15 கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலம் - மேற்கத்திய நாடுகளில் அன்றாட வாழ்க்கை -
Early Christian Empire - Daily life in the west
இந்தப் பாடத்தில், பிரித்தானியா, அயர்லாந்து மற்றும் மேற்கத்திய ஐரோப்பாவில் கிறிஸ்தவம் எவ்வாறு வேரூன்றி வளர்ந்தது என்பதைப் பார்க்கிறோம். பேட்ரிக், கொலம்பா, கேன்டர்பரியின் அகுஸ்தீன்போன்ற மிஷனரிகளின் ஊழியம், வைக்கிங் படையெடுப்புகளின் தாக்கம், துன்பத்தின் மத்தியிலும் முன்னேறிய நற்செய்தி, கட்டாய மதமாற்றங்களின் விளைவுகள் ஆகியவைகளை வரலாற்று ஆதாரங்களுடன் ஆராய்கிறோம். இந்தப் பாடத்தின் மையச் செய்தி: மனித அரசுகள் மாறினாலும், போர்களும் குழப்பங்களும் வந்தாலும், தேவனுடைய நோக்கம் ஒருபோதும் தோல்வியடைவதில்லை. நற்செய்தி தலைமுறைகளைத் தாண்டி தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்த வரலாற்றுப் பயணம், கடந்த காலத்தை மதிப்பிடுவதற்காக அல்ல; தேவன் தம் கிரியையை எவ்வாறு முன்னெடுத்துச் சென்றார் என்பதை அறிந்து, நாமும் நம்முடைய தலைமுறையில் கிறிஸ்துவுக்கு உண்மையாய் வாழ ஊக்கமடைவதற்காகவே.
கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலம்
மேற்கத்திய நாடுகளில் அன்றாட வாழ்க்கை (கி.பி. 312–1000)
சபை வரலாறு, பாடம் 15
1. அறிமுகம்: சபை வரலாற்றின் காலகட்டங்கள்
கிறிஸ்தவம்! கிறிஸ்தவ உலகம்! நாம் இன்று காண்கிற கிறிஸ்தவம், இன்று நாம் வாழும் கிறிஸ்தவ உலகம் எப்படி உருவானது? சில சபைகள் ஏன் ஒன்றுபோல இருக்கின்றன, சில சபைகள் ஏன் முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றன? சில கிறிஸ்தவ மரபுகள் ஏன் நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கின்றன? சில காலங்களில் சபை ஏன் ஆவிக்குரிய வல்லமையோடு வாழ்ந்தது? சில காலங்களில் ஏன் பலவீனமடைந்தது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேட, நாம் சபை வரலாற்றின் நீண்ட பயணத்திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது.
இன்று நாம் "கிறிஸ்தவப் பேரரசு" என்று பொதுவாக அழைக்கப்படும் சபை வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டத்தைப் பார்க்கப்போகிறோம்.
சபை வரலாற்றைக் கொஞ்சம் எளிதாகப் புரிந்துகொள்வதற்காக அதைப் பல காலகட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம். இவை முற்றிலும் துல்லியமான எல்லைகள் அல்ல; வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் அடையாளங்களே.
நம் வசதிக்காக,
இந்தப் பிரிவுகள் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைப்பூட்டுகின்றன. சபை வரலாறு எப்போதும் ஒரே நிலையில் இருக்கவில்லை. அது பல்வேறு சூழ்நிலைகளின்வழியாகப் பயணித்தது. சில நேரங்களில் அது கடுமையான, கொடூரமான சித்திரவதையைச் சந்தித்தது; சில நேரங்களில் அது பேரரசர்களின் ஆதரவைப் பெற்றது; சில நேரங்களில் அது ஆவிக்குரிய எழுச்சியையும், வேறு சில நேரங்களில் வீழ்ச்சியையும் அனுபவித்தது.
ஆனால் இந்த எல்லா மாற்றங்களின் மத்தியிலும், ஒரு விஷயம் மட்டும் மாறவில்லை—ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் சபையை வழிநடத்திக்கொண்டே இருந்தார்.
இந்தப் பாடத்தில், குறிப்பாக கி.பி. 312முதல் 1000 வரையிலான காலத்தில், மேற்கத்திய உலகில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கையை நாம் ஆராயப்போகிறோம்.
2. மேற்கு உலகம்
சபை வரலாற்றைப்பற்றிப் பேசும்போது, பொதுவாக நம்முடைய கவனம் மேற்கத்திய உலகத்தின்மீதே செல்கிறது. இதற்குக் காரணம் இருக்கிறது. இன்று நாம் அறிந்திருக்கும் கிறிஸ்தவ உலகத்தின் பல முக்கியமான வளர்ச்சிகளும், மாற்றங்களும், போராட்டங்களும் மேற்கத்திய உலகில்தான் நடந்தன.
ஆனால், அதனால் கிழக்கத்திய உலகில் கிறிஸ்தவ வரலாறு இல்லை என்று அர்த்தமல்ல. உண்மையில், கிழக்கத்திய உலகிலும் மிகவும் ஆழமான, வளமான, முக்கியமான கிறிஸ்தவ மரபுகள் வளர்ந்தன.
“கிழக்கத்திய உலகம்” என்று சொல்லும்போது, நான் சீனா அல்லது இந்தியா போன்ற தூர கிழக்கு நாடுகளைக் குறிக்கவில்லை. பின்னாளில் “ஆர்த்தடாக்ஸ் சபைகள்” என்று அழைக்கப்பட்ட மரபுகள் உருவான உரோமப் பேரரசின் கிழக்குப் பகுதியைத்தான் “கிழக்கத்திய உலகம்” என்று குறிப்பிடுகிறேன்.
ஆனால், இந்தப் பாகத்தில் நாம் மேற்கத்திய உலகத்தின்மீதுதான் முக்கியமாகக் கவனம் செலுத்தப்போகிறோம்.
ஏன்?
ஏனெனில், கிறிஸ்தவம் ஒரு துன்புறுத்தப்பட்ட சிறிய இயக்கமாக இருந்து, பின்னர் பேரரசின் அங்கீகாரத்தைப் பெற்ற மதமாக மாறியபோது, அதன் தாக்கம் மேற்கத்திய உலகில் மிகவும் தெளிவாகக் காணப்பட்டது. அந்த மாற்றம் மக்களின் அன்றாட வாழ்க்கையை எப்படிப் பாதித்தது? அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? அவர்கள் உலகத்தை எப்படிப் பார்த்தார்கள்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி, கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலத்தில் மேற்கத்திய உலகில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைக்குள் நாம் நுழையப்போகிறோம்.
வரலாறு என்பது அரசர்களின் கதையோ, போர்களின் கதையோ மட்டுமல்ல. சாதாரண மக்களின் வாழ்க்கையும் வரலாற்றின் ஒரு பகுதியே. இந்தப் பாகத்தில், அப்படிப்பட்ட சாதாரண மக்களின் உலகத்தை நாம் அருகிலிருந்து பார்க்கப்போகிறோம்.
3. உரோமின் வீழ்ச்சிக்குப்பிறகு கடினமான வாழ்க்கை
கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலத்தில் மேற்கத்திய உலகில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை விவரிக்க, “கடினம்” என்ற ஒரேவொரு வார்த்தையே போதும். மேற்கத்திய உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு, மக்களின் வாழ்க்கை முன்பைவிட மிகவும் கடினமானதாக மாறியது.
மேற்கு உரோமப் பேரரசு ஒரே நாளில் சரிந்துவிடவில்லை. அது பல ஆண்டுகளாக மெதுவாக பலவீனமடைந்து, இறுதியில் கி.பி. 450 முதல் 476 வரையிலான காலத்தில் சிதறிப்போனது. அதற்குப் பிறகு, அவர்கள் வாழ்ந்த உலகமே மாறிவிட்டது.
அந்தக் காலத்தில் வாழ்ந்த ஓர் எழுத்தாளர், உரோமின் வீழ்ச்சியைப்பற்றி எழுதும்போது, “உலகத்திற்கெல்லாம் தாயாய் இருந்தவள் கொல்லப்பட்டுவிட்டாள்” என்று கூறுகிறார். அது வெறுமனே உணர்ச்சிமயமான ஒரு சொற்றொடர் அல்ல. அந்த வார்த்தைகள், அக்கால மக்களின் மனநிலையை வெளிப்படுத்துகின்றன.
அவர்களுக்கு, உரோம் என்பது ஒரு நகரம் மட்டுமல்ல; அது ஒழுங்கின் அடையாளம். பாதுகாப்பின் அடையாளம். நிலைத்தன்மையின் அடையாளம். அந்த அடையாளம் உடைந்துவிட்டது.
இந்தக் காலத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒருவேளை அதிகரித்திருக்கலாம். ஆனால் பல பகுதிகளில் மக்கள் தொகை குறைந்தது. போர்கள், நோய்கள், சமூக அமைப்பின் சீர்கேடு—இவை அனைத்தும் அதற்குக் காரணமாக இருந்தன.
ஒருகாலத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த நகரங்கள் வெறிச்சோடின. ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்த பகுதிகளில், இப்போது சிலர் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். ஒரு பெரிய நகரத்தின் ஒரு மூலையில் மட்டுமே மக்கள் வாழ்ந்தார்கள்; மீதமுள்ள பகுதிகள் மெதுவாகப் பாழடைந்து, காடுகளாக மாறின.
அந்த உலகம் பாதுகாப்பான உலகம் அல்ல. அடர்ந்த காடுகளைக் கண்ட மக்கள் பயந்தார்கள். பாதைகளில் பாதுகாப்பு இல்லை. பயணம் ஆபத்தானது. தொடர்பு வசதிகளும் போக்குவரத்தும் மிகவும் குறைந்ததால், சமூகங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்துபோயின. ஒரு கிராமம் மற்றொரு கிராமத்திலிருந்து துண்டிக்கப்பட்டது. மக்களின் உலகம் சுருங்கிவிட்டது.
இன்று நாம் சில நொடிகளில் உலகத்தின் மறுபக்கத்தில் இருப்பவர்களோடு பேச முடிகிறது. ஆனால் அந்நாளில், அருகருகே இருந்த கிராமத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைகூட ஒருவருக்கொருவர் தெரியாமல் போயிற்று. தொடர்புகள் அறுந்துபோயிற்று. உலகம் ஒரு அச்சமூட்டும் இடமாக மாறியிருந்தது.
ஆனால் அந்த இருண்ட காலத்திலும், தேவன் தம் சபையை விட்டுவிடவில்லை. மனித அரசுகள் சிதறியபோதும், தேவனுடைய நோக்கம் முன்னேறிக்கொண்டே இருந்தது.
4. தேவன் இந்த வீழ்ச்சியில் இருந்தாரா?
இங்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. உரோமின் வீழ்ச்சி வெறுமனே ஓர் அரசியல் நிகழ்வா? ஒரு பொருளாதாரச் சிதைவா? அல்லது தேவன் இதில் வேலை செய்தாரா? இந்தக் கேள்வியை நாம் தவிர்க்க முடியாது.
ஏனெனில், உரோமின் வீழ்ச்சி என்பது ஒரு நகரத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல; அது உலகத்தின் மிகப் பெரிய ஒரு பேரரசின் வீழ்ச்சி. பல நூற்றாண்டுகளாக கொலோச்சிய ஒரு பேரரசு சிதறிப்போயிற்று. மக்கள் பயந்தார்கள். பலர் நம்பிக்கை இழந்தார்கள். பலருக்கு உலகமே முடிந்துவிட்டதுபோல் தோன்றியது.
ஆனால் வரலாறு நமக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைப்பூட்டுகிறது. இந்த உலகத்தில் எந்த அரசும் நிலையானதல்ல. எவ்வளவு பலமான அரசாக இருந்தாலும், ஒருநாள் அது விழும். மனித அரசுகள் எழுகின்றன, விழுகின்றன. உரோமப் பேரரசும் எழுந்தது, உயர்ந்தது, வளர்ந்தது, பின்னர் விழுந்தது.
ஆனால் தேவனுடைய அரசு அப்படியல்ல. அது ஒருபோதும் வீழ்வதில்லை. அது என்றென்றும் நிலைத்திருக்கும்.
அதனால்தான், இந்த நிகழ்வை வெறும் வீழ்ச்சியாக மட்டும் பார்க்கக் கூடாது. சில நேரங்களில், மனிதர்கள் வீழ்ச்சி என்று அழைப்பதை, தேவன் மாற்றம் என்று அழைக்கிறார். ஒரு கதவு மூடப்படும்போது, இன்னொரு கதவு திறக்கப்படுகிறது. ஒரு உலகம் மறையும்போது, தேவன் தம் நோக்கத்தை நிறைவேற்ற ஒரு புதிய சூழலை உருவாக்குகிறார். அந்த இருண்ட காலத்திலும் தேவன் தம் மக்களை விட்டுவிடவில்லை. மனித அரசுகள் சிதறியபோதும், தேவனுடைய நோக்கம் முன்னேறிக்கொண்டே இருந்தது. அதுதான் சபை வரலாற்றின் ஒரு முக்கியமான பாடம்.
5. முந்தைய நாகரிகத்தின் இடிபாடுகளுக்கிடையே வாழ்க்கை
அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் ஒரு விசித்திரமான உலகத்தில் வாழ்ந்தார்கள். அவர்களைச் சுற்றிலும், கிரேக்க, உரோம நாகரிகங்களின் பழைய மகிமையின் சுவடுகள் இன்னும் காணப்பட்டன.
உரோமின் பிரமாண்டமான சாலைகள்...நகரங்களுக்கு நீரை எடுத்துச் சென்ற நீர்வழிகள்...பெரிய பாலங்கள்... இவைகள் பல இடங்களில் சேதமடைந்திருந்தாலும், இன்னும் அங்கே இருந்தன. அவை அமைதியாக ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருந்தன. “ஒருகாலத்தில் இங்கு ஒரு பெரிய நாகரிகம் வாழ்ந்தது” என்று அவை சாட்சி பகர்ந்தன. இந்தக் கட்டிடங்களும் அமைப்புகளும், “முன்னோர்களில் பலர் பொறியியல் திறமையிலும், நிர்வாக ஒழுங்கிலும் உயர்ந்த நிலையை அடைந்திருந்தார்கள்,” என்ற ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்தின.
ஆனால் அந்த உயர்ந்த நிலையைத் தொடர்ந்து பராமரிக்கும் வல்லமை பின்னர் வந்த தலைமுறைகளிடம் இல்லாமல் போயிற்று. ஒரு வகையில், அவர்கள் தங்களைவிட மேம்பட்ட ஓர் உலகத்தின் சிதிலங்களின் நடுவே வாழ்ந்தார்கள். அது ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்திருக்க வேண்டும்.
அவர்கள் வாழ்ந்த உலகம் சிதைந்திருந்தது, சேதமடைந்திருந்தது. ஆனால் அவர்களைச்சுற்றி நின்ற சிதிலங்கள், கடந்த காலத்தின் மகத்துவத்தைப் பேசிக்கொண்டிருந்தன. அவை அமைதியான சாட்சிகள். “மனித மகிமை உயரலாம்; மனித சாதனைகள் வியப்பூட்டலாம்; ஆனால் அவையும் ஒருநாள் சிதிலங்களாக மாறலாம்” என்று அவை சொல்லிக்கொண்டிருந்தன.
அந்தச் சிதிலங்களின் நடுவே நின்ற மனிதர்கள், கடந்த காலத்தின் மகிமையையும் நிகழ்காலத்தின் பலவீனத்தையும் ஒரே நேரத்தில் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
6. கிராம வாழ்க்கையும், பொருளாதார நிலையும்
கிறிஸ்தவப் பேரரசின் இந்த ஆரம்ப காலத்தில், நாம் ஒருவேளை மேற்கத்திய ஐரோப்பாவில் வாழ்ந்திருந்தால், நாம் பெரும்பாலும் ஒரு சிறிய பண்ணையில் வாழ்ந்திருப்போம். நாம் ஒரு பெரிய வியாபாரியாகவோ அல்லது வர்த்தகராகவோ இல்லாமல், ஒரு சாதாரண விவசாயியாக இருந்திருப்போம். அன்று அங்கு நிச்சயமாக பெரிய வியாபாரிகளும் வர்த்தகர்களும் இருந்தார்கள். ஆனால் அவர்களைவிட விவசாயிகள்தான் பல மடங்கு அதிகமாக இருந்தார்கள். அதுவே அந்த உலகத்தின் உண்மை.
ஏனென்றால், ஒரு சமூகம் திறம்பட வர்த்தகம் செய்யத் தேவையான வலையமைப்புகள் மிகவும் கடுமையாக சீர்குலைந்திருந்தன. ஆகவே, வியாபாரிகளும் வர்த்தகர்களும் இருந்தபோதும், அவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். பெரிய அளவிலான வர்த்தகத்திற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பல இடங்களில் பாதிக்கப்பட்டிருந்தன.
அவர்கள் சிறுசிறு பண்ணைகளில் வாழ்ந்ததால், அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் காலநிலையைப் பொறுத்து மாறிக்கொண்டேயிருந்தது. விதைப்பு காலம் வந்தபோது —ஓய்வே இல்லாத உழைப்பு. அறுவடை காலம் வந்தபோது—மீண்டும் அதே உழைப்பு. ஆனால் குளிர்காலத்தில், வேலை மிகவும் குறைவாக இருந்தது. வாழ்க்கை இயற்கையின் ஓட்டத்தோடு பின்னிப்பிணைந்து நகர்ந்தது. இவ்வாறு வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்தது. உண்மையிலேயே கடினமானதாக இருந்தது.
அந்தக் காலத்தில் தாய்மார்களும் குழந்தைகளும் சந்தித்த மரண விகிதம் இதற்கு ஒரு மறுக்கமுடியாத ஆதாரம். வரலாற்றுக் கணக்குகளின்படி, கர்ப்பிணிப் பெண்களில் கணிசமானவர்கள் பேறுகாலத்தின்போதே உயிரிழந்தார்கள். மேலும், பல குழந்தைகள் தங்களின் முதல் ஆண்டைக்கூடக் கடக்கவில்லை. பேறுகாலத்தின் போது தாய்மார்களும், பிறந்த குழந்தைகளும் அதிகமாக இறந்தார்கள். பிறந்த குழந்தைகளில், ஒரு வயதைத் தாண்டாதவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
இன்று நாம் மருத்துவ வசதிகளையும் பாதுகாப்புகளையும் சாதாரணமான விஷயங்களாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அந்நாளில், ஒவ்வொரு பிரசவத்திலும் வாழ்வா சாவா என்ற கேள்வி தொங்கிக்கொண்டிருந்தது. மரணத்தை அறியாத குடும்பமே இல்லை. அதுதான் அவர்கள் வாழ்ந்த உலகம்.
7. சமூக அமைப்பும் தரவரிசை முறையும்
இந்தச் சமூகத்தில், ஒருவன் எந்தக் குடும்பத்தில் பிறந்தானோ, பொதுவாக அதுவே அவனுடைய வாழ்க்கையின் திசையை நிர்ணயித்தது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இன்று இருப்பதுபோல அன்று அதிகமாக இருக்கவில்லை. ஒருவன் சமுதாயத்தில் எந்த நிலையில் பிறந்தானோ, அதே நிலையிலேயே வாழ்ந்து, இறந்தான். இது மிகவும் சாதாரணமான விஷயமாகக் கருதப்பட்டது.
அந்தக் காலச் சமூகத்தில் மூன்று முக்கியமான நிலையினர் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு நிலையினர் ஜெபிக்கிறவர்கள். இன்னொரு நிலையினர் போராடுகிறவர்கள். மூன்றாவது நிலையினர் உழைக்கிறவர்கள். அந்தக் காலச் சமூகத்தின் முழு அமைப்பும் இந்த மூன்று நிலைகளின்மேல்தான் கட்டப்பட்டிருந்தது.
“ஜெபிக்கிறவர்கள்” - குருக்கள், துறவிகள், போதகர்கள், “போராடுகிறவர்கள்” போர்வீரர்கள், குறிப்பாக நிலப்பிரபுக்களுக்கும் அரசர்களுக்கும் சேவை செய்த குதிரைவீரர்கள். “உழைக்கிறவர்கள்” சாதாரண மக்கள்—விவசாயிகள், தொழிலாளர்கள், கைவினைஞர்கள்.
இந்த மூன்று நிலையினரும் ஒருவரோடோருவர் இணைந்திருந்தார்கள்.
ஒரு நிலையினர் இல்லாமல் மற்றொரு நிலையினர் இயங்க முடியாது என்று அவர்கள் கருதினார்கள். குருமார்கள் ஜெபித்தார்கள். போர்வீரர்கள் பாதுகாத்தார்கள். பொதுமக்கள் உழைத்தார்கள். அந்தச் சமூகம் இப்படித்தான் இயங்கியது.
இன்று நாம் தனிநபர் சுதந்திரத்தைப்பற்றி அதிகமாகப் பேசுகிறோம். ஆனால் அந்நாளில், ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தைவிட, அவர் சேர்ந்திருந்த சமூகத்தின் நலனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட உலகத்தில்தான் கிறிஸ்தவம் வளர்ந்தது.
8. சபையின் சொத்துரிமையும் குருக்களின் வாழ்க்கையும்
இந்தக் காலத்தில், பல சபைகள் உள்ளூர் பணக்காரர்களின் கைகளிலோ, அல்லது மடங்களின் கட்டுப்பாட்டிலோ, அல்லது ஆயர்களின் ஆளுகையின்கீழோ இருந்தன. அவர்களுக்குச் சபையில் சில சிறப்பு உரிமைகள் இருந்தன. குறிப்பாக, சபையின் குருவானவரை—அதாவது போதகரை—நியமிப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். மேலும், சபையின் வருமானத்தை நிர்வகிப்பதிலும் அவர்களுக்கு அதிக அதிகாரம் இருந்தது. இதனால், உள்ளூர் சமூகத்தில் அவர்களுக்கு அதிகமான செல்வாக்கு இருந்தது.
சபையின் வருமானத்திலிருந்துதான் குருவானவர் வாழ்க்கை நடத்தினார். எனவே, பெரும்பாலான பங்குக் குருக்கள் மிக எளிய வாழ்க்கையையே வாழ்ந்தார்கள். ஆயர்களோ அல்லது மடங்களோ வழங்கிய உதவிகளையே அவர்கள் பெரிதும் சார்ந்திருந்தார்கள்.
அந்த நாட்களில், மேற்கத்திய சபைகளில் குருவானவர் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் படிப்படியாக வலுப்பெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் நடைமுறையில், நிலைமை எப்போதும் அதுபோல இருக்கவில்லை. சில இடங்களில், குருவானவர்கள் குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள். இது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாதபோதும், உள்ளூர் அளவில் சில நேரங்களில் அது பொறுத்துக்கொள்ளப்பட்டது. குருவானவர்கள் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்றதைக்குறித்த குறிப்புகள் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றன.
இது ஒரு முக்கியமான உண்மையை நமக்குக் காட்டுகிறது. சபை ஒரு விஷயத்தைப் போதித்தது. ஆனால், அது தான் போதித்ததற்கு முரணான வேறொரு வாழ்க்கை வாழ்ந்தது. போதனைக்கும் வாழ்க்கைக்கும் இடையே சில நேரங்களில் இடைவெளி இருந்தது. இப்படிப்பட்ட முரண்பாடு அன்று மட்டும் இல்லை, இன்றும் தொடர்கிறது. இது வரலாற்றின் பல கட்டங்களில் காணப்படும் ஒரு மனித பலவீனம். சபை வரலாறு வெற்றிகளை மட்டுமல்ல, எச்சரிக்கைகளையும் கற்றுத்தருகிறது.
9. யூதர்களைப்பற்றிய மனப்பாங்கு
ஆரம்பகாலக் கிறிஸ்தவ உலகில் ஒரு துயரமான போக்கு உருவாகி, பின்னர் மேலும் வலுப்பெற்றது. அது யூதர்களைப்பற்றிய எதிர்மறையான மனப்பாங்கு.
இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு யூதர்களே காரணம் என்ற தவறான எண்ணம் பல இடங்களில் பரவியது. இதன் விளைவாக, யூதர்கள் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு உள்ளானார்கள். சில இடங்களில், அவர்களுடைய தொழில்கள் நசுக்கப்பட்டன, வேறு சில இடங்களில் அவர்களுடைய வர்த்தகத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இன்னும் சில இடங்களில், அவர்களோடு சமூகத் தொடர்பு வைத்திருப்பதற்கும் தடைகள் இருந்தன. வேறு சில பகுதிகளில், அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் உடைகளையோ அடையாளங்களையோ அணியுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
யூதர்களுக்கு எதிரான இந்தக் கட்டுப்பாடுகள், தடைகள், நெருக்கடிகள் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல இருக்கவில்லை. காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப அவை மாறுபட்டன. ஆனால் ஒரு விஷயம் தெளிவாக இருந்தது. யூதர்களை பல இடங்களில் மக்கள் சந்தேகத்தோடும் விரோதத்தோடும் பார்த்தார்கள்.
இது சபை வரலாற்றின் ஒளிமிக்க பக்கங்களில் ஒன்றல்ல. மாறாக, அது எச்சரிக்கை தரும் பக்கங்களில் ஒன்று. ஏனெனில், வரலாறு நமக்கு ஓர் உண்மையை நினைவூட்டுகிறது. ஒரு மக்கள் கூட்டத்தைப்பற்றிய தவறான எண்ணம் பரவத் தொடங்கும்போது, அது அநீதிக்கும் பாகுபாட்டிற்கும் வழிவகுக்கலாம். அதனால்தான், சபை வரலாற்றின் வெற்றிகளை மட்டுமல்ல, அதன் தவறுகளையும் நாம் நேர்மையாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் வரலாறு நமக்கு ஆசிரியராக மாறும்.
10. சமுதாயத்தின் மையமாக மாறிய சபை
இந்தக் காலத்தில், சபை வெறுமனே ஒரு மத அமைப்பாக மட்டும் இருக்கவில்லை. அது சமுதாயத்தின் மிக முக்கியமான அமைப்பாக மாறியிருந்தது.
உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு ஒழுங்கும், அமைப்பும் சீர்குலைந்துபோன நிலையில் சபைதான் ஒழுங்கும், அமைப்பும் காணப்பட்ட மிக முக்கியமான நிறுவனமாக இருந்தது. இதனால், ஒருவன் சமுதாயத்தில் முன்னேறுவதற்கான பெரும்பாலான வாய்ப்புகள் சபையில் அல்லது சபையோடு தொடர்புடைய நிறுவனங்களில் கிடைத்தன.
ஒருவன் நல்ல கல்வி பெற வேண்டுமானால், சமுதாயத்தில் செல்வாக்கு பெற வேண்டுமானால், உயர வேண்டுமானால், அவன் சபையையே நாட வேண்டியிருந்தது. இதனால், கிறிஸ்தவம் சமுதாயத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரவியது. ஆனால் அதோடு ஒரு பிரச்சினையும் உருவானது.
கிறிஸ்தவம் எல்லா இடங்களிலும் பரவியிருந்தாலும், எல்லா இடங்களிலும் அதை மக்கள் ஒரே அளவில் புரிந்துகொள்ளவில்லை. பல இடங்களில் கிறிஸ்தவத்தில் பல மூடநம்பிக்கைகள் கலந்திருந்தன.
வேறு சில இடங்களில், போதுமான கல்வியறிவு இல்லாததால், மக்கள் விசுவாசத்தின் சத்தியங்களை ஆழமாக அறியவில்லை. இந்தக் காலத்தில் மேற்கத்திய ஐரோப்பாவின் பல பகுதிகளில் கல்வியறிவும் கற்றலும் கணிசமாகக் குறைந்திருந்தன.
சாதாரண விசுவாசிகளில் பலருக்கு வேதாகமத்தை வாசிக்கவே தெரியாது. பலர் வேதாகமத்தைப் பார்த்ததேயில்லை.
நாம் 312 முதல் 1000 வரையிலான காலகட்டத்தைப் பார்த்துகொண்டிருக்கிறோம். இங்கு நாம் ஒரு முக்கியமான வித்தியாசத்தைக் கவனிக்க வேண்டும். கிறிஸ்தவம் எல்லா இடங்களிலும் ஒரு நிறுவனமாகப் பரவியிருந்தது. ஆனால் அது எப்போதும் ஜீவனுள்ள ஆவிக்குரிய ஓட்டமாக இருந்தது என்று சொல்ல முடியாது.
விசுவாசம் சமுதாயத்தின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாக மாறும்போது, சில நேரங்களில் அது தன் உள்ளார்ந்த வல்லமையை இழந்துவிடும் ஆபத்து உண்டு. உள்ளார்ந்த மறுசாயலாக்கப்படுதல் இல்லாமலே வெளிப்புறமாகக் கிறிஸ்தவம் இருக்கலாம். சபை வரலாறு முழுவதும் இந்த இழுபறியை நாம் காண்கிறோம். நிறுவனமாகிய கிறிஸ்தவம் ஒருபுறம். உயிருள்ள விசுவாசம் மறுபுறம். இந்தப் போராட்டம் அந்நாளில் மட்டும் இல்லை. இன்றும் தொடர்கிறது. அதனால்தான், கிறிஸ்தவம் நமக்கு வெளியே இருக்கிறதா என்பதல்ல முக்கியம். கிறிஸ்து நமக்குள் இருக்கிறாரா என்பதே முக்கியம்.
11. வேதாகமமும் இறையியலும்
இடைக்கால உலகத்தில், வாசிக்கத் தெரியாத விசுவாசிகள்கூட வேதாகமத்தின் நீண்ட பகுதிகளை மனப்பாடம் செய்தார்கள் என்று செசரியாவின் யூசிபியஸ்போன்ற எழுத்தாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அந்தக் காலத்தில் வேதாகமத்தைப் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தபோது கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் பழைய ஏற்பாட்டிற்கே அதிகக் கவனம் செலுத்தினார்கள். கி.பி. 500முதல் 900வரையிலான காலத்தில், மேற்கத்திய ஐரோப்பாவின் பல பகுதிகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் சிந்தனையிலும் கற்பனையிலும் பழைய ஏற்பாடு மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்ற ஒரு சுவாரஸ்யமான உண்மையை வேத ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதற்கு என்ன காரணம்?
முற்காலத்தில் "காட்டுமிராண்டிகள்" (baarbarians) என்று அழைக்கப்பட்ட ஜெர்மானிய, செல்டிக் இன மக்கள், பழைய ஏற்பாட்டின் எபிரெயர்களோடு தங்களை ஒப்பிட்டுப் பார்த்ததுதான் இதற்கு ஒரு காரணம் என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக, அவர்களுடைய முற்றுகை, போராட்டம், வெற்றி, ஒரு மக்கள் கூட்டம் ஒரு நாட்டில் குடியேறுதல் போன்ற பழைய ஏற்பாட்டு நிகழ்வுகள் அவர்களுடைய அனுபவங்களோடு ஒத்திருந்தன. அதனால், பழைய ஏற்பாட்டின் கதைகளும் உருவகங்களும் அவர்களுடைய சிந்தனையில் முக்கிய இடம் பெற்றன.
அந்தக் காலக் குருக்களும், போதகர்களும்கூட பழைய ஏற்பாட்டின் பல அம்சங்களின்மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்கள். ஆராதனையில் தூபம்காட்டுவது, எண்ணெயால் அபிஷேகம் செய்வது, தசமபாகம் கொடுப்பது, குறிப்பிட்ட பரிசுத்த நாட்களைக் கடைப்பிடிப்பது போன்றவை அவர்களுக்குக் கவர்ச்சியாக இருந்தன.
பழைய ஏற்பாட்டின் பல அடையாளங்களும், உருவகங்களும், பயிற்சிகளும் அந்தக் காலச் சபையின் வாழ்வில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருந்தன. புதிய ஏற்பாட்டின் சூழலுக்கு ஏற்றவாறு இவைகளுக்கு அவர்கள் பொருள்விளக்கம் கொடுத்தார்கள்.
இந்தக் கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டையும் தங்களுக்குப் பரிச்சயமான பழைய ஏற்பாட்டின் உருவகங்களின் வழியாகவும், கலாசாரத்தின் வழியாகவுமே புரிந்துகொண்டார்கள். சில நேரங்களில் இது ஒரு சமநிலையின்மையை உருவாக்கியது.
சில நேரங்களில், பழைய ஏற்பாட்டின் சில கருத்துக்கள் அளவுக்கு அதிகமாக வலியுறுத்தப்பட்டதால், புதிய ஏற்பாடு அளிக்கும் முழுமையான பார்வை மறைந்துபோனது.
இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். வேதாகமத்தின் ஒரு பகுதியை மட்டும் அதிகமாக வலியுறுத்தும்போது, சமநிலை குலையக்கூடும். பழைய ஏற்பாடும் தேவனுடைய வார்த்தைதான். புதிய ஏற்பாடும் தேவனுடைய வார்த்தைதான். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் முழு வேதாகமத்தையும் கிறிஸ்துவின் வெளிச்சத்தில் புரிந்துகொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்போதுதான் தேவனுடைய சத்தியத்தின் முழுமையான அழகையும் சமநிலையையும் நாம் காண முடியும்.
12. கிறிஸ்துவையும், நியாயத்தீர்ப்பையும்பற்றிய பார்வை
இயேசு கிறிஸ்து உலகை மீட்கத் தம் ஜீவனைக் கொடுத்த பாடுபட்ட இரட்சகர் என்றும் அவர்கள் போதித்தார்கள். அதே நேரத்தில், அவர் உலகத்தை நியாயந்தீர்க்கப்போகிற நீதிபதியாகிய கிறிஸ்து என்றும் அவர்கள் போதித்தார்கள்.
ஆயினும், அவர் உலகை நியாயந்தீர்க்கப்போகிற நீதிபதியாகிய கிறிஸ்து என்பதே இந்தக் காலத்தில் மக்களுடைய மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்திருந்தது. எனவே, நீதிமான்களும் அநீதிமான்களும் பிரிக்கப்படுதல்...எல்லா மக்களும் தேவனுக்குமுன் கணக்கொப்புவிக்க வேண்டிய நாள்...இறுதி நியாயத்தீர்ப்பு... போன்றவை அடங்கிய மத்தேயு 25ஆம் அதிகாரம்போன்ற பகுதிகள் அதிகமாக வலியுறுத்தப்பட்டன. இந்தக் காலத்தில் பிரசங்கங்களிலும் மக்களின் எண்ணங்களிலும் இந்தக் கருத்து முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.
இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான ஆவிக்குரிய கோட்பாட்டைக் கற்றுக்கொள்ளலாம். தேவனுடைய வார்த்தையின் ஒரு பகுதியை மட்டும் அதிகமாக வலியுறுத்தி, மற்றொரு பகுதியை புறக்கணிக்கும்போது, சமநிலையின்மை உருவாகிறது. கிறிஸ்துவின் இரட்சிப்பும் உண்மை. அவருடைய நியாயத்தீர்ப்பும் உண்மை. ஆனால் ஒரு உண்மையை மட்டும் அதிகமாக வலியுறுத்தி மற்றொன்றை மறந்துவிடும்போது சமநிலை குலைகிறது.
அதிலும் முக்கியமாக, முழு வேதாகமத்தின் மையமாகக் கிறிஸ்துவைக் காண வேண்டும். கிறிஸ்துவை மையமாகவும் நிறைவேறுதலாகவும் பார்க்காதபோது உண்மையான வேதவசனங்கள்கூட தவறாகப் பயன்படுத்தப்படலாம். அதனால்தான், ஒரு வசனத்தை மட்டுமல்ல, முழு வேதாகமத்தின் சாட்சியையும் கேட்க வேண்டும். அப்போதுதான் நாம் கிறிஸ்துவை முழுமையாகக் காண முடியும்.
13. வைக்கிங் காலத்திற்குப்பிறகு புதுப்பித்தல்
வரலாறு எப்போதும் இருளைப்பற்றிய கதை மட்டுமல்ல. வரலாற்றில் வீழ்ச்சிகளும் உள்ளன. எழுச்சிகளும் உள்ளன. சிதைவுகளும் உள்ளன, புதுப்பித்தல்களும் உள்ளன.
பதினோறாம் நூற்றாண்டில் வைக்கிங் படையெடுப்புகள் முடிவுக்கு வந்தபிறகு, மேற்கத்திய ஐரோப்பாவில் ஒரு புதிய மாற்றம் மெதுவாக உருவாகத் தொடங்கியது. சமுதாயம் முன்பைவிட அதிக நிலைத்தன்மையை அடைந்தது. நகரங்கள் மீண்டும் உதயமாயின. மக்கள் தொகை அதிகரித்தது. கல்வியறிவு உயரத் தொடங்கியது. பொருளாதார நிலை மேம்பட ஆரம்பித்தது.
பல நூற்றாண்டுகளாகக் கலக்கமும் குழப்பமும் நிறைந்திருந்த உலகம், மெதுவாக ஒழுங்கை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. இந்த மாற்றம் சபை வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
வேதாகமத்தின்மீது, குறிப்பாக நற்செய்திகளின்மீது, மக்களுக்கு ஒரு புதிய ஆர்வம் உருவாகத் தொடங்கியது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனை, ஊழியம் ஆகியவைகளுக்கு மக்கள் அதிகக் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். வேதாகமத்தின் போதனைகளில் மக்களுக்கு அதிக அக்கறை உருவானது. இதன் விளைவாக, இடைக்கால ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க ஆழமான ஆவிக்குரிய முன்னேற்றம் தோன்றத் தொடங்கியது.
சில வரலாற்றாசிரியர்கள், இந்தப் புதுப்பித்தலை பின்னாளில் நிகழ்ந்த சில முக்கியமான எழுச்சிகளோடு ஒப்பிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, சீர்திருத்த இயக்கத்தின் காலத்தில் பவுலின் இறையியல் மீண்டும் புதிதாகக் கண்டறியப்பட்டதைப்போல, இந்தக் காலத்திலும் வேதாகமத்தின் சில சத்தியங்கள் புதிய முக்கியத்துவத்தைப் பெற ஆரம்பித்தன.
இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். தேவன் தம் சபையை ஒருபோதும் கைவிடுவதில்லை. சில காலங்களில் சத்தியம் மங்கிப்போனதுபோல் தோன்றலாம். சில காலங்களில் ஆவிக்குரிய வாழ்க்கை பலவீனமடைந்ததுபோல் தோன்றலாம். ஆனால் தேவன் மீண்டும் மீண்டும் தம் மக்களைத் தம் வார்த்தைக்குத் திருப்புகிறார். அதுதான் சபை வரலாற்றின் நம்பிக்கையூட்டும் பக்கங்களில் ஒன்று.
14. உரோமன் கத்தோலிக்கச் சபையின் ஆதிக்கம்
இந்தக் காலத்தைப் புரிந்துகொள்ள நாம் இன்னொரு முக்கியமான உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். கி.பி. 312 முதல் 1000 வரையிலான காலத்தில், மேற்கத்திய உலகில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவனின் விசுவாச வாழ்க்கை பெரும்பாலும் உரோமன் கத்தோலிக்கச் சபையால்தான் வடிவமைக்கப்பட்டது.
இன்று இருப்பதுபோல் அன்று எண்ணற்ற சபைப் பிரிவுகளும், ஸ்தாபனங்களும், பலவிதமான கிறிஸ்தவ மரபுகளும் மேற்கத்திய ஐரோப்பாவில் கிடையாது. இன்று இருக்கிற இந்தப் பல்வேறு பிரிவுகள், ஸ்தாபனங்கள், இயக்கங்கள், சபை அமைப்புகள் ஆகியவை பெரும்பாலும் பின்னாளில் உருவானவை.
அன்று, உலகம் எங்கும் பரவியிருந்த கிறிஸ்தவத்தைப் பார்த்தால், கிழக்கத்திய கிறிஸ்தவத்திற்கும் மேற்கத்தியக் கிறிஸ்தவத்திற்கும் இடையில் அப்போது சில வேறுபாடுகள் இருந்தன. ஆப்பிரிக்காவிலும், கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகளிலும் பரவியிருந்த கிறிஸ்தவத்தில் தனித்துவமான வளர்ச்சிகள் காணப்பட்டன.
ஆனால் மேற்கத்திய ஐரோப்பாவைப் பொறுத்தவரை, சபை பெரும்பாலும் ஒரே அமைப்பின்கீழ் செயல்பட்டது. குறிப்பாக உரோமின் ஆயரின் அதிகாரமும் செல்வாக்கும் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தன. இதன் விளைவாக, போதனை, ஆராதனை, சபையின் நடைமுறைகள், கிறிஸ்தவ வாழ்க்கையின் பல அம்சங்கள் ஆகியவைகளை வரையறுப்பதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் உரோமச் சபை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.
ஒருவன் எதை விசுவாசிக்க வேண்டும்? எவ்வாறு ஆராதிக்க வேண்டும்? சபை வாழ்க்கை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையெல்லாம் வரையறுக்கும் அதிகாரம் தங்களுக்கே உண்டு என்று உரோமச் சபை கோரியது. இதனால், மேற்கத்திய கிறிஸ்தவத்தில் ஒரு பொதுவான முகமும், ஒரு பொதுவான குரலும் இருந்தது. அதே நேரத்தில், அதிகாரம் ஒரேவொரு நபரில் குவியத் தொடங்கியபோது, பின்னாளில் பெரிய விவாதங்களுக்கும் சீர்திருத்த இயக்கங்களுக்கும் வழிவகுக்கும் சில கேள்விகளும் உருவாக ஆரம்பித்தன.
15. சபையின் பயிற்சிகள்
இந்தக் காலத்தில் சபையின் போதனைகள் மட்டுமல்ல, அதன் பயிற்சிகளும் படிப்படியாக வளர்ச்சியடைந்தன. இந்த மாற்றங்கள் ஒரே நாளில் நிகழவில்லை. ஒரு மனிதன் ஒரே நாளில் வளர்வதில்லை. அதுபோல, சபையின் பல பயிற்சிகளும் பல நூற்றாண்டுகளாக மெதுவாக உருவாகின.
கி.பி. 600ஆம் ஆண்டளவில், உரோமச் சபையின் ஆயர் முதலாம் கிரகொரி என்பவரின் செல்வாக்கினால் ஜெபத்திலும், ஆராதனையிலும் இலத்தீன் மொழி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
மரியாளையும், பரிசுத்தவான்களையும், தேவதூதர்களையும் நோக்கி ஏறெடுக்கப்பட்ட ஜெபங்கள் பல நூற்றாண்டுகளாக மெதுவாக வளர்ந்து, கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறின.
உரோமின் ஆயருக்குக் காட்டப்பட்ட மரியாதை படிப்படியாக அதிகரித்து, 709 ஆம் ஆண்டளவில், அவருடைய பாதங்களை முத்தமிடுவதுபோன்ற செயல்கள் வரை சென்றது.
786 இல் உருவங்களுக்கும், படங்களுக்கும், புனிதர்களுடன் தொடர்புடைய நினைவுப்பொருட்களுக்கும் காட்டப்பட்ட வணக்கத்தைப்பற்றிய விவாதங்கள் கிறிஸ்தவ உலகில் தீவிரமடைந்தன. பின்னர் சில பகுதிகளில் இவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
"கர்தினால்களின் குழு" (the College of Cardinals) என்று அறியப்படும் அமைப்பு 11 ஆம் நூற்றாண்டில்தான் முழு வடிவம் பெற்றபோதும், அதன் ஆரம்ப விதைகள் 10ஆம் நூற்றாண்டிலேயேமெல்ல உருவாகத் தொடங்கின.
ஒருவரைப் புனிதராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் நடைமுறையும் படிப்படியாக வளர்ந்தது. கி.பி. 993ஆம் ஆண்டில், ஆக்ஸ்பர்க் நகரத்தின் ஆயரான உல்ரிக் என்பவரை போப் பதினைந்தாம் ஜான் புனிதராக அறிவித்தார். இது வரலாற்றில் பதிவாகியுள்ள போப்பானவர் அங்கீகரித்த முதல் புனிதர்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் கிறிஸ்தவர்கள் திருப்பலியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது திருச்சபைக் கட்டளைகளில் ஒன்றாக மாறியது. இதுவும் காலப்போக்கில் வலுப்பெற்ற ஒரு பயிற்சியாகும்.
இன்று ஜெபமாலை என்று அழைக்கப்படும் வழக்கமும் ஒரே நேரத்தில் உருவாகவில்லை. ஜெபங்களை மீண்டும் மீண்டும் சொல்லும் பழக்கம் பல வடிவங்களில் பல நூற்றாண்டுகளாக வளர்ந்து பின்னர் அதன் தற்போதைய வடிவத்தை அடைந்தன.
இவையனைத்தையும் பார்க்கும்போது ஒரு முக்கியமான உண்மை தெளிவாகிறது. 1) இந்தக் காலகட்டத்தில் உரோமன் கத்தோலிக்கச் சபைதான் மேற்கத்திய கிறிஸ்தவ உலகின் பிரதானமான, அதிகார அமைப்பாகவும், மையமாகவும் இருந்தது. 2) இன்று நாம் காணும் அதன் பல நடைமுறைகள் ஒரே நேரத்தில் உருவாகவில்லை. அவை மெதுவாக வளர்ந்தன. அவை வரலாற்றின் வழியாக வடிவம் பெற்றன.
இதிலிருந்து இன்னொரு முக்கியமான கேள்வி எழுகிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் இன்றியமையாத அம்சங்கள் என்ன? காலப்போக்கில் பின்னர் உருவான அம்சங்கள் என்ன? இந்த இரண்டு கேள்விகளையும் நாம் எப்போதும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
காலப்போக்கில் உருவான அனைத்தும் தவறானவை அல்ல. அதே நேரத்தில், உருவான அனைத்தும் அப்போஸ்தலருடைய போதனைக்கு சமமானவையும் அல்ல. அதனால்தான் நமக்கு நிதானித்தறிதலும், தாழ்மையும், கிறிஸ்துவிடமும் வேதாகமத்திற்கும் மீண்டும் மீண்டும் திரும்பிச் செல்லும் மனப்பான்மையும் தேவை.
அங்குதான் நமக்குப் பாதுகாப்பு உண்டு.
16. உரோமப் பேரரசுக்கு அப்பால் கிறிஸ்தவத்தின் விரிவாக்கம்
உரோமன் கத்தோலிக்கச் சபையின் செல்வாக்கு வளர்ந்துகொண்டிருந்த அதே காலத்தில், இன்னொரு முக்கியமான நிகழ்வும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. கிறிஸ்தவம் தொடர்ந்து புதிய பகுதிகளுக்குப் பரவிக்கொண்டிருந்தது. கிறிஸ்தவம் ஏற்கெனவே உரோமப் பேரரசின் பெரும்பாலான பகுதிகளுக்குள் பரவியிருந்தாலும், அதன் பழைய எல்லைகளுக்கு அப்பால் இன்னும் பல இனக்குழுக்களும் பழங்குடியினரும் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
அவர்களை அக்கால எழுத்தாளர்கள் பொதுவாக "காட்டுமிராண்டிகள்" (barbarians) என்று அழைத்தார்கள். ஆனால் அவர்கள் வெறுமனே வரலாற்றின் விளிம்பில் வாழ்ந்த மக்கள் அல்ல. அவர்களும் தேவனுடைய படைப்பே. அவர்களுக்கும் நற்செய்தி தேவை. அவர்களும் கிறிஸ்துவின் இரட்சிப்பிற்குள் அழைக்கப்பட்டவர்கள்.
எனவே, சபையின் கவனம் தன் எல்லைகளுக்குள் மட்டுமே இருக்கவில்லை. நற்செய்தியை அவர்களுக்குக் கொண்டு செல்ல பல இடங்களில் உண்மையான மிஷனரி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். சிலர் அந்நிய மொழிகளைக் கற்றார்கள். சிலர் தங்களுக்கு அறிமுகமே இல்லாத மக்களிடையே சென்று வாழ்ந்தார்கள். அவர்கள் வெறுமனே ஒரு மதத்தைப் பரப்பவில்லை. கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க முயன்றார்கள்.
இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான உண்மையைக் காண்கிறோம். சபை சில நேரங்களில் ஒரு நிறுவனமாக மாறலாம். சில நேரங்களில் அதன் பயிற்சிகள் சிக்கலாகலாம். ஆனால் அதே நேரத்தில், தேவன் தம் மக்களை வெளியே அனுப்பிக்கொண்டேயிருக்கிறார். ஏனெனில், கிறிஸ்தவத்தின் உயிர்நாடி எப்போதும் கிறிஸ்துவின் நற்செய்தியே. அதனால்தான், சபை வரலாற்றின் இந்தக் காலத்திலும், நிறுவனங்கள் வளர்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில், மிஷனரி இயக்கங்களும் வளர்ந்துகொண்டிருந்தன.
17. பிரித்தானியாவில் கிறிஸ்தவம்
இப்போது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, பிரித்தானியாவில் கிறிஸ்தவம் எப்படி வளர்ந்தது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். இன்றைய இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரித்தானியத் தீவுகளையே “பிரித்தானியா” என்று நான் குறிப்பிடுகிறேன்.
இந்த நிலப்பரப்பின் பெரும்பகுதி ஒருகாலத்தில் உரோமப் பேரரசின் ஒரு மாநிலமாக இருந்தது. எனவே, கிறிஸ்தவம் உரோமப் பேரரசு முழுவதும் பரவியபோது, அது பிரித்தானியாவுக்கும் சென்றது.
கிறிஸ்தவம் உரோமின் நேரடி ஆட்சிக்கு அப்பாற்பட்ட பகுதிகளுக்குக்கூட சென்றதாக ஆரம்பகாலக் கிறிஸ்தவ எழுத்தாளர்களில் ஒருவரான ஒரிஜன் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவம் எந்த எல்லைவரைப் பரவியிருந்தது என்று உறுதியாகச் சொல்லமுடியாவிட்டாலும் , கிறிஸ்தவம் உரோமின் நிர்வாக எல்லைகளைத் தாண்டிப் பரவியிருந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன.
உண்மையில், இன்று ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வேல்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கிய முழுத் தீவையும் உரோமர்கள் ஆட்சி செய்யவில்லை. ஆனால் கிறிஸ்தவம் உரோமின் அரசியல் எல்லைகளுக்கு அப்பால் பரவியிருந்தது.
கி.பி. நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், உரோமப் பேரரசன் டயக்கிளீஷியனின் காலத்தில் நிகழ்ந்த சித்திரவதையின்போது பிரித்தானியாவில் கிறிஸ்தவர்கள் இருந்ததற்கும், சிலர் இரத்தசாட்சிகளாக மரித்ததற்கும் ஆதாரங்கள் உள்ளன.
கி.பி. 314ஆம் ஆண்டில் ஆர்ல்ஸ் நகரத்தில் நடைபெற்ற ஆலோசனச் சங்கத்தில், பிரித்தானியாவின் யார்க், இலண்டன், லிங்கன் ஆகிய பகுதிகளிலிருந்து மூன்று ஆயர்கள் கலந்துகொண்டார்கள். பின்னாட்களில் நடந்த பல சங்கங்களிலும் பிரித்தானிய ஆயர்கள் கலந்துகொண்டார்கள்.
அத்தனேசியஸ், கிறிசோஸ்தோம், ஜெரோம்போன்ற முக்கியமான கிறிஸ்தவ எழுத்தாளர்களும் பிரித்தானிய கிறிஸ்தவர்களைக்குறித்து குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதன்மூலம், பிரித்தானியாவில் இருந்த விசுவாசிகள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சிறிய குழுவாக அல்லாமல், உலகளாவிய கிறிஸ்தவ சமுதாயத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டார்கள் என்பதை அறிய முடிகிறது.
கி.பி. 410ஆம் ஆண்டில் உரோமப் படைகள் பிரித்தானியாவிலிருந்து வெளியேறின. ஆனால் கிறிஸ்தவம் அங்கே மறைந்துபோகவில்லை. மாறாக, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு தொடர்ந்து வாழ்ந்தது; தொடர்ந்து வளர்ந்தது.
எனவே, பிரித்தானியாவில் கிறிஸ்தவ வரலாறு மிகப் பழமையானது. குறைந்தபட்சம் மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்தே கிறிஸ்தவம் அங்கே வேரூன்றியிருந்தது என்று சொல்லலாம்.
இதுவே பின்னாளில் பிரித்தானியாவிலிருந்து உலகின் பல பகுதிகளுக்குச் செல்லவிருந்த மாபெரும் மிஷனரி இயக்கங்களுக்கான ஆரம்ப அத்தியாயமாக அமைந்தது.
18. ஆரம்பகால மிஷனரிகள்
பிரித்தானியாவில் கிறிஸ்தவம் பல நூற்றாண்டுகளாக வேரூன்றியிருந்தது என்பதற்கு அங்கிருந்து எழுந்த ஆரம்பகால கிறிஸ்தவத் தலைவர்களின் வாழ்க்கையும் ஒரு சாட்சியாக இருக்கிறது. அவர்களில் ஒருவர் நினியன் (Ninian). அவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்ததாகவும், பிரித்தானியாவின் சில பகுதிகளில் நற்செய்தி அறிவித்ததாகவும் பரவலாகக் கருதப்படுகிறது.
அவர் உரோமுக்குச் சென்று பின்னர் மிஷனரி ஆயராகத் திரும்பிவந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவருடைய வாழ்க்கையைப்பற்றிய பல தகவல்கள் பின்னாளில் எழுதப்பட்ட ஆதாரங்களிலிருந்து கிடைப்பதால், இவைகளை உறுதிப்படுத்துவது எளிதல்ல.
இது சபை வரலாற்றில் நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு நிலைமை. சில நேரங்களில் வரலாற்றுச் சம்பவங்கள் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றன. வேறு சில நேரங்களில், அவை பாரம்பரியச் செய்திகளின் வழியாகவே நமக்குக் கிடைக்கின்றன.
அதே காலகட்டத்தில் பிரித்தானியாவிலிருந்து வந்த இன்னொரு குறிப்பிடத்தக்க நபர் பெலாஜியஸ் (Pelagius). இவர் அகுஸ்தீனின் இறையியலை எதிர்த்தவர். நான்காம் நூற்றாண்டின் இறுதியிலும் ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்த இவர், பின்னர் சபையால் ஏற்றுக்கொள்ளப்படாத போதனைகளை முன்வைத்தார். அவருடைய போதனைகள் கி.பி. 431இல் எபேசுவிலும், கி.பி. 529இல் ஆரஞ்சிலும் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் கண்டிக்கப்பட்டன.
ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் அவருடைய இறையியல் அல்ல. பிரித்தானியாவில் அக்காலத்திலேயே குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ சிந்தனையாளர்களும் தலைவர்களும் இருந்தார்கள் என்பதுதான்.
இவை அனைத்தும் ஒரே உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. பிரித்தானியாவில் கிறிஸ்தவம் ஒரு தற்காலிகமான அல்லது மேற்பரப்பான இயக்கமாக இருக்கவில்லை. அது பல நூற்றாண்டுகளாக அங்கே வேரூன்றி வளர்ந்துகொண்டிருந்தது. அதற்கான சான்றுகளை நாம் வரலாற்றின் பல இடங்களில் காண்கிறோம்.
19. கேன்டர்பரியின் அகுஸ்தீனும், ஆங்கிலேயர் மிஷனும்
பிரித்தானியாவில் கிறிஸ்தவம் ஏற்கெனவே இருந்தது என்பதை நாம் பார்த்தோம். ஆனால் அங்கு கிறிஸ்தவம் எல்லா மக்களிடமும் சமமாகப் பரவியிருக்கவில்லை. குறிப்பாக, உரோமப் படைகள் வெளியேறியபிறகு பிரித்தானியாவிற்குள் வந்த ஆங்கிலோ-சாக்சன் இன மக்களிடையே நற்செய்திப் பணி ஒழுங்குக்கிரமமாக நடைபெறவில்லை.
இந்தச் சூழ்நிலையில்தான் கி.பி. 597ஆம் ஆண்டில் உரோமின் ஆயரான முதலாம் கிரகொரி, நற்செய்தி அறிவிக்க இன்று "கேன்டர்பரியின் அகுஸ்தீன்" (Augustine of Canterbury) என்று அழைக்கப்படும் ஒரு துறவியை பிரித்தானியாவுக்கு அனுப்பினார். அகுஸ்தீன் பிரித்தானியாவிற்கு வந்தபோது, அங்கு கிறிஸ்தவத்தின் சுவடுகள் ஏற்கெனவே இருந்தன. குறிப்பாக செல்டிக் இன மக்களிடையே கிறிஸ்தவம் காணப்பட்டது. எனவே, கிறிஸ்தவத்தைப் பற்றி எதுவும் அறியாத ஒரு பகுதிக்குள் அவர் செல்லவில்லை. ஆனால், ஆங்கிலோ-சாக்சன் மக்களிடையே நற்செய்தியைப் பரப்புவதில் அவர் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். இதனால்தான், அவரை "ஆங்கிலேயரின் அப்போஸ்தலன்" என்று பலர் குறிப்பிடுகிறார்கள்.
கென்ட் நாட்டின் மன்னர் ஏதெல்பெர்ட் (Ethelbert) கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்றுக்கொண்டது அகுஸ்தீனின் ஊழியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு. மன்னர் கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்றுக்கொண்டபிறகு, அவருடைய குடிமக்களில் பலரும் கிறிஸ்தவ விசுவாசத்தைத் தழுவினார்கள்.
அந்தக் கால வரலாற்றுக் குறிப்புகள், பெருமளவிலான ஞானஸ்நான நிகழ்வுகளைப்பற்றிக் கூறுகின்றன. குறிப்பாக கிறிஸ்துமஸ்போன்ற முக்கியமான திருநாட்களில் பலர் ஞானஸ்நானம் பெற்றதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன.
இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான உண்மையைக் காண்கிறோம். தேவன் ஒரு நாட்டைத் தொடும்போது, சில நேரங்களில் அவர் தனிநபர்களைப் பயன்படுத்துகிறார்; சில நேரங்களில் குடும்பங்களைப் பயன்படுத்துகிறார்; சில நேரங்களில் முழு சமூகத்தையும் பயன்படுத்துகிறார்.
கேன்டர்பரியின் அகுஸ்தீன் அப்படிப்பட்ட ஒரு கருவியாக இருந்தார். அவருடைய ஊழியம், பின்னாளில் இங்கிலாந்தின் கிறிஸ்தவ வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், அவருடைய வருகை ஆங்கிலேயர் மத்தியில் நடைபெற்ற கிறிஸ்தவப் பரவலின் முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
20. மேற்கத்திய உலகில் தொடர்ந்த நற்செய்திப் பணி
கேன்டர்பரியின் அகுஸ்தீனோடு கிறிஸ்தவத்தின் வரலாறு முடிந்துவிடவில்லை. உண்மையில், அவர் ஒரு நீண்ட தொடரின் ஒரு பகுதி மட்டுமே.
இந்தக் காலகட்டம் முழுவதும், மேற்கத்திய உலகின் பல பகுதிகளில் பல்வேறு மனிதர்கள், பல்வேறு தலைமுறைகளில், நற்செய்தியை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஒரு தலைமுறை விதைத்தது. அடுத்த தலைமுறை நீரூற்றியது. மற்றொரு தலைமுறை அறுவடை செய்தது. இவ்வாறு, நற்செய்தி மெதுவாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பரவிக்கொண்டே இருந்தது.
சிலர் அரசர்களுக்கு நற்செய்தி அறிவித்தார்கள். சிலர் கிராமங்களில் உழைத்தார்கள். சிலர் தொலைதூரப் பழங்குடியின மக்களிடையே சென்று வாழ்ந்தார்கள்.
சிலருடைய பெயர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பலருடைய பெயர்கள் முற்றிலும் மறக்கப்பட்டுவிட்டன. ஆனால் அவர்களுடைய உழைப்பு வீணாகவில்லை. ஏனெனில், தேவன் தம் நோக்கத்தை நிறைவேற்ற மனிதர்களைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தார். இதனால், மேற்கத்திய உலகில் கிறிஸ்தவம் ஒரு தலைமுறையின் இயக்கமாக இல்லாமல், பல தலைமுறைகளின் தொடர்ச்சியான சாட்சியாக மாறியது.
சபை வரலாற்றின் இந்தக் காலத்தைப் பார்க்கும்போது, ஓர் உண்மை தெளிவாகத் தெரிகிறது. தேவன் தம் வேலையை ஒரேவொரு மனிதனின்மூலம் செய்யவில்லை. ஒரேவொரு தலைமுறையின் மூலமும் செய்யவில்லை. தலைமுறைதோறும், மனிதர்தோறும், இடம்தோறும், தேவன் தம் சாட்சியை முன்னெடுத்துச் சென்றார்.
21. பேட்ரிக்கும், அயர்லாந்தில் நற்செய்திப்பணியும்
மேற்கத்திய உலகில் தொடர்ந்த நற்செய்திப் பணிக்கான மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு பேட்ரிக்கும் (Patrick) அயர்லாந்தில் நடைபெற்ற நற்செய்திப் பணியாகும்.
இன்று "புனித பேட்ரிக்" என்று பரவலாக அறியப்படும் இவர், உண்மையில் பிரித்தானியாவைச் சேர்ந்தவர். இவர் சிறுவனாக இருந்தபோது, அயர்லாந்திலிருந்து வந்த கொள்ளையர்கள் அவரைக் கடத்திச் சென்று அங்கு அடிமையாக விற்றுவிட்டார்கள். பல ஆண்டுகள் அவர் அயர்லாந்தில் அடிமையாக வாழ்ந்தார். ஆனால் பின்னர் அவர் அங்கிருந்து தப்பித்துத் தன் தாய்நாட்டிற்குத் திரும்பினார். அவருடைய கதை அத்தோடு முடியவில்லை.
பின்னர் அவர் கிறிஸ்தவ விசுவாசத்தில் பயிற்சியும் போதனையும் பெற்றார். காலப்போக்கில், ஒரு விசித்திரமான உறுதி அவருடைய இருதயத்தில் உருவானது. ஒருகாலத்தில் தான் அடிமையாக வாழ்ந்த அதே மக்களிடமே திரும்பிச் சென்று நற்செய்தியை அறிவிக்க தேவன் தன்னை அழைக்கிறார் என்று அவர் நம்பினார்.
அது சாதாரணமான முடிவு அல்ல. பலர் தங்கள் சிறையிருப்பையும், அடிமைத்தனத்தையும் மறக்க விரும்புவார்கள். ஆனால் பேட்ரிக் அந்த இடத்திற்கே திரும்பிச் சென்றார். அயர்லாந்திற்குத் திரும்பிய அவர், அங்கிருந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார்.
அந்நாளில் அங்கு செல்வாக்காக இருந்த ட்ரூயிட் (Druid) மதத் தலைவர்களையும், அவர்களுடைய பழக்கவழக்கங்களையும் எதிர்கொண்டார். பயமின்றி கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். சபைகளை நிறுவினார். விசுவாசிகளைப் பயிற்றுவித்தார். புதிய கிறிஸ்தவக் கூட்டங்களை உருவாக்க உதவினார்.
பேட்ரிக் தன் முன்னாள் எஜமானை மீண்டும் சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பு மிகுந்த உணர்ச்சிமிக்கதாக இருந்ததாகவும் அவரைப்பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால் இப்படிப்பட்ட விவரங்களை வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்துவது எளிதல்ல. அது பின்னாளில் உருவான பாரம்பரியக் கதையாக இருக்கக்கூடும்.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக உள்ளது. பேட்ரிக் அயர்லாந்தின் கிறிஸ்தவ வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள், அயர்லாந்தில் சபை ஒழுங்காக வளரத் தொடங்கியது. அர்மாக் (Armagh) போன்ற இடங்கள் கற்றலுக்கும், தலைமைத்துவத்திற்கும், கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் முக்கிய மையங்களாக உருவாகின.
இதிலிருந்து நாம் ஓர் அழகான உண்மையைக் காண்கிறோம். தேவன் சில நேரங்களில் நம்முடைய காயங்களையே தம் கிரியைக்கான கதவுகளாக மாற்றுகிறார். ஒருகாலத்தில் அடிமைத்தனத்தின் இடமாக இருந்த அயர்லாந்து, பின்னர் பேட்ரிக்கின் ஊழியத்தின்மூலம் நற்செய்தி பரவிய நிலமாக மாறியது. அதுவே தேவனுடைய கிருபையின் செயல்முறை.
22. கொலம்பாவும் மிஷனரி விரிவாக்கமும்
அயர்லாந்தில் பேட்ரிக்கின் ஊழியத்திற்குப்பிறகு, அடுத்த தலைமுறையில் குறிப்பிடத்தக்க மிஷனரியாக விளங்கியவர் கொலம்பா (Columba).
இவர் அயர்லாந்தைச் சேர்ந்த ஓர் உயர்குடியில் பிறந்தவர். அவருடைய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தைப்பற்றி பல பாரம்பரியக் குறிப்புகள் உள்ளன. அவைகளின்படி ஒரு மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப்பிறகு, தன் வாழ்க்கையை நற்செய்திப் பணிக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற உறுதி அவருக்குள் உருவானதாகக் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வுகளின் பின்னணியை வரலாற்றாசிரியர்கள் பலவிதமாக விளக்கினாலும், அவருடைய மிஷனரி ஊழியம் வரலாற்றில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
கொலம்பா தம்முடன் சில சகோதரர்களை அழைத்துக்கொண்டு, ஸ்காட்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கு அருகிலுள்ள அயோனா (Iona) என்ற சிறிய தீவிற்குச் சென்றார். அங்கே அவர் ஒரு மடத்தை நிறுவினார். ஆனால் அது வெறுமனே ஒரு மடமாக மட்டுமே இருக்கவில்லை. அது நற்செய்திப் பணிக்கான ஒரு மையமாக மாறியது. அங்கே விசுவாசிகள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். அங்கிருந்து மிஷனரிகள் அனுப்பப்பட்டார்கள். பல பகுதிகளில் புதிய கிறிஸ்தவ சாட்சிகள் எழும்பினார்கள்.
அயோனாவின் செல்வாக்கு ஸ்காட்லாந்தில் மட்டுமல்ல, பிரித்தானியாவின் பிற பகுதிகளிலும் பரவியது. பின்னர் அதன் தாக்கம் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்குக்கூட சென்றடைந்தது.
இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான உண்மையைக் காண்கிறோம். சில நேரங்களில் தேவன் ஒரு மனிதனை மட்டும் பயன்படுத்துவதில்லை. ஒரு மையத்தை உருவாக்குகிறார். அந்த மையத்திலிருந்து பல தலைமுறைகளுக்கும் பல பகுதிகளுக்கும் தாக்கம் பரவுகிறது. அயோனா அப்படிப்பட்ட ஒரு மையமாக இருந்தது.
கொலம்பாவின் வாழ்க்கை ஒரு மனிதனின் ஊழியத்தைப்பற்றிய கதை மட்டுமல்ல. தேவன் ஒரு சிறிய தீவைக்கூட பல மக்களைத் தொடும் கருவியாக மாற்ற முடியும் என்பதற்கான ஒரு சாட்சியாகும்.
23. பேட்ரிக்கின் “மார்க்கவச ஜெபம்”
பேட்ரிக்கைப்பற்றிய பகுதியை முடிப்பதற்குமுன், அவரோடு தொடர்புடைய ஒரு பழமையான ஜெபத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அது பொதுவாக “பேட்ரிக்கின் மார்க்கவச ஜெபம்” (Patrick's Breastplate) என்று அழைக்கப்படுகிறது.
“மார்க்கவசம்” என்பது போரில் வீரர்கள் தங்கள் மார்பில் அணியும் பாதுகாப்புக் கவசம் என்று நமக்குத் தெரியும். அதுபோல, இந்த ஜெபமும் தேவனுடைய பாதுகாப்பிலும், வல்லமையிலும், பிரசன்னத்திலும் தஞ்சமடையும் விசுவாசத்தின் வெளியாக்கமாகக் கருதப்படுகிறது.
இந்த ஜெபம் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற கிறிஸ்தவர்களால் மதிக்கப்பட்டுள்ளது . இந்த ஜெபத்தை பேட்ரிக் தாமே எழுதினாரா என்று உறுதியாகத் தெரியாது. நற்செய்தியை அறிவிக்க எதிர்ப்புகளும், ஆபத்துகளும் வந்தபோது பேட்ரிக் இப்படிப்பட்ட ஜெபங்களைப் பயன்படுத்தியதாகப் பாரம்பரியம் கூறுகிறது.
எனவே, இப்போது நாம் கேட்கப்போகும் இந்த ஜெபத்தை வெறுமனே ஒரு பழைய வரலாற்று ஆவணமாகப் பார்க்காமல், அந்தக் கால விசுவாசிகளின் இருதயத் துடிப்பை நமக்குக் காட்டும் ஒரு சாட்சியாகப் பார்க்கலாம்.
பேட்ரிக்கின் மார்க்கவச ஜெபம் — சுருக்க வடிவம்
கிறிஸ்து என்னோடு இருப்பாராக,
கிறிஸ்து என்னும் வாசம்பண்ணுவாராக,
கிறிஸ்து என்னை நடத்துவாராக,
கிறிஸ்து என்னை நிர்வகிப்பாராக,
கிறிஸ்து என்னைப் பலப்படுத்துவாராக,
கிறிஸ்து என்னை நிலைநிறுத்துவாராக,
கிறிஸ்து என்னைப் பாதுகாப்பாராக,
கிறிஸ்து என்னைச் சுற்றிவருவாராக,
கிறிஸ்து என்னுள் வலிமையாயிருப்பாராக,
கிறிஸ்து என் தலையைப் பாதுகாப்பாராக,
கிறிஸ்து என் கண்களுக்கு ஒளியாயிருப்பாராக,
கிறிஸ்து என் காதுகளுக்கு இரட்சிப்பாயிருப்பாராக,
கிறிஸ்து என் வாயின் வார்த்தையாயிருப்பாராக,
கிறிஸ்து என் இருதயத்தில் தங்கியிருப்பாராக,
கிறிஸ்து என் சிந்தனையில் ஆட்சிசெய்வாராக,
கிறிஸ்து எனக்குமுன் செல்வாராக,
கிறிஸ்து எனக்குப்பின் வருவாராக.
கிறிஸ்து எனக்குமேல் இருப்பாராக.
கிறிஸ்து எனக்குக்கீழ் இருப்பாராக.
கிறிஸ்து எனக்குள் இருப்பாராக.
கிறிஸ்து என்னைச் சுற்றிலும் இருப்பாராக.
கிறிஸ்து என்னைப் பார்க்கிறவர்களின் இருதயங்களில் இருப்பாராக.
கிறிஸ்து என்னைக் கேட்கிறவர்களின் காதுகளில் இருப்பாராக.
கிறிஸ்து என்னைப்பற்றிப் பேசுகிறவர்களின் வாய்களில் இருப்பாராக.
கர்த்தருடைய இரட்சிப்பு எப்போதும் அவருடைய மக்களோடு இருப்பதாக. ஆமென்
இதில் வெளிப்படும் கிறிஸ்துவின்மீதான சார்ந்திருத்தலும், தேவனுடைய பாதுகாப்பின்மீதான நம்பிக்கையும், அந்தக் கால விசுவாசிகளின் இருதயத் துடிப்பை நமக்குக் காட்டுகின்றன.
24. குறைபாடுகளின் மத்தியிலும் உண்மையான விசுவாசம்
பேட்ரிக்கின் இந்த ஜெபத்தைக் கேட்கும்போது, ஒரு விஷயத்தை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இது விசுவாசத்தின், நம்பிக்கையின், தேவனைச் சார்ந்திருத்தலின், அர்ப்பணிப்பின் மிகவும் அழகான வெளியாக்கம்.
இடைக்காலக் கிறிஸ்தவர்களைப்பற்றிப் பேசும்போது, நாம் அவர்களுடைய குறைகளையும் தவறுகளையும் மட்டுமே பார்க்கக் கூடாது. அவர்களுடைய விசுவாசத்தைப்பற்றியும் நாம் பேச வேண்டும். அவர்களுடைய அறிவு சில நேரங்களில் மட்டுப்பட்டதாக இருந்திருக்கலாம். அவர்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் இன்று நாம் ஏற்றுக்கொள்ள முடியாத சில பழக்கவழக்கங்களும் கலந்திருந்திருக்கலாம். சில வேளைகளில், சத்தியத்தோடு மனித பாரம்பரியங்களும் கலந்து இருந்திருக்கலாம்.
ஆனால் அதற்காக அவர்கள் கிறிஸ்துவை நேசிக்கவில்லை என்று சொல்ல முடியாது. அதற்காக அவர்கள் தேவனை நம்பவில்லை என்று சொல்ல முடியாது. அதற்காக அவர்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல என்று சொல்லவும் முடியாது. அவர்களில் பலர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் உண்மையான நம்பிக்கையும் அன்பும் வைத்திருந்தார்கள்.
இதுதான் சபை வரலாற்றில் நாம் மீண்டும் மீண்டும் காணும் நம்பிக்கையூட்டும் உண்மைகளில் ஒன்று.
குழப்பத்தின் காலங்களிலும்... கலப்பின் காலங்களிலும்...ஆவிக்குரிய வீழ்ச்சியின் காலங்களிலும்...தேவன் தமக்கென்று ஒரு மக்களைப் பாதுகாத்துவைத்திருக்கிறார். அவர் தம்மை உண்மையாக அறிந்திருக்கிற ஒரு சாட்சியை எப்போதும் இந்த உலகத்தில் வைத்திருக்கிறார்.
தேவனுடைய செயல் பரிபூரணமான அமைப்புகளைச் சார்ந்ததல்ல. அது பரிபூரணமற்ற மனிதர்களின் வழியாகவும் தொடர்ந்து செயல்படுகிறது. ஏனெனில், சபையின் நம்பிக்கை மனிதர்களின் பரிபூரணத்தில் இல்லை. தேவனுடைய கிருபையில்தான் இருக்கிறது. அதுவே சபை வரலாறு நமக்குக் கற்றுத்தரும் மிகப் பெரிய பாடங்களில் ஒன்றாகும்.
25. படையெடுப்பின் அச்சத்தின்கீழ் வாழ்ந்த வாழ்க்கை
இந்தக் காலத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், பல நூற்றாண்டுகளாக மக்கள் படையெடுப்புகளின் அச்சத்திலேயே வாழ வேண்டியிருந்தது. இன்று நாம் வாழும் உலகில், பெரும்பாலான மக்கள் நாளைய வாழ்க்கையைப்பற்றி ஓரளவு நிச்சயத்தோடு சிந்திக்க முடிகிறது. ஆனால் அன்று நிலைமை அப்படியல்ல.
எப்போது ஒரு படையெடுப்பு நிகழும்? எப்போது ஒரு கிராமம் தாக்கப்படும்? எப்போது ஒரு நகரம் கொள்ளையடிக்கப்படும்? இந்த அச்சத்தில்தான் மக்கள் வாழ்ந்தார்கள்.
இந்தக் காலத்தில்தான் செல்டிக் இன மக்கள், கோத் இன மக்கள், உரோமப் பேரரசின் எஞ்சியிருந்த சமூகங்கள் ஆகியவை ஒன்றோடொன்று கலந்து, பின்னாளில் ஐரோப்பாவின் புதிய அரசியல் அமைப்புகள் உருவாகுவதற்கான அடித்தளத்தை அமைத்தன. அவைகளில் சில, பின்னர் "பரிசுத்த உரோமப் பேரரசு" என்று அறியப்பட்ட அரசியல் அமைப்புகளின் தோற்றத்திற்கும் வழிவகுத்தன.
ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரே நாளில் நிகழவில்லை. அவை பல தலைமுறைகளாக நடைபெற்ற மெதுவான மாற்றங்கள்.
இந்தக் காலத்தில் நற்செய்திப் பணி தொடர்ந்து நடைபெற்றாலும், எல்லா மக்களிடமும் அது ஒரே அளவில் சென்றடையவில்லை. குறிப்பாக வடக்கு ஐரோப்பாவில் வாழ்ந்த வைக்கிங் இன மக்களிடையே ஆரம்ப காலங்களில் மிஷனரி முயற்சிகள் மிகவும் குறைவாக இருந்தன. அவர்கள் பலருடைய பார்வையில் அச்சத்தை ஏற்படுத்தும் படையெடுப்பாளர்களாகத் தோன்றினார்கள். ஆனால் பின்னர், அவர்களும் நற்செய்தியின் எல்லைக்குள் வருவார்கள். அவர்களும் கிறிஸ்தவ வரலாற்றின் ஒரு பகுதியாக மாறுவார்கள். அதை நாம் அடுத்த பகுதிகளில் பார்க்கப்போகிறோம்.
இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான உண்மையைக் காண்கிறோம். மனிதர்கள் எல்லைகளை வரையறுக்கிறார்கள். மனிதர்கள் மக்களைப் பிரிக்கிறார்கள். ஆனால் தேவனுடைய நோக்கம் அந்த எல்லைகளைக் கடந்து செல்கிறது. இன்று எதிரியாகத் தோன்றுகிற மக்கள்கூட, நாளைக்கு நற்செய்தியால் மாற்றப்படக்கூடியவர்களே. அதுதான் சபை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டும் உண்மை.
26. வைக்கிங் படையெடுப்புகளின் தாக்கம்
மேற்கத்திய உலகம் மெதுவாக நிலைத்தன்மையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு புதிய அச்சுறுத்தல் தோன்றியது. அது வைக்கிங் இன மக்களின் படையெடுப்புகள்.
இந்தப் படையெடுப்புகள் மேற்கத்திய ஐரோப்பாவின் பல பகுதிகளை ஆழமாகப் பாதித்தன. ஏற்கெனவே பலவீனமடைந்திருந்த சமூக அமைப்புகள் மீண்டும் குலைந்தன. சில வரலாற்றாசிரியர்கள் இந்தக் காலத்தை மேற்கத்திய உலகில் ஏற்பட்ட மற்றொரு நிலையற்ற காலமாக விவரிக்கிறார்கள். குறிப்பாக பிரித்தானியாவில், மக்கள் இதற்குமுன்பு இவ்வாறான தாக்குதல்களை அனுபவிக்கவில்லை.
கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஆங்கிலேய அறிஞரான அல்குயின் (Alcuin), ஒரு மடத்தின்மீது நடத்தப்பட்ட வைக்கிங் தாக்குதலைப்பற்றி மிகுந்த வேதனையோடு எழுதுகிறார்:
"இதோ, புனித கத்பர்ட்டின் ஆலயம் தேவனுடைய ஆசாரியர்களின் இரத்தத்தால் கறைபட்டுள்ளது. அதன் ஆபரணங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் மிகவும் மதிப்பிற்குரிய இந்தப் பரிசுத்த இடம், அஞ்ஞானிகளின் இரையாகிவிட்டது."
அந்தக் காலத்தின் பதிவுகள், பல இடங்களில் நிகழ்ந்த வன்முறைகள், ஆலயங்களின் அழிவு, மக்களைச் சிறைப்பிடித்தல், கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்களைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்த விவரிப்புகள் அந்தக் கால மக்களின் வேதனையையும் அச்சத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
ஆனால் அவை ஒரு உண்மையைத் தெளிவாகக் காட்டுகின்றன. பலர் உண்மையாகவே பயத்திலும் துயரத்திலும் வாழ்ந்தார்கள். அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆங்கிலேய ஜெபம் இந்த உணர்வைச் சுருக்கமாக வெளிப்படுத்துகிறது:
"வடநாட்டு மக்களின் கோபத்தினின்று, ஓ ஆண்டவரே, எங்களை விடுவியும்."
இந்தச் சிறிய ஜெபம் அந்தக் காலத்தின் மனநிலையை நமக்குக் காட்டுகிறது. மக்கள் பாதுகாப்பை இழந்தார்கள். எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தது. தாங்கள் நேசித்த உலகம் மீண்டும் சிதறிப்போகிறதுபோல் அவர்களுக்குத் தோன்றியது. ஆனால் சபை வரலாறு மீண்டும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறது. மனிதர்களின் அமைதி குலைந்தாலும், தேவனுடைய நோக்கம் குலைவதில்லை. படையெடுப்புகள் வந்தன. அரசுகள் மாறின. நகரங்கள் அழிந்தன. ஆனால் நற்செய்தி முன்னேறிக்கொண்டே இருந்தது. அதுவே இந்தக் காலத்தின் ஆச்சரியமான உண்மையாகும்.
27. துன்பத்தின் வழியாகப் பரவிய நற்செய்தி
வைக்கிங் படையெடுப்புகள் மேற்கத்திய உலகிற்கு பெரும் துயரத்தையும் அழிவையும் கொண்டு வந்தன. ஆனால் வரலாற்றில் அடிக்கடி காணப்படுகிற ஒரு விசித்திரமான உண்மை இங்கும் வெளிப்படுகிறது.
வைக்கிங் இன மக்கள் கிறிஸ்தவ சமூகங்களைத் தாக்கியபோது, அவர்கள் கிறிஸ்தவத்தோடும் தொடர்புகொள்ள ஆரம்பித்தார்கள்.
படையெடுப்புகளின் மூலமாகவும்...சிறைப்பிடிக்கப்பட்ட மக்களின் மூலமாகவும்...அன்றாட தொடர்புகளின் மூலமாகவும்...நற்செய்தி மெதுவாக அவர்களிடமும் பரவியது. சில துறவிகள் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில்கூட தங்கள் விசுவாசத்திற்கு சாட்சியாக வாழ்ந்தார்கள்.
சில கிறிஸ்தவப் பெண்கள் வைக்கிங் சமூகங்களுக்குள் கொண்டுசெல்லப்பட்டபோதும், தங்கள் வாழ்க்கையின் வழியாக கிறிஸ்துவுக்குச் சாட்சியாக இருந்தார்கள்.
இவ்வாறு, வாளால் வந்த மக்கள், வார்த்தையின் வல்லமையைச் சந்திக்கத் தொடங்கினார்கள். காலப்போக்கில், பல வைக்கிங் இனக்குழுக்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டன. ஒருகாலத்தில் சபைகளைத் தாக்கியவர்கள், பின்னர் சபைகளின் ஒரு பகுதியாக மாறினார்கள். ஒருகாலத்தில் நற்செய்தியை எதிர்த்தவர்கள், பின்னர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டார்கள்.
இதிலிருந்து நாம் ஓர் ஆழமான உண்மையைக் காண்கிறோம். தேவனுடைய நோக்கம் பல நேரங்களில் மனிதர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வழிகளில் செயல்படுகிறது. மனிதர்கள் தோல்வியைக் காண்கிற இடத்தில், தேவன் ஒரு புதிய தொடக்கத்தைக் காண்கிறார். மனிதர்கள் துன்பத்தைக் காண்கிற இடத்தில், தேவன் தம் நோக்கத்தை முன்னேற்றிக்கொண்டிருக்கலாம். அதனால்தான், சபை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறது. தேவனுடைய நோக்கம் வெற்றியின் வழியாக மட்டுமல்ல, துன்பத்தின் வழியாகவும் முன்னேறுகிறது. இதுவே இந்தக் காலத்தின் மிக ஆச்சரியமான உண்மைகளில் ஒன்றாகும்.
28. கட்டாய மதமாற்றத்தின் விளைவுகள்
வைக்கிங் படையெடுப்புகளைப்பற்றிப் பேசும்போது, கிறிஸ்தவர்களுக்கு எதிராக மட்டுமே வன்முறை நிகழ்ந்தது என்று நாம் நினைக்கக்கூடாது. வரலாற்றின் மற்றொரு துயரமான உண்மை என்னவென்றால், சில காலங்களில் கிறிஸ்தவ உலகத்திலும் கட்டாய மதமாற்றங்கள் நடைபெற்றன.
கான்ஸ்டன்டீனுக்குப்பிறகு, குறிப்பாக தவறான போதனைகளைப் போதித்த சில குழுக்களைக் கையாளும்போது, சில நேரங்களில் அதிகாரமும் பலவந்தமும் பயன்படுத்தப்பட்டன.
விசுவாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வற்புறுத்தலைப் பயன்படுத்தலாமா என்ற கேள்வியை அகுஸ்தீன் தீவிரமாகச் சிந்தித்தார். குறிப்பாக டோனாட்டிஸ்களோடு (Donatists) ஏற்பட்ட மோதல்களின் பின்னணியில், சில வகையான கட்டாய நடவடிக்கைகள் நியாயமானவையாக இருக்கலாம் என்ற நிலைப்பாட்டை அவர் பின்னர் எடுத்தார்.
இதற்காக, "அவர்களை உள்ளே வரும்படி வற்புறுத்துங்கள்" (ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா) என்ற லூக்கா 14:23 போன்ற வசனங்களையும் அவர் மேற்கோள்காட்டினார்.
ஆனால் இந்த விளக்கத்தைப் பல கிறிஸ்தவ சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பலர் இதைக் கடுமையாக விமர்சித்தார்கள்.
கி.பி. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில், சார்லமேன் (Charlemagne) ஆட்சியின்போது, சாக்சன் (Saxon) இன மக்களைக் கிறிஸ்தவர்களாக்க சில நேரங்களில் பலவந்தமான முறைகள் பயன்படுத்தப்பட்டன.
ஒரு கிறிஸ்தவ அரசனுக்குத் தன் நாட்டின் மத ஒற்றுமையைப் பாதுகாக்கும் பொறுப்பு உண்டு என்ற கருத்தும் இதற்குப் பின்னால் இருந்தது. ஆனால் அனைவரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
யார்க் நகரின் அல்குயின் (Alcuin) போன்றவர்கள், விசுவாசம் வற்புறுத்தலால் அல்ல, போதனையால் வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
ஒருவன் வாளுக்குப் பயந்து ஞானஸ்நானம் பெறலாம். ஒருவன் தண்டனைக்கு பயந்து மதத்தை மாற்றலாம். ஆனால் அதனால் அவனுடைய இருதயம் மாறிவிட்டது என்று அர்த்தமல்ல.
அதனால்தான், சில மதமாற்றங்கள் ஒரு துயரமான நினைவூட்டலாக நிற்கின்றன. வெளிப்புறமாக மக்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். ஆனால் எல்லாரும் உள்ளார்ந்த விசுவாசத்தோடு மாறினார்கள் என்று சொல்ல முடியாது.
இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான உண்மையைக் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையான கிறிஸ்தவ விசுவாசம் அதன் இயல்பிலேயே கட்டாயப்படுத்தப்பட முடியாத ஒன்று. அது கிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாட்டிற்கு மனித இருதயம் அளிக்கும் பதிலாகும். வற்புறுத்தல் மனமாற்றத்தின் இடத்தை எடுத்துக்கொள்ளும்போது, வெளிப்புற வடிவம் மட்டும் இருக்கலாம். ஆனால் உள்ளார்ந்த யதார்த்தம் காணாமல் போய்விடும். அதனால்தான், சபை வரலாறு முழுவதும் நமக்கு ஓர் எச்சரிக்கை ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
கிறிஸ்தவம் திணிக்கப்பட வேண்டியதல்ல. அது சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.
29 — முடிவுரை: கிறிஸ்தவ அனுபவம்
இப்படிப்பட்ட வரலாற்றுக் காலகட்டங்களைப் படிக்கும்போது, நாம் அவைகளை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். கடந்த காலத்தைத் தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும் தவறு. அதைக் காலின்கீழ் போட்டு மிதிப்பதும் தவறு.
ஒவ்வொரு தலைமுறையிலும் வெளிச்சமும் இருக்கிறது. இருளும் இருக்கிறது. சத்தியமும் இருக்கிறது. கலப்பும் இருக்கிறது. உண்மையும் இருக்கிறது. பொய்யும் இருக்கிறது. தோல்விகளும் இருக்கின்றன, வெற்றிகளும் இருக்கின்றன.
சபை வரலாற்றைப் படிப்பதன் நோக்கம் கடந்த தலைமுறைகளை நியாயந்தீர்ப்பதல்ல. அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும், வரலாற்றின்வழியாக தேவனுடைய நோக்கம் எவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதும்தான்.
இப்போது இந்தப் பாடத்தை முடிக்கும் நேரத்தில், அந்தக் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கும் நமக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதை நாம் காண்கிறோம்.
அவர்களும் கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். நாமும் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். அவர்களும் தங்களை மறுத்து கர்த்தரைப் பின்பற்ற அழைக்கப்பட்டார்கள். நாமும் அதே அழைப்பைப் பெற்றிருக்கிறோம். அவர்களும் விசுவாசிகளோடு கூடிவந்தார்கள். நாமும் கூடிவர வேண்டும்.
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், கிறிஸ்தவத்தின் வரலாற்றில் ஒரு தொடர்ச்சி காணப்படுகிறது.
காலங்கள் மாறுகின்றன. கலாசாரங்கள் மாறுகின்றன. சபையின் வெளிப்புற வடிவங்களும் மாறுகின்றன. ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றும் அழைப்பு மாறுவதில்லை. அதுதான் எல்லா தலைமுறைகளையும் இணைக்கும் பொதுவான நூல். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். அவர்களுக்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
பின்னர், நாமும் நம்முடைய தலைமுறையில் கிறிஸ்துவுக்கு உண்மையாய் வாழ முன்செல்கிறோம்.
இத்தோடு, கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலத்தைப்பற்றிய இந்தப் பாகத்தை முடிக்கிறோம். அடுத்த பாகத்தில், இந்த வரலாற்றுப் பயணத்தை மேலும் தொடர்வோம்.