சபையைக் கட்டியெழுப்பும் ஒருமை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அருமையான பரிசுத்தவான்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இன்றைக்கு நாம் நான்கு செய்திகளைப் பார்ப்போம். ஒரே தலைப்பில்தான் — சபையைக் கட்டியெழுப்புதல்.
சபை என்பது தேவ மக்களாலான சமுதாயம். குடும்பம் என்பதும் தேவ மக்களின் சமுதாயம்தான். குடும்பம் என்பது சபையினுடைய ஒரு குறு வடிவம். சபை குடும்பத்தினுடைய ஒரு விரிவான வடிவம்.
தேவ மக்களின் சமுதாயம் கட்டியெழுப்பப்படுவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டால், ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்புவது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். படிக்கிற அல்லது வேலை பார்க்கிற இடத்தில் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது எப்படி என்று கற்றுக்கொள்ள முடியும். அந்தச் சமுதாயத்தில் எப்படி மகிழ்ச்சியோடும் நிறைவோடும் பயனுள்ள, கனியுள்ள வாழ்க்கை வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்ள முடியும்.
நம்முடைய தலையாய நோக்கம் — ஏதோவொரு சமுதாயத்தில், தேவனற்ற, கிறிஸ்து இல்லாத ஒரு சமுதாயத்திலே எப்படி நாம் இசைவோடு, கனியுள்ள, பயனுள்ள, சமாதானமுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வது என்பதைப்பற்றி அல்ல. தேவ மக்களின் சமுதாயம் எப்படிக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய இன்றைய பாரம். ஆனால் இதற்குப் பல்வேறு பயன்கள் உண்டு.
ஏதோ ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை கூடுகையை நடத்துவது எப்படி என்பதைப்பற்றி அல்ல இந்த நாளின் செய்திகள். தேவ மக்களின் சமுதாய வாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை அல்லது மற்ற மனிதர்களோடு நீங்கள் இசைந்து வாழ்கின்ற வாழ்க்கையை எப்படி வாழ்வது?
இது சொல்லித் தெரியாவிட்டால், நமக்கு automaticகாகத் தானாகத் தெரியாது — தேவனுடைய மக்கள் படித்திருப்பார்கள், அறிவுள்ளவர்களாய் இருப்பார்கள். ஆனால் எப்படி இரண்டு பேரோடு இசைந்து வாழ்வது, கட்டியெழுப்புவது என்பதைப்பற்றிய அறிவும் திறமையும் அவர்களுக்கு இல்லை. இது துக்ககரமானது.
“இசைந்து வாழ்வது எப்படி? ஒரு சமுதாயத்தில் இசைந்து கட்டியெழுப்புவது எப்படி?” என்பதைப்பற்றிய அறிவும் திறமையும் வேண்டும். இவையெல்லாம் வானத்திலிருந்து விழுவதில்லை.
இந்த இசைக்கருவியை வாசிக்க அறிவும் வேண்டும், திறமையும் வேண்டும். அறிவும், திறமையும் வேண்டும். அதற்குரிய உழைப்பும் அதற்குரிய பிரயாசமும் வேண்டும்.
ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சமுதாயத்தோடு கட்டியெழுப்பப்படுவதற்கு அறிவும் திறமையும் வேண்டும். அதற்கு நாம் முயற்சிசெய்ய வேண்டும்.
கொரிந்தியர் சபை — ஓர் எடுத்துக்காட்டு
இதற்கு ஆதாரமாக நாம் ஒன்று கொரிந்தியர் புத்தகத்தை எடுத்துக்கொள்கின்றோம். கொரிந்தியருக்குப் பவுல் எழுதிய முதல் கடிதத்திலே, ஒரு சபை கட்டி எழுப்பப்படுவதைப்பற்றி பல்வேறு corrections, பல்வேறு திருத்தங்கள் தரப்படுகின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு கொரிந்து என்ற பட்டணத்திலே ஒரு சபை இருந்தது. கொரிந்து பட்டணம் ஒரு வியாபார நகரம். செல்வச்ச செழிப்புவாய்ந்த ஒரு நகரம். அதுவும் புதுப் பணக்கார நகரம். பணக்கார வியாபாரிகள், போக்குவரத்துமாக இருக்கும்போது, பாவங்களும் அங்கு பெருகி இருக்கும்.
கலாச்சாரம் — அதன் ஆழமான தாக்கம்
பணக்கார நகரம் அல்லது புதுப் பணக்கார நகரம் என்றால் அவர்களுக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கும். அந்த நகரத்தின் தேவனுடைய மக்களும் அந்தக் கலாச்சாரத்தில்தான் வாழ்வார்கள்.
நாம் எல்லாரும் ஒரு கலாச்சாரத்தில்தான் பிறக்கின்றோம். ஒரு கலாச்சாரத்தில்தான் வாழ்கின்றோம். கலாச்சாரம் அல்லது பண்பாடு.
நம்முடைய உணவு, நம்முடைய உடை — அது மட்டுமல்ல — நம்முடைய சுவைகள், நம்முடைய இசை, நம்முடைய பொழுதுபோக்குகள், நம்முடைய கேளிக்கைகள் — ஏன், நம்முடைய சிந்தனை வளையங்கள், சிந்தனை ஓட்டங்கள்கூட — நம்முடைய கலாச்சாரத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கும். படிப்பைப்பற்றி, வேலையைப்பற்றி, திருமணத்தைப்பற்றி, பிள்ளைகளைப்பற்றி, செல்வத்தைப்பற்றி, தேவனைப்பற்றி, சபையைப்பற்றி அந்தக் கலாச்சாரத்தின் சிந்தனை ஓட்டங்களும் சிந்தனை வளையங்களும்தான் நம்மில் இருக்கும்.
“கடவுளுக்குக் காணிக்கை கொடுத்தால் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார்,” என்ற ஒரு கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்தோம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டபிறகும் இயேசுவை, “இவருக்குக் காணிக்கை கொடுத்தால் இவர் நம்மை ஆசீர்வதிப்பார்,” என்ற ஒரு நபராகத்தான் பார்ப்போம். நம்மை அறியாமல் இந்தக் கலாச்சாரச் சாயம் நம்மிடத்தில் படிந்திருக்கும்.
நம்முடைய கலாச்சாரத்தின் சாயம் — சாயல் என்று சொல்லவில்லை — சாயம் — தேவனுக்கு அடுத்த காரியங்களிலும் அந்தச் சாயம் கசிந்து வரும்.
மனிதத் தேவைகள்
சில தலைவர்கள் அதை misuse, abuse பண்ணிக்கொள்ளலாம். அதைத் தவறுதலாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். “நீங்கள் இப்படிச் செய்தால் கடவுள் உங்களை அப்படி ஆசீர்வதிப்பார்,” என்கின்ற இந்தச் சாயத்தை, இந்தக் கலாச்சார சாயத்தைத் திறமையாக, இலாபகமாக பயன்படுத்திக்கொள்ள முடியுமா? பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஏனெனில் எப்போதுமே மனிதர்களுடைய வாழ்க்கையிலே நன்மைகளும் ஆசீர்வாதங்களும் குறைபடுகின்றன. இந்த நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெறுவது எப்படி என்று ஒருவன் ஒரு உத்தியை, ஒரு சுருக்கு உத்தியைக் கற்றுக்கொடுக்கிறான் என்றால் — மக்கள் அங்கே they will crowd — அங்கே அவர்கள் கூடுவார்கள்.
சபையைக் கட்டியெழுப்புதல் — நான்கு செய்திகள்
ஆகவே கொரிந்தியர் முதல் கடிதத்தை நாம் எடுத்துக்கொண்டதற்குக் காரணம், அங்கு சபையைக் கட்டியெழுப்புவதைப்பற்றிய எதிர்மறையான சூழ்நிலை இருந்ததால், பவுலுடைய கடிதம் அதை நேர்மறையாகத் திருத்துகிறது. நீங்கள் கட்டி எழுப்பப்படவில்லை. நீங்கள் கட்டி எழுப்பப்பட வேண்டும். சபை என்றால் என்ன? சபையை வைத்து என்ன செய்வது? சபையைக் கட்டி எழுப்புவது என்றால் என்ன? இந்தக் காரியங்களைக்குறித்து தேவனுடைய மக்கள் எல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முதல் செய்தி — சபையைக் கட்டியெழுப்பும் ஒருமை
நான்கு செய்திகள் உண்டு. முதலாவது செய்தி — சபையைக் கட்டியெழுப்பும் ஒருமை.
தேவன் ஆதியில் தொடங்கி, ஆதியாகமம் முதல் அதிகாரம் தொடங்கி திருவெளிப்பாடு கடைசி வரையில் ஒன்றேவொன்றை உருவாக்குவதற்காகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அது கிறிஸ்துவில் தேவனுடைய சபை.
“நீங்கள் பல்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமாகச் சொல்கின்றீர்கள். தேவனுடைய ஆதி நோக்கம், இறுதி நோக்கம் — கிறிஸ்துவின் சாயலுக்கு நம்மை ஒப்பாக்குவது என்று ஒரு சமயம் சொல்கிறீர்கள். சில சமயங்களில், தேவனுடைய ஆதி நோக்கம், இறுதி நோக்கம் — தேவனுடைய அரசு என்று சொல்கிறீர்கள். சில சமயங்களில் தேவனுடைய ஆதி நோக்கம், இறுதி நோக்கம் — தேவன் மனிதனோடு உடன் வாழ்வது என்று சொல்கிறீர்கள். போன வாரம் அப்படிச் சொன்னீர்கள். இந்த வாரம், தேவனுடைய ஆதி நோக்கம், இறுதி நோக்கம் — கிறிஸ்துவில் தேவனுடைய சபை என்று சொல்கிறீர்கள்,” என்று நீங்கள் சொல்லலாம் .
இவைகள் வெவ்வேறானவைகள் அல்ல. தேவன் மனிதனோடு உடன் வாழ்வதுதான் தேவனுடைய சபை. தேவன் மனிதனோடு உடன்வாழ்கின்ற தேவனுடைய சபையிலே தேவனுடைய மக்கள் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்த சாயலாக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்த சாயலாக்கப்படவில்லை என்றால் அங்கு தேவனுடைய சபை இல்லை. தேவன் அவர்களோடு உடன் வாழ்வது என்பது அங்கு சாத்தியமே இல்லை.
எங்கு தேவனுடைய மக்கள் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்த சாயலாக்கப்படவில்லையோ அல்லது ஒத்த சாயலாக்கப்படுகிற, அல்லது மறுசாயலாக்கப்படுகிற வழிமுறையிலேகூட இல்லையோ, அங்கு தேவன் அவர்களோடு உடன் வாழ்வது என்பதும், தேவனுடைய சபை கட்டியெழுப்பப்படுவது என்பதும் சாத்தியம் இல்லை.
முதல் செய்தி — தேவன் சபையைக் கட்டியெழுப்பும் ஒருமை. இந்த ஒருமை என்பதன் பொருள் என்ன என்பதை நாம் பார்ப்போம்.
இரண்டாவது செய்தி — சபையைக் கட்டியெழுப்பும் தலைமைத்துவம்
இரண்டாவது செய்தி — ஒரு சமுதாயம் என்றால் எப்போதுமே அங்கு நடத்துகை, தலைமை, தலைமைத்துவம் என்று ஒன்று வேண்டும். அதை வேதம் போதிக்கிறது. செய்தி தலைமையைப்பற்றியோ, தலைமைத்துவத்தைப்பற்றியோ, நடத்துகையைப்பற்றியோ அல்ல. தேவனுடைய நோக்கமாகிய கிறிஸ்துவில் தேவனுடைய சபையைக் கட்டியெழுப்புவதே செய்தி. கிறிஸ்துவின் உடலை, கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அது இன்றியமையாததாக இருக்கிறது.
எனவே இரண்டாவது செய்தி — சபையைக் கட்டியெழுப்பும் நடத்துகை அல்லது தலைமைத்துவம்.
மூன்றாவது செய்தி — சபையை கட்டி எழுப்பும் கொடைகள்
மூன்றாவது செய்தி — சபையைக் கட்டியெழுப்புவதற்கு அல்லது தேவ மக்களிடையே தேவ மக்களைக்கொண்டு ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்குக் கொடைகள் வேண்டும், வரங்கள் வேண்டும். ஒன்று கொரிந்தியர் பன்னிரண்டாம் அதிகாரம், ரோமர் பன்னிரண்டாம் அதிகாரம், எபேசியர் நான்காம் அதிகாரம், ஒன்று கொரிந்தியர் பதினான்காம் அதிகாரம் என்று வேதத்தின் பல்வேறு பகுதிகளிலே ஆவியானவருடைய வரங்கள் தேவனுடைய சபையை, கிறிஸ்துவின் உடலைக் கட்டியெழுப்புவதற்காக எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்று தேவனுடைய கிருபையினால் சில விளக்கமான அதிகாரங்களை நாம் பார்க்கிறோம். அது மிகவும் பயனுள்ளது. அது மூன்றாவது செய்தி.
நான்காவது செய்தி — சபையைக் கட்டியெழுப்பும் சிலுவையின் அன்பு
நான்காவது செய்தி — இரண்டு பேர் கூடினால் அங்கே உரசல்கள் இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் நாம் பழைய படைப்பின் மக்கள். இந்தப் பழைய படைப்பிலே நான்தான் மையமாக இருக்க விரும்புகிறேன். ஆனால் எங்கு மனிதர்கள் தாங்கள் மையமாக இருக்க விரும்புகிறார்களோ அங்கு சண்டைகளும், சச்சரவுகளும், உரசல்களும், விரிசல்களும், பிளவுகளும், பிரிவினைகளும் நிச்சயமாக உருவாகும்.
நாம் பழைய படைப்பிலிருந்து புதிய படைப்பாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்கள். எங்கு நம்முடைய பழைய படைப்பு தலையெடுத்து மேலோங்கி நிற்கிறதோ அங்கெல்லாம் இப்படிப்பட்ட உராய்வுகளும், உரசல்களும், விரிசல்களும் இருக்கும்.
இறுதியாக இந்த எல்லா உரசல்களுக்கும், விரிசல்களுக்கும், பிளவுகளுக்கும், பிரிவினைகளுக்கும், பேதங்களுக்கும், பிணக்குகளுக்கும் தேவன் ஒரேவொரு தீர்வு வைத்திருக்கிறார் — தேவனுடைய மக்கள் அனைவரும் சிலுவையின் அன்பின் வழியாக செல்ல வேண்டும்.
முடிவு — நான்கு முக்கியக் கருத்துகள்
சபையைக் கட்டியெழுப்பும் ஒருமை.
சபையைக் கட்டியெழுப்பும் தலைமை.
சபையைக் கட்டியெழுப்பும் கொடைகள்.
சபையைக் கட்டியெழுப்பும் சிலுவையின் அன்பு —
என்று நான்கு செய்திகளை நாம் பார்ப்போம், அல்லது நான்கு பாடங்களை நாம் பார்ப்போம்.
தேவன் உங்களுக்கு ஞானத்தையும், உள்ளத்திலும் உடலிலும் போதுமான ஆற்றலையும் தந்தருள்வார் என்று நான் நம்புகின்றேன்.
முதலாவது செய்தி — சபையைக் கட்டியெழுப்பும் ஒருமை
முதலாவது செய்தி — சபையை கட்டி எழுப்பும் ஒருமை. ஒன்று கொரிந்தியர் முதல் நான்கு அதிகாரங்களிலே இதைப்பற்றி எழுதப்பட்டிருக்கின்றது. நான் முதல் மூன்று அதிகாரங்களை அடிப்படையாக எடுத்துக்கொள்கின்றேன். காலம் கருதி நான் இதை மூன்று குறிப்புகளாகப் பிரித்துக்கொள்கின்றேன்.
முதலாவது — சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து தேவனுடைய வல்லமையும் தேவனுடைய ஞானமுமாய் உள்ளார்.
இரண்டாவது குறிப்பு — ஆவிக்குரியவர்கள் கிறிஸ்துவின் மனம் உடையவர்கள் அல்லது கிறிஸ்துவின் மனமுள்ளவர்கள்.
மூன்றாவது குறிப்பு — கட்டியெழுப்புதல் — அதைப்பற்றிய தீர்ப்பு, வெகுமதி, இழப்பு.
கொரிந்தியர் சபையின் அடிப்படை சிக்கல்
இந்த முதல் நான்கு அதிகாரங்களிலே பவுல் என்ன கூறுகிறார் என்றால் — கொரிந்தியர்களிடையே பிளவுகளும், பிரிவினைகளும், உரசல்களும், விரிசல்களும், பேதங்களும், பிணக்குகளும், சண்டைகளும், சச்சரவுகளும்…
ஒரு வசனத்தை வாசிப்போம் — ஒன்றாம் அதிகாரம் 10, 11 ஆம் வசனங்கள்.
வசனம் — 1 கொரிந்தியர் 1:10–11
“சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.”
தலையாய பிரச்சனை — பிரிவினைகள்
கொரிந்தியர் சபையிலே பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. முதலாவது பிரச்சனை என்றுகூட சொல்ல மாட்டேன். தலையாய பிரச்சனை — தேவ மக்களிடையே இருந்த.. உங்களிடையே பிரிவினைகள் உண்டு.
பிரிவினைகள் என்று எளிமையாகச் சொல்லிவிட முடியாது.பேதங்கள், பிணக்குகள், சண்டைகள், சச்சரவுகள், உரசல்கள், விரிசல்கள் — இவை அனைத்தும் இருந்தன.
ஏன் இது அடிப்படைச் சிக்கல்?
ஏன் இதை முதலாவது பிரச்சனை என்று சொல்லாமல் தலையாய பிரச்சனை என்று சொல்கிறேன்? ஏனென்றால் மற்ற பிரச்சனைகள் எல்லாம் இந்த ஒரு பிரச்சனையில் இருந்துதான் எழுந்து வருகின்றன.
உதாரணம் — ஒன்றாம் கொரிந்தியர் 11
ஒன்று கொரிந்தியர் 11 ஆம் அதிகாரத்தில் நாம் சொல்கின்றோம் இல்லையா? சிலர் முதலாவது வந்து தாங்கள் கொண்டு வந்த உணவையும், பானத்தையும் உண்டு குடித்து வெறித்து விடுகிறார்கள். ஏழையாக இருக்கின்ற மக்கள் பசியாக இருக்கின்றார்கள்.
“இது கர்த்தருடைய பந்தியா?” என்று கேட்கின்ற இந்தப் பிரச்சனை எங்கிருந்து வருகிறது? அவர்களுக்குள்ளே பிரிவினைகள் இருப்பதால்.
“அவன் நான் அல்ல. நான் அவன் அல்ல. அவனுடைய குழு என்னுடையது அல்ல. என்னுடைய குழு அவனுடையது அல்ல என்பதால்தான் என்னுடைய உணவை நானும் என்னுடைய குழுவினரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொள்கிறோம். அவனுடைய உணவை அவனும் அவனுடைய குழுவினரும் சாப்பிட ஒன்றுமில்லாமல், வெறுங்கையர்களாய், பசியோடு அவர்கள் போகின்றார்கள்.”
இது ஒன்று கொரிந்தியர் 11-ல் சொல்லப்பட்டிருக்கின்ற பிரச்சனை.
அடிப்படை முடிவு — இசைவின்மை
ஆகவே தேவனுடைய மக்களிடையே இசைவின்மை என்பது கொரிந்திய விசுவாசிகளிடையே இருந்த அடிப்படைச் சிக்கல்.
முதல் நான்கு அதிகாரங்களிலே — உங்களிடையே உள்ள இந்த பிரிவினைகள் — இவைகளை அப்போஸ்தலனாகிய பவுல் தீர்ப்பதற்காக அவர்களுக்கு எழுதுகின்றார்.
நமக்கும் பொருந்தும் உண்மை
நன்றாகக் கவனிக்க வேண்டும். இது கொரிந்தியர்களுக்கு இருந்த பிரச்சனை. இது நமக்கும் இருக்கும்.
நம்முடைய சபையோ, நம்முடைய குடும்பமோ, நாம் வேலை பார்க்கிற இடமோ, நாம் படிக்கிற இடமோ — இந்தப் பாடங்கள் எல்லாம் விலையேறப்பெற்ற பாடங்கள்.
வெறுமனே கொரிந்தியர்களுக்கும் அல்லது தேவனுடைய சபைக்கும் மட்டும்தான் இது பயனுள்ளது என்று நீங்கள் கடந்து போய் விடாதீர்கள்.
தேவ வார்த்தையின் பயன்
தேவனுடைய வார்த்தையிலிருந்து பெறுகின்ற ஞானம் உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளிலே ஞானிகளாக்கும். மற்ற மனிதர்களுக்கு இல்லாத ஒரு ஞானத்தை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அருளுவார்.
ஆகவே நீங்கள் இதைக் கவனமாய், ஊன்றி, வாசிக்க வேண்டும்.
கேள்வி — தீர்வு எங்கே?
உங்களிடையே இப்படிப்பட்ட சிக்கல்கள் உள்ளன. சரி, அவர்களிடையே பிரிவினைகளும் இசைவின்மையும் இருக்கும் என்றால், அதை நேரடியாக அவர் குறிப்பிட்டு அதற்குத் தீர்வு சொல்ல வேண்டியது தானே?
உபதேசத்தின் அடிப்படையில் அவர்களுக்கிடையே பிரிவினைகள் இல்லை. நடைமுறைப் பழக்கங்களின் அடிப்படையில் பிரிவினைகளும் இல்லை.
என்னுடைய புரிந்துகொள்ளும்படி — கலாச்சாரத்தில் இருந்து வந்தது.
மனித சுயம் — பிரிவினைகளின் மூல காரணம்
ஒரு சமுதாயம் என்று வரும்போது, ஒரு சிலர் தங்களை அந்த சமுதாயத்தைப் பயன்படுத்தி கதாநாயகர்களாக அல்லது உயர்த்திக்கொள்வதற்கு முயல்வது இயல்பு.
கொரிந்துவிலே அவர்கள் தேவனற்றவர்களாய் வாழ்ந்தபோது, அங்கு எப்போதுமே அந்தஸ்து, கௌரவம், “நான் பெரியவன், நான் உயர்ந்தவன்” என்கின்ற எண்ணம் அவர்களிடையே இருந்தது.
அவர்கள் அவிசுவாசிகளாய், தேவனற்றவர்களாய் வாழ்ந்தபோது — பணத்தைவைத்து அல்லது ஞானத்தைவைத்து அல்லது வல்லமையை வைத்து அல்லது அதிகாரத்தைவைத்து — கொரிந்துவிலே எப்படி ஒருவரை ஒருவர் உயர்த்துவது என்பது தேவனற்ற மக்களிடையே பரவலாக இருந்தது.
அவர்கள் இரட்சிக்கப்பட்டபிறகு, விசுவாசிகளானபிறகும், அதே கலாச்சார சாயல் அல்லது கலாச்சார சாயம் — நான் சொன்னதுபோல — தேவனுடைய சபைக்கும் வருகிறது.
ஆகவே இறையியல் பிரச்சினை இல்லை, உபதேசத்தின் அடிப்படையிலோ, அல்லது நடைமுறைப் பழக்கங்கள் — தொழுகை இப்படி நடத்த வேண்டும் என்று ஒருவர் ஆசைப்படுகிறார், அப்படி நடத்த வேண்டும் என்று இன்னொருவர் ஆசைப்படுகிறார் — அவைகள் அல்ல பிரதானமான காரியம்.
பிரதானமான காரணம் — மனிதர்களுக்கு இயற்கையாக இருக்கிற சுயம் — அவ்வளவுதான்.
சுயம் என்பது என்ன? நான் முக்கியமானவன். எனக்கு ஒரு அந்தஸ்தும், எனக்கு ஒரு கௌரவமும், எனக்கு ஒரு கனமும், எனக்கு ஒரு இடமும், எனக்கு ஒரு அதிகாரமும் உண்டு. நான் என்னைப் பெரியவனாய்க் காண்பிப்பதற்கு முயற்சி செய்வேன்.
“இவன் பெரியவன்” என்று ஒரு சிலர் என்னைச் சுற்றி வருவார்கள். இப்படி உண்டான குழுக்கள்தான்.
முதல் குறிப்பு — கிறிஸ்துவோடு ஐக்கியம்
சரி, இதை பவுல் கையாளுகிற விதத்தைப் பார்ப்போம்.
முதல் குறிப்பு — குமாரனோடு ஐக்கியமாயிருப்பதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று ஒன்றாம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்திலே வாசிக்கிறோம்.
தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவோடு ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
நாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றால் — நம்மைப் பொறுத்தவரை நாம் விசுவாசிகளாய் இருக்கிறோம், இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பவுலுடைய வார்த்தை — நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் அல்லது விசுவாசித்திருக்கிறீர்கள் என்பதனுடைய பொருள் — நீங்கள் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவோடு ஐக்கியமாயிருப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
ஐக்கியத்தின் பொருள் — பங்குறுதல்
ஐக்கியமாயிருப்பதனுடைய பொருள் என்ன? இதைப்பற்றி விவரமாய்ப் பேச வேண்டிய அவசியம் இல்லை.
ஐக்கியம் என்றால் koinonia. அதனுடைய பொருள் — பங்குறுதல்.
எல்லாருக்கும் பொதுவான ஒன்றில் நான் பங்குறுதல். இது எனக்குரியது மட்டுமல்ல. இது சகோதரனுக்குரியது, சகோதரிக்குரியது. நாம் எல்லாரும் சேர்ந்து பங்குறுகிற ஒன்று.
காற்றில் நாம் ஐக்கியம்கொள்கிறோம். அது என்ன — காற்றில் ஐக்கியம் கொள்கிறோம்? காற்று எனக்குரியது அல்ல. நம் எல்லாருக்கும் உரியது. அதில் நாம் எல்லாரும் பங்குறுகிறோம்.
தேவனுடைய மக்கள் விசுவாசிகளாக இரட்சிப்பிற்காக அழைக்கப்பட்டார்கள் என்பது உண்மைதான். அதனுடைய பொருள் என்ன? தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவோடு ஐக்கியமாயிருப்பதற்கு, கிறிஸ்துவில் பங்குபெறுவதற்காக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
கிறிஸ்துவில் பொதுவான பங்கு
“பசும்புல் மேய்ச்சலும் ஒன்றே, பருகும் நீரும் ஒன்றே, பரம விருந்தும் ஒன்றே, பங்குறும் கிறிஸ்து ஒன்றே.”
பவுலின் அணுகுமுறை
பவுல் அதை அணுகுகிற விதத்தைப் பாருங்களேன்.
“ஓ, உங்களுக்குள்ளே நீங்கள் சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது, சச்சரவுகள் இருக்கக் கூடாது, உரசல்களும், விரிசல்களும், பிளவுகளும், பிரிவினைகளும், பேதங்களும், பிணக்குகளும் இருக்கக் கூடாது” என்று சொல்லவில்லை.
நீங்கள் யார்? நீங்கள் எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்?
நீங்கள் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவில் பங்குபெறுவதற்காக அழைக்கப்பட்டவர்கள்.
ஒரே கிறிஸ்துவில் நீங்களும் பங்குபெறுவீர்கள், நானும் பங்கு பெறுகிறேன்.
தேவனுடைய மக்கள் எல்லாரும் — கொரிந்தியர்கள் மட்டும் அல்ல — அவர் சொல்கிறார், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிற யாவரோடும் நீங்கள் அழைக்கப்பட்டவர்கள்.
இரட்சிப்பு — தனிப்பட்டது அல்ல, கூட்டுத்தன்மை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது என்பது ஒரு தனி மனிதனைப் பொறுத்ததல்ல. நாம் ஒரு சமுதாயமாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால் — இரட்சிப்பு என்பது நான் ஒருவன் கிறிஸ்துவில் இருப்பதல்ல. நாம் எல்லாரும் கிறிஸ்துவில் இருக்கிறோம் அதைப்பற்றி அவர் சொல்கிறார்.
வேதாகம உறுதி — 1 கொரிந்தியர் 1:30
ஒன்று கொரிந்தியர் ஒன்றாம் அதிகாரம் 30 ஆம் வசனத்திலே — நீங்கள் தேவனாலே கிறிஸ்துவில் இருக்கிறீர்கள். Of Him you are in Christ Jesus.
இந்த வசனத்தை நான் அடிக்கடி உங்களுக்கு மேற்கோள் காட்டியிருக்கிறேன். ஒன்று கொரிந்தியர் ஒன்று முப்பது. மறந்து விடாதீர்கள்.
நீங்கள் அவராலே கிறிஸ்துவில் இருக்கிறீர்கள். நீங்கள் அவராலே கிறிஸ்துவுக்கு உட்பட்டிருக்கிறீர்கள். Of Him you are in Christ Jesus. தேவனால் நீங்கள் கிறிஸ்துவில் இருக்கிறீர்கள்.
தேவனுடைய எண்ணம் — தனி மனிதன் அல்ல, சமுதாயம்
இதை எதற்குச் சொல்கிறேன்? நான் தனி மனிதன் மட்டுமல்ல. தேவனுடைய எண்ணம், தேவனுடைய சிந்தனை எப்போதுமே ஒரு சமுதாயம்.
புதிய படைப்பு என்பது — “I am a new creation, நான் ஒரு புது படைப்பு” — அதுவும் அல்ல தேவனுடைய எண்ணம். ஒருவன் கிறிஸ்துவில் இருந்தால் புதுப்படைப்பாய் இருக்கிறான். தேவனுடைய மக்கள் எல்லாரும் கிறிஸ்துவில் இருக்கிறார்கள். ஆகவே தேவனுடைய எண்ணம் எப்போதுமே தேவ மக்களால் ஆன ஒரு சமுதாயமே தவிர, ஒரு தனி மனிதன் அல்ல.
தனிப்பட்டதும் கூட்டுத்தன்மையும் — இரண்டும் உண்மை
தனி மனிதனுக்கு ஒரு இடம் உண்டு என்று வைத்துக்கொள்வோம்.
கலாத்தியர் 2:20-ல் பவுல் கூறும்போது “என்னில் அன்புகூர்ந்து” என்று எழுதுகிறார். அதே எபேசியர் 5 சொல்லும்போது, அவர் சபையின்மேல் அன்பு கூர்ந்து என்று கூறுகிறார்.
அவர் என்னில் அன்பு கூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் என்பதும் உண்மைதான். சபையின்மேல் அன்பு கூர்ந்து சபைக்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தார் என்பதும் உண்மைதான். அது பெரிய உண்மை.
அழைப்பு — தனிப்பட்டது அல்ல, கூட்டாக
ஆகவே நான் மட்டுமல்ல — கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள்.
அதனுடைய பொருள் என்ன? கர்த்தர் என்று அவரை நோக்கிக் கூப்பிடுகின்ற, அவரை நோக்கி வேண்டுகின்ற யாவரோடும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
நான் தனியாக அழைக்கப்படவில்லை.
எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்? நாம் ஒரு சமுதாயமாக கிறிஸ்துவில் பங்குபெறுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்.
குமாரனோடு ஐக்கியம் — நம்முடைய பங்கு
இரண்டாவது — குமாரனோடும் குமாரனிலும் ஐக்கியம்.
நாம் கிறிஸ்துவில் பங்குபெறுவது மட்டுமல்ல. கிறிஸ்துவோடு பங்கு பெறுவது மட்டுமல்ல.
நன்றாகக் கவனிக்க வேண்டும்.
அவர் அறையப்பட்டார் — நான் அதில் பங்குபெறுகிறேன். நானும் அறையப்பட்டேன்.
அவர் உயிர்த்தெழுந்தார் — அதில் நான் பங்குபெறுகிறேன். நானும் உயிர்த்தெழுந்தேன்.
அவர் பரமேறினார் — நான் அதில் பங்குபெறுகிறேன். நானும் பரமேறினேன்.
அவர் அரியணையில் அமர்த்தப்பட்டார் — நான் பங்குபெறுகிறேன். நானும் அரியணையில் அமர்த்தப்பட்டேன்.
இது குமாரனோடு பங்குறுதல்.
குமாரனில் ஐக்கியம் — சகோதரர்களோடு பங்கு
அது மட்டுமல்ல — குமாரனில் பங்குறுகிறோம்.
குமாரனில் பங்குறுதல் என்றால் — நான் மட்டும் அறையப்படவில்லை, சகோதரனும் அறையப்பட்டான். நான் மட்டும் உயிர்த்தெழவில்லை, சகோதரியும் உயிர்த்தெழுந்தார். நான் மட்டும் பரமேறவில்லை, சகோதரியும் பரமேறினார்.
நாம் எல்லாரும் சிலுவையில் அறையப்பட்டவர்கள். எல்லாரும் உயிர்த்தெழுந்தோம். எல்லாரும் பரமேறினோம். எல்லாரும் அவரோடு அரியணையில் அமர்த்தப்பட்டிருக்கிறோம்.
ஆகவே குமாரனோடு நமக்கு பங்குறுதல் உண்டு. குமாரனில் தேவ மக்கள் எல்லாரோடும் நமக்குப் பங்குறுதல் உண்டு.
நான் பங்குறும் கிறிஸ்துவும் நீங்கள் பங்குறும் கிறிஸ்துவும் ஒன்றுதான்.
ஐக்கியத்தின் விளக்கம் — பங்குகொண்டு உறவாடுதல்
ஐக்கியத்திற்கு நான் பயன்படுத்தும் வார்த்தை — பகிர்ந்துஉறவாடுதல், அல்லது ஒன்றித்து உறவாடுதல், அல்லது பங்குகொண்டு உறவாடுதல்.
ஐக்கியம் என்றால் Fellowship என்போம். Fellowship என்றால் ஐக்கியம் என்போம். ஐக்கியம் என்றாலும் புரியவில்லை. Fellowship என்றாலும் ஒன்று புரிந்துவிடப் போவதில்லை. கூடி வந்தால் அதற்குப்பேர் fellowship. — அப்படி அல்ல.
பகிர்ந்து உறவாடுதல். பொதுவாக வைத்து உறவாடுதல். ஒன்றை நமக்குப் பொதுவாக வைத்து அதில் நாம் எல்லாரும் பங்குகொள்கிறோம்.
காற்றில் பங்குகொள்கிறோம். ஓடுகின்ற தண்ணீரில் நாம் பங்குகொள்கிறோம். ஒரு பொதுக்கிணற்றிலே எப்படி ஒரு ஊர் முழுவதும் பங்குகொள்கிறதோ, அதுபோல நாம் கிறிஸ்துவில் பங்கு கொள்கிறோம்.
வேதாகம அடிப்படை — 1 யோவான் 1:3
ஒன்று யோவான் 1:3.
“நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.”
இரு திசை ஐக்கியம்
ஆகவே ஒரு பக்கம் நாம் குமாரனோடு ஐக்கியம் கொள்கிறோம். இன்னொரு பக்கம் குமாரனில் தேவ மக்கள் எல்லாரோடும் நாம் ஐக்கியம் கொள்கிறோம் அல்லது பங்குறுகிறோம்.
ஆகவே, தேவ மக்கள் எல்லாரோடும் சேர்ந்து — together — நாம் அவரிடத்தில் பங்குறுகிறோம்.
எடுத்துக்காட்டு — தேன்கூடு
ஒரு தேன்கூடு இருக்கிறது. நாம் ஐம்பது பேர் பங்குற வேண்டும். முந்தியடித்துக்கொண்டு பங்கிட்டால் அந்தத் தேன்கூடு யாருக்குக் கிடைக்கும்? ஒருவருக்கும் கிடைக்காது.
stampede என்பது என்ன? பங்குறுவது எப்படி என்று தெரியாத ஒரு சமுதாயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு stampede.
இன்றைய செய்தி — அந்த stampede க்கு நாம் கொடுக்கின்ற பதில் — மாற்றுத்தரம்.
பங்குறும் வாழ்க்கை — நடைமுறை எடுத்துக்காட்டு
கூட்டத்திற்கு வரும்போது தேவனுடைய மக்கள் செருப்பை ஒழுங்காக அடுக்கிவைப்பதைப்பற்றிகூட நம்முடைய சகோதரர்கள் மிகவும் அக்கறைப்படுவார்கள்.
மிதியடிகளை ஒழுங்காக அடுக்கிவைத்தவுடன் நாமெல்லாரும் பரிசுத்தவான்கள் ஆயிட்டோம் என்பதல்ல பொருள். அந்த இடத்தை நாம் பகிர்ந்து உறவாடுகிறோம். அந்த இடத்தில் நாம் பங்கு பெறுகிறோம். நாம் ஐம்பதுபேர் இருக்கிறோம். எனக்கு வசதியான இடத்தில் நான் மிதியடியை உதறிவிட்டுப்போனால், மீதி நாற்பத்தொன்பது பேரும் அந்த இடத்தில் மிதியடிகளைப் போட முடியாது.
என் மிதியடியை நான் எங்கு வைக்கவேண்டும்? எனக்குப் பின்வருகிற சகோதர சகோதரிகளுக்கு வசதியான இடம் கொடுப்பதற்காக எனக்கு எது மிகவும் வசதிக் குறைவான இடமோ அந்த இடத்திலே என்னுடைய மிதியடியை முதலாவது போட்டுவிட்டு நான் வருகிறேன்.
இது பங்குறும் விதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இதிலே தேவனுடைய மக்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். தேவனுடைய மக்கள் இதிலே பழக்குவிக்கப்பட வேண்டும்.
இசைவு — பங்குறுதலின் அடிப்படை
எதற்காக நான் இவ்வளவு தூரம் போய் என் மிதியடியைக் கழற்றிப்போட வேண்டும்? வசதியான இடத்தில் கழற்றிப்போடக் கூடாதா? இல்லை. Whichever place is the least accessible, I choose that place and put it.
ஆகவே பங்குற வேண்டும் என்றால் பங்குறுகிற மக்கள் இசைந்தவர்களாய் இருக்க வேண்டும். அதைத்தான் நாம் முதலாவது பார்த்தோம்.
ஒன்று கொரிந்தியர் ஒன்றாம் அதிகாரம் 10,11-லே — இசைந்த, ஒத்த, ஒருமித்த, ஒன்றித்த மனம். அதற்கு எதிர்மறை என்ன? பிரிவினைகள், பிளவுகள், சண்டைகள், சச்சரவுகள், பேதங்கள், பிணக்குகள்.
மனித இயல்பு — புகார்கள் மற்றும் சண்டைகள்
“அவனுக்குத்தான் நிறைய தேன் கிடைத்தது. எனக்கு நிறைய தேன் கிடைக்கவில்லை. முதலாவது போன ஆள்தான் நிறைய கோழிக்கறி எடுத்தார். கடைசியாக போன ஆட்களுக்கு வெறும் குழம்புதான் கிடைத்தது.” இவைகளெல்லாம் புது புகார்கள் அல்ல. இவைகளெல்லாம் தொன்றுதொட்டு தேவனுடைய மக்களிடையே வருகின்ற புகார்கள்.
கரிசனை — சபை கட்டுமானத்தின் அடிநாதம்
“பிரதர், மனசார சாப்பிடக்கூட விடமாட்டீங்க போல இருக்கிறதே!” நீங்கள் மனதார சாப்பிடுங்கள். ஆனால் எப்போதுமே தேவனுடைய மக்கள் — எப்போதுமே — நாம் மற்றவர்களைக்குறித்து கரிசனையும் அக்கறையும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
மிதியடிகளைக் கழற்றி வைப்பதிலிருந்து, கை கழுவுவதுவரை, உட்காருகிற இடம்வரை — மற்றவர்களைக்குறித்த கரிசனை, மற்றவர்களைக்குறித்த கரிசனை, மற்றவர்களைக் குறித்த கரிசனை —
இது தேவனுடைய சபையில், கிறிஸ்துவின் சரீரம் கட்டி எழுப்பப்படுவதன் அடிநாதமாக இருக்கிறது.
பரலோகம் vs நரகம் — ஒரு ஆழமான வேறுபாடு
நரகத்திற்கும் பரலோகத்திற்கும் உள்ள ஒரே வேறுபாடு என்ன?
பரலோகத்தில் மக்கள் ஒருவரைக்குறித்து ஒருவர் அக்கறை உள்ளவர்களாய் இருப்பார்கள்.
நரகத்தில் ஒவ்வொருவரும் தங்களைக்குறித்து — தாங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்றுகூட — அக்கறை உள்ளவர்களாய் இருப்பார்கள். மற்றவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.
முடிவு — இசைந்த மனதின் அவசியம்
ஆகவே நாம் கிறிஸ்துவில் பங்குபெறுவதற்கு தேவனுடைய மக்களாகிய நம்மிடையே இசைந்த மனம் — harmonious. ஒத்த மனம் — resonating. ஒருமித்த, ஒன்றித்த மனம் அவசியம்.
இரண்டாவது குறிப்பு — சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து
இரண்டாவது — சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து தேவனுடைய வல்லமையும் தேவனுடைய ஞானமுமாய் இருக்கிறார் என்று ஒன்றாம் அதிகாரம் முழுவதும் பேசுகிறார்.
கிரேக்கர்கள், யூதர்கள் உட்பட்ட விசுவாசிக்காத ஒரு சமுதாயத்தைப்பற்றி பேசுகிறார். அவர்கள் ஒரு ஞானத்தை வைத்திருக்கின்றார்கள். அவர்கள் ஒரு ஞானத்தைத் தேடுகின்றார்கள். அவர்கள் ஒரு வல்லமையைத் தேடுகின்றார்கள்.
ஆனால் நாமோ — சிலுவையில் அறையப்பட்ட — அவர் சொல்கிறார் — சிலுவையைப்பற்றிய செய்தி தேவனுடைய வல்லமையாய் இருக்கிறது.
சிலுவையின் செய்தி — உலக பார்வை
சிலுவையைப்பற்றிய செய்தி என்பது என்ன? சிலுவை என்பது என்ன? வல்லமையின் செய்தியா? அது வல்லமை இல்லாத ஒருவன் சிலுவையில் அறையப்பட்டான் என்பதுதான் செய்தி.
“நீ தேவனுடைய குமாரனேயானால் உன்னுடைய வல்லமையைக் காட்டுவதற்கு சிலுவையில் இருந்து இறங்கி வா — பார்க்கலாம்.”
இறங்கி வந்திருந்தால் சிலுவையின் செய்தி எப்படிப்பட்ட செய்தி? வல்லமையின் செய்தி — இந்த உலகத்தின் கண்களுக்குமுன்பாக, இந்தக் கலாச்சாரத்தின் கண்களுக்குமுன்பாக.
இறங்கி வராமல் அமைதியாய் இருப்பது — சிலுவையின் செய்தி.
மனித ஞானம் vs சிலுவை
இதில் என்ன ஞானம் இருக்கிறது? “நீ உன்னுடைய பகைவனை வெட்டி ஒழி. அதற்கு இதோ நான் உனக்கு வழி சொல்கிறேன்.” — இது ஞானம்.
சிலுவையின் செய்தியிலே எந்த ஞானமும் இல்லை. சிலுவையின் செய்தியிலே எந்த வல்லமையும் இல்லை.
சிலுவையின் செய்தி அவமானத்தின் செய்தி. சிலுவையின் செய்தி தோற்றுப்போனவனின் செய்தி. அது வல்லவனின் செய்தி அல்ல.
சிலுவையின் செய்தி வெட்கத்தின் செய்தி. சிலுவையின் செய்தி ஞானத்தின் செய்தி அல்ல.
நற்செய்தி — சிலுவையின் செய்தி
இந்த செய்தியைத்தான் நாங்கள் அறிவிக்கின்றோம், பவுல் கூறுகிறார். நற்செய்திக்கு இன்னொரு பெயர் என்னது? சிலுவையின் செய்தி. ஏன் அது சிலுவையின் செய்தி? ஏனென்றால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து தேவனுடைய வல்லமையும் தேவனுடைய ஞானமுமாய் இருக்கிறார்.
“foolishness” — மொழிபெயர்ப்பு விளக்கம்
foolishness என்பதை தமிழில் எப்படி மொழிபெயர்க்கலாம்? நம்முடைய வேதாகமத்தில் “பைத்தியம்” என்று மொழிபெயர்த்திருந்தார்கள். ஆனால் அது சரி அல்ல.foolishness-ஐ யாரும் “பைத்தியம்” என்று மொழிபெயர்க்க மாட்டீர்கள்.
எப்படி மொழிபெயர்க்கலாம்? சிலுவையைப்பற்றிய செய்தி கெட்டுப்போகிறவர்களுக்கு முட்டாள்தனமாய் இருக்கிறது. சிலுவையைப்பற்றிய செய்தி கெட்டுப்போகிறவர்களுக்கு முட்டாள்தனமாய் இருக்கிறது என்று நாம் மொழிபெயர்ப்போம்.
இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவனுடைய ஞானமும் தேவனுடைய வல்லமையுமாய் இருக்கிறது.
உலக பார்வை vs இரட்சிக்கப்பட்டவர்களின் பார்வை
இந்த உலகத்து மக்களுக்கு, இந்த உலகத்து கலாச்சாரத்திலே ஊறி இருப்பவர்களுக்கு சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவிலே எந்த ஞானமும் இல்லை. எந்த வல்லமையும் இல்லை.
இதைக் கொரிந்தியர்கள் வாசிக்கும்போது, “மிகவும் சரியாகச் சொல்கிறார் அப்போஸ்தலன்” என்று அவர்கள் அந்தக் கடிதத்தை மிகவும் மனமகிழ்ந்து வாசிக்கின்றார்கள்.
பவுலின் திருப்புமுனை — இரண்டாம் அதிகாரம்
ஆனால் இரண்டாம் அதிகாரத்திலே பவுல் விஷயத்துக்கு வரப்போகிறார். “நான் வேறு யாரையும்பற்றிச் சொல்லவில்லை. இப்போது உங்களைப்பற்றிச் சொல்லப்போகிறேன். நீங்கள் என்ன வித்தியாசமாக யோசிக்கிறீர்களா?”
யூதரும் கிரேக்கரும் — தேடல்கள்
கிறிஸ்துவை அறியாத யூதர்களும் கிரேக்கர்களும் — கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகின்றார்கள். யூதர்கள் அடையாளத்தைத் தேடுகின்றார்கள். நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை பிரசங்கிக்கிறோம். அவர் யூதர்களுக்கு இடறுதலாயும், கிரேக்கர்களுக்குப் பைத்தியமாயும், முட்டாள்தனமாயும் தோன்றுகின்றார்.
கிரேக்கர்கள் வல்லமையைத் தேடுகின்றார்கள். யூதர்கள் வல்லமையான அடையாளம் எங்கே என்று சொல்கின்றார்கள்.
நாங்கள் கிறிஸ்துவைக் கூறுகிறோம். அவர்களுக்கு அது வல்லமை இல்லாததாகத் தோன்றுகிறது.
கிரேக்கர்கள் எங்கே ஞானம் என்று தேடுகின்றார்கள். நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைச் சொல்கிறோம். அவர்களுக்கு இதில் என்ன ஞானம் இருக்கிறது? இது முட்டாள்தனமாய்த் தோன்றுகிறது.
விசுவாசிகளின் பார்வை
ஆனால் இரட்சிக்கப்படுகிற நமக்கோ — ஓ! இது சாதாரண பலம் அல்ல, வல்லமை அல்ல — தேவனுடைய வல்லமை. இது சாதாரண ஞானம் அல்ல. தேவனுடைய ஞானம். அல்லேலூயா. இதைக் கேட்கின்ற கொரிந்தியர்கள் “பவுல் சரியாகச் சொன்னார்” என்று சொல்லியிருப்பார்கள்.
மறைமுக நோக்கம் — ஏன் இந்த அணுகுமுறை?
பவுல் ஏன் இப்போது இப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை எடுக்கிறார்?
“உங்களுக்குள்ளே சண்டை சச்சரவுகளும், பேதங்களும், பிணக்குகளும் இருக்கின்றன. நீங்கள் இசைந்த, ஒருமித்த, ஒன்றித்த மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தக் கிறிஸ்துவில் நீங்கள் பங்குபெறுவது உங்களுக்கு நிறைவாக இருக்கும்,” என்பதை நேரடியாகச் சொல்லவேண்டியதுதானே?
இப்படிச் சொல்வதால் என்ன பயன்? நீங்கள் இப்படி யோசித்திருக்க மாட்டீர்கள். யோசிக்க வேண்டும்.
கலாச்சாரத்தின் நிலைத்த தாக்கம்
ஏனென்றால் இதே கலாச்சாரத்தில் இருந்துதான் நாமும் இரட்சிக்கப்பட்டு இங்கே வந்திருக்கின்றோம்.
நாம் இரட்சிக்கப்பட்டு இங்கே வந்து விட்டோம். ஆனால் அந்தக் கலாச்சாரத்தின் தாக்கமும் சாயமும் நம்மைவிட்டு இன்னும் போகவில்லை.
பிறந்ததுமுதல் 400 ஆண்டுகளாக நம்முடைய முன்னோர்கள் எகிப்தில் என்ன சாப்பிட்டார்களோ அந்தச் சாப்பாட்டின் மணம் நம்முடைய வியர்வையிலும்கூட இருக்கிறது.
எடுத்துக்காட்டு — உள்ளார்ந்த வெளிப்பாடு
வியர்வையில் மணம் இருக்குமா? எதைப் பொறுத்திருக்கும்? அவனுடைய சாப்பாட்டைப் பொறுத்திருக்கும். நான் என்னதான் சென்ட் அடித்தாலும் சரி. டியோடரண்ட் அடித்தாலும் கொஞ்ச நேரம் கழித்து, நம்முடைய டியோடரண்ட் எல்லாம் ஆவியாய் போனபிறகு, உண்மையாய் நான் என்னவாக இருக்கிறேனோ அது வெளியே வந்துவிடும்.
என்னுடைய சிபோலத் வெளியே வந்துவிடும். அது “நிழல்” என்று சொல்லாது “எழல்” என்று சொல்லும்.
ஓ, நீ இந்த ஊர்க்காரனா? என்று அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.
தேவனுடைய ஞானம் — கிறிஸ்துவில்
நீங்கள் தேவனால் கிறிஸ்துவில் இருக்கிறீர்கள். கிறிஸ்து தேவனுடைய ஞானம்.
அதனுடைய பொருள் என்ன?
31 ஆம் வசனம் — கிறிஸ்து தேவனுடைய ஞானம் என்பது மனிதர்களை எப்படி நீதிப்படுத்துவது என்று தேவன் ஞானமாய் ஒரு திட்டமிடுகிறார். என்ன செய்தாலும் இந்த அநீதிகள் நிறைந்த பாவமுள்ள மனிதனை நீதிப்படுத்த முடியுமா? முடியாது.
தேவனுடைய திட்டம் ஞானமிக்கது. அநீதி நிறைந்த பாவமுள்ள அந்த மனிதனை அவர் கிறிஸ்துவில் நீதிப்படுத்துகிறார். நீதிமானாக்குகிறார்.
இரட்சிப்பு — தேவனுடைய ஞானத்தின் செயல்பாடு
எப்படி?
பாவம் ஒரு நஞ்சைப்போல் ஊடுருவி இருக்கின்ற, ஒரு சாயத்தைப்போல் பரவி இருக்கின்ற மனிதனைப் பரிசுத்தமாக்குவது, புதுப்படைப்பாக்குவது எப்படி? தேவனுடைய ஞானம் இதைச் செய்கிறது.
இறுதியாக இந்தப் பழைய படைப்பை விட்டு முற்றுமுடிய இவனை வெளியேற்றி, எப்படி உயிர்த்தெழுதல்மூலம் இவனை புதுப்படைப்பாக்குவது, இவனை மீட்பது — அது தேவனுடைய ஞானத்திலிருக்கிறது.
தேவனுடைய ஞானம் — நீதி, பரிசுத்தம், மீட்பு
ஆகவே தேவனுடைய ஞானம் என்பது அவருடைய நீதி, பரிசுத்தமாகுதல், மீட்பு. அவரே நமக்குத் தேவனுடைய ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார் என்று மொழிபெயர்க்கப்பட்டபோதும்கூட, அதை எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்றால் — அவரே தேவனால் நமக்கு ஞானமும், அதாவது நீதியும், பரிசுத்தமாகுதலும், மீட்புமானார் என்று நாம் மொழிபெயர்க்க வேண்டும்.
இரண்டாம் அதிகாரம் — சிலுவையின் மையம்
தொடர்ந்து இரண்டாம் அதிகாரத்திற்கு வரும்போது இப்போது மெல்ல வருகிறார்.
நான் அவிசுவாசிகளைப்பற்றி, இந்த உலகத்து கலாச்சாரத்தைப்பற்றி சொன்னேன். அவர்களுக்கு சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து முட்டாள்தனமாகவும் பலவீனமாகவும் தோன்றுகிறார். ஆனால் இரட்சிக்கப்படுகிற நமக்கு அவர் தேவனுடைய ஞானமும் தேவனுடைய பலமுமாய் இருக்கின்றார்.
தீர்மானம் — கிறிஸ்துவை மட்டுமே அறிதல்
சிலுவையில் அறையப்பட்ட இந்தக் கிறிஸ்துவைத்தவிர வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்க தீர்மானித்திருந்தேன் என்று அவர் எதிர்மறையாகச் சொல்கிறார்.
நேர்மறையாக எப்படிச் சொல்ல வேண்டும் என்றால் — கிறிஸ்துவை மட்டுமே அறிய நான் தீர்மானித்திருந்தேன்.
கிறிஸ்துவை — எப்படிப்பட்ட கிறிஸ்துவை அறிய வேண்டும்? சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை அறிய வேண்டும்.
எச்சரிக்கை — சிலுவையின் தாக்கம்
நான் இன்னும் நடைமுறை application பயன்பாட்டிற்கு வரவில்லை. பயன்பாடுகளைப்பற்றிப் பேசும்போது உங்களுடைய மனங்கள் காயப்படும்.
எனவே இப்பொழுதே உங்கள் மனங்களை நீங்கள் ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்தச் சிலுவையின் செய்தியைப்பற்றி நாம் சொல்கின்றோம். உங்கள் மனங்கள் காயப்படுத்தப்படப் போகின்றன.
“5000 வோல்ட்” என்று அந்த எச்சரிக்கைப் பலகை எழுதிப் வைத்திருப்பார்கள் இல்லையா?
சிலுவை — ஆவியின் வல்லமைக்கான வழி
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை நாம் அறிய வேண்டும். அந்தக் கிறிஸ்துவை மட்டும்தான் நான் உங்களுக்கு அறிவித்தேன். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைத்தவிர வேறொன்றையும் அறியாதிருத்தல்.
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின்மூலமாக மட்டுமே நாம் ஆவியானவரையும் வல்லமையையும் பெற்றுக்கொண்டோம் என்று அந்த 2-ல் இருந்து 5 வரை கூறுகிறது.
இரண்டாவது குறிப்பு — ஆவிக்குரியவர்கள்
இரண்டாவது குறிப்பிற்குப் போவோம். ஆவிக்குரியவர்கள் — கிறிஸ்துவின் மனம் உடையவர்கள்.
ஆவிக்குரியவர்கள் — நான் முதலாவது சொன்னோம் — சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து தேவ வல்லமையும் தேவ ஞானமுமாய் உள்ளார்.
இந்த உலகத்து கலாச்சாரத்திற்கு அது தெரியாது. தேவனுடைய மக்களுக்கு, விசுவாசிக்கிறவர்களுக்கு அவர் தேவனுடைய ஞானமும் தேவனுடைய வல்லமையுமாய் இருக்கிறார்.
தவறான புரிதல் — கொடைகள் மற்றும் அந்தஸ்து
இப்போது பவுல் தேவனுடைய மக்களுக்கு வருகிறார். இந்த 2:10 முதல் 3:5 வரை — ஆவிக்குரியவர்கள்.
கொரிந்தியர்கள் தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கருதிக்கொண்டிருக்கின்றார்கள். பின்பு நாம் பார்க்கப்போகின்றோம். ஏனென்றால் ஆவிக்குரிய கொடைகளை அவர்கள் நாடினார்கள்.
எதற்கு ஆவிக்குரிய கொடைகள்? ஏனென்றால் ஆவிக்குரிய கொடைகள் யாரிடத்தில் நிறைய செயல்படுகின்றனவோ அவர்கள் அந்தச் சமுதாயத்தில் மிகவும் உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள், பெரியவர்கள், மேலானவர்கள். உண்மையிலேயே அவருடைய எண்ணம், அவருடைய வாதம் அதுதான்.
மற்றவர்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது அவர்களுடைய அக்கறைபோல் தோன்றவில்லை.
மாறாக — “எனக்குள் இப்படிப்பட்ட ஆவிக்குரிய கொடைகள் இருப்பதால் நான் மிகவும் உயர்ந்தவன், சிறந்தவன், மேலானவன், பெரியவன், அந்தஸ்து உள்ளவன், கௌரவம் உள்ளவன், அதிகாரம் உள்ளவன், பதவி உள்ளவன்,” என்பதுதான் கொரிந்தியர்களின் எண்ணம்.
உண்மையான ஆவிக்குரியவர்கள்
உண்மையிலேயே ஆவிக்குரியவர்கள் யார் என்று சொல்கிறார்? கிறிஸ்துவின் மனமுடையவர்கள்.
யுகத்தின் ஞானம் vs தேவனுடைய ஞானம்
இந்த யுகத்தின் ஞானமும் தேவனுடைய மறைவான ஞானமும் — 6 முதல் 10 — இந்த யுகத்தின் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறார்.
அதாவது இந்த உலகத்தின் ஞானம்.
புதிய ஏற்பாட்டில் சில சமயங்களில் அந்த வார்த்தை “ஏயூன்” என்பது “உலகம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் “யுகம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும்.
நாம் ஒரு யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த யுகம் தீய யுகம் என்று கலாத்தியர் ஒன்றாம் அதிகாரத்திலே பவுல் கூறுகிறார். இந்தத் தீய யுகத்திலிருந்து கர்த்தர் நம்மை விடுவித்திருக்கிறார் என்று வாசிக்கிறோம்.
கலாச்சாரம் — தலைமுறைகள் மாறினாலும்
இந்த யுகத்திற்கு ஒரு ஞானம் உண்டு. நீங்கள் “யுகம்” என்று சொன்னாலும் சரி, “உலகம்” என்று சொன்னாலும் சரி, “கலாச்சாரம்” என்று சொன்னாலும் சரி — ஏறக்குறைய ஒன்றுதான்.
இந்த யுகத்திற்கு என்று ஒரு பிரத்தியேகமான கலாச்சாரம் உண்டு.
இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு தலைமுறைக்கும்கூட ஒரு பிரத்தியேகமான கலாச்சாரம் உண்டு.
10 வருடத்திற்குமுன் பார்த்த மாணவர்கள் வேறு. இப்போது பார்க்கின்ற மாணவர்கள் வேறு. 10 வருடத்திற்குமுன்பு அவர்கள் வகுப்புக்குத் தாமதமாக வந்தபோது வெட்கத்தோடு உள்ளே வந்தார்கள். இப்போது அப்படி அல்ல. அவர்களுக்கு அதைப்பற்றி எந்த வெட்கமோ, நாணமோ இருப்பதுபோல் தெரியவில்லை.
இதை ஒரு எடுத்துக்காட்டிற்குச் சொல்கின்றேன்.
தேவனுடைய மறைவான ஞானம்
இந்த யுகம் ஒன்றை ஞானம் என்று கூறுகின்றது. ஆனால் தேவனுடைய மறைவான ஞானம் என்று ஒன்று இருக்கிறது.
தேவன் ஞானத்திற்கோ அல்லது மெய்யியல் philosophy-க்கோ எதிரானவர் அல்ல. ஆனால் இந்த உலகம் தன்னுடைய ஞானத்தால் தேவனுடைய philosophy, தேவனுடைய ஞானததை ஒருநாளும் அதை பெற முடியாது. அது கிறிஸ்துவில் மறைந்திருக்கிறது. இதை 6 முதல் 10 ஆம் வசனங்களில் கூறுகிறார்.
தேவன் ஆயத்தம் செய்த நன்மைகள்
அது என்ன தேவனுடைய ஞானம்?
ஒன்பதாம் வசனத்திலே — தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அது மனிதனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை என்று ஏசாயா 64 ஆம் அதிகாரத்தின் நான்காம் வசனத்தை பவுல் இங்கே மேற்கோள் காட்டுகின்றார். மிக அற்புதமான வசனம்.
தேவன் தம்முடைய மக்களுக்கு நீதியை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். பரிசுத்தமாகுதலை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். மீட்பை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். வரவிருக்கும் யுகத்தில் புதிய படைப்பாவதை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
அதன் முன்சுவையை இந்த யுகத்தில், இந்தத் தீய யுகத்தின் நடுவிலும்கூட — வரவிருக்கும் யுகத்தின் முன்சுவையை, முன் ருசியை, முதற்கனிகளை, முதற்பலன்களை — அனுபவிப்பதற்கு கிறிஸ்துவிலே தேவன் ஆயத்தம்பண்ணியிருக்கிறார். அல்லேலூயா.
இந்த ஞானத்தை பெறுவது எப்படி?
இவைகளையெல்லாம் உலகம், அல்லது இந்த யுகம், இந்தக் கலாச்சாரம் தன்னுடைய ஞானத்தினால் பெற முடியாது என்று கூறுகிறார். பிறகு எப்படி இந்த ஞானத்தை நாம் பெற முடியும்? பரிசுத்த ஆவியானவர் மட்டுமே இந்த தேவனுடைய ஞானத்தைத் தர முடியும் என்று இரண்டாம் அதிகாரம் 10 ஆம் வசனத்தில் கூறுகிறார்.
ஆவியானவர் வெளிப்படுத்தும் உண்மைகள்
10 முதல் 12 ஆம் வசனங்களில் வாசிக்கிறோம் — நாம் ஆவியானவரைப் பெற்றிருக்கின்றோம்.
கிறிஸ்துவில் பல ஆவிக்குரிய உண்மைகளும், ஆவிக்குரிய மேன்மைகளும் உள்ளன. இதை நான் பலமுறை உங்களிடத்தில் சொல்லியிருக்கின்றேன். கிறிஸ்துவிற்குள் பல ஆவிக்குரிய உண்மைகள், மேன்மைகள் உள்ளன.
சூரியன் ஒரு உண்மை. இந்த உலகம் ஒரு உண்மை. பூக்கள் ஒரு உண்மை. நிறங்கள் உண்மை. நல்ல இசை ஒரு உண்மை என்றால், கிறிஸ்துவில் இதைவிட மேலான, இதைவிட திடகாத்திரமான, திடமான உண்மைகளும், மேன்மைகளும் உள்ளன. அவைகளை ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்துகின்றார்.
நாம் சிலுவையில் அறையப்பட்டவர்கள். நாம் உயிர்த்தெழுந்தவர்கள். கிறிஸ்துவோடு அறையப்பட்டவர்கள். கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவர்கள். கிறிஸ்துவோடு பரமேறினவர்கள். கிறிஸ்துவோடு அரியணையில் அமர்த்தப்பட்டவர்கள்.
நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மை உயிர்ப்பிக்கின்றார். அவர் நம்மை மறுஉருவாக்குகின்றார். அவர் நம்மைப் பரிசுத்தமாக்குகின்றார். புதுப்பிக்கின்றார்.
ஒரு நாளிலே நம்மை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ரூபத்திற்கு ஒத்த சாயலாக்குவார் என்கின்ற உண்மைகள் எல்லாவற்றையும் ஆவியானவர் வெளிப்படுத்துகின்றார். ஆவியானவரால் நாம் இவைகளை அறிந்துகொள்கின்றோம்.
ஏன் இதைக் கொரிந்தியர்களுக்குச் சொல்ல வேண்டும்?
அவர் இதை சண்டைபோடுகிற கொரிந்தியர்களுக்கு ஏன் சொல்ல வேண்டும்? அதுதானே கேள்வி.
பேதங்களும், பிணக்குகளும், பிளவுகளும், பிரிவினைகளும், சண்டைகளும், சச்சரவுகளும் உள்ள ஒரு சமுதாயத்திற்கு ஏன் இதைச் சொல்ல வேண்டும்?
காரணம் — உலகம் தராத நன்மைகள்
ஏன் இதைச் சொல்ல வேண்டும் என்றால் — தேவன் நமக்கு ஆயத்தம்பண்ணி வைத்த நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் இந்தக் கலாச்சாரம் ஒருநாளும் சொல்லித் தராது.
பரிசுத்தமாவது என்பது இந்தக் கலாச்சாரத்திற்கு ஒரு நன்மையா? நாம் புதிய படைப்பாவது, ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுவது, உயிர்ப்பிக்கப்படுவது — இந்த உலகத்திற்கும், இந்த யுகத்திற்கும், இந்தக் கலாச்சாரத்திற்கும் ஒரு நன்மையாய்த் தோன்றுமா?
கேளிக்கைகள் நன்மையாய்த் தோன்றும். பாவ இன்பங்கள் நன்மையாய்த் தோன்றும். அல்லது இந்த உலகத்தின் செல்வங்களும், வளங்களும், செழிப்புகளும் நன்மையாய்த் தோன்றும்.
பொதுநன்மை vs தேவனுடைய விசேஷ நன்மை
இதற்கு அர்த்தம் — இந்த உலகத்தின் வளங்களும், செழிப்புகளும், நன்மைகளும் எங்களுக்கு வேண்டாம் என்று நாம் சொல்லிவிடவில்லை. அதுவல்ல தேவனுடைய ஞானம் தருவது. அதை இந்த உலகத்து மக்களுக்கும்கூட தேவன் கொடுக்கிறார்.
“அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே. அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.”
எல்லா மனிதர்களுக்கும் அவர் இரக்கம் காண்பிக்கின்றார்.
“அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்” (சங்கீதம் 147:9). “ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்” (சங்கீதம் 104:27-29).
தேவன் தாம் உண்டாக்கின எல்லா உயிரினங்களுக்கும், பாவ மனிதர்கள் உட்பட, எல்லாருக்கும் நன்மைகளைத் தருகின்றார்.
தேவனுடைய மக்களுக்கு விசேஷமான நன்மைகள்
ஆனால் தேவனுடைய மக்களுக்கு அவர் ஆயத்தம்பண்ணி வைத்தது அதே நன்மைகள் மட்டுமல்ல.
தேவனற்ற மக்களுக்கு எந்த நன்மையைக் கொடுக்கிறீரோ அதே நன்மையைத்தான் எங்களுக்கும் தர வேண்டும் என்றால் — தேவன் — God will be disappointed — தேவன் ஏமாற்றம் அடைவார்.
இந்த நன்மைகள் இல்லை. அதைவிட மேலான, கண் காணாத, காதுகள் கேட்காத, மனிதனுடைய இருதயத்தால் கற்பனை செய்யமுடியாத நன்மைகளைத் தேவன் தம் மக்களுக்கு ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறேன்.
இதன் நோக்கம் — கிறிஸ்துவின் மனம்
இது சண்டை, சச்சரவுகள், பிளவுகள், பிரிவினைகள் நிறைந்த கொரிந்திய விசுவாசிகளுக்குத் தெரிய வேண்டும்.
ஏன் தெரிய வேண்டும்?
ஏன் தெரிய வேண்டும் என்றால் — அப்பொழுதுதான் உங்களுக்கு கிறிஸ்துவின் மனம் உருவாகும்.
தேவன் எவ்வளவோ நன்மைகளை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். ஆகவே நான் எதைக்குறித்தும் மற்றவர்களோடு போட்டிபோட வேண்டியதோ, பொறாமைப்பட வேண்டியதோ, சண்டை சச்சரவுகள் போட வேண்டியதோ, பிளவுகளும், பிரிவினைகளும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தேவன் நமக்கு ஆயத்தம்பண்ணி வைத்த எந்த நன்மையையும் நாம் பகிர்ந்துகொள்வதால் நமக்கு எந்த குறைச்சலும் ஏற்படப் போவது இல்லை.
மனித எதிர்வினை — நம்பாத மனம்
உலகத்து மக்கள் இதை நம்ப மாட்டார்கள். ஆச்சரியம் என்னவென்றால் தேவனுடைய மக்களும் இதை நம்ப மறுக்கின்றார்கள்.
“என் நேரத்தையோ, காலத்தையோ, உழைப்பையோ, வளத்தையோ, செழிப்பையோ அல்லது இந்த பெருமையையோ, இடத்தையோ — கொடுத்துவிட்டால் நான்…”
கிறிஸ்துவின் மனம் — தியாகம்
கிறிஸ்துவின் மனம் எங்களுக்கு உண்டாயிருக்கிறது.
பிலிப்பியர் 2:5-ல் சொல்கிறார் — “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.” கிறிஸ்து இயேசுவிலிருந்த அதே மனம், அதே மனப்பாங்கு உங்களிலும் இருக்கக்கடவது.
நன்மைகளைக்குறித்து, பதவியைக்குறித்து, அதிகாரத்தைக்குறித்து, வளங்களைக்குறித்து, செழிப்பைக்குறித்து, செலவழிக்கிற நேரத்தைக்குறித்து, பணத்தைக்குறித்து — தேவனுடைய மக்களுக்காக ஒன்றைக்கொடுப்பதைக் குறித்து, ஒன்றை இழப்பதைக்குறித்து, ஒன்றைத் தியாகம் செய்வதைக்குறித்து, ஒன்றைத் துறப்பதைக்குறித்து கவலைப்படாதே.
கிறிஸ்துவின் மனம் — கவலை இல்லாத வாழ்க்கை
இந்த உலகத்து மக்களும், இந்த யுகத்தின் மக்களும், இந்தக் கலாச்சாரத்தின் மக்களும் அதைப்பற்றிக் கவலைப்படுவார்கள். நீங்கள் அப்படி கவலைப்படக் கூடாது.
எங்களுக்கோ கிறிஸ்துவின் மனம் உண்டாயிருக்கிறது.
ஊனுக்குரிய நிலை — போட்டி மற்றும் பொறாமை
“பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?” நீங்கள் ஊனுக்குரியவர்களாய் இருப்பதினால் உங்களுக்குள்ளே போட்டிகளும், பொறாமைகளும் உள்ளன.
ஊனுக்குரியவர்கள், மாம்சத்திற்குரியவர்கள் — யாரைப்பார்த்து? கொரிந்திய விசுவாசிகளைப்பார்த்து சொல்கிறார். விசுவாசிகள் ஊனுக்குரியவர்களாக, மாம்சத்திற்குரியவர்களாய் இருக்க முடியும்.
காரணம் — சிலுவையைப் புரியாத மனம்
ஏன் போட்டிகளும், பொறாமைகளும் வருகின்றன?
பொறுமையாக ஒன்றாம் அதிகாரத்தில் பவுல் எடுத்து வைக்கிறார். தேவன் ஆயத்தம்பண்ணிய நன்மைகளை நீ பார். அது கிறிஸ்துவின் சிலுவையின்மூலமாக வருகின்றது. வெட்கமான, வல்லமை இல்லாத, முட்டாள்தனமான சிலுவையின்மூலமாய் வருகின்றது.
ஆகவே நீ முட்டாள்தனமாய் ஒன்றைச் செய்வதுபோல் தோன்றினால், வல்லமையற்றவன்போல், திராணியற்றவன்போல் ஒன்றை நீ செய்வதுபோல் தோன்றினால் — கவலைப்படாதே. நீ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை நீ அறிந்திருக்கிறாய்.
இயற்கையானவன் vs ஆவிக்குரியவன்
இயற்கையானவர்கள், ஜென்மசுபாவமான மனிதர்கள் இந்த நன்மைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றால் அவர்கள் பார்க்கவும் மாட்டார்கள்.
ஆவிக்குரியவன் அவைகளை நிதானிக்கிறான். The spiritual man discerns. இந்த நன்மைகள் அவனுடைய கண்களுக்குப் புலப்படுகின்றன.
விசுவாசத்தின் விளக்கம்
எபிரேயர் 11இல் பேசும்போது நான் ஒரு திருத்தமான மொழிபெயர்ப்பு கொடுத்தேன்.
“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் மெய்ப்பாடும், காணப்படாதவைகளின் உறுதிப்பாடும்.”
தேவன் ஆயத்தம்பண்ணி வைத்த நன்மைகள் இயற்கையானவன், foolish man, ஜென்மசுபாவத்துக்குரியவன் — அவன் கண்களுக்குப் புலப்படாது.
ஆனால் விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் மெய்ப்பாடும், காணப்படாதவைகளின் உறுதிப்பாடும்.
Faith is the substantiating of things hoped for and the conviction of things not seen. அல்லேலூயா.
போட்டி தேவையில்லை — தேவனுடைய நன்மைகள் போதுமானவை
ஆவிக்குரியவன் அவைகளைப் பார்க்கின்றான். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவில் தேவன் இவ்வளவு நன்மைகளை வைத்திருக்கிறார்.
ஆகவே போட்டியோ, பொறாமையோ, சண்டையோ, சச்சரவோ, பிரிவினையோ, பிளவோ, உரசல்களோ, விரிசல்களோ —தேவனுடைய மக்களிடையே அவசியம் இல்லை.
மூன்றாவது குறிப்பு — கட்டியெழுப்புதல்
மூன்றாவது குறிப்பிற்குப் போவோம். கட்டியெழுப்புதல் — தீர்ப்பு, வெகுமதி, இழப்பு.
மூன்றாம் அதிகாரம் 10 முதல் 20.
தேவனுடைய தோட்டம் — ஒவ்வொருவரின் பங்கு
மூன்றாம் அதிகாரம் 6, 8, 9-ல் பவுல் கூறுகிறார். “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.”
நீங்கள் தேவனுடைய தோட்டம். நாங்கள் தேவனுடைய தோட்டத்தின் வேலையாட்கள். நான் விதைக்கின்றேன். அப்பொல்லோ நீர்ப்பாச்சுகிறான். தேவனே விளையைச்செய்கிறார்.
தேவனுடைய மக்கள், தேவனுடைய சமுதாயம் — தேவனுடைய தோட்டம்.
தேவன் இந்தத் தோட்டத்தைப் பூத்துக்குலுங்குகின்ற தோட்டமாக்க விரும்புகிறார். அவரே செய்துவிட வேண்டியதுதானே? அவர் செய்ய மாட்டார்.
அவர் எனக்கு ஒரு வேலை கொடுப்பார் — விதைக்கிற வேலை. இன்னொருவருக்கு இன்னொரு ஒரு வேலை கொடுப்பார் — நீர்ப்பாய்ச்சுகிற வேலை.
தேவனே விதைத்து, தேவனே நீர்ப்பாச்சிவிட முடியாதா?
விதைப்பது, நீர்ப்பாய்ச்சுவது, களை எடுப்பது, உரம் போடுவது — இவைகளெல்லாம் வேலை. தேவனுடைய தோட்டத்தில் ஒன்றை விளையச் செய்வது என்பது வேலை. அதிலே தேவனுடைய மக்கள் ஈடுபட வேண்டும்.
சபையின் பல உருவகங்கள்
இவ்வளவு நேரம் பவுல் சொன்னது எதற்கென்றால் — தேவனுடைய சபை என்பது தேவ மக்களாலான ஒரு சமுதாயம்.
அது தேவனுடைய தோட்டம். அது தேவனுடைய கட்டிடம். அது தேவனுடைய ஆலயம்.
பின்பு பார்ப்போம் — அது கிறிஸ்துவின் உடல். கிறிஸ்துவின் மணவாட்டி என்று பல்வேறு விதங்களிலே தேவன் இதைச் சித்தரிக்கிறார், வருணிக்கிறார்.
விதைக்கும் வாழ்க்கை
ஆகவே நாம் ஒருவருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தால் — நாம் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை அவர்களுக்கு விதைக்கிறோம்.
தேவ மக்களுடைய வாழ்க்கை தொடர்ந்து விதைக்கின்ற வாழ்க்கை, நீர்ப்பாய்ச்சுகின்ற வாழ்க்கை.
நாம் அதற்கென்று நேரத்தைச் செலவிடுகிறோம். மனதைச் செலவிடுகிறோம். உழைப்பைச் செலவிடுகிறோம்.
தேவனுடைய கட்டிடம் — கட்டப்படவேண்டியது
ஒன்பது, பத்தாம் வசனங்களில் — நீங்கள் தேவனுடைய தோட்டமும் தேவனுடைய கட்டிடமுமாய் இருக்கின்றீர்கள்.
தோட்டம் என்று தமிழில் இருக்காது. பண்ணை என்று இருக்கும். இன்றைக்கு பண்ணை என்றால் யாருக்கும் புரியாது. God’s field. தேவனுடைய விளைநிலம், தேவனுடைய வயல் என்றுகூடச் சொல்லலாம்.
நீங்கள் தேவனுடைய வயலாய் இருக்கிறீர்கள். தேவனுடைய கட்டிடமாய் இருக்கிறீர்கள்.
எந்தக் கட்டிடமும் அதுவாக எழும்பி விடாது. தேவன் பரலோகத்தில் இருந்து “கட்டிடம் கட்டப்படுவதாக” என்று சொன்னவுடனே கட்டிடம் கட்டப்பட்டுவிடாது. அதைத் தேவனுடைய மக்கள் கட்ட வேண்டும்.
செலவு — கட்டுமானத்தின் அடிப்படை
அவருடைய உழைப்பு, அவருடைய மனம், அவருடைய நேரம், அவருடைய பொருள், அவருடைய செல்வம், அவருடைய பிரயாசம் — இவைகள் எல்லாவற்றையும் செலவிட்டால்தான் தேவனுடைய கட்டிடம் கட்டப்படும்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை கூடுகையினால் அல்ல. ஞாயிற்றுக்கிழமை கூடுகை — குறைந்தபட்சம் — தேவனுடைய சபையைக் கட்டி எழுப்புவதற்கு நாம் கொடுப்பது ஞாயிற்றுக்கிழமை கூடுகை. குறைந்தபட்சம்.
தேவனுடைய மக்களுக்காக நம்முடைய மனதைச் செலவழிக்கிறோம். நம்முடைய பணத்தைச் செலவழிக்கிறோம். நம்முடைய உழைப்பைச் செலவழிக்கிறோம்.
ஆரம்பம் — மனம்
முதலாவது எதைச் செலவழிக்க வேண்டும்? நம்முடைய மனம், மனம். மனதில் அது தோன்ற வேண்டும் — “இது முக்கியமானது” என்று.
வெகுமதி — தேவனுடைய நீதியான பதில்
ஒரு நாளிலே தேவன் இந்தக் கட்டிடத்தை மிக அழகான கட்டிடமாய்ப் பார்ப்பார். அதில் பிரயாசப்பட்ட, அதில் உழைத்த தம் மக்கள் எல்லாருக்கும் தேவன் அவனவனுடைய வெகுமதியைக் கொடுப்பார் என்று பவுல் இந்த மூன்றாம் அதிகாரத்திலே கூறுகின்றார். அவனவனுக்கு அவனவனுடைய உழைப்பின் வெகுமதி கொடுக்கப்படும்.
இதை நீங்கள் நம்புகிறீர்களா? “ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” தேவனுடைய கட்டிடத்தைக் கட்டி எழுப்புவதற்கு நான் செலவழிக்கிற உழைப்பிற்குத் தேவன் கைமாறு தருவார் என்று எபிரேயர் ஆறாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். உங்களுடைய அன்பின் பிரயாசங்களை மறப்பதற்கு அவர் அநீதி உள்ளவர் அல்லவே.
உலக வெகுமதி vs தேவன் தரும் வெகுமதி
இந்த உலகத்து முதலாளி நான் செலவழிக்கிற உழைப்பிற்கும், நேரத்திற்கும், மனதிற்கும் எனக்குத் தாராளமான வெகுமதி தருகிறான்.. Medical Insurance உண்டு. Gratuity உண்டு. இந்த உலகத்து முதலாளிகள் நம்மைக் கனம்பண்ணும்போது, தம் தோட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு வெகுமதி உண்டு என்று தேவன் சொல்கிறார். அவன் தன்னுடைய உழைப்பிற்கேற்ற வெகுமதியைப் பெறுவான் என்று சொல்கின்றார்.
இறுதி நாள் மற்றும் இன்றைய முன்தொகை
எப்பொழுது பெறுவார்கள்? இறுதி நாளில் நிச்சயமாக உண்டு. இந்த நாளில் அதனுடைய முன்தொகை உண்டு. வேலை முடிந்த பிறகுதான் சம்பளம். ஆனால் வேலை தொடங்கும்போதே தேவன் எதைக் கொடுத்துவிடுகிறார்? முன்பணம்.
நான் இதை நகைச்சுவையாய் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கின்றேன். நிச்சயமாக இறுதி நாளிலே வெகுமதி உண்டு.
ஆனால் தேவனுடைய மக்கள் இறுதி நாள் வரைக் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
விதைத்ததற்கேற்ற அறுப்பு
தேவனுடைய மக்கள் தங்கள் உடலிலே செய்கிற நன்மைக்கோ, தீமைக்கோ தக்கவாறு அறுப்பார்கள் என்று கலாத்தியர் 6-ல் சொல்வது உண்மைதான். ஆவிக்கென்று விதைக்கிறவர்கள் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பார்கள். சோர்ந்துபோகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம் என்பதெல்லாம் உண்மையாய் இருந்தபோதும்கூட இந்த யுகத்திலும்கூட தேவன் அதற்குரிய முன்சுவையை, முன்தொகையை, முன்பணத்தை, முதற்கனிகளை, முதற்பலன்களை நாம் அனுபவிப்பதற்கு தரவே தருகிறார்.
அது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். அதைப்பற்றி நாம் கவலைப்படக் கூடாது. ஆனால் நிச்சயமாக என்ன செய்கிறார்? தருகின்றார்.
தீர்ப்பு — நம்முடைய பங்கு
இறுதி நாளின் தீர்ப்பு உண்டு என்ற எச்சரிக்கையை தேவனுடைய மக்களாகிய நம் எல்லாருக்கும்முன்பாக நான் வைக்க விரும்புகின்றேன்.
நாம் தேவனுடைய சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதில் நம்முடைய பங்களிப்பு என்ன? நாம் எந்த அளவுக்கு அதை சிரத்தையோடு செய்கின்றோம்?
இதை நாம் கட்டி எழுப்புகின்றோமா அல்லது உடைக்கின்றோமா?
சபை — தேவனுடைய ஆலயம்
சபை தேவனுடைய ஆலயம் என்று 15-ல் சொல்கிறார். நீங்களே அந்த ஆலயமாய் இருக்கின்றீர்கள்.
தேவனுடைய மக்களுடைய உறவாடுதல் இருக்கின்றது இல்லையா? தேவனுடைய மக்களுடைய கலந்து உறவாடுதல், பகிர்ந்து உறவாடுதல் — அதுதான் தேவனுடைய ஆலயம்.
இது வரவிருக்கும் யுகத்திலும் நிற்கும். நாம் எப்படி அதைக் கட்டி எழுப்புகின்றோம் என்று தீர்ப்பிடப்படும்.
இதையை பவுல் ஆணித்தரமாகச் சொல்கிறார். அந்த நாள் நெருப்பினால் அதைச் சோதிக்கும். அந்த நாள் அது திட்டவட்டமான நாள்.
பொறுப்பில்லாத மனம் — ஒரு அபாயம்
“எனக்கெல்லாம் கட்டி எழுப்புவதில் பங்கே கிடையாது. என்னால முடிஞ்சது முடிஞ்சா ஞாயிற்றுக்கிழமை ஒரு நேரம் போய்த் தலையைக் காட்டிவிட்டு வருவேன்,” என்று சொல்ல முடியாது.
இதைத்தான் நான் இரட்சிக்கப்படாதபோது கூடச் செய்தேன். நான் கோயிலுக்குப் போகாத, பூசை பார்க்காத நாளே இல்லை. அதற்கும் இயேசுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது என்னுடைய கலாச்சார பின்னணி.
ஞாயிற்றுக்கிழமை என்றால் கோயிலுக்குப் போகணும். இது கலாச்சாரம்.
எதைகொண்டு கட்டுகிறோம்?
தீர்ப்பு உண்டு. நாம் பொன், வெள்ளி, மாணிக்கக்கற்களைக்கொண்டு கட்டுகிறோமா அல்லது மரம், புல், வைக்கோலைவைத்துக் கட்டுகிறோமா.
பொன், வெள்ளி, மாணிக்கக்கற்களை யாராவது நம் பையிலிருந்து வெளியே எடுத்து விடுவோமா என்ன? மரம், கல், வைக்கோல் என்றால் அது குப்பைத்தொட்டிக்குப் போக வேண்டியதுதான்.
எதை நாம் தேவனுடைய மக்களுக்குச் செலவழிக்கிறோம்?
போலியான புத்திசாலித்தனம்
தீர்ப்பின் நாள் உங்களுக்கு வெகுமதி தரும். சிலர் மாணிக்கக்கற்கள், பொன், வெள்ளி செலவிடவில்லை. மரம், புல், வைக்கோல்தான் செலவழிப்பார்கள். இவர்கள் தங்களைப் புத்திசாலிகளாகக் கருதுகிறார்கள்.
இவர்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை அறிந்தவர்கள் அல்ல. இவர்கள் உலகத்து ஞானம் உள்ளவர்கள். “நான் பொன், வெள்ளி, மாணிக்கக்கற்களையும் செலவிட வேண்டாம். மரம், புல், வைக்கோலும் செலவிட வேண்டாம்,” என்று நினைக்கிறார்கள்.
நடுநிலை இல்லை
அருமையானவர்களே, மேட்டில் ஏறுகிற கார் ஒன்று ஏற வேண்டும் அல்லது இறங்க வேண்டும். நியூட்ரல் என்று ஒன்று இல்லை.
ஒன்று நாம் கட்டுகிறோம் அல்லது நாம் இடிக்கிறோம்.
இல்லை — நான் ஒன்றும் செய்வதில்லை. ஒன்றும் செய்யாதது எதற்குச் சமம்? நாம் ஒன்றுமே செய்யவில்லை.
விலையேறப்பெற்ற செலவு
ஆகவே அருமையான சகோதர சகோதரிகளே, மரம், மாணிக்கக்கற்கள், பொன், வெள்ளி என்பது விலையேறப்பெற்ற ஒன்றை நாம் தேவனுடைய சபையைக் கட்டுவதற்காக, தேவனுடைய மக்களுடைய உறவாடலை கட்டுவதற்காக —
நான் சொல்வது வெறுமனே இந்தக் கூடுகையைப்பற்றி மட்டும் சொல்லவில்லை — தேவனுடைய மக்களுக்குள் கிறிஸ்துவின் அளவு பெருகுவதற்காக, அவர்கள் ஒருவரோடு ஒருவர் இசைவாய்க் கட்டி எழுப்பப்படுவதற்காகச் செலவிடுவதற்கென்று நிறைய தேவைப்படுகிறது.
அந்தத் தருணத்தில் அந்தச் செலவிடுவது நாம் நட்டப்படுத்துவதுபோல் தோன்றும். ஆனால் அதற்குரிய வெகுமதியைத் தேவன் தருவார். நான் நட்டப்படவில்லை.
சபை — விளையாட்டு அல்ல
சபை என்பது ஒரு விளையாட்டு அல்ல.
We are not doing church game. We are not playing church game.
அங்கே கொஞ்சம் பாடல்கள், கொஞ்சம் கதைகள், அப்புறம் கொஞ்சம் கூட்டங்கள் வைத்தால் போதும் என்பதல்ல.
We are not playing church game. We are building up something that is serious.
நித்திய மதிப்புடைய ஒன்றை நாம் கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறோம்.
இறுதி அழைப்பு
நீங்க பத்து பேரா? நரி ஏறினால் அது உங்களுடைய மதில் உடைந்துபோகும். அதைப்பற்றி எனக்குத் தெரியாது.
நான் என்னை ஆராய்ந்து பார்ப்பேன். மனந்திரும்புவேன். வெட்கப்படுவேன். ஆனால் this is a serious matter.
தேவன் தாமே இந்த வார்த்தைகளைக்கொண்டு நம்மை ஆசீர்வதிப்பாராக.
சுருக்கமான முடிவு
தேவனுடைய மக்களிடையே ஒருமை, இசைவு, ஒன்றிப்பு என்பது தேவனுடைய பார்வையிலே அருமையானது.
அதற்கு முதலாவது தேவை என்ன?
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துதான் தேவனுடைய ஞானம், தேவனுடைய வல்லமை என்கின்ற புரிந்துகொள்ளுதல் நமக்கு வேண்டும்.
இரண்டாவது — ஆவிக்குரியவர்கள் கிறிஸ்துவின் மனமுள்ளவர்களாய் இருப்பார்கள்.
கிறிஸ்துவின் மனம் என்ன?
தேவனுடைய மக்களுக்காக ஒன்றை இழப்பதுதான் கிறிஸ்துவின் மனம்.
சிலுவைவரை தன்னை இழப்பது. மனிதனாய்த் தன்னை இழப்பது. சிலுவைவரை தன்னை இழப்பது. அதற்கும்கீழும் தன்னை இழப்பது.
இப்படிப்பட்ட காரியங்களை நாம் செய்யும்போது தேவனுடைய சபை கட்டி எழுப்பப்படும்.
அதற்கு வெகுமதி உண்டு. இந்த நாளிலே வெகுமதிக்கு முன்தொகை உண்டு.
ஆமென்.