Preloader
சாட்சியின் கூடாரம்
15 Oct 2026 : என் உறவுகள் மேலும் வாசிக்க
3 Oct 2026 : ஆரம்பமும், முடிவும் மேலும் வாசிக்க
21 Sep 2026 : வனாந்தர வளங்கள் மேலும் வாசிக்க

காணொளி

நில உடைமையிலிருந்து நிலம் இன்மையின் வழியாக நிலக் கொடைக்கு ஆபிரகாம் தன் சொந்த நிலத்தை விட்டுப் புறப்பட்டான். 

தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்பி நிலமற்றவனாக வாழ்ந்தான். அவன் பரம தேசத்தை எதிர்நோக்கியிருந்தான். 

இஸ்ரவேலர் அடிமை நிலமாகிய எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். நல்ல நிலத்தை நோக்கி வனாந்தரத்தின் வழியாக நடத்தப்பட்டார்கள். வனாந்தரத்தில் தேவன் அவர்களுக்கு மன்னாவையும் தண்ணீரையும் கொடுத்தார். கிறிஸ்துவே நம்முடைய மெய்யான உணவும் ஆதாரமும் ஆவார்.  

அவருடைய சிலுவை மரணமும் உயிர்த்தெழுதலும் நம்மைப் புதிய படைப்பிற்குள் கொண்டுவந்துள்ளன. சிலுவையின் பாதையில் இழப்புகளும் நெருக்கங்களும் உண்டு. ஆனாலும் கிறிஸ்துவே நமக்குப் போதுமானவராக இருந்து, நம்மைப் பிறருக்கு ஆசீர்வாதமாக மாற்றுகின்றார்.

உரை

Unedited transcript of a message spoken on October 4th 2026 online

By Milton Rajendram

வேத வாசிப்பு

கிறிஸ்துவில் அன்புக்குரிய பரிசுத்தவான்களுக்கு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையிலே தேவனுடைய வார்த்தையை உங்களோடு பகிர்ந்துகொள்கின்ற இந்த வாய்ப்புக்காய் கர்த்தருக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

இந்த நாளின் தியானத்திற்கு ஆதாரமாக எபிரெயர் 11:8–16 முடிய உள்ள வசனங்களை நாம் வாசிப்போம்.

“விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.

விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.

இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால், தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.”

ஆரம்ப ஜெபம்

நாம் ஜெபிப்போம். எங்கள் ஆண்டவராகிய இயேசுவே, நீர் எங்களுக்காக, தேவ மக்களுக்காக, ஆயத்தம்பண்ணி வைத்திருக்கின்ற பரம நகரத்திற்காய் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். நாங்கள் விட்டுவந்த எங்கள் தேசத்தைவிட, ஆண்டவரே, நாங்கள் தேடி நடக்கின்ற உம்முடைய பரம தேசம் உமக்கும், தேவ மக்களுக்கும் அருமையானது. உம்முடைய வார்த்தையை இந்தக் காலை வேளையிலே நாங்கள் தியானிக்கும்போது, உம்முடைய பரிசுத்த ஆவியினாலே எங்கள் உள்ளங்களை ஒளிரச்செய்வீராக. கர்த்தராகிய இயேசு நாமத்தில் கேட்கிறோம், பிதாவே, ஆமென்.

நில உடைமை, நிலம் இன்மை, நிலக் கொடை

ஆபிரகாம் தன்னுடைய சொந்தத் தேசத்தை விட்டுப் புறப்பட்டான் என்று எபிரெயர் 11ஆம் அதிகாரம் எட்டாம் வசனத்திலே வாசிக்கிறோம். கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப் போனான். ஆபிரகாம் தன் சொந்தத் தேசத்தை, சொந்த நிலத்தை, விட்டுப் புறப்பட்டுப் போனான். பிறகு, தேவன் வாக்குறுதிசெய்த, தேவன் வாக்களித்த, அந்தத் தேசத்தை அவன் பெறவில்லை, அவன் அடையவில்லை என்று வாசிக்கின்றோம்.

முடிவாகத் தேவன் அவர்களுக்காக ஒரு பரம தேசத்தை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார் என்றும் நாம் இந்தப் பகுதியிலே வாசிக்கிறோம்.

மூன்று தேசங்களை அல்லது இடங்களை அல்லது நிலங்களை நாம் இந்த எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் வாசித்த வேத பாகத்திலே பார்க்கின்றோம். முதலாவது, ஆபிரகாமுடைய சொந்த நிலம். இரண்டாவது, எந்த நிலமுமே இல்லாமல் ஆபிரகாம் திரிந்தது அல்லது அலைந்தது. மூன்றாவது, தேவன் அவர்களுக்காக, ஆபிரகாமுக்காகவும் ஆபிரகாமின் அடியொற்றி நடக்கின்ற மற்ற தேவ மக்களுக்காகவும், ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிற பரம நிலம்.

நாம் ஒருவேளை இப்படிக் கேள்வி கேட்கலாம்: புதிய ஏற்பாட்டிலே தேசத்தைப்பற்றியோ, இடத்தைப்பற்றியோ, நிலத்தைப்பற்றியோ பெரிய அக்கறை ஒன்றும் காட்டப்படவில்லை, நாம் அதைப் பார்க்கவில்லை. புதிய ஏற்பாட்டிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின்மூலமாய்க் கிடைக்கின்ற பாவ மன்னிப்பு, இரட்சிப்பு இவைகளைப்பற்றித்தான் எழுதியிருக்கிறது. நிலம், தேசம் இவைகளெல்லாம் புதிய ஏற்பாட்டிற்கு அந்நியமானவை என்று ஒருவேளை நாம் நினைக்கலாம். அது என்னவென்று நாம் பார்ப்போம்.

ஆகவே, இந்தச் செய்திக்குத் தலைப்பு: நில உடைமையிலிருந்து நிலம் இன்மைவழியாக நிலக் கொடைக்கு. அதை ஆபிரகாமை எடுத்துக்காட்டாக வைத்து நான் சொன்னேன். ஆபிரகாம் புறப்பட்ட இடம், நிலத்தை அவன் உடைமையாகக் கொண்டிருந்தான். நிலத்தைச் சொந்தமாகக் கொண்டிருந்தான். அவன் போய்ச் சேரும் இறுதி இடம் தேவன் வாக்குறுதி அளித்த கொடையாகிய நிலம். ஆகவே, நில உடைமையிலிருந்து நிலக் கொடைக்கு ஆபிரகாமின் வாழ்க்கை இருந்தது. புறப்பட்டு, இறுதி இடம், போய்ச் சேரும் இடத்திற்கு இடையிலே அவன் நிலம் இல்லாதவனாக வாழ்ந்தான். இந்த மூன்று வார்த்தைகளையும் நீங்கள் நன்றாய் மனதிலே எழுதிக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

முதலாவது, நில உடைமை. நிலத்தை உடையவனாய் இருப்பது. இரண்டாவது, நிலம் இன்மை. மூன்றாவது, நிலக் கொடை. ஆங்கிலத்திலே முதலாவது, landedness, இரண்டாவது, exiled from the land, மூன்றாவது, land gifted. இரண்டாவது வார்த்தையை நிலம் இன்மை என்று நான் சொல்வேன். நிலத்தை இழப்பது என்றும் சொல்லலாம்.

நிலம் உடையவனாய் இருப்பது. நிலம் இல்லாதவனாய் அல்லது இழந்தவனாய் இருப்பது. நிலத்தைக் கொடையாய் பெற்றவனாய் இருப்பது. இந்தச் செய்தியை மிக விவரமாய் நாம் பேச முடியும். ஆனால், காலம் கருதி மூன்று குறிப்புகளாக நான் பிரித்துக்கொள்கிறேன்.

முதலாவது, ஆபிரகாமின் வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வைத்து, இரண்டாவது, இஸ்ரவேல் மக்களின் வரலாற்றை எடுத்துக்காட்டாக வைத்து, மூன்றாவது, புதிய ஏற்பாட்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நபரையும் அவர் செய்து முடித்த பணியையும் நாம் பார்க்கப் போகிறோம். ஆனால், நான் குறிப்பிட்ட இந்த மூன்று சொற்களைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதற்காக அந்த மூன்று குறிப்புகளுக்குமே அப்படியே நான் பெயர் கொடுக்கின்றேன். தலைப்பு கொடுக்கின்றேன்.

முதலாவது குறிப்பு: கல்தேயர் நிலத்திலிருந்து நிலம் இல்லாதவனாகப் பரம நிலத்திற்கு. இந்த மூன்று சொற்களையும் நான் திரும்பச் சொல்கிறேன். முதலாவது, கல்தேயர் நிலம், இரண்டாவது, நிலம் இல்லாதவன், மூன்றாவது, பரம நிலம். இது முதல் குறிப்பு. கல்தேயர் நிலத்திலிருந்து நிலம் இல்லாதவனாக அல்லது நிலம் இழந்தவனாகப் பரம நிலத்திற்கு. இது ஆபிரகாமின் வாழ்க்கை.

இரண்டாவது குறிப்பு: அடிமை நிலத்திலிருந்து வனாந்தர வழியாக நல்ல நிலத்திற்கு. இது இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை. அடிமை நிலமாகிய எகிப்திலிருந்து நிலம் இல்லாத, நிலம் இழந்த வனாந்தரப் பாதைவழியாக அவர்கள் நல்ல நிலத்திற்குத் தேவனால் கொண்டு வரப்பட்டார்கள்.

மூன்றாவது குறிப்பு: பழைய நிலத்திலிருந்து சிலுவையின் வழியாகப் புதிய நிலத்திற்கு. ஒருவேளை இந்தச் சொற்கள் உடனடியாக உங்களுக்கு வேறு இரண்டு சொற்களை நினைப்பூட்டும். பொதுவாக நாம் பழைய நிலம், புதிய நிலம் என்கின்ற வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டோம். பழைய படைப்பிலிருந்து சிலுவையின்வழியாகப் புதிய படைப்பிற்கு என்று நாம் சொல்வோம்.

அதேபோல, இரண்டாவது குறிப்பாகிய அடிமை நிலமாகிய எகிப்திலிருந்து வனாந்தர வழியாக நல்ல நிலத்திற்கு என்று நாம் சொல்வதில்லை. அடிமை தேசமாகிய எகிப்திலிருந்து வனாந்தர வழியாக கானான் தேசத்திற்கு. அதுவும் சரிதான். அதேபோல, முதல் குறிப்பைக் கல்தேயர் நிலத்திலிருந்து நிலம் இல்லாத வழியாய்ப் பரம நிலத்திற்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

நிலம் என்கின்ற வார்த்தைக்குப் பதிலாகத் தேசம் என்றும் பயன்படுத்தலாம். வேதத்திலே நிலம் என்று பயன்படுத்துகிற வார்த்தைக்கு இடம், தேசம், நகரம், ஆலயம் போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்த முடியும் என்று நாம் பார்ப்போம். சுருக்கமாக ஒரு 10, 10, 10 நிமிடங்கள் போல இந்த மூன்று குறிப்பையும் பார்ப்போம்.

கல்தேயர் நிலத்திலிருந்து நிலம் இல்லாத வழியாகப் பரம நிலத்திற்கு

முதலாவது குறிப்பு என்ன? கல்தேயர் நிலத்திலிருந்து நிலம் இல்லாத வழியாகப் பரம நிலத்திற்கு.

கடந்த காலத்திலே ஆபிரகாம் கல்தேயருடைய நிலத்திலே, தேசத்திலே வாழ்ந்தான். நிகழ்காலத்திலே அவன் நிலம் இல்லாதவனாக அலைந்து திரிகிறான் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். அவன் நடக்கிறான் அல்லது வாழ்கிறான் என்றுகூடச் சொல்ல முடியாது. கூடாரத்தில் வாழ்கின்ற வாழ்க்கை என்பது திரிகின்ற வாழ்க்கை. ஒரு நாடோடியினுடைய வாழ்க்கை. நிலையில்லாத வாழ்க்கை. பாதுகாப்பு இல்லாத வாழ்க்கை. வீட்டிலே வாழ்வது பாதுகாப்பான வாழ்க்கை. கூடாரத்தில் வாழ்வது என்பது பாதுகாப்பு இல்லாத, நிலையில்லாத வாழ்க்கை.

எதிர்காலத்திலே அவன் ஒரு பரம நிலத்தை எதிர்நோக்கி நடந்துகொண்டிருந்தான்.

கடந்த காலத்திலே அவன் நிலம் உடையவனாகக் கல்தேயர் நிலத்தில் வாழ்ந்தான். தேவனுடைய வாக்குறுதியை நம்பி, “நான் உனக்கு ஒரு பரம நிலத்தை, பரந்து விரிந்த நிலத்தைத் தருவேன்,” என்ற தேவனுடைய வாக்குறுதியை விசுவாசித்துப் புறப்பட்டான்.

ஆனால், அவனுடைய வாழ்க்கை நிலம் இல்லாதவனுடைய ஒரு தேசாந்திரியினுடைய, நாடோடியினுடைய, கூடாரவாசியினுடைய வாழ்க்கையாக இருந்தது. அலைந்து திரிந்தார், நிகழ்காலத்திலே. எதிர்காலத்திலே தேவன் அவனுக்காக ஒரு பரம நிலத்தை, பரம நகரத்தை ஆயத்தம்பண்ணி வைத்திருந்தார்.

இந்த pattern ஆபிரகாமிற்கு நிகழ்ந்ததில் மட்டுமல்ல, தேவ மக்களுக்காகத் தேவனுடைய pattern. ஏதேனில் தேவன் முதல் மனிதர்களுக்கு ஒரு நிலத்தை, வளமான, செல்வமான, செழிப்புள்ள ஒரு நிலத்தை ஆயத்தம்பண்ணி வைத்திருந்தார். இந்த யுகம் முடிவடையும்போது புதிய எருசலேம் என்கிற வளமும், செல்வமும், செழிப்பும் உள்ள ஒரு நிலத்தைத் தேவன் தம்முடைய மக்களுக்கு ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். ஆகையால், நிலம் என்பது தேவனுடைய வார்த்தையில், ஆதியாகமம் 1, 2, 3 தொடங்கி, வெளிப்படுத்தல் 21, 22 வரை ஓடுகின்றது.

நிலத்தைத் தந்த தேவன்

ஏன் நிலத்தில் தேவனுக்கு இந்த ஈடுபாடு? தேவன் தம்முடைய மக்கள் இன்புறுவதற்காக, அனுபவிப்பதற்காக, துய்ப்பதற்காக ஒரு நிலத்தை உண்டாக்குகிறார். நிலத்திலிருந்து மனிதர்கள் அனுபவிப்பதற்காக வளங்களும், செல்வங்களும், கனிகளும் விளைகின்றன. நிலம்தான் ஆதாரம். நிலம் என்கிற ஆதாரம் இல்லை என்றால், காற்று இல்லை, தண்ணீர் இல்லை, உணவு இல்லை, மனித வாழ்க்கை இல்லை. ஆகையால், தாம் உண்டாக்கின மனிதர்கள் இன்புற வேண்டும், அனுபவிக்க வேண்டும், துய்க்க வேண்டும், விளைவிக்க வேண்டும், பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தேவன் நிலத்தை உண்டாக்கினார்.

ஆனால், முதல் மனிதன் தொடங்கி, தலைமுறைகள் தோறும் நிலத்தைத் தந்த தேவனைக் காட்டிலும், நிலத்தை அவர்கள் அருமையாகக் கருதினார்கள். நாம் அடிக்கடிச் சொல்வதுபோல, கொடுத்தவரைவிட, கொடையை அவர்கள் அருமையாகக் கருதினார்கள். ஆதாமும் ஏவாளும் அப்படிக் கருதினார்கள். தொடர்ந்து மனிதர்கள் அப்படியே கருதினார்கள். இன்றும் மனிதர்கள், நாம் அனுபவிக்கிற நிலமும், நிலத்தில் மனித வாழ்க்கையும், தேவனுடைய கொடை என்று கருதுவதில்லை. அது இயற்கையாக வந்தது என்றுதான் அவர்கள் கருதுவார்கள்.

ஆகவே, இயற்கையான நிலத்திலே தேவனுடைய எண்ணம் என்னவென்றால், அது தேவனற்ற, தேவன் இல்லாத நிலமாக இருக்கின்றது. அப்போஸ்தலர் ஏழாம் அதிகாரம் நான்காம் வசனத்தில் நாம் வாசிக்கும்போது, ஆபிரகாம் மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்தான். கல்தேயருடைய தேசத்தில் வாழ்ந்தான் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி தேவனுக்கு என்ன கவலை? அது அவனுடைய தாய் நாடாக இருக்கிறது. கல்தேயருடைய நாடு, மெசொப்பொத்தேமியா. அந்த நிலத்திலிருந்து, அவனுக்கு உடைமையான நிலத்திலிருந்து, அவனை நிலத்தை இழக்கச் செய்வதற்கு, நிலம் இல்லாதவனாக ஆக்குவதற்குத் தேவனுக்கு என்ன ஈடுபாடு?

அந்நிய தேவர்களும் ஆபிரகாமின் அழைப்பும்

அதற்குக் காரணத்தை யோசுவா 24 ஆம் அதிகாரம், 2, 3 ஆம் வசனங்களில் நாம் வாசிக்கின்றோம். வாசிக்கலாம்.

“அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள். நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.”

ஆபிரகாமையும், அவனுடைய தகப்பன் தேராகையும்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் நதிக்கு அப்புறத்தில், அதாவது ஐபிராத் நதி அல்லது யூப்பரேட்டஸ் நதிக்கு அப்புறத்தில் மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்தபோது, அவர்கள் அந்நிய தேவர்களைச் சேவித்தார்கள். அந்நிய தேவனுடைய உருவமும், வடிவமும் மாறியிருக்கலாம். ஆனால், தொன்றுதொட்டு இன்றுவரை மனிதர்கள் தங்களையும், இந்த அண்ட சராசரங்களையும் படைத்த, உண்டாக்கின தேவனை ஆராதிப்பதை, தொழுவதைவிட, தங்கள் மனதிற்கு ஏற்ற ஒரு தேவனை, அவர்கள் உண்டாக்கிக்கொள்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் மனதிற்கு ஏற்ப உண்டாக்கிக் கொள்கின்ற தேவன், அவர்கள் விருப்பப்படி செய்வார்.

ஆகவே, கல்தேயர் தேசத்தை, ஆபிரகாமினுடைய சொந்த நிலமாகிய கல்தேயர் நிலத்தைப்பற்றி தேவனுடைய வருத்தம் என்னவென்றால், அது அந்நிய தேவர்களை ஆராதிக்கின்ற இடம். அது பாவத்தின்கீழும், மரணத்தின்கீழும் ஆளுகை செய்யப்படுகின்ற இடம். ஆகவே, அந்த நிலத்திலிருந்து அவன் வெளியேற வேண்டும்.

முக்கியத்துவம் கருதி, ஆதியாகமம் 12 ஆம் அதிகாரம் 1 முதல் 4 ஆம் வசனங்களை நாம் வாசிக்கலாம். இந்த வசனம் நமக்குப் பரிச்சயமானதுதான். ஆனால், மீண்டும் முக்கியத்துவம் கருதி. இது ஆபிரகாமின் அழைப்பு.

“கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.”

இதை unpack பண்ண நமக்குக் காலம் போதாது.

“நீ கல்தேயர் நிலத்தில், கல்தேயர் தேசத்தில் வாழ வேண்டாம். இந்தக் கல்தேயர் நிலத்தை விட்டு நீ வெளியே வா,” என்று தேவன் ஆபிரகாமை அழைக்கிறார். அது ஒன்றும் எளிமையானது அல்ல. அது உன் தாய் நாடு. உன் சொந்த நாடு. உன் தகப்பனுடைய நாடு. உன் மக்களுடைய நாடு. உன் இனத்தினுடைய நாடு. ஏறக்குறைய வேரோடு நீ உன்னைப் பிடுங்கிக்கொண்டு, இந்த நிலத்தை நீ காலி செய்து, எங்கு போக வேண்டும்?

எபிரெயரில் வாசிக்கின்றோம்: “புறப்பட்டுப் போகின்ற இடம் இன்னதென்று தெரியாமல் அவன் தேவனுடைய வாக்குறுதியை நம்பிப் புறப்பட்டுப் போனான்.” “நான் உனக்கு ஒரு நாட்டைத் தருவேன்” என்று சொன்னார். நாம் எபிரெயரில் வாசிக்கிறோம். அந்த நாடு அவனுடைய நாட்களில் கிடைக்கவில்லை. அது பரம நாடு, பரம நிலம் என்பது இன்று நமக்குத் தெரியும். ஆபிரகாம் தன்னுடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திற்கு வரும்போது ஒருவேளை தெரியுமேதவிர, அதற்குமுன் தெரிந்திருக்காது.

தேவன் ஆபிரகாமை அழைத்தபோது, “ஓ! இன்றைக்கு நான் கல்தேயருடைய நிலத்தைக் காலி செய்து விட்டால், நாளைக்குத் தேவன் எனக்கு அப்படிப்பட்ட செல்வமும், செழிப்புள்ள பாலும், தேனும் ஓடுகிற நல்ல நிலத்தைத் தந்து விடுவார்” என்பதுதான் ஆபிரகாமின் எண்ணமாக இருந்திருக்கும்.

“நான் உன்னை ஒரு பெரிய மக்கள் கூட்டமாக, இனக் கூட்டமாக மாற்றுவேன். உனக்கு நலமும், விசாலமுமான ஒரு நிலத்தை, நாட்டைத் தருவேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். நீ ஆசீர்வாதமானாய் இருப்பாய். அது மட்டுமல்ல, பூமியில் உள்ள மக்கள் குழுக்கள் எல்லாம் உன்னால் ஆசீர்வதிக்கப்படும். நீ மட்டும் அல்ல, உன்னை முன்னிட்டு, உன் நிமித்தமாக, உன் காரணமாய் இந்தப் பூமியில் உள்ள மக்களெல்லாம் ஆசீர்வதிப்பார்கள். நீ இன்றைக்கு ஒரு கல்தேயர் நிலத்தில் இருக்கின்றாய். அங்கே செல்வம் உண்டு. செழிப்பு உண்டு. வளங்கள் உண்டு. மிக முக்கியமாகப் பாதுகாப்பு உண்டு. நீ அதை ஆசீர்வாதம் என்று நினைக்கின்றாய்.”

தேவன் ஒரு மனிதனை அழைக்கும்போது, இந்தப் பாதுகாப்பும், செல்வமும், வளங்களும் நிறைந்த எல்லா ஆசீர்வாதங்களையும் இழந்துதான் தேவனுடைய ஆசீர்வாதத்தைத் தேட வேண்டியுள்ளது.

ஆனால், தேவனுடைய ஆசீர்வாதம், அது ஒரு தனி மனிதனை ஆசீர்வதிப்பது மட்டுமல்ல. அவனே மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானாக மாறுவது. ஆபிரகாமைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு மட்டுமல்ல. பூமியில் உள்ள எல்லா மனிதக் கூட்டங்களும், மனிதக் குழுக்களும் உன்னால் ஆசீர்வதிக்கப்படும் என்பது தேவனுடைய அழைப்பு.

ஆபிரகாம் தேவனுடைய வாக்குறுதியை நம்பி, விசுவாசித்து, தன்னுடைய சொந்த நிலமாகிய கல்தேயர் நிலத்தை விட்டு அவன் புறப்பட்டுப் போனான். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அவன் திரிந்தான். கூடார வாழ்க்கை வாழ்ந்தான் என்பதுதான் வேதம் ஆபிரகாமைப்பற்றி நமக்குச் சித்தரிக்கின்ற சித்திரம்.

வாக்குறுதியும் காத்திருப்பும்

75 வயதில் அவன் ஆரானைவிட்டுப் புறப்பட்டான் என்று எழுதப்பட்டிருக்கிறது. 100 வயதில்தான் அவன் தேவன் வாக்குறுதிசெய்த தன்னுடைய மகனைப் பெற்றெடுக்கிறான். அவன் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது 75. ஆகக் கல்தேயரைவிட்டுப் புறப்பட்டபோது ஏறக்குறைய 72 வயது இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

“உன்னைத் திரளான கூட்டமாக மாற்றுவேன்” என்று தேவன் தாம் செய்த வாக்குறுதியில் ஒரேவொரு மகனைப் பெற்றெடுப்பதற்கு 28 வருடங்கள் சோதனை, பரீட்சை; நெருக்கமும், வருத்தமும் நிறைந்த 28 வருடங்கள் அவன் காத்திருந்தான்.

இதுதான் “நான் உனக்கு ஒரு நலமான நிலத்தைத் தரப் போகின்றேன்” என்று தேவன் தாம் செய்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற விதம். அவன் கல்தேயர் நிலத்திலிருந்து வெளியேறி 28 வருடங்கள் நிலம் இல்லாதவனாக, அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால், நிலம் இழந்தவனாக நடந்தான்.

அது தேவனுடைய பாதை. கல்தேயர் நிலத்திலிருந்து பரம நிலத்திற்குத் திடுதிடுப்பென்று, பொத்தென்று தேவன் ஆபிரகாமை இடமாற்றம் செய்துவிடவில்லை. அது ஒரு நீண்ட நெடிய பாதை வழியாகத்தான் நடைபெறுகிறது.

அது ஒரு crisis என்றுகூடச் சொல்ல முடியாது. அது ஒரு process. அது ஒரு தொடர்நிகழ்வு. அது ஒரு கண நிகழ்வு அல்ல. ஒரு கணத்தில் தேவன் ஆபிரகாமைக் கல்தேயர் நிலத்திலிருந்தே பரம நிலத்திற்கு இடமாற்றம் செய்து விடவில்லை.

அல்லேலூயா! ஆபிரகாம் ஆசீர்வதிக்கப்பட்டான். ஆபிரகாம் பொன்னும், வெள்ளியும் உடைய சீமானாய் மாறிவிட்டான். அது அல்ல. அதை ஆபிரகாம் ஒரு பெரிய ஆசீர்வாதமாகக் கருதியதுபோலத் தெரியவில்லை. ஆனால், இன்றைக்குத் தேவனுடைய மக்கள் பலர் ஆபிரகாம் பெரிய ஆசீர்வாதமாகக் கருதாததை அப்படிக் கருதுகிறார்கள்.

இந்த இரண்டுக்கும் நடுவிலே ஒரு இடைவெளி உண்டு. அனுபவத்தில் அது நீண்ட நெடிய இடைவெளி. அந்த நீண்ட நெடிய இடைவெளியைத் தேவனுடைய மக்கள் வருத்தத்தில்தான் கடந்துசெல்கிறார்கள். நம்முடைய விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாம் தொடங்கி இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற தேவனுடைய மக்கள் எல்லாரும் அந்த இடைப்பட்ட காலத்தை, நிலமற்ற காலத்தை வருத்தத்தோடுதான் கடந்துசெல்கிறார்கள்.

“நான் ஒரு பழைய சொந்த நிலம், சொந்த நாடு, உடையவனாய் இருந்தேன். இப்போது அதுவும் எனக்கு இல்லை. தேவன் வாக்குறுதிசெய்த நிலம், நாம் இன்றைக்கு அதைப் பரம நிலம் என்று சொல்கிறோம். அது என்று கிடைக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை,” என்று அந்த இடைப்பட்ட காலத்தைத் தேவனுடைய மக்கள் வருத்தத்தோடுதான் கடந்துசெல்கிறார்கள்.

ஆனால், மூன்றாம் குறிப்பில் பார்ப்போம். அது சிலுவையின் வழி. ஒரு மகனைக் கொடுத்தபிறகும்கூட, ஆதியாகமம் 22ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம்: “அந்த மகனையும் நீ பலியிடு” என்று சொல்லி மோரியாவுக்குத் தேவன் ஆபிரகாமை அழைக்கிறார்.

பரம நிலத்தின் நம்பிக்கையும் முன்சுவையும்

அவனுக்கு இப்போது நிலம் என்று ஒன்று இல்லை. அவனுக்குச் செல்வங்கள் இல்லை. வளங்கள் இல்லை. பாதுகாப்பு இல்லை. இப்படிப்பட்ட பாதை சிலுவையின் பாதை. ஆனால், எதிர்காலத்தில் தேவன் தங்களுக்காக ஒரு பரம நிலத்தை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார் என்ற வெளிச்சம், என்ற வெளிப்பாடு, என்ற நம்பிக்கை, என்ற விசுவாசம் ஆபிரகாமுக்குப் போகப்போக உறுதிப்பாடு அடைகின்றது.

பயணத்தைத் தொடங்கும்போது, விசுவாசப் பயணத்தைத் தொடங்கும்போது, அந்தத் தெளிவும் உறுதிப்பாடும் நாம் அடைகிறோமோ இல்லையோ, நம்முடைய விசுவாசப் பயணத்தை நாம் தொடர்ந்து நடக்கும்போது, “ஆ! தேவன் எதை நோக்கி நம்மை நடத்திச் செல்கின்றார்!” என்ற வெளிப்பாடு நமக்குத் தெளிவாகின்றது. தேவன் ஒரு பரம நிலத்தை, பரம தேசத்தை, நமக்கு ஆயத்தம்பண்ணி வைத்திருக்கின்றார்.

ஆகவே, தான் விட்டுவந்த தன்னுடைய கல்தேய நிலத்தை ஆபிரகாம் ஒரு நாளும் தன்னுடைய தாயகமாகக் கருதவில்லை. தேவன் எந்தப் பரம நிலத்தை, பரம தேசத்தை, பரம நகரத்தை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறாரோ, அதைத்தான் ஆபிரகாம் தன்னுடைய தாயகமாக, homeland ஆகக் கருதினான் என்று எபிரெயரில் நாம் வாசிக்கின்றோம்.

இந்த இரண்டிற்கும் என்ன வேறுபாடு? நான் விட்டுவந்த கல்தேயர் நிலத்திலே தேவன் இல்லை. தேவனுடைய இடத்திலே அவர்கள் அந்நிய தேவர்களை வைத்து ஆராதிக்கின்றார்கள். “நீதான் எங்களுடைய தெய்வம்; நீதான் இந்த நிலத்தையும் இந்த நிலத்தின் வளங்களையும், செல்வங்களையும், வாழ்க்கையும் கொடுத்தாய்,” என்று அவர்கள் மனிதன் கையினால் உண்டாக்கின தேவர்களை ஆராதிக்கின்றார்கள்.

ஆனால், இந்தப் பரம நிலத்திலே தேவன் நம்மை ஆசீர்வதிப்பது மட்டுமல்ல; அந்த நிலம் நாம் வாழ்வதற்குரிய நிலமாக மட்டுமல்ல; தேவனும் நம்மோடு இணைந்து வாழ்வதற்குரிய இசைவான ஒரு நிலமாக இருக்கின்றது. ஆசீர்வாதமான நிலமாக இருக்கின்றது.

ஒன்றை வலியுறுத்திவிட்டு அல்லது கோடிட்டுக் காட்டிவிட்டு இரண்டாவது குறிப்பிற்குச் செல்கின்றேன். அப்படியென்றால், அந்த இடைப்பட்ட நிலமில்லாத திரிந்த காலத்திலே தேவனுடைய மக்களுடைய வாழ்க்கையிலே என்ன கிடைக்கும்? நீங்கள் சொன்னீர்கள், “வருத்தமும் நெருக்கமும் உண்டு.”

வருத்தமும் நெருக்கமும் உள்ள பாதையின் வழியாகத்தான் ஆபிரகாம் நீண்ட நெடிய காலம் நடந்துபோனான். ஒரு பிள்ளைக்காய் காத்திருந்தான். பிள்ளைகள் கிடைக்கவில்லை. நாடு கடைசிவரை கிடைக்கவில்லை.

ஆபிரகாமின் வாழ்க்கையை நாம் sum பண்ணுவது என்றால், அது கூடாரத்தின், பலிபீடத்தின் வாழ்க்கை என்றுதான் நாம் அதை sum பண்ண முடியும். ஆனால், எபிரெயர் ஆறாம் அதிகாரம் நான்காம் வசனத்திலே விசுவாசிகளைப்பற்றிச் சொல்லும்போது, அவர்கள் ஒருமுறை ஒளிர்விக்கப்பட்டவர்கள், பரம ஈவை, பரம கொடையைச் சுவைத்தவர்கள், பரிசுத்த ஆவியில் பங்குற்றவர்கள், தேவனுடைய நல்வார்த்தையையும் வரவிருக்கிற யுகத்தின் வல்லமைகளையும் முன்சுவை பார்த்தவர்கள் என்று நாம் வாசிக்கிறோம்.

இது நமக்குப் பொருந்துவதுபோல, தேவனைப் பின்பற்றின, தேவன் வாக்குறுதி அளித்த வாக்குறுதிகளை விசுவாசித்து நடந்த தேவனுடைய மக்களுக்கும், மக்கள் கூட்டங்களுக்கும் எல்லாக் காலத்திலும் பொருந்தும். ஆபிரகாமுக்கும் அது பொருந்தும்.

ஒருவேளை ஆபிரகாம் அந்தப் பரம நிலத்தைத் தன்னுடைய வாழ்நாளில் சுதந்தரிக்கவில்லை. ஆனால், அந்தப் பரம நிலத்தின் முன்சுவையை, பரம நிலத்தின் செல்வங்களின், வளங்களின் முன்சுவையை, ஆபிரகாம் நிச்சயமாகவே அனுபவித்தான் என்று வேதம் சான்றுபகர்கிறது.

அடிமை நிலத்திலிருந்து வனாந்தரவழியாக நல்ல நிலத்திற்கு

இரண்டாவது குறிப்பிற்குப் போவோம். இரண்டாவது குறிப்பு: இஸ்ரவேல் மக்கள் அடிமை நிலத்திலிருந்து வனாந்தரவழியாக நல்ல நிலத்திற்கு வந்தார்கள். இங்கேயும் இந்த மூன்று பகுதிகளைப் பார்க்கின்றோம். முதலாவது, அடிமை நிலமாகிய எகிப்து. இரண்டாவது, வனாந்தர வழி. மூன்றாவது, அவர்கள் போய்ச் சேரும் இடமாகிய நல்ல நிலம்.

யாத்திராகமம் 3:7-8:

அப்பொழுது கர்த்தர்: “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன்; அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.”

தேவன் அடிமை நிலமாகிய எகிப்திலே தம்முடைய மக்களுடைய துன்பங்களைப் பார்க்கிறார். அதே யாத்திராகமம் 2:23 ஆம் வசனத்தை நாம் வாசிப்போம்:

“சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.”

கண்டிப்பாக எகிப்திலே அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அடிமைத்தனத்தின் வாழ்க்கை. அவர்களுடைய பெருமூச்சு தேவனுடைய சந்நிதியில் எட்டிற்று என்று வாசிக்கின்றோம். அவர்கள் வாழ்ந்த நிலம் அடிமை நிலம் என்பதிலே எந்த மாற்றுக் கருத்தும் அவர்களுக்கும் இல்லை. ஆனால், வனாந்தர வழிக்கு வந்தபிறகு அவர்களுடைய எண்ணங்கள் மாறுகின்றன. அதை நாம் பின்பு பார்ப்போம். தேவன் வாக்குறுதி அளிக்கிறார்: “நான் இந்த அடிமை நிலத்திலிருந்து உங்களை மீட்டு நலமும் விசாலமான ஒரு நிலத்திற்கு நான் கொண்டு போவேன்.”

தமிழிலே தேசம் என்று இருக்கும். ஆங்கிலத்திலே land என்றுதான் இருக்கின்றது. இதை எப்படித் திருத்தமாய் மொழிபெயர்ப்பது என்பதை இன்னொரு நாள் பார்க்கலாம். இப்போதைக்கு நாம் நிலம், தேசம் என்கின்ற இரண்டு வார்த்தைகளையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம்.

“ஆளோட்டிகளால் நீங்கள் துன்புறுகின்ற, வருந்துகின்ற இந்த அடிமை நிலத்திலிருந்து நான் உங்களை ஒரு நல்ல நிலத்திற்கு, விசாலமான நிலத்திற்கு, கொண்டுபோவேன்.” அதை வர்ணிப்பதற்கு வேதம் பயன்படுத்துகின்ற எளிய வார்த்தைகள்: ‘பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசம்’. இது நிச்சயமாகத் தேவனுடைய மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. இந்த நற்செய்தியை அவர்கள் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய வாக்குறுதியை அவர்கள் விசுவாசித்து, இந்த அடிமை நிலத்தை அவர்கள் கைவிட்டுவிட்டு அடிமை நிலத்திலிருந்து புறப்பட்டார்கள். எதை நோக்கிப் புறப்பட்டார்கள்? இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நல்ல நிலத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.

எப்படி ஆபிரகாம் கல்தேயர் நிலத்திலிருந்து புறப்பட்டுத் தேவன் வாக்குறுதி அளித்த நிலம், அது பரம நிலம் என்று நாம் பின்பு பார்க்கின்றோம். பரம நிலம், பரம தேசம், பரம நாடு, பரம நகரம், தாயகம் என்று பின்பு பார்க்கின்றோம். அதேபோல, அவர்கள் நல்ல நிலத்திற்கு என்று வெளிவந்தார்கள். ஆனால், அவர்கள் உடனடியாக நல்ல நிலத்தைச் சென்றடையவில்லை. இந்த அடிமை நிலத்திற்கும் அந்த நல்ல நிலத்திற்கும் நடுவே ஒரு இடைவெளி இருந்தது. அது 40 நாட்களா, 40 ஆண்டுகளா என்பது இரண்டாவது கேள்வி. நிச்சயமாக 40 நாட்களாவது அவர்கள் நடந்துதான் இருக்க வேண்டும்.

எகிப்து எப்படிப்பட்ட நாடாக இருந்தது? வனாந்தரம் எப்படிப்பட்டதாக இருந்தது? எகிப்திலே வள ஆதாரம் இருந்தது. வளங்கள் இருந்தன. செல்வங்கள் இருந்தன. பாதுகாப்பு இருந்தது. அது அடிமை நாடுதான்.

அந்த அடிமைத்தனத்தின் வலியும், வேதனையும், சேதங்களும், சீரழிவுகளும், சிதைவுகளும் பொறுக்க முடியாமல்தான் அவர்கள் தேவனிடத்தில் முறையிட்டார்கள். தேவன் மோசேயை அனுப்பி அவர்களை விடுவித்தார். ஆனால், விடுவிக்கப்பட்டபிறகு அவர்கள் பின்னோக்கிப் பார்க்கின்றார்கள். “ஆ! நாம் அடிமைகளாக இருந்தோம். ஆனால், அங்கு வளங்கள் இருந்தன. செல்வங்கள் இருந்தன. பாதுகாப்பு இருந்தது. இந்த வனாந்தரத்திலே - இது விதைக்கப்படாத வனாந்தரம்!” அதனுடைய பொருள் இதிலே விதைக்கக்கூட முடியாது. இங்கு எந்த வளமும் இல்லை. எந்தச் செல்வங்களும் இல்லை. எந்தப் பாதுகாப்பும் இல்லை.

யாத்திராகமம் 16, 17 ஆகிய இந்த இரண்டு அதிகாரங்களில் மட்டும் சில வசனங்களை நான் மேற்கோள் காட்ட விரும்புகின்றேன். வனாந்தரத்திலே ஒன்றுமில்லை. வனாந்தரம் என்று தமிழிலே எழுதியிருக்கிறது.

வனாந்தரம் என்றோ பாலைவனம் என்றோ சொல்லலாம். எங்கு பார்த்தாலும் வெறும் மணல் இருக்கலாம். அல்லது கனியற்ற புதர்கள் இருக்கலாம். இதுதான் வனாந்தரம். அதுதவிர, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும் உண்டு என்று நாம் பார்க்கின்றோம். இங்கே உணவு இல்லை. குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை. தங்குவதற்கு வீடுகள் இல்லை. அல்லது விலங்குகளிடம் இருந்தோ அல்லது மற்ற மக்கள் கூட்டங்களிலிருந்தோ எந்தப் பாதுகாப்பும் இல்லை.

ஆகவே, அவர்கள் வனாந்தரத்திற்குள் காலடி எடுத்து வைத்த உடனே அவர்களைத் தாக்குவது பசி அல்லது பட்டினி. வேறு எதில் கை வைத்தாலும் மனிதர்கள் பொறுப்பார்கள். வயிற்றில் கை வைத்தால் நிச்சயமாகப் பொறுக்க மாட்டார்கள். நாம் இஸ்ரவேல் மக்களைவிட எந்த விதத்திலும் சிறப்பானவர்கள் என்று கருதிவிட வேண்டாம்.

பல சமயங்களில் நம்மை அறியாமல் நாம் அப்படிக் கருதுவது உண்டு. அப்படிக் கருதவேண்டாம். தமிழிலே ஒரு பழமொழி உண்டு. “பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.” அந்தப் பத்து என்பது பத்து குணாம்சங்கள் என்று சொல்கின்றார்கள். தமிழிலே ஒரு செய்யுள் உண்டு. நான் செய்யுள் சொல்லி உங்கள் நேரத்தை எடுக்கப் போவதில்லை.

பசி வந்தால் என்ன நடக்கும்? நாம் ராஜாக்களில் வாசிக்கின்றோம். கால்கள் தரையிலே படாத மெல்லிய பெண்மணிகள் தங்களுடைய பிள்ளைகளைச் சமைத்துத் தின்றார்கள். பசி அப்படிப்பட்ட கொடிய செயல்களைச் செய்ய மனிதனைத் தூண்டும்.

அப்படிப்பட்ட பசியை அவர்கள் எதிர்பார்த்தார்களா? அவர்களுக்கு அதைப்பற்றி எந்தக் கற்பனையும் இல்லை. இந்த அடிமை நிலத்திலிருந்து நல்ல நிலத்திற்கு நாம் போகின்ற ஒரு பாதை ஒன்று உண்டு. அங்கு நாம் நிலமற்றவர்களாகத்தான் இருப்போம்.

அது நான்கு நாட்களா, 40 நாட்களா, 40 ஆண்டுகளா என்பது ஒரு கேள்வி அல்ல. அப்படிப்பட்ட ஒரு சிலுவையின் பாதை வழியாகத் தேவனுடைய மக்கள் சென்றுதான் போக வேண்டும். “செங்கடல் மட்டுமே சிலுவை. அவர்கள் சமுத்திரத்தினாலும் மேகத்தினாலும் திருமுழுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். ஆகவே, செங்கடல் என்ற சிலுவையின் அனுபவத்தின் வழியாய் அவர்கள் நுழைந்து உயிர்த்தெழுதலில் வெளிவந்துவிட்டார்கள்,” என்பது சரியான பொருள் விளக்கம் அல்ல.

வேறு சிலர் இப்படிப் பொருள் விளக்கம் தருவார்கள்: “எகிப்தில் வாழ்வது என்பது மனிதன் தன்னுடைய மாம்சத்தில் வாழ்கின்ற வாழ்க்கை; வனாந்தரம் என்பது மனிதன் தன்னுடைய ஆத்துமாவில் வாழ்கின்ற வாழ்க்கை; நல்ல நிலமாகிய கானான் என்பது மனிதன் தன்னுடைய ஆவியில் வாழ்கின்ற வாழ்க்கை” என்று. அது நேர்த்தியான பொருள் விளக்கம் அல்ல.

தேவ மக்கள் எல்லாரும் வனாந்தர வழியாய் நடந்து போய்த்தான் ஆக வேண்டும். நாட்கள் கூடவோ குறையவோ இருக்கலாம். ஆனால், வனாந்தரம் என்பது என்ன? அது நிலமில்லாத வாழ்க்கை.

மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்கு எந்த ஆதாரம், எந்த வளங்கள், எந்தச் செல்வங்கள் எல்லாம் இன்றியமையாதவை என்று கருதுகிறார்களோ, துடிக்கின்றார்களோ; அது இல்லை என்றால் துடிக்கின்றார்கள். இருக்கிறது என்றால் கொண்டாடுகிறார்கள். இருக்கிறது என்றால் கொண்டாடுகிறார்கள். இல்லை என்றால் திண்டாடுகிறார்கள்.

அவைகள் இல்லாத ஒரு பாதையிலே தேவன் தம்முடைய மக்களை நடத்தியே ஆக வேண்டும். ஏன் அது அடிமை நிலம்? ஏனென்றால், அவர்கள் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தார்கள்.

தேவனை ஆராதிப்பதற்கு, தேவனைத் தொழுது கொள்வதற்கு, தேவனை முதன்மைப்படுத்துவதற்கு அந்த அடிமை நிலத்திலே அவர்களுக்கு இடம் இல்லை. ஆகவே, தேவன் அவர்களை விடுவித்தார். தேவன் அவர்களை மீட்டார். அவர்கள் வனாந்தரவழியாய் வரும்போது எகிப்தைப்பற்றி நினைத்து கொண்டாடுகிறார்கள். நாம் இந்த வசனத்தை வாசித்திருக்கிறோம்:

உபாகமம் 8:2, 3:

வனாந்தரத்தின் நோக்கம்

“உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.”

நான் சுருக்கமாய்ச் சொல்லிக் கடந்துபோகின்றேன்.

ஆபிரகாம் நிலம் இல்லாதவனாய்க் கூடாரவாசியாய் அலைந்து திரிவது என்பது எப்படி தேவன் அழைத்த தேவ மக்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியோ, அதுபோல, வனாந்தரம் என்பது தேவ மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி. அதனுடைய purpose என்ன? அதனுடைய நோக்கம் என்ன? அதனுடைய பயன் என்ன? குறிக்கோள் என்ன? உபாகமம் 8:2, 3 இல் வாசிக்கின்றோம்.

அவர்கள் பயணத்திலே, அவர்கள் எகிப்தை நினைத்துப் பார்த்து, அவர்கள், நாம் அடிக்கடி வாசிக்கின்ற எண்ணாகமம் 11:3-6 இல் “நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெங்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத்தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே” என்று சொன்னார்கள்.

அதேபோல, யாத்திராகமம் 16:3, 4 ஆம் வசனங்களை வாசிப்போம்: “நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்துதேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவில்லை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே” என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.

எட்டாம் வசனம், 12 ஆம் வசனத்திலே மோசேயும் கர்த்தரும் இதற்கு மறுவினை ஆற்றுகிறார்கள். அதையும் வாசிப்போம்: பின்னும் மோசே: “சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திருப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது” என்றான்.

போதும். நான் சுருக்கமாய் இதைச் சொல்லி விடுகின்றேன். ஆகவே, இஸ்ரவேல் மக்கள் முறுமுறுக்கின்றார்கள். “நாங்கள் எகிப்திலே செத்து இருந்தால்” — தமிழிலே “தாவில்லை” என்று இருக்கும். இப்ப colloquial “தேவலாம்” என்று நாம் சொல்லுவோம் இல்லையா? அந்த வார்த்தை.

“நாங்கள் செத்து இருக்கலாம். நாங்கள் எகிப்திலே இறைச்சிப் பாத்திரங்கள் அண்டையில் அமர்ந்து அப்பத்தைத் திருப்தியாய் நிறைவாய்ச் சாப்பிட்டோம்” என்கின்றார்கள்.

மோசே சொல்கிறார்: “சாயங்காலத்திலே நீங்கள் கர்த்தர் செய்வதைப் பார்ப்பீர்கள். அவர் உங்களுக்கு இறைச்சி தருவார். அவர் உங்களுக்கு அப்பம் தருவார். நிறைவாய்த் தருவார். திருப்தியாய்த் தருவார்.”

கர்த்தரும் அதேபோல, உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கின்றார். இறைச்சியைத் தருகின்றார். அப்பத்தைத் தருகின்றார். அவர்கள் திருப்தியாய், நிறைவாய், ஒருவனாயிலும் “எனக்கு வயிறு நிரம்பவில்லை” என்று சொல்கின்ற அளவிற்கு வைக்கவில்லை.

ஆகவே, வனாந்தரம் என்பது நிலம் இல்லாதவர்களுடைய பாதை. ஒரு நிலத்திலே கிடைக்கின்ற விளைச்சல், நிலத்திலே கிடைக்கின்ற வளங்கள், நிலத்திலே கிடைக்கின்ற செல்வங்கள், நிலத்திலே கிடைக்கின்ற பாதுகாப்பு, அவர்கள் வனாந்தர வழியாய் நடந்தபோது அவர்களுக்கு இல்லை. ஆகவேதான் அவர்கள் முறுமுறுக்கின்றார்கள்.

தேவனற்ற மக்கள் எகிப்தைவிட்டு, அடிமை நிலத்தைவிட்டு, கிளம்ப மாட்டார்கள். தேவனுடைய மக்களாகிய நாம் அடிமை நிலத்தை விட்டுக் கிளம்புகின்றோம். ஆனால், கிளம்பின பிறகுகூட இந்த வனாந்தரப் பாதை என்பது தேவ மக்களின் வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத பாதையாக இருக்கின்றது.

ஒரு நிலத்தை நாம் இழந்தோம். உடனடியாக இன்னொரு நல்ல நிலத்தைத் தேவன் நமக்குக் கொடையாக, உடனடியாய் தரப்போகின்றார் என்பதல்ல. நிலம் இல்லாதவர்களாய், நிலம் இழந்தவர்களாய், தேவனுடைய மக்கள் நடக்க வேண்டும்.

மன்னாவும் கன்மலையின் தண்ணீரும்

இப்படி யாத்திராகமம் 16ஆம் அதிகாரத்திலே அவர்கள் பசிக்குத் தேவன் மன்னாவை ஏற்பாடு செய்கின்றார். யாத்திராகமம் 17 ஆம் அதிகாரத்தில் அவர்கள் தாகத்திற்குத் தேவன் ஒரு கன்மலையைக் (கற்பாறையை) ஏற்பாடு செய்கின்றார்.

எண்ணாகமம் 14 ஆம் அதிகாரத்திற்கு வரும்போது, 40 நாட்கள் இஸ்ரவேல் மக்கள் கடந்துபோக வேண்டிய தூரத்தை அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாக அவர்கள் 40 ஆண்டுகள் கடந்து போனார்கள். நான் அதற்கு வரவில்லை. நம்முடைய நேரம் அதுக்குப் போதாது. ஆனால், வளங்கள் குன்றி, குறைந்து, சுருங்கி நடப்பது, சூழ்நிலைகளிலே நடப்பது என்பது தேவன் தம்முடைய மக்களுக்கு நியமித்த ஒன்று என்பதை உபாகமம் எட்டாம் அதிகாரம் தெள்ளத்தெளிவாய் கூறுகிறது.

உன் இருதயம் எப்படிப்பட்ட இருதயம் என்பதை நீ அறிந்து கொள்வதற்கு, என் இருதயம் எப்படிப்பட்டது என்பதை நான் அறிந்து கொள்வதற்குத் தேவன் அப்படிப்பட்ட சுருக்கமான சூழ்நிலைகள் வழியாக நம்மை, நம்முடைய வாழ்க்கையை ஏற்பாடு செய்கின்றார். ஆனபோதிலும்கூட, உனக்கு ஒரு குறைவும் தேவன் வைக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமானது.

ஒரு பக்கம் அது நிலம் இழந்த வாழ்க்கை, சிலுவையின் வாழ்க்கை. ஆனால், சிலுவையின் வாழ்க்கை என்பதற்காக தேவன் தம்முடைய மக்களைக் கைவிட்டுவிட்டாரா என்றால், கைவிட விடவில்லை. தேவன் தம்முடைய மக்களுக்கு மன்னாவை ஏற்பாடு செய்கின்றார். தேவன் தம்முடைய மக்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீரை ஏற்பாடு செய்கின்றார்.

இது எந்த நிலத்திலும் கிடைக்காத உணவு. எந்த நிலத்திலும் கிடைக்காத தண்ணீர். ஒன்று கொரிந்தியர் பத்தாம் அதிகாரம் மூன்று, நான்காம் வசனங்களிலே அப்போஸ்தலனாகிய பவுல், “அவர்கள் அவர்களோடுகூடச் சென்ற கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக் கன்மலை கிறிஸ்துவே” என்று கூறுகிறார்.

யாத்திராகமத்தில் அதே 17ஆம் அதிகாரத்தில் சொல்லும்போது, “நான் ஓரேபிலே உனக்கு முன்பாகக் கன்மலையிலே நிற்பேன்” என்று எழுதியிருக்கின்றது. “அந்தக் கன்மலையாகவே நான் இருப்பேன்” என்று இல்லை.

ஆனால், பவுல் அதற்குப் பொருள் விளக்கம் தரும்போது புதிய ஏற்பாட்டிலே “அந்தக் கன்மலை கிறிஸ்துவே” என்று சொல்கின்றார்.

அதேபோல, யோவான் ஆறாம் அதிகாரத்திற்கு வரும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தெள்ளத்தெளிவாய்ச் சொல்கின்றார்: “நானே வானத்திலிருந்து இறங்கி வந்த மெய்யான அப்பம்.”

உண்மையாகவே, அவர்கள் சாப்பிட்ட அந்த மன்னா, உண்மையான மன்னா, “நான்தான்” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கின்றார். சங்கீதம் 78 ஆம் அதிகாரம் 25 ஆம் வசனத்திலே நாம் வாசிக்கின்றோம். தூதர்கள் சாப்பிடுகின்ற உணவை, அப்பத்தைத் தேவன் தம்முடைய மக்களுக்குக் கொடுத்தார் என்று.

ஒரு பக்கம் வனாந்தரம் என்பது விளைச்சல் இல்லாத ஒரு வறண்ட பூமி. அது விதைக்கப்படாத பூமி. இன்னொரு பக்கம் தேவனுடைய மக்கள் திருப்தியாக, நிறைவாக வாழ்ந்தார்கள். அவர்களுக்குக் குறைவாகவும் தேவன் கொடுக்கவில்லை. நிறைவாகவும் கொடுக்கவில்லை. மன்னாவைப்பற்றி யாத்திராகமம் 16 ஆம் அதிகாரத்தில் வாசித்துப் பாருங்கள். தண்ணீரைப்பற்றி 17 ஆம் வசனத்திலே வாசித்துப் பாருங்கள். தேவன் சொல்லும்போது சொல்கின்றார்:

“ஒவ்வொருவனும் தனக்கு எவ்வளவு தேவையோ, அதற்குத் தக்கபடி அவன் சேகரித்துக்கொள்ளக்கடவன்” என்று சொல்லிவிட்டு அதே 16ஆம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம். ஆசைப்பட்டு மிகுதியாய்ச் சேர்த்தவன், இராத்திரியில் பார்த்தால் அவனுக்கு ஒன்றும் மிஞ்சி இருக்காது. குறைவாய்ச் சேர்த்தவனுக்கு எந்தக் குறைவும் படாது. வெயில் ஏற ஏற, அந்த மன்னா இளகிவிட்டது அல்லது அந்த மன்னா evaporate ஆகிவிட்டது என்று நாம் வாசிக்கின்றோம்.

அதேபோல, அவர்கள் அடிமை நிலத்தில் வாழ்ந்தபோது அவர்களுக்கு ஓய்வோ இளைப்பாறுதலோ கூட இல்லை. தேவன் தம்முடைய மக்களுக்குத் திருப்தியையும் நிறைவையும் மட்டும் தரவில்லை. வனாந்தரத்திலே அவர்களுக்கு இளைப்பாறுதலையும் ஓய்வையும்கூடத் தருகின்றார். “நீங்கள் ஏழாம் நாளிலே நீங்கள் மன்னாவைச் சேகரிக்கப் போக வேண்டாம்” என்று அவர் சொல்கின்றார்.

“நீங்கள் ஆறாம் நாளிலே சேகரித்துக்கொண்டு வந்தது ஏழாம் நாளுக்கும் போதுமானதாக இருக்கும்” என்று. சிலர் ஏழாம் நாளிலே சேகரிக்கப் போகின்றார்கள். ஆனால், அன்று மன்னா பெய்யவில்லை என்று வாசிக்கின்றோம்.

சிலுவையும் உயிர்த்தெழுதலின் முன்சுவையும்

ஆகவே, ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல, சிலுவை என்பது, சிலுவை மரணம் என்பது ஒரு பக்கமாக இருந்தால், உயிர்த்தெழுதல் என்பது இன்னொரு பக்கமாகவே இருக்கிறது. வரவிருக்கின்ற நிறைவான உயிர்த்தெழுதல் இனிமேல்தான் வரவிருக்கின்றது. ஆனால், அந்த உயிர்த்தெழுதலின், அந்தப் புதிய படைப்பின் முன்சுவையைத் தேவன் தம்முடைய மக்களுக்குக் கொடுக்கின்றார்.

நல்ல நிலத்தின் வாழ்க்கை அவர்களுக்கு எதிர்காலத்தில்தான் இருக்கின்றது. ஆனால், நல்ல நிலத்தின் வாழ்க்கையின் முன்சுவையை வனாந்தரத்திலே தேவனால் கொடுக்க முடியும். மன்னாவும் கன்மலையிலிருந்து வந்த தண்ணீரும் அதைத்தான் அடையாளப்படுத்துகின்றன.

இவைகளெல்லாம் சற்று கருகலான காரியங்கள். மன்னா என்பது கிறிஸ்து என்று நாம் சொல்வோம். கன்மலை என்பது கிறிஸ்து என்று நாம் சொல்வோம்.

கிறிஸ்து எப்படிக் கன்மலையாக இருக்க முடியும்? கிறிஸ்து எப்படி ஒரு உணவாக மன்னாவாக இருக்க முடியும்? இதை விளக்குவதற்கு நம்மால் முடியாது. ஒரே நேரத்திலே அது மனிதர்கள் உண்கின்ற மன்னாவாகவும் இருந்தது. அது கிறிஸ்துவாகவும் இருந்தார். ஒரே நேரத்திலே நமக்குப் புலப்படுகின்ற கற்பாறையாகக் கன்மலையாகவும் இருந்தது. அவர் கிறிஸ்துவாகவும் இருக்கின்றார்.

ஆனால், மனிதர்களால் இப்படிப்பட்ட தேவனுடைய கொடைகளை மட்டுமே நம்பி வாழ்கின்ற வாழ்க்கை நமக்குச் சற்று அந்நியமான வாழ்க்கை. நமக்கு எல்லாமே ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இந்தச் சனிக்கிழமை ஏழாம் நாளுக்கு நாம் ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்த வருடத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

நல்ல நிலமும் தேவனைச் சார்ந்த வாழ்க்கையும்

தேவனுடைய மக்கள் நல்ல நிலத்தைப் பெற்றார்கள். ஆனால், கூடிய விரைவிலே நல்ல நிலத்தை அவர்கள் இழந்தும் போனார்கள். அவர்கள் நல்ல நிலத்தைப் பெற்று இழந்து போனதற்கு என்ன காரணம் என்றால், தேவனைச் சார்ந்து சிலுவையின் வழியில் அவர்கள் தொடர்ந்து வாழ்வதற்கு அவர்களுக்கு மனமில்லை. ஒரு அரசன் வேண்டும். அவன் போர்களைச் செய்ய வேண்டும். அவனுக்கு ஒரு military, ஒரு படைபலம் வேண்டும். அவனுக்குக் குதிரைகள் வேண்டும். இரதங்கள் வேண்டும்.

அவனுடைய குதிரைகளும் இரதங்களும் போதவில்லை என்றால், அண்டை நாட்டு அரசர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டு அவர்களுடைய குதிரைகளையும், இரதங்களையும், படைகளையும் பெற வேண்டும். அந்தப் பக்கத்து நாட்டான், அவன் ஒரு அந்நிய தேவனை, வழிபடுகிறவன் என்றால், அவனோடு இசைந்து போக வேண்டும்.

இப்படியெல்லாம் அவர்கள் போகும்போதுதான் தேவன் அவர்களுக்குக் கொடையாகக் கொடுத்த நல்ல நிலத்தைக்கூட அவர்கள் இழந்து விடுகின்றார்கள். ஒன்று சாமுவேல் எட்டாம் அதிகாரம் 10 முதல் 18 ஆம் வசனங்களிலே ஒரு அரசனைப் பற்றி எழுதியிருக்கும். அவர்கள் தேவனுடைய கொடையை நம்பி வாழ்வதற்குத் தேவன் வாக்குறுதி அளித்திருக்கின்றார்: “நீங்கள் அடிமை நிலத்தை விட்டுப் புறப்படுங்கள். வனாந்தர வழியாய் நடந்தாலும் நல்ல நிலத்தை நான் தருவேன்.” தேவன் வனாந்தரத்திலே நம்மைப் பாதுகாத்தவர். உபாகமம் எட்டாம் அதிகாரத்தில் நாம் வாசிப்பதுபோல, வனாந்தரத்திலே நம்மைப் பாதுகாத்த, நம்மைப் போஷித்த, நமக்குத் தண்ணீர் தந்த தேவனால் நல்ல நிலத்தையும் நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மனிதருடைய மனப்பாங்கு எப்போதுமே எப்படி இருக்கும் என்றால், “இருப்பதை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டும், இல்லாததைக் கைப்பற்ற வேண்டும். எப்படியாவது இந்த நிலங்களுடைய வளங்களையும், செல்வங்களையும், ஆசீர்வாதங்களையும், நாம் கைவசப்படுத்திக்கொள்ள வேண்டும். அதை நாம் நிர்வகிக்க வேண்டும். இவைகளெல்லாம் இல்லையென்றால் இந்தப் பூமியில் ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடியாது,” என்பது மனிதர்களுடைய மனப்பாங்கு.

ஆனால், உபாகமம் 8 ஆம் அதிகாரத்தில் தேவன் சொல்வது: “நான் உனக்கு நல்ல நிலத்தை வாக்குறுதிசெய்திருக்கிறேன்; அதை நான் உனக்குத் தருவேன். அது கோதுமையும், வாற்கோதுமையும், திராட்சச்செடிகளும், அத்திமரங்களும், மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும், தேனுமுள்ள தேசம்; அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும், ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; நீ புசித்துத் திருப்தியாகி, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.

நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போது, ‘என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது’ என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக. ‘என் அரசர்களும், என் அமைச்சர்களும், என் படைகளும் இதைச் சம்பாதித்தது’ என்று உன் இருதயத்தில் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.”

உபாகமம் 8 ஆம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப்பாருங்கள்.

பழைய நிலத்திலிருந்து சிலுவையின் வழியாகப் புதிய நிலத்திற்கு

மூன்றாவது குறிப்புக்குச் செல்வோம். புதிய ஏற்பாட்டிலே தேவனுடைய மக்கள் பழைய நிலத்திலிருந்து சிலுவையின்வழியாகப் புதிய நிலத்துக்குக் கொண்டுவரப்படுகிறார்கள். இந்த நற்செய்தி நமக்குப் பரிச்சயமானதுதான். பழைய படைப்பிலிருந்து சிலுவை, உயிர்த்தெழுதலின்வழியாக அல்லது சிலுவை மரணம், உயிர்த்தெழுதல்வழியாகப் புதிய படைப்பாக மாற்றப்பட்டிருக்கிறோம், அல்லது புதிய படைப்புகள் கொண்டுவரப்பட்டிருக்கிறோம்.

ஒரேவொரு சிறிய மாற்றம் செய்திருக்கிறோம். படைப்பு என்கின்ற சொல்லுக்குப் பதிலாக நிலம் என்கின்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

நாம் இப்படிச் சொல்லலாம்: “புதிய ஏற்பாட்டிலே நிலம் என்று ஒன்று இல்லை. பழைய ஏற்பாட்டோடு நிலத்திற்காகத் தேவனுடைய மக்கள் வேண்டினது அல்லது போரிட்டது அல்லது அவர்கள் சிறையிருப்பிற்குப் போனது, மீண்டும் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தது, இவைகள் எல்லாம் பழைய ஏற்பாட்டோடு போய்விட்டது. புதிய ஏற்பாட்டிலே நிலம் என்ற ஒன்றிற்கு எந்த முக்கியத்துவமும் முதன்மை இல்லை” என்று. ஒரு பக்கம் அப்படி இருக்கலாம்.

புதிய ஏற்பாட்டில் நிலத்தின் பொருள்

ஒரு பரிசுத்தவான் இப்படிச் சொல்கிறார்: “புதிய ஏற்பாட்டிலே நிலம் ஆவிக்குரியதாக மாற்றப்பட்டிருக்கிறது அல்லது புதிய ஏற்பாட்டிலே நிலம் கிறிஸ்துமயமாக்கப்பட்டிருக்கிறது.” தேவனுடைய மக்களுக்கு நிலம் என்பது immanent அல்ல; தேவனுடைய மக்களுக்கு நிலம் என்பது transcendent என்றெல்லாம் நாம் சொல்லலாம்.

ஒரு விதத்தில் நாம் அதை ஒத்துக்கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டிலே நிலம் என்பது அல்லது தேசம் என்பது ஆவிக்குரியதாக்கப்பட்டிருக்கிறது.

ஆவிக்குரிய உடலும் நிலமும்

ஆனால், கடந்த ஒரு செய்தியிலே நான் உங்களுக்குச் சொன்னேன். பொதுவாக மக்கள் ஆவிக்குரியது என்பதை உடலுக்குரியது அல்லது physical என்பதற்கு எதிர்ப்பதமாக எடுத்துக்கொள்வார்கள். இது பௌதிகமானது; இதைப் பார்க்கலாம். “இது ஆவிக்குரியது என்றால், இது கருகலானது” என்று அவர்கள் புரிந்துகொள்வது உண்டு.

ஆனால், கடந்த ஒரு செய்தியிலே நான் இதைச் சொன்னேன். ஒன்று கொரிந்தியர் 15 ஆம் அதிகாரத்திலே “இயற்கையான உடலும் உண்டு, ஆவிக்குரிய உடலும் உண்டு” என்று பவுல் கூறும்போது, ஆவிக்குரிய உடல் என்பது, அது உடல் இல்லை என்பது பொருள் அல்ல. ஆவிக்குரிய உடல் என்பது material body இல்லை என்பது பொருள் அல்ல. ஆவிக்குரிய உடலும் அது ஒரு material bodyதான். ஆவிக்குரிய உடலில்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தோமா அவருடைய விலாவிலே கையைப் போட்டுத் தொட்டுப் பார்த்தான். அவருடைய ஆவிக்குரிய உடலிலேதான் அவருடைய தழும்புகள் இருந்தன. அவருடைய கைகளின் தழும்புகளும், விலாவின் தழும்புகளும் இருந்தன. அவருடைய ஆவிக்குரிய உடலில்தான் அவர் அப்பத்தையும், மீனையும் சாப்பிட்டார். ஆகவே, ஆவிக்குரிய உடல் என்பது உடல்தான்.

அதேபோல, நிலம் என்பது ஆவிக்குரியதாக மாற்றப்பட்டுவிட்டது என்றால், ஆவிக்குரியது என்றால் அது பெரியதாக நாம் அனுபவிக்கிற ஒன்றில்லை என்று நாம் நினைத்து விடக்கூடாது. அது இயற்கையானது அல்ல, அது ஆவிக்குரியது.

நிலத்திற்குச் சமானமான சொற்கள்

நிலம் என்கின்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் இல்லை. ஆனால், அதற்குச் சமானமான சொற்களை நாம் புதிய ஏற்பாட்டிலே வாசிக்கின்றோம்.

மூன்று நற்செய்தி நூல்களாகிய மத்தேயு, மாற்கு, லூக்காவிலே நிலம் என்பதற்குப் பதிலாகத் தேவனுடைய அரசு என்கின்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனுடைய அரசு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் ஒருபுறம் வந்துவிட்டது, இன்னொருபுறம் அது நிறைவாக வரவிருக்கிறது என்பதை நாம் பலமுறை சிந்தித்திருக்கின்றோம்.

யோவானுடைய நற்செய்தியிலே நிலம் என்பதற்குச் சமானமான ஒரு வார்த்தையாக நித்திய ஜீவன் அல்லது யுகங்களின் ஜீவன் என்கின்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பவுல் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். நிலம் என்பதற்குப் பதிலாகக் “கிறிஸ்துவில்” என்கின்ற வார்த்தையைப் பவுலுடைய கடிதங்களில் நாம் வாசிக்கிறோம். அதுபோல, கிறிஸ்துவை நாம் சுதந்தரிப்போம், நாம் சுதந்தரவாளிகள். எதைச் சுதந்தரிப்போம்? நிலத்தைச் சுதந்தரிப்போம் அல்லது கிறிஸ்துவைச் சுதந்தரிப்போம் என்று பவுல் சொல்கின்றார்.

எபிரெயரிலே நிலம் என்பதற்குப் பதிலாக, அது நம்முடைய தாயகம், நம்முடைய சுய தேசம், நம்முடைய Homeland என்று வாசிக்கின்றோம். தமிழிலே தாயகம் என்பது நல்ல சொல்.

திருவெளிப்பாட்டிலே நிலம் என்பதற்குப் பதிலாக புதிய வானம், புதிய பூமி அல்லது புதிய எருசலேம் என்கின்ற வார்த்தையை நாம் பார்க்கின்றோம்.

ஆகவே, புதிய ஏற்பாட்டிலே நிலம் என்கின்ற வார்த்தை முதன்மைப்படுத்தப்படாவிட்டாலும், நிலத்திற்குச் சமானமான வார்த்தைகள், நித்திய ஜீவன், தேவனுடைய அரசு, புதிய வானம், புதிய பூமி, புதிய எருசலேம், தாயகம் போன்ற வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த ஒரேவொரு கருத்தை நாம் சொல்லி நாம் இந்தச் செய்தியை நிறைவு செய்யலாம்.

தேவனுடைய மக்களுடைய பாதை: நிலத்தை உடையவர்களாய் இருப்பது, நிலமற்றவர்களாக, நிலத்தை இழந்தவர்களாக அவர்கள் நடப்பது, பிறகு தேவனிடமிருந்து நிலத்தைக் கொடையாகப் பெற்றுக்கொள்வது, நிலத்தைக் கைவசப்படுத்துவது, இறுகப் பற்றுவது, கைப்பற்றுவது, அபகரிப்பது, அது தேவனுடைய வழி அல்ல. நிலத்தை இழப்பது அல்லது நிலத்திற்குச் சமானமானவற்றை இழப்பதுதான் தேவனுடைய வழி. அந்த இழக்கின்ற வழியின் மூலமாகத்தான் தேவன் நிலத்தைக் கொடையாகத் தேவனுடைய மக்களுக்குக் கொடுக்கின்றார்.

தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை கைப்பற்றுகின்ற, இறுகப் பற்றுகின்ற, அபகரிக்கின்ற, வசப்படுத்துகின்ற வாழ்க்கை அல்ல. தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை தேவனிடத்திலிருந்து பெற்ற கொடையான வாழ்க்கை.

கிறிஸ்துவின் முன்மாதிரி

புதிய ஏற்பாட்டிலே இந்த நிலம், செய்தியினுடைய தலைப்பிலே பார்த்ததுபோல நில உடைமையிலிருந்து நில இழப்பு என்கின்ற வழியின்வழியாக நிலக்கொடையை எப்படிப் பெறுவது என்பதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய வாழ்க்கையிலே Demonstrate பண்ணுகின்றார். அவர் நிலத்தை உடையவராக இருந்தார். அவர் எல்லாவற்றையும் உடையவராக இருந்தார்.

பிலிப்பியர் இரண்டாம் அதிகாரம் 6 முதல் 11 முடிய உள்ள வசனங்களை நாம் வாசிப்போம். அந்தப் பகுதியை முழுவதையும் வாசிப்போம். வாசித்துவிட்டு சில காரியங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, நாம் நிறைவு செய்யலாம்.

“அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால், தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”

ஆபிரகாம் நிலத்தை உடையவனாக இருந்தான். தேவன் “அதிலிருந்து வெளியேறு, நான் உனக்கு வேறு நிலத்தைத் தருவேன்” என்று வாக்குறுதி அளித்தார்.

இஸ்ரவேல் மக்கள் அடிமை நிலத்தில் இருந்தார்கள். “நான் உனக்கு ஒரு நல்ல நிலத்தைத் தருவேன். நான் கொடையாகத் தருவேன்” என்று தேவன் வாக்குறுதி அளித்தார். கல்தேயருடைய நிலமோ, அடிமை நிலமோ, அது தேவன் இல்லாத நிலம். ஆகவே, அதிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டியிருந்தது.

ஊனுருவான குமாரன்

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அப்படி அல்ல. அவர் நிலத்தை உடையவராய் இருந்தார் என்றால், அவர் வானத்திற்கும், பூமிக்கும் ஆண்டவர்.

ஆனால், இந்த மனிதர்களை அவர்கள் வாழ்கின்ற அடிமை நிலத்திலிருந்து விடுவிப்பதற்காக அவர் இந்த அடிமை நிலத்தில், நாம் வாசித்ததுபோல, யோவான் ஒன்றாம் அதிகாரம் 14 ஆம் வசனத்திலே “அந்த வார்த்தை ஊனுருவானார்.” அவர் மனிதனோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். மனிதனோடு தன்னை ஒன்றுபடுத்திக்கொண்டார். பாவம் ஒன்றைத்தவிர, எல்லாவற்றிலும் அவர் மனிதனாக வாழ்ந்தார்.

இரண்டு கொரிந்தியர் ஐந்தாம் அதிகாரத்திலே, “பாவம் அறியாத அவரைத் தேவன் நமக்காகப் பாவமாக்கினார்” என்று வாசிக்கின்றோம். ஆகவே, அவர் நிலம் உடையவராக இருந்தார். அவரிடத்தில் எந்த ஆசீர்வாதங்களும் குறைவில்லை.

ஆனால், அவரில் இந்த முழு உலகமும் ஆசீர்வதிக்கப்படுவதற்காக, அவரில் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எல்லாம் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக, தேவனுடைய மக்கள் எல்லாரும் பழைய படைப்பிலிருந்து புதிய படைப்பாக மாறுவதற்காக, பழைய நிலத்திலிருந்து பகைவனால், சாத்தானால் ஆளுகை செய்யப்படுகிற மரணமும், பாவமும், அதனுடைய விளைவுகளும் ஆளுகை செய்கின்ற பழைய படைப்பிலிருந்து உயிர்த்தெழுந்த படைப்பிற்குள், புதிய படைப்பிற்குள், ஜீவனின் படைப்பிற்குள், நித்திய ஜீவனின் படைப்பிற்குள் தேவனுடைய மக்களைக் கொண்டுவருவதற்காக, அவர் தம்முடைய நிலத்தை இழந்தார்.

தம்மைத்தாமே வெறுமையாக்கிய கிறிஸ்து

ஆகவே, பிலிப்பியர் இரண்டில் பார்க்கிறோம். அவர் தேவனுடைய ரூபமாய் இருந்தும், அவர் எல்லாவற்றையும் உடையவராக இருந்தும், அவர் ஒன்றையும் இழக்க வேண்டிய அவசியம் இல்லை.

தேவனுக்குச் சமமாய் இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், அவர் தம்முடைய நிலத்தை “இருப்பதை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். இல்லாததைக் கைப்பற்ற வேண்டும். கைவசப்படுத்த வேண்டும். அல்லது அபகரித்துக்கொள்ள வேண்டும்” என்று நினைக்கவில்லை.

அது சத்துருவினுடைய வழி. பிறருடைய காரியங்களை அபகரித்தால்தான் நாம் ஆசீர்வாதமாக வாழ முடியும். Manage பண்ணினால்தான் ஆசீர்வாதமாக வாழ முடியும். ரொம்பக் கூர்மையாகத் திட்டமிட்டு அல்லது துல்லியமாகத் திட்டமிட்டு அல்லது சாதுரியமாகத் திட்டமிட்டால்தான் நாம் இதைப் பெற முடியும் என்பது தேவனுடைய வழி அல்ல.

அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி — இரண்டாவது கட்டம். முதலாவது கட்டம்: அவர் நிலம் உடையவராக இருந்தார். இரண்டாவது: அவர் நிலத்தை இழந்தார். மனமுவந்து நிலத்தை இழந்தார்.

ஆபிரகாம் இழந்ததுபோல, இஸ்ரவேல் மக்கள் அந்த அடிமை நிலத்தை இழந்ததுபோல, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய நிலத்தை இழந்தார். அவர் அடிமையின் ரூபம் எடுத்து மனிதர் சாயலானார். எல்லாவற்றையும் இழந்தார்.

ஆகவே, உயிர்த்தெழுதலில் ஒரு புதிய நிலத்தைப் பெறுவதற்குத் தேவன் தெரிந்துகொண்ட ஒரே வழி சிலுவையின் வழிதான். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அந்த வழியில்தான் புதிய நிலத்தைப் பெற்றுக்கொண்டார்.

நாம் வாசிக்கின்றோம். அவர் மரணபரியந்தம், அதுவும் நாம் அடிக்கடி சொல்வதுபோல கேவலமான, இழிவான, கேடான, வெட்கக்கேடான சிலுவையின் மரண பரியந்தம், தம்மைத் தாழ்த்தினார். ஆகவே, தேவன் எல்லாவற்றுக்கும் மேலாக அவரை உயர்த்தினார். அவர் இழந்தார். அவர் நிலத்தை உடையவராக இருந்தார். அவர் நிலத்தை இழந்தார். ஆகவே, தேவன் அவருக்கு நிலத்தைக் கொடையாகக் கொடுத்தார்.

பரம் உயர்த்தப்பட்ட குமாரன்

எந்த நிலத்தை? வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோர் எல்லாருடைய முழங்கால்களும் முடங்கும்படிக்கும் “இயேசுவே கர்த்தர்” என்று நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்படிக்கும், அவர் exalted Son, பரம் உயர்த்தப்பட்ட மனிதனாக. அவர் நித்திய குமாரன், அவர் ஊனுருவான குமாரன். ஆனால், இப்பொழுது அவர் மனிதன் என்ற முறையிலே பரம் உயர்த்தப்பட்ட குமாரனாக உயர்த்தப்பட்டார். அது தேவனுடைய கொடை.

இரண்டு கொரிந்தியர் எட்டாம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தை நான் கடந்தமுறை பேசும்போது மேற்கோள் காட்டினேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே, “அவர் ஐசுவரியம் உடையவராய் இருந்தும் தம்முடைய தரித்திரத்தினாலே நாம் ஐசுவரியவான்கள் ஆகும்படிக்கு நம் நிமித்தம் தரித்திரர் ஆனாரே.”

அவர் எல்லாம் உடையவராக இருந்தார். அவர் சர்வ வல்லமை உள்ள கர்த்தர். ஆனால், ஒன்றும் இயலாதவர்போல பலவீனத்திலே அவர் சிலுவையில் அறையப்பட்டார். அவர் எல்லாவற்றையும் உடையவர். பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது. வானாதி வானங்களும் அதிலுள்ள யாவும் கர்த்தருடையது. எல்லாச் செல்வங்களும் உடையவர். ஆனால், அவருடைய தரித்திரத்தினாலே நாம் ஆசீர்வதிக்கப்படும்படிக்கு நம் நிமித்தம் தரித்திரர் ஆனார்.

அவர் இழந்தது, அவருடைய இழப்பினாலே ஒரு புதிய நிலத்தை அபரிமித கிறிஸ்துவில் தேவனுடைய மக்கள் எல்லாரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் தரித்திரர் ஆனார். ஏசாயா 52, 53 ஆம் அதிகாரங்களிலேகூட இதைப்பற்றி எழுதியிருக்கின்றது.

முடிவுரை

ஆகவே, முடிவுரையாகத் தேவனுடைய மக்களாகிய நாம் ஒரு பழைய நிலத்திலிருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மூலமாக ஒரு புதிய நிலத்திற்குப் புதிய படைப்பிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றோம். ஒரு கணப்பொழுதில் நாம் புதிய படைப்பாக மாற்றப்பட்டோம் என்பது உண்மைதான். ஆனால், அது நம்முடைய வாழ்க்கையில் மெய்ப்படுவது என்பது கணப்பொழுதில் அல்ல. அது ஒரு நிகழ்முறை. அது ஒரு கணப்பொழுதில் நிகழ்முறை.

நீண்ட நெடிய வாழ்க்கையைத் தேவன் தம்முடைய மக்களுக்குத் தருவது, அவர்கள் உண்மையில் புதிய நிலத்தில் வாழ்ந்தாலும், புதிய நிலத்திற்கு வந்தாலும், மெய்யில், நிஜத்தில், அவர்கள் உண்மையாகவே, இந்தப் புதிய நிலத்திற்கு உரியவர்களாய், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முதன்மைப்படுத்துகிறவர்களாய், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் குணத்தை உடையவர்களாய், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வாழ்க்கையில் வெளிப்படுகின்ற மக்களாய், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் வாழ்கின்ற மக்களாய், வெறுமனே இந்த நிலத்தின் வளங்களை நம்பி வாழ்கின்றவர்கள் இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்களுக்கு வளமாக, செல்வமாக இருக்கின்றார்.

தங்கள் வாழ்க்கையின் எல்லா நிகழ்ச்சிகளிலும், சம்பவங்களிலும், அனுபவங்களிலும் அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தங்களுக்குள் விளைவிக்கின்றார்கள். உருவாக்குகின்றார்கள். தாங்கள் விளைவித்த, தாங்கள் அனுபவித்த கிறிஸ்துவைத் தேவனுடைய மக்களுக்கும் தேவனை அறியாத மக்களுக்கும் பகிர்ந்துகொடுக்கின்றார்கள். இது இழக்கின்ற ஒரு வாழ்க்கை. இது விந்தையானது அல்ல.

அது இழந்த, சுருக்கமான அல்லது வருத்தம் நிறைந்த அல்லது நெருக்கமான அல்லது குறுக்கமான வழியாகத் தென்பட்டாலும், ஆபிரகாமுக்குத் தேவன் போதுமானவராய் இருந்தது போல, இஸ்ரவேல் மக்களுக்கு அவர் மன்னாவாக, கன்மலையாக, எல்லாமுமாய் இருந்ததுபோல, இன்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய அடிச்சுவடுகளில் சிலுவையின் பாதையில் மற்றவர்களுக்கு உயிர்த்தெழுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதற்கு நடக்கின்ற தேவனுடைய மக்களுக்கு அவர், நாம் சொன்னதுபோல, இயற்கையான நன்மைகள் அல்ல. ஆனால், ஆவிக்குரிய நன்மைகள்.

மீண்டும் சொல்கிறேன்: ஆவிக்குரிய நன்மைகள் என்றால் நம்முடைய பிள்ளைகள் படிக்க மாட்டார்கள். வேலைக்குப் போக மாட்டார்கள். நமக்கு ஒரு சாப்பாடு கிடைக்காது. அப்படியெல்லாம் நாம் சொல்லவில்லை.

போதுமானதும் நிறைவானதும் திருப்தியானதும் ஓய்வு நிறைந்ததுமான நன்மைகளைத் தேவன் நமக்குத் தருவார். வருத்தம் இல்லாமல் இல்லை. இழப்பு இல்லாமல் இல்லை. நெருக்கம் இல்லாமல் இல்லை. சுருக்கம் இல்லாமல் இல்லை. அவைகளும் இருக்கும்.

40 நாட்களோ, 40 ஆண்டுகளோ நம்முடைய வாழ்க்கையின் பாதை அப்படி இருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட பாதையின் நடுவிலே நாம் அதே உபாகமம் எட்டில் பார்ப்பதுபோல, “உங்கள் பாதங்கள் வீங்கவும் இல்லை. உங்கள் பாதரட்சைகள் தேயவும் இல்லை. உங்களுடைய வஸ்திரங்கள் பழையதாகவும் இல்லை.”

நம் வாழ்க்கையில் நேரிடுகின்ற வருத்தங்களும், நெருக்கங்களும், சுருக்கங்களும், “எப்படி இவர்கள் தப்பிப் பிழைப்பார்கள்?” என்பதுபோன்று இருக்கலாம்.

ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடைய உயிர்த்தெழுந்த வல்லமை சிலுவையின் பாதை வழியாய்ச் சென்று உயிர்த்தெழுந்த நன்மைகளை நாமும் நம் மூலமாய்ப் பிறரும் பெறுவதற்கு வழிவகுக்கும்.

ஆசீர்வாதமான வாழ்க்கை

கர்த்தர்தாமே இந்த வார்த்தைகளைக்கொண்டு நம்மைத் திடப்படுத்துவாராக. ஆபிரகாமைப்போல ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள தேவனுடைய மக்களுக்கும், உறவினர்களுக்கும், பூமியில் உள்ள பல மக்களுக்கும் ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ தேவன் நம்மைப் பலப்படுத்துவாராக.

நாம் நிலம் உடையவர்களாய் இருக்கலாம். ஆனால், அவைகளை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக நிலத்தை நாம் இழக்கலாம். நாம் நிலம் என்று சொல்லும்போது, இந்த உலகத்தின் எந்த நன்மைகளாக இருந்தாலும் சரி. நாம் இழந்ததைப் பல மடங்கு நன்மையாகக் கொடையாகத் தேவன் நமக்குத் தருவார். ஆமென்.