வேத வாசிப்பு
யோவான் 8:44; 14:30; ரோமர் 3:22-23; 6:1-11; 8:13, 29; 13:14; 2 கொரி. 5:21; எபே. 6:11; பிலி. 1:19; 2:12-13; கொலோ. 1:13; 1 தெச. 5:8; எபி. 2:10; 4:15; 12:1-2; யாக்கோபு 1:22-23; 1 பேதுரு 2:1-2; 1 யோவான் 3:8-10
தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் நம் வாழ்க்கையில் எப்படி நிறைவேறுகிறது என்று பார்க்கப்போகிறோம். அதற்குமுன், நம் நிலைமையை நாம் மீண்டும் ஒருமுறை நினைத்துப்பார்க்க வேண்டும்.
பிறப்பின்படி, நாம் புறக்கணிக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள். இந்த இனத்தைப் பொறுத்தவரை ஜீவ மரத்துக்குப் போகும் வழி அடைக்கப்பட்டுவிட்டது. இந்த இனம் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து துரத்தப்பட்ட இனம். இந்த இனம் நித்திய ஜீவனைப் பெற முடியாமல் போய்விட்டது; மனிதனைக்குறித்த தேவனுடைய நோக்கம் இந்த இனத்துக்கு அடைக்கப்பட்டது. நம்மிடம் இருப்பதாக நாம் நினைக்கிற நல்ல காரியங்களும், நல்ல தன்மையும் தேவனிடம் செல்லுபடியாகாது. தேவனுடைய பார்வையில் அவைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. பரிபூரணம் அவருடைய தரம்.
“வித்தியாசமே இல்லை; எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்,” என்று வேதாகமம் திட்டவட்டமாகக் கூறுகிறது.
ஆண்டவராகிய இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் நாம் பாவ மன்னிப்பைப் பெறுவது மட்டும் சாத்தியமாகவில்லை; புறக்கணிக்கப்பட்ட, துரத்தப்பட்ட இந்த இனத்தைவிட்டு நாம் வெளியேறுவதற்கான ஒரு வழியையும் அவர் சிலுவையில் கிருபையாய்ச் செய்துமுடித்தார். ஏனென்றால், தேவனைப் பொறுத்தவரை, புறக்கணிக்கப்பட்ட இந்த இனம் சிலுவையில் மரித்தது. இயேசுவின் உயிர்த்தெழுதலில் அவர் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தினார். தேவன் ஆதாமைப் படைத்தபோது அவன் எப்படிப்பட்ட மனிதனாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினாரோ, அப்படிப்பட்ட மனிதன் இப்போது அவருடைய குமாரனின் இருப்பதால், அவர் தம் குமாரனில், தம் குமாரனைப்போன்ற ஒரு புதிய இனத்தை இப்போது உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
ஆண்டவராகிய இயேசு ஒருமுறை, “இந்த உலகத்தின் அதிபதி வருகிறான்; அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை,” என்று கூறினார். அவரால் தம்மைப்பற்றி அப்படிக் கூற முடிந்தது. அவர் ஒருவரே அப்படிக் கூற முடியும். இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தனுக்குத் தம்மிடம் ஒன்றும் இல்லை என்று அவர் கூறினார். ஏனென்றால், அவர் பாவமில்லாதவர். சாத்தான் அவர்மேல் அதிகாரமோ, ஆளுகையோ செய்வதற்கான எதுவும் அவரிடத்தில் இல்லை. நம் பிரச்சினை என்ன தெரியுமா? சாத்தான் நம்மில் ஆழமாகக் காலூன்றிவிட்டான்; நம் இருதயம் அவனுடைய கூட்டாளியாக மாறிவிட்டது. சாத்தான் கலகக்காரன்; அவன் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தான். அவனுடைய அந்தக் கலகத்தன்மை நம்மிடம் நிறைய இருக்கிறது. இதனால்தான் ஒருமுறை ஆண்டவராகிய இயேசு தம்மைப் புறக்கணித்தவர்களை நோக்கி, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்,” என்று சொன்னார். இதனால்தான் யோவானும், பாவிகள் நிறைந்த இந்த விழுந்துபோன இனத்தைப் “பிசாசின் பிள்ளைகள்” என்று அழைக்கிறார். உண்மையாகவே இவைகள் மிகக் கடுமையான வார்த்தைகள். இவைகளை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.
பழைய இனத்தைச் சார்ந்த நாம் மரித்து, புதிய இனத்துக்குள் மறுபடி பிறக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தில் நாம் அவரோடு ஒன்றிணைக்கப்பட்டு, நாம் அவருடனேகூட மரிக்கிறோம்; அவருடைய உயிர்த்தெழுதலில் அவரோடு இணைக்கப்பட்டு, நாம் மறுபடி வாழ்கிறோம். ஆகையால், இப்போது இரண்டு வகையான மனித இனங்கள், அதாவது இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். இப்போது இரட்சிப்பு பழைய இனத்திலிருந்து புதிய இனத்திற்கு இடமாற்றப்படுகிறது. ஆண்டவராகிய இயேசு இந்தப் புதிய இனத்தின் முதல் நபர், தலை, “ஒரு பெரிய குடும்பத்தில் மூத்தவர்…அநேக சகோதருக்குள்ளே முதற்பேறானவர்.” அவர்மூலமாகவும், அவரிலும் தேவன் இப்போது :அநேகக் குமாரர்களை மகிமைக்குள் கொண்டுவந்துகொண்டிருக்கிறார்“.
ஒரு இனம், ஒரு வகையான மனிதன், ஒரு மானிடம் இருக்கிறது. இந்த இனத்தில் எந்த நன்மையும் இல்லை; இந்த இனம் புறக்கணிக்கப்பட்ட இனம், தேவனுடைய சமுகத்திலிருந்து துரத்தப்பட்ட இனம், கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்ட இனம். அங்கு ஆதாமுக்கும், சுயத்தை மையமாகக்கொண்ட அவனுடைய இனத்துக்கும் முடிவுகட்டப்பட்டது. அங்கு, கிறிஸ்துவில் நாமெல்லாரும் மரித்தோம். ஆனால், இன்னொரு வகையான மனிதன் இருக்கிறான்; அவன் கிறிஸ்து-வகையான’ மனிதன். இந்த மனிதன் தேவனுக்கு முற்றிலும் ஏற்புடைய மனிதன். இவன் அவரில் மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்பட்டிருக்கிறான். அவரோடு ஒன்றிணைக்கப்பட்ட எல்லாருக்கும் மகிமையான எதிர்காலம் உண்டு; அவர்களுக்கு மட்டுமே உண்டு.
ஒரு மானிடம் முடிவுக்கு வருகிறது, ஒரு புதிய மானிடம் தொடங்குகிறது என்ற உண்மையை நாம் பார்க்க வேண்டும், ஒப்புக்கொள்ள வேண்டும்; நாம் அவரோடு ஒத்துழைக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் இதை நம்மில் நிறைவேற்றவும் வேண்டும். “பாவமன்னிப்பு வேண்டும்” என்ற ஆற்றமுடியாத ஒரு தேவையை உணர்வதை மட்டும் மனந்திரும்புதல் என்று சொல்ல முடியாது. மனந்திரும்புதல் என்பது நம் இருதயத்தின் ஆழத்தில், “என்னிடத்தில் எந்த நன்மையும் இல்லை; நான் கலகக்காரன்; தன்மையின்படி நான் சீர்கெட்ட, திருத்தமுடியாத பாவி; கர்த்தர் என்னை அடியோடு மாற்ற வேண்டும்,” என்று ஒப்புக்கொள்வதுமாகும். வெறும் வார்த்தைகளோ அல்லது ஒருவிதமான விசுவாசப்பிரமாணத்தை ஏட்டளவில் ஏற்றுக்கொள்வதோ அல்லது நாமெல்லாரும் பாவிகள் என்ற கூற்றை உதட்டளவில் சொல்வதோ உண்மையான மனந்திரும்புதல் இல்லை. நம் மிக மோசமான உண்மையான நிலையை நாம் கொஞ்சமாவது உணர வேண்டும். நாம் புறக்கணிக்கப்பட்ட, பழைய இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற நிலைக்கும், அந்த இனத்தோடு சம்பந்தப்பட்டிருந்த எல்லாவற்றுக்கும் நாம் சிலுவையில் மரித்தோம் என்பதையும், தேவனுடைய புதிய இனத்தைச் சார்ந்தவர்களாக நாம் கிறிஸ்துவுடன் உயிர்த்தெழுந்தோம் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
இந்தப் புரட்சிகரமான மாற்றத்தை விளக்குவதற்கும், இரண்டு இனங்களைக் குறிப்பதற்கும் அப்போஸ்தலனாகிய பவுல் உடையைத் தரித்துக்கொள்வதையும், களைந்துபோடுவதையும் உருவகமாகப் பயன்படுத்துகிறார். களைந்துபோடுதலைப் பழைய மனிதனின் தன்மையைக் குறிப்பதற்கும், தரித்துக்கொள்ளுதலைப் புதிய மனிதனின் தன்மையைக் குறிப்பதற்கும் பயன்படுத்துகிறார்.
கொலோசெயர் 3:7-9இல் பவுல் பழைய மனிதனின் சில பாவச் செயல்களையும், பாவ வழிகளையும் விவரித்துச் சொன்னபின், கொலோசெ விசுவாசிகள் கிறிஸ்தவர்களாக நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அவர்கள் கிறிஸ்தவர்களாக நடப்பதற்கு ஆணித்தரமான ஆதாரத்தையும் அவர் கூறுகிறார். நீங்கள் மனந்திரும்பியபோது, “பழைய மனிதனையும் (பழைய அகநிலையையும், பழைய தன்மையையும்), அவனுடைய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டுவிட்டு, தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனைத் (புதிய அகநிலையை, புதிய தன்மையை) தரித்துக்கொண்டிருக்கிறீர்களே,” என்று அவர்களுடைய புதிய நிலையை அவர் அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். அவர்கள் மனந்திரும்பி கர்த்தரிடம் வந்தபோது, தாங்கள் புதிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை அறிந்திருந்தார்கள்; அந்த இனத்துக்குரியவர்கள்போல் நடக்கவும் தீர்மானித்திருந்தார்கள். ஆயினும், அவர்கள் இன்னும் பழைய இனத்துக்குரியவர்கள்போலவே நடந்தார்கள். எனவே, சிலுவையில் செய்துமுடிக்கப்பட்ட வேலையையும், அவர்கள் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றபோது தங்களைத் தேவனுக்கு ஒப்புவித்ததையும் பவுல் அவர்களுக்கு நினைப்பூட்டி, முறையிடுகிறார். (உண்மையான ஞானஸ்நானம் என்பது ஒருவன் தேவனுடைய புதிய முறைமைக்குத் தன்னை ஒப்புவிக்கின்ற அறுதியான ஒரு செயலாகும். அது ஒருவன் தன் நிலையை, நிலைப்பாட்டை, அறுதியாக அறிவிக்கின்ற தெளிவான பகிரங்கமான செயலாகும்).
இந்த ஆழமான உண்மையை எபேசு விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றப் பிரயாசப்பட வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் எபேசு 4:22-24இல் வேண்டுகிறார்.
“முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனிதனை, பழைய அகநிலையை, பழைய தன்மையை, நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் மனதில் ஆவியிலே புதிதாக்கப்பட்டு, மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதனைத், (புதிய அகநிலையை, புதிய தன்மையை) தரித்துக்கொள்ளுங்கள்,” என்று கூறுகிறார்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆதாமின் விழுந்துபோன இனத்தோடு உள்ள சம்பந்தத்தை இடையறாது தொடர்ச்சியாக மறுத்துத்தள்ளிவிட்டு, பரிசுத்த ஆவியானவரின் ஆற்றலால், கிறிஸ்துவின் அவயவங்களாக, புதிய இனத்தின் அவயவங்களாக வாழத் தங்களை இடையறாது தொடர்ச்சியாக ஒப்புவிக்க அவர் அவர்களை அழைக்கிறார்.
இதைப்போன்ற இன்னும் பல வசனங்கள் வேதாகமத்தில் உள்ளன. ரோமர் 13:12, 14 அவையெல்லாவற்றின் தொகுப்புச்சுருக்கம் என்று சொல்லலாம்:-
“அந்தகாரத்தின் கிரியைகளைத் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுவைத் தரித்துக்கொள்ளுங்கள்,” என்று அந்த வசனங்கள் கூறுகின்றன.
மேலும், “உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே,” என்று கலாத்தியர் 3:27 கூறுகிறது.
எனவே, நேர்மறையான நடவடிக்கை எடுக்குமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பழைய இனத்துக்கு சிலுவையில் முடிவுகட்டப்பட்டது என்ற உண்மையின் அடிப்படையில், நாம் நிலைமையை எதிர்கொள்ள வேண்டும், கையாள வேண்டும். எனவேதான்,
“அதிக பயத்தோடும், நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்,” என்று பவுல் எச்சரிக்கிறார்.
கிறிஸ்தவ வாழ்க்கையில் செயலற்றிருப்பதற்கோ, அலைந்துதிரிவதற்கோ இடமேயில்லை.
“புதிய மனிதனைத் தரித்துக்கொள்ளுங்கள்“...”பழைய மனிதனைக் களைந்துபோடுங்கள்”…“அந்தகாரத்தின் கிரியைகளைத் தள்ளிவிடுங்கள்“…”ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்”…“ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை மரணத்துக்குள்ளாக்குங்கள்“...”அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்”…
இந்த அழைப்புக்கு நாம் பதிலளித்து, பரிசுத்த ஆவியானவரோடு முனைப்புடன் ஒத்துழைக்கும்போது, அவருடைய ஆற்றலை நாம் அனுபவிப்போம்;-
“இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் நிரப்பீட்டினால் எனக்கு இரட்சிப்பாக முடியும்…ஏனெனில், நீங்கள் சித்தம்கொள்வதற்கும், செயலாற்றுவதற்கும் தேவனே தம் நல்லின்பதின்படி செயலாற்றுகிறார்.”
“திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்” (யாக்கோபு 1:22).
வேத வாசிப்பு
யோவான் 8:44; 14:30; ரோமர் 3:22-23; 6:1-11; 8:13, 29; 13:14; 2 கொரி. 5:21; எபே. 6:11; பிலி. 1:19; 2:12-13; கொலோ. 1:13; 1 தெச. 5:8; எபி. 2:10; 4:15; 12:1-2; யாக்கோபு 1:22-23; 1 பேதுரு 2:1-2; 1 யோவான் 3:8-10