வரலாறு வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால்... சில மனிதர்கள் காலத்தின் ஓட்டத்தையே மாற்றியிருப்பார்கள். இது ஒரு சாதாரணச் சுத்தியல், சில ஆணிகள், ஒரு தேவாலயக் கதவு... இவைகளைக்கொண்டு உலகத்தையே உலுக்கிய ஒரு மனிதரின் சுருக்கமான வரலாறு. விசுவாசத்திற்காகத் தனி ஒருவனாகப் பேரரசர்களை எதிர்த்து நின்ற, 'இங்கே நான் நிற்கிறேன்' என்ற வரலாற்றுப் பயணம் இந்த காணொளி, Martin Luther அவர்களின் உள்ளார்ந்த போராட்டத்தையும், சத்தியத்திற்காக அவர் எடுத்த துணிச்சலான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. 16-ஆம் நூற்றாண்டில், சபை அதிகாரமும் மதச்சடங்குகளும் ஆட்சியிலிருந்த காலத்தில், ஒரு மனிதனின் மனச்சாட்சியை தேவனுடைய வார்த்தை எவ்வாறு குலுக்கியது என்பதை இது காட்டுகிறது. மதச்சடங்குகள் அல்ல, தேவனுடைய கிருபையே இரட்சிப்பின் அடித்தளம் என்பதை லூதர் எவ்வாறு உணர்ந்தார் என்பதைக் காட்டும் ஒரு முக்கியமான தருணம் இது. சத்தியம் மனிதனை மட்டும் அல்ல, ஒரு காலத்தையே எவ்வாறு மாற்றுகிறது என்பதற்கான வரலாற்றுச் சாட்சி. இந்தப் பயணம், சத்தியத்திற்காக நிற்கும் ஒரே மனிதனின் நிலைப்பாடு எவ்வளவு வலிமையானது என்பதை நினைவூட்டுகிறது.
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால்... சில மனிதர்கள் காலத்தின் ஓட்டத்தையே மாற்றியிருப்பார்கள். இது ஒரு சாதாரணச் சுத்தியல், சில ஆணிகள், ஒரு தேவாலயக் கதவு... இவைகளைக்கொண்டு உலகத்தையே உலுக்கிய ஒரு மனிதரின் சுருக்கமான வரலாறு. விசுவாசத்திற்காகத் தனி ஒருவனாகப் பேரரசர்களை எதிர்த்து நின்ற, 'இங்கே நான் நிற்கிறேன்' என்ற வரலாற்றுப் பயணத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
1) வோர்ம்ஸ் விசாரணை – “இங்கே நான் நிற்கிறேன்”
கி.பி. 1521ஆம் ஆண்டு... ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி. ஓர் அரச தூதர் ஜெர்மனியின் வோர்ம்ஸ் (Worms) நகருக்குள் நுழைகிறார். அவர் அணிந்திருந்த மேலங்கியில் உரோமப் பேரரசின் அதிகாரச் சின்னமான கழுகு முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. அவருக்குப் பின்னால்... ஒரு வண்டியில்... ஓர் எளிய ஜெர்மன் துறவி அமர்ந்திருந்தார்.
அன்று, சுமார் இரண்டாயிரம் மக்கள் நகரின் வீதிகளில் திரண்டிருந்தார்கள். அந்தக் கூட்டம் அந்தத் துறவி ஒரு தனி அறைக்கு அழைத்துச் செல்லப்படுவதை ஒரு முறையாவது பார்த்துவிடத் துடித்தது.
மறுநாள்... மீண்டும் மக்கள் வெள்ளம். மாலை நான்கு மணி. அந்தத் துறவி விசாரணைக்காக வெளியே அழைத்து வரப்பட்டார். அவர் யாருடைய விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது தெரியுமா? உரோமப் பேரரசில் மிக உயர்ந்த அதிகாரம் மிக்க மனிதர்களை! அங்கு... பேராயர்கள், ஆயர்கள், பிரபுக்கள், உயர் அதிகாரிகள், இளவரசர்கள்... எல்லாருக்கும் மேலாக, உரோமப் பேரரசர் ஐந்தாம் சார்லஸ் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் மிளிர்கின்ற, மின்னுகிற ஆடம்பரமான, அலங்காரமான ஆடைகள் அணிந்திருந்தார்கள், ஒய்யாரமாக அமர்ந்திருந்தார்கள் ... அவர்களுக்குமுன் மிக மிகச் சாதாரணமான ஒரு பழுப்பு நிற அங்கி அணிந்த, ஒரு மனிதர் தனியாக நின்றார். அவருக்குமுன் ஒரு மேஜை. அந்த மேசையின்மேல் இருபத்தைந்து புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதுதான் அந்த மனிதருக்கு வழங்கப்பட்ட இறுதி வாய்ப்பு . இதுதான் அவர் தன் கருத்துக்களைத் திரும்பப் பெற அவருக்குக் கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு.
அவரை நோக்கிக் கேள்விக்கணைகள் பாய்ந்தன: “இந்தப் புத்தகங்கள் அனைத்தும் உன்னுடையவையா?”
“ஆம், இவை அனைத்தும் என்னுடையவையே.” அவருடைய அமைதியான பதில். மீண்டும் கேள்வி பாய்ந்தது: “இவைகளில் எழுதியிருப்பதை நீ இன்னும் ஆதரிக்கிறாயா அல்லது... இவைகளில் எதையாவது மறுத்து, திரும்பப் பெற்றுக்கொள்கிறாயா?” அந்தத் துறவி சிறிது நேரம் அமைதியாக நின்றார். அவருக்குள் மெல்லிய பயம் படர்ந்தது. முன் வரிசையில் இருந்தவர்கள், அவர் முகத்தில் துளித் துளியாக வியர்வை அரும்பியதைப் பார்க்க முடிந்தது. “தயவு செய்து... நான் சிந்திப்பதற்கு எனக்குச் சிறிது நேரம் கொடுங்கள்," என்று அவர் கேட்டார்.
அரங்கத்தில் சலசலப்பு எழுந்தது. அவருக்கு 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. அவர் தன் அறைக்குத் திரும்பினார். அந்த இரவு... நிச்சயமாக அவர் தூங்கவில்லை. அந்த இரவு முழுவதும் அவர் ஜெபித்தார். அது தேவனைநோக்கி எழுந்த ஒரு கதறல்... ஓர் ஆழமான விண்ணப்பம். அவர் மனம் போராடியது... "நான் தவறாக நடந்துகொண்டேனா? நான் அளவுக்கு அதிகமாகச் சென்றுவிட்டேனா? இது அளவுக்கு மீறிய துணிச்சலா?" என்ற மனக் குமுறல். அவர் : “தேவனே... தேவனே... என் தேவனாகிய நீர், இந்த உலகத்தின் ஞானத்துக்கு எதிராக எனக்கு உதவி செய்வீராக! இந்தக் காரியத்தை நீர்தாமே செய்தருளும். உம் வல்லமையால் அதை நிறைவேற்றும். இந்த யுத்தம் என்னுடையது அல்ல, உம்முடையது! இங்கே போராட எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. இந்த உலகத்தின் அதிகாரங்களுக்கு எதிராக நிற்க... எனக்குள் பலம் இல்லை.” என்று ஜெபித்தார்.
மறுநாள்... மாலை ஆறு மணி. அவர் மீண்டும் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். பேராயர் அவர்மேல் குற்றம் சாட்டினார்: “நீ வைக்கிளிஃப் (Wycliffe), ஜான் ஹஸ் (Jan Hus) செய்த அதே தவறுகளைத்தான் மீண்டும் உயிர்ப்பிக்கிறாய். வேதவாக்கியங்களை நீ மட்டும்தான் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறாயா? பல பெரிய அறிஞர்களின் புரிதலையும், ஞானத்தையும்விட உன் புரிதலும், ஞானமும் உயர்ந்தவை என்று நீ கருதுகிறாயா? அப்படிச் செய்வதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது, தகுதி இருக்கிறது? மிகப் பரிசுத்தமான விசுவாசத்தை... நீ கேள்விக்குள்ளாக்கக் கூடாது!” என்று கர்ச்சித்தார். ஆனால்... அந்தத் துறவி தன் கருத்தை மாற்றிக்கொள்ள மறுத்தார். மீண்டும் கேள்விகள். மீண்டும் அதே பதில். “நான் தவறு என்று வேதவாக்கியங்களிலிருந்து நீங்கள் சுட்டிக் காட்டினால் மட்டுமே நான் என் கருத்தை மாற்றுவேன், திரும்பப் பெறுவேன். இல்லையெனில்... நான் பின்வாங்க மாட்டேன்.” என்று அவர் அழுத்தம் திருத்தமாகப் பதிலுரைத்தார்.
இறுதியாக, அவருக்கு ஒரு கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்... வரலாற்றில் அப்படியே உறைந்துவிட்டன: “பரிசுத்த வேதவாக்கியங்களே என் அஸ்திபாரம், என் அடித்தளம். என் மனசாட்சி தேவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. பரிசுத்த வேதவாக்கியங்களின் அடிப்படையில் நான் தவறு என்று என்னை நம்பவைக்க முடியாவிட்டால். நான் எதையும் திரும்பப் பெற முடியாது; பெறவும் மாட்டேன். சொந்த மனசாட்சிக்கு எதிராக நடப்பது நீதியும் அல்ல... பாதுகாப்பும் அல்ல.”
“இதோ! நான் இங்கே நிற்கிறேன். என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. தேவன் எனக்கு உதவி செய்வாராக!” அவர் இந்த வார்த்தைகளைச் சொல்லி முடிந்தவுடன், அவர் உடனடியாக அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பேரரசர் ஐந்தாம் சார்லஸ் எழுந்து, அவரை ஒரு ‘வேத விரோதி’ (Heretic) என்று அறிவித்தார். அந்தத் தருணத்திலிருந்து... அவர் சட்டத்திற்குப் புறம்பானவராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு... மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆம், இவர்தான் மார்ட்டின் லூதர்.
2. ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
கி.பி. 1483 ஆம் ஆண்டு. ஜெர்மனியின் சாக்சனி (Saxony) பகுதியில் மார்ட்டின் லூதர் பிறந்தார். அது... அரசர்கள், பேரரசர்கள், போப்பானவர்கள், பேராயர்கள், ஆயர்கள் என அதிகார வர்க்கங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்த காலம்.
லூதரின் குடும்பம் மிகவும் சாதாரணமானது. அவருடைய தந்தை, ஹான்ஸ் லூதர். ஒரு செம்புச் சுரங்கத் தொழிலாளி. பூமிக்கடியில்... சுரங்கத்தின் ஆழத்தில் வியர்வை சிந்தி உழைத்தார்...படிப்படியாக முன்னேறி, ஒரு மேற்பார்வையாளராக உயர்ந்தார். அவருடைய கடுமையான உழைப்பின் பலனாக, குடும்பத்தின் வறுமை நீங்கியது. மார்ட்டினுக்குக் கல்வி கிடைத்தது.
ஹான்ஸ் லூதருக்கு, தன் புத்திசாலி மகன்மீது ஒரு பெரிய கனவு இருந்தது. “என் மகன் சட்டம் படிக்க வேண்டும்! பல்கலைக்கழகம் செல்ல வேண்டும்! சமுதாயத்தில் பெரிய ஆளாக நிமிர்ந்து நிற்க வேண்டும்!” என்பதே அந்தக் கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற, அவர் தன் இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தத் தயாராக இருந்தார்.
1501ஆம் ஆண்டு... மார்ட்டின் லூதர் பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைத்தார். தன் ஊரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று, ஜெர்மனியின் எர்ஃபர்ட் (Erfurt) நகரை அடைந்தார். அக்காலத்துப் பல்கலைக்கழகம்... இன்றைய கல்லூரிகளைப் போன்றது அல்ல. அது மிகக் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்ட ஒரு பாசறை!
மாணவர்கள் காலை 4 மணிக்கே எழ வேண்டும். ஜெபம்... உடற்பயிற்சி... பாடங்கள்... எல்லாமே மணித் துளிகள் தவறாத கால அட்டவணையின்படி நிகழவேண்டும்! இரவு 8 மணிக்குள் விளக்குகள் அணைக்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே உணவு. நாளொன்றுக்கு நான்கு மணி நேரக் கட்டாய ஜெபம்.
இந்தக் கடுமையான சூழலிலும், மார்ட்டின் லூதர் வைரம்போல ஜொலித்தார். மற்ற மாணவர்களைவிடக் கடினமாக உழைத்தார். முதுகலைப் பட்டம் பெற்றார். சட்டப் படிப்பின் இறுதிக் கட்டத்தை அடைந்தார். தந்தை ஹான்ஸ் லூதருக்கு இது பெருமையின் உச்சம்! தன் மகனை இனி சாதாரணப் பெயரிட்டு அழைக்காமல், மரியாதை நிமித்தமான அதிகாரப்பூர்வப் பெயரால் அழைக்கத் தொடங்கினார்.
1505 ஆம் ஆண்டு. லூதர் ஒரு முழுமையான வழக்கறிஞராக மாறுவதற்குத் தயாராக இருந்தார். ஆனால்... அச்சமயத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள்... அவர் வாழ்க்கைப் பாதையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டன.
முதல் சம்பவம்... ஈஸ்டர் காலத்தில் நடந்தது. ஒருநாள் லூதர் தன் நண்பருடன் நடந்துகொண்டிருந்தபோது, அவருடைய இடுப்பில் மாட்டியிருந்த கத்தி, திடீரென வழுக்கி அவருடைய தொடையைக் கிழித்தது. முக்கியமான நரம்பு துண்டிக்கப்பட்டது. இரத்தம் பீய்ச்சியடித்தது! நண்பன் மருத்துவரைத் தேடி ஓடினான். லூதர் மட்டும்... அந்தச் சாலையோரத்தில்... தனியாக... இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். “இதுதான் என் முடிவா?” என்ற மரண பயம் அவரைத் தொட்டது. அதிர்ஷ்டவசமாக மருத்துவர் வந்தார். அவர் உயிர் பிழைத்தார்.
ஆனால், இரண்டாவது சம்பவம்... அதைவிடப் பயங்கரமானது. ஒரு நாள்... அவர் தனியாக நடந்து கொண்டிருந்தபோது, வானம் இருண்டது. கார்மேகம் சூழ்ந்தது. பயங்கரமான இடி... மின்னல்! திடீரென்று... ஒரு மின்னல் அவருக்கு மிக அருகில் வெடித்தது! அந்த அதிர்வில் தூக்கி வீசப்பட்ட லூதர், தரையில் விழுந்தார். மின்னலின் வெப்பம் அவர் முகத்தை வாட்டியது. மரணத்தின் வாசல் கதவு திறப்பதை அவர் உணர்ந்தார்.
அந்தப் பயத்தில் அவர் அலறினார்: “புனித அன்னா அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்! நான் ஒரு துறவியாக மாறிவிடுகிறேன்!”
அது... வெறும் பயத்தில் வந்த அலறல் அல்ல. அது... தேவனுக்கு முன்பாக அவர் எடுத்த ஒரு சத்தியம்.
எர்ஃபர்ட் நகருக்குத் திரும்பியவுடன், அவர் செய்த முதல் காரியம்— தன் விலையுயர்ந்த சட்டப் புத்தகங்களை விற்றார்.. நண்பர்கள் தடுத்தார்கள்... “இத்தனை வருட உழைப்பை வீணாக்காதே!” என்று கெஞ்சினார்கள். ஆனால் லூதர் அசைந்து கொடுக்கவில்லை.
குறிப்பாக, அவருடைய தந்தை ஹான்ஸ் லூதர் இந்த முடிவைக் கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றார். “நீ உன் பெற்றோருக்குத் துரோகம் செய்துவிட்டாய்! எங்கள் கனவுகளைச் சிதைத்துவிட்டாய்!” என்று முழங்கினார். லூதரின் வாழ்க்கையில் அது ஒரு பெரிய குடும்பப் பிளவை ஏற்படுத்தியது.
இரண்டே வாரங்களில்... பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி, கடுமையான விதிமுறைகளுக்குப் பெயர் பெற்ற ‘ஆகஸ்டினியன்’ (Augustinian) மடாலயத்தின் கதவுகளைத் தட்டினார்...லூதர் நிம்மதியைத் தேடித்தான் மடாலயத்திற்குள் நுழைந்தார். ஆனால் அங்கே... அவர் தன்னைத்தானே வருத்திக்கொண்டார். "நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா? தேவன் என்னை ஏற்றுக்கொண்டாரா?" என்ற கேள்விகள் அவரைத் துளைத்தன. நாட்கணக்கில் உபவாசித்தார். கடும் குளிரில், போர்வை இல்லாமல் வெறும் கல் தரையில் படுத்தார். "இவன் செத்துவிடுவானோ?" என்று பிறர் பயப்படும் அளவுக்கு அவர் தன்னை வருத்தினார்.
இவைகளுக்கிடையில் அவர் கேட்டதெல்லாம் ஒன்றேவொன்றுதான்: “நான் செய்வது போதுமா? நான் போதுமான அளவு புண்ணியம் தேடியிருக்கிறேனா” இந்தக் கேள்விகள் அவருக்குள் ஒரு மன அழுத்தத்தை உருவாக்கின. அதை அவர் ஜெர்மன் மொழியில் “ஆன்ஃபெக்டுங்கன்” (Anfechtungen) என்று அழைத்தார். அதாவது... தாங்க முடியாத ஆத்தும போராட்டம்... இந்தப் போராட்டம்... அவருடைய வாழ்நாள் முழுவதும் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தது.
3. உரோமுக்குப் பயணம் – நம்பிக்கையின் அதிர்ச்சி
மார்ட்டின் லூதரின் வாழ்க்கையில், அவருடைய உள்ளார்ந்த போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்திய ஒரு முக்கியமான நிகழ்வு... அவருடைய உரோமப் பயணம்.
அப்போது யோஹான் வான் ஸ்டௌபிட்ஸ் (Johann von Staupitz) என்பவர் அகஸ்டினியன் மடாலயத்தின் தலைவராக இருந்தார். அவர் லூதரின் ஆழ்ந்த தீவிரத்தையும், அவருக்குள் இருந்த தாங்கமுடியாத மன அழுத்தத்தையும் கவனித்தார். லூதர் உண்மையாக இருந்தார்... ஆனால், அளவுக்கு மீறித் தன்னை வருத்திக்கொண்டார்.
“இந்த இளம் துறவிக்குச் சிறிது மன மாற்றமும்... கொஞ்சம் வெளி உலக அனுபவமும் தேவை," என்ற ஒரு முடிவுக்கு ஸ்டௌபிட்ஸ் வந்தார். எனவே, மடாலயத்தின் ஒரு பணிக்காக என்று சொல்லி, அவர் லூதரை உரோமுக்கு அனுப்பி வைத்தார். இந்தப் பயணம் லூதரின் மனநோய்க்கு ஒரு மருந்தாக அமையும் என்று அவர் நம்பினார்.
ஆனால்... இந்தப் பயணம் அத்தனை எளிதானது அல்ல. உரோமுக்குச் செல்ல, லூதர் சுமார் 1,360 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டியிருந்தது! பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலைகளைக் கடந்து... கடும் குளிரில்... ஆபத்தான பாதைகளின் வழியாக... அப்போது லூதருக்கு வயது, வெறும் 27.
இருப்பினும், அவருக்குள் ஒரு பெரும் உற்சாகம்! “நான் உரோமைப் பார்க்கப் போகிறேன்!” அது அவருக்குப் புனித நகரம். திருச்சபையின் இருதயம். போப்பின் இருப்பிடம். இயேசுவின் சீடர்கள் நடந்த மண்! உரோமில் காலடி வைத்தபோது, “ஓ... புனித உரோமாபுரியே... உன்னை வணங்குகிறேன்!” என்று லூதர் தரையில் விழுந்து, உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் கைகூப்பினார்:
ஆனால்... அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. உரோமில், அவர் பிரம்மாண்டமான கட்டிடங்களைப் பார்த்தார். புனித பேதுரு ஆலயம் அப்போதுதான் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் அதைவிட அதிகமாக அவர் பார்த்தது... அழுக்காறும்... ஊழலும்... ஆன்மீகச் சீர்கேடும். அவர் கண்ட காட்சிகள், அவருடைய ஆவியை உலுக்கிப் போட்டன.
அங்குள்ள குருக்கள், திருப்பலியை (Mass) அவ்வளவு வேகமாகச் சொன்னார்கள். இலத்தீன் மொழியில் ஒரு வார்த்தைகூடப் புரியாத அளவுக்கு வேகம்! ஏன் தெரியுமா? அதிகமான மக்களுக்கு, அதிகமான பூசைகள் செய்தால்... அதிகமான பணம் கிடைக்கும் என்பதற்காக! சிலர் பெண்களோடு தகாத தொடர்பில் இருந்தார்கள். இன்னும் சிலர், பலிபீடத்திலிருக்கும் அப்பத்தையும் இரசத்தையும் கேலி செய்தார்கள். “யாருக்குத் தெரியும்? யாருக்குப் புரியப் போகிறது?” என்று சிரித்தபடியே கடந்து சென்றார்கள்.
இவைகளையெல்லாம் பார்த்தபோது, லூதரின் உள்ளம் சுக்குநூறாக உடைந்தது. ஏனெனில்... லூதர் முதல்முறை திருப்பலி நடத்தியபோது, தேவனுடைய பரிசுத்தத்தை நினைத்து நடுக்கமடைந்த மனிதன். ஆனால் இங்கே... தேவனைப்பற்றிப் பேசுபவர்கள், அவரை இவ்வளவு அலட்சியப்படுத்துவதைக் கண்டு திகைத்தார்.
அதுமட்டுமல்ல...உ ரோமில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ‘புனிதப் பண்டங்கள்’ (Relics) அவரை ஆச்சரியப்படுத்தின. இயேசுவின் தலையில் இருந்ததாகச் சொல்லப்படும் முள்... தோமாவின் விரல்... கேப்ரியேல் தூதரின் சிறகிலிருந்து விழுந்ததாகக் கூறப்படும் ஒரு வெள்ளை இறகு... இவைகளையெல்லாம் பார்ப்பதற்கு மக்கள் பணம் செலுத்திக்கொண்டிருந்தார்கள். இப்படிச் செய்தால்... பர்கட்டோரி (Purgatory) என்ற உத்தரிக்கிற ஸ்தலத்தில் கழிக்க வேண்டிய தண்டனைக்காலம் பல்லாயிரம் ஆண்டுகள் குறையும் என்று சொல்லப்பட்டது.
லூதரால் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான இடம்— ‘ஸ்காலா சாங்க்டா’ (Scala Sancta). இவை இயேசு கிறிஸ்து பிலாத்துவின்முன் நிற்கச் சென்றபோது, இயேசு ஏறியதாகக் கூறப்படும் படிக்கட்டுகள். அவை எருசலேமிலிருந்து உரோமுக்குக் கொண்டுவரப்பட்டதாக நம்பப்பட்டது.
லூதர்... அந்தப் படிகளைத் தன் முழங்கால்களால் ஊர்ந்து ஏறினார். ஒவ்வொரு படியிலும்... கர்த்தருடைய ஜெபம். முழங்காலில் வலி, மனதில் பக்தி.
அக்கால நம்பிக்கையின்படி, ஒவ்வொரு படியையும் முழங்கால்களால் ஏறுபவர்களுக்கு, பர்கட்டோரியில் (Purgatory) கழிக்க வேண்டிய தண்டனைக்காலம் சுமார் ஒன்பது ஆண்டுகள் குறையும்! லூதர் இதைத் தன் முன்னோர்களின் ஆன்மாவுக்காகச் செய்தார்.
“இப்படிச் செய்தால், மேல் படியில் சென்றதும் முன்னோர்களின் ஆன்மா விடுதலை அடையும், பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று நம்பப்பட்டது...
படிக்கட்டுகளின் உச்சியை அடைந்தபோது... லூதர் எழுந்து நின்றார். திடீரென்று... அவர் மனதில் ஒரு கேள்வி சம்மட்டிபோல அடித்தது: “இது உண்மையா? இதை யார் உறுதி செய்தது? எப்படி எனக்குத் தெரியும்?” அந்தக் கேள்வியே... அவருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனை. அங்கே உறுதியில்லை... நிச்சயமில்லை... ஆன்மாவுக்கு அமைதியில்லை.
உரோமிலிருந்து லூதர் திரும்பினார். ஆனால், உரோமுக்கு வந்தபோது இருந்த உற்சாகம் இப்போது இல்லை. மிகுந்த குழப்பத்துடனும், ஆழ்ந்த வேதனையுடனும் அவர் நாடு திரும்பினார். புனித நகரம் என்று அவர் நினைத்த இடத்தில்... அதிகாரம் இருந்தது... செல்வம் இருந்தது... ஆனால், ‘ஆவியின் வறுமை’ தாண்டவமாடியது. இந்த அனுபவம் அவருடைய கண்களைத் திறந்தது. “சத்தியம் எங்கே? சமாதானம் எங்கே? உண்மையான இரட்சிப்பு எங்கே?” இந்தக் கேள்விகளுக்கான பதில்... உரோமில் இல்லை என்பதை... லூதர் இப்போது தெளிவாக உணர ஆரம்பித்தார்.
4. வேதாகமமும் விட்டன்பெர்கும் – மனச்சாட்சியின் விழிப்பு
உரோமிலிருந்து திரும்பியபிறகு, மார்ட்டின் லூதர் பழைய லூதராக இல்லை. அவர் உள்ளத்தில் அமைதி இல்லை. உரோமில் அவர் கண்ட காட்சிகள்... அவருடைய விசுவாசத்தை வேரோடு உலுக்கியிருந்தன. ஆனால்... அந்தக் குழப்பமே அவரை ஒரு புதிய தேடலுக்குள் தள்ளியது. அந்தத் தேடல்— வேதாகமம். மடாலயத்தில் ஆரம்ப நாட்களிலிருந்தே, லூதர் வேதாகமத்தை ஆழமாக நேசித்தார். சொல்லப்போனால்... அது அக்காலத்தில் மிகவும் அபூர்வமான ஒரு விஷயம். ஏனெனில், வேதாகமம் பெரும்பாலும் இலத்தீன் மொழியில் மட்டுமே இருந்தது. பல மடாலயங்களில்... அது ஒரு மூலையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தூசி படிந்து கிடந்தது. அந்தக் காலத்தின் மிகப் பெரிய அறிஞர்கள்கூட... வேதாகமத்தை நேரடியாகப் படிக்கவில்லை. அவர்கள் படித்ததெல்லாம்— மனிதர்கள் எழுதிய விளக்கவுரைகள்... பழங்கால மரபுகள்... பாரம்பரியங்கள் ....திருச்சபையின் தீர்மானங்கள்... இவைகளைத்தான் அவர்கள் படித்தார்கள்.
ஆனால், லூதர் தனித்து நின்றார். “எனக்கு மனிதர்களின் வார்த்தை வேண்டாம்... தேவனுடைய வார்த்தையை நான் நேரடியாகப் படிக்க வேண்டும்” என்று விரும்பினார். லூதரின் இந்தத் தனித்துவமான தாகத்தை, அவருடைய குரு யோஹான் வான் ஸ்டௌபிட்ஸ் கவனித்தார். லூதருக்குக் கிரேக்கம் தெரியும்... எபிரேய மொழியும் கற்றுக்கொண்டார். அதனால், வேதாகமத்தை அதன் மூல மொழிகளிலேயே அவரால் படிக்க முடிந்தது.
இதனால் ஸ்டௌபிட்ஸ், லூதருக்கு ஒரு புதிய பொறுப்பைக் கொடுத்தார். விட்டன்பெர்க் (Wittenberg) பல்கலைக்கழகத்தில் இறையியல் படித்து, அங்கு வேதாகமத்தைப் போதிப்பதுதான் அவருடைய புதிய பொறுப்பு. விட்டன்பெர்க்... அப்போது அது ஒரு மிகச் சிறிய நகரம். மக்கள் தொகை வெறும் இரண்டாயிரம் பேர்தான். அந்தப் பல்கலைக்கழகமும் அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. இதை உருவாக்கியவர்— சாக்சனியின் ஃப்ரெடரிக் (Frederick the Wise). ஃப்ரெடரிக்குக்கு ஒரு கனவு இருந்தது: “இந்தச் சிறிய விட்டன்பெர்க்... ஒரு அறிவுச் சாகரமாக மாற வேண்டும்! ஒரு கலாச்சார மையமாக உயர வேண்டும்!” என்பது அவருடைய கனவு. லூதர் இந்த அழைப்பை மிகுந்த தயக்கத்தோடுதான் ஏற்றுக்கொண்டார். “நான் இதற்குத் தகுதியற்றவன்” என்று அவர் மறுத்தார். ஆனால்... இறுதியில் கீழ்ப்படிந்தார். இறையியல் டாக்டர் பட்டம் பெற்றார். போதிக்கவும் தொடங்கினார். முதலில் சங்கீதங்கள்... பின்னர் உரோமர் நிருபம்.
வேதத்தைப் போதித்துக் கொண்டிருந்தாரேதவிர... அவர் உள்ளத்தில் ஒரு யுத்தமே நடந்துகொண்டிருந்தது. “தேவன் பரிசுத்தமானவர்... நான் அவரை நேசிக்க வேண்டும். ஆனால்... உண்மையைச் சொல்லப்போனால்... நான் அவரை நேசிக்கவில்லை,” என்று அவர் உணர்ந்தார். தேவன் கோருகிற நீதியின் அளவு வானம்வரை உயர்ந்திருக்கிறது. பாவியான மனிதன் அதை எப்படித் தொட முடியும்? ஒரு காலத்தில், லூதர், “தேவன் அநியாயமானவர்... கொடூரமானவர்,” என்று தன் மனதில் இருந்த அதிர்ச்சியூட்டும் வார்த்தைகளை எழுதினார். இன்னும் ஒருபடி மேலே போய்... “நான் தேவனை வெறுத்தேன்!” என்றார். நண்பர்களே, இவை ஒரு நாத்திகனின் வார்த்தைகள் அல்ல. சத்தியத்தைத் தேடும் ஒரு மனிதனின் உள்ளக் குமுறல் அது!
அது லூதர் ‘ரோமர்’ நிருபத்தைப் போதித்துக்கொண்டிருந்த நேரம். முதல் அதிகாரம்... பதினேழாம் வசனம். அந்த வார்த்தைகள் அவர் கண்களை உறுத்தின. “நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான்.” இந்த வார்த்தைகள்... அவர் உள்ளத்தில் இரவும் பகலும் எதிரொலித்தன. லூதர் யோசித்தார்... “தேவனுடைய நீதியும்... ‘விசுவாசத்தினால் பிழைப்பான்’ என்கிற வார்த்தையும்... எப்படி ஒன்றாக முடியும்?”
திடீரென்று... அவருக்குள் ஒரு மின்னல் வெட்டியது போன்ற வெளிச்சம்! தேவனுடைய நீதி என்பது... மனிதன் கஷ்டப்பட்டுச் சம்பாதிப்பது அல்ல. அது— தேவன் தன் கிருபையால்... இயேசுவின் மீதான விசுவாசத்தின் மூலம்... மனிதனுக்கு இலவசமாக வழங்கும் பரிசு!
“இதுதான் பதில்!” “இதுதான் இரட்சிப்பின் உறுதி!” லூதர் இப்போது தெளிவாக அறிந்துகொண்டார்— இரட்சிப்பு மனித முயற்சியால் வருவதல்ல... அது முழுவதும் தேவனுடைய கிருபையால் வருவது. வேதாகமமே அதிகாரம். வேதாகமமே அளவுகோல். இந்த வெளிச்சம் கிடைத்தபோது...இந்த ஆழமான சத்தியத்தை அவர் கண்டடைந்த இடம்... விட்டன்பெர்க் மடாலயத்தில் இருந்த ஒரு சிறிய, மரத் தளங்கள் கொண்ட ‘கோபுர அறை’ (Turmzimmer) என்று வரலாறு சொல்கிறது. அந்தச் சிறிய அறையில்தான், மார்ட்டின் லூதர் புதிய விசுவாசத்தின் அடித்தளத்தைக் கண்டார்.
மார்ட்டின் லூதர் என்ற அந்த மனிதர்... இனி ஒருபோதும் பழைய மனிதராக இருக்கப்போவதில்லை.
5. 95 தீர்மானங்கள் – சீர்திருத்தத்தின் தீப்பொறி
உரோமர் நிருபத்தில் பெற்ற அந்த வெளிச்சத்திற்குப்பிறகு, மார்ட்டின் லூதரால் முன்புபோல் அமைதியாக இருக்க முடியவில்லை. அவர் இப்போது தெளிவாக அறிந்திருந்தார்— இரட்சிப்பு என்பது மனிதனின் செயலால் வருவதல்ல; அது விசுவாசத்தினால், தேவனுடைய கிருபையினாலே மட்டுமே கிடைப்பது. ஆனால்... அந்த நேரத்தில் திருச்சபையில் நடந்து கொண்டிருந்ததோ... இதற்கு முற்றிலும் நேர் மாறானது.
விட்டன்பெர்க் நகரத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில், ரோமிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு டொமினிகன் துறவி சுற்றி வந்துகொண்டிருந்தார். அவர் பெயர்... யோஹான் டெட்சல் (Johann Tetzel). அவருக்கு ரோமிலிருந்து கொடுக்கப்பட்ட பணி ஒன்றுதான்— ‘பாவமன்னிப்புச் சீட்டுகள்’ (Indulgences) விற்பது!
இன்றைய காலத்தில் இது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், அன்றைய மக்களின் நம்பிக்கையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சீட்டுகள் இரண்டு விதமாக விற்கப்பட்டன:
மரித்தவர்களுக்காக: மக்கள் ‘பர்கட்டோரி’ (Purgatory) என்ற நெருப்பு இடத்தை நினைத்துப் பயந்தார்கள். தங்கள் அன்பானவர்கள் அங்கே வேதனைப்படுவதைத் தவிர்க்க, பணத்தைக் கொடுத்து இந்தச் சீட்டை வாங்கினார்கள்.
உயிரோடு இருப்பவர்களுக்காக (மிக முக்கியம்!): இதுதான் வியாபாரத்தின் உச்சம்! மக்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கும், ஏன்... இனிமேல் செய்யப்போகும் பாவங்களுக்கும் கூட முன்பே மன்னிப்பை விலைக்கு வாங்கலாம் என்று நம்பவைக்கப்பட்டார்கள்.
குறிப்பாக, புத்தாண்டு நெருங்கும் சமயங்களில் இந்தக் கூட்டம் அலைமோதும். மக்கள் நினைத்தார்கள்: “இந்தப் புத்தாண்டை நாம் ஒரு புதிய மனிதனாகத் தொடங்க வேண்டும். பழைய பாவங்கள் எல்லாவற்றையும் துடைத்தெறிய வேண்டும்.” எனவே, புத்தாண்டு பரிசுகள் வாங்குவதைவிட... இந்த ‘பாவமன்னிப்புச் சீட்டை’ வாங்குவதே ஆன்மாவுக்குச் சிறந்த பாதுகாப்பு என்று அவர்கள் நம்பினார்கள். சுருக்கமாகச் சொன்னால்... இது பரலோகத்திற்குச் செல்ல வாங்கும் ஒரு ‘முன்பதிவு டிக்கெட்’ (Advance Booking Ticket) போல விற்கப்பட்டது!
இதற்குப் பின்னணி என்ன தெரியுமா? உரோமில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த புனித பேதுரு பேராலயம். அதைக் கட்டி முடிக்கப் பெரும் செல்வம் தேவைப்பட்டது. அதற்காக, "இந்த பாவமன்னிப்புச் சீட்டுகளை, இனிமேல் மரித்தவர்களுக்காகவும் வாங்கலாம்!" என்று உரோமிலிருந்து, போப்பானவரிடமிருந்து ஒரு புதிய அறிவிப்பு வந்தது.
யோஹான் டெட்சல்... ஒரு மிகச் சிறந்த விற்பனையாளர். அவர் சந்தைகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் நின்றுகொண்டு, உரத்த குரலில், “பெட்டியில் விழும் நாணயத்தின் சத்தம் கேட்ட அடுத்த நொடி... பர்கட்டோரியில், உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும் ஆத்துமா, துள்ளிக்குதித்து பரலோகம் ஏறும்!” என்று கூறினார். அவர் மக்களை உணர்ச்சியால் கட்டிப்போட்டார். “இதோ கேளுங்கள்... உங்கள் தந்தையின் குரல் கேட்கவில்லையா? உங்களைப் பெற்ற தாயின் அழுகுரல் கேட்கவில்லையா? கருணை காட்டுங்கள்! நீங்கள் கொடுக்கும் ஒரு சிறிய காணிக்கை... அவர்களை நரக வேதனையிலிருந்து விடுதலை செய்யும்! உயிரோடு இருக்கும் நண்பர்களே... உங்களுக்காகவும் இதை வாங்கிக்கொள்ளுங்கள்! இதை நீங்கள் வாங்கிவிட்டால்...உங்களுக்கு மன்னிப்பு உண்டு! உங்கள் ஆன்மா பனியைப் போல வெண்மையாகும்” ஏழை மக்கள் அழுதார்கள். கடைசிச் சேமிப்பையும் கொண்டுவந்து கொட்டினார்கள். நாணயங்கள் பெட்டிகளில் விழுந்து ஒலித்தன.
இவை அனைத்தையும் கேள்விப்பட்டபோது... மார்ட்டின் லூதர் உள்ளம் நடுங்கினார். கோபம் அவரைத் துளைத்தது. “இது எப்படிச் சாத்தியம்? ஒரு மனிதன் பணத்தைக் கொடுத்து... தேவனுடைய மன்னிப்பை விலைக்கு வாங்க முடியுமா?” வேதாகமத்தில், இதற்குச் சிறிய ஆதாரம்கூட இல்லையே! அதனால், லூதர் ஒரு முடிவெடுத்தார். அவர் சண்டையிட விரும்பவில்லை. கிளர்ச்சி செய்யவும் நினைக்கவில்லை. அவர் விரும்பியது— ஒரு நேர்மையான விவாதம் (Debate). அதற்காக, அவர் எழுதினார்... 95 கேள்விகள்... 95 எதிர்ப்புகள்... சுருக்கமாகச் சொன்னால்... 95 தீர்மானங்கள் (95 Theses).
1517 ஆம் ஆண்டு... அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி. விட்டன்பெர்க் தேவாலயத்தின் கதவின்மீது, அந்தத் தாள்களை அவர் ஆணி அடித்து ஒட்டினார். நண்பர்களே, இது ஒரு புரட்சி அல்ல. அந்தக் காலத்தில், தேவாலயக் கதவுகள்தான் பல்கலைக்கழகத்தின் ‘அறிவிப்புப் பலகைகள்.’ மேலும், அவர் அதை ஜெர்மன் மொழியில் எழுதவில்லை; இலத்தீன் மொழியில் எழுதியிருந்தார். அதாவது, இது பொதுமக்களுக்கானது அல்ல— அறிஞர்களுக்கான ஒரு விவாத அழைப்பு மட்டுமே. “இவையெல்லாம் போப்பானவருக்குத் தெரிந்தால், நிச்சயமாக அவர் இதைச் சரிசெய்வார்," என்று லூதர் அப்போதும் நம்பினார்
அந்த 95 தீர்மானங்களில் முதல் தீர்மானம் இதுதான்: “எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ‘மனந்திரும்புங்கள்’ என்று சொன்னபோது... விசுவாசிகளின் முழு வாழ்க்கையுமே மனந்திரும்புதலாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.” லூதரின் கேள்வி இதுதான்— “பாவமன்னிப்புக்கும்... பணத்திற்கும் என்ன சம்பந்தம்?” ஆனால், லூதருக்குத் தெரியாமல் ஒரு விஷயம் நடந்தது. அவருடைய மாணவர்கள்... அந்த 95 தீர்மானங்களை ரகசியமாக ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார்கள். அந்தக் காலத்தில், ‘அச்சு இயந்திரம்’ (Printing Press) ஒரு புதிய சக்தியாக இருந்தது. இந்தத் தீர்மானங்கள் அச்சடிக்கப்பட்டன. நகரம் நகரமாகப் பரவின. சாதாரண மக்களின் கைகளுக்குச் சென்றன. அது... காய்ந்த காட்டில் பற்றிய தீயைப் போலப் பரவியது!
இதற்கிடையில், லூதரின் உள்ளத்தில் வேதாகம வார்த்தைகள் இன்னும் ஆழமாக வேரூன்றின. அவர் உரோமர் நிருபத்தை மறுபடியும் வாசித்தார். அந்தச் சத்தியம் வைரம்போல ஜொலித்தது: “நீதிமான்... விசுவாசத்தினால் பிழைப்பான்.” அந்தத் தருணத்தில், "இது மனித உழைப்பு அல்ல. இது முழுவதும் தேவனுடைய செயல்," என்று லூதர் உணர்ந்தார். இப்போது அவர் நின்ற அடித்தளம்— வேதாகமம் மட்டுமே. 95 தீர்மானங்கள், ஒரு மனிதனின் செயல்போலத் தோன்றினாலும்... உண்மையில், அவை தேவனுடைய திட்டத்தின் ஒரு சிறு தீப்பொறி. உலகையே மாற்றப்போகும் சீர்திருத்தம் .. அங்கேதான் தொடங்கியது!
6. உரோமின் பதில் – விசாரணைகள், தீர்ப்பு, துறப்பு
அந்த 95 தீர்மானங்கள்... உரோமின் வாசலைத் தட்டியபோது... அங்கிருந்து வரவேற்பு கிடைக்கவில்லை— மாறாக, கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆரம்பத்தில், அப்போதைய போப், பத்தாம் லியோ (Leo X), இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் சிரித்தபடியே ஏளனமாக, நக்கலாக, “ஓ... இது ஒரு ஜெர்மன் துறவியின் உளறல். மது போதையில் எழுதியிருப்பான். மயக்கம் தெளிந்தவுடன்... அவனே மனம் மாறிவிடுவான்," என்று சொன்னதாக ஒரு செய்தி உண்டு:
ஆனால்... நாட்கள் கடந்தன. மாதங்கள் கழிந்தன.. லூதர் பின்வாங்கவில்லை. அவர் எழுத்துக்கள் நிற்கவில்லை. அவர் பேச்சு ஓயவில்லை. “இது சாதாரண விவாதம் அல்ல; இது ஒரு பெரும் ஆபத்து!” என்று அப்போதுதான் உரோமுக்கு உரைத்தது. எனவே, 1518 ஆம் ஆண்டு... லூதரை உரோமின் பிரதிநிதி ஒருவருக்குமுன் ஆஜராகுமாறு அழைத்தார்கள். அவருடைய பெயர்— கர்தினால் காஜேதான் (Cardinal Cajetan). இடம்— ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் (Augsburg) நகரம்.
தனக்குக் கொடுக்கப்பட்ட பணி மிக எளிதானது என்று கர்தினால் நினைத்தார். “லூதரை மனமாறச் செய்ய வேண்டும். அவ்வளவுதானே?” என்று அவர் நினைத்தார்: “என்னுடைய அதிகாரத்தைக் காட்டினால் போதும்... சில கடினமான வார்த்தைகளைச் சொன்னால் போதும்... லூதர் பயந்துபோய் ‘Revoco’ (ரெவோகோ) அதாவது, ‘திரும்பப் பெறுகிறேன்’ என்று சொல்லிவிடுவான்,” என்று மார்தட்டினார். ஆனால்... கர்தினால், லூதரைத் தவறாகக் கணித்திருந்தார்.
கர்தினால் காஜேதான் வாதாடினார்: “போப் இந்த ‘இன்டல்ஜென்ஸ்’ (Indulgences) முறையை அங்கீகரித்திருக்கிறார். அதனால் இவை சரியானவை. இதை நீ கேள்வி கேட்பது... போப்பின் அதிகாரத்தையே கேள்வி கேட்பதற்குச் சமம்!” என்று அதிகாரத் தோரணையில் முழங்கினார்.
லூதர் அமைதியாக ஆனால் உறுதியாகப் பதிலளித்தார். “திருச்சபையின் அதிகாரம்... வேதாகமத்திலிருந்து வர வேண்டும். மனிதர்களின் அறிவிப்புகளிலிருந்து அல்ல,” லூதரின் பதில் தெளிவாக இருந்தது: விவாதம் சூடுபிடித்தது. கர்தினால் காட்டிய சில ஆவணங்களில் இருந்த இலத்தீன் இலக்கணப் பிழையைக்கூட லூதர் திருத்திக் காட்டினார்!
கர்தினால் கோபத்தின் உச்சத்த்திற்குச் சென்றார். கர்தினாலின் பொறுமை பறந்து போனது. மேசையை ஓங்கித் தட்டினார்! ஆவணங்களை வீசியெறிந்தார்! “மனமாறு! ‘நான் செய்தது தவறு’ என்று சொல்! வெளியே போ!” என்று கத்தினார்.
ஆனால், லூதர் அசையவில்லை. “இவர்கள் வேதாகமத்தைக் கேட்க விரும்பவில்லை. இவர்களின் விசுவாசம் முழுவதும்... மனிதர்கள் உண்டாக்கிய சட்டங்களின் மீதுதான் இருக்கிறது," என்று அந்தச் சந்திப்பிலேயே லூதர் புரிந்துகொண்டார்
இதற்குப்பிறகு, 1519 ஆம் ஆண்டு... லைப்சிக் (Leipzig) நகரில் ஒரு பெரிய விவாதம் நடந்தது. இங்கே, லூதர் ஒரு ஆபத்தான குற்றச்சாட்டை எதிர்கொண்டார். லூதரின் எதிரியான யோஹான் எக் (Johann Eck), அவரை ஒரு வலையில் சிக்க வைத்தார். “நீ... யான் ஹஸ் (Jan Hus) என்ற பழைய சீர்திருத்தவாதியின் பாதையைப் பின்பற்றுகிறாய்!” என்று குற்றம் சாட்டினார். யான் ஹஸ்... நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோலக் கேள்வி கேட்டதற்காக, ‘வேத விரோதி’ என்று முத்திரை குத்தப்பட்டுத் தீயில் எரிக்கப்பட்டவர். லூருக்கு ஹஸ்ஸைப் பற்றி முன்பு அதிகம் தெரியாது. ஆனால், இடைப்பட்ட நாட்களில் அவருடைய எழுத்துக்களை வாசித்தபோது... லூதர் அதிர்ந்து போனார்.
லூதர் வியப்புடன், “ஆமாம்... நாம் அறியாமலேயே... நாம் அனைவரும் ஹஸ்ஸைப் பின்பற்றுபவர்கள்தான்,” என்று சொன்னார். யோஹான் எக், லூதரிடமிருந்து ஒரேவொரு வார்த்தையை வரவழைக்க முயன்றார். “போப் தவறு செய்ய முடியுமா?” என்பதுதான் அவருடைய கேள்வி. இதற்குப் பதில் சொன்னால் மரணம் நிச்சயம் என்று லூதருக்குத் தெரியும்..ஆனால் அவர் உண்மையை மறைக்கவில்லை.
துணிச்சலான குரலில் அவர் முழங்கினார்: “போப்கூட ஒரு மனிதன்தான். அவரும் தவறு செய்யலாம்!” “வேதாகமத்தின் துணை இல்லாமல் இருக்கும் ஒரு பெரிய போப்பைவிட... வேதாகமத்தை கையில் வைத்திருக்கும் ஒரு சாதாரண விவசாயி உயர்ந்தவன்!” என்று மேலும் சொன்னார்.
இந்த வார்த்தைகள்... உரோமின் அரண்மனைகளில் இடிபோல எதிரொலித்தன. இனி உரோமின் முடிவு உறுதியானது. லூதரைத் திருச்சபையை விட்டு நீக்க வேண்டும். 1520ஆம் ஆண்டு... ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம் (Papal Bull) வெளியானது. அதில் லூதரைப்பற்றி இப்படி எழுதப்பட்டிருந்தது:
“இவன் கர்த்தருடைய திராட்சைத் தோட்டத்தில் புகுந்த காட்டுப் பன்றி! இவன் கர்த்தருடைய வயலில் ஊர்ந்து செல்லும் பாம்பு!." மேலும் “60 நாட்களுக்குள் உரோமுக்கு வந்து மன்னிப்பு கேள். இல்லையெனில்... ‘Excommunication’ (சபை நீக்கம்)! நீ நரகத்திற்குத் தள்ளப்படுவாய்!”
இந்த ஆவணத்தைப் பெற்றபோது லூதர் என்ன செய்தார்? பயந்தாரா? ஒளிந்து கொண்டாரா? இல்லை! அவர் விட்டன்பெர்க் மாணவர்களை ஒன்று கூட்டினார். நகரின் எல்லைக்குச் சென்றார். அங்கே ஒரு தீயை மூட்டினார். 1520 டிசம்பர் மாதம்... காலை 10 மணி.
அவர் வெறுமனே போப்பின் ஆணையை (Papal Bull) மட்டுமல்ல... திருச்சபையின் சட்டப்புத்தகங்கள் (Canon Law) அனைத்தையும் அந்தத் தீயில் வீசினார்! இதன் மூலம், லூதர் ஒரு தீர்ப்பை அறிவித்தார்— “உரோமத் திருச்சபையின் சட்ட அமைப்பு முழுவதையும்... நான் என் வாழ்விலிருந்து புறக்கணித்துவிட்டேன்!”
அதன் அர்த்தம் உலகுக்கே புரிந்தது— “உரோமின் அதிகாரத்தை... நான் ஏற்கவில்லை!”
இதன் விளைவாக, 1521 ஜனவரி மாதம்... லூதர் அதிகாரப்பூர்வமாகத் திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டார். இனி அவர் துறவி அல்ல... குரு அல்ல... உரோமின் பார்வையில் அவர் ஒரு குற்றவாளி... ஒரு விரோதி! ஆனால்... இது முடிவு அல்ல. உண்மையில், இது அடுத்து நடக்கப்போகும் இன்னொரு மாபெரும் வரலாற்று நாடகத்திற்கான... ஒரு முன்னுரை மட்டுமே!
7. வார்ட்பர்க் கோட்டை – தனிமை, போராட்டம், விடுதலை
வோர்ம்ஸ் நகரில் லூதர் தன் நிலைப்பாட்டைத் துணிச்சலாக அறிவித்தபிறகு... சட்டத்தின் பார்வையில் அவர் ஒரு குற்றவாளியாக மாறினார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நாட்கள் முடிந்தவுடன்... யார் வேண்டுமானாலும் அவரைக் கைது செய்யலாம். ஏன்... யார் வேண்டுமானாலும் அவரைக் கொல்லலாம். சட்டப்படி அது குற்றம் அல்ல.
லூதருக்கு இது தெரியும். இருந்தாலும், அவர் விட்டன்பெர்க் நகருக்குத் திரும்பவே விரும்பினார். அங்கே வேலை மலைப்போலக் குவிந்து கிடந்தது. மக்கள் சத்தியத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால்... சாக்சனியின் அதிபதி ஃப்ரெடரிக் (Frederick the Wise) வேறு திட்டம் வைத்திருந்தார். லூதரை அப்படியே விட்டால்... அது அவரை மரணக்குழிக்கு அனுப்புவதற்குச் சமம் என்று அவர் நினைத்தார்.
அதனால், ஓர் இரகசியத் திட்டம் தீட்டப்பட்டது. லூதர் வோர்ம்ஸிலிருந்து வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தார். ஐசனாக் (Eisenach) என்ற நகருக்கு அருகே... ஓர் அடர்ந்த காட்டுப்பாதை. திடீரென... ஆயுதம் தாங்கிய குதிரை வீரர்கள் காட்டிலிருந்து பாய்ந்தார்கள்! கைகளில் வில் அம்புகள்! முகத்தில் மூடி! வண்டி ஓட்டுநர் அலறி அடித்து ஓடினான். மற்றவர்கள் பயந்து சிதறினார்கள். லூதர் மட்டும் அங்கே தனித்து நின்றார். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்... அவர் கடத்தப்படுவதற்கு முந்தின நொடியில்கூட, தன் உயிரைக் காப்பாற்ற நினைக்கவில்லை. மாறாக... தன் கையில் இருந்த ‘கிரேக்க புதிய ஏற்பாட்டையும்’, ‘எபிரேய வேதாகமத்தையும்’ கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். வீரர்கள் அவரைக் குதிரையின்மீது தூக்கிப் போட்டார்கள். மின்னல் வேகத்தில் மறைந்தார்கள்.
சிறிது நேரம் கழித்துதான் உண்மை தெரியவந்தது. அவர்கள் எதிரிகள் அல்ல... நண்பர்கள்! லூதரைப் பாதுகாக்க ஃப்ரெடரிக் நடத்திய ஒரு “போலி ஆட்கடத்தல்” நாடகம் அது. லூதரின் துறவி உடைகள் களையப்பட்டன. அவருக்கு ஒரு போர்வீரரின் உடை அணிவிக்கப்பட்டது. அவருக்கு ஒரு புதிய பெயரும் கொடுக்கப்பட்டது— “வீரர் ஜார்ஜ்” (Junker Jörg - இளைய ஜார்ஜ்).
சுற்றுச் சுழலும் நீண்ட பாதைகளுக்குப் பிறகு, அவர்கள் ஒரு பழைய கோட்டையை அடைந்தார்கள். அதுதான்... வார்ட்பர்க் கோட்டை (Wartburg Castle). இங்கேதான், லூதர் உலகின் பார்வையிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டார்.
ஊருக்குள் வதந்திகள் பரவின. “லூதர் கொல்லப்பட்டார்!” “இல்லை... அவர் காணாமல் போய்விட்டார்!” ஃப்ரெடரிக் விரும்பியதும் அதைத்தான்.
வார்ட்பர்க் கோட்டையில், லூதர் ஒரு சிறிய அறையில் தங்கவைக்கப்பட்டார். அவர் கைதி அல்ல... ஆனால் அந்தத் தனிமை, ஒரு சிறைச்சாலையைவிடக் கொடுமையாக இருந்தது. ஜன்னல் வழியாக ஜெர்மனியின் அடர்ந்த காடுகளைப் பார்த்தபடி, அவர் மணிக்கணக்கில் சிந்தித்தார்:
“நான் மட்டும்தான் ஞானியா? எனக்குமுன் வாழ்ந்த தலைமுறைகள் எல்லாம் முட்டாள்களா? எல்லோரும் தவறா?”
லூதர் உள்ளார்ந்த போராட்டங்களில் மூழ்கினார். அவர் வாழ்க்கை முழுவதும் அவரைத் துரத்திய ‘Anfechtungen’ (ஆன்ஃபெக்டுங்கன்) என்னும் ஆவிக்குரிய மனத் தளர்ச்சி, மீண்டும் அவரைச் சூழ்ந்தது. தூக்கமில்லை... சில நேரங்களில் பல நாட்கள் தொடர்ந்து விழித்திருப்பார். தன் நண்பர் மெலான்க்தோனுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த அமைதியான தனிமையில்... சாத்தானுடன் எனக்கு ஆயிரம் போர்கள் நடக்கின்றன,” என்று சொன்னார்.
மிகப் பிரபலமான ஒரு செவிவழிச் செய்தி என்னவென்றால்... ஒருநாள் இரவு சாத்தான் திடீரென அவர் அறைக்குள் தோன்றியபோது, லூதர் ஆத்திரமடைந்து, தன் மேசையில் இருந்த பேனா மையைக் கொண்டு... அவன் முகத்தில் வீசினாராம்!
இன்னொரு இடத்தில்: “இங்கே இப்படிச் சும்மா இருப்பதைவிட... எரியும் நிலக்கரியில் விழுந்து எரிவதே மேல்!” என்று எழுதினார். விட்டன்பெர்கிலோ... லூதர் இல்லாததால் குழப்பம். தலைமை இல்லாமல் தடுமாற்றம்...
ஆனால்... வார்ட்பர்க் கோட்டையில் லூதர் சும்மா உட்கார்ந்துவிடவில்லை. அவர் எழுதினார். எழுதிக்கொண்டே இருந்தார். புத்தகங்கள்... துண்டுப் பிரசுரங்கள்... “நான் என் பேனா மையைக் கொண்டு... அந்தச் சாத்தானின் முகத்தில் வீசுகிறேன்!” என்று அவர் கோபத்தோடு சொன்னார். ஆனால், அவருடைய மிகப் பெரிய பணி... இன்னும் வரவிருந்தது. அது— வேதாகமத்தை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பது. அதுவரை இலத்தீன் மொழி பாதிரியார்களுக்கு மட்டுமே சொந்தம். “தேவன் பேசும் வார்த்தை... ஒரு ஏழை விவசாயியின் சமையலறைக்கும் செல்ல வேண்டும்! தெருவில் விளையாடும் பிள்ளையின் நாவிலும் ஒலிக்க வேண்டும்!” என்று லூதர் முழங்கினார்
அவர் கிரேக்க மூல நூலை வைத்துக்கொண்டு, புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் தொடங்கினார். நண்பர்களே, ஓர் அதிர்ச்சி தரும் உண்மை தெரியுமா? வெறும் 11 வாரங்களில்... அவர் புதிய ஏற்பாடு முழுவதையும் மொழிபெயர்த்து முடித்தார்! 1522 ஆம் ஆண்டு அது வெளியிடப்பட்டது. ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழிக்குச் செய்ததை... லூதர் ஜெர்மன் மொழிக்குச் செய்தார்.
ஓர் ஆண்டு கழிந்தது. லூதர் ஆளே மாறியிருந்தார். தாடி வளர்ந்திருந்தது. துறவி போல இல்லை, ஒரு போர்வீரன் போல இருந்தார். அங்கே நடந்த ஒரு சிறிய சம்பவம் அவர் மனதை உலுக்கியது. ஒருமுறை அவர் வேட்டையாடச் சென்றபோது, ஒரு குட்டி முயலை வேட்டை நாய்களிடமிருந்து காப்பாற்றித் தன் ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆனால்... அந்த நாய்கள் மோப்பம் பிடித்து, அவர் ஆடையைப் பிடித்து இழுத்து, அந்த முயலைக் கடித்துக் குதறின. அவர் அதிர்ந்து போனார். "பாவம் அப்பாவிகளை இப்படித்தான் வேட்டையாடுகிறது" என்று உணர்ந்தார்.
இறுதியாக, 1522 ஆம் ஆண்டு லூதர் ஒரு முடிவுக்கு வந்தார். “இனி மறைந்து வாழ்ந்தது போதும்!” விட்டன்பெர்கில் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம். அவர் பயத்தைத் தூக்கி எறிந்தார். தேவனுடைய வார்த்தை... அவரை மீண்டும் பொது அரங்கிற்கு அழைத்தது. அவர் கோட்டையை விட்டு வெளியேறினார்.
8. திருமணம், சேவை, இறுதி நாட்கள், நிலைத்த மரபுச் சுவடு
1522 ஆம் ஆண்டு... லூதர் மீண்டும் விட்டன்பெர்க் நகருக்குத் திரும்பினார். ஆனால், அங்கே அவர் கண்ட காட்சி அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. நிலைமை... அவ்வளவு குழப்பமாக இருந்தது. லூதர் இல்லாத காலத்தில், பலர் திருச்சபையின் அதிகாரத்தைக் கேள்வி கேட்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை; அதை ஒரு வன்முறைப் புரட்சியாக மாற்றியிருந்தார்கள். சிலர் சிலைகளை உடைத்தார்கள். சிலர் ஆலயங்களின் கலைப்பணிகளை அழித்தார்கள். தோமஸ் ம்யூன்சர் (Thomas Müntzer) போன்றவர்கள், “ஆயுதம் எடுங்கள்!” என்று மக்களைத் தூண்டிவிட்டார்கள். இதன் விளைவு— இரத்தப் பெருக்கம்... வலி... அழிவு!
இதைப் பார்த்த லூதர் உள்ளம் கொதித்தார். “சீர்திருத்தம் என்பது அராஜகம் அல்ல! தேவனுடைய வார்த்தை... ஒழுங்காகப் போதிக்கப்பட வேண்டும்.” என்று முழங்கினார். மீண்டும் விட்டன்பெர்க்கின் தலைமைப் பொறுப்பைத் தன் தோள்களில் சுமந்தார்.
அதே சமயம், லூதரின் எழுத்துக்கள் ஜெர்மனி முழுவதும் காட்டுத்தீ போலப் பரவிக்கொண்டிருந்தன. மடங்கள், கன்னியாஸ்திரிகளின் இல்லங்கள் என்று எங்கும் வேதாகமம் திறக்கப்பட்டது. பல துறவிகள்... “எங்கள் வாழ்க்கை வேதாகமத்தின் அடிப்படையில் இல்லையே” என்று உணர்ந்து, மடங்களை விட்டு வெளியேறினார்கள்..
1523 ஆம் ஆண்டு. ஒரு மடத்திலிருந்து 12 கன்னியாஸ்திரிகள் தப்பிக்கத் திட்டமிட்டார்கள். அவர்களுக்கு ஒரு வணிகர் உதவினார். வரலாற்றில் சொல்லப்படும் ஒரு சுவாரஸ்யமான கதை என்னவென்றால்... அந்தப் பெண்கள், ‘ஹெர்ரிங்’ (Herring) கருவாடு ஏற்றிச் செல்லும் பீப்பாய்களுக்குள் ஒளிந்துகொண்டு தப்பித்தார்களாம்! அவர்கள் விட்டன்பெர்க் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் மூன்று பேர் தங்கள் குடும்பங்களிடம் திரும்பினார்கள். ஆனால் மற்றவர்கள்? யாருமில்லாதவர்கள். ஆதரவற்றவர்கள். லூதர் இவர்களுக்குப் பொறுப்பேற்றார். அவர்களுக்குத் திருமணங்களை ஏற்பாடு செய்து வைத்தார்.
கடைசியில்... ஒரேவொரு பெண் மட்டும் மீதமிருந்தார். அவர் பெயர்— கத்தரீனா வான் போரா (Katharina von Bora). வயது 26. அந்தக் காலத்தில் அது “முதுமை” என்று கருதப்பட்டது. ஆனால்... கத்தரீனா தெளிவாக இருந்தார். “நான் திருமணம் செய்தால்... டாக்டர் லூதரைத்தான் செய்வேன்” என்று நின்றார். லூதர் ஆரம்பத்தில் தயங்கினார். “நான் ஒரு மரண தண்டனைக் கைதி. எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். எனக்கு ஏன் திருமணம்?” என்று நினைத்தார். ஆனால்... தேவனுக்கு வேறு திட்டம் இருந்தது. 1525 ஆம் ஆண்டு... மார்ட்டின் லூதர், கத்தரீனாவைத் திருமணம் செய்தார். அவர் அவளை அன்போடு “கேட்டி” (Katie) என்று அழைத்தார்.
அவர்களுடைய இல்லற வாழ்க்கை அழகானது. கேட்டி ஒரு சாதாரணப் பெண் அல்ல. துணிச்சலானவள். புத்திசாலி. லூதரின் கடுமையான நாவையும், கோபத்தையும் அடக்கும் வல்லமை... அவரூக்கு மட்டுமே இருந்தது. அவர்கள் வசித்த இடம்— ‘பிளாக் கிளாய்ஸ்டர்’ (Black Cloister) என்ற பழைய பாழடைந்த மடம். கேட்டி வருவதற்குமுன், லூதர் அங்கே ஒரு வருடம் தனிமையில் வாழ்ந்தார். படுக்கை வைக்கோல் குவியல்... பல மாதங்களாகத் துவைக்காத போர்வை... ஒரே நாற்றம்! ஆனால் கேட்டி வந்ததும்... அந்த நரகம் ஒரு வீடாக மாறியது. அவள் விவசாயம் செய்தார். மீன் குளங்களைப் பராமரித்தார். வீட்டில் மாணவர்களுக்கு அறைகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டினார். அவர்களுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள்.
லூதர் தன் மனைவியை வேடிக்கையான பெயர்களில் அழைப்பார். ஒரு கடிதத்தில், “என் அன்பு மனைவி... திருமதி டாக்டர் லூதர் அவர்களே... பன்றிச் சந்தையின் அதிபதியே... எங்கள் பண்ணையின் அரசியே...” என்று எழுதுகிறார். அவர்களுடைய வீட்டில், உணவு வேளை எப்போதும் சத்தமாக இருக்கும். மாணவர்கள் லூதரைச் சூழ்ந்து அமர்ந்திருப்பார்கள். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் குறிப்பெடுப்பார்கள். அதுதான் பின்னாளில் “Table Talk” என்ற பிரபலமான புத்தகமானது.
லூதர்... சில நேரங்களில் மிகக் கடுமையாகப் பேசுவார். ஒரு முறை போப்பை “ஓநாய்” என்று கூட அழைத்தார். அதற்குக் காரணம் கேட்டபோது, “ஒரு சிறிய கிளையை வெட்ட... கத்தி போதும். ஆனால் கடினமான ஓக் மரத்தை வெட்ட... எனக்குக் கோடரிதான் வேண்டும்!” என்று அவர் சொன்னார்
ஆனால்... அந்தக் கோடரிபோன்ற மனிதருக்குள்ளும் ஒரு தகப்பனின் இதயம் இருந்தது. அவருடைய வாழ்க்கையில் பெரும் துயரம் தாக்கியது. அவருடைய செல்ல மகள் மக்தலேனா (Magdalena), 14 வயதில் கடுமையான காய்ச்சலில் விழுந்தாள். லூதர், மரணப் படுக்கையில் இருந்த மகளிடம், “மகளே... நீ உன் தந்தையுடன் இங்கேயே இருக்க விரும்புகிறாயா? அல்லது... பரலோகத்திலுள்ள தந்தையிடம் செல்ல விரும்புகிறாயா?” என்று கேட்டார். அந்தச் சிறுமி, “அப்பா... தேவன் விரும்புவதுபோல ஆகட்டும்," என்று மொழிந்தாள்: சிறிது நேரத்தில்... அவள் லூதரின் கைகளிலேயே உயிர் நீத்தாள். உலகத்தையே எதிர்த்து நின்ற அந்த மனிதர் உடைந்துபோனார். அவர், “அவள் சமாதானத்தில் இருக்கிறாள் என்று எனக்குத் தெரியும்... இருந்தாலும்... என் இதயம் இவ்வளவு வலிக்கிறதே!” என்று எழுதினார்:
வயது 60 கடந்தபோதும், லூதர் ஓயவில்லை. 1546 ஆம் ஆண்டு... கடும் குளிர்காலம். அவர் ஐஸ்லெபென் (Eisleben) நகருக்குச் சென்றார். அது... அவர் பிறந்த அதே ஊர். வாழ்க்கை ஒரு முழு வட்டத்திற்கு வந்தது. அங்கே இரண்டு அரசர்களுக்கு இடையே சமாதானம் பேசச் சென்றிருந்தார்.
ஆனால்... அங்கே அவர் உடல்நலம் குன்றினார். 11 நாட்களுக்குப் பிறகு... மகன்களும் நண்பர்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.
அவர் இறப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. அவருடைய உயிர் பிரியும் தறுவாயில், அவருடைய நண்பர் ஜஸ்டஸ் ஜோனஸ் (Justus Jonas) அவர் காதுக்கருகில் குனிந்து, உரத்த குரலில் ஒரு கேள்வியைக் கேட்டார்: “ஐயா... நீங்கள் போதித்த கிறிஸ்துவிலும்... அந்தச் சத்தியத்திலும்... நீங்கள் இன்னும் உறுதியாக நிற்கிறீர்களா?”
அந்தக் கேள்வியைக் கேட்டதும்... மரணத்தின் விளிம்பில் இருந்த லூதர், தன் முழு பலத்தையும் திரட்டி, தெளிவாகவும் உறுதியாகவும் பதிலளித்தார்: “ஆம்!”
அதுதான் அந்தப் போர்வீரனின் கடைசி முழக்கம். அதன்பின், அந்த மாபெரும் சரித்திரம் ஓய்ந்தது.
அவரின் படுக்கைக்கு அருகில், ஒரு துண்டுச் சீட்டில் அவர் கடைசியாக எழுதிவைத்த வார்த்தைகள் கண்டெடுக்கப்பட்டன. அது இலத்தீனும் ஜெர்மனும் கலந்த வாசகம்: “Wir sind Bettler. Hoc est verum.” அதன் அர்த்தம்: “நாம் பிச்சைக்காரர்கள். இதுவே உண்மை.”
நண்பர்களே, அதுதான் அவருடைய வாழ்நாளின் முழுச் சுருக்கம். நாம் தேவனுக்கு எதையும் தர முடியாது. நம்மால் எதையும் சம்பாதிக்க முடியாது. எல்லாமே கிருபைதான். நம்பிக்கையால் மட்டுமே... கிறிஸ்துவால் மட்டுமே!
மார்ட்டின் லூதர்... வரலாற்றின் ஓட்டத்தையே மாற்றிய மனிதர். இன்று 120 தொகுதிகளாக அவருடைய எழுத்துக்கள் நம்மிடம் உள்ளன. ஐந்து மனிதர்கள் செய்ய வேண்டிய வேலையை, அவர் ஒருவரே செய்தார். அவர் பூரணமானவரா? இல்லை. அவரிடம் கோபம் இருந்தது... கடுமையான நாவு இருந்தது... சில தவறான கருத்துகளும் இருந்தன.
ஜான் கல்வின் (John Calvin) அவரைப் பற்றிச் சொன்னது போல: “லூதர் மிகுந்த வரங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஆனால், அவர் தன் உணர்ச்சிகளைக் கொஞ்சம் அடக்கியிருந்தால்... இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.”
லூதருக்கும் தன் குறைபாடுகள் தெரியும். அதனால்தான் அவர் சொன்னார்: “வேதாகமம் என்பது ஒரு பெரிய மரம் என்றால்... நான் அதன் ஒவ்வொரு கிளையையும் தட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான்.”
லூதர் மறைந்தார். ஆனால்... அவர் கொளுத்திப்போட்ட அந்தச் சத்தியத் தீபம் அணையவில்லை. அவர் கண்டடைந்த அந்த வேதாகம வெளிச்சம்... அவருடன் மரித்துவிடவில்லை. மாறாக, அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு... மூன்று அசைக்க முடியாத தூண்களாக மாறி நின்றது.
9. சீர்திருத்தத்தின் மூன்று “சோலாக்கள்” (The Three Solas)
மார்ட்டின் லூதர் வேதாகமத்தை ஆய்ந்தபோது பெற்ற அந்த மாபெரும் வெளிச்சம்... வெறுமனே ஒரு தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்ல. அது ஒட்டுமொத்தத் திருச்சபையையும் உலுக்கியது. அந்த வெளிச்சத்தை லூதர், மூன்று இலத்தீன் வார்த்தைகளில் சுருக்கினார். இந்த வார்த்தைகள்தான், இன்றளவும் சீர்திருத்தத்தின் அஸ்திபாரமாகக் கருதப்படுகின்றன. இவை— ‘சோலாக்கள்’ (The Solas) என்று அழைக்கப்படுகின்றன.
1. சோலா ஸ்கிரிப்ச்சுரா (Sola Scriptura – வேதாகமம் மட்டுமே!)
2. சோலா ஃபைடே (Sola Fide – விசுவாசம் மட்டுமே!)
3. சோலா கிரேஷியா (Sola Gratia – கிருபை மட்டுமே!)
1. சோலா ஸ்கிரிப்ச்சுரா (Sola Scriptura) – வேதாகமம் மட்டுமே!
லூதர் வோர்ம்ஸ் விசாரணையில் சொன்னது இதுதான்: “வேதவாக்கியங்களே என் அஸ்திபாரம்.” இதன் பொருள் என்ன? திருச்சபைக்கும், கிறிஸ்தவ விசுவாசத்துக்கும் ஒரேவோர் இறுதியான, அறுதியான, உறுதியான அதிகாரம் உண்டு — அது வேதாகமம் மட்டுமே! திருச்சபையின் மரபுகளோ, போப்பின் ஆணைகளோ, மனிதனின் தத்துவங்களோ, தேவனுடைய வார்த்தைக்கு இணையாக இருக்க முடியாது. வேதாகமத்துக்குத் தன்னைத்தானே விளக்கும் வல்லமை உண்டு. லூதர் அதனால்தான் தன் உயிரைப் பணயம் வைத்து, வேதாகமத்தை இலத்தீனிலிருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார். இதன்மூலம், சாதாரண மக்கள் வேதாகமத்தை தங்கள் தாய்மொழியில் படிக்க முடிந்தது.
2. சோலா ஃபைடே (Sola Fide) – விசுவாசம் மட்டுமே!
இதுதான் லூதரின் தனிப்பட்ட போராட்டத்தின்மூலம் அவருக்குக் கிடைத்த பரிசு. ரோமர் 1:17 இன் உண்மை: “நீதிமான் விசுவாசத்தினால் பிழைப்பான்.” லூதர் அறிவித்தார்: மனிதன் நீதிப்படுத்தப்படுவது... நல்ல கிரியைகளால் அல்ல; பாவமன்னிப்புச் சீட்டுகளை வாங்குவதனால் அல்ல; தன்னையே வருத்திக்கொள்வதனால் அல்ல. இயேசு கிறிஸ்துவின்மீது வைக்கும் விசுவாசத்தால் மட்டுமே! நம்மை இரட்சிப்பது நம் உழைப்பு அல்ல... இயேசுவின் உழைப்பு! இந்த ஒரேவொரு சத்தியம், திருச்சபையின் நிதி ஆதாரத்தை (பாவமன்னிப்புச் சீட்டுகளை) உடைத்து நொறுக்கியது.
3. சோலா கிரேஷியா (Sola Gratia) – கிருபை மட்டுமே!
கிருபை என்றால் இலவசமாகக் கொடுக்கப்படும் ஈவு. லூதரின் கூற்றுப்படி, இரட்சிப்பு என்பது நாம் சாகசமாகச் சம்பாதிக்கும் ஒன்று அல்ல. நாம் பிச்சைக்காரர்கள். தேவனுக்குமுன்பாக நாம் முற்றிலும் தகுதியற்றவர்கள். ஆனாலும், தேவன் தம்முடைய அளவில்லாத கிருபையினால் (Grace) நமக்கு இரட்சிப்பை இலவசமாகக் கொடுக்கிறார். நாம் அதை வெறும் விசுவாசத்தினால் பெற்றுக்கொள்கிறோம்.
இந்த மூன்று சோலாக்களுமே... மார்ட்டின் லூதரின் வாழ்க்கையின் ஒவ்வொரு போராட்டத்திற்கும், ஒவ்வொரு முடிவிற்கும், ஒவ்வொரு வெற்றிக்கும் மையமாக இருந்தன.
10. லூதரின் தாக்கம் – இசையும் கலாச்சாரமும்
மார்ட்டின் லூதரின் தாக்கம், வெறும் இறையியலுக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. அது ஜெர்மனியின் கலாச்சாரத்தையும், இசையையும், கல்வியையும் மறுசீரமைத்தது. இந்தச் சுவடுதான், அவர் விட்டுச் சென்ற மிகப் பெரிய மரபுச் சுவடு.
இசையில் புரட்சி
லூதர் ஒரு சிறந்த இசை ஞானி. “நான் சாத்தானை இசையால் ஓட்டுவேன்!” என்று அவர் சொன்னார். அவருடைய காலத்துக்கு முன்பு, ஆலயத்தில் மக்கள் பாடுவது அரிது. பாடல்கள் அனைத்தும் இலத்தீன் மொழியில் இருந்தன. குருக்கள் மட்டுமே பாடினார்கள். “தேவனைத் துதிக்க மக்கள் ஏன் தங்கள் தாய்மொழியில் பாடக்கூடாது?” என்று லூதர் கேட்டார். அதனால் அவர் கீர்த்தனைகளை (Hymns) ஜெர்மன் மொழியில் எழுதினார். பிரபலமான பாடல்களின் மெட்டுகளை எடுத்து, அதற்குக் கிறிஸ்துவைப் பற்றிய வார்த்தைகளை எழுதினார்.
அவருடைய மிகச் சிறந்த படைப்பு— “எங்களுக்குத் துணையுண்டு, பலமுண்டு” (A Mighty Fortress Is Our God). இது சீர்திருத்தத்தின் கீதமாகவே மாறியது.
பொதுக் கல்வியின் அஸ்திபாரம்
லூதர்தான், பொதுக் கல்வி முறைக்கு அஸ்திபாரம் போட்டவர்களில் ஒருவர். “உங்கள் பிள்ளைகளை நீங்களே படிக்க வையுங்கள்!” என்று அவர் பெற்றோரிடம் சத்தமாக ஒரு கோரிக்கை வைத்தார். ஏனெனில், வேதாகமத்தை அவர்கள் சுயமாகப் படிக்க வேண்டும்... தேவனுடைய வார்த்தையைத் தாங்களே புரிந்துகொள்ள வேண்டும்... என்று அவர் விரும்பினார். அவர் சிறுவர் சிறுமியர்களுக்காக வினா விடை வடிவிலான ‘சிறு வேத உபதேச விளக்கங்கள்’ (Small Catechism) எழுதினார். இதன் விளைவாக, படிப்படியாக ஜெர்மனியில் ஆரம்பப் பள்ளிகள் (Elementary Schools) உருவானது. இது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்துக்கு மட்டுமல்ல— அனைவருக்கும் கல்வி என்ற புரட்சிகரமான கொள்கைக்கு வித்திட்டது.
ஜெர்மன் மொழியின் தந்தை
லூதர் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்தபோது, ஜெர்மனியின் பல பகுதிகளிலும் வெவ்வேறு பேச்சுவழக்குகள் இருந்தன. அவர், கிழக்கு மத்திய ஜெர்மனியின் பேச்சுவழக்கை எடுத்து, வேதாகமத்தை அனைவருக்கும் புரியும் பொது மொழியில் மொழிபெயர்த்தார். இலக்கணம்... சொற்களஞ்சியம்... உச்சரிப்பு... எல்லாவற்றையும் லூதர் சரிசெய்தார். இன்று மக்கள் பேசும் தரமான ஜெர்மன் மொழியின் (Standard German) அடிப்படையாக லூதரின் மொழிபெயர்ப்பு அமைந்தது.
மார்ட்டின் லூதர் ஒரு துறவியாகப் போராடினார். ஒரு பேராசிரியராகப் போதித்தார். ஒரு குற்றவாளியாக மறைந்தார். ஆனால், அவர் ஒரு மாபெரும் மனிதராக உயர்ந்து நின்றார். அவர் ஒரு கிளர்ச்சியைத் தூண்டவில்லை... மாறாக, ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “வேதாகமம் பேசுமானால்... உலகம் முழுவதற்கும் நான் அதை அறிவிப்பேன்.” அவருடைய வார்த்தை... இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இதுவரை மார்ட்டின் லூதரின் வாழ்க்கைப் பயணத்தைக் கேட்டீர்கள். இது உங்களுக்குள் ஒரு புதிய விசுவாசத் தீப்பொறியை உண்டாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். நன்றி."