Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

சபையைக் கட்டியெழுப்பும் தலைமைத்துவம்

1. சமுதாயமும் தலைமைத்துவமும்

எந்தச் சமுதாயம் தேவ குணமுள்ள தலைவர்களைப் பெற்றிருக்கிறதோ, அந்தச் சமுதாயம் கட்டியெழுப்பப்படும். ஒரு சமுதாயத்தின் குணம், அந்த சமுதாயத்தின் தலைமைத்துவத்தினுடைய அல்லது நடத்துகையினுடைய குணம். அது மிக எளிமையானது.

நாம் முதலாவது வாசித்த வசனத்திலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, இந்த உலக சமுதாயத்திலே தலைவர்கள் எப்படி இயங்குவார்கள் என்று சொன்னார். பேதுரு தன் முதல் கடிதத்தின் ஐந்தாம் அதிகாரத்திலே பேசுகிறார். அவர்கள் இருமாப்பாய் ஆளுவார்கள். அடக்கி ஆளுவார்கள். தங்களுடைய அதிகாரம், தங்களுடைய பதவி, உரிமை, அந்தஸ்து, கௌரவம், எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் சமுதாயத்தின்மேல் செலுத்துவார்கள்.

உச்சகட்டம் Autocracy, Fascism, and போன்ற அமைப்புகளில் இந்த அதிகாரம் உச்சத்தை அடையும். ஆகவே, ஒரு சமுதாயத்தில் தலைமைத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் உலகத்திற்கும் தேவனுடைய சபைக்கும், உலகத்திற்கும் தேவனுடைய மக்களுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி, வேறுபாடு, உள்ளது. நம்முடைய மிகப்பெரிய முன்மாதிரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

2. தேவனுடைய சபைக்குத் தலைவர்கள் தேவை

தேவனுக்குத் தலைவர்கள் தேவை. நாம் சில சமயம், “இங்கே யாரும் தலைவர்கள் இல்லை; நாங்கள் எல்லோரும் சேவகர்கள்தான்” என்று சொல்லலாம். ஆனால் அது முழுமையான உண்மை அல்ல. தேவனுடைய சபைக்கும் சமுதாயத்திற்கும் தலைவர்கள் தேவை.

நாம் அறிவிப்புச் செய்வோம்:
தலைவர்கள் தேவை! அனைவரும் விண்ணப்பிக்கலாம்!”

யார் தங்களுடைய உரிமைகளைப் பயன்படுத்த விரும்பவில்லையோ,
யார் தேவனுடைய மக்களிடையே அடிமைகளாக இருக்க விரும்புகிறார்களோ, யார் தங்களை சுய நெறிப்பாட்டிற்கு உட்படுத்திக் கொள்கிறார்களோ—அவர்கள் எல்லாரும் விண்ணப்பிக்கலாம்!

அல்லேலூயா! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நல்ல வெகுமதி உண்டு — தீர்ப்புநாளில்!”

3. தலைமைத்துவத்தின் மூன்று முக்கியக் குறிப்புகள்

3.1 உரிமைகளைப் பயன்படுத்தாமை

நடத்துகிறவர்கள், தலைவர்கள், தங்கள் உரிமைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். நடத்தப்படுகிறவர்களும் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்த கூடாது.

3.2 அடிமைத்துவ மனப்பான்மை 

இரண்டாவது குறிப்பு. நடத்துகிறவர்கள் தேவ மக்களுக்குத் தங்களை அடிமைகளாக்குகின்றார்கள். நடத்தப்படுகிறவர்களும் நடத்துகிறவர்களுக்குத் தங்களை அடிமையாக்க வேண்டும்.

3.3 சுய நெறிப்பாடு 

மூன்றாவது குறிப்பு. நடத்துகிறவர்கள் தங்களைச் சுய நெறிப்பாட்டுக்கு உட்படுத்துகின்றார்கள். நடத்தப்படுகிறவர்களும் அதேபோல் தங்களை உட்படுத்த வேண்டும். நடத்துகிறவர்கள் இப்படி என்றால் நடத்தப்படுகிறவர்கள் இப்படி இருக்க வேண்டும்.

4. உண்மையான தலைவனின் இயல்பு

நடத்துகிறவர்களுக்கு உரிமை இருக்கிறதா? உரிமை இருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, “தான் சேவை பெற வரவில்லை. சேவிக்க வந்தேன்,” என்று சொல்கிறார். அப்போஸ்தலர் 20:35:
வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதே பாக்கியம்.” இந்த இரண்டு வசனங்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நம்முடைய வீடுகளிலும், சபைகளிலும் எழுதிப் போட வேண்டும். “சேவை கொள்ள வராமல் சேவிக்க வந்தேன்”.

5. கொடுப்பதிலும் பெறாமலிருப்பதிலும் உள்ள ஆவிக்குரிய நிலை 

கொடுப்பதில் உற்சாகம் இருக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனால் “பெறாமல் இருப்பதில் உற்சாகம் இருக்கிறது” என்று நமக்குத் தெரியுமா?  அது எப்படிப்பட்டது? அது எப்படிப்பட்டது என்றால், பவுல் கொடுப்பதிலும் உற்சாகமாய் இருந்தார். பெறுவதைத் தடுப்பதிலும் உற்சாகமாய் இருந்தார். அல்லேலூயா. அது எப்படிச் சாத்தியம்? அது ஏசா சொன்னதுபோல, “எனக்குத் தேவையானது எல்லாம் இருக்கிறது; எனக்கு ஒன்றும் வேண்டாம்” என்ற மனநிலை.

ஆகையால், அருமையான பரிசுத்தவான்களே, நடத்துகிறவர்கள் எப்படித் தங்களுடைய சேவை கொள்ளுகின்ற உரிமையை, வாங்குகிற உரிமையைப் பயன்படுத்துவதில்லையோ, அதுபோல நடத்தப்படுகிறவர்களும் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும்.  

6. கரிஸ்மா என்றால் என்ன?

தலைவர்களை இனம் காண்பது எப்படி? ஒரு தலைவனை எப்படி அடையாளம் காண்பது? அவர்கள் மிகவும் சுவையாகப் பேசுகிறாரா? இரண்டு மணி மக்களைக் கவர்கின்றாரா? கரிஸ்மா என்பதன்  இலக்கணம் என்ன? அவர்கள் நல்ல சொற்பொழிவாளர்களா? பேச்சாளர்களா? தமிழோ, ஆங்கிலமோ சரளமாகப் பேசுகிறார்களா? நன்றாகப் பாடுகிறார்களா? நகைச்சுவை செய்கிறார்களா? அதுவல்ல கரிஸ்மா. அதுவல்ல கரிஸ்மா!

ஒரு தலைவனின் முதல் இலக்கணம்:
அவன் தன் உரிமைகளையும் அதிகாரத்தையும் துறந்தவனா? அல்லது கோருகிறவனா? அவன் தன்னுடைய உரிமைகளையும் அதிகாரங்களையும் மனமுவந்து துறந்தவன். அப்படிப்பட்டவரே உண்மையான தலைவன்.

7. நடத்தப்படுகிறவர்களின் பொறுப்பு

அப்படிப்பட்ட நடத்துகிறவனுக்கு தேவ மக்களுடைய மாறுத்தரம் என்னவாக இருக்க வேண்டும்? அவன் தன்னுடைய உரிமைகளையும் அதிகாரங்களையும் பயன்படுத்துவதில்லை, கைவிடுகிறான் என்றால், நான் என்னுடைய உரிமைகளையும் அதிகாரங்களையும் எவ்வளவு கைவிட வேண்டும்? பொதுவாக நாம் கைவிட மாட்டோம். பொதுவாக நாம், “அது என்னுடைய உரிமை. செய்வதும் செய்யாததும் என்னுடைய உரிமை. வருவதும் வராததும் என்னுடைய உரிமை. தருவதும் தராததும் என்னுடைய உரிமை,” என்று  சொல்வோம். தேவனுடைய மக்களுக்கும், தேவனற்ற மக்களுக்கும் எவ்வளவு வேறுபாடு! தேவனுடைய மக்கள் தங்கள் உரிமைகளை மனமுவந்து விட்டுக்கொடுக்க வேண்டும்.

“ஓ! அவர்கள் எங்களைத் தவறுதலாக கையாண்டு விட்டால்?” என்ற சந்தேகம் எழலாம். அதற்குரிய checks and balancesஐ தேவன் தம்முடைய மக்களிடையே வைத்திருக்கிறார். எங்கு தனிமனித தலைமை இருக்கிறதோ, அங்கு தவறுதலாகக் கையாளுவதற்கு வாய்ப்பு உண்டு.  எங்கு கூட்டுத் தலைமை இருக்கிறதோ, அங்கு தவறுதலாக கையாளுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.

8. கணக்கு ஒப்புவிக்கும் வாழ்க்கை

தலைவர் எவ்வளவு charismatic தலைவனாக இருந்தாலும் சரி, அவர் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

இந்த இருபது நூற்றாண்டுகளிலே சபை எவ்வளவோ தலைவர்களைப்  பார்த்திருக்கின்றது. கணக்கு ஒப்புவிக்காத மனிதன் நம்பப்படத்தக்கவன் அல்ல. “என் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றிக்கூடவா?” என்று  தலைவர்கள் கேட்கலாம். அவருடைய வாழ்க்கை:

  • நேரம்
  • வருமானம்
  • குடும்பம்
  • தனிப்பட்ட வாழ்க்கை

இவையெல்லாம் விசாரணைக்குத் திறந்திருக்க வேண்டும்

“ஆ! அது என் உரிமை. இது என் தனிப்பட்ட வாழ்க்கை” என்று சொல்லுகிறவன் — தலைவன் அல்ல.

9. வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்கும் மனப்பான்மை

சேவை பெறுகிற உரிமையை, வாங்குகிற உரிமையை அவர்கள் விடும்போது, தேவனுடைய மக்களாகிய நாம் நம் உரிமைகளை விட்டுவிட வேண்டும். ஒரு தலைவன் கட்டளையிடாமல், வேண்டுகோள் வைப்பான். அதை நாம் எப்படி ஏற்க வேண்டும்?
கட்டளையாக! “இதை நீங்கள் செய்கிறீர்களா?” என்று ஒரு வேண்டுகோள் வைத்தால், “ஓ! அதை ஏற்பதும் ஏற்காததும் என் உரிமை,” என்று சொல்லக்கூடாது. நடத்துகிறவன் தன் உரிமையை விட்டுவிட்டு அதை ஒரு வேண்டுகோளாக வைக்கும்போது, நான் அதை ஒரு கட்டளையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். “நான் என்னுடைய உரிமைகளைப் பயன்படுத்துகிறேன்,” என்று சொல்லுகின்ற சமுதாயம் கட்டப்பட முடியாது.

10. அடிமைத்துவ சேவை

அதுபோல இரண்டாவது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை  அடிமையாக்கினார். அவருடைய அடியொற்றி நடந்த பவுல் தன்னை அடிமையாக்கினார். உண்மையான தலைவர்கள் தங்களித் தேவ மக்களுக்கு அடிமையாக்குகிறார்கள். பிறருக்கு எப்படியாவது கிறிஸ்துவைக்கொண்டு போவதற்காக அவர்கள் தங்களை எல்லாருக்கும் எல்லாமும் ஆக்குகிறார்கள்.  இதைச் செய்தால் கிறிஸ்து அவர்களில் பெருகுவார் என்றால், அதற்காக அவர்கள் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். பாடினால் அவர்களில் கிறிஸ்து பெருகுவார்   என்றால் பாடுவோம். பாடாமல் இருந்தால் கிறிஸ்து பெருகுவார்  என்றால் பாடாமல் இருப்போம்.   உண்மையான தலைவர்கள் தங்களை
எல்லாருக்கும் எல்லாமாக்கிக் கிறிஸ்துவைக் கொண்டுசெல்கிறார்கள்.

தேவனுடைய மக்களாகிய நாம் நடத்துகிறவர்களோடு சேர்ந்து அடிமையாய்ச் சேவிக்க வேண்டும். நாமும் அதேபோல், “எங்கே சேவை செய்ய வாய்ப்பு?” என்று கேட்க வேண்டும்.

நான் பல சபைகளில் பார்த்திருக்கிறேன். ஒரு மூத்த சகோதரன் ஜன்னல் துடைப்பார். அது தேவனுடைய சபையிலே தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு என்று மிகச் சிரத்தையோடு அதைச் செய்வார். ஆகவே, நான் வலியுறுத்த விரும்புகிற காரியம் என்னவென்றால், நடத்துகிறவர்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தாமல் இருக்கும்போது நடத்தப்படுகின்ற தேவ மக்களும் தங்கள் உரிமைகளைப்  பயன்படுத்தாமல் இருப்பது மேலானது. நடத்துகிறவர்கள் தங்களை அடிமைப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஆயினும்  அவர்கள் தங்களை அடிமைப்படுத்திக்கொள்ளும்போது,. நடத்தப்படுகிறவர்கள் தங்களை அடிமைப்படுத்துவது எவ்வளவு பெரிய காரியம் !

கீழ்ப்படிதலும் எபிரேயர் 13

எபிரேயர் 13இல் பணிந்தடங்குவதைப்பற்றி வாசிக்கின்றோம். “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.” “இது கொஞ்சம் பயமுறுத்துவதுபோல் இருக்கிறதே,” என்று நினைத்தேன்.  “நீங்கள் அவர்களுக்குப் பணிந்தடங்குங்கள்,” என்று சொல்வதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஒன்றைச் செய்யுமாறு நடத்துகிறவர்கள்  கோருகிறார்கள். “இதைச் செய்யுங்கள்,” என்று வேண்டுகிறார்கள். ஆனால், நடத்தப்படுகிறவர்கள் அதைச் சிரமேற்கொண்டு செய்வதில்லை. “அவர் வேண்டுவதை நான் செய்யாவிட்டால் அவர் என்ன செய்வார்? அல்லது யார் என்ன செய்து விடுவார்கள்?” என்று அவர்கள் நினைக்கிறார்கள்.  அவரும் ஒன்று செய்ய மாட்டார். யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள். தேவ மக்கள் ஒரு காரியத்துக்குக் கீழ்ப்படியாததினாலோ, அல்லது ஒரு வேண்டுகோளை நிறைவேற்றாததினாலோ, அல்லது அவர்களைப்பற்றிய தனிப்பட்ட விஷயம் தெரிந்ததினாலோ யாரும் அவர்களைத் தரக்குறைவாகப் பேசப்போவதில்லை அல்லது மலிவாக நினைக்கப்போவதில்லை.   ஆனால் “அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே” என்கின்ற எச்சரிக்கை தேவனுடைய வார்த்தையில் உள்ளது. இதையும் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள் இன்னொரு பக்கம் அதை அவர்கள் துக்கத்தோடு செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. It is not profitable to you. To put it bluntly, that would be unprofitable to you.

நெறிப்பாடு (Discipline)

இறுதியாக நடத்துகிறவர்கள் உண்மையாவே தங்களை ஒரு நெறிப்பாட்டுக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். நெறிப்பாடு என்பது என்ன? ஒன்றைச் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அவன் தன்னை அந்தக் கட்டுப்பாட்டிற்குள் உட்படுத்திக்கொள்கிறான். சபைக்கும் சபைக்கு வெளியே இருக்கின்ற மக்களுக்கும் என்ன வேறுபாடு? நாம் மனமுவந்து பல கட்டுப்பாடுகளுக்கும், நெறிப்பாடுகளுக்கும் நம்மை உட்படுத்திக்கொள்கிறோம். இந்த உலக மக்களுக்கு அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளும், நெறிப்பாடுகளும் அவசியமில்லை. அவர்கள் அதை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. நன்மைகளைப் பெறுவதற்காக, தேவனுடைய சபை ஆசீர்வதிக்கப்படுவதற்காக, தேவனுடைய சபை கட்டியெழுப்பப்படுவதற்காக, நற்செய்திக்காக நாம் பல நெறிப்பாடுகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றோம். Disipline. நாம்: நேரத்தில், செலவுகளில், வாழ்க்கையில் நெறிப்பாடுகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றோம்.

தலைவர்கள் உருவாகும் சமுதாயம்

உண்மையாவே ஒரு தலைவன் அல்ல. பல தலைவர்கள் உருவாக வேண்டும். ஒரு ஆரோக்கியமான சமுதாயம் புதிய தலைவர்களை உருவாக்கும், அதிகாரத்தை விடும், சேவைக்கு மாறும். அடுத்த தலைவர்கள் கிடைத்த உடனே தலைமைப் பொறுப்பை அவர்களுடைய கையிலே கொடுத்துவிட்டு, நாம் தலைவருக்கு மேல உட்கார ஆளாக மாறிவிடக்கூடாது. அவர் கேட்டால் தவிர நாம் எந்தக்  கருத்தும் தெரிவிக்கக்கூடாது. அவர் தலைவர் என்றால், அவருக்குரிய இடத்தைத் தேவன் கொடுத்திருப்பார்.

ஆகவே, ஒரு நல்ல ஆரோக்கியமான சமுதாயம் அடுத்த கட்டத்  தலைவர்களை உருவாக்குவதை நோக்கி நகர வேண்டும். அந்தத்  தலைவர்கள் எழுந்தவுடன், இப்போது இருக்கின்ற தலைவர்கள் அவர்களுடைய பணிவிடைக்காரர்களாக மாறிவிட வேண்டும். இந்த இலக்கை நோக்கித்தான் ஒரு ஆரோக்கியமுள்ள தேவனுடைய சமுதாயம் நகரும். இதுவே தேவனுடைய சபையின் நடை.

ஆமென்.