விருந்தினர்கள் ஒரு நாள் நம் வீட்டுக்கு வருவதாகச் சொல்கிறார்கள். வீட்டில் முன்னறை, பின்னறை, படுக்கையறை, படிப்பறை, அடுப்பறை, கழிப்பறை எனப் பல அறைகள் இருந்தாலும், அவர்கள் பார்க்கக்கூடும், பயன்படுத்தக்கூடும் என்று நாம் நினைக்கிற முன்னறையைத்தான் முதலில் சுத்தம்செய்து அலங்கரிக்கிறோம்.
சாளரங்களைத் துடைக்கிறோம். இருக்கைகளை ஒழுங்குபடுத்துகிறோம். அழகிய அலங்காரப் பொருட்களை வைக்கிறோம். சிறப்பான பாத்திரங்களில் உணவு பரிமாறுகிறோம். அவர்கள் நம் வீட்டைப் பார்த்து நல்லவிதமாக நினைக்க வேண்டும்; நம்மைப் பற்றியும் உயர்வாக எண்ண வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.
ஆனால், அவர்கள் பார்க்கமாட்டார்கள் என்று நாம் நினைக்கிற அறைகளின் நிலை வேறாக இருக்கலாம்.
கொல்லைப்புறத்தில் குப்பைகள் கொட்டிக்கிடக்கலாம். ஓட வழியில்லாமல் சாக்கடைத் தண்ணீர் தேங்கியிருக்கலாம். அதிலிருந்து துர்நாற்றம் வீசலாம். கொசுக்கள் உல்லாசமாகப் பறந்துகொண்டிருக்கலாம். படுக்கையறையில் கசங்கிய படுக்கை, மடிக்கப்படாத போர்வைகள் கிடக்கலாம். மேஜையின் இழுப்பறைகளில் பல ஆண்டுகளாகத் தொடப்படாத பொருட்கள் தூசிபடிந்து கிடக்கலாம். படிப்பறையில் புத்தகங்கள் சிதறிக்கிடக்கலாம்.
யாரும் பார்க்கப்போவதில்லை என்று நினைப்பதால் அவற்றைக்குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை.
நம் வாழ்க்கையின் முன்னறையும் பின்னறையும்
ஒரு கிறிஸ்தவனின் உண்மையான வாழ்க்கை எல்லாரும் பார்க்கிற “முன்னறையில்” மட்டும் இல்லை. யாரும் பார்க்காத, தேவன் பார்க்கிற “பின்னறையில்தான்” அவன் உண்மையில் யார் என்பது வெளிப்படுகிறது.
ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் ஒரு முன்னறை இருக்கிறது; ஒரு பின்னறையும் இருக்கிறது.
முன்னறை — எல்லாரும் பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று நாம் விரும்புகிற “நான்”.
பின்னறை — யாரும் பார்க்காதபோது வெளிப்படும் உண்மையான “நான்”.
இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படக்கூடாது. ஆனால், நம் வெளிப்புற வாழ்க்கைக்கும் மறைவான வாழ்க்கைக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்படுவது எவ்வளவு எளிது!
பிறர் பார்க்கிற நம் நடத்தையை ஒழுங்குபடுத்துவதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தலாம். பக்தியுள்ளவர்களாக, அமைதியானவர்களாக, அன்புள்ளவர்களாக, ஆவிக்குரியவர்களாகத் தோன்ற விரும்பலாம். ஆனால், தேவன் நம் தோற்றத்தை மட்டும் பார்ப்பதில்லை. யாரும் பார்க்காதபோது நம் இருதயத்தில் என்ன நடக்கிறது என்பதையும் அவர் பார்க்கிறார்.
எனவே, நம் முன்னறையைவிட நம் பின்னறைக்கே அதிகக் கவனம் தேவை.
குறிப்பாக நம் உணர்ச்சிகளுக்கு.
உணர்ச்சிகள் எதிரிகள் அல்ல
உணர்ச்சிகள் தேவனால் படைக்கப்பட்ட நம் மனித இயல்பின் சட்டப்பூர்வமான பகுதி. அவற்றை அழித்துவிட வேண்டியதில்லை. ஆனால், அவை கிறிஸ்துவின் ஆளுகையின்கீழும் பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டின்கீழும் இருக்க வேண்டும்.
இல்லையென்றால், குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒரு சிறு குழந்தையின் கையில் இருப்பதுபோல் அவை ஆபத்தானவையாக மாறலாம்.
பயம் ஒரு குறிப்பிட்ட அளவில் ஆரோக்கியமான உணர்ச்சி. அது நம்மை முடக்கிவிட்டால் பிரச்சினையாகிறது.
அக்கறையும் கரிசனையும் இயல்பானவை. ஆனால், அவை இடைவிடாத கவலையாக மாறினால் நம்மையே சிதைக்கத் தொடங்குகின்றன.
சந்தோஷம் நல்லது. ஆனால், அது பொறுப்பற்ற தன்னலமாக மாறக்கூடாது.
சோகம் மனித வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆனால், அது நம்மை நிரந்தரமான மனச்சோர்வுக்குள் அடைத்துவிடக்கூடாது.
இப்படியே கோபத்துக்கும் ஒரு இடம் இருக்கிறது.
ஆனால், எல்லை மீறுவதற்கு மிக எளிதான உணர்ச்சிகளில் ஒன்று கோபம்.
கோபம் — மிக ஆபத்தான உணர்ச்சி
கடலலைகள் தங்கள் எல்லைக்குள் இருக்கும்போது அழகாக இருக்கின்றன. ஆனால், அவை எல்லையை மீறும்போது சுனாமியாக மாறி அழிவை ஏற்படுத்துகின்றன.
கோபமும் அப்படித்தான்.
அது எல்லையை மீறும்போது குடும்பங்களை அழிக்கலாம்; உறவுகளைப் பாழாக்கலாம்; சபைகளில் பிளவுகளை ஏற்படுத்தலாம்; நட்புகளை முறித்துவிடலாம்; சில நேரங்களில் வன்முறைக்கும் கொலைக்கும் வழிவகுக்கலாம்.
கோபத்தின் பிரச்சினைக்குத் தீர்வு வெறும் மனவியல் நுட்பங்களால் அதை “நிர்வகிப்பது” மட்டுமல்ல. புதிய ஏற்பாடு நம் கோபத்தையும் கிறிஸ்துவின் ஆளுகைக்குள் கொண்டுவர அழைக்கிறது.
கிறிஸ்துவை அறியும்முன் சவுலின் வாழ்க்கையில் கொந்தளிக்கும் கோபத்தின் வெளிப்பாட்டைக் காண்கிறோம்:
“சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போனான்”
— அப்போஸ்தலர் 9:1
ஆனால், கிறிஸ்துவால் மாற்றப்பட்ட அதே மனிதன் பின்னர் இவ்வாறு எழுதுகிறார்:
“நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.”
— எபேசியர் 4:26–27
கோபப்படுவது பாவமா?
கோபம் எப்போதும் பாவமல்ல.
சில நேரங்களில் அது ஒரு நியாயமான அதிருப்தியாக இருக்கலாம். நற்செய்திகளில் ஆண்டவராகிய இயேசுவே சில சூழ்நிலைகளில் கோபமடைந்ததைப் பார்க்கிறோம். அநியாயம், கடின இருதயம், தேவனுடைய பரிசுத்தத்தை அவமதித்தல் போன்றவை நம்மிடம் எந்த எதிர்வினையையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் அதுவே ஆரோக்கியமான நிலை என்று சொல்லமுடியாது.
பவுல்,
“கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்”
என்று எழுதுவதில் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது.
கோபம் வரலாம். ஆனால், கோபம் பாவமாக வளரக்கூடாது.
கடையில் வாங்கும் பல பொருட்களுக்கு ஒரு காலாவதி தேதி இருப்பதுபோல், கோபத்துக்கும் ஒரு காலவரைவு இருக்க வேண்டும்.
பவுல் மிகத் தெளிவான எல்லை வைக்கிறார்:
“சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக...”
இதன் நோக்கம் கடிகாரத்தைப் பார்த்து, சூரியன் மறையும் நிமிடத்தில் கோபத்தை மாயமாக நீக்கிவிட வேண்டும் என்பதல்ல. மாறாக, கோபத்தைப் பாதுகாத்து வளர்க்காதீர்கள்; அதை மனதில் ஊட்டி, மீண்டும் மீண்டும் நினைத்து, அதற்கு உணவு கொடுத்து நாளை நோக்கிக் கொண்டு செல்லாதீர்கள் என்பதே அதன் வலிமையான எச்சரிக்கை.
கோபம் வந்தவுடன் அதைத் தீர்க்கும் வேலை தொடங்க வேண்டும்.
ஏனென்றால் அடுத்த வசனத்தில் பவுல் கூறுகிறார்:
“பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.”
கோபத்தை நாம் பிடித்துக்கொண்டிருக்கும்போது, அது தனியாக இருப்பதில்லை. அது வேறு பலவற்றையும் அழைத்துக்கொண்டு வருகிறது.
கோபம் வளரும்போது என்ன நடக்கிறது?
தீர்க்கப்படாத கோபம் விரைவில் இன்னொரு வடிவம் எடுக்கிறது.
கோபம் → கசப்பு → தீர்ப்புணர்வு → வெறுப்பு → பழிவாங்கும் எண்ணம்.
முதலில் ஒரு சம்பவத்தைக்குறித்து நாம் கோபப்படுகிறோம்.
பிறகு, அந்தச் சம்பவத்தை மீண்டும் மீண்டும் நினைக்கிறோம்.
அதன்பின், அந்த மனிதனைப் பற்றிய நம் பார்வையே மாறிவிடுகிறது.
“அவன் அப்படிப்பட்டவன்தான்.”
“அவள் ஒருபோதும் மாறமாட்டாள்.”
“அவனை நான் நம்பவேமாட்டேன்.”
என்று உள்ளத்தில் தீர்ப்புகளை எழுதத் தொடங்குகிறோம்.
அதிலிருந்து வெறுப்பு வருகிறது.
வெறுப்பிலிருந்து அவதூறு, பழிதூற்றுதல், உறவை முறித்தல், பழிவாங்கும் எண்ணங்கள், சில நேரங்களில் உடல்ரீதியான வன்முறையும் பிறக்கலாம்.
இதுதான் பிசாசு எதிர்பார்க்கும் இடம்.
இட்லிக்கும் கோபத்துக்கும் ஒரு காலநிர்ணயம் உண்டு
இட்லிச் சட்டியில் மாவை ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு வேறு வேலைக்காக வெளியே சென்றுவிட்டதாக நினைத்துக்கொள்ளுங்கள். நீண்ட நேரத்துக்குப் பிறகு திரும்பி வந்து நெருப்பை அணைத்து, சட்டியைத் திறந்தால், இட்லி கல்லைப்போல் இறுகியிருக்கலாம்.
அது வெந்ததால் பிரச்சினை இல்லை.
தேவைக்கும் அதிகமாக வெந்ததால் பிரச்சினை.
இட்லி வேகுவதற்குக் காலநிர்ணயம் இருக்கிறது.
கோபத்துக்கும் அப்படித்தான்.
கோபம் வரும்போது நமக்குள் ஒரு கடிகாரம் ஓடத் தொடங்குகிறது.
அதைத் தீர்க்காமல், ஊட்டி வளர்த்துக்கொண்டே இருந்தால், ஒருகட்டத்தில் நம் இருதயம் கல்லைப்போல் இறுகிவிடும்.
எனவே, நெருப்பு நம் உள்ளத்தைச் சுட்டெரிக்கத் தொடங்குவதற்குமுன் அதை அணைக்க வேண்டும்.
குப்பையை வீட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமா?
எபேசியர் 4:31இல் பவுல் மேலும் தெளிவாக எழுதுகிறார்:
“சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.”
அவை வீட்டில் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷங்கள் அல்ல.
அகற்றப்பட வேண்டிய குப்பைகள்.
நாம் பல நேரங்களில் ஒரு விசித்திரமான காரியம் செய்கிறோம். வீட்டில் துர்நாற்றம் வீசும் குப்பையை உடனே வெளியே தூக்கிப்போடுவோம். ஆனால், உள்ளத்தில் இருக்கும் கசப்பை மட்டும் பல ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்துக்கொள்கிறோம்.
ஏன்?
“அவன் எனக்குச் செய்தது என்ன தெரியுமா?”
“அவளை நான் எப்படி மன்னிக்க முடியும்?”
“நான் கோபப்படுவது நியாயம்தான்.”
என்று நம்மையே நியாயப்படுத்திக்கொள்கிறோம்.
யாரோ ஒருவர் நமக்குத் தவறு இழைத்திருக்கலாம். அது சிறிய தவறாக இருக்க வேண்டியதில்லை. உண்மையிலேயே அவர்கள் நம்மைக் காயப்படுத்தியிருக்கலாம்.
ஆனால், நம்மைக் காயப்படுத்திய மனிதனைத் தண்டிப்பதற்காக கோபத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது, இறுதியில் அவரைவிட நம்மையே அதிகமாகத் தண்டிக்கலாம்.
மனிதன் வெறுப்பைச் சுமந்துகொண்டு வாழும்படி படைக்கப்படவில்லை.
கோபத்திற்கும் சிறைக்கும் உள்ள தொடர்பு
இரண்டு நண்பர்களுக்கிடையே நடந்த ஓர் உரையாடலை நினைத்துப்பாருங்கள்.
ஒருவன் சொன்னான்:
“பத்தொன்பது ஆண்டுகளுக்குமுன்பு ஒருவன் என் மனைவியை என்னிடமிருந்து பிரித்துக்கொண்டுபோனான். ஏற்பட்ட தகராறில் நான் அவனைத் தாக்கினேன். அதற்காக கைது செய்யப்பட்டேன். நீதிமன்ற விசாரணையின்போது அவன் என்னைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான். எனக்குச் சிறைத் தண்டனை கிடைத்தபோது அவன் மகிழ்ந்தான்.
“அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு வேறொரு நகரத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஆனால், என் வாழ்க்கை நாசமாகிவிட்டது. பத்தொன்பது ஆண்டுகளாக நான் அவனை வெறுக்கிறேன்.
“அவன் அடுத்த வாரம் இங்கு வருகிறான். நான் அவனைக் கொல்லப்போகிறேன்.
“எனக்கு இப்போது 63 வயது. அவனைக் கொன்றால் எனக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கும். அதுவும் பரவாயில்லை. இந்த வயதுக்குமேல் நான் வேலைக்குப் போக முடியாது. சிறையில் உணவு, உடை, உறைவிடம், மருத்துவம் எல்லாம் கிடைக்கும்.
“எனவே, என் கோபமும் கசப்பும் வெறுப்பும் நியாயம்தான். அவனை மன்னிக்க வேண்டும் என்பதுதான் எனக்கு வினோதமாகத் தோன்றுகிறது.”
அவனுடைய நண்பன் நீண்ட நேரம் அமைதியாக இருந்தான்.
பிறகு அவன் சொன்னான்:
“நீ வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பது எனக்குப் புரிகிறது. ஏனென்றால், நீ ஏற்கெனவே சிறையில்தான் இருக்கிறாய்.
“உன் மனைவியை உன்னிடமிருந்து பிரித்துக்கொண்டுபோனவன் சிறையில் இல்லை. உன்னைப் பார்த்துச் சிரித்தவனும் சிறையில் இல்லை. அவன் சுதந்திரமாக வாழ்கிறான்.
“ஆனால், நீ உன் வெறுப்பின் கைதி. உன் கசப்பின் கைதி. உன் கோபத்தின் கைதி.
“அவன் உன் வாழ்க்கையை ஒருமுறை காயப்படுத்தினான். ஆனால், கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக நீயே உன்னைத் தொடர்ந்து காயப்படுத்திக்கொண்டிருக்கிறாய்.
“நீ அவனை மன்னிக்காவிட்டால், இந்தச் சிறையிலிருந்து நீ வெளியே வரமாட்டாய்.”
ஒரு வாரம் கழித்து அந்த மனிதன் சொன்னான்:
“நீ சொன்னது எனக்குப் புரிகிறது. அவனைக் கொல்லும் எண்ணத்தை விட்டுவிட்டேன். என் வாழ்நாள் முழுவதும் என் வெறுப்புக்கு அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. இயேசு என்னை விடுதலையாக்கும்படி எனக்காக ஜெபிப்பாயா?”
கோபம் தருகிற போலியான ஆற்றல்
கோபப்படும்போது சிலர் தங்களுக்கு அசாதாரணமான ஆற்றலும் கவனமும் பேச்சாற்றலும் வருவதாக நினைக்கிறார்கள்.
சிலர் கோபம் கொந்தளிக்கும்போதுதான் தாங்கள் காரியங்களை மிகத் தெளிவாகப் பார்க்கிறோம் என்றும் நம்புகிறார்கள்.
ஆனால், கோபம் தருகிற தெளிவு எப்போதும் உண்மையான தெளிவு அல்ல.
சில குடிகாரர்களும் போதையில் தாங்கள் மிகவும் தெளிவாகப் பேசுகிறோம் என்று நினைப்பார்கள்!
கோபம் நமக்கு ஒரு வகையான ஆற்றலைத் தரலாம்.
ஆனால், அந்த ஆற்றலோடு இருளும் வருகிறது.
இதைச் சபை வாழ்க்கையிலும் பார்க்கலாம்.
தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையிலோ, கூட்டுச் சபை வாழ்க்கையிலோ அதிக நாட்டம் காட்டாத சிலர், சபையில் நடந்த ஒரு சிறிய சம்பவத்துக்காக திடீரென மிகுந்த “பாரம்” கொண்டவர்களாக மாறிவிடலாம்.
வாரத்தில் பலமுறை பிற விசுவாசிகளின் வீடுகளுக்குச் சென்று,
“சபையில் என்ன நடக்கிறது தெரியுமா?”
“இப்படி நடந்தால் சபை என்னவாகும்?”
“இதுவா சபை?”
என்று பேசத் தொடங்கலாம்.
அது உண்மையான ஆவிக்குரிய பாரமாகத் தோன்றலாம். ஆனால், அதன் அடியில் தீர்க்கப்படாத கோபம் இருந்தால், அவர்கள் கட்டுகிறவர்களாக அல்ல, பிரிக்கிறவர்களாக மாறிவிடுகிறார்கள். முரண்பாட்டை விதைக்கிறார்கள்; பூசல்களை உருவாக்குகிறார்கள்.
கோபம் நம்மை நீதிக்காகப் போராடுகிறவர்களாக உணரச் செய்யலாம்.
ஆனால், நாம் எதைப் பாதுகாக்கிறோம் என்பதைக்காட்டிலும் எந்த ஆவியில் அதைச் செய்கிறோம் என்பதும் முக்கியம்.
மன்னிக்காதவன் உருவாக்குகிற சிறை
மத்தேயு 18இல் ஆண்டவராகிய இயேசு சொன்ன மன்னிக்காத ஊழியக்காரனின் உவமை ஒரு பயங்கரமான உண்மையை வெளிப்படுத்துகிறது.
மன்னிக்க மறுப்பவன் மற்றவரை மட்டும் கட்டிப்போடுவதில்லை.
தன்னையும் கட்டிப்போடுகிறான்.
நாம் மன்னிக்கும்போது சில நேரங்களில் நம் உள்ளத்திலிருந்து ஒரு பெரிய சுமை இறங்கிவிட்டதுபோல் உணர்கிறோம். அதற்குக் காரணம் இருக்கிறது.
மன்னிப்பது நடந்த தவறை நல்லது என்று சொல்வது அல்ல.
நீதியை மறுப்பதும் அல்ல.
தீங்கு செய்தவர் பொறுப்பற்றவர் என்று அறிவிப்பதும் அல்ல.
மாறாக, அவருடைய குற்றம் இனி என் இருதயத்தை ஆள அனுமதிக்கமாட்டேன் என்று சொல்லுவதாகும்.
மன்னிக்க தேவையான பலம் எங்கிருந்து வரும்?
“மன்னியுங்கள்” என்று சொல்லுவது எளிது.
மன்னிப்பது எளிதல்ல.
குறிப்பாக ஒருவன் நம்மை ஆழமாகக் காயப்படுத்தியிருந்தால், “அவனை மன்னித்துவிடு” என்று சொல்வது அந்தக் காயத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ளாத வார்த்தையாகக் கூட தோன்றலாம்.
அப்படியானால், மன்னிக்கத் தேவையான பலம் எங்கிருந்து வரும்?
பவுல் பதில் சொல்கிறார்:
“ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”
— எபேசியர் 4:32
இந்த வசனத்தின் மையம்:
“நீங்கள் மன்னியுங்கள்” என்பதில் மட்டும் இல்லை.
அதற்கு முன்னால் வரும் வார்த்தைகளில்தான் அதன் இரகசியம் இருக்கிறது:
“கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல...”
மன்னிக்க முயற்சிப்பதற்குமுன், நாம் மன்னிக்கப்பட்டவர்கள் என்பதை நினைவுகூருமாறு பவுல் அழைக்கிறார்.
அங்குதான் மன்னிப்பதற்கான கிருபை பிறக்கிறது.
கிருபையைக் காணுங்கள்
நமக்குத் தீங்கிழைத்தவர்களையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால், அவர்களுடைய குற்றங்கள் பெரிதாகிக்கொண்டே போகும்.
“அவன் இதைச் செய்தான்.”
“அவள் அதைச் சொன்னாள்.”
“அவர்கள் என்னை இப்படி நடத்தினார்கள்.”
என்று அவர்களுடைய பாவங்களை எண்ணிக்கொண்டிருந்தால், நாளடைவில் அவை நம் பார்வையின் முழு வெளிக்கோட்டையும் நிரப்பிவிடும்.
ஆனால், நற்செய்தி நம்மை வேறொரு திசையில் பார்க்க அழைக்கிறது.
சிலுவையை நோக்கிப் பார்க்க.
நம் பாவங்களுக்காக, நம் அக்கிரமங்களுக்காக, நம் மீறுதல்களுக்காக ஆண்டவராகிய இயேசு கல்வாரிச் சிலுவையில் தம்மையே ஒப்புக்கொடுத்ததை நினைக்க.
அவருடைய சிலுவையில் நம் அழுக்கான எண்ணங்களும், அசிங்கமான உணர்ச்சிகளும், அருவருப்பான நோக்கங்களும், அன்பற்ற செயல்களும் நியாயந்தீர்க்கப்பட்டன.
கிறிஸ்துவின் காரணமாக தேவன் நம்மை ஏற்றுக்கொண்டார்.
நாம் பெற்ற மன்னிப்பை உணரத் தொடங்கும்போதுதான், பிறரை மன்னிப்பதற்கான கிருபையும் நம் உள்ளத்தில் உதிக்கத் தொடங்குகிறது.
நமக்குத் தீங்கிழைத்தவர்கள் சிலுவையை மறைக்க நாம் அனுமதிக்கக்கூடாது.
அவர்கள் சிலுவையை மறைத்துவிட்டால், அவர்களுடைய குற்றங்கள் மலைபோல் தோன்றும்.
சிலுவை அவர்களுடைய குற்றங்களுக்குமுன் நிற்கும்போது, நமக்குக் கிடைத்த கிருபை மலைபோல் தோன்றும்.
நான்கு வார்த்தைகள்
சில நேரங்களில் இந்த உண்மையை நான்கு சொற்களாகவே நான் நினைத்துப்பார்க்கிறேன்:
தேவன்.
கிறிஸ்துவில்.
மன்னித்தார்.
என்னை.
இந்த உண்மை வெறும் இறையியல் வாக்கியமாக மட்டும் இருக்கக்கூடாது.
அது நம் இருதயத்தின் ஆழத்துக்குள் இறங்க வேண்டும்.
நம் ஆள்த்துவத்தின் அடிப்படை வேலைப்பாடாக மாற வேண்டும்.
அதற்காக தேவசமுகத்தில் தங்கியிருக்க வேண்டும். சிலுவையில் கிறிஸ்து செய்துமுடித்த வேலையின் உண்மையைப் பரிசுத்த ஆவியானவர் நம் இருதயத்தில் புதிதாகப் பதியவைக்கும்வரை அதைத் தியானிக்க வேண்டும்.
என் பின்னறையிலும் நெருப்பு பற்றுகிறது
என் கதை என்ன தெரியுமா?
நானும் சில நேரங்களில் எரிச்சலடைகிறேன். விரக்தியடைகிறேன்.
சில நேரங்களில் அந்த எரிச்சல் எந்த அளவுக்கு என்னைப் பிடித்துக்கொள்கிறது என்றால், அதிலிருந்து உடனடியாக வெளியே வரவேண்டும் என்ற விருப்பம்கூட அந்த நேரத்தில் எழுவதில்லை.
அப்போது யாராவது என் வழக்கை மட்டும் கேட்டால்,
“நீங்கள்தான் சரி; பிறர்தான் தவறு”
என்று சொல்லக்கூடும்.
நானும் என்னை நியாயப்படுத்திக்கொள்ள நூறு காரணங்களைச் சொல்லமுடியும்.
ஆனால், நான் ஒன்று கற்றுக்கொண்டிருக்கிறேன்.
நாம் எவ்வளவு “நீதியான கோபத்தில்” இருக்கிறோம் என்று நினைத்தாலும், கோபத்தை நீண்ட நேரம் சுமந்துகொண்டிருந்தால் அது நம்மைச் சோர்வடையச் செய்கிறது.
பிறருடைய பாவங்களை எண்ணிக்கொண்டிருக்கும்போது நாம் மகிழ்ச்சியடைவதில்லை.
அவற்றை எல்லாம் எண்ணிமுடித்தபிறகும் நமக்குள் சமாதானம் வருவதில்லை.
மாறாக, கைவிடப்பட்டவனைப்போலவும் கதியற்றவனைப்போலவும் உணரலாம்.
அப்போது என்னால் செய்யக்கூடிய ஒரு காரியம் இருக்கிறது.
அதைத்தான் செய்கிறேன்.
நற்செய்தியின் ஆழமான, இனிமையான, இன்பமான ஊற்றிலிருந்து ஜீவத்தண்ணீரைக் குடிக்கிறேன்.
மீண்டும் நான் பெற்ற கிருபையைப் பார்க்கிறேன்.
மீண்டும் சிலுவையைப் பார்க்கிறேன்.
மீண்டும்,
“தேவன் கிறிஸ்துவில் என்னை மன்னித்தார்”
என்ற உண்மைக்குத் திரும்புகிறேன்.
பின்னறையில் பற்றியெரியும் நெருப்பை அணைத்துவிடுங்கள்
என் வாழ்க்கையின் முன்னறையைப் பலமுறை அழகாக்க முயன்றிருக்கிறேன்.
“பக்தியுள்ளவன்.”
“ஆவிக்குரியவன்.”
“நல்லவன்.”
“மகிழ்ச்சியானவன்.”
என்ற தோற்றத்தை உருவாக்கி, அதைப் பேணிப்பாதுகாக்க முயன்றிருக்கிறேன்.
ஆனால், தோற்றங்கள் நீண்ட காலம் வேலை செய்யாது.
பின்னறையில் நெருப்பு பற்றியெரிந்துகொண்டிருக்கும்போது, அழகாக அலங்கரிக்கப்பட்ட முன்னறையில் அமைதியாக அமர்ந்திருக்க முடியாது.
கோபம் பின்னறையில் பற்றியெரிகிறது.
கசப்பு அதற்கு விறகாகிறது.
வெறுப்பு அதற்கு எண்ணெயாகிறது.
பழிவாங்கும் எண்ணம் அந்த நெருப்பை இன்னும் பெரிதாக்குகிறது.
அதை அணைக்காமல் விட்டால், கடைசியில் முன்னறையையும் சேர்த்து முழு வீட்டையும் எரித்துவிடும்.
எனவே, பிறர் பார்க்கிற முன்னறையை மட்டும் அழகாக்குவதில் திருப்தியடைய முடியாது.
தேவன் பார்க்கிற பின்னறைக்குள் நாம் செல்ல வேண்டும்.
அங்கே தேங்கியிருக்கும் குப்பையை அகற்ற வேண்டும்.
பற்றியெரியும் நெருப்பை அணைக்க வேண்டும்.
ஆனால், நம் சொந்த வலிமையால் மட்டும் அல்ல.
கிறிஸ்துவில் நாம் பெற்ற மன்னிப்பின் கிருபையால்.
கோபத்தின் சிறையில் தொடர்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை.
சிறையின் கதவு திறந்திருக்கிறது.
நம்மை மன்னித்த கிறிஸ்துவின் கிருபை, நாமும் மன்னித்து வெளியே வருவதற்கான வழியைத் திறந்திருக்கிறது.