12 - நைசியா, கல்சிடான் பொதுச்சங்கங்கள் - ஜெரோமும், இலத்தீன் வேதகாமமும்
இந்தப் பாகத்தில் இரண்டு முக்கியமான அம்சங்களைப் பார்க்கப்போகிறோம். 1) நைசியா (Nicea), கல்சிடான் (Chalcedon) என்ற இரண்டு நகரங்களில் நடந்த பொதுச்சங்கங்கள் 2) ஜெரோம் என்ற சபைப் பிதாவின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு, அவர் மொழிபெயர்த்த வுல்காத்தே இலத்தீன் வேதாகமம் கிறிஸ்தவப் பேரரசின் தொடக்ககாலத்தில் நடைபெற்ற இந்த இரண்டு பொதுச் சங்கங்களும், வேதாகமம் இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டதும் சபை வரலாற்றின் முக்கியமான திருப்புமுனைகள். இந்த இரண்டு நிகழ்வுகள் கிறிஸ்தவ விசுவாசத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
1. முன்னுரை
1.0 தொடக்கம் – சபை வரலாறு ஏன் முக்கியம்?
அன்புக்குரியவர்களே! சபை வரலாற்றின் பன்னிரெண்டாம் பாகத்துக்கு நான் உங்களை அன்போடு வரவேற்கிறேன். “சபை வரலாறு”என்றால் என்ன? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தேதிகளா? பெயர்களா? இடங்களா? சலிப்பான கதைகளா? பலர் ஒருவேளை அப்படி நினைக்கலாம். ஆனால் உண்மையில் சபை வரலாறு சலிப்பானதல்ல – அது நம் விசுவாசத்தின் வேர். இன்று வேதாகமம் நம் தாய்மொழித் தமிழில் நம்மிடம் இருக்கிறது? எப்படி வந்தது? இயேசு கிறிஸ்து யார் என்ற சத்தியம் எப்படிப் பாதுகாக்கப்பட்டது? கிறிஸ்தவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து எதற்காகப் போராடினார்கள்? இதற்கெல்லாம் பதில் சொல்வதுதான் சபை வரலாறு.
எனவே, சபை வரலாறு அவர்களின் கதை மட்டும் அல்ல, அது நம்முடைய கதை. அது கிறிஸ்துவினுடைய சரீரத்தின் கதை என்பதை நினைவில்வைத்துக்கொள்ளுங்கள். ஆகையால், வாருங்கள்! இந்த வரலாறு உங்கள் இதயத்தைத் தீட்டி, உங்கள் விசுவாசத்தை வலுப்படுத்தும்.
இந்தத் தொடரில் மொத்தம் 24 பாகங்கள் இருக்கும். இதில், சுமார் கி.பி.1500வரை, அதாவது சீர்திருத்தத்திற்கு முந்தைய காலம்வரையிலான சபை வரலாற்றைப் பார்ப்போம். கர்த்தருக்குச் சித்தமானால், முடிந்தால், அதற்குப் பிந்தைய சபை வரலாற்றையும் கொஞ்சம் பார்ப்போம்.
1.2 கிறிஸ்தவப் பேரரசின் நீண்டகாலம்
கி.பி. 312இல் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவனானதிலிருந்து கி.பி. 1500இல் சீர்திருத்தகாலம்வரையிலான நீண்ட 1200 ஆண்டுகள் “கிறிஸ்தவப் பேரரசின் காலம்”என்றழைக்கப்படுகிறது.
1.3 பல முக்கியமான நிகழ்வுகள்
இந்தக் காலகட்டத்தின் வரலாற்றில் பல முக்கியமான நிகழ்வுகள் இருப்பதால், படிப்பதற்கு வசதியாக, இதை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம். கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவனான கி.பி 312முதல் கி.பி 1000வரையிலான காலகட்டத்தை ஆரம்ப காலக் கிறிஸ்தவப் பேரரசு என்றும், கி.பி 1000முதல் கி.பி 1500வரை, அதாவது சீர்திருத்தகாலம்வரையிலான காலகட்டத்தைப் பிந்தைய காலக் கிறிஸ்தவப் பேரரசு என்றும் பிரித்துக்கொள்ளலாம். மேலும், நான் அடிக்கடி சொன்னதுபோல, சபை வரலாற்றை நம் வசதிக்காக நான்கு பெரிய காலகட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம்.
1.4 இந்தப் பாகத்தின் கவனம்
இந்தப் பாகத்தில் இரண்டு முக்கியமான அம்சங்களைப் பார்க்கப்போகிறோம்.
1) நைசியா (Nicaea), கல்சிடான் (Chalcedon) என்ற இரண்டு நகரங்களில் நடந்த பொதுச்சங்கங்கள்
2) ஜெரோம் என்ற சபைப் பிதாவின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு, அவர் மொழிபெயர்த்த வுல்காத்தே இலத்தீன் வேதாகமம்
கிறிஸ்தவப் பேரரசின் தொடக்ககாலத்தில் நடைபெற்ற இந்த இரண்டு பொதுச் சங்கங்களும், வேதாகமம் இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டதும் சபை வரலாற்றின் முக்கியமான திருப்புமுனைகள். இந்த இரண்டு நிகழ்வுகள் கிறிஸ்தவ விசுவாசத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
2. ஏரியசின் போதனையும் நைசியா பொதுச்சங்கமும் (325 A.D.)
முதலாவது நாம் நைசியா பொதுச்சங்கத்தைப் பார்ப்போம். அந்தச் சங்கம் ஏன் கூட்டப்பட்டது? எகிப்தின் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்த மிகப் பிரபலமான ஏரியஸ் என்ற ஒரு presbyterமூலமாக நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு துர்உபதேசம் (Arian heresy) தலைதூக்கியது.
2.1 ஏரியசின் போதனை
அவர் கிரேக்கத் தத்துவங்களையும், கிறிஸ்தவப் போதனைகளையும் கலந்து போதித்தார். அவர் என்ன போதித்தார் என்பதற்கு நான் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். "தேவன் தன்னிகரற்றவர், ஒப்புயர்வற்றவர்; எனவே, அவரை நாம் ஓரளவுக்குத்தான் அறியமுடியும். நாம் அவரை முழுமையாக அறிய முடியாது. ஆனால், இயேசு இந்தப் பூமியில் மனிதனாக வாழ்ந்தார்; எனவே, நாம் அவரை முழுமையாக அறியமுடியும். ஆகவே, மிக உயர்ந்த அர்த்தத்தில் இயேசு உண்மையான தேவனாக இருக்க முடியாது," என்று அவர் போதித்தார். "இயேசு தேவனைப்போன்றவர். படைப்புக்களிலேயே இயேசுதான் மிகவும் தேவனைப்போன்ற படைப்பு. இந்தப் பிரபஞ்சத்தில் தேவனுக்கு அடுத்த மிக உயர்ந்த படைப்பு இயேசு. இயேசு தேவன் அல்ல. அவர் தேவனால் படைக்கப்பட்டவர்; ஆனால் அனைத்துப் படைப்புகளிலும் அவரே உயர்ந்த படைப்பு," என்று அவர் கூறினார்.
சுருக்கமாகச் சொல்வதானால், "இயேசு தேவனைப்போன்ற மிக உயர்ந்த படைப்பு; ஆனால் அவர் உண்மையான தேவன் அல்ல," என்று ஏரியஸ் போதித்தார்.
2.2 மக்களிடையே பரவக் காரணங்கள்
ஏரியசின் போதனை ஏராளமானவர்களை எளிதாக ஈர்த்தது, கவர்ந்தது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முதலாவது, அது அன்றைய கிரேக்கக் கலாச்சாரத்தில் ஆழமாக ஊறியிருந்த சிந்தனைகளுடன் ஒத்துப்போனது. ஏரியசின் போதனைகளில், இயேசு கிரேக்க புராணங்களில் காணப்படும் தெய்வீகமும் மானிடமும் கொண்ட ஒரு கதாநாயகன்போல் காணப்பட்டார். எனவே, மக்கள் அதை எளிதில் புரிந்துகொண்டார்கள், வரவேற்றார்கள்.
இரண்டாவது, ஏரியஸ் மிகத் திறமையான பேச்சாளர். தன் போதனைகளைக் குறிப்பு 1, குறிப்பு 2, என்று வரிசைப்படுத்தி மிகச் சாதுரியமாக, தெளிவாகப் பேசினார். கேட்டவர்களின் இருதயத்தில் உடனே, எளிதாகப் பதிந்தது.
மூன்றாவது, இன்று மக்களுடைய கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் ஒரு பொருளை எப்படி விளம்பரம் செய்கிறார்களோ, அப்படி அவர் தன் போதனைகளை “மார்க்கெட்டிங்” (marketing) செய்தார். அவர் அதில் கைதேர்ந்தவர், திறமைசாலி என்று சொல்லலாம். அப்படி அன்று அவர் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? அவர் தன் முக்கியமான கருத்துக்களை காதுக்கினிய இசையில் சிறிய பல்லவிகளாக இயற்றிப் பாடினார். அவர் எழுதி, இசையமைத்துப் பாடிய பாடல்கள் அந்தக் காலத்தில் சாமான்ய மக்களின் உள்ளங்களில்கூட மிக எளிதாகப் பதிந்தன. அவர்கள் அந்தப் பாடல்களைத் தங்களை அறியாமலே முணுமுணுக்கத் தொடங்கினார்கள். அவர் வல்லவரா இல்லையா, சொல்லுங்கள். அவர் திறமையான விற்பனையாளரா இல்லையா சொல்லுங்கள். இன்றும் கிறிஸ்தவத்தில் சிலர் பாடல்களின்மூலம் தெரிந்தே பொய்யைப் பரப்புகிறார்களே!
ஏரியஸ் தன் போதனைகளைத் தெளிவாகவும், சுவையாகவும் , சுருக்கமாகவும் அழகான இசையமைத்து பாடல்களாகப் பாடியபோது மக்கள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். அலெக்சாந்திரியா துறைமுகத்தில் வேலை செய்த கப்பல் பணியாட்கள் கப்பலில் சரக்குகளை ஏற்றி இறக்கியபோதுகூட அந்தப் பாடல்களை முணுமுணுத்தார்களாம்.
நான்காவது, ஏரியசின் போதனை புதிய விசுவாசிகளுக்கு மிகவும் கவர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், அது பல அம்சங்களில் அவர்களுடைய சிறு வயதில் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான அஞ்ஞான மதங்களின் அம்சங்களுக்கு ஒத்திருந்தது.
அவர்களுடைய அஞ்ஞான மதங்களில் ஒரேவொரு பெரிய கடவுள் எங்கோ தனியாக இருந்தார். அந்தப் பெரிய கடவுள் பல சிறிய தெய்வங்களை உருவாக்கி, அவர்கள்மூலமாகத் தம் வேலையைச் செய்துகொண்டிருந்தார். அந்தச் சிறிய தெய்வங்கள்தான் பரலோகத்துக்கும் பூமிக்கும் இடையே போக்கும்வரத்துமாக இருந்தார்கள் என்று அவர்கள் நம்பினார்கள்.
கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக விசுவாசித்த பழைய அஞ்ஞானிகளால் கிறிஸ்துவைப்பற்றி வேதாகமக் கூறியதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. "இயேசு கிறிஸ்து தெய்வீக வார்த்தை, இவர் கடந்த நித்தியத்திலிருந்து இருக்கிறார், இவர் பிதாவாகிய தேவனுக்குச் சமமானவர்," என்ற சத்தியத்தை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.
ஏரியசின் போதனை அஞ்ஞான மதங்களுடன் பல அம்சங்களில் ஒத்திருந்ததால் ஏரியவாதம் வேகமாகப் பரவியது. அது அந்தக் காலத்திய விசுவாசிகள், பாஸ்டர்கள், மூப்பர்கள், போதகர்கள், ஆயர்கள் இவர்களை மட்டுமின்றி, பேரரசர் கான்ஸ்டண்டைனுக்கும் பெரும் பிரச்சினையாக மாறியது.
2.3 பரவலின் தாக்கம்
அந்தக் காலத்தில் ஏரியசின் வாதம் எவ்வளவு அதிகமாகப் பரவியிருந்தது என்பதை சுமார் கி.பி. 395இல் இறந்த நைசாவின் கிரெகோரி (Gregory of Nyssa) இவ்வாறு கூறுகிறார். இதோ அவருடைய வரிகள்.
“நீங்கள் கான்ஸ்டான்டினோபிளில் யாரிடமாவது சந்தையில் சில்லறை கேட்டால் அவர் உங்களிடம் ‘குமாரன் ஜெநிப்பிக்கப்பட்டவரா இல்லையா?’ என்று இறையியல் விவாதிக்கத் தொடங்கிவிடுவார். நீங்கள் கடையில் ரொட்டியின் தரத்தைப்பற்றிக் கேட்டால், ‘பிதா உயர்ந்தவர், குமாரன் தாழ்ந்தவர்,’ என்றுதான் கடைக்காரர் பதில் சொல்வார். ‘குளிக்கலாமா’ என்று கூறினால், ‘குமாரன் படைக்கப்படுவதற்குமுன் அங்கு வேறெதுவும் இருக்கவில்லை,’ என்ற பதில் வரும்" என்று கூறுகிறார். ஏரியசின் போதனை எப்படி ஊடுருவியிருந்தது என்று பாருங்கள்.
நைசாவின் கிரெகோரி ஒருவேளை கொஞ்சம் மிகைப்படுத்துவதுபோல தோன்றலாம். அப்படித் தோன்றினாலும்கூட, அவர் சொல்வதில் உள்ள உண்மையை நாம் உணரமுடிகிறது. ஏரியசின் இறையியல்சம்பந்தப்பட்ட சர்ச்சைகளை மக்கள் ஆவலோடு விவாதிக்கொண்டிருந்தார்கள் என்று உறுதியாகத் தெரிகிறது.
2.4 ஏரியசின் நீக்கமும், பொதுச்சங்கத்திற்கு அழைப்பும்
அலெக்சாந்திரியாவின் ஆயர் அலெக்சாந்தர் ஏரியசின் வேதப்புரட்டுக்களைக் கண்டித்து, அவரைச் சபையிலிருந்து நீக்கினார். இதனால், ஏற்கெனவே மக்களிடையே பிரபலமாயிருந்த ஏரியசின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மேலும் தீவிரமாகப் பரவின. சபைக்கு இது மிகப் பெரிய சிக்கலாகவும், சவாலாகவும் மாறியது. ஆகவே, பேரரசர் கான்ஸ்டண்டைன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, கி.பி. 325இல் நைசியா என்ற நகரத்தில் சபையின் பொதுச் சங்கத்தைக் கூட்டினார். இன்றைய துருக்கியில் இஸ்தான்புல்லுக்குத் தெற்கே உள்ள "இஸ்நிக்" (Iznik) நகரம்தான் அன்று நைசியா.
நைசியா பொதுச் சங்கம் கூட்டப்பட்ட காலத்தில் நாம் வாழ்ந்திருந்தால் அது நம் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறன். காலக்கடிகாரத்தில் நாம் பின்னோக்கிச் சென்று எதையாவது பார்க்க முடிந்தால், நாம் பார்க்க வேண்டிய மிகச் சுவாரசியமான இடங்களில் ஒன்று நைசியா பொதுச்சங்கமாக இருக்கும். ஏனென்றால், இதுவே, உரோமப் பேரரசில் கிறிஸ்தவம் சட்டப்பூர்வமான மதமாக அனுமதிக்கப்பட்டு, ஆரம்பத்தில் ஓரளவுக்கு அரசின் பேராதரவைப் பெற்ற மதமாக மாறியபிறகு, நடைபெற்ற முதல் முக்கியமான பொதுச் சங்கம். எனவே, கிறிஸ்தவர்கள் அதுவரை அனுபவித்த மிகக் கொடுமையான சித்திரவதைகளின் நினைவுகளும், காயங்களும், தழும்புகளும், அந்தப் பொதுச் சங்கத்தில் கூடியவர்களின் மனங்களில் இன்னும் பசுமையாகவே இருந்தன.
2.5 பங்கேற்பாளர்களும், தலைமையேற்பும்
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்த சபைகளிலிருந்து 318க்கும் அதிகமான ஆயர்கள் நைசியாவில் ஒன்று கூடினார்கள். இந்தப் பொதுச் சங்கம் கூடிய காலத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் சித்திரவதைகள் ஓய்ந்திருந்தன. இந்தச் சங்கத்தில் கூடிய பலர் இயேசுவுக்காக நேரடியாகச் சித்திரவதைகளையும், கொடுமைகளையும், கடும் இன்னல்களையும் அனுபவித்தவர்கள். இது இந்தப் பொதுச் சங்கத்தின் ஒரு சிறப்பு அம்சம்.
நைசியா பொதுச் சங்கத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயர்கள் வந்தபோதும், பெரும்பாலான ஆயர்கள் கிழக்கத்தியக் கிறிஸ்தவச் சபைகளிலிருந்தே வந்திருந்தார்கள். ஏனென்றால், ஏரியசின் இறையியல் சர்ச்சை அந்தப் பகுதிகளில்தான் மிக மோசமான பிரச்சனையாக இருந்தது.
கிழக்குப் பகுதியிலிருந்து வந்த ஆயர்களில் பெரும்பாலோர் ஆசியா மைனர் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதாவது இன்றைய துருக்கி. உரோமப் பேரரசின் அந்தப் பகுதிகளில் விசுவாசிகள் அதிகமாக இருந்தார்கள். ஆசியா மைனர், சிரியா, உரோமர்கள் "பாலஸ்தீனம்" என அழைத்த பகுதி, எகிப்து ஆகிய இடங்களிலிருந்து அநேகர் வந்திருந்தார்கள். அரேபியா, பாரசீகம், லிபியா, கிரேக்கம் ஆகிய இடங்களிலிருந்தும் சிலர் வந்திருந்தார்கள். ஆர்மீனியாவிலிருந்து ஒரேவோர் ஆயர் வந்திருந்தார். கிழக்குப் பகுதியில் இருந்த முக்கியமான பழமைவாத கிறிஸ்தவ நகரங்களிலிருந்தும் பெரும்பாலான ஆயர்கள் வந்திருந்தார்கள்.
மேற்கத்தியச் சபைகளிலிருந்து, பதிவுகளின்படி, ஸ்பெயின் நாட்டின் கொர்டோவா, வட ஆப்பிரிக்காவின் கார்த்தேஜ், உரோமிலிருந்து இரண்டு ஆயர்கள் என மொத்தம் 6 அல்லது 7 ஆயர்களே கலந்துகொண்டார்கள் என்று தெரிகிறது.
அலெக்சாந்திரியாவின் அலெக்சாந்தர், எகிப்தின் மெம்பிசிலிருந்து அந்தியோகஸ், எருசலேமின் மகாரியுஸ், செசரியாவின் யூசிபியூஸ், சிரியாவின் அந்தியோக்கியாவின் யூஸ்தாத்தியுஸ், தமஸ்குவின் மேக்னஸ், எரிகோவின் ஜனுவரியுஸ், நிக்கோமீடியாவின் யூசீபியஸ், சிமிர்னாவின் யூதிகியஸ், பைசாந்தியத்தின் மெட்ரோபான்ஸ், சர்தையின் ஆர்தெமிடோரஸ், நைசியாவின் தீயோக்னிஸ் ஆகியோர் கலந்துகொண்ட முக்கிய தலைவர்கள்.. கொர்டோவாவின் ஓசியஸ் (Hosius) பொதுச்சங்கத்துக்குத் தலைமையேற்றார்.
இவர்கள் அனைவரும் நைசியாவில் ஒன்றுகூடினார்கள். இது மிக முக்கியமான பொதுச் சங்கம். இந்தப் பொதுச் சங்கத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்து 318 ஆயர்கள் கலந்துகொண்டார்கள் என்பது மட்டுமல்ல இதற்குக் காரணம், இந்தச் சங்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க சில நபர்கள் இருந்தார்கள் என்பது இன்னொரு காரணம். அவர்களில் ஒருவர் எகிப்தின் மேல்தீபிலிருந்து வந்த பாப்னூஷியஸ் (Paphnutius). உரோமப் பேரரசில் கிறிஸ்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டபோது, இவர் தன் விசுவாசத்தில் உறுதியாக இருந்ததால், இவருடைய இரண்டு கண்களும் பிடுங்கப்பட்டன. இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையுள்ள சாட்சியாக நிலைத்திருந்ததால் தன் கண்களை இழந்த இவர் அந்தச் சங்கத்தில் மிகவும் பலமான சாட்சியாக இருந்தார். இன்னொருவர் சைப்ரஸின் டிரிமிதூஸ் ஆயர் ஸ்பிரிடான். இவர் "ஒருவன் தன்னைத்தானே வெறுத்து அனுதினமும் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு வரக்கடவன்" என்பதற்குப் பிரபலமான சாட்சியாக வாழ்ந்தார். இவர் தன்னை வெறுத்து, ஒறுத்து, மறுத்து துறவிபோல் வாழ்ந்தார். இவருடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்தன. இவர்மூலமாகவும் தேவன் பல அற்புதங்களைச் செய்தார். எனவே, இவர் மிகவும் புகழ்வாய்ந்தவர். இவர்கள் இருவரும் ஆலோசனைச் சங்கத்திற்கு வந்தபோது பேரரசர் கான்ஸ்டண்டைனே நேரடியாகச் சென்று இவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து, வரவேற்று, தனக்காக ஜெபிக்குமாறு வேண்டியதாகக் கூறப்படுகிறது.
நைசியா பொதுச் சங்கத்தையும், அங்கு நடந்த நிகழ்ச்சிகளையும்பற்றி சில சுவாரசியமான கதைகள் சொல்லப்படுகின்றன. அவை உண்மையா இல்லையா என்று உறுதியாகச் சொல்லமுடியாது. அவைகளில் ஒரு கதை மைராவிலிருந்து வந்த செயின்ட் நிக்கோலஸ் என்பவரைப்பற்றியது. இன்று “சாண்டா கிளாஸ்”என அழைக்கப்படும் அசல் “சாண்டா கிளாஸ்”இவரே. இவர் இந்த ஆலோசனைச் சங்கத்திற்கு வந்ததாகவும், ஏரியஸின் வேதப்புரட்டுக்கு எதிராக கடுங்கோபம்கொண்டு, எழுந்து, அங்கிருந்த ஏரியசின் முகத்தில் ஓங்கிக் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா இல்லையா என்று நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். உண்மையாக இருக்காது என்றுதான் நான் நினைக்கிறன். ஆனாலும், கதை சுவாரசியமாக இருக்கிறது!
2.6 ஏரியசின் வழக்கும், தீர்ப்பும்
இந்தக் கதையைக் கேட்டதும், "ஏரியஸ் இந்த ஆலோசனைச் சங்கத்தில் கலந்துகொண்டாரா என்ன?" என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கும். ஆம், ஏரியஸ் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கருத்துக்களையும், வாதங்களையும் முன்வைத்தார். "இயேசு தேவனால் முதலாவது படைக்கப்பட்ட, மிக உயர்ந்த ஒரு பிறவி என்றும், அவர் மாற்றமடையக்கூடியவர் என்பதால் அவர் தேவன் இல்லை," என்றும் ஏரியஸ் வாதிட்டார்.
சங்கத்தார் ஏரியசின் கருத்தையும், அவரை எதிர்த்தவர்களின் கருத்துகளையும் கவனமாகக் கேட்டபின், ஏரியசின் போதனை வேதாகமத்துக்கு விரோதமானது என்று தெளிவாக உணர்ந்து, அதை முறையாக நிராகரித்தார்கள். இயேசு கிறிஸ்துவின் ஆளுமையையும் இயல்பையும்பற்றி ஏரியசும், அவருடைய ஆதரவாளர்களும் கூறியது வேதாகமத்துக்குப் பொருத்தமானது இல்லை என்று தெளிவாயிற்று.
ஏரியசின் போதனைக்கு ஒத்த போதனை இந்த நாட்களில் நம்மிடையே நிலவுகிறதா என்று நீங்கள் அறிய விரும்பினால், அதைத் தேடி கடல் கடந்து வேறெங்கும் போகவேண்டாம். கண்ணைத் திறந்து பார்த்தாலே போதும். Watchtower Bible and Tract Society, அதாவது, பொதுவாக "யெகோவாவின் சாட்சிகள்" (Jehovah’s Witnesses) என அழைக்கப்படுகிறவர்கள் நம் கண்ணெதிரே இருக்கிறார்கள். இயேசுவின் ஆளுமையையும் இயல்பையும் குறித்து அன்று ஏரியஸ் போதித்ததை இவர்கள் அப்படியே எழுத்துமாறாமல் பிரசங்கிக்கிறார்கள். அன்று ஏரியஸ் கூறியது தவறு. இன்றைய நவீன ஏரியசுக்களாகிய யெகோவாவின் சாட்சிகளும் தவறாகவே போதிக்கிறார்கள். இவர்கள் வேதாகமம் சொல்லும் இயேசுவைப் போதிக்கவில்லை.
நைசியா சங்கம் இதைத் தெளிவாக உணர்ந்தது. அவர்கள் இயேசுவின் இயல்பைச் சரியாகப் புரிந்துகொண்டு, “இயேசு உண்மையான தேவனிடமிருந்து வந்த உண்மையான தேவன், இவர் ஜெநித்தவர், படைக்கப்பட்டவர் அல்ல, பிதாவுக்கு ஒத்த சமமான இயல்புடையவர்”என ஓர் உறுதியான அறிக்கையை வெளியிட்டார்கள்.
இது மிகவும் சுவாரசியமான வகையில் சொல்லப்பட்டுள்ளது. "இயேசு ஜெநித்தவர், ஆனால் படைக்கப்பட்டவர் அல்ல. கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங் கடவுளாகச் ஜெநித்தவர். இவர் ஜெநித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர்." இது நைசீன் விசுவாச அறிக்கையின் ஒரு பகுதி. முதலாவது இதிலுள்ள ஜெநித்தவர் என்ற வார்தையைக் கவனியுங்கள். ஆங்கிலத்தில் “begotten.” “to beget” என்றால் பெற்றெடு, ஈன்றெடு, பிறப்பி என்று பொருள்.
மனிதரைப்போன்ற ஒரு சிலையை நாம் உருவாக்கலாம். அந்தச் சிலை மனிதனைப்போல் தோன்றினாலும் அது உண்மையில் மனிதனாக இருக்க முடியாது, மனிதன் இல்லை. ஆனால் ஒருவன் ஒரு பிள்ளையைப் பெற்றால், அது நிச்சயமாக ஒரு மனிதன்தான். மேலும் பெற்றவனைப்போலவே அவன் பெற்ற பிள்ளையும் முழுமையான மனிதன்தான். நாம் ஒரு சிலையை உருவாக்கலாம். உண்மையில் அதை நாம் உருவாக்குகிறோம் என்றுகூடச் சொல்லமுடியாது. உருவாக்குகிறோம் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், நாம் ஒரு பிள்ளையை, மனிதனைப் பிறப்பிக்கிறோம்.
“ஜெநித்தவர்” (begotten) என்ற வார்த்தை பிதாவாகிய தேவனுக்கும் குமாரனாகிய தேவனுக்கும் இடையிலான உறவை விவரிக்கிறது. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" என்ற யோவான் 3:16இல் சொல்லப்பட்டுள்ள ஒரேபேறான என்றால் படைக்கப்பட்ட ஒரே மகன் அல்ல, மாறாக ஜெனித்த ஒரே மகன் என்று பொருள். தேவன் தம்மைப்போல் இல்லாத வேறொன்றைப் படைக்கும்போது, அது வேறுபட்டதாக இருக்கும். ஆனால், ஒரே இயல்பும், ஒரே பொருளும் உடைய இரண்டு ஆளுமைகளுக்கிடையிலான உறவை விவரிப்பதற்கு “ஜெநித்தவர்” (begotten) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனவே, நைசியா சங்கத்தின் அறிவிப்பை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். "இவர் மெய்யான கடவுளினின்று மெய்யான கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, ஜெநித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; பிதாவோடு ஒரே சாராம்சமானவர்."
இரண்டாவது, இந்த அறிக்கையில் உள்ள “ஒரே சாராம்சம்," என்ற இன்னொரு முக்கியமான வார்த்தையைக் கவனியுங்கள். “ஒரே சாராம்சம்," என்ற சொல்லுக்கு “ஹொமோவுசியோஸ்”(homoousios) என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. நைசியா சங்கத்தின் விசுவாசப் பிரமாணம் அதிகாரப்பூர்வமாக முதலாவது கிரேக்க மொழியில் வெளியிடப்பட்டது. அதில் “ஒரே சாராம்சம்”என்பதைக் குறிக்க, “ஹொமோவுசியோஸ்”என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். homo என்றால் “ஒரே”அல்லது “அதே”என்றும், ousia என்றால் “சாராம்சம்”அல்லது “இயல்பு” என்றும் பொருள். அதாவது, “ஒரே இயல்புடையவர் அல்லது ஒரே சாராம்சமுடையவர்.”
ஏரியசும் அவருடைய ஆதரவாளர்களும் “ஹொமோவுசியோஸ்”என்ற வார்த்தையோடு கூடுதலாக i என்ற ஓர் எழுத்தைச் சேர்க்க விரும்பினார்கள். அப்போது அது “ஹொமொஐவுசியோஸ்”(homoiousios) ஆகும். இந்த எழுத்தைத் சேர்த்தால் அந்த வார்த்தையின் பொருள் “ஒத்த இயல்பு”(of similar substance) என்றாகிவிடும். ஏரியவாதிகள் அப்படித்தான் போதித்தார்கள். "இயேசு, பிதாவைப்போன்ற ஒத்த இயல்புடையவர். அவர் பிதாவின் ஒரே இயல்புடையவர் அல்ல," என்பதுதான் அவர்களுடைய போதனை. நீங்கள் இந்த இரண்டு வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள்:
"homoousios" (அதே, ஒரே இயல்பு)
"homoiousios" (ஒத்த இயல்பு)
இரண்டிற்கும் இடையில் உள்ள மிகப்பெரிய வேறுபாடு, ஒரேவொரு “i” (ஐ) என்ற எழுத்து. அந்த ஒரு எழுத்துதான் எல்லாவற்றையும் மாற்றுகிறது. இதை நாம் இப்படியும் சொல்லலாம்: இது வேதாகமம் வெளிப்படுத்தும் இயேசுவுக்கும், யாரோ ஒருவர் தன் கற்பனையில் உருவாக்கிய இயேசுவுக்கும் உள்ள வேறுபாடு. இரண்டிற்கும் அவ்வளவு பெரிய இடைவெளி இருக்கிறது.
2.7 அத்தனேசியஸின் வாதம்
ஏரியவாதிகளின் வாதத்தின்படி இயேசு கிறிஸ்து படைக்கப்பட்ட படைப்புக்களில் மிக உயர்ந்த படைப்பு என்பதை வேதாகமத்தின் போதனையாகவும், சபையின் விசுவாசமாகவும் ஏற்றுக்கொண்டால் கிறிஸ்தவத்தில் நற்செய்தி என்று ஒன்று இல்லாமல் போய்விடும் என்று சங்கத்தில் கூடியிருந்த அத்தனேசியஸ் போன்றவர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்.
ஏரியவாதத்தை முறியடிக்க அத்தனேசியஸ் முன்வைத்த இரண்டு முக்கியமான வாதங்களில் இது தெளிவாகத் தெரிகிறது. இதோ! இது அத்தனேசியஸ் முன்வைத்த முதல் வாதம். "தேவனால் மட்டுமே இரட்சிக்க இயலும். படைக்கப்பட்ட மிக உயர்ந்த படைப்பாக இருந்தாலும், படைக்கப்பட்ட ஒரு படைப்பால் யாரையும் இரட்சிக்க முடியாது. இயேசு இரட்சகர் என்றால் அவர் தேவனாகவே இருக்க வேண்டும்." அற்புதமான வாதம்! ஏரியஸ், குமாரனாகிய இயேசு படைக்கப்பட்ட படைப்புகளிலே மிக உயர்ந்த படைப்பு என்று பலவிதமாக விளக்க முயன்றார். அவர் எவ்வளவுதான் முயன்றபோதும், "இயேசு கிறிஸ்து ஒரு படைப்பு மட்டுமே. அவர் உண்மையான தேவன் இல்லை," என்ற ஏரியசின் வாதம் செல்லுபடியாகவில்லை.
அத்தனேசியஸ் சொன்ன ஒரு முக்கியமான வரியை நான் இங்கு மேற்கோள்காட்டுகிறேன். “The maker must be greater than what he makes, and the giver has to bestow what is in his possession.” இது அவருடைய எழுத்துக்களில் மிகவும் முக்கியமான ஒரு கூற்று என்று நான் நம்புகிறேன். “ஒன்றை உருவாக்குகிறவன் தான் உருவாக்குவதைவிட உயர்ந்தவனாக இருக்க வேண்டும்; ஒருவன் ஒன்றைக் கொடுக்க விரும்பினால், அது அவனிடம் இருக்க வேண்டும்.” இதை வைத்துப் பார்க்கும்போது, இயேசு கிறிஸ்து படைத்தவரும், இரட்சகருமாவார் என்ற நிலை உண்மையாகவே சரியாக இருக்க வேண்டுமானால், அவர் தேவனாகவே இருக்க வேண்டும்."
இதுதான் அத்தனேசியஸ் வலியுறுத்திய முதல் பெரிய சத்தியம்.
இதைத் தொடர்ந்து, அவருடைய இன்னொரு முக்கியமான வாதம் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பதோடு தொடர்புடையது. கிறிஸ்தவ சபைகள் மட்டும் அல்ல, ஏரியவாதிகளின் சபைகள்கூட இயேசுவையே ஆராதித்தார்கள். அத்தனேசியஸ் இதைச் சரியாகக் கண்டுபிடித்து ஏரியவாதிகளைத் தாக்கினார். "இயேசு தேவன் இல்லையென்றால் நீங்கள் அவரை ஏன் ஆராதிக்கிறீர்கள்? ஒருவரை நாம் ஆராதிக்கிறோம் என்றால், அவர் தேவனாகவே இருக்க வேண்டும். படைப்பை ஆராதிப்பது வேதாகமத்துக்கு முற்றிலும் எதிரானது. இயேசு கிறிஸ்து தேவன் இல்லையென்றால், சபை எப்படி அவரை ஆராதிக்கலாம்? படைத்தவரை ஆராதிக்காமல், படைப்பை ஆராதிப்பது தேவதூஷணம்," என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் பேசினார்.
இன்று நாம் பேசிமுடிப்பதுபோல் அல்லது கேட்பதுபோல் அவர்கள் 10 நிமிடத்தில் இந்த முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் நடந்த விவாதங்கள், வாதப்பிரதிவாதங்கள், கலந்துரையாடல்கள், வேத ஆய்வுகள், விளக்கங்கள் மிகவும் ஆழமானவை என்பதை மறக்க வேண்டாம். பல நாட்கள் நடந்த வாதப்பிரதிவாதத்துக்குப்பின் சங்கத்தில் வாக்கெடுப்பு நடந்தபோது ஏரியசின் வேதப்புரட்டு நிராகரிக்கப்பட்டது. Theonas of Marmarica, Secundus of Ptolemais என்ற இரண்டு ஆயர்களைத்தவிர மீதி அனைவரும் ஏரியசின் வேதப்புரட்டுக்கு எதிராக வாக்களித்தார்கள். அந்த இரண்டு ஆயர்களும், ஏரியசும் சபையிலிருந்து நீக்கப்பட்டார்கள். அவர்கள் வேதப்புரட்டர்கள் என்றும் அவர்களுடைய போதனை வேதப்புரட்டு என்றும் அதிகாரப்பூர்வமாக முத்திரை குத்தப்பட்டது.
நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கி.பி. 325ஆம் ஆண்டு நைசியா பொதுச் சங்கத்தில் முடிவுசெய்தபிறகுதான், இயேசு தேவன் என்று கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கத் தொடங்கினார்கள் என்று நாம் நினைக்கக்கூடாது. இயேசு தேவன் என்பது 325இல் நைசியாவில் கூடிய ஆயர்கள் உருவாக்கிய ஒரு புதிய உபதேசம் அல்ல. இயேசு கிறிஸ்து தேவன் என்று ஆரம்ப காலத்திலிருந்தே சபை விசுவாசித்தது. இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்திலேயே அவர் தம் தேவத்துவத்தைப்பற்றி நேரடியாகத் தம் சீடர்களுக்குச் சொல்லி வந்தார். ஏற்கெனவே, கிறிஸ்தவர்கள் விசுவாசித்த அந்தச் சத்தியத்தை பொதுச் சங்கம் அந்நாளில் மீண்டும் உறுதிப்படுத்தியது. அந்தக் காலத்தில் பரவலாக இருந்த ஒரு தவறான போதனைக்கு எதிராக.சபை அதை உறுதியாக மீண்டும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. நைசியா பொதுச் சங்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டு வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட இயேசு தேவன் என்ற சத்தியம் வேதாகமத்தில் தெளிவாகக் காணப்படுகிறது.
3. நைசீன் விசுவாச அறிக்கை (A.D. 325)
3.1 முன்னுரை: “325 அசல்” vs “381 விரிவாக்கம்”
இப்போது நாம் நைசீன் விசுவாச அறிக்கையைக் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம் (Nicene Creed).
கி.பி. 381இல் கான்ஸ்டாண்டினோபிளில் கூடிய பொதுச் சங்கத்தில் நைசீன் விசுவாச அறிக்கை சற்றுத் திருத்தப்பட்டு, விரிவாக்கப்பட்டது. திரித்துவத்தைக்குறித்த சில விவரங்கள் அதில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன. இப்போது நாம் திருத்தப்பட்ட அந்த அறிக்கையைப் பார்க்கப்போவதில்லை. மாறாக, கி.பி. 325இல் நைசியா பொதுச் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட அசல் விசுவாச அறிக்கையை (Original Creed) சுருக்கமாகப் பார்ப்போம்.
3.2 அசல் நைசீன் உரையின் மையம் -இயேசு கிறிஸ்துவின் தெய்வீகமும், மனிதத்துவமும்
நைசியா பொதுச் சங்கத்தில் திரித்துவத்தைக்குறித்த ஒரேவொரு தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது என்று நினைக்கவேண்டாம். அது முக்கியமான தீர்மானமாக இருந்தபோதும் ஒழுக்கம், சித்திரவதை, வட்டி, ஜெபம் போன்ற பல காரியங்களைக்குறித்து மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சரி, விசுவாச அறிக்கையைப் பார்ப்போம். "ஒரே கடவுளை விசுவாசிக்கிறோம்; வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே. கடவுளின் ஏக மகனாய் ஜெநித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கின்றோம். இவர் யுகங்களுக்கெல்லாம்முன்பே பிதாவினின்று ஜெநித்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங் கடவுளாகச் ஜெநித்தவர். இவர் ஜெநித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தும் இவர் வழியாகவே படைக்கப்பட்டன; இவர் மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும் இறங்கி வந்து, உடல் எடுத்து மனிதரானார். இவர் பாடுபட்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, விண்ணகம் சென்றார்; அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட வரவிருக்கின்றார். பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறேன்." திரித்துவத்தைக்குறித்த நைசீன் விசுவாச அறிக்கை இப்படித்தான் ஆரம்பிக்கிறது. கிறிஸ்தவர்கள் பிதாவாகிய தேவனையும், குமாரனாகிய தேவனையும், பரிசுத்த ஆவியாகிய தேவனையும் விசுவாசிப்பதை இந்த விசுவாச அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
3.3 “homoousios” – ஹொமோவுசியோஸ் - ஒரு சொல், ஒரு வரம்பு
நாம் இந்த அறிக்கையைத் தொடர்ந்து பார்ப்போம். அதற்குமுன் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஹொமோவுசியோஸ் (homoousios) என்ற முக்கியமான வார்த்தையைப்பற்றி நான் சொல்லியாகவேண்டும். இந்த வார்த்தையின் பொருள் "குமாரன் பிதாவோடு ஒரே சாராம்சம் உடையவர்.” எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்! குமாரன் “கடவுளிடமிருந்து கடவுள், ஒளியிலிருந்து ஒளி, உண்மையான கடவுளிடமிருந்து உண்மையான கடவுள், ஜெநிப்பிக்கப்பட்டவர், படைக்கப்பட்டவர் அல்ல.” இந்த வார்த்தையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் இந்த வார்த்தைக்கு வருவோம்.
3.4 நைசீன் Anathemas
நாம் இப்போது நைசீன் விசுவாச அறிக்கையின் கடைசிப் பகுதியை வாசிப்போம். "ஆனால், ‘அவர் இல்லாத ஒரு காலம் இருந்தது' என்றும், ‘உண்டாக்கப்படுவதற்குமுன் அவர் இருக்கவில்லை' என்றும், ‘அவர் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்கப்பட்டவர்’ என்றும், ‘அவர் வேறு சாரமும், சாராம்சமுடையவர்’ அல்லது ‘வேறு இயல்புடையவர்’ என்றும், ‘தேவகுமாரன் படைக்கப்பட்டவர்’அல்லது ‘மாற்றத்திற்கு உட்பட்டவர்’அல்லது ‘மாறக்கூடியவர்’என்றும் சொல்பவர்கள் பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தல சபையால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறார்கள்.”
இந்தப் பத்தியிலுள்ள இரண்டு வார்த்தைகளை நான் கொஞ்சம் விளக்குகிறேன். முதலாவது, கடைசி வரியில் வரும் “கத்தோலிக்க”என்ற சொல்லைக் கேட்டு நீங்கள் இடறமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை இந்த வார்த்தை இன்றைய உரோமன் கத்தோலிக்க சபையைக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால், அன்று இந்த வார்த்தை உரோமன் கத்தோலிக்க சபையைக் குறிக்கவில்லை. மாறாக உலகெங்கும் பரவியிருந்த உண்மையான ஒரே பொதுச் சபையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
இரண்டாவது, இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறார்கள் என்ற வார்த்தையைப்பற்றிச் சொல்லியாக வேண்டும். Anathema என்ற வார்த்தைதான் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறார்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த வார்த்தைக்குச் ‘'சபிக்கப்பட்டவர்கள்" அல்லது “அதிகாரப்பூர்வமாக சபையிலிருந்து வெளியேற்றம்” என்று பொருள்.
எனவே, இந்தக் கடைசிப் பத்தியை வேறுவிதமாகச் சொல்வதானால், "இயேசு இல்லாத ஒரு காலம் இருந்தது என்று சொல்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர் பிறப்பதற்குமுன்பு அவர் இருக்கவில்லை என்று சொல்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர் ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றினார்—அதாவது, அவர் படைக்கப்பட்டவர்—என்று சொல்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள்; சாபத்திற்குள்ளானவர்கள். தேவகுமாரனுடைய சாராம்சம் பிதாவாகிய தேவனுடைய சாராம்சத்திலிருந்து மாறுபட்டது என்று கூறுபவர்கள் சபிக்கப்பட்டவர்கள். இயேசு மாற்றத்திற்கோ, திருத்தத்திற்கோ உட்பட்டவர் என்று வலியுறுத்துபவர்கள் சபிக்கப்பட்டவர்கள்—சாபத்திற்குள்ளானவர்கள்; அவர்கள் சபைக்குப் புறம்பானவர்கள் என்று அறிவிக்கப்படுகிறார்கள்.”
3.5 “இறையியல் Vs இரட்சிப்பு” – சமநிலை
இந்த அறிக்கையின் முக்கியத்துவத்தையும், உட்கருத்தையும் நாம் நின்று நிதானிக்க வேண்டும். நாம் இயேசு கிறிஸ்துவின் இயல்பைப்பற்றிய மிக விரிவான இறையியல் போதனையை ஆராய்வதுபோல் தோன்றலாம். அது கொஞ்சம் உண்மைதான். உடனே, "அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் இயல்பைப்பற்றிய துல்லியமான, ஆழமான இறையியல் தெரிந்தால்தான் நாம் இரட்சிக்கப்படுவோமா, தெரியாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டோமா? இரட்சிக்கப்படுவதற்கு நைசீன் விசுவாச அறிக்கையில் நாம் நிபுணர்களாக இருக்க வேண்டுமா?" என்ற கேள்வி சில நேரங்களில் எழும். இந்தக் கேள்விக்கு "இல்லை," என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட முடியாது.
“இறையியல் தேவையில்லை என்றால், வேதாகமம் வெளிப்படுத்துகிற இயேசுவை விசுவாசிக்காமல், வேறொரு இயேசுவை விசுவாசித்தால் இரட்சிக்கப்படமுடியுமா?" என்ற கேள்வியும் உடனே எழும். ஏனெனில், வேதாகமத்தில் வெளிப்படுத்தப்படாத, வேதாகமத்தில் இல்லாத ஒரு இயேசுவை எப்படி விசுவாசிக்க முடியும், எப்படி இரட்சிக்கப்பட முடியும்?
பரிசுத்தவான்களே! உண்மையில் ஒரேவொரு இயேசு கிறிஸ்துவே இருக்கிறார் —சிலுவையில் மரித்து, மரித்தோலிருந்து உயிர்த்தெழுந்த ஒரேவொரு இயேசுவே இருக்கிறார். இந்த இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு அவர் இரட்சிப்பை அருள்கிறார். இந்த இயேசுவையே வேதாகமம் நமக்கு வெளிப்படுத்துகிறது.
நம் கற்பனையில் உதித்த கிறிஸ்துவையோ அல்லது ஏரியசின் கவர்ச்சிகரமான பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துவையோ விசுவாசிப்பதால் நாம் இரட்சிக்கப்பட முடியாது. வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உயிரோடிருக்கிற கிறிஸ்துவே நம் இரட்சகராக இருக்க முடியும்.
இயேசுவின் இயல்பைப்பற்றி குழப்பம் எழுவது இயல்பு; இயேசுவின் இயல்பைப்பற்றிய இறையியலின் எல்லா அம்சங்களையும் ஒரு புள்ளிகூடத் தவறாமல் மிகத் துல்லியமாகவும், சரியாகவும், முழுமையாகவும் அறிந்தவர் யாரும் இருக்கமுடியாது. நாம் அனைவரும் கிறிஸ்துவைக்குறித்த அறிவில் வளர வேண்டும். நம்மில் திருத்தப்படவேண்டியவைகள் இருக்கின்றன. "கற்கவேண்டிய, அறியவேண்டிய, பார்க்கவேண்டிய அனைத்தையும் கற்கவேண்டிய விதத்தில், பார்க்கவேண்டிய விதத்தில், அறியவேண்டிய விதத்தில் கற்றுவிட்டேன், பார்த்துவிட்டேன், அறிந்துவிட்டேன்," என்று ஒருவரும் சொல்ல முடியாது. நாம் அனைவரும் இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டும். இதை நாம் அறிந்திருக்கிறோம், புரிந்திருக்கிறோம், ஒப்புக்கொள்கிறோம். எனவே, வேதாகமத்தின் இயேசுவை நிராகரிப்பது வேறு, அவருடைய இயல்பைப்பற்றிய குழப்பமோ, சரியான தகவலோ இல்லாதிருப்பது வேறு. இரண்டுக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்கிறது.
வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்துவால் மட்டுமே இரட்சிக்க முடியும் என்றும், அவரைப்பற்றி வேதாகமம் சொல்லாத சில காரியங்களை சிலர் வேறுவிதமாகப் பேசுகிறார்கள் என்றும் நைசியா பொதுச்சங்கம் சரியாகப் புரிந்துகொண்டது. அந்தக் கிறிஸ்து வேதாகமத்தின் இரட்சிக்கும் கிறிஸ்து இல்லை என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். “இயேசு கிறிஸ்து படைக்கப்பட்டவர்; அவர் எல்லாவற்றையும் படைத்தவர் இல்லை," என்று ஒருவன் சொன்னால், அவன் வேதாகமத்தின் இயேசுவைப்பற்றிப் பேசவில்லை. ஏனெனில், படைக்கப்பட்ட எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்துவே படைத்தார் என்று வேதாகமம்—முக்கியமாகக் கொலோசெயர் நிருபம் —தெளிவாகச் சொல்லுகிறது: "ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது" கொலோசெயர் 1:16. படைக்கப்பட்ட அனைத்தும் அவரால் படைக்கப்பட்டிருந்தால், அவர் எப்படிப் படைக்கப்பட்டவராக இருக்க முடியும்?
ஆகையால், "இயேசு படைக்கப்பட்டவர், தேவனால் படைக்கப்பட்ட படைப்புகளில் முதல் படைப்பு, மிக உயர்ந்த படைப்பு," என்று ஒருவன் கூறினால், அவன் வேதாகமம் விவரிக்கும் கிறிஸ்துவை நிராகரிக்கிறான் என்று பொருள். நான் ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்: பெரிய இறையியல் தேர்வில் வெற்றிபெற்றால்தான் பரலோகத்துக்குச் செல்ல முடியும் என்பதுபோல் நான் சொல்லவில்லை. ஆனால், உண்மையில் இது இருக்கிற கிறிஸ்துவை விசுவாசிக்கிற காரியம். ஏரியஸ் இல்லாத இயேசுவை, அவர் உருவாக்கிய இயேசுவை, விசுவாசித்தார். வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இயேசுவே உண்மையான இயேசு.
இன்றைய யெஹோவாவின் சாட்சிகள் இல்லாத ஓர் இயேசுவில், வேதத்தில் இல்லாத ஓர் இயேசுவில், வேதம் சொல்லாத ஓர் இயேசுவில், நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவேதான், அவர்களுடைய இரட்சிப்பு கேள்விக்குரியது, அவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய இறையியல் துல்லியமாகவும், தெளிவாகவும், முழுமையாகவும் இல்லாததால் அவர்களுடைய இரட்சிப்பு கேள்விக்குரியது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அதுவும் ஒரு காரணம்தான். ஆனால், அவர்கள் வேதாகமத்தின் இயேசுவை நிராகரிக்கிறார்கள் என்பது அதைவிட முக்கியமான காரணம்.
3.6 நைசியாவின் பிந்தைய அதிர்வுகள்
சரி, இப்போது நாம் மீண்டும் நைசியா பொதுச் சங்கத்துக்கும், ஏரியசுக்கும், எகிப்தின் அலெக்சாந்திரியாவுக்கும் வருவோம். ஏரியஸ் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்தவர் என்பதை மறக்க வேண்டாம். அலெக்சாந்திரியாவின் அடுத்த ஆயர் அத்தனேசியஸ். நைசியா பொதுச் சங்கத்தில் ஏரியசின் பொய்ப் போதனைகள் நிராகரிக்கப்பட்டன.
ஆனால், ஏரியஸ் மிகவும் பிரபலமானவர், அவர் தன் போதனைகளைத் திறமையாகப் பரப்பினார். நல்ல பேச்சாளர்; மக்களைக் கவரும் வகையில் பேசினார். பெருந்திரளான மக்கள் கூட்டம் அவருடைய போதனைகளை வரவேற்றது, நம்பியது.
எனவே, அந்தப் பொதுச் சங்கத்துக்குப்பிந்தைய பல தசாப்தங்களில், இயேசு கிறிஸ்துவின் இயல்பைப்பற்றிய ஏரியசின் போதனைகளைப் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ, நைசியா பொதுச் சங்கத்தின் தீர்மானங்கள் மறைந்துபோய்விடுமோ என்ற அச்சமும், ஐயமும் எழுந்தன.
இதற்கு என்ன காரணம்? ஏன் அப்படித் தோன்றியது? ஒரு பெரிய காரணம் இருந்தது: ஏரியஸ் நைசியா பொதுச் சங்கத்தில் தோற்றபோதும், உரோமப் பேரரசர்களின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது. அது அவருக்குக் கிடைத்த பெரிய வெற்றி.
ஒன்றைக் கவனியுங்கள். "சபையின் விவகாரங்களில் தலையிடும் உரிமை எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, நாங்கள்தான் சபையின் பாதுகாவலர்கள்," என்று உரோமப் பேரரசர்கள் எண்ணினார்கள். சபையில் பிரிவினை ஏற்பட்டால் உரோமப் பேரரசில் பிரிவினை ஏற்படும் என்பதால் பேரரசர்கள் இவ்வாறு நினைத்தார்களோ! இருக்கலாம்.
ஆகையால், பின்னர் வந்த கான்ஸ்டான்டியஸ், வாலென்ஸ்போன்ற உரோமப் பேரரசர்கள் நைசியா பொதுச்சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஆதரித்த ஆயர்களைக் கடுமையாகத் தண்டித்தார்கள், அவர்களை ஆயர் பதவியிலிருந்து நீக்கினார்கள், நாடு கடத்தினார்கள். நைசீன் விசுவாச அறிக்கையை ஆதரித்த பேரரசர் ஆட்சியில் இருந்தபோது , ஏரியசையும் அவருடைய போதனைகளையும் நம்பியவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். நைசீன் விசுவாச அறிக்கையை நம்பாத , ஏரியசின் போதனைகளை ஆதரித்த அரசன் ஆட்சியில் இருந்தபோது வேதாகமத்தின் நிலைப்பாட்டை விசுவாசித்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள்.
நைசியா பொதுச் சங்கத்திற்குப்பின் பத்தாண்டுகளுக்குள், "ஏரியசின் போதனைகள் அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்தவ உபதேசங்களின் வரம்புக்குள்தான், வரையறைக்குள்தான், உள்ளன," என்று கான்ஸ்டண்டைன் நம்பத் தொடங்கினார். கான்ஸ்டண்டைன் இந்த விவகாரத்தை உண்மையாகப் புரிந்துகொண்டாரா என்று தெரியவில்லை. இந்தக் கருத்துமோதல் அல்லது போதனை சபையில் பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு பிரச்சினையாக மாறி, அரசில் குழப்பமும், பிளவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்தாரோ என்றும் தெரியவில்லை. ஆனால், ஒரு காரியம் தெளிவாகத் தெரிகிறது. அது என்னவென்றால், கான்ஸ்டண்டைனோ, அவருக்குப்பின் வந்த அவருடைய பிள்ளைகள் கான்ஸ்டான்ஸ், கான்ஸ்டான்டியசோ வேத அறிவுடையவர்களோ, விளக்கவுரையாளர்களோ, இறையியலாளர்களோ இல்லை. "சபையில் பிரிவினை ஏற்படக்கூடாது, அது ஒற்றுமையாக இருக்க வேண்டும், அதன் விளைவாக அரசைப் பாதுகாக்கவேண்டும்,"என்பதுதான் அவர்களுடைய பிரதானமான நோக்கம். இறையியலையும், போதனைகளைப்பற்றிய காரியங்கள் அவர்களுக்குத் துச்சமாகவும், பொருளற்றதாகவும் தோன்றின. எனவே, இந்த விவகாரங்களைக்குறித்த விவாதங்களில் அவர்கள் நீண்டகாலம் ஈடுபட விரும்பவில்லை.
ஆக, இது உண்மையாகவே ஒரு போர், ஒரு யுத்தம். சபை வரலாற்றில் நைசியா ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. ஆயினும், ஏரியவாதமும், அதோடு தொடர்புடைய பிற போதனைகளும் நைசியா பொதுச் சங்கத்தோடு முடிவுக்கு வந்துவிடவில்லை. ஏன், நான்காம் நூற்றாண்டிலும் அதற்கு அடுத்த ஐந்தாம் நூற்றாண்டிலும்கூட முடிவுக்கு வரவில்லை, மறையவில்லை. அந்தப் போர் தொடர்ந்தது.
3.7 நைசியாவின் 20 தீர்மானங்கள் (தொகுப்பு)
நைசியா பொதுச் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட வேறு சில தீர்மானங்களைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம். நைசியா பொதுச்சங்கம் மிகச் சிறப்பான சங்கம். எனவே, இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தைப்பற்றி மட்டும் அல்ல, வேறு சில மிக முக்கியமான காரியங்களைப்பற்றியும் அந்தச் சங்கம் முடிவுசெய்தது.
நைசியா பொதுச்சங்கத்தில் குறைந்தது 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைகளில் சிலவற்றை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்; ஏனென்றால், அவை நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சபையின் முக்கியமான அக்கறை என்ன, நிலை என்னவென்று நமக்குத் தெரியப்படுத்துகின்றன.
"அண்ணகர்கள் (Eunuchs) ஆசாரியப்பணியில் சேரலாம். ஆனால், ஒருவன் தன்னைத்தானே அண்ணகர் ஆக்கிக்கொண்டால் (self-imposed) அவன் சேரக்கூடாது. அதற்கு அனுமதி இல்லை.”
“புதிய விசுவாசிகள் தகுதிகாண்பருவத்தைக் (probation period) கடைபிடிக்க வேண்டும்; அவர்கள் விசுவாசிகள் ஆனவுடன் சபையின் அலுவலகப் பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது."
“திருமணம் செய்யாத போதகர்கள் தங்களுடைய வீட்டில் தங்களுடைய அம்மா, சகோதரி, அத்தை, பெரியம்மா, சித்தியைத்தவிர வேறு யாரையும் தங்கவைக்கக்கூடாது.”
“சித்திரவதைக்குப் பயந்து விசுவாசத்தை மறுதலித்தவர்கள் அல்லது சமரசம் செய்தவர்கள் சபையிலிருந்து பத்து ஆண்டுகள் நீக்கப்படுவார்கள். ஆனால், அவர்களுடைய மனந்திரும்புதலின் அளவைப் பொறுத்து அவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம்.
சித்திரவதையின்போது காரணமே இல்லாமால் விசுவாசத்தை மறுத்தவர்கள், மனந்திரும்பி மீண்டும் சபையில் சேர விரும்புகிறவர்கள், 12 ஆண்டுகள் தகுதிகாண் பருவத்தை அனுபவிக்க வேண்டும்.
ஆயர், மேய்ப்பர், மூப்பர் ஆகியவர்களில் யாராவது சித்திரவதையின்போது விசுவாசத்தை மறுத்திருந்தால், அவர்களின் பதவி பறிக்கப்படும். (வேறு வார்த்தைகளில் சொல்வதானால், விசுவாசத்தை மறுத்த ஒருவர் ஆயராகவோ, மூப்பராகவோ, மேய்ப்பராகவோ இருக்க முடியாது.)
ஆயர்களோ, மூப்பர்களோ, நற்செய்தியாளர்களோ தங்களுடைய நகரிலிருந்து இன்னொரு நகருக்குப்போய் அதிகாரப்பூர்வ அதிகாரத்தைச் செயல்படுத்தக்கூடாது. அவர்கள் தங்களுடைய நகரத்திற்கும், சபைக்கும் திரும்பவேண்டும்.
தேவனுடைய பணியாளர்கள் தங்கள் பணத்தை வட்டிக்குக்குக் கொடுக்கக்கூடாது. மாதத்துக்கு 1% அல்லது ஆண்டுக்கு 12% வட்டி என்று வட்டிக்குக்குக் கொடுக்கக்கூடாது. தங்கள் பணத்தை வட்டிக்குக் கொடுப்பவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.”
நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சபை எப்படிப்பட்ட காரியங்களைச் சந்தித்தது என்பதை இந்தத் தீர்மானங்களின்மூலம் தெரிந்தகொள்ள முடிகிறது. ஆனால், எல்லாவற்றையும்விட முக்கியமான காரியம் என்னவென்றால் நைசியா பொதுச்சங்கம் சபை வரலாற்றின் ஒரு புதிய நாள், புதிய தொடக்கம், என்பதை மறுக்க முடியாது.
அது என்ன புதிய நாள்? முன்பு சித்திரவதை செய்யப்பட்டு, கிழிந்த ஆடைகளை அணிந்த இயேசு கிறிஸ்துவின் சீடர்கள், இப்போது ஊதா நிற அரச உடை அணிந்த பேரரசர்களின் மதிப்புக்குரிய ஆலோசகர்களானார்கள். ஒரு காலத்தில் இகழப்பட்ட மதம் இப்போது, நைசியா பொதுச்சங்கத்தில் அரசு மதமாக ஆகிக்கொண்டிருக்கிறது.
4. கல்சிடான் பொதுச்சங்கம் (A.D. 451)
நைசியா பொதுச்சங்கத்தைப்பற்றிய விவரங்களை இத்தோடு நிறுத்திவிட்டு, இனி இயேசுவின் மனிதத்துவத்தைப்பற்றிய விவாதத்தைப்பற்றியும், பின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த கல்சிடான் பொதுச் சங்கத்தைப்பற்றியும் பார்ப்போம்.
4.1 புதிய சவால் – கிறிஸ்துவின் மனிதத்துவம்
நைசியா பொதுச்சங்கத்திற்குப்பின் சுமார் நூறு ஆண்டுகள் கழித்து, இன்னொரு இறையியல் சவால் எழுந்தது. இந்த முறை விவாதம் இயேசுவின் மனிதத்துவத்தின் இயல்பைப்பற்றியது. நைசியா பொதுச்சங்கத்தின் பிரதானமான விவாதம் இயேசுவின் தெய்வீகத்தைப்பற்றியது. கல்சிடான் பொதுச்சங்கம் இயேசுவின் மனிதத்துவத்தைப்பற்றியது. இதற்கிடையில் இயேசு தேவன் என்று ஏறக்குறைய அனைவரும் பொதுவாக ஒப்புக்கொண்டார்கள், விசுவாசித்தார்கள். அதில் பொதுவாக யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், அவருடைய மனிதத்துவத்தைப்பற்றிய கேள்வி மக்களிடையே எழத்தொடங்கியது.
சில இடங்களில், இயேசுவின் தெய்வீகத்தை எந்த அள்வுக்கு வலியுறுத்தினார்கள் என்றால், அவர் மனிதன் என்ற உண்மையை மறந்துவிட்டார்கள் அல்லது மறுக்க ஆரம்பித்தார்கள். அவருடைய தெய்வீகத்தைப்பற்றிய போதனை அவருடைய மனிதத்துவத்தை முழுவதும் விழுங்கிவிட்டது என்றுகூடக் கூறலாம். அதனால் இயேசு மனிதன் இல்லை என்ற எண்ணம் எழுந்தது.
4.2 தவறான போதனைகள்
"இயேசு உள்ளாகத் தேவன். வெளியே இருந்த மனித உடல் ஓடு மட்டுமே," என்று சிலர் போதித்தார்கள். "அவர் உண்மையான மனிதன் அல்ல; வெளியே ஒரு மனிதனைப்போல் தோன்றினார். அவ்வளவே," என்பதே இதன் பொருள். இந்தக் கருத்தை அப்பொல்லினரியஸ் என்பவர் போதித்தார்; அந்தப் போதனை அப்பொல்லினரியனிசம் (Apollinarianism) என்று அழைக்கப்பட்டது. “இயேசு சம அளவில் மனிதத்துவமும் தெய்வீகமும் உடையவர் இல்லை; அவர் ஒரேவோர் இயல்புடைய ஒரு நபர்; அவருக்கு ஒரேவொரு இயல்பு மட்டுமே உண்டு; அவருடைய மனித இயல்பு அவருடைய தெய்வீக இயல்புக்குள் முழுவதும் மறைந்துவிட்டது, ஈர்த்துக்கொள்ளப்பட்டது, உட்கிரகித்துக்கொள்ளப்பட்டது," என்று போதித்தார்கள், நம்பினார்கள். இதைக் குறித்து நாம் முன்பே சுருக்கமாகப் பார்த்திருக்கிறோம்.
இன்னொரு சவால் monophysitism என்ற ஓரியல்புவாதம். mono என்றால் “ஒன்று,” physis," என்றால் “இயல்பு” அல்லது “சுபாவம்” என்று பொருள். இயேசுவுக்கு தெய்வீக இயல்பு என்ற ஒரேவோர் இயல்பு மட்டுமே உண்டு. அவரிடம் தெய்வீக இயல்பும், மனித இயல்பும் இணைந்த ஓர் இயல்பு இருந்திருந்தால் அவருடைய மனித இயல்பு அவருடைய தெய்வீக இயல்பால் விழுங்கப்பட்டிருக்கும் என்பது இவர்களுடைய போதனை.
4.3 கல்சிடான் பொதுச்சங்கம்
கல்சிடான் பொதுச்சங்கம் நைசியா பொதுச்சங்கத்திற்குப்பின் சுமார் 125 ஆண்டுகளுக்குப்பின் கி.பி. 451ஆம் ஆண்டு சபைகளில் நிலவிய கடுமையான அரசியல் சண்டைகளுக்கும், விரோதங்களுக்கும் தீர்வு காண்பதற்காகக் கூட்டப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவம் உரோமப் பேரரசின் பேராதரவைப் பெற்ற மதமாக மாறிவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சபையில் இருந்த வேதப்புரட்டுக்கும், குழப்பத்துக்கும், போட்டி பொறாமைக்கும் தீர்வு காண சுமார் 400 ஆயர்கள் கல்சிடானில் கூடினார்கள். அவர்கள் பின்வரும் அறிக்கையில் கையெழுத்துப்போட்டார்கள்.
"இயேசு கிறிஸ்து முழுமையான தெய்வீகம், முழுமையான மனிதத்துவம் ஆகிய இரண்டு தன்மைகளைக்கொண்ட ஒரு நபர். எந்தக் குழப்பமோ, எந்த மாற்றமோ, எந்தப் பிரிவினையோ, எந்தப் பிரிவோ இல்லாமால் இந்த இரண்டு தன்மைகளும் இயேசு கிறிஸ்து என்ற நபரில் உள்ளன," என்று அவர்கள் சொன்னார்கள். எளிமையாகச் சொல்வதானால், "இயேசு ஒரே தேவன்—அவர் தேவனும் மனிதனும் ஆவார். இவர் தெய்வீகம், மனிதத்துவம் என்ற இரண்டு இயல்புகளைக்கொண்ட ஒருவராக இருக்கிறார். ஓர் இயல்பு இன்னொரு இயல்பை விழுங்கவில்லை. அதுபோல, அவர் இரண்டு தனி நபர்களாகவும் இல்லை—பிரிந்த தன்மையுடன் இருந்ததும் இல்லை," என்று இவர்கள் சொன்னார்கள். இதை விளக்குவதற்காகக் கல்சிடான் பொதுச்சங்கம் பயன்படுத்திய ஹோமொயவுசியஸ் (homoiousios) என்ற வார்த்தை மிகவும் சுவாரஸ்யமானது, கவனிக்கத்தக்கது. இந்த வார்த்தையின் பொருள் “ஒத்த சாரமுடையவர்”.
இந்த வார்த்தையை நைசியா பொதுச்சங்கம் நிராகரித்தது. இதை நான் தெளிவாக்க விரும்புகிறேன்: ஹோமோவுசியஸ் (homoousios) என்ற வார்த்தைக்கு “ஒரே சாராம்சம்” அல்லது "அதே சாராம்சம்" என்று பொருள். பிதாவாகிய தேவனைப்போலவே, இயேசுவும் தேவன், இருவரும் ஒரே சாராம்சமுடையவர்கள் என்பதை விளக்குவதற்காக நைசியாவில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. "இயேசு தேவனா இல்லையா?" என்ற வாதம்தான் நைசியாவில் பிரதானமான பிரச்சினை. ஆனால், கல்சீடானில், “ஒரே சாராம்சம்” என்பதற்குப் பதிலாக “ஒத்த சாராம்சம்" என்று பொருள்படும் ஹோமொஐவுசியோஸ் (homoiousios) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். இந்த வார்த்தையைப் பயன்படுத்தவேண்டும் என்றுதான் நைசியாவில் ஏரியஸ் வாதாடினார். ஆனால், அங்கு இந்த வார்த்தை நிராகரிக்கப்பட்டது. அங்கு, ஏரியவாதத்துக்கு எதிராக, அதாவது இயேசு பிதாவாகிய தேவனின் சாராம்சத்தையுடையவர் இல்லை என்ற கூற்றை முறியடிக்க வேண்டியிருந்தது.
கல்சிடான் பொதுச்சங்கத்தில் இயேசு கிறிஸ்து யார் என்பதைக்குறித்து நான்கு முக்கியமான விஷயங்கள் தெளிவாகக் வரையறுக்கப்பட்டன. ஒரு காரியத்தை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்: இந்தச் சத்தியங்கள் கல்சிடான் பொதுச்சங்கத்தால் உருவாக்கப்படவில்லை. இவை தேவன் தம்மை இயேசு கிறிஸ்துவிலும், அவருடைய நித்தியமான, நிலையான வார்த்தையிலும் ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்டிருந்தன. அவை இப்போது வேதப்புரட்டுக்களுக்கு எதிராகத் தெளிவுபடுத்தப்பட்டன.
4.4 நான்கு முக்கியமான உறுதிப்பாடுகள்
கல்சிடான் பொதுச்சங்கத்தில் தெளிவுபடுத்தப்பட்ட நான்கு விஷயங்கள் இவை: 1. Arianism என்ற ஏரியவாதத்துக்கு எதிராக — இயேசு கிறிஸ்துவின் முழுமையான தெய்வீகம் உறுதிப்படுத்தப்பட்டது.
2. Apollinarianism என்ற (Apollinarianism)அப்பொல்லினரியவாதத்துக்கு எதிராக — இயேசு கிறிஸ்துவின் முழுமையான மனிதத்துவம் உறுதிப்படுத்தப்பட்டது.
3. நெஸ்டோரியனிசம் என்ற (Nestorianism) நெஸ்டோரியவாதத்துக்கு எதிராக — கிறிஸ்து ஒரே நபர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
4. monophysitism என்ற ஓரியல்புவாதத்துக்கு எதிராக —கிறிஸ்துவின் தெய்வீகமும் மனிதத்துவமும் தனித்தனியாகவே நிலைத்திருந்தன; ஒன்றாகக் கலக்கப்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
4.5 கல்சிடானின் முக்கியத்துவம்
ஆக, கிறிஸ்தவப் பேரரசின் காலத்தின் முதல் பகுதியில் நடந்த இந்தப் பொதுச்சங்கங்களின்மூலமாக கிறிஸ்துவின் தெய்வீகமும், மனிதத்துவமும் உறுதிப்படுத்தப்பட்டன. ஏரியவாதம், அப்பொல்லினரியவாதம், நெஸ்டோரியவாதம், ஓரியல்புவாதம் போன்ற தவறான போதனைகள் தெளிவாக நிராகரிக்கப்பட்டன. சபை வரலாற்றில், இயேசு கிறிஸ்துவின் நிஜமான அடையாளமும் இயல்பும் தெளிவாக வரையறுக்கப்பட்டன. வேதாகமம் வெளிப்படுத்தும் இயேசுவைப்பற்றிய சத்தியம் சபைமுழுவதும் ஒருமனதாக உறுதிசெய்யப்பட்டது. கிறிஸ்தவப் பேரரசின் தொடக்கத்தில் நடந்த இவை, வருங்கால தலைமுறைகளுக்கும் அடிப்படை வழிகாட்டுதலாக அமைந்தன.
5. ஜெரோம் & லத்தீன் வுல்காத்தே
இதுவரை நாம் நைசியா பொதுச்சங்கத்தையும், கல்சிடான் பொதுச்சங்கத்தையும்பற்றிப் பார்த்தோம். இப்போது இந்தப் பாகத்தில் கடைசியாக ஜெரோம் என்ற முற்பிதாவையும், இலத்தீன் மொழிபெயர்ப்பையும்பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.
5.1 ஜெரோம் யார்?
ஜெரோம் என்ற முற்பிதாவே வேதாகமத்தை அக்காலத்தின் பொதுமொழியான இலத்தீனுக்கு மொழிபெயர்த்தார். இது கிறிஸ்தவ வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும்.
ஆயிரம் வருடங்கள் இலத்தீன் வுல்காத்தே மொழிபெயர்ப்பையே உலகெங்கும் இருந்த கிறிஸ்தவர்கள் மிக முக்கியமான வேதாகமமாகப் பயன்படுத்தினார்கள்; அது எதிர்கால மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமைந்தது.
நாம் ஜெரோம் என்று கூறுகிற முற்பிதாவின் முழுப் பெயர் Eusebius Sophronius Hieronymus யூசீபியஸ் சோஃப்ரோனியஸ் ஹையெரோனிமஸ்; அவர் கி.பி. 347ஆம் ஆண்டு இத்தாலியின் டால்மேஷியா/பன்னோனியா எல்லையிலுள்ள, இன்றைய குரோஷியா/ஸ்லோவேனியா பகுதியிலுள், ஸ்ட்ரிடோனில் (Stridon). பிறந்தார். அவர் “ஜெரோம்”என்ற பட்டப்பெயரைத் தரித்துக்கொண்டார். அவர் மிகவும் ஒழுக்கமான பண்டிதர்; கடுமையான துறவி. ஓர் இரவு அவர் ஒரு கனவு கண்டார்; அதில் ஒருவர், "உலகியல் கல்வி கற்பதில்தான் நீ அதிகமாக ஈடுபட்டிருக்கிறாய். நீ உரோமத் தத்துவஞானி சிசெரோவின் சீடன்; நீ கிறிஸ்துவின் சீடன் அல்ல,” என்று சொன்னார்.
அந்தக் கனவின் காரணமாக, ஜெரோம் சிரியா பாலைவனத்துக்குச் சென்று துறவியாக வாழ்ந்தார்; அங்கு அவர் வேதங்களைப் படித்து, அதை நகலெடுத்து, எபிரேய மொழியில் புலமை பெற்றார். பின்னர், கி.பி. 382ஆம் ஆண்டு அவர் உரோமப் பேராயர் டமாசஸின் உதவியாளராக ஆனார். அந்த நேரத்தில் ஜெரோம்தான் உலகின் தலைசிறந்த கிறிஸ்தவ அறிஞராகக் கருதப்பட்டார்.
5.2 புதிய லத்தீன் மொழிபெயர்ப்பு
ஜெரோம் வாழ்ந்த காலத்தில், புதிய ஏற்பாடு எழுதப்பட்டுள்ள பொதுக் கிரேக்கம் உரோமப் பேரரசில் வாழ்ந்தவர்களுக்குப் பரவலாகத் தெரிந்திருந்தது. எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்த பழைய ஏற்பாடு Septuagint “செப்துவாஜிந்த்”என்று அழைக்கப்படும் பிரபலமான கிரேக்க வடிவில் அப்போது இருந்தது. ஆகவே, கிரேக்கம் தெரிந்தவர்கள் முழு வேதாகமத்தையும் படிக்க முடிந்தது. ஆனால், உரோமப் பேரரசில் கிரேக்கம் தெரியாதவர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். நாட்கள் செல்லச்செல்ல கிரேக்கம் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்தக் காலகட்டத்தில்தான் மேற்கத்திய உரோமப் பேரரசின் ஆட்சி மொழியாகிய இலத்தீனிலும், சிரியக், காப்டிக் மொழிகளிலும் வேதாகமம் வெளிவரத் தொடங்கியது. கி.மு. 250முதல் 150வரையிலான காலகட்டத்தில் எகிப்தின் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்த யூத அறிஞர்கள் எபிரேய மொழியில் இருந்த பழைய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தார்கள். இது செப்துவாஜிந்த் (Septuagint) என்று அழைக்கப்படுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எடெசா நகரில், (இன்றைய துருக்கி), வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டைப் பெரும்பாலும் எபிரேயத்திலிருந்தும், சில பகுதிகளை கிரேக்க செப்துவாஜிந்திலிருந்தும், புதிய ஏற்பாட்டை கிரேக்கத்திலிருந்தும் சிரியக் (Peshitta) மொழியில் மொழிபெயர்த்தார்கள். கி.பி. 3ஆம் நூற்றாண்டில் எகிப்தில் வாழ்ந்த அறிஞர்கள் பழைய ஏற்பாட்டை செப்துவாஜிந்திலிருந்தும், புதிய ஏற்பாட்டை கிரேக்கத்திலிருந்தும் காப்டிக் மொழியில் மொழிபெயர்த்தார்கள்.
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இத்தாலியிலும், வட ஆப்பிரிக்காவிலும் வாழ்ந்த சில கிறிஸ்தவர்கள் வேதாகமத்தைக் கிரேக்க செப்துவாஜிந்திலிருந்து இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்கள். தனிநபர்கள் மொழிபெயர்த்தார்கள். நாளடைவில், இவ்வாறு, பல இலத்தீன் மொழிபெயர்ப்புகள் வரத்தொடங்கின. இந்த மொழிபெயர்ப்பு Vetus Latina என்றழைக்கப்படுகிறது. இது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக தனிநபர்கள் மொழிபெயர்த்தார்கள். ஆனால், இவை பொதுவெளியில் கிடைத்தது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பிலும் வேறுபாடுகளும், பல குறைகளும் இருந்தன. ஆர்வத்தின் காரணமாக மொழிபெயர்த்தார்கள். ஆனால், மொழிபெயர்த்தவர்களின் கிரேக்க அறிவு மிகவும் குறைவு. எனவே, அவர்களுடைய இலத்தீன் மொழிபெயர்ப்புகளின் தரம் உயர்ந்தது என்று சொல்ல முடியாது. அவர்களுடைய கிரேக்கப் புலமையின் தரக்குறைவினால் அவர்களுடைய இலத்தீன் மொழிபெயர்ப்புகளின் தரமும் குறைவாகவே இருந்தன. அது மட்டும் அல்ல. வேதாகமத்தின் பல பகுதிகளை பல இலத்தீன் மொழிபெயர்ப்பாளர்கள் வித்தியாசமாக மொழிபெயர்த்தார்கள். பல பகுதிகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தன.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஜெரோம் அன்றைய உரோமப் பேராயர் டமாசசுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்.
“நாம் நம் விசுவாசத்தை மொழிபெயர்க்கப்பட்ட இலத்தீன் உரையில் வைத்தால், எது சரி எது தவறு என்பதை நம் எதிரிகள் முடிவுசெய்யவேண்டிய நிலை ஏற்படும். ஏனென்றால், எத்தனை பிரதிகள் உள்ளனவோ, அத்தனை வேறுபட்ட உரை வடிவங்களும் உள்ளன. எல்லா உரைவடிவங்களையும் ஒப்பிட்டு எது சரி, எது தவறு என்று தீர்மானிப்பதற்குப்பதிலாக நாம் ஏன் மூலமொழியோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது? குறைந்த கிரேக்க அறிவுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்தபோது தவறிழைத்திருக்கிறார்கள், வேறு சிலர் மிகுந்த தன்னம்பிக்கையோடு ஆனால் அறியாமையினால் மொழிபெயர்த்து தவறிழைத்திருக்கிறார்கள், இன்னும் சிலர் அறியாமையால் தவறிழைத்திருக்கிறார்கள். மேலும் நகல் எடுத்தவர்கள் விழிப்புடன் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை சரியாக எழுதாமல் கவனக்குறைவால், தூங்கிக்கொண்டு எழுதியிருந்தால் வரிகளை விட்டிருப்பார்கள், வார்த்தைகளை சேர்த்திருப்பார்கள். தங்களை அறியாமேல் வாக்கியங்களை மாற்றியிருப்பார்கள்"
ஜெரோம் உரோமப் பேராயரிடம் சொன்ன வார்த்தைகளின் பொருள் என்னவென்றால், "நம்மிடம் இருக்கும் இலத்தீன் மொழிபெயர்ப்புகள் மிகவும் மோசமானவை; இவைகளை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. நமக்கு ஒரு புதிய மொழிபெயர்ப்பு தேவை. நல்லதொரு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்." ஆகவே, வேதாகமத்தைப் இலத்தீன் மொழியில் திரும்ப மொழிபெயர்க்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பொறுப்பு ஜெரோமிடம் ஒப்படைக்கப்பட்டது. புதிய மொழியாக்கம் செய்வதற்குப் பல காரணங்கள் இருந்தன. அதில் ஒன்று மேற்கத்தியக் கிறிஸ்தவத்தை அவர்கள் வலுப்படுத்த விரும்பினார்கள். அந்தக் காலகட்டத்தில் கிரேக்கமொழி பரவியிருந்தது, கிரேக்கக் கலாச்சாரம் – மேலோங்கியிருந்தது. அவர்கள் கிறிஸ்தவத்தைக் கிழக்கத்திய கிரேக்கத்தின் தாக்கத்திலிருந்து விலக்கி மேற்கத்திய சார்புடையதாக்க விரும்பினார்கள். இதுவும் ஒரு காரணம்.
5.3 வேலை எப்படி நடந்தது
ஜெரோம் கி.பி. 382இல் உரோமில் தங்கி வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்கினார். முதலாவது ஜெரோம் நான்கு நற்செய்திகளை கிரேக்க உரைகளோடு ஒப்பிட்டுத் திருத்தினார். அதே நேரத்தில், உரோமிலிருந்த விதவைகளுக்கும் பெண்களுக்கும் கடுமையான துறவற வாழ்க்கையைப் போதித்தார். அந்தக் குழுவில் இருந்த ஒரு சகோதரி அளவுக்கு மீறிய அல்லது ஞானமற்ற உபவாசத்தால் உயிரிழந்ததால் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, ஜெரோம் கி.பி. 384இல் உரோமிலிருந்து வெளியேறி பெத்லெகேமில் குடியேறினார். அங்கு அவர் எபிரேயம், கிரேக்கம் மொழிகளை இன்னும் அதிகமாகக் கற்றுத் தேர்ந்து, வேதாகமத்தை இலத்தீனில் மொழிபெயர்த்தார்; அதே நேரத்தில் அங்கு அவர் ஒரு சந்நியாச மடத்தை நடத்தினார். உரோமிலிருந்து அங்கு குடிபெயர்ந்த சில பெண்களுக்குத் துறவற வாழ்க்கையை மீண்டும் போதித்தார்.
ஜெரோம் 23 ஆண்டுகள் கடினமாக உழைத்து, கி.பி. 404ஆம் ஆண்டில் இலத்தீன் மொழிபெயர்ப்பைப் பூர்த்திசெய்தார். (சிலர் 405 என்று கூறுகிறார்கள்). 23 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: ஒன்று, அவர் தனியாகவே மொழிபெயர்த்தார். இரண்டு, அந்தக் காலத்தில் அவர் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் வேலையை மட்டும் செய்யவில்லை. வேறு பல வேலைகளும் செய்தார்.
ஆரம்பத்தில், ஜெரோம் பழைய ஏற்பாட்டை Septuagint செப்துவாஜிந்த் என்ற கிரேக்க மொழி வேதாகமத்திலிருந்து மொழிபெயர்த்தார். ஆனால் பின்னர், எல்லா நல்ல மொழிபெயர்ப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நேரடியாக எபிரேய மூல உரையிலிருந்து மொழிபெயர்த்தார். மொழிபெயர்த்தபோது புரிந்துகொள்ள முடியாத எபிரேய உரையின் பொருளை அறிய அவர் யூத ரபீக்களை அணுகினார். யூத ரபீக்களிடம் ஆலோசனை பெற்று எபிரேய உரைகளைப் புரிந்துகொண்டார்.
5.4 அப்போகிரிஃபா / டீட்ரோ-கேனனிகல் நூல்கள்
பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்தபோது, ஒரு விஷயம் ஜெரோமுக்கு அதிர்ச்சியாக இருந்தது. யூதர்கள் பரிசுத்த வேதாகமமாகக் கருதிய நூல்களில், நாம் இன்று தள்ளுபடி ஆகமங்கள் என்று சொல்லுகிற அப்போகிரிஃபா என்று நூல்கள் சேர்க்கப்படவில்லை. அந்த நூல்கள் Septuagint செப்துவாஜிந்த் என்ற கிரேக்க மொழி வேதாகமத்தில் இடம்பெற்றிருந்தன. எனவே, கிறிஸ்தவ சபைகளில் அவை பொதுவாகப் படிக்கப்பட்டன. ஆனால் அவை யூதர்களால் அக்காலத்தில் வேதாகம நூல்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நூல்கள் ஏவப்பட்ட வேத நூல்கள் அல்ல என்று ஜெரோம் நம்பினார். ஆனாலும், பேராயர் டமாசசின் அழுத்தத்தினாலும், அக்கால சபைகளின் எதிர்பார்ப்பினாலும், அவை வுல்காத்தேயில் (Vulgate) இடம்பெற்றன.
ஜெரோம் தன் மொழிபெயர்ப்பில் முன்னுரையில் அவைகளை “சபையில் வாசிக்கப் பயன்படும் நூல்கள்”(ecclesiastical books), வேதாகமக் கொள்கை நிறுவப் பயன்படாதவை என்று கூறினார் "Apocryphal நூல்கள் சபையின் நூல்களாக மட்டும் ஏற்றுக்கொள்ளலாம்; அவை முழுமையாக ஏவப்பட்டு எழுதப்பட்ட நூல்கள் இல்லை; அவை பரிசுத்த வேத எழுத்துக்கள் இல்லை," என்பதே ஜெரோமின் கருத்து. இன்னும் சொல்லப்போனால், வுல்காத்தேயில் இடம்பெற்ற தள்ளுபடி நூல்களை ஜெரோம் மொழிபெயர்க்கவில்லை. ஏற்கெனவே இலத்தீன் மொழிபெயர்ப்புகளில் இருந்த சிறந்த மொழிபெயர்ப்பைத் தன் மொழிபெயர்ப்பில் சேர்த்துக்கொண்டார். ஏனென்றால், ஜெரோம் பழைய ஏற்பாட்டை எபிரெயத்திலிருந்து மொழிபெயர்த்தார். எபிரெயத்தில் இந்த தள்ளுபடி நூல்கள் இருக்கவில்லை. அப்படியானால் எங்கிருந்து மொழிபெயர்ப்பது? கிரேக்க செப்துவாஜிந்திலிருந்துதானே! அவர் அதைச் செய்யவில்லை.
ஜெரோமின் நிலைப்பாட்டைப் பின்பற்றி, சீர்திருத்தக் காலத்தின் தலைவர்கள் அப்போகிரிஃபாவை புரொட்டஸ்டண்ட் வேதாகமத்தில் சேர்க்காமல் நீக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்தது.
ஜெரோம் வேதாகமத்தை இலத்தீனில் மொழிபெயர்த்ததால், இறுதியாக மேற்கத்திய உரோமப் பேரரசின் மிக முக்கியமான மொழியில், நன்றாக எழுதப்பட்ட, துல்லியமான மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் கிடைத்தது.
ஆனால், உரோமன் கத்தோலிக்க சபை அவைகளை Deuterocanonical நூல்களாக ஏற்றுக்கொண்டது; அதனால் இன்றளவும் வுல்காத்தேயிலும், கத்தோலிக்க வேதாகமத்திலும் அவை உள்ளன.
5.5 விளைவும் மரபும்
ஜெரோமின் அந்த மொழிபெயர்ப்பு Vulgate வுல்காத்தே என்று அழைக்கப்படுகிறது. வுல்குஸ் (vulgus) என்றால் “பொது” அல்லது “சாதாரணம்” என்று பொருள். அது எல்லாருக்கும் உரிய பொதுமொழி. அதுவே மேற்கத்திய உலகின் தரமாக மாறியது.
ஜெரோம் மொழிபெயர்த்த இலத்தீன் வுல்காத்தேயின் அருமைக்கு ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். மார்ட்டின் லூத்தருக்கு எபிரேயமும், கிரேக்கமும் நன்றாகத் தெரியும். ஜெர்மன் வேதாகமத்தை மூலமொழியிலிருந்துதான் அவர் மொழிபெயர்த்தார். ஆயினும் அவர் ஜெரோமின் இலத்தீன் உல்காத்தேயிலிருந்தே அடிக்கடி மேற்கோள் காட்டினார். ஜெரோமின் மொழிபெயர்ப்பு வேதவல்லுனர்களால் மிக உயர்வாக மதிக்கப்பட்டது; கிறிஸ்தவ உலகில் ஆயிரம் ஆண்டுகள் ஜெரோமின் மொழிபெயர்ப்பே கிறிஸ்தவர்களின் பயன்பாட்டில் இருந்தது.
ஜெரோமின் வுல்காத்தே எவ்வளவு பரவலாக மதிக்கப்பட்டது என்றால், சீர்த்திருத்தக்காலம் வரை, மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் எபிரேயமும் கிரேக்கமும் இல்லாமல், இலத்தீன் வுல்காத்தேயிலிருந்தே பிற மொழிகளில் மொழியாக்கம் செய்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் கிரேக்க புதிய ஏற்பாட்டிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கத் தொடங்கினார்கள்.
ஜெரோம் வேதாகமத்தை இலத்தீனில் மொழிபெயர்த்திருந்தார். மேற்கத்திய சபையில் வழிபாட்டு மொழியும் அப்போது இலத்தீன்தான். எனவே, இலத்தீனின் ஆதிக்கம் மேலோங்கியது. இலத்தீனின் பயன்பாடு அதிகரித்தது. வேதாகமம் சாமான்ய மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான் ஜெரோம் வேதாகமத்தை இலத்தீனில் மொழிபெயர்த்ததற்குக் காரணம். அன்று பெரும்பாலோர் இலத்தீன் பேசினார்கள். இதில் விசித்திரமான காரியம் என்னவென்றால், பல நூற்றாண்டுகளுக்குப்பிறகும், மக்களுக்குப் புரியாத இலத்தீன் மொழியில்தான் ஆராதனைகள் நடத்தப்பட்டன; அவர்களுக்குப் புரியாத இலத்தீன் வேதாகமமே அவர்களுடைய கையில் இருந்தது. இது ஜெரோம் வேதாகமத்தை மொழிபெயர்த்த நோக்கத்திற்கு முற்றிலும் முரணானது. மக்களுக்குப் புரிந்த மொழியில் வேதாகமம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் மொழிபெயர்த்தார். நாளடைவில் நோக்கமும், குறிக்கோளும் மாறின.
5.6 “எந்தெந்த ஆண்டு?” – சுருக்க டைம் லைன்
எப்படி இருந்தாலும் சரி, ஜெரோமின் இலத்தீன் வுல்காத்தே மொழிபெயர்ப்பு சபை வரலாற்றில், முக்கியமாக மேற்கத்திய சபை வரலாற்றில், குறிப்பிடத்தக்க ஒரு மாபெரும் சாதனை. ஆயினும், அவருடைய மொழிபெயர்ப்பு தவறே இல்லாத முழுமையானது என்று சொல்ல முடியாது. அவர் தவறாகவும், மிகவும் பலவீனமாகவும் மொழிபெயர்த்த சில இடங்கள் உள்ளன. ஆனாலும், மொத்தத்தில், அது ஓர் அதிசயமான சாதனை—பல நூற்றாண்டுகளுக்குக் கிறிஸ்தவத்தில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
கி.பி. 382 இல் உரோமப் பேராயர் டமாசசின் செயலாளராக நியமிக்கப்பட்டார்; நற்செய்திகளைத் திருத்தத் தொடங்கினார். கி.பி. 386இல் பெத்லெகேமில் துறவற மடங்களை நிறுவினார்; மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்ந்தார். கி.பி. 405இல் இலத்தீன் வுல்காத்தேயின் பெரும்பகுதி பூர்த்தியாகியது. கி.பி. 420இல் ஜெரோம் மறைந்தார். ஜெரோம் கிறிஸ்தவ உலகிற்கு ஒரு மாபெரும் சொத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.
6. நிறைவுரை
அன்பானவர்களே!
இது கி.பி. 312 முதல் 1500 வரை பரந்துவிரிந்த “கிறிஸ்தவப் பேரரசின் காலம்.” அதில் கி.பி. 312 முதல் சுமார் 1000 வரையிலான முதல் பகுதியை நாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைய இந்தப் பாகம் உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். நைசியா, கல்சிடான் பொதுச்சங்கங்களும், ஜெரோமின் இலத்தீன் வுல்காத்தேயும் கிறிஸ்தவ வரலாற்றில் எவ்வளவு முக்கியமானவை என்பதை நாம் தெளிவாகக் கண்டோம்.
இதோடு “சபை வரலாறு” தொடரின் பன்னிரெண்டாம் பாகம் நிறைவடைகிறது. அடுத்த முறை நாம் கிறிஸ்தவப் பேரரசின் வரலாற்றைத் தொடர்ந்து பயிலும் போது, இன்னும் ஆழமான, சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்க்கப் போகிறோம்.
கர்த்தர் நம் விசுவாசத்தை வலுப்படுத்துவாராக!