தேவன் சர்வவல்லமையுள்ளவர்; ஆனால் அவர் தம்முடைய வல்லமையை எப்போதும் நேராகவும், நேர்முகமாகவும், நாம் எதிர்பார்க்கிற விதத்திலும் செயல்படுத்துவதில்லை. பல வேளைகளில் தேவனுடைய வல்லமை மறைவாகவும், மறைமுகமாகவும் செயல்படுகிறது.
இரட்சிக்கும் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் இந்த உண்மையை மிகத் தெளிவாகக் காண்கிறோம். அவர் தம்முடைய அரசை உலகத்தின் வல்லமையால் நிறுவாமல், சிலுவை, மரணம், உயிர்த்தெழுதல் என்ற வழியின்மூலம் தேவனுடைய இரட்சிப்பை நிறைவேற்றினார்.
மேசியா மறைமுகமான வல்லமையால் இரட்சிப்பதுபோல, தேவனுடைய மக்களும் மறைமுகமான வல்லமையாலேயே இரட்சிக்கப்படுகிறார்கள். நம்முடைய பலவீனம், தரித்திரம், உபத்திரவம் ஆகியவை தேவனுடைய வல்லமை செயல்படவில்லை என்பதற்கான அடையாளங்கள் அல்ல. “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும்” என்பது தேவனுடைய வழியை நமக்கு வெளிப்படுத்துகிறது.
தேவனுடைய ஞானம், வல்லமை, நீதி, பரிசுத்தம், மீட்பு ஆகிய அனைத்தும் கிறிஸ்துவில் நமக்காக ஊனுருக்கொண்டுள்ளன. ஆகவே, நம்முடைய சூழ்நிலைகள் மாறாவிட்டாலும், “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்” என்று ஆபகூக்கைப்போல நாம் சொல்ல முடியும். தேவனுடைய மறைமுக வல்லமை தாமதிப்பதுபோல் தோன்றினாலும், “கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.”
தேவனுடைய மறைவான இரட்சிக்கும் வல்லமை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, தேவனுடைய மக்கள், பரிசுத்தவான்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பின் வாழ்த்துக்கள்.
வேதத்திலிருந்து ஒரு வசனத்தை வாசிப்போம். ஏசாயா 45-ஆம் அதிகாரம், 15-ஆம் வசனம்:
“இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்.”
மீண்டும் வாசிக்கிறேன். ஏசாயா 45:15:
“இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்.”
தொடக்க ஜெபம்
நாம் ஜெபிப்போம்.
எங்கள் ஆண்டவராகிய இயேசுவே, நீர் சர்வவல்லமையுள்ள தேவனாயிருந்தும், வெறுமையான மனிதனுடைய கோலத்திலே, மனுவுருவானீர். உம்மைத் தாழ்த்தி, சிலுவையின் மரணபரியந்தம் கீழ்ப்படிந்து, உம்மைத் தாழ்த்தினீர், ஆண்டவரே. மெய்யாகவே நீர் உம்மை மறைத்துக்கொண்ட தேவனாய் இந்தப் பூமியில் வாழ்ந்தீர். மரித்து உயிர்த்தெழுந்தபின்பும் கூட, தேவனுடைய அரசில் மறைவான அரசராய் நீர் செயலாற்றிக்கொண்டிருக்கிறீர்.
உம்மையும், உம்முடைய இரட்சிப்பின் வழிகளையும் காண, உம்முடைய வார்த்தையைக்கொண்டு எங்களுக்குக் கற்பிப்பீராக.
கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், பிதாவே. ஆமென்.
தேவன் சர்வவல்லமையுள்ளவர்
தேவன் வல்லமையுள்ளவர். தேவன் சர்வவல்லமையுள்ளவர். அல்லேலூயா. தேவன் சர்வவல்லமையுள்ளவராய் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆகவே, பொதுவாக மனிதர்கள் தேவனைப்பற்றிக் கேள்வி கேட்கும்போது, “அவர் சர்வவல்லவராய் இருந்தால்...” என்றுதான் தொடங்குவார்கள். அவர் சர்வவல்லவராய் இருந்தால், ஏன் இதை அவர் செய்கிறார்? அனுமதிக்கிறார்? ஏன் இதை அவர் செய்யவில்லை அல்லது அனுமதிக்கவில்லை?
இது தேவனை அறியாத மக்களுடைய கேள்வி மட்டுமல்ல. பல வேளைகளில், தேவனை அறிந்த தேவ மக்களுடைய கேள்வியாய் இருக்கிறது. மிகச் சிறந்த எடுத்துக்காட்டு யோபு. ஆனால் நாம் வேதம் முழுவதும் தேவனுடைய வல்லமையைப்பற்றி ஒரு மிக முக்கியமான உண்மையைப் பார்க்கிறோம்.
ஏசாயா 45-ன் பின்புலம்
ஏசாயா 45-ஆம் அதிகாரத்தின் பின்புலத்தை நீங்கள் பார்க்க வேண்டும். தேவனுடைய மக்கள், இஸ்ரவேல் மக்கள், பாபிலோன் தேசத்திலே சிறைப்பட்டுப்போய், அவர்கள் சிறையிருப்பில் இருக்கும்போது, மீண்டும் எப்படி அவர்கள் அந்தச் சிறையிருப்பிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற கேள்வி அந்தத் தீர்க்கதரிசிக்கு இருக்கின்றது.
தேவன் நேராகவும், நேரடியாகவும், நேர்முகமாகவும், நேர்கோட்டிலும் தம்முடைய சர்வவல்லமையை வெளிக்காண்பிப்பதுபோல் தோன்றவில்லை. அப்படியென்றால், தேவன் தம்முடைய வல்லமையை எப்படி வெளிக்காண்பிக்கின்றார்? தேவன் தம்முடைய வல்லமையை மறைவாகவும், மறைமுகமாகவும், வளைகோட்டிலும் காண்பிக்கின்றார்.
ஆகவே, இந்தச் செய்தியினுடைய கருப்பொருள்: தேவனுடைய மறைவான இரட்சிக்கும் வல்லமை.
தேவன் தம்முடைய மக்களை இரட்சிப்பதற்கு வல்லமையுள்ளவராய் இருக்கிறார். ஆனால் தேவன் தம்முடைய வல்லமையை நேராகவும், நேரடியாகவும், நேர்கோட்டிலும், நாம் தமிழிலே சொல்வதுபோல, “வெட்டு ஒன்று, துண்டு இரண்டு” என்ற நடையிலே, என்ற பாணியிலே இயக்குவதில்லை. தேவன் தாமதிக்கிறார். தேவன் பொறுமையாய் இருக்கிறார். தேவன் மிக மெல்ல மெல்ல வினையாற்றுகிறார். ஆனால் அவர் தம்முடைய இலக்கை எட்டுகின்றார்.
பேதுரு தன்னுடைய இரண்டாவது கடிதத்திலே அதை எழுதுகின்றார். பரியாசக்காரர்கள் வந்து இப்படிக் கேட்பார்கள்: “உலகம் உண்டானது முதல் உலகம் அப்படித்தான் இருக்கின்றது. நீங்கள் என்ன, இயேசு கிறிஸ்து இரட்சகராக இருக்கிறார், அவர் வந்து இந்த முழு உலகத்தையும் இரட்சித்து தேவனுடைய அரசை நிறுவப்போகிறார் என்று சொல்லுகின்றீர்களே; ஒன்றும் மாறினதுபோல் இல்லையே?”
அதற்குப் பதில் கொடுக்கும்வண்ணமாக பேதுரு சொல்லும்போது, அவர் ஒருநாள் பெருவெள்ளத்தைக்கொண்டு இந்தப் பூமியை நியாயந்தீர்த்தார். ஆனால் மீண்டும் ஜலப்பிரளயம்போல நேரடியாக நியாயந்தீர்ப்பதில்லை.
தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக்கொண்டு இந்த உலகத்தை இரட்சித்திருக்கிறார். தேவனுடைய பார்வையிலே ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாளைப்போலவும், ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகளைப்போலவும் இருக்கின்றது. சிலர் எண்ணுவதுபோல அவர் தாமதிப்பதில்லை. மாறாக, எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்று அவர் விரும்புகின்றார்.
நேர்முக வல்லமையா? மறைமுக வல்லமையா?
ஆகவே, இந்தச் செய்திக்கு இன்னொரு தலைப்பும்கூடக் கொடுக்கலாம்: தேவனுடைய நேர்முக வல்லமையா? மறைமுக வல்லமையா? அல்லது, நேர்முக வல்லமையும் மறைமுக வல்லமையும். தேவனுடைய நேரான வல்லமையா? அல்லது மறைவான வல்லமையா?
தொன்றுதொட்டு இன்றுவரைக்கும், தேவனுடைய வல்லமை அவருடைய மக்களை இரட்சிப்பதற்காக நேர்கோட்டிலும், நேரான, நேர்முகமான வல்லமையாகத் தேவன் செயல்படுத்துவதில்லை. இது பலருக்கு இடறுதலாக இருக்கிறது. தேவனை அறியாதவர்களுக்கும், சில வேளைகளில் தேவனுடைய மக்களுக்கும்கூட.
நேர்முக வல்லமை — ஒரு சிறிய எடுத்துக்காட்டு
நேர்முக வல்லமை, மறைமுக வல்லமை என்பதை விளக்குவதற்கு நான் ஒரு சிறிய எடுத்துக்காட்டைச் சொல்கிறேன். ஒருவேளை ஒரு குழந்தை மேஜையில் ஏறி, மேஜை விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே அந்தக் குழந்தையின் பெற்றோர், “இது மேஜை. நீ விளிம்பில் நிற்கிறாய். இதிலிருந்து விழுந்தால் உன் கால் முறிந்துவிடும்” என்றெல்லாம் சொல்வதில்லை. மாறாக, நாம் குழந்தையை அப்படியே தூக்கி, மேஜையிலிருந்து கீழே இறக்கி வைத்துவிடுவோம்.
இது நேர்முக வல்லமை. ஒரு தகப்பன் தன்னுடைய வல்லமையை நேராக, நேர்கோட்டில், நேர்முகமாகப் பயன்படுத்துகிறான்.
வளர்ந்த மகனிடம் அதே வல்லமை செயல்படுமா?
ஒருவேளை ஒரு மகன் 17, 18 வயது. தகப்பன் சொல்கிறான்: “உனக்கு இன்னும் license எடுக்கவில்லை. ஆகவே, நீ என்னுடைய two-wheeler-ஐ, என்னுடைய motorcycle-ஐ பயன்படுத்தக்கூடாது.”
அதை மீறி அந்த மகன் ஒரு நாள் சாயங்காலம் தன்னுடைய தகப்பனுடைய motorcycle-ஐ எடுத்துக்கொண்டுபோய், வீடு வருவதற்கு 12 மணி ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்தத் தகப்பன் என்ன செய்வான்?
நேர்முக, நேரான, நேர்கோட்டு வல்லமையைப் பயன்படுத்துவதாய் இருந்தால், நாம் தமிழிலே colloquial-ஆக சொல்வதுபோல, நாலு சாத்து சாத்தலாம். அல்லது, கொஞ்சம் பண்பாட்டோடு அவனை நாம் திட்டுவோம். குரலை உயர்த்தித் திட்டுவோம்: “நான் உன்னை என்னுடைய motorcycle-ஐ எடுக்காதே என்று சொன்னேன். நீ எடுத்தாய். இனிமேல் எடுத்தால் விபரீதம் விளையும்.”
ஒரு வாரம் கழித்து, தகப்பன் ஏதோ வெளியூர் போயிருக்கிறார். அந்த வேளையில், மறுபடியும் அந்த 17 வயது மகன், license இல்லாதவன், motorcycle-ஐ எடுத்துக்கொண்டு தன்னுடைய நண்பர்களோடு உல்லாசமாய் போய்வந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது இந்தத் தகப்பன் எப்படித் தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்துவார்?
முந்தி இருந்த குரலைவிட அதிகமாகக் குரலை உயர்த்தி, அல்லது தேவைப்பட்டால் அதற்கு மேலாக, இனிமேல் குரலை உயர்த்தவே முடியாது, தொண்டை வலிக்க, தொண்டை தண்ணீர் போக அவனைத் திட்டலாம்.
அவனுக்கு 18 வயது ஆகிறது. 19 வயது ஆகிறது. இப்போது, “தோளுக்கு மேல் வளர்ந்தவன் தோழன்.” இப்போதும் அதைச் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். வண்டி எடுத்துக்கொண்டுபோய் அவர் 12 மணிக்கு வீட்டுக்கு வருகிறார், அல்லது ஒரு மணிக்கு வீட்டுக்கு வருகிறார்.
அடிக்க முடிந்தால் அந்தத் தகப்பன் அந்த மகனை அடிப்பான். ஆனால் இப்போது ஒருவேளை அந்த மகன் தகப்பனைவிட பலசாலியாக இருக்கின்ற வாய்ப்பு உண்டு. நேராக, நேர்முகமாக, நேர்கோட்டிலே செலுத்துகின்ற வல்லமை இப்பொழுது அந்த மகனை, அவன் போகின்ற பாதையிலிருந்து தப்புவிக்குமா என்றால், அது தப்புவிக்காது.
இங்கு மறைமுகமாகவும், மறைவாகவும்தான் வல்லமை செல்லுபடியாகும்.
நோவாவின் காலத்தில் நேர்முக வல்லமை
தேவன் ஒரேவொருமுறை இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்காக தம்முடைய வல்லமையை நேராகவும், நேர்முகமாகவும், நேர்கோட்டிலும் கடுமையாகச் செலுத்தினார் — நோவாவின் காலத்திலே.
ஆனால் அதற்காகத் தேவன் வருந்துகின்றார். இனிமேல் என்னுடைய வல்லமையை நேராகவும், நேர்முகமாகவும், நேர்கோட்டிலும் நான் செலுத்துவதில்லை என்று மனிதர்களோடு உடன்படிக்கை செய்கின்றார்.
அன்றுதொட்டு இன்றுவரை, தேவன் தம்முடைய படைப்பை இரட்சிப்பதற்கு — தேவனுடைய படைப்பை அவருடைய பகைவனாகிய சாத்தான் சிதைத்துக்கொண்டும், சீரழித்துக்கொண்டும், கெடுத்துக்கொண்டும் இருக்கின்றான். தேவன் இதை இரட்சிக்க விரும்புகின்றார்.
ஆதியாகமத்திலே தேவனுடைய படைப்பானது சிதைந்துபோனது, சீர்கெட்டுப்போனது, சீரழிந்துபோனது. அது தொடர்ந்து சிதைந்துகொண்டிருக்கிறது. ஆனால் தேவனுடைய இரட்சிப்பின் திட்டம், அந்தப் பழைய படைப்பை புதிய படைப்பாக, ஒரு புதிய நகரமாக, ஒரு பரம நகரமாக, பரம தேசமாக, பரம அரசாக மாற்ற வேண்டும் என்பது.
ஏன் அதைத் தேவன் தம்முடைய நேரான, நேர்முகமான, நேரடியான, அளவற்ற ஆற்றலை வைத்துக்கொண்டு ஒரு கணப்பொழுதில் செய்துவிடக்கூடாது? ஏன் இத்தனை ஆயிரம் ஆண்டுகள்? ஏன் இவ்வளவு தாமதம்?
இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியாது. உண்மை என்னவென்றால், இந்தக் கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியாது. ஆனால் தேவனுடைய மக்கள் தேவனுடைய வழியை, தேவனுடைய strategy-ஐ அறிந்துகொள்ள வேண்டும்.
செய்தியின் மூன்று குறிப்புகள்
நான் மூன்று குறிப்புகள் சொல்வேன். ஆனால் முதல் குறிப்பில் மட்டும்தான் பெரும்பாலான நேரத்தைச் செலவிட விரும்புகின்றேன்.
முதலாவது குறிப்பு: மறைமுகமான வல்லமையால் இரட்சிக்கும் மேசியா.
மறைவான, மறைமுகமான, வளைகோட்டில் என்றெல்லாம் பயன்படுத்துவதற்குப்பதிலாக, நான் “மறைமுகமான வல்லமை,” “நேர்முகமான வல்லமை” — Direct Power, Indirect Power — இந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்துகின்றேன்.
மேசியா இரட்சிக்கின்றார். ஆனால் எப்படி இரட்சிக்கின்றார்? தம்முடைய மக்களை, அல்லது தாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட மக்களை, தம்முடைய மறைமுகமான வல்லமையால்தான் இரட்சிக்கின்றார்.
தேவன் தம்முடைய மக்களை இரட்சிப்பதற்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட வழி சிலுவை. அது நேர்முகமான வல்லமையான வழி அல்ல. பார்வைக்கு அது வல்லமையே இல்லாத, பலவீனமான வழியாகத் தோன்றும். போக்கற்றவருடைய வழியாகத் தோன்றும் — சிலுவையின் வழி.
ஆனால் இந்த மேசியா மக்களை இரட்சிப்பதற்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட வழி இந்தப் பலவீனமான வழி, அல்லது நாம் பயன்படுத்துகின்ற வார்த்தை, மறைமுகமான வல்லமையின் வழி. மனிதர்கள் “பலவீனம்” என்று சொல்வதை நாம் வேதத்தின்படி எப்படி வருணிக்க வேண்டும், சித்தரிக்க வேண்டும் என்றால் — மறைமுகமான வல்லமை.
மறைமுகமான வல்லமை பார்வைக்கு வல்லமைபோல் தென்படாது, தோன்றாது. “மறைமுகமான வல்லமை” என்பதை சில பேர் ஒரு euphemism — “ஓ, வல்லமையே இல்லை; இது பலவீனம் என்பதற்கு மங்கல வழக்காக ‘மறைமுகமான வல்லமை’ என்று பயன்படுத்துகிறீர்களா?” என்றுகூட அவர்கள் நம்மை இகழ்ச்சியாக, பரியாசமாக, கேலியாகப் பேச முடியும். தேவன் அந்தக் கேலியைப் பொறுத்துக்கொள்கின்றார்.
முதலாவது குறிப்பு: மறைமுகமான வல்லமையால் இரட்சிக்கும் மேசியா.
இரண்டாவது குறிப்பு: மேசியா யாரை இரட்சிக்கிறார்? மக்களை இரட்சிக்கிறார், மனிதர்களை இரட்சிக்கிறார், தேவ மக்களை இரட்சிக்கிறார். எப்படி இரட்சிக்கிறார்? மறைமுகமான வல்லமையால் இரட்சிக்கப்படும் தேவனுடைய மக்கள்.
தேவனுடைய மக்கள் அவருடைய மறைமுகமான வல்லமையைக்கொண்டுதான் இரட்சிக்கப்படுகிறார்களே தவிர, தாங்கள் இரட்சிக்கப்படுவதற்கு நேர்முகமாக, நேரடியான, பிரம்மாண்டமான, பிரம்மிக்கத்தக்க, பகட்டான அவருடைய வல்லமை வரும் என்று தேவனுடைய மக்கள் ஒருநாளும் எதிர்பார்க்கக்கூடாது.
ஆகவே, இரண்டாவது குறிப்பு: மறைமுக வல்லமையால் இரட்சிக்கப்படும் தேவனுடைய மக்கள்.
மூன்றாவதும் முடிவுரையுமான குறிப்பு: கிறிஸ்துவில் மறைந்துள்ள தேவனுடைய வல்லமை.
தேவனுடைய வல்லமை கிறிஸ்துவில் ஊனுருக்கொண்டுள்ளது. ஆனால் எப்படி ஊனுருக்கொண்டுள்ளது? மறைவாக ஊனுருக்கொண்டுள்ளது.
நாம் ஒரு பாடலைப் பாடுவதுண்டு: “ஊனில் இறைவன் உருவே” என்று ஒரு பத்தி செல்லும்.
இந்த மூன்று குறிப்புகளிலே என்னுடைய முதலாவது குறிப்பில்தான் நாம் அதிகமான நேரம் செலவிட விரும்புகிறோம். அதைப் பார்ப்போம்.
1. மறைமுகமான வல்லமையால் இரட்சிக்கும் மேசியா
இந்தப் பழைய படைப்பை — பாவமும் மரணமும் சிதைத்துக்கொண்டும், கெடுத்துக்கொண்டும், சீரழித்துக்கொண்டும், அதிலே சிக்கித் தவித்துக்கொண்டிருந்த மனிதர்களை — பாவத்தின் பிடியிலிருந்தும், மரணத்தின் பிடியிலிருந்தும், சாத்தானுடைய எல்லாத் துணைப் பகைவர்களின் பிடியிலிருந்தும் இரட்சிப்பதற்காக, விடுவிப்பதற்காக, முழுமையாக்குவதற்காக ஒரு மேசியா வருவார் என்பது தேவனுடைய வாக்குறுதி.
இஸ்ரவேல் மக்கள் அதை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் எப்படிப்பட்ட மேசியாவை தேவன் வாக்குறுதி செய்திருந்தார் என்பதை அவர்கள் அறியவில்லை.
ஏசாயா 53 — அசட்டை பண்ணப்பட்ட மேசியா
ஏசாயா 53-ஆம் அதிகாரத்தில் இந்த மேசியாவை வேதம் தீர்க்கதரிசனமாகச் சித்தரிக்கின்றது. அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்.
இரண்டு வசனங்களை வாசிக்கலாம். ஏசாயா 53-ஆம் அதிகாரம் 2, 3, 4-ஆம் வசனங்களை வாசிப்போம்.
“இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.”
முழு 53-ஆம் அதிகாரத்தையும் வாசிக்கலாம். அது இரட்சிக்கும் மேசியாவைப்பற்றிச் சித்தரிக்கின்றது. நாம் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. அதனுடைய பொருள் என்னவென்றால், நாம் கண்டுகொள்ளும் விதமாக அவரிடத்தில் ஒன்றும் கவர்ச்சியாக, பிரம்மாண்டமாக, பிரம்மிக்கும்விதமாக, பகட்டாக ஒன்றும் இல்லை.
மனிதர்கள் பிரம்மிக்கும்விதமாக, ஆச்சரியப்படும்விதமாக அவரிடத்தில் ஒன்றும் இல்லை. ஆகவே மனிதர்கள் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. இன்றைக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மிடையே வந்து போவார் என்றால், அவரை ஏதோ ஒரு குமாரன் நடுவிலே நடந்துபோகிறார் என்றுதான் நாம் பார்ப்போமேதவிர, மேசியா நம்மிடையே வாழ்கின்றார் என்று நாம் பார்க்கமாட்டோம்.
பிலிப்பியர் 2 — தம்மைத்தாமே வெறுமையாக்கிய மேசியா
அதே செய்தியை பவுல் பிலிப்பியர் இரண்டாம் அதிகாரம் 5 முதல் 8-ஆம் வசனங்களிலே கூற, நாம் வாசித்திருக்கின்றோம். வாசிக்க வேண்டாம். நான் அதனுடைய சுருக்கத்தைச் சொல்லிவிடுகின்றேன்.
“அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.”
போதும்.
மேசியா நேரான, நேர்முக, நேர்கோட்டு வல்லமையைச் செலுத்துகின்ற ஒரு மன்னாதி மன்னனாக, அரசராக வருவதாக ஏசாயா 53, பிலிப்பியர் 2 கூறவில்லை. அவர் அசட்டை பண்ணப்பட்டவர், சிறுமைப்பட்டவர்.
ஏன்? தேவனால் அவர் தண்டிக்கப்பட்டவர். மனிதர்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவர் வாய் திறவாமல் இருந்தார் என்றுதான் அவரை வருணிக்கின்றது.
பலவீனத்தில் வெளிப்பட்ட மேசியா
நான்கு நற்செய்தி நூல்களும், நம்முடைய நற்செய்தியும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை, இந்த மேசியாவை, அவர் பலவீனரென்று காட்டுகின்றது. அவர் பலமுள்ளவராக அல்ல, பலவீனராகக் காண்பிக்கின்றது.
2 கொரிந்தியர் 13:4-லே நாம் வாசிக்கின்றோம்: “அவர் பலவீனத்தினால் சிலுவையில் அறையப்பட்டார்.”
சிலுவையில் அறையப்படுகின்ற ஒரு மனிதன் — “ஓ, இவன் தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள இவனிடத்தில் திராணி இல்லை. இவனென்ன நம்மை இரட்சிக்கப்போகிறான்?” என்றுதான் மனிதர்கள் அன்றும் பேசினார்கள்; இன்றும் பேசுவார்கள்.
அவர் பலவீனராக வாழ்ந்தார். அவர் தரித்திரராக வாழ்ந்தார்.
2 கொரிந்தியர் எட்டாம் அதிகாரம், 9-ஆம் வசனத்தை நாம் அறிவோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையைப்பற்றிச் சொல்லும்போது:
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.”
அவர் பலவீனமானார். அவர் தரித்திரர் ஆனார். தம்முடைய சொந்த உறவினர்கள் பார்வையிலே அவர் பைத்தியமானார்.
மாற்கு மூன்றாம் அதிகாரம், 21-ஆம் வசனத்திலே வாசிக்கின்றோம். “அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.”
பவுல் இதைச் சுருக்கிச் சொல்லும்போது, 1 கொரிந்தியர் ஒன்றாம் அதிகாரம் 22, 23-ஆம் வசனத்திலே: யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்.
23-ஆம் வசனம்:
“நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.”
இந்த மேசியா வாழ்ந்தபோதும் சரி, மரித்து உயிர்த்தெழுந்து அவரைப்பற்றிய நற்செய்தி அறிவிக்கப்பட்டபோதும் சரி, அவர் பலவீனராகவும், தரித்திரராகவும், ஏன் பைத்தியமாகவும்கூட மக்களுக்கு, இந்த உலக மனிதர்களுக்கு, தோன்றுகின்றார்.
ஆகவே அவர் தம்முடைய நேரடி வல்லமையை, நேர்முக வல்லமையை படாடோபமாகக் காண்பிக்கவில்லை.
மேசியா — தேவனுடைய மக்களை இரட்சிக்க வருகின்ற அரசர்
மேசியா என்றால் தேவனுடைய மக்களை இரட்சிக்க வருகின்ற அரசர் என்றுதான் யூத மக்கள் சித்தரித்திருந்தார்கள். நாம் மத்தேயு இரண்டாம் அதிகாரத்திலே வாசிக்கின்றோம். மேசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த கீழ்த்திசை ஞானிகள் புறப்பட்டு வந்து யாரிடத்தில் போய் விசாரித்தார்கள்? ஏரோதுவினிடத்தில் போய் விசாரித்தார்கள்.
என்னவென்று விசாரித்தார்கள்? “யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார் என்று நாங்கள் அறிந்துகொண்டோம். யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே பிறந்திருக்கிறார்?”
யூதர்களுடைய எதிர்பார்ப்பு மட்டுமல்ல; பொதுவாக ஒரு மேசியாவை எதிர்பார்த்த எல்லா மனிதர்களின் எதிர்பார்ப்பும் அவர் ராஜாவாக வருவார் என்பதுதான். “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையின் தொடக்கமும் முடிவும்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை இரண்டு மிக முக்கியமான சம்பவங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு, நடுவிலே நாம் அடக்கலாம். தொடக்க நிகழ்ச்சியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வனாந்தரத்திலே சோதிக்கப்பட்டதையும், நிறைவான இறுதி நிகழ்ச்சியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரமேறினதையும் நாம் கருதலாம்.
வனாந்தரத்தில் வந்த சோதனை — எப்படிப்பட்ட அரசர்?
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வனாந்தரத்திலே சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, அந்தச் சோதனையினுடைய கருப்பொருள்: “நீர் அரசராக வந்த மேசியாவா, இல்லையா? நீர் உம்மை ராஜாவாக்கிக்கொள்ளும்” என்று அவன் சொல்கிறான்.
லூக்கா 4-ஆம் அதிகாரம் 1 முதல் 13-லே அந்தச் சோதனையைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. மத்தேயுவிலும் எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக 5 முதல் 8-ஆம் வசனங்களிலே, சாத்தான் இந்த உலகின் எல்லா அரசுகளையும் ஒரு நிமிடத்திலேயே அவருக்குக் காண்பித்து:
“இவையெல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் உமக்குத் தருகிறேன். இந்த உலகத்தை தேவஅரசாக மாற்றி, அரசராக ஆட்சி செய்வதற்குத்தான் வந்திருக்கிறீர். நானும் உமக்கே அந்த அரசாட்சியைக் கொடுக்கிறேன். நான் உமக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பிரியமானவனுக்கு நான் கொடுப்பேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாக இருக்கும்,” என்று சொன்னான்.
ஆகையால் சாத்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுக்கின்ற offer மிக attractive-ஆன ஒன்று. கவர்ச்சிகரமான offer. தமிழிலே ஒரு பழமொழி உண்டு: “நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டு பேரும் ஊதி ஊதிச் சாப்பிடலாம்” என்று.
“நீர் அரசராக வந்திருக்கிறீர். அரசாங்கம் இப்பொழுது என்னுடைய கைகளில் இருக்கிறது. நீர் என்னைப் பணிந்துகொண்டால் போதும். என்னுடைய வழிகளில் நடவும். நாம் இருவரும் ஒரு... அதற்குப்பின் என்ன? Alliance partners. ஆட்சியில் எனக்குப் பங்கு கொடுத்தால் போதும். நீர் அரசராக இருந்துகொள்ளும்.”
ஒரு கணப்பொழுதில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய அரசை இந்தப் பூமியிலே நிறுவியிருக்கலாம். ஆனால் அதற்குச் சாத்தான் கேட்ட விலை என்ன? “நீர் என்னைப் பணிந்துகொள்ள வேண்டும்.” அதுதான் அதற்கான கிரயம்.
ஆக, அந்தச் சோதனையின் மையமான கேள்வி என்ன? எப்படிப்பட்ட அரசராக, அல்லது எப்படிப்பட்ட தேவனுடைய அரசை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிறுவ விரும்பினார்? நேரடியான வல்லமையைக்கொண்டு.
“நீர் அரசர் என்றால் மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்”
இன்னொன்று சொல்கிறேன். நீர் அரசர் என்றால் என்ன செய்ய வேண்டும்? இந்த மக்களுக்கெல்லாம் உணவு கொடுக்க வேண்டும். முதலாவது, நீர் பசியாக இருக்கிறீர். இந்த ஒரு சில கற்களை நீர் அப்பங்களாக மாற்றும்.
அதில் மேலோட்டமாய்ப் பார்த்தால், அது அவருடைய வலிமையை — “உம்முடைய வலிமையை நீர் செயல்படுத்தும். உம்மிடத்தில் எவ்வளவு வல்லமை இருக்கிறது? எனக்குத் தெரியும், நீர் வல்லமையுள்ளவர்,” என்று.
ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்: “மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”
அதேபோல, “இந்த அரசையெல்லாம் உமக்குத் தருவேன், மகிமையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொல்லும்போது: “உன் தேவனாகிய கர்த்தரை ஒருவரையே நீ பணிந்துகொள்வாயாக. அவரில் மட்டுமே நீ அன்புகூருவாயாக” என்று.
ஆகையால், தம்முடைய முதல் நிகழ்ச்சியிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய நேரான, நேர்முகமான, நேரடியான வலிமையை எடுத்துக்கொள்ள மறுக்கின்றார்.
உயிர்த்தெழுதலுக்குப் பின்பும் நேர்முக வல்லமை இல்லை
அவருடைய வாழ்க்கையின் முடிவிலே மரித்து, உயிர்த்தெழுந்து, இப்பொழுது அவர் உயிர்த்தெழுந்துவிட்டார் என்று அவருடைய சீடர்களுக்குத் தெரியும்.
ஆகையால், அப்போஸ்தலர் நடபடிகள் ஒன்றாம் அதிகாரம் 3, 6 ஆகிய வசனங்களை வாசிக்கின்றோம். மூன்றாம் வசனத்தில் வாசிக்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு 40 நாட்கள் தம்முடைய சீடர்களுக்குத் தரிசனமாகி, அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய அரசுக்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேக தெளிவான எடுத்துக்காட்டுகளினாலே அவர்களுக்குத் தம்மை உயிருடன் இருக்கிறவராகக் காண்பித்தார்.
“நான் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்துவிட்டேன்” என்பதையும் காண்பிக்கின்றார். தேவனுடைய அரசு நிறுவப்பட்டுவிட்டது, வந்துவிட்டது என்று கூறுகின்றார். “நான் உயிர்த்தெழுந்துவிட்டேன். மரணத்தை வென்றுவிட்டேன்.”
தேவனுடைய அரசைப்பற்றி அவர் பேசுகிறார் என்றால், அதற்குப் பிரதியுத்தரமாக, மறுவினையாக அவர்கள் என்ன சொல்வார்கள்?
ஆறாம் வசனத்தில் நாம் அதை வாசிக்கின்றோம்:
“அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.”
நல்ல கேள்வி. நீர் மரித்தீர். ஆனால் உயிர்த்தெழுந்துவிட்டீர். தேவனுடைய அரசைப்பற்றி அதை நீர் நிரூபித்துவிட்டீர், உயிர்த்துவிட்டீர் என்று. தேவனுடைய அரசைப்பற்றி விளக்கமாய் நீர் சொல்லிவிட்டீர்.
ஆக, உம்முடைய அரசை இந்தப் பூமியில் நிறுவுகின்ற காலமா? இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுக்கின்ற காலமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்.
அவர்கள் அரசை எதிர்பார்த்தார்கள் — அவர் பரமேறினார்
அவர்கள் கேட்கும்போதே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்தப் பூமியிலே தம்முடைய அரசை நிறுவி, அரசராக இருந்துவிட்டாரா? அல்லது பூமியிலிருந்து இடம்பெயர்ந்துவிட்டாரா?
பூமியில் இருந்து அவர் இடம்பெயர்ந்துவிட்டார்.
குறைந்தபட்சம் இடம்பெயரும்போதாவது ஒரு ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான, பல லட்சக்கணக்கான மக்களைக் கூட்டி, அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவர் பரமேறியிருப்பார் என்றால், இந்த உலகம் நம்மை இகழ்ச்சியாகப் பேசாது, ஏசாது, பரியாசம் பண்ணாது.
ஆனால் தம்முடைய சீடர்களுக்குமுன்பாக அவர் பரமேறிச் சென்றுவிட்டார்.
தேவனுடைய மக்களுக்கு இது உச்சகட்டம். ஆனால் இந்த உலகின் பார்வையிலே, “நீங்கள் அவர் உயிர்த்தெழுந்தார் என்று கதை விடுகிறீர்கள். அவர் பரமேறிவிட்டார் என்று கதை விடுகிறீர்கள்.”
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மேசியாவாக, நேரான, நேர்முகமான, நேரடியான தன்னுடைய வலிமையை இந்தப் பூமியிலே காண்பிக்கவில்லை. அவர் காண்பிப்பார் என்று எதிர்பார்த்த நேரத்திலே கதை முடியப்போகிறது.
அவர் ராஜாவாக சிங்காசனத்திலே அமரப்போகிறார் என்று அப்போஸ்தலர்கள், நாம் காத்திருந்த, எதிர்பார்த்த சமயத்திலே அவர் காணாமல் போய்விட்டார். நாம் அதை பரமேறுதல் என்று சொல்லுகின்றோம்.
தொடக்கம்முதல் முடிவுவரை — மறைமுகமான வல்லமை
இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையே — முதல் சம்பவம், தொடக்க சம்பவம், இறுதி சம்பவம் — இந்த இரண்டு சம்பவங்களுக்கு நடுவிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கை முழுவதுமே, அவர் தம்முடைய இரட்சிக்கும் வல்லமையை நேர்கோட்டில், நேராக, நேர்முகமாகப் பயன்படுத்தவில்லை. செயல்படவில்லை. அவர் மறைவாகவும், மறைமுகமாகவுமே பயன்படுத்துகின்றார்.
இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கலாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு மனிதனைச் சுகமாக்கும்போதுகூட, “நீ யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்கின்றார். அவன் சொன்னபிறகு, அவர் ஊருக்குள் போகாமல், ஊரினுடைய ஒதுக்குப்புறங்களிலேயே நடந்து செல்கிறார், பயணிக்கின்றார் என்றுதான் நாம் பார்க்கின்றோம்.
ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் — வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையிலே ஒரு திருப்புமுனை — அவர் ஐந்து அப்பங்களை ஆசீர்வதித்து, ஐந்து அப்பம், இரண்டு மீனை ஆசீர்வதித்து, 5,000 பேருக்குப் போஷிக்கக் கொடுத்து, உண்ணக் கொடுத்தது — அவருடைய வாழ்க்கையினுடைய ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம்.
அதற்கு முன்புவரை அவருடைய அரசைப்பற்றி உவமைக் கதைகளில் பேசுகின்றார். அது தொடங்கி அவர் கிருபையைப்பற்றியும், நியாயத்தீர்ப்பைப்பற்றியும் உவமைகளிலே பேசத் தொடங்குகின்றார்.
ஏன் இந்த ஐந்து அப்பங்களைக்கொண்டு 5,000 பேருக்கு அவர் உணவைக் கொடுத்ததை ஒரு திருப்புமுனை என்று சொல்கின்றேன் என்று நாம் பார்ப்போம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வனாந்தரத்திலே சோதிக்கப்பட்டது மத்தேயு, மாற்கு, லூக்கா மூன்று நற்செய்தி நூல்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. யோவானில் அப்படி எழுதப்படவில்லை. ஆனால் ஏறக்குறைய சமமாக யோவான் ஆறாம் அதிகாரத்திலே இந்த உணவைப்பற்றி, அப்பங்களைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது.
அந்த மூன்று நற்செய்தி நூல்களிலே, “ஓ, நீர் தேவனுடைய குமாரன். ஆகையால் இந்தக் கற்களை அப்பங்களாகச் செய்யும். அப்பங்களாகும்படி செய்யும்.”
யோவான் ஆறாம் அதிகாரத்திலே அவர் அப்பங்களைப் பெருக்கி, அவர் 5,000 பேருக்கு உணவளிக்கக் கொடுக்கின்றார். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள். திருப்தி அடைந்த பிறகு 12 கூடை நிறைய மீதி எடுத்தார்கள் என்று பார்க்கின்றோம்.
இந்தச் செய்தி மக்களிடையே பரவ ஆரம்பித்தது. 5,000 பேருக்கு உணவளித்த பிறகு ஒரு வசனத்தை வாசிக்க வேண்டும். அல்லது, தொடர்ந்து போவதற்கு முன்பாகக்கூட ஒரு கேள்வி கேட்க வேண்டும்.
ஏறக்குறைய மக்களெல்லாம் சாப்பிட்டு முடித்தபிறகு கதை பரவ ஆரம்பித்துவிட்டது. எப்படி இந்த உணவு வந்தது என்று அவர்கள் சாப்பிடும்போது தெரியாமல் போகலாம். சாப்பிட்ட பிறகு தெரிந்திருக்கும். என்ன தெரிந்திருக்கும்?
ஓ, வெறும் ஐந்தே ஐந்து அப்பங்களை அவர் 5,000 ஆண்மக்களும், எத்தனை பெண்கள், குழந்தைகள் தெரியாது, எல்லாரும் உண்ணும்படி செய்திருக்கிறார். அந்தச் செய்தி மக்களிலே பரவ ஆரம்பித்தது.
Social media, விளம்பரங்கள், TV விளம்பரங்கள், radio விளம்பரங்கள் இல்லாத நாட்களில் இப்படிப்பட்ட ஒரு விளம்பரம் நடந்தது குறித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டும்.
அவர் மகிழ்ச்சியடையவில்லை.
“அவரை ராஜாவாக்கும்படி”
மக்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள்?
15-ஆம் வசனத்திலே வாசிக்கின்றோம்:
“ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.”
Very natural reaction.
இப்படிப்பட்ட ஒருவர் — இவர்தான் மேசியா. தம்முடைய வல்லமையை அவர் நேராகவும், நேர்முகமாகவும், நேர்கோட்டிலும் எந்தத் தங்குதடையும் இன்றி அவர் காண்பித்துவிட்டார். இவரை அரசராக்க வேண்டும் என்று.
யோவான் 6 — மகிழ்ச்சியான முடிவா? துக்கமான முடிவா?
யோவான் ஆறாம் அதிகாரத்தை வாசித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த ஆறாம் அதிகாரத்தின் முடிவு எப்படி? மகிழ்ச்சியான முடிவா? துக்கமான முடிவா? நானே சொல்கின்றேன். துக்கமான முடிவு.
யூதர்கள் இடறல் அடைகிறார்கள். பல சீடர்களுக்கு அது பிடிக்கவில்லை. பல சீடர்கள், “அந்த உபதேசத்தை யார் ஏற்றுக்கொள்ள முடியும்?” என்கின்றார்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறுதியாக 12 பேர்களையும்கூட பார்த்து, “நீங்கள் போக மனதாய் இருக்கிறீர்களா?” என்று.
அதற்குப் பேதுரு பிரதியுத்தரமாக: “ஆண்டவரே, நாங்கள் யாரிடத்திற்குப் போவோம்? ஜீவன் தரும் வார்த்தைகள் உம்மிடத்தில் உள்ளனவே.”
பேதுருவுக்கு ஒன்றும் புரிந்துவிடவில்லை. ஆனால் கடைசியாக, “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் உண்டு” என்கின்றார்கள்.
அரசராகப் பிரகடனப்படுத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பு
இப்படி ஐந்து அப்பம், இரண்டு மீன்களைக்கொண்டு 5,000 பேருக்குப் போஷிக்கக் கொடுத்து, 12 கூடை நிறைய மீதி எடுத்தபிறகு, இந்த அற்புதத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பயன்படுத்திக்கொண்டு, அவர் மேசியாவாகிய அரசராகத் தானே பிரகடனப்படுத்திக்கொள்ளலாமே. தம்முடைய அரசை, பரம அரசை, தேவனுடைய அரசை இந்தப் பூமியில் நிறுவியிருக்கலாமே.
ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய வல்லமையை மறைவாகவும், மறைமுகமாகவுமே...
இப்படி, முதல் சம்பவமாக இருந்தாலும் சரி, இறுதி சம்பவமாக இருந்தாலும் சரி, இடையிலே இருந்த சம்பவமாக இருந்தாலும் சரி, நாம் என்ன எதிர்பார்ப்போம்?
இப்படி ஒரு சம்பவம் நடந்தபிறகு, இனிமேல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கை மேலே, மேலே, மேலேதான் போய்க்கொண்டிருக்குமே தவிர, அது கீழே, கீழே போகாது என்பது நம்முடைய எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
ஆனால் வேதம் அப்படிச் சொல்லவில்லை. இந்தச் சம்பவம் தொடங்கி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய முடிவு மாறுகின்றது.
5,000 பேரைப் போஷித்த பிறகு — சிலுவையைப்பற்றிய முதல் அறிவிப்பு
இந்தச் சம்பவத்திற்குப்பிறகு, 5,000 பேரைப் போஷிக்கின்ற சம்பவம் லூக்கா ஒன்பதாம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 12 முதல் 17-ஆம் வசனங்களிலே இந்த 5,000 பேரைப் போஷிக்கின்ற சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து 18 முதல் 22-ஆம் வசனங்களிலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும்பற்றிப் பேசுகின்றார். இதனுடைய முக்கியத்துவம் — இந்த வசனங்களை நாம் வாசிக்கலாம்.
லூக்கா ஒன்பதாம் அதிகாரம் 18 முதல் 22:
“பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.”
ஒருமுறை கொஞ்சம் நிறுத்துவோம்.
“தேவனுடைய கிறிஸ்து” என்றால், தேவனுடைய மேசியா. மேசியாவாகிய அரசர். ஏனென்றால், நீர் இவ்வளவு பெரிய அற்புதம் செய்து, உம்மை யார் என்று காண்பித்துவிட்டீர், நிரூபித்துவிட்டீர், வெளிக்காண்பித்துவிட்டீர்.
தொடர்ந்து வாசிப்போம். 21, 22:
“அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.”
நேரான வல்லமை அல்ல — சிலுவை, உயிர்த்தெழுதல்
எப்பொழுது அறிவிக்கின்றார்? தம்முடைய வாழ்வின் மாபெரும் அற்புதத்தைச் செய்தபிறகு.
எந்த அற்புதத்தைச் செய்தபிறகு மக்கள் அவரை அரசராக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்களோ, அந்த அற்புதத்திற்குப்பிறகுதான் அவர் தம்முடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முதன்முதலாக சீடர்களுக்கு அறிவிக்கின்றார்.
“என்னுடைய வழி, தேவனுடைய அரசை நிறுவுவதும், தேவனுடைய அரசின் அரசராக, மன்னாதி மன்னனாக, ராஜாதி ராஜாவாக மாறுவதும், இந்த நேரான வல்லமை, நேரடி வல்லமை, நேர்கோடு வல்லமையைப் பயன்படுத்தி அல்ல. மாறாக, சிலுவை, உயிர்த்தெழுதல் வழியாகத்தான் தேவனுடைய வல்லமையை நான் செயல்படுத்துவேன்; தேவனுடைய அரசை நிறுவுவேன்; தேவனுடைய அரசில் அரசராக வருவேன்,” என்பதை உடனடியாக அவர் சொல்கின்றார்.
மோசே, எலியா — அவருடைய Exodus
அதே லூக்கா ஒன்பதாம் அதிகாரத்திலே 30, 31-ஆம் வசனங்களை ஒட்டி அவர் மறுரூபமாகின்ற அந்தச் சம்பவம் வருகின்றது. மோசேயும் எலியாவும் தோன்றி அவரோடு பேசுகிறார்கள். மோசேயும் எலியாவும் தோன்றி அவரோடு என்ன பேசினார்கள்? அவர் எருசலேமிலே அனுபவிக்கப்போகின்ற மரணத்தைக்குறித்து, அவருடைய Exodus, அவருடைய வெளிப்பயணத்தைக்குறித்து.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய வெளிப்பயணம், அல்லது Exodus, யாத்திரை என்பது அவருடைய மரணம், உயிர்த்தெழுதல். மரணத்திலே அவர் உள்சென்று, உட்சென்று, உயிர்த்தெழுதலிலே அவர் வெளிவருகின்றார்.
30, 31-ஆம் வசனங்கள்:
“அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி, அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.”
தமிழிலே “அவருடைய மரணத்தைக்குறித்து” என்று இருக்கும். ஆங்கில வேதாகமங்களிலே அவருடைய Exodus, அவருடைய departure, அவருடைய போகுதல், அவருடைய வெளிப்பயணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஆகவே, அது தொடங்கி, இந்தச் சம்பவம் தொடங்கி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய பாதை எருசலேமை நோக்கிய பாதையாக இருந்தது.
அதனுடைய பொருள் என்ன?
“நான் நேர்முக வல்லமையைப் பயன்படுத்தி இரட்சிக்கின்ற மேசியா அல்ல. மாறாக, மறைமுக வல்லமை, சிலுவை, உயிர்த்தெழுதலைப் பயன்படுத்தி இந்த உலகத்தை இரட்சிக்கின்ற மேசியா” என்று அவருடைய பயணம் தொடர்கின்றது.
மேசியாவுக்கு சிலுவையின் வழி என்றால் சீடர்களுக்கும் சிலுவையின் வழி
அது மட்டுமல்ல. 23 முதல் 27 முடிய உள்ள வசனங்களிலே: ஆகவே, “நான் உங்களை இரட்சிக்கும்போது நேர்முக வல்லமையைப் பயன்படுத்தி இரட்சிப்பேன்” என்று எதிர்பார்க்க வேண்டாம்.
இரட்சிப்பின் வழி எனக்கு மறைமுக வல்லமையைப் பயன்படுத்தித்தான் என்றால், உங்களுக்கும் மறைமுக வல்லமையைப் பயன்படுத்தித்தான். எனக்குச் சிலுவையின்மூலமாக மரணம், உயிர்த்தெழுதல் — சிலுவையின் மூலமாகவரும் மரணம், உயிர்த்தெழுதல்மூலமாக உள்ள மறைமுக வல்லமையைக்கொண்டுதான் நான் இரட்சிக்கிறேன் என்றால், நீங்களும் அப்படித்தான் இரட்சிக்கப்படுவீர்கள் என்று அவர்களுக்கும் சிலுவையின் வழியைப்பற்றிச் சொல்கின்றார்.
வாசிப்போம், 23 முதல்:
“பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார். இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
முதலாவது குறிப்பின் சுருக்கம்
ஆகவே, இந்த முதலாவது குறிப்பிலே, மறைமுகமான வல்லமையைக்கொண்டு இரட்சிக்கும் மேசியா என்பதில் இதைப் பார்த்தோம்.
இந்த மேசியா பலவீனராகவும், தரித்திரராகவும், ஏன் பைத்தியமானவராகவும்கூட வெளிப்பட்டார். யூதர்கள் ஒரு அரசரை, மேசியா என்கின்ற அரசரை எதிர்பார்த்தார்கள்.
ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாம் வனாந்தரத்திலே சோதிக்கப்பட்டபோது, அரசராக மாற்றிக்கொள்கின்ற வாய்ப்பு இருந்தது. ஆனால் தம்முடைய நேரடி வல்லமையைப் பயன்படுத்தி அரசராகவில்லை.
ஐந்து அப்பங்கள், இரண்டு மீனை ஆசீர்வதித்து, 5,000 பேருக்குப் போஷிக்கக் கொடுத்தபோது, தம்மை அரசராக நேரடி வல்லமையைக்கொண்டு மாற்றிக்கொள்கின்ற வாய்ப்பு வந்தது. அவர் தம்முடைய நேர்முக வல்லமையைப் பயன்படுத்தவில்லை.
அவர் மரித்து உயிர்த்தெழுந்தபிறகு, தேவனுடைய அரசை நேர்முக வல்லமையைக்கொண்டு நிறுவுகின்ற, ஸ்தாபிக்கின்ற வாய்ப்பு வந்தது. ஆனால் அவரோ பரமேறிச் சென்றார்.
சிலுவை, உயிர்த்தெழுதல் என்கின்ற மறைமுக வழியின் மூலமாகத்தான் தேவன் தம்முடைய இரட்சிப்பின் வல்லமையை தம்முடைய மக்களுக்குக் காண்பிக்கின்றார்.
சிலுவை இல்லாத ஒரு உயிர்த்தெழுதல்மூலமாக, சிலுவை இல்லாத ஒரு நேர்முக வல்லமை, சிலுவை இல்லாத ஒரு நேரடி வல்லமை, சிலுவை இல்லாத ஒரு நேர்கோடு வல்லமையை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருநாளும் பயன்படுத்தவில்லை.
2. மறைமுக வல்லமையால் இரட்சிக்கப்படும் தேவனுடைய மக்கள்
என்னுடைய இரண்டாவது குறிப்பிற்கு நான் செல்கின்றேன்.
பலவீனத்தில் பெலன்
2 கொரிந்தியர் புத்தகத்திற்கு சில பரிசுத்தவான்கள் இப்படி அடைமொழி கொடுக்கின்றார்கள். 2 கொரிந்தியர் பலவீனத்தில் பெலன் கொள்வதைப்பற்றி பேசுகிறது என்று.
தேவனுடைய மக்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்போலவே வல்லமையற்றவர்களாய், பலவீனர்களாய் அல்லது தரித்திரர்களாய் அல்லது பைத்தியக்காரர்களாய் இருக்கும்போது, தேவன் அவர்களை எப்படி இரட்சிக்கின்றார் என்று நாம் பார்க்கின்றோம்.
2 கொரிந்தியர் எட்டாம் அதிகாரம் 1 முதல் 5-ஆம் வசனத்தை வாசிப்போம். இந்தப் பகுதியினுடைய முக்கியத்துவம் கருதி நான் இதை வாசிக்க விரும்புகிறேன்.
“அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன். தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள். மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.”
மக்கதோனிய பரிசுத்தவான்கள்
மக்கதோனியா என்றால், மக்கதோனியாவின் முக்கிய நகரம் பிலிப்பி என்று சொல்லலாம். யூதேயாவில் உள்ள பரிசுத்தவான்கள் பஞ்சத்தில் துன்புறுகிறார்கள் என்பதற்காக, மற்ற பகுதிகளில் உள்ள பரிசுத்தவான்களிடத்திலே அவர்களுக்கு உதவி செய்யுமாறு அப்போஸ்தலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். மக்கதோனியர்கள் அல்லது பிலிப்பி நகரத்திலே உள்ள பரிசுத்தவான்கள், அவர்கள் இந்த உதவியிலே பங்குற்றார்கள்.
மக்கதோனியர்கள், பிலிப்பியர்கள் பெரிய செல்வந்தர்கள் அல்ல. இரண்டாம் வசனத்திலே நாம் வாசிக்கின்றோம். அவர்கள் கொடிய தரித்திரத்திலே...
இரண்டாம் வசனத்தை நாம் பார்க்கலாம். நான்கு adjectives பயன்படுத்தப்பட்டிருக்கின்றன: மிகுந்த உபத்திரவம், கொடிய தரித்திரம், பரிபூரண சந்தோஷம், மிகுந்த உதாரத்துவம். அவர்கள் செல்வந்தர்கள் அல்ல. மாறாக, பொதுவாக அந்தப் பரிசுத்தவான்கள் கொடிய தரித்திரத்திலே இருந்தார்கள். அவர்களுடைய நிலை கொடிய தரித்திரமான நிலை. கொடிய தரித்திரத்திலே அவர்கள் மிகுந்த உபத்திரவப்பட்டார்கள்.
தரித்திரம் அல்ல — கொடிய தரித்திரம். உபத்திரவம் அல்ல — மிகுந்த உபத்திரவம். அவர்கள் உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். உதாரத்துவமாய் அல்ல — மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
மனமுவந்து கொடுத்தார்கள்
அப்படிக் கொடுக்கும்போது யாரும் அவர்களுடைய கையைத் திருகி, “நீங்கள் இப்படிக் கொடுத்தால் உங்களுக்குப் பத்து மடங்கு கிடைக்கும், 100 மடங்கு கிடைக்கும்” என்று ஊக்குவித்தோ, அல்லது “நீ கொடுக்காவிட்டால் மருத்துவனுக்குக் கொடுப்பாய்” என்று அச்சுறுத்தியோ அவர்களைக் கொடுக்க வைக்கவில்லை. அவர்கள் உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
மூன்றாம் வசனத்தை வாசிக்கிறோம். மனமுவந்து, voluntarily, spontaneously கொடுத்தார்கள் என்று. தாங்களே மனதுள்ளவர்களாய் இருந்தார்கள். யாரும் வற்புறுத்துதலின் பேரிலே அவர்கள் கொடுக்கவில்லை. கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மனம் மலர்ந்தார்கள். கொடுத்துவிட்டு, “ஐயோ, கொடுத்துவிட்டோமோ இதை” என்று அவர்கள் வருத்தப்படவில்லை. சந்தோஷப்பட்டார்கள்.
அந்த “மிகுந்த உதாரத்துவமாய்” என்பதற்குப் பவுல் பயன்படுத்துகின்ற வார்த்தை, அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும்...
நாம் திராணிக்குத் தக்கதாக நம்முடைய வளங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். திராணிக்கு மிஞ்சிக்கூட நம்முடைய வளங்களை — வளங்கள் என்றால் நம்முடைய பணத்தையோ, நம்முடைய உழைப்பையோ, நம்முடைய நேரத்தையோ — பயன்படுத்த வேண்டுமா என்றால், நேர்முக வல்லமையை நேசிக்கின்றவர்கள், விரும்புகின்றவர்கள், இச்சிக்கின்றவர்கள் அப்படிப் பயன்படுத்தமாட்டார்கள்.
இந்த மக்கதோனிய மக்கள் அல்லது பிலிப்பிய பரிசுத்தவான்கள், அவர்கள் தேவனுடைய நேர்முக வல்லமையினால் வாழவில்லை. தேவனுடைய மறைமுக வல்லமையால் வாழ்ந்தார்கள்.
அவர்களுடைய ஒரே motivation
அவர்கள் கொடுத்ததன் ஒரே motivation — துன்புறுகின்ற பரிசுத்தவான்களுடைய துன்பத்திலே நாம் பங்குபெற வேண்டும் என்கின்ற ஒரே motivation, உந்துதலினால் மட்டும்தான் அவர்கள் பங்குற்றார்களே தவிர, “கொடுத்தால் நான் செல்வந்தனாவேன்; கொடுக்கவில்லை என்றால் அதற்கேற்ப என்னுடைய ஆசீர்வாதம், பொருளாதார ஆசீர்வாதம் குறைவுபடும்” என்பதெல்லாம் இந்தச் சித்திரத்திற்கு, இந்தப் படத்திற்கு வரவே இல்லை.
இதே 2 கொரிந்தியர் எட்டாம் அதிகாரத்தில்தான் நாம் இந்தச் செய்தியினுடைய தொடக்கத்திலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி ஒரு வசனத்தைப் பார்த்தோம்.
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே,” என்று நாம் வாசித்தோம்.
இதே அடிச்சுவடுகளிலே அந்த மக்கதோனிய பரிசுத்தவான்கள், பிலிப்பிய பரிசுத்தவான்கள் நடந்துபோனார்கள். மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தரித்திரர் ஆனதுபோல, யூதேயாவில் உள்ள பரிசுத்தவான்களை ஆசீர்வதிப்பதற்காக, அவர்களுக்கு ஒரு நன்மையை வழங்குவதற்காக, மக்கதோனிய பரிசுத்தவான்கள் தரித்திரர் ஆனார்கள். அவர்கள் ஏற்கனவே தரித்திரர்கள்தான். மேற்கொண்டும் தரித்திரர் ஆனார்கள்.
பவுலை நினைவுகூர்ந்த பிலிப்பிய பரிசுத்தவான்கள்
யூதேயாவில் உள்ள பரிசுத்தவான்களுக்கு மட்டுமல்ல, பவுல் personally தன்னைப்பற்றியும் அந்த மக்கதோனிய பரிசுத்தவான்கள் நினைவுகூர்ந்ததை பிலிப்பியர் நான்காம் அதிகாரம் 10 முதல் 14 வசனங்களிலே மிகவும் பாராட்டுதலோடு நினைவுகூருகிறார்.
நன்றியோடு என்று நான் சொல்லமாட்டேன்; பாராட்டுதலோடு.
பிலிப்பியர் நான்காம் அதிகாரம் 10 முதல் 14:
“என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்.”
மனம் மலர்ந்தது என்றால் அடித்துப் பழுக்க வைக்கப்பட்ட பழமல்ல. அவர்கள் மனம் மலர்கிறது.
“ஓ, சகோதரர் பவுல் மிகவும் வறுமையினால், பொருளாதாரக் குறைச்சலினால் துன்புறுகின்றார்.”
அது உண்மைதான். அவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.
எப்படிப்பட்ட மக்கள் இவர்கள்? இவர்கள் கொடிய தரித்திரத்தினாலே மிகுந்த உபத்திரவப்படுகையில், நீங்கள் மனம் மலர்ந்தபடியினாலே நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். “இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை.”
11-ஆம் வசனம்:
“என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை...”
இல்லை. அது அல்ல காரியம்.
“ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.”
“நான் எந்த நிலைமையில் இருந்தாலும்...”
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மறைமுகமான வல்லமையினால் இரட்சிப்பதுபோல, பவுலாய் இருந்தாலும் சரி, மக்கதோனிய பரிசுத்தவான்களாய் இருந்தாலும் சரி: “நான் வறுமையில் இருந்தேன். தேவன் வானத்தின் பலகணிகளைத் திறந்து எனக்குச் செல்வங்களைப் பொழிந்தார்” என்று மக்கதோனியர்களும் சொல்லவில்லை. “நான் வறுமையில் இருந்தேன். ஒரு நாள் இரவு, ராத்திரியிலே கதவைத் தட்டி, கர்த்தர் எனக்குச் செல்வ மழையைப் பொழிந்தார்” என்று பவுலும் சொல்லவில்லை.
“நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்டேன்.”
ஏனென்றால், தேவனுடைய நோக்கம் — ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அல்லது பரிசுத்த ஆவியானவர் எந்த இலக்கை நோக்கி அவர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்?
தேவனுடைய பரம அரசை, பரம நகரத்தை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய சாயலும் குணமும் கொண்ட ஒரு கூட்டம் மக்களை உருவாக்குகின்ற அந்த இலக்கை நோக்கி அவர்கள் அசைந்துகொண்டிருப்பதால், இயங்கிக்கொண்டிருப்பதால், நகர்ந்துகொண்டிருப்பதால், செயலாற்றிக்கொண்டிருப்பதால், அதை அவர்கள் நேரடியாகச் செய்ய முடியாது. அதை மறைமுகமான வல்லமையினால்தான் செய்ய முடியும்.
12, 13, 14-ஆம் வசனங்கள்:
“தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது.”
தேவன் அவர்களை எப்படி இரட்சித்தார்?
ஆகவே, தேவன் எப்படிப்பட்ட வல்லமையைக்கொண்டு மக்கதோனிய பரிசுத்தவான்களை இரட்சித்தார்? தம்முடைய மறைமுகமான வல்லமையினால்தான்.
பவுலுக்கு உதவி செய்ததால் அல்லது யூதேயாவில் உள்ள பரிசுத்தவான்களுடைய குறைச்சலிலே அவர்கள் பங்குற்றதால், அவர்கள் உடனே செல்வந்தர்களாக மாறிவிட்டார்களா?
நமக்குத் தெரியாது.
உலகத்தின் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்ட தேவன்
1 கொரிந்தியர் ஒன்றாம் அதிகாரம் 26 முதல் 31-ஆம் வசனங்களிலே தேவனுடைய மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பவுல் வர்ணிக்கின்றார்.
1 கொரிந்தியர் 1:26–31:
“எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.”
போதும்.
ஆகவே, மேசியா மறைமுகமான வல்லமையினால் இரட்சிக்கின்றார். இரட்சிக்கப்படுகின்ற தேவனுடைய மக்களும் மறைமுகமான வல்லமையினால்தான் இரட்சிக்கப்படுகின்றார்கள்.
தேவனுடைய நேர்முகமான வல்லமை காணப்படாததுபோல் நமக்குக் காட்சியளிக்கும். ஆனால் தேவனுடைய மறைமுகமான வல்லமை கிரியை செய்யும். அவர்கள் பைத்தியமானவர்களாகவும், இல்லாதவர்களாகவும், இழிவானவர்களாகவும், வறுமையில் உள்ளவர்களாகவும் காட்சியளிக்கின்றார்கள்.
ஆனால் தேவ மக்களுடைய வாழ்க்கையிலே தேவனுடைய வல்லமை மறைமுகமாக, மறைவானதாகச் செயல்படுகிறது. எப்படி என்பதை இந்த மூன்றாவது குறிப்பிலே பார்த்து நாம் இந்தச் செய்தியை நிறைவு செய்வோம்.
3. கிறிஸ்துவில் மறைந்துள்ள தேவனுடைய வல்லமை
தேவன் தம்முடைய வல்லமையைத் தம்முடைய மக்களுடைய வாழ்க்கையிலே எப்படிச் செயல்படுத்தினார்?
இதை நாம் பலமுறை தியானித்திருக்கிறோம். ஆனால் எத்தனை முறை தியானித்தாலும், அது நம்முடைய இருதயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
தேவனுடைய இரகசியம் — கிறிஸ்து
கொலோசெயர் இரண்டாம் அதிகாரம் 2, 3 ஆகிய வசனங்களை நாம் வாசிப்போம். என்னுடைய சுருக்கத்தைச் சொல்லிவிடுகிறேன்.
“தேவனுடைய இரகசியம் கிறிஸ்து” என்று இந்த வசனத்திலே எழுதியிருக்கிறது.
மூன்றாவது வசனம்:
“அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.”
இரண்டாம் வசனத்திலே, கிறிஸ்து தேவனுடைய இரகசியம். இரகசியம் என்றால் மறைவானது. தேவன் ஒன்றைக் கிறிஸ்துவில் அல்லது கிறிஸ்துவின் மூலமாய்ச் செய்கிறார். அது காலங்கள்தோறும், தலைமுறைகள்தோறும் இரகசியமாக இருந்தது.
இப்பொழுதும்கூட அது பரம இரகசியம். Mystery என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட வார்த்தை — பரம இரகசியம். அது பரம இரகசியமாகத்தான் உள்ளது.
தேவனுடைய பரம இரகசியம் கிறிஸ்து. தேவன் தம்முடைய மக்களை எப்படி இரட்சிக்கிறார் என்பது பரம இரகசியம். அதை அவர் கிறிஸ்துவின் மூலமாகச் செயல்படுத்துகின்றார்.
தேவத்துவத்தின் பரிபூரணம் கிறிஸ்துவில்
தேவன் தம்முடைய ஞானத்தை — இந்த மூன்றாம் வசனத்தில் வாசித்ததுபோல — அவருடைய ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்கள் எல்லாம் கிறிஸ்துவில் அடங்கியிருக்கிறது.
ஒன்பதாம் வசனத்தைக்கூட நாம் வாசிக்கலாம். ஞானம், அறிவு மட்டுமல்ல:
“ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.”
இன்னும் சொல்லப்போனால், 1 கொரிந்தியர் — நாம் சற்று முன்பு வாசித்த — ஒன்றாம் அதிகாரம் 22, 24-ஆம் வசனங்களிலே வாசிக்கின்றோம்.
கிறிஸ்து தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும்...
30 வாசிக்கலாம். 22, 24 ஆகிய வசனங்களை வாசிப்போம். 31 பிறகு வாசிக்கலாம்.
“யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.”
போதும்.
தேவனுடைய பெலனும் ஞானமும் எங்கே? தேவனுடைய பெலனும், தேவனுடைய வல்லமையும், தேவனுடைய ஞானமும் எங்கே இருக்கிறது?
கிறிஸ்துவில் இருக்கிறது.
போன செய்தியிலே நாம் இயற்கையான மனிதர்கள், ஆவிக்குரிய மனிதர்கள் என்று பார்த்தோம். இயற்கையான மனிதர்களைப் பொறுத்தவரை இந்தக் கிறிஸ்து பலவீனமானவர். இயற்கையான மனிதர்களைப் பொறுத்தவரை இந்தக் கிறிஸ்துவில் பைத்தியம்தான் இருக்கிறது — மூடத்தனம்.
ஆனால் ஆவிக்குரிய மக்களைப் பொறுத்தவரை: “ஓ, தேவனுடைய பெலன், தேவனுடைய வல்லமை கிறிஸ்துவில் இருக்கிறது. தேவனுடைய ஞானம் கிறிஸ்துவில் இருக்கிறது.”
31-ஆம் வசனத்திலே...
ஆகவே பவுல் கூறும்போது:
“அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.”
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய ஞானம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய வல்லமை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய நீதி. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய மீட்பு.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் தேவனுடைய எல்லா வளங்களும் ஊனுருக்கொண்டுள்ளன என்பது நம்முடைய நற்செய்தி.
கிறிஸ்துவின் அளந்துமுடியாத ஐசுவரியம்
எபேசியர் மூன்றாம் அதிகாரம் 8, 9, 10 வசனங்களை நாம் அடிக்கடி மேற்கோள் காட்டுவோம்.
நற்செய்தி என்பது என்ன?
கிறிஸ்துவில் உள்ள அளந்துமுடியாத, அளவற்ற ஐசுவரியம்; அளந்துமுடியாத, தீர்ந்துபோகாத, ஆராய்ந்துமுடியாத செல்வங்களைத்தான் தேவனுடைய வார்த்தை நற்செய்தி என்று கூறுகின்றது.
இப்பேர்ப்பட்ட கிறிஸ்துவோடு தேவன் நம்மை ஒன்றுபடுத்தியிருக்கிறார். நம்மை ஒருமைப்படுத்தியிருக்கிறார்.
கொலோசெயர் மூன்றாம் அதிகாரம், மூன்றாம் வசனத்தை வாசிப்போம்:
“ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.”
நீங்கள் இதிலிருந்து எவ்வளவு புரிந்துகொள்கிறீர்கள் எனக்குத் தெரியவில்லை. கிறிஸ்து நம்முடைய ஜீவனாக இருக்கிறார்.
தொடர்ந்து அந்த நான்காம் வசனத்தில்:
“நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்” என்று.
தேவனுடைய மக்களுக்குக் கிறிஸ்து ஜீவனாக இருக்கின்றார். நம் ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கின்றது.
“கிறிஸ்து உங்களுக்குள் — மகிமையின் நம்பிக்கை”
ஆகவேதான் பவுல் கொலோசெயர் கடிதத்தை எழுதும்போது, ஒன்றாம் அதிகாரம் 27-ஆம் வசனத்தில் நாம் வாசிப்பதுபோல:
“கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார் என்பதே இந்த இரகசியம்.”
இந்தப் பரம இரகசியம், இந்த மறைவான இரகசியம் என்ன? கிறிஸ்து நம் ஜீவனாக இருக்கிறார். கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம், ஒன்றுபடுத்தப்பட்டிருக்கிறோம்.
இந்தக் கிறிஸ்துவில் தேவனுடைய எல்லா வளங்களும், எல்லாச் செல்வங்களும் உள்ளன. ஆகவே நாம் ஒவ்வொரு நாளும் மறுவுருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் நாம் பரிசுத்தமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஒரு நாளிலே இந்த மறுவுருவாக்கப்படுதல் நிறைவேறும்போது, நாம் கிறிஸ்துவைப்போல மகிமையாக்கப்படுவோம். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாய் உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம் என்று.
இப்படி கிறிஸ்து பரிசுத்தவான்களுக்கு மகிமையின் நம்பிக்கையாக — நாம் மகிமைப்படுவோம்.
புறம்பாக நம்மிடம் வல்லமை இல்லை — கிறிஸ்து நம்மில் இருக்கிறார்
புறம்பாக நம்மிடத்திலே வல்லமை இல்லை. ஆனால் தேவனுடைய வல்லமையாக கிறிஸ்து நம்மில் இருக்கிறார். புறம்பாக நாம் ஞானிகள் இல்லை. ஆனால் தேவனுடைய ஞானமாக கிறிஸ்து நம்மில் இருக்கிறார். புறம்பாக நாம் எளியவர்கள். ஆனால் நமக்கு எல்லாமுமாக கிறிஸ்து நம்மில் இருக்கிறார்.
என்று இருப்பதால்தான் பவுல் போன்ற பரிசுத்தவான்கள், பிலிப்பியர் 4:13-ல் நாம் வாசிப்பதுபோல — நாம் இப்பொழுது வாசித்தோம்:
“என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றிற்குமான பெலன் எனக்கு உண்டு.”
“நான் உடனே ஐசுவரியவான் ஆகிவிட்டேன். என்னுடைய பொருளாதாரச் சிக்கல்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன” என்று அவர் சொல்லவில்லை.
இந்தச் சூழ்நிலைக்குத் தேவையான பெலன் கிறிஸ்துவில் எனக்குக் கிடைக்கின்றது. எந்தச் சூழ்நிலைக்கும் எப்போதும் போதுமான பெலன் இந்தக் கிறிஸ்துவில் உண்டு என்று.
“என் கிருபை உனக்குப் போதும்”
அதை இன்னொரு வார்த்தைகளிலே 2 கொரிந்தியர் 12-ஆம் அதிகாரம், 9-ஆம் வசனத்திலே பவுல் கூறும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்:
“என் கிருபை உனக்குப் போதும். பலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும்.”
ஆகையால்:
“கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என்னுடைய எல்லாப் பலவீனங்களையும்குறித்து நான் மேன்மைபாராட்டுகிறேன்” என்று சொல்கின்றார்.
“எனக்குப் பலவீனமே இல்லை” என்று அவர் சொல்லிவிடவில்லை. “உன் பலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும்.”
ஆகவே, “எனக்குப் பலவீனம் இல்லை” என்று பவுல் சாற்றவில்லை. மறைமுக வல்லமை அப்படிச் செயல்படாது.
தேவனுடைய மக்கள் நேர்முக வல்லமையை எதிர்பார்க்கக்கூடாது
தேவனுடைய மக்கள் நேர்முக வல்லமையை எதிர்பார்க்கக்கூடாது என்று நான் சொல்கின்றேன். தேவன் எப்படி நம்மைப் பலப்படுத்துவார் என்று எனக்குத் தெரியாது.
நீங்கள் உடனே மனம் தளர்ந்துபோக வேண்டாம். “அப்படியென்றால் நாம் நோய்வாய்ப்பட்டிருந்தால் எப்போதும் நோய்வாய்ப்பட்டவர்களாகவே இருப்போமா? நாம் வறியவர்களாக இருந்தால் எப்போதுமே வறியவர்களாக இருப்போமா?” என்று கேள்வி கேட்க வேண்டாம்.
ஆனால் உங்கள் வறுமையெல்லாம் தேவன் நீக்கிச் செல்வந்தர்களாக மாற்றிவிடுவார் அல்லது நோய்களையெல்லாம் நீக்கி தேவன் உங்களை நலமுள்ளவர்களாக மாற்றிவிடுவார் — அது எனக்குத் தெரியாது.
ஆனால் அவர் கிருபை தருவார்.
கிருபை — மறைமுகமாகச் செயல்படும் தேவனுடைய வல்லமை
கிருபை என்பது என்ன? அதற்குப் பலவிதமான விளக்கங்கள் நாம் கொடுக்கலாம்.
மறைமுகமாகச் செயல்படும் தேவனுடைய வல்லமை — கிருபை.
ஆகவேதான் எபிரெயர் 11:34-ல்கூட நாம் வாசிக்கின்றோம்:
“அவர்கள் விசுவாசத்தினாலே பலவீனத்திலே பெலன் கொண்டார்கள்” என்று.
முடிவுரை — “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்”
நாம் இந்தச் செய்தியை நிறைவு செய்வதற்கு முன்பாக ஆபகூக் மூன்றாம் அதிகாரம் 16 முதல் 19-ஆம் வசனங்களை வாசிப்போம். நமக்குப் பரிச்சயமான பகுதி.
“நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.”
Wait பண்ணுவோம்.
முந்தின வசனம், 16-ஆம் வசனத்திற்குப் போவோம்.
ஆபகூக்கின் கேள்வி
ஆபகூக் எதைப்பற்றிக் கூறுகிறது என்றால், ஆபகூக்குக்கு அது புரியவில்லை. யூதேயா மக்களிடையே கொடுமையும் வன்முறையும் இருக்கின்றது.
“ஆண்டவரே, நீர் ஒன்றும் செய்யவில்லையே?”
ஆண்டவர் சொல்கிறார்: “நான் கல்தேயர்கள், பாபிலோனியர்களை எழுப்பி, நான் அவர்களை நியாயந்தீர்ப்பேன்” என்று.
ஆனால் அது இன்னும் ஆபகூக்குக்குப் பெரிய கேள்வியைக் கொண்டுவந்துவிடுகிறது. “மகா கொடிய அந்தத் தீய பாபிலோனியர்களைக்கொண்டா நீர் இந்த மக்களை நியாயந்தீர்க்கப்போகிறீர்?” என்று.
ஆனால் தேவன்: “நான் அந்த மகா கொடிய பாபிலோனியர்களையும் நியாயந்தீர்ப்பேன்” என்று சொல்கின்றார்.
ஆகவே, தேவனுடைய மக்களுக்கு இக்கட்டு நாள் வரப்போகிறது என்பதை அவர் எதிர்பார்க்கின்றார். இக்கட்டு நாளுக்காக நான் காத்திருக்கின்றேன். அவர்கள் வருவார்கள். இந்த நகரத்தைச் சுட்டெரிப்பார்கள். ஆலயத்தைச் சுட்டெரிப்பார்கள். இந்த நாட்டைத் தரைமட்டமாக்குவார்கள். இங்குள்ள மக்களையெல்லாம் பிடித்துக்கொண்டுபோவார்கள்.
இந்த நாடு ஒன்றுமில்லாத நாடாக மாறும். வனாந்தர விலங்குகள் நடமாடுகின்ற நாடாக மாறும். இங்கு பயிரிடப்படாது. ஒன்றுமே விளையாது.
நான் அப்போது எங்கிருந்து வல்லமையைப் பெறுவேன், பெலனைப் பெறுவேன் என்பதற்கு ஆபகூக் பதில் கூறுகிறார்.
“ஆனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்”
17, 18:
“அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்...”
ஒரு நிமிஷம்.
ஆ... ஆ... வாசிப்போம்.
“நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.”
நிறுத்துவோம்.
ஏறக்குறைய பவுல் பிலிப்பியர் 4:13 சொன்னதுபோல:
“என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றிற்குமான பெலன் எனக்கு உண்டு.”
நான் பலவீனம்தான். ஆனால் எல்லாவற்றிற்குமான பெலன் உண்டு.
“நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன். என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.”
தேவன் வெறுமனே தேவன் அல்ல. அவர் என் தேவன். என் இரட்சிப்பின் தேவன்.
பவுல்கூட பிலிப்பியர் 4:19 சொல்லும்போது:
“என் தேவன் உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவின் மகிமையின் செல்வங்களினால் நிறைவாக்குவார்” என்று.
நான் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருப்பேன்.
எல்லாம் இல்லாமல் போனாலும் இரட்சகராகிய தேவன் உண்டு
தேவனுடைய மக்களுக்கு ஆபகூக் போல சூழ்நிலைகள் மாறி, பயிரிடப்படவில்லை. மக்கள் இல்லை, ஆடுகள் இல்லை, மாடுகள் இல்லை, திராட்சை இல்லை, ஒலிவ மரம் இல்லை, அத்திமரம் இல்லை, வாழ்க்கையின் அடிப்படை தேவைகளோ அல்லது luxury-யோ ஒன்றுமில்லை.
ஆனால் தேவனுடைய மக்களுக்குக் களிகூருவதற்கும், மகிழ்ச்சியாய் இருப்பதற்கும் இரட்சகராகிய தேவன் உண்டு.
நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் தேவனுடைய எல்லாப் பரம வளங்களும் ஊனுருக்கொண்டுள்ளன.
எப்படி அவர் நமக்கு அந்த மறைமுகமான செல்வங்களையும், மறைமுகமான வளங்களையும், மறைமுகமான வல்லமையையும், மறைமுகமான ஞானத்தையும் நமக்குப் பரிமாறுவார் என்று எனக்குத் தெரியாது.
ஆனால் தேவன் பரிமாறுவார்.
“ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்”
19-ஆம் வசனம்:
“ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.”
எங்கிருந்து எங்கு தேவன் நம்மைக் கொண்டுபோகிறார் என்றால், அவர் நமக்குப் பெலன் தருகிற கர்த்தர் அல்ல.
அவரே என் பெலன்.
யோவான் ஆறாம் அதிகாரம் 15-ஆம் வசனத்திலே நாம் வாசித்தோம்:
“நீர் அரசராக இரும். ஏனென்றால் இப்படி ஐந்து அப்பங்களைக்கொண்டு 5,000 பேரை நீர் போஷித்துவிட்டீரே.”
ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீண்ட செய்தியைக் கொடுக்கின்றார்:
“வானத்திலிருந்து இறங்கிவந்து ஜீவனைக் கொடுக்கின்ற மெய்யான அப்பம் நானே.”
நான் தருகின்ற அப்பத்தின்மேல் உன் கண்களும், உன் இருதயமும் இருக்கின்றவரை, நீ தேவனுடைய நேர்முக வல்லமையை எதிர்பார்க்கின்றாய்.
நமக்குக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே அப்பமாக, பரத்திலிருந்து இறங்கிவந்த வளமாக, செல்வமாக, பரத்திலிருந்து இறங்கிவந்து ஜீவனைக் கொடுக்கின்ற அப்பமாக இருக்கின்றார்.
எப்படி அவர் நம்மைப் போஷிப்பார் என்று தெள்ளத்தெளிவான map அவர் தருவதில்லை.
தொன்றுதொட்டு தேவனுடைய மக்கள் விசுவாசத்தினால் அவரைச் சார்ந்து, அவரை அப்பமாக, பானமாக, காற்றாக, எல்லாமுமாக அனுபவிக்கின்றார்கள்.
ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்.
மான் கால்களைப்போல
அவர் என் கால்களை மான் கால்களைப்போல ஆக்கி, உயரமான ஸ்தலங்களிலே என்னை நடக்கப்பண்ணுவார்.
இரண்டு விதமாக நாம் பொருள்கொள்ளலாம்.
ஒன்று, நாம் சிலுவையின் மரண வழியாய்ச் செல்லலாம். ஆனால் கர்த்தர் நம்மை உயிர்த்தெழுந்த ஸ்தலங்களிலே நடக்கப்பண்ணுவார் என்றும் பொருள்கொள்ளலாம்.
அல்லது கடினமான ஸ்தலங்களிலே நாம் நடக்க வேண்டியிருக்கலாம். அதில் நடப்பதற்குக் கர்த்தர் அவருடைய பெலனால் நம் கால்களை மான் கால்களைப்போல ஆற்றுவார், பக்குவப்படுத்துவார்.
“கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது”
ஒரு வசனத்தை வாசித்து நாம் ஜெபிப்போம்.
புலம்பல் மூன்றாம் அதிகாரம் 25, 26 வசனங்கள்:
“தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.”
அவருடைய மறைமுக வல்லமை தாமதித்தாலும், அது வரும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. தமக்குக் காத்திருக்கிறவர்களுக்குக் கர்த்தர் நல்லவராகவே இருக்கின்றார்.
ஆமென்.
ஜெபிப்போம்.