Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிறிஸ்துவிலுள்ள உன்னத ஆசீர்வாதங்கள்

Transcribed from a message spoken in Chennai on May 17, 2026

by Milton Rajendram


தொடக்க வேதவாசிப்பு

1 கொரிந்தியர் இரண்டாம் அதிகாரத்திலிருந்து மூன்று வசனங்களை வாசிப்போம்: இரண்டாம் வசனம், ஒன்பதாம் வசனம், பதினான்காம் வசனம்.

ஜெபம்

ஜெபிப்போம்: எங்கள் ஆண்டவராகிய இயேசுவே, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து எங்கள் ஞானமாகவும், தேவனுடைய ஞானமாகவும், தேவனுடைய வல்லமையாகவும் எங்களுக்கு இருப்பதற்காய் நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவில் தேவன் எங்களுக்கு ஆயத்தம்பண்ணின நன்மைகள் எங்கள் கற்பனைக்கும் எங்கள் கனவுகளுக்கும் அப்பாற்பட்டவை என்பதை நாங்கள் இன்னும் உணரவில்லை ஆண்டவரே, அவைகளை உணரச்செய்வீராக. கிறிஸ்துவில் எங்களுக்காய் ஆயத்தம்பண்ணி வைத்த, செய்துமுடித்த அந்த நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும், ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொள்வதற்கும், உம்முடைய பரிசுத்த ஆவியினால் எங்கள் மனக்கண்களை திறந்தருள்வீராக, எங்களை நெறிப்படுத்துவீராக, எங்களுக்குப் பலன் தருவீராக. உம்முடைய வார்த்தையை நாங்கள் தியானிக்கும்போது எங்கள் இருதயங்களை ஒளிரச் செய்யுமாறு ஜெபிக்கின்றோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமென்.

வாசிக்கப்பட்ட வசனங்களின் மையம்

நாம் வாசித்த பகுதியிலே, முதலாவது வசனம் 1 கொரிந்தியர் 2:2: இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். பிறகு ஒன்பதாம் வசனம்: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. பதினான்காம் வசனம்: ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

இந்தப் பகுதியிலே, “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு நன்மைகளை ஆயத்தம் பண்ணிவைத்திருக்கிறார்,” என்று வாசிக்கின்றோம்.

செய்திச்சுருக்கம்: மனிதனின் ஏக்கம் மற்றும் தேவனுடைய நற்செய்தி

முதலாவது நாம் செய்திச்சுருக்கத்தைப் பார்ப்போம். மனிதனுடைய வாழ்க்கை நன்மைகள் நிறைந்த வாழ்க்கை அல்ல. அது துன்பங்களும், தீமைகளும், பாடுகளும், உபத்திரவங்களும் நிறைந்த வாழ்க்கை. இதை நாம் எல்லாரும் ஒப்புக்கொள்வோம். மனித வாழ்க்கையிலே நாம் நன்மைகளை அனுபவிக்கின்றோம். ஆனால், “என்னுடைய வாழ்க்கை தொடக்கம்முதல் முடிவுவரை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் நன்மைகளால் நிறைந்ததாகவே இருக்கிறது,” என்ற மனநிறைவோடு வாழ்கின்ற மனிதர்களை நான் பார்த்தது இல்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்த்தது இல்லை.

“தீமை நேர்ந்துவிடுமோ!” என்கின்ற ஐயமும், அச்சமும், பதற்றமும் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. ஆகவே, மனித வாழ்க்கையில் நன்மைகளை நாடாத மனிதர்களோ, உள்ளங்களோ, இருதயங்களோ இல்லவே இல்லை. எல்லா மனிதர்களும், “எப்படியாவது ஒரு விதத்தில் என் வாழ்க்கையில் நன்மைகள் நிகழ்ந்துவிடாதா, வந்துவிடாதா!” என்று நாடுகிறார்கள், தேடுகிறார்கள், தவிக்கிறார்கள், ஏங்குகிறார்கள்.

ஏனென்றால், மனித வாழ்க்கை பழைய படைப்பின் பாவத்தின்கீழும், மரணத்தின்கீழும், சிதைவின்கீழும், சீரழிவின்கீழும் வாழ்கின்ற வாழ்க்கை. நீங்கள் என்னதான் carefully சாலையிலே உங்கள் வண்டியை ஓட்டினாலும், ஓட்டுகிறவர்களுக்கும் விபத்து நேரிடுகிறது. உங்களிடத்தில் எந்தத் தவறும் இல்லை. இதைத்தான் நாம் என்ன சொல்கிறோம்! இது பழைய படைப்பின் பாவம், மரணம், சிதைவு, சீரழிவு, தீங்கு. அங்கும் இங்குமாக வைரஸ்களும், பாக்டீரியாக்களும் ஒரு பஸ்சிலே பறந்துகொண்டிருக்கும். சிலரை அந்த பாக்டீரியாக்கள், வைரஸ்கள் தொற்றுகின்றன. சிலரை அது தொடுவதில்லை. பழைய படைப்பின் வாழ்க்கை அடிமைத்தனத்தின் வாழ்க்கை.

“இந்த அடிமைத்தனத்திலிருந்து… பாவம், மரணம், தீங்குகள், கொடுமைகள், சிதைவுகள், சீரழிவுகள் என்ற அடிமைத்தனத்திலிருந்து எப்படி நாம் பிழைப்போம்? எப்படி நாம் தப்பிப்போம்?” என்கின்ற ஏக்கமும், கதறுதலும், தவிப்பும் எல்லா மனிதர்களுடைய உள்ளங்களிலும் இருக்கிறது. ஒரு பெருமூச்சு மனிதனுடைய இருதயத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அந்தப் பெருமூச்சு இல்லாத மனிதனே இல்லை.

அப்படிப்பட்ட மனிதனுக்குத் தேவன், “இவைகளிலிருந்தெல்லாம் உன்னை விடுவித்து, நன்மைகள் மட்டுமே நிறைந்த ஒரு வாழ்க்கையை நான் உனக்கு வைத்திருக்கின்றேன். அந்த வாழ்க்கையிலே தீமைக்கு இடமே இல்லை,” என்கிறார். பொல்லாப்பு உனக்கு நேரிடாது. அல்லேலூயா! வாதை உன் கூடாரத்தை அணுகாது. அது உன் கதவு வரை வரும். காலிங் பெல்லைக்கூட அழுத்தும். “யார் அது?” என்று கேட்டவுடனே அது திரும்பிப்போய்விடும். அல்லேலூயா! நான் பொய் சொல்லவில்லை.

“பிரதர் இப்போது இப்படிச் சொல்வார், பிறகு இதைத் தாக்குவார்,” என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி இல்லை. உண்மையிலேயே தேவன் அப்படிப்பட்ட நன்மைகளை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தேவன் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அது மனிதனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. The human heart cannot even conceive the things which God has prepared for those who love Him.

“தீமைகளால் ஒடுக்கப்படுகின்ற இந்த மனித வாழ்க்கையிலே நன்மைகள் மட்டுமே நிறைந்த ஒரு வாழ்க்கையை நான் வைத்திருக்கின்றேன்,” என்று ஒரு செய்தி இருக்கும் என்றால், ஒரு உண்மை இருக்கும் என்றால், அது நற்செய்தியா இல்லையா? நற்செய்தி. அதுதான் கர்த்தராகிய இயேசுவில் தேவன் நமக்கு அருளுகின்ற நற்செய்தி. அங்கு தீமைக்கே இடமில்லை.

“நீ ஆணையிட்டுச் சொல்வாயா அல்லது செய்தி முடியும்போது மாற்றி விடுவாயா?” என்றுகூட நீங்கள் கேட்கலாம். செய்தி முடியும்போது நான் இந்த நற்செய்தியை மாற்றவே மாட்டேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் தேவன் அப்படிப்பட்ட நன்மைகள் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை மனிதர்களுக்கு ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். இந்த செய்தி முடிகிறவரை, என்னுடைய வாழ்க்கை முடிகிறவரைகூட, நான் இந்தச் செய்தியை மாற்றமாட்டேன். இது நற்செய்தி. இதில் எந்தப் பொடியும் இல்லை.

தேர்தல் நேரத்தில் “இன்னாருக்கு வாக்களியுங்கள்” என்று ஒருவர் என்னிடத்தில் நகைச்சுவையாகச் சொன்னார். கேட்டவர் நண்பனாக இருந்ததால் அவருடைய மனதைப் புண்படுத்தக்கூடாது என்பதற்காக, “இன்னாருக்கு வாக்களியுங்கள்” என்று சொன்னவுடனே, “நிச்சயமாகப் போடுகிறேன்” என்றும், அப்புறம் ஒரு நிறுத்தற்குறி ஒன்று போட்டு, “அடுத்த தேர்தலில்” என்று சொன்னேன். அதுபோல, “தேவன் நன்மைகளை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார்,” என்று சொல்லிவிட்டு “நிறுத்தற்குறி, கமா, ஆனால் அந்த நன்மைகள் எல்லாம் எப்போதுதான் கிடைக்கும்? எதிர்காலத்தில்தான் கிடைக்கப்போகிறது,” என்று நான் சொல்லவில்லை.

எதிர்காலத்தை நாம் எப்படி வேண்டுமானாலும் சித்திரிக்கலாம். “எதிர்காலத்தில்தான் இந்த நன்மைகள் கிடைக்கப்போகின்றன,” என்றால், நாம் என்ன நினைப்போம் தெரியுமா? நாம் எல்லாரும் எசேக்கியாவின் பேரர்கள். “ஓ, என் காலத்தில் அந்த நன்மை கிடைக்கவில்லை என்றால் அந்த நன்மையினால் எனக்கு என்ன பயன்? ஏன், என் பிள்ளைகள் காலத்தில்தான் இந்த நன்மைகள் கிடைக்கும் என்றால்கூட என் மனம் நிறைவு அடையாது. அதையும் தாண்டி என் பேரப்பிள்ளைகள் காலத்தில்தான் கிடைக்கும் என்றால் எனக்கு அதில் ஈடுபாடே இல்லை,” என்போம்.

அந்த நன்மைகள் அவனுடைய பேரனுடைய காலத்தில்கூட இல்லை, எதிர்காலத்தில்தான் இருக்கிறது என்றால், அதில் நமக்கு அவ்வளவு சுவாரசியமோ, ஈடுபாடோ இருக்காது. தேவன் ஆயத்தம்பண்ணி வைத்திருக்கும் நன்மைகள் எதிர்காலத்திற்கு உரியவைகள் மட்டுமல்ல; இன்று இங்கு அந்த நன்மைகளை உங்களுக்குத் தேவன் ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார்.

நான் இப்படிச் சொன்னவுடன், “ஆனால் நாங்கள் ஒன்றும் அப்படிப்பட்ட நன்மைகளை அடையவில்லையே அல்லது அனுபவிக்கவில்லையே!” என்று பலர் சொல்லக்கூடும். மனிதர்கள் அல்லது குறிப்பாக தேவனுடைய மக்கள் தேவன் ஆயத்தம்பண்ணி வைத்த அந்த நன்மைகளை இன்றும் இங்கும் ஏன் அனுபவிக்கத் தவறுகிறார்கள் அல்லது அனுபவிப்பதில்லை அல்லது குறைவாக அனுபவிக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். குறைவாக அனுபவிக்கிறோம் அல்லது அனுபவிக்கவே இல்லை என்றால் இன்னொரு கேள்வியையும் கேட்க வேண்டும்: அதை நிறைவாக அனுபவிப்பதற்கு என்ன வழி?

ஒரு வாலிபன் ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் ஓடிப்போய் சாலையிலேயே முழங்கால் படியிட்டு நித்திய ஜீவனை அடைவதற்கு வழி கேட்டதுபோல, நாமும், “நல்ல போதகரே, தேவன் ஆயத்தம்பண்ணி வைத்த நன்மைகளை இன்று இங்கு அனுபவிப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்பதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். ஆகவே இந்த நாளிலே நம்முடைய செய்தியினுடைய தலைப்பு: கிறிஸ்துவிலுள்ள உன்னத ஆசீர்வாதங்கள்.

“சகோதரனே, இதைப்பற்றி நீங்கள் எத்தனை செய்திகள் பேசியிருப்பீர்கள்?” என்று நீங்கள் என்னைக் கேட்டால், “எண்ணற்ற செய்திகள் பேசியிருக்கின்றேன்,” என்பேன். “பேசி முடித்து விட்டீர்களா?” என்றால், “இன்னும் பேசி முடிக்கவில்லை.” “இன்னும் எத்தனை செய்திகள் பேசுவீர்கள்?” என்றால் “கிறிஸ்துவில் உள்ள உன்னத ஆசீர்வாதங்களைப்பற்றிப் பேசுவதற்கு இன்னும் ஆயிரம் செய்திகள் உள்ளன,” என்பேன். கிறிஸ்துவில் உள்ள உன்னத செல்வங்களைப்பற்றி நாம் வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து பார்க்கலாம். வரவிருக்கும் யுகம் முழுவதும் கிறிஸ்துவில் உள்ள இந்த உன்னத செல்வங்களை நாம் ஆராய்ந்து பார்த்தாலும், கிறிஸ்துவில் உள்ள அந்த உன்னத செல்வங்களுக்கு ஒரு முடிவைக் கண்டுபிடிக்க மாட்டோம்.

சங்கீதம் 119இல், “எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு, உம்முடைய வார்த்தைக்கு எல்லை இல்லை,” என்று தாவீது சொல்கிறான். “சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்” சங்கீதம் 119:96.

செய்தியின் மூன்று முக்கிய குறிப்புகள்

முதலாவது, கிறிஸ்துவிலுள்ள உன்னத செல்வங்கள். இரண்டாவது, ஆவிக்குரியவர்கள் அதை விசுவாசத்தினால் சுதந்தரிக்கிறார்கள். முதலாவது குறிப்பு என்ன? கிறிஸ்துவிலுள்ள உன்னத செல்வங்கள். இரண்டாவது, ஆவிக்குரியவர்கள் அதை விசுவாசத்தினால் சுதந்தரிக்கிறார்கள். இந்த இரண்டையும் சேர்த்து வாசித்தால் ஒரு வாக்கியமாகிவிடும். கிறிஸ்துவிலுள்ள உன்னத செல்வங்களை ஆவிக்குரியவர்கள் விசுவாசத்தினால் சுதந்தரிக்கிறார்கள்.

மூன்றாவது முக்கியமான குறிப்பு, ஆவியானவர் நிர்வகிக்கும் சிலுவையின் நெறிப்பாட்டின்வழியாக. மூன்றையும் சேர்த்துப் பார்த்தாலும் ஒரே வாக்கியமாகத்தான் இருக்கும். கிறிஸ்துவிலுள்ள உன்னத செல்வங்களை, இரண்டாவது குறிப்பு, ஆவிக்குரியவர்கள் விசுவாசத்தினால் பெறுகிறார்கள் அல்லது சுதந்தரிக்கிறார்கள். மூன்றாவது குறிப்பு, ஆவியானவர் நிர்வகிக்கும் சிலுவையின் நெறிப்பாட்டின்வழியாக.

பெரிய குறிப்புகளாக இருக்கிறது என்றால் நீங்கள் சுருக்கமாய்க் குறித்துக்கொள்ளலாம். முதலாவது குறிப்பு, உன்னத செல்வங்கள். இரண்டாவது குறிப்பு, ஆவிக்குரியவர்கள். மூன்றாவது குறிப்பு, சிலுவையின் நெறிப்பாடு. Heavenly riches, Spiritual men, The discipline of the cross.

1. கிறிஸ்துவிலுள்ள உன்னத செல்வங்கள்

எபேசியர் ஒன்றாம் அதிகாரம் மூன்றாம் வசனத்தை வாசிப்போம். “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.” ஆங்கில வேதாகமம் வைத்திருப்பவர்கள் ஆங்கிலத்தில் வாசிப்போம். “Ephesians Chapter 1 Verse 3: Blessed is the Lord and Father of our Lord Jesus Christ, who has blessed us with every spiritual blessing in the heavenly realms in Christ.”

தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். அல்லேலூயா! இது நற்செய்தி. நாம் 1 கொரிந்தியர் 2இல் வாசித்ததுபோல, தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணின நன்மைகள் இனிமேல் ஆயத்தம் பண்ணப்போவதில்லை. தேவன் அவைகளை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். தேவன் ஆசீர்வதிக்கப்போகிறார் என்பது அல்ல. தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்பது கடந்த காலத்திலேயே அது நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒன்று. தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். அவர் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். நாம் எல்லாரும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

“மாற்ற மாட்டீர்களே?” என்று நீங்கள் சொல்வீர்கள். நிச்சயமாக நான் மாற்ற மாட்டேன். இந்தச் செய்தி முழுவதும் மாற்ற மாட்டேன். என் வாழ்நாள் முழுவதும் மாற்ற மாட்டேன். நாம் புதிய வானம் புதிய பூமியிலே உரையாடும்போதும் இந்தச் செய்தியை நான் மாற்ற மாட்டேன். தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். புதிய வானம் புதிய பூமியில் இதுபோல கூடுகைகள் இருக்கும். நாம் செய்திகள் பகிர்ந்துகொள்வோம். அப்போது கேட்கின்ற செய்திகள் எவைகளையும் நாம் மறந்துபோக மாட்டோம்.

சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஆசீர்வாதம், நன்மை, செல்வம், வளம் என்று எப்படி வேண்டுமானாலும் மொழிபெயர்க்கலாம். Blessings, Good things, Riches, Wealth. பிறகு அவர் சொல்கிறார், “உன்னதங்களில்.” ஆங்கிலத்திலே heavenly realms என்று சில வேதாகமங்களிலும் அல்லது மிக எளிமையாக heavenlies என்று மற்ற வேதாகமங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

“உன்னதங்கள்” என்றால் என்ன?

இதற்கு நமக்குப் பொருள் தெரியாது. ஆனால் ஒன்று எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. சகல ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதித்திருக்கிறார் என்று சொல்லிவிட்டு கடைசியிலே அது எங்கு இல்லை? “பூமியில் இல்லை” என்று சொல்வதுபோல் ஒரு தோற்றம் இங்கு இருக்கிறதா இல்லையா? உன்னதங்களில் என்றால் அது எங்கு இல்லை? பூமியில் இல்லையா? “உன்னதங்களில் ஆசீர்வதித்திருக்கிறார்.” அந்த உன்னதம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் என்ன இல்லை என்று எனக்குத் தெரிகிறது. அது என்ன இல்லை? “பூமி இல்லை” என்பதுபோன்ற ஓர் எண்ணத்தை நான் பெறுகிறேன். அது என்னைச் சற்று சோர்வுறச் செய்கிறது.

அவர் பூமிக்கும், வானத்துக்கும் உரிய சகல ஆசீர்வாதத்தினாலும் என்னை ஆசீர்வதிப்பார் என்று வேதாகமத்தில் பல சமயங்களில் வாசிக்கிறோம். இல்லையா? அவர் இஸ்ரவேலை வானத்திற்குரிய ஆசீர்வாதத்தினாலும், பூமிக்குரிய ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதிப்பார். இஸ்ரவேலுக்கு வானத்திற்குரிய ஆசீர்வாதங்களும், பூமிக்குரிய ஆசீர்வாதங்களும் உண்டு. ஆனால் புதிய ஏற்பாட்டு தேவனுடைய மக்களுக்கு இது மட்டும்தான் உண்டு. உன்னத ஆசீர்வாதம்தான் உண்டு.

“அப்படியானால், நான் இஸ்ரவேலனாகவே வாழ்ந்திருக்கலாமே? அவர்களுக்கு என்ன உண்டு? பூமிக்குரிய ஆசீர்வாதம் உண்டே!” என்று என்னத் தோன்றும். அதைச் சுருக்கி, ஏதோ பெரிய நன்மை செய்வதுபோல் தேவன், “உன்னதங்களிலே சகல ஆசீர்வாதத்தினாலும் என்னை ஆசீர்வதித்தாலும்” என் மனதிலே ஒரு ஏக்கம் இருக்கிறது. பூமிக்குரிய ஆசீர்வாதம் - நல்ல உடல்நலம், நல்ல செல்வம், நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல நிலபுலங்கள், நல்ல வீடுவாசல்கள், நல்ல வாகனங்கள் - இவைகள் எல்லாம் என்ன ஆயிற்று?

உன்னதங்கள் என்றால் heavenlies. இது எனக்குப் பெரிய விளக்கமாய்த் தோன்றவில்லை உன்னதங்கள் என்றாலும் எனக்குப் பிடிபடவில்லை. Heavenlies என்றாலும் பிடிபடவில்லை. Heavens என்றால்கூட எனக்குப் பிடிபடும். “பரலோகங்களில் சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்தார்” என்றால், பரலோகம் என்பது பூமிக்கு மாற்றானது. பரலோகங்களில் அல்லது பரலோகத்தில் ஆசீர்வதித்தார் என்றால் எனக்குப் பிடிபடுகிறது. ஆனால் Heavenlies. அதை எப்படி மொழிபெயர்ப்பது?

தமிழில் சொல்லப்பட்ட “உன்னதங்கள்” என்ற வார்த்தையையே நாம் பயன்படுத்துவோம், ஏனென்றால், “பரங்கள்” என்ற வார்த்தை நேர்த்தியான சொல்லாடலாய்த் தோன்றவில்லை. ஆகவே உன்னதங்கள் என்ற வார்த்தையை வைத்துக்கொள்வோம். அல்லது Heavenly realms என்றால் உன்னத புலம். realm என்றால் புலம். Heavenly sphere, heavenly realm, heavenly plane. உன்னத புலங்களில் அல்லது பரம புலங்களில் என்றுகூடச் சொல்லலாம். இது பரலோகம்தானா என்று எனக்குத் தெரியாது.

எல்லா நன்மைகளும் கிறிஸ்துவில் மட்டுமே

அதுபோல் எங்கு ஆசீர்வதித்திருக்கிறார் என்றால் கிறிஸ்துவுக்குள் அல்லது கிறிஸ்துவில். கிறிஸ்துவுக்கு வெளியே தேவன் மனிதர்களுக்கு எந்த ஆசீர்வாதத்தையும், எந்த நன்மையையும், எந்த வளங்களையும் வைத்திருக்கவில்லை. கிறிஸ்துவுக்கு வெளியே மனிதர்கள் எந்த ஆசீர்வாதத்தையும், நன்மையையும், செல்வத்தையும், வளத்தையும் பெற முடியாது.

எல்லா மனிதர்களும் சாப்பிடுகின்றார்கள், தண்ணீர் குடிக்கின்றார்கள், சுகமாய் இருக்கின்றார்கள். அவைகளும் கிறிஸ்துவில்தான் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்களுக்குத் தெரியாது. “அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்” (மத்தேயு 5:45). “அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே” (லூக்கா 6:35). “அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்” (சங்கீதம் 147:9).

“அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு. ஏற்ற வேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்” (சங்கீதம் 104:26-29).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மை அறியாத மக்களுக்கும் நன்மைகளை வழங்குகிறார். சில சமயங்களில் அவரை அறிந்த மக்களைவிட அவரை அறியாத மக்களுக்கு அவர் அதிகமான நன்மை வழங்குவதுபோலகூடத் தோற்றம் அளிக்கும். அது ஒரு காட்சிப் பிழை. அப்படி அல்ல.

யோவான் பத்தாம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தை வாசிப்போம். “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.” நானே வாசல்” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார். “ஒருவன் என் வாசல் வழியாய் உட்பிரவேசித்தால் உள் நுழைந்து வெளிச் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான்.” இதைப்பற்றி நான் என்னுடைய விளக்கத்தைத் தந்திருக்கின்றேன்.

நன்மைகள் நிறைந்த அந்தப் புதிய படைப்பிற்கு, தேவனுடைய அரசிற்கு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாயிலாக இருக்கின்றார், வாசலாக இருக்கின்றார். அது மட்டுமல்ல, அந்த வாசல் வழியாய் நுழைந்தபிறகு அவர் யாராகவே இருக்கின்றார்? பாலும் தேனும் ஓடுகின்ற நல்ல தேசமாகவே அவர் இருக்கின்றார். அடிமைத்தனத்தில் வாழ்ந்த ஒரு கூட்டம் அடிமை மக்கள், பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த அந்த மக்கள், அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவதற்குரிய வாயிலாக மட்டும் அவர் இல்லை. அவர்கள் அந்த வாயில்வழியாக உள் நுழைந்து வெளி வந்தால், அவர்கள் நுழைகின்ற நிலமாக, நல்ல நிலமாக, பாலும் தேனும் ஓடுகின்ற நல்ல நிலமாக, மேய்ச்சல் நிலமாக இருப்பதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான்.

இது சற்று “over spiritual” போல் உங்களுக்குத் தோன்றலாம், “நீங்கள் ரொம்ப ஆவிக்குரிய விதத்தில் பேசுவதுபோல் தோன்றுகிறது,” என்று நீங்கள் சொல்லக்கூடும். அப்படி அல்ல. நாம் இந்தப் பூமியிலே பெற்று அனுபவிக்கின்ற எல்லா நன்மைகளும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு குறியீடுதான், ஒரு நிழல்தான் என்று நாம் புதிய வானம் புதிய பூமியிலே கண்டடைவோம். அது உணவாக இருந்தாலும் சரி, பானமாக இருந்தாலும் சரி. ஆண்டவராகிய இயேசு, “நானே மெய்யான உணவு. நானே மெய்யான பானம்” என்று யோவான் ஆறாம் அதிகாரத்தில் சொல்கிறார்.

துன்பங்கள், பாடுகள், பாவம், மரணம் ஆகியவைகளின் அடிமைத்தனத்தில் வாழ்கின்ற மனிதர்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியேற்றுவதற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாயிலாக இருக்கின்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சிலுவை மரணம், உயிர்த்தெழுதல்வழியாக அப்படிப்பட்ட ஒரு வாயிலாக அவர் மாறினார். அப்படிப்பட்ட வாயிலாக, வாசலாக மாறுவதற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு விலைக்கிரயம் செலுத்தினார்.

ஆகையால் தேவன் அவரை ஆசீர்வதித்து வாயிலாக மட்டுமல்ல, அந்த அடிமை மக்களுக்கு பாலும் தேனும் ஓடுகிற ஒரு நல்ல தேசமாக, நல்ல மேய்ச்சல் நிலமாக, மாற்றி இருக்கின்றார். ஆகவே கிறிஸ்துவில்தான் தேவன் தம்முடைய மக்களுக்கு நன்மைகளை வைத்திருக்கிறார். கிறிஸ்துதான் வாசலாக இருக்கின்றார். தேவனுடைய எல்லா நன்மைகளும், எல்லா ஆசீர்வாதங்களும், எல்லாச் செல்வங்களும், எல்லா வளங்களும் யாரில் மட்டும்தான் உள்ளன?

கொலோசெயர் இரண்டாம் அதிகாரத்தில் மீண்டும் மீண்டும் வாசிக்கின்றோம், “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது” (கொலோ. 2:3). கிறிஸ்துவில் தேவனுடைய நன்மைகள் எல்லாம் ஊனுருக்கொண்டிருக்கின்றன என்று நாம் பார்க்கின்றோம்.

கிறிஸ்துவின் அளந்துமுடியாத செல்வங்கள்

இப்போது இந்த வார்த்தைக்கு வருவோம். சரி, கிறிஸ்துவில் உள்ளன. கிறிஸ்துவில் உள்ள இந்த நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும், வளங்களையும், செல்வங்களையும் நாம் எப்படிப் பெறுவது? எபேசியர் மூன்றாம் அதிகாரம் எட்டாம் வசனத்தை நாம் அறிவோம். அப்போஸ்தலனாகிய பவுல் புறவினத்தாரிடத்தில் எவைகளை நற்செய்தியாய் அறிவித்தார்? “பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.”

கிறிஸ்துவில் உள்ள அளந்துமுடியாத, ஆராய்ந்துமுடியாத, தீர்ந்துபோகாத, தேடிமுடியாத செல்வங்களை அவர் புறவினத்தாரிடத்தில் நற்செய்தியாய் அறிவித்தார். கிறிஸ்துவினுடைய அளவற்ற செல்வங்களை unsearchable riches, untraceable riches, inexhaustible riches. ஒருவேளை நாம் ஒரு புதிய மொழிபெயர்ப்பு செய்வோம் என்றால் இப்படித்தான் எழுதுவோம். அளவற்ற என்பது “அளந்து முடியாத.” எந்த மனிதனும், “அந்தச் செல்வங்களை நான் அளந்து முடித்து விட்டேன்,” என்று சொல்ல முடியாது. புதிய வானம் புதிய பூமியில் மட்டும் அல்ல, எத்தனை யுகங்கள் போனாலும் சரி, கிறிஸ்துவில் உள்ள அந்தச் செல்வங்களைப் படைக்கப்பட்ட ஒரு படைப்பால் அளந்துமுடிக்க முடியாது.

“அளந்துமுடியாத, ஆராய்ந்துமுடியாத, தேடிமுடியாத, எவ்வளவு அனுபவித்தாலும் தீர்ந்துபோகாத” அந்தச் செல்வங்களை பவுல் புறவினத்தாரிடத்தில் நற்செய்தியாய் அறிவித்தார். அதே நற்செய்தியை நாங்களும் அறிவிக்கிறோம். ஆகவே, நற்செய்தி என்ன? மனிதர்கள் நாடுகின்ற, மனிதர்கள் தேடுகின்ற எல்லா ஆசீர்வாதங்களும், நன்மைகளும், வளங்களும், செல்வங்களும் கிறிஸ்துவில் உள்ளன. தேவன் அவைகளைக் கிறிஸ்துவில்தான் வைத்திருக்கிறார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத்தவிர வேறொரு மனிதனுக்குத் தேவன் அந்த நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும், செல்வங்களையும், வளங்களையும் வழங்க முடியாது. எந்த மனிதனும் சட்டம் போட்டு தேவனிடத்தில் போய், “நீர் எனக்கு நன்மை செய்தே ஆக வேண்டும்,” என்று கோர முடியாது. “நான் உமக்கு இவ்வளவு காணிக்கை கொடுக்கிறேன். எனக்கு நன்மை தாரும்,” என்று கோர முடியாது.

சில சமயங்களில், “இன்னார் இந்தக் கோயிலுக்கு இத்தனை கோடி காணிக்கை கொடுத்தார்,” என்ற செய்தி வரும். இத்தனை கோடி கொடுத்தவுடன் தேவன் மயங்கிப் போய், “இரண்டு மூன்று பேர் 10 ரூபாய் கொடுத்தார்கள், சிலர் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள், இன்னும் சிலர் லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். இவன் எவ்வளவு கொடுத்திருக்கான்? கோடி ரூபாய் கொடுத்திருக்கான். ஆகவே நான் என்னுடைய ஆராய்ந்துமுடியாத, அளந்துமுடியாத, தேடிமுடியாத, தீர்ந்துபோகாத அந்த செல்வங்களையெல்லாம் இன்னாருக்குக் கொடுத்துவிடப் போகிறேன்,” என்று தேவன் சொல்வதில்லை.

தேவனிடத்தில் யாரும் நன்மையை விலை பேசி வாங்க முடியாது; விலை கொடுத்து வாங்கவும் முடியாது. “நான் நல்லவன்” என்று கோரி பெறவும் முடியாது. தேவனிடத்தில் நன்மையை வேண்டுகிறவன் தன்னுடைய முழங்காலில் நின்றுதான் நன்மையை வேண்டுதல் செய்ய வேண்டும். கோருதல் செய்ய முடியாது. தேவனிடத்தில் நன்மையை வேண்டலாம். நன்மையை ஒரு நாளும் கோரமுடியாது. “நான் எவ்வளவு பெரிய ஆள்? அவனுக்குத் தருகிறீர்; இவனுக்குத் தருகிறீர். எனக்கு ஏன் தரவில்லை?” என்று கேட்டால், தேவன், “உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ,” என்று சொல்வார். அவர் அப்படிச் சொல்லுகிறாரா இல்லையா? யோவான் 21ஆம் அதிகாரத்தில், “நீ உன் வேலையைப் பார்,” என்ற பொருளில் அவர் பதில் சொன்னார்.

ஆனால் எபிரேயர் ஒன்றாம் அதிகாரம் ஒன்பதாம் வசனம்: “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் மட்டும்தான் தேவன் எல்லா நன்மைகளையும், வளங்களையும், செல்வங்களையும் ஏன் வைக்க முடிந்தது? ஏனென்றால் அவர் ஒருவர்தான் நீதியை சிநேகித்து அநீதியை வெறுத்தவர்.

நாம் அடிக்கடி சொல்வதுபோல், பாவத்தின் ஒரு முள்முனைகூட ஆண்டவராகிய இயேசுவிடத்தில் காணப்படவில்லை. எந்த மோப்ப நாய் வைத்து மோந்து பார்த்தாலும் அநீதியின், பாவத்தின் வாசனை முதலாய் காணப்படவில்லை. அவரிடத்தில் வஞ்சனை காணப்படவில்லை. ஏசாயா 53:9இல் வாசிப்பதுபோல், “அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.” ஆகையால் தேவன் ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் தம்முடைய எல்லா நன்மைகளையும், எல்லாச் செல்வங்களையும், எல்லா வளங்களையும் வைத்தார்.

கிறிஸ்துவில்தான் தேவனுடைய வளங்கள் உள்ளன. தேவனுடைய பரிபூரணமான, நிறைவான, முழுமையான செல்வங்களும், வளங்களும் கிறிஸ்துவில் உள்ளன. “இதை நீங்கள் எவ்வளவு நேரம் பேசுவீர்கள்?” என்று நீங்கள் கேட்கலாம். இதை பேசிக்கொண்டே போகலாம். வாழ்க்கை என்று ஒன்று படைக்கப்பட்ட படைப்புகளுக்கு இருக்கும் என்றால், அந்த வாழ்க்கைக்குத் தேவையான பரிபூரணமான, முழுமையான, நிறைவான செல்வங்களும், வளங்களும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ளன.

உன்னத ஆசீர்வாதம் — அது பூமியிலே செயல்படுமா?

இப்போது இன்னொரு வார்த்தைக்கு வருவோம். “அது என்ன உன்னதங்களில்?” ஆசீர்வாதங்களைப்பற்றிச் சொல்லுகிறோம். அது கிறிஸ்துவில் உள்ளது என்று சொன்னோம். “அந்த ஆசீர்வாதம் சோறு போடுமா?” என்று கேட்கலாம். அதற்கு நான் பதில் சொல்லவே இல்லை. “அந்த ஆசீர்வாதம் சோறு தருமா? அந்த ஆசீர்வாதம் பட்டப்படிப்பு தருமா? அந்த ஆசீர்வாதம் நல்ல பெண், மாப்பிள்ளை தருமா? அந்த ஆசீர்வாதம் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் தருமா? அந்த ஆசீர்வாதம் நிலம் தருமா?” இப்படித்தான் நாம் கேட்போம்.

“உன்னதங்களில் ஆவிக்குரிய” என்ற இரண்டு வார்த்தைகள் நம்மைச் சற்று கலக்கமடையச் செய்கின்றன. “ஆவிக்குரிய” என்பதற்குப் பின்பு வருவோம். “உன்னதங்களில்” என்றால் என்ன? எபேசியர் ஒன்றாம் அதிகாரம் 20, 22 ஆம் வசனங்களை நாம் பார்க்கின்றோம். வாசிக்கலாம். “எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்தார்.”

ஆகவே உன்னதம் என்றால் எல்லாற்றிற்கும் உயர்ந்தது என்று பொருள். அந்த ஒரு பொருள் தெளிவாய்த் தெரிகிறது. வேறு எதுவும் புரியவில்லை என்றாலும் இது புரிகிறது. இல்லையா? அதற்குமேல் ஒரு அடி இல்லை. அந்தத் தளத்திற்குமேல் ஒரு தளம் இல்லை. அந்தப் புலத்திற்குமேல் ஒரு புலம் இல்லை. அப்படிப்பட்ட தளத்தில், அப்படிப்பட்ட புலத்தில், அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் தேவன் தம்முடைய குமாரனும், நம்முடைய இரட்சகருமான இயேசு கிறிஸ்துவை தம்முடைய வலப்பக்கத்தில் அமரச் செய்திருக்கிறார்.

நீங்கள் எபிரெயர் வேத ஆய்வை தொடர்ந்து பார்த்தீர்கள் என்றால் இதைப்பற்றி நாம் கொண்டாடி இருப்போம். தேவன் தம்முடைய வலப்பக்கத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அமர்த்தி இருக்கிறார். அதை செய்வினையிலும் சொல்லலாம், செயப்பாட்டுவினையிலும் சொல்லலாம். இயேசு கிறிஸ்து தேவனுடைய வலப்பக்கத்தில் அமர்ந்தார் என்றும் சொல்லலாம். தேவன் இயேசு கிறிஸ்துவைத் தம் வலப்பக்கத்தில் அமர்த்தினார் என்றும் சொல்லலாம்.

உங்களைப் பொறுத்தவரை எது மிகவும் appealingகாக இருக்கிறது? “அவர் அமர்ந்தார்” என்பது உங்களுக்கு appealingகாக இருக்கிறதா அல்லது “அவர் அமர்த்தப்பட்டார்” என்பது appealingகாக இருக்கிறதா? அமர்த்தப்பட்டார். அமர்ந்தார் என்றால் அவரே அதை installபண்ணிக்கொண்டார் என்பதுபோல் தோன்றுகிறது. அமர்த்தப்பட்டார் என்றால், தேவன் ஒரு மனிதனைப் பார்க்கின்றார், தம்முடைய வலப்பக்கத்தில் அமர்த்தத்தக்க ஒரு மனிதனை அவர் கண்டுகொண்டார். ஆகவே,“இந்த மனிதனைத் தம்முடைய வலப்பக்கத்தில் அமர்த்தாமல் இருக்க முடியாது. இந்த மனிதனை அமர்த்தியே ஆக வேண்டும்,” என்று அவர் தீர்மானிக்கிறார்.

அவர் மனிதன் என்ற தளத்தில், மனிதன் என்ற முறையில் தேவனுடைய வலப்பக்கத்தில் தேவனால் அமர்த்தப்பட்டார். நம்முடைய சார்பாக அவர் representative. எல்லா மனிதர்களுக்கும் ஒரு representative இன்றைக்குத் தேவனுடைய வலப்பக்கத்தில் அமர்த்தப்பட்டிருக்கின்றார். ஒரு பாடல் உண்டு, “There is a man in the glory” “மாட்சியில் ஓர் மனிதர்” இந்தப் பாடலை நீங்கள் பிறகு பார்க்க வேண்டும். அவர் உன்னதங்களிலே அமர்த்தப்பட்டிருக்கின்றார் என்று நாம் பார்க்கின்றோம்.

“எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,” “எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.” ஆக உன்னதங்கள் என்றால் என்ன என்பதை ஓரளவுக்குப் பார்த்துவிட்டோம், “எல்லாற்றிற்கும்மேலாக.” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒன்றை நினைத்தால் அதைத் தடுப்பதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் அவர் எல்லாவற்றிற்கும் மேலானவர்.

தேவனுடைய செல்வங்கள் எல்லாம், வளங்கள் எல்லாம் கிறிஸ்துவில் உள்ளன என்பதைப் பார்த்தோம். எபேசியர் 3:8ல் பார்த்தோம். ஒருவேளை உங்களுக்கு மிகவும் பிடித்தமான, பரிச்சயமான இன்னொரு வசனம்கூட உண்டு, பிலிப்பியர் நான்காம் அதிகாரம் 19 ஆம் வசனம் வாசிப்போம். “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.”

நம்முடைய எல்லாக் குறைவுகளையும் நிறைவாக்கப் போதுமான செல்வங்கள் கிறிஸ்துவில் உள்ளன. அந்த செல்வங்களை அப்போஸ்தலனாகிய பவுல் எப்படி வர்ணிக்கிறார்? “மகிமையின் செல்வங்கள்.” இன்னும் நான் உங்களுக்குப் பிடி கொடுக்கவில்லை. “பிரதர், மகிமையின் செல்வங்கள்னா அதுல சோறு இருக்குமா? அதுல தண்ணி இருக்குமா? கார் இருக்குமா? ஏன் நீங்கள் ரொம்ப discreet, concreteடாகப் பேச மாட்டேங்கிறீங்க? ஏன் நீங்கள் மிகவும் நேரடியாகவும் தெளிவாகவும் பேசாமல், மறைமுகமாகப் பேசுகிறீர்கள் அப்படியே இலை மறை காயாய்த் தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் நன்மைகள், வளங்கள், செல்வங்கள், மகிமையின் செல்வங்கள் அப்படி எல்லாம் சொல்றீங்க. அது என்ன மகிமையின் செல்வம்? அது எனக்கு மதிப்பெண்கள் தருமா? அதுதான முக்கியம்,” என்று நீங்கள் கேட்கலாம்.

அவைகளை எல்லாம் நீங்கள் apply பண்ணிக்கொள்ளுங்கள். அவைகளை உங்கள் வாழ்க்கையிலே எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார். கிறிஸ்துவில் செல்வங்கள் உள்ளன, மகிமையின் செல்வங்கள் உள்ளன, அவைகள் எல்லாம் உன்னதங்களிலே உள்ளன. கிறிஸ்துவில் உள்ளன, கிறிஸ்து உன்னதங்களில் உள்ளார்.

நாம் எப்படி அந்த நன்மையைப் பெறுவது? எல்லா நன்மைகளும், வளங்களும், பரம வளங்களும், மகிமையான வளங்களும் யாரிடம் உள்ளன? கிறிஸ்துவில் உள்ளன. கிறிஸ்து எங்கு உள்ளார்? உன்னதங்களில் உள்ளார். இந்த நன்மையை நாம் எப்படிப் பெறுவோம்? நாம் எப்படிப் பெற வேண்டும் என்றால், எபேசியர் இரண்டாம் அதிகாரம் நான்கு முதல் ஏழு ஆம் வசனங்களிலே அதற்கு விடை உள்ளது.

“தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.”

“தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே…” நாம் நல்லவர்கள் என்பதால் இல்லை. நாம் சாமர்த்தியசாலிகள் என்பதால் இல்லை. இவரைவிட, அவரைவிட, இவனைவிட, அவனைவிட நான் உயர்ந்தவன் என்பதால் இல்லை. நம்முடைய மொழியினால் இல்லை, சாதியினால் இல்லை, நிறத்தினால் இல்லை, திறமையினால் இல்லை. தேவன் நம்மேல் கொண்ட பேரன்பினாலே, The great love with which He loved us. அவர் நம்மேல் அன்புகூர்ந்த பேரன்பினாலே. என்ன செய்தார்? அடுத்த வசனம். “மரித்தவர்களாயிருந்த நம்மை.” நாம் யார்? “பாவங்களிலும் அக்கிரமங்களிலும் மரித்தவர்களாயிருந்த நம்மை.” நாம் தேவனுடைய செல்வங்களுக்கும், வளங்களுக்கும் கோடி மைல் அப்பாற்பட்டவர்கள். அப்படிப்பட்ட நம்மை கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். அல்லேலூயா.

“மரித்தவர்களாயிருந்த நம்மை அவர் உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.” 6, 7 : “கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.”

கிறிஸ்து இயேசுவில். தமிழில் “கிறிஸ்து இயேசுவுக்குள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. “In Christ Jesus,” கிறிஸ்து இயேசுவில். “கிறிஸ்து இயேசுவுக்குள் நான் வந்தேன்” என்று சொன்னால், என்னமோ அது ரொம்ப உள்ளே உள்ளே போனவர்களுக்குத்தான் உண்டு என்பதுபோலத் தோற்றம் அளிக்கிறது. அப்படி இல்லை. கிறிஸ்து இயேசு ஒரு நபராக மட்டுமல்ல, அவர் ஒரு புலமாக இருக்கிறார். Christ is not only a person, He is also a realm.

புதிய ஏற்பாடு முழுவதும் அதற்குச் சான்றாக இருக்கிறது. ஒன்று கொரிந்தியர் ஒன்றாம் அதிகாரம் 30 ஆம் வசனத்தில் நாம் அதைப் பார்த்திருக்கிறோம், “Of Him you are in Christ Jesus.” நீங்கள் தேவனாலே கிறிஸ்து இயேசுவில் உள்ளீர்கள். “Where are you?” நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? “Oh, I am in Mappedu.” “I am in Selaiyur.” No, no, no, no. “I am not in Mappedu, I am not in Selaiyur. I am in Christ.” அது மட்டும்தான் எனக்கு மேலோங்கி இருக்க வேண்டும்.

லூசியன் என்ற பரிசுத்தவானை ரோம அதிகாரம் பிடித்து சித்திரவதை செய்தபோது கேட்ட கேள்விகள்: “நீ யார்?” “நான் ஒரு கிறிஸ்தவன்.” “உனக்கு எந்த ஊர், எந்த நாடு?” “நான் ஒரு கிறிஸ்தவன்.” “உன்னுடைய தொழில் என்ன?” “நான் ஒரு கிறிஸ்தவன்.” அவர் விளையாட்டு பண்ணவில்லை. கிறிஸ்தவனுக்கு எந்த நாடு? உடனே இவர்கள் எல்லாம், “நாட்டுப்பற்று இல்லாதவர்கள்” என்று சொல்லிவிடாதீர்கள்.

நாட்டுப்பற்று இருந்தால் என்ன பண்ணனும்? ஒழுங்காக வரி கட்ட வேண்டும். “வரியைக் குறைக்க வேண்டும் என்பதற்காக invest பண்ணலாமா?” என்று சிந்திக்கக்கூடாது. நம்முடைய நாட்டிற்கு, நம்முடைய மக்களுக்கு நாம் கொடுக்கின்றோம். அதுதான் நாட்டுப்பற்று. “உன்னுடைய நாடு என்ன” என்றால் கிறிஸ்தவனுக்கு என்ன இல்லை? “என்னுடைய தாய்நாடு இங்கு இல்லை. எங்கள் தாயகம் எங்கு உள்ளது? அது பரம தாய்நாடு. நாங்கள் இந்தப் பரம தாய்நாட்டின் குடிமக்கள். இந்தப் பூமியிலே நாங்கள் அயல்நாட்டினரைப்போல் வாழ்கின்றோம், பயணிகளைப்போல் வாழ்கின்றோம். எங்களுடைய பயணம் எதை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றது? எங்களுடைய பரம தாய்நாட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றது.”

“கிறிஸ்து இயேசுவில் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரச் செய்தார்.” கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எங்கு அமர்ந்திருக்கின்றார்? உன்னதங்களில் அமர்ந்திருக்கின்றார். எல்லாவற்றிற்கும்மேலாக. அந்த உன்னதங்கள் என்றால் பரலோகங்கள்தானா என்றெல்லாம் நான் ஆராய்ச்சிக்கு உட்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அமர்ந்திருக்கின்றார். அது ஒரு தளம். அங்கு தேவனுடைய செல்வங்கள் தங்கு தடையில்லாமல் கிடைக்கின்றன. சிலிண்டர் தட்டுப்பாடு வரப்போகிறது. பெட்ரோல் தட்டுப்பாடு வரப்போகிறது. உன்னதங்களிலே கிறிஸ்து இயேசுவில் எந்த தட்டுப்பாடும் இல்லை.

“பிரதர், சிலிண்டர் கிடைக்குமா?” அதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். செய்தி முடிந்தபிறகு நீங்களே அந்தப் பயன்பாட்டை, அந்த application நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவர் எங்கு அமர்ந்திருக்கிறாரோ அதே உன்னதங்களில் அவரோடு நாமும் அமர்த்தப்பட்டிருக்கின்றோம். அல்லேலூயா. ஆகவே, கிறிஸ்து இயேசுவில் உள்ள அந்த ஆசீர்வாதங்கள், தேவனுடைய ஆசீர்வாதங்கள், நன்மைகள், செல்வங்கள், வளங்கள் (நான் நான்கு வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். நீங்களும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக.) ஆசீர்வாதங்கள், நன்மைகள், செல்வங்கள், வளங்கள் எல்லாவற்றையும், உன்னதங்களில் இருக்கின்ற எல்லாரும் அவைகளைச் சுதந்தரிக்கலாம், பெற்று அனுபவிக்கலாம்.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உன்னதத்தில். நீங்கள் கிறிஸ்துவில் இருக்கிறீர்கள், கிறிஸ்து உன்னதத்தில் இருக்கிறார். ஆகவே நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? Logic. நீங்கள் இந்த ஊரில் இருக்கின்றீர்களா, உன்னதங்களில் இருக்கிறீர்களா? நாம் உன்னதங்களில் இருக்கின்றோம். நாம் இந்த ஊரில் இருக்கின்றோமா? நாம் இந்த நாட்டிலும் இருக்கின்றோம். நாம் உன்னதத்தில் இருக்கின்றோமா? உன்னதத்திலும் இருக்கின்றோம். இவைகள் இரண்டும் முரண்பாடு அல்ல.

உன்னதத்தில் இருப்பவர்கள் காலையில எழுந்து பல்விளக்குவார்கள், குளிப்பார்கள், பள்ளிக்கூடத்துக்குப் போவார்கள், வேலைக்குப் போவார்கள், ஒருவரையொருவர் சேவிப்பார்கள். அவர்கள் பூமியிலும் இருப்பார்கள், உன்னதத்திலும் இருப்பார்கள். பூமியில் அவர்கள் பணிவிடை செய்கிறபோது, உன்னதத்தில் பணிவிடை செய்வதுபோல் பணிவிடை செய்வார்கள். உன்னதங்களிலே அல்லது புதிய வானம் புதிய பூமியிலே அல்லது தேவனுடைய அரசிலே நாம் எப்படிப் பணிவிடை செய்வோமோ, எப்படி வாழ்வோமோ அப்படி இந்தப் பூமியிலும், நாம் வாழ்வோம். அல்லேலூயா. இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. நாம் இந்தப் பூமியில் வாழ்கின்றோம், ஆனால் உன்னதங்களிலே வாழ்கின்றவர்கள் எப்படி வாழ்வார்களோ, அப்படி வாழ்வோம்.

கிறிஸ்து எவ்வாறு எல்லாவற்றிற்கும் மேலாக அமர்த்தப்பட்டார்?

இரண்டாவது குறிப்புக்கு போகிறோம். ஆனால் இந்த ஆசீர்வாதத்தைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எப்படிச் சம்பாதித்தார். எப்படி எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தப்பட்டார்? உன்னதம் என்றால் என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக. யாரும் அதைத் (அவரை) தடுக்க முடியாது. அந்த ஆசீர்வாதங்களை அவர் பெறுவதிலிருந்தும், அவர் தருவதிலிருந்தும் எந்த வல்லமையும், எந்த சக்தியும், எந்த ஆற்றலும் தடுக்க முடியாது. எந்த human governmentடும் அதைத் தடுக்க முடியாது. எந்த வைரசும், பாக்டீரியாக்களும் அதைத் தடுக்க முடியாது. நீங்கள் அப்படிப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் எல்லா வைரஸ்களுக்கும், எல்லா பாக்டீரியாக்களுக்கும், எல்லா human governmentக்கும், எல்லா politiciansனுக்கும், எல்லா MLA, MP, secretaries, chief minister, prime minister, presidents எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அமர்த்தப்பட்டிருக்கிறார். நாமும் அவரோடுகூட அமர்த்தப்பட்டிருக்கிறோம்.

I prefer the word “அமர்த்தப்பட்டிருக்கிறோம்.” “அமருங்கள்” என்றால் there is a rest in that. எப்படி அமர்த்தப்பட்டார்? அது மிகவும் முக்கியம். இதை முதல் குறிப்பிலும் சொன்னேன்; மூன்றாம் குறிப்பிலும் சொல்வேன். பிலிப்பியர் இரண்டாம் அதிகாரம் எட்டு, ஒன்பதாம் வசனங்களை நாம் வாசிப்போம். “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி…”

அவர் தம்மைத் தாழ்த்தினார். ஆகவே தேவன் அவரை உயர்த்தினார். நீண்ட பகுதியை வாசிக்கும்போது அதன் முக்கியமான கருப்பொருளை நாம் தவற விட்டுவிடுவோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மைத் தாழ்த்தினார். ஆகையால் தேவன் அவரை உயர்த்தினார். Key words முக்கியமான இரண்டு வினைச்சொற்கள். என்ன? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மைத் தாழ்த்தினார். ஆகவே தேவன் அவரை உயர்த்தினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை உயர்த்தினார்; தேவன் கூடச்சேர்ந்து அவரை உயர்த்தினார் என்றல்ல.

அவர் எப்படி தம்மைத் தாழ்த்தினார்? மரணமே நேரிடுகிறதாக இருந்தாலும் அவர் பிதாவுக்குக் கீழ்ப்படிந்து தம்மைத்தாமே தாழ்த்தினார். தாழ்த்துவது என்றால் என்ன? கீழ்ப்படிதல். அவ்வளவுதான். கீழ்ப்படிவது concrete. தாழ்த்துவது concrete அல்ல. அவர் பிதாவுக்குக் கீழ்ப்படிந்தார். எந்த அளவுக்குக் கீழ்ப்படிவது? “கீழ்ப்படிவதற்கு ஒரு எல்லை இருக்கிறது. ஒருவன் சொன்னால் உடனே கீழ்ப்படிய முடியுமா?” என்று மக்கள் நினைக்கலாம். மரணமே நேரிடுகிறதாக இருந்தாலும் அவர் கீழ்ப்படிந்தார். “மரணமா, கீழ்ப்படிதலா?” என்ற cross roadடுக்கு வரும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கீழ்ப்படிதலைத் தேர்ந்தெடுத்தார்.

மரணமே நேரிடுகிறதானாலும். எப்படிப்பட்ட மரணம்? சிலுவையின் மரணமே. அதன் பொருள் என்ன? வெட்கக்கேடான, அவமானமான, கொடூரமான, காறி துப்பத்தக்க, கேவலமான சிலுவையின் மரணமே நேரிட்டாலும் அவர் பிதாவுக்குக் கீழ்ப்படிந்தார். ஆகவே தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி உன்னதங்களிலே அவரை அமரச்செய்தார்.

“இதோ ஒரு மனிதன். மரணமே நேரிடுகிறதானாலும் அவன் எனக்குக் கீழ்ப்படிந்தான். அவனுடைய வாயில் வஞ்சனை காணப்படவில்லை. அவனிடத்தில் பாவத்தின் முள்முனை முதலாய்க் காணப்படவில்லை.” பேயும் அவனுடைய தூத கணங்களும் மூன்று நாட்களாக auditing நடத்தினார்கள். ISO auditing மாதிரி. புரட்டிப்புரட்டி எல்லாக் கோப்புகளையும் பார்த்தார்கள். ஆனாலும் அந்த மனிதனிடத்திலே ஒரு தவறும் இல்லை. மரணத்தால் அவரைப் பிடித்து வைத்துக்கொள்வதற்கு அவரிடத்தில் ஒன்றும் இல்லை. “இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை,” (யோவான் 14:30) என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். “அவன் வலை போட்டுத் தேடினாலும் சரி, microscope, telescope வைத்துத் தேடினாலும் சரி, அவனுக்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை.” ஆகவே தேவன் அவரை உயர்த்தினார்.

2. ஆவிக்குரியவர்கள் விசுவாசத்தினால் சுதந்தரிக்கிறார்கள்

இப்போது இரண்டாவது குறிப்புக்கு வருவோம். இந்த ஆசீர்வாதங்களை, இந்த நன்மைகளை, இந்த வளங்களை, இந்த செல்வங்களைப் பெற்றுக்கொள்வது அல்லது சுதந்தரித்துக்கொள்வது எப்படி? “ஆவிக்குரியவர்கள் விசுவாசத்தினால் சுதந்தரிக்கிறார்கள்” என்று பார்க்கின்றோம். கிறிஸ்து இயேசுவில் உள்ள இந்த நன்மைகளும், இந்த வளங்களும், செல்வங்களும் இன்று இங்கு மெய்ப்படுத்தப்பட வேண்டும். இதை நன்றாக ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

“என்றைக்கோ ஒரு நாள் புதிய வானம் புதிய பூமியிலே அல்லது புதிய எருசலேமிலே எதிர்காலத்திலே தேவனுடைய அரசு முழுநிறைவு அடையும்போதுதான் உன்னதத்தில் உள்ள ஆசீர்வாதங்கள் எல்லாம் மெய்படும்” என்பது அல்ல. எதிர்காலத்திலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையான வருகைக்குப்பிறகு, தேவனுடைய அரசு முழு நிறைவாய் அங்கு நிரூபிக்கப்பட்டபிறகு, புதிய வானம் புதிய பூமியிலே அல்லது புதிய எருசலேமிலேதான் உன்னதங்களில் உள்ள தேவனுடைய செல்வங்கள் எல்லாம் நமக்கு மெய்படும்” என்பதல்ல. “இன்று இங்கு அது மெய்ப்படுவதுதான் தேவனுடைய எண்ணம்.”

யோவான் 16ஆம் அதிகாரம் 13 ஆம் வசனத்தை நாம் அறிவோம். “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்,” என்று சொல்லிவிட்டு பிறகு தொடர்ந்து, “அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். அவர் என்னுடையதிலிருந்து எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை அவர் மகிமைப்படுத்துவார்,” என்று சொல்லுகிறார். என்னிடத்திலிருந்து அல்லது என்னுடையதிலிருந்து எடுத்துக் கொடுப்பதினால்… இதைப்பற்றி நாம் விளக்கியிருக்கிறோம்.

“சத்திய ஆவியானவர்” என்பதை “மெய்ப்பாட்டின் ஆவியானவர்” அல்லது “நிஜத்தின் ஆவியானவர்” என்று சொல்வதுதான் சரி. எல்லா இடங்களிலும் நாம் திருத்தித்திருத்தி மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் “சத்தியம்” என்பதற்கும் “மெய்ப்பாடு” என்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. அது உண்மைதான். “கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய எல்லா நன்மைகளும், செல்வங்களும், வளங்களும் உள்ளன” என்பது உண்மை. நான் அதை அனுபவிக்கும்போது அது உண்மை மட்டுமல்ல, அது மெய்மை.

இதை நான் சிலாகித்திருக்கின்றேன். Truth என்பதற்குத் தமிழில் மூன்று வார்த்தைகள் உள்ளன. என்ன வார்த்தைகள் அவை? உண்மை, வாய்மை, மெய்மை. அதன் வேர்ச்சொல்லைப் பாருங்கள். உள், வாய், மெய். உள் கூட்டல் மை உண்மை, வாய் கூட்டல் மை வாய்மை, மெய் கூட்டல் மை மெய்மை. உள்ளத்தில் உண்மையாய் இருந்தால் உண்மை. சொல்லில் உண்மையாய் இருந்தால் வாய்மை. செயலில் உண்மையாய் இருந்தால் மெய்மை.

Sheet music பார்த்திருக்கிறீர்களா? இசையை அவர்கள் ஒரு குறியீட்டு மொழியிலே எழுதி இருப்பார்கள். குறியீடுகளைப் பார்த்துவிட்டு, “ஆஹா, என்ன இனிமையான சங்கீதம்” என்று யாராவது சொல்வார்களா? அதில் இசை துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அது இனிமையாக இருக்கிறதா? ஒருவேளை குறியீடு தெரிந்தவர்களுக்கு அது இனிமையாக இருக்கலாம். ஆனால் அந்த இசைக் குறியீடுகளைப் பார்த்து ஒருவன் இசைக் கருவியில் அதை வாசிக்கும்போது, மீட்டும்போது, அந்த இசைக் குறியீடுகள் என்னவாக மாறுகின்றன? மெய்மையாகிவிடும்.

அதுதான் மெய்மையாகுதல். அது மெய்ப்படுத்தப்படுகிறது. அதை யாரும் வாசிக்காதபோது அந்த உண்மை அங்கு இருக்கத்தான் செய்கிறது. இந்த பாடலுடைய இசை sheet வடிவத்தில், குறியீடுகள் வடிவத்தில் அங்கு உள்ளது. ஆனால் வாசிக்கும்போதுதான் அல்லது மீட்டும்போதுதான் அந்த உண்மை என்னவாக மாறுகிறது? மெய்மையாக மாறுகிறது. இதைத்தான் மெய்ப்படுத்துவது. ஒரு கவிஞர் “கனவு மெய்ப்பட வேண்டும்” என்று ஒரு கவிதை எழுதி இருக்கிறார். “மெய்ப்பட வேண்டும்.” நமக்குக் கனவெல்லாம் மெய்ப்பட வேண்டாம். கிறிஸ்து இயேசுவில் உள்ள உண்மைகள் நம்முடைய வாழ்க்கையில் மெய்ப்பட வேண்டும். அதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. “கிறிஸ்துவில் உண்மை மெய்ப்பட வேண்டும்.”

பரிசுத்த ஆவியானவர் மெய்ப்படுத்துகிறவர்

மெய்ப்படுத்துவதற்காகத் தேவன் நமக்கு அருளி இருப்பவர்தான் பரிசுத்த ஆவியானவர். பரிசுத்த ஆவியானவர் சத்திய ஆவியானவர், மெய்மையின் ஆவியானவர், மெய்ப்பாட்டின் ஆவியானவர் என்று வேதம் சொல்லும்போது அதனுடைய பொருள் என்ன? எப்படி அவைகள் எல்லாம் மெய்ப்படும் என்று நமக்குத் தெரியாது.

“கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தம் உள்ளது. கிறிஸ்து இயேசுவில் நீதி உள்ளது. கிறிஸ்து இயேசுவில் அன்பு உள்ளது. கிறிஸ்து இயேசுவில் பொறுமை உள்ளது. கிறிஸ்து இயேசுவில் சகிப்புத்தன்மை உள்ளது. கிறிஸ்து இயேசுவில் நீடிய பொறுமை உள்ளது. கிறிஸ்து இயேசுவில் தாங்கும் திறன் உள்ளது. கிறிஸ்து இயேசுவில் நீடிய தாங்கும் திறன் உள்ளது. கிறிஸ்து இயேசுவில் அடிபட்டுக்கொண்டே அமைதியாக இருக்கும் திறன் உள்ளது.” கிறிஸ்து இயேசுவில் எண்ணிலடங்கா குணநலன்கள் உள்ளன.

கிறிஸ்து இயேசுவில் உணவு உண்டு, தண்ணீர் உண்டு, காற்று உண்டு, ஒளி உண்டு, வெளிச்சம் உண்டு, விழா உண்டு, பண்டிகை உண்டு. “ஒப்பில்லாரைக் கண்டுகொண்டேன்” என்ற ஒரு பாடலை நாம் பாடுவோம். “எல்லாம் இயேசுவே. எனக்கெல்லாம் இயேசு” என்பது மிக அருமையான கும்மிப்பாட்டு. கிறிஸ்து இயேசுவில் எல்லா நன்மைகளும் உள்ளன. அவைகளை மெய்ப்படுத்துவதற்காகப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றார்.

சரி, உன்னதங்களில் உள்ள எல்லா நன்மைகளையும் பரிசுத்த ஆவியானவர் இங்கு இப்போதே மெய்ப்படுத்திவிடுவாரா? இல்லை. வரவிருக்கிற தேவனுடைய அரசில் நாம் உன்னதங்களில் எல்லா நன்மைகளையும் எந்தத் தங்கு தடையும் இல்லாமல் அனுபவிப்போம். வரவிருக்கிற தேவனுடைய அரசு. வந்திருக்கிற இந்த தேவனுடைய அரசில் அல்லது தொடக்க விழா செய்யப்பட்ட தேவனுடைய அரசில் உன்னதங்களில் உள்ள எல்லா நன்மைகளின் முன்சுவையை அல்லது முன்பணத்தை, முன்தொகையை, அச்சாரத்தைத்தான் நாம் அனுபவிக்கிறோம்.

ஒருநாள் வரும். அப்போது உன்னதங்களில் உள்ள எல்லா நன்மைகளையும், செல்வங்களையும், வளங்களையும் எந்தத் தங்கு தடையும் இல்லாமல் நாம் அனுபவிப்போம். Inaugurated kingdom - தொடக்க விழா செய்யப்பட்ட அரசு, முழுநிறைவாக்கப்பட்ட அரசு, நடுவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு நமக்கு முன்சுவைதான் உண்டு.

எபிரேயர் ஆறாம் அதிகாரம், நான்கு, ஐந்தாம் வசனங்களை வாசிப்போம். “ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்.” பரம ஈவை என்றால் உன்னதங்களின் கொடைகள். இன்னொரு வார்த்தை gift. இந்த நன்மைகளும், செல்வங்களும், வளங்களும் எல்லாம் தேவனுடைய கொடைகள்தான். தேவன் விரும்பி, மனமகிழ்ந்து நமக்குக் கொடுக்கிறார்; நாம் அதைப் பெற்றுக்கொள்கிறோம். சட்டம் போட்டு, சத்தம்போட்டு நாம் அவரிடத்தில் பேச முடியாது.

“என்னைவிட அவன் கெட்டவன். அவனுக்குப் பெரிய கார் கொடுத்திருக்கிறீர். நான் எவ்வளவு நல்லவன்! எனக்கு மோசமான கார்தான் கொடுத்திருக்கிறீர்,” என்று தேவனிடத்தில் நான் கேட்டேன் என்று வைத்துக்கொள்வோம், தேவன் என்ன சொல்லுவார்? “உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ,” என்று சொல்வார். யோவான் 21இல் “இவனைப்பற்றிய காரியம் என்ன?” என்று பேதுரு கேட்டபோது கர்த்தர் என்ன பதில் சொன்னார் என்று நமக்குத் தெரியும். “நான் வரும்வரை இவன் உயிரோடிருக்கச் சித்தமானால் உனக்கு என்ன வந்தது? நீ உன்னுடைய பணியைச் செய்.”

பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியில் பங்குற்றும். ஐந்தாம் வசனம்: தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும். இனிவரும் உலகத்தின் என்றால், coming age. வரவிருக்கிற யுகத்தின் பலன்கள். The powers of the coming age. அவைகளை ருசி பார்த்தும், We have the foretaste. ஆகவே தேவனுடைய அரசு வந்துவிட்டது, தொடக்க விழா செய்யப்பட்டுவிட்டது. தேவனுடைய அரசு வரவிருக்கிறது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மகிமையான வருகையிலே இறுதி விழா செய்யப்படும்.

இடைப்பட்ட காலத்திலே பரிசுத்த ஆவியானவர் நமக்குப் பணிவிடை செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் செயலாற்றுகிறார் என்பதைவிட பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய மக்களுக்குப் பணிவிடை செய்கிறார் என்று நான் சொல்வேன். தேற்றரவாளன் என்றால் என்ன அர்த்தம்? paraclete என்றால் Secretary. ஒரு நீதிமன்றத்துக்குப் போய் என்னுடைய வழக்கை எப்படி வாதாட வேண்டும் என்று எனக்குத் தெரியாது. நான் போய் வழக்காட முயன்றால் நீதிபதி என்னிடம், “உனக்கு சட்டம் தெரியுமா?” என்று கேட்பார். “தெரியாது” என்று சொல்வேன். அப்போது அவர், “சட்டம் தெரிந்த ஒரு ஆளை கூட்டிக்கொண்டு வா,” என்று சொல்வார். நான் போய் கூட்டிக்கொண்டு வருவேன். நான் கூட்டிக்கொண்டு வருகிற சட்டம் தெரிந்தவர் பெயர்தான் paraclete. இப்போது, 21 ஆம் நூற்றாண்டில் advocate. முதல் நூற்றாண்டில் அவருடைய பெயர் paraclete.

பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய மக்களுக்கு தேவனுக்குமுன்பாக என்னவாக இருக்கிறார்? Parakletos. தேற்றரவாளன், துணையாளர், பரிந்துபேசுகிறவர். கிறிஸ்துவில் உள்ள உன்னத நன்மைகளை எப்படிக் கோருவது என்று நமக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் நமக்காகக் கோருவார் என்று ரோமர் எட்டாம் அதிகாரத்தில் நாம் வாசிக்கின்றோம். நமக்குத் தெரியாது. நாம் பலவீனமானவர்கள். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவில் உள்ள உண்மைகளை எல்லாம் நமக்கு மெய்ப்படுத்துகின்றார், முன்சுவையைத் தருகின்றார். ஒரு முன்பணமாக அதைத் தருகின்றார்.

விசுவாசம் — காணப்படாத சொத்தின் பத்திரம்

அதற்கு தேவனுடைய மக்களுக்கு விசுவாசம் வேண்டும். எபிரேயர் 11 ஆம் அதிகாரம் ஒன்றாம் வசனம்: விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அது விசுவாசத்தின் வரையறை என்று சொல்ல முடியாது. ஆனால் விசுவாசத்தைபற்றிய ஒரு நல்ல சித்திரம். “விசுவாசம் எனப்படுவது நம்பப்படுகிறவைகளின் மெய்ப்பாடும் காணப்படாதவைகளின் உறுதிப்பாடுமாய் இருக்கிறது.” நான்கு படு. நம்பப்படு, மெய்ப்படு, காணப்படு, உறுதிப்படு. ஞாபகம் வைத்துக்கொள்வதற்கு எளிது.

நம்பப்படுகிறவைகளின் மெய்ப்பாடும் காணப்படாதவைகளின் உறுதிப்பாடுமாய் இருக்கிறது. கிறிஸ்து இயேசுவின் உள்ள உன்னத சொத்தை நான் இன்று முற்றுமுடிய காணவில்லை. ஆனால் அந்தச் சொத்தினுடைய பத்திரம் என்னுடைய கைகளிலே கொடுக்கப்பட்டிருக்கிறது. விசுவாசம் என்பது நாம் இன்னும் சுதந்தரிக்க இருக்கின்ற சொத்தின் இன்று நம்முடைய கைகளிலே தரப்பட்டிருக்கின்ற பத்திரம். விசுவாசம் என்பது நாம் எவைகளை நம்புகிறோமோ அவைகளை அது மெய்ப்படுத்துகின்றது.

உங்களுக்குச் சற்று குழப்பமாய் இருக்கலாம். “நீங்க என்ன சொல்றீங்க? எல்லாவற்றையும் மெய்ப்படுத்த முடியுமா? அல்லது ஒன்றை மெய்ப்படுத்த முடியாதா? அல்லது கொஞ்சம் மெய்ப்படுத்த முடியுமா? உங்களுடைய நிலைப்பாடு என்ன?” என்றால் முன்சுவையை நாம் மெய்ப்படுத்த முடியும். எவ்வளவு முன்சுவையை மெய்ப்படுத்தும் என்று எப்படி தெரியும்? அது தேவனைப் பொறுத்தது. தேவனுடைய மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய விசுவாசம் அதிகமாய் இருக்க வேண்டும்.

விசுவாசம் என்பது தேவனுடைய கைகளை முறுக்கி ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொள்வது அல்ல. விசுவாசம் என்பது ஒரு யுக்தி அல்ல. விசுவாசம் என்பது ஒரு தந்திரம் அல்ல. விசுவாசம் என்பது ஒரு உபாயம் அல்ல. விசுவாசம் என்பது ஒரு மந்திரம் அல்ல. விசுவாசம் என்பது தேவன்மேல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமேல், நான் வைத்திருக்கிற உறவாடு.

ஆகவே, பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்து இயேசுவின் உள்ள அந்த நன்மைகளையும் வளங்களையும் செல்வங்களையும் நம்முடைய வாழ்க்கையிலே கொண்டுவருகின்றார். பரிசுத்தம் நீதி இவையெல்லாம் எங்கிருந்துதான் வர முடியும்? நம்மிடத்தில் பரிசுத்தம் உள்ளதா? நம்மிடத்தில் நீதி உள்ளதா? எங்கிருந்து வர முடியும்? கிறிஸ்துவில்தான் அவைகள் உள்ளன.

அதே ஒன்று கொரிந்தியர் ஒன்று 30இலே “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்,” என்று வாசிக்கிறோம். இதை எப்படி வாசிக்க வேண்டும் என்றால் கிறிஸ்துவே தேவனால் நமக்கு ஞானமும் அதாவது நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். Wisdom, both righteousness and sanctification and redemption. நான்கு கிடையாது. இப்படிப் பிரிக்க வேண்டும். தேவனாலே ஞானமும் அதாவது நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

பரிசுத்த ஆவியானவர் எப்படி மெய்ப்படுத்துகின்றார்? ஏன் எல்லாருடைய வாழ்க்கையிலும் மெய்ப்படுவதில்லை? பரிசுத்த ஆவியானவர் மெய்ப்படுத்துவதற்கு நம்மிடத்தில் என்ன வேண்டும்? விசுவாசம் வேண்டும். எப்படி விசுவாசத்தைப் பெறுவது? திரும்பத் திரும்ப சொன்னால் விசுவாசம் வந்துவிடுமா? confess and claim என்று ஒரு theology உண்டு. அதாவது “எனக்கு BMW car உள்ளது. என்னுடைய கார் BMW car” என்று சொல்லிக்கொண்டே இருந்தால் கர்த்தர் எனக்கு BMW car கொடுத்துவிடுவார் என்ற ஒரு நம்பிக்கை. அவையெல்லாம் மிகவும் மூடத்தனமான எண்ணங்கள். விசுவாசம் என்பது பரிசுத்த ஆவியானவர் முதலாவது நம்மிடத்தில் உருவாக்குவது.

ஆவிக்குரிய புலன்

ஆவிக்குரிய பார்வை என்ற தலைப்பிலே பேசும்போது நான் இதைச் சொன்னேன். தேவன் நமக்கு ஒரு ஆவிக்குரிய புலனை, spiritual faculty ஒன்றைக் கொடுக்கின்றார். யோவான் 3:3-6 ஆம் வசனங்களில் நாம் இதைப் பார்த்தோம். “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” (யோவான் 3:3). “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” (யோவான் 3:5). “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” (யோவான் 3:6).

இந்த உன்னத ஆசீர்வாதங்கள் யாருக்கு மெய்ப்படும், யாருக்கு அது உண்மையாக இருக்கும், யாருக்கு அது மெய்யாக இருக்கும் என்று அவர் சொல்கிறார். தேவனுடைய அரசில் உள்ள என்பது உன்னதங்களில் உள்ள என்று வைத்துக்கொள்வோமே. நீ மறுபடியும் பிறவாவிட்டால் உன்னதங்களில் உள்ள அந்த உண்மைகளை, அந்த நன்மைகளை, அந்த செல்வங்களை, வளங்களை நீ பார்க்கமாட்டாய். நீ தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் நீ தேவனுடைய அரசில் நுழையவே மாட்டாய்.

ஆவியினால் பிறப்பது என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். தண்ணீரினால் பிறப்பது என்றால் பலவிதமான பொருள்விளக்கம் சொல்வார்கள். தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறப்பது என்றால் என்ன பொருள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனுக்கு ஒரு புலனைத் தராவிட்டால், அவன் தேவனுடைய அரசில் உள்ள, உன்னதங்களில் உள்ள, கிறிஸ்துவில் உன்னதங்களில் உள்ள, தேவனுடைய செல்வங்களையும், நன்மைகளையும், வளங்களையும் அவன் ஒருநாளும் பார்க்க முடியாது.

அதற்கு மாறாக ஒரு வார்த்தையை நான் பயன்படுத்த வேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் சொல்லப்போகிறேன். பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனுக்கு ஆவிக்குரிய புலனை, ஆவிக்குரிய கண்களை, ஆவிக்குரிய கேள்வியை, ஆவிக்குரிய தொடுதலை, ஆவிக்குரிய மோப்ப சக்தியைத் தரவில்லை என்றால் அவனுக்கு கிறிஸ்துவில் உள்ள நன்மைகளும், செல்வங்களும் ஒன்றும் புலப்படாது. “இந்தக் கிறிஸ்தவர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏன் இவ்வளவாய் நேசிக்கிறார்கள்!” என்று அவனுக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது.

மறுபடியும் பிறவாவிட்டால் அவர்கள் தேவனுடைய அரசில் நுழையமாட்டார்கள். புதிய படைப்பிற்குள் நுழையமாட்டார்கள். இந்த உன்னதங்களில் அவர்கள் நுழையமாட்டார்கள். உன்னதங்களில் நாம் அமர்வதற்கு நமக்கு என்ன நிறைந்திருக்க வேண்டும்? யார் உன்னதங்களிலே கிறிஸ்துவோடு அமர்ந்திருக்க முடியும்? அவர் எப்படி உன்னதங்களிலே அமர்ந்தார்? அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததினாலே உன்னதங்களிலே அமர்த்தப்பட்டார். நாம் எப்படி அமர்த்தப்பட்டோம்? நாமும் கிறிஸ்துவில் சிலுவையில் அறையப்பட்டு உயிரோடு எழுப்பப்பட்டதினால்தான் உன்னதங்களிலே அமர்த்தப்பட்டிருக்கிறோம்.

உன்னதங்களிலே அமர்த்தப்படுவதற்கு வேறு குறுக்குவழி இல்லை. எந்தக் குகையில் போய் நீங்கள் தவம் செய்தாலும் சரி, எந்த ஆற்றில் நீங்கள் கழுத்தளவு தண்ணீரில் நின்றாலும் சரி, உன்னதங்களிலே அமர்த்தப்படுவது தேவனுடைய செய்கை. தேவன் ஒரேவொரு மனிதனைத்தான் உன்னதத்திலே அமர்த்த முடியும். அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஏனென்றால் பாவம் இல்லாத ஒரே மனிதன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. “என்னில் பாவம் உண்டு என்று எவன் சொல்லக்கூடும்,” என்று முழங்கின ஒரே கதாநாயகன், ஒரே களபதி, ஒரே தளபதி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

நம் எபிரெயர் வேத ஆய்வின்போது கதாநாயகர், தளபதி, களபதி என்கின்ற வார்த்தைகளை நாம் பயன்படுத்தினோம். நம் களபதி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் தளபதி மட்டுமல்ல. அவர் இந்தக் களத்திலே வாழ்ந்து காயம்படாதவராய், பாவக் காயம் இல்லாதவராய் வென்று முடிசூட்டப்பட்டவர். அல்லேலூயா. நாம் கிறிஸ்துவில் இருந்தோம். கிறிஸ்துவின் நாமம் அவரோடுகூட அறையப்பட்டு நாமும் அவரோடுகூட உயிரோடு எழுப்பப்பட்டோம். ஆகவே நாம் உன்னதங்களிலே அமர்த்தப்பட்டிருக்கின்றோம்.

இப்போது பதில் சொல்லுங்கள். தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் ஒருவன் தேவனுடைய அரசில் நுழைய மாட்டான் என்பதில் தண்ணீர் என்றால் என்ன பொருள்? ஞானஸ்நானம். சரி. ஞானஸ்நானம் என்றால் என்ன பொருள்? மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல். நாம் கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையில் அறையுண்டு, கிறிஸ்துவுடனேகூட உயிரோடு எழுப்பப்பட்டோம். எவர்கள் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையுண்டு உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்களோ, அவர்கள்தான் தேவனுடைய அரசில் நுழைவார்கள், உன்னதங்களிலே கிறிஸ்துவோடு அமர்த்தப்படுவார்கள்.

ஆறாம் வசனம் ஆவியினாலே பிறப்பது ஆவியாய் இருக்கும். That which is born of the Spirit is spirit. ஆவியானவர் நம்மைப் பிறப்பிக்கும்போது அதுவரை நமக்கு இல்லாத ஒரு புதிய ஆவிக்குரிய புலனைத் தருகிறார். எப்படி கண்கள் இருக்கின்றனவோ, காதுகள் இருக்கின்றனவோ அல்லது தொடு உணர்ச்சி இருக்கிறதோ அதுபோல் நமக்கு ஒரு ஆவிக்குரிய புலனை ஒரு spiritual faculty நமக்குக் கொடுக்கின்றார். அதற்குப் பேர்தான் ஆவி. ஆவியானவர் அதை உருவாக்குவதால் அதை ஆவி என்று வேதம் கூறுகிறது.

மறுபடி பிறந்த பரிசுத்த ஆவியானவரால் பிறப்பிக்கப்பட்ட தேவனுடைய மக்கள் எல்லோருக்கும் இப்படிப்பட்ட ஒரு ஆவிக்குரிய புலனைத் தேவன் கொடையாகத் தந்திருக்கின்றார். ஏன் பரிசுத்த ஆவியானவர் இப்படிப்பட்ட ஒரு ஆவிக்குரிய புலனை அல்லது ஆவி என்று அழைக்கப்படுகிற ஒரு ஆவிக்குரிய புலனைக் கொடுத்திருக்கிறார். புலன் என்றால் faculty. seeing is a faculty, hearing is a faculty, touch is a faculty, tasting is a faculty, smelling is a faculty. காரணம் என்ன? வரவிருக்கிற நித்தியத்தில் உள்ளவைகளை இன்று நமக்குப் புலப்படுத்துவது அந்த ஆவிக்குரிய புலன்.

நித்தியம் என்பது எதிர்காலமா, நிகழ்காலமா? எதிர்காலம். எதிர்காலத்தில், நித்தியத்தில் உள்ளதை பரத்திற்குரியவைகளை இன்று நமக்குப் புலப்படுத்துவது அந்த ஆவிக்குரிய புலன். பரம் எங்கிருக்கிறது என்று நமக்குத் தெரியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வீற்றிருக்கிற இடம். பரத்திற்குரியவைகளை இங்கு புலப்படுத்துவது அல்லது மெய்ப்படுத்துவது அந்த ஆவிக்குரிய புலன். புலப்படுத்துவது என்பதற்கு மெய்ப்படுத்துவது என்ற இன்னொரு வார்த்தையைப் பயன்படுத்த முடியும். மெய்ப்படுத்துவதற்கு அது ஆவிக்குரிய புலன். ஆகவே எதிர்காலத்தில் இருப்பதை இன்று அவர் மெய்ப்படுத்துகிறார். பரத்தில் இருப்பதை இங்கு அவர் மெய்ப்படுத்துகிறார். அப்படி மெய்ப்படுத்துவதற்காக அவர் கொடுத்திருக்கிற புலன்தான் என்னது?

இயற்கையான மனிதன் மற்றும் ஆவிக்குரிய மனிதன்

பரிசுத்த ஆவியைப் பெற்றதாகச் சொல்லும் தேவனுடைய மக்கள் பலர் உண்மையிலேயே ஆவியின்படி வாழ்வது இல்லை. இப்போது நான் முதலாவது வாசித்த ஒன்று கொரிந்தியர் இரண்டாம் அதிகாரம் 14, 16 ஆம் வசனங்களை வாசிப்போம். ஒன்று கொரிந்தியர் 2:9யை நாம் ஆதாரமாய் வாசித்தோம். தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. எது? கிறிஸ்துவில் அவர் உன்னதங்களிலே ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிற அந்த நன்மைகளையும், செல்வங்களையும், வளங்களையும் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை. பிறகு எப்படித்தான் நாம் காண்பது? எப்படித்தான் கேட்பது?

14 முதல் 16வரை: ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆங்கிலத்திலே natural man does not welcome or receive the things of the Spirit. கிரேக்கத்திலே a man of psuchikos.

நான் கிரேக்கப் பண்டிதன் இல்லை. ஆனால் தேவனுடைய மக்களாகிய நீங்கள் எப்படி Parakletos என்கின்ற வார்த்தையை advocate என்ற வார்த்தைக்குப் பதிலாகத் தெரிந்துகொள்ள வேண்டுமோ, அதுபோல இந்த இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆவி என்பதற்குப் பயன்படுத்தப்படுகிற கிரேக்க வார்த்தை என்ன? ஆத்துமா என்பதற்குப் பயன்படுத்தப்படுகிற கிரேக்க வார்த்தை என்ன? ஆத்துமாவுக்குப் பயன்படுத்தப்படுகிற கிரேக்க வார்த்தை psyche. ஆவி என்பதற்குப் பயன்படுத்தப்படுகிற கிரேக்க வார்த்தை pneuma. pneumatic instruments, pneumonia. ஆங்கில இலக்கியம் படிக்கிறவர்கள் pneuma என்ற வேர்ச்சொல்லை வைத்துப் பத்து வார்த்தைகள் சொல்ல வேண்டும். psyche என்ற வார்த்தையிலிருந்துதான் psychology வருகிறது.

இந்த இரண்டு வார்த்தைகளையும் மறந்துவிடக்கூடாது. Pneuma, psyche. இந்த இரண்டும் பெயர்ச்சொற்கள். Pneuma என்றால் ஆவி, psyche என்றால் ஆத்துமா. ஆவிக்குரிய ஆத்துமாவுக்குரிய என்பதற்குப் பயன்படுத்தப்படுகிற adjectives pneumatikos, psuchikos. இங்கே a man of psyche என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உடனே சிலர், “இவன் ஆத்துமாவுக்கு உரியவனா, ஆவிக்குரியவனா” என்று பயங்கர ஆராய்ச்சி செய்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இயற்கையான மனிதன், ஆவிக்குரிய மனிதன்.

ஆவிக்குரிய மனிதன் என்பவன் யார்? பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள்ளே ஒரு ஆவிக்குரிய புலத்தை, ஆவிக்குரிய உறுப்பை, ஆவிக்குரிய அவயவத்தை உருவாக்கி இருக்கிறார். அவனுக்குக் கிறிஸ்துவில் உள்ள உண்மைகள் எல்லாம் மெய்யாகத் தோன்றுகின்றன. அந்தப் புலன் இல்லாதவனுக்கு அவைகள் பைத்தியமாய்த் தோன்றும். கிறிஸ்துவிலே நீதி உள்ளது. கிறிஸ்துவிலே பரிசுத்தம் உள்ளது. கிறிஸ்துவிலே மீட்பு உள்ளது. அவர் மெய்யான உணவாக இருக்கிறார். மெய்யான பானமாக இருக்கிறார். அவர் ஆவிக்குரிய உணவாக இருக்கிறார்.

ஒன்று கொரிந்தியர் பத்தாம் அதிகாரத்திலே பவுல் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார். அவர்கள் எல்லோரும் ஒரே ஆவிக்குரிய உணவை உண்டார்கள். அந்த ஆவிக்குரிய உணவு கிறிஸ்துவே. அவர்கள் எல்லோரும் அவர்களோடு சென்ற ஆவிக்குரிய தண்ணீரைக் குடித்தார்கள். அவர்களோடு சென்ற பாறையிலிருந்து வந்த ஆவிக்குரிய தண்ணீரைக் குடித்தார்கள். அந்த ஆவிக்குரிய பாறை கிறிஸ்துவே.

இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் குடித்தது உண்மையான தண்ணீரா அல்லது ஆவிக்குரிய தண்ணீரா? உண்மையான தண்ணீர். உண்மையான ஆவிக்குரிய தண்ணீர். அப்படியானால் ஆவிக்குரிய என்றால் அது புலப்படாத தண்ணீரா அல்லது புலப்படுகிற தண்ணீர்தானா? புலப்படுகிற தண்ணீர்தான். பிறகு ஏன் அதை ஆவிக்குரிய தண்ணீர் என்று சொல்கிறார்? அவர்கள் உண்ட மன்னா ஏதோ spiritual மன்னாவா அல்லது Carbohydrate, vitamins, or protein எல்லாம் இருந்த மன்னாதானா? எல்லாமே இருந்தன. பிறகு ஏன் அதை ஆவிக்குரிய உணவு என்று சொல்கிறார்? அதனுடைய பொருள் என்ன?

அப்படி என்றால் ஆவிக்குரிய என்பது ஏதோ கருகலான, மங்கலான எங்கோ இருக்கிறது என்று பொருள் அல்ல. அது தேவனிடம் உள்ளது. அது கிறிஸ்துவில் உள்ளது. அது நித்தியத்தில் உள்ளது. அது பரத்தில் உள்ளது. அப்படிப்பட்ட செல்வங்களையும், வளங்களையும் எடுத்து தேவன் மனிதர்களுக்குக் கொடுக்கிறார். நன்றாய்ப் புரிந்துகொள்ளுங்கள். எனக்கு அதில் சந்தேகமே இல்லை. ஆவிக்குரிய என்பதன் விளக்கம் நித்தியத்திற்கு மட்டுமே உரியதை எடுத்துத் தேவன் மனிதனுக்கு இன்றைக்கு கொடுக்கின்றார். ஆமென்! பரத்திற்குரிய ஒன்றை எடுத்துத் தேவன் மனிதனுக்கு இங்கு கொடுக்கின்றார். கிறிஸ்துவுக்குரிய, தேவனுக்குரிய ஒன்றை எடுத்துத் தேவன் மனிதனுக்கு வழங்குகிறார். அதற்குப் பெயர்தான் ஆவிக்குரியது.

நீங்கள் புதிய ஏற்பாட்டை எப்படி மடக்கி மடக்கிப் பார்த்தாலும் இதைத்தவிர வேறு அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. “பரிசுத்த ஆவியைப் பெறும்போது அந்நிய பாஷை பேசி சத்தத்தை எழுப்புகிறோம் என்பதனால் நாங்கள் ஆவிக்குரியவர்கள்,” என்று நினைப்பது முற்றிலும் தவறானது. அதற்காகப் “பரிசுத்த ஆவியால் நிரம்பும்போது அந்நிய பாஷை பேசிவிடக்கூடாது, சத்தமே வரக்கூடாது,” என்று நான் சொல்கிறேனா? அப்படி எல்லாம் நான் சொல்லவில்லை.

ஆனால் அதை ஆவிக்குரியது என்று ஒருநாளும் எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் நன்றாய்ப் பரிசுத்த ஆவியினால் நிறைந்து அந்நிய பாஷைகள் பேசலாம். சத்தம் எழுப்பலாம். ஆனாலும் அவர்கள் ஆவிக்குரியவர்களாக இல்லாமல் இருக்கின்ற வாய்ப்பு முற்றிலும் உள்ளது. அவர்கள் பெற்ற பரிசுத்த ஆவியானவரையோ அல்லது அவர்கள் பேசின அந்நிய பாஷையை நான் கேள்விக்கு உட்படுத்தவில்லை. அது உண்மையாகவே ஆவிக்குரிய கொடையாகக்கூட இருக்கலாம். அதில் எழும்புகிற சத்தத்தை நான் குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் ஒரு மனிதன் ஆவிக்குரியவனா இயற்கையானவனா என்று பகுத்துப்பார்ப்பது அது அல்ல. அவன் எப்படிப்பட்ட கிறிஸ்துவில் உள்ள ஆவிக்குரிய மதிப்பீடுகள் உள்ளவனாய் இருக்கிறான்?

யாக்கோபு நல்லவனா கெட்டவனா? “ரொம்ப நாட்கள் அவர் கெட்டவராய் இருந்தார். அதன்பிறகு நல்லவனாய் மாறினார்,” என்று சொல்லாதீர்கள். கடைசிவரை பெரும்பாலும் யாக்கோபினுடைய வாழ்க்கை சரித்திரத்தை எடுத்துப்பார்த்தால் வெற்றிகளைவிட தோல்விகள் அதிகம். நற்பண்புகளைவிட தீய பண்புகள் அதிகம். ஆனால் கர்த்தர் இந்த ஆளைத் தெரிந்தெடுத்து, “எனக்குப் பேர் என்ன தெரியுமா? யாக்கோபின் தேவன்,” என்று சொல்கிறார். கர்த்தர் வேறு ஒரு நல்லவன் பேரைச் சொல்லக்கூடாதா? யாக்கோபையா தெரிந்தெடுக்க வேண்டும்? “யோசேப்பின் தேவன்” என்று சொன்னால்கூட நாம் ஏற்றுக்கொள்வோம். “யோசேப்பின் தேவன்” என்று சொன்னால் யாக்கோபு கோபப்படுவாரா என்ன?

தேவன் ஏன் யாக்கோபின் தேவன் என்று தன்னை அடையாளப்படுத்துகிறார்? அவனுடைய குற்றங்களையும், குறைகளையும், நிறைகளையும் பார்த்தல்ல. அவனுடைய ஆவிக்குரிய மதிப்பீடுகள். முதற்பேறானவனுடைய உரிமை என்பது ஆவிக்குரிய மதிப்புள்ளது. ஒரு மனிதன் ஆவிக்குரியவைகளை எப்படி மதிக்கிறான் என்பதை வைத்துத்தான், கிறிஸ்துவில் உள்ள செல்வங்களையும், வளங்களையும் எப்படி மதிக்கிறான் என்பதை வைத்துத்தான், அவன் ஆவிக்குரியவனா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது.

ஆகவே ஆவிக்குரிய மனிதனுக்கு எதிர்ப்பதம் என்ன? இயற்கையான மனிதன். இயற்கையான மனிதன் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாய்த் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படும். ஆவிக்குரிய மனிதனுக்குக் கிறிஸ்துவில் உள்ள உண்மையான செல்வங்களும், வளங்களும் உண்மையானவைகளாகத் தோன்றும். இயற்கையானவனுக்கு அப்படித் தோன்றாது.

“ஆவிக்குரியவர்கள் என்றால் அவர்கள் தங்களுடைய reasonயை, பகுத்தறிவைப் பயன்படுத்தவே மாட்டார்கள்,” என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். “பிரதர், ஆவியானவர் சொல்லிட்டார். உன் பிள்ளை பத்தாம் வகுப்புவரைப் படித்தால் போதும். வேதாகமத்தைப் படிக்கத் தெரிந்தால் போதும்,” என்று சொன்ன பிரசங்கிமார்களை எனக்குத் தெரியும். இது கேட்பதற்கு மிகவும் மகா ஆவிக்குரியதுபோல் தோன்றும். “இந்த உலகம் படிப்பை ஒரு பொருட்டுபோல் கொண்டாடுகின்றது. ஆனால் பிரதர், B.A., M.A., Ph.D முக்கியமா? அல்லது கர்த்தரை நேசிக்கிற நேசம் முக்கியமா பிரதர்?” என்று பிரசங்கித்த போதகர்களை எனக்குத் தெரியும். என்னமோ படிப்பு கர்த்தரை நேசிப்பதற்கு ஒரு எதிர்ப்பதம்போல், ஞானம் என்பது கர்த்தரை நேசிப்பதற்கு ஒரு எதிர்ப்பதம்போல் இவர்கள் பேசுகிறார்கள்.

இயற்கையான ஞானமும் உண்டு, ஆவிக்குரிய ஞானமும் உண்டு. யாக்கோபு மூன்றாம் அதிகாரம். இயற்கையான ஞானம் பேய்த்தனத்துக்கு அடுத்தது. அது சண்டைகளை, சச்சரவுகளை உண்டாக்குகிறது. ஆனால் பரத்திலிருந்து வருகிற ஞானம், ஆவிக்குரிய ஞானமோ இசைவானது, இணக்கமானது, reasonable. இரண்டு ஞானத்தையும் அவர் பிரித்துப் பேசுகின்றார்.

ஏன்? இயற்கையான உடல், ஆவிக்குரிய உடல் என்றுகூட ஒன்று கொரிந்தியர் 15 ஆம் அதிகாரத்தில் பவுல் பேசுகின்றார். இயற்கையான உடலும் உண்டு ஆவிக்குரிய உடலும் உண்டு. முந்தின ஆதாம் ஜீவாத்துமாவானான். கடைசி ஆதாம் ஜீவன் தரும் ஆவியானார். The first Adam became a living soul. The last Adam became a life-giving Spirit. யோவான் The Word became flesh வார்த்தை ஊனுருவானார் என்றும் ஒன்று கொரிந்தியர் 15:45இலே கடைசி ஆதாமாகிய கிறிஸ்து ஜீவன் தரும் ஆவியானார் என்றும் கூறுகிறார். இரண்டு ஆனார்கள். வார்த்தை மாம்சம் ஆனார். கடைசி ஆதாம் ஜீவன் தரும் ஆவி ஆனார். ஆகவே தேவனுடைய இரண்டு ஆனார்கள். Two becomings of God. The first becoming முதலாவது ஆனாரில் தேவன் மாம்சம் ஆனார். இரண்டாவது ஊனுருக்கொண்ட தேவன் மரித்து உயிர்த்தெழுந்து என்ன ஆனார்? ஜீவன் தரும் ஆவியானார். கிறிஸ்து ஜீவன் தரும் ஆவியானார். இப்படியும் பேசுகிறார்கள்.

ஒன்று கொரிந்தியர் 15 ஆம் அதிகாரத்தின் கருப்பொருள் அதுவல்ல. இயற்கையானதையும், ஆவிக்குரியதையும் அவர் வேறுபடுத்திக் காட்டுகிறார். முதல் ஆதாமைப் பொறுத்தவரை அவன் ஒரு இயற்கையான மனிதன்; அவ்வளவுதான். அவனிடத்திலே நித்தியத்துக்குரியதையும், பரத்துக்குரியதையும் பார்ப்பதற்குரிய புலன் எதுவும் இல்லை, அவ்வளவுதான். கடைசி ஆதாமாகிய கிறிஸ்துவில் அப்படிப்பட்ட ஒரு ஆவிக்குரிய புலன் நமக்கு கிடைக்கிறது. முழுப் பகுதியையும் எடுத்துப் பார்க்கும்போது. அதுதான் ஒன்று கொரிந்தியர் 15:45இன் முக்கியத்துவமேதவிர அதற்கு அதிகமாகக் “கிறிஸ்து ஜீவன் தரும் ஆவியானார்” என்கின்ற theology அங்கு இல்லை.

ஆகவே நம்முடைய நடைமுறை வாழ்க்கையிலே, நம்முடைய அனுபவத்திலே, பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவை represent பண்ணுகின்றார். அவர் கிறிஸ்துவின் சார்பாளனாக, பிரதிநிதியாக, இருக்கின்றார். அது உண்மைதான். “இது கிறிஸ்து பேசினதா, பிதா பேசினதா, பரிசுத்த ஆவியானவர் பேசினதா” என்றெல்லாம் நாம் பகுத்துப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் குமாரன் குமாரன்தான், பிதா பிதாதான், ஆவியானவர் ஆவியானவர்தான்.

3. ஆவியானவர் நிர்வகிக்கும் சிலுவையின் நெறிப்பாட்டின்வழியாக

முதலாவது குறிப்பு என்ன? கிறிஸ்துவில் உன்னத ஆசீர்வாதங்கள். இரண்டாவது குறிப்பு ஆவிக்குரியவர்கள் விசுவாசத்தினால் அதைச் சுதந்தரிக்கிறார்கள். மூன்றாவது குறிப்பு ஆவியானவர் நிர்வகிக்கும் சிலுவையின் நெறிப்பாட்டின்வழியாக.

நாம் 1 கொரிந்தியர் 2 இல், “இயற்கையான மனிதன் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளமாட்டான். கிறிஸ்துவில் உள்ள உன்னத ஆசீர்வாதங்களை அவன் பார்க்கவும் மாட்டான், கேட்கவும் மாட்டான். அவைகள் அவனுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றாது,” என்று வாசித்தோம். ஆவிக்குரிய மதிப்பீடுகள் இல்லாதவனுக்கு, “இந்த உலகத்தில் நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் நிலம் கிடைக்குமா? கார் கிடைக்குமா? நல்ல பொண்ணு மாப்பிள்ளை கிடைக்குமா?” என்றுதான் நினைப்பான். இதுதான் இயற்கையான கிறிஸ்தவன், இயற்கையான விசுவாசியின் கேள்விகள் இப்படித்தான் இருக்கும். “அந்த உன்னத ஆசீர்வாதங்களிலே பொண்ணு, மாப்பிள்ளை, வேலை, கார் எல்லாம் அடங்கி இருக்கிறதா?” என்பதில்தான் கவனமாயிருப்பான்.

ஆனால் ஆவிக்குரியவன் அவைகளைப்பற்றி கேட்கவே மாட்டான். அவனைப்பொறுத்தவரை, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்போது இவைகள் எல்லாம் உனக்குக்கூட கொடுக்கப்படும்.”

நான் வாலிபனாக இருந்தபோது ஒருவர் ஒரு செய்தியில் நகைச்சுவையாய் இப்படிச் சொன்னார். ஒருவன் ஓர் உணவுவிடுதிக்குப்போய், “இட்லி எவ்வளவு?” என்று கேட்டானாம். அதற்கு, “ரெண்டு பத்து ரூபாய்,” என்றார்களாம். அவன், “சட்னி எவ்வளவு?” என்று கேட்டதற்கு, “ஃப்ரீ,” என்று சொன்னார்களாம். அப்போது அவன், “அப்படியானால் சட்னி மட்டும் கொடுங்கள்,” என்று சொன்னானாம்.

முதலாவது கிறிஸ்துவுக்குரிய உன்னத ஆசீர்வாதங்களைத் தேடினால், அதன்பின் தேவன் இந்தப் பூமிக்குரியவைகளையும் தருவார். ஆனால், இயற்கையான மனிதன் முதலாவது பூமிக்குரியவைகளைப் பெறுவதிலேயே கண்ணுங்கருத்துமாய் இருக்கிறான். இயற்கையான மனிதர்கள் என்றால் ஒருவன் மறுபடி பிறந்தபிறகும் இயற்கையான மனிதனாகவே வாழமுடியும். இயற்கையானவர்கள், ஆவிக்குரியவர்கள் என்று இரண்டு சாரார் இருக்கிறார்கள். இயற்கையானவர்களுக்கு இயற்கையான நன்மைகள்தான் கண்களிலே தென்படும்.

பிலேயாமினுடைய கண்களிலே பாலாக் தரப்போகின்ற வெள்ளியும் பொன்னும்தான் தென்படும். பேதுருவுக்குத் தான் தவறவிடுகிற, பெறவேண்டிய மீன்கள்தான் கண்களிலே தென்படும். இயற்கையான நன்மைகள், இயற்கையான செல்வங்கள், இயற்கையான வளங்கள் அவர்களுக்கு அருமையாய்த் தோன்றும். கிறிஸ்துவில் உள்ள உன்னத நன்மைகளும், செல்வங்களும், வளங்களும் அவர்களுக்கு அருமையாய் தோன்றாது. அவைகளைக்கொண்டு வாழ முடியும் என்கின்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்காது. இரவும் பகலும் அவர்களுடைய மனமும், அவர்களுடைய உள்ளமும், அவர்களுடைய இருதயமும் எதைச் சுற்றித்தான் வரும்? அவர்களுடைய செய்திகளும் எதைச் சுற்றித்தான் வரும்? இயற்கையான நன்மைகள், இயற்கையான வளங்கள், இயற்கையான செல்வங்கள்.

“படிக்கக்கூடாது. வேலைக்குப்போகக்கூடாது,” என்று சொல்பவன் அல்ல நான். என்னைப் போல் படிப்பை வலியுறுத்துபவர்களை நீங்கள் எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. செய்தியையே நான் ஆவிக்குரிய கல்வியாய்க் கருதுபவன்.

ஆனால் 1 கொரிந்தியர் 2:2: இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். 1 கொரிந்தியர் 1:23: அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். Foolishness. ஏன்? அவர்கள் ஆவிக்குரியவர்களாய் கிறிஸ்துவில் உள்ள அந்தச் செல்வங்களை எல்லாம் பார்க்கமுடிவதில்லை. ஏன்? ஒரேவொரு காரணம்தான். எவர்கள் சிலுவையினால் கையாளப்படுகிறார்களோ, அவர்களுடைய ஆவிக்குரிய புலன் கூர்மையாக இருக்கும், துல்லியமாக இருக்கும், தெளிவாக இருக்கும். அவர்கள் ஆவிக்குரியவர்களாக இருப்பார்கள். எவர்கள் கிறிஸ்துவின் சிலுவையினால் கையாளப்படவில்லையோ அவர்கள் இயற்கையானவர்களாகத்தான் இருப்பார்கள்.

கிறிஸ்துவின் சிலுவை இயற்கையான மனிதனைக் கையாளும். நம்முடைய வாழ்க்கையிலே கிறிஸ்துவின் சிலுவையை யார் பிரயோகிப்பார், யார் பயன்படுத்துவார்? ஆவியானவர் பயன்படுத்துவார். ஆவியானவர் கிறிஸ்துவின் சிலுவையை நம்முடைய வாழ்க்கையிலே பிரயோகிப்பார், பயன்படுத்துவார், அமலாக்குவார். கிறிஸ்துவினுடைய சிலுவையை ஆவியானவர் பிரயோகிக்கும்போது, பயன்படுத்தும்போது, அமலாக்கும்போது நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? வானம் பன்னீரைத் தூவும். காலம் கார்காலம். வலி இருக்கும். வேதனை இருக்கும். நோவு இருக்கும். நொம்பலமும் இருக்கும். இதிலிருந்து எப்படி வெளிவருவோம் என்கின்ற கதறுதல் இருக்கும். கண்ணீர் இருக்கும். யாராவது ஒரு விடுதலையைத் தந்துவிட மாட்டார்களா என்கின்ற ஏக்கம் இருக்கும். எங்கேயாவது ஒரு விடுதலை கிடைத்தால் அவர்களுடன் போய் ஒட்டிக்கொள்வோம் நாம்.

பரிசுத்த ஆவியானவர் சிலுவையைப் பிரயோகிக்கும்போது நம்முடைய வாழ்க்கை துன்பங்களும், துயரங்களும், வேதனைகளும் நிறைந்ததாக இருக்கும். “பரிசுத்த ஆவியானவர் சிலுவையைப் பிரயோகிக்கவே மாட்டார். துன்பங்களும், துயரங்களும், வேதனைகளும், நோவுகளும் உங்கள் வாழ்க்கையிலே இருக்காது,” என்று சொல்கின்ற ஒரு நவீன இறையியல், நவீன சத்தியம் தேவனுடைய மக்கள் மத்தியிலே பரவலாக இருக்கிறது. பலவீனமான, துன்பமும் துயரமும் அனுபவிக்கிறவர்களிடம் ஒரு கிளி ஜோசியக்காரன் வந்து, “உன் வாழ்க்கையிலே நன்மை வரப்போகிறது,” என்று சொன்னால்கூட அவனுடைய மனம் எப்படி இருக்கும்? ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அந்தக் கிளிக்குப் பணம் கொடுப்பார்கள். துயரப்படுகிறவனுக்கு, மூழ்குகிறவனுக்கு ஒரு துரும்பு கையில் கொடுத்தால்கூட அவனுக்கு என்னவாய்த் தோன்றும்? இரும்புபோல் தோன்றும். “இதைப் பிடித்துக்கொண்டு எப்படியாவது கரை சேரமாட்டோமா!” என்று நினைப்பான்.

பரிசுத்த ஆவியானவர் இயற்கையான நம்மை ஆவிக்குரியவர்களாக, ஆவிக்குரிய புலன்களின்படி வாழ்கிறவர்களாக மாற்றுகிறார். யார் ஆவிக்குரிய புலன்களின்படி வாழ்கிறவர்கள்? எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம். ஆபிரகாமுக்கும், முற்பிதாக்களுக்கும் தாய்நாடு என்று ஒன்று இருந்தது. அந்தத் தாய்நாட்டை விட்டுத் தேவன் அவர்களை வெளியே அழைத்தார். ஆனால் தேவன் வாக்குறுதி செய்த நாட்டை அவர்கள் பெறவில்லை. இப்போது அவர்களுக்குமுன்பாக ஒரு choice இருக்கிறது. ஒன்று அவர்கள் தாங்கள் விட்டுவந்த தாய்நாட்டுக்கே திரும்பிப் போக வேண்டும். ஏனென்றால் தேவன் வாக்குறுதி அளித்ததை அவர்கள் முற்றிலும் பெறவில்லை.

ஆனால் அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பவில்லை. மாறாக என்ன சொன்னார்கள்? “எங்கள் தாய்நாடு இங்கேயே இல்லை. எங்கள் தாய்நாடும் எங்களுடைய நகரமும் பரத்திற்குரியது. நித்தியத்துக்குரியது, ஆவிக்குரியது. அது வந்துகொண்டிருக்கிறது.” அதை அவர்கள் தூரத்தில் கண்டார்கள். வரவேற்றார்கள். அவர்களுக்கு அந்த board தெரிந்தது. “உங்கள் தாயகம், உங்கள் தாய்நாடு, உங்கள் நகரம் உங்களை வரவேற்கிறது” என்கின்ற அறிவிப்புப் பலகையை அவர்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் தாய்நாட்டிற்குள்ளும், அந்த நகரத்திற்குள்ளும் நுழையவில்லை.

மோசே பிஸ்காவின் கொடுமுடியிலிருந்து தேவன் அவர்களுக்கு வாக்குறுதி அளித்த பாலும் தேனும் ஓடுகின்ற நல்ல தேசத்தைப் பார்த்தார்; ஆனால் அதற்குள் நுழையவில்லை. ஆனால் அந்த நல்ல தேசம் மெய்யானது. ஆமென்! அந்த உன்னத ஆசீர்வாதங்களும், நன்மைகளும், வளங்களும், செல்வங்களும் மெய்யானவைகள். ஆமென்! அவர்கள் “இப்படிப்பட்ட ஒரு தாய்நாடு எங்களுக்கு முன்பாக இருக்கையிலே எங்களுக்குப் பின்பாக நாங்கள் விட்டுவந்ததை எங்கள் தாய்நாடாகக் கருதவில்லை. எங்கள் ஊரையும், எங்களுடைய மாவட்டத்தையும், எங்களுடைய மொழியையும், எங்களுடைய சாதியையும், எங்களுடைய இனத்தையும், எங்களுடைய மக்களையும் எங்கள் தாய்நாடாக நாங்கள் கருதவில்லை. எங்கள் தாய்நாடு எங்களுக்குமுன்பாக இருக்கின்றது. என்ன? நாங்கள் காண்கின்றோம். அதை வாழ்த்தி நாங்கள் வரவேற்கிறோம். இன்னும் அதற்குள் நாங்கள் நுழையவில்லை.”

அந்தப் பகுதியை நீங்கள் வாசிக்க வேண்டும். அவர்களுடைய உணர்ச்சிகள் எப்படி இருந்திருக்கும்? “ஒருபக்கம் தாய்நாடு எங்கள் கண்களில் தெரிகிறது. ஆனால் எங்கள் தாய்நாட்டிற்குள் நாங்கள் நுழையவில்லை.” இவர்கள்தான் ஆவிக்குரியவர்கள். இப்படிப்பட்ட மனிதர்களைப் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் சிலுவையைக்கொண்டு உருவாக்குகின்றார். அவர்களுடைய கண்களுக்கு அந்தத் தாய்நாடு ஒரு கற்பனை அல்ல. அந்தத் தாய்நாடு ஒரு மெய். கிறிஸ்துவின் சிலுவையை அவர் கையாளும்போது அது வேதனையைத் தரும். வலியைத் தரும், நோவைத் தரும். நம்முடைய இயற்கையான மனிதனை ஆவிக்குரிய மனிதனாக மாற்றுவதற்கு அதைத் தவிர வேறு வழி இல்லை.

தேவன் சிலுவையைக் கொண்டுதான் தம் மக்களை அவர்களுடைய சுயத்திலிருந்து விடுவிக்கிறார் (கலாத்தியர் 2:20). சிலுவையைக் கொண்டுதான் அவர்களுடைய ஊனிலிருந்து அவர்களை விடுவிக்கிறார் (கலாத்தியர் 5:24). சிலுவையைக் கொண்டுதான் உலகத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார் (கலாத்தியர் 6:14). சிலுவையைக் கொண்டுதான் பழைய மனிதனிலிருந்து அவர்களை விடுவிக்கிறார் (ரோமர் 6:6).

ரோமர் எட்டாம் அதிகாரம் 13 ஆம் வசனம் கூறுகிறது. ரோமர் 8:13 அதை மட்டும் வாசிப்போம்: மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். உடனே அதை “சரீரத்தின் செயல்களையெல்லாம் அழிக்க வேண்டும்” என்று literalலாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பரிசுத்த ஆவியானவர் கர்த்தராகிய இயேசுவின் சிலுவையை நம்முடைய வாழ்க்கையிலே அமைப்பார். ஏன்? இந்தக் குறிப்புக்கு பதில் ஆவியானவர் நிர்வகிக்கும் சிலுவையின் நெறிப்பாடு, நெறிப்பாடு என்றால் discipline.

ஆவியானவர் எதேச்சையாக நம்முடைய வாழ்க்கையிலே, நம்முடைய குடும்பத்திலே, நாம் வேலை பார்க்கும் இடத்திலே, நம்முடைய நாட்டிலே சூழல்களை ஏற்படுத்திவிடுவது இல்லை. நிர்வகிப்பதற்கும் எதேச்சையாக வருவதற்கும் வேறுபாடு இருக்கிறதா இல்லையா? நீங்கள் வேலை பார்க்கும் இடங்களிலே உங்களுடைய மேலாளர்கள் உங்கள் கம்பெனியை நிர்வகிக்கிறார்களா அல்லது எதேச்சையாக நடத்துகிறார்களா? நிர்வகிக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையை நிர்வகிக்கிறார். நீங்கள் travel பண்ணுவதை நிர்வகிக்கிறார். உங்களுடைய கல்லூரியை நடத்துபவர் நிர்வகிக்கிறார். He administers. அவைகளையெல்லாம் பயன்படுத்தி நம்மை இயற்கையான மனிதர்களாகவே வாழ்ந்துவிடாமல் ஆவிக்குரியவர்களாக அவர் மாற்றுகின்றார்.

எபிரேயர் 12:3: ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் அப்படிப்பட்ட நெறிப்பாட்டை உங்கள் வாழ்க்கையிலே ஏற்படுத்தும்போது, அதற்குக் காரணம் நீங்கள் கிறிஸ்துவில் உள்ள ஆராய்ந்தறியமுடியாத அந்த செல்வங்களையும், வளங்களையும் மெய்ப்படுத்த வேண்டும், உங்கள் வாழ்க்கையிலே மெய்யாக வேண்டும் என்பதற்காகப் பரிசுத்த ஆவியானவர் அப்படிப்பட்ட நெறிப்பாட்டை வைக்கின்றார்.

முடிவு: மண்பாண்டங்களில் பொக்கிஷம்

இறுதியாக, கடைசிப் பகுதியை வாசிப்போம். 2 கொரிந்தியர் 4:7, 8, 9: இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.

பொக்கிஷம் என்றால் கிறிஸ்துவாகிய பொக்கிஷத்தை, கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஜீவனாகிய பொக்கிஷத்தை, கிறிஸ்துவில் உள்ள எல்லா நன்மைகளையும், வளங்களையும், செல்வங்களையும் இந்த மண்பாண்டங்களிலே நாம் பெற்று இன்று அதன் முன்சுவையை நாம் அனுபவிக்க முடியும். யாரால்? யார் ஆவிக்குரியவர்களாக மாறுகின்றார்களோ, வருகின்றார்களோ அவர்கள். இயற்கையானவர்களாகவே வாழ்வதை நாம் பிடிவாதமாய்ப் பிடித்துக்கொண்டிருக்கக்கூடாது. துன்பங்கள், துயரங்கள்மூலமாய் தேவன் நம்மை உடைக்கும்போது, மாற்றும்போது நாம் விட்டுக்கொடுக்க வேண்டும்.

அது எப்படிச் செயல்படும் என்பதை நான் சொல்லிவிடுகிறேன். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் சிலுவையை நம்முடைய வாழ்க்கையிலே பிரயோகிக்கும்போது, “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை.” அப்படி என்றால் சிலுவை நம்மை என்ன செய்யும்? நெருக்கும். நெருக்கும்போது எத்தனை பேர் அல்லேலூயா சொல்வோம்? “ஆஹா! எவ்வளவு நன்றாக இருக்கிறது!” என்று சொல்வோமா? நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; சிலுவை நெருக்கும். கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; சிலுவை என்ன செய்யும்? கலக்கமடைய செய்யும். துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. சிலுவை என்ன செய்யும்? சிலுவை துன்பப்படுத்தும். கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. சிலுவை என்ன செய்யும்? சிலுவை கீழே தள்ளும்.

என்னுடைய மொழிபெயர்ப்பை நான் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன். மீண்டும் ஒருமுறை என்னுடைய மொழிபெயர்ப்பைச் சொல்கின்றேன். எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் நொறுக்கப்படுவதில்லை. வழியின்றி அடைக்கப்பட்டும் வழியே இன்றி ஒடுக்கப்படுவதில்லை. துரத்தப்பட்டும் இரையாக்கப்படுவதில்லை. தள்ளப்பட்டும் கொல்லப்படுவதில்லை.

“இப்படி எங்களுடைய புறம்பான மனிதன் அதாவது இயற்கையான மனிதன் நாளுக்கு நாள் அழிந்தும், எங்கள் உள்ளான மனிதன் அதாவது ஆவிக்குரிய மனிதன் ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகின்றான். அப்படிப் புதிதாக்கப்படுவதால் இந்தத் துன்பங்கள் எல்லாம் எங்களுக்கு இலேசாகவும் வரவிருக்கின்ற மகிமை எங்களுக்கு கனமானதாகவும் தோன்றுகிறது,” என்று அந்த அதிகாரம் முடிவடைகிறது.

தேவன் தாமே அப்படிப்பட்ட ஆவிக்குரிய மனிதர்களாய் தம்முடைய பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு நம்மை ஒவ்வொரு நாளும் உருவாக்குவாராக. தேவன் நம்மை ஆவிக்குரியவர்களாய் மாற்றுவார். ஆவிக்குரியவர்கள் விசுவாசத்தினால் கிறிஸ்துவில் உள்ள அந்த உன்னத வளங்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். நாம் மட்டுமல்ல நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்போம். ஆமென்.