Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கீத் கிரீன் (1953 – 1982), ஒரு பியானோ இசைக்கலைஞர், பாடகர், பாடலாசிரியர், கிறிஸ்துவுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர், பிறரும் அதேபோல் தங்களைக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அழைத்தவர். அவர் எழுதிய "Oh Lord, You're Beautiful", "Asleep in the Light", "Your Love Broke Through", "You Put This Love in My Heart" and "There Is a Redeemer" போன்ற பல பாடல்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. "There Is a Redeemer" என்ற பாடல் அவருடைய மனைவி மெலடி எழுதியது. கீத் கிரீன் தன் 28ஆவது வயதில் விமான விபத்தில் இறந்தார். ஏழு ஆண்டுகள் மட்டுமே அவர் ஒரு கிறிஸ்தவனாக வாழ்ந்தார். "புரட்சிகரமான ஒரு பிரசங்கி. தொலைக்காட்சியில் முந்நாள் குழந்தை நட்சத்திரம். குழம்பித்திரிந்த ஆன்மீக தேடலாளர். தீவிரமான தீர்க்கதரிசி. இசை மேதை. நவீன கிறிஸ்தவ இசை வரலாற்றில் மிக முக்கியமான ஓர் இசைக்கலைஞர். அவருடைய  இசையும், பாடல்களும் ஆவிக்குரிய உணர்வுடையவர்களுக்கு இன்றும்  திட உணவாக இருக்கிறது. அவருடைய துயரான மரணத்துக்குப்பிறகும் அவருடைய பாடல்கள் ஏற்படுத்தும் தாக்கம் கீத் கிரீனின் நிலையான ஈர்ப்பை நிரூபிக்கிறது" – ரிக் குரோமி, (லாஸ்ட் டேஸ் மினிஸ்ட்ரீஸ் இணையதளத்தில் அவருடைய நினைவஞ்சலியில்) 


இயேசுவை இசைத்த சமரசமற்ற ஓர் இசைக்கலைஞன் 

1. அறிமுகம்

அன்புக்குரிய பரிசுத்தவான்களே!

நான் இன்று உங்களுக்கு அறிமுகம்செய்கிற இந்தப் பரிசுத்தவானைப்பற்றி, அநேகமாக, நீங்கள் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். ஏனென்றால், இவர் ஒரு மிஷனரியோ, தீர்க்கதரிசியோ, போதகரோ, பிரசங்கியோ, பாஸ்டரோ இல்லை; இவர் ஓர் இசைக்கலைஞன், தன் இசையை ஆண்டவராகிய இயேசுவுக்கு  அர்ப்பணித்து, தன்னை ஓர் இசைக்கருவியாக்கி, ஒரு தேசத்தை உலுக்கிய, தட்டியெழுப்பிய, சமரசமற்ற ஓர் இசைக்கலைஞன்.

சுமார் 30 வருடங்களுக்குமுன் பல நல்ல, ஆவிக்குரிய ஆங்கிலப் பாடல்களை நாங்கள் தமிழாக்கம் செய்ய முயன்ற காலத்தில் நான் இவரைப்பற்றிக் கேள்விப்பட்டேன். "என்றைக்காவது ஒருநாள் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களுக்கு நான் இவரை அறிமுகம் செய்ய வேண்டும்," என்று அன்று தீர்மானித்தேன். இதோ இன்று, அவரை நான் உங்களுக்கு அறிமுகம்செய்கிறேன்.

இவருடைய பெயர்… கீத் கிரீன்.

இவர் அசாத்தியமான இசைத் திறமை உடையவர். இசைத்துறையில் பேர் புகழ், செல்வாக்கு ஆகிய எல்லாம் கிடைத்தும், அவர் அவைகளைப்  பின்பற்றவில்லை. அவர் அந்தப் பாதையை விட்டுவிட்டு… வேறொரு பாதையில் நடந்தார். அது மெய்யான பாதை.

இவர் இசையை வாழ்ந்தார். ஆவியில் அனலாய் எரிந்தார். இயேசுவுக்காகவும், வேதாகமத்துக்கு எதிராகச் சபைகளில் நிலவிய கருத்துக்களுக்கு எதிராகவும் துணிந்து நின்றார்.

இவர் நித்தியத்துக்குள் நுழைந்து நாற்பது ஆண்டுகள் கழிந்தபிறகும், இவர் எழுதிய பாடல்கள் இன்னும் பாடப்படுகின்றன. இவர் வாழ்ந்த வாழ்க்கை இன்றும் பேசப்படுகின்றது. இவர் விட்டுச்சென்ற எழுச்சி இன்னும் மக்களை உருக்குகின்றது. ஆண்டவராகிய இயேசுவை அறிந்து வாழ்ந்த ஒருவர் தனக்குள் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தை, மனமாற்றத்தை, அகில உலகத்திற்கும் இசையால் வெளிப்படுத்தினார். இவர் வாழ்ந்த வாழ்க்கை…இவர் பாடிய பாடல்கள்...இவர் வடித்த கண்ணீர்…இவர் எழுப்பிய கேள்விகள்…அனைத்தும்—இன்றைய கிறிஸ்தவ உலகில் நம்மை ஒருபுறம் உற்சாகப்படுத்துகின்றன, மறுபுறம் எச்சரிக்கின்றன, உருவக்குத்துகின்றன.

இவருடைய பாடல்கள் பொழுதுபோக்கு இசையல்ல. இவை சிந்திக்கவைக்கும் வாசல்கள். இவை சவால் விடுக்கும் அழைப்புகள். “இயேசுவுக்காக வாழும் வாழ்க்கை சமரசமான வாழ்க்கை அல்ல… அவர் மட்டுமே வாழ்வதற்கான ஒரே வழி, உண்மையான வழி" என்பதே கீத் கிரீனின் இதய நாதம்.

வாருங்கள், இவரை நான் உங்களுக்கு அறிமுகம்செய்கிறேன். இவரோடு சேர்ந்து நாம் ஒரு மணி நேரம் பயணிப்போம்.

2. இளமைப்பருவம் – இசை மேதையின் பிறப்பு

2.1 இசை ஒரு பரிசா, பிறவியிலேயே வந்ததா?

கீத் கிரீன், 1953ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ப்ரூக்கிளின் பகுதியில் உள்ள சீப்ஸ்ஹெட் பே என்னும் இடத்தில் பிறந்தார். அவருடைய அப்பா ஹார்வி கிரீன், லாஸ் ஏஞ்சல்ஸில் இசைத் தயாரிப்பு துறையில் பணியாற்றினார். அவருடைய அம்மா பிக் பாண்ட் என்ற ஓர் இசைக் குழுவில் பாடகி. இசை இந்தக் குடும்பத்தின் நாடி நரம்புகளில் ஓடியது. கீத்தும் சிறு வயதிலிருந்தே இசைமீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய நான்காவது வயதில், கீத்தின் குடும்பம் கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள கனோகா பார்க் என்ற பகுதியில் குடியேறியது. அங்கேதான் கீத் வளர்ந்தார்.

கீத் கிரீன் திறமையால் உருவான இசைஞானி என்பதைவிட, பிறப்பால் உதித்த இசைஞானி என்று சொல்லலாம். ஆயினும், அவர் தான் பெற்ற இசை ஞானத்தில் அசதியாய் அமர்ந்துவிடாமல், ஊக்கத்தோடு இசையைக் கற்றார். குழந்தைப் பருவத்திலேயே கடுமையாக உழைத்தார்.  ஒன்பதாவது மாதத்தில் சரியான சுருதியில் பாடத் தொடங்கினார். இரண்டு வயதில் இசைப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றார். மூன்று வயதில் இசைந்துபாடும் harmony-யில் பாடினார். யுகுலேலி, பியானோ ஆகிய இசைக்கருவிகளை வாசிப்பதில் கைதேர்ந்தவர். ஏழு வயதில் The Sound of Music நாடகத்தில் குழந்தை நடிகராக நடித்தார். அவர் தன் பதினோறாவது வயதில் வெளியிட்ட முதல் இசை ஆல்பம் ஹவாயில் முதல் பத்தில் இடம் பெற்றது. அதே வயதில் அவர் ஒரு புகழ்பெற்ற ரெக்கார்ட் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்தார். இந்த வயதில் இப்படிப்பட்ட சாதனையை இதற்குமுன் வேறு யாரும் செய்ததில்லை. புகழ்பெற்ற ஆங்கில நாளேடு Time Magazine, "இளவயதில் ஹாலிவுட்டின் புதிய நட்சத்திரம்”என்று  இவரைப் புகழ்ந்தது.

2.2 புகழ் வேண்டுமென்ற வெறி – ஆனால் மாறிய பாதை

உயர்நிலைப் பள்ளியில் சேரும்போதே இவர் "celebrity" என்ற நிலையை அடைந்துவிட்டார். இசைத்துறையில் பேரும் புகழும் பெற வேண்டும் என்பதே அவருடைய வெறி. இந்தக் குறிக்கோளோடு அவர் ஓட ஆரம்பித்தார்.

இவருடைய பெற்றோருக்கு இவர்தான் ஒரே பிள்ளை என்று தெரிகிறது. ஏனென்றால், இவருக்கு உடன்பிறந்தவர்கள் இருந்ததுபோல் தெரியவில்லை. அவருடைய அப்பா யூதர்; அம்மா கத்தோலிக்கர். ஆகவே, கீத்தின் குழந்தைப் பருவம் இரு மதங்களின் கலாசாரக் கலவையில் வளர்ந்தது. இவருடைய பெற்றோர் விசுவாசிகளோ, கிறிஸ்தவர்களோ, ஆவிக்குரியவர்களோ, இல்லை.  ஆனாலும், அவருடைய வீட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தன. கீத் அந்தக் கட்டுப்பாடுகளை விரும்பவில்லை. அவர் சுதந்திரமாக வாழ விரும்பினார். அதனால் அவர் ஒருவிதமான கலகக்காரனாக வாழ்ந்தார். பல நாட்களில் பள்ளிக்குச் செல்லாமல், ஊரின் மைதானங்களில் நண்பர்களுடன் புல்லில் உட்கார்ந்து கித்தார் வாசித்தார், புகைத்தார். பலமுறை அவர் பெற்றோரோடு சண்டைபோட்டுவிட்டு வீட்டிலிருந்து ஓடிவிட்டார். இது அவருடைய வாடிக்கை.

2.3 ஹிப்பி கலாச்சாரம் – ஒரு வாலிபன் தேடல்

நாம் 1970களின் அமெரிக்காவையும், கலிபோர்னியாவையும், ஹாலிவுட்டையும்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். அப்போது ஹிப்பி கலாச்சாரம் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. Flower, Power, Peace & Love - மலர், வல்லமை, சமாதானம், அன்பு - இதுதான் அன்றைய ஹிப்பி கலாச்சாரத்தின் கோஷம். இவைகளை விவரிக்க இப்போது நேரம் இல்லை. மதம், மதச்சடங்குகள், திருமண வாழ்க்கை, ஒழுக்கம் - அனைத்தும் கேள்விக்குள்ளான காலம் அது. மக்கள் பாரம்பரியங்களை உதறினார்கள். மதத்தைப் புறக்கணித்தார்கள்.

கீத் நீந்திக்கொண்டிருந்த இசைத்துறை ஹிப்பி கலாச்சாரம் என்ற நதியின் ஒரு சிறு ஓடை. ஹிப்பி கலாச்சாரம் ஹாலிவுட்டில் ஏற்படுத்திய தாக்கத்தைச் சொல்லவும் வேண்டுமோ! அதற்கு உரம் போட்டு வளர்த்தவர்களே அவர்கள்தான். கீத் இதில் ஓர் அங்கம்.

அவருடைய புகைப்படத்தைப் பாருங்கள். நீண்ட சுருள் முடி, அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் தொளதொள  உடை, சுதந்திரமான தோற்றம்—அசல் ஹிப்பி!

2.4 ஆன்மீக தேடல் – வெளிப்படையான தேடல்

அந்தக் காலத்திற்கு இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. மக்களுக்குள் ஓர் ஆவிக்குரிய தேடல் இருந்தது. அவர்கள் புறம்பான செயல்களை விட்டுவிட்டு உள்ளான ஏதொவொன்றைத் தேடினார்கள். புறம்பான செயல்களில் மக்கள் திருப்தியடையவில்லை. எனவேதான், மக்கள் பாரம்பரிய சபைமுறைமைகளை விட்டு விலகினார்கள், மதத்தை வெறுத்தார்கள்.

இந்த நாட்களில்தான் யோகா, தியானம், புத்தமதம், கிரிஸ்டல் வாசிப்பு, விசித்திரமான ஆன்மீக வழிகள்போன்றவை பிரபலம் ஆயின.

கிரிஸ்டல் ரீடிங் (Crystal Reading) என்றால் மரகதக் கற்களுக்கு விசேஷமான ஆவிக்குரிய சக்தி உண்டு என்றும், அதைக் கைகளால் பிடித்தால் அல்லது உடலில் வைத்தால் “ஆற்றலை” உணரலாம் என்றும் சிலர் நம்பினார்கள். மரகதக் கற்கள்மூலம் சிலர் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ளவும் முயன்றார்கள்.

கீத் கிரீனும் இதுபோன்ற வழிகளில் செல்ல ஆரம்பித்தார். தேவன் ஒருவர் இருக்கிறார் என்ற பொதுவான நம்பிக்கை அவரிடம் எங்கோ ஒரு மூலையில் இருந்தது. ஆனால் உண்மையான தேவன் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஏக்கமும் அவரிடம் இருந்தது.

அவர் எதையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லை. சத்தியத்தை அறிய வேண்டும், பார்க்க வேண்டும், தன் வாழ்க்கைக்கு ஒரு திசை வேண்டும், அந்த வழியைக் காண வேண்டும், என்ற ஆர்வம், ஆவல், ஆசை அவர் உள்ளத்தில் இருந்தது. அவர் உண்மையைத் தேடினார். ஆவிக்குரிய வாழ்க்கையை ஆசித்தார்.

அதுதான் கீத் கிரீன்.

2.5 வெளிப்படை வெற்றிக்கு உள்ளே ஓர் வெற்றிடம்

வெளியே பார்வைக்கு—வெற்றி! பாராட்டுகள், புகழ், வாய்ப்புகள் இருந்தன. ஆனால்…இளம் கீத்தின் உள்ளத்தில் ஒரு பசி…புகழுக்காக இல்லை… பணத்துக்காக இல்லை…ஓர் ஆழமான பசி… "நான் யார்? என் வாழ்க்கையின் நோக்கம் என்ன?" என்பதை அறியும் பசி. இந்தப் பசியைப்பற்றி அவர் ஒருமுறை, "எனக்கு ஒரேவோர் ஆசை –என் உள்ளத்தில் இருந்த அந்த வெற்றிடத்தை நிரப்ப யாராவது இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டே இருந்தேன்," என்று கூறினார்.

பெரும்பாலான வாலிபர்களைப்போல இவரும் திரையுலகை நோக்கி ஓடினார், திரையுலக பாணி வாழ்க்கைக்காக ஏங்கினார்; திரையுலகத்தில் சாதிக்க விரும்பினார்; அதே நேரத்தில் மெய்யான ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் தேடினார். புறம்பான, தற்காலிகமான, நிலையற்ற, கட்டுப்பாடற்ற, பொருளற்ற சந்தோஷத்தை அல்ல. உள்ளான, நிலையான, முழுமையான, நிலைத்திருக்கும், தேவன் மட்டுமே தரக்கூடிய சந்தோஷத்தைத் தேடினார். தன் ஆவிக்குரிய பசியைத் தீர்க்க அவர் பல வழிகளைத் தேடினார்; பல பாதைகளில் பயணித்தார்; பசி தீரவில்லை; தாகம் தணியவில்லை; இருள் விலகவில்லை; ஒளி கிடைக்கவில்லை. இறுதியில் அவர் தேடிய ஒளி கிடைத்தது; உள்ளத்தில் ஒளி வந்தது.   .   

3. தேடல் – பல வழிகள்ஒரே தேடல்

கீத் கிரீன் சத்தியத்தைத் தேட ஆரம்பித்தார். ஆழமான தேடல்…இந்தத் தேடலில் ஒரு கட்டத்தில் அவர்,  இன்பத்திற்காகவோ, போதைக்காகவோ அல்ல, தேவனைக் காணலாம் என நம்பிகையினால் போதைப்பொருட்களையும் எடுக்க ஆரம்பித்தார். மூஞ்சாடுதல் என்ற போதைமயக்க அனுபவம் ஏற்பட்டால், கனவுகள் தோன்றும் என்றும், ஏதோவொரு ரூபத்தில் தேவன் தோன்றுவார், அவரை அறியலாம் என்றும்  இவர் நினைத்தார். இது இன்று நமக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் காலத்தில் பலர் அப்படித்தான் நினைத்தார்கள், செய்தார்கள். இன்றும் வட இந்தியாவில் பல சாமியார்கள் இப்படிச் செய்வதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால், போதை மயக்கத்தில் சுயநினைவிழந்து மிதந்தபோதும், "தேவன் அதில் இல்லை," என்று அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் தொடர்ந்து சத்தியத்தைத் தேடினார். என்னென்ன வழிகளில் சத்தியத்தைத் தேடலாம் என்று ஒரு பட்டியல் தயாரித்து ஒவ்வொன்றாக முயற்சித்தார். ஒவ்வொன்றாகத் தோற்றது. தோற்ற வழிகளைப் பட்டியலிலிருந்து நீக்கினார்.

"ஒருவேளை பரிசுத்தமாக வாழ்ந்தால் தேவனை அடைய முடியுமோ?" என்ற எண்ணத்தில் அவர் தன்னைத்தானே பரிசுத்தமாக்க முயன்றார். அதனால் சில காலம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்டார். சுத்தமாக வாழ முயன்றார். ஆனால்…எதுவும் வேலை செய்யவில்லை.

அவருக்குள் இருந்த அந்த வெற்றிடத்தை எதுவும் நிரப்பவில்லை.

அவர் தயாரித்து வைத்திருந்த பட்டியலில் கடைசியாக இயேசு என்ற ஒரேவொரு பெயர் மட்டும் மீதி இருந்தது.  இந்தப் பெயரை அவரால் பட்டியலிலிருந்து நீக்கமுடியவில்லை. ஏனெனில், இயேசுவின் வார்த்தைகள் அவருடைய மனதைக் கவர்ந்தன. ஆனாலும், அவர் இயேசுவை நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ்வதற்கு வழி சொல்லும்  ஒரு குருவாக, ஆசானாக, ஆன்மீக வழிகாட்டியாக மட்டுமே பார்த்தார்.

அவர் கிறிஸ்தவத்தை விரும்பவில்லை. பாவம், பாவத்திற்குத் தண்டனை, நரகம் ஆகியவைகளை அவர் விரும்பவில்லை. அவர் விரும்பியதெல்லாம் அன்பு, அமைதி! இயேசு தேவனாக இருக்கவேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. எனவே, இயேசு கிறிஸ்து யார் என்று அவருக்குத் தெரியாது.

"இசைதான் என் உயிர்… ஆனால், அது போதுமா? உண்மையாகவே தேவன் யார்? இயேசு - இவர் யார்?" என்ற பல கேள்விகள் அவருடைய உள்ளத்தில் அலைகளைப்போல் மோதின.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடி, இந்தப் பசியைத் தீர்க்க, அவர் பல வழிகளைத் தேடினார், பல பாதைகளில் பயணிக்கத் தொடங்கினார். இருள் உலகின் சக்திகளை  ஆராய்ந்தார்; மந்திரங்களை முயற்சித்தார்; விதவிதமான ஆன்மீக வழிகளைத் தேடினார்.பிற மதங்களை ஆராய்ந்தார். இந்துமதம், புத்தமதம்போன்ற பிறமதங்களிலும், தத்துவங்களிலும், ஹிப்பி கலாசாரம்போன்ற வேறுபல கலாச்சாரங்களிலும் அவர் ஒளியைத் தேடினார்; சத்தியத்தைத் தேடினார். தியானங்களிலும், தர்மங்களிலும் மூழ்கினார்; குருக்களையும், சந்நியாசிகளையும் சந்தித்தார். பல நூல்களைப் படித்தார். எல்லாரிலும், எல்லாவற்றிலும் அவர் ஒன்றேவொன்றைத் தேடினார்: சத்தியம். ஒரு நேரத்தில் அவர் தன்னை “New Age Seeker” என்று அழைத்தார். “நான் யாரும் இல்லாததுபோல உணர்கிறேன்… ஆனால் யாரோ ஒருவரிடம் சேர்ந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது," என்று அவர் சொன்னார்.

கீத்துக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது. அவர் தன் நாட்குறிப்பில் ஓர் இடத்தில், "My roots… dangle.” "என் வேர் தொங்குகிறது” என்று எழுதியிருக்கிறார்.  இது அன்றைய அவருடைய உண்மையான நிலையை விளக்குகிறது. "என் வேர்கள் நிலத்துக்குமேலே தொங்கிக்கொண்டிருக்கின்றன. நான் திசை தெரியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறேன். நிலையில்லாமல்…அலைந்துகொண்டிருக்கிறேன்...அடித்தளம் இல்லாமல் ஆடிக்கொண்டிருக்கிறேன்" என்பதே இதன் பொருள். அவர் தேடிய எதுவும் அவருடைய உள்ளத்தை நிரப்பவில்லை. அவர் சத்தியத்தைத் தேடித் துடித்தார்.

அப்போது கீத்துக்கு வயது 19. ஒரு பக்கம் அவர் சத்தியத்தை வேட்கையோடு தேடிக்கொண்டிருந்தார். இன்னொரு பக்கம்  ஹாலிவுட்டில் இசை உலகில் இடம்பிடிக்க போராடிக்கொண்டிருந்தார். தானே எழுதி இசையமைத்து, பதிவுசெய்த  பாடல்கள் அடங்கிய ஒலிநாடாக்களை, பெரிய ரெகார்டிங் நிறுவனங்களுக்குக் கொண்டுசென்று கொடுத்தார். தன் பாடல்களை அவர்களுக்கு வாசித்துக்காட்டினார். வாய்ப்புகளைத் தேடினார். பல கதவுகளைத் தட்டினார். யாராவது தன்னைத் கவனித்துவிடமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு. இரவு நேரங்களில் வாய்ப்பு கிடைத்த இடங்களில் வாசித்தார்—கிளப்புகள், பப்கள், நைட்க்ளப்கள்—ஹாலிவுட்டுக்கு வாசலைத் திறக்கக் கூடிய எந்த இடமானாலும் வாசித்தார்.

4. வாழ்க்கைத்துணையாய் வந்த மெலடி 

ஒருநாள், தன் பாடல்களை எடுத்துக்கொண்டு ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்குச் சென்றார். அங்கு மெலடி என்ற ஒரு பெண் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். கீத் தன் பாடல்களை அவரிடம் கொடுத்துவிட்டுச்  சென்றார். ஒரு வாரத்துக்குப்பிறகு, கீத் அந்த ஸ்டுடியோவைத் தொடர்புகொண்டு, மெலடியோடு பேசினார்.  “ஹாய், நான்தான் கீத்! என் பாடல்களைக் கேட்டீர்களா?" என்று வினவினார். மெலடி குழப்பத்தோடு, “யார் நீ? உன் பாடல்களைக் கேட்கவில்லை” என்று பதிலளித்தார்.

கீத் தைரியமானவர், மனதில் பட்டதை சட்டென்று சொல்லிவிடுவார். “நீங்கள் அந்தப் பாடல்களைக்  கேட்கவேண்டும்! தயவுசெய்து கேளுங்கள்!” என்று கீத் வற்புறுத்தினார். உரையாடல் தொடர்ந்தது. மெலடிக்கு கீத்தின்மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஒருநாள் "என்னோடு மதிய உணவு சாப்பிட வருவீர்களா?" என்று கீத் கேட்க, “இவன் சற்று விநோதமானவன் போலும்," என்று நினைத்தாலும், “சரி…வருகிறேன்” என்று மெலடி பதில் சொன்னார்.

பிறகு அவர் கீத்தின் பாடல்களைக் கேட்டு, ஆச்சரியமடைந்தார். “இந்த அளவுக்குத் திறமையுள்ள இவர் இன்னுமா ஹாலிவுட்டில் சாதிக்கவில்லை?" என ஆச்சரியப்பட்டார். அவர்களுடைய சந்திப்பு தொடர்ந்தது. உறவு மலர்ந்தது. இவர்கள் இருவரும் இணைந்ததற்கு மிக முக்கியமான காரணம் இசை மட்டுமல்ல. அதைவிட இன்னொரு முக்கியமான ஆழமான காரணம் இருந்தது. ஆம், இருவரும் ஓர் ஆவிக்குரிய தேடலில் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.

மெலடி ஒரு யூதப் பெண். ஆனால், அவர் யூத மதத்தின்படி வளரவில்லை. அவரும் கீத்தைப்போல ஜோதிடம், மந்திரம், அமானுஷ்ய சக்திகள், அதிர்ஷ்ட கற்கள், மாயாஜாலம், கிழக்கத்திய தத்துவங்கள் எனப் பல விசித்திரமான ஆன்மிக வழிகளில் போய்க்கொண்டிருந்தார். புத்தமதத்தில் ஆர்வம்கொண்டு ஜப்பானுக்குப் போய் புத்த சிந்தனையாளர்களைப் பார்த்தார். ஆனால், அவர் தேடிய சத்தியம் எதிலும் எங்கும் கிடைக்கவில்லை. அவரும், கீத்தைப்போல சத்தியம், சமாதானம் ஆகியவைகளை அடையத் தவித்துக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில்தான் அவர் கீத்தைச் சந்தித்தார். தான் பயணிக்கிற அதே பாதையில் பயணிக்கிற ஒருவர்;  தான் தேடிக்கொண்டிருக்கிற அதே சத்தியத்தைத் தேடுகிற ஒருவர். இதுவே அவர்களுடைய உறவுக்கு மிக முக்கியமான காரணம். சில நாட்களிலேயே இருவரும் மிகவும் நெருக்கமானார்கள்.

ஒரு நாள் கீத், மெலடியை நோக்கி, “நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்புகிறேன். உனக்குச் சம்மதமா!” என்று கேட்டார். சூறாவளிக் காதல். விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். கீத், மெலடியின் வீட்டில் குடியேறினார். அங்கிருந்து அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் ஆரம்பமானது.

கீத் மெலடியின் வீட்டில் குடியேறியபோது… நேராக அவளுடைய புத்தக அலமாரிக்குப் போனார். அங்கே இருந்த புத்தங்களைப் பார்த்தார். ஜோதிடம், மந்திரம், கிழக்கத்திய மறைஞானம், புத்தமதம், இந்துமதம் எனப் பல புத்தகங்கள். மெலடி பல வருடங்களாகச் சேர்த்துவைத்திருந்த புத்தகங்கள். கீத் அவளிடம், "இவைகளையெல்லாம் தூக்கியெறிய வேண்டும்," என்று சொன்னார். மெலடி சற்று அதிர்ச்சியடைந்தார். “மன்னிக்கணும்… இது என் புத்தக அலமாரி. நான் எதைப் படிக்க வேண்டும், படிக்கக்கூடாது என்பதைத் தீர்மானிப்பது நான். உனக்கு விருப்பமில்லையென்றால், உன் புத்தகங்களைத் தூக்கியெறி," என்று பதில் சொன்னார். கீத் தலையை அசைத்து, “இல்லப்பா… இவை உண்மை இல்லை. நான் இவைகளைப் படித்திருக்கிறேன். நீ போய்க்கொண்டிருக்கிற பாதைகளில் நான் பயணித்திருக்கிறேன். நீ தேடுகிற சத்தியம் இவைகளில் இல்லை. எனவே, நாம் இவைகளை விட்டுவிட வேண்டும்," என்று பதிலளித்தார்.

இதுதான் கீத்தின் இயல்பு. எந்தத் தயக்கமுமின்றி, நேரடியாகக் கூறிவிடுவார்.

அவர் சத்தியத்தைத் தேடினார். உண்மையான தேவனை உண்மையாக அறிய வேண்டும் என்ற ஆவல். அதைத்தான் அவர் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தார்.

கீத் எப்போதும் ஒரு படி முன்னாலே செல்வதாகவும், தான் எப்போதும் கீத்துக்கு ஓர் அடி பின்னால் செல்வதாகவும் மெலடி உணர்ந்தார்.

அவர்களுடைய திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் அவ்வளவு சுமூகமாச் செல்லவில்லை. மிகவும் கடினமாகத்தான் இருந்தது. ஏனெனில், அவர்கள் இருவரும் இன்னும் அந்த “பெரிய வாய்ப்புக்காக”க் காத்துக்கொண்டிருந்தார்கள். வருமானம் கொஞ்சம் இருந்தது. கீத் கச்சேரிகளிலும், மேடைகளிலும் வாசித்தார், பாடினார்; கிளப்புகள், பப்கள், நைட்க்ளப்களிலும் வாசித்துக் கிடைத்த  வருமானத்தில்தான் அவர்களுடைய வாழ்க்கை நகர்ந்தது. போதுமான வருமானத்துக்காக பிசா டெலிவரி செய்தார்கள், தங்களுடைய ஹிப்பி வண்டியில் பழைய உடைகளைக் கொண்டுபோய்  பல இடங்களில் விற்றார்கள். அவர்களுடைய வாழ்க்கை ஏதோ போய்க்கொண்டிருந்தது. ஆயினும் பொருளாதார நெருக்கடி இருந்தது.

பல வேளைகளில் வெற்றியை நெருங்கிவிட்டதுபோல் தெரிந்தது. ஆயினும், வெற்றி  நழுவிப்போய்க்கொண்டேயிருந்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ஹாலிவுட்டில் பிரபலமான நைட்க்ளப்களில் கீத்துக்குப் பெரும் ஆதரவு, ஆரவாரம் கிடைத்தது. பெரிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவரைக் கவனித்தார்கள். அவர் பாடியபோது எல்லாரும் எழுந்துநின்று கரவொலி எழுப்பினார்கள். சிலர் அவரை விமானத்தில் அழைத்துச்சென்று தங்களுடைய ஸ்டுடியோக்களில் பாடச் சொன்னார்கள்; அவர் பாடினார். ஆனால் அதன்பிறகு… எந்தப் பதிலும் இல்லை. வெற்றிக்கு ஒரு சென்டிமீட்டர் அருகில் போனார். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.

அதைவிடப் பெரிய சலிப்பு என்னவென்றால் அவர்களுடைய ஆவிக்குரிய தேடலிலும் சத்தியத்தைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இது கீத்துக்கு அதிக வலியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. அவர் சத்தியத்தைத் தீவிரமாகத் தேடினார்.  உண்மையான தேவனை, உண்மையான வழியை அறியவேண்டும் என்ற ஆவல் அவரை ஆட்கொண்டிருந்தது.

5. மாற்றம் - மனந்திரும்புதலும், மறுபடிபிறத்தலும் 

அவர் ஏற்கெனவே தனக்குத் தெரிந்த சில இசைக் கலைஞர்களை மீண்டும் சந்திக்கநேர்ந்தது. ஆனால், இப்போது அவர்கள் முன்பு இருந்ததுபோல் இல்லாமல் வேறுவிதமாக இருந்தார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறியிருந்தார்கள். அவர்களிடம் மாற்றம் காணப்பட்டது. ஆனால், அது என்ன மாற்றம் என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியவில்லை.

வீட்டில், தன் மனைவி மெலடியிடம், "அவர்கள் மாறியிருக்கிறார்கள். அவர்களிடம் ஏதோ இருக்கிறது. அது என்னிடம் இல்லை. அவர்களிடம் இருப்பதைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். அதைத்தான் நான் விரும்புகிறேன். அது எனக்கு வேண்டும்," என்று கூறினார்.

அதைப் பெறுவதற்கு அவர் முயற்சிக்க ஆரம்பித்தார். மற்ற கிறிஸ்தவர்களைப்போல அவர் வாழ முயன்றார். இயேசுவின் போதனைகளைப் படித்து, அவைகளைப் பின்பற்ற முயன்றார். நல்லவனாக வாழவேண்டும் என்பதற்காகப் போராடினார். ஆனால், அவர் எந்த அளவுக்கு முயன்றாரோ, அந்த அளவுக்குத் தோற்றார்.

போதைப் பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காகப் போராடினார். ஆனால், அவருடைய பழக்கம் இன்னும் ஆழமாயிற்று. அவருடைய மனம் சோர்ந்தது. வருத்தம் அதிகமானது.

இந்தச் சூழ்நிலையில் ஒரு நாள், கீத் மெலடியிடம், “வா, எங்காவது ஒரு சபைக்குப் போவோம்,” என்று கூறினார். இருவரும் நீண்ட முடியுடன், வித்தியாசமான உடையில் தங்கள் பழைய ஹிப்பி வண்டியில் சபைக்குச் சென்றார்கள். அவர்கள் உள்ளே நுழைந்ததும், வாசலில் இருந்த வரவேற்பாளர் வாயைப்பிளந்து பார்த்தார். ஆனால், புன்முறுவலோடு அவர்களை வரவேற்று அவர்கள் இருக்கவேண்டிய இடத்தைக் காட்டினார்.

இருவரும் உள்ளே சென்று இருக்கைகளில் அமர்ந்து, சுற்றிப் பார்த்தார்கள். மற்றவர்கள் அங்கிருந்த வேதாகமத்தையும், பாடல் புத்தகத்தையும் எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தார்கள். கீத் மெலடி பக்கம் திரும்பி, "என்னால் இங்கு இருக்க முடியாது. வெளியே போகலாம், வா," என்ற மெல்லச் சொன்னார். கூட்டம் தொடங்குவதற்குமுன்பே இருவரும் வெளியேபோய்விட்டார்கள். பின்னாட்களில் கீத்  “அந்த இடம் நமக்கு ஏற்ற இடம் இல்லை. அவர்கள் இயேசு தேவனுடைய குமாரன் என்று நம்புகிறார்கள். அது எனக்கு ஒத்து வராத விஷயம்," என்று சொன்னார்.

ஒருநாள் அவர்களுடைய நண்பர் ஒருவர் ஒரு சபையின் பெயரைச் சொல்லி, “இந்தச் சபைதான் உங்களுக்கேற்ற சபை. நீங்கள் அங்கு போய்ப்பாருங்கள்,” என்று கூறினார். அவர்கள் போனார்கள். அங்கு இருந்தவர்கள் மிகச் சாதாரணமாக இயல்பான உடை உடுத்தியிருந்தார்கள். முன்னால் மேடையில் நின்றவர்கூட விளையாட்டு வீரர்கள் அணிகிற ஜெர்சி போட்டிருந்தார். "பரவாயில்லையே! இந்த இடம் நம்முடைய சுவைக்குக் கொஞ்சம் ஒத்திருக்கிறதே!" என்ற உணர்வு இருவருக்கும் ஏற்பட்டது.

இசைக்கருவிகள் வாசிக்க ஆரம்பித்தார்கள். செவிப்பறை கிழிந்துவிடும் அளவுக்கு இசை சத்தமாக இருந்தது. அது ஒரு கரிஸ்மாடிக் சபை. கூட்டம்  ஆரம்பித்ததும், ஒருவன் திடீரென்று எழுந்து, வேத வசனங்களைச் சத்தமாக உரைக்க ஆரம்பித்தான். அவன் வசனங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மற்றொருவன் அவனைவிடச் சத்தமாக வேறு ஏதோ சொல்ல ஆரம்பித்தான். வேறொருவன் எழுந்து நின்று வேறோ ஏதோ பேசினான். கீத் சுற்றிசுற்றிப் பார்த்துவிட்டு, “மெலடி, இவர்கள் ஒரு மாதிரியானவர்கள்போல் தெரிகிறது… இது நமக்குரிய இடம் இல்லை. வா, வெளியே போகலாம்,” என்றார். மெலடியும் “சரி,” என்று சொல்லி இருவரும் அங்கிருந்து வெளியேறினார்கள்.

கீத்துக்கு இயேசுவைப் பிடிக்கும். இயேசு கூறிய  அன்பு, சமாதானம், இரக்கம் ஆகியவைகளைப்பற்றிய போதனைகள் பிடிக்கும். ஒரு கட்டத்தில் அவர், “நானும் கிறிஸ்தவன்தான்,” என்று சொல்லத் தொடங்கினார். அந்த நேரத்தில், சமீபத்தில் இரட்சிக்கப்பட்டிருந்த அவருக்கு நெருக்கமான ராண்டி என்ற ஒரு நண்பர், “என்னது! நீ கிறிஸ்தவனா? நீ பாவத்தை ஒப்புக்கொள்ளமாட்டாய். பாவத்துக்குப் பரிகாரமாகிய இயேசுவின் இரத்தத்தையோ, இயேசு உனக்காகச் சிலுவையில் மரித்தார் என்பதையோ, நரகத்தையோ விசுவாசிக்கவில்லை. சமாதானமும் அன்பும்தான் கிறிஸ்தவம் என்று நினைக்காதே. அதுவல்ல கிறிஸ்தவம்!” என்று சொன்னான். இந்த வார்த்தைகள் கீத்தின் உள்ளத்தைத் தட்டி எழுப்பின. ராண்டி தொடர்ந்து கீத்திடம், “நான் உன்னை ஓர் இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன். என்னோடு வா! இது நீ இதுவரை போய் வந்த, பார்த்த சபை இல்லை. இது வேதாகமப் பாடம் நடக்கும் இடம். நீ வந்துபார்," என்று அழைத்தார். கீத், “வேத பாடமா? அது என்ன! ரொம்ப அலுப்பாக இருக்கும்போல தெரிகிறதே" என்று சலித்துக்கொண்டார். "எப்படி இருக்கும் என்று போய்பாரு,” என்றார். கீத் தயக்கத்தோடு ஒப்புக்கொண்டார்.

கீத்தும் மெலடியும் தூசியும் புகையும் நிறைந்த தங்கள் ஹிப்பி வண்டியில் மிக நீண்ட தூரம் ஓட்டிச் சென்றார்கள். அந்த இடம் ஹாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் பகுதியில் இருந்தது. போய்க்கொண்டிருக்கும்போதே கீத், “இது சரியில்லை… இது சரியில்லை…” என்று சொல்லிக்கொண்டே போனார். போய்ச் சேர்ந்தார்கள். அழகான புல்வெளி, நல்ல மலர்த் தோட்டம். அந்த அழகான வீட்டின் வாசலில் இருவரும் இறங்கினார்கள்.

வீட்டுக்குள் போனார்கள். ஆச்சரியம்! பல்வேறு பின்புறத்திலிருந்து வந்த சாதாரணமான மக்கள் அந்த வீட்டின் முன்னறையில்  அமர்ந்திருந்தார்கள். இருவரும் உட்கார்ந்தார்கள். இது ஒரு சிறிய வீட்டுக் கூட்டம். அலங்காரமான சபைக் கூட்டம் இல்லை. ஒருவருடைய வீட்டில் நடத்தப்பட்ட வேத பாட வகுப்பு. வந்திருந்தவர்கள் ஒருவரோடொருவர் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிறகு, கென் என்ற ஒருவர் பேச ஆரம்பித்தார். . அவர் பாவம், இரட்சிப்பின் தேவை, இரட்சகர் தேவை, பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட பலிகள், சிந்தப்பட்ட இரத்தம், இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு இல்லை - ஆகியவைகளைக்குறித்து பேசினார். அவர் மிக முக்கியமாக, “இயேசு, கர்மத்தைத் தொலைக்கிறார்”என்று  சொன்னது கீத்தின் இதயத்தில் பசுமரத்தாணிபோல் குத்தியது.

ஒருவன் நன்மை செய்தால் நல்லது நடக்கும்,  தீமை செய்தால் தீயது நடக்கும் என்று நம்புவதுதான் கர்மம். கீத் அப்படித்தான் நினைத்தார். கிறிஸ்தவமும் அப்படித்தான் என்பது கீத்தின் எண்ணம். நன்மை செய்தால் தேவன் ஆசீர்வதிப்பார் என்பது அவருடைய புரிதல். ஆனால், இதோ இங்கு ஒருவர் வேறுவிதமாகச் சொல்லுகிறார். பாவம், பலிகள், பரிசுத்தம், பாவப்பரிகாரம்,  பாவமன்னிப்பு, இரட்சிப்பு, கிருபை என்று பேசுகிறார். “அவை நாம் சம்பாதிப்பவை அல்ல, தேவன் அருளும் ஈவு,” என்று சொன்னார்.

முதன்முறையாக, கீத், மெலடி இருவருமே தொடப்பட்டார்கள். பாவம், சிலுவை, இரத்தம், இரட்சிப்பு, இரட்சகர் என்ற செய்தியை அவர்கள் இதற்குமுன் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இப்போது பல  கேள்விகள் எழுந்தன. கேள்விகளுக்கான பதில்களும் உள்ளே எழுந்தன.

கூட்டத்தின் முடிவில் கென், “யாராவது ஆண்டவரை ஏற்றுக்கொள்ள விரும்பினால், உங்கள் கையை உயர்த்துங்கள். நாம் ஜெபிக்கப்போகிறோம்," என்று சொன்னார். மெலடி தலையைக் குனிந்து, பிறர் என்ன செய்கிறார்கள் என்ற ஓரக்கண்ணால் பார்த்தார். ஆச்சரியம், அதிர்ச்சி! ஏன்! அருகிலிருந்த கீத் கையை உயர்த்தியிருந்தார். மெலடி, “இவன் ஏன் இப்படிச் செய்கிறான்?” என்று பயத்தோடு நினைத்தார்.

தன்னைச்சுற்றி நடக்கும் பரிசுத்தமான காரியத்திற்கு தான் அந்நியமாகவும், அங்கு தான் வெறுமனே ஒரு பார்வையாளராகவும் இருப்பதுபோல் மெலடி உணர்ந்தார். கென் கையை உயர்த்தச் சொன்னபோது தானும் பதிலளிக்கவேண்டும் என்ற ஏக்கம் மெலடிக்கு இருந்தது. ஆனால்... கை உயரவில்லை.

கூட்டம் முடிந்தது. கீத்தும் கென்னும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அன்றிரவு கீத்துக்குள் ஏதோவொன்று நிகழ்ந்தது..

மெலடி கையை உயர்த்தவில்லையே தவிர, அவருக்குள்ளும் ஏதோவொன்று நடந்தது. இருவரும் புறப்பட்டுச் சென்றார்கள். அந்த நாள் அவர்களுடைய இரட்சிப்பின் நாள். வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்தபோது, மெலடி வண்டியில் அமைதியாக அமர்ந்திருந்தார். கீத் மிக உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். “மெலடி… என்னால் நம்ப முடியவில்லை! என்னே சமாதானம்! என்னே  இளைப்பாறுதல்! நான் இதுவரை தேடிக்கொண்டிருந்த சத்தியத்தை இன்று கண்டுபிடித்துவிட்டேன். எனக்குத் தேவனைத் தெரியும். தேவனைத் தெரியும். மெலடி…இவ்வளவுநாள் நான் தவறாகவே நினைத்தேன்…தவறாகவே வாழ்ந்தேன்.” கீத் பேசிக்கொண்டே இருந்தார்— மகிழ்ச்சியோடு, ஜீவனோடு.

ஆனால், மெலடி அமைதியாக இருந்தார். அவருடைய மனம் கனமாக இருந்தது. "நான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான நேரத்தைத் தவறவிட்டுவிட்டேனோ!" என்று அவர் உணர்ந்தார்.

அந்த வாரம் முழுவதும், "அடுத்த வெள்ளிக்கிழமை விரைவில் வந்துவிட வேண்டும்," என்ற ஒரேவொரு  எண்ணம்தான் அவருடைய மனதில் இருந்தது. மீண்டும் அந்த அறையில் இருக்கவேண்டும், அந்தக் கூட்டத்தை முன்னின்று நடத்திய கென் போன வாரம் கேட்ட, “யாராவது ஆண்டவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா! அப்படியானால் உங்கள் கையை உயர்த்துங்கள்,”  என்ற கேள்வியை மீண்டும் கேட்பார் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார். அப்படிக் கேட்டவுடன் மெலடி கையை உயர்த்த ஆசைப்பட்டார். கீத் கண்டுபிடித்த சத்தியத்தைத் தானும் பெற விரும்பினார். ஏனென்றால், அவர்கள் இருவரும் தேடிக்கொண்டிருந்த சத்தியத்தைக் கீத் கண்டுபிடித்துவிட்டார் என்பதை மெலடி தெளிவாகப் புரிந்துகொண்டார்.

ஒரு வாரம் கழிந்தது. அடுத்த வெள்ளிக்கிழமை வந்தது. இருவரும் அந்த வீட்டுக் கூட்டத்துக்குப் போனார்கள். கென் பேச ஆரம்பித்தார். "இதுதான். இதுதான் அந்த சத்தியம்! இதுதான் நான் தேடிய சத்தியம்! ஆண்டவரை நான் ஏற்கவேண்டும்," என்று அவருடைய உள்ளத்தில் ஒரு துடிப்பு.

“நாம் ஜெபிக்கப்போகிறோம். யாராவது ஆண்டவரை ஏற்க விரும்பினால், கையை உயர்த்துங்கள்,” என்று கென் அழைத்தார். மெலடி தயங்கினார். "இவர்தான் ஒவ்வொரு வாரமும் இப்படிக் கேட்கிறாரே… இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம். இது நான் எடுக்கப்போகிற ஒரு பெரிய முடிவு. அடுத்த வாரம் முடிவுசெய்யலாம். அவசரப்பட வேண்டாம்," என்று எண்ணினார். அதே நேரத்தில், "நான் என்ன  செய்துகொண்டிருக்கிறேன்? இந்த நேரத்துக்காகத்தானே ஒரு வாரம் காத்திருந்தேன். இந்தத் தருணத்தைத்தானே நான் ஒரு வாரமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது அந்தத் தருணம் வந்ததும், நான் ஏன் தயங்குகிறேன்? என்று தனக்குள் கேட்டுக்கொண்டார். இருப்பினும், கையை உயர்த்தமுடியவில்லை. கையை உயர்த்தமுடியாத அளவுக்குக் கனமாக இருந்தது.

கென் ஒரு சிறு இடைவெளிக்குப்பிறகு, “இன்றிரவு இங்கே இப்போது தேவன் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்… அவர் ஆண்டவரை ஏற்கவேண்டும்…” என்று மெதுவாகப் பேசினார். மெலடியின் உள்ளம் பதறியது. "இவருக்கு எப்படித் தெரிந்தது? என் இதயத்தின் துடிப்பைக் கேட்டுவிட்டாரா?" ஆனால், அது கென்னின் பேச்சல்ல. தேவனே தன்னோடு பேசினார் என்பதை மெலடி புரிந்துகொண்டார். உடனே, மெலடி தன் கையை உயர்த்தினார்.

அந்தத் தருணத்திலிருந்து கீத்தும் மெலடியும் முற்றிலும் மாறிப்போனார்கள். இருவரும் தங்கள் வாழ்வை முழுமையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள். அவர்கள் ஆண்டவராகிய இயேசுவைக் கண்டார்கள்.

அவர்கள் தேடிய சத்தியத்தை, ஆண்டவராகிய இயேசுவில் கண்டுபிடித்தார்கள்.

கீத் மிகவும் துடிப்பானவர், காற்று நிரம்பிய பலூன்போல துள்ளித்திரிபவர்! மிகுந்த உற்சாகமும், முனைப்பும், தீவிரமுமானவர். அவர் எதையும் அரைகுறையாகச் செய்பவர் இல்லை. அந்த நேரத்தில் அவருக்கு வயது 21. இருவரும் தங்களுடைய விசுவாச வாழ்க்கையில் புதிதாக அடியெடுத்துவைத்திருந்தார்கள். "தங்களுடைய வாழ்க்கை கிறிஸ்துவுக்கேற்றார்போல் மாற வேண்டும், பிறருடைய வாழ்க்கையையும் மாற்ற வேண்டும்," என்ற நெருப்பு அவர்களைப் பற்றிப்பிடித்தது. ஓட வேண்டும், பிரசங்கிக்க வேண்டும், உலகத்தை மாற்ற வேண்டும் என்ற துடிப்பு.  

6. ஆவிக்குரிய வளர்ச்சி – ஒரு சீன முதியவரின் வழிநடத்தல்

அவர்களுடைய வேகத்தையும், முனைப்பையும் கண்ட கீத்தின் நண்பர் ரண்டி, “ஓ... கீத்! நீ கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்! நீ வேதாகமத்தை இன்னும் ஒருமுறைகூடச் சரியாகப் படிக்கவில்லை. கிறிஸ்தவ  விசுவாசத்தைப்பற்றி உனக்கு இன்னும் சரியாகத் தெரியாது. அதற்குமுன் நீ கிறிஸ்துவைப் பிறருக்குப் பிரசங்கிக்க வேண்டும் என்ற உன் எண்ணம் ஆரோக்கியமானதல்ல. உன் பாரத்தை நான் வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். ஆனால், அதற்குமுன் நீ நல்ல முதிர்ந்த, வளர்ந்த தேவ மக்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று ஆலோசனை கூறினார்.

அதற்கு கீத், சலிப்புடன், “சரி... ஆனால், அப்படிப்பட்ட ஆளை நான் எங்கு போய்த் தேடுவது? யார் எனக்குக் கற்றுத்தருவார்கள்?” என்று கேட்டார். ரேண்டி, “ஒருவர் இருக்கிறார். மிகவும் முதிர்ந்தவர், ஆழமான விசுவாசி. கொஞ்சம் கண்டிப்பானவர்… உன்னுடைய தெருவிலேயே இருக்கிறார்!” என்று சொன்னார்.

அடுத்த நாள், யாரோ வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. போய் கதவைத் திறந்தார். அங்கு, ரேண்டி சொன்ன மனிதர் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு வயது 87. அவர் ஒரு சீனர். பெயர் ரிச்சர்ட் லோ. அவர் வீட்டுக்குள் வந்தார்; கீத்தைக் கட்டியணைத்து மகிழ்ச்சியோடு, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!" என்று சொன்னார். மெலடிக்கும் வாழ்த்து சொன்னார். "இவர் வழக்கமான, சாதாரணமான விசுவாசி இல்லை. இவர் இயேசுவின் உண்மையான சீடர்," என்று அவர்கள் கொஞ்ச நேரத்தில் புரிந்துகொண்டார்கள்.

ரிச்சர்ட் லோ 70 வருடக் கிறிஸ்தவர். அவர் சீனாவில் இருந்தபோதே இயேசுவை ஏற்றுக்கொண்டார். வாழ்க்கையின் பல பிரச்சனைகளின் நடுவிலும் விசுவாசத்தில் உறுதியாக நின்றார். இப்போது  அமெரிக்காவில் கீத்தின் வீட்டுக்கு அருகில்தான் தனியாக வாழ்ந்துகொண்டிருந்தார்.

வேதாகமத்தை எப்படி வாசிக்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், ஜெபம் என்றால் என்ன, எப்படி ஜெபிக்க வேண்டும், எப்படி தேவனோடு நடக்க வேண்டும், விசுவாச வாழ்க்கை என்றால் என்னவென்று கிறிஸ்துவோடும், கிறிஸ்தவ வாழ்க்கையோடும் தொடர்புடைய அனைத்தையும் அவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அவரோடு இருவரும் ஒவ்வொருநாளும் பல மணிநேரங்கள் ஐக்கியம்கொண்டார்கள். அவர்கள் அவரைத் தங்கள் ஹிப்பி வேனில் ஏற்றிக்கொண்டு டோனட் கடைக்கு அழைத்துச்சென்றார்கள். காபி குடித்தார்கள்; டோனட் சாப்பிட்டார்கள்;  சேர்ந்து வேதாகமத்தை வாசித்தார்கள். சேர்ந்து ஜெபித்தார்கள். எளிமையான கிறிஸ்தவ வாழ்க்கை தொடர்ந்தது.

வேதாகமத்தில் ஒரு சந்தேகம், ஒரு கேள்வி வந்ததும், கீத் வேதாகமத்தை எடுத்துக்கொண்டு ரிச்சர்டின் வீட்டுக்கு ஓடுவார்: “இதற்கு என்ன பொருள்? இதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?” என்று கேட்பார். அந்த 87 வயது முதியவர் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். அவர் அவர்களுக்கு அமைதியான, ஆழமான ஒரு வழிகாட்டியாக இருந்தார்.

கீத் கிரீனும், மெலடியும்  கர்த்தருடன் நடக்க ஆரம்பித்தார்கள். இருவரிடமும் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்த அவர்களுடைய பழைய நண்பர்கள்  அதிர்ச்சியடைந்தார்கள். ஏனென்றால், இருவரும் முன்பு இரவு நேர விருந்துகளில் கலந்துகொள்பவர்கள். இவர்கள் அங்கு இருந்தால் விருந்து களைகட்டும். கீத் இரவு நேர இசை நிகழ்ச்சிகளில் விடியற்காலை இரண்டு மணிவரை வாசித்துவிட்டு, அடுத்த விருந்துக்குப் போவார். இவர்களைச் சுற்றியிருந்தவர்களெல்லாம் இசையமைப்பாளர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்கள், இரவு நேரப் பறவைகள். கீத் மெலடி ஆகிய இருவரும் இப்போது இவர்களுக்கு ஒரு புரியாத புதிராகிவிட்டார்கள். ஏனென்றால், இவர்கள் இப்போது விருந்துகள் 'வேண்டாம்' என்று சொல்லுகிறார்கள்; இரவு நேர விருந்துகளில் கலந்துகொள்வதில்லை; பாட்டுக் கச்சேரிக்குப் போக மறுக்கிறார்கள். இவைகளை விட்டுவிட்டு வேதாகமத்தைத் தூக்கிக்கொண்டு  87 வயது சீனக் கிழவனோடு நேரம் செலவழிக்கிறார்கள். "இவர்களுக்கு என்ன நடந்தது! இவர்கள் ஏன் இப்படி ஆனார்கள்?" என்று பலர் குழம்பினார்கள்.

கீத், மெலடி இருவரும் விரைவில் ஞானஸ்நானம் எடுத்தார்கள். இருவரும் தெய்வீக வைராக்கியத்தோடு கிறிஸ்துவைப் பின்தொடர ஆரம்பித்தார்கள். சத்தியத்தைத் தேடி, உண்மையான தேவனைத் தேடி பல ஆண்டுகள் குழம்பித் திரிந்தபின் இறுதியாக உண்மையான தேவனைக் கண்ட பேரானந்தம் அவர்களுடைய உள்ளத்தை நிரப்பிற்று. எத்தனை தேடல்கள், குழப்பங்கள், கேள்விகள், சந்தேகங்கள்! நீண்ட தேடலுக்குப்பின் தாங்கள் கண்ட தேவனை, அறிந்த சத்தியத்தைப் பிறருக்குச் சொல்ல வேண்டும் என்ற வேட்கை, பாரம் அவர்களை அழுத்தியது. ஏனென்றால், பலர் இந்தப் பாதையில் சுற்றிச்சுற்றித் திரிகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களை நோக்கி, ""நிறுத்துங்கள்! நான் கண்டுபிடித்துவிட்டேன்! இதுதான் சத்தியம்!" என்று உறக்கச் சொல்ல வேண்டும் என்ற பாரம்.

7. புதிய வாழ்க்கையின் சாட்சியும், பெயர்க் கிறிஸ்தவர்களும் 

அந்த உற்சாகத்தோடு, பாரத்தோடு, அவர் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார். அவர் சொன்னதை அவருடைய நண்பர்கள் பலர் ஏற்றுக்கொண்டார்கள். ஏனென்றால், அவர் சொன்னது உண்மை என்று அவர்களுக்குத் தெரியும். "இவன் எங்களைப் போன்றவன்! இவன் சொல்கிறான் என்றால், அதை எங்களால் புரிந்துகொள்ள முடியும்," என்று அவருடைய நண்பர்கள் சொன்னார்கள். கீத்தின் நேர்மை, பின்புலம் அவர் சொன்ன நற்செய்திக்குப் பலமாக இருந்தது. அநேகர் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.

இருவரும் தங்கள் பழைய நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து, நல்ல விருந்து கொடுத்து இயேசுவை அறிவித்தார்கள். இக்கட்டில் இருந்தவர்கள், போதைப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்தவர்கள், நம்பிக்கையின்மேல் பசிதாகமுடையவர்கள், சத்தியத்தைத் தேடியவர்கள், உள்ளம் உடைந்தவர்கள், இருளில் மூழ்கியிருந்தவர்கள் - இப்படி வாழ்வில் நெருக்கடியில் இருந்தவர்கள் அவருடைய வீட்டுக்கு வந்தார்கள்.

எல்லாரும் ஒருபுறம், அவர்கள் சொன்ன நற்செய்தியைக் கேட்டார்கள். இன்னொருபுறம் அவர்களுடைய வாழ்க்கையைக் கண்டார்கள்.

ஒருநாள் ஞாயிறு ஆராதனைக்குப்பிறகு, சில 'விசுவாசிகள்' சாதாரணமாக உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் கீத்திடம், “இன்று சாயங்காலம் ஒரு பார்ட்டி இருக்கிறது. நாங்கள் போகிறோம். கீத், நீங்களும் மெலடியும் வாருங்களேன்! நன்றாக இருக்கும்” என்று சொன்னார்.  சாயங்காலம் கீத்தும் மெலடியும் விருந்துக்குச் சென்றார்கள். ஒரு வீட்டுக்கூட்டம்போல் தோன்றியது. சபைக்கு வரக்கூடிய விசுவாசிகள் பலர் இருந்தார்கள். வீட்டில் நிறைய வேதாகமங்கள் இருந்தன. பாடல் புத்தகங்கள் இருந்தன. வந்திருந்த பல முகங்கள் மிகவும் பரிச்சயமானவை. எல்லாம் நன்றாகத் தோன்றியது. ஆனால்…அவர்கள் உள்ளே நுழைந்ததும் — திடுக்கிட்டார்கள். அவர்களுடைய முகத்தில் ஓங்கி அறைந்ததுபோல் இருந்தது. அங்கிருந்த காட்சிகள்… அவர்கள் இருவரும் விட்டுவந்த பழைய உலகத்தைத் தூக்கிச் சாப்பிட்டு விழுங்கும் அளவுக்கு மோசமாக இருந்தன.

பலவிதமான மதுவகைகள் பரிமாறப்பட்டன. போதைப்பொருள்கள் வழங்கப்பட்டன. சத்தமில்லாமல் நடக்கும் பாவங்கள். கீத் அறை முழுவதும் நோட்டமிட்டார். அன்று காலையில் சபையில் தங்கள் அருகே அமர்ந்து பாடல் பாடியவர்கள், தேவனை ஆராதித்தவர்கள், தான் பின்பற்றத்தக்க மாதிரி என நினைத்த "விசுவாசிகள்"  அங்கு இருந்தார்கள்.

கீத்தின் உள்ளம் நொறுங்கியது. "இது என்ன இரட்டை வாழ்க்கை! இது என்ன வெளிவேடம்! இது உண்மை விசுவாசம் இல்லை. இவர்கள் விசுவாசிகள் இல்லை," என்று அவர் எண்ணிக்கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை உதட்டால் பாடிவிட்டு திங்கள்முதல் சனிவரை பாவத்தில் வாழ்கிற பெயர்க் கிறிஸ்தவர்களை கீத் முதன்முறையாகப் பார்க்கிறார். “இவர்கள் சத்தியத்தைக் கேட்டிருக்கிறார்கள், தேவனை விசுவாசிப்பதாகக் கோருகிறார்கள். ஆனால் இவர்கள் தேவனோடு விளையாடுகிறார்கள்!” என்ற வேதனை அவர் உள்ளத்தை வாட்டியது.  "ஞாயிறன்று வழிபாடு… ஆனாலும் திங்கள் முதல் சனி வரை, பாவத்தில் நடப்பது… இது நடிப்பு,  இது தேவனுக்குச் செய்யும் துரோகம்," என்று கீத் உள்ளத்தில் கொதித்தார்.

அந்த பார்ட்டி, அவருக்கு ஓர் எச்சரிக்கை.

இந்த நேரத்தில் இன்னொரு காரியமும் நடந்துகொண்டிருந்தது. நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்தவர்களான கீத்தின் நண்பர்கள் சிலர் சில மாதங்களுக்குள் போதைப்பொருட்கள், தெருவாழ்க்கை, பழைய பாவ வாழ்க்கை என மீண்டும் தங்கள் பழைய வழிகளுக்குத் திரும்ப ஆரம்பித்தார்கள். பாறையின்மேல் விழுந்த விதைகளைப்போல் அவர்களுடைய விசுவாசம் ஆழமாக வேர் விடவில்லை. சீக்கிரம் முளைத்தது. தற்காலிகமான மகிழ்ச்சி. அழுத்தங்களும், பிரச்சினைகளும் வந்தபோது செடி காய்ந்துவிட்டது. விரைவாக முளைத்துச் சீக்கிரம் செத்துவிட்டது.

கீத்தின் உள்ளம் உடைந்தது. கீத் காரியங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார். சபையில் நடப்பது என்ன? சமரசம்! தேவனுக்காகப் பிரிந்த வாழ்க்கை வாழ்வதற்குப்பதிலாக உலகத்தாரைப்போலவே வாழ்கிறார்கள்.  காலத்திற்கேற்றாற்போலவே கோலம் போடுகிறார்கள். தேவனின் வழியைத் தேடவில்லை, தேவனுக்காக வாழவில்லை. சபைக்குள் உலகம் நுழைந்துவிட்டது. இதை இனம்காணும் மக்கள் அங்கு இல்லை," என்று கீத் அங்கலாய்த்தார். இந்த அனுபவம் — கீத்தின் உள்ளத்தில் ஒரு புனிதமான வேதனையை உருவாக்கியது. ஓர்  எழுச்சியை. ஒரு தீயைக் கொளுத்தியது.

8. வீடு ஊழியத்தின் மையமானது 

கீத், மெலடி இருவரும் பரந்த, திறந்த மனதுடையவர்கள், கொடுப்பதற்குத் தயங்காதவர்கள். அவர்கள் இருவரும் “ஒருவர் எங்கள் வாழ்க்கைப் பாதையின் வழியாகக் கடந்துபோகிறார் என்றால், அது தேவனுடைய செயல். அதற்குக் காரணம் உண்டு,' என்ற எண்ணம் உடையவர்கள். அவர்கள் துணிச்சலானவர்கள்!

ஒருநாள், மெலடி ஒரு கடற்கரையில் நடந்துகொண்டிருந்தபோது, ஓர் இளம்பெண் அங்கிருந்த படிக்கட்டில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தார். மெலடி அவர் அருகே சென்று, உட்கார்ந்து, “என்னம்மா  விஷயம்?” என்று ஆறுதலோடு கேட்டார். அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தார்.  அந்தப் பெண், "நான் வீடற்றவள்; போக்கிடமும், புகலிடமும் இல்லாதவள்; நான் கருவைக் கலைத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். வாழ வழியில்லை; கவனிக்க ஆள் இல்லை," என்று சொல்லி அழுதார்.

மெலடி அவரிடம் நிதானமாகப் பேசினார். பிறகு போய் கீத்தை அழைத்துக்கொண்டு வந்தார். கீத் சில நிமிடங்கள் அந்தப் பெண் பேசுவதைக் கேட்டார். பிறகு, “எங்க வீட்ல ஒரு அறை காலியா இருக்கு. நீங்க விரும்பினா எங்க வீட்டுக்கு வந்து எங்களோட தங்கலாம்," என்று சொன்னார்.

மெலடி கொஞ்சம் அதிர்ந்துபோனார் என்றுதான் சொல்ல வேண்டும். “அந்தப் பெண் யாரென்றுகூட தெரியாது. இதற்குமுன் பார்த்ததே இல்லை. திடுதிப்பென்று வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்து வீட்டில் தங்கச் சொல்கிறாரே?” என்ற எண்ணம் வந்தது. ஆனால் உடனே, “இல்லை. வரட்டும், தங்கட்டும். ஆமா, வீட்டில் ஒரு கூடுதல் அறை சும்மாதான் இருக்கிறது?” என்று நினைத்தார்.

அந்தப் பெண்ணும் சம்மதித்தார். அவர் அவர்களோடு போய், அந்த அறையில் தங்கினார். அந்த வீட்டின் அன்பும், அவர்களுடைய வாழ்க்கையும் தேவனுடைய சாட்சியை அந்தப் பெண்ணுக்குக் காண்பித்தது. அவர் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு விசுவாசியானார். தேவனுடைய பிள்ளையாக மாறினார்.

கீத், மெலடி இருவரும் புதிய மனிதர்களைச் சந்தித்துக்கொண்டேயிருந்தார்கள். ஒருநாள் அவர்கள் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள். அந்தப் பெண் சமீபத்தில்தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தார். அவர் வேலைபார்த்துக்கொண்டிருந்த பாரில் கீத் முன்பு கச்சேரிகள் நடத்தினார், இசைக்கருவிகள் வாசித்தார். அந்தப் பெண்ணுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை, கணவன் இல்லை. இரவில் வெகு நேரம் வேலை செய்யவேண்டியிருந்தது. வீட்டு வாடகை கொடுக்க வேண்டும், குழந்தையைக் கவனிக்க வேண்டும், மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அவளுடைய சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. உலகப்பிரகாரமாகவும், ஆவிக்குரியப்பிரகாரமாகவும் அது பாதுகாப்பானதல்ல என்று கீத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது. இதை உணர்ந்த கீத், கொஞ்சம்கூட யோசிக்காமல், மெலடியைப் பார்த்து, “நம்ம வீட்டில இன்னொரு அறை இருக்கிறது. இவரும் இவருடைய குழந்தையும் நம்ம வீட்ல வந்து தங்கினால் என்ன?” என்று கேட்டார். அவளும் அவளுடைய மகளும் அவர்களுடைய வீட்டில் குடியேறினார்கள்.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம், வார்த்தைகளிலும், இசையிலும் மட்டுமல்ல; அது அவருடைய அன்றாட வாழ்விலும் தெளிவாகத் தெரிந்தது. அவர் மேடையில் பாடியதை, அவருடைய வீட்டிலும் வாழ்ந்தார். அவருடைய இசையையும் வாழ்க்கையையும் வேறுபடுத்த முடியாது. அவர் வாழ்ந்த வீட்டில், இசை மட்டும் இல்லை—கிறிஸ்துவும் வாழ்ந்தார். கீத், மெலடி இருவரும், தங்களுடைய வீட்டின் கார் நிறுத்தும் இடத்தை தனித்தனி அறைகளாக மாற்றினார்கள். தங்க இடம் இல்லாத புதிய விசுவாசிகள், பழைய பழக்கங்களிலிருந்து தப்பித்து, புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என விரும்பியவர்கள், பரிகாச சூழ்நிலைகளைவிட்டு விலக விரும்பியவர்கள், ஆவிக்குரிய வாழ்வில் வளர ஆரோக்கியமான சூழலை விரும்பியவர்கள் அந்த வீட்டை நாடினர்கள். அவருடைய வீட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் சாப்பிட்டார்கள்; ஊழியக்காரர்கள் தங்கினார்கள்; துக்கத்தில் இருந்தவர்கள் ஓய்வு கண்டார்கள். அவர்களுடைய வீடு எப்போதும் நிரம்பிவழிந்தது. மக்கள் வந்துபோய்க்கொண்டேயிருந்தார்கள். அங்கு ஜீவன், அன்பு, நற்செய்தி பாய்ந்தோடின. பணிகள் செய்யவும், மனிதர்களை வரவேற்கவும், தேவனின் அன்பைக் காட்டவும் அவர்களுடைய வீடு எப்போதும் திறந்திருந்தது. அவர்களுடைய வீடு தேவனுடைய அன்பைப் பகிர்ந்தளிக்கும் பரிசுத்தத்தின் கூடாரமாயிற்று. முடங்கிப்போனவர்களும், வீதியில் வாழும் இளைஞர்களும், மதத்தின்மேல் விரக்தியடைந்தவர்களும் அவர்களுடைய வீட்டைத்  தேடி  வந்தார்கள். கீத்தும், மெலடியும் அவர்களுக்கு அன்பின் உணவு பரிமாறி, இயேசுவின் அன்பை வார்த்தைகளால் அல்ல… வாழ்க்கையால் காட்டினார்கள்.

அவர்களுடைய வீடு  ஒரு சராசரி வீடு அல்ல. அது பலருக்கு ஒரு தங்குமிடம், அது ஒரு விசுவாசப் பயணத்தின் அடையாளம். மெலடியின் சாந்தம், ஆழமான விசுவாசம், ஈடுபாடு தியாகம் அந்தக் குடும்பத்தைக் காத்தது.

எனவே, அது வெறுமனே ஒரு தங்கும் இடம் மட்டுமல்ல — அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கான வீடாக மாறியது, ஒரு புனிதமான ஊழிய மையமாக மாறியது.

அவர்களைப் பார்த்த மற்ற விசுவாசிகள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். ஆச்சரியப்பட்டார்கள் என்று சொல்வதைவிட"அவர்கள் இருவரும் பைத்தியம் என்று நினைத்தார்கள்," என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். “நீங்கள் எப்படி இவைகளைச் செய்கிறீர்கள்? இது புத்திசாலித்தனமல்ல… உங்களுக்குத் திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது. உங்கள் வீட்டில் இத்தனை பேரா?” என்று கிண்டலாகப் பேசினார்கள்.

ஆனால், "இதுவே உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை," என்று கீத்துக்கும் மெலடிக்கும் தெரிந்தது.

அவர்களுடைய வாழ்க்கை அன்பான மனைவி, அன்பான கணவன் என்ற வட்டத்தைக் கடந்தது. அது ஓர் ஆவிக்குரிய சகோதரத்துவம், பங்களிப்பு, ஈடுபாடு, அழைப்பு!

“நாம் ஏன் ஜீவனைப் பெற்றோம்?” என்ற கேள்விக்கு இருவரும் ஒரே பதில்தான் வைத்திருந்தார்கள். “இயேசுவுக்காக சாட்சியாக வாழ நம்மை ஏற்படுத்தினார்!” என்பதுதான் அவர்களுடைய பதில்.

இவர்கள் இதுவரை ஒரு குழந்தையைக்கூட பெறவில்லை, வளர்க்கவில்லை. ஆனால், வீடு முழுவதும் ஆட்கள்; இவர்கள் அவர்களை வளர்த்தார்கள். அவர்களுடைய வீட்டில் வந்து தங்கியவர்களைப்பற்றிக் கேள்விப்பட்ட  பல கிறிஸ்தவர்கள், “இவர்களுக்குப் பைத்தியமோ!" என்று நினைத்தார்கள். ஆனால், பிறர் என்ன நினைத்தார்கள் என்பதைப்பற்றி கீத் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அவர்கள் தேவனுடைய ராஜ்யத்துக்காக வாழ வேண்டும், வளர வேண்டும். அதற்காக அவர்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற பாரம் அவரை அழுத்தியது; அந்த அனல் அவருக்குள் எரிந்தது. அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தார். ஒருவருக்கு ஒதுங்குவதற்கு இடம் வேண்டுமா? கொடுத்தார். துன்மார்க்கமான  நண்பர்களிடமிருந்து விலகியிருந்து சத்தியத்தை கற்றுக்கொள்ளவேண்டுமா? அப்படிப்பட்டவர்களுக்கு இடம் கொடுத்தார். நாட்கள் செல்லச்செல்ல அவருடைய வீட்டில் வந்து தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோனது. எனவே, அவர்கள் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள்.

ஆம், சிலர் அவர்களுடைய நற்குணத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள். உண்மையில்லாத சிலர் திருடவும் செய்தார்கள். ஆயினும், கீத், மெலடி இருவரும் அதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. எல்லாவற்றுக்கும்மேலாக அந்த வீட்டில் இருந்த பெரும்பாலானவர்கள் கீத்தும், மெலடியும் கொடுத்த ஊக்கத்தால் கிறிஸ்துவை விசுவாசித்தார்கள், கிறிஸ்துவில் வளர்ந்தார்கள். அவர்களுடைய  வாழ்க்கை மாறத் தொடங்கியது..

கீத் வாரந்தோறும் வேதாகமப் பாடம் நடத்தினார். வேதாகமத்திலிருந்து போதித்தார். ஆலோசனை கேட்டவர்களுக்கு நேரம் காலம் பார்க்காமல் ஆலோசனை கூறினார். இரவு நேரங்களில் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தார். வளர்ந்த, முதிர்ந்த, தேறிய பரிசுத்தவான்களை அழைத்துவந்து அவர்களுக்குப் போதித்தார். சேர்ந்து சாப்பிட்டார்கள், பாடினார்கள். இப்படி அந்த வீடு—பலருக்கு ஓர் அடைக்கலப் பட்டணம் ஆனது. கீத், மெலடி – ஆகிய இருவரின் கருணையும் திறந்த உள்ளமும்  பலருடைய வாழ்க்கையை மாற்றியது.

9. இசை - உள்ளத்தைக் கீறிய குரல் 

இவைகளுக்கிடையிலும், கீத் தன் இசைப்பயணத்தை நிறுத்தவில்லை. ஆயினும், அதைக்குறித்த ஒரு குழப்பம் அவருடைய உள்ளத்தில் நிலவியது. தேவன் தனக்கு இசை என்ற ஒரு கொடையைத் தந்திருக்கிறார் என்று கீத்துக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதைத் தான் எந்த வழியில் பயன்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. "நான் என் இசையையும், பாடல்களையும் அவிசுவாசிகளுக்காகப் பயன்படுத்தப்போகிறேன். என் இசையின்மூலம் நான் அவர்களைத் தேவனிடம் கொண்டு வர வாய்ப்புகள் கிடைக்கும்," என்று அவர் நினைத்தார். ஆனாலும், மனதில் தெளிவில்லை. தேவனுடைய சித்தத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்வதற்காக அவர் உபவாசித்து ஜெபிக்க ஆரம்பித்தார். “ஆம், உன் இசையை நான் பயன்படுத்த விரும்புகிறேன். ஆனால் அவிசுவாசிகளுக்காக அல்ல, உலகத்துக்காக அல்ல.  என் மக்களுக்காக,” என்று தேவன் பேசினார்.

அவர் தேவனுடைய இருதயத்தைத் தெளிவாகத் தெரிந்துகொண்டார். அதாவது… தேவன் கீத்தின் கண்களை ஒரு பெரிய சத்தியத்துக்குத் திறந்திருந்தார். சபைகளில் அநேகர் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறினார்கள்; தேவனை அறிந்ததாகச் சொன்னார்கள். ஆனால், கிறிஸ்துவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத ஒரு  வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எனவே, கீத்தின் இசையின் திசை மாறியது. அது பொழுதுபோக்குக்காகவோ, மக்களை மகிழ்விப்பதற்காகவோ, காதுக்கு இன்பமாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ அவர் பாடவில்லை. அவருடைய பாடல்கள் தாலாட்டு இல்லை. சபையில்  தூங்கிக்கொண்டிருந்தவர்களைத் தட்டியெழுப்புவதற்காக, விசுவாசிகளைக் கட்டியெழுப்புவதற்காக, ஆவிக்குரிய மந்தத்தை மாற்றுவதற்காக அவர் பாடினார். விசுவாசிகளைக் கிறிஸ்துவிடம் அழைப்பதற்காகத் தன் பாடல்கள்…ஆவிக்குரிய எச்சரிக்கை  மணிபோல இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.

கீத் விரைவில் சில இசை ஆல்பங்களை வெளியிடத் தொடங்கினார். Sparrow Records என்ற ஒரு கிறிஸ்தவ இசை நிறுவனம் “He Who Has Ears to Hear” "கேட்கக் காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்ற அவருடைய முதல் ஆல்பத்தை வெளியிட்டது. அதன்பின் அவர் நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்று கிறிஸ்தவப் பாடல்கள் பாடினார்.  ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், மெல்லமெல்ல அவருடைய பாடல்கள் மக்களைச் சென்றடைந்தன. ஒருமுறை அவர் ஒரு மாநிலத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்காகச் சென்றார். ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டார்கள். ஆனால், அவர் பேசிய நற்செய்தியைக் கேட்டு ஒரோவொருவர்தான் இரட்சிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் அவர், "உங்கள் ஒருவருக்காகவே நான் இந்த ஊருக்கு வந்தேன்; கர்த்தர் என்னை இங்கு கொண்டுவந்தார்!" என்று சொன்னார்.

இதைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள், நெஞ்சம் நெகிழ்ந்தார்கள். ஏனென்றால்…கீத் இரட்சிக்கப்படுவதற்குமுன் புகழுக்காக வாழ்ந்தார். மேடைகளைத் தேடினார்; நட்சத்திரமாக மின்னவேண்டுமென்று ஏங்கினார். ஆனால் இப்போது? அவரே இசை ஆல்பம் வெளியிடுகிறார். சுற்றுப்பயணங்கள் செய்கிறார்; மேடைகள் அமைக்கிறார்; அவருக்கு ரசிகர்கள், விசிறிகள் நிறைய இருக்கிறார்கள். ஆனால்… அவர் பேரும் புகழும் தேடவில்லை. ஆத்துமாக்களைத் தேடினார்; அவர்களுடைய இரட்சிப்பைத் தேடினார்; இரட்சிக்கப்பட்டவர்களின் பரிசுத்தத்தைத் தேடினார்.

இசையின்மூலம் கிடைத்த மொத்த வருமானத்தையும் ஊழியத்துக்குச் செலவுசெய்தார்.

ஏற்கெனவே அவருடைய வீட்டில் நிறைய ஆட்கள் தங்கியிருந்தார்கள். அது போதாதென்று…இப்போது இன்னும் கூடுதலாக இரண்டு வீடுகளை வாங்கினார்கள். ஐந்து வீடுகளை வாடகைக்கு எடுத்தார்கள். அந்த பகுதியில் அவர்கள் வாழ்ந்த தெரு ஒரு சிறிய “மினிஸ்ட்ரி பூங்கா” போல மாறியது!

சிதைந்த பலருடைய  வாழ்க்கையைச் செம்மையாக்கினார்கள். தங்கள் வாழ்க்கையில் கடந்துசென்ற, தேவையில் இருந்த மக்களையெல்லாம் கூட்டிவந்து பராமரித்தார்கள். முடிந்தவரை அவர்களை உள்ளாகவும், வெளியாகவும் ஊக்குவித்தார்கள். இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். ஆவிக்குரிய முதிர்ச்சியடைந்த பரிசுத்தவான்கள் இவர்களுக்கு உதவினார்கள். இது ஓர் இசைக் கலைஞனின் வாழ்க்கையல்ல…இது ஓர் ஆவிக்குரிய விளக்கின் சாட்சி.

கீத்தின் இரண்டாவது ஆல்பம் "No Compromise", சமரசமில்லை!” அந்த ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த  சில பாடல்கள் சிலருக்கு மிகவும் நெருடலாக இருந்தன. அந்த அளவுக்குப் பாடல் வரிகள் கூர்மையாக இருந்தன. அவர் அமெரிக்காவின் பல பகுதிகளில் பல்வேறு சபைகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள்  நடத்தினார். அவர் இசைக்கருவிகளை வாசித்ததோடு, பாடல்கள் பாடியதோடு நிறுத்தவில்லை. இடையிடையே தேவனுடைய செய்திகளைப் பேசினார். “விசுவாசிகள் விழித்தெழவேண்டும்! உணர்வடையவேண்டும்!" என்பதுதான் அவருடைய முக்கியமான செய்தி.

Asleep in the Light” “உலகம் அழிகிறதே! நீங்கள் ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஒரு பாடல் கதறுகிறது.

“The world is sleeping in the dark,

That the church just can’t fight,

Because it’s asleep in the light.

How can you be so dead when you’ve been so well fed?”

“உலகம் இருளில் உறங்கிக்கொண்டிருக்கிறது. சபையால் அதை எதிர்க்க முடியவில்லை; ஏனென்றால் அது ஒளியில் உறங்கிக்கொண்டிருக்கிறது. நீ இவ்வளவு நன்றாக சாப்பிட்டபோதும், உன்னால் எப்படி இப்படிச் செத்தவன்போல் இருக்க முடிகிறது?”

இதுவே அவருடைய பாடல்களின் கருப்பொருள். இதுவே விசுவாசிகளை விழித்தெழுப்ப அவர் விடுத்த அழைப்பு.

முன்பு இசைதான் அவருடைய வாழ்வின் மையம். இப்போதும் இசை இருந்தது, ஆனால் அது ஒரு கருவி மட்டுமே. இயேசுவை உண்மையாகச் சந்தித்தபிறகு, அவர் வெறுமனே பாடுவதற்காக வாழவில்லை. பாடல்களின்மூலமாக இயேசுவைப் பிறருக்கு வழங்குவதற்காக வாழத் தொடங்கினார். இப்போது இயேசுவே அவருடைய வாழ்வின் மையமாக மாறினார். முன்பு—மெல்லிய பாப் இசை; காதல், பாசம், தேடல் என்பவை அவருடைய பாடல்களின் கருப்பொருள். அவரில் ஏற்பட்ட மாற்றத்துக்கு ஏற்ப, அவருடைய இசையிலும் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. இப்போது—வாழ்க்கை, பாவம், பரிசுத்தம், விசுவாசம், சபை என்பவைதான் அவருடைய பாடல்களின் உள்ளடக்கம். அவருடைய பாடல்களில் ஒவ்வொரு வரியும் பாவத்தைக் கண்டிக்கிறது, சபைக்கு சவால் விடுகிறது, பரிசுத்த வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறது. இப்போது அவர் ஓர் இசைக்கலைஞனாக மட்டும் இல்லை. அவர் ஒரு சாட்சியாகவும், சிந்திக்க வைக்கும் தீர்க்கதரிசியாகவும், ஆழமான பாரத்தோடு வாழும் ஒரு மனிதனாகவும் மாறினார். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அன்பையும், சமாதானத்தையும், அமைதியையும்பற்றிய பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த நேரத்தில், கீத் கிரீன் பாவத்தைக் கேள்வி கேட்டும் பாடல்கள் இயற்றினார். அவருடைய பாடல்களின் தன்மையைப்பற்றிச் சொல்வதற்கு நான் சில பாடல்களை எடுத்துக்காட்டாகச் சொல்கிறேன்.

 “To Obey is Better Than Sacrifice” “பலிகளைவிட கீழ்ப்படிதலே மேலானது!” என்ற பாடல் நெஞ்சில் ஓங்கிக் குத்துகிறது—

நீங்கள் இயேசுவுக்காக வாழவில்லையே!” என்று மற்றொரு பாடல் தவிக்கிறது, கேள்வி எழுப்புகிறது, அங்கலாய்க்கிறது.

“Oh Lord, You’re beautiful…Your face is all I seek.” "ஆண்டவரே, நீர் அழகு மிகுந்தவர், உம் முகமே என் ஆசை – என் தேடல்!" இந்த ஒரே ஏக்கம்…இந்த ஒரே நோக்கம்…இந்த ஒரே அர்ப்பணிப்பு…இதுவே ஒரு மனிதனை…உலகத்தை நனைக்கும் சுடராக மாற்றியது.

அவர் பாடிய பாடல்கள் வெறும் மென்மையான இசை அல்ல—அவை விசாரணைகள், எச்சரிக்கைகள், மனதைக் கிள்ளும் அழைப்புகள். அவை உள்ளத்தைக் கிளறுகின்றன, வாழ்க்கையை மாற்ற அழைக்கின்றன.

"கீத் கிரீனின் பாடல்களைக் கேட்கும்போது நம்மால் சில நேரங்களில் அழ முடியாமல் போய்விடும்…

அந்த வரிகள்… அந்தக் குரல்…எதையோ இழந்ததுபோல் தோன்றும். ஆனால் அவர், "‘நீங்கள் என்னைப்போல இல்லாமலே இயேசுவுக்காகத் தீயாய் எரிய முடியும்," என்று கூறினார்.

கீத்தின் பாடல்களையும், இசைக் கச்சேரிகளையும்பற்றி நிறைய பேசலாம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, சில எடுத்துக்காட்டுகள் தருகிறேன்.

ஒரு தடவை கீத் கிரீன், அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஒரு பெரிய கிறிஸ்தவ இசை விழாவிற்கு அழைக்கப்பட்டார். இது சாதாரணமான விழா அல்ல—பத்தாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் மாபெரும் விழா. அந்த வருடம் அது இன்னும் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாள் சுமார் 20,000பேர் வந்திருந்தார்கள். கடைசி நாளில் கீத் கிரீன் பாடுவார் என்று  அறிவிக்கப்பட்டதால், அந்த எண்ணிக்கை 35,000யை எட்டியது!

அந்த நேரத்தில், கீத்தின் பல ஆல்பங்கள் மிகப் பிரபலமாக இருந்தன. அவர் அமெரிக்காவின் மிகப்பெரிய கிறிஸ்தவ இசைக்கலைஞர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார்.

அந்த விழாவில் பரவசம், மகிழ்ச்சி, உற்சாகம், பாடல்கள், ஆரவாரம்… நிரம்பி வழிந்தது. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். கூட்டத்தில் பலர் பேசினார்கள். நியூசிலாந்தைச் சேர்ந்த விங்கி பிராட்னி என்ற பிரசங்கியாரும் அங்கு பேசினார். ஆனால், அங்கு ஏதோவொன்று இல்லாததுபோல் இருந்தது.

கீத் கிரீனுக்கு உறுத்துதலாக இருந்தது. அவர் மகிழ்ச்சியாக இல்லை. அவர் அங்கு மிகவும் கவலையுடன் உட்கார்ந்திருந்தார். சுற்றிப்பார்த்தார். 35000 கிறிஸ்தவர்கள். “இது தேவனுடைய பெயரில் நடக்கும் ஒரு பெரிய கூத்து…அவ்வளவுதான்.. இங்கு தேவன் இல்லை!” என்று அவருடைய உள்ளம் கூறிற்று. அவருடைய உள்ளம் வலித்தது. அவர் 35,000 வாலிப விசுவாசிகளின் கூட்டத்தைப் பார்த்தார்… "பாடல்கள் இருக்கின்றன… பரவசம் இருக்கிறது; ஆனால், மனந்திரும்புதல் இல்லையே! கைகள் உயர்கின்றன… ஆனால், இருதயங்கள்  தொடப்படவில்லையே!" என்று அங்கலாய்த்தார்.

விங்கி பிராட்னிக்கும் அந்த உணர்வு வந்தது. அவர் பேசியபோதும், கூட்டத்திலிருந்து எந்த மறுமொழியும் இல்லை. மகிழ்ச்சி இருந்தது. ஆனால், மனந்திரும்புதல் இல்லை, மறுமொழி இல்லை.

அந்தப் பெருவிழாவின் கடைசி நாள்...

ஓர் இளம்பெண் விங்கி பிராட்னி தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டினார். அவருடைய கண்களில் கண்ணீர். தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார்: “நான் ஜெபக் கூடாரத்தில் ஓர் ஆலோசகர்," என்று தன்னை அறிமுகம் செய்தார். கூட்டங்கள் முடிந்தபின், ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் இந்தக் கூடாரங்களுக்குச் செல்வார்கள். அங்கு இருப்பவர்கள் அவர்களுக்கு உரிய ஆலோசனை அளித்து அவர்களை வழிநடத்துவார்கள். ஜெபிப்பார்கள். இவர் அப்படிப்பட்ட ஓர் ஆலோசகர்.

“இங்கு ஏதோ சரியில்லை… மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் யாருமே தேவனிடத்தில் வரவில்லை. யாரும் மனந்திரும்பவில்லை. இசையும், உற்சாகமும்தான் இங்கு இருக்கிறது,” என்று அவர் சொன்னார். பின்னர் அவர் விங்கியிடம் ஒரு துண்டுத் தாளைக் கொடுத்து, "தேவன் என்னிடம் இந்த வேதாகம வசனத்தைக்  கொடுத்தார். அவசரம். இன்னும் ஒருநாள் கூட்டம்தான் இருக்கிறது.” என்று சொன்னார்.

அந்த நேரத்தில், கீத்தின் உள்ளத்தில் ஒரு பெரிய பாரம் அழுத்தியது. அன்று இரவு, அவர் 35,000 வாலிபர்களின்  முன்னிலையில் மேடையில் பாடப்போகிறார், இசைக்கருவிகள் வாசிக்கப்போகிறார், பேசப்போகிறார். என்ன பேசவேண்டும் என்று தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. "இந்த வாலிபர்கள் ஆலயத்துக்குச் செல்கிறார்கள்; பாடல்கள் பாடுகிறார்கள்; கைகளை உயர்த்துகிறார்கள்;  ஆனால் உண்மையில் இவர்கள் கிறிஸ்தவர்களாக வாழவில்லை. இவர்கள் வாயால் "கிறிஸ்தவர்கள்," வாழ்க்கையில் சாட்சிகள் இல்லை," என்று தெரிந்தது.

கீத் ஒளிந்துவாழமாட்டார்; ஒளிந்துகொள்வதையும் விரும்பமாட்டார். சத்தியம் வெளிவரவேண்டும். தேவன் விரும்பும் மாற்றம் வரவேண்டும். அதுதான் அவரின் ஏக்கம்.

ஆனால்…என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை. அதனால் அவர் தேவனுக்குமுன் போனார், கதறினார். "கிருபை தந்த தேவனே! ஏதொவொன்றைச் செய்யும். என்ன சொல்லவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தத் தருணத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. எனக்கு ஒரு வார்த்தை தாரும்! 35,000 வாலிபர்கள் இதோ இங்கு உட்கார்ந்திருக்கிறார்கள்," என்று ஜெபித்தார்.

அந்த நேரத்தில், அவருடைய அறையின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. விங்கி உள்ளே வந்தார். மடித்த ஒரு தாளை அவர் கீத்திடம் கொடுத்து, “இதோ, இது உனக்குரியது," என்று சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

அந்த இரவு…கீத் மேடைக்கு வந்தபோது, கூட்டம் ஆரவாரித்தது - பரவசம், கைதட்டல், கூச்சல், சத்தம். ஆனால் கீத்…ஒரு நிமிடம்கூட இவைகளைக் கவனிக்கவில்லை. நேரே பியானோவுக்குமுன் அமர்ந்தார். அமைதி! அவர் எந்த அறிமுகமும், கையசைப்பும் இல்லாமல், அந்தச் சிறு தாளைத் திறந்து வாசித்தார். அது ஆமோஸ் புத்தகத்திலிருந்து சில வசனங்கள்: இதோ அந்த வசனங்கள்!

"உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன். உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன். நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது."

இது வெறும் சத்தமல்ல…இது ஓர் அவசர அழைப்பு. இந்த வசனங்களை வாசித்துமுடித்தபின் அங்கு நிலைமை மாறிற்று. “நீங்கள் இயேசுவை உங்கள் வாழ்வில் வரவேற்றதாகச் சொல்கிறீர்கள்…ஆனால், உங்கள் வாழ்க்கையில் மாற்றம் இல்லையெனில், அறிகுறிகள், அடையாளங்கள் இல்லையெனில் அது உண்மையா? உங்கள் அயலகத்தார், உங்கள் நண்பர்கள், உங்கள் பெற்றோர்கள், உங்களோடு சேர்ந்து படிப்பவர்கள், வேலைசெய்பவர்கள் அதைப்  பார்க்கிறார்களா? வார இறுதியில் உங்கள் வாயினால் தேவனைத் துதிக்கிறீர்கள், ஆனால், வாரம் முழுவதும் உலக மக்களைப்போல் உலகத்தோடு கைகோர்த்து நடக்கிறீர்கள் என்றால் நீங்கள் சத்தியத்தைத் தவற விட்டுவிட்டீர்கள். உங்களில் ஏதோவொன்று மிகத் தவறாக இருக்கிறது. ஒருநாள் தேவன் உங்களைப் பார்த்து, ‘நான் உங்களை அறியேன்," என்று சொல்லக்கூடும்," என்று பேசினார்.

அவர் பேசியபோது குரலில் அழுத்தமும் நடுக்கமும் இருந்தன. அவர் எதையும் பூசி மெழுகிப் பேசவில்லை; மென்மையாகத் தடவிக்கொடுக்கவில்லை; அவர்கள் கூச்சலிட்டார்களா, கைதட்டினார்களா என்பதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

“இவர்கள் கீத்தை மேடையிலிருந்து தள்ளிவிவிட்டுவிடுவார்களோ? இவர் ஏன் இவ்வளவு கடுமையாகப் பேசுகிறார்?" என்று மெலடி பயந்தார். ஆனால், கீத் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அந்த இரவு…அற்புதம் நிகழ்ந்தது. அவருடைய அவசர அழைப்பு அர்த்தமுள்ள அழைப்பாக மாறியது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் எழுந்தார்கள். இசைக்கு நடனமாடுவதற்காக அல்ல; தங்களைத் தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதற்காக எழுந்தார்கள். உண்மையை உணர்ந்தார்கள். தாங்கள் ஏற்கெனவே “கிறிஸ்தவர்கள்” என அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் அதுவரை தேவனை அறிந்ததே இல்லை.

அந்த இரவு…ஆயிரக்கணக்கான உள்ளங்கள் இயேசுவுக்காக முற்றிலும் உடைந்தன. அரங்கம் காலியானபிறகும், மேடைகளைத் தூக்கிக்கொண்டுபோனபிறகும் பல வாலிபர்கள் அங்கேயே இருந்தார்கள். தரையில், முழங்காலில் ஜெபித்துக்கொண்டு, அழுதுகொண்டு இருந்தார்கள். ஆம், ஆண்டவர் அங்கு செயலாற்றினார். ஏனென்றால், ஒரு மனிதன், ஒரேவொரு மனிதன், 35,000பேரின் முன்னிலையில் நிமிர்ந்து நின்று, தன் இருதயத்தில் இருந்த தேவனுடைய வார்த்தையைத் தைரியமாகச் சொன்னான்.

“உங்கள் இருதயத்தை நீங்கள் தேவனுக்குக் கொடுக்கவில்லையென்றால், உங்கள் திருவிழாக்களை தேவன் வெறுக்கிறார்," என்ற வார்த்தைகளை கீத் கூறியபோது…அவர் அதன் பொருளை உணர்ந்து சொன்னார். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், அவர் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து வந்தவை.

கீத் கிரீன் தொடர்ந்து இசை ஆல்பங்களைவெளியிட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய உள்ளத்தில், “இசை என்னுடையது இல்லை. இது தேவன் எனக்குத் தந்த ஒரு பரிசு. இது தேவனுடைய பணிக்காகவே, நற்செய்தியை அறிவிப்பதற்காகவே. சபையைத் தட்டி எழுப்புவதற்காகவே, விசுவாசிகளைக் கட்டியெழுப்புதற்காகவே, மக்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவருவதற்காகவே, புகழுக்காககோ, பணத்துக்காககோ அல்ல," என்ற ஓர்  ஆழ்ந்த ஏக்கம் ஏற்பட்டது.

அவர்களுடைய ஊழியத்தின் ஒரு பெரிய அடையாளம் — அவர்களுடைய ஒலிநாடா விநியோகம். அந்தக் காலத்தில் பாடல்களின் ஒலிநாடாக்கள் விற்பனைசெய்யப்பட்டன. விரும்பியவர்கள் விலை கொடுத்துத்தான் வாங்கினார்கள்.

அப்போது அவருக்குள் ஒரு கேள்வி எழுந்தது. “ஒருவன் இயேசுவை அறிய விரும்புகிறான். ஆனால், என் இசை ஆல்பத்தை வாங்கப் பணமில்லை என்றால் அவன் என்ன செய்வான்? அப்படியானால் நான் என் இசையை விற்கலாமா? கூடாது. தேவன் எனக்குத் தந்த நற்செய்தியை நான் எப்படி விற்கலாம்?" என்ற எண்ணம் அவருடைய வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது. அவர் ஓர் அதிரடியான முடிவை எடுத்தார். இதுவரை அவர் தன் இசை ஆல்பங்களை Sparrow Records என்ற நிறுவனத்தின்மூலம் வெளியிட்டார். ஏனென்றால், அவர்களுடன் அவர் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த ஒப்பந்தத்தை அவர் ரத்துசெய்தார்.  அதன்பின் அவர் தன் சொந்த செலவில் தன் ஆல்பங்களை வெளியிடத் தொடங்கினார். ஆனால், அவர் தன் ஆல்பங்களை அதன்பிறகு விலைக்குவிற்கவில்லை.  "Don't pay for this cassette unless the Lord tells you to." இயேசுவின் செய்தியைக் கேட்பதற்குப் பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பது அவருடைய கோட்பாடு. “If the gospel is free… why should the music that brings the gospel not be?” "நற்செய்தி இலவசம் என்றால், நற்செய்தியைக் கொண்டுசெல்லும் இசை ஏன் இலவசமாக இருக்கக்கூடாது? அதை ஏன் விற்கவேண்டும்?" என்று அவர் கேட்டார். எனவே, அவர் பாடல் ஒலிநாடாக்களை இலவசமாக விநியோகித்தார். "தேவன் உங்களை ஏவினால் கொடுங்கள்," என்று மட்டுமே கூறினார்“உங்களால் முடிந்தால் கொடுங்கள். என்ன முடியுமோ கொடுங்கள். முடியாவிட்டால் இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள். நற்செய்தி  விற்பனைக்கு  அல்ல” என்று சொன்னார்.

அந்த நேரத்தில், இது ஒரு புரட்சிகரமான செயல். அவர்கள் விநியோகித்த பாடல் ஒலிநாடாக்கள் பலர் இயேசுவை அறிய ஒரு வாசலானது. அவருடைய இந்த முடிவைச் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்கள். அவருடைய இசை நிகழ்ச்சிக்குப்பிறகு சிலர் ஓடோடிப்போய் பல ஆல்பங்களை அள்ளிக்கொண்டுபோனார்கள். ஆனால், கீத் அதைப்பற்றிக் கவலைபடவில்லை. “அவர்கள் பாடல்களைக் கேட்கவேண்டும். அதன்மூலம் நற்செய்தி போக வேண்டும். அது போதும்,” என்பதே அவருடைய நிலைப்பாடு.

“ஒவ்வொருவரும் நற்செய்தியைக் கேட்கவேண்டும். ஒவ்வொருவரும் நற்செய்தியைக் கேட்கத் தகுதியானவர்கள். அது போதும்," என்பதில் கீத் உறுதியாக இருந்தார். இதனால் அவருக்குப் பற்றாக்குறை ஏற்படவில்லை. ஏனென்றால்…இது தேவனுடைய மகிமைக்கான இசை, தன்னுடைய புகழுக்கான இசை அல்ல.

அவர் இசையை விற்கவில்லை.  அந்த நேரத்தில் இதுபோல செய்தவர்—அவரைத்தவிர யாரும் இல்லை.

இலவச இசை நிகழ்ச்சிகள்… இலவச ஆல்பங்கள்… புகழுக்கெதிராக நின்ற வாழ்வு! இவை அனைத்தும் அந்தக் காலத்தில் யாரும் சிந்திக்காத, செய்வதற்குத் தயங்கிய காரியங்கள்.

பல கிறிஸ்தவ இசைக் கலைஞர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். சிலர் அதைக் கடுமையாக விமரிசித்தார்கள்.“இப்படியா ஊழியம்செய்வது?” என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால், கீத் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

அவர் பாடிய ஒவ்வொரு வரியும்…நம்மைப் பரீட்சிக்கிறது. எடுத்துக்காட்டாக, "நாம் யாருக்காக வாழ்கிறோம்?" இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்?

ஆவிக்குரிய பாடல்களை எழுத விரும்புகிறவர்கள், அவரை இன்றைக்கும் ஒரு முன்னோடியாகப் பார்க்கின்றார்கள். அவருடைய பாடல்கள் இன்னும் பாடப்படுகின்றன. அவருடைய பேச்சுகள் இன்னும் ஒலிக்கின்றன. அவருடைய வாழ்க்கை இன்னும் வாசிக்கப்படுகின்றது.

ஹாலிவுட் இசை உலகம் அவரை வரவேற்கத் தயாராக இருந்தது. பேர், புகழ், பணம், பாராட்டு குவிந்தன. இயேசுவைச் சந்தித்தபின், தன் வாழ்க்கையின் நோக்கத்தை முற்றிலும் மாற்றினார். உலக மதிப்பீடுகளைத் துறந்து இயேசுவின் திருப்தியை மட்டுமே தேடினார்.  உண்மையான விசுவாசத்திற்காக, இயேசுவுக்காக, ஒரு புனித வாழ்க்கையின் பாதையில் நடக்கத் தீர்மானித்தார். வெற்றியைக்குறித்து அவர் இவ்வாறு எழுதினார். “The world sees success as fame, money, applause… But God sees success as obedience.” “உலகம் புகழிலும், பணத்திலும் வெற்றியைக் காண்கிறது. ஆனால் தேவன்  கீழ்ப்படிதலிலும், உண்மையிலும் வெற்றியைக் காண்கிறார்.” உலகம் வெற்றியை எப்படி நிர்ணயிக்கிறது? புகழ்...பணம்...செல்வாக்கு...மேடையில் கைதட்டும் கூட்டம்... விளம்பரம் . அதுதான் வெற்றி என உலகம் சொல்லுகிறது! ஆனால், தேவனின் பார்வை வேறு. அர்ப்பணமும், கீழ்ப்படிதலும் வெற்றியின் பொருள். ஒரு மனம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதா? ஒரு வாழ்க்கை தேவனுக்குச் சொந்தமாய் வாழ்கிறதா? இதுவே உண்மையான வெற்றி!

10. Last Days Newsletter - கடைசிக்காலச் செய்திமடல் 

கீத், மெலடி இருவரும் சேர்ந்து “Last Days Newsletter”  என்ற ஒரு சிறிய மாத இதழையும் ஆரம்பித்தார்கள். கீத், மெலடி ஆகிய இருவருக்கும் அப்போது வயது 20தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆகவே, தங்கள் வயதுடையவர்களுக்கு ஏற்றவாறு, அப்போதைய பிரச்சினைகளைக்குறித்து வேதாகமத்தின் கண்ணோட்டத்தை எழுதினார்கள். அதில் கீத் எழுதிய உள்ளதை உள்ளபடிச் சொல்லும் கட்டுரைகள், சந்தித்த சோதனைகள், பாசத்தோடு எச்சரிக்கைகள், அன்பான உற்சாகமூட்டும் வார்த்தைகள் இடம் பெற்றன. எல்லாவற்றையும் அன்போடும் சத்தியத்தோடும் வெளிப்படையாகச் செய்தார்கள்.

மாத இதழில் இடம்பெற்ற, “நீங்கள் நம் காலத்தில் தேவனுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா?” என்பதுபோன்ற பல கேள்விகள் பலருடைய தூக்கத்தைக் கெடுத்தன. கீத், மெலடி இருவரும் கிறிஸ்தவ உலகத்தின் மென்மையான போக்குக்கு எதிராகக் குரல்கொடுத்தார்கள். பெரிய ஆலயங்களின் மென்மையான போக்கையும், நடிப்பையும், போலித்தனமான விசுவாசத்தையும் இருவரும் அம்பலப்படுத்தினார்கள். "Why do Christians have so much, while so many in the world have so little?" என்று Keith Green கேள்வி எழுப்பினார்.

கிறிஸ்தவர்களின் நடிப்பையும், பாசாங்கையும் அவர் வெறுத்தார். "Lukewarm Christianity" — வெதுவெதுப்பான விசுவாசத்தை அவர் எதிர்த்தார். “நீங்கள் வாழும் ஒவ்வொரு நாளும், இயேசுவின் இரத்தத்தின் மதிப்பை நிரூபிக்க வேண்டும்,” என்று அவர் ஒரு மெய்யான, புனிதமான, முழுமையான விசுவாசத்திற்குள் மனிதர்களை அழைத்தார்.

“இன்றைய கிறிஸ்தவ உலகம் பழுதான இருட்டறையில் வாழப் பழகிவிட்டது. அழிவுக்குச் செல்லும் பழைய வழிகளிலும், சிறைப்பட்ட அழுக்கு மனப்பாங்குகளிலும், முறையற்ற நடைமுறைகளிலும் சிக்கித் தவிக்கிறது. கிறிஸ்தவம் என்பது ஒருவன் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாகிற வாழ்க்கை என்பது மறைந்துபோய், அது ஒரு மதச்சாயம்பூசி மேடையில் உடைமாற்றி காட்சிகாட்டும் மாயத்தோற்றமாக மாறிவிட்டது.” இந்த வரிகள்  நம்மைத் தோலுரிக்கின்றன

அவருடைய பாடல்களும், உரைகளும், எழுத்துக்களும் நம் ஆவியைக் கிள்ளுகிறது, கிளறுகிறது.

“Going to church doesn’t make you a Christian…any more than going to McDonald’s makes you a hamburger.” ஒருவன் சபைக்குப் போவதால்தான் கிறிஸ்தவனாகிவிடுவான் என்றால், ஒருவன் மெக்டொனால்ட்ஸ்க்குப் போனால் ஹாம்பர்கரா மாறிவிடுவானா?”

“நீங்கள் எதற்காக வாழ்கிறீர்கள்? நீங்கள் யாருக்காகப் பாடுகிறீர்கள்? நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்காக முழுமையாக அர்பணித்திருக்கிறீர்களா? உங்கள் இசை, உங்கள் ஊழியம், உங்கள் குடும்பம், உங்கள் சொற்கள்… உங்கள் வேலை, எல்லாம் யாருக்காக? உங்கள் வாழ்க்கை—ஒளியா அல்லது ஒலியா?" "உங்கள் வாழ்க்கை நோக்கம் நிறைந்த ஊழியமா அல்லது உட்கார்ந்து பேசும் குரலா? ஊழியம் - அது ஒரு நோக்கமுள்ள வாழ்க்கை. தேவனுக்காக, பிறருக்காகச் செலவழிக்கப்படும் வாழ்க்கை. ஈடுபாடும், அர்ப்பணிப்பும், நம்பிக்கையும் நிறைந்த செயல்பாடுமிக்க வாழ்க்கை. ஆனால், குரல் - பேசுகிறது, ஒலிக்கிறது, செயல்படுவதில்லை. ஊழியம் …இது ஒவ்வொரு நாளும் ஊற்றுகிற அர்ப்பணிப்பு. ஆனால் ஒலி …சிறிது நேரம் கேட்கப்படும்… பிறகு மறக்கப்படும்.”

கீத்தின் தீ இன்னும் எரிகிறது. இன்னும் பரவுகிறது. இன்னும் அழைக்கிறது! இது… கீத் கிரீன் நம்மைநோக்கி விடுத்த கடைசி வார்த்தைபோல இருக்கும். இது சலனமற்ற சத்தமான வாக்கியம் இல்லை…இது ஒரு மெளன அழைப்பு. இது நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்படும் ஒரு தனிப்பட்ட சவால்.

கீத் நம் ஒவ்வொருவரையும் விரல் நீட்டிக் கேட்கும் கேள்வி : "நீ எதற்காக வாழ்கிறாய்?"

அவர் ஒரு தீர்க்கமான பாரத்தோடு வாழ்ந்தார். “நீங்கள் இயேசுவுக்காக வாழவில்லை என்றால், நீங்கள் யாருக்காக வாழ்கிறீர்கள்?” இது அவர் அடிக்கடி கேட்ட கேள்வி. அதுவே கீத் கிரீனின் வாழ்க்கை.

I don’t want to be remembered for my music. I want to be remembered for loving Jesus… and loving His people.” இது தான் கீத்தின் வாழ்க்கையின் மையமான உண்மை. அவருடைய பேச்சுகளில் அனல் இருந்தது. அவருடைய பாடல்களில்—இதயம் பிளந்ததுபோல இருந்தது. அவருடைய எழுத்துக்களில் ஆழமும், அழுத்தமும் இருந்தன. அவருடைய உண்மையும் உத்தமுமான விசுவாசமும்  ஏராளமான உள்ளங்களைத் தொட்டன. “I’d rather have nothing and have Jesus… than have everything and miss Him.”  "உலகம் முழுவதையும் ஆதாயம்செய்தேன் என்றாலும், இயேசுவை இழந்தால் அது வீணே. என்னிடம் எதுவும் இல்லையெனினும், இயேசு மட்டும் இருந்தால் போதும் எனக்கே! இது அவர் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு.

“கீத் மிக உறுதியானவர்; ஆழமாக, அழுத்தமாக, பேசுகிறார். மிகத் தீவிரமானவர்; ஆனால், கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவத்தையும் கடுமையாகச் சாடுகிறார்," என்ற குற்றச்சாட்டு கீத்தின்மேல் வைக்கப்பட்டது. கீத் எதையும் அரைகுறையாகச் செய்பவர் இல்லை. இது அவருடைய இயல்பு.

கீத் பலமுறை தேவனிடம், "தேவனே, என் உள்ளத்தின் இந்த கடுமையைக் கொஞ்சம் குறைத்து, என் தீவிரத்தைக் கொஞ்சம் மென்மையாக்கும்," என்று ஜெபித்தார். ஆனால், தேவன் அவருடைய கடுமையைக் குறைக்கவில்லை, அவருடைய மும்முரத்தைத் தணிக்கவில்லை. மாறாக, தேவன் அவருடைய ஆர்வத்தையும், மும்முரத்தையும் இன்னும் அதிகமாக்கினார். அவருடைய தீவிரம் தணியவில்லை. அது ஒழுங்காக்கப்பட்டது. ஊழியமாக மாற்றப்பட்டது.

11. ஊழியத்தின் விரிவாக்கம் 

கீத் கிரீன், மெலடி வாழ்க்கையில் இனிய ஆசீர்வாதமான ஒரு புதிய வரவு.  அவர்களுக்கு ஓவர் மகன் பிறந்தான். தேவனை முழு இருதயத்தோடு தேடிய ஜோசையா டேவிட் என்ற இரண்டு அரசர்களின் பெயரைத் அவர்கள் தங்கள் மகனுக்குச் சூட்டினார்கள். கீத்தின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதன்பின் இரண்டாவது பிள்ளை பெத்தானி கிரேஸ், அதன்பின் ரெபெக்கா. குடும்பம் பெரிதாயிற்று. வீடு எப்போதும் மக்களால், ஆரவாரத்தால், இசையால், வேலைப்பளுவால் நிரம்பியிருந்தது. பெரும்பாலும் சுற்றுப்பயணம். வீட்டில் இருந்தாலும் ஓய்வில்லை. ஓயாத ஓட்டம்!

இப்போது அவர்களுடைய வாழ்க்கை ஒரு புதிய கட்டத்தை அடைந்தது. கலிஃபோர்னியாவின் அந்த சிறிய பகுதியில் இருந்த அவர்களுடைய ஏழு வீடுகளில் ஏறத்தாழ 70 பேர் வசித்தார்கள். மேலும் பலர் வரத்தொடங்கினார்கள்.  பாதுகாப்பும் சவாலாக மாறியது. எல்லாரும் தங்குவதற்குப் போதுமான வசதி  இல்லாததால் அவர்கள் நகரத்துக்கு வெளியே பரந்து விரிந்த பண்ணைகளை வாங்கி, தேவனுடைய ஊழியத்தைத் தொடர முடிவுசெய்தார்கள்.

இதே நேரத்தில், அவர்கள் எழுதிக்கொண்டிருந்த Last Days Ministries என்ற செய்தித்தாள் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. மாதாமாதம் 10000 பிரதிகள் அச்சடித்து தபாலில் அனுப்ப வேண்டியிருந்தது. இதற்கு  சரியான அச்சகமும், அனுபவமிக்க பணியாட்களும், நிர்வாகத் திறனும் தேவைப்பட்டது. இவைகளையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, அவர்கள் டெக்சாசுக்குக் குடிபெயர்ந்தார்கள்..

அங்கு ஒரு பெரிய பண்ணையைத் தேடிக் கண்டுபிடித்து வாங்கினார்கள். அச்சகம் கட்டினார்கள். வீடுகள் கட்டினார்கள். ஊழியக்கூடங்கள் அமைத்தார்கள். குட்டி விமானம் ஏறி இறங்குவதற்கு ஓடுபாதையும் அமைத்தார்கள்.

ஏன்?

அந்தப் பண்ணை நகரத்திலிருந்து மிகத் தொலைவில் இருந்தது. நகரத்துக்குள் சென்றுவரவே பல மணி நேரங்கள் ஆயின. கீத் இசை நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருந்தது. தேவனுடைய ஊழியங்களுக்காகப் பல இடங்களுக்கு சென்றார். டெக்சாசின் பல பகுதிகளுக்குச் சென்றுவரவே நாட்கணக்கில் ஆனது. மேலும், அந்தப் பகுதியில் இருந்த பல பண்ணைகளில் தனியாருக்குச் சொந்தமான  விமான ஓடுதளங்களும் இருந்தன. இது அன்று மிகச் சாதாரணமான ஒன்று. ஒரு சிறிய விமானத்தை வாடகைக்கு எடுத்து அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து  தேவனுடைய பணியைத் தொடர்ந்தார்கள்.

12.ஐரோப்பா பயணத்தின் தாக்கம் 

கீத் பல ஆல்பங்களை வெளியிட்டார். அவருடைய பாடல்கள் கிறிஸ்தவ வட்டாரத்தில் மிகப் பிரபலமாகி,  பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊழியம் விரிவடைந்தது. சில ஆண்டுகளாக ஓய்வின்றி தொடர்ந்து மும்முரமாக ஊழியம்செய்ததால், மெலடிக்கு சற்று ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு சிறிய இடைவெளிக்காக, அவர்கள் ஐரோப்பாவுக்குச் செல்ல முடிவு செய்தார்கள். ஆனால், ஓய்வாக இருக்க வேண்டிய பயணம் ஊழியப்பயணமாக மாறியது.

கீத் கிரீன் ஐரோப்பாவுக்கு வருகிறார் என்று தகவல் பரவியது. மக்கள் அவரைச் சந்திக்க விரைந்தார்கள். கூட்டங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டன. சபைகளில் பேச வருமாறு அழைத்தார்கள். அவரைப் பார்க்கத் துடித்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு அவர்களை வரவேற்றார்கள். அவர்கள் திட்டமிட்டிருந்த ஓய்வுப்பயணம், பரபப்பான ஊழியமாக மாறியது.

ஆனாலும், தேவன் தம் இறையாண்மையின்படி அந்தப் பயணத்தை ஒரு புதிய நோக்கத்திற்காகப்  பயன்படுத்தினார். ஆம், அங்கு அவர்கள் இருவரும்  “யூத் வித் அ மிஷன் (YWAM)” என்ற ஓர் அமைப்பை ஆரம்பித்த ஒரு தம்பதியைச் சந்தித்தார்கள். அவர்கள் வாலிபர்கள் தேவனுக்காக வாழ வேண்டும் என்ற பாரத்தினால் ஏவப்பட்டு இந்த அமைப்பை உருவாக்கி, அவர்களுடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

அதோடு, ஆபரேஷன் மோபிலைசேஷன் (OM) என்ற அமைப்பில்  ஈடுபட்டிருந்த ஊழியர்களையும், ஐரோப்பா முழுவதும் பல பகுதிகளில் தேவனுக்காகப் பணியாற்றிய மிஷனரிகளையும் அவர்கள் சந்தித்தார்கள். இந்தச் சந்திப்புகள், கீத்தின் உள்ளத்தை தொட்டன.

இதனால், அவர்களுடைய பார்வை விரிவடைந்தது. இதுவரை, அவர் அமெரிக்க சபையின் நிலையைப்பற்றியே கவலைப்பட்டார். ஆனால், இப்போது அவர் அகிலஉலகக் கிறிஸ்துவின் சரீரத்தைப் பார்க்க ஆரம்பித்தார். உலகமெங்கும் தேவனுடைய மக்கள் - ஆண்கள் பெண்கள், பெரியவர்கள் சிறியவர்கள், பெயர் தெரிந்தவர்கள் பெயர் தெரியாதவர்கள் - திரைக்குப்பின்னால் பெருந்திரளான சாட்சிகள் தேவனுடைய இராஜ்ஜியத்துக்காக அமைதியாக, தீவிரமாக, உண்மையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிந்துகொண்டார்.

இந்த அனுபவம் கீத்தின் உள்ளத்தில் ஒரு புதிய தூண்டுதலை ஏற்படுத்தியது—தேவனுடைய சபை என்பது ஒரு நாட்டுக்குள் அடைபட்டதல்ல. அது ஒரு உலகளாவிய செயல் என்று பார்க்கத்தொடங்கினார்.

ஐரோப்பாவிலிருந்து திரும்பியபின், கீத்தின் உள்ளத்தில் ஒரு புதிய உந்துதல், ஏவுதல், ஏற்பட்டிருந்தது. தேவன்  உலகம் முழுவதும் செய்துகொண்டிருக்கும் ஒரு பரந்த காட்சியை அவர் கண்டார். கீத் தன் தரிசனத்தை வாலிபருடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார். அவர் ஒரு புதிய ஆல்பத்தை வெளியிட்டார். அதில் ஒரு பாடல் வரிகள் இதோ!

“இயேசு செல்வதற்குக் கட்டளையிடுகிறார்,

ஆனால் நாம் வேறு திசையில் செல்கிறோம்.

அவர் தான் ஒருவராகவே பாரத்தைச் சுமக்கிறார்,

அவருடைய பிள்ளைகள் விளையாடுவதில் பரபரப்பாக இருக்கிறார்கள்.”

இது அவர் அமெரிக்காவில் சபைகளில் பார்த்த நிலைமையைச் சித்திரிக்கிறது. அலட்சியமான சபைகள், விழிப்பற்ற விசுவாசிகள், சவுகரியமாக உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு தலைமுறை.

அவருடைய செய்தி மிக எளிமையானது; ஆனால், ஊடுருவக் குத்தும். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும்  அழைப்பு விடுக்கப்படுகிறது. மிஷனரிகளுக்கு மட்டுமல்ல, பிரசங்கிமார்களுக்கு மட்டுமல்ல, ஞாயிறு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு விசுவாசியும் அழைக்கப்படுகிறான். ஒவ்வொரு விசுவாசியும் வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறான். அந்த வெளிச்சம் இருளில் ஒளிவீச வேண்டும். ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றிருக்கிறான். அந்த ஜீவன் அவர்களுடைய வாழ்வில் தைரியமாக, தெளிவாக, தியாகமாக வெளிப்பட வேண்டும்.

"ஊழியம் என்பது யாரோவொருவர் செய்யும் வேலை என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். இது நீங்கள் உங்களுடைய வட்டாரத்தில் சாட்சியாக வாழ்ந்துகாட்டவேண்டிய ஒன்று," என்று அவர் கூறினார்.

கீத்தைப்பொறுத்தவரை இது ஓர் ஆலோசனை இல்லை. இது இயேசுவின் கட்டளை. சபை இந்தக் கட்டளையைப் புறக்கணிக்கக்கூடாது என்றார். "உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்ற நன்மைகளை உங்களுக்கே வைத்துக்கொள்ளாதீர்கள். பகிருங்கள். சாட்சியாக இருங்கள். உங்கள் சுற்றத்தாரிடம், உங்கள் இடத்திலேயே, உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை வெளிப்படுத்துங்கள்" என்றார்.

13. மெலடி

கீத்தின் ஊழியத்தில் அவருடைய மனைவி மெலடிக்கு பெரும் பங்கு உண்டு.  கீத்தின் பாரத்தையும், பார்வையையும் மெலடி ஜெபத்தாலும், பொறுமையாலும் தாங்கினார். அவர், கீத்தின் மனைவியாக இருந்தார் என்பதைவிட கீத்தின் ஆவிக்குரிய கூட்டாளியாக, அவருடைய பாரத்தைச் சுமக்கும் பங்காளியாக அவருடன் இணைந்திருந்தார் என்று சொல்லலாம். அவரே கீத்தின்  இசையின் குரலாகவும், இதயமாகவும் இருந்தார். இருவரும் இசைக்காகத்தான் ஒன்றிணைந்தார்கள். ஆனால் பின்னர் இருவரும் இயேசுவுக்காக இசையை விட்டுக்கொடுத்தார்கள். கீத் மேடைகளில், கூட்டங்களில் பேசியபோது, மெலடி உள்ளத்தில் அழுதார். அவருடைய ஜெபங்கள், அவருடைய கதறல்கள், அவருடைய தியாகங்கள் அனைத்தும் அமைதியான பானபலியாக கீத்தின் ஊழியத்திற்குத் தூணாக இருந்தன.

கீத் பாடிய பாட்டுகளில் மெலடியின் வார்த்தைகள், கவிதைகள், உந்துதல்கள் நிறைந்திருந்தன. சில பாடல்களை அவரே எழுதினார். “There is a Redeemer…” என்ற பாடலை எழுதியவர் அவரேதான்.

பரிசுத்தமான உணர்வும், சாரமுள்ள வரிகளும் நிறைந்த இந்தப் பாடல் இன்றுவரை உலகம் முழுவதும்  பாடப்படுகிறது. மெலடி தன் சுதந்தரமான சிந்தனையாலும், துடிப்பான ஊக்கத்தாலும் இன்றுவரை கீத்தின் சாட்சியை உயிர்த்துடிப்போடு வைத்திருக்கிறார்.அவர் எழுதிய  “No Compromise” என்ற வாழ்க்கை வரலாற்று நூல் இன்னும் வாசிக்கப்படும் புத்தகம்.

14. Last Days Ministries – கடைசி நாள்களில் ஒரு தீவிர ஊழியம்

இன்னிசை மட்டும் போதாது, ஆயிரம் பாடல்கள் இருந்தும், இருதயங்கள் இயேசுவுக்காக உடையவில்லையென்றால், உருகவில்லையென்றால் அது வெற்றிடமே என்று அவர்கள் உணரத்தொடங்கினார்கள். எனவே, அவர்கள் Last Days Ministries என்ற ஊழியத்தைத் தொடங்கினார்கள்.

இது ஓர் அறக்கட்டளையோ, அமைப்போ, ஊடகமோ இல்லை. இது ஓர் எழுச்சி! இது ஒரு தீர்க்கதரிசியின் அறைகூவல்! மனிதர்கள் இயேசுவை உண்மையாக அறிய வேண்டும், அன்புடன் வாழ வேண்டும், தன்னலமில்லாமல் செயல்பட வேண்டும், சுத்த மனதுடன் இயேசுவுக்காக நிலையாக நிற்க வேண்டும் என்ற முழக்கம். இது ஒரு புனித அழைப்பு. "நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம்" என்ற ஆழ்ந்த உணர்வு அவர்களுடைய உள்ளத்தில் வெந்துகொண்டிருந்தது. மனிதர்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது… சபை தூங்கக்கூடாது… உண்மையான விசுவாசம் சாகக்கூடாது என்ற பாரம் அழுத்தியது. இந்த பாரத்தை, பார்வையை, பயமுறுத்தியோ, வன்மையாகவோ அல்ல… மாறாக ஆழமான அன்போடு அவர்கள் வெளியிட்டார்கள். அதற்கேற்ப, "I am not called to entertain. I am called to disturb the comfortable and comfort the disturbed," என்று அவர் சொன்னார்.

Last Days Ministries மனிதர்களை விசுவாசத்தின் அடித்தளத்திற்குத் திருப்பும் ஓர் இயக்கமாக மாறியது.  இயேசுவின் இரண்டாம் வருகைக்கு மக்களை, சபையை, ஆயத்தம்செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய பாடல்கள், கட்டுரைகள், வீடு, ஊழியம் எல்லாவற்றுக்கும் ஒரே நோக்கம். இந்தப் பாரமும், பார்வையும் எப்படி இசையில் கொந்தளிக்க ஆரம்பித்தது என்றும், அவருடைய பாடல்கள் வெறும் இசையாக மட்டும் அல்ல…எப்படி அனலுள்ள கனலாக எரிய ஆரம்பித்தது என்றும், எப்படி நம்மைக் குத்திக்கிழிக்கும் கனத்த குரலாக மாறியது.

15. இசை – இசைக்குள் இருந்த ஊழியம்

அவருடைய பாடல்கள் குழந்தைகளைத் தூங்கவைக்கும் தாலாட்டுப் பாடல்கள் இல்லை; வாலிபர்களுக்ககான  விளையாட்டான, வேடிக்கைப் பாடல்கள் அல்ல. பெரியவர்களுக்கான பொழுதுபோக்குப் பாடல்கள் இல்லை; அவை அனைவரையும் சிந்திக்கவைக்கும், அனைவருக்கும் சவால் விடுக்கும், அனைவருடைய உள்ளத்தையும் கிளறும் பாடல்கள். அவர் ஆண்டவராகிய இயேசுவைச் சந்தித்தபிறகு, எழுதிய ஒவ்வொரு பாடலும் ஒரு மலைச்சிகரத்தில் பிறந்துவந்ததுபோல் இருந்தது. ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு வரியும் தேவ மக்களுக்கு ஓர் அழைப்பு விடுத்தது, ஒரு சவாலை முன்வைத்தது. அவைகளில் அவருடைய கண்ணீர் வழிந்தோடியது.

“Oh Lord, You're Beautiful…” "ஓ! கர்த்தாவே, நீர் அழகானவர்" என்ற ஓர் அற்புதமான ஆராதனைப்பாட்டு எழுதியபோது, "God, take my eyes off myself. Let me only see You," "தேவனே, என்னைப் பார்க்கும் என் கண்கள் என்னைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, உம்மை மட்டுமே பார்ப்பதாக" என்று அவர் சொன்னார்.

இந்தப் பாடல் ஒருவன் கடும் வேதனையில் இருக்கும்போதுகூட தன்னைப்  பார்க்காமல் இயேசுவின் அழகை மட்டும் பார்க்கத்  தூண்டும் அழகான பாடல்.

“Create in Me a Clean Heart, O God…” "தேவனே! என்னில் தூய்மையான இருதயத்தை உருவாக்கும்" என்ற பாடல், ஒருவனுடைய உள்ளத்தின் கதறல். இந்தப் பாடலை நான் தமிழில் கவிதைநயத்தோடு மொழியாக்க முயன்று தோற்றுப்போனேன்.

“I Don’t Wanna Fall Away from You” "நான் உம்மைவிட்டு விலக விரும்பவில்லை" என்ற பாடல் தன் அருவருப்பான  பாவத்தைக் கண்டு, தேவனுடைய பரிசுத்தத்திற்காக ஏங்குகிற ஒருவனுடைய ஏக்கத்தின் எதிரொலி.

இது துரிதகதியில் அவசரம் அவசரமாக  எழுதப்பட்ட பாடல் இல்லை. பாடல் வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பாடலும் இல்லை. வார்த்தைகள் மேலோட்டமானவை இல்லை. இது ஒரு பாவியின் உள்ளக் கதறல். ஒரு நிமிடம்கூட இயேசுவை விட்டுவிடக்கூடாது, விலகக்கூடாது! என்று இயேசுவைப் பற்றிப்பிடித்திருக்க விரும்பும் ஓர் உள்ளத்தின் தவிப்பு!

தான் முன்பு இருளில் வாழ்ந்ததை நினைத்தபோது, இயேசுவின் ஒளி எப்படி வெள்ளம்போல் உள்ளத்தில் பாய்ந்தது என்பதை “Your Love Broke Through” என்று பாடினார்.

"இந்த அன்பு இதற்குமுன் எனக்குள் இருந்ததில்லை. “இந்தத் தெய்வீக அன்பு நீரே எனக்குள் வைத்த தூய்மையான அன்பு. இது நான் உற்பத்திசெய்த அன்பல்ல என்ற உணர்வு எனக்குள் ஆழமாக இருக்கிறது," என்பதை "You Put This Love in My Heart” என்ற பாடல்மூலம் தெரிவித்தார். இந்தப் பாடலைக் கேட்கும்போது, கீத் வெறுமனே ஓர் இசையமைப்பாளர் மட்டுமல்ல…இவர் ஜெபிக்கிறவர், இவர் சத்தியத்தைச் சிந்திக்கிறவர், இவர் மக்களைத் தேவன்பால் அழைக்கிறவர் என்று புரிந்துகொள்ளலாம்.

பொதுவாகக் கலைஞர்கள் மனிதர்களின் மனங்களை வசப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பாடுவார்கள். ஆனால், கீத் கிரீன் மக்களின் உள்ளங்களை இயேசுவுக்காக மாற்ற வேண்டும் என்பதற்காகப் பாடினார். அவருடைய இசை உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழுப்பும் மலிவான இசை அல்ல, அவருடைய இசை ஒரு விழிப்புணர்வு, ஓர்  அழைப்பு. அதனால்தான் அவருடைய பாடல்கள் இன்றுவரை புதிய தலைமுறையையும் உருக்கிக்கொண்டே இருக்கின்றன. மறக்கமுடியாத வார்த்தைகள், மறக்கமுடியாத குரல், மறக்கமுடியாத சிந்தனைகள்!

16. மரணம் – இருதயத்தை நொறுக்கும் அனுபவம்

ஜூலை 28, 1982. புதன்கிழமை. "Garden Valley" அதுதான் Keith Green வாழ்ந்த பண்ணை. அன்று ஜாண் என்ற அவர்களுடைய மிக நெருக்கமான நண்பர் குடும்பத்தோடு அங்கு வந்திருந்தார். அவருக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். அன்று அங்கு விமானஓட்டியும் இருந்தார். “குழந்தைகள் சிறிய விமானத்திலிருந்து பண்ணையைப்பார்த்தால் பரவசப்படுவார்கள்," என்ற யோசனை வந்தது. கீத்தும் சம்மதித்தார்."சரி, பார்க்கலாம்," என்று சொல்லி அவர் மெலடியையும் கூப்பிட்டார். ஆனால் மெலடி கர்ப்பமாக இருந்ததாலும், அது சிறிய விமானம் என்பதாலும், "இல்லை… நானும் ரெபெக்காவும் வீட்டிலே இருக்கிறோம்," என்று மெலடி தான் வரவில்லை என்று சொல்லிவிட்டார். ரெபெக்காவுக்கு அப்போது இரண்டு வயது.

கீத், மகன் ஜோசையாவையும், மகள் பெத்தனியையும் அழைத்துக்கொண்டு, வந்திருந்திருந்த நண்பரோடும் அவருடைய ஆறு குழந்தைகளோடும் விமானத்தில் ஏறினார். மெலடி வெளியே நின்று கையசைத்தார்.  விமானம் புறப்படுவதற்குமுன், கீத் மெலடியை நோக்கி, "நான் திரும்பி வரவில்லைனா… ரெபெக்காவை நல்ல தேவ மகளாக வளர்க்க வேண்டும், சரியா!" என்றார். எப்போதும்போல் கீத் விளையாட்டாகச் சொல்கிறார் என்று அவர் நினைத்தாலும் இந்த வார்த்தைகளை மெலடி ரசிக்கவில்லை. அந்த வார்த்தைகள் மெலடியின் உள்ளத்தில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "ஆமாம்… நிச்சயமா…" என்று பதில் சொன்னாலும், உள்ளுக்குள் பதற்றம் ஏற்பட்டது. "இவர் எப்போதும் இப்படித்தான்..." என்று நினைத்து விட்டுவிட்டார்.

பின் மெலடி சிரிப்புடன், ""அப்போ, அடுத்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கணும்? உன்னுடைய பெயரை வைக்கணுமா, கீத்?" "இல்ல, எனக்கு 'டேனியல்'ன்னு பேரு பிடிக்குது!" என்று கீத் சிரித்தார். இருவரும் சிரித்துக்கொண்டே, வழி பிரிந்தார்கள்.

மெலடி வீட்டுக்குள் போனார். ஒரு சிறிய பதற்றம் இன்னும் நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவர் கணினிமுன் உட்கார்ந்தார். அப்போது தொலைபேசி மணி அடித்தது. "மெலடி... விமானம் கீழே விழுந்துவிட்டது..." என்ற ஒரு குரல். மெலடி பதறியபடி டினார். பலரும் ஓடிக்கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த காட்டுப் பகுதியிலிருந்து கரும்புகை மிதந்து வந்தது. "ஏன் இப்படி நடந்தது? என்னாச்சு? என்ன தவறாயிருக்கும்?"—நெஞ்சுக்குள் எழுந்த வினாக்களுடன் மெலடி ஓடினார். வேகம். வேதனை. வேலியைக் கடந்து, சுற்றுச் சுவரைத் தாண்டி அந்த இடத்தை அடைந்தார். அங்கு மீட்புக்குழு ஏற்கனவே வந்திருந்தது. மெலடி விமானத்தைத் தேடினார். விமானம் கருகி சாம்பாலாகக் கிடந்தது. அது கீழே விழுந்து வெடித்துச்

சிதறியிருந்தது! "என் குழந்தைகள் எங்கே? கீத் எங்கே? மற்ற ஆறு குழந்தைகள் எங்கே?" என்று மனம் அதிர்ந்தது.

அந்த கருகிய விமானத்தைநோக்கி அவர் ஓட ஆரம்பித்தார். அப்போது கர்த்தரே அவரோடு பேசியதுபோல், "அவர்கள் இப்போது என்னோடு இருக்கிறார்கள்… நீ தேட வேண்டாம்; திரும்பிப் போ," என்று ஒரு சத்தம். மெலடி நின்றார்; திரும்பினார்.

விமானத்தில் இருந்த 12 பேரும் உயிரிழந்தார்கள். யாரும் பிழைக்கவில்லை. அதிகாரிகள், "விமானத்தில் யார் யார் இருந்தார்கள்?" என்று கேட்டார்கள். மெலடி எண்ணத் தொடங்கினார். மொத்தம் பன்னிரண்டு பேர். கீத், மூன்று வயது ஜோசையா. இரண்டு வயது பெத்தனி. அவருடைய நண்பருடைய குடும்பத்தின் ஆறு பிள்ளைகள் உட்பட எட்டுப்பேர். மொத்தம் 12 பேர். அந்த விமானத்தில் மொத்தம் ஆறு இருக்கைகள்தான் உண்டு. ஆறு பெரியவர்கள் பயணிக்கலாம். ஆனால், அன்று நான்கு பெரியவர்கள் எட்டுக் குழந்தைகள் பயணித்தார்கள்.  விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தால் தொடர்ந்து பறக்க முடியவில்லை; இயந்திரத்தின் ஆற்றல் போதாமையினாலும், விமானத்தில் சுமைஅதிகமாக இருந்ததாலும் விமானம்  சமநிலை இழந்து கீழே விழுந்தது. ஒரு சில நொடிகளில்… 12 உயிர்கள் பறிபோயின. கீத்துக்கு அப்போது வயது 28.

17. மரணத்திற்குப்பின் - இன்னும் பேசும் வாழ்க்கை 

அந்த நாள் மெலடியின் வாழ்க்கையைப் பிளந்த நாள். அந்த நாள் அவருடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. அந்த வேதனையின் சுமை, அந்த நினைவின் இருள், அவருடைய உள்ளத்தை ஒருநாளும் கிழிக்காமல் விடுவதில்லை.

இந்த இழப்பை மெலடியால் தாங்க முடியவில்லை. அவர் அப்போது கர்ப்பமாக இருந்தார். இரண்டு வயது ரெபெக்கா அவருக்குப் பெரிய துணையாக மாறினாள். அவளுக்காகவாவது இயல்பான அன்றாட வாழ்க்கையை  வாழ வேண்டும் என்று மெலடிக்குத் தோன்றியது. ஆனால், மனதுக்குள் தொடர்ந்து ஓர் ஏக்கம்… கேள்விகள்: “தேவன் ஏன் இப்படிச் செய்தார்? கீத் எவ்வளவோ கனி நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தாரே! தேவன் அவரை இப்படியா அழைக்க வேண்டும்? கீத் தான் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லவில்லையே… எழுதவேண்டிய அனைத்தையும் எழுதவில்லையே…” என்ற அங்கலாய்ப்பு, தவிப்பு, தத்தளிப்பு! தேவன் கீத்தை இப்படி எடுத்துக்கொள்வார் என்பதை  மெலடியால் நம்பமுடியவில்லை, ஏற்கமுடியவில்லை.

அவர்கள் உருவாக்கியிருந்த சமூகத்தின் உண்மையான ஆழமும், அழகும் அப்போது வெளிப்பட்டது. அந்தச் சமுதாயம் அந்தச் சூழ்நிலையில் மெலடிக்கு உறுதுணையாக நின்றது. அவர்கள் மெலடிக்கு மனமுவந்து அன்பும், கவனமும், கரிசனையும் உதவியும் அளித்தார்கள்.

ஆயினும், மெலடிக்கு அந்த நாட்கள் நெருப்பில் நடப்பதுபோலவே இருந்தது. அவர் நகரத்துக்குச் சென்றபோது  எல்லா இடங்களிலும் மக்கள் அந்த விமானவிபத்தைபற்றிப் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தார். செய்தித்தாள்களில் "விமான விபத்து, பன்னிரண்டு பேர் இறப்பு" என்ற செய்தி அடிக்கடி வெளியிடப்பட்டது.

இதைக் கேட்டபோதும், பார்த்தபோதும் மெலடிக்குள் ஒரு வலி எழும்பியது. “நீங்கள் பேசிக்கொண்டிருக்கிற அந்தப் பன்னிரண்டு பேர் என் குடும்பம்! என் கணவர், என் குழந்தைகள், என் நண்பர்கள்! அந்தச் செய்தி என் வாழ்க்கை!” என்று கதறவேண்டும்போல தோன்றும்.

பத்திரிகையாளர்கள் வீட்டுக்குக் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். தொலைபேசியில் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. இலட்சக்கணக்கான கடிதங்கள் வந்தன. துக்கத்தின் நடுவிலும், அத்தனையையும் கையாண்டார். பதில்கள் எழுதினார். Last Days Ministries செய்திமடலில் ஒரே நேரத்தில் எல்லாருக்கும்  அழுத்தமாக எழுதினார். எல்லாரும் அந்தத் துயரத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால், அவர் அந்த இழப்பின் உண்மையான வலியைச் சுமந்தார்.

இந்த வேதனைக்காலத்தில், கர்த்தர் மெலடிக்கு ஒரு வசனத்தை நினைப்பூட்டினார். இது அவர் சிந்தித்ததல்ல; இது அவரைத் தேற்றுவதற்காகப் பரத்திலிருந்து வந்த ஓர் ஆறுதல். "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்" (யோவான் 12:24). முதலாவது இந்த வசனம் அவருடைய இருதயத்தில் தானாக வந்து விழுந்தது. பின்னர், வேறொருவர் மெலடியிடம் வந்து, அதே வசனத்தை கர்த்தர் தனக்குச் சொன்னதாகச் சொன்னார். இது தற்செயலாக இருக்க முடியாது என்று மெலடி புரிந்துகொண்டார். அந்த வசனத்தை அவர் பிடித்துக்கொண்டார். அந்தப் பெருந்துயரத்தில்—சாம்பல்களின் மத்தியில் - அந்த வசனம் அவருக்கு ஒரு தூண்டுதலாய், அனலாய், ஒளிக்கீற்றாய் இருந்தது. "எல்லாம் தேவனுடைய கட்டுப்பாட்டில்தான் நடக்கிறது," என்று அவர் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அந்த ஒரு வசனம்… துக்கத்தில் இருந்த அவருக்கு நம்பிக்கையின் நங்கூரமாயிற்று.

கீத் கிரீன் இறந்த சில ஆண்டுகளுக்குப்பிறகு, மெலடிக்கு அமெரிக்காவின் பல இசை விழாக்களில் பேச அழைப்பு வந்தது. ஒருகாலத்தில் கீத் பங்கேற்ற அதே விழாக்களில் இப்போது மெலடி பேசியபோது, அவர் ஒரு விஷயத்தைக் கவனித்தார். பலர் அவரிடம் வந்து, "“கீத் கிரீன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். அவர் பேசிய சில கூட்டங்களில் நான் கலந்துகொண்டேன். அவருடைய பாடல்களைக் கேட்டபிறகுதான் நான் தேவனுடன் என் வாழ்க்கையைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்தேன்," என்று சொன்னார்கள். வேறொருவர், "நான் தேசீய நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தபோது, வானொலியில் '"கிறிஸ்தவ இசைக்கலைஞர் கீத் கிரீன் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்,' என்ற செய்தியைக் கேட்டேன். அந்தச்  செய்தியை கேட்டவுடன், வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, கதறி அழுதேன்," என்று கூறினார். அவர் ஒரு விசுவாசி. கீத்தின் பாடல்களைப் பலமுறை கேட்டு விசுவாசியானார். "அந்தக் கணத்தில், நான் தேவனிடம் "இனி இந்தத் தலைமுறைக்குக் காரியங்களைச் சத்தியமாகச் சொல்லப்போகிறவர் யார் ஆண்டவரே? எங்கள் தலைமுறைக்கு பேசப்போகிறவர் யார்?” என்று கேட்டேன். அந்தக் கேள்விக்கு தேவனிடமிருந்து வந்த பதில்,

அவருக்கு தெளிவாகவும் நேரடியாகவும் கேட்டது: “நீயே. நீயே பேசவேண்டும்," என்று சொன்னார். இதுபோன்ற அனுபவத்தைப் பலர் பகிர்ந்துகொண்டாfர்கள். “கீத்தின் மரணம் என்னை உசுப்பியது. நான் ஏதாவது செய்யவேண்டும் என்று உணர்த்தியது,” என்று பலர் சொன்னார்கள்.

கீத் உயிரோடு இருந்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அவரை வாழ்த்தினார்கள். அவருடைய ஊழியத்தைக் கொண்டாடினார்கள். ஆனால் தாங்களும் ஏதாவது செய்யவேண்டும், தேவனுக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை.

இப்போது…அவர் இல்லாதபோது, "நான் என்ன செய்யவேண்டும்? நான் எப்படி வாழவேண்டும்?” என்று அவர்கள் கேட்கத் தொடங்கினார்கள். அவர்களுடைய கேள்விக்குத் தேவன் பதிலளிக்கத் தொடங்கினார்.

"ஒருவன் கிறிஸ்தவன் என்றால் அவன் உலகுக்கு ஒளியாக இருக்க வேண்டும்" — இதுதான் கீத் கிரீனின் கடைசிச் செய்தி. இந்த அழைப்பு ஒரு சிலருக்கு மட்டும் அல்ல, பாஸ்டர்களுக்கு மட்டும் அல்ல… மிஷனரிகளுக்கு மட்டும் அல்ல…இந்த அழைப்பு ஒவ்வொரு விசுவாசிக்கும் உரியது. ஒவ்வொருவரும்  ஆண்டவருக்காக ஒளியாக இருக்க அழைக்கப்பட்டவர்கள். அந்தச் செய்தி பல உள்ளங்களைத் தொட்டிருக்கிறது. ஏனென்றால், அவர் நித்தியத்துக்குள் நுழைந்தபிறகு, "அவரால் தொடங்கப்பட்ட வேலையை இப்போது நாம் தொடர வேண்டும்," என்று  மக்கள் உணர்ந்தார்கள்.

பல ஆண்டுகள் கழிந்தபிறகு, ஒரு நாள் மெலடி, அமெரிக்காவின் ஒரு சிறிய பகுதியில் உள்ள பெட்டிக் கடைக்குச் சென்றார். அங்கே, ஒரு பெண்…அவளுடைய கழுத்தில் ஒரு சிறிய சிலுவை தொங்கிக்கொண்டிருந்தது. அந்தச் சிலுவையைப் பார்த்தவுடன், மெலடிக்கு கீத் கொடுத்த சிலுவை நினைவுக்கு வந்தது. அவள் அந்தப் பெண்ணிடம், "நீங்கள் கிறிஸ்தவரா?" என்று கேட்டார். அந்தப் பெண்  கொஞ்ச நேரம் கழித்து, “ஆம்… நீங்கள்?” என்றாள். மெலடி சிரித்தபடி, "ஆம்…நான் கிறிஸ்தவள். நான் ‘டெக்சாசிலுள்ள லாஸ்ட் டேஸ்’ மினிஸ்ட்ரியிலிருந்து வருகிறேன். உங்களுக்குத் தெரியுமா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்றார். "லாஸ்ட் டேஸ் மினிஸ்டரியா? தெரியவில்லை. கேள்விப்பட்டதில்லை,” என்றாள் அந்த பெண். "அப்படியா… கீத் கிரீனைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்றார் மெலடி. அந்தப்  பெண் உடனே, "கீத் கிரீன்? அவருடைய பாடல்களால்தான் நான் ஆண்டவரை அறிந்தேன்!" என்றார். மெலடி அதிர்ந்துபோனார். எத்தனையோ வருடங்கள் கழிந்தபிறகும்…கீத் கிரீன் இன்னும் கனி தந்துகொண்டிருந்தார்.

அவர் ஏழு ஆண்டுகள் மட்டுமே கிறிஸ்தவனாக வாழ்ந்தார். ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் அவருடைய  வாழ்க்கை ஏற்படுத்திய தாக்கம் பெரிது, ஏற்படுத்திய விளைவுகள் அளவிட முடியாதவை. ஒரு தீவிரமான வாழ்க்கை. அனல் நிறைந்த வாழ்க்கை. சாட்சியான வாழ்க்கை.

இன்றும் அவருடைய பாடல்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. இவருடைய வாழ்க்கை இன்னும் பலரை எழுப்பிக்கொண்டிருக்கிறது. இவருடைய வாழ்க்கை உங்களையும் இன்று சிந்திக்க வைக்கட்டும்.

கீத் இறந்தபோது அவருடைய வயது 28. ஒரு மனிதன் இந்தப் பூமியில் 28 வருடங்கள் மட்டுமே வாழ்ந்து மரித்தால், அது அகால மரணம் என்றும், மிகக் குறுகிய பயணம் என்றும்  உலகம் சொல்லும். ஆனால் ..

“It’s not how long you live… It’s how you live that matters," "நீ எவ்வளவு நாட்கள் வாழ்கிறாய் என்பதல்ல, நீ எப்படி வாழ்கிறாய் என்பதுதான் காரியம்," என்று  கீத் கிரீன் சொன்ன வார்த்தைகளை நினைப்பூட்டுகிறேன்.

அவருடைய வாழ்க்கை காற்றில் பறந்துபோகும் ஒரு சிறு மலர்போன்றதல்ல. பலருடைய வாழ்க்கை ஒருவேளை அப்படி இருக்கலாம். இருந்த இடம் தெரியாமல், எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாமல் பறந்துபோகும், மறைந்துபோகும். அதிகபட்சம் ஒரு மெல்லிய  வாசனையை விட்டுச்செல்லலாம். ஆனால் கீத் கிரீனின் வாழ்க்கை அப்படி அல்ல.

அவருடைய வாழ்க்கை எரிந்த ஒரு தீப்பந்தம். உயிரோட்டமான, அனலுள்ள, ஒளியூட்டுகிற, தூண்டியெழுப்புகிற  வாழ்க்கை. அவர் ஒவ்வொரு நாளும் மற்றவர்களை உணர்த்துகிற, கிளர்ந்தெழுப்புகிற, சிந்திக்க வைக்கிற வாழ்க்கை வாழ்ந்தார். பழங்கள் அழுகுவதுபோல அவருடைய ஆவி சோர்ந்துபோகவில்லை;  ஆவிக்குரிய உற்சாகம் சற்றும் குறையவில்லை. அவரை யாரும் தூண்டியெழுப்பவேண்டிய தேவை இருக்கவில்லை. அவர் எப்போதும் மற்றவர்களைத் தூண்டிக்கொண்டிருந்தார். “எரிகிற சுடராய்” பிறருடைய வாழ்வில் ஒளியேற்றினார்.

அவர் வாழ்ந்த வருடங்கள் குறைவாக இருந்தாலும், அவருடைய தாக்கம் காலம் கடந்தும் தொடர்ந்து பேசுகிறது. அவருடைய மரணம் பலருக்கு ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக மாறியது. அவருடைய  வார்த்தைகள், பாடல்கள், ஜெபங்கள், இயேசுவுக்கான தீவிர அன்பு,  உண்மையான கிறிஸ்தவத்தை சபையிலும் வெளியிலும் சாட்சியாக காட்டிய விதங்கள்— இவை இன்றைக்கும் பேசப்படுகின்றன.

அவருடைய மரணம் ஒரு முடிவு  இல்லை. அது ஒரு தொடக்கம்… ஓர் ஊக்கம்… ஓர் அழைப்பு… ஓர் எச்சரிக்கை!”

வாழ்ந்தது வெறும் 28 வருடங்கள்தான். ஆனால், இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தலைமுறைக்கு ஊக்கமும், சவாலும், அழைப்பும் விடுத்தார்; கீத் கிரீன் என்ற பெயர் இன்றுவரை இசைக்கலைஞர்களுக்கான ஒரு திசைகாட்டி, வழிகாட்டி.

அவருடைய வாழ்க்கை இதை நிரூபிக்கிறது. ஒருவன் சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்தாலும், அதை முழுமையாக வாழ்ந்தால் அது போதும்!

அன்பான சகோதர சகோதரிகளே… கீத் கிரீனின் வாழ்க்கையை கேட்டோம்…அவருடைய இசையை, அவருடைய அழைப்பை, அவருடைய மரணத்தை…எல்லாவற்றையும் நாம் கேட்டோம், பார்த்தோம். இப்போது…அவர் வாழ்ந்த வாழ்க்கை நம்மை நோக்கி ஒரு கேள்வியை எழுப்புகிறது.

இன்று நீங்கள்…ஒரு பாடகராக, ஊழியராக, பெற்றோராக, மாணவனாக, ஆசிரியராக, மருத்துவராக, பொறியாளராக,  தொழிலதிபராக – யாராக இருந்தாலும்… "இயேசுவுக்காக முழுமையாக வாழவேண்டிய அழைப்பு" உங்களுக்கு வருகிறது.

இப்போது, நாம் இந்தப் பயணத்தை கீத் கிரீன் பாடிய ஒரு பாடலைக் கேட்டு முடிப்போம். இந்தப் பாடலை அவர் ஒரு காலை நேரத்தில் தன் வீட்டில் இருந்த ஸ்டுடியோவில் எழுதி, பாடினார். அன்று காலை மெலடி கண்விழித்தபோது, அவர் பாடி அழுகிற சத்தம் கேட்டது. அவர் உள்ளே சென்றார். கீத் திரும்பிப் பார்த்து, "இன்று ஆண்டவர் என்னைத் தம் சிங்காசனத்துக்கு அழைத்துச் சென்றார். இந்தப் பாடல், அவருக்காக!" என்று கண்ணீருடன் சொன்னார்:

வாருங்கள், நாம் அந்தப் பாடலை இப்போது கேட்போம்…