரு முதலாம், இரண்டாம் அதிகாரங்களின் வெளிச்சத்தில் இவைகளை ஒவ்வொன்றாக ஆராயப்போகிறோம். என் நோக்கம் ஏழு என்ற எண்ணிக்கையை நிரப்புவது அல்ல. பேதுரு காட்டுகிற மெய்யை மெய்யாகவும், பொய்யைப் பொய்யாகவும் காண்பது.
கிறிஸ்தவர்கள் விழித்தெழ வேண்டும். ஆனால் பயத்தோடு அல்ல. பகுத்துணர்வோடு. எல்லோரையும் சந்தேகிக்கிற மனப்பான்மையோடு அல்ல. தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில்.
மெய்யை அறிந்து,
மெய்யை நேசித்து,
மெய்யில் நிலைத்திருக்க வேண்டும்.
வேதாகமமே நமக்குப் பதில் சொல்லட்டும்.
1. போதனையின் தோற்றுவாய் — இந்தப் போதனை எங்கிருந்து வருகிறது?
நதிகளைப் பாருங்கள். பல நதிகள் மலைகளில் உற்பத்தியாகின்றன. சிறிய ஊற்றாகத் தொடங்கி, கீழே இறங்கி, ஓடைகளோடு சேர்ந்து, பெருகிப் பெருகி, பெரிய நதியாக ஓடுகின்றன. நாம் கீழே நின்று நதியைப் பார்க்கிறோம். ஆனால் அந்த நதியின் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய வேண்டுமானால், அதன் ஓட்டத்தை எதிர்த்திசையில் பின்தொடர்ந்து அதன் தோற்றுவாய்க்கு, பிறப்பிடத்துக்கு, செல்ல வேண்டும்.
போதனையும் அப்படித்தான். நம் காதுகளுக்கு வந்து சேர்வது அதன் ஓட்டம். நாம் கேட்கிற வார்த்தைகள் அதன் வெளிப்பாடு. ஆனால் அதைவிட முக்கியமான கேள்வி— இந்தப் போதனை எங்கே உற்பத்தியாகிறது? இதன் தோற்றுவாய், பிறப்பிடம், ஆரம்பம், தொடக்கம் எது?
தேவனுடைய வார்த்தையா? மனிதனுடைய சிந்தனையா?
தேவனுடைய சித்தமா? மனிதனுடைய ஆசையா?
தேவனிடமிருந்து வந்ததா? மனிதன் உருவாக்கியதா?
ஒரு நதியின் தன்மையை அது உற்பத்தியாகும் இடம் தீர்மானிப்பதுபோல, ஒரு போதனையின் தன்மையையும் அதன் தோற்றுவாய் தீர்மானிக்கிறது.
அதனால்தான் ஒரு போதனையைச் சோதிக்கும்போது, “போதகர் என்ன சொல்கிறார்?” என்று மட்டும் கேட்காமல், “அவர் சொல்கிற செய்தி எங்கிருந்து வருகிறது?” என்றும் கேட்க வேண்டும்.
தேவனிடமிருந்து வந்த வார்த்தை
2 பேதுரு முதலாம் அதிகாரத்தில் பேதுரு தன் செய்தியின் தோற்றுவாயைத் தெளிவாகச் சொல்கிறார்:
“நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்கள் அல்ல...” — 2 பேதுரு 1:16
அதாவது "நாங்கள் கற்பனைசெய்த கதையை உங்களுக்குச் சொல்லவில்லை. மனிதர்களைக் கவருவதற்காக உருவாக்கப்பட்ட கதையைப் பின்பற்றவில்லை," என்று பேதுரு சொல்கிறார். அவர்கள் கிறிஸ்துவின் மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டார்கள். பரிசுத்த பர்வதத்தில் பிதாவின் சத்தத்தைக் கேட்டார்கள் (2 பேதுரு 1:17–18).
ஆனால் பேதுரு தன் அனுபவத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. நம் கவனத்தை, “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு...” — 2 பேதுரு 1:19 என்று வசனத்திற்குத் திருப்புகிறார்.
பிறகு “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுதருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.” — 2 பேதுரு 1:21 என்று அதன் தோற்றுவாயைச் சொல்கிறார்.
இங்கே பேதுரு போதனையின் தோற்றுவாயைக் காட்டுகிறார். அது மனிதனுடைய சித்தத்திலிருந்து பிறந்ததல்ல; தேவனிடமிருந்து வந்தது.
எனவே மெய்ப் போதனையின் தோற்றுவாய் மனிதனுடைய கற்பனை அல்ல; தேவனிடமிருந்து வந்த வார்த்தை.
மனிதன் சொல்ல விரும்புவதிலிருந்து அல்ல — தேவன் சொல்லியிருப்பதிலிருந்து.
இப்போது இரண்டாம் அதிகாரத்திற்குச் செல்வோம்.
அங்கு மெய்ப் போதனையின் காட்சி மாறி பொய்ப் போதனையின் காட்சி வருகிறது.
“உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணுவார்கள்...” — 2 பேதுரு 2:1
“பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்.” — 2 பேதுரு 2:3.
“பேராசையால் ஏவப்பட்டு, தந்திரமான வார்த்தைகளைப் பேசி, உங்களைத் தங்கள் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவார்கள்.”
இரண்டு அதிகாரங்களையும் அருகருகே வைத்துப் பாருங்கள்.
முதல் அதிகாரத்தில்: மெய்ப் போதகர்கள் “தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றுகிறவர்கள் அல்ல.” என்கிறார்.
இரண்டாம் அதிகாரத்தில்: பொய்ப் போதகர்கள் “கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணுவார்கள்.” “தந்திரமான வார்த்தைகளால் பிறரை வசப்படுத்துவார்கள்” என்கிறார்.
மெய்ப் போதனை — தேவனிடமிருந்து வந்த வார்த்தையை அடிப்படையாகக் கொண்டது.
பொய்ப் போதனை — மனித நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட வார்த்தைகள்.
பொய் எப்போதும் வேதாகமத்தை நிராகரிப்பதில்லை. இதுதான் பொய்ப் போதனையின் நுட்பம். பொய்ப் போதகர் எப்போதும் வேதாகமத்தை மூடிவைத்துவிட்டு வரமாட்டார். அவர் வேதாகமத்தோடுதான் வருவார். வேத வசனங்களை மேற்கோள்காட்டுவார்.
வேதாகமத்தின் முதல் பக்கங்களிலேயே இதைப் பார்க்கிறோம். ஏதேன் தோட்டத்தில் சர்ப்பம் ஏவாளிடம், “தேவன் சொன்னது உண்டோ?” — ஆதியாகமம் 3:1 என்று கேட்டது. சர்ப்பம் தேவனைப்பற்றிப் பேசுகிறது. தேவன் சொன்ன வார்த்தையைப்பற்றிப் பேசுகிறது. ஆனால் தேவன் சொன்ன வார்த்தையைத் திரிக்கிறது, புரட்டுகிறது, மாற்றுகிறது.
முதலில்— தேவன் சொன்ன சொல்லின்மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பிறகு— தேவன் சொன்ன சொல்லின் பொருளை மாற்றுகிறது. இறுதியில்— தேவன் சொன்ன சொல்லை நேரடியாக மறுக்கிறது.
தேவன், “சாகவே சாவாய்” என்று சொன்னார். சர்ப்பம், “நீங்கள் சாகவே சாவதில்லை” என்று சொன்னது.
சர்ப்பம் தேவனுடைய வார்த்தையைத் தூக்கி எறியவில்லை. தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு திரித்தது, புரட்டியது. இதுதான் ஆபத்து.
வேதாகமத்தில் “இப்படி எழுதியிருக்கிறதே” என்பது போதாது. ஆண்டவராகிய இயேசுவைச் சோதித்தபோது சாத்தான்கூட, “எழுதியிருக்கிறதே...” — மத்தேயு 4:6 என்று சங்கீதத்திலிருந்து மேற்கோள் காட்டினான்.
எனவே, “எழுதியிருக்கிறதே” என்று சொல்வதெல்லாம் வேதாகமப் போதனை அல்ல. ஒரு வசனம் வேதாகமத்தில் இருக்கலாம். ஆனால் பொய்ப் போதகர் அதை அதன் சூழலிலிருந்து பிரிப்பார். வேதாகமத்தின் மற்ற பகுதிகள் சொல்லுகிற சமநிலையை மறைப்பார். மனிதனுடைய இச்சைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்துவார்.
சாத்தானும் இதைத்தான் செய்தான்.
தேவன் பாதுகாப்பார் என்ற வாக்குறுதியை, “ஆகவே தேவனைச் சோதித்துப் பார்” என்று சாத்தான் அனுமதியாக மாற்ற முயன்றான்.
இயேசு “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே.” — மத்தேயு 4:7 என்று இன்னொரு வேத வசனத்தைக்கொண்டு அதைத் திருத்தினார்:
எனவே, “ஒருவர் வேதாகமத்தைப் பேசுகிறாரா?” என்பது மட்டும் நம் கேள்வி அல்ல. “வேதாகமம் பேசுவதை அவர் பேசுகிறாரா?” என்பது அதைவிட முக்கியமான கேள்வி. இந்த இரண்டுக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.
நான் ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு என் எண்ணத்தை அதற்குள் திணிக்கலாம். அல்லது அந்த வசனத்திற்குள் தேவன் வைத்திருக்கும் எண்ணத்தை வெளியே கொண்டுவரலாம்.
முதல் செயலில் வேதாகமத்தை நான் பயன்படுத்துகிறேன். இரண்டாவது செயலில் நான் வேதாகமத்திற்குக் கீழ்ப்படிகிறேன். மெய்ப் போதகர் தேவனுடைய வார்த்தையிலிருந்து செய்தியைப் பெறுகிறார். பொய்ப் போதகர் தன் செய்திக்காக தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
எனவே முதல் சோதனை இதுதான்:
இந்தச் செய்தியின் தோற்றுவாய் எது? இது தேவனுடைய வார்த்தையிலிருந்து பிறந்த செய்தியா? அல்லது மனிதனுடைய ஆசை, கற்பனை, பேராசை, அனுபவம், நோக்கம் ஆகியவைகளிலிருந்து பிறந்து, பிறகு அதற்கு ஆதரவாக வேதாகம வசனங்கள் சேர்க்கப்பட்ட செய்தியா?
வேதாகமம் இந்தச் செய்தியை உருவாக்கியதா? அல்லது— இந்தச் செய்தியை ஆதரிக்க வேதாகமம் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா?
முதல் சோதனை — இந்தப் போதனையின் தோற்றுவாய் என்ன? தேவனுடைய வார்த்தையா, மனித நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட வார்த்தைகளா?
2. போதனையின் சாராம்சம் — இந்தப் போதனையில் என்ன இருக்கிறது?
ஒரு நதியின் தோற்றுவாய் முக்கியம். ஆனால் அது மட்டும் போதாது. நதி உற்பத்தியாகி ஓடிவரும்போது, அந்தத் தண்ணீரில் என்ன இருக்கிறது, அதன் தன்மை என்ன, என்பதும் முக்கியம்.
தண்ணீர் தெளிவாகவும் இருக்கலாம்; கலங்கி மாசுபட்டும் இருக்கலாம். அது ஜீவனையும் கொடுக்கலாம்; நஞ்சையும் கொண்டுவரலாம்.
போதனையும் அப்படித்தான்.
முதலாவது கேள்வி: “இந்தப் போதனை எங்கிருந்து வருகிறது?”
இரண்டாவது கேள்வி: “இந்தப் போதனையின் சாராம்சம் என்ன?”
அதன் உள்ளடக்கம் என்ன? அதன் உயிர் என்ன? அதன் மையத்தில் இருப்பவர் யார்?
2 பேதுரு முதலாம் அதிகாரத்தை வாசிக்கும்போது இதற்கான பதில் தெளிவாகத் தெரிகிறது.
மெய்ப் போதனையின் சாராம்சம் கிறிஸ்து.
பேதுரு ஆரம்பத்திலேயே,
“தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.” — 2 பேதுரு 1:2 என்று சொல்கிறார்.
அடுத்த வசனத்தில்,
“தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே, ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளிகிறது...” — 2 பேதுரு 1:3 என்று சொல்கிறார்.
கிருபையும் சமாதானமும் அவரை அறிகிற அறிவினால் வருகிறது. ஜீவனுக்கும் தேவபக்திக்கும் தேவையானவை அவரை அறிகிற அறிவினால் கிடைக்கின்றன.
பேதுருவின் செய்தியின் தொடக்கத்தில் கிறிஸ்து இருக்கிறார். அதன் நடுவில் கிறிஸ்து இருக்கிறார். அதன் முடிவிலும் கிறிஸ்து இருக்கிறார்.
“நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யம்...” — 2 பேதுரு 1:11
கிறிஸ்து வெறுமனே செய்தியின் ஒரு தலைப்பு அல்ல. கிறிஸ்துவே செய்தியின் சாராம்சம், உள்ளடக்கம்.
இப்போது 2 பேதுரு இரண்டாம் அதிகாரத்திற்குச் செல்வோம். அங்கே கள்ளப்போதகர்களைப்பற்றிப் பேதுரு சொல்கிற முதல் காரியங்களில் ஒன்று:
“தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து...” — 2 பேதுரு 2:1
என்னே ஒரு முரண்பாடு!
ஒருபுறம்—மெய்ப் போதனை கிறிஸ்துவை அறிகிற அறிவைக் கொண்டுவருகிறது.
மறுபுறம்—பொய்ப் போதனை ஆண்டவரையே மறுதலிக்கிறது.
கிறிஸ்துவின் பெயர் இருந்தால் மட்டும் போதாது
பொய்ப் போதனை எப்போதும், “நான் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கிறேன்” என்று வெளிப்படையாக வர வேண்டியதில்லை.
பவுல் கொரிந்தியருக்கு எழுதும்போது,
“உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே...” — 2 கொரிந்தியர் 11:4 என்று எச்சரிக்கிறார்.
கவனியுங்கள்: “வேறொரு இயேசு.”
பெயர் இயேசு. ஆனால் அப்போஸ்தலர்கள் அறிவித்த இயேசு அல்ல.
இதுதான் பொய்ப் போதனையின் மிகச் சாதுரியமான நுட்பம். கிறிஸ்துவின் பெயரை வைத்துக்கொண்டு கிறிஸ்துவையே மாற்றிவிடலாம். அவருடைய கர்த்தத்துவத்தை அகற்றிவிடலாம். அவருடைய சிலுவையை ஒதுக்கிவிடலாம். அவருடைய பரிசுத்தத்தை மறைத்துவிடலாம். மனந்திரும்புதலை நீக்கிவிடலாம். அவரைப் பின்பற்றுவதற்கான விலையை மறுத்துவிடலாம்.
இதற்கு ஒரு பழைய ஏற்பாட்டு எடுத்துக்காட்டைப் பாருங்கள்.
இஸ்ரயேல் மக்கள் பொற்கன்றைச் செய்தபோது, ஆரோன்,
“நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை” — யாத்திராகமம் 32:5 என்று அறிவித்தார்.
இங்கே ஒரு விசித்திரமான காரியம் நடக்கிறது.
கர்த்தருடைய பெயர் இருக்கிறது. ஆனால் கர்த்தரைப்பற்றிய உண்மை சிதைக்கப்பட்டிருக்கிறது.
தேவனை முற்றிலும் நிராகரித்துவிட்டதாக அவர்கள் சொல்லவில்லை. தேவனுடைய பெயரை வைத்துக்கொண்டே, தேவனைத் தாங்கள் விரும்பியபடி பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.
அதுபோல “இயேசு” என்று சொல்லிக்கொண்டே, வேதாகமம் வெளிப்படுத்துகிற இயேசுவை மாற்றிவிடலாம்.
அதனால் நாம் கேட்க வேண்டிய கேள்வி—
“இயேசுவைப்பற்றிப் பேசுகிறார்களா?” என்பது மட்டும் அல்ல. “எந்த இயேசுவைப்பற்றிப் பேசுகிறார்கள்?”
அப்போஸ்தலர்கள் அறிவித்த இயேசுவா? ஆண்டவராகிய இயேசுவா? பாவத்திலிருந்து இரட்சிக்கிற இயேசுவா? சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்ற அழைக்கிற இயேசுவா? நம் முழு வாழ்க்கையின்மேலும் உரிமைகொண்ட இயேசுவா?
அல்லது—
நம் ஆசைகளுக்கேற்றபடி உருவாக்கப்பட்ட இயேசுவா?
இயேசு’ என்ற அதே பெயர். ஆனால் அறிவிக்கப்படுகிற நபர் வேறு.
கிறிஸ்து இலக்கா, அல்லது சாதனமா?
இன்னும் இதைவிட நுட்பமான ஒரு மாற்றமும் நடக்கலாம்.
ஒருவேளை செய்தியில் கிறிஸ்து இருக்கலாம். ஆனால் கிறிஸ்து செய்தியின் சாராம்சமாக இல்லாமல் இருக்க முடியும்.
கிறிஸ்துவை நமக்கு ஆரோக்கியம் கொடுப்பவராக, செல்வம் தருபவராக, வெற்றி கொடுப்பவராக, நம் பிரச்சினைகளைத் தீர்ப்பவராக, நம் கனவுகளை நிறைவேற்றுபவராகப் போதிக்கலாம். தேவன் தம் சித்தத்தின்படி இவைகளைக் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமல் போகலாம். பிரச்சினை அவைகளில் இல்லை.
கிறிஸ்துவைவிட அவர் கொடுக்கிறவைகள் முக்கியமாவதுதான் பிரச்சினை.
நாம் கிறிஸ்துவை விரும்பாமல், கிறிஸ்துவிடமிருந்து கிடைக்கிறவைகளை விரும்புவதுதான் பிரச்சினை.
கிறிஸ்துவே நம் இலக்காக இல்லாமல், அவரை நம் இலக்குகளை அடைவதற்கான வழியாக மாற்றுவதுதான் பிரச்சினை.
ஆனால் கிறிஸ்து நம் இலக்குகளை அடைவதற்கான ஒரு சாதனம் அல்ல.
கிறிஸ்துவே நம் இலக்கு.
செய்தியின் சாராம்சம் என்ன?
எனவே, ஒரு செய்தியைக் கேட்கும்போது அல்லது கேட்டபிறகு ஓர் எளிய கேள்வியைக் கேளுங்கள்:
“இந்தச் செய்தியின் சாராம்சம் என்ன?”
கிறிஸ்துவா அல்லது மனிதனா—அதாவது நானா?
கிறிஸ்துவின் மகிமையா அல்லது என் வெற்றியா?
கிறிஸ்துவை அறிவதா அல்லது கிறிஸ்துவைக்கொண்டு நான் விரும்புகிறவைகளைப் பெறுவதா?
இன்னும் ஒரு சோதனையும் செய்யலாம்.
இந்தச் செய்தியிலிருந்து கிறிஸ்துவை எடுத்துவிட்டால், இந்தச் செய்தி இன்னும் அப்படியே நிற்குமா?
எடுத்துக்காட்டாக, போதனை—
“உன்னை நம்பு.”
“பெரிதாகக் கனவு காண்.”
“வெற்றி உன்னுடையது.”
“உன் வாழ்க்கையை வளமாக்குகிறார்.”
என்று ஒரு மேடைப்பேச்சுபோல் இருக்கிறதா?
அப்படியானால்—
கிறிஸ்து அந்தச் செய்தியின் சாராம்சம் இல்லை.
மெய்யான கிறிஸ்தவத்தின் மையம் ஒரு கொள்கை அல்ல. ஓர் ஆசீர்வாதம் அல்ல. ஓர் அனுபவம் அல்ல.
ஒரு நபர்.
அவர் இயேசு கிறிஸ்து.
மெய்ப் போதகர் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டமாட்டார். தன்னை மையத்தில் வைக்கமாட்டார். கேட்கிற மனிதனையும் மையத்தில் வைக்கமாட்டார்.
அவர் கிறிஸ்துவைப் பெரிதாக்குவார், மகிமைப்படுத்துவார், உயர்த்துவார்.
யோவான் ஸ்நானன் சொன்னதுபோல,
“அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.” — யோவான் 3:30
மக்கள் ஒரு செய்தியைக் கேட்டுவிட்டு,
“என்ன அருமையான போதகர்!” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடக்கூடாது.
“என்ன அருமையான கிறிஸ்து!” என்று சொல்ல வேண்டும்.
எனவே இரண்டாவது சோதனை:
இந்தப் போதனையின் சாராம்சம் என்ன?
இந்தப் போதனையின் மையத்தில் இருப்பவர் யார்?
மெய்ப் போதனையின் சாராம்சம் கிறிஸ்து.
பொய்ப் போதனையில் கிறிஸ்துவின் பெயர் இருக்கலாம்; ஆனால் கிறிஸ்துவின் இடத்தில் மனிதன் வந்துவிடலாம்.
இரண்டாவது சோதனை — இந்தப் போதனையின் மையத்தில் வேதாகமம் வெளிப்படுத்துகிற கிறிஸ்து இருக்கிறாரா?
3. போதனையின் போக்கு — இந்தப் போதனை உங்களை எங்கே நடத்துகிறது?
ஒரு நதி எங்கே உற்பத்தியாகிறது என்பதையும், அந்த நதியில் என்ன இருக்கிறது, அதன் சாராம்சம் என்ன என்பதையும் பார்த்தோம். இப்போது மூன்றாவது கேள்வி:
அந்த நதி எந்தத் திசையில் பாய்கிறது?
ஒரு நதி உற்பத்தியாகும் இடத்திலேயே நின்றுவிடுவதில்லை. அது பாய்கிறது. ஒரு திசையை நோக்கிச் செல்கிறது. இறுதியில் எங்கோ கொண்டுபோய்ச் சேர்க்கிறது.
போதனையும் அப்படித்தான். ஒரு போதனை எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது முக்கியம். அதன் சாராம்சம் என்ன என்பதும் முக்கியம். அதேபோல்—அந்தப் போதனையின் போக்கு என்ன, அது நம்மை எந்தத் திசையில் நடத்துகிறது என்பதும் முக்கியம்.
போதனை என்பது வெறும் தகவல் அல்ல. அது நம் சிந்தனையை வடிவமைக்கிறது. நம் விருப்பங்களை மாற்றுகிறது. நம் தீர்மானங்களைப் பாதிக்கிறது. இறுதியில் நம் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட திசையில் நடத்துகிறது.
எனவே, ஒரு போதனை கேட்பதற்கு நன்றாக இருக்கிறதா என்று மட்டும் பார்க்கக்கூடாது. அது என்னை எங்கே கொண்டுசெல்கிறது என்று பார்க்க வேண்டும்.
2 பேதுரு முதலாம் அதிகாரத்தில் மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையின் போக்கைப் பேதுரு,
“இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி...” — 2 பேதுரு 1:4 என்று தெளிவாகக் காட்டுகிறார்.
“கேடு” என்றால் என்ன?
நாம் பொதுவாக “கேடு” என்றால் தீமை, அழிவு என்று நினைக்கிறோம். ஆனால் இங்கே பேதுரு பயன்படுத்துகிற வார்த்தை சீர்கேடு, அழுகல், கெட்டுப்போதல் என்ற கருத்தைக் கொண்டது.
ஒரு பொருள் அழுகும்போது அதன் இயல்பான நல்ல தன்மையை இழந்து சீர்கெட்டுப்போகிறது. அதுபோல பாவம் மனிதனை உள்ளிருந்து கெடுக்கிறது. அவனுடைய சிந்தனை, ஆசை, நடத்தை, உறவுகள்—எல்லாவற்றையும் கெடுக்கிறது.
அந்தச் சீர்கேடு எங்கிருந்து வருகிறது என்பதையும் பேதுரு சொல்கிறார்:
“இச்சையினால் உலகத்திலுண்டான கேடு.”
வெறுமனே நம்மைச் சுற்றியிருக்கிற ஒரு தீமையைப்பற்றிப் பேதுரு பேசவில்லை. மனிதனுடைய இச்சையோடு தொடர்புடைய, உலகத்தில் செயல்படுகிற பாவத்தின் சீர்கேட்டைப்பற்றி அவர் பேசுகிறார்.
மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையின் போக்கு என்ன?
அந்தக் கேட்டுக்குத் தப்புவது.
இந்த வார்த்தையைக் கவனியுங்கள்:
“கேட்டுக்குத் தப்பி.”
கேட்டுக்குள் அல்ல. கேட்டோடு சமாதானமாக சேர்ந்து இருப்பது அல்ல. கேட்டை நியாயப்படுத்திக்கொண்டு வாழ்வதும் அல்ல.
கேட்டுக்குத் தப்பி.
தேவனுடைய கிருபை மனிதனைப் பாவத்திற்குள் வசதியாக வாழ வைப்பதற்காக வரவில்லை. பாவத்தின் பிடியிலிருந்து அவனை விடுவித்து, பேதுரு சொல்வதுபோல, ‘திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவனாக’ நடத்துகிறது.
இது முதல் அதிகாரம்.
ஆனால் 2 பேதுரு இரண்டாம் அதிகாரத்திற்கு வரும்போது போக்கு முற்றிலும் மாறுகிறது.
கள்ளப்போதகர்களைப்பற்றிப் பேதுரு,
“அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; தாங்களோ கேட்டுக்கு அடிமைகளாயிருக்கிறார்கள்.” — 2 பேதுரு 2:19 என்று சொல்கிறார்.
என்னே ஒரு முரண்பாடு!
ஒருபுறம்—மெய்ப் போதனை கேட்டுக்குத் தப்பும்படி நடத்துகிறது.
மறுபுறம்—பொய்ப் போதனை ஒருவனைக் கேட்டுக்கு அடிமையாக்குகிறது.
இதில் விசித்திரம் என்னவென்றால், கேட்டுக்கு அடிமையாக இருக்கிறவர்களே மற்றவர்களுக்கு, “சுதந்திரம் தருகிறோம்” என்று சொல்கிறார்கள்.
இதுதான் பொய்ப் போதனையின் பயங்கரமான வஞ்சகம். அது அடிமைத்தனத்தைச் சுதந்திரம் என்று அழைக்கிறது. கீழ்ப்படியாமையை உரிமை என்று பறைசாற்றுகிறது. மாம்சத்தின் இச்சையை இயல்பான தேவை என்று வாதிடுகிறது. தேவன் பாவம் என்று சொல்வதற்கு வேறொரு அழகான பெயரைச் சூட்டுகிறது.
ஆனால்—
விஷத்திற்குத் தேன் என்று பெயர் வைத்தாலும் அது விஷம்தான்.
“சமாதானம், சமாதானம்”
எரேமியாவின் நாட்களிலும் இதே பிரச்சினை இருந்தது. மக்கள் தேவனைவிட்டு விலகியிருந்தார்கள். அவர்களுடைய பாவம் ஆழமாக இருந்தது. அவர்களுக்கு மனந்திரும்புதல் தேவைப்பட்டது. ஆனால் பொய்த் தீர்க்கதரிசிகள் என்ன செய்தார்கள்?
“சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயத்தை மேலோட்டமாய்க் குணமாக்குகிறார்கள்.” — எரேமியா 6:14
காயம் ஆழமாக இருக்கிறது. ஆனால் சிகிச்சை மேலோட்டமாக இருக்கிறது. பாவம் புரையோடியிருக்கிறது. ஆனால் மனந்திரும்புதல் இல்லை. தேவனோடு உறவு சீர்கெட்டிருக்கிறது. ஆனால் “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று சொல்கிறார்கள்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான அடையாளம் இருக்கிறது.
மனிதன் மாற வேண்டிய இடத்தில், அவன் மாறாமலேயே அவனை நிம்மதிப்படுத்துகிறது. அவனுடைய நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டிய இடத்தில், அவன் இருக்கும் நிலையையே ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.
அதனால்தான் எரேமியா 23:22-ல் தேவன் மெய்யான தீர்க்கதரிசன ஊழியத்தின் கனியைச் சொல்கிறார்:
“அவர்கள் என் ஆலோசனையில் நின்றிருந்தார்களானால், என் வார்த்தைகளை என் ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களை அவர்கள் பொல்லாத வழியையும் அவர்கள் கிரியைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்பியிருப்பார்கள்.”
கவனியுங்கள்:
தேவனுடைய வார்த்தை மக்களைத் திருப்புகிறது.
பாவத்திலிருந்து திருப்புகிறது. பொல்லாத வழியிலிருந்து திருப்புகிறது.
தேவனை நோக்கித் திருப்புகிறது.
கிருபை நம்மை எங்கே கொண்டுசெல்கிறது?
இங்கே கிருபையைக்குறித்தும் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
மெய்யான போதனை, “முதலில் உன்னை நீ சுத்தப்படுத்திக்கொள்; பிறகு கிறிஸ்துவிடம் வா” என்று சொல்வதில்லை. கிறிஸ்து பாவிகளை அவர்கள் இருக்கிற நிலையிலேயே ஏற்றுக்கொள்கிறார்.
ஆனால்—அவர் நம்மைச் சந்தித்த இடத்திலேயே நம்மை விட்டுவிடுவதில்லை.
கிருபை பாவியிடம் வருகிறது. ஆனால் பாவத்திலிருந்து அவனை வெளியே நடத்துகிறது.
கிருபை குற்றவாளியை மன்னிக்கிறது. ஆனால் அவனுடைய பழைய வாழ்க்கையை அப்படியே விட்டுவிடுவதில்லை.
பவுல் இதை மிக அழகாகச் சொல்கிறார்:
“தேவனுடைய கிருபையானது... அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் நாம் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவிக்கும்படி நமக்குப் போதிக்கிறது.” — தீத்து 2:11–12
கிருபை மன்னிக்கிறது. கிருபை போதிக்கிறது. கிருபை மாற்றுகிறது.
எனவே பாவத்திலேயே நம்மை வசதியாக வைத்துக்கொண்டு, அதற்கு “கிருபை” என்று பெயர் வைக்கிற போதனை கிருபையின் போதனை அல்ல.
போக்கைப் பாருங்கள்
ஒரு செய்தியைக் கேட்டவுடன் அது நமக்கு எவ்வளவு ஆறுதல் கொடுத்தது என்பதை மட்டும் பார்க்காதீர்கள். அது நம்மை எந்தத் திசையில் நடத்துகிறது என்று பாருங்கள்.
கிறிஸ்துவை நோக்கியா? பரிசுத்தத்தை நோக்கியா? கீழ்ப்படிதலை நோக்கியா? தேவபக்தியை நோக்கியா? பாவத்திலிருந்து விடுதலையை நோக்கியா?
அல்லது—
நம் இச்சைகளை நியாயப்படுத்துகிறதா? நாம் மாறாமல் இருப்பதற்கு வேதாகமத்திலிருந்தே காரணங்களைத் தருகிறதா? மனந்திரும்ப வேண்டிய இடத்தில் நம்மை நிம்மதிப்படுத்துகிறதா? நான் தேவனுடைய வார்த்தை என்னை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறேனா? அல்லது நான் மாறாமலேயே இருக்க தேவனுடைய வார்த்தையில் ஆதாரம் தேடுகிறேனா?
இதுதான் மூன்றாவது சோதனை:
இந்தச் செய்தியின் போக்கு என்ன?
இந்தச் செய்தி என்னை எங்கே கொண்டுசெல்கிறது?
மெய்ப் போதனை கேட்டுக்குத் தப்பும்படி நம்மை நடத்துகிறது. பொய்ப் போதனை சுதந்திரத்தை வாக்குறுதி செய்துகொண்டே நம்மைக் கேட்டுக்குள் வைத்திருக்கும்.
மெய்ப் போதனை பாவத்தை உணர்த்தி, பாவியை அங்கேயே விட்டுவிடாமல் கிறிஸ்துவிடம் நடத்துகிறது.
பொய்ப் போதனை பாவியைப் பொய்யான நிம்மதியில் விட்டுவிடுகிறது.
மூன்றாவது சோதனை — இந்தப் போதனை கேட்டிலிருந்து வெளியே நடத்துகிறதா, கேட்டுக்கு அடிமையாக்குகிறதா?
4. வாழ்க்கை — போதகரின் வாழ்க்கை என்ன சொல்கிறது?
இதுவரை போதனையைப் பார்த்தோம். அதன் தோற்றுவாய் என்ன, அதன் சாராம்சம், கருப்பொருள், என்ன, அதன் போக்கு என்ன என்று பார்த்தோம்.
இப்போது போதனையிலிருந்து போதகருக்கு வருவோம். இந்தப் போதனையைப் போதிக்கிற போதகருடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது?
ஒரு போதகருடைய வார்த்தைகளை மட்டும் கேட்டால் போதாது. அவர் நடக்கிற வழியையும், வாழ்கிற வாழ்க்கையையும் பார்க்க வேண்டும்.
ஏனெனில் வேதாகமத்தில் மெய்ப் போதனைக்கும் மெய்யான வாழ்க்கைக்கும் இடையில் பிரிக்கமுடியாத தொடர்பு இருக்கிறது.
2 பேதுரு முதலாம் அதிகாரத்தில் பேதுரு விசுவாச வாழ்க்கையின் வளர்ச்சியை இப்படிக் காட்டுகிறார்:
“உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.” — 2 பேதுரு 1:5–7
கவனியுங்கள்:
விசுவாசம்.
தைரியம் (நற்பண்பு).
ஞானம்.
இச்சையடக்கம்.
பொறுமை.
தேவபக்தி.
சகோதர சிநேகம்.
அன்பு.
இவைகள்தான் மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையில் காணப்பட வேண்டிய அடையாளங்கள். ஆனால் 2 பேதுரு இரண்டாம் அதிகாரத்திற்கு வரும்போது நாம் முற்றிலும் வேறொரு வாழ்க்கையைப் பார்க்கிறோம்.
பேதுரு கள்ளப்போதகர்களைப்பற்றிப் பேசும்போது அவர்களுடைய போதனையை மட்டும் கண்டிக்கவில்லை. அவர்களுடைய வாழ்க்கையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்.
அவர்கள் மாம்சத்தின் அசுத்த இச்சைகளின்படி நடக்கிறார்கள் (2 பேதுரு 2:10). அவர்கள் துணிகரக்காரர்கள், அகந்தையுள்ளவர்கள் (2:10). அவர்களுடைய கண்கள் விபசாரத்தால் நிறைந்திருக்கின்றன; பாவத்தைவிட்டு ஓயாதவர்கள் (2:14). அவர்கள் உறுதியில்லாதவர்களை வஞ்சிக்கிறார்கள். அவர்களுடைய இருதயம் பொருளாசையில் பழகியிருக்கிறது (2:14).
என்னே ஒரு முரண்பாடு!
முதலாம் அதிகாரத்தில்—
இச்சையடக்கம். தேவபக்தி. சகோதர சிநேகம். அன்பு.
இரண்டாம் அதிகாரத்தில்—
இச்சை. அகந்தை. விபசாரம். வஞ்சகம். பொருளாசை.
இங்கே ஒரு முக்கியமான உண்மை இருக்கிறது:
பொய்ப் போதனை என்பது வெறுமனே தவறான கருத்துகளின் பிரச்சினை மட்டும் அல்ல. அது போதகருடைய வாழ்க்கையின் பிரச்சினையாகவும் இருக்கிறது.
பிலேயாமின் வழி
இதற்கு 2 பேதுருவிலேயே பேதுரு ஒரு மனிதனை நமக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறார்:
பிலேயாம்.
“செம்மையான வழியை விட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமுடைய வழியைப் பின்பற்றிப்போனார்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பினான்.” — 2 பேதுரு 2:15
கவனியுங்கள்.
பேதுரு “பிலேயாமின் போதனை” என்று மட்டும் சொல்லவில்லை. “பிலேயாமுடைய வழி” என்று சொல்கிறார்.
ஒரு போதகருக்கு ஒரு செய்தி இருக்கிறது. அவருக்கு ஒரு வழியும் இருக்கிறது. அவருடைய செய்தியை நாம் கேட்கிறோம். அவருடைய வழியையும், வாழ்க்கையையும் நாம் பார்க்க வேண்டும்.
பிலேயாம் சாதாரணமான மனிதன் அல்ல. தேவன் அவனோடு பேசினார். தேவன் அவன் வாயில் வைத்த வார்த்தைகளை அவன் சொன்னான். இஸ்ரயேலைச் சபிக்க அழைக்கப்பட்டபோதுகூட,
“பாலாக் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் எனக்குத் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது.” — எண்ணாகமம் 22:18 என்று சொன்னான்.
கேட்பதற்கு எவ்வளவு ஆவிக்குரிய வார்த்தைகள்!
“என் தேவனாகிய கர்த்தர்.”
“கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது.”
ஆனால் அவனுடைய இருதயத்தில் என்ன இருந்தது?
பேதுரு சொல்கிறார்:
“அவன் அநீதத்தின் கூலியை விரும்பினான்.”
அவனுடைய வாயில் தேவனுடைய வார்த்தை இருந்தது. அவனுடைய இருதயத்தில் பேராசை இருந்தது.
வாய் ஒரு திசையில். இருதயம் இன்னொரு திசையில்.
இதுதான் நாம் கவனிக்க வேண்டிய ஆபத்து.
ஒரு மனிதன் சரியான வார்த்தைகளைப் பேசலாம். வேதாகமத்தை நன்றாக அறிந்திருக்கலாம். ஆவிக்குரிய மொழியைப் பயன்படுத்தலாம். பெரிய வரங்களைக் கொண்டிருக்கலாம். மக்கள்மேல் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தலாம்.
ஆனால்—
அவருடைய வாழ்க்கை என்ன சொல்கிறது?
வரம் குணநலனுக்கு மாற்றாக வர முடியாது.
சபை சில நேரங்களில் ஒரு பெரிய தவறு செய்கிறது. ஒரு மனிதனுடைய வரத்தைக் கண்டு, அவனுடைய வாழ்க்கையைப் பார்க்க மறந்துவிடுகிறது.
அவர் நன்றாகப் பேசுகிறார். அவர் வேதாகமத்தை நன்றாக விளக்குகிறார். அவருடைய ஊழியத்தில் அற்புதங்கள் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. அவரை ஆயிரக்கணக்கானவர்கள் பின்பற்றுகிறார்கள்.
இவையெல்லாம் நம்மைக் கவரலாம்.
ஆனால் இவைகளில் ஒன்றுகூட குணநலனுக்கு மாற்றாக வர முடியாது.
தேவன் ஒருவருக்குக் கொடுத்த வரம், அந்த மனிதனுடைய வாழ்க்கையில் தேவன் அங்கீகரிக்காத காரியங்களை அங்கீகரித்துவிடுவதில்லை.
ஆனால் இங்கே இன்னொரு தவறான முடிவுக்கும் நாம் வந்துவிடக்கூடாது. அப்படியானால் மெய்ப் போதகர் பாவமே செய்யமாட்டாரா?
இங்கே நாம் சமநிலையாக இருக்க வேண்டும்.
மெய்ப் போதகர் என்றால் ஒருபோதும் தவறாதவர், ஒருபோதும் விழாதவர், பாவமே செய்யாதவர் என்று பொருள் அல்ல.
பேதுருவையே பாருங்கள். அவர் கர்த்தரை மறுதலித்தார். அவர் விழுந்தார். ஆனால் அவர் உடைந்து அழுதார். மனந்திரும்பினார். கர்த்தரால் மீட்டெடுக்கப்பட்டார்.
எனவே ஒரு மனிதனுடைய ஒரு தவறை எடுத்துக்கொண்டு உடனே, “இவர் பொய்ப் போதகர்” என்று முத்திரை குத்தக்கூடாது.
கேள்வி அவர் எப்போதாவது விழுந்தாரா என்பது அல்ல. அவருடைய வாழ்க்கையின் போக்கு என்ன?
பாவம் வெளிப்படுத்தப்படும்போது அவர் மனந்திரும்புகிறாரா? திருத்தப்படும்போது தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறாரா? தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறாரா?
அல்லது—
பாவத்தை மறைக்கிறாரா? மறுக்கிறாரா? குறைக்கிறாரா? நியாயப்படுத்துகிறாரா? தன் செல்வாக்கைப் பயன்படுத்தி மற்றவர்களை மௌனப்படுத்துகிறாரா? அதே பாவ வாழ்க்கையில் தொடர்ந்து நடக்கிறாரா?
மெய்ப் போதகரிடம் நாம் எதிர்பார்ப்பது பாவமற்ற பரிபூரணம் அல்ல; திருத்தப்படக்கூடிய இருதயம்.
வாழ்க்கையைப் பாருங்கள்
எனவே ஒரு போதகருடைய மேடையை மட்டும் பார்க்காதீர்கள். அவருடைய வாழ்க்கையையும் பாருங்கள்.
அவருடைய வார்த்தைகளை மட்டும் கேட்காதீர்கள். அவருடைய வழியையும் பாருங்கள்.
அவர் என்ன போதிக்கிறார் என்பது முக்கியம். அவர் எப்படி வாழ்கிறார் என்பதும் முக்கியம்.
அவருடைய வாழ்க்கையில் இச்சையடக்கம் இருக்கிறதா? தேவபக்தி இருக்கிறதா? தாழ்மை இருக்கிறதா? சகோதர சிநேகம் இருக்கிறதா? அன்பு இருக்கிறதா?
அல்லது—
பேராசையா? காம இச்சையா? அகந்தையா? வஞ்சகமா? அதிகார ஆசையா?
இதுதான் நான்காவது சோதனை:
இந்தப் போதகரின் வாழ்க்கை என்ன சொல்கிறது?
அவருடைய செய்தியும் அவருடைய வாழ்க்கையும் ஒரே திசையில் செல்கின்றனவா?
அல்லது—
வாயில் ஒன்று, வாழ்க்கையில் வேறொன்றா?
மெய்ப் போதனையோடு மெய்யான வாழ்க்கையும் இணைந்து வருகிறது.
பொய்ப் போதகரின் வார்த்தைகள் ஆவிக்குரியவையாகத் தோன்றலாம்; ஆனால் அவருடைய வாழ்க்கை அவரை அம்பலமாக்கிவிடும்.
நான்காவது சோதனை — போதகருடைய வார்த்தையும் வாழ்க்கையும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றனவா?
5. போதனை ஈர்க்கும் விதம் — இந்தப் போதனை உங்களை எதைக்கொண்டு ஈர்க்கிறது?
ஒரு போதகருடைய செய்தியைப் பார்த்தோம்; அவருடைய வாழ்க்கையையும் பார்த்தோம். இப்போது அந்தப் போதனை மக்களைத் தன்னிடம் எதைக்கொண்டு ஈர்க்கிறது என்று பார்ப்போம்.
இந்தப் போதனை மக்களை எதைக்கொண்டு ஈர்க்கிறது?
ஒரு செய்தி நம்மை ஈர்க்கலாம். நமக்குப் பிடித்திருக்கலாம். அதை மீண்டும் மீண்டும் கேட்க விரும்பலாம். ஆனால் அது ஏன் நமக்குப் பிடிக்கிறது என்பதையும் நாம் சோதித்துப் பார்க்க வேண்டும்.
அது கிறிஸ்துவைக்கொண்டு நம்மை ஈர்க்கிறதா? தேவனுடைய வார்த்தையைக்கொண்டு ஈர்க்கிறதா? சத்தியத்தைக்கொண்டு ஈர்க்கிறதா?
அல்லது—
நம்முடைய ஆசைகளைக்கொண்டு ஈர்க்கிறதா? நமக்கு என்ன கிடைக்கும், நாம் எதைப் பெறலாம், நாம் எப்படி உயரலாம் என்பதைக்கொண்டு ஈர்க்கிறதா?
எனவே, “இந்தச் செய்தி என்னை ஈர்க்கிறதா?” என்பது மட்டும் கேள்வி அல்ல. “இந்தச் செய்தி என்னை எதைக்கொண்டு ஈர்க்கிறது?” என்பதுதான் முக்கியமான கேள்வி.
2 பேதுரு முதலாம் அதிகாரத்தில் பேதுரு விசுவாசிகளுடைய கவனத்தை எதை நோக்கித் திருப்புகிறார்?
“அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.” — 2 பேதுரு 1:19
கவனியுங்கள்:
“அவ்வசனத்தைக் கவனித்திருப்பது...”
மெய்ப் போதனை மக்களின் கவனத்தைத் தேவனுடைய வார்த்தையை நோக்கித் திருப்புகிறது.
ஆனால் 2 பேதுரு இரண்டாம் அதிகாரத்திற்கு வரும்போது முற்றிலும் வேறொரு ஈர்ப்பைப் பார்க்கிறோம்:
“வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்.” — 2 பேதுரு 2:18
ஒருபுறம்—
தேவனுடைய வார்த்தையைக்கொண்டு ஈர்க்கிறார்கள்.
மறுபுறம்—
மாம்சத்தின் இச்சைகளைக்கொண்டு வசப்படுத்துகிறார்கள்.
இதுதான் வேறுபாடு.
மீன் பிடிக்கிறவன் வெறும் தூண்டிலைத் தண்ணீரில் போடுவதில்லை. மீன் விரும்புகிற இரையைத் தூண்டிலில் வைக்கிறான். மீன் தூண்டிலைப் பார்த்து வருவதில்லை. தான் விரும்புகிற இரையைப் பார்த்துத்தான் வருகிறது. ஆனால் அது விரும்புகிற இரைக்குள் அதைப் பிடிக்கிற தூண்டில் மறைந்திருக்கிறது.
பொய்ப் போதனையின் ஈர்ப்பும் இப்படித்தான் இருக்கும். அது மனிதன் விரும்பாத ஒன்றைக் காட்டி அவனை இழுப்பதில்லை. அவன் ஏற்கெனவே விரும்புகிற ஒன்றையே அவனுக்கு முன்பாக வைக்கிறது. அவனுடைய ஆசையையே அவனைப் பிடிப்பதற்கான இரையாகப் பயன்படுத்துகிறது.
அதனால்தான் பேதுரு, அவர்கள் “மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்” என்று சொல்கிறார்.
இரை வேறாகத் தெரிகிறது. ஆனால் அதற்குள் தூண்டில் இருக்கிறது.
மெய்ப் போதனை தேவனுடைய வார்த்தையை நம்முன் வைக்கிறது.
பொய்ப் போதனை நம் இச்சைகளையே நம்முன் வைக்கிறது.
மாம்சத்தின் இச்சை என்றால் என்ன?
“மாம்சத்தின் இச்சை” என்று சொன்னவுடன் பாலியல் இச்சையை மட்டும் நினைக்கக்கூடாது. பேதுரு 2:18-ன் உடனடி சூழலில் காமவிகாரங்கள் முக்கியமாக இருக்கின்றன. ஆனால் மாம்சத்தின் இச்சை அதோடு மட்டும் முடிவதில்லை; மனிதனுடைய மாம்சம் விரும்புகிற பல காரியங்களையும் அவனை ஈர்க்கப் பயன்படுத்தலாம்.
பணம்.
செல்வம்.
ஆரோக்கியம்.
புகழ்.
பதவி.
அதிகாரம்.
வெற்றி.
சுகமான வாழ்க்கை.
மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்ற உணர்வு.
பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை.
இவைகளில் சிலவற்றை தேவன் தம் சித்தத்தின்படி நமக்குக் கொடுக்கலாம். அவைகள் பாவம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவைகளுக்கான மனிதனுடைய ஆசையைத் தூண்டி, அதைக்கொண்டு அவனைப் போதனையிடம் இழுப்பதுதான் பிரச்சினை.
அப்போது கிறிஸ்துவைத் தேடுகிற இருதயம் உருவாகவில்லை.
கிறிஸ்துவைக்கொண்டு தனக்கு வேண்டியதைப் பெற விரும்புகிற இருதயம் உருவாகிறது.
கேட்கிறவர்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது
பொய்ப் போதகர்களைப்பற்றி மட்டும் பேசிவிட்டு நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் பொய்ப் போதனை வளர்வதற்கு அதைப் பேசுகிறவர்கள் மட்டும் போதாது.
அதைக் கேட்க விரும்புகிறவர்களும் தேவை.
பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார்:
“அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.” — 2 தீமோத்தேயு 4:3–4
கவனியுங்கள்:
“தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்கள்.”
மக்கள் தாங்கள் கேட்க விரும்புகிற செய்தியைத் தேடுகிறார்கள். அந்தச் செய்தியைச் சொல்லத் தயாராக இருக்கிற போதகர்களும் உருவாகிறார்கள்.
மக்களின் இச்சை போதகரை உருவாக்குகிறது. போதகர் மக்களின் இச்சையை ஊட்டி வளர்க்கிறார்.
இரண்டும் ஒன்றையொன்று வளர்க்கின்றன.
எனவே பொய்ப் போதனையைப்பற்றி ஆராயும்போது, “அவர் ஏன் இப்படிப் போதிக்கிறார்?” என்று மட்டும் கேட்கக்கூடாது.
நாமும், “எனக்கு ஏன் இந்தப் போதனை பிடிக்கிறது?” என்று கேட்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தை எப்போதும் நமக்குப் பிடித்ததைச் சொல்லாது.
மெய்யான போதனை எப்போதும் நம் காதுகளுக்கு இனிமையாக இருக்காது. சில நேரங்களில் அது நம்மை ஆறுதல்படுத்தும். சில நேரங்களில் அது நம்மைக் கண்டிக்கும். சில நேரங்களில் அது நம்மைத் தேற்றும். சில நேரங்களில் அது நம்மைத் திருத்தும். சில நேரங்களில் அது நமக்கு வாக்குறுதியைக் காட்டும். சில நேரங்களில் அது நம் பாவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்.
ஏனென்றால்—
தேவனுடைய வார்த்தை நாம் கேட்க விரும்புவதை எப்போதும் சொல்லாது. நாம் கேட்க வேண்டியதைச் சொல்லும்.
பொய்ப் போதனை இதற்கு நேர்மாறாகச் செயல்படும். அது மனிதனுடைய ஆசையை எடுத்துக்கொண்டு, அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தேவனைப் பயன்படுத்தும். அவனுடைய மாம்சம் விரும்புவதை வாக்குறுதியாக மாற்றும். அவனுடைய பேராசையை விசுவாசம் என்று அழைக்கும். அவனுடைய சுயநலத்தை ஆசீர்வாதத்திற்கான எதிர்பார்ப்பு என்று அழைக்கும். அவனுடைய பெருமையை வெற்றியின் மனப்பாங்கு என்று அழைக்கும்.
இறுதியில்—
மனிதன் மாறுவதில்லை. அவனுடைய இச்சைகளுக்கு கிறிஸ்தவப் பெயர்கள் மட்டும் சூட்டப்படுகின்றன.
சிலுவை இல்லாமல் கிரீடம்
இதுதான் இன்றும் மிகவும் கவர்ச்சிகரமான செய்தியாக இருக்க முடியும்:
சிலுவை இல்லாமல் கிரீடம்.
மரணம் இல்லாமல் உயிர்த்தெழுதல்.
கீழ்ப்படிதல் இல்லாமல் ஆசீர்வாதம்.
பரிசுத்தம் இல்லாமல் வல்லமை.
கிறிஸ்துவைப் பின்பற்றாமல் கிறிஸ்துவின் நன்மைகள்.
இது மாம்சத்திற்கு மிகவும் பிடிக்கும்.
ஏனென்றால் மாம்சம் தேவனுடைய நன்மைகளை விரும்புகிறது. ஆனால் தேவனுடைய ஆளுகையை விரும்புவதில்லை. ஆசீர்வாதத்தை விரும்புகிறது. ஆனால் கீழ்ப்படிதலை விரும்புவதில்லை. கிரீடத்தை விரும்புகிறது. ஆனால் சிலுவையை விரும்புவதில்லை.
எதைக்கொண்டு உங்களை ஈர்க்கிறார்கள்?
எனவே ஒரு போதனையைக் கேட்கும்போது, “இந்தச் செய்தி என்னுள் எதைத் தூண்டுகிறது?” என்று கேளுங்கள்.
கிறிஸ்துவின்மேல் அன்பையா? தேவனுடைய வார்த்தைக்கான பசியையா? பரிசுத்தத்திற்கான வாஞ்சையையா? கீழ்ப்படிவதற்கான விருப்பத்தையா? தேவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஏக்கத்தையா?
அல்லது—
பண ஆசையையா? புகழ் ஆசையையா? வெற்றி ஆசையையா? சுகமான வாழ்க்கைக்கான ஆசையையா? என்னைப் பெரிதாக்க வேண்டும் என்ற விருப்பத்தையா?
இதுதான் ஐந்தாவது சோதனை:
இந்தச் செய்தி என்னை எதைக்கொண்டு ஈர்க்கிறது?
அதோடு இன்னொரு கேள்வியையும் நம்மிடம் கேட்போம்:
எனக்கு எப்படிப்பட்ட போதனை பிடிக்கிறது?
ஏனென்றால்—
பொய்ப் போதகர்கள் உருவாவதற்கு பொய்யைப் பேசத் தயாரான வாய்கள் மட்டும் போதாது. பொய்யைக் கேட்க விரும்புகிற காதுகளும் தேவை.
மெய்ப் போதனை நம் ஆசையை எடுத்துக்கொண்டு தேவனுடைய வார்த்தையை அதற்குக் கீழ்ப்படுத்துவதில்லை.
நம் ஆசையையே தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படுத்துகிறது.
ஐந்தாவது சோதனை — இந்தப் போதனை தேவனுடைய வார்த்தையால் ஈர்க்கிறதா, மனிதனுடைய மாம்ச இச்சைகளால் ஈர்க்கிறதா?
6. போதனையின் கனி — இந்தப் போதனை என்ன விளைவை உருவாக்குகிறது?
ஒரு போதனை மக்களை எதைக்கொண்டு ஈர்க்கிறது என்று பார்த்தோம். ஆனால் மக்களை ஈர்த்துவிட்டது என்பதே அதன் உண்மைத்தன்மைக்கான ஆதாரம் அல்ல. அது அவர்களுடைய வாழ்க்கையில் என்ன விளைவை உருவாக்குகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
ஒரு மரத்தை அதன் இலைகளை மட்டும் பார்த்து மதிப்பிட முடியாது. அது உயரமாக இருக்கலாம். அடர்த்தியாக இருக்கலாம். பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். ஆனால் இறுதியில் கேட்க வேண்டிய கேள்வி—
அதில் என்ன கனி இருக்கிறது?
போதனையும் அப்படித்தான்.
ஒரு போதனை எவ்வளவு பிரபலமானது, எத்தனை பேர் அதைக் கேட்கிறார்கள், எவ்வளவு உணர்ச்சியை உருவாக்குகிறது என்பதையெல்லாம் தாண்டி நாம் கேட்க வேண்டிய கேள்வி:
இந்தப் போதனை எப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்குகிறது?
2 பேதுரு முதலாம் அதிகாரத்தில் பேதுரு,
“இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.” — 2 பேதுரு 1:8 என்று சொல்கிறார்.
கவனியுங்கள்:
“கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.”
எது பெருகும்போது?
முந்தின வசனங்களில் நாம் பார்த்தவைகள்—
விசுவாசம். தைரியம். ஞானம். இச்சையடக்கம். பொறுமை. தேவபக்தி. சகோதர சிநேகம். அன்பு.
இவை ஒருவருடைய வாழ்க்கையில் பெருகும்போது, அவர் கிறிஸ்துவை அறிகிற அறிவில் கனியற்றவராக இருகக்கமாட்டார்.
மெய்ப் போதனை நம்மை இப்படிப்பட்ட கனியுள்ள வாழ்க்கைக்கு நடத்துகிறது.
அது கிறிஸ்துவைப்பற்றிய தகவலை மட்டும் அதிகரிப்பதில்லை; கிறிஸ்துவின் சுபாவத்தை, தன்மையை, இயல்பை, குணத்தை வாழ்க்கையில் உருவாகும்படி நம்மை நடத்துகிறது.
ஆனால் 2 பேதுரு இரண்டாம் அதிகாரத்திற்கு வரும்போது பேதுரு கள்ளப்போதகர்களுக்கு ஒரு பயங்கரமான உருவகத்தைப் பயன்படுத்துகிறார்:
“இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகள்...” — 2 பேதுரு 2:17
என்னே ஒரு படம்!
கிணறு இருக்கிறது. ஆனால் கிணற்றில் தண்ணீர் இல்லை.
தோற்றம் இருக்கிறது. ஆனால் ஜீவன் இல்லை.
வாக்குறுதி இருக்கிறது. ஆனால் நிறைவு இல்லை.
சத்தம் இருக்கிறது. ஆனால் கனி இல்லை.
தாகமாக இருக்கிற மனிதன் தூரத்திலிருந்து ஒரு கிணற்றைப் பார்க்கிறான். தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அதனிடம் வருகிறான். ஆனால் கிணற்றை அடைந்தபோது—
தண்ணீர் இல்லை.
அதுதான் பொய்ப் போதனையின் துயரம். அது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கலாம். பெரிய வாக்குறுதிகளைக் கொடுக்கலாம். மக்களைத் தன்னிடம் ஓடிவரச் செய்யலாம்.
ஆனால் இறுதியில் கேள்வி—
அது ஜீவனைத் தருகிறதா?
“அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்”
கர்த்தராகிய இயேசுவும் பொய்யான தீர்க்கதரிசிகளைப்பற்றி எச்சரித்தபோது இதே அளவுகோலைக் கொடுத்தார்:
“கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்... அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” — மத்தேயு 7:15–16
அவர்கள் எப்படி வருகிறார்கள்?
“ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு.”
வெளித்தோற்றம் ஏமாற்றலாம். வார்த்தைகள் ஏமாற்றலாம். ஆவிக்குரிய தோற்றம் ஏமாற்றலாம்.
ஆனால் இயேசு சொல்கிறார்:
“அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.”
அதனால் நாம் கனியைப் பார்க்க வேண்டும்.
எது கனி அல்ல?
இங்கே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பெரிய கூட்டம் இருப்பது மட்டும் கனி அல்ல. பெரிய கட்டடங்கள் இருப்பது மட்டும் கனி அல்ல. அதிகமான பணம் வருவது மட்டும் கனி அல்ல. ஆயிரக்கணக்கானவர்கள் சமூக ஊடகங்களில் பின்பற்றுவது மட்டும் கனி அல்ல. பல லட்சம் பேர் ஒரு காணொளியைப் பார்ப்பது மட்டும் கனி அல்ல. மக்கள் அழுவது மட்டும் கனி அல்ல. உணர்ச்சிவசப்படுவது மட்டும் கனி அல்ல. கைதட்டுவது மட்டும் கனி அல்ல. ஒரு போதகர் உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதும் ஆவிக்குரிய கனிக்கான ஆதாரம் அல்ல.
செயல்பாடு கனி அல்ல. புகழ் கனி அல்ல. கூட்டம் கனி அல்ல. உணர்ச்சி கனி அல்ல.
இவைகளில் சில நல்ல ஊழியத்தில் காணப்படலாம். ஆனால் இவைகளே அதன் உண்மைத்தன்மைக்கான அளவுகோல் அல்ல.
அப்படியானால் மெய்யான கனி என்ன?
2 பேதுரு முதலாம் அதிகாரமே அதற்குப் பதில் சொல்கிறது.
இந்தப் போதனையை ஆண்டுக்கணக்காகக் கேட்கிறவர்கள்—
கிறிஸ்துவை அதிகமாக அறிகிறார்களா? கிறிஸ்துவை அதிகமாக நேசிக்கிறார்களா? தேவனுடைய வார்த்தையில் வேரூன்றுகிறார்களா? இச்சையடக்கத்தில் வளர்கிறார்களா? பொறுமையில் வளர்கிறார்களா? தேவபக்தியில் வளர்கிறார்களா? சகோதர சிநேகத்தில் வளர்கிறார்களா? அன்பில் வளர்கிறார்களா?
அவர்கள் கிறிஸ்துவைப்போல் மாறிக்கொண்டிருக்கிறார்களா?
இதுதான் முக்கியமான கேள்வி.
ஒரு போதனையின் உண்மையான கனியை ஒரு கூட்டம் முடிந்தவுடன் முழுமையாகப் பார்க்க முடியாது.
அந்தப் போதனையின்கீழ் ஆண்டுக்கணக்காக வாழ்கிற மக்களைப் பாருங்கள்.
அவர்களுடைய மதிப்பீடுகள் எப்படி மாறியிருக்கின்றன? அவர்களுடைய ஆசைகள் எப்படி மாறியிருக்கின்றன? அவர்களுடைய குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது? பணத்தைப்பற்றிய அவர்களுடைய மனப்பான்மை எப்படி இருக்கிறது? பாவத்தைப்பற்றிய உணர்வு எப்படி இருக்கிறது? மற்ற விசுவாசிகளை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள்? கிறிஸ்துவின்மேல் அன்பு வளர்ந்திருக்கிறதா?
போதனை மனிதர்களை உருவாக்குகிறது
இது மிகவும் முக்கியம்:
போதனை வெறுமனே கருத்துகளை உருவாக்குவதில்லை. போதனை மனிதர்களை உருவாக்குகிறது.
நாம் தொடர்ந்து எதைக் கேட்கிறோமோ அது நம் சிந்தனையை வடிவமைக்கிறது. நம் சிந்தனை நம் ஆசைகளை வடிவமைக்கிறது. நம் ஆசைகள் நம் வாழ்க்கையை வடிவமைக்கின்றன.
எனவே ஒரு போதனையின் கனியை அறிய வேண்டுமானால், அந்தப் போதனையால் உருவாக்கப்பட்ட மனிதர்களைப் பாருங்கள்.
அவர்கள் எதைத் தேடுகிறார்கள்?
கிறிஸ்துவையா, அடுத்த ஆசீர்வாதத்தையா?
தேவனுடைய வார்த்தையையா, அடுத்த புதிய வெளிப்பாட்டையா?
கிறிஸ்துவின் சாயலையா, அடுத்த அற்புதத்தையா?
தேவபக்தியையா, அடுத்த ஆவிக்குரிய அனுபவத்தையா?
அவர்கள் கிறிஸ்துவை அதிகமாகச் சார்ந்திருக்கிறார்களா? அல்லது ஒரு குறிப்பிட்ட போதகரை அதிகமாகச் சார்ந்திருக்கிறார்களா?
இதுவும் கனியின் ஒரு சோதனை.
போதகர் மக்களை யாரிடம் சேர்க்கிறார்?
மெய்ப் போதகர் மக்களைத் தன்னோடு கட்டிப்போடுவதில்லை. தான் இல்லாமல் அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ முடியாது என்ற நிலையை உருவாக்குவதில்லை. தன் பெயர், தன் ஊழியம், தன் வெளிப்பாடு, தன் தனித்தன்மை ஆகியவைகளை மையமாக்குவதில்லை.
மெய்ப் போதகர் தன்னைச் சுற்றி மக்களை உருவாக்குவதில்லை. கிறிஸ்துவைச் சுற்றி மக்களைச் சேர்க்கிறார்.
யோவான் ஸ்நானன் சொன்ன வார்த்தை இங்கேயும் பொருந்துகிறது:
“அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.” — யோவான் 3:30
மெய்ப் போதகருடைய ஊழியத்தின் கனி, மக்கள் அந்தப் போதகரை அதிகமாகச் சார்ந்திருப்பது அல்ல.
அவர்கள் கிறிஸ்துவை அதிகமாக அறிந்து, கிறிஸ்துவை அதிகமாக நேசித்து, கிறிஸ்துவைப்போல் மாறுவது.
கனியைப் பாருங்கள்
மற்றவர்களுடைய கனியை மட்டும் பார்க்காதீர்கள். நம்மையும் பார்த்துக்கொள்வோம். நான் ஆண்டுக்கணக்காகக் கேட்ட தேவனுடைய வார்த்தை என்னில் என்ன கனியை உருவாக்கியிருக்கிறது? கிறிஸ்துவை அதிகமாக அறிந்திருக்கிறேனா? அதிகமாக நேசிக்கிறேனா? இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம், அன்பு ஆகியவைகளில் வளர்ந்திருக்கிறேனா?
எனவே ஒரு போதனையை அதன் வாக்குறுதிகளால் மட்டும் மதிப்பிடாதீர்கள். அதன் மேடையால் மதிப்பிடாதீர்கள். அதன் புகழால் மதிப்பிடாதீர்கள். அதன் கூட்டத்தால் மதிப்பிடாதீர்கள்.
அதன் கனியைப் பாருங்கள்.
இதுதான் ஆறாவது சோதனை:
இந்தப் போதனை என்ன விளைவை உருவாக்குகிறது?
இது எப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்குகிறது?
கிறிஸ்துவை அறிகிறவர்களையா? கிறிஸ்துவைப்போல் மாறுகிறவர்களையா?
அல்லது—
ஆசீர்வாதங்களைத் தேடுகிறவர்களையா? அற்புதங்களைத் தேடுகிறவர்களையா? ஒரு மனிதனைச் சார்ந்திருக்கிறவர்களையா? தண்ணீரில்லாத கிணற்றைச் சுற்றி இன்னும் தாகத்தோடு நிற்கிறவர்களையா?
மெய்ப் போதனை கனியுள்ள வாழ்க்கைக்கு நடத்துகிறது.
பொய்ப் போதனை கனி இருப்பதுபோல் தோற்றமளித்தும் கனியற்றதாக இருக்கலாம்.
ஆறாவது சோதனை — இந்தப் போதனை என்ன கனியை உருவாக்குகிறது? அது ஜீவனைத் தருகிறதா?
7. போதனையின் முடிவு — இந்தப் பாதை இறுதியில் எங்கே கொண்டுபோய் நிறுத்துகிறது?
நாம் ஒரு நதியின் தோற்றுவாயிலிருந்து ஆரம்பித்தோம். நதி எங்கே உற்பத்தியாகிறது, அதில் என்ன இருக்கிறது, அது எந்தத் திசையில் பாய்கிறது என்று பார்த்தோம்.
இப்போது அந்த நதியின் பயணத்தின் கடைசிக்கு வருவோம்.
அது இறுதியில் எங்கே போய்ச் சேர்கிறது?
நதிக்கு ஒரு தோற்றுவாய் இருப்பதுபோல அதற்கு ஒரு முகத்துவாரமும் இருக்கிறது. அது எங்கோ தொடங்குகிறது. எங்கோ போய்ச் சேர்கிறது.
போதனையும் அப்படித்தான்.
ஒரு போதனை எங்கிருந்து வருகிறது என்பது முக்கியம். அதன் சாராம்சம், உள்ளடக்கம், என்ன என்பது முக்கியம். அதன் போக்கு என்ன என்பது முக்கியம். அதன் கனி என்ன என்பதும் முக்கியம்.
ஆனால் இறுதியாக நாம் கேட்க வேண்டிய கேள்வி—
இந்தப் போதனை என்னை இறுதியில் எங்கே கொண்டுபோய் நிறுத்துகிறது?
ஏனென்றால் போதனை வெறும் கருத்து அல்ல.
போதனை ஒரு பாதை. அது நம்மை எங்கோ கொண்டுசெல்கிறது.
இரண்டு பாதைகள் — இரண்டு முடிவுகள்
2 பேதுரு முதலாம் அதிகாரத்தின் முடிவைப் பாருங்கள்.
பேதுரு விசுவாசிகளிடம்,
“இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.” — 2 பேதுரு 1:11
என்று சொல்கிறார்.
என்னே ஒரு முடிவு!
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நித்திய ராஜ்யம்.
இப்போது இரண்டாம் அதிகாரத்தைப் பாருங்கள்.
கள்ளப்போதகர்களைப்பற்றிப் பேதுரு ஆரம்பத்திலேயே,
“தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்வார்கள்.” — 2 பேதுரு 2:1
என்று சொல்கிறார்.
அடுத்த சில வசனங்களில்,
“அவர்களுடைய ஆக்கினைத்தீர்ப்பு பூர்வகாலமுதல் அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.” — 2 பேதுரு 2:3
என்று எச்சரிக்கிறார்.
என்னே ஒரு முரண்பாடு!
ஒருபுறம்—
கிறிஸ்துவின் நித்திய ராஜ்யம்.
மறுபுறம்—
ஆக்கினைத்தீர்ப்பு. அழிவு.
முதலாம் அதிகாரத்தின் பாதை ஒரு முடிவுக்குக் கொண்டுசெல்கிறது. இரண்டாம் அதிகாரத்தின் பாதை வேறொரு முடிவுக்குக் கொண்டுசெல்கிறது.
பாதைகள் வேறு. முடிவுகளும் வேறு.
போதனை ஒரு பாதை
நாம் போதனையை வெறும் கருத்து வேறுபாடாக நினைத்துவிடக்கூடாது.
“அவர் அப்படிச் சொல்கிறார்; இவர் இப்படிச் சொல்கிறார்.”
“அவருக்கு ஒரு கருத்து; இவருக்கு இன்னொரு கருத்து.”
என்று எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஏனென்றால்—
போதனை நம் பாதையை வடிவமைக்கிறது. பாதை நம்மை ஒரு முடிவை நோக்கி நடத்துகிறது.
பாதை மாறினால் பயணம் மாறும். பயணம் மாறினால் இலக்கு மாறும்.
ஒரு தவறான போதனை நம் தேவனைப்பற்றிய புரிதலை மாற்றும். கிறிஸ்துவைப்பற்றிய புரிதலை மாற்றும். பாவத்தைப்பற்றிய புரிதலை மாற்றும். கிருபையைப்பற்றிய புரிதலை மாற்றும். இரட்சிப்பைப்பற்றிய புரிதலை மாற்றும். இறுதியில் அது நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும்.
அதனால்—
“இந்தப் போதனை கேட்பதற்கு நன்றாக இருக்கிறதா?” என்பதைவிட, “இந்தப் போதனை என்னை இறுதியில் எங்கே கொண்டுபோய் நிறுத்தும்?” என்பதுதான் பெரிய கேள்வி.
“கர்த்தாவே, கர்த்தாவே”
இதற்குக் கர்த்தராகிய இயேசு சொன்ன மிகப் பயங்கரமான எச்சரிக்கைகளில் ஒன்று மத்தேயு 7-ல் இருக்கிறது.
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” — மத்தேயு 7:21
அவர்கள் இயேசுவின் பெயரை அறியாதவர்கள் அல்ல. அவர்கள் “கர்த்தாவே! கர்த்தாவே!” என்று சொல்கிறார்கள்.
அதோடு அவர்கள் சாதாரணமான காரியங்களைச் செய்ததாகவும் சொல்லவில்லை.
“உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” — மத்தேயு 7:22
கவனியுங்கள்:
உமது நாமத்தினாலே.
தீர்க்கதரிசனம்.
பிசாசுகளைத் துரத்துதல்.
அநேக அற்புதங்கள்.
வெளியே பார்த்தால் இது மிகப்பெரிய ஆவிக்குரிய வெற்றிபோல் தோன்றுகிறது.
ஆனால் இறுதியில் இயேசு என்ன சொல்கிறார்?
“நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்.” — மத்தேயு 7:23
என்னே ஒரு பயங்கரமான முடிவு!
அவர்கள் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தினார்கள். ஆனால்—
“நான் உங்களை அறியவில்லை” என்று இயேசு சொன்னார்.
எனவே இறுதியில் கேள்வி, “நான் கிறிஸ்துவின் பெயரில் என்ன செய்தேன்?” என்பது மட்டும் அல்ல.
“நான் கிறிஸ்துவை அறிந்திருக்கிறேனா? நான் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவனா?” என்பதுதான்.
வெற்றி முடிவை நிர்ணயிப்பதில்லை
இங்கே இன்னொரு காரியத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது.
ஓர் ஊழியம் இப்போது வெற்றிகரமாகத் தோன்றலாம். பெரிய கூட்டங்கள் இருக்கலாம். பெரிய செல்வாக்கு இருக்கலாம். அநேகர் அந்தப் போதகரைப் பின்பற்றலாம். அற்புதமான காரியங்கள் நடப்பதாகத் தோன்றலாம்.
ஆனால்—
கூட்டம் முடிவை மாற்றுவதில்லை.
புகழ் முடிவை மாற்றுவதில்லை.
செல்வாக்கு முடிவை மாற்றுவதில்லை.
மனிதர்களுடைய அங்கீகாரம் தேவனுடைய தீர்ப்பை மாற்றுவதில்லை.
இறுதியில் தேவனுடைய மதிப்பீடுதான் நிற்கும்.
தோற்றுவாயிலிருந்து முகத்துவாரம்வரை
இப்போது நாம் பார்த்த ஏழு சோதனைகளையும் நினைத்துப் பாருங்கள்.
ஒரு நதியைப்போல ஒரு போதனையும் எங்கோ தொடங்குகிறது.
அதன் தோற்றுவாய் என்ன?
அதில் ஏதோவொன்று பாய்கிறது.
அதன் சாராம்சம் என்ன?
அது ஒரு திசையில் செல்கிறது.
அதன் போக்கு என்ன?
அந்தச் செய்தியை எடுத்துச் செல்கிற மனிதன் இருக்கிறார்.
அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது?
அது மக்களை ஏதோவொன்றைக்கொண்டு ஈர்க்கிறது.
அது எதைக்கொண்டு ஈர்க்கிறது?
அது ஒரு விளைவை உருவாக்குகிறது.
அதன் கனி என்ன?
இறுதியில் அது எங்கோ போய்ச் சேர்கிறது.
அதன் முகத்துவாரம் எது? அதன் முடிவு என்ன?
தோற்றுவாயில் ஏற்பட்ட சிறிய மாற்றம், கீழே செல்லச் செல்ல பெரிய வேறுபாட்டை உருவாக்கும்.
சாராம்சம் மாறினால் கிறிஸ்து மையத்திலிருந்து அகற்றப்படுவார். போக்கு மாறினால் வாழ்க்கையின் திசை மாறும். வாழ்க்கை சீர்கெட்டால் போதகருடைய வார்த்தைக்கும் வழிக்கும் இடையில் பிளவு ஏற்படும். மாம்சத்தின் இச்சையால் ஈர்க்கப்பட்டால் மக்கள் சத்தியத்திலிருந்து விலகுவார்கள். போதனையின் கனி மாறினால், அது உருவாக்குகிற வாழ்க்கையும் மாறும்.
இறுதியில்—
பாதை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கிறது என்பதுதான் தீர்மானமான கேள்வி.
முடிவைப் பாருங்கள்
எனவே ஒரு போதனையின் ஆரம்பத்தை மட்டும் பார்க்காதீர்கள். அதன் இனிமையான வார்த்தைகளை மட்டும் பார்க்காதீர்கள். அதன் வாக்குறுதிகளை மட்டும் பார்க்காதீர்கள். அதன் தற்போதைய வெற்றியை மட்டும் பார்க்காதீர்கள்.
அதன் முடிவைப் பாருங்கள்.
இதுதான் ஏழாவது சோதனை:
இந்தப் போதனை என்னை இறுதியில் எங்கே கொண்டுபோய் நிறுத்துகிறது?
கிறிஸ்துவிடமா? அவரை அறிகிற அறிவிலா? அவருக்குக் கீழ்ப்படிகிற வாழ்க்கையிலா? அவருடைய சாயலிலா? அவருடைய நித்திய ராஜ்யத்தை நோக்கிய பாதையிலா?
அல்லது—
கிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டே அவரைவிட்டு விலகிச் செல்லும் பாதையிலா?
மெய்ப் போதனை இறுதியில் நம்மைக் கிறிஸ்துவிடம் கொண்டுபோய் நிறுத்துகிறது.
பொய்ப் போதனை கிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டே அவரைவிட்டு விலக்கிக் கொண்டுபோகலாம்.
ஒருநாள் எல்லா மேடைகளும் மறைந்துபோகும். எல்லா கூட்டங்களும் கலைந்துபோகும். எல்லா கைத்தட்டல்களும் நின்றுபோகும். எல்லாப் பட்டங்களும் பதவிகளும் கீழே வைக்கப்படும்.
அப்போது போதகரும் கேட்கிறவரும் ஒரே ஆண்டவருக்கு முன்பாக நிற்பார்கள்.
அப்போது முக்கியமானது—
மக்கள் நம்மைப்பற்றி என்ன சொன்னார்கள் என்பது அல்ல.
கர்த்தர் நம்மைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதுதான்.
ஏழாவது சோதனை — இந்தப் போதனை இறுதியில் என்னைக் கிறிஸ்துவிடம் கொண்டுபோய் நிறுத்துகிறதா, அவரைவிட்டு விலக்குகிறதா?
தோற்றுவாயைப் பாருங்கள். முகத்துவாரத்தையும் பாருங்கள்.
முடிவுரை — ஏமாந்துவிடாதீர்கள்
பேதுருவின் எச்சரிக்கை பொய்ப் போதகர்கள் உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருப்பார்கள் என்பதல்ல.
அவர் சொன்ன வார்த்தையை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்:
“உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்.” — 2 பேதுரு 2:1
“உங்களுக்குள்.”
அதனால்தான் சபை விழித்திருக்க வேண்டும். ஆனால் எல்லோரையும் சந்தேகிக்கிற மனப்பான்மையோடு அல்ல. தேவனுடைய வார்த்தையைக்கொண்டு பகுத்துணர்கிறவர்களாக விழித்திருக்க வேண்டும்.
ஒருவரைச் சபைக்குள் வரவேற்பதும், அவருக்குச் சபையை வழிநடத்தும் செல்வாக்கைக் கொடுப்பதும் ஒன்றல்ல.
எல்லோரையும் நேசிக்கலாம்; எல்லோரையும் போதகர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது.
அன்பு இருக்க வேண்டும். அதே நேரத்தில் சத்தியத்திற்கான காவலும் இருக்க வேண்டும்.
ஆனால் இங்கே இன்னொரு ஆபத்தும் இருக்கிறது.
பொய்ப் போதகர்களைப்பற்றிய எச்சரிக்கையைக் கேட்டபிறகு, நாம் எல்லோரையும் சந்தேகிக்க ஆரம்பித்துவிடக்கூடாது. ஒவ்வொரு சிறிய கருத்து வேறுபாட்டையும் பொய்ப் போதனை என்று சொல்லக்கூடாது. ஒரு போதகர் தவறு செய்தவுடன் அவர்மேல் “பொய்ப் போதகர்” என்று முத்திரை குத்தக்கூடாது.
சந்தேக மனப்பான்மையும் ஆவிக்குரிய பகுத்துணர்வும் ஒன்றல்ல.
சந்தேக மனப்பான்மை மனிதர்களில் குறையைத் தேடுகிறது.
ஆவிக்குரிய பகுத்துணர்வு தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் மெய்யையும் பொய்யையும் பிரித்தறிகிறது.
அதோடு, போலி இருப்பதால் உண்மையையே நிராகரித்துவிடக்கூடாது.
கள்ள ரூபாய்த் தாள் இருக்கிறது என்பதால் நல்ல ரூபாய்த் தாளையும் தூக்கி எறிவதில்லை.
போலி இருப்பது உண்மையை நிராகரிப்பதற்கான காரணம் அல்ல. உண்மையை இன்னும் கவனமாக அறிந்துகொள்வதற்கான காரணம்.
அதனால்தான் பொய்யைப்பற்றி மட்டும் அதிகமாகப் படித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. மெய்யை அறிய வேண்டும்.
தேவனுடைய வார்த்தையை அறியுங்கள்.
கிறிஸ்துவை அறியுங்கள்.
நற்செய்தியை அறியுங்கள்.
தேவனுடைய கிருபையை அறியுங்கள்.
மெய்யான தேவபக்தி என்ன என்பதை அறியுங்கள்.
மெய்யை எவ்வளவு தெளிவாக அறிகிறோமோ, பொய்யை அவ்வளவு தெளிவாக அடையாளம் காண முடியும்.
ஆனால் இந்தச் செய்தியின் முடிவில் என் விரலை ஒரு பொய்ப் போதகரை நோக்கி நீட்டிக்க நான் விரும்பவில்லை.
என் விரலை என்னை நோக்கியே திருப்ப விரும்புகிறேன்.
நான் போதிக்கிறவன் என்றால்—
நான் தேவன் சொன்னதைச் சொல்கிறேனா?
அல்லது நான் சொல்ல விரும்புகிறதை வேதாகமத்தைக்கொண்டு சொல்கிறேனா?
நான் கேட்கிறவன் என்றால்—
தேவன் சொல்வதைக் கேட்க விரும்புகிறேனா?
அல்லது எனக்குப் பிடித்ததைச் சொல்கிற போதகரைத் தேடுகிறேனா?
இறுதியாக இன்னும் ஆழமான கேள்வி:
நான் மெய்யை மட்டும் அறிந்திருக்கிறேனா?
அல்லது மெய்யானவரை அறிந்திருக்கிறேனா?
ஏனென்றால் மெய் என்பது இறுதியில் ஒரு கொள்கை மட்டும் அல்ல.
இயேசு சொன்னார்:
“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.” — யோவான் 14:6
சத்தியத்தின் மையத்தில் கிறிஸ்து இருக்கிறார்.
சத்தியத்தின் முடிவிலும் கிறிஸ்து இருக்கிறார்.
எனவே—
பொய்யால் ஏமாந்துவிடாதீர்கள்.
மெய்யை அறியுங்கள்.
மெய்யை நேசியுங்கள்.
மெய்யில் நிலைத்திருங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மெய்யானவராகிய கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளுங்கள்.