Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

வேத வாசிப்பு 

யோவான் 1:12-13; 3:3, 5-7; அப். 2:22-42; 10:36; ரோமர் 10:8-10; 1 கொரி. 6:17; 12:3; 2 கொரி. 5:17; எபே. 2:8-10; 1 தெச. 1:5-6; தீத்து 3:4-7; 2 பேதுரு 1:4; 1 யோவான் 5:11-12, 19; எசே. 36:25-27

09-புதுப் பிறப்பு - தேவனால் பிறத்தல், இயேசுவே கர்த்தர்.pdf

புதுப் பிறப்பு – “தேவனால் பிறத்தல்”, “இயேசுவே கர்த்தர்” - 09

நமக்குப் புதுப் பிறப்பின் அனுபவம் மட்டும் இருந்தால் போதாது. அதன் உட்பொருளையும், தன்மையையும்கூட நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது மிக முக்கியம்.

புதுப் பிறப்பு என்பது நாம் மறுபடி பிறப்பது. இது முற்றிலும் தேவனுடைய செயல். இது தேவன் நம்மில் செய்யும் செயல்.புதுப் பிறப்பின்மூலம் அவருடைய நித்திய ஜீவன் மனிதனுடைய ஆவிக்குள் நுழைகிறது. அப்போது நாம் தேவனால் பிறக்கிறோம். நாம் ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து, அவரிடம் வந்து, அவரைப் பெற்றுக்கொள்ளும்போது, நாம் ஜீவமரத்தில் பங்குபெற்று, தெய்வீகத் தன்மைக்குப் பங்குள்ளவர்களாக மாறுகிறோம் என்று சொல்லலாம். ஏனென்றால்,

“தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது…குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்”.

புதுப் பிறப்பின்மூலம் நாம் ஆண்டவராகிய இயேசுவோடு இணைக்கப்பட்டு, தேவனுடைய புதிய இனத்துக்குள் நுழைகிறோம். புதிய இனத்துக்குள் நுழைவதற்கு இதைத்தவிர வேறு வழி இல்லவே இல்லை. மதரீதியான பக்திமுயற்சிகளோ, சுயமுயற்சிகளோ எதையும் சாதிக்கப்போவதில்லை. மந்திரமோ, தந்திரமோ, எந்திரமோ எதற்கும் உதவாது. இரட்சிக்கப்படுவதற்கு நற்செய்தியைக் கேட்டு, மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசுவை மட்டுமே விசுவாசிக்கும்போது, நம் ஆவியில் ஓர் அற்புதம் நடக்கிறது. என்னே அற்புதம்! நாம் தேவனால் பிறக்கிறோம்.

“ஒருவன் கிறிஸ்துவில் இருந்தால் புதுப் படைப்பாய் இருக்கிறான்”. 

“ஒருவன் தண்ணீரினாலும், ஆவியினாலும் பிறக்க வேண்டும்,” என்று ஆண்டவராகிய இயேசு சொன்னார். தண்ணீரினால் கழுவப்பட வேண்டும், ஆவியினால் பிறக்க வேண்டும். அவர் சொன்ன வார்த்தைகள் எசேக்கியேல் புத்தகத்தில் உள்ள ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றன. தண்ணீர், நாம் கழுவித் தூய்மையாக்கப்படுவதையும், அதாவது நம் பாவங்கள் கழுவப்பட்டு நீக்கப்படுவதைக் குறிக்கின்றது; ஆவி, நாம் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் புதிய நித்திய ஜீவனைப் பெற்று மறுபடி பிறப்பதைக் குறிக்கின்றது. இந்த இரண்டும் எப்போதும் சேர்ந்தே செல்கின்றன.

இரட்சிப்பின் நிச்சயம் கிறிஸ்தவர்களிடையே இரட்சிப்பின் நிச்சயத்தைப்பற்றி ஒரு தவறான கருத்து உண்டு. “ஒருவன் இரட்சிக்கப்பட்டிருக்கிறான் என்று என்ன நிச்சயம்? அதற்கு என்ன அத்தாட்சி?” என்ற கேள்வியைப் பலர் எழுப்புவதுண்டு. “ஒருவன் இரட்சிக்கப்பட்டிருக்கிறான் என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை; அதை உறுதிப்படுத்துவது சாத்தியம் இல்லை,” என்று இரட்சிப்பின் நிச்சயத்தை மறுக்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். “நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும் என்று சொல்வது வெறும் ஊகத்தின் அடிப்படையிலான அனுமானம்,” என்று அவர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் ஏறக்குறைய உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஏனென்றால், நற்செய்தியையும், இரட்சிப்பின் உண்மையான நிச்சயத்தையும் அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு இரட்சிப்பின் நிச்சயம் உறுதியாக உண்டு. இரட்சிப்பைக்குறித்து தேவன் தந்திருக்கும் நிச்சயம் உண்மையான கிறிஸ்தவனுக்கு உண்டு. இந்த நிச்சயத்தின் ஆதாரம் அல்லது அடிப்படை அவன் எப்படிப்பட்டவன் என்பதோ, அவன் என்ன செய்தான் என்பதோ அல்ல; மாறாக, தேவனுடைய கிருபையும், அவர் இலவசமாகத் தந்திருக்கும் பாவமன்னிப்பும், நித்திய ஜீவனுமே இதற்கான ஆதாரம். கிறிஸ்தவன் தன் நம்பிக்கை எல்லாவற்றையும் தன் இரட்சகர்மேல் வைத்திருக்கிறான். இது ஊகமோ, அனுமானமோ அல்ல; மாறாக, இது விசுவாசம். இப்படிப்பட்ட விசுவாசமே ஒரு பாவியை இரட்சிக்கும்.

உண்மையான நிச்சயத்தின் தன்மை என்ன? இதற்கு மிக நேரடியான பதில் ரோமர் 8:16இல் இருக்கிறது. “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்”. ”நான் தேவனால் பிறந்திருக்கிறேன்“,”நான் உயிரோடு இருக்கிறேன்“,”எனக்கு உள்ளே ஏதோவொன்று நடந்திருக்கிறது“, என்று உண்மையான கிறிஸ்தவனுக்குத் தெரியும். எல்லாம் புதிதாக மாறுகிறது. இந்த உணர்வின், இந்த நிச்சயத்தின், விளைவு நபருக்கு நபர் வேறுபடலாம். எடுத்துக்காட்டாக, சிலர் மலர்ந்த மலரைப்போல் மகிழ்ச்சி பொங்கும் நபராக இருக்கலாம்; வேறு சிலர் மலர்கின்ற மலரைப்போல நிதானமாக மலரக்கூடும். ஆனால், புறம்பாக என்ன நடக்கிறது என்பதல்ல காரியம். தேவன் தந்திருக்கும் நிச்சயத்தின் உள்ளான நிஜமே காரியம். இதற்குக் கிருபை மட்டுமே ஆதாரம். இந்த நிச்சயம் உண்மையான ஒவ்வொரு கிறிஸ்தவனையும் வேறுபடுத்திக்காட்டுகிற ஓர் அடையாளம். ஒரு கிறிஸ்தவனிடம் இந்த அடையாளம் இல்லையென்றால், உண்மையாகவே அவன் மறுபடியும் பிறந்திருக்கிறானா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. வெறுமனே மனதளவில் ஒத்துக்கொள்வதோ அல்லது சில வேத வசனங்களைப் பிடித்துக்கொள்வதோ மட்டும் போதாது; அது ஆபத்தானது.

1. ஆவியானவரால் ஆளப்படுகின்ற வாழ்க்கை

இன்னொரு முக்கியமான காரியம் உண்டு. தேவனுடைய குமாரனாகிய நம் ஆண்டவராகிய இயேசு நம் இருதயங்களில் கர்த்தராக வீற்றிருந்து ஆள வேண்டும் என்பதும், நம் புதுப் பிறப்பிலிருந்து நாம் பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருக்க வேண்டும் என்பதும் அவருடைய நோக்கமும், சித்தமுமாகும். “பரிசுத்த ஆவியினால் நிரம்புகிற அனுபவம் இரட்சிக்கப்படுகிறபோது கிடைக்கிற அனுபவம் இல்லை; அது இரட்சிக்கப்பட்டபின் எப்போதோ கிடைக்கப்போகிற அனுபவம்,” என்று சிலர் சொல்வதுண்டு. இதற்கு வேதாகமத்தில் திடமான எந்த ஆதாரமும் இல்லை. மனந்திரும்பும்போது பலர் இந்த அனுபவத்தைப் பெறுவதில்லை என்பது உண்மையாக இருக்கலாம். எனவே, பின்னாட்களில் அவர்கள் இந்த நிஜத்துக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. ஆனாலும், தேவனுடைய நோக்கம் இதுவல்ல. மனந்திரும்பி இரட்சிக்கப்படுகிற அன்றைக்கே ஆவியானவரால் கட்டுப்படுத்தப்பட்டு, ஆளப்படுகின்ற வாழ்க்கை தொடங்க வேண்டும் என்பதே தேவனுடைய நோக்கம்.

அரைகுறையான நற்செய்தி

இந்தக் குழப்பத்துக்குக் காரணம் என்ன? புதிய ஏற்பாடு வழங்குகிற உண்மைக்கும், கிறிஸ்தவர்கள் பொதுவாக அனுபவிக்கிற அனுபவத்திற்கும் இடையே இருக்கிற இந்த முரண்பாட்டுக்குக் காரணம் என்ன? இதற்கு முக்கியக் காரணம், அன்று அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவை மையமாகக்கொண்ட, கிறிஸ்துவை மேன்மைப்படுத்துகிற, நற்செய்தியை அறிவித்தார்கள். ஆனால், இன்று அறிவிக்கப்படுகிற நற்செய்தி அப்படிப்பட்டதாக இல்லை; அது அப்போஸ்தலர்கள் அறிவித்த நற்செய்தியின் ஒரு மங்கலான நிழலாக இருக்கிறது. இன்று அறிவிக்கப்படுகிற நற்செய்தி பெரும்பாலும் மனிதனை மையமாகக்கொண்ட, மனிதனை மேன்மைப்படுத்துகிற, மனிதனுக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்ட நற்செய்தியாக இருக்கிறது. ‘பொய்யான’ கிறிஸ்துவை அறிவிக்கின்ற ‘பொய்யான’ நற்செய்தி ‘பொய்யான’ கிறிஸ்தவர்களை மட்டுமே உருவாக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

“ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்கிறோம்,” என்று சொல்கிற ‘சபை’ இன்று தேவனுடைய நற்செய்தியை அறிவிக்கும் விதத்தை நினைத்துப்பார்த்து வருந்துகிறோம். பொய்யான நற்செய்தி ஒருபோதும் உண்மையான கிறிஸ்தவனை உருவாக்க முடியாது; பலவீனமான, அரைகுறையான, முழுமையற்ற நற்செய்தியை உத்தமமாக அறிவித்தாலுங்கூட, அப்படிப்பட்ட நற்செய்தி பலவீனமான, அரைகுறையான, முழுமையற்ற கிறிஸ்தவனைத்தான் பிறப்பிக்க முடியும். ஏனென்றால், மனிதக் காரணிகள் தம் செயல்பாட்டைப் பாதிப்பதற்குத் தேவன் அனுமதிக்கிறார். மனிதன் எதை அறிவித்தாலும் தேவன் அதிலுள்ள குறைகளையெல்லாம் மூடிவிட்டுத் தம் நோக்கத்தை நிறைவேற்றிவிடுவார் என்று நினைக்கக்கூடாது. கிறிஸ்துவை மேன்மைப்படுத்துகிற நற்செய்தி ஆரோக்கியமான மக்களைப் பெற்றெடுப்பதற்குப் பரிசுத்த ஆவியானவருக்கு ஒரு வாய்ப்பாக மாறுகிறது. ஒவ்வொரு மனிதனோடும் தேவன் இடைப்படுகிறார் என்பது உண்மை. அவர் இறையாண்மையுள்ளவர்; அவர் தம் விருப்பம்போல் இடைப்பட முடியும். நம் தோல்விகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவர் தம் விருப்பம்போல் எல்லா மனிதர்களோடும் இடைப்பட்ட முடியும். இருப்பினும், நாம் எப்படிப்பட்ட நற்செய்தியை அறிவிக்கிறோம் என்பது மிக முக்கியமான காரியம்; அதை உதாசீனம்பண்ண முடியாது.

அப்போஸ்தலர்கள் அறிவித்த நற்செய்தி - இயேசுவே கர்த்தர்

பெந்தெகோஸ்தே நாளில்தான் முதன்முதலாக முழு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. அன்று அறிவிக்கப்பட்ட நற்செய்தியைக் கேட்டு 3000பேர் கர்த்தரிடத்திலும், சபையிலும் சேர்க்கப்பட்டார்கள். அன்று பேதுரு பிரசங்கித்த நற்செய்தியைச் சற்றுக் கவனியுங்கள். மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவின் கர்தத்துவத்தை அவர் அறிவித்தார்; மக்களுடைய பாவ இருதயத்தை அவர் அம்பலப்படுத்தினார்; தேவனுக்கும், அவருடைய குமாரனுக்கும் எதிராகச் செய்த கலகத்தையும் அவர் அம்பலப்படுத்தினார்; “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும், கிறிஸ்துவுமாக்கினார்,” என்று பகிரங்கமாக அறிவித்தார். அவருடைய நற்செய்தி பாவத்தைக்குறித்த ஆழமான குற்ற உணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்தியது. அவர்கள் இருதயத்தில் குத்தப்பட்டார்கள்; இது பாவத்தைப்பற்றிய ஆழ்ந்த உணர்வையும், உண்மையான மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் அவர்களுக்குள் கொண்டுவந்தது. அதை ஞானஸ்நானத்தின்மூலமாகத் திட்டவட்டமாக அறிக்கையும் செய்தார்கள். விளைவு என்னவென்றால், அவர்கள் பாவமன்னிப்பைப் பெற்றார்கள்; மறுபடியும் பிறந்தார்கள்; பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்; தேவனுடைய குடும்பத்தில் சேர்க்கப்பட்டார்கள்; *“அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.* சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட ஆண்டவராகிய இயேசுவின் ஆவியானவர் அவர்களுடைய இருதயங்களைத் தம் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார். நம் முழு வாழ்க்கையிலும் கிறிஸ்துவினுடைய கர்த்தத்துவத்தின் நிஜத்தை நிலைநாட்டுவதே பரிசுத்த ஆவியானவரின் பிரதானமான வேலை. இந்த 3000பேரும் தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்ப நிலையில்தான் இருந்தார்கள்.”கிறிஸ்துவில் குழந்தைகள்“; அவர்கள் வளர வேண்டியிருந்தது; அவர்களுடைய திராணி வளர வேண்டியிருந்தது; முழுமையாக நிரப்பப்படுவதைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அந்தக் கட்டத்தில் அவர்கள் எந்த அளவுக்கு நிரப்பப்பட முடியுமோ, அந்த அளவுக்கு”நிரப்பப்பட்டார்கள்“. அவர்களுடைய புதிய பிறப்பு பலமான, ஆரோக்கியமான பிறப்பு. அவர்கள் ஆரோக்கியமான குழந்தைகள். இதைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பவுல் தெசலோனிக்கயர்களுக்கு நற்செய்தியை அறிவித்தபோது அங்கும் இதே தாக்கமும், விளைவும் ஏற்பட்டன. “எங்கள் நற்செய்தி உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல; வல்லமையோடும் பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சதோடும் வந்தது,” என்று பவுல் அதை உறுதிப்படுத்துகிறார்.

இன்று பரவலாக அறிவிக்கப்படுகிற உண்மையான மனந்திரும்புதலை ஏற்படுத்தாத, நீர்த்துப்போன நற்செய்தியால் என்ன பயன்? அது, அதிகபட்சம், பலவீனமான கிறிஸ்தவர்களை உருவாக்கலாம். குறைந்தபட்சம், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடிய, கரையோரம் நிற்கிற மக்களை, உருவாக்கலாம். கரையோரம் இருக்கும் இவர்கள் உண்மையில் இரட்சிக்கப்படவேயில்லை. நீர்த்துப்போன நற்செய்தி இதுபோன்ற இன்னும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நாம் உண்மையான நற்செய்தியை அறிவிக்க வேண்டும். மனிதனுடைய தேவையைப் பூர்த்திசெய்வதல்ல முதல் காரியம். மனிதனுக்குப் பொருத்தமாக, மனிதனுக்கு ஏற்றவாறு, நாம் நற்செய்தியை வளைத்துக்கொண்டதே நாம் செய்த மிக மோசமான தவறு. தேவன் பாவிகளைத் தம் நிபந்தனைகளின்படிதான் இரட்சிக்கிறார் என்பதை நாம் மறந்துவிட்டோம். மனமாற்றம் என்பது உண்மையாகவே வேறொருவர் ஆட்சிப் பொறுப்பை எடுத்துக்கொள்வதாகவும். கிறிஸ்துவின் கர்தத்துவம் என்பது ஒரு கிறிஸ்தவன் விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம், விரும்பாவிட்டால் விட்டுவிடலாம் என்கிற காரியம் அல்ல. இது இரட்சிப்புக்கு வெளியே இருக்கிற கூடுதலான காரியம் அல்ல. இது இரட்சிப்பின் மையம் என்று சொல்ல வேண்டும்.

எனவே, மனந்திரும்புதல் என்பது ஆண்டவராகிய இயேசுவைக் கர்த்தராகக்கொண்டு, ஆவியானவரால் கட்டுப்படுத்தப்பட்டு வாழ்கிற வாழ்க்கையின் ஆரம்பம் என்பதைத் தெளிவாகப் பார்க்க வேண்டும். ஏனென்றால், இரட்சிப்பையும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவதையும்பற்றி மிகக் குழப்பமான, முரண்பாடான, சமநிலையற்ற, வேதாகமத்துக்கு ஒவ்வாத போதனைகள் மலிந்துகிடக்கிற நாட்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.”பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுகிற அனுபவம் இரட்சிப்போடு சேர்ந்து வராமல், பிறகு கூடுதலாகப் பெறவேண்டிய அனுபவம்,” என்ற தவறான கருத்துக்கள் இன்று ஏராளம் இருக்கின்றன. இந்தப் போதனை தவறு என்பதற்கு பெந்தெகொஸ்தே நாளில் 3000 பேர் பெற்ற அனுபவம் மிக முக்கியமான சான்றாகும்.

2. இயேசுவே கர்த்தர்

உண்மையான நற்செய்தி ஆரோக்கியமான புதிய குழந்தைகளைப் பெற்றெடுக்கும். ஆரோக்கியமான புதிய கிறிஸ்தவனின் சிறப்பம்சம் என்ன? “இயேசுவே கர்த்தர்” என்று அவனுடைய இருதயத்துக்குத் தெரியும். அவனுடைய இருதயம் இதை ஏற்றுக்கொள்ளும். அவனுடைய இருதயம் இதை அறிக்கைசெய்யும். இதுவே அடையாளம். ஒருவனுடைய வாழ்க்கையில் இயேசு கர்த்தராக இருக்கிறார் என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லாதவரை அவன் உண்மையாகவே மறுபடியும் பிறந்திருக்கிறான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு கிறிஸ்தவனுடைய ஆரம்பம் இப்படிப்பட்டதாக இருந்தால், அவனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இவனுக்குக் கூடுதலான அனுபவம் தேவையில்லை. ஏனென்றால், ஆண்டவராகிய இயேசு அவனுடைய வாழ்க்கையில் ஏற்கெனவே கர்த்தராக இருக்கிறார். அவர் அவனுடைய வாழ்க்கையை ஏற்கெனவே தம் கட்டுப்பாட்டுக்குள், ஆளுகைக்குள், கொண்டுவந்துவிட்டார். ஆரம்பம் மிக முக்கியம்

வேத வாசிப்பு 

யோவான் 1:12-13; 3:3, 5-7; அப். 2:22-42; 10:36; ரோமர் 10:8-10; 1 கொரி. 6:17; 12:3; 2 கொரி. 5:17; எபே. 2:8-10; 1 தெச. 1:5-6; தீத்து 3:4-7; 2 பேதுரு 1:4; 1 யோவான் 5:11-12, 19; எசே. 36:25-27