Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

இந்தப் பாகத்தில், கிறிஸ்தவம் உரோமப் பேரரசில் ஆழமாக வேரூன்றியபிறகு நடந்த சுவாரஸ்யமான, அதே சமயம் சிந்திக்க வைக்கும் மூன்று மாற்றங்களை நாம் ஆராயப்போகிறோம். 1. போப்பின் எழுச்சி: அதிகாரம் எப்படி படிப்படியாக ஒரேவொரு நகரத்தில் குவிக்கப்பட்டது? எளிமையான தலைமைத்துவம் எப்படி ஒரு மாபெரும் நிறுவனமாக மாறியது? ஆம், முதலாவது உரோமன் கத்தோலிக்க சபையின் எழுச்சியையும், 'போப்' என்று அழைக்கப்படும் திருத்தந்தையின் அதிகார வளர்ச்சியையும் பார்ப்போம். 2. இரண்டாவது, சபையின் பிரிவினை: உடன் பிறந்த சகோதரர்களைப்போல இருந்த கிழக்கத்தியக்  கிறிஸ்தவத்திற்கும் (கான்ஸ்டான்டினோப்பிள்) மேற்கத்தியக் கிறிஸ்தவத்திற்கும் (உரோம்) இடையே எப்படி ஒரு மாபெரும் பிளவு, பிரிவினை உருவானது என்றும்  3. மூன்றாவது, இஸ்லாமின் சவால்: இஸ்லாம் எனும் ஒரு புதிய மத-அரசியல் சக்தி எப்படி மின்னல் வேகத்தில் தோன்றி, வரலாற்றின் திசையையே திருப்பியது என்றும் பார்ப்போம். 


போப்பின் எழுச்சி, சபையின் பிரிவினை, இஸ்லாமின் சவால்

பாகம் 13

1 — அறிமுகம் - திருச்சபையின் புதிய அதிகாரக் களம் 

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும் இந்த இனிமையான பயணத்தில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சபை வரலாற்றின் இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்குமுன் ஒரு முக்கியமான காரியத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

வரலாறு என்பது 'நம் விருப்பம் சார்ந்த கதை' (Story) அல்ல, அது 'நடந்த உண்மைகளின் பதிவு' (History). வரலாற்றுப் பாதையில் நாம் பயணிக்கும்போது, சில நிகழ்வுகள் நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம், சில நிகழ்வுகள் நம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு மாறாக இருக்கலாம் அல்லது சங்கடமாக இருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் மறுக்க முடியாத நிதர்சனமான உண்மைகள்.

நான் இங்கு நீதிமன்றத்தில்  வாதாடுவதுபோல்  வாதாடவில்லை, மாறாக வரலாற்றில் நிகழ்ந்தவைகளை ஒரு சாட்சியாக விவரிக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், இது வாதம் அல்ல... விவரம்! இது விவாதத்திற்கான தளம் அல்ல, இது தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தளம். நடந்தவைகளை அப்படியே உங்கள்முன் வைப்பதே என் நோக்கம். இது வழக்காடும் மன்றம் அல்ல, இது பட்டிமன்ற மேடை அல்ல. இது சபை வரலாற்றைக் கற்பிக்கும் ஒரு வகுப்பறை. இந்த வகுப்பறையில் கற்றுக்கொள்வதும், கற்றுக்கொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். கடந்த கால நிகழ்வுகளிலிருந்து நாம் தகுந்த பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், உண்மையை அதன் நிதர்சனமான தன்மையோடு புரிந்துகொள்ளவும் நான் இதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.  

இன்றைய வரலாற்றுப் பயணத்திற்குள் நாம் நுழைவதற்குமுன், கடந்த வகுப்பில் நாம் எங்கே விடைபெற்றோம் என்பதைச் சற்று அசைபோடுவோம்.

1.1 ஆரம்பக் கிறிஸ்தவமும், அரசின் ஆதரவும் 

முந்தைய பாடத்தில், உரோமப் பேரரசில் கிறிஸ்தவம் ஒரு "துன்புறுத்தப்பட்ட மார்க்கமாக," உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருந்ததை நாம் பார்த்தோம். ஆனால், காலம் மாறியபோது, அது எப்படி "அரசால் அரவணைக்கப்பட்ட மார்க்கமாக," உயர்ந்தது என்பதையும் கண்டோம். அரசின் ஆதரவு கிடைத்தபோது, சபைக்கு அமைதி கிடைத்தது, பாதுகாப்பு கிடைத்தது, நற்செய்தி அறிவிப்பதற்கு வாசல்கள் திறந்தன என்பது உண்மைதான். ஆனால், ரோஜா மலரோடு முட்களும் இருப்பதுபோல, அந்த வசதிவாய்ப்புகளோடு சில ஆபத்துகளும் சபைக்குள் மெல்ல நுழைந்தன.

1.2 அதிகாரப் போட்டியும், முக்கியமான கேள்விகளும் 

சபைக்குப் பொதுச் செல்வாக்கும், செல்வமும், சட்ட அங்கீகாரமும் கிடைத்த அதே நேரத்தில், "அதிகாரமும்" அவைகளோடு கைகோர்த்துக்கொண்டு  உள்ளே வந்தது. எங்கே அதிகாரம் இருக்கிறதோ, அங்கே சில தவிர்க்க முடியாத கேள்விகள் எழுவது மனித இயல்புதானே?

"யார் தலைமை தாங்குவது? யார் முடிவு எடுப்பது? யாருக்குக் கட்டளையிடும் அதிகாரம் உண்டு?" இந்தக் கேள்விகள் வெறும் ஏட்டளவில் நின்றுவிடவில்லை. இவை வரும் நூற்றாண்டுகளில் திருச்சபை வரலாற்றின் போக்கையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்த கேள்விகள்.

1.3 மூன்று மைய இயக்கங்கள் (போப், பிளவு, இஸ்லாம்)

ஆகையால், இந்தப் பாகத்தில், கிறிஸ்தவம் உரோமப் பேரரசில் ஆழமாக வேரூன்றியபிறகு நடந்த சுவாரஸ்யமான, அதே சமயம் சிந்திக்க வைக்கும் மூன்று மாற்றங்களை நாம் ஆராயப்போகிறோம்.

1.         போப்பின் எழுச்சி: அதிகாரம் எப்படி படிப்படியாக ஒரேவொரு நகரத்தில் குவிக்கப்பட்டது? எளிமையான தலைமைத்துவம் எப்படி ஒரு மாபெரும் நிறுவனமாக மாறியது? ஆம், முதலாவது உரோமன் கத்தோலிக்க சபையின் எழுச்சியையும், 'போப்' என்று அழைக்கப்படும் திருத்தந்தையின் அதிகார வளர்ச்சியையும் பார்ப்போம்.

2.         இரண்டாவது, சபையின் பிரிவினை: உடன் பிறந்த சகோதரர்களைப்போல இருந்த கிழக்கத்தியக்  கிறிஸ்தவத்திற்கும் (கான்ஸ்டான்டினோப்பிள்) மேற்கத்தியக் கிறிஸ்தவத்திற்கும் (உரோம்) இடையே எப்படி ஒரு மாபெரும் பிளவு, பிரிவினை உருவானது?

3. மூன்றாவது, இஸ்லாமின் சவால்: இஸ்லாம் எனும் ஒரு புதிய மத-அரசியல் சக்தி எப்படி மின்னல் வேகத்தில் தோன்றி, வரலாற்றின் திசையையே திருப்பியது?

வாருங்கள், சபை வரலாற்றின் 13-ஆம் பாகத்திற்குள் நாம் நுழைவோம். இந்தப் பயணத்தில், சபையின் தொடக்க காலத்திலிருந்து சுமார் கி.பி. 1500 வரையிலான வரலாற்றைப் பார்த்து வருகிறோம்.

2. உரோம ஆயரின் ஆதிக்க வளர்ச்சி 

2.1 ஐந்து தூண்கள் 

முதலாவது உரோமன் கத்தோலிக்க சபையின் எழுச்சியையும், ஆரம்பகாலத் திருச்சபையின் 'மூத்தபிதா நகரங்களில்' (Patriarchal cities) போப் பதவி எப்படித் தனித்து உயர்ந்தது என்பதையும் பார்ப்போம்.

சபையின் ஆரம்ப காலத்தில், அலெக்சாந்திரியா, அந்தியோக்கியா, எருசலேம், கான்ஸ்டான்டினோப்பிள், உரோம் ஆகிய ஐந்து நகரங்களும் சபையின் "ஐந்து தூண்கள்" போல, மூத்த பிதாக்களின் நகரங்களாகத் திகழ்ந்தன.

2.2 உரோமின் தனித்துவம் 

ஆனால், காலப்போக்கில்—குறிப்பாக மேற்குப் பகுதியில்—இந்த ஐந்து மையங்களில் உரோமின் ஆயர் (Bishop) மட்டும் மற்றவர்களைவிட மேலான ஒரு தலைவராக உருவெடுக்கத் தொடங்கினார். இந்த மாற்றம் ஒரே நாளில் நடந்துவிடவில்லை; இது நூற்றாண்டுகளாக நடந்த ஒரு மெதுவான பயணம்.

இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே, உரோமின் ஆயர் மற்ற சபைகளின்மேல் தன் அதிகாரத்தைச் செலுத்த முயன்ற நிகழ்வுகள் உண்டு. இதைச் சிலர் "தலைமைத்துவம்" என்றார்கள், சிலர் "ஆதிக்கம்" என்றார்கள். ஆனால், அன்றைய காலத்து மற்ற ஆயர்கள் இதை ஏற்றுக்கொண்டார்களா? இல்லை! அவர்கள், “சகோதரரே, நீங்கள் உரோமின் ஆயர். உரோமை ஆள உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உலக சபைகள் அனைத்திற்கும் நீங்கள் எஜமானர் அல்ல," என்று உறுதியாகக் கூறினார்கள்.

தொடக்கத்தில், உரோம ஆயருக்கு 'கௌரவ முதன்மை' (Primacy of Honor) மட்டுமே இருந்தது. அதாவது, சமமானவர்களில் முதல்வர் என்ற மரியாதை. ஆனால், அதிகாரம் அவர் கையில் இல்லை.

2.3 அதிகாரக் குவிப்பு 

இருப்பினும், காலம் செல்லச் செல்ல நிலைமை மாறியது. உரோம் ஒரு சாதாரண ஊர் அல்லவே! அது மேற்கத்திய உரோமப் பேரரசின் தலைநகரம். அரசியல், பண்பாடு, வரலாற்றுப் பெருமைவாய்ந்த நகரம். எனவே, இயற்கையாகவே உரோம சபைக்கு ஒரு தனி மரியாதை இருந்தது..

மேற்கில் உரோம் நகரம் ஒரு சிகரம்போல இருந்தது. ஆனால் கிழக்கில் கான்ஸ்டான்டினோப்பிள் நகரோடு அதற்குப் போட்டி ஏற்பட்டது. ஒரே பேரரசின் இரண்டு கண்கள்போல இருந்த இந்த இரண்டு நகரங்களும், காலப்போக்கில் போட்டியாளர்களாக மாறின.

இது இயற்கையான ஒரு சமூக மாற்றம். எடுத்துக்காட்டாக மிகச் சிறிய ஓர் ஊரிலிருந்து ஓர் ஊழியக்காரரும் , சென்னையிலிருந்து வரும் ஓர் ஊழியக்காரரும் ஒரு கூட்டத்திற்கு வந்தால், யாருக்கு முதல் மரியாதை கிடைக்கும்? சென்னையிலிருந்து வருபவருக்குத்தானே? இது சரி என்றோ தவறு என்றோ நான் சொல்லவில்லை. இது சமூகத்தின் இயல்பு.

ஆனால், இந்த இயல்பான மரியாதையைத் தாண்டி, சென்னையிலிருந்து வரும் ஊழியக்காரர் "நான்தான் தலைவர்" என்று சொன்னால் எப்படி இருக்கும்? இப்படித்தான் அன்றும் நடந்தது. உரோமின் ஆயருக்குப் பிற ஆயர்கள் மரியாதை கொடுத்தார்கள். ஆனால், உரோம ஆயர்கள் தங்கள் அதிகாரத்தை "சட்டப்பூர்வமாக" நிலைநிறுத்த விரும்பினார்கள்.

2.4 சட்டப்பூர்வ அதிகாரத்தின் தொடக்கம்

கி.பி. 402இல், போப் முதலாம் இன்னசென்ட் (Pope Innocent I), “உரோம ஆயரின் அனுமதியின்றி எந்த முக்கிய முடிவும் எடுக்கக் கூடாது” என்று ஒரு கட்டளை பிறப்பித்தார். அதாவது, "நான் தான் தலைவன்" என்று முழங்கினார். அவருக்குப் பின் வந்த போப் ஜோசிமஸ் (Pope Zosimus) இன்னும் ஒரு படி மேலே போய், "உரோம ஆயர் ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதை யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்கவே கூடாது," என்று அதிகாரத்தைத் தன் கையில் இறுக்கிப் பிடித்தார்.

பார்த்தீர்களா? அதிகாரம் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக ஒருவர் கையில்—உரோம ஆயரின் கையில்—குவியத் தொடங்கியது.

2.4.1 மகா கிரகோரி (Gregory the Great): போப் பதவியின் புதிய சிற்பி 

நிர்வாகம்

இப்போது நாம் போப் பதவி வரலாற்றில் மிக முக்கியமான, தவிர்க்கமுடியாத ஒருவரைப்  பார்க்கப்போகிறோம்—அவர்தான் மகா கிரகோரி (Gregory the Great), கி.பி. 590இல் இவர் உரோமின் ஆயரானார். இவர் வெறும் மதத் தலைவர் மட்டுமல்ல; ஒரு சிறந்த அரசியல் ராஜதந்திரியும்கூட. மேற்கு உரோமப் பேரரசு சிதைந்து, அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருந்த ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், கிரகோரி உரோமின் நிர்வாகப் பொறுப்பைத் தன் தோள்களில் சுமந்தார். அவர் மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக மட்டுமல்லாமல், உரோமின் அரசியல் பாதுகாவலராகவும் (Political Guardian) செயல்பட்டு, உணவு விநியோகம், நகரப் பாதுகாப்புபோன்ற சிவில் நிர்வாகப் பணிகளையும் கவனித்தார். ஒரு வகையில், இவர் உரோமின் சிம்மாசனத்தில் அமராத மன்னராகவே செயல்பட்டார்.  உரோமப் பேரரசர் என்று முடிசூடாத மன்னர்போல் செயல்பட்டார்.

கர்தினால் அமைப்பு

அது மட்டுமல்ல, திருச்சபையின் நிர்வாகத்தைச் சீர்படுத்தவும், உரோமை மையமாகக்கொண்டு அதிகாரத்தை ஒருங்கிணைக்கவும் அவர் விரும்பினார். இதற்காக, அவர் தன் பிரதிநிதிகளை (Deputies) மற்ற நாடுகளுக்கும் நகரங்களுக்கும் (Deputies/Apocrisiarii) அனுப்பி வைத்தார். அவர்களுக்குச் சிறப்பான ஆடைகளையும் வழங்கினார். போப்பின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகளாகச் செயல்பட்ட இவர்களின் நியமனமே, பிற்காலத்தில் கத்தோலிக்க சபையில் 'கர்தினால்கள்' (Cardinals) எனும் பலம்வாய்ந்த அமைப்பு உருவாகக் காரணமாக அமைந்தது.

பங்களிப்பு:

இசையில் அவருக்கு இருந்த ஈடுபாடு அலாதியானது. இன்றும் சபைகளில் ஒலிக்கும் 'கிரகோரியன் சாண்ட்' (Gregorian Chant) எனும் இசை வடிவம் இவர் நமக்குத் தந்த பரிசுதான். அதேபோல, புனிதர்களை வணங்குதல், உத்தரிக்கிற ஸ்தலம் (Purgatory), இறந்தவர்களுக்காகத் திருப்பலிநடத்துதல் போன்ற பல கத்தோலிக்கப் போதனைகளையும் இவர் பிரபலப்படுத்தினார். இவை இடைக்காலக் கிறிஸ்தவத்தில் ஆழமாக வேரூன்றின.

அரசின் சட்டம், போப்பின் அதிகாரம்

கிரகோரி ஒரு திறமைசாலி, ஆற்றல் மிக்கவர். ஆனால் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் 'போப்' என்ற பதவியை ஒரு மாபெரும் அதிகார மையமாக மாற்றியது. அடிப்படையில் போப் என்பவர் உரோமின் ஆயர்தான். ஆனால், "உரோமின் ஆயர் மட்டுமே உலகளாவிய சபைக்கும் தலைவர்" என்ற கருத்து இவர் காலத்தில் உறுதிப்பட்டது. இது பேரரசின் சட்டங்களிலும் எதிரொலித்தது.

கி.பி. 445இல், மூன்றாம் வலென்டினியன் என்ற பேரரசர், "உரோம ஆயரின் அனுமதியின்றி எந்த ஆயரும் செயல்படக்கூடாது" என்று சட்டம் போட்டார். பேரரசின் அந்திமக் காலத்திலும்கூட, போப்பின் அதிகாரம் எவ்வளவு உயர்ந்திருந்தது பார்த்தீர்களா?

2.4.5 அப்போஸ்தல வழி-உரிமை (Apostolic Succession)

இதற்கு வலு சேர்க்கும் விதமாக, ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போப் முதலாம் லியோ, மத்தேயு 16:18-19 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டி ஒரு வாதத்தை முன்வைத்தார். "இயேசு பேதுருவிடம் நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்  என்றார். ஆகவே, பேதுருதான் முதல் போப். அவருக்குப் பின்வரும் ஒவ்வொரு உரோம ஆயரும் பேதுருவின் வாரிசுகள். அந்த அதிகாரத்தை நாங்கள் பரம்பரை பரம்பரையாகப் பெறுகிறோம்," என்று கூறினார். இதுவே 'அப்போஸ்தல வழி-உரிமை' (Apostolic Succession) என்று அழைக்கப்படுகிறது.

வரலாற்றுப் பார்வையில், பேதுரு அப்போஸ்தலர்களில் முதன்மையானவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நற்செய்திகளில் எப்போதும் அவர் பெயரே முதலில் வருகிறது. பெந்தெகொஸ்தே நாளில் யூதர்களை சபைக்குள் கொண்டுவந்ததில் முதன்மையானவர் பேதுருவே. பின்னர் சமாரியர்களையும், அதன்பின் கொர்நேலியுமூலம் புறவினத்தார்களையும் சபைக்குள் வரவேற்றதும் பேதுருவே. இந்த வகையில், பேதுருவுக்கு ஒரு தலைமைப் பங்கு இருந்தது என்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்தத் தனிப்பட்ட அதிகாரம் ஆயர் என்ற ஒரு 'பதவி' வழியாக (Office of the Bishop) அடுத்தவருக்குக் கைமாற்றப்படும் என்பதற்கு வேதாகமத்தில் ஆதாரம் இல்லை என்பதே பலரின் கருத்து.

இன்று உலகத்தில் அப்போஸ்தல அதிகாரம் உண்டு. ஆனால், அது எந்த ஒரு நகரத்தின் ஆயரிடமும் இல்லை. உண்மையான அப்போஸ்தல அதிகாரம் அப்போஸ்தலர்கள் விட்டுச் சென்ற வேதாகமத்தில் (Scripture)தான் உள்ளது. யார் தேவ வார்த்தையை உண்மையாகப் போதிக்கிறார்களோ, அங்கேதான் அதிகாரம் இருக்கிறது.

இருப்பினும், "பேதுருவின் சிம்மாசனம்" என்ற பெயரில், உரோம ஆயரின் அதிகாரம் வானளாவ உயர்ந்தது. இதுவே பிற்காலத்தில் பெரும் மோதல்களுக்கு வழிவகுத்தது.

2.5 — சார்லமேன், புனித உரோமப் பேரரசு, அரசியல் போப் பதவி

2.5.1 சார்லமேன்

வரலாற்றின் அடுத்த கட்டம் இன்னும் விறுவிறுப்பானது. மேற்கு உரோமப் பேரரசு வீழ்ந்தபிறகு, ஐரோப்பாவே இருளில் மூழ்கியதுபோல இருந்தது. அரசியல் அமைப்புகள் சிதைந்தன. ஆனால் திருச்சபை மட்டும் அசையாமல் நின்றது. அந்த நேரத்தில், எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸ் நாட்டில் சார்லஸ் தி கிரேட் (Charles the Great), சார்லமேன் (Charlemagne) எனும் மாவீரன் தோன்றினார்.

அவர் கல்வியை வளர்த்தார், ஒற்றுமையை உண்டாக்கினார். மேற்கு உரோமப் பேரரசு வீழ்ந்தபிறகு, முதன்முறையாக ஐரோப்பாவின் பெரும்பகுதி ஒரே குடையின்கீழ் வந்தது.

2.5.2 முடிசூட்டலும், மறைபொருளும்

கி.பி. 800, கிறிஸ்துமஸ் நாள். அன்று ஒரு வரலாற்று அதிசயம் நடந்தது. புனித பேதுரு ஆலயத்தில், போப் மூன்றாம் லியோ, தனக்குமுன் மண்டியிட்டிருந்த சார்லமேன் தலையில் ஒரு பொன் கிரீடத்தை வைத்து, அவரை "உரோமப் பேரரசர்" என்று முடிசூட்டினார்.

இந்தக் காட்சியைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். ஒரு மதத் தலைவர், ஒரு மாவீரனுக்கு முடிசூட்டுகிறார். இதன் உட்கருத்து என்ன? "அரசனைவிட, அரசனுக்கு முடிசூட்டும் போப்புக்கே அதிகாரம் அதிகம்!" யார் கிரீடம் வைக்கிறார்களோ, அவர்களால் அதை எடுக்கவும் முடியும் அல்லவா? இப்படித்தான் அதுவரை வெறும் பேரரசாக இருந்த உரோமப் பேரரசு , 'புனித உரோமப் பேரரசு' (Holy Roman Empire) என்று மாறியது.

2.5.3 யார் பெரியவர்?

ஆனால், இதற்குப்பிறகு ஒரு பெரிய ஈகோ யுத்தம் (Ego Clash) "நீயா நானா"தொடங்கியது. "நான் தான் பெரியவன்" என்று போப் சொன்னார். "இல்லை, படை பலம் உள்ள நான்தான் பெரியவன்" என்று பேரரசன் சொன்னார். இந்த மோதல் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தது.

2.5.4 வைக்கிங் தாக்குதல்கள்

சார்லமேனின் ஆட்சி காலத்தில், ஐரோப்பாவில் அவர் ஒற்றுமையை ஊக்குவித்தார். கல்வியை மேம்படுத்தினார். கட்டுமானங்களை ஆதரித்தார். உரோமின் பழைய மகிமை மீண்டும் வரக்கூடும் என்று பலர் எண்ணினார்கள். ஆனால், இந்த நம்பிக்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில், வைக்கிங் தாக்குதல்கள் ஐரோப்பாவை அதிர வைத்தன. சார்ல்மேன் காலத்தில் உருவான பல முன்னேற்றங்கள் வேகமாக அழிந்தன. இந்தக் குழப்பமான அரசியல் சூழலில், போப் பதவி அரசியல் பதவியாக மாறியது.

2.5.5 போப் பதவியின் இருண்ட காலம்

போப் ஜான் XII: அதிகாரத்தின் அத்துமீறல்

இதற்கு ஒரு துயரமான சான்று போப் பன்னிரண்டாம் ஜான் (Pope John XII). கி.பி. 955-ல் பதவியேற்ற இவர், வரலாற்றின் ஒரு கறையாக மாறினார். அவர் கி.பி. 955 முதல் 963 வரை போப் பதவியில் இருந்தார். அவர் மது அருந்தும்போது "பிசாசு நன்றாக இருக்கட்டும்" என்று மதுக் கிண்ணத்தை உயர்த்தினார் என்றும், சூதாட்டத்தில் ஜெயிக்க அந்நியத் தெய்வங்களை அழைத்தார் என்றும் வரலாறு கூறுகிறது. வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த, ஒழுக்கக்கேடான போப்புக்களில் இவரும் ஒருவர். 

அவரை விசாரிக்க வந்த ஆயர்களிடம் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, "என்னை கேள்வி கேட்டால், கடவுள் தந்த அதிகாரத்தை வைத்து உங்கள் எல்லோரையும் சபையிலிருந்து நீக்கிவிடுவேன்! நீங்கள் இனி திருப்பலி நடத்த முடியாது, யாரையும் ஊழியத்திற்கு நியமிக்க முடியாது" என்று மிரட்டினார். "நான் பாவியாக இருந்தாலும், நான்தான் போப்" என்ற ஆணவம் அது. அதிகாரம் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்பட்டது பார்த்தீர்களா?. இந்தக் காலகட்டத்தில், போப் தன்னை திருச்சபையின் மொத்த உரிமையாளராகக் கருதினார். தான் யாருக்கும், எதற்கும் பதில் சொல்ல வேண்டியவர் இல்லை என்று நம்பினார்.

போப் போனிஃபேஸ் VII: நாற்காலியின் வீழ்ச்சி

போப் பதவி அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு சீர்கெட்டுப் போயிருந்தது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு போப் ஏழாம் போனிஃபேஸ்.  இவர் தனக்கு முன் இருந்த போப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அந்தப் பதவியைப் பிடித்தார். இவரை மக்கள் "பாபேல் அரக்கன்" என்றே அழைத்தார்கள். மனிதர்கள் பாவம் செய்வார்கள் என்பது இயல்பு. ஆனால் இவருடைய பாவங்களும், கேடுகெட்ட நடத்தைகளும் (Depravity) சாதாரண மனிதர்கள் செய்யும் தவறுகளை விட மிக மோசமாக இருந்தன.

கொலை, கொள்ளை, புனிதப் பொருட்களைத் திருடுதல் போன்ற காரியங்களைச் செய்ததால், "இவர் மனித எல்லைகளையே தாண்டிவிட்டார்" என்று வர்ணிக்கப்பட்டார்.

போப் பதவி புனிதமானது என்று கருதப்பட்டாலும், வரலாற்றின் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் (கி.பி 900-1000), அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த சிலர் கொலைகாரர்களாகவும், கொள்ளையர்களாகவும் இருந்தார்கள் என்பதை நிரூபிக்க, இந்த போப் ஏழாம் போனிஃபேஸ் ஓர் எடுத்துக்காட்டாகச்  சொல்லப்படுகிறார்.

கேள்வி: மனிதரின் ஒழுக்கமா? பதவியின் அதிகாரமா?

நான் சில மோசமான திருத்தந்தைகளைத் தேர்ந்தெடுத்து குற்றம்சாட்ட முயலவில்லை. வரலாற்றில் நல்ல திருத்தந்தைகளும் இருந்திருக்கிறார்கள். மோசமானவர்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால், முக்கியமான கேள்வி அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதல்ல. போப் பதவிக்கு வானளாவிய அந்த அதிகாரம் உண்டா என்பதுதான் உண்மையான கேள்வி. அந்தப் பதவியைப் பிடித்த மனிதர் நல்லவரா கெட்டவரா என்பது இரண்டாவது கேள்வி. போப்பின் அதிகாரம் தேவனிடமிருந்து வருகிறதா இல்லையா என்பதே முதன்மையான கேள்வி. தனிப்பட்ட மனிதர்களின் ஒழுக்கத்தைவிட, பதவிக்கு' கொடுக்கப்பட்ட எல்லையற்ற அதிகாரம் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். போப்பின் அதிகாரம் தேவனிடமிருந்து வருகிறதா, அல்லது மனிதரிடமிருந்தா என்பதே உண்மையான கேள்வி.

இந்தக் காலகட்டத்தில் உரோம ஆயரின் அதிகாரம் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக உயர்கிறது, அதிகரிக்கிறது என்று தெளிவாகப் பார்க்கிறோம். உரோமின் ஆயர்தான் போப் என்று அழைக்கப்பட்டார். மொத்த அதிகாரமும் போப் என்ற ஒரு தனி மனிதனில்  குவிக்கப்பட்டதின் விளைவுகளை நாம் வரவிருக்கிற பாகங்களில் இன்னும் ஆழமாகப் பார்ப்போம்.

இப்போது நாம் இந்தப் பாகத்தின் இரண்டாவது பெரிய குறிப்பைப் பார்ப்போம்.

3. கிழக்கு–மேற்கு சபைகளின் மாபெரும் பிளவு (The Great Schism - 1054) 

இப்போது நாம் இரண்டாவது பகுதிக்கு வருவோம். எப்படி ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்குள் மனக்கசப்பு ஏற்படுமோ, அப்படித்தான் கிழக்குச் சபைக்கும் (கான்ஸ்டான்டினோப்பிள்) மேற்குச் சபைக்கும் (உரோம்) இடையே மெல்ல மெல்ல விரிசல் ஏற்பட்டது.

இது ஒரே நாளில் நடந்ததல்ல. நூற்றாண்டுகளாக வளர்ந்த கசப்பு. உரோமுக்கும் கான்ஸ்டான்டினோப்பிளுக்கும் இருந்த அரசியல் போட்டி சபைக்குள்ளும் நுழைந்தது.

3.1 இரண்டு தலைநகரங்கள்

நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், உரோமப் பேரரசு மேற்கில் உரோம், கிழக்கில் கான்ஸ்டான்டினோபிள் என இரண்டு தலைநகரங்களை உருவாக்கியது. இரண்டும் ஒரே பேரரசின் தலைநகரங்களாக இருந்தாலும், இரண்டிற்கும் இடையே ஓர் இயல்பான போட்டி உருவானது. உரோம் பழைய பேரரசின் மரபைப் பின்பற்றியது. கான்ஸ்டான்டினோபிள் புதிய அரசியல் மையமாக வளர்ந்தது. இந்த அரசியல் போட்டியின் அடிப்படையில்  சபையின் உள்ளேயும் வேறுபாடுகள் உருவாயின.

மேற்கத்தியக் கிறிஸ்தவம் இலத்தீன் மொழியைப் பயன்படுத்தியது. கிழக்கத்தியக் கிறிஸ்தவம் கிரேக்கம் பயன்படுத்தியது. திருவிருந்து கொண்டாடும் விதமும் சற்று மாறுபட்டது. ஈஸ்டர் கொண்டாடப்படும் தேதிகள் வேறுபட்டன. மொழிப் பிரச்சனை, கலாச்சார வேறுபாடு, ஈஸ்டர் தேதி குழப்பம் என்று சின்னச் சின்ன விஷயங்கள் பெரிய இடைவெளியை உருவாக்கின. மேற்கே ஆயர்கள் திருமணம் செய்யக்கூடாது, கிழக்கே செய்யலாம். மேற்கே தாடி எடுக்க வேண்டும், கிழக்கே தாடி அவசியம். இவை சிறியதாகத் தோன்றலாம், ஆனால் இவை மனங்களை வெகுதூரம் விலக்கி வைத்தன.

3.2 பேரரசின் வீழ்ச்சியும் பிரிவும்

ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், உரோமப் பேரரசு வீழ்ந்தது. ஆனால், மேற்குப் பேரரசு மட்டும்தான் விழுந்தது. கிழக்கு உரோமப் பேரரசு, அதாவது பைசந்தியப் பேரரசு, கான்ஸ்டான்டினோபிளை மையமாகக் கொண்டு தொடர்ந்தது. அதனால், நாம் இவ்வாறு சொல்லலாம்: உரோம் வீழ்ந்தபோது, உரோமப் பேரரசு முழுமையாக இறந்துவிடவில்லை. அது ஐரோப்பாவில் மட்டுமே வீழ்ந்தது. கிழக்கில், உரோமப் பண்பாடும், ஆட்சியும், சபையும் தொடர்ந்தன.

3.3 'பியூபோனிக் பிளேக்'

கி.பி. 533-ல் கிழக்குப் பேரரசர் ஜஸ்டினியன், இழந்த மேற்குப் பகுதிகளை மீட்க முயன்றார். ஆனால் 'பியூபோனிக் பிளேக்' (Bubonic Plague) என்ற கொள்ளைநோய் குறுக்கே நின்றது. அதனால் மக்கள்தொகையில் பாதிப்பேர் மடிந்தார்கள். ஒரு கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது.

3.4 " ஏழு அகில உலக ஆலோசனைச் சங்கங்கள் " (Seven Ecumenical Councils)

ஆனாலும், கிழக்குச் சபையினர் சத்தியத்தைப் பாதுகாக்க "ஏழு அகில உலக ஆலோசனைச் சங்கங்களை" (Seven Ecumenical Councils) கூட்டினார்கள். ஆரம்பத் திருச்சபையில் தவறான போதனைகள் (Heresies) எழும்பியபோது, உலகம் முழுவதும் உள்ள ஆயர்கள் (Bishops) ஒரே இடத்தில் கூடி, வேதாகமத்தை ஆராய்ந்து, "எது உண்மையான கிறிஸ்தவ விசுவாசம்" என்று முடிவு செய்தார்கள். இதுவே அகில உலக ஆலோசனைச் சங்கம் ஆகும்.

மேற்கே உரோம், கிழக்கே கான்ஸ்டான்டினோப்பிள் ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் ஆயர்கள் இதில் கலந்து கொண்டார்கள்; ஆயினும் கிழக்குச் சபையினர் (Eastern Orthodox) இந்த ஏழு சங்கங்களின் முடிவுகளைத் தங்களின் விசுவாசத்தின் அடித்தளமாகக் கருதுகிறார்கள். கத்தோலிக்கர்களும் புராட்டஸ்டன்ட் சபைகளும் இதை ஏற்றுக்கொண்டாலும், கிழக்கத்தியக் கிறிஸ்தவம் இதை மிக மிக முக்கியமாகக் கருதுகிறது.

வரலாற்றில் நடந்த இந்த ஏழு சங்கங்களும், கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆழமான அஸ்திபாரங்கள். ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட ஆபத்தான பொய்ப் போதனையை எதிர்த்து, சத்தியத்தை நிலைநாட்டியது.

1. முதல் சங்கம் —  கி.பி. 325இல் நைசியாவில் நடந்தது

எழுந்த சர்ச்சை: ஏரியஸ் (Arius) என்பவர், "இயேசு கிறிஸ்து கடவுளால் படைக்கப்பட்டவர், அவர் தொடக்கமும் முடிவும் இல்லாத முழுமையான கடவுள் அல்ல," என்ற ஒரு பாரதூரமான போதனையை முன்வைத்தார்.

சபையின் தீர்ப்பு: இந்தச் சங்கம் ஏரியஸின் கருத்தை முறியடித்தது. "இயேசு, பிதாவாகிய தேவனுக்குச் சமமானவர்; அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல, நித்தியமான முழுமையான தேவன்," என்று அறுதியிட்டுக் கூறியது. (கிறிஸ்தவர்கள் இன்றும் பயன்படுத்தும் 'நைசிய விசுவாச அறிக்கை' இங்குதான் உருவானது).

2. இரண்டாவது சங்கம் — கான்ஸ்டான்டினோப்பிள் (கி.பி. 381):

எழுந்த சர்ச்சை: "பரிசுத்த ஆவியானவர் ஒரு சக்தி மட்டுமே, அவர் தேவன் அல்ல," என்று இயேசுவைத் தாக்கியதுபோல, சிலர் பரிசுத்த ஆவியானவரையும் குறிவைத்தார்கள்.

சபையின் தீர்ப்பு: சபை மீண்டும் உறுதியாக நின்றது. "பரிசுத்த ஆவியானவரும் பிதா, குமாரனுக்குச் சமமான தேவனே," என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் 'திரித்துவம்' (Trinity) என்ற உபதேசம் முழுமை பெற்றது.

3. மூன்றாவது சங்கம் — எபேசு (கி.பி. 431):

எழுந்த சர்ச்சை: நெஸ்டோரியஸ் (Nestorius) என்பவர் ஒரு குழப்பத்தை உண்டாக்கினார். இயேசுவுக்குள் கடவுள் வேறு, மனிதன் வேறு என்று இரண்டு தனித்தனி நபர்கள் இருப்பதுபோலப் போதித்தார்.

சபையின் தீர்ப்பு: இதைச் சங்கம் வன்மையாக மறுத்தது. "இயேசு இரண்டு நபர் அல்ல, அவர் ஒரே நபர். அந்த ஒரே நபருக்குள் தெய்வீகமும் உண்டு, மனிதத் தன்மையும் உண்டு," என்று தெளிவாக அறிவித்தது.

4. நான்காவது சங்கம் — கல்சிடான் (கி.பி. 451):

எழுந்த சர்ச்சை: "இயேசுவின் தெய்வீகத் தன்மை அவருடைய மனிதத் தன்மையை முழுவதுமாக விழுங்கிவிட்டது; எனவே அவருக்கு மனித இயல்பு என்பதே இல்லை," என்று கூறினார்கள்.

சபையின் தீர்ப்பு: வரலாற்றில் மிக முக்கியமான தீர்மானம் இங்கே எடுக்கப்பட்டது. "இயேசு 100% தேவன், அதே நேரத்தில் 100% மனிதன். இந்த இரண்டு இயல்புகளும் அவரில் கலக்காமலும், மாறாமலும் இருக்கின்றன," என்று உறுதிப்படுத்தப்பட்டது.

5. ஐந்தாவது சங்கம் — கான்ஸ்டான்டினோப்பிள் II (கி.பி. 553):

எழுந்த சர்ச்சை: இது பேரரசர் ஜஸ்டினியன் காலத்தில் நடந்தது. முந்தைய சங்கத்தில் (கல்சிடான்) "இயேசுவுக்கு இரண்டு இயல்புகள் உண்டு" என்று சொன்னதை, சிலர் "இயேசு இரண்டு நபர்களாக இருக்கிறார்" என்று தவறாகப் புரிந்துகொண்டார்கள். இதனால் சபைக்குள் மீண்டும் குழப்பம்.

சபையின் தீர்ப்பு: இந்தக் குழப்பத்தைத் தீர்க்க, "மூன்று அத்தியாயங்கள்" (Three Chapters) என்று அழைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய எழுத்துக்களைச் சபை கண்டித்தது. "நாங்கள் இயேசுவை இரண்டு நபர்களாகப் பிரிக்கவில்லை, அவர் ஒரே நபர்தான்" என்பதை மீண்டும் ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தியது. இயேசுவின் ஒருமையை (Unity) இது பாதுகாத்தது.

6. ஆறாவது சங்கம் — கான்ஸ்டான்டினோப்பிள் III (கி.பி. 680):

எழுந்த சர்ச்சை: இயேசுவுக்கு மனித உடல் இருந்தாலும், அவருக்கு "மனித மனம் அல்லது மனிதச் சித்தம்" (Human Will) இல்லை, தேவ சித்தம் மட்டுமே உண்டு என்று ஒரு புதிய போதனை வந்தது.

சபையின் தீர்ப்பு: சங்கம் இதை மறுத்தது. "இயேசு முழு மனிதராக இருப்பதால், அவருக்கு மனித சித்தமும் உண்டு, தேவ சித்தமும் உண்டு. இவை இரண்டும் முரண்படாமல் ஒற்றுமையாகச் செயல்படுகின்றன," என்று தீர்ப்பளித்தது. (இதற்குச் சிறந்த உதாரணம்: கெத்செமனே தோட்டத்தில், இயேசு ஒரு மனிதராக "என் சித்தமல்ல, உம் சித்தமே ஆகக்கடவது" என்று பிதாவினிடம் ஜெபித்தார்).

7. ஏழாவது சங்கம் — நைசியா II (கி.பி. 787):

எழுந்த சர்ச்சை: ஆலயங்களில் இயேசுவின் அல்லது புனிதர்களின் படங்கள் (Icons) வைப்பது விக்கிரக ஆராதனை என்று சொல்லி, அவற்றைச் சிலர் உடைத்தெறிந்தார்கள்.

சபையின் தீர்ப்பு: சங்கம் ஒரு முக்கிய வேறுபாட்டை விளக்கியது. "படங்களை வணங்கக் கூடாது (Worship belongs only to God), ஆனால் அவைகளுக்கு மதிப்பளிக்கலாம் அல்லது போதிக்கப் பயன்படுத்தலாம் (Veneration is allowed)," என்று தீர்மானித்தது.

இந்த ஏழு சங்கங்களும் சாதாரண கூட்டங்கள் அல்ல. "இயேசு யார்? திரித்துவம் என்றால் என்ன? உண்மையான ஆராதனை எது?" போன்ற கேள்விகளுக்கு, உலகம் முழுவதற்கும் பொதுவான, நிலையான பதில்களை இவை வகுத்துக் கொடுத்தன. இன்று நாம் கொண்டிருக்கும் தெளிவான விசுவாசம், அன்று அவர்கள் எடுத்த உறுதியான முடிவுகளே!

3. 5 நிரந்தரப் பிளவு 

ஆனால், இத்தனை ஒற்றுமை முயற்சிகளையும் தாண்டி, கி.பி. 1054-ல் அந்தத் துயரமான நாள் வந்தது. இதை 'மாபெரும் பிளவு' (The Great Schism) என்கிறோம்.

ஜூலை 16, 1054 அன்று, போப்பின் பிரதிநிதியான கார்டினல் ஹம்பர்ட் (Cardinal Humbert), கான்ஸ்டான்டினோப்பிளின் பிரம்மாண்டமான ஹாகியா சோபியா ஆலயத்திற்குள் விறுவிறுவென்று நுழைந்தார். நேராகப் பலிபீடத்திற்குச் சென்று, கிழக்குச் சபைத் தலைவரான பாட்ரியார்க் மூத்தபிதா  மைக்கேல் செருலாரியஸ் (Michael Cerularius) என்பவரை "சபை நீக்கம்" (Excommunicate) செய்வதாக அறிவிக்கும் பத்திரத்தை பலிபீடத்தின்மேல்  வைத்துவிட்டு, தூசியைத் தட்டிவிட்டு வெளியேறினார்.

பதிலுக்கு ஒரு வாரத்திற்குப்பிறகு, கான்ஸ்டான்டினோபிளின் பாட்ரியார்க் அதேபோல் போப்பின் குழுவினரைச் சபை நீக்கம் செய்தார்.  திருச்சபை இரண்டாக உடைந்தது. ஒன்று உரோமன் கத்தோலிக்க சபை, western Roman Catholicism; மற்றொன்று ஆர்த்தடாக்ஸ் சபை. Eastern Orthodox, இது பிளவின் ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. இதன்பிறகு, கிழக்கு —Orthodox, மேற்கு — Roman Catholic என்ற பிரிவு நிலைத்தது, நீடித்தது.  இன்றும் அந்தப் பிளவு, பிரிவினை, தொடர்கிறது.

இதில் ஒரு முக்கியமான 'இறையியல்' (Theological) காரணமும் இருந்தது. அது 'ஃபிலியோக்' (Filioque) சர்ச்சை என்று அழைக்கப்படுகிறது. "பரிசுத்த ஆவியானவர் பிதாவிடமிருந்து மட்டும் புறப்படுகிறாரா? அல்லது பிதாவிடமிருந்தும் குமாரனிடமிருந்தும் (And the Son) புறப்படுகிறாரா?" என்பதுதான் கேள்வி. மேற்குச் சபை "குமாரனிடமிருந்தும்" என்பதைச் சேர்த்தது, கிழக்குச் சபை இதை எதிர்த்தது.

1054இல் ஏற்பட்ட இந்த விரிசல் எந்த அளவுக்குப் போனது என்றால் 1453இல் கான்ஸ்டான்டினோப்பிள் இஸ்லாமியர்கள் கையில் விழுந்தபோது, "மேற்கத்திய இலத்தீன்காரர்களின் தொப்பியைவிட, சுல்தானின் குல்லாவேமேல்" என்று கிழக்குக் கிறிஸ்தவர்கள் சொல்லும் அளவுக்கு வெறுப்பாக மாறியிருந்தது.

4. இஸ்லாமின் சவால்: எழுச்சியும், டூர்ஸ் போரும்

இதுவரை நாம் கிறிஸ்தவத்திற்கு உள்ளே நடந்த மாற்றங்களையும், மோதல்களையும் பார்த்தோம். ஆனால், இப்போது நாம் கிறிஸ்தவத்திற்கு வெளியேயிருந்து வந்த ஒரு சூறாவளியைப்பற்றிப் பார்ப்போம்.

கி.பி 622-ல் முஹம்மது மெக்காவிலிருந்து மெதீனாவிற்குச் சென்ற 'ஹிஜ்ரா' பயணத்துடன் இஸ்லாமியர்களின் எழுச்சி தொடங்கியது. முஹம்மது (கி.பி. 570 – 632), இஸ்லாம் மார்க்கத்தைத் தோற்றுவித்தவர் என்றும், முஸ்லிம்கள் அவரை இறைவனின் இறுதித் தூதர் என்றும் நம்புகிறார்கள். அவர் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் பிறந்தார்.

அவர் தோற்றுவித்த இயக்கம் மதமாக மட்டுமல்லாமல், ஒரு மாபெரும் அரசியல் மற்றும் ராணுவ சக்தியாகவும் உருவெடுத்தது. பிரிந்து கிடந்த அரேபிய பழங்குடி மக்களை "ஒரே இறைவன், ஒரே மார்க்கம்" என்ற பெயரில் அவர் ஒன்றிணைத்தார். ஆரம்பத்தில் மெக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், முஹம்மதுவும் அவரைப் பின்பற்றியவர்களும் துன்புறுத்தப்பட்ட ஒரு சிறிய மதக் குழுவாகவே இருந்தார்கள். அவர்களுக்கு அரசியல் அதிகாரமோ, நாடோ இல்லை.

கி.பி 622-ல் அவர் மெதீனா நகருக்கு இடம் பெயர்ந்தார், இதுவே இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பமாகவும், இஸ்லாமிய நாட்காட்டியின் தொடக்கமாகவும் அமைந்தது. இந்த 'ஹிஜ்ரா' நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றின் மிக முக்கியமான திருப்பமாகும்.

கிறிஸ்தவத் திருச்சபையின் வரலாற்றிலும், ஒட்டுமொத்த ஐரோப்பிய வரலாற்றிலும் 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகள் மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில்தான் அரேபிய தீபகற்பத்தில் 'இஸ்லாம்' ஒரு புதிய சமயமாகவும், மாபெரும் அரசியல் சக்தியாகவும் உருவெடுத்தது.

இந்த புதிய சக்தியின் மின்னல் வேக வளர்ச்சியும், அது கிறிஸ்தவ ஐரோப்பாவின் வாசற்படிவரை வந்து நின்ற நிகழ்வான 'டூர்ஸ் போரும்' (Battle of Tours) வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த முக்கிய நிகழ்வுகளாகும்.

இதைப்பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. இஸ்லாமின் மின்னல் வேக எழுச்சி (The Rapid Rise of Islam)

கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அரேபிய தீபகற்பத்தில் நபிகள் நாயகம் அவர்களால் இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகு (கி.பி. 632), அவருக்குப் பின் வந்த தலைவர்களான 'கலீபா'க்களின் (Caliphs) கீழ், இஸ்லாம் ஒரு மதமாக மட்டுமல்லாமல், ஒரு பேரரசாகவும் விரிவடையத் தொடங்கியது.

விரிவாக்கத்தின் வேகம்: வரலாறு அதுவரை கண்டிராத மிக வேகமான சாம்ராஜ்ய விரிவாக்கங்களில் இதுவும் ஒன்று. வெறும் நூறு ஆண்டுகளுக்குள், அரேபிய பாலைவனத்திலிருந்து தொடங்கிய இந்த சக்தி:

மத்திய கிழக்கு முழுவதையும்,

வலுவான பாரசீகப் பேரரசையும் (Persian Empire),

பைசாந்தியப் பேரரசின் (கிழக்கு ரோமானியப் பேரரசு) பெரும் பகுதிகளையும்,

வடக்கு ஆப்பிரிக்கா முழுவதையும் கைப்பற்றியது.

காரணங்கள்: இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்கள்:

இரண்டு பேரரசுகளின் சோர்வு: அப்போதைய வல்லரசுகளான பைசாந்தியப் பேரரசும், பாரசீக சசானியப் பேரரசும் தங்களுக்குள் தொடர்ந்து போரிட்டு மிகவும் பலவீனமடைந்திருந்தன.

மத மற்றும் இராணுவ வேட்கை: புதிய மார்க்கத்தின் மீதான பற்றும், அரேபியர்களின் தனித்துவமான போர் வியூகங்களும் (குறிப்பாக இலகுரக குதிரைப்படை) அவர்களுக்குப் பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.

2. ஐரோப்பாவிற்குள் நுழைதல் (The Push into Europe)

வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றியபிறகு, உமையாத் கலீபகத்தின் (Umayyad Caliphate) படைகள் கி.பி. 711-ல் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைந்தன.

அப்போதைய ஸ்பெயின் பகுதியை ஆண்ட விசிகோத் (Visigoth) கிறிஸ்தவ அரசைத் தோற்கடித்து, ஐபீரியத் தீபகற்பத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றின. இந்தப் பகுதிக்கு அவர்கள் 'அல்-அன்டலஸ்' (Al-Andalus) என்று பெயரிட்டார்கள்.

ஸ்பெயினைக் கைப்பற்றியபிறகு, அவர்களின் பார்வை பைரனீஸ் மலைத்தொடரைத் தாண்டி, இன்றைய பிரான்ஸ் தேசத்தின்மீது விழுந்தது. அப்போது பிரான்ஸ் பகுதியை 'ஃபிராங்குகள்' (Franks) என்ற கிறிஸ்தவ இனக்குழுவினர் ஆண்டு வந்தார்கள்

3.  

போரின் முக்கிய அம்சங்கள்:

காலம் மற்றும் இடம்: கி.பி. 732 அக்டோபரில், பிரான்ஸில் உள்ள டூர்ஸ் மற்றும் பாய்ட்டியர்ஸ் (Poitiers) நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்தப் போர் நடந்தது.

தலைவர்கள்:

கிறிஸ்தவப் படை: சார்லஸ் மார்டெல் (ஃபிராங்கியப் படைகளின் தளபதி).

இஸ்லாமியப் படை: அப்துல் ரஹ்மான் அல் காஃபிகி (ஸ்பெயினின் உமையாத் ஆளுநர்).

போர் வியூகம்:

முஸ்லிம் படைகள் வலுவான, வேகமான குதிரைப்படையைக் கொண்டிருந்தன.

சார்லஸ் மார்டெலின் படைகள் முக்கியமாக கனரகக் காலாட்படையைக் (Infantry) கொண்டிருந்தன. அவர் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்தார். ஒரு குன்றின்மீது, அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் தன் வீரர்களை நெருக்கமாக, ஒரு சுவர் போல (Phalanx formation) நிறுத்தினார். இது முஸ்லிம் குதிரைப்படை வேகமாகத் தாக்குவதைத் தடுத்தது.

போரின் முடிவு:

பல நாட்கள் சிறிய மோதல்களுக்குப்பிறகு, முழுமையான போர் வெடித்தது. முஸ்லிம் குதிரைப்படை ஃபிராங்குகளின் தற்காப்புச் சுவரை உடைக்க பலமுறை முயன்றும் தோல்வியடைந்தது.

போரின் உச்சக்கட்டத்தில், ஃபிராங்கிய வீரர்கள் முஸ்லிம் முகாமிற்குள் நுழைந்து அவர்கள் கொள்ளையடித்த செல்வங்களை மீட்பதாக ஒரு வதந்தி பரவியது. இதைக் காக்க முஸ்லிம் படைகளின் ஒரு பகுதியினர் பின்வாங்கினார்கள். இந்தக் குழப்பத்தில் அவர்களின் தளபதி அப்துல் ரஹ்மான் கொல்லப்பட்டார்.

தளபதியின் இறப்பால் நிலைகுலைந்த இஸ்லாமியப் படைகள் இரவோடு இரவாகப் பின்வாங்கி ஸ்பெயினுக்குத் திரும்பின.

4. முக்கியத்துவமும் விளைவுகளும் (Significance and Aftermath)

டூர்ஸ் போர் வரலாற்றில் ஒரு தீர்க்கமான போராகக் கருதப்படுகிறது:

மேற்கு ஐரோப்பாவின் பாதுகாப்பு: இந்தப் போர், மேற்கு ஐரோப்பாவில் இஸ்லாமியப் பேரரசின் வடதிசை விரிவாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஒருவேளை சார்லஸ் மார்டெல் தோற்றிருந்தால், ஐரோப்பாவின் வரலாறும், கிறிஸ்தவத்தின் எதிர்காலமும் முற்றிலும் வேறாக இருந்திருக்கும் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றார்கள்

'தி ஹாமர்' (The Hammer): இந்தப் போரில் இரும்புச் சுவர்போல நின்று எதிரிகளைத் தடுத்ததால், சார்லஸ் மார்டெலுக்கு "சுத்தியல்" (Martel என்றால் சுத்தியல் என்று பொருள்) என்ற பட்டப்பெயர் நிலைத்தது.

கரோலிங்கிய வம்சம்: இந்த வெற்றி ஃபிராங்கிய இராச்சியத்தில் சார்லஸ் மார்டெலின் அதிகாரத்தை உறுதிப்படுத்தியது. இதுவே பிற்காலத்தில் மாவீரன் சார்லமேன் (Charlemagne) உருவாகவும், புனித ரோமப் பேரரசு அமையவும் அடித்தளமிட்டது.

சுருக்கமாக: டூர்ஸ் போர் என்பது வெறும் இரண்டு படைகளுக்கு இடையேயான மோதல் மட்டுமல்ல, அது இரண்டு நாகரிகங்கள் மற்றும் மதங்களுக்கு இடையேயான ஒரு முக்கிய வரலாற்றுச் சந்திப்பு. இது கிறிஸ்தவ ஐரோப்பாவின் புவியியல் மற்றும் மத அடையாளத்தைப் பாதுகாத்த ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

டூர்ஸ் போரில் வெற்றி கிடைத்தாலும், இஸ்லாமியப் பேரரசு மறைந்துவிடவில்லை. கி.பி. 800 வாக்கில் உலக வரைபடமே மாறியிருந்தது. மத்தியதரைக் கடலின் தெற்கே—வட ஆப்பிரிக்கா, எகிப்து, ஸ்பெயின் வரை—பிறைக்கொடி (இஸ்லாம்) பறந்தது. வடக்கே ஐரோப்பாவில் சிலுவைக்கொடி (கிறிஸ்தவம்) பறந்தது. அன்று உருவான இந்த அரசியல் மற்றும் மதப் பிளவுதான், அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பாவின் வரலாற்றை—ஏன், அடுத்து நாம் பார்க்கப்போகும் சிலுவைப் போர்களையும்—தீர்மானித்தது."

"ஆம், டூர்ஸ் போருக்குப்பிறகும் இஸ்லாம் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வந்தது. பிற்காலத்தில், 1453-ல் கான்ஸ்டான்டினோப்பிள் வீழ்ந்தது ஒரு சோகமான முடிவுதான். ஆனால், 732-ல் நடந்த அந்தப் போர் மட்டும் நடக்கவில்லை என்றால், ஐரோப்பாவின் வரைபடமே மாறியிருக்கும். இஸ்லாமின் ஐரோப்பியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்திய மாபெரும் 'தடுப்புச் சுவர்' அந்தப் போர்!

இந்தப் பாகத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய மையக்கருத்து இதுதான்: கி.பி. 732-ல், 'டூர்ஸ் போர்' (Battle of Tours) மூலமாக இஸ்லாமின் வடக்கு நோக்கிய பாய்ச்சல் நிறுத்தப்பட்டது. அதற்குப்பிறகுதான் மேற்கு ஐரோப்பாவில் அதன் வேகம் தணிந்து, மெல்ல மெல்லப் பின்வாங்கத் தொடங்கியது."

முடிவுரை — வரலாறு நமக்குச் சொல்லும் குரல்

அன்பானவர்களே, இன்றைய பாடத்தில் நாம் கடந்து வந்த பாதை, வெறும் வரலாற்றுப் பாதை மட்டுமல்ல.

அது மனித இதயத்தின் பாதை.

அதிகாரம் எப்படி வளர்கிறது,

ஒற்றுமை எப்படி உடைகிறது,

வெளிப்புறச் சவால்கள் சபையை எப்படிச் சோதிக்கின்றன

என்பதை நாம் ஆழமாகப் பார்த்தோம்.

உரோமில்,

ஒரு காலத்தில் பணியாக இருந்த தலைமை,

மெல்ல மெல்ல ஆட்சியாக மாறியது.

கௌரவமாகத் தொடங்கிய அதிகாரம்,

சட்டப்பூர்வ அதிகாரமாகி,

இறுதியில் கேள்விக்கே இடமில்லாத ஆணவமாக உயர்ந்தது.

வரலாறு நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்— "சபையில் அதிகாரம் ஒரு மனிதனிடம் குவிந்தால், சீர்கேடு தவிர்க்க முடியாது."

கிழக்கும் மேற்கும்,

ஒரே ஆண்டவரை நேசித்தவர்கள்.

ஒரே வேதாகமத்தை மதித்தவர்கள்.

ஆனால்,

மொழி, கலாச்சாரம், நடைமுறை, அதிகாரப் போட்டி...

போன்ற சிறிய வேறுபாடுகள்

பெரிய பிரிவுகளாக மாறின.

அன்பு குறைந்தபோது,

சத்தியமேகூட ஒரு ஆயுதமாக மாறியது.

அதனால் வரலாறு நமக்கு எச்சரிக்கிறது— "சத்தியம் அன்போடு நடக்காவிட்டால், ஒற்றுமை உடையும்."

அதே நேரத்தில்,

பாலைவனத்திலிருந்து ஒரு புதிய சக்தி எழுந்தது—

இஸ்லாம்.

அது வெறும் மதமாக மட்டுமல்ல;

அரசியல், ராணுவ, சமூக சக்தியாக

மின்னல் வேகத்தில் பரவியது.

சபை உள்ளே பிரிந்திருந்த நேரத்தில்,

வெளியே இருந்து வந்த சவால்

இன்னும் பயங்கரமாகத் தோன்றியது.

ஆனால்,

டூர்ஸ் போரில்,

தேவன் வரலாற்றின் ஓட்டத்தைத் திருப்பினார்.

அது நமக்கு உணர்த்தும் உண்மை இதுதான்— "சபை உள்ளே பலவீனமாக இருந்தால், வெளிப்புற சக்திகள் வலிமை பெறும்."

இந்த மூன்றையும் இணைத்துப் பார்த்தால்,

வரலாறு நமக்கு ஒரு குரலில் பேசுகிறது:

அதிகாரம் மனிதரை மையமாக்கினால் — சபை குலையும்.

அன்பு குறைந்தால் — சகோதரர்கள் பிரிவார்கள்.

விசுவாசம் சோர்ந்தால் — வெளிப்புற சக்திகள் மேலோங்கும்.

ஆனால், அதே வரலாறு இன்னொரு நம்பிக்கையையும் நமக்குத் தருகிறது:

கிறிஸ்து மையமாக இருந்தால் — சபை நிலைக்கும்.

சத்தியமும் அன்பும் இணைந்தால் — ஒற்றுமை தங்கும்.

விசுவாசம் உயிரோடு இருந்தால் — தேவன் வரலாறையே திருப்புவார்.

அன்பானவர்களே,

வரலாறு என்பது கடந்த காலம் மட்டுமல்ல.

அது நிகழ்காலத்திற்கான எச்சரிக்கை மணி.

நாம் இந்தப் பாடங்களைக் கேட்டுவிட்டு

வெறுமனே அடுத்த பக்கத்திற்குச் செல்வதற்காக அல்ல—

நம் சிந்தனையையும், நம் சபையையும்

சீர்செய்வதற்காகவே இதைப் படித்தோம்.

இந்த அதிகாரக் குவிப்பும்,

இந்தப் பிரிவினையும்,

இந்த வெளிப்புறச் சவால்களும்தான்...

அடுத்த பாடத்தில் நாம் பார்க்கப்போகும்

சிலுவைப் போர்களுக்கும்,

மத்தியகாலச் சீர்கேடுகளுக்கும்,

இறுதியில் எழுந்த சீர்திருத்தத்தின் குரலுக்கும்

விதையாக அமைந்தன.

அதைத்தான்,

தேவனுடைய கிருபையோடு,

அடுத்த பாகத்தில் நாம் தொடரப்போகிறோம்.

வரலாற்றின் இந்தப் பயணத்தில் என்னுடன் இணைந்ததற்கு

மிக்க நன்றி.

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.