வேத வசனம்:
மத்தேயு 17:2; மாற்கு 6:34; 10:14; லூக்கா 23:34; யோவான் 1:14; 2 கொரிந்தியர் 4:6; கலாத்தியர் 5:22-23; பிலிப்பியர் 3:20-21; எபிரேயர் 2:10; 12:1-2, 10; 1 பேதுரு 2:9, 23
முந்தைய அதிகாரத்தில் புதுப் பிறப்பு என்றால் என்னவென்று நாம் கொஞ்சம் பார்த்தோம். அதன் விளைவாக நம் வாழ்க்கை எப்படி பரிசுத்தமாக்கப்படுகிறது, நாம் எப்படி மறுவுருவாக்கப்படுகிறோம் என்று நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
புதுப் பிறப்பு இல்லையென்றால் மறுசாயலாக்கப்படுதல் இல்லை. மறுபடியும் பிறக்காத ஒருவன் எப்படி மறுசாயலாக்கப்பட முடியும்? அது சாத்தியமே இல்லை. பரிசுத்தமாக்கப்படுவதில் பல அம்சங்கள் உள்ளன. மிக அடிப்படையான ஓர் அம்சத்தை மட்டும் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். ஏனென்றால், நம் ஆழமான தன்மையின்படி நாம் என்னவாக இருக்கிறோமோ அதிலிருந்து நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு மாற்றப்படுவது இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது.
வேதாகமத்தில் இதைப்பற்றிய பல வசனங்கள் இருக்கின்றன. எனினும், ரோமர் 8:29, 2 கொரிந்தியர் 3:18 ஆகிய இரண்டு வசனங்களை மட்டும் நாம் கவனமாகப் பார்ப்போம். “தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு…தேவன் நம்மை அவருடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்,” என்று அந்த வசனம் கூறுகிறது.
இயேசு தேவனுடைய குடும்பத்தில் முதல் மகனாக, மூத்த மகனாக, இருக்க வேண்டும், நாம் அவருடைய பல மகன்களாக இருக்கவேண்டும் என்பது தேவனுடைய திட்டம். தேவன் தம்முடைய மகனைப்போன்ற மக்களாலான ஒரு புதிய இனத்தை, “தெரிந்துகொள்ளப்பட்ட இனத்தை”, உருவாக்கிக்கொண்டிருக்கிறார். தேவன் தம் இருதயத்துக்கேற்ற பூரணமான மனிதனை ஆண்டவராகிய இயேசுவில், அவர் ஒருவரில் மட்டுமே, காண்கிறார். தம் முதல் மகனாகிய, மூத்த மகனாகிய, இயேசுவைப்போன்ற பல மகன்களாலான பெரிய குடும்பம் (சபை) வேண்டும் என்று தேவன் ஆசிக்கிறார். தேவன் “பல மகன்களை மகிமையில் கொண்டுவந்து” சேர்க்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் இதுவே மிக முக்கியமான காரியம். மறுசாயலாக்கப்படுகிற இந்த அற்புதமான செயல் நம்மில் நடைபெற்றுக்கொண்டேயிருக்க வேண்டும். நம் குணத்தில் மட்டும் அல்ல, நம் முழு ஆள்தத்துவத்திலும், வாழ்க்கையிலும், இது நடைபெறவேண்டும்.
ஆண்டவராகிய இயேசு குணத்தில் மட்டுமல்ல, கட்டமைப்பிலும் நம்மிலிருந்து வேறுபட்டவர் என்று 5, 6ஆம் அதிகாரங்களில் நாம் பார்த்தோம். கட்டமைப்பில் என்றால் அவரிடம் நித்திய ஜீவன் இருந்தது; மேலும், அவர் தம் வாழ்க்கையில் இந்த ஜீவனை வெளிப்படுத்திய விதமும் வேறுபட்டது. எடுத்துக்காட்டாக, குணத்தைப் பொறுத்தவரை அவர் சுயமற்றவர், சுயநலமற்றவர். ஆனால், தன்மையின்படி நாமெல்லாரும் சுயநலக்காரர்கள் என்பது மிகவும் வெளிப்படையான காரியம். அவர் நாம் வாழ்கிற தளத்தில் அல்லது நாம் எதை ஆதாரமாகக்கொண்டு வாழ்கிறோமோ அதை ஆதாரமாகக்கொண்டு வாழவில்லை. அவர் வேறுபட்ட தளத்தில், வேறுபட்ட ஆதாரத்தின் அடிப்படையில், வாழ்ந்தார். அவருடைய தளமும், ஆதாரமும் வேறுபட்டவை என்பது அவ்வளவு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதை நாம் அவ்வளவு தெளிவாகப் புரிந்துகொள்ளவும் இல்லை. மனிதன் என்ற முறையில் அவர் தம் மனித வாழ்க்கை முழுவதும் எல்லாவற்றிலும், எல்லா நேரமும் பிதாவோடு ஐக்கியம்கொண்டு, அவரைச் சார்ந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, வாழ்ந்தார். அவரே ஆவிக்குரிய மனிதத்துவத்தின் ஊனுரு; அவரே அதற்கு உருக்கொடுத்தவர். அவரே ஆவிக்குரிய மனிதத்துவம் என்றால் என்னவென்று அறியப்பண்ணினார்.
தேவன் மனித இனத்தைப் படைத்தபோது அவர் வைத்திருந்த இலக்கு என்னவென்று ஆண்டவராகிய இயேசுவில் நாம் பார்க்கிறோம். நம்மைத் தம் மகனைப்போல் மாற்ற வேண்டும் என்ற மாபெரும் திட்டத்தைச் செய்துமுடிக்க வேண்டும் என்பதில் தேவன் குறியாக இருக்கிறார். இந்த வேலை நாம் உயிர்த்தெழும் நாளிலே முழுமை பெறும். அந்த நாளில் அவர் “நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்”.
“நாமெல்லாரும் கர்த்தருடைய மகிமையைக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மருவுருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் ,” என்று 2 கொரிந்தியர் 3:18இல் நாம் வாசிக்கிறோம்.
மறுவுருவாக்கப்படுகிற இந்த மாபெரும் வேலையோடு தொடர்புடைய இரண்டு இரகசியங்களை நாம் இங்கு பார்க்கிறோம்.
நம்மைப் பொறுத்தவரை, “நாம் கர்த்தருடைய மகிமையை உற்றுநோக்க வேண்டும்”; நாம் தொடர்ச்சியாக “இயேசுவை நோக்கிப்பார்க்க வேண்டும்”; நம் முழுக் கவனத்தையும் அவர்மேல் வைக்க வேண்டும்.
“நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம், உற்று நோக்கினோம், கவனமாகச் சிந்தித்துப் பார்த்தோம்; அவர் கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்திருந்தார்,” என்று யோவான் கூறுகிறார். “தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது அறிவாகிய ஒளியைத் தோன்றபண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களில் பிரகாசித்தார்,” என்று பவுல் கூறுகிறார்.
நம் இருதயக் கண்களை அவர்மேல் குவிக்கும்போது, வேதவாக்கியங்களில் நாம் அவரைக் காணும்போது, நாம் முனைப்புடன் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படியும்போது, நாம் மாற்றப்படுவோம். தேவனுடைய இறையாண்மையின்படி, வேதவாக்கியங்கள்மூலம் பரிசுத்த ஆவியானவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம் இருதயத்துக்கு அறிவிக்கிறார். அவரைக்குறித்த நம் அறிவும், அனுபவமும் அவருடைய வார்த்தையில் உறுதியாக வேர்கொண்டிருந்தால் மட்டுமே எல்லா நேரத்திலும், வாழ்வின் எல்லாப் பரீட்சைகளிலும், நாம் நிலையாக நிற்க முடியும்.
தேவனைப் பொறுத்தவரை, அவர் தம் கிருபையின் வேலையை நம்மில் செய்துகொண்டிருக்கிறார். நம்மை நாமே மாற்றிக்கொள்ள முடியாது. இயேசுவைப்போல பாவனை செய்வது வீண். பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே நம்மை மாற்ற முடியும்; நாம் “இயேசுவை நோக்கிப் பார்க்கையில்” அவர் நம்மை மாற்றுகிறார். அவர் ஒருவரே கிறிஸ்துவின் உண்மையான சாயலை நம்மில் உருவாக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, நாம் பொறுமையாக இருக்க முயற்சிசெய்ய முடியாது. ஒருவன் நமக்கு ஆத்திரமூட்டும்போது நாம் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக்கொண்டிருப்பது பொறுமையல்ல. அப்படிப்பட்ட நேரத்தில் எந்தவிதமான எதிர்வினையும் நமக்குள் எழவில்லையென்றால் அதுதான் பொறுமை. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்றாகக் கவனிக்க வேண்டும். இரண்டும் ஒன்றல்ல. ஆத்திரமூட்டும்போது, ஒருவேளை, ஒன்றும் பேசாமல் நாம் வாயை மூடிக்கொண்டிருக்க முடியும். அப்படி வாயை மூடிக்கொண்டிருந்தால் நாம் அந்தச் சூழ்நிலையை சமாளிக்கிறோம்; அது நம் முயற்சி. ஆனால், அந்த நேரத்தில் நமக்குள் எந்த எதிர்வினையும் எழவில்லையென்றால் நாம் சூழ்நிலையைச் சமாளிக்கவில்லை; மாறாக, ஏதோவொன்று நமக்குள் உருவாகியிருக்கிறது. இது பரிசுத்த ஆவியின் கனி; இது நமக்குள் அடிப்பு வேலைப்பாடாய் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் குணம்.
கிறிஸ்துவின் தாழ்மை அல்லது அவருடைய மற்ற சில பண்புகள் நம்மில் இருப்பதுபோன்ற தோற்றத்தை நாம் ஏற்படுத்த முடியும். ஆனால், அது உண்மை அல்ல; அது வெறும் நடிப்பு, அது போலித்தனம். உண்மையான குணத்தைப் பரிசுத்த ஆவியானவர் ஒருவரே நமக்குள் உருவாக்க முடியும்.
சிறு பிள்ளைகள் தம்மிடம் வருவதைச் சீடர்கள் தடுத்தபோது, இயேசு அதைக் கண்டு விசனம் அடைந்தார் என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். ஆனால், சில சமயங்களில் அவரைக் கடுமையாக ஆத்திரமூட்டியபோது, அவருக்கு வெறுப்புண்டாக்கியபோது, அவர் கோபப்படவில்லை அல்லது பொறுமை இழக்கவில்லை. “அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், ‘பிதாவே இவர்களை மன்னியும்’ என்று சொன்னார். இதன்மூலம் அவர் யார். எப்படிப்பட்டவர் என்பதை நாம் பார்க்க முடிகிறது. அப்போது நம்முடைய உண்மையான நிலைமையையும் நாம் பார்க்கலாம்.
இது ஆண்டவராகிய இயேசுவின் சாயலில் ஓர் அம்சம். இப்படி அவருடைய சாயலில் ஏராளமான அம்சங்கள் உள்ளன. அதில் சிலவற்றை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக, பிதாவின் சித்தத்திற்கு அவர் தம்மை எப்படி முழுமையாக ஒப்படைத்தார் என்று பார்த்தோம். இப்படி அவருடைய சாயலில் பல்வேறு அம்சங்களைப் பார்க்கும்போது பரிசுத்தமாக்கப்படுவதில், அதாவது நாம் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவாறு மருவுருவாக்கப்படுவதில் எவ்வளவு சம்பந்தப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. கிறிஸ்துவைப்போல் இருப்பது என்பது கனிவாக இருப்பது, அன்பாக இருப்பது, பொறுமையாக இருப்பதுபோன்ற காரியங்களைவிட மிகமிக அதிகமானது. கிறிஸ்துவைப்போல் இருப்பதென்றால் தேவையுள்ள மக்கள்மேல் மனிதாபிமானம் கொள்வது, மனிதநேயம் வைப்பது, மனிதப்பண்போடு நடந்துகொள்வது என்பதுபோன்ற ஓர் எண்ணம் பரவலாகப் பலரிடம் இருக்கிறது. இதுதான் கிறிஸ்துவின் குணம் என்று இயேசுவை மனிதப்பண்புடையவராக மட்டுமே பலர் பார்க்கிறார்கள். ஆனால், இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவராக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறாரோ அவையெல்லாம் அவருடைய குணத்தில் அடங்கும். அதுவே கிறிஸ்துவின் சாயல், குணம். அவர் சிறு குழந்தைகளை நேசித்தார்; “அவர் அநேக மக்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்”; ஆனால், அது மட்டுமல்ல. அவர் நீதியான கடுங்கோபத்தோடும், பரிசுத்தமான வைராக்கியத்தோடும் பிதாவின் வீட்டை இரண்டுமுறை சுத்தப்படுத்தவும் செய்தார்.
“மறுவுருவாக்கப்படுவதற்காக நாம் சும்மா காத்திருந்தால் போதும்; அது தானாக நடந்துவிடும்,” என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. மறுவுருவாக்கப்படுவது எவ்வளவு ஆழமான காரியம் என்பதைச் சுட்டிக்காட்டவே இதைச் சொல்லுகிறேன். சரியாகச் சொல்வதானால், நம் சித்தம் எப்போதும் முற்றிலும் கர்த்தருக்காகவே இருக்க வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும் நம் சொந்தத் தன்மையின்படி நடக்காமல் கர்த்தர் எப்படி நடப்பார் என்று நாம் அறிந்திருக்கிறோமோ அப்படி அவரையே சார்ந்து நடக்க வேண்டும். அழுத்தங்களின் வழியாகப் போகும்போதும், ஆத்திரமூட்டும்போதும் அவருடைய கிருபை போதுமானது என்பதை நாம் நிரூபித்துக்காட்ட வேண்டும். நாம் நம் இருதயத்தின் பெருமையையும், பொறுமையின்மையையும் உதறித்தள்ள வேண்டும். ஏனோக்கைப்போல் நாம் தேவனோடு நடக்க வேண்டும். எனவே, மறுவுருவாக்கப்படுதல் என்பது நாம் எதுவுமே செய்யாமல், “கர்த்தர் என்னை மாற்றுவார்,” என்று சும்மா காத்திருப்பதால் நடந்துவிடாது; மாறாக, அவருடைய சித்தத்திற்கு இணங்கிக் கீழ்ப்படிந்து செயல்பட வேண்டும். நாம் அவருடைய சித்தத்தைச் செய்யும்போதும், அவருக்கும் அவருடைய எண்ணங்களுக்கும், வழிகளுக்கும் தக்கவாறு நாம் நம்மைத் தொடர்ச்சியாகச் சரிப்படுத்தும்போதும் நாம் மறுவுருவாக்கப்படுவோம். வருடங்கள் செல்லச்செல்ல இந்த மாற்றத்தை நாம் நம்மில் கொஞ்சம் பார்க்க முடியும். தேவன் இந்த மாபெரும் வேலையைச் செய்துமுடிக்கும்போது எல்லா வழிகளிலும் நாம் உண்மையாகவே இயேசுவைப்போல் தாழ்மையாக, பொறுமையாக இருப்போம்.
2 கொரிந்தியர் 3:18இல் “மறுசாயலாக்கப்படுதல்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்தேயு 17ஆம் அதிகாரத்தில் “இயேசு கிறிஸ்து சீடர்களுக்குமுன்பாக மறுவடிவானார்” என்று சொல்லப்பட்டுள்ளது. மருவுருவாக்கப்படுதல் என்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள அதே கிரேக்க வார்த்தைதான் மருவடிவானார் என்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த உயர்ந்த மலையில் இயேசு கிறிஸ்து மறுவடிவானார் என்றால் தேவனுடைய மகிமை இயேசு கிறிஸ்துவின் முகத்தில் காணப்பட்டது என்று பொருள். நாம் மறுவுருவாக்கப்படவேண்டும், மறுவடிவடைய வேண்டும். மகிமைப்படுத்தப்பட்ட அவருடைய மானிடத்தில் நாம் அவரைப்போல் இருக்க வேண்டும் என்பதே நம் விதியாகும்.
அதே கிரேக்க வார்த்தை ரோமர் 12:1-2இல் மீண்டும் வருகிறது. “உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுவடிவாகுங்கள், மறுவுருவாகுங்கள்”. பரிசுத்தமாக்கப்படுதல் என்ற இலக்கை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். இந்தத் தடத்தில் செல்லும்போது “மனம் புதிதாக்கப்படுத்தல்” என்ற ஒரு நிலையத்தை நாம் கடந்துபோக வேண்டும் என்று ரோமர் 12 கூறுகிறது. “உங்கள் சரீரங்களை…தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள்…நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேடம் தரியாமல்…உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுசாயலாகுங்கள்”. நம்முடைய சரீரம் “பரிசுத்த ஆவியின் ஆலயம்” என்பதை உணர்ந்து அதை முழுமையாகவும், தீவிரமாகவும், தொடர்ச்சியாகவும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்போது நம்மைச் சுற்றியிருக்கிற உலகத்தின் அபிப்பிராயங்கள், கருத்துக்கள், நலன்கள், பேராசைகள் போன்றவைகளுக்கு நாம் வளைந்துகொடுக்க மறுக்கும்போது நம்முடைய மனதையும், மனப்பாங்கையும், நாம் யோசிக்கும் விதத்தையும் முற்றிலும் மாற்றிப் புதிதாக்குவதற்கு நாம் கர்த்தரை அனுமதிக்கும்போது, நம்மை மாற்றுகிற, அதாவது மறுஉருவாக்குகிற, இந்த மாபெரும் அற்புதம் நம் வாழ்க்கையில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயிருக்கும்.
வேத வசனம்: மத்தேயு 17:2; மாற்கு 6:34; 10:14; லூக்கா 23:34; யோவான் 1:14; 2 கொரிந்தியர் 4:6; கலாத்தியர் 5:22-23; பிலிப்பியர் 3:20-21; எபிரேயர் 2:10; 12:1-2, 10; 1 பேதுரு 2:9, 23