ஆவிக்குரிய மனிதர்களின் மெய்யான ஆசீர்வாதங்கள்
கர்த்தருக்குள் பிரியமான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என்னுடைய அன்பின் வாழ்த்துக்கள்.
இந்த நாளின் தியானத்திற்கு ஆதாரமாக, நாம் ஒன்று கொரிந்தியர் 15 ஆம் அதிகாரம் 42முதல் 57முடிய உள்ள வேத பகுதியை வாசிப்போம்.
“மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. அந்தப்படியே முந்தின மனிதனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்ம சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனிதன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ, மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும், மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.”
இந்தப் பகுதி முடியவில்லை. நாம் ஜெபிப்போம். பிறகு தொடர்ந்து தியானிப்போம்.
எங்கள் ஆண்டவராகிய இயேசுவே, இந்தக் காலை வேளையிலே உம்முடைய அற்புதமான நற்செய்தியின் ஆழங்களையும், இரகசியங்களையும், நடைமுறையையும் காணும்படி எங்கள் மனக்கண்களைத் திறந்தருள்வீராக. உம்முடைய உயிர்த்தெழுதலுக்காய், உயிர்த்தெழுதலில் உண்டாக்கின உம்முடைய புதிய படைப்பிற்காய், நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். தேவ மக்களாக எங்களையும் உம்முடைய புதிய படைப்பாய் மாற்றியிருப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அந்த வாழ்வின் நிஜத்தை, மெய்மையை, எங்களுக்கு அருள்வீராக. நாங்கள் வேதத்தைத் தியானிக்கும்போது எங்கள் மனக்கண்களைப் பரிசுத்த ஆவியானவர் திறந்தருளுமாறு நாங்கள் வேண்டுகின்றோம். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், பிதாவே. ஆமென்.
ஒன்று கொரிந்தியர் 15 ஆம் அதிகாரம் உயிர்த்தெழுதலைப்பற்றிய அதிகாரம். கொரிந்தியர்களுக்கு உயிர்த்தெழுதலைப்பற்றிய கேள்வி இருந்தது. ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல், உயிர்த்தெழுதல் என்பது நற்செய்தியில் ஒரு உண்மை என்று வாதிக்கிறார். அப்படி வாதிடும்போது, நாம் வாசித்த இந்தப் பகுதியிலே, “ஜென்ம சுபாவமான சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு,” என்று அவர் சொல்கிறார்.
கிரேக்க மொழியிலே இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒன்று: சூகிகோஸ் (Psychikós), இன்னொன்று: நியூமாட்டிகோஸ் (Pneumatikós). சூகே (Psychē) என்ற வார்த்தை நமக்குச் சற்று பரிச்சயமானது. அந்த வார்த்தையிலிருந்துதான் Psychology போன்ற ஆங்கில வார்த்தைகள் வருகின்றன. எனவே, சூகே என்பதைத் தமிழில் ஆத்துமா அல்லது ஆன்மா என்று மொழிபெயர்க்கின்றார்கள்.
நியூமா (Pneuma) என்பதும் நமக்குப் பரிச்சயமானது. Pneumatic Tools என்கின்றார்கள். நியூமா என்கின்ற வார்த்தை சற்று பொருள் கனம் மிகுந்த வார்த்தை. தமிழில் ஒரு மொழிப்பன்மொழி என்று இலக்கணக் குறிப்பில் நாம் பார்ப்போம். இது ஒரு மொழி பல்பொருள். நியூமா என்பதை ஆங்கிலத்தில் ‘The Spirit’, ‘Spirit’ என்று மொழிபெயர்க்கிறார்கள். ஆனால் நியூமா என்கின்ற வார்த்தையை ஆவி என்றும் மொழிபெயர்க்கலாம். அது ஆவியானவரையும் குறிக்கலாம். மூச்சையும் குறிக்கலாம். உயிரையும் குறிக்கலாம். காற்றையும் குறிக்கலாம். இப்படி அந்தச் சூழமைப்பிற்குத் தக்கவாறு அந்த வார்த்தைக்கு நாம் பொருள்கொள்ள வேண்டும்.
சூகிகோஸ் (Sūkikós) என்பதைப் பழைய தமிழில் ஜென்ம சுபாவமான சரீரம் என்கிறோம். சூகிகோஸ் என்பது புதிய ஏற்பாட்டிலே பல தடவைகள் பயன்படுத்தப்பட்டதால், நான் அதை ஜென்ம சுபாவமான என்று மொழிபெயர்க்காமல் இயற்கையான என்று மொழிபெயர்க்கிறேன். அதுபோல சரீரம் என்பதும் பழைய வார்த்தை. ஆகவே, சூகிகோவை சரீரம், இயற்கையான உடல் என்று மொழிபெயர்க்கிறேன். அதுபோல ஆவிக்குரிய சரீரத்தை, அதை மிக எளிதாக ஆவிக்குரிய உடல் என்று மொழிபெயர்க்கலாம்.
ஆகவே, பவுலுடைய வாதம், இயற்கையான உடலும் உண்டு, ஆவிக்குரிய உடலும் உண்டு. இது நமக்குச் சற்று விந்தையாக இருக்கும். ஆவி என்பது உடலைச் சார்ந்தது அல்ல. ஆவி என்பது வேறு, உடல் என்பது வேறு. “உடல் தாழ்வானது, ஆவி மேலானது” என்பதுதான் நம்முடைய பொதுவான கருத்து. ஆனால் பவுல் இங்கே ஆவிக்குரிய உடல் என்கிறார். இந்த இரண்டு சொற்களையும் சேர்ப்பது நமக்குச் சற்று விந்தையாக இருக்கிறது.
ஆனால் புதிய ஏற்பாட்டிலே ஆவிக்குரிய மனிதன் என்பவன் ஆவிக்குரிய உடல், ஆவிக்குரிய மனம், ஆவிக்குரிய ஆவி ஆகியவைகளால் ஆனவன். இவன்தான் ஆவிக்குரிய மனிதன்.
ஆகவே, இந்த நாளிலே நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிற செய்தியின் தலைப்பாக, ஆவிக்குரிய மனிதர்களின் ஆசீர்வாதங்கள் என்று வைத்துக்கொள்ளலாம். ஆவிக்குரிய மனிதர்களின் ஆசீர்வாதங்கள்.
இந்த ஆசீர்வாதங்கள் பெரும்பாலான வேளைகளிலே கண்கூடாகவும், வெளிப்படையாகவும், பகட்டாகவும் இருக்காது. இந்த ஆசீர்வாதங்கள் மறைவாக இருக்கும், பெரும்பாலான வேளைகளிலே. அது மறைவாக இருப்பதால் அது இல்லை என்று பொருள் இல்லை. அவைகள் மறைவாக இருக்கலாம், ஆனால் அவைகள் மெய்யான ஆசீர்வாதங்கள். சில சமயங்களில் கண்கூடாக, வெளிப்படையாக, பகட்டான ஆசீர்வாதங்களாய்த் தோன்றுகிறவைகள் பொய்யானவைகளாக இருக்கும். இருப்பதுபோல் தோன்றியவைகள் மறைந்துவிடும்.
உளபோலத் தோன்றி இல்லாகிவிடும் என்று தமிழிலே ஒரு சொற்றொடர் உண்டு. இருப்பதுபோல் இருந்து, அது இல்லாமல் போய், அது இருந்த தோற்றம்கூட இல்லாமல் மறைந்து போகும். உலகத்திலே மனித வாழ்க்கையில் பல நன்மைகளும், செல்வங்களும், ஆசீர்வாதங்களும் உள்ளன. ஆனால் ஆவிக்குரிய மனிதனுடைய ஆசீர்வாதங்கள் மறைவானவைகள்போல் தோன்றினாலும், அவைகள் மெய்யானவைகள்.
இதை ஒரு நீண்ட நெடிய செய்தியாகக் கொடுக்கலாம். ஆனால் தேவ மக்களுடைய ஆறுதலுக்காக, பயன்பாட்டிற்காக, நான்கு குறிப்புகளை நான் சொல்ல விரும்புகின்றேன்.
முதலாவது: ஆவிக்குரிய மனிதனாகிய அழைப்பு. தேவனுடைய மக்கள் எல்லாரும், பரிசுத்தவான்கள் எல்லாரும், ஆவிக்குரிய மக்களாக, ஆவிக்குரிய மனிதர்களாக வாழ்வதற்காக நாம் கர்த்தரால் அழைக்கப்பட்டிருக்கிறோம். அது கர்த்தருடைய நோக்கம். ஆகவே, நம்முடைய முதலாவது குறிப்பு: ஆவிக்குரிய மனிதன் என்கின்ற அழைப்பு.
இரண்டாவது குறிப்பு: இப்படி நம்மை ஆவிக்குரிய மனிதர்களாக மாற்றுவது நம்முடைய முயற்சியினாலேயோ, பிரயத்தனத்தினாலேயோ அல்ல. அது ஆவியானவருடைய வேலைப்பாடு. ஆகவே, இரண்டாவது குறிப்பு: ஆவியானவருடைய படைப்பு. ஆவியானவருடைய புதுப்படைப்பு. ஆவியானவருடைய வேலைப்பாடு. ஆவியானவருடைய படைப்பு மட்டும்தான் ஆவிக்குரியது. மற்றது எதுவும் ஆவிக்குரியது அல்ல.
என்னுடைய மூன்றாவது குறிப்பு: ஆவிக்குரிய மனிதர்கள் யார்? என்றால், அவர்கள் ஆவிக்குரிய உடலையும், ஆவிக்குரிய மனதையும், ஆவிக்குரிய உள்உணர்வை அல்லது ஆவிக்குரிய ஆவியையும் கொண்டவர்கள். அது எப்படி ஆவிக்குரிய உடலை நாம் கொண்டிருப்போம்? இப்போதுதான் நாம் வாசித்தோம், ஒன்று கொரிந்தியர் 15 ஆம் அதிகாரத்திலே, இயற்கையான உடலும் உண்டு, ஆவிக்குரிய உடலும் உண்டு. ஆனால் இந்த ஆவிக்குரிய உடலை நாம் உயிர்த்தெழுதலிலேதான் பெற்றுக்கொள்வோம் என்று பவுல் தெளிவாகச் சொல்லுகிறார். இன்று அதனுடைய காரியம் என்ன என்பதைச் சற்று மேலோட்டமாய்ப் பார்க்கலாம். ஆகவே, மூன்றாவது குறிப்பு: ஆவிக்குரிய உடல், ஆவிக்குரிய மனம், ஆவிக்குரிய ஆவி.
நம்முடைய நான்காவது குறிப்பு: தேவனுடைய மக்கள் ஆவிக்குரிய மனிதர்கள் என்றால், அவர்களுடைய நடை, அவர்களுடைய வாழ்க்கை ஆவிக்குரிய நடையாக, ஆவிக்குரிய வாழ்க்கையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆவிக்குரிய நடையின், ஆவிக்குரிய வாழ்வின், ஜீவனும் சமாதானமும் என்ன என்பதை நான்காவது குறிப்பில் பார்ப்போம். உண்மையான ஜீவனும் சமாதானமும் ஆவிக்குரிய நடையிலும், ஆவிக்குரிய வாழ்விலும்தான் உண்டு.
1. ஆவிக்குரிய மனிதனாக அழைப்பு
முதலாவது குறிப்பைப் பார்ப்போம். நாம் ஆவிக்குரிய மனிதர்களாக அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனுடைய நோக்கம் ஆவிக்குரிய மனிதர்கள்.
“ஆவிக்குரிய” என்ற வார்த்தையின் பொருளை நாம் பார்க்க வேண்டும். ஏற்கனவே சொன்னதுபோல, கிரேக்க மொழியிலே ‘சூகே’ (psuchē) என்றால் ஆன்மா, ‘நியூமா’ (pneuma) என்றால் ஆவி. ‘சோமா’ (sōma) என்றால் சரீரம், ‘நியூமாட்டிகோன் சோமா’ (pneumatikón sōma) என்றால் ஆவிக்குரிய சரீரம். ‘சோமா சூசிகோன்’ (sōma psuchikón) என்றால் சரீர சரீரம், அல்லது ஜீவ சரீரம்.
‘நியூமா’ என்ற வார்த்தைக்குக் கிரேக்க மொழியில் பல பொருள்கள் உண்டு. ஆவி, சுவாசம், காற்று. ‘நியூமா’ என்பதற்கு ‘Spirit’ என்று அர்த்தம். ‘நியூமாட்டிகோன்’ (Pneumatikón) என்றால் ‘Spirit-related’ அல்லது ‘Spiritual’. ‘சூசிகோன்’ (Psuchikón) என்றால் ‘Soul-related’ அல்லது ‘Soulish’. ‘சோமா’ (Sōma) என்றால் ‘Body’. ‘நியூமாட்டிகோன் சோமா’ (Pneumatikón sōma) என்றால் ‘Spiritual body’. ‘சூசிகோன் சோமா’ (Psuchikón sōma) என்றால் ‘Soulish body’ அல்லது ‘Natural body’.
நாம் ஆவிக்குரிய மனிதர்களாக அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனுடைய நோக்கம் ஆவிக்குரிய மனிதர்கள். ‘ஆவிக்குரிய’ என்கின்ற வார்த்தையினுடைய பொருளை நாம் பார்க்க வேண்டும். ஏற்கனவே சொன்னதுபோல, இது ‘Spirit-related’ அல்லது ‘Spiritual’. இயற்கையான மனிதனின் உடல், ‘Natural body’ அல்லது ‘Soulish body’. ‘ஆவிக்குரிய’ மனிதனின் உடல், ‘Spiritual body’. தேவனுடைய நோக்கம், நாம் ‘Natural’ ஆக இல்லாமல் ‘Spiritual’ ஆக வாழ்வது. ஆகவே, நாம் ஆவிக்குரிய மனிதர்களாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இரண்டாவது குறிப்பு: இது ஆவியானவருடைய வேலைப்பாடு. இது நம்முடைய சொந்த முயற்சியால் அல்ல, தேவ ஆவியானவரால் நமக்குக் கொடுக்கப்படுவது.
மூன்றாவது குறிப்பு: ஆவிக்குரிய மனிதன் என்பவர் யார்? அவர் ஆவிக்குரிய உடலைக் கொண்டவர், ஆவிக்குரிய மனதைக் கொண்டவர், ஆவிக்குரிய ஆவியைக் கொண்டவர்.
நான்காவது குறிப்பு: ஆவிக்குரிய வாழ்க்கையும், ஜீவனும், சமாதானமும். ஆவிக்குரிய வாழ்க்கை என்பது பரத்துக்குரிய வாழ்க்கை. நித்தியத்துக்குரிய வாழ்க்கை. நாம் பூமியில் வாழ்கிறோம், ஆனால் நம்முடைய சுவாசம் பரத்திலிருந்து வருகிறது. இந்தப் பூமியில் வாழும்போது, நம்முடைய வாழ்வு ஆவிக்குரிய வாழ்வாக இருக்க வேண்டும். நம்முடைய ஆசீர்வாதங்கள், நாம் காணாதவைகளாக இருக்கலாம், ஆனால் அவை நிஜமானவை. நாம் கண்கூடாகக் காண்கிறவைகள் பொய்யானவைகளாக இருக்கலாம். ஆகவே, நம்முடைய அழைப்பு, ஆவிக்குரிய மனிதர்களாக இருப்பது. அது தேவ ஆவியானவருடைய கிரியை. நாம் ஆவிக்குரிய உடலைக் கொண்டிருப்போம், ஆவிக்குரிய மனதைக் கொண்டிருப்போம், ஆவிக்குரிய ஆவியைக் கொண்டிருப்போம். நம்முடைய வாழ்க்கையும் ஆவிக்குரிய வாழ்வாக இருக்கும். அந்த வாழ்வின் ஜீவனும் சமாதானமும் தேவனிடத்திலிருந்து வருகிறது.
இதற்கு ஆதாரமாக, ரோமர் 8ஆம் அதிகாரம், 1 கொரிந்தியர் 15ஆம் அதிகாரம், எசேக்கியல் 36ஆம் அதிகாரம், யோவான் 16ஆம் அதிகாரம், எபேசியர் 1ஆம் அதிகாரம் ஆகிய வேத பகுதிகளை நாம் பார்க்கலாம். இந்தப் போதனைகள் எல்லாம், நாம் உலகத்துக்குரியவர்களாக இல்லாமல், பரத்துக்குரியவர்களாக, தேவனுக்குரியவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை விளக்குகின்றன. ஆமென்.
2. ஆவியானவருடைய புதுப்படைப்பு
இவைகள் தேவ மக்களுடைய வாழ்க்கையில் மெய்ப்பட வேண்டும் என்பதுதான் எபேசியரில் இரண்டு வேண்டுதல்கள், இரண்டு ஜெபங்கள் உள்ளன. ஒன்று எபேசியர் ஒன்றாம் அதிகாரத்திலும், இன்னொன்று எபேசியர் மூன்றாம் அதிகாரத்திலும் உள்ளது.
“உங்களுடைய மனக்கண்கள், உங்களுடைய இருதயத்தின் கண்கள் ஏற்கனவே ஒளிர்விக்கப்பட்டிருக்கின்றன. தேவன் உங்களுக்கு ஞானத்தையும் வெளிப்பாட்டையும் தருகின்ற ஆவியை அருள வேண்டும்,” என்பது எபேசியர் ஒன்றாம் அதிகாரத்திலே பவுலுடைய வேண்டுதல். “கிறிஸ்துவில் எவைகளெல்லாம் உண்மைகளாக உள்ளனவோ, அவைகளெல்லாம் உங்களுடைய வாழ்க்கையிலே மெய்ப்பட வேண்டும்,” என்பது மூன்றாம் அதிகாரத்திலே பவுலுடைய வேண்டுதலாக இருக்கிறது.
அதைத் தொடங்கும்போது உங்களுக்காக நான் தேவனை நோக்கி வேண்டுவது என்னவென்றால், “நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்,” என்கிறார்.
“கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும்” என்பது தவறல்ல. ஆனால், அது “கிறிஸ்துவினுடைய அகலமும், நீளமும், ஆழமும், உயரமும்” என்பது மிகச் சிறப்பாக இருக்கும்.
தேவனுடைய மக்கள் தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்பட வேண்டும். தேவனுடைய சகல பரிபூரணம் கிறிஸ்துவில் உள்ளது. சகல பரிபூரணம் என்பது தேவனில், கிறிஸ்துவில், உள்ள தேவனுடைய செல்வங்கள், தேவனுடைய நன்மைகள், தேவனுடைய ஆசீர்வாதங்கள். இவைகளால் பரிசுத்தவான்கள் பூரணமாக நிரப்பப்பட வேண்டும். தேவனுடைய வல்லமை அதற்காகக் கிரியை செய்கிறது.
20, 21ஆம் வசனம். தொடர்ந்து வாசிக்கலாம். “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.”
இரண்டாவது குறிப்பில் என்ன பார்த்தோம்? ஆவியானவரின் புதுப்படைப்பு. அதுதான் ஆவிக்குரிய படைப்பு. அதில் நாம் பார்த்த உப குறிப்புகள் என்ன?
ஜீவன் தருகிற ஆவியானவர்
ஆவியானவரை வேதம் ஜீவ ஆவியானவர் என்று குறிப்பிடுகின்றது. அதன் பொருள், அவர் ஜீவன் இல்லாத ஓரிடத்திலே ஜீவனை உண்டாக்குகிறார். அவர் உயிர் தருகிற ஆவியானவர். ஜீவன் அழிக்கப்பட்ட, மரண சூழ்நிலையிலே அவர் ஜீவனை உயிர்த்தெழச் செய்கிறார்.
வரவிருக்கிற நன்மைகளின் முதற்கனிகள்
இரண்டாவது, இந்த ஆவியானவர் வரவிருக்கிற பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய படைப்பின் எல்லா அறுவடைகளின் முதற்கனிகளாக தேவனுடைய மக்களுக்குத் தரப்பட்டிருக்கின்றார். ஆகவே, ஆவியானவர் வரவிருக்கின்ற கிறிஸ்துவில் உள்ள எல்லா பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய நன்மைகளை நம்முடைய வாழ்க்கையிலே மெய்ப்படுத்துகிறார். இந்த யுகத்திலும், இந்தப் பூமியிலும் எந்த அளவுக்கு மெய்ப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு மெய்ப்படுத்துகிறார்.
இதில் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சாலையிலே வாகனங்கள் ஓட்டிக்கொண்டு போகும்போது சில இடங்களிலே வெள்ளைக் கோடுகள் போட்டிருப்பார்கள், சில இடங்களிலே விட்டு விட்டு வெள்ளைக் கோடுகள் போட்டிருப்பார்கள், சில இடங்களிலே மஞ்சள் கோடுகள் போட்டிருப்பார்கள், சில இடங்களிலே விட்டு விட்டு மஞ்சள் கோடுகள் போட்டிருப்பார்கள்.
மஞ்சள் கோடு போட்டால் என்ன பொருள்? நீங்கள் இந்த மஞ்சள் கோட்டைத் தாண்டவே கூடாது என்று பொருள். விட்டு விட்டு மஞ்சள் கோடு போட்டால் என்ன பொருள்? இந்த இடத்தில் நீங்கள் தாண்டலாம் என்று பொருள்.
ஆகவே, வரவிருக்கிற அந்த பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய நன்மைகளை இந்த யுகத்திலும், இந்தப் பூமியிலும் கொண்டுவருவதற்கு இருக்கிற இடைவெளி மஞ்சள் கோடு அல்ல. அது விட்டு விட்டுப் போடப்பட்ட கோடுகள்தான். வரவிருக்கிற பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய எல்லா நன்மைகளையும் இந்தப் பூமியிலும், இந்த யுகத்திலும் தேவன் தந்துவிட்டார் என்று நாம் சொல்ல முடியாது. மட்டாக, to a limited way.
தேவனுடைய மக்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய சாயலை, குணத்தை எட்டுவதற்கு, அடைவதற்கு, அதை உருவாக்குவதற்கு எவ்வளவு நன்மைகளை, எவ்வளவு செல்வங்களை இந்தப் பூமியிலும், இந்த யுகத்திலும் தர வேண்டுமோ, அந்த மட்டிற்கு, அந்த அளவிற்கு தேவன் தம் மக்களுக்குத் தருகிறார். ஆனால் “வரவிருக்கிற பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய நன்மைகளில் ஒன்றையுமே இங்கே தரமாட்டார், அங்கே மஞ்சள் கோடு போடப்பட்டுவிட்டது” என்பது அல்ல.
3. ஆவிக்குரிய உடல், மனம், ஆவி
மூன்றாவது குறிப்பிற்குச் செல்வோம். ஆவிக்குரிய மனிதர்கள் அல்லது ஆவிக்குரிய மக்கள் - அவர்கள் ஆவிக்குரிய உடலும், ஆவிக்குரிய மனமும், ஆவிக்குரிய ஆவியும் உடையவர்களாக இருக்கின்றார்கள். இதிலே மூன்று சிறு உப குறிப்புகளைச் சொல்லலாம்.
3.1 ஆவிக்குரிய உடல்
ஆவிக்குரிய உடல் எளிதாக இருக்கிறது. ஆவிக்குரிய உடல், ஆவிக்குரிய மனம், ஆவிக்குரிய ஆவி.
நீங்கள் சொல்லலாம். ஆவிக்குரிய உடல் என்பது, நாம் என்றைக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையான வருகையிலே உயிர்த்தெழுவோமோ, அன்றுதான் நம்முடைய உடல் ஆவிக்குரிய உடலாக மறுவுரு, transfigured, உருமாற்றம் அடையும். அப்படித்தான் வேதம் சொல்லுகின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையான வருகையிலே எக்காளம் தொனிக்கும், கண் சிமிட்டும் நேரத்திலே நாம் அனைவரும் உருமாற்றம் அடைவோம். நாம் ஒரு ஆவிக்குரிய உடலைப் பெறுவோம் என்று. அது உண்மைதான். அதுதான் உண்மை.
ஆனபோதிலும்கூட, இந்தப் பூமியிலும், இந்த யுகத்திலும் தேவனுடைய மக்கள் தங்களுடைய உடல்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று ரோமர் 12 ஆம் அதிகாரம் ஒன்று, இரண்டாம் வசனங்களிலே நாம் வாசிக்கின்றோம்.
ரோமர் 12:1இல், “உங்கள் உடல்களைத் தேவனுக்கு அர்ப்பணியுங்கள். ஜீவ பலிகளாக தேவனுக்கு அர்ப்பணியுங்கள், ஒப்புக்கொடுங்கள், தத்தம் செய்யுங்கள், கையளியுங்கள்” என்று நாம் வாசிக்கின்றோம்.
சகோதரரே, “நீங்கள் உங்கள் சரீரங்களை, உங்கள் உடல்களை.” “ஓ, இல்லைங்க. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையான வருகையிலே அவர் எனக்கு ஆவிக்குரிய உடல் தருவார். இந்த இயற்கையான உடல் ஒன்றும் பயனில்லாதது,” என்பது பொய். இயற்கையான உடல் பயனுள்ளது. உடல் தேவனுடைய ஈவு. உடல் தேவனுடைய கொடை. அந்த உடலை தேவன் தமக்கென்று கோருகிறார். அந்த உடலைவைத்து அவரை நாம் ஆராதிக்க வேண்டும், வழிபட வேண்டும், தொழுதுகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகின்றார், சேவிக்க வேண்டும் என்று விரும்புகின்றார்.
“நீங்கள் உங்கள் உடல்களை…” எந்த உடல்களை? “இயற்கையான உடல்களைத்தான் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலிகளாக, உயிருள்ள பலிகளாக ஒப்புக்கொடுக்க வேண்டும், கையளிக்க வேண்டும், தத்தம் செய்ய வேண்டும், அர்ப்பணிக்க வேண்டும் என்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கின்றேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.”
ஆகவே, நம்முடைய உடல் கணப்பொழுதிலே ஆவிக்குரிய உடலாக மாறுவது எதிர்காலத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையான வருகையில்தான் உள்ளது. ஆனபோதிலும்கூட, இன்று நம்முடைய நடைமுறை வாழ்க்கையிலே தேவ மக்கள் தங்களுடைய உடல்களை ஆவிக்குரிய உடல்களாக மெல்ல மெல்ல மாற்றுவதற்கு எந்த அளவிற்கு நாம் இப்படியே நம்முடைய உடல்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கின்றோமோ… நான் அடிக்கடி neuron circuits பற்றிச் சொல்வதுண்டு. அது பொய்யல்ல, அது மெய். அந்த அளவிற்கு தேவன் நம்முடைய neuron circuits மாற்றுவார். அந்த அளவிற்கு நாம் கிறிஸ்துவினுடைய சாயலுக்கு, அவருடைய குணத்திற்கு ஒத்த குணம் உள்ளவர்களாக மாற்றப்படுவோம்.
ரோமர் எட்டாம் அதிகாரம் 11ஆம் வசனத்தை நாம் வாசித்தோம். “அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.” இயேசு கிறிஸ்துவை உயிரோடு எழுப்புவதிலே ஆவியானவருடைய பங்கும் வேலைப்பாடும் எப்படி இருந்ததோ, அதுபோல அவர் நம்முடைய உடல்களையும் உயிரோடு எழுப்புகின்றார், நம்முடைய உடல்களுக்கும் உயிர் அளிக்கின்றார் என்று நாம் வாசித்தோம்.
கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற… நம்மில் ஆவியானவர் வாசம் பண்ணுகின்றார், வாழ்கின்றார், குடியிருக்கின்றார், உறைந்துள்ளார். அந்த உயிர்த்தெழுதலின் ஆவியினாலே சாவிற்கேதுவான உங்கள் உடல்களையும் அல்லது mortal bodies, உங்கள் உடல்களையும் அவர் உயிர்ப்பிப்பார்.
இது எதிர்காலத்தில் வரவிருக்கின்ற உயிர்த்தெழுதலைப்பற்றிச் சொல்லவில்லை. நிகழ்காலத்திலே. அதுபோல, இது உங்கள் சரீரங்களையும் அல்லது உங்கள் உடல்களையும் என்று சொல்லும்போது உடல்களைப்பற்றி மட்டுமல்ல. தேவ மக்களுடைய முழு ஆள்தத்துவத்தையும், the whole being-ஐயும் ஆவியானவர் தம்முடைய உயிர்த்தெழுந்த ஜீவனைக்கொண்டு அவர்களுக்குப் பணிவிடை செய்கிறார், வலுவூட்டுகின்றார்.
Mortal bodies, சாவுக்கு இனமான உடல்களை ஆவியானவர் உயிர்த்தெழச் செய்கின்றார், உயிரோடு எழுப்புவார், உயிர்ப்பிப்பார். ஆகவே, தேவனுடைய மக்கள், “நமக்கு எந்த வல்லமையும் இல்லை” என்று சாக்குப்போக்குச் சொல்ல இடமில்லை. நமக்குள்ளே வாழ்கின்ற ஆவியானவர் உயிர்த்த ஜீவ ஆவியானவர். உயிர்த்தெழுதலின் ஆவியானவர். அந்த உயிர்த்தெழுந்த ஜீவனை அவர் நம்முடைய உடல்களுக்கும், நம்முடைய முழு ஆள்தத்துவத்திற்கும் அவர் அளிக்கின்றார். எபேசியரிலே வாசித்ததுபோல அவர் நமக்கு உள்ளான விதத்திலே பலமூட்டுகின்றார்.
தேவ மக்களுடைய பிரதியுத்தரம், மாறுத்தரம், மறுவினை என்னவாக இருக்க வேண்டும்? 13 ஆம் வசனத்தை நாம் வாசிப்போம்.
“மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.”
இந்த வாக்கியத்தை வாசிப்பதற்கு தேவனுடைய மக்களுக்கு மிகக் கடினமாக இருக்கும். சாவீர்கள், வாழ்வீர்கள். “ஊனுக்கேற்ப வாழ்ந்தால் சாகவே சாவீர்கள். ஆவியானவராலே உடலின் செய்கைகளை சாகடித்தால் வாழ்வீர்கள்.”
இதை நினைவில்வைத்துக்கொள்வது எளிது. வாழ்ந்தால் சாவீர்கள். சாகடித்தால் வாழ்வீர்கள். எப்படி வாழ்ந்தால் சாவீர்கள்? எதை சாகடித்தால் வாழ்வீர்கள்? ஊனுக்கேற்ப வாழ்ந்தால் சாவீர்கள். ஆவியானவராலே உடலின் செய்கைகளைச் சாகடித்தால் வாழ்வீர்கள்.
ஆவியானவர் நமக்கு உயிரூட்டுகின்றார். ஆவியானவர் நமக்கு உயிர்த்தெழுந்த ஜீவனை அருளுகின்றார். அது உண்மைதான். ஆனால் தேவனுடைய மக்கள் ஆவியானவரோடு ஒத்துழைத்து, அந்த ஆவியானவராலே உடலின் செய்கைகளை.. உடலின் செய்கைகள் என்றால் சாப்பிடுவது, தூங்குவது என்று பொருளா? அது பொருளல்ல.
நான் ஏற்கனவே சொன்னதுபோல, பல வேளைகளிலே புதிய ஏற்பாடு அல்லது பவுல் உடல் என்கின்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது முழு மனிதனையும் குறிப்பதற்காகத்தான் பயன்படுத்துகின்றார். அதுபோல உடலின் செய்கைகள் என்றால் நம்முடைய முழு மனிதனுடைய தீய செய்கைகளை, பாவத்துக்குரிய செய்கைகளை, ஊனுக்குரிய செய்கைகளை, உலகத்துக்குரிய செய்கைகளை, மரண செய்கைகளை நாம் சாகடித்தால் வாழ்வோம்.
ஆகவே, தேவனுடைய மக்கள் இன்று தங்களுடைய உடலை ஆவிக்குரிய உடல்களாக அர்ப்பணிக்கவும், கையளிக்க வேண்டும். இதுதான் ஆவிக்குரிய மனித வாழ்க்கை.
3.2 ஆவிக்குரிய மனம்
இரண்டாவது. தேவனுடைய மக்களுடைய மனம் ஆவிக்குரிய மனமாக இருக்க வேண்டும்.
சில கிறிஸ்தவர்கள் இப்படிச் சொல்வதை நான் கேட்டிருக்கின்றேன். அதாவது “ஆவியானவர் உடலுக்கு எதிரானவர். அதனாலே உடலிலே சாத்தான் குடிகொண்டான். அதற்கு சோறு போடக்கூடாது, தண்ணீர் கொடுக்கக்கூடாது, தூங்கக்கூடாது.” இது தவறு. உபவாசம் நல்லது. ஆனால் உடல் தீமையானது என்பது கிறிஸ்தவ சத்தியம் அல்ல, அது நற்செய்தியின் சத்தியம் அல்ல.
உடல் தேவனுடைய கொடை. இந்த உடலை நாம் தேவனுடைய கொடையாகப் பாவிக்க வேண்டும். தேவனை வாழ்வதற்கும், கிறிஸ்துவை வாழ்வதற்கும், சேவிப்பதற்கும், பணிவிடை செய்வதற்கும் நாம் இப்போது பார்த்ததுபோல ஆவிக்குரிய உடலாக நாம் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இன்னும் சில கிறிஸ்தவர்களிடத்தில் இன்னொரு காரியம் உண்டு. இதை நான் பொய் என்றுகூடச் சொல்வேன். “ஆவியானவரும் மனமும் ஒன்றுக்கொன்று எதிரானவர்கள். நீங்கள் உங்கள் மனதைவைத்து யோசித்தால், சிந்தித்தால், எண்ணினால், அது ஆவியானவருக்கு எதிரானது. எந்த அளவுக்கு நீங்கள் யோசிக்காமல், எண்ணாமல், சிந்திக்காமல் செயல்படுகின்றீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் ஆவிக்குரியவர்கள்.” அப்படி அல்ல.
தேவன் எப்படி உடலை ஆவிக்குரிய, பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய ஒரு உடலாக மாற்ற விரும்புகிறாரோ, அதேபோல தேவன் தம்முடைய மக்கள் மனங்களை ஆவிக்குரிய, பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய மனங்களாக மாற்ற விரும்புகின்றார். Heavenly mind. தேவ மக்களுடைய மனம் ஒரு ஆவிக்குரிய மனமாக இருக்க வேண்டும். ஆகவே, மனதை ஒழித்துக்கட்டுவதல்ல தேவனுடைய எண்ணம். மனதை ஆவிக்குரிய மனமாக மாற்றுவது.
ரோமர் எட்டாம் அதிகாரம் 4முதல் 14 ஆம் வசனத்திலுள்ள பகுதியிலே, அதைப்பற்றி இருக்கிறது. மிக முக்கியமாக அங்கு என்ன இருக்கிறது என்றால், “நீங்கள் ஆவிக்கேற்ப நடந்தால்..” ஆ, இங்கே இருக்கிறது, நான்காம் வசனம். “மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.”
அடுத்த வசனம். “அன்றியும் மாம்சத்தின்படி (ஊனுக்கேற்ப) நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச்(ஊனுக்கேற்றவைகளைச்) சிந்திக்கிறார்கள் (அல்லது ஊனுக்கேற்ற மனப்பாங்கு உள்ளவர்களாக இருக்கின்றார்கள்); ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.” அங்கு போடப்பட்டிருக்கிற வார்த்தை வெறுமனே மனம் என்று சொல்லிவிட முடியாது; மனப்பாங்கு, கண்ணோட்டம், பார்வை உள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆவிக்கேற்ப நடக்கிறவர்கள் ஆவிக்கேற்ற மனப்பாங்கு, மனம், பார்வை, கண்ணோட்டம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
அடுத்த வசனம்: மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ஆ, மீண்டும் மாம்ச சிந்தை மரணம், மாம்ச மனப்பாங்கு மரணம், ஆவியானவரின் மனப்பாங்கோ ஜீவனும் சமாதானமும் ஆகும். ஆக, 14 ஆம் வசனம் வரை அப்படி இருக்கின்றது.
மிக முக்கியமான காரியம், தேவ மக்களுடைய நடை. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்முடைய நடையும் நம்முடைய மனப்பாங்கும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது. நாம் ஆவிக்கேற்ப நடந்தால் நம்முடைய மனப்பாங்கு ஆவிக்கேற்றதாக இருக்கும். நம்முடைய மனப்பாங்கு ஆவிக்கேற்றதாக இருந்தால் நம்முடைய நடை ஆவிக்குரிய நடையாக இருக்கும். இது ஒரு cyclic.
எப்படி என்றால், நம்முடைய நடத்தை சில சமயம் எப்படி இருக்கும்? நம்முடைய நரம்பணுச் சுற்றுகள் எப்படி இருக்கிறதோ, அதன்படிதான் நம் நடத்தை இருக்கும். அப்படிச் சொல்லிவிட்டு நாம் தப்பித்துக்கொள்ளலாம். என்னுடைய neuron circuits அப்படி உள்ளன, நான் என்ன செய்ய முடியும் என்று. அப்படி அல்ல. நம்முடைய நடத்தை எப்படி உள்ளதோ, அது நம்முடைய neuron circuits-ஐ தீர்மானிக்கும்.
வாதம் paralysis, stroke வந்தவர்களுக்கு கை, கால் ஒரு பக்கம் விளங்காமல் போய்விடும். அதற்குரிய அந்த மூளையினுடைய பகுதி செயல்படாமல் போய்விடும். மூளையினுடைய பகுதிதான் கை கால்களை இயக்கும். இடப்பக்க மூளை வலப்பக்க கை கால்களை இயக்கும். ஆனால் அவர்களுக்கு stroke வந்துவிட்டது அல்லது பக்கவாதம் வந்துவிட்டது என்றால் அவர்களுடைய மூளையின் ஒரு பகுதி வேலை செய்யாமல் போய்விடும். அதனால், “இனிமேல் ஒன்றும் செய்ய வேண்டாம்” என்று விட்டுவிட மாட்டார்கள்.
பக்கவாதம் வந்த கைகளை, கால்களை அவர்கள் பிடித்து சில உடற்பயிற்சிகளைக் கொடுப்பார்கள். நம்முடைய physiotherapist, நம்முடைய doctors எல்லாம் இதைப்பற்றிச் சொல்ல முடியும். எப்படி இடப்பக்க மூளையிலிருந்து வலப்பக்க கை கால்கள் இயக்கப்படுகின்றனவோ, அதேபோல வலப்பக்க கை கால்களை நாம் பயிற்சி செய்யும்போது அதற்குரிய மூளையின் பகுதிகள் ஏதோ ஒரு விதத்திலே exercise பண்ணப்படுகின்றன.
ஆகவே, தேவனுடைய மக்கள், “ஓ, நான் அப்படி. This is my makeup. நான் இப்படி உண்டாக்கப்பட்டிருக்கின்றேன். எனவே, நான் மாற முடியாது,” என்று சொல்ல முடியாது. “என்னுடைய மனப்பாங்கு அப்படி” என்று சொல்ல முடியாது. நம்முடைய மனப்பாங்கு நம்முடைய நடையை பாதிக்கின்றது, நம்முடைய நடை நம்முடைய மனப்பாங்கை பாதிக்கின்றது.
தேவனுடைய கோரிக்கை, தேவ மக்களுடைய மனம் ஆவிக்குரிய மனமாக மாற வேண்டும். பரத்துக்குரிய மனமாக மாற வேண்டும்.
ஒன்று கொரிந்தியர் இரண்டாம் அதிகாரம் 14 முதல் 16 வரை மிக முக்கியமான வசனங்கள். அங்கே பவுல் சொல்லுகின்றார். “இயற்கையான மனிதன் தேவனுடைய ஆவிக்குரியவைகளை, ஆவிக்குரிய காரியங்களை, ஏற்றுக்கொள்ள மாட்டான். ஜென்ம சுபாவமான மனிதன், அதாவது இயற்கையான மனிதன், தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றவாறு ஆராய்ந்து நிநிதானிக்கப்படுகிறவைகளானதால், மிகக் கடினமான வார்த்தை, அவைகள் ஆவிக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. ஆகையால் அவைகளை அவன் அறிய மாட்டான்.”
15 ஆம் வசனம். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் மதிப்பிடுகின்றான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் மதிப்பிடப்பட முடிவதில்லை.
16. கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய மனதை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் மனம் அல்லது மனப்பாங்கு உண்டாயிருக்கிறது.
ஆகவே, நாம் பார்த்த இயற்கையான மனிதன், ஆவிக்குரிய மனிதன் என்பது இங்கும் இருக்கின்றது. இயற்கையான மனிதனுக்கு ஆவிக்குரிய காரியங்கள், பரத்துக்குரியவைகள், நித்தியத்துக்குரியவைகள் பைத்தியமாக, முட்டாள்தனமாகத் தோன்றும். அவனுடைய மனப்பாங்கு அவ்வளவுதான். அவனால் ஆவிக்குரியவைகளையும், பரத்துக்குரியவைகளையும், நித்தியத்துக்குரியவைகளையும், கிறிஸ்துவில் தேவனுக்குரியவைகளையும் மதிப்பிட முடியாது. அவன் ஏனோதானோவென்று மதிப்பிடுவான். கோணல் மாணலாக மதிப்பிடுவான்.
ஆனால் ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் மதிப்பிடுகின்றான். அவன் இந்த இயற்கையான உலகத்துக்குரியதை மட்டும் மதிப்பிடுவதில்லை. அவன் ஆவிக்குரியதை, பரத்துக்குரியதை, நித்தியத்துக்குரியதை மதிப்பிடுகின்றான்.
3.3 ஆவிக்குரிய ஆவி
மூன்றாவது, ஆவிக்குரிய ஆவி. இது சற்று விந்தையாக இருக்கலாம். அது என்ன ஆவி ஆவி? ஆவிக்குரிய உடல் விளங்குகிறது. ஆவிக்குரிய மனம் என்பதும் பொருள் நிறைந்ததாக இருக்கிறது. அது என்ன ஆவிக்குரிய ஆவி?
தேவனுடைய மக்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எல்லா மனிதர்களுக்கும் தேவன் ஒரு உடலைக் கொடுத்திருக்கிறார், மனதைக் கொடுத்திருக்கிறார், உள்ளத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால் தேவனுடைய மக்களுக்கு அதனினும் ஆழமாக ஒரு பகுதி உள்ளதாக வேதம் கூறுகிறது. அந்தப் பகுதியை வரையறுக்க முடியாது. புதிய ஏற்பாடு பயன்படுத்துகின்ற ஒரு வார்த்தை ஆவி, மனிதனுடைய ஆவி.
எடுத்துக்காட்டாக, யோவான் மூன்றாம் அதிகாரம் ஆறாம் வசனத்திலே கர்த்தராகிய இயேசு, “ஆவியானவரால் பிறப்பது ஆவியாய் இருக்கும்” என்று கூறுகிறார். இரண்டு ஆவி. “That which is born of the Spirit is spirit. That which is born of the flesh is flesh.” ஊனினால் பிறப்பது ஊனாய் இருக்கும், ஆவியானவரால் பிறப்பது ஆவியாய் இருக்கும்.
முதலாவது ஆவியானவர், தேவனுடைய ஆவியானவரை, பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கின்றது. இரண்டாவது ஆவி எதைக் குறிக்கின்றது என்றால், அது மனிதனுக்குள் ஒரு பகுதி இருக்கிறது. பரத்துக்குரியவைகளையும், நித்தியத்துக்குரியவைகளையும் உணர்கின்ற ஒரு antenna தேவன் தம்முடைய மக்களுக்குக் கொடுத்திருக்கின்றார். ஒரு உணர்திறன்.
இது இயற்கையான மனிதர்களுக்கு இல்லை. ஆனால் ஆவியானவரால் பிறப்பிக்கப்பட்ட, ஆவியானவரால் புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட, மறுபடி பிறக்கப்பட்ட, பரத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட, born from above. பரத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட தேவனுடைய மக்களுக்கு நம்முடைய பரம வீட்டைப்பற்றிய ஒரு உணர்வு நம்முடைய ஆழத்தில் உண்டு. அதை ஆவி என்று கூறுகின்றது.
ரோமர் எட்டாம் அதிகாரம் 16 ஆம் வசனத்திலும் பவுல் அதைப்பற்றி கூறுகின்றார். “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.” நம்முடைய ஆவிக்கு சாட்சி கொடுக்கின்றார் என்றும் சொல்லலாம்.
இங்கும் முதல் ஆவியானவர் தேவனுடைய ஆவியானவரை அல்லது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கின்றது. இரண்டாவது குறிப்பிடப்பட்டுள்ள ஆவி எதைக் குறிக்கின்றது என்றால், வேறு வேறு பொருள் நாம் கொள்ள முடியாது. மனிதனுக்குள் ஒரு ஆழமான பகுதி உள்ளது. பல வேளைகளிலே நம்முடைய மனதிலே தெளிவில்லாமல் போகலாம். ஆனால் மனதிற்கும் ஆழமாக ஓரிடத்திலே ஒரு மெல்லிய உணர்வு இருக்கிறது. அந்த உணர்வை நம்மால் பல வேளைகளிலே வரையறுக்க முடிவதில்லை. ஆனால் அந்த உணர்வு இருப்பது மெய்.
இதற்கு அர்த்தம், எப்போதுமே அந்த உணர்வை, பல சமயம் நம்முடைய தனிப்பட்ட உணர்வுகளை, “இது என்னுடைய ஆவியிலே ஆவியானவர் தருகிற உணர்வு” என்று ஏமாற்றிக்கொள்கின்ற வாய்ப்பு உண்டு. அதற்கு நாம் எச்சரிக்கையாக, கவனமாக இருக்க வேண்டும். ஆனபோதிலும்கூட, தேவனுடைய மக்கள் ஆவிக்குரிய மக்களாக இருக்க வேண்டும் என்றால் அந்த உள்ளான, மிக உள்ளான, மிக ஆழமான அந்த ஆவியின் உணர்வைப் புறக்கணிக்க முடியாது.
4. ஆவிக்குரிய நடையின் ஜீவனும் சமாதானமும்
நம்முடைய கடைசி குறிப்பிற்கு வருவோம். ஆவிக்குரிய வாழ்க்கையின் அல்லது ஆவிக்குரிய நடையின் ஜீவனும் ஆசீர்வாதமும்.
முதல் மூன்று குறிப்புகள் என்ன? முதலாவது குறிப்பு, ஆவிக்குரிய மனிதர்களாக நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். இரண்டாவது, ஆவியானவருடைய படைப்பாக நாம் மாற்றப்பட்டிருக்கின்றோம். மூன்றாவது குறிப்பு, தேவனுடைய மக்கள் ஆவிக்குரிய உடலும், மனமும், ஆவியும் உள்ள மக்களாக இருக்க வேண்டும்.
நான்காவது குறிப்பு, ஒரு கணத்திலே நாம் ஆவிக்குரிய படைப்பாக, ஆவிக்குரிய உடலும், மனமும், ஆவியும் உள்ளவர்களாக மாறிவிடுவதில்லை. அது ஒரு process, ஒரு நிகழ்முறை. என்றைக்கு நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக விசுவாசித்தோமோ, மனந்திரும்பினோமோ, அன்று முதல் அந்த process, அந்த நிகழ்முறை தொடர்ந்து நம்முடைய வாழ்க்கையிலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
தேவன் அந்த நிகழ்முறையை மிகவும் அருமையானதாக, விலையேறப்பெற்றதாக, மதிப்புள்ளதாகக் கருதுகின்றார். “இந்தப் பூமியிலே நாம் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துகொள்ளலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய தம்முடைய நன்மைகளையும், செல்வங்களையும் நமக்குக் கொடுப்பார்,” என்பதல்ல. இதை நாம் மிகத் தெள்ளத்தெளிவாய் நம்முடைய மனதிலே இருத்திக்கொள்ள வேண்டும்.
தேவன் நம்மை ஆவிக்குரிய மனிதர்களாக அழைத்திருப்பது, ஆவிக்குரிய, பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய, கிறிஸ்துவில் தேவனுக்குரிய நன்மைகளை நமக்குக் கொடுப்பது, ஒரேவொரு நோக்கத்திற்காகத்தான். நமக்குள்ளே கிறிஸ்துவாகிய அந்த செல்வத்தை, கிறிஸ்துவாகிய சுதந்திரத்தை, உருவாக்கி, தேவன் தம்முடைய மனநிறைவிற்காக, தம்முடைய திருப்திக்காகப் பெறுவதற்காக.
ஆகவே, இன்று நாம் எப்படி நடக்கின்றோம் என்பதைத் தேவன் மிகவும் அருமையானதாக, முதன்மைப்படுத்திக் கருதுகின்றார்.
தேவனுடைய மக்கள் ஆவிக்குரியவர்களாக இருப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல வேளைகளில் அவர்கள் இயற்கையான மனிதர்களாகத்தான் நடக்கின்றார்கள். இன்னும் துரதிர்ஷ்டவசமாக தேவனுடைய மக்கள் பலர் இயற்கையான மனிதர்களாகவே வாழ்கின்றார்கள். இரண்டிற்கும் வேறுபாடும் உண்டு.
பெரும்பாலும் ஆவிக்குரிய நடை நடப்பார்கள், சில வேளைகளிலே இயற்கையாக நடப்போம். அது ஒரு பக்கம், அதுவே வீழ்ச்சிதான். ஆனால் தேவனுடைய மக்கள் சிலார் consistently-ஆகவே, habitually இயற்கையான வாழ்க்கை வாழ்கின்றார்கள், இயற்கையான நடை உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
அந்த இயற்கையான நடை நடக்கின்றவர்களுக்கு ஜீவனும் சமாதானமும் இல்லை. அவர்கள் இந்த உலகத்திலே இந்த உலகம் கொண்டாடுகின்ற, இந்த உலகம் நாடுகின்ற, தேடுகின்ற, ஆடுகின்ற so-called செல்வங்களையும், நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று அனுபவிக்கலாம். ஆனால் தேவன் தம்முடைய ஆவிக்குரிய மக்களுக்கு, பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய மக்களாய் வாழ்கின்ற மக்களுக்கு வாக்குறுதி செய்த ஜீவனும், ஆசீர்வாதத்தையும், ஜீவனையும், சமாதானத்தையும் அவர்கள் தவறவிட்டுவிடுகின்றார்கள்.
இது நம்முடைய நடைமுறைக்கு ஒத்தது என்பதால் நான் சற்று நேரம் எடுத்துக்கொள்கிறேன்.
ஆவியானவரின் நதியில் ஆழமாகச் செல்லுதல்
எசேக்கியல் 47ஆம் அதிகாரம் ஒன்று முதல் 12ஆம் வசனங்களை நீங்கள் குறித்துக்கொள்ளுங்கள். முழுவதையும் வாசிப்பதற்கு நமக்கு நேரம் போதாது. ஆனால் நீங்கள் வீட்டிற்குச் சென்ற பிறகு அதைப் பொறுமையாய் வாசிக்க வேண்டும் என்று நான் உங்களை அன்போடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த செய்தியை வாசித்து, இந்த செய்தியைக் கேட்டுவிட்டு, அப்படியே விட்டுவிடாதீர்கள். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய எல்லா நாட்களிலும் மீண்டும் கேட்டுப்பாருங்கள். ஏனென்றால் எனக்குத் தெரியும், இது அடர்த்தியான வார்த்தைகள்.
எசேக்கியேல் தேவனுடைய ஆலயத்தைப்பற்றிய தரிசனத்தைக் காணும்போது, தேவனுடைய ஆலயத்திலிருந்து தண்ணீர் கிழக்கு நோக்கி ஓடி வந்ததாய்ச் சொல்லுகின்றார். தேவனுடைய ஆலயத்திலிருந்து ஓடி வருகின்ற தண்ணீர் ஆவியானவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
திருவெளிப்பாடு 22ஆம் அதிகாரம், கடைசி அதிகாரம் அதைப்பற்றி சொல்லுகின்றது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் அமர்ந்திருக்கின்ற சிங்காசனத்திலிருந்து ஜீவத் தண்ணீர் உள்ள நதிகள் புறப்பட்டு ஓடிக்கொண்டிருந்தன . ஆகவே, இந்தத் தண்ணீர், இந்த நீரோட்டம், இந்த நதி பரிசுத்த ஆவியானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதைப்பற்றி நீங்கள் பல செய்திகள் கேட்டிருக்கலாம். தேவன் எசேக்கியேலை ஆயிரம் முழங்கள் நடக்கச் சொல்கின்றார். நடந்தபிறகு தண்ணீரினுடைய ஆழத்தை அளக்கும்போது அது கணுக்கால் அளவு இருந்ததாக எசேக்கியல் கூறுகின்றார்.
இன்னும் ஒரு ஆயிரம் முழம் நடக்கச் சொல்கின்றார். அது ஆயிரம் முழமா, ஆயிரம் மீட்டரா, ஆயிரம் மைலா என்பதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்னும் சற்றுத்தூரம் நடக்கச் சொல்கின்றார். நடந்தபிறகு தண்ணீரின் ஆழத்தை எசேக்கியேல் பார்க்கின்றார். அது முழங்கால் அளவு இருந்ததாகப் பார்க்கின்றோம்.
இன்னும் சற்று ஒரு ஆயிரம் முழம் நடக்கச் சொல்கின்றார். அதன்பிறகு தண்ணீரின் ஆழத்தை நடக்கும்போது அது இடுப்பளவு இருந்ததாகப் பார்க்கின்றார்.
இன்னும் ஒரு ஆயிரம் முழம் நடக்கச் சொல்கின்றார். அதன்பிறகு எசேக்கியேலால் அந்த ஆழத்தை அளக்க முடியவில்லை. அது கடக்கக் கூடாத நதியாய் இருந்தது. தண்ணீர் நீச்சல் ஆழமும், கடக்க முடியாத நதியுமாய் இருந்தது.
ஆவியானவரின் ஆவிக்குரிய வாழ்க்கை அல்லது ஆவிக்குரிய நடை என்றால், இந்தப் பூமியை இறுகப் பற்றிக்கொண்டு, இந்தப் பூமிக்குரிய மக்கள் எவைகளையெல்லாம் இறுகப் பற்றிக்கொண்டு, எவைகளெல்லாம் மதிப்புள்ளவைகள் என்று கருதிக்கொண்டு வாழ்கின்றார்களோ, அவைகளையே நாமும் மதிப்புள்ளவைகள் என்று கருதிக்கொண்டு, இறுகப் பற்றிக்கொண்டு, இந்தப் பூமிக்குரிய வழிகள் எதுவோ அந்த வழிகளிலே நடப்பது ஆவிக்குரிய நடை அல்ல.
ஆவியானவர் audible voice-இல் பேசுவதில்லை. ஆனால் நான் ஏற்கனவே சொன்னதுபோல நமக்குள்ளே ஒரு ஆழ்ந்த உணர்வு, ஒரு உள்உணர்வு உண்டு. அதில் நடக்க நடக்கத்தான் அந்த உணர்வு எவ்வளவு சரியானது, தவறானது, துல்லியமானது, துல்லியமற்றது என்று தெரியவருமே தவிர, அதை classroom-இல் வைத்து சொல்லிக் கொடுக்க முடியாது.
ஆனால் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி, அவருடைய, அவருக்குள் உள்ள செல்வங்களால், நன்மைகளால் வாழ முயலும்போது, முதலாவது கணுக்கால் அளவு.
நீங்கள் யோசித்துப் பாருங்கள். கணுக்கால் அளவு தண்ணீர் போகும்போது, தண்ணீர் எந்த திசையில் ஓடுகிறது என்பது ஓரளவுக்கு உங்களால் உணர முடியும். ஆனால் உங்கள் கால்கள் மிகவும் உறுதியாக பூமியில் நிற்கின்றன. பூமியினுடைய வழிகள் உங்களுக்குத் தெரியும்.
தேவ மக்களில் பலர் அப்படித்தான் நடப்பார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருப்பார்கள். ஆவியானவரைப்பற்றிய ஒரு கருத்து அவர்களுக்கு இருக்கும். ஆனால் அவர்களுடைய கால்கள், அவர்களுடைய மனங்கள் பூமியிலே உறுதியாகப் பதிந்திருக்கும், உறுதியாக ஊன்றி இருப்பார்கள். ஏறக்குறைய அவரகளுடைய வழிகள் பூமிக்குரிய பாதைகளாக, பூமிக்குரிய வழிகளாகத்தான் இருக்கும்.
ஆனால் முழங்கால் அளவிற்குத் தண்ணீர் ஓடும்போது, தண்ணீர் எந்த திசையை நோக்கி ஓடுகிறது என்கின்ற உணர்வு இன்னும் சற்று வலுவாக இருக்கும். தரையிலே நம்முடைய கால் பதிந்திருப்பது அந்த அளவுக்கு உறுதியாகவும், ஊன்றியும், பதிந்தும் இருக்காது. கொஞ்சம் தளர்ந்திருக்கும்.
ஆனாலும் தடவித் தடவிப் பார்த்து எது பூமிக்குரிய பாதைகள் என்று நமக்குத் தெரியும். நாம் மிகவும் வாகாக அல்லது சாமர்த்தியமாக கிறிஸ்தவ வாழ்க்கையும், பூமிக்குரிய வாழ்க்கையும் வாழ்ந்துகொள்வோம்.
ஆனால் தேவன் நம்முடைய வாழ்வில் சற்று காலம் அனுமதிப்பார். இது ஒரே நாளிலே நாம் கற்றுக்கொள்வது அல்ல. இடுப்பளவு தண்ணீரில் நாம் நடக்கும்போது உண்மையிலேயே தண்ணீரின் ஓட்டம் எந்த திசையில் போகிறது என்பது இன்னும் வலுவாகத் தெரியும். இந்தப் பூமிக்குரிய தரையில் நம்முடைய கால்கள் ஊன்றி இருப்பதும், பதிந்திருப்பதும், பற்றி இருப்பதும் இன்னும் தளர்ந்து போகும்.
பூமிக்குரிய மக்கள் எப்படி சிந்திக்கிறார்களோ அப்படியே சிந்திப்பது. பூமிக்குரிய மக்கள் எவைகளைக் கொண்டாடுகிறார்களோ அவைகளையே கொண்டாடுவது. பூமிக்குரிய மக்கள் எவைகள் இல்லை என்றால் வருந்தி, கவலைப்படுகிறார்களோ, பயப்படுகிறார்களோ, அதேபோல் நாமும் கவலைப்பட்டு, வருந்தி, பயப்படுவது. இவைகள் எல்லாம் தளர்ந்து போகும்.
நீச்சல் ஆழங்கள் என்பது, இந்தப் பூமியிலே இந்தப் பூமிக்குரிய மக்கள் செல்வங்கள் என்று கருதுபவை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தேவனுடைய மக்கள் துவண்டு போவதுமில்லை, கொண்டாடுவதும் இல்லை.
ஆவிக்குரிய நடை மரணச் சூழலை ஜீவனாக மாற்றுகிறது
இதனுடைய விளைவு என்னவென்றால், எட்டாம் வசனத்தை வாசிப்போம். எசேக்கியல் 47:8. “அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.” இந்தக் கடல் சாக்கடல், Dead Sea-ஐக் குறிக்கின்றது.
தேவனுடைய மக்கள் ஆவிக்குரியவர்களாக, பரத்துக்குரியவர்களாக, பரத்துக்குரிய மனப்பாங்கு, நித்தியத்துக்குரிய மனப்பாங்கு உள்ளவர்களாக, இந்த மனித வாழ்க்கை, இந்த பூமிக்குரிய வாழ்க்கையைப் பார்ப்பவர்களாக இருந்து அதன்படி நடந்தால், எப்படிப்பட்ட சாக்கடல், மரணக் கடல், மரண சூழ்நிலையிலே தேவனுடைய மக்கள் விழ நேர்ந்தாலும் அல்லது அதன் வழியாய், மரணச் சூழல்வழியாய், ஒரு மரணக் கடல்வழியாய்ப் போனாலும், ஆவியானவரில் நடக்கிற வாழ்க்கை இதை ஜீவனாக மாற்றும்.
ஆவிக்குரிய நடை இறுதியில் ஜீவனை உண்டாக்கும். ரோமர் 8:6-ஐ நினைக்கிறேன். ஆவியின் மனப்பாங்கோ ஜீவனும் சமாதானமும் ஆகும்.
கணுக்கால் அளவு வாழ்ந்து பாதுகாப்பாய் வாழ்கின்ற தேவனுடைய மக்கள் இருக்கலாம். முழங்கால் அளவு வாழ்ந்து பாதுகாப்பாய் வாழ்கின்ற தேவனுடைய மக்கள் இருக்கலாம். இடுப்பளவு வாழ்ந்த தேவனுடைய மக்கள் இருக்கலாம். நீச்சல் ஆழங்கள் வாழ்ந்த தேவனுடைய மக்கள் இருக்கலாம்.
நாம் எப்படிப்பட்ட மக்களாய்த் தேவனைப் பின்பற்றுவது என்பதை நாம்தான் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஒன்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எந்த அளவிற்கு நாம் ஆவியானவரைப் பின்பற்றுகின்றோமோ அல்லது ஆவியானவர் காண்பிக்கின்ற அந்தக் கிறிஸ்துவை நாம் பின்பற்றுகின்றோமோ, அந்த அளவிற்கு எப்படிப்பட்ட மரண சூழ்நிலை வழியாய் நாம் போக நேர்ந்தாலும், அதை ஜீவனும் ஆரோக்கியமுமாக மாற்ற ஆவியானவர் வல்லமையுள்ளவரும், போதுமானவருமாய் இருக்கிறார்.
ஒன்பதாம் வசனம். “சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.”
அருமையான பரிசுத்தவான்களே, ஆவியானவர் நம்முடைய வாழ்வில் பூமிக்குரிய பற்றுகளைத் தளர்த்தும்போது, “இந்தப் பூமியில் என் கால்களை உறுதியாகப் பதிக்கவோ, பற்றிக்கொள்ளவோ, ஊன்றிக்கொள்ளவோ முடியவில்லையே; நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதால் இப்படிப்பட்ட சூழ்நிலை வருகிறதே” என்கிற உணர்வு நமக்கு வரலாம். ஆனால் நாம் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. நாம் ஒரு விலை செலுத்தி ஆவியானவரைப் பின்பற்றும்போது, அவர் போகும் இடமெல்லாம் நாம் ஆரோக்கியப்பட்டுப் பிழைப்போம்.
பூமிக்குரிய மனப்பாங்கும் பரத்துக்குரிய மனப்பாங்கும்
பிலிப்பியர் மூன்றாம் அதிகாரம் 17 முதல் 21 ஆம் வசனங்களை வாசிப்போம். ஆவிக்குரிய நடை என்பது இந்தப் பூமிக்குரிய மனப்பாங்கை நாம் விடுவது.
“சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.”
இரண்டு விதமாய் நடக்கலாம். இந்தச் செய்தியின் தலைப்பு, ஆவிக்குரிய மனிதனின் மறைவான ஆயினும் மெய்யான ஆசீர்வாதங்கள். ஆனால் இந்த இயற்கையான மனிதனுடைய பார்வையிலே ஆவிக்குரிய மனிதர்கள் பைத்தியக்காரர்களாகவும், முட்டாள்களாகவும் தென்படுவார்கள். அவர்கள் தங்களுடைய நடையை மிகவும் புத்தியுள்ள, ஞானமுள்ள நடையாய்க் கருதுவார்கள்.
“அவர்கள் வேறு விதமாய் நடக்கின்றார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்கள்,” என்று பவுல் சொல்லுகிறார். கிறிஸ்துவின் சிலுவைக்கு அடிபணிந்து, கீழ்ப்படிந்து நடக்கின்ற மக்கள் எப்போதும் இந்தப் பூமியிலே கால் பதித்து, கால் ஊன்றி, உறுதியாய் நடக்கின்ற மக்களுடைய பார்வையிலே பைத்தியமாய்த் தென்படுவார்கள் என்று பவுல் கூறுகின்றார். “சிலுவையைப்பற்றிய உபதேசம் பைத்தியமாய் இருக்கிறது. ஆனால் அவர்கள் சிலுவைக்குப் பகைவர்கள். இது உங்களுக்கு அநேகந்தரம், அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுதும் கண்ணீரோடும் சொல்கிறேன்.”
“அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.” அவர்களால் ஆவிக்குரிய, பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய வண்ணம் சிந்திக்க முடியவில்லை. அவர்களுடைய மனம் அப்படிப் பயிற்றுவிக்கப்படவில்லை.
அவர்களுக்குமுன்பாக ஒன்றை வைத்தால் ஒரு பூமிக்குரிய lens-ஐ வைத்து மட்டும்தான் அவர்களால் அதை மதிப்பிட முடிகிறதேதவிர, கிறிஸ்துவில், பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய ஒரு பார்வையோடு, கண்ணோட்டத்தோடு, மனப்பாங்கோடு அவைகளை மதிப்பிடுவதற்கு அவர்களால் முடியவில்லை. அதைத்தான் பவுல் கூறுகிறார்.
பூமிக்கடுத்தவைகள் என்றால் இயற்கையான விதத்தில்தான் அவர்கள் சிந்திக்கின்றார்கள், எண்ணுகின்றார்கள். அவரகளுடைய முடிவு அழிவு. அவர்கள் எதை வழிபடுகின்றார்கள்? வயிறு என்றால் இந்தப் பூமியிலே கிடைக்கின்ற இன்பங்களைத்தான் அவர்கள் தேவன் அல்லது முடிவான ஆசீர்வாதம் என்று கருதுகின்றார்கள். அவர்கள் மகிமை என்று கருதுவதெல்லாம் ஆவிக்குரிய, பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய மதிப்பீட்டிலே, கண்ணோட்டத்திலே, பார்வையிலே இலச்சை, வெட்கக்கேடாய் ஆக முடியும்.
“நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.”
இதைச் சொல்லிவிட்டுத்தான், “அவர்கள் பூமிக்குரிய மனப்பாங்கு உள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் நம்முடைய குடியுரிமை பரத்தில் இருக்கிறது, நித்தியத்தில் இருக்கிறது. ஆகவே, நாம் ஆவிக்குரிய, பரத்துக்குரிய, நித்தியத்துக்குரிய மனப்பாங்கும், பார்வையும், மதிப்பிடும் உள்ளவர்களாக இருக்கின்றோம்,” என்று பவுல் கூறுகிறார்.
ஒரு நாளிலே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரத்திலிருந்து வருவார். அவர் நம்முடைய மனப்பாங்கையும், நம்முடைய பார்வையையும், நம்முடைய மதிப்பீட்டையும் அவர் பார்ப்பார். “அது சரியானது என்று,” அவர் நிரூபிப்பார்.
எல்லாச் சூழ்நிலைகளிலும் கிறிஸ்துவால் வாழ்தல்
இப்படிப்பட்ட மனப்பாங்கும், பார்வையும் உள்ள பவுலைப் போன்றவர்கள்தான் பிலிப்பியர் நான்காம் அதிகாரத்திற்கு வரும்போது பூமியின் எல்லாக் குறைச்சலிலும் மகிமையின் நிறைவால் வாழ முடியும்.
பிலிப்பியர் நான்காம் அதிகாரம் 11 முதல் 13 ஆம் வசனம், அங்கே தெரியும். “நான் எல்லாக் குறைச்சலிலும் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்டேன். எந்த நிலைமையில் இருந்தாலும் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்டேன். ஏனென்றால் என்னுடைய சிந்தை வெறுமனே இயற்கையான பார்வை அல்ல. அது ஆவியானவர் எனக்குள் உருவாக்கியிருக்கிற ஆவிக்குரிய பார்வை. தாழ்ந்திருக்கத் தெரியும், வாழ்ந்திருக்கத் தெரியும், எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாய் இருக்கவும், பட்டினியாய் இருக்கவும், பரிபூரணம் அடையவும், குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.”
அப்படிப்பட்ட மனிதர்கள்தான், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. I have strength for all things through him who strengthens me” என்று சொல்ல முடியும்.
இது ஆவிக்குரியவனுடைய பார்வை, ஆவிக்குரியவனுடைய கண்ணோட்டம், ஆவிக்குரியவனுடைய மதிப்பீடு.
வெறுமனே இயற்கையான பார்வையும், இயற்கையான நன்மைகளும், இயற்கையான செல்வங்களும், இயற்கையான வளங்களும்தான் நம்முடைய கண்ணில் தென்படுகிறதென்றால் நாம் சோர்வு அடைவோம். ஆனால் அவைகளைத் தாண்டி பரத்திற்கும், நித்தியத்திற்கும் உரிய நன்மைகளும், செல்வங்களும், வளங்களும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ளன.
புறம்பான மனிதன் தேய்ந்தாலும் உள்ளான மனிதன் புதிதாகிறான்
ஆகவே, நாங்கள் சோர்வு அடைவதில்லை. எங்கள் புறம்பான மனிதனானது அழிந்தும், தேய்ந்தும், உள்ளான மனிதனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.
நான் இதை ரொம்ப geometrically, புறம்பான மனிதன் என்றால் என்ன, உள்ளான மனிதன் என்றால் என்ன என்று வேறுபடுத்திக் காட்ட விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை புறம்பான மனிதன் என்றால் இயற்கையான மனிதன் அழிந்தும், இயற்கையான மனிதனைப் பொறுத்தவரை நாம் துன்புறுகின்றோம், பாடுபடுகின்றோம், நமக்குப் போராட்டங்கள் உண்டு.
பவுல் இதே இரண்டு கொரிந்தியரில், “உள்ளே பயங்களும், வெளியே போராட்டங்களும் உண்டு,” என்று சொல்லுகிறார். “பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக மரணம் வருமட்டும் எங்களுக்குள் நிச்சயித்திருந்தோம்” என்கின்ற சூழ்நிலைகள் உண்டு. அதனுடைய விளைவு, இயற்கையான மனிதன் அழிகின்றான். உண்மைதான். ஆனால் நம்முடைய ஆவிக்குரிய மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறான்.
“மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.”
தேவ மக்களுக்கான வாக்குறுதி, ஓ, எப்படியாவது தேவன் இவைகளெல்லாம் விடுவித்து, இந்தப் பூமியிலே நமக்கு உடலிலே நல்ல பலத்தையும், நலத்தையும், நம்முடைய பைகளில் நிறைய பணத்தையும், செல்வத்தையும் தந்துவிடுவார் என்பதல்ல வாக்குறுதி.
தேவன் அவைகளைத் தரலாம், அது கூடலாம், குறையலாம், வளரலாம், தேயலாம். ஆனால் உண்மையான செல்வமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர் நமக்குள்ளே உருவாக்குகிறார். காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
முடிவுரை: மறைவானவை, ஆனால் மெய்யானவை
ஆகவே, அருமையான பரிசுத்தவான்களே, ஆவிக்குரிய மனிதனுடைய ஆசீர்வாதங்கள் மறைவானவைகளாய்த் தோன்றலாம். ஆனால் அவைகள் மெய்யானவைகள். பரத்துக்குரியவைகள், நித்தியத்துக்குரியவைகள், நிலையானவைகள்.
முதலாவது நாம் பார்த்தோம், தேவனுடைய நோக்கம், தேவனுடைய அழைப்பு, தம்முடைய மக்களை ஆவிக்குரியவர்களாய் மாற்றுவது. வெறுமனே இயற்கையான படைப்பாக, ஒரு இயற்கையான ஜீவனால் அவர்களை வாழ விட்டுவிடுவதில்லை. மாறாக, பரத்துக்குரிய ஜீவனால், நித்திய ஜீவனால் அவர்களை வாழச் செய்வது.
இரண்டாவது நாம் பார்த்தோம், ஆவியானவர் அப்படிப்பட்ட புதுப்படைப்பாக, கிறிஸ்துவில் உள்ள நித்திய ஜீவனைக்கொண்டு, தெய்வீக ஜீவனைக்கொண்டு, உயிர்த்தெழுந்த ஜீவனைக்கொண்டு நம்மை ஒரு படைப்பாக மாற்றுகின்றார். அந்தப் பரத்திற்கும், நித்தியத்திற்கும் உரிய நன்மைகளின் முதற்கனிகளை ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையிலே கொண்டுவந்து மெய்ப்படுத்துகின்றார்.
மூன்றாவது பார்த்தோம், தேவனுடைய மக்கள் இன்று இந்தப் பூமியிலே வாழ்கின்ற, இந்த காலத்தில் வாழ்கின்ற, வாழ்க்கையிலே ஆவிக்குரிய உடலும், ஆவிக்குரிய மனமும், ஆவிக்குரிய உள்ளமைப்பும் உள்ளவர்களாய் மாற வேண்டும்.
நான்காவது பார்த்தோம், ஆவிக்குரிய நடையிலே நாம் ஒரு விலைக்கிரயம் செலுத்துகின்றோம். அது பூமியிலே நாம் கால்பதித்திருக்கின்ற நம்முடைய பதிப்பு, நம்முடைய ஊன்றுதல் எல்லாம் பலவீனப்படுகிறது. பூமியிலே நமக்கு, ஓ, இன்னும் உறுதியாகக் கால்பதிக்க, கால் ஊன்ற, பற்றிக்கொள்ள முடியவில்லை என்கின்ற அச்சமும், ஐயமும் பல வேளைகளில் உண்டாகின்றது.
ஆனால் ஆவியானவர் நடத்துகின்ற அந்த மெல்லிய, ஆனால் துல்லியமான ஓட்டத்தை நாம் பின்பற்றும்போது, அது நம்முடைய வாழ்க்கையின் மரணச் சூழலை ஜீவனுக்குரியவளாய் மாற்ற வல்லது. ஆவியானவர் வல்லமையும், உண்மையும் உள்ளவராய் இருக்கிறார்.