Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

இந்தப் பாகத்தில் ஆரம்ப சபை வரலாற்றில் மிக முக்கியமான மூன்று மனிதர்களின் வாழ்க்கையும், அவர்களுடைய சாட்சியையும் பார்க்கிறோம் —அத்தனேசியஸ், ஜான் கிறிஸோஸ்டம், அகஸ்தீன். 

அத்தனேசியஸ் கிறிஸ்து யார் என்ற சத்தியத்தைக் காத்தார். 

கிறிஸோஸ்டம் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தினார். 

அகஸ்தீன் ஒரு பாவி எப்படி இரட்சிக்கப்படுகிறான் என்பதைத்  தெளிவுபடுத்தினார். 

இந்த மூன்று உண்மைகள்—கிறிஸ்து, வாழ்க்கை, கிருபை—சபையின் அடித்தளமாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் காணொளி  வெளிப்படுத்துகிறது.

 

14 - அத்தனேசியஸ்ஜான் கிறிஸோஸ்டம்அகஸ்தீன்.

கிறிஸ்தவப் பேரரசு – ஆரம்ப காலம்

அன்புக்குரிய பரிசுத்தவான்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் எல்லாரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

நாம் இதுவரை சபை வரலாற்றைப்பற்றிய இந்தத் தொடரில் 13 பாடங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் 14ஆவது பாடத்திற்கு வருகிறோம்.

இதுவரை பார்த்ததுபோலவே, இந்தப் பாடத்திலும் சபை வரலாற்றில் நடந்த மிக முக்கியமான ஒரு திருப்பத்தைப் பார்க்கப்போகிறோம். அது கிறிஸ்தவம் துன்புறுத்தப்பட்ட மதமாக இருந்த காலத்திலிருந்து, அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதமாக மாறிய காலம்—அதாவது கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலம். இந்தக் காலத்தில் தேவன் எழுப்பிய மூன்று முக்கியமான மனிதர்களை நாம் பார்க்கப்போகிறோம்.

ஆனால், அதற்குமுன்பு ஒரு கேள்வி.

ஒரு காலத்தில் கிறிஸ்தவனாக இருப்பது ஒரு குற்றமாகக் கருதப்பட்டது என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? இயேசுவை விசுவாசித்ததற்காக மக்கள் கைது செய்யப்பட்டார்கள். சித்திரவதை செய்யப்பட்டார்கள். சிலர் உயிரையே இழந்தார்கள்.

ஆனால், வரலாற்றில் ஓர் அதிசயமான திருப்பம் வந்தது. சில தசாப்தங்களுக்குள் அதே கிறிஸ்தவம்—ஒடுக்கப்பட்ட மதத்திலிருந்து பேரரசின் மதமாக மாறியது.

ஆனால், அந்த வெற்றியோடு ஒரு புதிய போராட்டமும் தொடங்கியது. அந்தப் போராட்டத்தில் மிக முக்கியமாக மூன்று மனிதர்கள் சபையின் சத்தியத்தைக் காத்தார்கள்.

ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள். நூற்றாண்டுகளாகத் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவம், ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவம், ஒளிந்து வாழ வேண்டியிருந்த கிறிஸ்தவம்—ஒரே காலகட்டத்தில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட மதமாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட மதமாகவும், அரசால் ஆதரிக்கப்பட்ட மதமாகவும் மாறினால்… எப்படி இருக்கும்?

இதுதான் கிறிஸ்தவத்துக்கும் நேர்ந்தது. இனி மறைவிடங்களில் கூட வேண்டிய அவசியம் இல்லை. “நீ கிறிஸ்தவனா?” என்ற கேள்விக்குப் பயத்தோடு பதில் சொல்ல வேண்டிய காலம் முடிந்தது.

இதுதான் நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்தது. கி.பி. 312ஆம் ஆண்டுக்குப்பிறகு, கான்ஸ்டன்டைன் பேரரசரின் காலத்தில், கிறிஸ்தவம் உரோமப் பேரரசின் விளிம்பிலிருந்து அதன் மையத்திற்கு வந்தது. சபைகள் வெளிப்படையாகக் கட்டப்பட்டன. ஆயர்கள் சுதந்திரமாகப் பேச முடிந்தது. வேதாகமம் பயமின்றி நகலெடுக்கப்பட்டது.

ஆனால், இந்தப் பெரிய வெற்றியோடு ஒரு புதிய, மிக நுணுக்கமான ஆபத்தும் வந்தது. முன்பு கிறிஸ்தவம் சித்திரவதையாலும் துன்புறுத்தல்களாலும் சோதிக்கப்பட்டது. இப்போதும் சோதனைதான்!

ஆனால், சித்திரவதையால் அல்ல. மாறாக—அதிகாரம், புகழ், சமரசம் ஆகியவைகளால் சோதிக்கப்பட்டது.

வெளியிலிருந்து வந்த எதிர்ப்புகள் குறைந்தன. ஆனால், உள்ளிருந்தே பிழைகள், தவறுகள் ஊடுருவத் தொடங்கின. ஒருகாலத்தில் எதிர்க்க முடிந்த தவறுகள், இப்போது அதிகாரத்தின் துணையோடு வேகமாகப் பரவின.

இந்தக் காலகட்டம் — நாம் “கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலம்” என்று அழைக்கும் இந்த யுகம் — வளர்ச்சியின் காலம் மட்டுமல்ல. இது சத்தியம் சோதிக்கப்பட்ட காலம். அப்படிப்பட்ட நேரத்தில்தான் தேவன் சிலரை எழுப்பினார். பெரும்பாலானவர்கள் மிக எளிதாக சமரசம்செய்த காலத்தில் இவர்கள் சத்தியத்துக்காக நின்றார்கள். மௌனமாக இருப்பதுதான் பாதுகாப்பு என்று கருதப்பட்ட காலத்தில் இவர்கள் தைரியமாகப் பேசினார்கள்.

இந்தப் பாடத்தில் அப்படிப்பட்ட மூன்று மனிதர்களைப் பார்க்கப் போகிறோம். ஒவ்வொருவரும் ஒரு விதமான போராட்டத்தை எதிர்கொண்டார்கள்.

ஒருவர் கிறிஸ்து யார் என்ற சத்தியத்தைப் பாதுகாத்தார். இன்னொருவர் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைக் காப்பாற்றினார்.
வேறொருவர் இரட்சிப்பு எப்படிக் கிடைக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

அவர்கள்: அத்தனேசியஸ்ஜான் கிறிஸோஸ்டம்அகஸ்தீன்.

முதல் பகுதியில், முழு உலகத்திற்கெதிராக நின்ற ஒரு மனிதனின் வரலாற்றோடு நாம் தொடங்குகிறோம்.

பகுதி 1 – அத்தனேசியஸ்

கிறிஸ்து யார் என்ற சத்தியத்துக்காக நின்றவர்

அத்தனேசியஸ் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தைச் சேர்ந்தவர். அது ஒரு சாதாரண நகரம் அல்ல. அறிவின் நகரம். தத்துவத்தின் நகரம். வேதாகமம் ஆழமாக ஆராயப்பட்ட நகரம். அதே நேரத்தில், தவறான போதனைகளும் மிக வேகமாகப் பரவிய நகரம்.

இப்படிப்பட்ட அலெக்சாந்திரியாவில்தான் கிறிஸ்தவ விசுவாசத்தையே அதிரவைத்த ஒரு போதனை உருவானது. அதுதான் ஏரியவாதம் (Arianism). இது கிறிஸ்தவ விசுவாசத்தின் மையத்தையே தாக்கியது.

ஏரியவாதிகள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

ஆரம்பகாலக் கிறிஸ்தவர்களிடையே எழுந்த மிக முக்கியமான விவாதங்களில் ஒன்று கிறிஸ்துவின் தெய்வீகத்தைப்பற்றியது. “இயேசு மாம்சத்தில் வந்த மெய்யான தேவனா அல்லது தேவனால் படைக்கப்பட்ட ஒருவரா? இயேசு தேவனா இல்லையா?” என்ற சச்சரவு அங்கு அப்போது நிலவியது.

ஏரியஸ் என்பவர் இயேசுவின் தெய்வீகத்தை மறுத்தார். “இயேசு தேவனால் படைக்கப்பட்ட முதல் படைப்பு; இயேசுவின் இயல்பு பிதாவாகிய தேவனுடைய இயல்புக்கு ஒத்ததாக இருந்தாலும் அதே இயல்பல்ல. இயேசு சில தெய்வீகப் பண்புகளுடன் படைக்கப்பட்ட வரம்புக்குட்பட்ட ஒரு நபர்; அவர் நித்தியமானவர் அல்ல; அவர் தெய்வீகமானவர் அல்ல. இயேசு பிதாவுக்குக் கீழானவர்; அவருக்கு ஆரம்பமும் முடிவும் உண்டு. இயேசு தேவன் அல்ல; தேவனுக்குச் சமமானவர் அல்ல,” என்பதுதான் ஏரியவாதத்தின் சாராம்சம்.

பலருக்கு இது மிக நியாயமானதாகத் தோன்றியது. “தேவன் ஒருவர் என்றால் அவர் எப்படி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக இருக்க முடியும்?” என்று அவர்கள் கேட்டார்கள். “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” (யோவான் 14:28), “அவர்… சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” (கொலோ. 1:15) போன்ற சில வசனங்களை அவர்கள் தங்களுடைய போதனைக்கு ஆதரவாகப் பயன்படுத்தினார்கள். அதனால் அந்தப் போதனை பல கிறிஸ்தவர்களுக்கு நியாயமானதாகத் தோன்றியது.

ஆனால், “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவான் 1:1), “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30), “என் ஆண்டவரே! என் தேவனே!” (யோவான் 20:28) போன்ற பல வசனங்கள் கிறிஸ்து உண்மையான தேவன் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

கிறிஸ்துவைப்பற்றி “இவர் அவருடைய மகிமையின் பிரகாசம், அவருடைய தன்மையின் சொரூபம்” (எபிரெயர் 1:3) என்று வேதாகமம் ஆணித்தரமாகக் கூறுகிறது. அதாவது, தேவனுடைய இயல்பு முழுமையாக அவரில் வெளிப்பட்டது. மேலும் அவர் “சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்கி நிறுத்துகிறார்.” இது படைக்கப்பட்ட ஒருவரால் செய்ய முடியாத செயல். இதை அத்தனேசியஸ் வலிமையாகக் காட்டினார்.

அத்தனேசியஸ் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகக் கண்டார். இயேசு முழுமையான தேவன் அல்ல என்றால், அவர் தேவனை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. அவர் மனிதனையும் முழுமையாக இரட்சிக்க முடியாது. அவர் தேவன் அல்ல என்றால், சபைக்கு உண்மையான இரட்சகர் இல்லை. கிறிஸ்து படைப்பின் ஒரு பகுதியாக இருந்தால் அவர் இரட்சகர் அல்ல. ஆனால்—“சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” (யோவான் 1:3). ஆகையால் கிறிஸ்து படைக்கப்பட்டவர் அல்ல; அவர் படைப்பின் ஆண்டவர்.

இதெல்லாம் தத்துவ விவாதமல்ல. இது இரட்சிப்பைப்பற்றிய அடிப்படை கேள்வி என்று அவர் வலியுறுத்தினார்.

நைசியா பொதுச்சங்கம்

கி.பி. 325ஆம் ஆண்டில் நைசியா பொதுச்சங்கம் கூடியது. அங்கே ஏரியவாதம் சபையால் திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டது. “இயேசு பிதாவுடன் ஒரே தெய்வீக இயல்புடையவர்,” என்று அந்தச் சங்கம் பிரகடனப்படுத்தியது. இந்தச் சங்கத்திற்குப்பிறகு, “ஏரியவாதத்தின் பிரச்சினை முடிந்துவிட்டது” என்று பலர் நினைத்தார்கள். ஆனால் அது அப்படியே முடிவடையவில்லை.

நைசியாவுக்குப்பிறகும் ஏரியவாதம் பலமாகத் தொடர்ந்தது. சில பேரரசர்கள் அதை ஆதரித்தார்கள். சில ஆயர்கள் அதை ஊக்குவித்தார்கள். பல கிறிஸ்தவர்கள் அதைச் சகித்துக்கொண்டார்கள். அந்தச் சூழ்நிலையில், அத்தனேசியஸ் மட்டும் சமரசம்செய்ய மறுத்தார்.

நாடுகடத்தப்பட்ட ஆயர்

அத்தனேசியஸ் 328முதல் 373 வரை 45 ஆண்டுகள் அலெக்சாந்திரியாவின் ஆயராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் இவர் உரோமப் பேரரசர்களால் ஐந்து முறை, மொத்தம் 17 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டார். ஒரு முறை உரோமுக்கு நாடுகடத்தப்பட்டார். இன்னொரு முறை எகிப்தின் பாலைவனங்களில் ஒளிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. சில ஆண்டுகள் அவர் தன் சொந்த மக்களிடமிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டார். சில நேரங்களில் போர்வீரர்கள் அவரைப் பிடிக்க அனுப்பப்பட்டார்கள். அவர் ஒரு குற்றவாளிபோல் வேட்டையாடப்பட்டார். அத்தனேசியஸின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட நாடுகடத்தல்களும் துரத்தல்களும் பல முறை நடந்தன.

பாடலின் நடுவே நடந்த தப்பிப்பு

ஒரு முறை, இரவு நேரத்தில் சபையில் ஆராதனை நடந்துகொண்டிருந்தது. விசுவாசிகள் சங்கீதம் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது திடீரென்று, “பேரரசரின் போர்வீரர்கள் உங்களைக் கைதுசெய்ய வந்திருக்கிறார்கள்,” என்ற ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தி சபைக்குள் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அத்தனேசியஸ் பயப்படவில்லை. அவர் சபையாரிடம், “பயப்பட வேண்டாம். நாம் பாடிக்கொண்டே இருக்கலாம்,” என்று சொன்னார். சத்தியத்துக்காக நிற்கும் மனிதன் பயத்தால் அல்ல, விசுவாசத்தால் நடத்தப்படுகிறான். அவர்கள் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார்கள். அந்த நேரத்தில் சில விசுவாசிகள் அவரை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றார்கள். போர்வீரர்கள் சபைக்குள் வந்தபோது அத்தனேசியஸ் அங்கே இல்லை.

பாலைவனத் துறவிகளின் பாதுகாப்பு

நாடு கடத்தப்பட்ட காலங்களில் சில சமயம் அத்தனேசியஸ் எகிப்தின் பாலைவனங்களில் வாழ்ந்த துறவிகளோடு தங்கியிருந்தார். அந்தத் துறவிகள் அவரை மறைத்து பாதுகாத்தார்கள். அவர்களுள் மிகவும் புகழ்பெற்றவர் எகிப்தின் ஆன்றனி . பின்னாளில் அத்தனேசியஸ் “ஆன்றனியின் வாழ்க்கை” என்ற நூலை எழுதி அந்தத் துறவற வாழ்க்கையின் சாட்சியை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தினார்.

நைல் நதியில் நடந்த தப்பிப்பு

ஒரு முறை போர்வீரர்கள் அவரைப் பிடிக்க விரட்டிக்கொண்டிருந்தார்கள். அத்தனேசியஸ் நைல் நதியில் படகில் தப்பிச்சென்றார். போர்வீரர்களும் படகுகளில் அவரைப் பின்தொடர்ந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் போர்வீரர்களின் படகுகள் அத்தனேசியஸின் படகை நெருங்கிவிடும். அப்பொழுது அத்தனேசியஸ் ஒரு விசித்திரமான முடிவை எடுத்தார். “படகைத் திருப்புங்கள்,” என்றார். அவர்கள் போர்வீரர்களின் படகை நோக்கிச் சென்றார்கள். அவர்களுடைய படகிற்கு அருகில் வந்தபோது போர்வீரர்கள், “அத்தனேசியசைப் பார்த்தீர்களா?” என்று உரத்த சத்தமாய் கேட்டார்கள். அதற்கு அத்தனேசியசே, “ஆம். அவர் தூரத்தில் இல்லை. மிக அருகில்தான் இருக்கிறார்,” என்று அமைதியாகப் பதில் சொன்னார். போர்வீரர்கள் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றார்கள். அத்தனேசியஸ் பாதுகாப்பாகத் தப்பித்தார்.

அவர் மறைந்தது, தப்பித்தது பயத்தினால் அல்ல. தான் உயிரோடு இருந்தால் மட்டுமே சத்தியத்துக்காகத் தொடர்ந்து போராட முடியும் என்று அவர் அறிந்திருந்தார். அதனால்தான் அவர் மீண்டும் மீண்டும் திரும்பி வந்தார். மீண்டும் சபையை உறுதிப்படுத்தினார். மீண்டும் அதே சத்தியத்தை அறிவித்தார்.

ஒருமுறை ஒரு நாடுகடத்தலுக்குப் பிறகு அத்தனேசியஸ் மீண்டும் அலெக்சாந்திரியாவிற்குத் திரும்பி வந்தபோது, அந்த நகரம் முழுவதும் உற்சாகமடைந்தது. சாதாரண விசுவாசிகளும், பாலைவனத் துறவிகளும், குடும்பங்களும், பொதுமக்களும் அவரை வரவேற்க வந்தார்கள். அவர்களுக்கு அத்தனேசியஸ் ஒரு ஆயர் மட்டுமல்ல; சத்தியத்திற்காகப் பாடுபட்ட ஒரு மேய்ப்பன். அதனால்தான் அவர் திரும்பி வந்தபோது நகரம் முழுவதும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது.

உலகத்திற்கெதிராக அத்தனேசியஸ்

பேரரசர்கள் அவருக்கு எதிராக இருந்தார்கள். சில ஆயர்கள் அவர்மேல் குற்றம் சாட்டினார்கள். போர்வீரர்கள் அவரைத் தேடி விரட்டினார்கள். பல கிறிஸ்தவர்கள் சமரசம்செய்யத் தயாராக இருந்தார்கள். அந்தச் சூழ்நிலையை வரலாற்றாசிரியர்கள், “Athanasius contra mundum” அதாவது “முழு உலகத்திற்கெதிராக அத்தனேசியஸ்” என்று விவரிக்கிறார்கள். அவர் இயேசு கிறிஸ்து உண்மையான தேவன் என்ற சத்தியத்தை ஒருபோதும் மாற்றவில்லை.

உலகம் முழுவதும் சமரசம்செய்யத் தயாராக இருந்த நேரத்தில் ஒரு மனிதன் மட்டும் சத்தியத்துக்காக நின்றான். உலகம் முழுவதும் தவறான போதனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்த நேரத்தில், ஒரு மனிதன் மட்டும் அந்த நீரோட்டத்துக்கு எதிராக நீந்தினான்.

இது அகந்தை அல்ல. இது விசுவாசம். “தவறை ஏற்றுக்கொண்டு முழு உலகத்தோடும் சேர்ந்து நிற்பதைவிட, சத்தியத்தை அரவணைத்துக்கொண்டு தனியாக நிற்பது மேல்” என்று அவர் நம்பினார்.

வார்த்தை மனுவுருவாதல்

அத்தனேசியஸின் முக்கியமான நூல்களில் ஒன்று “வார்த்தை மனுவுருவாதல்” (On the Incarnation). அதில் அவர் ஓர் எளிய ஆனால் ஆழமான உண்மையைச் சொல்கிறார்.

தேவனே மனிதனை இரட்சிக்க முடியும்.
இயேசு மனிதனை இரட்சிக்கிறார்.
ஆகையால் இயேசு தேவனே.

இதற்காகவே அவர், “நாம் தெய்வீகத்தில் பங்குபெறுவதற்காக தேவன் மனிதனானார்” என்ற இன்னொரு பிரபலமான வாக்கியத்தையும் சொன்னார். தேவனுடைய ஜீவனில் பங்குபெறுவதற்காக என்ற பொருளில்தான் அவர் தெய்வீகத்தில் பங்குபெறுவதற்காக என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். ஆனால், பின்னாள்களில் சிலர் இதை, “மனிதனைத் தேவனாக்க தேவன் மனிதனானார்” என்று மாற்றினார்கள். இது ஒரு புறம் இருக்கட்டும்.

ஆனால், அத்தனேசியஸ் இதை வெறுமனே வாதத்திற்காக எழுதவில்லை. கிறிஸ்து யார் என்பதை சபை இழந்தால், சபை தன் இரட்சகரையே இழந்துவிடும் என்று அத்தனேசியஸ் நம்பினார்.

ஒரு முறை அவர் எகிப்தின் ஆயர்களுக்கு எழுதும்போது, ஏரியவாதம் ஏற்கெனவே அகில உலக சபையின் ஆலோசனைச் சங்கத்தால்  நிராகரிக்கப்பட்டதை அவர் நினைப்பூட்டுகிறார். ஆனால் அதே தவறு மீண்டும் மீண்டும் தலை தூக்கியது. ஏன்? ஏனென்றால், ஒரு போதனை “தவறு” என்று அறிவிக்கப்பட்டவுடன் அது மறைந்துவிடாது. சத்தியத்திற்காக நிற்கத் துணிந்தவர்கள் இருந்தால்தான் அது அழியும்.

அத்தனேசியஸ் அதற்கான விலையைச் செலுத்தினார். ஆனால் அவரைப்போன்றவர்கள் இருந்ததால்தான் “இயேசு உண்மையான தேவன், உண்மையான மனிதன், முழுமையான தேவன், முழுமையான மனிதன்” என்ற சத்தியத்தை சபை இழக்கவில்லை.

இப்போது ஒரு நிமிடம் நாம் நின்று யோசிப்போம். “வேதாகமத்தில் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் சொல்லப்பட்டுள்ள சத்தியத்தைப் பெரும்பாலான கிறிஸ்தவர்கள்கூட விரும்பவில்லையென்றால் நாம் என்ன செய்வோம்?” என்ற ஒரு கேள்வியை அத்தனேசியஸ் நம்மிடம் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

காலத்திற்கேற்றபடி செய்தியை மாற்றுவோமா? அல்லது பதவி, பாதுகாப்பு, அங்கீகாரம் எல்லாம் இழந்தாலும் சத்தியத்துக்காக நிற்போமா?

அத்தனேசியஸ் இந்தக் கேள்விக்கு தன் வாழ்க்கையாலேயே பதில் சொன்னார். அதனால்தான் சபை தன் இரட்சகரை இழக்கவில்லை.

இது நமக்குப் பழைய வரலாறுபோலத் தோன்றலாம். ஆனால் உண்மையில் இது ஒவ்வொரு தலைமுறையிலும் மீண்டும் மீண்டும் எழும் கேள்வி.

கிறிஸ்து யார்? அவர் வெறுமனே ஒரு பெரிய ஆசிரியரா? ஒரு தீர்க்கதரிசியா? அல்லது தேவனுடைய குமாரனாகிய உண்மையான தேவனும் உண்மையான மனிதனுமா?

இந்தக் கேள்விக்கு சபை இன்று சொல்லும் பதில் ஒரே நாளில் உருவானதல்ல. அதற்காகச் சிலர் துன்பப்பட்டார்கள். சிலர் பதவிகளை இழந்தார்கள். சிலர் நாடுகடத்தப்பட்டார்கள்.

அத்தனேசியஸ் அவர்களில் ஒருவர்.

அவர் சத்தியத்தைக் காத்ததால்தான் இன்று இயேசு கிறிஸ்து — உண்மையான தேவன், உண்மையான மனிதன், நம்முடைய இரட்சகர் என்று சபை தெளிவாகச் சொல்லுகிறது:

“Athanasius contra mundum” —
அத்தனேசியஸ் உலகத்திற்கே எதிராக நின்றார்.

பேரரசர்கள் மறைந்துவிட்டார்கள். பேரரசுகள் மறைந்துவிட்டன. அத்தனேசியசுக்கு எதிராக எழுந்தவர்கள் மறைந்துவிட்டார்கள். ஆனால் அவர் காத்த அந்தச் சத்தியம் இன்னும் நிலைத்திருக்கிறது:

இயேசு கிறிஸ்து உண்மையான தேவன்.

பகுதி 2

ஜான் கிறிஸோஸ்டம்

விசுவாசத்தை வாழ்ந்த மனிதன்

அத்தனேசியஸ் கிறிஸ்து உண்மையான தேவன் என்ற சத்தியத்துக்காக நின்றார். ஆனால் வேறு ஓர் ஆபத்து சபைக்குள் உருவாகிக்கொண்டிருந்தது.

சரியான சத்தியத்தை விசுவாசித்த கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். ஆனால் அந்தச் சத்தியத்திற்கு ஏற்ற வாழ்க்கை வாழவில்லை. சரியான போதனை இருந்தது. ஆனால், அதற்கேற்ற பரிசுத்த வாழ்க்கை குறைந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் தேவன் இன்னொரு மனிதனை எழுப்பினார். அவர் கிறிஸ்து யார் என்ற சத்தியத்தைப் பாதுகாக்கவில்லை; கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற சத்தியத்தைப் பாதுகாத்தார்.

அந்த மனிதர் — ஜான் கிறிஸோஸ்டம்.

அந்தியோக்கியா – விசுவாசமும் முரண்பாடும் நிறைந்த நகரம்

ஜான் கிறிஸோஸ்டம் கி.பி. 349ஆம் ஆண்டுவாக்கில் அந்தியோக்கியாவில் பிறந்தார். அந்தியோக்கியா கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு மிக முக்கியமான இடம்.

விசுவாசிகள் அங்குதான் முதன்முதலாக “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். அங்கிருந்து பல ஊழியர்கள் வேறு இடங்களுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்டார்கள். அங்கு ஆவிக்குரிய போதனை ஆழமாக இருந்தது.

ஆனால் அதே நேரத்தில் அந்த நகரம் அதிக ஆடம்பரம், ஒழுக்கக் குறைவு, விளையாட்டு, சிற்றின்ப வாழ்க்கை ஆகியவைகளுக்கும் பெயர் பெற்றிருந்தது.

எனவே, ஜான் கிறிஸோஸ்டத்தின் போதனை ஒரு வெற்றிடத்தில் பிறக்கவில்லை. மக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையில் உலகத்தின் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்தது. விசுவாசம் வசதியாக மாறியிருந்த ஒரு நகரத்தின் நடுவில் அது உருவெடுத்தது.

உலகக் கனவுகளிலிருந்து அழைப்பு

தாயின் விசுவாசத்தின் தாக்கம்

ஜான் கிறிஸோஸ்டம் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய அப்பா இராணுவத்தில் ஓர் உயர்ந்த அதிகாரியாகப் பணிபுரிந்தார். ஆனால், அவர் இளம் வயதிலேயே காலமானார். அவருடைய அம்மா மிகவும் இளம் வயதிலேயே விதவையானார். அவருடைய அம்மாவின் பெயர் அந்தூசா.

ஜான் கிறிஸோஸ்டத்தின் வாழ்க்கையில் அவருடைய அம்மா அந்தூசா மிகவும் முக்கியமான இடம் பெற்றவர். அவர் மிகவும் பக்தியுள்ள கிறிஸ்தவப் பெண். அந்தக் காலத்தில் பல பெண்கள் மறுமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அந்தூசா மறுமணம் செய்யவில்லை. தன் மகனை வளர்ப்பதற்கும், தேவனைப் பின்பற்றுவதற்கும் அவர் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

ஒரு முறை ஜான் கிறிஸோஸ்டத்தின் ஆசிரியரான லிபானியஸ், அந்தூசாவைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, “கிறிஸ்தவர்களிடையே இப்படிப்பட்ட பெண்கள் இருக்கிறார்களா?” என்று மிகவும் ஆச்சரியப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

அவருடைய வாழ்க்கையின் ஒழுக்கமும் பக்தியும் ஜான் கிறிஸோஸ்டமின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

ஜான் கிறிஸோஸ்டம் ஒரு பெரிய போதகராக உருவானதற்கு அவருடைய அம்மாவின் விசுவாசமும், தியாகமும், ஒழுக்கமும் ஒரு முக்கியமான காரணம் என்று பல வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

உலக வாழ்க்கையின் கனவு

திறமையான வாலிபர்களைப்போல அவரும் ஆரம்பத்தில் உலக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விரும்பினார். அவர் ஒரு புகழ்பெற்ற சட்டவல்லுநராக வேண்டும் என்று எண்ணினார்.

அதற்காக அவர் அந்தியோக்கியாவின் புகழ்பெற்ற பேச்சுக்கலை ஆசிரியரான லிபானியஸிடம் பேச்சுக் கலை (rhetoric) கற்றார். கிறிஸோஸ்டமின் பிரசங்கம் மிகவும் தெளிவாகவும் வல்லமையாகவும் இருந்ததற்கு அவர் பெற்ற கல்வியும் ஒரு காரணம்.

பின்னாளில் லிபானியஸ், “என் மிகச் சிறந்த மாணவனை கிறிஸ்தவர்கள் என்னிடமிருந்து பறித்துக்கொண்டுபோய்விட்டார்கள்” என்று சொன்னதாக வரலாறு கூறுகிறது.

வாழ்க்கையை மாற்றிய ஆவிக்குரிய விழிப்பு

கிறிஸோஸ்டமின் 23–24ஆவது வயதில் அவருடைய வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவர் அந்தியோக்கியாவில் இருந்த கிறிஸ்தவ ஆசிரியர்களிடமிருந்து வேதாகமத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். குறிப்பாக தியோடர் என்ற ஆசிரியரின் போதனை அவருக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர் வேதாகமத்தை ஆழமாக ஆராயத் தொடங்கினார். அதனால், உலகப் புகழும், பதவியும், அந்தஸ்தும் மெதுவாக அவருக்கு மலிவாகத் தோன்றத் தொடங்கின. இறுதியில் சட்டவல்லுநராக வேண்டும் என்ற கனவைக் கைவிட்டார். கிறிஸ்துவை நெருக்கமாகப் பின்பற்றத் தொடங்கினார்.

துறவற வாழ்க்கையின் ஆண்டுகள்

அவர் ஞானஸ்நானம் பெற்றார். பின்னர் தேவனுடைய பணிக்காக அவர் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். ஆனால் அதிலேயே அவர் நிற்கவில்லை.

சில ஆண்டுகள் அவர் நகர வாழ்க்கையை விட்டு விலகி மலைகளிலும், பாலைவனங்களிலும் வாழ்ந்த துறவிகளோடு சேர்ந்து வாழ்ந்தார். அந்த ஆண்டுகளில் அவர் வேதாகமத்தை இன்னும் ஆழமாக வாசித்தார், நீண்ட நேரம் ஜெபித்தார், மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். இந்த அனுபவம் அவருடைய வாழ்க்கையை முழுவதும் மாற்றியது. பின்னாளில் அவர் பிரசங்கிக்கத் தொடங்கியபோது, வேதாகமம் அவருடைய மனதிலும் இதயத்திலும் ஆழமாகப் பதிந்திருந்தது. அந்த ஆண்டுகள் ஜான் கிறிஸோஸ்டமை உருவாக்கிய ஆண்டுகள். தேவன் அவரைப் பயன்படுத்தத் தொடங்கியதும் “இவர் ஒரு சாதாரண மனிதன் அல்ல” என்ற விஷயம் தெளிவாயிற்று.

மக்களை ஊட்டிவளர்த்த போதகர்

ஜான் கிறிஸோஸ்டமின் போதனை மிகவும் தனித்துவமானது. அவர் படித்தவர்களைக் கவர்வதற்காகப் போதிக்கவில்லை. அதிகாரிகளை மகிழ்விப்பதற்காகப் போதிக்கவில்லை. தேவனுடைய மக்களை ஊட்டிவளர்ப்பதற்காகப் போதித்தார். அவர் பொழுதுபோக்காகப் பிரசங்கிக்கவில்லை. அவர் அதிகாரத்தோடு பிரசங்கித்தார். அவர் வேதாகமத்தை வசனம் வசனமாகவும், அத்தியாயம் அத்தியாயமாகவும் விளக்கிப் போதித்தார். வேதாகமம் ஒரு மூடப்பட்ட புத்தகமாக இருக்கக் கூடாது என்று அவர் நம்பினார். அது மக்களால் புரிந்துகொள்ளப்படும் ஒரு திறந்த புத்தகமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

அதனால் மக்கள் அவருடைய பிரசங்கங்களை ஆர்வமுடன் கேட்டார்கள்.

ஜான் கிறிஸோஸ்டமின் ஊழியத்தின் மையம் அவருடைய பிரசங்கம். அவர் ஒரு சாதாரண போதகர் அல்ல. தேவனுடைய வார்த்தையை மக்களின் வாழ்க்கைக்குள் கொண்டுசென்ற ஒரு வல்லமையான பிரசங்கி.

அவருடைய பிரசங்கத்திற்கு ஐந்து முக்கியமான தன்மைகள் இருந்தன.

1. வேதாகம விளக்கப் பிரசங்கம்

அவர் வேதாகமத்தை வசனம் வசனமாக விளக்கினார். ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு அதன் உண்மையான பொருளை மக்களுக்கு தெளிவாகக் காட்டினார். அவர் அலங்காரமான உவமைகளையும், அதிகமான ஊகங்களையும், கற்பனைகளையும் விரும்பவில்லை. வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை மக்களுக்கு எளிமையாக விளக்கினார். அதனால் அவருடைய பிரசங்கங்கள் கேட்பவர்களுக்கு மிகவும் தெளிவாக இருந்தன.

2. எளிமையான மொழி

அவர் பெரிய தத்துவ மொழிகளைப் பயன்படுத்தவில்லை. சாதாரண மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் பேசினார். வேதாகமம் அறிஞர்களுக்கான புத்தகம் மட்டுமல்ல; எல்லா விசுவாசிகளுக்கும் தேவனுடைய வார்த்தை என்று அவர் நம்பினார்.

3. வாழ்க்கையோடு இணைந்த போதனை

அவருடைய பிரசங்கம் வெறும் அறிவுக்காக இல்லை. வாழ்க்கையை மாற்றுவதற்காக இருந்தது. செல்வ ஆசை, ஆடம்பரம், ஒழுக்கக் குறைவு, அநியாயம் போன்றவற்றைப்பற்றி அவர் வெளிப்படையாகப் பேசினார். அவருடைய வார்த்தைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகத் தொட்டன.

4. தைரியமான சத்தியப்பிரசங்கம்

அவர் யாரையும் மகிழ்விப்பதற்காகப் பேசவில்லை. அதிகாரிகளையும் செல்வந்தர்களையும்கூட அவர் கண்டித்தார். சத்தியத்தைப் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் அவர் ஒருபோதும் மௌனமாக இருக்கவில்லை. இதனால் அவர் பல எதிரிகளைச் சம்பாதித்தார்.

5. மேய்ப்பனின் இதயம்

அவருடைய பிரசங்கம் கடினமானதாக இருந்தாலும் அதற்குப் பின்னால் ஒரு மேய்ப்பனின் இருதயம் இருந்தது. மக்கள் கிறிஸ்துவை அறிந்து பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதே அவருடைய ஆசை.

ஒருமுறை அவர் சொன்ன வார்த்தைகள் இதை வெளிப்படுத்துகின்றன:

“நான் பேசத் தொடங்கும்போது சோர்வு மறைந்துபோகிறது. நான் போதிக்கத் தொடங்கும்போது தளர்ச்சி காணாமல்போகிறது. நீங்கள் கேட்க ஆவலாக இருப்பதுபோல, நானும் போதிக்க ஆவலாக இருக்கிறேன்.”

இது ஒரு வேலை அல்ல, நடிப்பு அல்ல. இது ஓர் அழைப்பு.

விசுவாசிகளின் கைகளில் வேதாகமம்

விசுவாசிகளிடமிருந்து ஜான் கிறிஸோஸ்டம் ஒரு முக்கியமான காரியத்தை எதிர்பார்த்தார். சபையில் நற்செய்தி வாசிப்பதற்குமுன் அவர் விசுவாசிகளிடம், “இந்த வாரம் வாசிக்கப்படும் நற்செய்திப் பகுதியை நீங்கள் வீட்டில் வாசியுங்கள். மெதுவாகச் சிந்தியுங்கள். தெளிவாகப் புரியும் பகுதிகளைக் கவனியுங்கள். புரியாதவைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்வது வழக்கம்.

இதிலிருந்து விசுவாசிகளால் வேதாகமத்தை வாசிக்க முடியும், விசுவாசிகளிடம் வேதாகமம் இருந்தது, விசுவாசிகள் வேதாகமத்தைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்ற ஒரு முக்கியமான உண்மை தெரிகிறது.

வேதாகமம் மேடைகளில் மட்டும் அல்ல, வீடுகளிலும் இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். ஒரு பிரசங்கத்தில் அவர், “வேதாகமத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். சபையில் கேட்பதற்காக மட்டும் காத்திருக்காதீர்கள். வீட்டிலேயே வாசியுங்கள். உங்கள் வீடு ஒரு சிறிய சபையாக மாறட்டும்” என்று கூறுகிறார்.

விசுவாசமும் வாழ்க்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்

ஜான் கிறிஸோஸ்டம் கிறிஸ்தவர்களின் நடத்தையைப்பற்றி மௌனமாக இருக்கவில்லை. ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.

அவருடைய காலத்தில் கிறிஸ்தவ அடக்கங்களில் புறமதத்தினரைப்போல மிகையான அழுகை, அலறல், கதறுதல், ஒப்பாரி, ஓலம் எல்லாம் இருந்தது. இதைக் கண்டு அவர் மிகவும் வேதனைப்பட்டார்.

“இந்த அழுகையையும், அலறல்களையும், அசிங்கமான நடத்தையையும் நான் காணும்போது, புறமதத்தினருக்கும், யூதர்களுக்கும், தவறான போதகர்களுக்கும்முன்பாக நான் வெட்கப்படுகிறேன்” என்று அவர் எழுதுகிறார்.

விசுவாசிகள் உயிர்த்தெழுதலை உண்மையாக விசுவாசித்தால், அவர்களுடைய துக்கத்திற்குள்கூட விசுவாசம் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஒரு பிரசங்கத்தின் உதாரணம்

ஜான் கிறிஸோஸ்டத்தின் பிரசங்கங்கள் மிகவும் நேரடியானவை. அவருடைய பிரசங்கத்தின் ஒரு சுருக்கமான எடுத்துக்காட்டைப் பாருங்கள்:

“நீங்கள் வேதவசனத்தை சபையில் மட்டும் கேட்க வேண்டாம். உங்கள் வீடுகளை ஒரு சிறிய சபையாக மாற்றுங்கள். அங்கே வேதாகமம் வாசியுங்கள். அங்கே ஜெபியுங்கள். தேவனுக்குப் பயந்து வாழ்வதற்கு உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பியுங்கள்.

சிலர், ‘நாங்கள் உலக வாழ்க்கையில் மிகவும் பரபரப்பாக இருக்கிறோம்; வேதாகமத்தை வாசிக்க நேரமில்லை’ என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கேட்கிறேன் — தேவனுடைய வார்த்தைக்கு நேரமில்லாத வாழ்க்கை உண்மையில் எப்படி ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையாக இருக்க முடியும்?

நீங்கள் சந்தைக்குச் செல்கிறீர்கள், வேலை செய்கிறீர்கள், நண்பர்களோடு பேசுகிறீர்கள். எல்லா இடங்களிலும் நீங்கள் கிறிஸ்தவர்கள் — சபையில் மட்டும் அல்ல. ஒரு கிறிஸ்தவன் சபையிலே மட்டும் கிறிஸ்தவனாக இருக்கக்கூடாது. வீட்டிலும் கிறிஸ்தவனாக இருக்க வேண்டும். சந்தையிலும் கிறிஸ்தவனாக இருக்க வேண்டும்.

நீங்கள் ஓர் ஏழையைப் பார்த்தால் அவனில் கிறிஸ்துவைக் காண வேண்டும். சபையின் வாசலில் நிற்கும் ஓர் ஏழையில் கிறிஸ்துவைக் காண முடியவில்லை என்றால், பீடத்தின் பாத்திரத்திலும் அவரைக் காண முடியாது.

ஆகையால் விசுவாசம் வார்த்தைகளில் மட்டும் இருக்கக்கூடாது. அது வாழ்க்கையில் காணப்பட வேண்டும்.”

ஜான் கிறிஸோஸ்டமின் பிரசங்கங்கள் மக்கள் மனதில் மட்டும் அல்ல, வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இதனால்தான் பின்னாளில், அவருடைய மறைவுக்குப்பின் 150 ஆண்டுகள் கழித்து, சபை அவருக்குக் “கிறிஸோஸ்டம்” என்று ஒரு பெயர் கொடுத்தது. இதன் பொருள் “தங்க நாவு.” அவர் அழகாகப் பேசியதற்காக மட்டும் அல்ல; சத்தியத்தைத் தெளிவாகவும் தைரியமாகவும் பேசியதற்காக.

கான்ஸ்டாண்டினோபிள் — அதிகாரத்தோடு மோதல்

கி.பி. 398ஆம் ஆண்டில் ஜான் கிறிஸோஸ்டமின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. அவருடைய விருப்பத்திற்கு எதிராக அவர் கான்ஸ்டாண்டினோபிள் நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார். அப்போது கான்ஸ்டாண்டினோபிள் கிழக்கு உரோமப் பேரரசின் தலைநகரம். எனவே அந்த நகரின் ஆயர் என்றால் அவர் ஒரு போதகர் மட்டும் அல்ல; அரசியல் செல்வாக்குள்ள ஒரு பொது நபர்.

ஆனால் ஜான் கிறிஸோஸ்டம் அரசியல்வாதி அல்ல.

அவர் அதிகாரத்திற்காக வாழ்ந்த மனிதன் அல்ல. கான்ஸ்டாண்டினோபிளுக்கு வந்தபோது அவர் ஒரு விஷயத்தைக் கவனித்தார். சபையில் செல்வமும் ஆடம்பரமும் அதிகமாக இருந்தது. அதிகாரிகளும் செல்வந்தர்களும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஆனால் ஏழைகள் புறக்கணிக்கப்பட்டார்கள். இதைக் கண்டு அவர் மௌனமாக இருக்கவில்லை.

அவர் சூதாட்டத்திற்கு எதிராகவும், ஒழுக்கக் குறைவுக்கு எதிராகவும், ஆடம்பர வாழ்க்கைக்கு எதிராகவும், அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராகவும் பயமின்றி பேசினார். இதனால் அரண்மனையோடு மோதல் ஏற்பட்டது.

ஒரு முறை அவர் சொன்னார்:

“நீங்கள் உங்கள் வீடுகளில் தங்கப் பாத்திரங்களில் உணவருந்துகிறீர்கள். ஆனால் கிறிஸ்து தெருக்களில் பசியோடு இருக்கிறார்.”

இந்த வார்த்தைகள் மக்களை அதிர்ச்சியடையச் செய்தன.  அதிகாரிகளுக்கு அவை பிடிக்கவில்லை.

அந்த நேரத்தில் பேரரசர் ஆர்கேடியஸ் ஆட்சி செய்தார். ஆனால் அவருடைய மனைவி யூடோக்சியா அரசியல் அதிகாரத்தில் மிகுந்த செல்வாக்கு கொண்டவர்.

ஒரு சம்பவம் இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.

ஒரு விதவையின் நிலத்தை அரசவையினர் அநியாயமாகப் பிடித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜான் கிறிஸோஸ்டம் அந்த அநியாயத்திற்கு எதிராகப் பேசினார். அவர் நீதியைப்பற்றி வெளிப்படையாகப் பிரசங்கித்தார். இதனால் அரண்மனையில் கோபம் எழுந்தது.

மேலும் அவர் செல்வந்த பெண்களின் ஆடம்பர வாழ்க்கையையும் கடுமையாகக் கண்டித்தார். சிலர் அவர் தங்களையே குறிக்கிறார் என்று நினைத்தார்கள். குறிப்பாக அரசி யூடோக்சியா அவர்மீது மிகவும் கோபமடைந்தார்.

ஜான் கிறிஸோஸ்டமுக்கு பல எதிரிகள் உருவானார்கள். கண்டிப்பை விரும்பாத சில ஆயர்கள், அவருடைய புகழைப் பொறுக்கமுடியாத சிலர், சத்தியத்தைச் சகிக்கமுடியாத சில அதிகாரிகள் — இவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி கி.பி. 403ஆம் ஆண்டில் அவரை நாடு கடத்தினார்கள்.

இந்தச் செய்தி கான்ஸ்டாண்டினோபிள் நகரில் பரவியதும் மக்கள் மிகவும் கோபமடைந்தார்கள். பலர் தெருக்களில் கூடி அவருக்காகக் குரல் கொடுத்தார்கள்.

அதே இரவில் நகரத்தில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அதை ஓர் எச்சரிக்கை என்று எண்ணிய சிலர் பேரரசரிடம் கூறினார்கள். அதன்பிறகு ஜான் கிறிஸோஸ்டம் மீண்டும் நகரத்திற்குத் திரும்ப அழைக்கப்பட்டார்.

ஆனால் அமைதி நீண்ட காலம் நிலைக்கவில்லை.

ஒரு முறை பேரரசி யூடோக்சியாவுக்காக ஒரு வெள்ளிச் சிலை நகரத்தில் நிறுவப்பட்டது. அந்தச் சிலையைத் திறக்கும் விழாவில் பெரிய கொண்டாட்டங்கள் நடந்தன. இசை, நடனம், ஆரவாரம்—இவை எல்லாம் சபைக்கருகே நடந்தன.

இதைக் கண்டு ஜான் கிறிஸோஸ்டம் மிகவும் வருந்தினார்.

ஒரு பிரசங்கத்தில் அவர் சொன்னார்:

“மீண்டும் ஏரோதியாள் கோபிக்கிறாள்; மீண்டும் அவள் நடனமாடுகிறாள்; மீண்டும் யோவானின் தலையைக் கேட்கிறாள்.”

இந்த வார்த்தைகள் பேரரசியை மிகவும் கோபப்படுத்தின. அதன்பிறகு அவருக்கு எதிராக புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன. இறுதியில் அவர் மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.

நாடுகடத்தலில் முடிந்த வாழ்க்கை

இந்த முறை அவரை காக்கசஸ் மலைப்பகுதியில் உள்ள பிட்டியூஸ் (Pityus) என்ற தொலைவான இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்று ஆணையிடப்பட்டது. அந்த இடம் மிகவும் கடினமான, வெறிச்சோடிய, காட்டு மலைப்பகுதி. அங்கு பயணம் செய்வதே மிகவும் கஷ்டமானது.

படை வீரர்கள் அவரை அங்கு அழைத்துச் செல்லத் தொடங்கினார்கள். நீண்ட, மிகக் கடினமான பயணம். வெப்பமும் குளிரும் மாறிமாறித் தாக்கின. அவர் ஏற்கனவே பலவீனமடைந்திருந்தார்.

வழியிலேயே அவர் நோயுற்றார். பல முறை ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் காவலர்கள் அவருக்கு ஓய்வு கொடுக்கவில்லை. அவர்கள் அவரைத் தொடர்ந்து முன்னோக்கி நடத்தினார்கள்.

இறுதியில் அவர்கள் கோமனா (Comana) என்ற சிறிய நகரத்தை அடைந்தார்கள். அங்கே அவர் மிகவும் பலவீனமடைந்தார். அவரை ஒரு சிறிய தேவாலயத்துக்குள் கொண்டு சென்றார்கள். அங்கே அவர் இறப்பதற்கு முன் ஜெபித்தார்.

அதன்பிறகு அவர் சொன்னதாக வரலாறு கூறும் கடைசி வார்த்தைகள்:

“எல்லாவற்றிற்காகவும் தேவனுக்கே மகிமை உண்டாவதாக.”
(Glory be to God for all things.)

அவர் செப்டம்பர் 14, 407ஆம் ஆண்டு தம் 60ஆவது வயதில் நித்தியத்துக்குள் நுழைந்தார்.

இன்றைக்கும் ஒலிக்கும் குரல்

ஜான் கிறிஸோஸ்டம் சபைக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைப்பூட்டுகிறார். சரியான போதனை தவறான வாழ்க்கையோடு சேர்ந்தால் அது வெறுமையாகிவிடும்.

கிறிஸ்தவம் அதிகார பீடத்தில் அமர்ந்த காலத்தில் அவர் தேவ மக்கள் பரிசுத்தத்தை இழக்கக் கூடாது என்று போராடினார். இந்தக் குரல் நான்காம் நூற்றாண்டில் மட்டும் ஒலித்த குரல் அல்ல. இது ஒவ்வொரு தலைமுறையிலும் மீண்டும் கேட்கும் குரல். சரியான போதனை இருந்தால் மட்டும் போதாது. சரியான வாழ்க்கையும் அதோடு இருக்க வேண்டும். கிறிஸ்துவைப்பற்றி நன்றாகப் பேசும் சபை கிறிஸ்துவைப்போல் வாழவில்லை என்றால் அந்தச் சாட்சி பலவீனமாகிவிடும்.

ஜான் கிறிஸோஸ்டம் நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்:

விசுவாசம் உதடுகளில் மட்டும் அல்ல — வாழ்க்கையிலும் காணப்பட வேண்டும்.

அதனால்தான் அவர் போதித்தார்.
அதனால்தான் அவர் கண்டித்தார்.
அதனால்தான் அவர் நாடு கடத்தப்பட்டார்.

ஆனால் அவருடைய குரல் அமைதியாகவில்லை. இன்றைக்கும் அது சபையிடம் கேட்கிறது:

நாம் விசுவாசிக்கிறதை நாம் வாழ்கிறோமா?”

அவர் அதிகாரத்தை இழந்தார்; ஆனால் தன் விசுவாசத்தை இழக்கவில்லை. அவருடைய உடல் நாடுகடத்தலில் முடிந்தது. ஆனால் அவருடைய குரல் சபையில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

மரணத்திற்குப் பிறகு நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவம்

ஜான் கிறிஸோஸ்டம் நாடுகடத்தலில் கி.பி. 407ஆம் ஆண்டில் இறந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 438இல், ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது.

அப்போது கான்ஸ்டாண்டினோபிளில் பேரரசராக இருந்தவர் இரண்டாம் தியோடோசியஸ் (Theodosius II). அவர் ஜான் கிறிஸோஸ்டமை நாடுகடத்திய முன்னாள் பேரரசர் ஆர்கேடியஸ் மற்றும் பேரரசி ஏலியா யூடோக்சியாவின் மகன்.

ஜான் கிறிஸோஸ்டமுக்கு நடந்த அநியாயத்தை நினைத்தபோது அவர் மிகவும் வருந்தினார். அதனால் அவர் ஜான் கிறிஸோஸ்டமின் எலும்புகளைக் (relics) கொண்டு வந்து கான்ஸ்டாண்டினோபிளில் மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார். அவருடைய உடல் நகரத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது மக்கள் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்றார்கள்.

அந்த நேரத்தில் பேரரசர் தேவாலயத்தில், “தேவனே, என் தந்தை செய்த அநியாயத்தை மன்னியும்” என்று ஜெபித்ததாக வரலாறு கூறுகிறது. ஜான் கிறிஸோஸ்டமின் உடல் கான்ஸ்டாண்டினோபிளில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஜான் கிறிஸோஸ்டம் வாழ்ந்தபோது பலர் அவரை எதிர்த்தார்கள். ஆனால் அவர் இறந்தபிறகு சபை அவர் சொன்ன சத்தியத்தின் மதிப்பை அறிந்தது. அவர் அதிகாரத்தால் தோற்கடிக்கப்பட்டவர் போலத் தோன்றினார். ஆனால் இறுதியில் சத்தியமே வென்றது.

பகுதி 3

அகஸ்தீன்

கிருபையால் இரட்சிக்கப்பட்ட மனிதன்

அத்தனேசியஸ் கிறிஸ்து யார் என்ற சத்தியத்துக்காக நின்றார். ஜான் கிறிஸோஸ்டம் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற சத்தியத்துக்காக நின்றார். ஆனால் இன்னும் ஒரு பெரிய கேள்வி மீதமிருக்கிறது. அது போதனையைப்பற்றிய கேள்வி அல்ல. நடத்தையைப்பற்றிய கேள்வியும் அல்ல. அது மனித இருதயத்தின் கேள்வி.

பாவியாகிய மனிதன் உண்மையாக எப்படி இரட்சிக்கப்படுகிறான்?

மனிதனுடைய முயற்சியாலா? ஒழுக்கத்தாலா? மாற்றப்பட்ட வாழ்க்கையாலா? மனஉறுதியாலா? அல்லது—தேவனுடைய கிருபையாலா?

இந்தக் கேள்வி நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் சபையில் மிகப் பெரிய விவாதமாக மாறியது.

அந்த நேரத்தில் தேவன் ஒரு மனிதனை எழுப்பினார். அவர் தன் வாழ்க்கையாலும், எழுத்துக்களாலும், போதனைகளாலும் இந்தக் கேள்விக்கு மிக ஆழமான பதிலைத் தந்தார்.

அவர்—ஹிப்போவின் அகஸ்தீன் (Augustine of Hippo).

கிருபையின் போதகர்

அகஸ்தீன் கிறிஸ்தவ வரலாற்றில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர். அவர் ஒரு பெரிய தத்துவஞானி மட்டுமல்ல; தன் வாழ்க்கைப் போராட்டங்களின்மூலம் சத்தியத்தைக் கண்டடைந்த ஒரு மனிதர்.

அவர் ஒரு பரிசுத்த குடும்பத்தில் பிறந்தார். ஆயினும் தன் இளமைக்காலத்தில் தேவனைவிட்டு மிகவும் தூரமாக வாழ்ந்தார். ஆனால் தேவன் அவரை விடவில்லை. பல ஆண்டுகள் அவர் உண்மையைத் தேடினார். ஆனால் அவர் தேடியது தேவனை அல்ல — அறிவையும் அனுபவத்தையும்.

தாயின் ஜெபங்களில் பிறந்த மனிதன்

அகஸ்தீன் கி.பி. 354ஆம் ஆண்டு வட ஆப்பிரிக்காவில்—இன்றைய அல்ஜீரியாவில்—பிறந்தார்.

அகஸ்தீனின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நாம் முதலாவது அவருடைய அம்மாவைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் மிகவும் பக்தியுள்ள கிறிஸ்தவப் பெண். ஆனால் அவருடைய வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை. அவருடைய கணவர் பாட்ரிசியஸ் ஒரு புறமதத்தவர். அவர் கோபக்காரர், கடினமானவர், கண்டிப்பானவர் என்று வரலாறு கூறுகிறது. ஆனால் மோனிக்கா பொறுமையுடனும் அன்புடனும் அந்தக் குடும்பத்தில் வாழ்ந்தார்.

அகஸ்தீன் வேதாகமம் கற்றார். சபையில் வளர்ந்தார். ஆனால்—அவர் கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லை. உலக வாழ்க்கையில் மூழ்கியிருந்தார்.

ஒரு கிறிஸ்தவத் தாய்க்கு இதைவிட பெரிய வேதனை வேறு என்ன இருக்க முடியும்? அவருடைய வாழ்க்கையைப் பார்த்தபோது மோனிக்காவின் இதயம் உடைந்தது.

ஆனால் அவர் தன் மகனை விட்டுவிடவில்லை.

அறிவாளி மகன்.
வெற்றிகரமான வாழ்க்கை.
ஆனால் தொலைந்துபோன ஆத்துமா.

மோனிக்கா பல கிறிஸ்தவப் பெற்றோர்கள் செய்யும் அதே காரியத்தைச் செய்தார். ஜெபித்தார். கற்றுக்கொடுத்தார். நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் தன் மகனுடைய இரட்சிப்புக்காகப் பல ஆண்டுகள் கண்ணீரோடு ஜெபித்தார் என்று வரலாறு கூறுகிறது.

ஒரு முறை அவர் தன் ஆயரிடம் தன் துக்கத்தைப் பகிர்ந்தார். அப்போது அந்த ஆயர் அவரிடம், “இவ்வளவு கண்ணீரோடு ஜெபிக்கும்போது உங்கள் மகன் அழிந்துபோக முடியாது” என்று பதில் சொன்னார்.

இந்த வார்த்தைகள் மோனிக்காவுக்கு பெரிய ஆறுதலாக இருந்தன. தேவன் அந்த ஜெபங்களுக்கு பதில் அளிக்கப் போகிறார் என்று அந்த நேரத்தில் அவருக்குத் தெரியாது. தன் மகன் பின்னாளில் கிறிஸ்தவ வரலாற்றில் மிகப் பெரிய போதகராகவும் சிந்தனையாளராகவும் மாறப் போகிறார் என்று அவருக்குத் தெரியாது.

அறிவின் அகந்தை – பொய்யான ஆவிக்குரிய பாதை

வேதாகமத்தைப்பற்றிய அகஸ்தீனின் ஆரம்ப எண்ணம்

அகஸ்தீன் மிகவும் பெரிய அறிவாளி. தத்துவம், வாக்குவாதம், ஆழ்ந்த சிந்தனை—இவையெல்லாம் அவருக்கு இயல்பாக வந்தன. ஆனால் அந்த அறிவே ஒரு காலத்தில் அவரை வேதாகமத்திலிருந்து விலக்கி வைத்தது.

அவர் முதன்முதலாக வேதாகமத்தை வாசித்தபோது அது அவருக்குப் பிடிக்கவில்லை. அதன் மொழி மிகவும் எளிமையாகத் தோன்றியது. கிரேக்க-உரோம தத்துவ நூல்களுடன் ஒப்பிடும்போது அது உயர்ந்த இலக்கியமாக அவருக்குத் தோன்றவில்லை.

அவர், “வேதாகமம் அறிவாளிகளுக்கு மிக எளிமையானதாகவும், குழந்தைகளுக்கு மிகவும் ஆழமானதாகவும் இருக்கிறது” என்று சொன்னார். அந்த நேரத்தில், “வேதாகமம் மிகவும் எளிமையானது. சில பகுதிகள் கொடூரமாகத் தோன்றுகின்றன” என்று அவர் சிந்தித்தார். எனவே, அவர் வேதாகமத்தைத் தள்ளிப்போட்டார். “சிசெரோ போன்ற தத்துவ நூல்களுடன் ஒப்பிடும்போது வேதாகமம் தாழ்வானதாகத் தோன்றியது” என்று அவர் நினைத்தார்.

அவர் உண்மையைத் தேடினார்—ஆனால் கிறிஸ்துவை அல்ல. அந்தத் தேடல் அவரை ஒரு புதிய பாதைக்குக் கொண்டு சென்றது — ஆனால் அது சத்தியத்தின் பாதை அல்ல.

உலக இன்பங்களில் திளைத்த இளைஞன்

அகஸ்தீன் ஒரு பக்தியுள்ள தாயின் மகன். ஆனால் அவர் இளமையில் தேவனைப் பின்பற்றவில்லை. அவர் மிகவும் அறிவுக்கூர்மையுள்ளவர். சிறு வயதிலிருந்தே அவர் படிப்பில் கெட்டிக்காரர். குறிப்பாக பேச்சுக் கலை, இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகளில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

அவர் வட ஆப்பிரிக்காவின் பல நகரங்களில் உயர்கல்வி கற்றார். பின்னர் அவர் கார்த்தேஜ் (Carthage) என்ற பெரிய நகரத்திற்குச் சென்றார். அந்த நகரம் கல்விக்கும், கலாச்சாரத்திற்கும் புகழ்பெற்றது. ஆனால் அதே நேரத்தில் அது சிற்றின்ப வாழ்க்கைக்கும் பெயர் பெற்றிருந்தது.

அவர் உலக வாழ்க்கையில் முழுமையாக மூழ்கினார். இளமையில் அவர் ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்தார். திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் பல ஆண்டுகள் வாழ்ந்தார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். அந்த மகனின் பெயர் அதேயோடேடஸ் (Adeodatus).

ஆனால் அந்த வாழ்க்கை அவருக்கு உண்மையான திருப்தியைத் தரவில்லை. அவருடைய மனம் உண்மையைத் தேடிக்கொண்டிருந்தது. அவர் தத்துவ நூல்களை வாசித்தார். வாழ்க்கையின் பொருளைத் தேடினார். ஆனால் அவர் தேடிய பதில் அவருக்குக் கிடைக்கவில்லை.

இந்தத் தேடலின் விளைவாக ஒரு காலத்தில் அவர் மணிகேயர்கள் (Manichaeans) என்ற ஒரு மதக் குழுவோடு சேர்ந்தார். அவர்கள், “உலகில் ஒரு நல்ல தேவன், ஒரு கெட்ட தேவன் என இரு தேவர்கள் சமமாகப் போராடுகிறார்கள். பாவம் மனித இருதயத்தில் இல்லை — அது பொருளில் உள்ளது” என்று சொன்னார்கள்.

ஆரம்பத்தில் இது அகஸ்தீனுக்கு மிக அறிவுபூர்வமானதாகத் தோன்றியது. அந்தப் போதனை சில காலம் அவரைக் கவர்ந்தது. பத்து ஆண்டுகள் அவர் அதில் ஈடுபட்டார். போதித்தார். ஆதரித்தார். ஆனால் அது அவரை மாற்றவில்லை.

கருத்துக்கள் இருந்தன—ஆனால் வாழ்க்கை இல்லை.

காலப்போக்கில் அது உண்மையல்ல என்று அவர் உணரத் தொடங்கினார்.

அவருடைய மனதில் ஓர் ஆழமான போராட்டம் நடந்துகொண்டிருந்தது. ஒருபுறம் உலக இன்பங்கள். மறுபுறம் சத்தியத்தைத் தேடும் மனம். இந்தப் போராட்டம் அவருடைய வாழ்க்கையைப் பல ஆண்டுகள் துன்பப்படுத்தியது.

ஆனால் அந்த நேரத்தில் அவர் அறியாத ஒரு விஷயம் இருந்தது. அவருக்காக ஒருவர் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தார்.

அவர் — அவருடைய அம்மா மோனிக்கா.

வெளிப்புற வெற்றி – உள்ளார்ந்த வெறுமை

மணிகேயவாதம் சலித்தபிறகு, அகஸ்தீன் தன் வாழ்க்கையைக் கல்விக்கும் பணிக்கும் அர்ப்பணித்தார். கார்த்தேஜ். பிறகு உரோம், பின் மிலான்.

ஒவ்வொரு நகரத்திலும் அவர் முன்னேறினார். புறம்பாக புகழ், மரியாதை, பதவி. உள்ளே—அமைதியில்லை. அவர் பாவ வாழ்க்கையிலேயே இருந்தார். உண்மையை அறிந்தும் அதற்குக் கீழ்ப்படிய முடியவில்லை.

அந்த நேரத்தில் தேவன் அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தார்.

எங்கள் இருதயம் உம்மில் ஓய்வடையும்வரை அமைதியடையாது.”
(Our hearts are restless until they rest in You.)

மிலானில் திறந்த வேதாகமம்

அகஸ்தீன் இத்தாலியின் மிலான் நகரத்தில் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்தார். மிலான் நகரத்தில் அப்போது மிகவும் புகழ்பெற்ற ஆயர் ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் அம்ப்ரோஸ்.

அகஸ்தீன் அம்ப்ரோஸின் பிரசங்கத்தை கேட்கச் சென்றார். ஆவிக்குரிய ஆர்வத்தினால் அல்ல. அவர் ஒரு பெரிய பேச்சாளர் என்று புகழ்பெற்றிருந்ததால், அவருடைய பேச்சின் அழகைக் கேட்கவே சென்றார். ஆனால் அவர் அங்கே அம்ப்ரோஸின் அழகான பேச்சை மட்டும் அல்ல, அவர் வேதாகமத்தை ஆழமாகவும் தெளிவாகவும் விளக்குவதையும் கேட்டார். முன்பு அகஸ்தீனுக்குப் புரியாமல் இருந்த வேதாகமத்தின் பல பகுதிகள் அம்ப்ரோஸின் பிரசங்கத்தினால் புதிய பொருள் பெற்றன.

“வேதாகமம் சாதாரணமான புத்தகம் அல்ல. அது மிகவும் ஆழமான புத்தகம். கிறிஸ்தவம் முட்டாள்தனம் அல்ல” என்று அவர் மெதுவாக உணரத் தொடங்கினார். அவர் பின்னாளில், “நான் முன்பு வெறுத்த அந்த வேதாகமம் இப்போது மெதுவாக என்னுடைய மனதைத் திறக்கத் தொடங்கியது” என்று சொல்கிறார்.

அவருடைய எதிர்ப்புகள் மெதுவாக ஒவ்வொன்றாக விழுந்தன. முன்பு அவர் வேதாகமத்தை அறிவின் கண்களால் பார்த்தார். இப்போது அவர் அதை தேடும் இருதயத்தோடு பார்த்தார். அவருடைய உள்ளத்தில் ஒரு பெரிய போராட்டம் ஆரம்பித்தது. ஒருபுறம் பழைய வாழ்க்கை. மறுபுறம் கிறிஸ்துவின் அழைப்பு. அவர் சத்தியத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். ஆனால் அதை முழுமையாக ஏற்க இன்னும் தயங்கினார். அவருடைய மனதில், “நான் நாளைக்கு மாறிவிடுகிறேன்… இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து மாறிவிடுகிறேன்” என்ற ஒரு வாக்கியம் தொடர்ந்து ஒலித்தது. ஆனால் அந்த “நாளை” தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. அவர் உண்மையைப் பார்த்தார். ஆனால் அதற்குள் நுழையத் தயங்கினார்.

ஆவியின் குற்றச்சாட்டு – இருதய வேதனை

இந்தக் காலத்தை அகஸ்தீன் மிக நேர்மையாக விவரிக்கிறார். எது சரி என்று அவருக்குத் தெரிந்தது. ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை.

“என் ஆத்துமாவின் ஆழத்தை நான் சோதித்தேன். ஒரு பெரிய புயல் எழுந்தது. கண்ணீர் பெருகியது. ‘எத்தனை நாள்கள்?’ ‘நாளை, நாளை?’ ‘இப்போதே ஏன் இல்லை?’ என்று நான் அழைத்தேன்” என்று அவர் கூறுகிறார்.

இது நாத்திகனின் குரல் அல்ல. இது குற்றவுணர்வோடு கட்டுப்பட்ட ஒரு மனிதனின் குரல்.

எடுத்து வாசி” – மாறிய தருணம்

அந்தப் போராட்டம் ஒருநாள் உச்சிக்குச் சென்றது. ஒரு நாள் அவர் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருந்தார். மனக்கலக்கம். அப்பொழுது அருகிலிருந்த ஒரு வீட்டிலிருந்து, “எடுத்து வாசி… எடுத்து வாசி…” (Tolle lege… Tolle lege) என்று ஒரு சிறுவனின் குரல் கேட்டது. அது விளையாட்டா? தற்செயலா? அல்லது தேவனின் குரலா? என்று அவருக்குத் தெரியவில்லை.

ஆனால் தேவன் பேசுகிறார் என்று அவர் உணர்ந்தார். அவர் வேதாகமத்தைத் திறந்தார். அவர் கண்களில் பட்ட முதல் வசனம்: ரோமர் 13:13–14.

“களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.”

அவர் அதற்குப்பிறகு தொடர்ந்து வாசிக்கவில்லை. தேவையில்லை. அந்த வசனத்தை வாசித்த உடனே அவருடைய மனதில் ஒரு விசித்திரமான அமைதி வந்தது. “அந்தக் கணத்தில் விசுவாசத்தின் ஒளி என் இருதயத்தில் பெருகியது. சந்தேகத்தின் இருள் மறைந்தது” என்று பின்னாள்களில் அவர் எழுதுகிறார்.

அந்த நிமிடம்—அகஸ்தீன் புதிதாய்ப் பிறந்தார்.

அம்மாவின் ஜெபங்களுக்கு தேவன் பதில் கொடுத்த நாள்.

கி.பி. 387இல் அம்ப்ரோஸ் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

அந்த நாளிலிருந்து அவர் உலகத்தை வெல்லவில்லை — தன் இருதயத்தை வென்றார்.

புதிய மனிதன் – புதிய பாதை

அந்த நாளிலிருந்து அவருடைய வாழ்க்கை முழுவதும் மாறிவிட்டது. உலகப் புகழையும், பழைய வாழ்க்கையையும் அவர் விட்டுவிட்டார். பணியையும் விட்டார். பாவ உறவையும் விட்டார். வேதாகமத்திலே மூழ்கினார். கிறிஸ்துவை முழுமையாகப் பின்பற்றத் தொடங்கினார்.

ஒருமுறை அவருடைய பழைய காதலி அவரை அழைத்தபோது, அவர் சொன்ன பதில் புகழ்பெற்றது: “ஆம்… ஆனால் அது இனி நான் இல்லை.” அதன் அர்த்தம்—அந்தப் பழைய மனிதன் இறந்துவிட்டான். புதிய மனிதன் பிறந்துவிட்டான்.

ஆனால் தேவன் அவரை தனிப்பட்ட மாற்றத்திற்காக மட்டும் அழைக்கவில்லை. சபைக்காக ஒரு பெரிய போதகராக அவரை உருவாக்கிக்கொண்டிருந்தார்.

கிருபையின் போதகர்

அகஸ்தீன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபிறகு அவருடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. அவர் வட ஆப்பிரிக்காவிற்குத் திரும்பினார். பின்னர் ஹிப்போ (Hippo) என்ற நகரத்தில் ஊழியத்தில் ஈடுபட்டார். கி.பி. 395இல் அவர் அந்த நகரின் ஆயரானார்.

அவர் ஒரு பெரிய சிந்தனையாளர் மட்டுமல்ல; ஒரு மேய்ப்பனும்கூட. அவர் போதித்தார். எழுதினார். சபையை வழிநடத்தினார்.

அவருடைய காலத்தில் சபைக்குள் இரட்சிப்பைப்பற்றிய முக்கியமான ஒரு விவாதம் எழுந்தது: ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்குக் காரணம் மனிதனுடைய முயற்சியா அல்லது தேவனுடைய கிருபையா?

அந்த நேரத்தில் பெலாஜியஸ் (Pelagius) என்ற ஒரு போதகர், “மனிதன் இயல்பாகப் பாவத்தால் முற்றிலும் கெட்டுப்போகவில்லை. அவன் தன் சுயவிருப்பத்தினாலும் சுய முயற்சியினாலும் நல்ல வாழ்க்கை வாழ முடியும். தேவனுடைய கிருபை அதற்கு உதவலாம்; ஆனால் அது அவசியம் அல்ல” என்று போதித்தார்.

பலர் இந்தப் போதனையால் ஈர்க்கப்பட்டார்கள். ஏனெனில் அது மனிதனுடைய திறமையை உயர்த்தியது.

ஆனால் அகஸ்தீன், “மனிதன் தன்னைத்தானே இரட்சிக்க முடியாது. பாவம் மனிதனுடைய வாழ்க்கையை ஆழமாகப் பாதித்திருக்கிறது. ஆகையால் மனிதன் தேவனுடைய கிருபையில்லாமல் இரட்சிக்கப்பட முடியாது” என்று போதித்தார். இதற்கு ஆதாரமாக அவர்,

“கிருபையினாலே விசுவாசத்தின்மூலம் இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபேசியர் 2:8)

“என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது” (யோவான் 15:5)

போன்ற பல வசனங்களை அவர் மேற்கோள் காட்டினார்.

மனிதன் தேவனைத் தேடுவதற்கும்கூட தேவனுடைய கிருபை அவசியம் என்று அகஸ்தீன் தெளிவாகச் சொன்னார். “தேவன் கட்டளையிடுகிறார்; ஆனால் அவர் கட்டளையிடுகிறதைச் செய்யும் கிருபையையும் அவர் தருகிறார்” என்ற அவருடைய வாதம் மிகவும் பிரபலமானது.

இந்த விவாதம் பல ஆண்டுகள் நீண்டது. இறுதியில் சபை பெலாஜியஸின் போதனையை நிராகரித்தது. “இரட்சிப்பு மனிதனுடைய முயற்சியால் அல்ல; தேவனுடைய கிருபையால்தான்” என்று அகஸ்தீன் வலியுறுத்திய ஒரு பெரிய உண்மை சபையில் தெளிவானது. அகஸ்தீன் தன் வாழ்க்கையாலேயே இதை நிரூபித்தார். அவர் இரட்சிக்கப்பட்டது அவருடைய முயற்சியினால் அல்ல — தேவனுடைய கிருபையினால்தான்.

எழுத்துகளால் பேசும் ஆசிரியர்

அகஸ்தீன் ஒரு பெரிய எழுத்தாளரும் கூட. அவருடைய நூல்கள் சபை வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Confessions மற்றும் City of God என்ற இரண்டு நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

Confessions — அவருடைய வாழ்க்கை வரலாறு. அவர் பாவத்திலிருந்து கிருபைக்கு வந்த ஆவிக்குரிய பயணம்.

City of God — இந்த உலக அரசுகளுக்கும் தேவனுடைய அரசுக்கும் இடையிலான வேறுபாட்டைப்பற்றிய ஒரு பெரிய நூல்.

அகஸ்தீன் தன் காலத்துக்காக மட்டும் எழுதவில்லை. பல தலைமுறைகளுக்காக எழுதினார்.

ஒரு மனிதன் — ஒரு பெரிய உண்மை

அத்தனேசியஸ் கிறிஸ்து யார் என்ற சத்தியத்தைக் காத்தார். ஜான் கிறிஸோஸ்டம் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அகஸ்தீன், “ஒரு பாவி எப்படி இரட்சிக்கப்படுகிறான்?” என்ற கேள்விக்கு, “மனிதனுடைய முயற்சியால் அல்ல. மனிதனுடைய ஒழுக்கத்தால் அல்ல. தேவனுடைய கிருபையினால்” என்று தெளிவாகப் பதில் சொன்னார்.

“மனிதன் தன்னைத் தானே இரட்சிக்க முடியும்” என்று பெலாஜியஸ் போதித்தபோது, அகஸ்தீன், “மனிதன் வீழ்ந்தவன். மனசாட்சி கட்டுப்பட்டது. இரட்சிப்பு தேவனிடமிருந்து தொடங்குகிறது. விசுவாசம்கூட தேவனுடைய ஈவுதான். கீழ்ப்படிதல் கிருபையின் விளைவு—காரணம் அல்ல” என்று தெளிவாக்கினார்.

இந்த உண்மை பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு சபையின் சீர்திருத்தத்திற்கு அடிப்படையாக மாறியது.

கிறிஸ்து — வாழ்க்கை — கிருபை.
இந்த மூன்றும் சேர்ந்தால்தான் சபை உறுதியாக நிற்கும்.

மகத்தான மனிதன் – ஆனால் குறைகளுடன்

அகஸ்தீன் பூரணமான மனிதன் அல்ல. சில இடங்களில் அவர் தவறினார். சில நேரங்களில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார். இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொள்கிறோம்: பெரிய தத்துவவாதிகளும் மனிதர்கள்தான்.

ஆனால் அதற்குப்பிறகும், சபை வரலாற்றில் அவருடைய தாக்கத்தை மறுக்க முடியாது. தேவன் பூரணமான மனிதர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனிதர்களைப் பயன்படுத்தினார்.

மூன்று மனிதர்கள் — ஒரு பெரிய பாடம்

இந்தப் பாடத்தில் நாம் மூன்று மனிதர்களைப் பார்த்தோம். இவர்கள் மூவரும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். ஆனால் இவர்கள் வித்தியாசமான போராட்டங்களை எதிர்கொண்டார்கள்.

அத்தனேசியஸ் ஓர் அடிப்படைச் சத்தியத்துக்காக நின்றார். கிறிஸ்து யார் என்ற கேள்விக்குப் பதில் அளித்தார். இயேசு உண்மையான தேவன் என்று அவர் பலமாகப் போராடிக் காத்தார்.

ஜான் கிறிஸோஸ்டம் வேறு ஒரு பிரச்சினையை எதிர்கொண்டார். சரியான போதனை இருந்தாலும், பரிசுத்தமான வாழ்க்கை குறைந்து கொண்டிருந்தது. அவர் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அகஸ்தீன் மூன்றாவது கேள்விக்குப் பதில் சொன்னார். ஒரு பாவி எப்படி இரட்சிக்கப்படுகிறான்? அவர் கூறியது தெளிவானது:

இரட்சிப்பு மனிதனுடைய முயற்சியால் அல்ல — தேவனுடைய கிருபையால்.

இந்த மூன்று மனிதர்களும் சபைக்கு மூன்று முக்கியமான உண்மைகளை நினைவூட்டுகிறார்கள்:

சரியான கிறிஸ்து
சரியான வாழ்க்கை
சரியான இரட்சிப்பு

இந்த மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவைப்பற்றி சரியாக விசுவாசித்தாலும் வாழ்க்கை தவறாக இருந்தால் அது போதாது. பரிசுத்தமாக வாழ முயன்றாலும் கிறிஸ்துவைப்பற்றிய சத்தியம் தெளிவாக இல்லாவிட்டால் அது ஆபத்தானது. மனிதன் முயற்சியால் இரட்சிக்கப்பட முடியும் என்று நினைத்தால் அது நற்செய்தியின் இதயத்தையே இழந்துவிடும்.

ஆகவே இந்த மூன்று மனிதர்களின் குரல் இன்றைக்கும் சபைக்கு பேசுகிறது.

அத்தனேசியஸ் நமக்குச் சொல்கிறார்:
கிறிஸ்து உண்மையான தேவன்.”

கிறிஸோஸ்டம் நமக்குச் சொல்கிறார்:
விசுவாசம் வாழ்க்கையில் காணப்பட வேண்டும்.”

அகஸ்தீன் நமக்குச் சொல்கிறார்:
இரட்சிப்பு தேவனுடைய கிருபையினால்.”

இந்த மூன்று உண்மைகளும் சேர்ந்தால்தான் சபை உறுதியாக நிற்கும்.

சத்தியத்தைக் காத்தவர்கள் மறைந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் காத்த சத்தியம் இன்னும் சபையில் வாழ்கிறது.

மனிதர்கள் மறைகிறார்கள் —
ஆனால் தேவனுடைய சத்தியம் நிலைத்திருக்கிறது.