Preloader
சாட்சியின் கூடாரம்
15 Oct 2026 : என் உறவுகள் மேலும் வாசிக்க
3 Oct 2026 : ஆரம்பமும், முடிவும் மேலும் வாசிக்க
21 Sep 2026 : வனாந்தர வளங்கள் மேலும் வாசிக்க

காணொளி

கிறிஸ்தவ வாழ்க்கையின் இலக்கு கிறிஸ்துவைப்பற்றிய அறிவோடு நின்றுவிடுவது அல்ல; கிறிஸ்துவால் வாழ்தல், கிறிஸ்துவால் நிரப்பப்படுதல், 

கிறிஸ்துவைப் பரப்புதல். கிறிஸ்து nam ஜீவனாகி, நம் எண்ணம், சொல், செயல், உறவு, ஊழியம் ஆகிய அனைத்திலும் வெளிப்பட வேண்டும். நம்மில் கிறிஸ்து பெருகும்போது, நம் வாழ்க்கையின்மூலம் அவர் பிறருக்கும் பரவுகிறார். 

கிறிஸ்துவால் வாழ்வோம் — கிறிஸ்துவால் நிரப்பப்படுவோம் — கிறிஸ்துவைப் பரப்புவோம். இதுவே நாம் தொடரும் இலக்கு. 

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்— பிலிப்பியர் 3:14

உரை

பரம அழைப்பின் இலக்கை நோக்கி

“நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்”

ஜெபம்

நாம் ஜெபிப்போம்.

எங்கள் ஆண்டவராகிய இயேசுவே, நீர் எங்களை ஓர் இலக்கை நோக்கி ஓடிவருமாறு அழைத்திருக்கிறீர். இந்தப் பரம அழைப்பிற்காய் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்தப் பரம அழைப்புக்கு எங்களை நீர் தகுதியுள்ளவர்களாக, பாத்திரர்களாக, கண்ட உம் கிருபைக்காய் நன்றி செலுத்துகின்றோம். எங்களுக்குமுன்பாக உள்ள இந்தப் பரம அழைப்பிற்கு நீர் ஒரு பரிசுப்பொருளை வைத்திருப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், ஆண்டவரே. இதை ஆசையாய் நோக்கி ஓடிவருவதற்கு எங்கள் இருதயங்களைப் பரிசுத்த ஆவியானவர், வசீகரிப்பீராக; ஆதாயம் பண்ணிக்கொள்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், பிதாவே. ஆமென்.

மீள்பார்வையும் முன்பார்வையும்

ஒரு வருடத்தின் கடைசி மாதத்திற்கு நாம் வந்திருக்கிறோம். தேவனுடைய மக்களுக்குத் திருவிழாக்கள் உண்டா? இந்தக் கேள்வி சிலருக்குப் பொருத்தமில்லாத கேள்வியாக இருக்கும். ஆனால் பழைய ஏற்பாட்டிலே தேவன் தம்முடைய மக்களுக்குத் திருவிழாக்களை ஏற்படுத்திக் கொடுத்தார். பஸ்கா ஒரு திருவிழா. கூடாரப் பண்டிகை ஒரு திருவிழா. இப்படிப் பல திருவிழாக்களை ஏற்படுத்தினார்.

அதனால் வருடத்திற்கு ஒரு திருவிழா இருக்க வேண்டுமா என்பதல்ல என் அக்கறை. நம்முடைய நாட்காட்டியில் சில மாதங்களையும், வாரங்களையும், நாட்களையும் தேவன் முக்கியப்படுத்துகிறார். ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடத்திற்கு நாம் செல்லும்போது, தேவன் நம்மிடத்தில் சில அசைவுகளையும், இயக்கங்களையும், செயல்பாடுகளையும் எதிர்பார்க்கிறார்.

முடிந்துபோகிற இந்த வருடத்தை நாம் பின்னோக்கிப் பார்த்து, அதை மீள்பார்வை செய்ய வேண்டும் — Review. வரப்போகின்ற வருடத்தை முன்னோக்கிப் பார்த்து, நாம் முன்பார்வையிட வேண்டும் — Preview.

இதை நான் இயற்கையாக இந்தப் பூமியிலே தொழில் நடத்துகின்ற மேலாளர்களுடைய முறையின்படி சொல்கிறேனா அல்லது வேதமும் இப்படியேதான் சொல்லுகிறதா?

இஸ்ரவேல் மக்கள் தங்கள் பயணத்தின் கடந்த காலத்தை நோக்கிப் பார்த்து மீள்பார்வை செய்வதும், வரும் காலத்தை முன்னோக்கிப் பார்த்து முன்பார்வை செய்வதும்தான் உபாகமம். யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் ஆகிய மூன்று புத்தகங்களில் இல்லாத புதிதான ஒன்றும் உபாகமத்தில் இல்லை.

ஆகவே, தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் இதை நன்றாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்:

Periodically we have to pause and review the past and take a preview of what lies ahead of us. Any community, any family, any individual who fails to take a review of what has gone by in the past year and what lies ahead of us will not prosper.

இப்படிப்பட்ட மீள்பார்வையும் முன்பார்வையும் இல்லாத ஒரு தனிமனிதனோ, ஒரு குடும்பமோ, ஒரு சமுதாயமோ வளர்ச்சியும் செழிப்பும் அடைவது சாத்தியம் இல்லை.

தேவன் ஒவ்வொருவருக்கும் வைத்திருக்கிற அழைப்பு

நாம் வாசித்த பகுதியிலே பவுல் கூறுகிறார்: தேவன் நமக்கு ஒரு இலக்கை வைத்திருக்கிறார். கடந்தமுறை நான் உங்களோடு பேசும்போது சொன்னேன், தேவன் நமக்கு ஒரு அழைப்பையும் வைத்திருக்கிறார். அழைப்பு இல்லாத தேவனுடைய பிள்ளை என்று ஒருவரும் இல்லை.

“இல்லை, நான் குடும்பத்திலே என்னுடைய இரண்டு பிள்ளைகளை மட்டும் வளர்த்துக்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் ஒரு அழைப்பா? ஒரு அப்போஸ்தலனைப்போல கப்பல்களிலும், ஆகாய விமானங்களிலும் போய் நற்செய்தி அறிவித்தால் அது ஒரு அழைப்பு,” என்று சிலர் நினைக்கலாம்.

இரண்டு பிள்ளைகளை வளர்ப்பது அழைப்பா என்றால், தேவனுடைய பார்வையில் இதுவும் அழைப்புதான்; அதுவும் அழைப்புதான்.

நான் உங்களை ஊக்குவிப்பதற்காக மட்டுமே இப்படிச் சொல்கிறேனா அல்லது தேவனுடைய வார்த்தையும் அப்படியே சொல்லுகிறதா? தேவனுடைய வார்த்தையும் அப்படியே சொல்லுகிறது.  ஆம், எங்கே அப்படிச் சொல்லுகிறது? படையில் போரிடுகிறவனுக்கு என்ன பங்கோ, ரஸ்துக்களைக் காத்துக்கொண்டு பாசறையிலே இருக்கிறவனுக்கும் அதே பங்குதான். இதைத் தாவீது தன் நாட்களிலே ஒரு சட்டமாக இயற்றினான்.

வேலைக்குப் போகின்ற தகப்பனுக்கு எவ்வளவு பங்கோ, வீட்டில் இருக்கின்ற தாய்க்கும் அதே பங்கு; சற்றும் குறைந்த பங்கு இல்லை.

ஆகவே, தேவனுடைய மக்களாகிய நாம், “எனக்கெல்லாம் ஒரு அழைப்பு இருக்கிறதா?” என்று அசட்டையாகவோ, அலட்சியமாகவோ இருக்கக்கூடாது.

பள்ளியில் படிக்கிற நீங்கள், “இந்த அழைப்பு வரும்போது நாங்கள் அதைப்பற்றி யோசிப்போம்,” என்று நினைக்கக்கூடாது. தேவனுடைய அழைப்பு நீங்கள் தாயின் கருவிலே உருவாகும்முன் உங்களுக்காக வைக்கப்பட்டுவிட்டது. ஏற்ற காலத்திலே நீங்கள் அந்த அழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; இனங்காண வேண்டும்; அடையாளம் காண வேண்டும்.

அந்த அழைப்பை நிறைவேற்றுவது மட்டுமே நம்முடைய வாழ்க்கையின் இலக்காக இருக்க வேண்டும். தொழில் என்பது இடையில் வருகிறது. தொழில் நம்முடைய வாழ்க்கையின் இலக்கு அல்ல. அழைப்பே நம்முடைய வாழ்க்கையின் இலக்கு.

தேவனுடைய மக்கள் எல்லாரும், “எனக்கெல்லாம் அழைப்பில்லை, எனக்கெல்லாம் அழைப்பில்லை, எனக்கெல்லாம் அழைப்பில்லை” என்ற மனப்பாங்கிற்கு பிசாசு நம்மைக் கொண்டுவந்துவிட்டால், இந்தப் பூமியிலே தேவனுடைய செயற்திட்டமும், தேவனுடைய நோக்கமும், தேவனுடைய திட்டமும் தகர்க்கப்படும்.

இன்றைக்கு அந்தத் தந்திரத்தை அவன் செய்துகொண்டிருக்கிறான். “ஒருவேளை ஒன்றிரண்டு சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு இருக்கலாம்; நாம் இதைச் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி,” என்ற மனப்பாங்கு பலருக்கு வந்துவிடுகிறது.

இலக்கை மறுகுவியம் செய்தல் — Re-focus

ஆகவே, வருடந்தோறும் நம்முடைய இலக்கை நாம் மறுகுவியம் செய்ய வேண்டும் — Re-focus. ஒரு கருவியை நீங்கள் குவிமையத்திற்குச் சரிசெய்தாலும், ஒரு சில நாட்கள் கழித்து அது குவிமையத்தை இழந்துவிடும்.

Periodically we have to re-focus.

வெற்றி என்பது நாம் எவ்வளவு அறிவாளி என்பதைப் பொறுத்ததல்ல. அது சில ஒழுக்கங்களையும், விதிகளையும் பொறுத்தது.

ஒரு வருடத்திலோ, ஒரு மாதத்திலோ, ஒரு வாரத்திலோ, ஒரு சில நாட்களிலோ நாம் நம்முடைய இலக்கைப்பற்றிய குவிமையத்தை — focus-ஐ — இழந்துவிடுவோம்.

ஆகவே, சீரான இடைவெளிகளிலே:

Periodically we have to take a break. Maybe every week, maybe every month, maybe every year, and spend time quietly to re-focus on the ultimate goal. What is my calling? Am I travelling in a straight way toward the goal? Or am I straying to the left or right?

ஆம், இந்தப் பூமியிலேயே மிகத் தீவிரமான படை தேவனுடைய சபைதான். தேவனுடைய மக்களுக்குப் பல வேளைகளில் புரிவதில்லை. நீ ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டபோது, அவருடைய படையில் போர்வீரனாகச் சேர்ந்துவிட்டாய். உயிரோடு தாய்நாட்டிற்குத் திரும்புவோமா என்று உத்தரவாதம் இல்லை.

“முதலிலேயே இதைச் சொல்லியிருந்தால் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன்,” என்று இப்போது சிலர் சொல்லக்கூடும். அவர் முதலிலேயே, “ஒருவன் செல்லும் செலவைக் கணக்கைப் பார்க்கமாட்டானோ!” என்று சொல்லுகிறார். அந்தச் செய்திக்கு நாம் வரவில்லை.

நமக்கு என்ன உண்டு? இலக்கு. அந்த இலக்கைவிட்டு நாம் இடதுபுறம், வலதுபுறம் சாயக்கூடாது. ஆனால் விழுவதற்கு there will be a lot of temptation.

“இன்றைக்கு நேர்கோட்டில் போகலாம். நாளைக்கு நேர்கோட்டில் போகலாம். அடுத்தநாள் நேர்கோட்டில் போகலாம். வாழ்க்கை எல்லாம் நேர்கோட்டிலேயே போனால் வாழ்க்கை bore அடித்துவிடாதா? அலுப்புத் தட்டிவிடாதா? சலிப்புத் தட்டிவிடாதா? கொஞ்சம் இடது பக்கமும், கொஞ்சம் வலது பக்கமும், அப்படி, இப்படி சாய்ந்து சாய்ந்து போனால்தான் வாழ்க்கையில் என்ன இருக்கும்? சுவாரசியம் இருக்கும்,” என்று சிலர் நினைக்கலாம்.

நம்முடைய வாழ்க்கையின் முடிவுக்கு, இறுதிக் கட்டத்திற்கு, வரும்போது நாம் திருப்தியோடு, மகிழ்ச்சியோடு, “நான் கர்த்தரிடத்தில் போகிறேன்” என்று அறிவிப்போமா? அல்லது, “என்னுடைய வாழ்க்கையை நான் வீணாக்கிவிட்டேன்” என்று போவோமா என்பது, தேவன் நமக்கு முன்பாக வைத்த இலக்கையும், அந்த அழைப்பை நாம் எவ்வளவு உத்தமத்தோடும், உண்மையோடும் நிறைவேற்றினோம் என்பதையும் பொறுத்துத்தான் இருக்கும்.

நம்மை நாமே அளந்து பார்க்க வேண்டும்

ஆனால் நீங்கள் வாழ்க்கையின் முடிவுவரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பொதுவாக தேவனுடைய இலக்கையும் அழைப்பையும் குறித்து நாம் உதாசீனம் பண்ணினால், அசட்டை பண்ணினால், அலட்சியம் பண்ணினால், கொஞ்ச நாட்களிலேயே நம்முடைய இருதயத்தில் ஒரு சமாதானமும், ஒரு நிறைவும், ஒரு திருப்தியும் இருக்காது.

ஆகவே இந்த நாட்களிலே, இந்தச் செய்தியின்போது மட்டுமல்ல, நம்மை அளந்து பார்க்கும்போது நமக்கு என்ன ஏற்பட வேண்டும்?

“What a big boy am I?” என்ற உணர்வு ஏற்பட வேண்டுமா? அல்லது, “ஆ, நான் எவ்வளவு குறைவுள்ளவனாய் இருக்கிறேன்!” என்ற உணர்வு ஏற்பட வேண்டுமா?

அளந்து பார்க்க வேண்டும்.

“நான் என்னை அளந்தே பார்க்க மாட்டேன். ஏன்? அளந்து பார்த்தால் என் குறையெல்லாம் எனக்குத் தெரிந்துவிடும். அதனால் நல்ல அனுபவம் உள்ளவர்களிடத்தில் நாம் ஒருநாளும் போகக்கூடாது,” என்று இருக்கக்கூடாது.

நாம் நம்மையும் அளக்க வேண்டும். தேவைப்படும்போது மற்றவர்களையும் அளக்க வேண்டும். அளக்கும்போது நமக்கு ஒரு மனந்திரும்புதல் இருக்கும்.

“ஆண்டவரே, நான் என்னை அளந்துபார்க்கும்போது, என்னை மதிப்பிடும்போது, என்னை நான் தீர்ப்பிடும்போது, எவ்வளவு குறைவுள்ளவனாய்க் காணப்படுகிறேன்! நீர் கொடுத்த தாலந்துகளையும், வளங்களையும், நேரத்தையும் நான் எவ்வளவு இடதுபுறம், வலதுபுறம், கோணல் மாணலாகச் செலவிட்டுவிட்டேன்!” என்கிற மனந்திரும்புதல் நமக்கு ஏற்பட வேண்டும்.

நான்கு மடிப்புகளாலான ஒரே இலக்கு — Four-fold Goal

நம்முடைய இலக்கு என்ன என்பதை நான் ஒருமுறை உங்களுக்கு மீள்பார்வை செய்ய விரும்புகிறேன். நான்கு குறிப்புகளை, “இது நம் இலக்கு” என்று சொல்ல விரும்புகிறேன்.

அது நான்கு இலக்குகள் அல்ல. நமக்கு ஒரே இலக்குதான் — நான்கு மடிப்புகளாலான இலக்கு. நீங்கள் அம்பு எய்தால், அது இந்த நான்கு இலக்குகளையும் துளைத்துக்கொண்டு போகும். அப்படிப்பட்ட நான்கு மடிப்பு இலக்கு. Four-fold goal என்று சொல்லலாம்.

ஆக, நான்கு இலக்குகள் அல்ல; நான்கு மடிப்புகள்.

1. கிறிஸ்துவால் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்

முதலாவது, கிறிஸ்துவால் வாழ்வது.

இது தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது, அவர் முதலாவது நமக்குக் கற்றுக்கொடுப்பது: இந்த உலக வாழ்க்கையை நாம் கிறிஸ்துவால் வாழ வேண்டும்.

அதன் பொருள் என்னவென்றால், பல வேளைகளிலே தேவன் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு வளங்களைக் குறைக்கிறார், சுருக்குகிறார், மறுக்கிறார்.

உபாகமம் 8:2–3

“உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.”

அவர் உன்னைச் சிறுமைப்படுத்துகிறார்.

நம்முடைய வாழ்க்கையிலே நாம் விரும்புகிற அளவுக்கு, அல்லது விரும்புகின்ற வளங்கள் இல்லாமல் போகலாம். தேவன் நம்முடைய வளங்களைக் குறைப்பார்.

இதைக் கேட்கும்போது, “இது நற்செய்தி மாதிரியே தோன்றவில்லையே” என்றால், நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன்.

இந்தப் பழைய படைப்பிலே வளங்கள் குறைவாகத்தான் இருக்கும். என்றைக்கு தேவன், மனிதன் பாவம் செய்தபோது, “இனிமேல் இந்த நிலத்திலிருந்து முள்ளும், குருக்குகளும் முளைக்கும்” என்று சொன்னாரோ, அன்றைக்கு நிலத்தின் ஒரு பகுதி பாழாகிவிட்டது.

முள்ளும், குருக்குகளும் முளைக்காவிட்டால் அந்த நிலத்திலிருந்து எவ்வளவு வளங்கள் கிடைத்திருக்கும்? முள்ளும், குருக்கும் நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துவிட்டதால் வளம் குறைந்ததா, குறையவில்லையா? குறைந்தது.

வீழ்ச்சியின் விளைவான பழைய படைப்பிலே, வளங்கள் குறைக்கப்பட்டன. இது மனிதனுடைய வீழ்ச்சி. தேவன் சுருக்குகிறார். சில சமயங்களில் மறுக்கவும் கூடச் செய்வார்.

சோதனைகளின் நடுவில் தேவனுடைய உண்மை

அதிகபட்சத்தில் அதனுடைய பொருள் என்ன? ஏன் தேவன் குறைக்கிறார் என்றால், ஒன்று, அது பழைய படைப்பின் பாடுகள்.

1 கொரிந்தியர் 10:13 நமக்குத் தெரியும்.

“மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.”

“வளங்கள் குறைக்கப்படுகின்றன, சுருக்கப்படுகின்றன, மறுக்கப்படுகின்றன” என்று சொல்லும்போது, அதை மனிதர்கள் “வாழ்க்கையின் துயரங்கள், கஷ்டங்கள்” என்று சொல்வார்கள்.

“ரொம்பக் கஷ்டமாக இருந்தது வாழ்க்கை.”

அவர்கள் “கஷ்டம்” என்று சொல்வதை நாம் அழகாக, “தேவன் நம்முடைய வளங்களைக் குறைக்கிறார், சுருக்குகிறார்; சில வேளைகளில் மறுக்கவும் செய்கிறார்” என்று சொல்லுகிறோம்.

இதை இந்த உலக மக்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. “எல்லாச் சூழ்நிலைகளிலும் என்னுடைய வளங்கள் சுருக்கப்பட்டால்கூட, நான் திருப்தியாய் வாழ கர்த்தரால் பயிற்றுவிக்கப்பட்டேன், கற்பிக்கப்பட்டேன், சிட்சிக்கப்பட்டேன்,” என்று பவுல் கூறுகிறார்.

குறைவுகளின் வழியாகப் பயிற்சி

நான் கல்லூரியில் படித்த நாட்களில் semester fees, mess fees எல்லாம் பெரும்பாலும் semester முடிந்தபிறகுதான் கட்டினேன்.  கல்லூரி முதல்வரின் அலுவலகத்தின் வாசலிலே, examமுக்கு முந்தைய நாளிலே எல்லாரும் படித்துக்கொண்டிருப்பார்கள். நான் Hall ticket — No Objection. Issue him hall ticket இதற்காக அலைந்துகொண்டிருப்பேன். 

Hall ticket தந்திருக்க மாட்டார்கள். அதை வாங்குவதற்காக நான் கல்லூரி முதல்வரின் அறையில் காத்திருப்பேன். எங்கள் மரியாதைக்குரிய அன்புள்ள Principal. ரொம்பக் கண்டிப்பானவரும்கூட.

அவர் “நீ கடந்தமுறையும் வந்திருந்தாய் அல்லவா?” என்பார். நான் , “ஆம்,” என்பேன்.

தேவன் நம்மைப் பயிற்றுவிப்பார், கற்பிப்பார், சிட்சிப்பார். மிஞ்சிப் போனால் என்ன நடக்கும்? Hall ticket தர மாட்டார்கள். அப்படி ஒன்று நடக்கவே நடக்காது. எப்படியும் என்ன பண்ணுவார்கள்? Fees கட்டாதவனை காக்க வைத்து, கடைசியில் என்ன பண்ணிவிடுவார்கள்?

இதன் நடுவிலும் தேவன் என்ன செய்கிறார்? ஒரு போக்கை வைத்துவிட்டார்.

ஆதனால் ரொம்பவும் தொந்தரவு செய்யக்கூடாது. “ஓ, அது இல்லை, இது இல்லை! இப்படியென்றால் குடும்ப வாழ்க்கை!”

இதை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்கிறேன். எல்லாப் பெற்றோர்களும் இப்படித்தான். இந்தத் தலைமுறையிலே தமிழ்நாட்டிலே வாழ்கின்ற பெரும்பாலான பெற்றோர்கள், பிள்ளைகளுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.

நீங்கள் பாக்கியசாலிகள். நான் முதலாவது செருப்புப் போட்டது ஏழாம் வகுப்பு படிக்கும்போது. “இது என்ன அவ்வளவு பெரிய matter-ஆ?” என்று நீ கேட்கலாம். ஆம்.

நான் ஆறாம் வகுப்பு முடித்தபிறகு, கோடை விடுமுறையிலே என் அண்ணன் அவருடைய நண்பர் ஒருவருடைய செருப்புக் கடையில் என்னைச் சேர்த்துவிட்டார். ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அங்கு வந்து வேலை செய்தேன். அதற்கு எனக்குக் கிடைத்த சம்பளம் A pair of rubber slippers. But I was so delighted.

நீங்கள் யோசித்துப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையிலே கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறாரா, இல்லையா? ஆம். சிறுவயது முதற்கொண்டு ஆசீர்வதித்தார்.

உங்களுடைய பெற்றோர்களைக் கேட்டுப் பாருங்கள். யாருமே அவர்களை, “சாப்பிட்டாயா, சாப்பிடலையா? தூங்கினாயா தூங்கவில்லையா” என்று கேட்டிருக்கவே மாட்டார்கள். காலையிலே போவார்கள். இரவில் வீட்டுக்கு வருவார்கள்.

குறைவுகளில் வாழ கிறிஸ்து நம்மைப் பலப்படுத்துகிறார். பிலிப்பியர் 4:13-ஐ நீங்கள் வாசித்துப் பார்க்கலாம்.

ஆகவே, நம்முடைய முதல் இலக்கு: கிறிஸ்துவால் வாழ நாம் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

2. கிறிஸ்து நமக்குள் பெருக வேண்டும்

அடுத்த குறிப்பு மிக முக்கியமான குறிப்பு.

சங்கீதம் 4 — கடைசி இரண்டு வசனங்கள்

சங்கீதம் நான்காம் அதிகாரம், கடைசி இரண்டு வசனங்களை நாம் வேதத்தைத் திறந்து வாசிப்போம்:

“அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.”

அது தானியமாக இருக்கலாம், திராட்சையாக இருக்கலாம், செருப்பாக இருக்கலாம், சைக்கிளாக இருக்கலாம்.

என் சைக்கிள் கதையை நான் சொல்ல வேண்டும். ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்பது ரொம்ப நாளாக என்னுடைய இலட்சியம், என்னுடைய கனவு. ஏனென்றால் காலையில் நான்கு கிலோமீட்டர் நடக்க வேண்டும். ஆனால் அதுவும் நல்லது. தேவன் எப்படிப்பட்ட உடற்பயிற்சி தந்தார் என்று பாருங்கள்.

நான் பத்தாம் வகுப்பிலே State Second Rank வாங்கினதால் எனக்குப் பல பரிசுகள் கிடைத்தன. அந்தப் பரிசுத் தொகையை என் மாமாவிடம் கொடுத்தேன்; அவர் ஒரு second-hand cycle எனக்கு வாங்கிக் கொடுத்தார். அல்லேலூயா. ஆமென்.

Watch கட்ட வேண்டும் என்று ரொம்ப ஆசை. பத்தாம் வகுப்பு  முடித்தபிறகு HMT-யிலே அதைப் பரிசாகக் கொடுத்தார்கள். தேவன் தருவார்.

இதையெல்லாம் உங்களுக்கு எதற்காகச் சொல்கிறோம்?

“அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.”

அவர்களுக்கெல்லாம் இல்லாத சமாதானம் தேவனுடைய மக்களுக்கு இருக்கும்.

தொடங்கப்பட்ட, ஆனால் இன்னும் நிறைவுறாத புதிய படைப்பு

இரண்டாவது, கிறிஸ்து பெருகுகிறார். இது நம்முடைய இலக்கு.

நாம் புதிய படைப்பாக இருக்கிறோம். 2 கொரிந்தியர் 5:17 நமக்குத் தெரியும்:

“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.”

ஆனபோதிலும், நாம் தொடங்கப்பட்ட, ஆனால் இன்னும் நிறைவுறாத புதிய படைப்பாக இருக்கிறோம்.

திருவெளிப்பாடு 21:5-ல் பார்ப்போம்:

“சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்.”

“இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” என்று திருவெளிப்பாடு 21ஆம் அதிகாரத்தில் தேவன் சொல்கிறார்.

தேவன் எப்போது எல்லாவற்றையும் புதிதாக்கினார்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதலில் எல்லாவற்றையும் புதிதாக்கினாரா? அல்லது புதிய வானம், புதிய பூமி வரும்போதுதான் புதிதாக்குகிறாரா?

இரண்டிலுமே.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல்மூலமாகப் புதிய படைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. அவருடைய மகிமையான வருகையிலே அந்தப் புதிய படைப்பு நிறைவுறும்.

ஆகவே, நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருப்பது தொடங்கப்பட்ட, ஆனால் இன்னும் நிறைவுறாத புதிய படைப்பாக இருக்கிறோம். நம்மில் புதிதாக்கப்பட்ட பகுதிகளும் உண்டு; இன்னும் புதிதாக்கப்படாத பழைய பகுதிகளும் உண்டு. இதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

எபேசியர் 4:22–24, கொலோசியர் 3:10:

“அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.”

ஒரு பக்கம் நாம் புதிய மனிதன். இன்னொரு பக்கம் நாம் புதிய மனிதனை அணிந்துகொள்ள வேண்டும். பழைய மனிதனைக் களைந்துபோக்க வேண்டும். புதிய மனிதனை அணிந்துகொள்ள வேண்டும் என்று ஒரு ஆடையை உருவகமாகப் பயன்படுத்துகிறார்.

பழைய மனிதனைக் களைந்துபோடுவது என்பது ஒரு ஆடையைக் களைந்துபோடுவதுபோல. புதிய மனிதனை அணிந்துகொள்வது என்பது ஒரு ஆடையை அணிந்துகொள்வதைப்போல. இதை நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம்.

“நம்மைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாகப் பூரண அறிவின்படி உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்கிறீர்கள்.”

ஆகவே, நம்மில் இன்னும் புதிதாக்கப்படாத பழைய பகுதிகள் உள்ளன.

நாளுக்கு நாள் புதிதாக்கப்படுதல்

நாம் நாள்தோறும் புதிதாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். 2 கொரிந்தியர் 4:16 நமக்குத் தெரியும்:

“ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.”

வளர்சிதை மாற்றம். புறம்பான மனிதன் சிதைகிறான்; உள்ளான மனிதன் வளர்கிறான். இது ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது.

அதன் பொருள் என்ன?

நாம் ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாரமும் புதிதாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் புதிதாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் புதிதாக்கப்பட வேண்டும்.

அது நம்முடைய இருதயத்தின் வாஞ்சையாக இருக்க வேண்டும்.

நாம் புதிதாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோமா, இல்லையா என்பது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குத் தெரியும்.

ஒருவன் இப்படிப்பட்ட ஒரு கதையைச் சொன்னான். Piano வாசிக்கிறவர்கள், அவர்கள் எவ்வளவு பெரிய தேர்ச்சி பெற்ற pianist-ஆக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் அவர்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

“ஒரு நாள் உங்கள் piano-வை நீங்கள் பயிற்சி செய்யவில்லை என்றால் நான் அறிவேன். நான் pianist-ஆக இருந்தால், ஒரு நாள் பயிற்சி செய்யவில்லை என்றால் நான் அறிவேன். இரண்டு நாள் நான் piano-வைப் பயிற்சி செய்யவில்லை என்றால் என்னுடைய மனைவி அறிவாள். மூன்று நாள் நான் piano வாசிப்பதைப் பயிற்சி செய்யவில்லை என்றால் என் வீட்டில் நாய்கூட அதைத் தெரிந்துகொள்ளும்.”

நான் புதிதாகவில்லை என்றால் என் வீட்டு நாய்க்கும்கூட அது தெரியும்.

“பழைய சரக்கு நிறைய இருக்கிறது. இவனுக்கு மனந்திரும்புதல் இல்லை; அதைப்பற்றி ஒரு வருத்தம் இல்லை; அதைப்பற்றி ஒரு வெட்கம் இல்லை; அதைப்பற்றி ஒரு நாணமோ, கூச்சமோ இல்லை” என்று நாய்க்கும்கூட தெரியும். நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.

நம்மிடமிருந்து ஒரு மணம் வீசும். என் சுவையும் மணமும் மாறுகிறது.

கிறிஸ்துவின் சுவையும் மணமும்

அந்த வசனத்தை வாசிப்போம். எரேமியா 48:11; 2 கொரிந்தியர் 2:14.

“மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின்மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை வேறுபடவில்லை.”

ஒவ்வொரு மனிதனுக்கும் சில வண்டல்கள் உண்டு. எங்கள் ஊரிலே இதை “மண்டி” என்போம். Coffee மண்டி.

ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றும்போது கொஞ்சம் வண்டலை நாம் இழந்துவிடுவோம். ஆனால் நம்மை அறியாமல் இன்னும் கொஞ்சம் வண்டல் வரத்தான் செய்யும். பிறகு இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றும்போதுதான் தெரியும், “ஓ, இன்னும் அங்கே என்னதான் இருக்கிறது? வண்டல் இருக்கத்தான் செய்யும்.”

எத்தனை பாத்திரம் நாம் மாற்ற வேண்டியிருக்கும்? நாம் சாகும்வரை பாத்திரம் மாற்ற வேண்டியிருக்கும்.

அப்படி மாற்றப்படும்போதுதான் நம்முடைய சுவையும் மணமும் மாறுகிறது.

அது என்ன சுவை, மணம்? கிறிஸ்துவின் சுவை என்று ஒன்று உண்டு. கிறிஸ்துவின் மணம் என்று ஒன்று உண்டு.

2 கொரிந்தியர் 2:14-லே அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான்:

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.”

நாம் எதுவும் பேசாமல்கூட இருக்கலாம். ஆனாலும் உங்களுடைய classmates-க்கு ஒரு வாசனை வீசும்.

நமக்கு ஒரு மணம் உண்டு. நமக்கு ஒரு சுவை உண்டு.

பேசாமலேயே வெளிப்படும் கிறிஸ்து

2 ராஜாக்கள் 4:8–9. எலிசாவைப்பற்றி அங்கே எழுதியிருக்கிறது.

அவன் பயணம் செய்யும்போது சூனேம் என்ற ஊர் வழியாகப் போகிறான். அந்த ஊர் வழியாகப் போகும்போதெல்லாம், அந்த நாட்களில் hotel இல்லாத காரணத்தினால், ஒரு குடும்பத்திலே அவன் தங்குகிறான். அவர்கள் சாப்பாடு கொடுக்கிறார்கள்.

அவர் ஜெபமும் செய்யவில்லை; பிரசங்கமும் செய்யவில்லை; எந்த அற்புத அடையாளமும் செய்யவில்லை.

அந்தப் பெண் தன்னுடைய கணவனிடம் சொல்லுகிறாள்:

“இப்படி அடிக்கடி நம் வீட்டு வழியாகப் பயணம் செய்து, நம் வீட்டில் ஓய்வெடுத்துச் செல்கிறார் அல்லவா? இவர் ஒரு தேவனுடைய மனிதன் என்று காண்கிறேன்.”

ஒன்றுமே பேசக்கூடாது. ஆனால் அவள் சொல்ல முடியும்.

Francis of Assisi, “Always preach the gospel. If necessary, with words.”

எப்போதுமே நற்செய்தி அறிவியுங்கள். தேவைப்பட்டால் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள் என்று சொல்லுகிறார்.  நாம் வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் நற்செய்தி அறிவிக்க வேண்டும்.

மருத்துவமனையில் வேலை செய்பவர் எப்போதுமே அவர் வாயைத் திறந்து, “இயேசுவை நம்பு, இயேசுவை நம்பு” என்று சொல்ல முடியுமா? சொல்ல முடியாது.

ஆனால் அவருடைய நடை, உடை, பாவனை, போக்கு, வரத்து — அவர்கள் தண்ணீர் கொடுத்தாலும் சரி, உட்கார்ந்தாலும் சரி, எழுந்தாலும் சரி, புசித்தாலும், குடித்தாலும் — அதிலே கிறிஸ்துவின் நறுமணம் இருந்தால் அதைத் தவிர்க்க முடியாது.

கிறிஸ்துவின் குணம் நமக்குள் உருவாக வேண்டும்

நாம் புதிதாக்கப்படும்போது கிறிஸ்துவின் அளவு எனக்குள் பெருகுகிறது. கிறிஸ்துவின் குணம் உருவாக்கப்படுகிறது. அதுதான் மறுரூபமாகுதல். புதிதாக்கப்படுவதும் மறுரூபமாக்கப்படுவதும் ஒன்றுதான். ஏதோ ஒரு விதத்திலே கிறிஸ்துவின் குணம் நமக்குள் உருவாக்கப்பட வேண்டும்.

இது நம்முடைய இலக்கு.

பத்தாண்டுகள் ஆயிற்று, 20 ஆண்டுகள் ஆயிற்று, 30 ஆண்டுகள் ஆயிற்று. கிறிஸ்துவின் குணம் அவனுக்குள் உருவாகவில்லை என்றால் அது பரிதாபம். இதுவரை உருவானதில் நான் மிகவும் திருப்தி அடைந்துவிடுகிறேன் என்றால் அதுவும் பரிதாபம்.

“ஆண்டவரே, இன்னும் எங்களிடமிருந்து உம்மை அறிகிற அறிவின் நறுமணம் கமழவில்லையே!” என்பது நம்முடைய நெஞ்சின் வாஞ்சையாகவும் கதறலாகவும் இருக்க வேண்டும்.

மிக முக்கியமாக, நம்முடைய வாழ்க்கைத் துணையிடத்தில், நம்முடைய பிள்ளைகளிடத்தில். பிள்ளைகளை நாம் சிட்சிக்கிறோம், கற்பிக்கிறோம், பயிற்றுவிக்கிறோம். ஆனாலும் அவர்கள் சாட்சி பகர வேண்டும்:

“My Parents lived Christ before us.” “என்னுடைய பெற்றோர் கிறிஸ்துவின் நறுமணம் கமழும்படி எங்களுக்கு முன் வாழ்ந்தார்கள்.” நாம் சிட்சிக்கின்ற காலத்திலே அவர்கள் துக்கப்படலாம். ஆனால் அந்தக் காலகட்டம் தாண்டி, பறவைகள் கூட்டைவிட்டுப் பறந்துபோகும்போது, அவர்கள் சாட்சி பகர முடிய வேண்டும்.

வாழ்க்கைச் சூழல்களும் மனிதர்களும் கண்ணாடிகள்

2 கொரிந்தியர் 3:18.

நாம் முகத்திரையில்லாத முகத்தினராய், கண்ணாடியைப்போல கர்த்தரைக் கண்டு பிரதிபலிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய வாழ்க்கையிலே கர்த்தரைக் கண்டு பிரதிபலிக்க வேண்டும்.

நம்முடைய மனைவியின் மூலமாக நாம் யார் என்பது கொஞ்சம் பிரதிபலிக்கப்படும். நம்முடைய பிள்ளைகளின் மூலமாக நாம் யார் என்பது பிரதிபலிக்கப்படும். நாம் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மக்கள் மூலமாக நாம் யார் என்பது பிரதிபலிக்கப்படும்.

தேவன் எப்படிப்பட்ட கண்ணாடியைப் பயன்படுத்துவார்? வாழ்க்கைச் சூழல்களையும் நாம் உறவாடுகின்ற மனிதர்களையும்தான் கண்ணாடிகளாகப் பயன்படுத்துவார்.

ஒருவர் சொல்கிறார், “இவர் எப்பவுமே late-ஆகத்தான் வருவார்.” இன்னொருவரும் சொல்கிறார், “இவர் எப்பவுமே late-ஆகத்தான் வருவார்.” இன்னொரு staff சொல்கிறார், “இவர் எப்பவுமே late-ஆகத்தான் வருவார்.” அப்போ உண்மையிலேயே நான் யாருதான்? Late-ஆக வருகிறவர். “அவர்கள் பொய் சொல்கிறார்கள்” என்று சொல்ல முடியாது. I have to admit.

அந்தச் சமூகக் கண்ணாடியை நாம் அற்பமாக நினைக்கக்கூடாது.

“என் குறைகள் என் மனைவிக்கு நிறையத் தெரியும்; ஏனென்றால்35 வருடம் வாழ்ந்திருக்கிறேன் அல்லவா?” என்று அற்பமாக நினைக்கக்கூடாது. 35 வருடம் வாழ்ந்தபிறகு அவர்கள் சொல்வது இப்போது கொஞ்சம் நகைச்சுவையோடு இருக்கலாம். நகைச்சுவை என்ற தேனிற்குப் பின்னால் ஒரு கசப்பான மருந்து இருக்கத்தான் செய்யும். அவர்கள் adjust பண்ணிக்கொள்கிறார்கள் என்பதற்காக நாம் மறுரூபமாகிவிட்டோம் என்ற பொருள் இல்லை.

இன்னும், இன்னும் கிறிஸ்துவின் குணம் உருவாக வேண்டும்.

நன்றாகக் கவனிக்க வேண்டும். இதை அசட்டை பண்ணிவிட்டு, “நான் என்னுடைய இலக்கை நோக்கி ஓடுகிறேன்” என்று சொல்வது அபத்தம்.

இந்த நான்கு மடிப்பு இலக்கிலே இது அடங்கும்:

கிறிஸ்துவால் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்து நமக்குள் பெருக வேண்டும்.
கிறிஸ்துவின் குணம் நமக்குள் உருவாக்கப்பட வேண்டும்.

அது ஏதோ option அல்ல. “முடிந்தால் கிறிஸ்துவின் குணம் உருவாகட்டும்; முடியாவிட்டால் நீங்கள் ஊழியம் செய்யுங்கள்” என்பதல்ல.

கிறிஸ்துவின் குணம் உருவாவதைப்போன்ற அருமையான வாழ்க்கை வேறு எதுவும் இல்லை.

அவர்களெல்லாம் நீதியைத் தங்களுக்கு முன்பாக வைத்திருப்பார்கள். நாம் “நீதி” என்கிற நபரை நமக்கு முன்பாக வைத்திருக்கிறோம். இந்த நபரைப்போன்ற குணத்தை அடைவது வாழ்க்கையின் மாபெரும் இலக்குகளில் ஒன்று; அல்லது அதுவே ஒரே இலக்கு என்றுகூடச்  சொல்வேன்.

“To know Him, and the power of His resurrection, and the fellowship of His sufferings…”

3. கிறிஸ்து நம்மூலமாகப் பரவ வேண்டும்

மூன்றாவது: கிறிஸ்து நம்மூலமாகப் பரவ வேண்டும். கிறிஸ்துவால் நாம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்; கிறிஸ்து நமக்குள் பெருக வேண்டும்.

அது தேவனுடைய இலக்கு.

கிறிஸ்து நம்மூலமாகப் பரவுவதில் நான் இரண்டு உபகுறிப்புகளைக் கூறுகிறேன்:

  1. நாம் பரிசுத்தவான்களோடு கட்டியெழுப்பப்படுவது.
  2. நாம் நற்செய்தியின்மூலமாய் கிறிஸ்துவில் பிள்ளைகளைப் பெற்றெடுப்பது.

இந்த இரண்டு விதத்திலும் கிறிஸ்து நம்மூலமாய்ப் பரவ வேண்டும்.

கொஞ்ச நேரத்திற்குமுன்பாக நான் சொன்னேன்: “கிறிஸ்துவின் குணம் எனக்குள் உருவாக்கப்படவில்லை; ஆனால் ஊழியம் செய்கிறேன்” என்பது எப்படி அபத்தமோ, அதுபோல, “நாங்கள் இரவும் பகலும் கிறிஸ்துவின் குணத்தை எங்களுக்குள் உருவாக்கிக்கொண்டிருப்போம்; ஆனால் கிறிஸ்துவை மற்றவர்களுக்குப் பரவச் செய்வதில், மற்றவர்களுக்குப் பகிர்ந்ததளிப்பதில் எங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை” என்பதும் அபத்தம்.

ஏனென்றால், இந்தப் பூமியிலே கிறிஸ்து மட்டுமே தீர்க்கக்கூடிய சிக்கல்களிலும், பிரச்சனைகளிலும், குழப்பங்களிலும், இருளிலும், கட்டுக்களிலும், சிறையிருப்பிலும் உள்ள மக்களின் எண்ணிக்கை கோடாகோடி.

இந்த உலகம் அவர்களுக்குத் தீர்வைத் தராது.

ஆகவே, முதலாவது நாம் பரிசுத்தவான்களோடு சபையாகக் கட்டியெழுப்பப்படுதல்.

புதிய படைப்பின் தரமும் விரிவும்

இதில் நான் சொல்வது புதிய படைப்பின் தரம்.

நாம் புதிய படைப்பாக இருக்கிறோம் என்று சொன்னேன். ஆனால் பழைய படைப்பின் பகுதிகள் நம்மிடத்தில் உள்ளன. ஆகவே இந்தப் புதிய படைப்பு தரத்திலும் கூட வேண்டும்; விரிவிலும் கூட வேண்டும். இரண்டும் கூட வேண்டும்.

புதிய படைப்பின் தரமும் கூட வேண்டும்.
புதிய படைப்பின் விரிவும் கூட வேண்டும்.

முதலாவது, புதிய படைப்பின் தரம் — பகிர்ந்துறவாடல்.

1 கொரிந்தியர் 14இல், “நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே” என்று வாசிக்கிறோம்.

“நீ எவ்வளவோ காரியங்களைச் செய்கிறாய். ஆனால் மற்றவன் கட்டி எழுப்பப்படுகிறானா? மற்றவனுக்கு அது நன்மை உண்டாக்குகிறதா?” என்று பவுல் கேட்கிறார்.

ஆகவே, பரிசுத்தவான்களோடு சபையாகக் கட்டியெழுப்பப்படுவது என்றால், முதலாவது அவர்களைப்பற்றிய ஒரு கரிசனை, அவர்களைப்பற்றிய அக்கறை.

தேவன் எல்லாரையும் ஒரு சமுதாயத்திலே வைக்கிறார்.

“இல்லை, நான் எந்தச் சமுதாயத்திலும் இல்லை. நான் தனிமனிதன்” என்று சொல்பவரைப்பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை. அது அபத்தம்.

சவுலும் அனனியாவும்

தேவன் தம்முடைய மக்கள் எல்லாரையும் ஒரு சமுதாயத்தில் வைக்கிறார்.

நிரூபணம்: “ஆண்டவரே, நான் என்ன செய்ய நீர் சித்தமாயிருக்கிறீர்?” என்று சவுல் கேட்கிறார்.  தமஸ்குவுக்குப் போகிற வழியிலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சவுலைச் சந்திக்கும்போது அப்படி ஒரு கேள்வி கேட்டார்.

ஆண்டவர் சொல்கிறார்:

“நீ பட்டணத்துக்குப் போ; தமஸ்குவுக்குப் போ. நீ செய்ய வேண்டியது அங்கு உனக்குச் சொல்லப்படும். அனனியா என்று ஒருவன் வருவான்.”

ஏன் நேரடியாகச் சொல்ல முடியாதா? இவ்வளவு அற்புதமாகத்  தோன்றின கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவன் செய்ய வேண்டியது என்னவென்று சொல்ல முடியுமா? சொல்ல முடியும். செய்ய வேண்டியது என்னவென்று சொல்லியிருக்கலாம்.

ஆனாலும் அது நிறைவு பெறாது.

நீ உன்னுடைய சகோதர சகோதரிகளைச் சார்ந்துதான் வாழ வேண்டும். ஒரு சமுதாயமாகத்தான் வாழ வேண்டும் என்பது நாம் ஏதோ தேடிப்பிடித்துக் கண்டுபிடித்த ஒரு சத்தியம் இல்லை.

தேவனுடைய மக்கள் ஒரு சமூக வாழ்க்கையை, ஒரு கூட்டு வாழ்க்கையை, சபை வாழ்க்கையை அற்பமாக நினைக்கிறார்கள்.

That is not an option. “நாங்கள் ஒரு தீவிலே முனிவர்களைப்போல, யோகிகளைப்போல வாழ்வோம். எங்களைத் தேடி மற்றவர்கள் வந்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் பெற்றுக்கொண்டு போவார்கள்,” என்பது புதிய ஏற்பாட்டின் சத்தியம் இல்லை. அது மிகவும் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம்.

ஒரே ஆலிவ் மரத்தில் பங்குறும் கிளைகள்

பகிர்ந்துறவாடல்.

வளமான ஒரேவொரு ஆலிவ் மரத்தில் பங்குறும் கிளைகள் நாம். ஒரே கிறிஸ்துவிலே தேவனுடைய மக்களாகிய நாம் எல்லாரும் பங்குறுகிறோம். ஒரே பரிசுத்த ஆவியில் நாம் பங்குறுகிறோம்.

ரோமர் 11:17 “சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்..”

நாம் எல்லாரும் ஒரே கிறிஸ்துவில் பங்குறுகிறோம். எப்படி ஒரு பண்படுத்தப்பட்ட, செழிப்பான, வளமான ஆலிவ் மரத்திலே கிளைகள் இருக்கின்றனவோ, அதுபோல.

நான் சொல்ல விரும்புவது: நான் எந்த அளவுக்குப் பங்குற்று நன்மை பெறுகிறேன் என்பது, மற்ற சகோதர சகோதரிகள் எந்த அளவுக்குப் பங்குற்று நன்மை அடைகிறார்கள் என்பதைச் சார்ந்திருக்கிறது.

இதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன்.

“ஓ, கிறிஸ்துவில் நான் பங்குற்று அவரிடத்தில் நன்மையைப் பெறுகிறேன்.” அப்படி அல்ல.

நாம் எந்த அளவுக்குக் கிறிஸ்துவில் பங்குற்று நன்மையைப் பெறுகிறோம் என்பது, நம்மோடு உறவாடுகின்ற மற்ற சகோதர சகோதரிகளும் எந்த அளவுக்குக் கிறிஸ்துவில் பங்குற்று நன்மை பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது.

ஆகவே, “அவர்களைப்பற்றி எந்தக் கவலையும் எனக்கு இல்லை” என்று நாம் இருக்க முடியாது.

கிறிஸ்துவின் சரீரத்தில் சக உறுப்புகள்

கிறிஸ்துவின் உடல் என்றால் கிறிஸ்து தலையாக இருக்கிறார். சக உறுப்புகளும் உள்ளன. தலை கூட்டல் சக உறுப்புகளால் ஆனதுதான் கிறிஸ்துவின் சரீரம், உடல்.

அந்தச் சக உறுப்புகள் எங்கே இருக்கின்றன?

மேலும், கீழும், இடமும், வலமும், முன்னும், பின்னும் — நம்மைச் சுற்றி என்ன இருக்கின்றன? அவைகள்.

“ஐயையோ, ரொம்ப நெருக்கமாக இருக்கிறதே!” சென்னை பாஷையில் சொல்வதுபோல, “பேஜாராப் போச்சுடா!”

யாருமே நம்மைச் சுற்றி இருக்கக்கூடாது!

இடதும் வலதும் நான் உங்களை ஒத்துக்கொள்வேன். ஏனென்றால் இடமும் வலமும் நமக்குச் சமமானவர்கள்தான். முன்னும் பின்னும் இருந்தால் அது சமமானவர் என்று சொல்ல முடியாது. மேலும் கீழும் இருந்தால், கீழே இருக்கலாம்; மேலே யாருமே இருக்கக்கூடாது!

ஆனால் கீழிருப்பது நாம் விரும்புவதில்லை. கீழிருப்பது என்றால், அவர்கள் தலையிலே நம்முடைய காலை வைத்து அவர்களை அடக்கி ஆள்வதில்லை. கீழே இருந்தால் அவர்களுக்கு நாம் யாராக இருக்கிறோம்? பொறுப்பாளியாய் இருக்கிறோம்.

ஒரு மரத்திலே கிளைகள் இருக்கின்றன. ஒரு கிளை தன்னுடைய நன்மைகளையெல்லாம் நேரடியாக வேரிலிருந்து பெற்றுக்கொள்வதில்லை. மற்ற கிளைகள் மூலமாகத்தான் பெறுகிறது.

இந்த உடலிலே ஒரு cell இருக்கிறது. அது எல்லாவற்றையும் நேரடியாகத் தலையிலிருந்துதான் அல்லது இதயத்திலிருந்துதான் பெறுகிறதா? அல்லது பக்கத்தில், முன்னும் பின்னும், இடமும் வலமும், மேலும் கீழும் இருக்கிற cell மூலமாகப் பெறுகிறதா?

தமிழிலே ஒரு நல்ல பழமொழி உண்டு:

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்.”

இதிலே ஓரளவுக்கு என்ன இருக்கிறது? உண்மை இருக்கிறது.

நாம் மற்ற தேவனுடைய மக்களை எப்படிக் கரிசனையுள்ளவர்களாகப் பராமரிக்கிறோம்?

மேலும், கீழும், முன்னும், பின்னும், இடமும், வலமும் சக உறுப்புகள் அதனதன் இடத்திலும் தடத்திலும் உள்ளன. ஒவ்வொரு உறுப்புக்கும் என்ன உண்டு? ஒரு இடம் உண்டு. ஒவ்வொரு உறுப்புக்கும் என்ன உண்டு? ஒரு தடம் உண்டு.

தடம் என்றால் அது எந்தப் பாதையிலே இயங்க முடியும் என்பது.

என் இடத்தை நான் மாற்ற முடியாது. பரிசுத்த ஆவியானவரே ஒரு இடத்திலே என்னை வைக்கிறார்.

சேர்ந்து, இணைந்து, பின்னிப் பிணைந்து இயங்கும் சமுதாயம்

சேர்ந்து, இணைந்து, பின்னிப் பிணைந்து, இசைத்துப் பொருத்தி இயங்குகிற சமுதாயம். சபை என்பது வெறுமனே, “நான் அங்கு கூடுகைக்கு வந்தேன், போனேன்” என்பது அல்ல.

வசனங்களையெல்லாம் நீங்கள் வாசித்துப் பாருங்கள். நாம் சேர்ந்து, இணைந்து வாழ்கின்ற சமுதாயம்; இயங்குகின்ற சமுதாயம்.

“கூடுகைக்கு வருகிறேன்.” இதில் என்ன இயக்கம் இருக்கிறது?

அடிப்படை இயக்கம்.

சில சமயங்களிலே கூடுகைக்கு வருவதே ஒரு இயக்கம்தான்.

ஒரு வீட்டிற்கு அடக்கத்துக்குப் போனோம். அங்கே போய் நாம் என்ன செய்தோம்? ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நாம் அங்கு போய் நிற்பது அவர்களுக்குப் பலன்தான்.

அதுபோல நாம் இரண்டு மணிநேரம், மூன்று மணிநேரம் அந்த இடத்தில் உட்கார்ந்துவிட்டு வந்தாலே போதும். அது நாம் அவர்களுக்குச் செய்கிற பணிவிடை.

ஆகவே, “கூடுகைக்கு நான் போய் ஒன்றும் செய்யவில்லை” என்று சொல்லக்கூடாது.

பவுலுக்கு சகோதரர்கள் அளித்த ஆறுதல்

பவுலைப்பற்றி அப்போஸ்தலர் 28ஆம் அதிகாரம்.

கப்பல் சேதம் நடைபெறும்போது தேவன் நேரடியாகப் பவுலுக்குத் தோன்றிப் பேசுகிறார்:

“நீ பயப்படாதே. உன்னுடைய உயிர் பிழைக்கும். உன்னுடைய உயிர் மட்டுமல்ல, உன்னுடைய சகல பயணிகளுடைய உயிரையும் உன்னிமித்தமாக நான் பிழைக்க வைப்பேன்.”

தேவன் நேரடியாக ஒரு தரிசனத்தில் பேசுகிறார்.

அந்தத் தரிசனத்தை எல்லாப் பயணிகளிடமும் சொல்லி, “என்னை ஆட்கொண்ட தேவன் இப்படி என்னிடம் பேசியிருக்கிறார். ஆகவே நீங்கள் யாரும் சாகமாட்டீர்கள்” என்று சொல்கிறார்.

தேவனே நேரடியாக முகமுகமாக அப்போஸ்தலனாகிய பவுலிடம் பேசினார். 28ஆம் அதிகாரத்திலே, சில சகோதரர்கள் அப்பியுபுரம் வரைக்கும் வந்து பவுலைச் சந்தித்தார்கள் என்று எழுதியிருக்கிறது.

பவுல் சகோதரர்களைக் கண்டு ஆறுதலடைந்தார்.

சில சகோதரர்கள் ரோமிலிருந்து அப்பியுபுரம் என்ற ஊர்வரைக்கும் வந்து பவுலைச் சந்திக்கிறார்கள்.

எவ்வளவு அருமையான வாக்கியம் இது!

பவுல் சகோதரர்களைக் கண்டு ஆறுதலடைந்தார்.

தேவர் தர முடியாத ஆறுதலை அன்று வந்த சில சிறிய சகோதரர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

நாம் இருப்பது ஒரு ஆறுதல்.

இசைந்து, பொருந்தி இயங்குவதின் வல்லமை

மத்தேயு 18:19–20:

“அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.”

இந்த வசனத்தில் உள்ள கருப்பொருளை தேவனுடைய மக்கள் பெரும்பாலும் தவறவிட்டுவிடுகிறார்கள்.

கருப்பொருள் என்னவென்றால், தேவனுடைய மக்கள் எங்கு இசைந்து, பொருந்தி இயங்குகிறார்களோ — வெறும் கூடி வருவதினால் அவர்கள் இசைந்து, பொருந்தி இயங்குகிறார்கள் என்று பொருள் அல்ல.

தேவனுடைய மக்களுடைய இருதயங்கள் எங்கு ஒருமித்து இயங்குகிறதோ:

In unison, where the hearts of God’s people resonate with God in harmony. In perfect unison, there’s a great power.

எப்படிப்பட்ட power?

தேவன் தம்முடைய பரலோக வல்லமையை அங்கே வெளிப்படுத்துகிறார்.

கற்கள் வடிவமைக்கப்படுதல்

அடுத்தது, ஆலயம் கட்டப்படும்போது அதில் வேலை செய்யப்பட்டு, பொருத்தப்பட்ட கற்களால் அது கட்டி எழுப்பப்பட்டது. ஆகையால் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறபோது சுத்தி, கோடரி முதலான இருப்பு ஆயுதங்களுடைய சத்தம் அதிலே எழும்பவில்லை.

எதற்காகச் சபை வாழ்க்கை?

ஒன்று, நமக்குள்ளே இருக்கிற கிறிஸ்துவை மற்றவர்களுக்கு நாம் பகிர்ந்துகொடுப்பதற்காக. இன்னொன்று, நாமும் வடிவமைக்கப்படுவோம்.

எனக்கு முன்னாடி இங்கே ஒருவர்; எனக்குப் பின்னாடி ஒருவர்; எனக்கு இடதுபுறம் ஒருவர்; எனக்கு வலதுபுறம் ஒருவர்; எனக்கு மேலே ஒரு சகோதரன் இருக்கிறான்; எனக்குக் கீழே ஒரு சகோதரன் இருக்கிறான்.

இவர்களோடு உறவாடி இயங்குவதால் எனக்கு என்ன நடக்கும்?

 “நாம் மறுவடிவம் அமைக்கப்படுவோம்” என்று சொல்கிறேன்.

அது என்ன மறுவடிவம்?

உராய்வு, சிராய்வு, உடைச்சல், குடைச்சல் — இவைகளின் காரணமாக.

இப்போதெல்லாம் கருங்கற்களை வைத்து யாரும் கட்டிடம் கட்டுவதில்லை. அந்தக் காலத்திலே கட்டுவார்கள். அந்தக் கல்லை அவர் என்ன செய்வார்? உடைப்பார்கள். ஒரு கல்லோடு இன்னொரு கல் பொருத்துவதற்காக.

ஆனால் அது perfect-ஆகப் பொருந்தாது. ஆகவே நடுவிலே கொஞ்சம் சாந்து வைப்பார்கள்; கலவை வைப்பார்கள்.

ஆனால் அதற்காகக் கல்லையே உடைக்காமல், கலவையை வைத்தே சுவரைக் கட்ட முடியுமா? முடியாது.

ஆக, ஒரு பக்கம் நாம் கிறிஸ்துவைப் பகிர்ந்துகொடுக்கின்றோம்; அவர்களிடமிருந்து கிறிஸ்துவை நாம் பெற்றுக்கொள்கின்றோம். ஆனால் இன்னொருபக்கம், நடுவிலே நமக்கு என்ன தேவைப்படும்? சாந்து, கலவை தேவைப்படும்.

ஆனால் உராய்வுகளும், சிராய்வுகளும், உடைச்சல்களும் தவிர்க்க முடியாது.

சபை வாழ்க்கையைத் தவிர்க்க முடியாது

“இல்லை, எனக்குக் கொஞ்சம் சகோதரரோடு சேர்ந்து வாழ்வது ரொம்ப இடையூறாக இருக்கும். நான் ஒரு தீவில் வாழ்வேன். ஆசிரமம். நான் என்னுடைய வாழ்க்கையைக் கர்த்தரிடத்தில் வாழ்வேன். நான் எந்தத் தப்பும் பண்ணவில்லை. தனியாக ஒரு ஆசிரமம் வைத்து, அங்கே நான்தான் தலைவர். மற்றவர்களுக்காக நான் ஜெபம் பண்ணுவேன். அவர்களை ஆசீர்வதிப்பேன். அப்படி ஒரு peaceful life.”

ஆனால் அது பூரணம் இல்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய வருகையிலேயோ, ஆயிரம் வருட அரசாட்சியிலேயோ, அல்லது புதிய வானம், புதிய பூமியிலேயோ என்னிடத்தில் இடைப்பட வேண்டிய அவசியமில்லை என்று சொல்ல முடியுமா?

இது கஷ்டமான கேள்விகள்.

நான் இந்த உலகத்தில் வாழும்போது எல்லாச் சகோதர சகோதரிகளோடும் சேர்ந்து, இணைந்து, பின்னிப் பிணைந்து, இசைந்து, பொருந்தி வாழ்வதை நான் Bypass பண்ணிவிட்டேன்.

இப்போது நாம் எங்கே வந்துவிட்டோம்? நிறைவாக்கப்பட்ட புதிய படைப்புக்கு வந்துவிட்டோம். “இனிமேல் பழையதெல்லாம் பேச வேண்டாம்” என்று விட்டுவிடுவாரா?

அல்லது, “நீ தப்பிக்கவா தப்பித்தாய்? பழைய படைப்பில் மற்ற சகோதரர்களோடு உறவாடி, கலந்துறவாடி, மறுவடிவம் அமைக்கப்படுவதைத் தவிர்த்துவிட்டாய். ஆனால் நீ விட்டுப்போன portions எல்லாம் இன்னும் படித்துத்தான் ஆக வேண்டும். நீ அதற்கு முன்னால் doctor ஆக முடியாது. Pandemic period-ல் படிக்காததைப் படித்துத்தான் ஆக வேண்டும்” என்று சொல்வாரா?

உங்களுடைய கருத்து?

அப்படித்தான் என்று சொல்ல முடியாது. அப்படித்தான் செய்வாரோ என்று நான் கருதுகிறேன் என்று சொல்லிவிட்டு, “என்னிடமும் தேவனுடைய ஆவி உண்டு” என்று நீங்கள் சொல்லுங்கள்.

அதற்கேற்ற வெகுமதியும் தீர்ப்பும் உங்களுக்கு.

“அக்கினியானது பரிசோதிக்கும்” — 1 கொரிந்தியர் 3.

தெரியாது. ஆனால் தேவன் ஏதோ ஒன்று செய்வார்.

தேவனுடைய மக்களுடைய உறவின்மூலமாக மட்டுமே கிடைக்கின்ற மறுஉருவாக்குதல் இருக்கிறதல்லவா? மறுவடிவம் அமைக்கப்படுதல். அதை நாம் skip பண்ண முடியாது.

இல்லையென்றால், என்றாவது ஒரு நாள் தேவன் அதைச் செய்வார் என்றால், இந்தப் பழைய படைப்பில் அதற்கான சில கிரயம் செலுத்தினார்கள் அல்லவா? கிரயம் செலுத்துகிறவனுக்கும், கிரயம் செலுத்தாதவனுக்கும் வேறுபாடு இல்லையா?

நிச்சயமாக இருக்கும்.

முந்தியோ, பிந்தியோ அவர்களை என்ன செய்ய வைப்பார்கள்? கிரயம் செலுத்த வைப்பார்.

உலகத்தின் அதிகாரமும் சகோதர அன்பும்

மத்தேயு 20:25; யோவான் 13:35.

அது என்ன உலகத்தின் அதிகாரம்?

“அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.”

யோவான் 13:35:

“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.”

ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் எவ்வளவு சிறியவனாய் இருந்தாலும் சரி, அவனுக்கு ஒரு அரசும், அவனுக்கு ஒரு அதிகாரமும் உண்டு. அவனுடைய அரசுக்குள் போய் “அதிகாரத்தைத் தள்ளுவேன்” என்று சொல்ல முடியாது.

ஒருவன் தன்னைத் தாழ்த்தி, பணிந்து, “சொல்லுங்கள், Uncle” என்று தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் அன்போடு கேட்பதால், நான் அவனோடு கலந்துறவாட முடிகிறது.

“உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள். எனக்கு நீங்கள் அறிவுரை எல்லாம் சொல்ல வேண்டாம்” என்று சொல்கிற அதிகாரம் ஒருவனுக்கு உண்டு.

தேவனுடைய மக்களுக்கும் உலகத்து மக்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

அவர்கள் அதிகாரம் கிடைத்தால் கூத்தாடுவார்கள். தேவனுடைய மக்களோ, அதிகாரம் பெற்றபோதும்கூட:

“நான் அன்பின் நிமித்தம் உன்னை மன்றாடுகிறேன்” என்பார்கள்.

ஆகையால் அதிகாரம் உண்டென்றால் அந்த அதிகாரத்தைச் செலுத்தியே ஆக வேண்டும் என்பதல்ல.

நான் சொன்ன குறிப்பு உங்களுக்குப் புரிகிறதா?

“அதிகாரம்” என்றவுடன் நாம் கிரீடம் வைத்துக்கொண்டு Bishop ஆகிவிடக்கூடாது. எல்லாருக்கும் அதிகாரம் உண்டு.

தேவனுடைய சபை அப்படி இருக்கக்கூடாது.

நற்செய்தியின் மூலமாகக் கிறிஸ்து பரவ வேண்டும்

அடுத்தது, கிறிஸ்து பரவுதல் — நற்செய்தி.

நற்செய்தியினால் கிறிஸ்துவில் பிள்ளைகளைப் பெற்றெடுங்கள்.

இது புதிய படைப்பின் விரிவு. இது நம்முடைய இலக்கு.

எப்படிக் கிறிஸ்து நமக்குள்ளே பெருகுவது நம்முடைய இலக்கோ, கிறிஸ்து நம் மூலமாய்ப் பரவ வேண்டும்.

நம் மூலமாய் எந்த இடத்திற்குக் கிறிஸ்து மற்றவர்களுக்குள் பாய்ந்தோடியிருக்கிறார்? அது மிகவும் முக்கியம்.

நம்மிடமிருந்து மற்றவர்களை உயிர்ப்பிக்கிற ஜீவத்தண்ணீர் பாய்ந்தோட வேண்டும்.

எசேக்கியேல் 47:9 — பாய்ந்தோடும் ஜீவநதி

எசேக்கியேல் 47:9 நமக்குத் தெரியும். வாசிப்போம்:

“சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.”

இது தேவாலயத்தில், சிங்காசனத்தின் கீழிருந்து பாய்ந்தோடி வருகின்ற தண்ணீர். தேவாலயத்தைவிட்டு அது வெளியே ஓடிவருகிறது.

தேவாலயத்துக்குள்ளேயே அது ஒரு குளம்போல, ஏரிபோல இருக்கக்கூடாது.

“என்னுடைய உறவாடுதல் எல்லாம் தேவனுடைய மக்களோடு மட்டும்தான்” என்று நின்றுபோகக்கூடாது. Stagnant ஆகக்கூடாது.

தேவனை அறியாத மக்களோடு நாம் உறவாட வேண்டும்.

எப்படி உறவாட வேண்டும்?

அவர்களுக்கு ஜீவனைத் தருகிற வண்ணம் உறவாட வேண்டும்.

“வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாய் இராமல், போதக சமர்த்தனாய் இருக்க வேண்டும்.

அந்த அரசன் — அகிரிப்பா ராஜா.

“ஏறக்குறைய நீ என்னைக் கிறிஸ்தவனாகச் செய்கிறாய்.”

“ஏறக்குறைய இல்லை; இந்தச் சங்கிலிகள் ஒன்று தவிர, நீ என்னைப்போலவே ஆக வேண்டும்.”

தேவனுடைய மக்களாய் இருக்கிறவர்களுக்கு அப்படிப்பட்ட மனப்பாங்கு வேண்டும். எப்படியாவது கிறிஸ்து அவர்களுக்குக் கடத்தப்பட வேண்டும் என்பது நம்முடைய உள்ளத்தின் பாரமாய் இருக்க வேண்டும்.

எப்போதுமே நாம், “நாங்கள் கிறிஸ்துவில் வாழ்கிறோம்; கிறிஸ்து எங்களிடத்தில் பெருகுகிறார்” என்று சொல்லிக்கொண்டு நிற்கக்கூடாது.

கிறிஸ்துவின் நாமம் சொல்லப்படாத இடங்கள்

“இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்” (ரோமர் 15:19).

இல்லிரிக்கம் தேசம் எங்கே இருந்தது? எங்கோ இருக்கிறது — மத்தியதரைக் கடல் பகுதியில்.

அப்புறம் சொல்கிறார்:

“மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.”

இதுவரை இந்த நதி பாய்ந்தோடியிராத குடும்பங்களுக்கும், நபர்களுக்கும் நான் கொண்டுபோய் அறிவிப்பேன்.

ஏற்கனவே பாய்ந்துவிட்டதென்றால் வேண்டாம். கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்படாத இடங்களில் நற்செய்தி அறிவிக்க விரும்புகிறேன்.

“உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்.”

எதற்காக ரோமாபுரிக்குப் போவதற்குப் பவுல் தடைப்பட்டார்? துல்லியமாகச் சொல்ல வேண்டும்.

ஏற்கனவே அங்கே அடிக்கல் போடப்பட்டிருக்கிறது. நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் போக வேண்டும் என்று நினைக்கிறார்; வேண்டாம் என்று feel பண்ணுகிறார். கடைசியில், “நான் வருகிறேன்; ஏனென்றால் ரோம் தாண்டி நான் ஸ்பானியா தேசத்திற்குப் போகிற project-ஐ வைத்திருக்கிறேன்” என்று சொல்கிறார்.

கனவைத் திட்டமாக்க வேண்டும்

“தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்,
தட்டாமல் செல்லாது உளி.”

தாவரம் ரொம்ப இளம் தாவரமாம். தொட்டாலே அது துவண்டுவிடுமாம். அங்கே ஒரு உளியை வைத்தால் என்னவாகும்? வெட்டிக்கொண்டு போய்விடும். இல்லையா? போகாது.

ஒரு தட்டு தட்ட வேண்டும்.

ஒரு திட்டம் இருக்க வேண்டும்.

“நான் ஸ்பானியா தேசத்திற்குப் போக விரும்புகிறேன்.”

இந்த 2024-ல் நமக்கு அப்படிப்பட்ட ஒரு எண்ணம் வேண்டும்.

நமக்குப் பெரிய திட்டம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் திட்டம் இருக்க வேண்டும்.

நாம் தீட்டிய திட்டத்தை எட்டாமல்கூட போகலாம். ஆனால் குறைந்தபட்சம் ஒரு திட்டம் இருக்க வேண்டும்.

நீங்கள் Cartoon அருமையாக வரைவீர்கள் என்று நான் கேள்விப்பட்டேன். நீங்கள் Disneyland-ல் போய் cartoon வரைய வேண்டும். அதற்குரிய cartoon படிப்பு, அதற்குரிய Computer Science, அதற்குரிய tablet — எல்லாமே படிக்க வேண்டியது ஒரு திட்டமிடல்.

இது ஒரு கனவு.

எல்லாக் காணவும் நிறைவேறாது.

“கனவு மெய்ப்பட வேண்டும்; எண்ணிய காரியம் நிறைவேற வேண்டும்” என்று வாக்குப் பண்ணினால் நடைபெறாது.

கனவைத் திட்டமாக்க வேண்டும்.

கனவுக்கும் நிறைவேற்றத்திற்கும் நடுவிலே திட்டமிடல் இருக்க வேண்டும்.

திட்டமிட வேண்டும்.

“ஐயையோ, ஒருவேளை நம்ம திட்டம் போட்டு நிறைவேறவில்லை என்றால் நம்ம என்ன ஆகிவிடுவோம்? ரொம்ப upset ஆகிவிடுவோம். அதனால் என்ன பண்ணலாம்? திட்டமே இருக்கக்கூடாது!”

அப்படி அல்ல.

தோல்வியைக் கண்டு அஞ்ச வேண்டாம்

திருக்குறள் மேற்கோள் பார்த்தோம்:

“கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.”

நீ ஒரு முயலைக் குறிபார்த்து அம்பைச் செலுத்தி அந்த முயலை வேட்டையாடி வெற்றி பெறுவதைவிட, ஒரு யானையைக் குறிவைத்து, உங்களுடைய குறி தவறினாலும் பரவாயில்லை.

நீங்கள் எதற்குத்தான் குறி வைக்க வேண்டும்?

தோல்வியைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

தோல்வி வாழ்க்கையினுடைய ஒரு பகுதி.

தோல்விக்குப் பயந்து “நான் பரீட்சை எழுத மாட்டேன்; நான் பள்ளிக்குப் போக மாட்டேன்; நான் கல்லூரிக்குப் போக மாட்டேன்; நான் அப்படிப் பண்ண மாட்டேன்; நான் இப்படிப் பண்ண மாட்டேன்.”

நற்செய்திக்கான ஒரு திட்டம் இருக்க வேண்டும்

ஒரு திட்டம்.

எத்தனை பேருக்கு நீங்கள் நற்செய்தி அறிவிப்பீர்கள்?

“Gospel என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. நான் எப்படிச் சொல்ல வேண்டும் என்று தெரியாது. இதெல்லாம் சொல்லாமல், எத்தனை பேருக்கு Gospel சொல்ல வேண்டும்? என்று கேட்டால் நாங்கள் என்ன செய்வோம்” என்று நினைக்கிறீர்களா?

உங்கள் எல்லாரையும் equip பண்ணின பிறகுதான் நீங்கள் உங்கள் சாட்சியைச் சொல்ல வேண்டும்.

“நான் எப்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன்” — அது சொன்னால் போதுமல்லவா?

1 கொரிந்தியர் 9:16–18

1 கொரிந்தியர் 9ஆம் அதிகாரம் 16, 17, 18.

“சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே. ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.”

Stewardship — நமக்குப் பொறுப்பு.

பொறுப்பாளி என்கிற உணர்வு வேண்டும்.

நீங்கள் பயப்பட வேண்டாம்.

“தெரியாதவனிடத்தில் போய், bus stand-ல் போய் ‘இயேசு’ என்று கத்த வேண்டும்; அவன் அடித்தாலும் பரவாயில்லை” என்று நான் சொல்லவில்லை. அப்படியெல்லாம் நான் துன்புறுத்தவே மாட்டேன்.

நமக்கு ஒரு எண்ணம் வேண்டும்:

“இந்த வருடத்தில் நான் ஒரு குடும்பத்திற்கு நற்செய்தி சொல்ல வேண்டும்.”

பெரும்பாலும் இரண்டு, மூன்று, நான்கு குடும்பங்களுக்கு நற்செய்தி அறிவித்தால், ஒரு குடும்பம் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளலாம்.

sநம்முடைய வளங்களை நாம் இடதுபுறம், வலதுபுறம் வீணாக்கக்கூடாது.

நம்முடைய இலக்கை மீண்டும் நினைவுபடுத்துதல்

இந்த மூன்று காரியங்களில் நாம் நடக்க வேண்டும். இலக்கை நோக்கி:

முதலாவது — கிறிஸ்துவால் வாழ வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையிலே மட்டுப்பாடுகளும், குறைச்சல்களும், சுருக்கங்களும், ஏன் மறுப்புகளும் இருக்கும்போது, கிறிஸ்துவால் வாழ்வதற்கு தேவன் நம்மைப் பயிற்றுவிக்கிறார்.

அடுத்தது — கிறிஸ்து நமக்குள் பெருக வேண்டும்.

நம்முடைய குணம் கிறிஸ்துவுக்கு ஒத்த குணமாக இந்த வாழ்க்கையிலேயே மாற வேண்டும்.

மூன்றாவது — கிறிஸ்து நம் மூலமாய்ப் பரவ வேண்டும்.

“உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”

கிறிஸ்துவை நாம் மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்காமல், நான் கிறிஸ்துவின் குணத்திற்கு ஒத்த சாயலாக மாறிவிட முடியுமா? முடியாது.

என்னதான் ஒருவன் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்றெடுக்கும்போது அவன் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கும், திருமணமே செய்யாமல் ஒருவன் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கும் — வேறுபாடு இருக்குமா? நிச்சயமாக இருக்கும்.

நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காகப் பாடுபடும்போது, அதில் வருகின்ற அனுபவங்கள் இருக்கின்றன அல்லவா?

அவர்களுக்காக நாம் தியாகம் செய்வோம். பலியிடுவோம். பொறுமையாக இருப்போம். நீடிய பொறுமை வேண்டும்.

நீங்கள் அவர்களை நூறு முறை சந்திக்க வேண்டியிருக்கும். குறைந்தது 50 முறை. வாரத்துக்கு ஒரு முறை சந்தித்தால் 50 முறை சந்திக்க வேண்டும்.

பெரிய காரியம் வேண்டாம்.

வாரந்தோறும் ஒரு முறை அவர்களைச் சந்திப்போம்.

சந்திப்போம். சந்திப்போம். சந்திப்போம்.

அது கிறிஸ்து நம் மூலமாய்ப் பரவுவது மட்டுமல்ல. தண்ணீர் நமக்குள்ளிருந்து பாய்ந்தோடாவிட்டால், அது தேங்கி நிற்கிற தண்ணீராக மாறிவிடும்.

அதுதான் அந்த வசனம்:

“எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”

கர்த்தர்தாமே நம்முடைய கண்களை இந்த இலக்கிலிருந்து இடதுபுறம், வலதுபுறம் திருப்பாமல் காக்க வேண்டும். எந்த நோக்கத்திற்காக, எந்த இலக்கை நாம் எட்டுவதற்காக இருக்கிறோமோ, அந்த இலக்கை நாம் எட்டுவதற்காக நம்முடைய குவிமையத்தை நாம் காத்துக்கொள்ள வேண்டும்.

கர்த்தர் நம்முடைய இருதயங்களைத் தேற்றுவாராக.