Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

0-Constantine and Christianity - Tamil - கான்ஸ்டன்டீனும், கிறிஸ்தவமும் கடந்த ஒன்பது பாகங்களில் கி.பி 30முதல் கி.பி 100வரையிலான அப்போஸ்தலர் காலத்துச் சபையையும், கி.பி 100முதல் கி.பி 312வரையிலான, அதாவது கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனாகும்வரையிலான, ஆதிச் சபையையும் பார்த்தோம். இந்தப் பத்தாம் பாகத்தில் நாம் உரோமப் பேரரசர் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானதிலிருந்து உரோமப் பேரரசின் வீழ்ச்சிவரை பார்க்கப்போகிறோம்.  ஆயினும், நாம் கான்ஸ்டன்டீனையும், கிறிஸ்தவத்தையும்பற்றி, குறிப்பாக, கான்ஸ்டன்டீனின் மதமாற்றம் கிறிஸ்தவ விசுவாசத்திலும் சபை வரலாற்றிலும் ஏற்படுத்திய தாக்கத்தைப்பற்றி பார்ப்போம்.  1. முன்னுரை 1.1 நான்கு காலகட்டங்கள் 1.2 கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானதிலிருந்து உரோமின் வீழ்ச்சிவரை 2. கிறிஸ்தவமும், சித்திரவதைகளும் 2.1 சித்திரவதையின் தன்மைகள் 2.1.1  இடைவிடாது நடைபெறவில்லை. 2.1.2. உள்ளூர் நிர்வாகம் சார்ந்தது. 2.2 டயக்ளீஷியன் சித்திரவதைகள் 3. இரண்டு அதிசயங்கள் 3.1 உரோமப் பேரரசின் நிர்வாக மாற்றம் 3.2 கலேரியசின் ‘சமரசப் பிரகடனம்’ (Edict of Toleration) 3.2 .1 பிரகடனத்தின் அம்சங்கள் 3.2.2 வியத்தகு மாற்றம் 4. கான்ஸ்டன்டீனின் மனமாற்றம் 4.1 மில்வியன் பாலப் போர் 4.2 கான்ஸடன்டீன் கிறிஸ்தவரானார் 4.3 மிலான் ஆணை 4.3.1 மதச்சுதந்திரம் 4.3.2 கிறிஸ்தவத்திற்குச் சுதந்திரம் 5. கிறிஸ்தவத்தின் வளர்ச்சியில் கான்ஸ்டன்டீனின் பங்கு 5.1 கிறிஸ்தவம் அரசு மதமாக மாறியது 5.2 சபையின் வளர்ச்சி 5.3 மரபுவழி மதங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு 6. சபையில் கான்ஸ்டன்டீனின் குறுக்கீடு 6.1 டொனாட்டிஸ்ட் பிரச்சினை 6.2 ஆரியவாத சர்ச்சை 6.3 நைசீன் ஆலோசனை 7. கான்ஸ்டன்டீனின் விசுவாசம் 8. ஹெலெனாவின் புனித யாத்திரை 8.1 சிலுவை கண்டுபிடிப்பு 8.2 ஆலயங்கள் கட்டுதல் 9. கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இடையே 9. 1 சபையின் புதிய சிக்கல் 9.2 அரசின் தலையீடும், அதன் விளைவுகளும் 10. கான்ஸ்டன்டீன் மரணமும், கிறிஸ்தவத்தில் மாற்றமும் 10. 1 உரோமப் பேரரசின் பங்கீடு 10.2 சபையின் உள்விவகாரத்தில் தலையீடு 10.3 ஜூலியனின் கிறிஸ்தவ எதிர்ப்பு 10.3.1 ஜூலியனின் அரசியல் துரோகம் 10.3.2 ஜூலியனின் விசுவாசத்துரோகம் 10.3.3 ஜூலியனின் தோல்வி, கிறிஸ்துவின் வெற்றி 10.4 கான்ஸ்டான்டியசின் கிறிஸ்தவ ஆதரவு 11. உரோமின் வீழ்ச்சியும், கிறிஸ்தவத்தின் நிலையும் 11.1 விசிகோத்களிடையே கிறிஸ்தவம் பரவுதல் 11.2 மேற்கு உரோமப் பேரரசின் வீழ்ச்சி 11.3 சமூகத்தின் மாற்றங்கள் 11.3 ஜெர்மானிய இனக் கூட்டங்களின் தாக்குதல்  12. வழிகாட்டும் நெறிமுறைகள்  13. முடிவுரை


கான்ஸ்டன்டீனும், கிறிஸ்தவமும்

சபை வரலாறு – 10

1. முன்னுரை

சபை வரலாற்றின் பத்தாம் பாகத்துக்கு நான் உங்களை அன்போடு வரவேற்கிறேன். சபை வரலாற்றை, நம் வசதிக்காக, நான்கு காலகட்டங்களாகப் பிரித்துக்கொள்ளலாம் என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

1.1 நான்கு காலகட்டங்கள்

கடந்த ஒன்பது பாகங்களில் கி.பி 30முதல் கி.பி 100வரையிலான அப்போஸ்தலர் காலத்துச் சபையையும், கி.பி 100முதல் கி.பி 312வரையிலான, அதாவது கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனாகும்வரையிலான, ஆதிச் சபையையும் பார்த்தோம்.

இந்த பத்தாம் பாகத்தில் நாம் ஆதிச் சபையின் காலகட்டத்திலிருந்து கிறிஸ்தவப் பேரரசின் காலகட்டத்துக்கு வருகிறோம். 1200 ஆண்டுகள் நீடித்த கிறிஸ்தவப் பேரரசின் வரலாற்றில் பல முக்கியமான நிகழ்வுகள் இருப்பதால், வசதிக்காக, இந்தக் காலகட்டத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொள்கிறேன். கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானதிலிருந்து, அதாவது கி.பி 312முதல் கி.பி 1000வரையிலான காலகட்டத்தை ஆரம்ப காலக் கிறிஸ்தவப் பேரரசு என்றும், கி.பி 1000முதல் கி.பி 1500வரை, அதாவது சீர்திருத்தகாலம்வரையிலான காலகட்டத்தைப் பிந்தைய காலக் கிறிஸ்தவப் பேரரசு என்றும் பிரித்துக்கொள்கிறேன் .

ஆண்டுகளைக் குறிப்பிடும்போது ஜனவரி 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 317ஆம் வருடம் என்று உறுதியாகச் சொல்வதுபோல் மிகத் துல்லியமாகக் குறிப்பிடமுடியாது. ஏறக்குறைய, கிட்டத்தட்ட என்றுதான் சொல்ல முடியும். எனவே, நான் குறிப்பிடும் வருடங்களைக் கிட்டத்தட்ட, ஏறக்குறைய, சுமார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

1.2 கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானதிலிருந்து உரோமின் வீழ்ச்சிவரை

இந்தப் பத்தாம் பாகத்தில் நாம் உரோமப் பேரரசர் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானதிலிருந்து உரோமப் பேரரசின் வீழ்ச்சிவரை பார்க்கப்போகிறோம்.  ஆயினும், நாம் கான்ஸ்டன்டீனையும், கிறிஸ்தவத்தையும்பற்றி, குறிப்பாக, கான்ஸ்டன்டீனின் மதமாற்றம் கிறிஸ்தவ விசுவாசத்திலும் சபை வரலாற்றிலும் ஏற்படுத்திய தாக்கத்தைப்பற்றி பார்ப்போம். கான்ஸ்டன்டீனின் மதமாற்றம் கிறிஸ்தவ வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பார்க்கவேண்டுமானால், அதற்குமுன் கிறிஸ்தவத்தின் நிலைமை என்ன என்பதை நாம் கொஞ்சமாவது அறிந்தாக வேண்டும்.

2. கிறிஸ்தவமும், சித்திரவதைகளும்

வரலாற்றுரீதியாகப் பேசுவதானால், சபை வரலாறு கி.பி 30இல் பெந்தெகொஸ்தே நாளில் 3000 பேர் இரட்சிக்கப்பட்ட அன்று தொடங்கியது என்று நாம் சொல்லலாம். அன்றிலிருந்து நான்காம் நூற்றாண்டின் தொடக்கம்வரை கிறிஸ்தவம் உரோமப் பேரரசில் வேகமாகப் பரவியது. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலும், நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மிக மிக வேகமாகப் பரவியது, வளர்ந்தது. அதே நேரத்தில், சபை மிக மோசமான சித்திரவதையையும் அனுபவித்தது. சித்திரவதையும் இரத்தசாட்சிகளும் என்ற நான்காம் பாகத்தில் நாம் இதைப்பற்றி விரிவாகப் பார்த்தோம்.

நான்காம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஆதிச் சபைக்கு நேர்ந்த சித்திரவதையைச் சரியாகப் புரிந்துகொள்ள  வேண்டுமானால், நீங்கள் சில நுணுக்கமான காரியங்களைக் கவனிக்க வேண்டும்.

2.1 சித்திரவதையின் தன்மைகள்

2.1.1  இடைவிடாது நடைபெறவில்லை.

சித்திரவதை உரோமப் பேரரசின் எல்லையெங்கும் இடைவிடாமல் தொடர்ந்து ஒரே நேரத்தில் நடைபெறவில்லை. ஆதிச் சபையின் காலம் கி.பி 100முதல் 312வரையிலான 212 ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால், கிறிஸ்தவர்கள் உரோமப் பேரரசின் எல்லையெங்கும் 212 ஆண்டுகளும் தொடர்ந்து சித்திரவதைசெய்யப்பட்டார்கள் என்று நினைக்கவேண்டாம். அப்படி இல்லை. மாறாக உரோமப் பேரரசின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அளவுகளில் சித்திரவதை கடல் அலைகளைப்போல் ஏறியிறங்கியது. சித்திரவதை தொடர்ந்து நடக்கவில்லை, எல்லா இடங்களிலும் நடக்கவில்லை. சில பகுதிகளில் நடந்தது. சில பகுதிகளில் நடக்கவில்லை. சில பகுதிகளில் அதிகமாகவும், வேறு சில பகுதிகளில் குறைவாகவும் நடந்தது. சில நேரங்களில் உரோமப் பேரரசெங்கும் நடந்தது. வேறு சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் நடந்தது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் பல்வேறு அளவுகளில் சித்திரவதைசெய்யப்பட்டார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

2.1.2. உள்ளூர் நிர்வாகம் சார்ந்தது.

அப்படியானால், சித்திரவதை எப்படி நடந்தது? இது இரண்டாவது குறிப்பு. பொதுவாக, கிறிஸ்தவர்களை எப்படிச் சித்திரவதைசெய்வது என்பது பெரும்பாலும் உள்ளூர் நிர்வாகத்தைப் பொறுத்தது. அதாவது, பேரரசின் பிரதிநிதியாக இருந்த உள்ளூர் அதிகாரிகள்தான் சித்திரவதையின் வகையையும், தன்மையையும் தீர்மானித்தார்கள். தண்டனை பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும் இருக்கலாம்; அவர்களைச் சிறையில் அடைக்கலாம்; அடிமைகளாக்கலாம்; மரணதண்டனை கொடுக்கலாம். எனவே, கிறிஸ்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது பெரும்பாலும் உள்ளூர் ஆளுநரின் அதிகாரத்தைச் சார்ந்திருந்தது.

2.2 டயக்ளீஷியன் சித்திரவதைகள்

ஆனால் டயக்ளீஷியன், கலேரியஸ் போன்ற கொடுமையான அரசர்கள் கிறிஸ்தவர்களைக் கடுமையாக சித்திரவதைசெய்தார்கள். டயக்ளீஷியனின் சில அரசாணைகள் சபையை எவ்வளவு மோசமாகப் பாதித்தன என்று யூசிபியஸ் "சபை வரலாறு" என்ற தன் புத்தகத்தில் விவரித்துள்ளார். டயக்ளீஷியன் 'சித்திரவதையின் சக்கரவர்த்தி' என்ற பட்டப்பெயருக்குச் சொந்தமானவன்.

டயக்ளீஷியன் தன் ஆட்சிக்காலத்தில் நான்கு முக்கியமான கட்டளைகள் பிறப்பித்தான்.

2.2.1 முதலாவது கட்டளை: கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்படவேண்டும்; கிறிஸ்தவ மத நூல்கள் கொளுத்தப்படவேண்டும்; அரசுப் பணிகளில் கிறிஸ்தவர்களுக்கு மிகக் கீழ்நிலைப் பணிகளே வழங்கப்பட வேண்டும்; அவர்கள் அடிமை நிலைக்கு தாழ்த்தப்பட வேண்டும்.

2.2.2 இரண்டாவது கட்டளை: கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த அனைத்துக் குருக்களும் கொல்லப்படவேண்டும்.

2.2.3 மூன்றாவது கட்டளை கிறிஸ்தவர்களை ஆசைகாட்டி மிரட்டியது. பலி செலுத்தும்படியாக கிறிஸ்தவர்கள் பலவந்தப்படுத்தப்பட வேண்டும், வன்முறைகளினால் அவர்களை வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்றும், அந்தக் கட்டளை போதித்தது. கிறிஸ்தவர்கள் பிற தெய்வங்களுக்குப் பலியிடவும், ஆராதனை செய்யவும் சம்மதித்தால் விடுதலை உண்டு என்றும், சமூக அந்தஸ்து உயர்த்தப்படும் என்றும் உறுதி தரப்பட்டது

2.2.4 நான்காவது கட்டளை: கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும்.

இவனுடைய ஆட்சியின்போது அரசின் அதிகாரப்பூர்வமான சித்திரவதை பேரரசெங்கும் சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது; ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். கி.பி. 303ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்தச் சித்திரவதைகளால் கிறிஸ்தவம் அழிந்துபோகும் நிலைக்குத்  தள்ளப்பட்டது. சில சீடர்கள் மட்டுமே அங்கும் இங்குமாக சிதறியிருக்கக்கூடிய, கிறிஸ்தவம் முக்கியமற்ற ஒரு மதமாக மாறக்கூடும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது இரண்டு அதிசயங்கள் நிகழ்ந்தன.

3. இரண்டு அதிசயங்கள் 

3.1 உரோமப் பேரரசின் நிர்வாக மாற்றம்

ஒன்று, உரோமப் பேரரசில் சில நிர்வாக மாற்றங்கள் நிகழ்ந்தன. உரோமப் பேரரசு  கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்குப் பகுதியின் தலைநகரம் உரோம். கிழக்குப் பகுதியின் தலைநகரம் கான்ஸ்டாண்டினோபிள்.

3.2 கலேரியசின் ‘சமரசப் பிரகடனம்’ (Edict of Toleration)

இரண்டாவது , கலேரியசின் ‘சமரசப் பிரகடனம்’ (Edict of Toleration) வெளியிடப்பட்டது. சித்திரவதை செய்வதில் முன்னணியில் மும்முரமாக இருந்த அரசன் கலேரியசஸ் கிறிஸ்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டபோது அவர்களிடம் இருந்த உறுதியையும், தைரியத்தையும் கண்டு வியந்து, தன் இறுதிநாள்களில் தன் மரணப் படுக்கையில், அவர்கள் சமாதானத்தோடு தங்களுடைய தேவனை வழிபட அனுமதித்தான். கிறிஸ்தவர்களின் சகிப்புத்தன்மையும், தைரியமும், உறுதியும், துணிச்சலும் இதற்கு முக்கியமான காரணம் என்று சொல்லலாம். கிறிஸ்தவர்கள் சித்திரவதையை அமைதியாகச் சகித்ததையும், மரணத்தைச் சந்தித்த விதத்தையும் கண்டு வியந்தான், மலைத்தான். அவனுடைய கடினமான இருதயத்தை மாற்ற இது ஒரு முக்கியமான காரணம். ஆயினும், தான் முன்பு செய்த தவறை அவன் ஒப்புக்கொண்டதுபோல் தெரியவில்லை. கிறிஸ்தவர்கள் பேரரசின் அமைதியைக் குலைக்காமல் கூடிவர கலேரியஸ் அனுமதித்தான். இந்த ஆணையினால், உரோமப் பேரரசில் கிறிஸ்தவம் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட ஒரு மதமாக மாறியது. கிறிஸ்தவம் அரசு மதமாக மாறவில்லை. பிற மதங்களைப்போல், கிறிஸ்தவம் அங்கீகரிக்கப்பட்ட,  சட்டப்படி அனுமதிக்கப்பட்ட, ஒரு மதமாக மாறிற்று. சபை வரலாற்றில் இது ஒரு மாபெரும் திருப்புமுனை.

கிறிஸ்தவர்கள் பேரரசின் நலனுக்காகத் தங்கள் தேவனிடம் ஜெபிக்க வேண்டும் என்றும் இந்த ஆணை கோரியது.

கலேரியசின் ‘சமரசப் பிரகடனம்’  கி.பி. 311, ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்டது. "சகிப்புப் பிரகடனத்தின்" சில அம்சங்களை நாம் இப்போது பார்ப்போம்.

கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்திய, சித்திரவதை செய்த, ஒரு பேரரசன், இப்போது அவர்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும், சகித்துக்கொள்ள வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது ஒரு பெரிய மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு அற்புதமல்லவா?

கலேரியசின் சகிப்புத்தன்மை அரசாணை  இப்படித் தொடங்குகிறது

3.2 .1 பிரகடனத்தின் அம்சங்கள்

"எப்போதும் உரோமக் குடியரசின் வளத்தையும், நலனையும், பாதுகாப்பையும் கருத்தில்கொண்டே நாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். அதுபோல, உரோமின் பழைய பொதுச்சட்டங்களும், மரபுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட வேண்டும் என்பதால், கிறிஸ்தவர்கள் தங்களுடைய தற்போதைய புதிய நம்பிக்கைகளையும், வழிபாட்டுமுறைமைகளையும் விட்டுவிட்டு, தங்கள் முன்னோர்களுடைய மதத்திற்கு, பழைய வழிபாட்டு முறைமைகளுக்கு, திரும்புவார்கள் என்று எதிர்பார்த்தோம். கிறிஸ்தவர்கள் பழைய வழக்கங்களை மதிக்காமல், அவர்கள் தங்களை ஒரு தனிச் சமுதாயமாக உருவாக்கிக்கொண்டது மிகக் கீழ்த்தரமான செயல். கிழக்கின் பேரரசர் கலேரியசாகிய நான் பொதுமக்களின் நலனையும் பேரரசின் பாதுகாப்பையும்  கருத்தில்கொண்டு, பழைய பாரம்பரிய நம்பிக்கைகளைப் பின்பற்றாத கிறிஸ்தவர்களை வெறுத்து, அடக்கி ஒடுக்கினேன். அவர்களை அழிக்க வேண்டியது அவசியம் என்று கருதினேன். கிறிஸ்தவர்களைப் பழைய மதங்களைப் பின்பற்றச் சொன்னபோது, உரோமக் கடவுள்களை வழிபடச் சொன்னபோது பலர் தண்டனைகளுக்குப் பயந்து இணங்கினார்கள். அவர்கள் தங்கள் வழிபாட்டு முறைகளை விட்டு விலகி, உரோமப் பாரம்பரிய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் பல்வேறு சித்திரவதைகளைச் சந்தித்தபோதும், அவர்கள் தங்கள் நம்பிக்கையில் உறுதியுடன் இருந்தார்கள். ஆகவே, ஆழ்ந்த பரிசீலனைக்குப்பின், அவர்கள் தங்களுடைய நம்பிக்கையைப் பின்பற்ற அனுமதி வழங்குகிறோம். அவர்கள் தங்கள் தேவனைச் சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும்  வணங்கலாம். அவர்களுடைய பிரார்த்தனைகள் நம் பேரரசிற்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பையும் நலனையும் வழங்கட்டும். அதேசமயம், அவர்கள் பொது அமைதியைப் பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடக்கூடாது. அவர்கள் அரசின் சட்டங்களையும் ஒழுங்கையும் மதிக்க வேண்டும்." இது அந்தப் பிரகடனத்தின் சில அம்சங்கள்.

எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் பேரரசர் கலேரியசிடம், “பேரரசர் கலேரியஸ் அவர்களே! இங்கு நான் கொஞ்சம் நின்று உங்களுக்கு ஒன்றை நினைப்பூட்ட விரும்புகிறேன். நீர் உம்மையும் ஏமாற்ற வேண்டாம், எங்களையும் ஏமாற்ற முயலவேண்டாம். நீர் கிறிஸ்தவர்கள்மேல் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பொருளற்றவை என்று உமக்குத் தெரியவில்லையா? கிறிஸ்தவர்களை இவ்வாறு சித்திரவதை செய்தவர் யார்? கொடுமைப்படுத்தியவர் யார்? உரோமச் சக்கரவர்தியாகிய நீர்தான் கிறிஸ்தவர்களை அப்படிக் கொடுமைப்படுத்தினீர். உம் பிரகடனத்தில் நீர் அதை ஒப்புக்கொள்கிறீர். அதற்காக உமக்கு நன்றி. ஆனால், கிறிஸ்தவர்களைச் சித்திரவதை செய்ததை நீர் நியாயப்படுத்துகிறீர், அங்கீகரிக்கிறீர். அதற்காக நீ கூறும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது,” என்று கூறுவேன்.

கலேரியசின் கூற்றைக் கவனியுங்கள். கிறிஸ்தவர்கள் உரோமக் கடவுள்களை வழிபடமாட்டார்கள் என்று கூறும் அதே நேரத்தில், அவர்கள் தங்கள் தேவனை ஆராதிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் ஒப்புக்கொள்கிறார். இப்போது, கிறிஸ்தவர்கள் தங்கள் தேவனை வழிபட அனுமதிக்கலாம் என்று அவர் முடிவு செய்கிறார். கிறிஸ்தவர்கள் தங்கள் தேவனை ஆராதிக்கலாம். ஆனால் கலேரியஸ் பிரகடனத்தில் ஒரு நிபந்தனை வைக்கிறார். அது என்ன? கிறிஸ்தவர்கள் உரோமப் பேரரசுக்காகவும், பேரரசர்களுக்காகவும், அரசின் பொது நலனுக்காகவும், நன்மைக்காகவும் ஜெபிக்க வேண்டும்.

3.2.2 வியத்தகு மாற்றம்

இந்த சமரசப் பிரகடனத்தின் முக்கியத்துவத்தைக் கவனியுங்கள். அது கிறிஸ்தவம் உரோமப் பேரரசில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நேரம். கிறிஸ்தவம் அழிந்துவிடக்கூடிய  அல்லது ஒரு மிகச் சிறிய மதமாக மாறக்கூடிய ஆபத்தில் இருந்த நேரத்தில், கலேரியஸ் தன் மரணப் படுக்கையில் இந்த சமரசப் பிரகடனத்தை வெளியிட்டார். இது எல்லாவற்றையும் மாற்றிய முதல் முக்கியமான சம்பவம். முந்தைய காலகட்டங்களில், குறிப்பாக நீரோ, டயக்ளீஷியன் போன்ற அரசர்களின் ஆட்சியில், கிறிஸ்தவர்கள் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய வழிபாட்டு மையங்கள் அழிக்கப்பட்டன, வேதாகமங்கள் எரிக்கப்பட்டன; கிறிஸ்தவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள். எனவே, சில நேரங்களில், பல இடங்களில் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை அந்தரங்கமாகப் பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்த ஆணை கிறிஸ்தவத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரத்திற்கு ஒரு முக்கிய அடித்தளம் அமைத்தது.

4. கான்ஸ்டன்டீனின் மனமாற்றம்

குறிப்பிடத்தக்க இரண்டாவது முக்கிய நிகழ்வு கான்ஸ்டன்டீனின் மதமாற்றம். இது கி.பி. 312ஆம் ஆண்டில் நிகழ்ந்தது என்று கணிக்கப்படுகிறது. 312 அக்டோபரில், உரோமப் பேரரசின் ஏகாதிபத்திய சக்கரவர்த்தியாக யார் அரியணை ஏறுவது என்ற போட்டி நிலவியது. உரோமப் பேரரசில் ஆட்சி மாற்றம் பெரும்பாலும் சுமுகமாக நடைபெறவில்லை. ஒரு பேரரசர் மறைந்தபின் அடுத்த பேரரசர் யார் என்பதில் கடும் போட்டி நிலவியது; போராட்டம் வெடித்தது; போர் நிகழ்ந்தது. ஒரு பேரரசர் இறக்கிறார். அப்போது கான்ஸ்டன்டீன்  பிரிட்டனிலும் பிரான்சிலும் இருந்த உரோமப் படைகளின் தளபதியாக இருந்தார். அந்தப் படைகள் அவருக்கு முழு ஆதரவு கொடுத்தன. அவர் தன் படைகளோடு வந்து, தானே உரோமின் அடுத்த பேரரசர் என்று உரிமை கோரினார். உரிமை கோரியவுடன் எல்லாப் படைத்தளபதிகளும் ஒப்புக்கொள்வார்களா என்ன?

4.1 மில்வியன் பாலப் போர்

இன்னொரு படைத்தளபதி மாக்சென்டியஸ் தன் படைகளோடு கான்ஸ்டன்டீனை எதிர்த்தான். இரண்டு படைகளும் ஒருவரையொருவர் எதிர்த்து அணிவகுத்து நின்றார்கள். கி.பி. 312இல் மில்வியன் பாலப் (Battle of the Milvian Bridge) போருக்குமுன்னர், கான்ஸ்டன்டீன் வானத்தில் ஒளிர்கின்ற ஓர் சிலுவையைக் கண்டதாகவும், "இந்த அடையாளத்தில் வெற்றி" என்ற வார்த்தைகளைக் கேட்டதாகவும் கூறினார். இதை அவர் தெய்வீக அடையாளமாகக் கருதி கிறிஸ்தவத்திற்கு மாறினார். சிலர் அது அவர் கண்ட ஒரு கனவு என்று கூறுகிறார்கள். வேறு சிலர், "இல்லை. இது அவர் பகலில் விழித்திருந்தபோது வானில் கண்ட ஒரு தரிசனம்," என்கிறார்கள். இது கனவோ அல்லது தரிசனமோ, எதுவாக இருந்தாலும் சரி, அவர் வானில் ஒளிர்கின்ற சிலுவையைப் பார்த்தபோது கூடவே "இந்த அடையாளத்தில் வெற்றிபெறு" என்ற இலத்தீன் வார்த்தைகளைப் பார்த்தார் அல்லது கேட்டார். அவர் தன் வாழ்வின் இந்தக் காலகட்டத்தில் பல கடவுள்களின் வழிபாட்டை நிராகரித்து ஒரே தேவனை வழிபட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க ஆரம்பித்திருந்தார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவர் சிலுவை அடையாளத்தை வானில் பார்த்தபோது இதை ஒரு முக்கிய அடையாளமாகக் கருதினார்.

அதற்குப்பிறகு, இயேசு தனக்கு ஒரு கனவில் தோன்றி, சிலுவை அடையாளத்தை மீண்டும் காட்டியதாகக் கான்ஸ்டன்டீன் கூறினார். இந்த முறை சிலுவையின் மேல்பகுதி வளைந்து கிரேக்க எழுத்துக்களான "காய்" "ரோ" ஆகியவைகளின் வடிவத்தில் தோன்றியது. இவை கிரேக்க மொழியில் கிறிஸ்து என்ற பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் ஆகும். (χριστός). தன் வீரர்களின் கேடயங்களில் இயேசு கிறிஸ்து இந்த அடையாளத்தை வரையச் சொன்னதாகக் கான்ஸ்டன்டீன் நம்பினார். எனவே, அவர் இந்த அடையாளத்தைத் தன் போர்வீரர்கள் கேடகங்களில் வரைந்தார். போரில் கான்ஸ்டைன்டீனின் படைகள் வெற்றி பெற்றன. கான்ஸ்டன்டீன் உரோமப் பேரரசரானார்.

4.2 கான்ஸடன்டீன் கிறிஸ்தவரானார்

இதனால், அவர் உடனடியாக உலகின் மிக முக்கியமான கிறிஸ்தவராக அறியப்பட்டார். கான்ஸ்டன்டீன் ஆட்சிக்கு வந்தவுடன், கிறிஸ்தவர்களுக்கு மதச் சுதந்திரம் வழங்கினார். அவர் கிறிஸ்தவத்தை அதிகாரப்பூர்வமான மதமாக, அரசு மதமாக, அறிவித்தார்.  311இல் கலேரியஸ் கிறிஸ்தவர்களைச் சகித்துக்கொள்வதாற்கான ஆணையைப் பிறப்பித்திருந்தார். கான்ஸ்டைன்ட்டீன்  313இல் மிலான் ஆணையை வெளியிட்டு, மதச்சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த ஆணையின்படி அவரவர் தத்தம் விருப்பப்படி தத்தம் மதத்தைப்  பின்பற்றுவதற்கான முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

4.3 மிலான் ஆணை

மிலான் சாசனத்தின் சில பத்திகளை நாம் இப்போது பார்ப்போம். இந்த அரசாணை மார்ச் 313இல் உரோமப் பேரரசர்களான கான்ஸ்டன்டீன், லிசினியஸ் ஆகியோரால் வெளியிடப்பட்டது. "பொதுவாக மனுக்குலத்திற்கு நன்மை பயக்கும் விஷயங்களுக்கு, குறிப்பாகத் தேவனுக்குச் செலுத்தப்படும் கனத்திற்கும், வழிபாட்டிற்கும் நாங்கள் முதலாவது, முதன்மையான, தலையான, முக்கியக் கவனம் செலுத்துகிறோம். அது தகுதியானது என்றும் நாங்கள் கருதுகிறோம். எங்கள் மனதில் நிறைந்த இரக்கத்தாலும், தெய்வீக அனுக்கிரகத்தாலும், நாங்கள் மனிதகுலத்திற்கு தேவையான மிக முக்கியமான சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்று நிச்சயமாக தீர்மானித்துள்ளோம். அதாவது, கிறிஸ்தவர்களும், வேறு எவரும் தங்கள் மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கும், தங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தங்கள் தெய்வங்களை வழிபடுவதற்கும் முழுச் சுதந்திரம் பெற வேண்டும் என்பது சரியே. இந்த மதச் சுதந்திரத்தை வழங்குவதன்மூலம் பரலோகத்தில் வீற்றிருக்கும் தேவன்  நம்மையும், நம் அரசாங்கத்தின் குடையின்கீழ் இருக்கும் அனைவரையும் காப்பாற்றுவார், அனைவருக்கும் நன்மைசெய்வார். எங்கள் இந்த முடிவு ஒரே சீரான, நிலையான சட்டமாக அமையும். கிறிஸ்தவர்கள் தங்கள் விருப்பப்படி தங்கள் தேவனை ஆராதிப்பதற்கான உரிமைகளையோ அல்லது பிறர் தங்களுக்கு நலமெனத் தோன்றியபடி தங்கள் மத நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான உரிமைகளையோ யாரும் தடுக்கக்கூடாது. அதற்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று நாங்கள் தீர்மானிக்கிறோம். இதற்கு முந்தைய அரசாணைகளில் கிறிஸ்தவர்களின் மதச் சுதந்தரத்தைபற்றிக் கூறப்பட்டுள்ள எந்த விதிகளையும் ஒரு பொருட்டாய்க் கருதாமல்,  இனிமேல் கிறிஸ்தவர்களாக இருக்க விரும்புபவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதற்கும், கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவதற்கும் சுதந்திரமும், உரிமையும் வழங்கப்படுகிறது. எந்த வகையிலும், யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது, துன்புறுத்தக்கூடாது. அவர்களுக்கு நாங்கள் வழங்கும் சுதந்திரம் நிபந்தனையற்றது. கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் அதே உரிமை பிறருக்கும் வழங்கப்படுகிறது. ஏனென்றால், அவரவர் தத்தம் விருப்பப்படி தேவனை வணங்க அனுமதிக்கப்படுவது நம்  காலத்தின் இன்றியமையாத நிலைக்கும் அமைதிக்கும் ஏற்றது. எந்த மதத்தின் அல்லது எந்த  நபரின் உரிய மரியாதையை நாங்கள் பறிக்க விரும்பவில்லை. கிறிஸ்தவர்கள் தங்கள் வழிபாட்டு மையங்களை அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. முன்பு அவர்களிடமிருந்து அரசால் அல்லது பிறரால் பறிமுதல் செய்யப்பட்ட கல்லூரிகள்,  இடங்கள் உடனடியாகத் திருப்பிக்கொடுக்கப்படும். இதைச் செய்வதன்மூலம், நாங்கள் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதையையும், ஒருமைப்பாட்டையும் அளிக்க விரும்புகிறோம்." மிலான் ஆணையின் முடிவில் கான்ஸ்டன்டீன், "எங்களுடைய கிருபையான இந்த ஆணையின் ஆவியை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, உங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை எல்லா இடங்களிலும் வெளியிட வேண்டும்," என்று அறிவித்தார்.

கி.பி. 313ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மிலான் ஆணை கிறிஸ்தவர்களின் சித்திரவதையை முடிவுக்குக் கொண்டு வந்தது; இது மதச் சுதந்திரத்தின் தொடக்கமாகவும் மாறியது. கிறிஸ்தவ வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் இது ஒரு மிக முக்கிய நிகழ்வாகும்.

முதலாவது மைல்கல் கான்ஸ்டன்டீனின் மதமாற்றம். இது அவருடைய மதமாற்றமா அல்லது மனமாற்றமா என்று இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம் பார்ப்போம்.

4.3.1 மதச்சுதந்திரம்

ஆனால், மிலான் ஆணையின் முக்கியமான அம்சங்களைக் கவனித்தீர்களா?

அனைத்து மதங்களுக்கும் சமமான சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தத்தம் விருப்பம்போல் தத்தம் மதத்தைப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டார்கள். மதச் சகிப்புத்தன்மை உறுதிசெய்யப்பட்டது. இது மற்ற மதங்களை ஒடுக்காமல், அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமைகளை வழங்கியது. மத அடிப்படையிலான துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கிறிஸ்தவத்துக்கு மட்டுமின்றி, பிற மதங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

நண்பர்களே, இது ஒரு மிக முக்கியமான, புரட்சிகரமான பிரகடனம் என்று நான் கருதுகிறேன்.

"கிறிஸ்தவர்களுக்கு மட்டுமின்றி, பிற மதங்களைப் பின்பற்றுவோருக்கும் இந்த மதச் சுதந்திரம், சுதந்திரமான மத வழிபாட்டு உரிமை, வழங்கப்படுகிறது," என்று கான்ஸ்டன்டீன் கூறினார். முந்தைய காலங்களில், குறிப்பாக பல தலைவர்களின் கருத்துப்படி, ஒரு பேரரசின் ஒற்றுமையைப் பராமரிக்க ஒரு பொதுவான மதம் அவசியமாகக் கருதப்பட்டது. ஆனால் கான்ஸ்டன்டீன் அந்தக் கருத்தை அவமாக்கி எல்லா மதங்களின் சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையை ஏற்றுக்கொண்டு இந்த பிரகடனத்தை வெளியிட்டார். இது என்னே மாற்றம். இது மிக முக்கியமான ஒரு மாற்றம். மதங்களை ஒடுக்கவோ, கட்டுப்படுத்தவோ செய்யாமல், ஒவ்வொருவரும் தத்தம் மதத்தைப் பின்பற்ற உரிமையை வழங்கப்பட்டது.

4.3.2 கிறிஸ்தவத்திற்குச் சுதந்திரம்

இன்னும் கொஞ்ச நேரத்தில், நாம் கான்ஸ்டன்டீனைப்பற்றி, குறிப்பாக அவருடைய தனிப்பட்ட விசுவாசத்தைப்பற்றிப் பேசுவோம். அதற்குமுன் இந்தக் கட்டத்தில் சபை வரலாற்றைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். ஒரு காலத்தில் சித்திரவதை தொடர்கிறது, பின்பு உரோமப் பேரரசு கிறிஸ்தவர்களைச் சித்திரவதை செய்வதை நிறுத்துகிறது; அதன்பின் அவர்களைச் சகித்துக்கொள்ளக்கூடிய நிலைமை வருகிறது; அதற்குப்பின் ஒரு சில ஆண்டுகளில் கிறிஸ்தவர்களுக்கு மதச் சுதந்திரம் வழங்கப்படுகிறது; அதன்பின் அரசின் ஆதரவு பெற்ற மதமாக மாறுகிறது. இது மனிதனுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த மாற்றம் சபை வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம்.

5. கிறிஸ்தவத்தின் வளர்ச்சியில் கான்ஸ்டன்டீனின் பங்கு

கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு, சபையை வளர்க்கப் பேருதவி செய்தார் என்பது உண்மை. முந்தைய காலகட்டங்களில், குறிப்பாக நீரோ, டயக்ளீஷியன் போன்ற பேரரசர்களின் ஆட்சியில், கிறிஸ்தவர்கள் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய வழிபாட்டு மையங்கள் அழிக்கப்பட்டன, வேதாகமங்கள் எரிக்கப்பட்டன; கிறிஸ்தவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள். எனவே, கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை இரகசியமாகப் பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

5.1 கிறிஸ்தவம் அரசு மதமாக மாறியது

மிலான் பிரகடனத்தில் (Edict of Milan) விளைவாக முந்தைய அரசர்களின் காலத்தில்  கிறிஸ்தவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களும், சொத்துக்களும் அவர்களிடம் திருப்பிக்கொடுக்கப்பட்டன. பழைய வழிபாட்டுத் தலங்கள் புதுப்பிக்கப்பட்டன; புதிய வழிபாட்டு மையங்கள் கட்டப்பட்டன. இது கான்ஸ்டன்டீன் மேற்கொண்ட ஒரு முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை. ஆயர்களுக்கும் கிறிஸ்தவப் பிரசங்கிமார்களுக்கும் அரசாங்க சம்பளம் வழங்கப்பட்டது. கிறிஸ்தவம் அரசியல் அதிகாரத்துடன் இணைந்தது. கிறிஸ்தவ மதப் பண்டிகைகள், வழிபாட்டு முறைகள் அரசின் ஆதரவைப் பெற்றன. ஞாயிற்றுக்கிழமை அரசின் அதிகாரப்பூர்வமாக ஓய்வுநாளாக அறிவிக்கப்பட்டது, அங்கீகரிக்கப்பட்டது. மிலான் ஆணை கிறிஸ்தவ மதத்துக்குச் சமூக, அரசியல் ஆதரவை வழங்கியது. இதன்மூலம், கிறிஸ்தவம் மெல்ல மெல்ல உரோமப் பேரரசின் முக்கிய மதமாக வளர்ந்தது. கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை வெளிப்படையாகப் பின்பற்றத் தொடங்கினார்கள்.  கிறிஸ்தவம் ஒரு ஆற்றல் மிகுந்த மதமாக உருவானது. அரசியல் சாசனத்தில் மாற்றம் ஏற்பட்டது. மிலான் ஆணை மத சுதந்திரத்தை அரசியல் சாசனத்தில் ஒரு முக்கிய பகுதியாக மாற்றியது.

இது, யாரும், குறிப்பாகக் கிறிஸ்தவர்கள், கொஞ்சம்கூட எதிர்பார்க்காதது. கிறிஸ்தவம் பரவத்தொடங்கிய காலத்தில் அது எப்படி அடித்தட்டு மக்களையும் கவர்ந்திழுத்ததோ, அதே அளவுக்கு அது  ஆட்சியாளர்களின் விரோதத்தையும் சம்பாதித்தது. ஐரோப்பாவெங்கும் மிஷனரிகள் நற்செய்தியைக் கொண்டுபோனபோது ஏராளமான எதிர்ப்புகளையும், அவமானங்களையும், கடுமையான தண்டனைகளையும் சந்தித்தார்கள். ஆயினும், மனந்தளராமல் அவர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்தார்கள். கிறிஸ்துவை விதைத்தார்கள். கிறிஸ்துவின் நறுமணத்தை வீசினார்கள். கிறிஸ்துவைக் காண்பித்தார்கள்.

5.2 சபையின் வளர்ச்சி

கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானதோடு மட்டுமின்றி, தன் பேரரசெங்கும் கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்குத்  தன்னாலான எல்லாவற்றையும் செய்தான். இது உரோமில் மட்டுமின்றி, மத்தியக்கிழக்கில் உரோமக் குடியேற்றங்களில் வசித்த எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் மிகப் பெரிய அனுகூலமாயிற்று. அதுவரை கிறிஸ்தவர்கள் தங்கள் தேவனை ஆராதிப்பதற்கு ஏராளமான தடைகள் இருந்தன. உரோமப் பேரரசரைத்தான் வழிபடவேண்டும் என்ற உத்தரவுக்கு அவர்களால் கீழ்ப்படிய முடியவில்லை; அதை எதிர்க்கவும் வழியில்லை. நரக அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது மன்னரே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவத்தைப்  பரப்ப முன்வந்ததால் அவர்களுடைய மிகப் பெரிய பிரச்சினை தீர்ந்துபோனது. மிஷனரிகள் பாடுபட்டுச் செய்துகொண்டிருந்த நற்செய்திப் பணி இப்போது மிகச் சுலபமாகிவிட்டது. உரோமக் காலனிகளில்  கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களின் சமூக அந்தஸ்து மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. தாங்கள்  அடிமைகள் அல்ல, மாறாக ஒரு “கிறிஸ்தவப் பேரரசின் குடிமக்கள்” என்ற பெருமித உணர்வுடன் அவர்கள் வாழத்தொடங்கினார்கள்.

கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனாக மாறிய சம்பவம் மிக முக்கியமான கட்டம். பொதுமக்கள் கிறிஸ்தவர்களாவதற்கும் ஒரு நாட்டின் மன்னன் கிறிஸ்தவனாவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.  மக்கள் தன்னைத்தான் வணங்கவேண்டும் என்ற ஆணை பிறப்பித்துக்கொண்டிருந்த பேரரசர்களின் வம்சத்தில் வந்த ஒருவன் தன்னை வணங்கச் சொல்லுவதை நிறுத்திவிட்டு, இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கச் சொல்லுகிறான் என்றால் கிறிஸ்தவத்தைவிட மேலான மதம் இருக்க முடியாது என்று உரோமக் காலனிகளில் வாழ்ந்த மக்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இச்சம்பவம் உரோம ஆட்சி எல்லைக்கு வெளியே இருந்த பல இடங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் மிஷனரிகளின் பிரச்சினைகள் குறையத்தொடங்கின. கல்லடிகள், கட்டிவைத்து எரித்தல், சூடுபோடுதல் என்று அவர்கள் அதுவரை பட்ட பல கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கின. மிஷனரிகளின் வருகையைச் சகிக்க முடியாதவர்கள்கூட மௌனமாக முணுமுணுத்துக்கொண்டு ஒதுங்கிப்போனார்களேதவிர முன்புபோல் தொந்தரவுகள் தருவதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார்கள்.

5.3 மரபுவழி மதங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானதால் யூதர்களும், அரேபியர்களும், பிற சிறுதெய்வ வழிபாட்டாளர்களும் கிறிஸ்தவர்களானார்கள். உரோம் நகருக்கு வெளியே ஐரோப்பா முழுவதும் கிறிஸ்துவம் கம்பீரமாகத் தலைநிமிர்த்திப் பரவ ஆரம்பித்தது. மன்னரே கிறிஸ்தவனானபிறகு, கிறிஸ்தவம் உரோமின் ஆட்சிமதமானது,  அதாவது ஆட்சி புரியும் மதம் ஆனது. "இனி மன்னரை வழிபடவேண்டாம்; கர்த்தரை வழிபடுங்கள்; இயேசுவின் பாதையில் செல்லுங்கள்," என்று மன்னர் கான்ஸ்டன்டீன் சொல்லிவிட்டார்.

உரோம ஆளுகைக்கு உட்பட்டிருந்த அன்றைய பாலஸ்தீனதத்தில் கிறிஸ்தவர்களானவர்களின் வாழ்க்கைத்தரம் மிக வேகமாக உயரத் தொடங்கியது. அரசு வேலைகள் அவர்களுக்கு மிக எளிதில் கிடைத்தன. அவர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று கல்வி பயிலவும், தொழில் செய்யவும் மன்னர் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். கிறிஸ்தவர்களுக்கு அரசாங்கச் செலவில் நிலங்கள் கிடைத்தன. வீடுகள் வழங்கப்பட்டன.

6. சபையில் கான்ஸ்டன்டீனின் குறுக்கீடு

கிறிஸ்தவர்களைப் பிரித்திருந்த சில கருத்துவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கும் கான்ஸ்டன்டீன் உதவ முயன்றார். சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன். அதற்குமுன் கான்ஸ்டன்டீனைப்பற்றிய ஒரு விஷயத்தைப்  புரிந்துகொள்ள வேண்டும். கான்ஸ்டன்டீன் தன்னை ஒரு கிறிஸ்தவப் பேரரசராகவும், தன் பேரரசு கிறிஸ்தவர்களுக்கு ஆதரவான அரசு என்றும் அவர் கருதினார். அவர் பேரரசில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு நன்மை செய்ய விரும்பினார். தன் அரசில் கிறிஸ்தவர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுளினால் அவர்களிடையே நிலவிய சண்டைகளைத் தீர்த்து, அவர்களைச் சமாதானத்தோடு வாழவைப்பது தன் கடமை என்றும், அது நாட்டின் நலனுக்கு நல்லது என்றும் அவர் கருதினார். சபை வரலாற்றின் முதல் மூன்று நூற்றாண்டுகளில் சபையில் சண்டைக்கு பஞ்சம் இருக்கவில்லை.

6.1 டொனாட்டிஸ்ட் பிரச்சினை

குறிப்பாக இரண்டு முக்கியமான காரியங்களில் இருந்த கருத்துவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு  கான்ஸ்டன்டீன் முயன்றார். முதல் காரியம் டொனாட்டிஸ்ட் பிரச்சினை (Donatist Controversy). டொனாட்டிஸ்ட்கள் (Donatists) வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு தீவிரமான கிறிஸ்தவக் குழுவினர். சித்திரவதைக்குப் பயந்து தன் விசுவாசத்தைச் சமரசம் செய்த ஒருவரால் ஆயராக அங்கீகரிக்கப்பட்டவர்களை இந்த டொனாட்டிஸ்ட்கள் ஆயர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. கான்ஸ்டன்டீனும், பெரும்பாலான கிறிஸ்தவர்களும் டொனாட்டிஸ்ட்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இது மிகவும் சுவாரஸ்யமான வாதம். இதை நாம் இப்போது விவரமாகப் பார்க்க முடியாது. சுருக்கமாகச் சொல்லுகிறேன். இது ஒரு ஆயரின் அல்லது மூப்பரின் அல்லது சபையில் மிக முக்கியமான பொறுப்பு வகிக்கும் ஒருவருடைய குணத்தையும், அதிகாரத்தியையும்பற்றியது. மூப்பர்களோ, ஆயர்களோ, சபையில் பொறுப்புள்ள வேறு யாராக இருந்தாலும் அவர்கள் நற்சாட்சியுள்ளவர்களாகவும், நற்பண்பு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், டொனாட்டிஸ்ட் பிரச்சினை சில சிக்கல்களை ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக, ஒருவர் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்றும், உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர் பின்னாட்களில் விசுவாசத்தில் வழுக்குகிறார், சறுக்குகிறார்,  என்றும் வைத்துக்கொள்வோம். இந்த நிலைமையில் நீங்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டுமா? தேவையில்லை என்றுதானே நாம் நினைப்போம். ஆனால், டொனாட்டிஸ்ட் அப்படி நினைக்கவில்லை. அப்படிப்பட்டவர் மீண்டும் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று டொனாட்டிஸ்ட் சாதித்தார்கள். இதுதான் பிரச்சினை.

6.2 ஆரியவாத சர்ச்சை

இன்னொரு சர்ச்சை Arianism என்ற ஆரியவாதம். ஏரியஸ் என்பவர் 250-336இல் எகிப்தின் அலெக்சாந்திரியாவில் சபை மூப்பராக இருந்தார். அப்போது அங்கு அலெக்சாந்தர் என்பவர் சபையின் ஆயராக இருந்தார்.

ஆரம்பகாலக் கிறிஸ்தவர்களிடையே எழுந்த மிக முக்கியமான விவாதங்களில் ஒன்று கிறிஸ்துவின் தெய்வீகத்தைப்பற்றியதாகும். "இயேசு மாம்சத்தில் வந்த மெய்யான தேவனா அல்லது தேவனால் படைக்கப்பட்ட ஒருவரா? இயேசு தேவனா இல்லையா?" என்ற சச்சரவு இருந்துகொண்டடேயிருந்தது.

ஏரியஸ் இயேசுவினுடைய தெய்வீகத்தை மறுத்தார். "இயேசு தேவனால் படைக்கப்பட்ட படைப்பின் முதல் செயல்; இயேசுவின் இயல்பு பிதாவாகிய தேவனுடைய இயல்புபோன்றதல்ல. இயேசு சில தெய்வீகப் பண்புகளுடன் படைக்கப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட நபர்; அவர் நித்தியமானவர் அல்ல, அவர் தன்னிலும் தானும் தெய்வீகமல்ல," என்று அவர் கூறினார். பின்னாட்களில் ஆரியவாதத்தைப்பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம். இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். "இயேசு தேவனுடைய மகன், அவர் வார்த்தை, அவர் லோகோஸ், அவர் காலங்களுக்குமுன்பே தேவனால் படைக்கப்பட்டார், அவரே தேவனால் முதலாவது படைக்கப்பட்டவர், அவர் தேவன் இல்லை, அவர்  நித்தியமானவர் இல்லை, அவர் தேவனைப்போல் பரிபூரணமானவர் இல்லை; தேவன் முதலாவது இயேசுவைப் படைத்தார். அதன்பின் அவர்மூலம் பிற அனைத்தையும் படைத்தார். இயேசு பிதாவுக்குக் கீழானவர், அவருக்கு ஆரம்பமும் முடிவும் உண்டு." என்பதுதான் மிகப் பிரபலமான ஆரியவாதம் என்ற வேதப்புரட்டின் சாராம்சம். 

சுருக்கமாகச் சொல்வதானால், இயேசு ஓர் "இளைய தேவன்" என்று ஏரியஸ் கருதினார். ஆரியவாதம் சபைக்குப் பெரிய ஆபத்தாக இருந்தது. அலெக்சாந்தர் ஏரியஸை சபையிலிருந்து நீக்கினார்; ஆனால் ஏரியசும் அவருடைய ஆதரவாளர்களும் தங்கள் கொள்கைகளைத் தொடர்ந்தார்கள். இது ஓர் இயக்கமாக மாறியது.

6.3 நைசீன் ஆலோசனை

இந்தச் சிக்கலைத் தீர்க்க, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர கான்ஸ்டன்டீன் 324ஆம் ஆண்டில் நைசீன் ஆலோசனைச் சங்கத்தைக் கூட்டினார்.

ஒரு சுவாரஸ்யமான காரியத்தைக் கவனியுங்கள். சபையின் உபதேச முரண்பாடுகளைச் சரிசெய்ய, கருத்து வேறுபாடுகளைக் களைய ஓர் உரோமப் பேரரசன் முன்முயற்சி எடுக்கிறான். இதற்கு முந்தைய காலங்களில், கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும், சித்திரவதை செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே உரோமப் பேரரசர்கள் அவர்களை நினைத்துப்பார்த்தார்கள். ஆனால், இதோ ஓர் உரோமப் பேரரசன் இப்போது, கிறிஸ்தவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆர்வமாக இருக்கிறார்; முயற்சிசெய்கிறார். இது நல்ல விஷயமா அல்லது கெட்ட விஷயமா? பின்னர் ஆராய்வோம்.

7. கான்ஸ்டன்டீனின் விசுவாசம்

அதற்குமுன் கான்ஸ்டன்டீனைப்பற்றி இன்றுவரை கிறிஸ்தவர்களிடையே நிலவுகிற ஒரு சந்தேகத்தைப்பற்றி நான் கொஞ்சம் பேச விரும்புகிறேன். இது சந்தேகமா, கேள்வியா? கான்ஸடன்டீன்  உண்மையான கிறிஸ்தவரா? இதுதான் கேள்வி. இந்தக் கேள்வி உங்களுக்கும் எழுந்திருக்கலாம். "கான்ஸ்டன்டீன் உண்மையாக மனந்திரும்பவில்லை, மறுபடி பிறக்கவில்லை, இரட்சிக்கப்படவில்லை; அவர் தன் அரசியல் ஆதாயத்துக்காகவே அவைகளைச் செய்தார்," என்று சிலர் கூறுகிறார்கள்.

வரலாற்றாசிரியர் ஹூட்டன் கான்ஸ்டன்டீனின் விசுவாசத்தைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார். "கான்ஸ்டன்டீன் உண்மையாக மனந்திருப்பினாரா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு. அவருடைய  முன்னோர்கள் அரசியல் காரணங்களுக்காகக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார்கள். கான்ஸ்டன்டீனும்  அதே அரசியல் காரணங்களுக்காகவே கிறிஸ்தவர்களை ஆதரித்தார். அவர் தன் போரில் வெற்றிபெறுவதற்கு சுமார் ஒரு வருடத்திற்குமுன்பு கலேரியஸ் வெளியிட்ட சகிப்புத்தன்மையின் பிரகடனத்தைத் தொடர்ந்தார், தொடர விரும்பினார் என்று சொல்லலாம்." "கான்ஸ்டன்டீன் உண்மையான கிறிஸ்தவர் இல்லை. அவர் வெறும் அரசியல்வாதி மட்டுமே. கிறிஸ்தவர்கள் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டபோதும், அவர்களுடைய  எண்ணிக்கை அதிகரிப்பதையும், கிறிஸ்தவம் உரோமப் பேரரசில் வளர்ந்து பிரபலமடைவதையும் கவனித்த அவர் தன் அரசியல் ஆதாயத்துக்காகக் கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவர்களையும் ஆதரித்தார்," என்பது  ஹூட்டனின் வாதம்.

ஆனால், பல வரலாற்றாசிரியர்கள்—குறைந்தபட்சம் நான் அறிந்தவரை—கான்ஸ்டன்டீன் உண்மையான கிறிஸ்தவர் என்று நம்புகிறார்கள். முதலாவது, தான் ஒரு கிறிஸ்தவன் என்று கான்ஸ்டன்டீன் அறிவித்தார். இரண்டாவது, அவர் கிறிஸ்தவர் என்று அவருடைய காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். கான்ஸ்டன்டீன் உண்மையான கிறிஸ்தவர் இல்லை என்று அவருடைய காலத்தில் யாரும் கூறவில்லை என்றே தெரிகிறது. அவர் உண்மையான கிறிஸ்தவர் இல்லை என்பதற்கு ஆதாரமாக, "கான்ஸ்டன்டீன் 337ஆம் ஆண்டு தான் இறக்கும் தருவாயில்தான் ஞானஸ்நானம் எடுத்தார். அதற்குமுன் எடுக்கவில்லை," என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், நான் முந்தைய சபை வரலாற்றில் கூறியபடி, அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் சாகுந்தறுவாயில்தான் ஞானஸ்நானம் எடுத்தார்கள். ஏனென்றால், ஞானஸ்நானம் பெற்றபின் ஒருவன் பெரிய பாவம் செய்தால் அதற்குப்பின் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்ற ஒரு தப்பெண்ணம் அன்று அவர்களுக்குள் நிலவியது. எனவே, கடைசிவரை அவர்கள் ஞானஸ்நானம் பெறுவதைத் தாமதித்தார்கள், தள்ளிப்போட்டார்கள்.

எனவே, கான்ஸ்டன்டீன் உண்மையான கிறிஸ்தவர் என்றே நான் நினைக்கிறேன். அவருடைய விசுவாசத்தின்   ஆழத்தை என்னால் மதிப்பீடு செய்ய முடியாது. ஆயினும், அவர் இயேசு கிறிஸ்துவின் உண்மையான விசுவாசி இல்லை என்பதைச் சந்தேகிக்க வலுவான காரணம் இல்லை.

8. ஹெலெனாவின் புனித யாத்திரை

கான்ஸ்டான்டீனைப்பற்றிப் பேசும்போது அவருடைய அம்மா ஹெலெனாவைப்பற்றி பேசாமல் இருக்க முடியாது.  இவருக்கும் கிறிஸ்தவ வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு. அது நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்யவேண்டும். அவர் மிகுந்த பக்தியுள்ளவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. கிறிஸ்தவத்தில் கான்ஸ்டன்டீனின் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும்,  வளர்த்ததில் ஹெலெனாவுக்கு முக்கிய பங்கு உண்டு. இவருடைய ஆழமான பக்தி, விசுவாசம் ஆகியவைகளின் காரணமாக ஆரம்பகால கிறிஸ்தவர்களிடையே இவர் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார். இன்றுவரை கிறிஸ்தவர்களிடையே நிலவுகின்ற பல பாரம்பரியங்களை உருவாக்கியவரும், ஊக்குவித்தவரும் இவரே.  இவர் கி.பி. 250ஆம் ஆண்டில் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்த ஹெலெனாவின் வாழ்க்கை, அவருடைய மகன் கான்ஸ்டன்டீன் உரோமப் பேரரசராக ஆனபோது முற்றிலும் மாறியது. கான்ஸ்டன்டீன் தன் அம்மாவுக்கு அகுஸ்தா என்ற பட்டத்தை அளித்து, அதிக  அதிகாரங்களையும், வளங்களையும் வழங்கினார்.

கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவராகி, உரோமப் பேரரசில் கிறிஸ்தவம் சட்டபூர்வமான மதமாக மாறியபின், கி.பி. 326–328 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஹெலெனா எருசலேமுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்டார்.  இந்தப் புனிதப்பயணம் கிறிஸ்தவ சபை வரலாற்றிலும், அரசியலிலும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

8.1 சிலுவை கண்டுபிடிப்பு

எருசலேமில் இவர் என்ன செய்தார்? போய் பார்த்துவிட்டு வந்தாரா? இல்லை. இன்றுவரை கிறிஸ்தவர்கள் விடாப்பிடியாக வைத்துக்கொண்டிருக்கிற பல பாரம்பரியங்களை உருவாக்கியவர் இவர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட உண்மையான சிலுவையைக்  (True Cross) கண்டுபிடித்தவர் இவர்தான் என்பது கிறிஸ்தவப்  பாரம்பரியம். எருசலேமில், கல்வாரி (கொல்கொதா) அருகே அகழ்வாராய்ச்சி செய்யச் சொன்ன இவர் மூன்று சிலுவைகளைக் கண்டுபிடித்ததாகவும், அவைகளில் எது உண்மையான சிலுவை என்பதைக் கண்டறிய, நோயுற்ற ஒருவரை அந்தச் சிலுவைகளுக்கு அருகில் அழைத்துச் சென்றதாகவும், ஒரு சிலுவையைத் தொட்டதும் அதிசயமாகக் குணமடைந்ததாகவும் நம்பப்படுகிறது. எனவே, அந்தச் சிலுவைதான் இயேசு அறையப்பட்ட சிலுவை என்று இவர் கூறினார். இந்தப் பாரம்பரியம் இன்றுவரை தொடர்கிறது. சரி, அவர் கண்டுபிடித்த சிலுவையை என்ன செய்தார் தெரியுமா? அதற்குமுன் அவரிடம் நான், "நீங்கள் கண்டுபிடித்த சிலுவையில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்ததா? ஒரு சாதாரணமான மரம் 300 ஆண்டுகள் அழியாமல் இருந்ததா?" என்ற ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.

சரி, அவர் கண்டுபிடித்த சிலுவையை என்ன செய்தார்கள்? சிலுவையின் ஒரு பகுதியை ஒரு வெள்ளிப் பேழையில் வைத்து எருசலேமில் ஓர் ஆலயத்தில் வைத்தார்கள். இன்னொன்றையும் கவனியுங்கள். அவர் கண்டுபிடித்த சிலுவையில் ஆணிகள் இருந்தன. ஆணிகளைக் கழற்றாமலே அரிமத்தியா ஊரானாகிய  யோசேப்பு இயேசுவின் உடலைச் சிலுவையிலிருந்து இறக்கினாரா என்று யாரும் கேள்வி கேட்கக்கூடாது.


சரி, ஆணிகளுக்கு வருவோம். ஒரு ஆணியை அவர் உரோமுக்குக் கொண்டுபோய் அரசருடைய தலைக்கவசத்தில் வைத்தார். இன்னொரு ஆணியை அரசருடைய குதிரையின் கடிவாளத்தில் வைத்தார். காலப்போக்கில் இந்த மரச்சிலுவையின் சிறுசிறு துண்டுகள் பல்வேறு நகரங்களில் இருக்கும் ஆலயங்களின் பீடங்களிலும், சந்நியாச மடங்களிலும் கொண்டுபோய்ப் பத்திரமாக வைக்கப்பட்டன. மார்ட்டின் லூத்தர் இந்த மரத்துண்டுகளைப்பற்றி, "இயேசு மரித்த சிலுவையின் துண்டுகள் என்று சொல்லி கத்தோலிக்கக் கோயில்களிலும், மடங்களிலும் வைத்திருக்க எல்லா மரத்துண்டுகளை ஒன்றாகச் சேர்த்தால் ஒரு பெரிய கப்பல் கட்டிவிடலாம்," என்று சொன்னார்.

இதிலிருந்து, இவைகளெல்லாம் வெறும் மூடநம்பிக்கைகளும், பாரம்பரியங்களுமேதவிர வேறொன்றும் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது. இவைகளுக்கு வித்திட்டவர் ஹெலெனா. 

8.2 ஆலயங்கள் கட்டுதல்

இது மட்டுமின்றி ஹெலெனா எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் பல தேவாலயங்களைக் கட்டினார். எருசலேமில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம்செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த இடமாகக் கருதப்படும் புனித செபுல்கர் தேவாலயம் (Church of the Holy Sepulcher), பெத்லகேமில் இயேசு பிறந்த இடமாகக் கருதப்படும் Church of the Nativity, இயேசு எழுந்தருளிப்போன மலையாகக் கருதப்படும் ஒலிவ மலையின் இருக்கும் Church on the Mount of Olives ஆகியவைகளைக் கட்டியவர் இவரே.

எருசலேமில் உள்ள கிறிஸ்தவச் சமூகத்திற்கு ஹெலெனா தாராளமாக உதவி செய்தார். ஏழைகளுக்கு நிவாரணங்களை வழங்கினார்.

ஹெலெனா கிழக்கு மரபுவழி சபையாலும், கத்தோலிக்கச் சபையாலும் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார்.

9. கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இடையே 

கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானபிறகு, உரோமப் பேரரசில் கிறிஸ்தவர்களின் சமூக, ஆவிக்குரிய சூழல் முற்றிலும் மாறிவிட்டது. இந்த வேகமான மாற்றத்தைக் கண்ட கிறிஸ்தவர்கள் இதைத் தேவனின் மகத்தான அதிசயம், அற்புதம், என்று கருதினார்கள். தேவனே உரோமின் இரண்டு பேரரசர்களின் இருதயத்தை வியத்தகு முறையில் மாற்றியதாக அவர்கள் நம்பினார்கள்: முதலாவது, கிறிஸ்தவர்கள் இரத்தசாட்சிகளாக மரணத்தைச் சந்தித்தபோது அவர்கள் காண்பித்த தைரியத்தைக் கண்டு கலேரியசின் இருதயம் மாறியது; இரண்டாவது ,  கான்ஸ்டன்டீன் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டார்.

9. 1 சபையின் புதிய சிக்கல் 

இதனால், மிகக் குறுகிய காலத்தில், சபை முற்றிலும் புதிய வேறொரு சூழ்நிலையைச் சந்தித்தது. முன்பு அரசால் சித்திரவதை செய்யப்பட்ட சபை; இப்போது அரசின் ஆதரவு பெற்ற  சபை. சூழ்நிலை தலைகீழாக மாறிற்று. முன்பு சபை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக அன்றைய சமூகத்தின் எதிர்மறையான நெறிமுறைகளுக்கு எதிரான ஓர் இயக்கமாக இருந்தது. முன்பு சபை அதிகாரத்தின் அடக்குமுறையின்கீழ் இருந்தது. ஆனால், இப்போதோ சபை அதிகாரத்தை அனுபவிக்கும் நிலைக்கு வந்தவுடன் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கான்ஸ்டன்டீனும், அவருக்குப்பின் அரியணையில் அமர்ந்த பிற பேரரசர்களும் கொண்டுவந்த  மாற்றங்களுக்குப்பிறகு, அரசுப் பணிகளிலும், இராணுவத்திலும் கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமையும் சலுகையும் வழங்கப்பட்டன என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். இதனால், கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்காதவர்கள்கூட பதவி உயர்வுக்காக அல்லது சமூக அங்கீகாரத்திற்காகக் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

சபையின் வெளிப்படையான தோற்றமும் வேகமாக மாறியது. சபை திருவிழாக்கள், பிரமாண்டமான நிகழ்வுகள், ஆடம்பரமான அலங்காரங்கள், செல்வச் செழிப்பு ஆகியவைகளுக்கு அதிகக் கவனம் கொடுக்க ஆரம்பித்தது.

அன்று நடந்தவைகளைப் பல நூற்றாண்டுகளுக்குப்பின் இன்று நாம் திரும்பிப்பார்க்கும்போது, உரோமப் பேரரசின் அதிகாரப்பூர்வ அங்கீகாரமும், ஆதரவும் சபையின்மீது அதிகமான எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது என்பது தெளிவாகத் தெரிகிறது. சபை இப்படி ஒரு பரிதாபமான நிலைக்குச் சென்றுவிடும் என்று அன்று யாரும் எதிர்பார்க்கவில்லை, புரிந்துகொள்ளவில்லை. கி.பி. 314 அல்லது 315இல் கான்ஸ்டன்டீன் அதிகாரத்திற்கு வந்து, தான் ஒரு கிறிஸ்தவன் என்று அறிவித்து, கிறிஸ்தவத்தை ஆதரித்து, அரசின் அதிகாரப்பூர்வ மதமாக அறிவித்தபோது, அது தேவனுடைய மகத்தான அற்புத செயல் என்றே  அனைவரும் பாராட்டினார்கள்.

9.2 அரசின் தலையீடும், அதன் விளைவுகளும்

ஆனால், காலப்போக்கில் இந்த மாற்றங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தின. கான்ஸ்டன்டீனும், அவரைத் தொடர்ந்துவந்த பிற உரோமப் பேரரசர்களும் சபையின் உபதேச விவகாரங்களில் தலையிடத் தொடங்கினார்கள்; இதனால் சிக்கல்கள் அதிகரித்தன. சபையின் சர்ச்சைக்குரிய உபதேசங்களில் அரசு தன் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடுகளை அறிவித்தது; இது சில நேரங்களில் நல்லதுபோல் தோன்றினாலும், பொதுவாக சபைக்கு அதிகத் தீமையையே ஏற்படுத்தியது. சபை ஒரு வணிக நிறுவனம்போல் மாறியது; உரோமின் பேரரசர் அந்த வணிக நிறுவனத்தின் முதன்மை நிர்வாகிபோல் (CEO) செயல்பட்டார்.

சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவனானபிறகும் உரோமின் அஞ்ஞான  மதத்தின் பிரதான ஆசாரியனுக்குரிய Pontifex Maximus பொன்டிஃபிக்ஸ் மாக்ஸிமஸ் என்ற பட்டத்தை விடாமல் வைத்துக்கொண்டிருந்தார். ஆனால், இப்போது என்ன வித்தியாசமா என்றால், அவர் இப்போது தன்னைக் கிறிஸ்தவ சபையின் தலைவராகக் கருதினார். கான்ஸ்டன்டீன் தன்னை ஓர் ஆயர் அல்லது ஒரு போதகர் அல்லது ஆசாரியன் என்று கருதவில்லை; ஆனால், அவர் தன்னை ஒரு கிறிஸ்தவ நட்புப் பேரரசின் பேரரசராகக் கருதினார். அதைக் "கிறிஸ்தவப் பேரரசு" என்று அழைக்கலாமா என்பது விவாதத்திற்குரியது. ஆனால், அவர் தன்னைக் கிறிஸ்தவப் பேரரசராக அறிவித்தார், பேரரசைக் கிறிஸ்தவ முறையில் ஆள முடிவெடுத்தார்.

எடுத்துக்காட்டாக , ஏரியவாத சர்ச்சையில், சபையின் ஒற்றுமையே கான்ஸ்டன்டீனின் முதன்மையான கரிசனை. ஒரு வகையில், அவருடைய இந்தப் பாரம் நல்லதே; ஏனென்றால் முழுச் சபையும் ஏரியசுக்கு எதிராக ஒற்றுமையாகத் திரண்டெழுந்தது. ஆனால், இதனால் பிரச்சினைகளும் உருவாகின. அலெக்சாந்தருக்குப்பின் அலெக்சாந்திரியாவின் ஆயரான அத்தனேசியஸ் தங்கள் தவறை உணர்ந்து மனந்திரும்பிய ஏரியர்களை மீண்டும் சபையில் ஏற்றுக்கொள்ள மறுத்தார். கான்ன்ஸ்டன்டீனோ அவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு  அத்தனேசியஸை வற்புறுத்தினார், அதாவது கான்ஸ்டன்டீன் உள்ளூர் ஆயரின் வேலையைச் செய்ய முனைந்தார்.

10. கான்ஸ்டன்டீன் மரணமும், கிறிஸ்தவத்தில் மாற்றமும்

10. 1 உரோமப் பேரரசின் பங்கீடு

கான்ஸ்டன்டீன் இறந்தபோது, உரோமப் பேரரசு அவருடைய மகன்களுக்கிடையே பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அவருடைய ஒரு மகன் கான்ஸ்டான்டினியஸ் ஏரியவாதம் என்ற வேதப்புரட்டை ஆதரித்தார். ஏரியவாதத்தைப்பற்றி நாம் ஏற்கெனவே பார்த்தோம். கான்ஸ்டான்டீன் சபையின் விவகாரங்களில் தலையிட்டதுபோல, அவருடைய மகன் கான்ஸ்டான்டினியசும் ஏரியவாதத்தைச் சபைக்குள் திணித்தான். அதை ஏற்கத் தயங்கிய ஆயர்களை ஏற்குமாறு வற்புறுத்தினான். ஏற்க மறுத்த ஆயர்கள் சபையின் அடிப்படைப் போதனைகளை முன்வைத்து ஏரியவாதத்தை எதிர்த்தபோது, கான்ஸ்டான்டியஸ், “நான் விரும்புவதுதான் போதனை, உபதேசம், சபையின் அடிப்படைச் சத்தியம். ஒன்று, ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் நாடுகடத்தப்படுவார்கள்," என்று கூறினான். கான்ஸ்டான்டியசின் ஆட்சிக்காலத்தில் பேரரசின் அதிகாரம் வேதப்புரட்டைப் பரப்புவதற்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டது.

10.2 சபையின் உள்விவகாரத்தில் தலையீடு

ஓர் அரசு சபையின் விவகாரங்களில் தலையிடுவது ஓர் இருமுனைக் கத்திபோன்றது. இது சபை எதிர்கொள்ள வேண்டிய ஒரு பெரிய சிக்கல். கான்ஸ்டன்டீன் சபையின் விவகாரங்களில் தலையிட்டது ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருந்தது. ஆனால், அவனுடைய மகனின் தலையீடு தலைவலியாக அமைந்தது. ஒரு பேரரசர் ஆரோக்கியமான  கிறிஸ்தவ உபதேசங்களை ஆதரிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தினார்; ஆனால், அவருடைய மகனும், அவருக்குப்பின்வந்த வேறு பல பேரரசர்களும் வேதபுரட்டை ஆதரிக்க அதே அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள்.

இதில் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான காரியம் என்னவென்றால், எனக்குத் தெரிந்தவரை, சபையின் விவகாரங்களிலும், உபதேசங்களிலும் தலையிட பேரரசருக்கு  அதிகாரம் இல்லை என்று அந்த நேரத்தில் சபைத் தலைவர்கள் ஒருவர்கூட  கேள்வி கேட்கவில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் தவறினார்கள் என்றே நான் நினைக்கிறன். ஒருவேளை அவர்கள், “கான்ஸ்டன்டீன் நைசியாவில் சரியான முடிவை எடுத்தார்; அது நல்ல முடிவு என்று பாராட்டப்பட்டது. ஆனால், அவருடைய மகன் கான்ஸ்டான்டியஸ் ஏரியவாதத்துக்கு ஆதரவாகத் தவறான முடிவை எடுத்தார். என்ன செய்வது! அதை ஏற்றுக்கொண்டதுபோல இதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்!” என்று கூறியிருக்கலாம்.


சபையின் விவகாரங்களிலும், உபதேசங்களிலும் தலையிட பேரரசருக்கு அதிகாரம் இல்லை என்று பின்னாட்களில் அத்தனேசியஸ் கூறினார்; அரசரின் உரிமையைக் கேள்வி கேட்டார். ஆனால், இந்தக் கேள்வி காலங்கடந்து கேட்கப்பட்ட கேள்வி.

கான்ஸ்டன்டீனுக்குப்பிறகு வந்த உரோமப் பேரரசர்களைபற்றிப் பேசும்போது, குறிப்பாக அவருடைய மகன்களைப்பற்றிப் பேசுகிறோம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். தாங்களும் கிறிஸ்தவர்களே என்று அவர்கள் கூறினாலும், அவர்கள் தங்கள் தகப்பனைப்போல் உண்மையும் உத்தமுமான கிறிஸ்தவர்கள் என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல் கான்ஸ்டான்டியசும் அவருடைய சகாக்களும் சபை விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்டார்கள்.

10.3 ஜூலியனின் கிறிஸ்தவ எதிர்ப்பு

361முதல் 363வரை ஆட்சி செய்த உரோம அரசன்  ஜூலியனைக்குறித்துக் கொஞ்சம் பேச வேண்டும். இவர் கிறிஸ்தவத்தை எதிர்த்து அஞ்ஞான மதங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளித்த விசுவாசத்துரோகி என்று அழைக்கப்படுகிறார்.

ஜூலியன் கான்ஸ்டன்டீனின் வம்சத்தில் பிறந்தவன். சரியாகச் சொல்வதானால் கான்ஸ்டன்டீன் தி கிரேட்டின் அண்ணன் மகன். அரசியல் சதியின் காரணமாக ஜூலியனின் தந்தையும் பல உறவினர்களும்  கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலியன் இரகசியமாக வளர்க்கப்பட்டார். இவரை வளர்த்தவர்கள் ஏரியவாதிகள். சிறந்த கல்வியைப் பெற்றார்;  இவர் நீயோபிளாடோனிசம், கிரேக்க கலாச்சாரத்தின்மீது ஆழ்ந்த ஆர்வமுடையவர்.

10.3.1 ஜூலியனின் அரசியல் துரோகம்

355இல், ஜூலியன் அவருடைய மைத்துனரான இரண்டாம் கான்ஸ்டான்டியஸ் இராயனாக இருந்தபோது இளவரசர் ஆனார். இன்றைய பிரான்ஸ், அப்போதைய கவுல். அங்கு எதிரிகளுக்கு எதிராகப் போரிட இரண்டாம் கான்ஸ்டான்டியஸ் ஜூலியனை அனுப்பினார். ஜூலியன் வெற்றி பெற்றார், தான் ஒரு திறமையான தளபதி என்று நிரூபித்தார்.

360 இல், ஜூலியனின் படைகள் அவரை இராயனாக அறிவித்தன. இதனால் இரண்டாம் கான்ஸ்டான்டியசுக்கும்  அவருக்கும் மோதல் உருவானது. ஆனால், மோதலுக்குமுன்பே இரண்டாம் கான்ஸ்டான்டியஸ் இறந்ததால் ஜூலியன் மன்னராக அரியணை ஏறினார்.

ஜூலியன் 361ஆம் ஆண்டில் மன்னரானார். அவர் மன்னரான நாள்தான் அவர் கடைசியாகக் கிறிஸ்தவக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாள். தான் கிறிஸ்தவத்துக்கு எதிரானவர் என்று தெரிந்தால் மக்கள் தன்னை  மன்னராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். மன்னரானபிறகு அவர் தன்  உண்மையான முகத்தைக் காட்ட ஆரம்பித்தார்.

தொடக்கத்தில், ஜூலியன் "பலவகைமதக் கொள்கை" போன்ற ஒரு கொள்கையை ஊக்குவித்தார். ஆரம்பத்தில் அவர் கிறிஸ்தவத்திற்கு எதிராகச் செயல்படவில்லை; ஆனால், கிறிஸ்தவத்தோடு பிற மதங்களை ஊக்குவித்தார், அனுமதித்தார். யூதர்களுக்காக எருசலேமில் மீண்டும் ஆலயம் கட்டுவதைப்பற்றிக்கூட அவர்  பேசினார். ஆனால் அது வெறும் பேச்சாகவே இருந்தது.

10.3.2 ஜூலியனின் விசுவாசத்துரோகம்

ஜூலியன் கிறிஸ்தவத்தை நிராகரித்து, பாரம்பரியமான அஞ்ஞான மதங்களையும் மூடநம்பிக்கைகளையும் மீண்டும் உயிர்ப்பித்ததால் விசுவாசத்துரோகி என்று அழைக்கப்படுகிறார். பழைய கிரேக்க மதங்களையும், தத்துவங்களையும் உயிர்ப்பித்தால், அவை கிறிஸ்தவத்தை அழித்துவிடும் என்றும், கிறிஸ்தவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால் அவர்கள் தங்கள் வித்தியாசமான கருத்துக்களினிமித்தம் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு அழிந்து விடுவார்கள் என்றும் ஜூலியன் நம்பினான். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் அவன் கிறிஸ்தவத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மும்முரமாக எடுக்கத் தொடங்கினான். அஞ்ஞான மதங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தான். அஞ்ஞானிகளிடமிருந்து பறிக்கப்பட்டு கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த இடங்களை மீண்டும் அஞ்ஞானிகளுக்குத் திருப்பிக்கொடுத்தான். அங்கு அஞ்ஞான கோயில்கள் கட்டப்பட்டன. கிறிஸ்தவத்தின் செல்வாக்கைக்  குறைக்கும் விதமாகக் கிறிஸ்தவர்கள் மூடநம்பிக்கைகளுக்கு விரோதமாகப் போதித்த கிரேக்க இலக்கியங்களைத் கட்டுப்படுத்தத் தொடங்கினான்.

அவருடைய கொள்கைகள் பல எதிர்ப்புகளைச் சந்தித்தன; எனவே, அவர் அப்படியொன்றும், பெரிய   வெற்றிபெறவில்லை. ஏனென்றால், கிறிஸ்தவம் அதற்குமுன்பே ஆழமாக வேரூன்றியிருந்தது.

10.3.3 ஜூலியனின் தோல்வி, கிறிஸ்துவின் வெற்றி

ஜூலியன் 363இல் பாரசீகப் பேரரசுக்கு எதிராக ஒரு பெரிய போரைத் தொடங்கினான். ஆரம்பத்தில் வெற்றி பெற்றாலும், அவனுடைய படைகள் மோசமான சூழலில் சிக்கின. திகிரிஸ் ஆற்றின் அருகே நடந்த போரில் அவன் மரித்தான். ஜூலியனைப்பற்றி சில சுவாரஸ்யமான வரலாற்றுச் சம்பவங்கள் உள்ளன. ஜூலியன் போர்க்களத்தில் இறந்துகொண்டிருந்தபோது, தன் காயத்திலிருந்து இரத்தத்தை எடுத்து வானத்தை நோக்கி வீசியெறிந்து, “ஓ கலிலேயனே! நீ வென்றுவிட்டாய்!" என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. கலிலேயன் என்பது இயேசுவைக் குறிக்கும் சொல்.

ஜூலியன் இரண்டு வருடங்களே ஆண்டான். அவனுடைய மரணத்திற்குப்பிறகு அஞ்ஞான மதங்கள் செத்தன; கிறிஸ்தவம் உரோமர் பேரரசில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

ஜூலியன் இன்றுவரை விவாதிக்கப்படும் ஒரு சர்ச்சையான நபர். சிலர் அவரைப் பாரம்பரியக்  கலாச்சாரத்தின் பாதுகாவலர் என்கிறார்கள், மற்றவர்கள் அவரைக் கிறிஸ்தவத்திற்கு எதிரானவர் என்று  கருதுகிறார்கள்.

10.4 கான்ஸ்டான்டியசின் கிறிஸ்தவ ஆதரவு

ஆனால், அவருடைய மகன் கான்ஸ்டான்டியஸ் கான்ஸ்டன்டீன் செய்யாத, சொல்லப்போனால், கான்ஸ்டன்டீன் செய்ததற்கு முற்றிலும் எதிர்மாறாக, முக்கியமான ஒரு காரியத்தைச் செய்தார்கள். பேரரசின் எல்லா மக்களும் அவரவர் தத்தம் மதங்களைப் பின்பற்றவும், தத்தம் தெய்வங்களை வழிபடவும் கான்ஸ்டன்டீன் எல்லாருக்கும் மதச்சுதந்திரம் வழங்கினார். ஆனால், அவருடைய மகன் கான்ஸ்டான்டியஸ் இந்தக் கொள்கைக்கு எதிர்மாறாக அஞ்ஞான மதங்களை எதிர்த்தார், அடியோடு ஒழிக்கப் பாடுபட்டார்; அஞ்ஞானத் தெய்வங்களின் கோயில்களை மூட உத்தரவிட்டார்; அஞ்ஞானத் தெய்வங்களுக்குப் பலியிடுவதைத் தடைசெய்தார்;  இந்த உத்தரவுகளை மீறுவோருக்கு மரணதண்டனை விதித்தார். இது உரோமப் பேரரசின் மதக் கொள்கையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்தது; கிறிஸ்தவத்தை அழிக்க முயன்ற ஒரு காலம்; எல்லா மதங்களுக்கும் மதச்சுதந்திரம் வழங்கப்பட்டு, கிறிஸ்தவத்தைச் சகித்துக்கொள்ளலாம் என்ற ஒரு காலம்; கிறிஸ்தவத்தைத்தவிர வேறு மதம் இருக்கக்கூடாது என்ற தீவிர ஒடுக்குமுறையின் காலம். ஜூலியனுக்குப்பின் வந்த பேரரசர்கள் கிறிஸ்தவத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள், பொதுவாக அஞ்ஞான மதங்களை எதிர்த்தார்கள்; சபை விவகாரங்களில் தலையிட்டார்கள்.

11. உரோமின் வீழ்ச்சியும், கிறிஸ்தவத்தின் நிலையும்

11.1 விசிகோத்களிடையே கிறிஸ்தவம் பரவுதல் 

இந்த நேரத்தில், அதாவது நான்காம் நூற்றாண்டில், உரோமப் பேரரசின் அரசியல் செல்வாக்குக் குறையத் தொடங்கியது. ஆனால், கி.பி. 250திலிருந்து 300க்கிடையில், கிறிஸ்தவம் விசிகோத்கள் எனப்படும் ஜெர்மானிய பழங்குடி மக்களிடையே வேகமாகப் பரவத் தொடங்கியது. விசிகோத்கள் ஆசியா மைனரிலுள்ள நகரங்கள்மேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி, அங்கிருந்தவர்களைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றார்கள்; இந்தக் கைதிகள் வேறு யாரும் அல்ல; இவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள். இப்படிக் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்ட கிறிஸ்தவர்கள் விசிகோத்களுக்கும், மற்ற ஜெர்மானிய மக்களுக்கும் நற்செய்தி அறிவித்தார்கள். இவர்களில் ஒருவரான உல்பிலாஸ் என்பவர் சக கைதிகளை ஓன்று திரட்டி விசிகோத்களிடையே நற்செய்தியை ஒழுங்குக்கிரமமாக அறிவித்தார். இந்தப் பணியை இவர் முன்னின்று வழிநடத்தினார். கி.பி. 311இல் பிறந்த உல்பிலாஸ், கப்பதோக்கிய கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் தன் குடும்பத்திலிருந்து கிரேக்க மொழியைக் கற்றுக்கொண்டார், தன் அம்மாவிடமிருந்து  கிறிஸ்தவ விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டார். கி.பி. 337இல் அவர் கான்ஸ்டாண்டினோப்பிளுக்கு அனுப்பப்பட்ட ஒரு தூதர்குழுவின் உறுப்பினராக இருந்தார். அங்கு அவர் நிக்கோமீடியாவின் யூசீபியசால் விசிகோத்களின் ஆயராக அபிஷேகம்பண்ணப்பட்டார்.

11.2 மேற்கு உரோமப் பேரரசின் வீழ்ச்சி

மேற்கு உரோமப் பேரரசின் கடைசிப் பேரரசரான ரோமுலஸ் அகஸ்டுலஸை கி.பி. 476இல் ஜெர்மானியத்  தலைவரான ஓடோசர் ஆட்சிபீடத்திலிருந்து அகற்றினார்;  தன்னை இத்தாலியின் அரசராகவும் அறிவித்தார். ஆனால், இதற்குப் பல தலைமுறைகளுக்குமுன்பே உரோம் வலுவிழந்துவிட்டது என்று சொல்லலாம். உரோமப் பேரரசு தன் எல்லைகளில் மட்டுமின்றி, இத்தாலியிலும், உரோம் நகரத்திற்கு உள்ளேயும் ஊடுருவியிருந்த காட்டுமிராண்டிகளோடு தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. உரோம் கி.பி. 410இல் விசிகோத்களாலும், கி.பி. 455இல் நாசக்காரர்களாலும் தாக்கப்பட்டது. உரோம் நகரம் தாக்கப்பட்டபோது நகரம் அழிக்கப்பட்டது, நகரத்தின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன; ஆண்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது அடிமைகளாக விற்கப்பட்டார்கள்; பெண்கள் ஜெர்மானியத் தலைவர்களுக்கு மணப்பெண்களாகக் கொண்டுபோகப்பட்டார்கள். காட்டுமிராண்டிகள் இத்தாலி தீபகற்பத்தின் நிலங்களில் குடியேறத் தொடங்கினார்கள்; அந்தப் பகுதிகளைச் சொந்தமாக்கினார்கள்.

இந்தச் சூழ்நிலையில்தான் கி.பி. 476இல் ஜெர்மானியத் தலைவன் ஓடோசர் 16 வயதேயான உரோமப் பேரரசன் ரோமுலஸ் அகஸ்டுலஸை அதிகாரத்திலிருந்து நீக்கினான். இந்த நிகழ்வோடு மேற்கு உரோமப் பேரரசின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. கிழக்கு உரோமப் பேரரசு கான்ஸ்டாண்டினோப்பிளை மையமாகக்கொண்டு தொடர்ந்து நீடித்தது. அது வேறு விஷயம்.

11.3 சமூகத்தின் மாற்றங்கள்

உரோம் நகரத்தின் வீழ்ச்சிக்குபின், அதன் மக்கள்தொகை மிக மோசமாகக் குறைந்தது. கி.பி.492க்கும் 496க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், அதாவது 5ஆம் நூற்றாண்டின் இறுதியில், முதலாம் போப் ஜெலாசியஸ் மக்கள் தொகை மிகக் கணிசமாகக் குறைந்த துஸ்கானிபோன்ற மாநிலங்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். முதல் நூற்றாண்டில் சுமார் 10 இலட்சம் மக்கள் வாழ்ந்த உரோம் நகரத்தின் மக்கள் தொகை நூற்றாண்டுகள் செல்லச்செல்ல குறிப்பிடத்தக்க வகையில் குறைந்தது. கி.பி. 800களில், உரோம் நகரத்தின் மக்கள் தொகை சுமார் 25,000ஆக இறங்கியது. உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின், சமுதாயத்தில்  வன்முறை அதிகரித்தது; நகரமயம் குறைந்தது. மக்கள் நகரங்களில் வாழ்வதைத் தவிர்தார்கள்.

11.3 ஜெர்மானிய இனக் கூட்டங்களின் தாக்குதல் 

கி.பி. 350ஆம் ஆண்டளவில், உரோமப் பேரரசு நியர் ஈஸ்ட், வடக்கு ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து, மேற்கு ஜெர்மனியின் பகுதிகள் என மிகவும் பரந்து விரிந்திருந்தது. வடக்கு ஜெர்மானிய இனக் கூட்டங்களின் ஆக்கிரமிப்புகள் பேரரசின் நிலைப்பாட்டைக் குலைத்தன. இந்த வீழ்ச்சியில் ஒரு முக்கியமான நிகழ்வாக கி.பி. 378 ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்த அட்ரியனோப்பிள் போர் அமைந்தது. இப்போர், அட்ரியனோப்பிள் நகரத்துக்கு (இப்போது துருக்கியில் உள்ள எடிர்னே அருகே) 10 மைல் தொலைவில் நடந்தது. உரோமப் பேரரசர் வாலன்ஸ் கோத்துகள்மீது போர் தொடுத்தார். உரோமப் படை பரிதாபமான தோல்வியைச் சந்தித்தது; சுமார் 20,000முதல் 25,000பேர்வரை போரில் மாண்டார்கள். இந்த இழப்பால் உரோமப் பேரரசின் பாதுகாப்புத் திறன் கடுமையாகக் குறைந்தது.

இந்த வெற்றிக்குப்பின், விசிகோத்கள் பேரரசின் எல்லைக்குள் சுதந்திரமாக வலம்வந்தார்கள். கி.பி. 410 ஆம் ஆண்டில், விசிகோத்கள் அலாரிக் என்பவரின் தலைமையில் உரோம் நகரத்தை ஆக்கிரமித்தார்கள். உரோமர்கள் பின்னர் சில போர்களில் வெற்றி பெற்றபோதும், விசிகோத்களை முழுமையாக வீழ்த்தும் மனநிலையை, வலிமையை, இழந்துவிட்டார்கள். விசிகோத்கள் உரோமை மூன்று நாள் முற்றுகையிட்டிருந்தபோது ஏற்பட்ட உணவுப்பற்றாக்குறையால் நகரத்தை விட்டு வெளியேறினார்கள்.

அட்ரியனோப்பிள் போரைப்பற்றி மிலானின் ஆயராக இருந்த அம்புரோஸ் வருத்தத்துடன், "இது மனித குலத்தின் முடிவாகும், உலகத்தின் முடிவாகும்," என்று கூறினார். காலப்போக்கில், பிராங்க்ஸ், ஆங்கில்ஸ், சாக்ஸன்ஸ், லோம்பார்ட்ஸ் போன்ற ஜெர்மானிய இனக் கூட்டங்கள் தங்கள் சொந்த அரசுகளை உருவாக்கின. அவர்கள் முடிந்த அளவுக்கு உரோமின் நிர்வாக முறைகளையும் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், உரோமின் மையநிலையான அமைப்புகளோடு ஒப்பிடும்போது, ஜெர்மானிய இனக் கூட்டங்கள் உருவாக்கிய அரசியல் அமைப்புகள் வெகுவாக சிதறியிருந்தன. ஜெர்மானிய இனக் கூட்டங்களின் பெயர்களே  இன்று பல ஐரோப்பிய நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் சூட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக

பிரான்ஸ், பிராங்க்ஸ் இனத்தின் பெயர் .

இங்கிலாந்து, ஆங்கில்ஸ் இனத்தின் பெயர்.

டென்மார்க், டேன்ஸ் இனத்தின் பெயர்.

லோம்பார்டி, லோம்பார்ட்ஸ் இனத்தின் பெயர் .

பர்கண்டி, பர்கண்டியன்ஸ் இனத்தின் பெயர்.

சாக்ஸனி, சாக்ஸன்ஸ் இனத்தின் பெயர்.

பிரிஸ்லாந்து, பிரிஸியன்ஸ் இனத்தின் பெயர்.

12. 

வழிகாட்டும் நெறிமுறைகள் 

கான்ஸ்டன்டீனும், கிறிஸ்தவமும் என்ற இந்தப் பத்தாம் பாகத்தில் நாம் சில வழிகாட்டும் நெறிமுறைகளைக் கற்கலாம்.

1. சபை வரலாற்றை அறிவது முக்கியம். சபையின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள சமூக, அரசியல் சூழலை அறிவது அவசியம்.  சபையின் பாதையை வடிவமைப்பதில் சித்திரவதைகளுக்கும், அரசாணைகளுக்கும், கலாச்சார மாற்றங்களுக்கும் பங்கு உண்டு. 

2. கிறிஸ்தவர்கள் சித்திரவதைகளை நம்பிக்கையோடு எதிர்கொண்டார்கள். சித்திரவத்தையின்போது கிறிஸ்தவர்கள் காண்பித்த உறுதியான நம்பிக்கை அரசியல், சமூக மாற்றங்களை ஏற்படுத்த உதவியது.  கலேரியசின் (Edict of Toleration) பிரகடனம் இதற்குச் சான்று. இரத்தசாட்சிகளின் தியாகமும் உறுதியும் ஆவிக்குரிய புத்துயிர்ச்சிக்கு விதையாய்த் திகழ்கிறது. 

3. மாற்றங்கள் ஏற்படும்போது தலைமைத்துவத்தின் பங்கு முக்கியம்வாய்ந்தது. கான்ஸ்டன்டீனின் மனமாற்றம் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.  தலைவர்கள் அரசியல் பொறுப்புகளை ஆவிக்குரிய நேர்மையோடு சமநிலையுடன் கவனிக்க வேண்டும். கான்ஸ்டன்டீன் டொனாட்டிஸ்ட் பிரச்சினைக்கும், ஆரியவாத பிரச்சினைக்கும் தீர்வு காண முயன்றது நல்ல எடுத்துக்காட்டு.. 

4. சபையும் அரசியலும்  இணைந்தால் அது பாதகமாகவும் மாறலாம், சாதகமாகவும் மாறலாம்.  அது நேர்மறையான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த முடியும். மிலான் பிரகடனம் மதச்சுதந்திரம் அளித்தது. இது நேர்மறையானது. ஆனால், அரசின் தலையீடு சபையின் போதனைகளைத் திசைமாற்றியது. இது  எதிர்மறையானது.    

5. எந்த நிலைமையிலும் கிறிஸ்தவன் இயேசுவுக்கு சாட்சிபகர முடியும்.  நற்செய்திக்குப் புதிய சமூகங்களைக் மாற்றக்கூடிய வல்லமை உண்டு. கைதிகள்தான் விசிகோத்களிடையே நற்செய்தியை அறிவித்தார்கள். 

6. சபை பல்வேறு நாடுகளில் இருக்கிறது. சபை அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தோடு ஒன்றித்தால் அது தன் தனித்தன்மையை இழந்துவிடும். நலமானவைகளை, தேவையானவைகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால்,  நம் விசுவாசத்தின் அடிப்படைத் தன்மையைச் சிதைக்கும் மூலக்கூறுகளை ஒதுக்கிவிட வேண்டும்.

சபைக்குள் உரோமக் கலாச்சாரம் ஊடுருவியதால் கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளின் வெளிப்படையான தன்மை மாறியது. 

7. சடங்குகள், ஆடம்பரம், பகட்டுபோன்ற புறம்பான அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது விசுவாசத்தின் மையத்தை மறைக்கக் கூடும், மாற்றக்கூடும்.

8. புறம்பான அதிகாரம், செல்வாக்கு சபையின் ஆவிக்குரிய நேர்மையைத் திசைமாற்றக்கூடும். எடுத்துக்காட்டாக, கான்ஸ்டன்டீன் காலத்தில் கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்காதவர்கள்கூட சமூக அங்கீகாரத்துக்காகவும், அந்தஸ்திற்காகவும் கிறிஸ்தவத்தைப் பின்பற்றினார்கள், மதம் மாறினார்கள்.

9. சபை பொருளாதார வெற்றிக்காக தன்னை ஒரு வணிக நிறுவனமாக மாற்றியது.  இது நமக்குப் பெரிய எச்சரிக்கை.

10. பக்தியையும், பக்தியுள்ளவர்களையும்குறித்தும் நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். ஹெலெனாவின்புனித யாத்திரையும், சிலுவையின் கண்டுபிடிப்பும் கிறிஸ்தவத்தின் வரலாற்றை மாற்றிவிட்டதே!

11. போதனைகளைக்குறித்த கருத்துவேறுபாடுகளைத் தீர்க்கும் திறமை தேவ மக்களுக்குத் தேவை. சபையின் ஒருமைப்பாட்டுக்குத் தேவைப்படும் பொறுமையும், விவேகமும், தீர்க்கமான நடவடிக்கைகளும் முக்கியம்.  ஆரியவாதம்போன்ற பிரச்சினைகளைத்தீர்க்க நைசீன் ஆலோசனைச் சங்கம் கூடியது. அதுபோல, இன்று தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தினால் எப்படியிருக்கும் என்று கற்பனைசெய்து பார்க்கிறேன். 

12.  வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஒரு சுற்றாடல். சபையின் சித்திரவத்தைக்குப்பின் சபை சமாதானத்தோடு பயணித்தது. ஆனால், வந்த சமாதானம் தந்தது என்ன? நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற தாக்கம் தணிந்தது. கிறிஸ்துவின்மேல் இருந்த அன்பு குறைந்தது. புறம்பான அங்கீகாரம் சபையின் ஆவிக்குரிய உறுதியைச் சோதிக்கும் ஒரு கருவி.

13. உரோமின் வீழ்ச்சியிலிருந்து கிடைத்த பாடங்கள். உரோமப் பேரரசு வீழ்ந்தபோது ஏற்பட்ட சமூக மாற்றங்கள் சபைக்குப் புதிய வாய்ப்புகளையும் சவால்களையும் உருவாக்கின.  மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப சபை தன்னைத்தானே மாற்றிக்கொள்வது அவசியமாகிறது. 

இவை சில வழிகாட்டும் நெறிமுறைகள். இவை இன்றும் நமக்குச் சவால்களே.

13. முடிவுரை

உரோமின் வீழ்ச்சிக்குப்பின் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அதிகாரத்தைப் பல குட்டித் தலைவர்களும்,  பிரபுக்களும், படைத் தலைவர்களும் பங்கிட்டுக்கொண்டார்கள். இது ஐரோப்பாவிலும், கிறிஸ்தவ உலகிலும்  வன்முறையையும், அமைதியற்ற ஒரு நிலைமையையும் உருவாக்கியது.

சில நேரங்களில் இன்று மக்கள் "புதிய உலக ஒழுங்குமுறையைப்" பற்றி பேசுகிறார்கள். ஆனால் உரோமின்  வீழ்ச்சிக்குப்பிறகு, அன்றைய நிலைமை ஒரு "புதிய உலகக் குழப்பம்" போல இருந்தது.

இந்தப் பாகத்தை நாம் இத்துடன் முடித்துக்கொள்வோம். வரக்கூடிய பாகங்களில் உரோமின் வீழ்ச்சிக்குப்பின்பு என்ன நடந்தது என்றும், அந்தக் காலகட்டத்தில், கிறிஸ்தவப் பேரரசின் ஆரம்ப காலத்தில், சபை அந்த இடத்தை எப்படி நிரப்பியது என்றும் நாம் பார்ப்போம். நீங்கள் அனைவரும் தொடர்ந்து இதைப் பார்த்து, கேட்டுப் பயனடைவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கான்ஸ்டன்டீனும், கிறிஸ்தவமும் என்ற இந்தத் தலைப்பில் கான்ஸ்டன்டீன் மன்னனின் காலத்தில் கிறிஸ்தவம்  4ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எப்படி முன்னேறியது என்பதை அறிய இந்தக் காணொளியைக் கண்டதற்காக நன்றி. இது வரலாற்றில் மாறாத, உலகத்தை உலுக்கிய, ஒரு காலகட்டம்.