ஒரு குறைவு உனக்கு உண்டு
Transcript of a message spoken in Chennai
by Milton Rajendram
வேத வாசிப்பு
மாற்கு எழுதின நற்செய்தி பத்தாம் அதிகாரம் 17முதல் 31 முடிய உள்ள வசனங்களை வாசிப்போம்.
“அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார். சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது! ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்” (மாற்கு 10:17-27).
21 ஆம் வசனத்திலே, “இயேசு அவனைப் பார்த்து அவனிடத்தில் அன்பு கூர்ந்து, ‘ஒரு குறைவு உனக்கு உண்டு’ என்றார்.”
ஜெபம்
நாம் ஜெபிப்போம்.
எங்கள் ஆண்டவராகிய இயேசுவே, நீர் எங்கள்மேல் அன்புகூர்ந்து எங்களோடு பேசுகின்ற உம்முடைய வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் நிலையை உண்மையாய் அறிந்தவர் நீர் மட்டுமே. தேவன் ஒருவரே நாங்கள் யார் என்பதை அறிவீர். நாங்கள் அறியமாட்டோம். எங்களைச் சுற்றியுள்ளவர்கள் அறியமாட்டார்கள். ஆனால் நீர் அறிவீர், ஆண்டவரே.
இந்தக் காலை வேளையிலே உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் எங்கள் தேவை என்ன, எங்கள் குறைவு என்ன என்பதை நாங்கள் காண எங்கள் கண்களைத் திறந்தருள்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், பிதாவே. ஆமென்.
அறிமுகம் – ஓடிவந்த வாலிபன்
இது மிக எளிமையான சம்பவம். சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு வாலிபன் ஓடிவந்து அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு — சாலையிலே அப்படிப்பட்ட வாலிபர்களை நாம் பார்த்தது கிடையாது — “நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடத்தில் விசாரிக்கிறான்.
இப்படிப்பட்ட ஒரு சீடன் இன்றைக்கு இருக்கின்ற குருக்கள், சத்குருக்கள், சுவாமிஜிகள் யாராவது போகிற வழியிலே ரோட்டிலேயே ஓடிவந்து முழங்கால்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்றால் அவனை ஆரத்தழுவி ஏற்றுக்கொள்வார்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்: “கட்டளைகள் உனக்குத் தெரியும். அவைகளின்படி உன்னுடைய வாழ்க்கையை வாழ்.”
இந்த 21ஆம் நூற்றாண்டிலே எந்தப் போதகரும், “நல்ல ஒழுக்கங்களின்படி வாழ்” என்று சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை.
“இந்தக் கட்டளைகளின்படி நல்லொழுக்கமாக நான் வாழ்கிறேன். என்னிடத்தில் வேறு என்ன குறைவு உண்டு?”
இன்றைய போதகர்கள், “உன் சொத்து எல்லாவற்றையும் விற்று முதலாவது நம்முடைய ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடு,” என்று சொல்வார்கள்.
அவர் சொன்னார்: “உன் சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடு.” காரியம் அதுவல்ல. “வந்து என்னைப் பின்பற்று.”
ஒரு குறைவு உனக்கு உண்டு – அன்போடு கூறப்பட்ட வார்த்தை
இப்படிப்பட்ட ஒரு நல்ல சீடனைப் பார்த்து அவர் சொல்வது: “அவனிடத்தில் அன்பு கூர்ந்து, ஒரு குறை உன்னிடத்தில் உள்ளது.” இது அன்புகூர்ந்து பேசுகிற வார்த்தையா? அன்புகூர்ந்து, “சபாஷ்! இதுபோன்ற ஒரு பக்தியுள்ள வாலிபனை நான் என்னுடைய வாழ்க்கையில் இதுவரை கண்டதில்லை,” என்றால் அது அன்பு. “ஒரு குறைவு உன்னிடத்தில் உள்ளது” என்று சொல்வது அன்புகூர்ந்து பேசுகிற வார்த்தையா?
யாரிடமாவது போய் அவர்களிடம், “ஒரு குறை இருக்கிறது” என்று சொன்னால், “அன்பு இருந்தால் அப்படிச் சொல்வார்களா?” என்று நாம் சொல்வோம்.
ஆகவே நாம் இன்று பார்க்கிற இந்தச் செய்தியினுடைய தலைப்பு: ஒரு குறைவு உன்னிடத்தில் உள்ளது.
ஒன்று உனக்குக் குறைவுபடுகிறது. எனக்கு ஒன்று குறைவுபடுகிறது. உனக்கு ஒன்று குறைவுபடுகிறது. “ஒரு குறைவு உன்னிடத்தில்” அல்லது “ஒரு குறைவு உனக்கு உண்டு.” “உன்னிடத்தில் உள்ளது” என்றுகூட சொல்ல மாட்டேன். “ஒரு குறைவு உனக்கு உள்ளது.” “உன்னிடத்தில் உள்ளது” என்றால் “உன்னிடத்தில், உன்னுடைய ஆளுமையில், உன்னுடைய நபரில் ஒரு குறைவு உள்ளது” என்பதுபோன்று சொல்லலாம்.
நம்முடைய நபரில் ஒரு குறைவா உள்ளது? ஒரு கோடி குறைவுகள் உள்ளன. ஆகவே “உன்னிடத்தில்” என்று சொல்வதைவிட “உனக்கு ஒரு குறைவு உள்ளது.” அது மாற்கு பத்தாம் அதிகாரம் 21ஆம் வசனம். இயேசு அவனைப் பார்த்து அவனிடத்தில் அன்புகூர்ந்து, “உன்னிடத்தில்” அல்லது “உனக்கு ஒரு குறைவு உள்ளது,” என்றார்.
இந்த வாலிபன் யார்?
இவன் ஒரு பக்தியுள்ள வாலிபனா அல்லது பக்தி இல்லாத வாலிபனா? பக்தியுள்ள வாலிபன். எந்த வாலிபன், “நித்திய ஜீவனை நான் சுதந்தரித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்ற எண்ணத்தோடு தேடுவான்? அவன், “நித்திய ஜீவன் என்று ஒன்று உள்ளது — Eternal life. அந்த நித்திய ஜீவனை நான் பெற விரும்புகிறேன்,” என்ற இருதயம் உள்ள ஒரு வாலிபன். மிகவும் நல்ல வாலிபன்.
அவனிடத்தில் ஒரு குறைவும் இல்லை. அவன் “எனக்கு இந்த கார் வேண்டும் அல்லது இந்த மொபைல் போன் வேண்டும் அல்லது இந்த மாதிரி டிரஸ் வேண்டும், இந்த மாதிரி ஷூ வேண்டும்” என்று கேட்கவில்லை. அவன் செல்வமுள்ள ஒரு வாலிபன். ஆனால் அவனுடைய செல்வங்களுக்கு அப்பாற்பட்டு “நித்திய ஜீவன் ஒன்று நான் பெற வேண்டியுள்ளது” என்கின்ற உணர்வு அவனுக்குள் இருந்தது. அந்தச் செல்வங்கள் அவனை மனநிறைவடையச் செய்யவில்லை.
22 ஆம் வசனம் — அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாய் இருந்தான். மிகுந்த செல்வம் உள்ளவனாய் இருந்தான். ஆனால் இந்தச் செல்வங்களுக்கு அப்பாற்பட்டு “எனக்கு நித்திய ஜீவன் ஒன்று வேண்டும்” என்கின்ற ஒரு நாட்டமும், ஒரு தேட்டமும், அவனிடம் இருந்தது.
எழுத்தின்படி அவன் என்ன செய்தான்? “நித்திய ஜீவன் என்று ஒன்று உள்ளது. அதை எப்படிப் பெறுவது என்று தெரியவில்லை. பொய்காரர்கள் இந்த உலகத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால் இதோ! நடந்து வந்துகொண்டிருக்கிறாரே! இந்தப் போதகர் — இவரைப் பார்த்தால் மெய்காரர்போல் தோன்றுகிறது. ஒருவேளை இந்த நித்திய ஜீவனைப் பெறுவது எப்படி என்கின்ற இரகசியம் இவருக்குத் தெரிந்திருக்கலாம்,” என்று நினைக்கிறான், அவரிடம் ஓடிவருகிறான்.
இந்த நித்திய ஜீவன் தேவனுடைய அரசு, இரட்சிப்பு என்று பல வார்த்தைகளால் இதே பகுதியிலேகூட வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
முதல் குறிப்பு: அடிமைத்தனமும் விடுதலையின் ஏக்கமும்
ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திலும் ஏதோவொன்று, “என்னை ஒடுக்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஒடுக்கத்திலிருந்து, இந்த அழுத்தத்திலிருந்து நான் விடுதலை பெற வேண்டும்,” என்ற ஏக்கம் இருக்கிறது. “நான் வாழ்கின்ற வாழ்க்கையில் ஓர் ஒடுக்கம் உள்ளது, ஓர் அழுத்தம் உள்ளது, ஓர் அடிமைத்தனம் உள்ளது. இந்த ஒடுக்கத்திலிருந்தும், அழுத்தத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் நான் விடுதலை பெற விரும்புகிறேன்,” என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் இருக்கிறது.
“என்னுடைய இருதயத்தில் இல்லையே?” என்று நீங்கள் சொல்லலாம். உங்கள் இருதயத்தில் உள்ளது. அது இல்லாத மனிதனே இல்லை. சுவாசிக்காத மனிதனே இல்லை என்பதுபோல், இந்த ஒடுக்கத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை வேண்டும் என்ற எண்ணம் இல்லாத மனிதனே இல்லை.
ஆகவே நம்முடைய முதலாவது குறிப்பு: அடிமைத்தனமும் அதிலிருந்து விடுபடும் ஏக்கமும்.
இரண்டாவது குறிப்பு: ஒழுக்கத்தைப்பற்றிய அறிவும் அதன் போதாமையும்
இரண்டாவது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்: ஒழுக்கத்தைப்பற்றிய கட்டளைகள் உனக்குத் தெரியுமே. அவைகளை நீ கைக்கொள்.
அவன் சொல்கிறான்: ஒழுக்கத்தைப்பற்றி இந்த எல்லாக் கட்டளைகளையும் நான் என்னுடைய சிறு வயது முதற்கொண்டு கைக்கொண்டிருக்கிறேன், கீழ்ப்படிந்து வருகிறேன்.
ஆகவே நம்முடைய இரண்டாவது குறிப்பு: எல்லா மனிதர்களுக்கும் ஒழுக்கத்தைப்பற்றி ஓர் அறிவு உண்டு.
நீங்கள் சொல்லலாம்: ஒழுக்கம் என்றால் என்ன? ஒழுக்கம் என்கின்ற வார்த்தை நமக்கு ஒன்றும் மிகவும் பிடித்தமான வார்த்தை இல்லை. ஒழுக்கம் அல்லது அறம் அல்லது சால்பு — morality, ethics. virtue — இதைப்பற்றிய ஓர் அறிவு மனிதர்களுக்கு உண்டு. ஆனால் இந்த அறிவு போதாது.
“இவைகளை எல்லாம் நான் என்னுடைய சிறு வயது முதற்கொண்டு பின்பற்றி வருகிறேன், கைக்கொண்டு வருகிறேன்,” என்று சொல்கிறான். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்: “உண்மையாகவா?”
ஆகவே நம்முடைய இரண்டாவது குறிப்பு: ஒழுக்கத்தைப்பற்றிய அறிவும் அதன் போதாமையும். Knowledge of morality and its inadequacy.
மூன்றாவது குறிப்பு: குறைவும் நிறைவும்
மூன்றாவது குறிப்பு: நீ இந்த கட்டளைகளை எல்லாம் உன் சிறு வயது முதற்கொண்டு கைக்கொண்டு வருகிறாய், கடைப்பிடித்து வருகிறாய், பின்பற்றி வருகிறாய். ஆனால் உனக்கு ஒரு குறைவு உண்டு. One thing you lack.
இன்றைக்கு இந்த உலகத்திலே ஒரு மனிதனை, ஒரு மனுஷியைச் சுட்டிக்காட்ட, “உனக்கு ஒரு குறைவு உண்டு; அந்தக் குறைவு இருக்கிறவரை நித்திய ஜீவனை நீ பெற முடியாது,” என்று சொல்வதற்கு நபர்கள் இல்லை. “உனக்கு நிறைவு இருக்காது” என்று சொல்வதற்கும் இல்லை.
ஆகவே நம்முடைய மூன்றாவது குறிப்பு: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குறைவை மட்டும் சொல்லவில்லை. “அப்படி என்றால் யார்தான் தேவனுடைய அரசில் நுழைய முடியும்? யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று அவருடைய சீடர்கள் கேட்கிறார்கள்.
இந்தச் சம்பவம், “அவன் நித்திய ஜீவனைப் பெறமாட்டான், தேவனுடைய அரசிற்குள் நுழைய மாட்டான், அவன் இரட்சிக்கப்பட மாட்டான்,” என்பதுபோல் முடிவடையவில்லை. அவன் மிகுந்த செல்வம் உடையவனாய் இருந்தபடியால் துக்கத்தோடு மனமடிந்து போய்விட்டான். இந்தக் கதை மிகவும் சோகமாக முடிவடைகிறது.
ஓடி வருகிறான். நடந்து போகிறான். உற்சாகமாக ஓடி வருகிறான்; தொய்வோடு நடந்து போகிறான்.
அவன் நடந்து போவதை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பார்க்கும்போது அவரும் துக்கமடைந்திருப்பார்.
அவனுக்கு முன்பாக நித்திய ஜீவனின் வழியை வைக்கிறார். ஆனால் அவனுடைய குறைவை நிறைவுசெய்கிற வழியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனுக்குமுன்பாக வைத்தபோது, அந்த வழியை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“குறைவு உள்ள ஒரு மனிதனுடைய வாழ்க்கை நிறைவுமிக்க வாழ்க்கையாக மாற முடியும். அது மனிதனால் முடியாது; ஆனால் தேவனால் முடியும்,” என்று அவர் தன் சீடர்களுக்குச் சொல்கிறார்
ஆகவே நம்முடைய மூன்றாவது குறிப்பு: குறைவும் நிறைவும் என்று சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம்.
தலைப்பின் அழுத்தம்
இந்தச் செய்தியினுடைய தலைப்பு என்ன? ஒரு குறைவு உனக்கு உண்டு.
“உனக்கு ஒரு குறைவு உண்டு என்பதும், ஒரு குறைவு உனக்கு உண்டு என்பதும் ஒன்றுதானே!” என்றால் “இல்லை.” இப்படித்தான் சொல்ல வேண்டும்: ஒரு குறைவு உனக்கு உண்டு. எதை நாம் அழுத்த விரும்புகிறோமோ, அதைத்தான் முதலாவது சொல்ல வேண்டும். ஒரு குறைவு உனக்கு உண்டு.
மூன்று குறிப்புகளின் சுருக்கம்
மூன்று குறிப்புகள் சொன்னோம்.
முதலாவது குறிப்பு என்ன? அடிமைத்தனமும் அதிலிருந்து விடுபடும் ஏக்கமும் — இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு.
இரண்டாவது குறிப்பு: ஒழுக்கத்தைப்பற்றிய அறிவும் அதன் போதாமையும்.
மூன்றாவது குறிப்பு: மனிதனில் குறைவும் கிறிஸ்துவில் நிறைவும் — அல்லது குறைவும் நிறைவும் என்று வைத்துக்கொள்ளலாம்.
நித்திய ஜீவன், தேவனுடைய அரசு, இரட்சிப்பு
முதலாவது 17ஆம் வசனத்தில் வாசிக்கின்றோம்: “பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில் ஒருவன் ஓடிவந்து அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு, நல்ல போதகரே, நித்திய ஜீவனை சுதந்தரிக்கும்படி நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
இங்கு நித்திய ஜீவன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
23ஆம் வசனத்தில் “தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
26ஆம் வசனத்தில் “அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும்?” என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஆகவே நித்திய ஜீவன், தேவனுடைய அரசு, இரட்சிப்பு — அல்லது நாம் அடிக்கடி பயன்படுத்துகிற வார்த்தை புதுப்படைப்பு, புதிய படைப்பு — இவைகள் எல்லாம் ஒன்றைத்தான் குறிக்கின்றன.
மனித வாழ்க்கையின் சிதைவும் மாய உணர்வும்
மனித வாழ்க்கை பாடுகளும் துன்பங்களும் நிறைந்த வாழ்க்கை என்பதை எல்லாருமே ஒத்துக்கொள்வார்கள். மனித வாழ்க்கையில், இந்த உலகத்து வாழ்க்கையில், ஒரு சிதைவு என்பது எப்போதுமே நடந்துகொண்டிருக்கிறது. ஏதோவொன்று நம்முடைய வாழ்க்கையிலே சிதைந்துகொண்டே இருக்கிறது. அது வளர்ந்துகொண்டேபோகிறது என்று சொல்ல முடியவில்லை. ஏதோவொன்று சிதைந்துகொண்டே போகிறது அல்லது நாம் ஒன்றை வளர்ப்பதற்கு முயல்கிறோம். நாம் வளர்க்க முயல்கிற அதே நேரத்திலே ஒன்று சிதைந்துகொண்டும் போகிறது. ஒன்றை நாம் உருவாக்க விரும்பும்போது அது சீர்கெட்டுக்கொண்டும் போகிறது.
ஆகவே இப்படிச் சிதைந்துகொண்டும், சீர்கெட்டுக்கொண்டும் போனால், ஒரு நாளிலே இதனுடைய முடிவு என்னவாக இருக்கும்? அழிவாக இருக்கும் அல்லது முழு மனித வாழ்க்கையுமே வெறுமையாகவும் மாயையாகவும் முடிந்துவிடும் என்கின்ற எண்ணம் பலருக்கு எழுகிறது.
துன்பங்களும் பாடுகளும் பெருகும்போது, “இந்த மனித வாழ்க்கை ஒரு வெறுமையான வாழ்க்கை. இந்த மனித வாழ்க்கை ஒரு மாயையான வாழ்க்கை. மனித வாழ்க்கைக்கு எந்தப் பொருளும் இல்லை,” என்று அவர்கள் நினைக்கிறார்கள். அப்படி நினைக்கின்ற மக்களுடைய எண்ணிக்கை கோடாகோடி.
“பொய்யாய், பழங்கதையாய், கனவாய் மெல்லப் போனதுவே” என்று நம்முடைய புலவர் ஒருவர் சொல்லியிருக்கிறார். மனித வாழ்க்கையைப்பற்றி அவருடைய கருத்து என்ன? இது பொய், இது பழங்கதை, இது கனவு. கனவுபோல் தோன்றி மறைந்துவிடுகிறது. ‘இவ்வளவுதான் மனித வாழ்க்கையா’ என்றால், மனித வாழ்க்கையினுடைய பாடுகளும் துன்பங்களும் அவர்களை அப்படி யோசிக்க வைக்கின்றன.
படைப்பின் பிரசவ வேதனை
ரோமர் எட்டாம் அதிகாரம் 21 முதல் 25 ஆம் வசனங்களை நாம் அறிவோம். இந்த முழுப் படைப்பும் பழைய படைப்பாக இருக்கிறது. இந்தப் பழைய படைப்பு சிதைவுக்குள்ளும், சீர்கேட்டுக்குள்ளும், அழிவுக்குள்ளும் இருக்கிறது. ஆகையால் படைப்பு ஒரு பேறுகால வேதனைக்குள், ஒரு பிரசவ வேதனைக்குள், இருக்கிறது.
“அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.”
இந்தப் படைப்பானது ஒரு பிரசவ வேதனைக்குள்ளாக இருக்கிறது. “இந்தச் சிதைவிலிருந்தும், சீர்கேட்டிலிருந்தும், அழிவிலிருந்தும் விடுதலை பெற்றுவிட மாட்டோமா!” என்று பழைய படைப்பு ஏங்குகிறது. “பழைய படைப்பு” என்று சொல்லும்போது உயிரினங்கள், உயிரில்லாதவைகள் எல்லாமுமே அப்படிப்பட்ட ஒரு சிதைவுக்குள்ளும், சீர்கேட்டிற்குள்ளும், அழிவுக்குள்ளும்தான் இருக்கின்றன. பாக்டீரியாக்களும், வைரஸ்களும், முள்ளும், குறுக்கும் இந்த உலகத்தில் இருக்கின்றன.
கேள்வி: கடவுள் ஏன்?
உடனே, “கடவுள் ஏன் இதையெல்லாம் உண்டாக்கினார்?” என்று கேள்வி கேட்பார்கள். அதற்கு பின்பு வருகிறேன். இந்தக் கேள்வி ஒன்றும் நமக்கு நூதனமான கேள்வி அல்ல.
“மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்” நீதி. 19:3
பிள்ளைகளுடைய வாழ்க்கை மோசமாக இருந்தால், “என்னுடைய வாழ்க்கை இப்படி இருப்பதற்கு காரணம் நான்” என்று சொல்ல மாட்டார்கள். “என்னுடைய வாழ்க்கை இப்படி மோசமாக இருப்பதற்குக் காரணம் யார்? என்னுடைய பெற்றோர்கள்” என்று சொல்வார்கள்.
நாமும் பழைய படைப்பின் பாகம்
இந்தப் பழைய படைப்பிலே மனிதர்களாய் நாம் ஒரு பகுதியாக இருக்கிறோம். ஆகவே நாமும் யார்தான்? “பழைய படைப்பு” என்று சொல்லும்போதே அது ஏதோ நமக்கு வெளியே இருக்கிறது என்று நினைக்கக் கூடாது. நாம் இந்தப் பழைய படைப்புக்கு வெளியே ஒரு மூன்றாம் மனிதனைப்போல் இருந்துகொண்டு, “இந்தப் பழைய படைப்பு சிதைந்துகொண்டும், சீர்கெட்டுக்கொண்டும், அழிந்துகொண்டும் இருக்கிறது. கடைசியில் வெறுமையாய், மாயையாய் முடியப்போகிறது” என்று பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் அல்ல.
நாமும் அந்தச் சிதைவுக்குள்ளே இருக்கிறோம். நம்முடைய உடலும், உள்ளமும் சிதைந்துகொண்டும், சீர்கெட்டுக்கொண்டும், அழிந்துகொண்டும் இருக்கிறது. கடைசியில் உண்மையிலேயே, “இந்த மனித வாழ்க்கையினுடைய பொருள் என்ன? இது வெறுமையாகவும் மாயையாகவும் முடிகிறது” என்று நாம் நினைக்கின்றோம்.
அடிமைத்தனத்தின் உருவகம்
இதை ஏன் அடிமைத்தனம் என்று சொல்கிறோம்? ஒரு பந்தை அழுத்தினால் அது என்ன செய்யும்? தன்னுடைய இயல்பான நிலைக்குத் திரும்புவதற்கு அது முயற்சி செய்யும். ஒரு பந்தைத் தண்ணீருக்குள்ளே அழுத்தினால் அது வெளியே வருவதற்கு முயற்சி செய்யும்.
அதுபோல மனிதனை இப்படிப்பட்ட சிதைவுக்குள்ளும், சீர்கேட்டுக்குள்ளும், அழிவுக்குள்ளும் அழுத்தினால் அதை அவனால் தாங்க முடியாது, பொறுக்க முடியாது. “எப்படியாவது இந்தச் சிதைவிலிருந்தும், சீர்கேட்டிலிருந்தும், அழிவிலிருந்தும் நாம் வெளியே வந்துவிடமாட்டோமா?” என்கின்ற ஒரு துடிப்பு, ஓர் ஏக்கம், ஒரு கதறுதல், ஒரு பெருமூச்சு, ஒரு பிரசவ வேதனை எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கிறது.
யாத்திராகமத்தின் சாட்சி
யாத்திராகமம் இரண்டாம் அதிகாரம் 23 முதல் 25 ஆம் வசனங்களை நாம் வாசிப்போம். அங்கே எபிரெய மக்கள் எகிப்திலே அடிமைத்தனத்துக்கு உட்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு இளைப்பாறுதல் அல்லது ஓய்வு என்று ஒன்று இல்லை.
“சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.”
அடுத்த வசனம் — “தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.”
மனிதர்கள் அடிமைத்தனத்திற்கு உட்பட்டவர்கள். பழைய படைப்பில் உள்ள பாக்டீரியாக்களுக்கும், வைரஸ்களுக்கும் நாம் உட்பட்டிருப்பது அடிமைத்தனமா இல்லையா? அடிமைத்தனம்.
அதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்ற ஏக்கம் இல்லாதவர்கள் யாராவது உண்டா? “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று ஏங்காதவர்கள் யாராவது உண்டா? அவர்கள் ஏங்குவதால்தான் இவ்வளவு fitness centers இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவ்வளவு மருத்துவமனைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இல்லையா?
இளைப்பாறுதல் தேடும் மனிதன்
இந்த அடிமைத்தனத்திலிருந்து எப்படியாவது நாம் விடுதலை பெற்றுவிடமாட்டோமா என்கின்ற ஏக்கமும், கதறுதலும், பெருமூச்சும், பிரசவ வேதனையும் எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கிறது.
ஆகவே அடிமைத்தனம் என்பது உண்மையானது. நாம் எல்லாரும் அதற்கு உட்பட்டவர்கள். நாம் எல்லாரும் அதற்கு ஆட்பட்டவர்கள்.
இந்தச் சிதைவும், சீர்கேடும், அழிவும் உள்ள உலகத்திலே, “எப்படியாவது ஓர் இளைப்பாறுதலை நாம் பெற்றுவிட மாட்டோமா!” என்கின்ற ஏக்கம் மனிதனுக்குள் இருக்கிறது. “ஓர் இளைப்பாறுதலையும், ஒரு மனநிறைவையும் பெற்றுவிடமாட்டோமா!” என்கின்ற ஏக்கம் மனிதர்களுக்குள் உள்ளது. ஆகவே மனிதர்கள் எல்லாரும் ஓர் இளைப்பாறுதலையும், நிறைவையும் பெற்றுவிட வேண்டும் என்று முயற்சி செய்கின்றார்கள்.
பிரசங்கியின் Diagnosis
பிரசங்கி இரண்டாம் அதிகாரம் 10, 23 ஆகிய இரண்டு வசனங்களை நாம் வாசிப்போம்.
எப்படியாவது ஒரு மனநிறைவை, ஒரு மனத்திருப்தியைப் பெற வேண்டும் என்பது மனிதர்களுடைய துடிப்பாகவும், இயக்கமாகவும், தவிப்பாகவும் இருக்கிறது.
ஒரு மனநிறைவையும், இளைப்பாறுதலையும் பெற வேண்டும் என்கின்ற துடிப்பும், தவிப்பும் இல்லாத மனிதர்கள் உண்டா?
ஒரு நாளின் முடிவிலே சிலர் மதுபானம் குடிக்கின்றார்கள். எதற்காக? ஓர் இளைப்பாறுதலையும், ஒரு மனநிறைவையும் பெற்றுக்கொள்வதற்காக.
மனிதர்கள் பல்வேறு உபாயங்களை கைக்கொள்கிறார்கள். போதை மருந்துகளை எடுக்கின்றார்கள். அந்தப் போதை மருந்து எடுத்தபிறகு இந்த உலகத்திலே தங்களைப்போல பலசாலிகளும், தங்களைப்போல ஞானிகளும் வேறு யாருமே இல்லை என்பதுபோல அவர்கள் பேசுவார்கள். முதலாவது தங்களுக்கு ஞானமும் பலமும் இல்லை என்பதற்காகத்தான் இந்தப் போதை மருந்தை அவர்கள் எடுப்பார்கள். அந்தப் போதை மருந்து எடுத்தபிறகு, “நம்மைப்போல ஞானியும், நம்மைப்போல பலமுள்ளவனும் வேறு யாரும் இல்லை” என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துவிடும்.
“என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை.” இந்த அடிமைத்தன வாழ்க்கையிலே ஓர் அரசன் சொல்கிறான்: “என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது, இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.”
இது ஒரு typical மனித வாழ்க்கை. “எனக்கு என்னவெல்லாம் விருப்பமோ, நான் விரும்பினவைகளெல்லாம் பெற்றால் எனக்கு இளைப்பாறுதலும் மனநிறைவும் வந்துவிடும்” என்று நினைக்காத மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா? “எனக்கு இந்த விருப்பம் உண்டு; என் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு எனக்கு வழிகள் இல்லை” என்றுதான் மனிதர்கள் நினைப்பார்கள்.
இதோ ஒரு மனிதன் — அவன் எவைகளை எல்லாம் விரும்பினானோ, எவைகளை எல்லாம் இச்சித்தானோ, அவைகளை எல்லாம் பெற முடிந்தது.
23ஆம் வசனம் — அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே.
“என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும், என் இருதயம் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் ‘No’ என்று சொல்லி விலக்கவில்லை. அவைகளை எல்லாம் பெற்றுக்கொள்ளும் வசதியும் வாய்ப்பும் எனக்கு இருந்தது.” ஆனால் அவனுடைய முடிவு என்ன? அவன் மனதுக்கு இளைப்பாறுதல் இல்லை.
இது வேதத்தினுடைய diagnosis. மனித வாழ்க்கையைப்பற்றி, மனிதனுடைய இருதயத்தைப்பற்றி, மனிதனுடைய உள்ளத்தைப்பற்றி, மனிதனுடைய psychology-ஐப்பற்றி வேதத்தினுடைய diagnosis.
உண்மையான இளைப்பாறுதல்
“இல்லையே, எனக்கு இளைப்பாறுதல் இருக்கிறதே! எனக்கு மனநிறைவு இருக்கிறதே!” என்று யாராவது சொல்லலாம். இந்த உலகின் காரியங்களிலே ஈடுபடுத்திக்கொள்ளும்போது ஒரு மனநிறைவும், ஓர் இளைப்பாறுதலும் இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால் இந்த உலகின் இரைச்சல்களும், ஓசைகளும் நிற்கும்போது நம்முடைய மனம் மேலே வந்து அப்பொழுதுதான் — “எனக்கு இளைப்பாறுதல் இல்லை,” என்று சொல்லும்.
அகஸ்தினுடைய மேற்கோள் என்ன? “கர்த்தாவே, நாங்கள் உமக்காக உண்டாக்கப்பட்டவர்கள். உம்மில் இளைப்பாறுதல் பெறும்வரை எங்கள் இருதயங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.”
இதையே Blaise Pascal என்ற பிரெஞ்சு physicist, mathematician இப்படிச் சொல்லியிருக்கிறார்: “There is a God-shaped vacuum in every man.” ஒவ்வொரு மனிதனிலும் தேவனால் உண்டாக்கப்பட்ட ஒரு வெற்றிடம் உண்டு. அதை அவன் தன் கண்கள் இச்சித்தவைகள், இருதயம் இச்சித்தவைகள் எவைகளைக் கொண்டு நிரப்பினாலும் அந்த வெற்றிடம் அவைகளால் நிரப்பப்பட முடியாது.
நித்திய உணர்வு – தீவிலே வளர்ந்த குழந்தை
ஆகவே ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திலும், “இந்த அடிமைத்தனத்திலிருந்து நான் விடுதலை பெற்றுவிட மாட்டேனா? எனக்கு ஓர் இளைப்பாறுதல் கிடைத்துவிடாதா?” என்கின்ற துடிப்பும், தவிப்பும், ஏக்கமும், கதறுதலும் இருந்துகொண்டே இருக்கிறது.
ஏறக்குறைய இன்றைய மனிதனுடைய நிலை எப்படி என்றால் — ஒரு கப்பல் சேதத்திலே ஒரேவொரு சிறு குழந்தை ஒரு தீவிலே மாட்டிக்கொண்டது என்று வைத்துக்கொள்வோம். அற்புதமாக தப்பித்து ஒரு குழந்தை ஒரு தீவிலே வந்து அடைந்துவிட்டது. உயிரோடு இருக்கிறது. அது வளர்கிறது. குழந்தையாக இருந்தபோது தீவுக்கு வந்தது. வளரும்போது வேறு எந்த மனிதர்களையும் பார்த்ததில்லை.
“என்னைப்போல மனிதர்கள் இந்த உலகத்தில் எங்கோ இருக்கிறார்கள்,” என்று இந்தக் குழந்தைக்குத் தெரியுமா? ஒரேவொரு குழந்தை. கற்பனை செய்து பாருங்கள். வேறு மனிதனைப் பார்த்ததே இல்லை. ஆனால் அது மற்ற விலங்குகளை, பறவைகளை எல்லாம் பார்க்கிறது. அந்த விலங்குகளுக்குக் குட்டிகள் இருப்பதைப் பார்க்கிறது.
ஒரு நாயைப் பார்க்கிறது. நாய் குட்டி போடுகிறது. நாய் தன் குட்டிக்குப் பால் குடிக்கிறது. இவைகளைப் பார்க்கும்போது இந்த மனிதக் குழந்தை சிறிது சிறிதாக வளரும்போது ஓர் உணர்வு வருமா? இன்னும் எந்த மனிதனையும் பார்க்கவில்லை. சக மனிதனைப் பார்க்கவில்லை. பெற்றோர் என்ற எண்ணம் கிடையாது. ஆனாலும் அந்த மனிதக் குழந்தைக்குள் — “நம்மைப்போல மனிதர்கள் இருக்கிறார்கள்” என்ற உணர்வு எழும்.
இதைத்தான் பிரசங்கி மூன்றாம் அதிகாரம் 11 ஆம் வசனத்தில் நாம் பார்க்கிறோம். “அவர் மனிதனுடைய இருதயத்தில் நித்தியத்தையும் வைத்திருக்கிறார்.”
ஜீவன் மற்றும் நித்திய ஜீவன்
மனித வாழ்க்கை என்பது — நாம் இந்த உலகத்திலே சிதைந்துகொண்டும், சீர்கெட்டுக்கொண்டும், அழிந்துகொண்டும் இருக்கிறோம்; ஒரு நாள் நாம் மண்ணோடு மண்ணாய் போய்விடுவோம் — அவ்வளவுதான் மனித வாழ்க்கை என்று நினைக்கின்றார்களா? அல்லது “இல்லை, மனித வாழ்க்கைக்கு இதைவிட மேலான பொருளும், மேலான நோக்கமும் உண்டு,” என்று நினைக்கின்றார்களா?
என்ன நோக்கம் என்று அவர்களுக்குத் தெரியாது. என்ன பொருள் என்று அவர்களுக்குத் தெரியாது. என்ன குறிக்கோள் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் ஏதோ ஒன்று அவர்களை உறுத்துகிறது.
மனித வாழ்க்கை வெறுமனே மண்ணோடு மண்ணாய்ப் போய் முடிவது இல்லை.
ஜீவனுக்கும், நித்திய ஜீவனுக்கும் என்ன வேறுபாடு?
ஜீவன் என்றால் அது மண்ணோடு மண்ணாய் இந்த வாழ்க்கை முடிந்துவிடுகிறது.
நித்திய ஜீவன் என்றால் இல்லை — மண்ணோடு மண்ணாய் முடிவதில்லை. அதற்கு அப்பாலும் மனித வாழ்க்கைக்கு ஒரு பொருள் உள்ளது. மனித வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் உள்ளது. மனித வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள் உள்ளது.
There is a meaning. There is a purpose. There is a destiny beyond death.
ஆகவேதான் அந்த வாலிபன் ஓடிவந்து முழங்கால்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
இரண்டாவது குறிப்பு: ஒழுக்கம் மற்றும் நித்திய ஜீவனின் தொடர்பு
நம்முடைய இரண்டாவது குறிப்பு —“கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே,” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்.
அப்படியானால் நித்திய ஜீவனுக்கும் இப்படிப்பட்ட ஒரு மனித நடக்கைக்கும், மனித ஒழுக்கத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. இதுவும் மனிதர்களுக்குத் தெரியும். ஒழுக்கத்திற்கும் நித்திய ஜீவனுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. மனித வாழ்க்கை ஒழுக்கமான வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
ஒழுக்கம் என்றால் என்ன?
ஒழுக்கம் என்பதை ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கிறோம்? Moral. Morality. Moral class — நல்லொழுக்க வகுப்பு. Morality என்றால் நல்லொழுக்கம். தீயொழுக்கம் என்று ஒன்று இருக்கிறது. Ethic என்றால் அறம். Morality என்றால் நல்லொழுக்கம்.
Moral knowledge — நல்லொழுக்கத்தைப்பற்றிய அறிவு விலையேறப்பெற்றது.
ஒரு துணியை எப்படி துவைக்க வேண்டும் என்கின்ற அறிவு பயனுள்ளதா இல்லையா? பழைய காலத்திலே துணியை சவுக்காரம் போட்டுத் துவைத்தார்கள். இன்றைக்கு யாரும் சவுக்காரம் போட்டு துவைப்பதில்லை. நாம் washing machine-இல் washing powder போட்டு துவைத்துவிடுகிறோம். அந்த அறிவு பயனுள்ளதா, பயனற்றதா? பயனுள்ளது.
பழைய காலத்திலே விறகு வைத்து எரித்தார்கள். இப்போது எதை எரிக்கிறோம்? Gas வைத்து இருக்கிறோம். இந்த அறிவு பயனுள்ளதா, பயனற்றதா? பயனுள்ளது.
யாராவது ஒழுக்கத்தைப்பற்றிய அறிவு மிகவும் பயனுள்ளது என்று ஆசைப்படுகிறார்களா? எப்படிச் சமைப்பது என்பதைப்பற்றிய அறிவு, எப்படித் துவைப்பது என்பதைப்பற்றிய அறிவு, எப்படிப் பயணம் செய்வது என்பதைப்பற்றிய அறிவு — ஒரு காலத்தில் நடந்து போவோம்; பிறகு சைக்கிளில் போனோம்; இப்போது powered vehicle, motor cycle-இல் போகின்றோம் — இந்த அறிவு பயனுள்ளது.
ஒழுக்கத்தைப்பற்றிய அறிவு — அதை வைத்து என்ன செய்யப்போகிறோம்?
தேவனுடைய வார்த்தையும் ஒழுக்க அறிவும்
முதலாவது, ஒழுக்கத்தைப்பற்றிய அறிவு இல்லை என்று சொல்ல முடியாது. தேவனுடைய வார்த்தை ஒழுக்கத்தைப்பற்றிய அறிவைப் போதிக்கிறது. 10 கட்டளைகள் — யாத்திராகமம் 20ஆம் அதிகாரம் 3 முதல் 17 ஆம் வசனங்களிலே உள்ளது. 10 கட்டளைகள் யாத்திராகமத்திலும் உள்ளது; உபாகமத்திலும் உள்ளது.
“கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பொய் சொல்லாதே, களவு செய்யாதே, ஏமாற்றாதே.”
ஓ, இவைகள் எல்லாம் விலையேறப்பெற்ற நல்லொழுக்க அறிவா, ஒழுக்க அறிவா என்றால் — விலையேறப்பெற்ற ஒழுக்க அறிவு.
மனிதனுக்குள் உள்ள ஒழுக்க அறிவு
இன்னொரு கேள்வியைக் கேட்கலாம். ஒருவேளை தேவன் இந்த ஒழுக்க அறிவை மனிதர்களுக்குக் கொடுக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். மனிதர்கள் அவர்களாகவே இந்த ஒழுக்க அறிவை அறிந்துகொள்கிற வாய்ப்பு உள்ளதா? உள்ளது. இதுதான் அற்புதத்தில் அற்புதம். ஆச்சரியமானது.
ஒருவேளை தேவனுடைய வார்த்தையை அவர்கள் பெறுவதற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், தேவன் மனிதர்கள் இப்படிப்பட்ட ஒழுக்கமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்; ஒழுக்கத்தைப்பற்றிய அறிவு அவர்களுக்கு வேண்டும் என்பதற்காக ஓர் உபாயத்தை வைத்திருக்கிறார்.
அததை எங்கே வைத்திருக்கிறார்? நான் எந்தப் புத்தகத்தையும் வாசிக்கவில்லை. ஆனால் நான் அன்புகூர வேண்டும். மற்றவர்கள் துன்புறும்போது நான் அவர்கள்மேல் அன்புகூர்ந்து அந்தத் துன்பத்தைத் துடைக்க வேண்டும்.
ஒருவேளை ஒரு குழியிலே ஓர் ஆடு விழுந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். எந்தக் கல் நெஞ்சக்காரனும் அந்த ஆட்டைத் தூக்கிவிடுவானா? அந்தக் கழுதையை தூக்கிவிடுவானா? ஏன் தூக்கிவிட வேண்டும்? அந்த நல்லொழுக்கத்தைப்பற்றிய அறிவு — அன்புகூர வேண்டும் என்கின்ற நல்லொழுக்கத்தைப்பற்றிய அறிவு — எங்கிருந்து அவனுக்கு வந்தது? எங்கே இருக்கிறது அவனுக்குள்? அவனுடைய மனசாட்சியில் இருக்கிறது.
ரோமர் 2 – மனசாட்சி சாட்சி இடுகிறது
ரோமர் இரண்டாம் அதிகாரம் 14 முதல் 16ஆம் வசனங்களை வாசிப்போம். யாத்திராகமம் இல்லாத புறவினத்தார் சுபாவமாய் யாத்திராகமத்தின்படி செய்கிறபோது, யாத்திராகமம் இல்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே யாத்திராகமமாய் இருக்கிறார்கள்.
“நியாயப்பிரமாணம்” என்பது கஷ்டமான வார்த்தை. “திருச்சட்டம்” என்றால் கொஞ்சம் புரிகிறது. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று சொல்வதுதான் சட்டம். “எதை நீ செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது,” என்று திருச்சட்டம் போதிக்கிறது.
புறவினத்தார் என்றால் அவர்களுக்குத் தேவனைப்பற்றிய அறிவில்லை. ஆனால் தங்களுக்குத் தாங்களே அவர்கள் திருச்சட்டமாய் இருக்கின்றார்கள்.
15ஆம் வசனம் — அவர்களுடைய மனசாட்சியும்கூட சாட்சி இடுகிறது. “இது நல்லது, இது கெட்டது,” என்று அவனுடைய மனசாட்சி சான்று பகர்கிறது. மனசாட்சி பேசுகிறது. “இது சரி, இது தவறு,” என்று மனசாட்சி பேசுகிறது. “இது நன்மை, இது தீமை,” என்று மனசாட்சி பேசுகிறது. “இது நல்லொழுக்கம், இது தீயொழுக்கம்,” என்று மனசாட்சி பேசுகிறது.
மனசாட்சி – தேவன் வைத்த சிக்னல்
மனிதர்கள் மார்சுக்கு, நிலாவுக்குப் பல விண்கலங்களை விடுகிறார்கள். Satellite. ஒருவேளை மார்சுக்கு விட்ட ஒரு விண்கலத்துக்குப் பூமியோடு உள்ள தொடர்பு அற்றுப்போய்விட்டது என்று வைத்துக்கொள்வோம்.
ஏறக்குறைய மனிதனும் அப்படித்தான். தேவனோடு உள்ள தொடர்பு அற்றுப்போனது. ஆனால் அந்த விண்கலத்திலே மனிதர்கள் வைத்திருக்கின்ற சில computerகள், சில antennaக்கள் இருப்பதால் சில சிக்னல்கள் கிடைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் திரும்ப அங்கிருந்து வருகிற சிக்னல் மனிதர்களுக்கு வராது.
அதுபோல மனிதர்களுக்குள்ளே ஒரு சிக்னல் தேவனிடத்திலிருந்து வந்துகொண்டிருக்கும். தேவனோடு உள்ள உறவு அற்றுப்போனபோதும்கூட, தேவனைப்பற்றி ஒரு சின்ன சிக்னல் — ஒரு சமிக்ஞை.
தீயை நான் பார்க்க முடியவில்லை. தொலை தூரத்தில் புகையைப் பார்க்கிறேன். புகை என்பது அங்கே தீ இருக்கிறது என்பதற்கான சிக்னல், சமிக்கஞை.
அதுபோல தேவனோடு உள்ள உறவு அற்றுப்போனபோதும்கூட மனிதனுக்குள்ளே தேவன் install பண்ணி வைத்திருப்பது என்ன? மனசாட்சி.
அந்த மனசாட்சி absolute scale அல்ல. அது தெள்ளத்தெளிவான ஒரு அளவுகோல் அல்ல. அது நெருப்பை “நெருப்பு” என்று சொல்லாது; நெருப்பை “புகை” என்றுதான் சொல்லும். ஆனால் “அது குற்றம், குற்றம் இல்லை. இது குற்றம். இது நல்லது, இது கெட்டது. இது நன்மையானது, இது தீமையானது. இது சரி, இது தவறு. இது நல்லொழுக்கம், இது தீயொழுக்கம்,” என்று மனசாட்சியில் சமிக்கஞைகள் இருக்கத்தான் செய்கின்றன.
அந்த மனசாட்சியை “சும்மா இரு” என்று தட்டி ஓர் இடத்திலே இருக்க வைப்பது மிகவும் எளிது. திரும்பத் திரும்ப மனசாட்சியைத் தட்டி “சும்மா இரு, சும்மா இரு” என்று சொன்னால் நாளடைவில் இந்த மனசாட்சி சும்மா இருந்துவிடும்.
மனசாட்சியை கூர்மையாக்கவும் செய்யலாம்; மழுங்கடிக்கவும் செய்யலாம்.
பகுத்தறிவும் தேவனுடைய கருவி
அவனுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கின்றன. Reason — பகுத்தறிவு — என்பதும்கூட தேவன் மனிதனுக்குள் வைத்திருக்கிற இன்னொரு கருவி என்று சொல்லலாம்.
எப்படி மனசாட்சி ஒரு கருவியாக இருக்கிறதோ, பகுத்தறிவும் ஒரு கருவியாக இருக்கிறது.
“நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியையை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறது” என்று காண்பிக்கின்றார்கள்.
ஆகவே இந்த வாலிபன், “இவைகளை எல்லாம் என்னுடைய சிறு வயது முதற்கொண்டு நான் பின்பற்றி வருகிறேன், கடைப்பிடித்து வருகிறேன்,” என்று சொல்கிறான்.
வரலாறு மற்றும் ஒழுக்க உணர்வு
திருவள்ளுவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தெரியுமா, தெரியாதா என்று எனக்குத் தெரியாது. அதைப்பற்றிய சச்சைக்குள் நான் போக விரும்பவில்லை. தெரிந்திருக்கலாம்.
தொன்றுதொட்டு தமிழ்நாட்டிற்கும் மற்ற நாடுகளுக்கும் — மேலை நாடுகள், கீழை நாடுகள் — வாணிகம் நடைபெற்றது. கிரேக்கர்களை தமிழ் இலக்கியத்தில் “யவனர்கள்” என்று அழைக்கின்றார்கள்.
உள் நாட்டிலிருந்து மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கும் வாணிகம் நடைபெற்றது. “நாவாய்” என்பது தமிழ்ச் சொல். “நாவாய்” என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் என்ன? கப்பல். அது கிரேக்கத்திற்குப் போய், ஐரோப்புக்குப் போய் “NAVY” ஆக மாறியது.
ஆகவே மனிதர்களுக்கு அவர்களின் மனசாட்சியிலும், பகுத்தறிவிலும் நல்லொழுக்கத்தைப்பற்றிய அறிவைத் தேவன் அருளியிருக்கிறார். அவர்களுக்குத் தேவனுடைய வார்த்தை கிடைக்காமல் போனாலும் சரி, தேவனுடைய வெளிப்பாடு இல்லாமலிருந்தாலும் சரி.
ரோமர் ஒன்றாம் அதிகாரத்திலும், இரண்டாம் அதிகாரத்திலும் அதைப்பற்றித் தெள்ளத்தெளிவாக எழுதியிருக்கிறது.
பல பாடல்களிலும்கூட அதை நாம் பார்க்கிறோம். “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே.”
போஸ்ட்மாடர்னிசம் (postmodernism) – ஒழுக்க மறுப்பு
மாறாக, இன்றைக்கு “போஸ்ட்மாடர்னிசம்” என்ற ஒரு தத்துவம் மேலோங்கிநிற்கிறது.
போஸ்ட்மாடர்னிசம் என்றால் என்ன? நல்லது–கெட்டது என்று ஒன்று இல்லை. நல்லொழுக்கம்–தீயொழுக்கம் என்று ஒன்று இல்லை. நன்மை–தீமை என்று ஒன்று இல்லை. These are all social constructs.
அப்படியானால் என்ன அர்த்தம்? “ஒரு சமுதாயம், இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு இப்படிப்பட்ட கருத்துக்களை வடிவமைத்துக்கொள்கிறது. இன்றைக்கு நீங்கள் நல்லது என்று சொல்வது, 1000 வருடத்திற்கு முன்பாக கெட்டதாக இருந்திருக்கும். 2000 வருடத்திற்கு முன்பாக ஓரிடத்தில் நல்லது என்று சொன்னதை, நீங்கள் இன்றைக்கு கெட்டது என்று சொல்வீர்கள். ஆகவே இந்த நல்லது–கெட்டது, நல்லொழுக்கம்–தீயொழுக்கம் இவைகள் எல்லாம் absolute அல்ல. இவைகள் அந்தந்தச் சமுதாயத்தையும், அந்தந்த மனிதர்களையும் பொறுத்தது. உங்களுக்குக் கருப்பாய் இருப்பது எனக்கு வெள்ளையாய்த் தோன்றும். எனக்கு வெள்ளையாய்த் தோன்றுவது அவர்களுக்குக் கருப்பாய்த் தோன்றும். ஆகையால் கருப்பு என்றும், வெள்ளை என்றும் ஒன்றும் கிடையாது. ஆண் என்றும், பெண் என்றும் ஒன்றும் கிடையாது. ஒருவர் தன்னை ஆண் என்று நினைத்துக்கொண்டால் ஆண்; பெண் என்று நினைத்துக்கொண்டால் பெண்.” இதற்குப் பெயர்தான் போஸ்ட்மாடர்னிசம்.
போஸ்ட்மாடர்னிசம் என்ற வார்த்தையை நான் தமிழில் மொழிபெயர்க்க விரும்பவில்லை.
ஆக, போஸ்ட்மாடர்னிசம் என்றால் என்ன? “நல்லது, தீயது, நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்று வரையறைகளும், வரம்புகளும் ஒன்றும் கிடையாது.”
இதைக் நீங்கள் சந்திப்பீர்கள். இது எவ்வளவு வசதியாய்ப் போய்விட்டது!
“கொலை செய்யாதே” — அது அவர்களைப் பொறுத்தது. ஒருவருக்குக் கெட்டது; இன்னொருவருக்கு நல்லது. “களவு செய்யாதே” — ஒருவருக்குக் கெட்டது; இன்னொருவருக்கு நல்லது. “விபச்சாரம் செய்யாதே” — ஒருவருக்குக் கெட்டது; இன்னொருவருக்கு நல்லது. “ஏமாற்றாதே” — ஒருவருக்குக் கெட்டது; இன்னொருவருக்கு நல்லது.
ஆகவே அதை நல்லது, கெட்டது என்று நீங்கள் வரையறுக்க முடியாது.
கேட்க எப்படி இருக்கிறது? என்ன மாதிரி liberation message இது! இதுபோல ஒரு விடுதலையின் செய்தியை நான் இதுவரைக் கேட்டதில்லை.
இதை நிறைய மனிதர்கள் பின்பற்றுவார்களா? நிச்சயமாகப் பின்பற்றுவார்கள். ஏனென்றால் இது அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை வாக்குறுதி செய்கிற பொய் வாக்குறுதி.
“நீங்கள் அடிமைத்தனத்தில் இருக்கிறீர்கள் அல்லவா? சிதைந்துகொண்டும், சீர்கெட்டுக்கொண்டும், அழிந்துகொண்டும், வெறுமையை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை. உங்களுடைய உள்ளங்களில் நிறைவு இல்லை. ஓய்வு இல்லை.
ஆனால் நீங்கள் நல்லது–கெட்டது, நன்மை–தீமை, நல்லொழுக்கம்–தீயொழுக்கம் என்ற எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டால் உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும்; இளைப்பாறுதல் கிடைக்கும்; ஓய்வு கிடைக்கும்”, என்று அவர்கள் வாக்குறுதி கொடுக்கின்றார்கள்.
இதுதான் modern குருக்கள், நவீன காலத்து சாமியார்கள், சத்குருக்கள், ஜகத்குருக்கள் ஆகியோருடைய உபாயம்.
இந்தக் குருக்கள், சாமியார்கள், சத்குருக்கள், ஜகத்குருக்கள் — ஏன் இவர்களின் பின்னால் ஆயிரக்கணக்கான மக்கள் போகின்றார்கள்? ஏனென்றால் அவர்கள் ஓய்வுறுதலையும், இளைப்பாறுதலையும், மனநிறைவையும் வாக்குறுதி கொடுக்கின்றார்கள். என்ன வாக்குறுதி அது? பொய்யான வாக்குறுதி.
உங்களுக்கு விடுதலை என்று அவர்கள் பொய்யான வாக்குறுதி கொடுக்கின்றார்கள்.
யோவான் 10 – கூலிக்கார மேய்ப்பர்கள்
யோவான் 10 ஆம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்வார்: “இவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள். இவர்கள் எல்லாம் பொய்யான மேய்ப்பர்கள். இவர்கள் மனநிறைவையும், இளைப்பாறுதலையும், ஓய்வுறுதலையும் பொய்யாய் வாக்குறுதி செய்வார்கள். ஆனால் ஓநாய் வந்தபிறகு இவர்கள் எல்லாம் ஓடிவிடுவார்கள்.”
சுருக்கம்
ஆகவே ஒழுக்கத்தைப்பற்றிய அறிவு தேவனுடைய வார்த்தையிலும் உள்ளது. தேவனுடைய வார்த்தை இல்லாத மக்களுக்கு அவர்களின் மனசாட்சியின் மூலமாகவும், பகுத்தறிவின் மூலமாகவும் தேவன் ஒழுக்கத்தைப்பற்றிய நல்லொழுக்க அறிவை உணர்த்தியிருக்கிறார்.
அவர்கள் “போக்குச் சொல்ல இடமில்லை” என்று ரோமர் இரண்டாம் அதிகாரம் 1 ஆம் வசனம் கூறுகிறது.
போஸ்ட்மாடர்னிசம் என்பது தேவனுடைய நல்லொழுக்கத்திற்கும், மனிதனுடைய மனசாட்சியிலும், அவனுடைய பகுத்தறிவிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள அந்த சமிக்கஞைகளுக்கும் எதிரான சத்துருவின் கருத்து.
மூன்றாவது குறிப்பு: குறைவும் நிறைவும்
ஆனால், “இது போதாது” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார். “இவைகளை எல்லாம் நான் சிறு வயது முதற்கொண்டு பின்பற்றி வருகிறேன்.” அப்பொழுது கர்த்தர் ஒரு சின்ன பரீட்சை வைக்கிறார்: “அப்படியா? நல்லது.”
இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்பு கூர்ந்து, அவனுக்குக் கண்ணாடி காட்டுகிறார். நான் என்னைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு “self congratulations—“What a big boy I am!. என்னைப்போல் நல்லவன் யார் உண்டு? சிறு வயது முதற்கொண்டு நான் தேவனுடைய கட்டளைகளை எல்லாம் கைக்கொண்டு நல்லொழுக்கத்தில் நடந்து வருகின்றேன்,” என்று நான் சொல்லலாம்.
அவர் சொல்கிறார்: “நீ போய் உனக்கு உண்டானவைகளை எல்லாம் விற்று, தரித்திரருக்கு கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு வந்து என்னைப் பின்பற்று. Come, follow Me ,” என்று சொல்கிறார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாய் இருந்தபடியால் இந்த வார்த்தையைக் கேட்டு மனமடிந்து துக்கத்தோடு போய்விட்டான்.
இது unreasonable?ஒரு மனிதக் கேள்வி
“இது என்ன அய்யா? ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும், நித்திய ஜீவன் பெற வேண்டும் என்று கேட்பவனுக்கு, உன் சொத்தை விற்று, உன் வீட்டை விற்று, உன் நிலத்தை விற்று, காரை விற்று, எல்லாவற்றையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு என்னிடத்தில் வா; வந்து என்னைப் பின்பற்று. இது ரொம்ப unreasonable தோணலையா உங்களுக்கு?” என்று நீங்கள் கேட்கலாம்.
“நான் நித்திய ஜீவனைப் பெறுவதற்கும், என் நிலத்தை, வீட்டை, காரை, என்கிட்ட இருக்கிற எல்லாவற்றையும் விற்கிறதற்கும் என்ன தொடர்பு?” என்று கேட்கலாம்.
இயேசு கிறிஸ்து அதைத்தான் சொன்னாரா? எதைச் சொன்னார்?
இயேசுவுக்கும் பணக்காரர்களுக்கும் தொடர்பு இருந்ததா?
இயேசு கிறிஸ்துவுக்குப் பணக்காரர்களோடு தொடர்பு இருந்ததா இல்லையா? அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்த, ஊழிம் செய்த செல்வமிக்க பெண்கள் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது. யோவான் ஆளுநருடைய அலுவலகத்துக்குள்ளே மிக எளிதாக நுழைய முடிந்தது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிறையப் பணக்காரர்கள் வீட்டுக்கு விருந்துக்குப் போனார்.
“நீ பணக்காரன்; எனவே, உன் வீட்டுக்கு விருந்துக்கு வரமாட்டேன்,” என்று அவர் சொல்லவில்லை. பணக்காரன் வீட்டுக்குப் போய் விருந்து சாப்பிட்டுவிட்டு, அவனுக்கே—“நீ அடுத்தமுறை விருந்துக்குக் கூப்பிடும்போது இந்த மாதிரி பெரிய ஆட்களையெல்லாம் கூடாது; சாதாரண ஆள்களைக் கூப்பிடு,” என்று அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். தேவனுடைய அரசு எப்படிப்பட்டது என்று சொல்வதில் அவர் எந்தத் தயக்கமும் காட்டவில்லை.
அவர் பணக்காரன் வீட்டுக்கு விருந்துக்குப் போனார். அடுத்த முறை அவர்கள் விருந்துக்கு கூப்பிட மாட்டார்களோ என்று பயந்து அவர் ஒன்றும் பேசாமல் வரவும் இல்லை. தேவனுடைய அளவுகோல், தேவனுடைய தீர்ப்பு, மனிதனுடைய அளவுகோலைவிட முற்றிலும் வேறுபட்டது.
அவனிடத்தில் உள்ள குறைவு என்ன?
அவனிடத்தில் ஒரு குறைவு உண்டு. அது என்ன குறைவு என்பதை நான் இப்பொழுது சொல்கிறேன்—என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி.
இந்தப் பழைய படைப்பில் அவர்களுக்கு இளைப்பாறுதலும், ஓய்வும், மனநிறைவும் இல்லை. இந்த மூன்று வார்த்தைகளையும் திரும்பத் திரும்ப: rest and satisfaction, rest and satisfaction, rest and satisfaction. Satisfaction என்றால் மனநிறைவு. Rest என்றால் அதை இளைப்பாறுதல் என்றும் மொழிபெயர்க்கலாம் அல்லது ஓய்வுறுதல் என்றும் மொழிபெயர்க்கலாம். ஆகவே நான் இரண்டையும் சேர்த்து மொழிபெயர்க்கிறேன்.
ஏன் இந்தப் பதங்களை எல்லாம் நாம் பயன்படுத்துகிறோம் என்றால், நீங்கள் நற்செய்தி அறிவிக்கும்போது நமக்குப் பதங்கள் வேண்டும்: rest and satisfaction. இந்தப் பழைய படைப்பிலே there is no rest and satisfaction. அந்த satisfaction இல்லாதவரை மனிதனுடைய மனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும்; துடித்துக்கொண்டே இருக்கும்; தவித்துக்கொண்டே இருக்கும்; இயங்கிக்கொண்டே இருக்கும். “எப்படியாவது எனக்கு இந்த satisfactionமும், restடும் வந்துவிடாதா?” என்று அது நாடும்; அது தேடும்.
ஒரு குருவைப் பார்த்தால் அவனுக்குமுன்பாக முழங்கால்படியிட்டு, “நான் இந்த satisfaction-னையும் இந்த rest-யையும் தருகின்ற eternal life-ஐ, நித்திய ஜீவனைப் பெற எனக்கு நீ வழி சொல்,” என்று அது கேட்கும். அவர் உண்மையிலேயே வழியைச் சொல்கிறார்.
பழைய படைப்பின் செல்வங்கள்: பொருள் மட்டும் அல்ல
அது என்ன வழி என்றால் இந்தப் பழைய படைப்பில் உள்ள செல்வங்கள்—“ஐசுவரியங்கள்” என்று தமிழில் இருக்கும். ஐசுவரியம் நாம் எப்படிச் சொல்லலாம்? “செல்வங்கள்” என்று சொல்லலாம்.
இந்தப் பழைய படைப்பின் செல்வங்களால்—நான் செல்வம் என்று சொல்லும்போது நிலம், வீடு, வாசல் அவைகளை மட்டும் இல்லை. “கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, களவு செய்யாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக” – இவைகள் எல்லாவற்றையும்கூட பழைய படைப்பின் மக்கள் ஓரளவுக்குப் பின்பற்றிவிடுவார்கள். ஓரளவுக்குத் திருக்குறளையும்கூட அவர்கள் பின்பற்றி விடுவார்கள். இவைகளும் பழைய படைப்பின் செல்வங்கள்தான்.
ஆகவே பொருளாதாரத்தை மட்டும் “பழைய படைப்பின் செல்வங்கள்” என்று நான் சொல்லவில்லை. Moral செல்வங்களும், ஒழுக்கத்திற்குரிய செல்வங்களும் உண்டு. இந்தச் செல்வங்களைக்கூட மக்கள் கட்டி அணைத்துக்கொள்வார்கள். பொருளாதார செல்வங்களையும் நல்லொழுக்க செல்வங்களையும் சேர்த்தே அவர்கள் பிடித்துக்கொள்வார்கள்.
“இந்தச் செல்வங்கள் எல்லாம் குப்பை” — அதன் அர்த்தம்
ஆண்டவராகிய இயேசு சொல்வது: இந்த செல்வங்கள் எல்லாம் குப்பை. இந்த பழைய படைப்பின் செல்வங்கள் குப்பை.
அதை எப்படி குப்பை என்று சொல்ல முடியும்? “மனுஷன் அப்பத்தினால் மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்றால் என்ன பொருள்? “இந்தச் செல்வங்களை எல்லாம் நீ கட்டி அணைத்துக்கொள்ளாதே. அவைகளை நீ சிலை வழிபாடு செய்யாதே.”
எல்லா மனிதர்களும் சிலை வழிபாடு செய்பவர்கள். சிலை வழிபாடு, விக்கிரக ஆராதனை, மனிதனுடைய இரத்தத்திலே ஊறிக்கிடக்கிறது. “சிலை” என்றவுடனே ஒரு மரத்தால், மண்ணால், கல்லால், உலோகத்தால் செய்வதுதான் சிலை என்று அர்த்தம் இல்லை. தேவனைவிட, தேவனுக்குப்பதிலாக, தேவனுடைய இடத்திலே எந்த ஒன்றை நாம் மிகவும் புகழ்கிறோமோ அது சிலை வழிபாடு.
doxology நாம் தேவனுக்குச் செலுத்துகிறோம்.
இந்தப் பழைய படைப்பின் செல்வங்களுக்கு அப்படிப்பட்ட ஓர் ஆராதனையை, ஒரு தொழுகையை, ஒரு புகழ்ச்சியை நாம் செலுத்தும்போது, இந்தப் பழைய படைப்பின் செல்வங்கள் நமக்கு விக்கிரகங்களாக இருக்கும்; சிலைகளாக இருக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அந்த வாலிபனுக்குச் சொல்வது: நீ இந்தப் பழைய படைப்பின் ஒழுக்கச் செல்வங்களை எல்லாம் “செல்வம்” என்று கருதாதே. அது கந்தல்; அது குப்பை.
கடைசி கட்டளை: “இச்சியாதிருப்பாயாக”
10 கட்டளைகளில் “இச்சியாதிருப்பாயாக” என்கிற கட்டளை இருக்கிறதே! Do not covet. “அந்த ஒரு கட்டளை நான் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டது. மீதி ஒன்பது கட்டளை என்னை கண்டுபிடிக்கவில்லை,” என்று ரோமர் 7ஆம் அதிகாரத்திலே பவுல் சொல்லிவிடுகிறார்.
அந்த “Part C question” இருக்கிறதே—கடைசி challenging question. அது என்னுடைய படிப்பு என்ன, என் யோக்கியதை என்ன, என்னுடைய தகுதி என்ன, என்னுடைய அருகதை என்ன என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறது. அந்த ஒரு கேள்வி—“இச்சியாதிருப்பாயாக.” Do not covet.
உனக்கு உரியதல்லாததை, உன் வயதுக்குரியதல்லாததை, உன் பருவத்திற்கு உரியதல்லாததை, அல்லது உன்னுடைய வாழ்க்கைக்கு உரியதல்லாததை இச்சியாதே. அது உனக்கு உரியதல்ல, அது உன்னுடையது அல்ல; இந்த நேரத்திலோ, இந்த இடத்திலோ அது எனக்கு உரியதல்ல—அதை நீ விரும்பாதே, ஆசைப்படாதே என்பதுதான் do not covet.
“அந்த ஒரு கட்டளை நான் யார் என்பதை எனக்குக் காட்டிவிட்டது,” என்று பவுல் சொல்கிறார். ரோமர் 7:7. “இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே” என்று பவுல் கூறுகிறார்.
மனிதனுடைய அளவுகோல் vs தேவனுடைய அளவுகோல்
அருமையான சகோதர சகோதரிகளே, மனிதனுடைய அளவுகோல் வேறு; தேவனுடைய அளவுகோல் வேறு. “இச்சியாதே” என்ற இந்த அளவுகோலின்படி உன்னுடைய நிலை என்ன?
அல்லது இந்தப் பழைய படைப்பின் செல்வங்களை எல்லாம் ஆராதிப்பது—சிலை வழிபாடு செய்வது—அதைப்பற்றிய உன்னுடைய காரியம் என்ன? அந்த சிலை வழிபாட்டை நீ விடுவாய் என்றால் நீ நித்திய ஜீவனில் பங்குகொள்ளலாம்; நித்திய ஜீவனுக்குள் நீ நுழையலாம்.
புதிய ஏற்பாட்டில் “நித்திய ஜீவனுக்குள் நுழைகிறது” என்று சொல்லப்பட்டிருக்கிறது. “தேவனுடைய அரசுக்குள் நுழைகிறது”; “நித்திய ஜீவனுக்குள் நுழைகிறது” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
யோபு 31 ஆம் அதிகாரம் 6 ஆம் வசனம், நீதிமொழிகள் 21 ஆம் அதிகாரம் 2 ஆம் வசனம், தானியேல் 5 ஆம் அதிகாரம் 27 ஆம் வசனம்.
“சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.” யார் என்னை நிறுத்துப்பார்க்க வேண்டும்? யார் என்னை எடைபோட்டுப் பார்க்க வேண்டும்? “உன் உதடுகள் அல்ல; புறத்தியான் உதடுகளே உன்னைப் புகழட்டும்.”
“நான் யோக்கியன்தான். நான் தகுதி உள்ளவன்தான். என்னைப்போல நல்லவன் யார் உண்டு?” என்றுதான் அந்த வாலிபன் கேட்டான். நானும் கேட்டேன். நீங்களும் கூட அப்படித்தான் கேட்பீர்கள்.
“நீ பாவிகளிலே பிரதான பாவி” என்று சொன்னால், “அப்படி ஒன்றும் இல்லை; எல்லாரும்தான் பிரதான பாவி,” என்பார்கள். அதனால் மனதுக்கு ஒரு சமாதானம் கிடைக்கிறது.
“பிரதான பாவி” என்று ஜெபிக்கும்போது நான் என்னைத் தனிமைப்படுத்தி ஜெபிப்பது நல்லது. அதை நாம் ஒன்றும் சமுதாயத்தோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
தேவன் என்னை நிறுத்துப்பார்க்க வேண்டும். நான் என்னை நிறுத்துப் பார்த்து—“What a big boy I am; what a holy boy I am; what a good boy I am என்று சொல்வது மிகவும் எளிது.
தேவன்—அவருடைய அளவுகோல்தான்—“சுமுத்திரையானது” என்றால் நேர்மையான நிறுவை. யாருடைய நிறுவை? தேவனுடைய நிறுவை.
நீதிமொழி 21:2. “மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.” என்னுடைய வழிகள் என்னுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும். கர்த்தரோ இருதயங்களை, நோக்கங்களை, hidden motives—மறைவான நோக்கங்களை—நிறுத்துப் பார்க்கின்றார்.
தானியேல் 5 ஆம் அதிகாரம் 24 ஆம் வசனம் நமக்குத் தெரியும்: “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்.” “நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்.”
“உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு” — அன்பா?
மூன்றாவது குறிப்பை நாம் பார்த்து முடிக்கலாம்: குறைவும் நிறைவும்.
முதலில், 21 ஆம் வசனம்: இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து—“உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு” என்று சொல்கிறார்.
“அன்பாக எப்படிச் சொல்ல முடியும்? ‘டேய், உன்டர ஒரு குறை இருக்குப்பா’—இது அன்பாவா இருக்குது?” “ஒரு குறைவு உனக்கு உண்டு.”
“நீ போய் உனக்கு உண்டானவைகளை எல்லாம் விற்று, தரித்திரருக்கு கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும்.” இந்தப் பழைய படைப்பின் செல்வங்களை சிலை வழிபாடு செய்யாதே.
“எல்லாத்தையும் விற்று கொடுத்துட்டு நீ பிச்சைக்காரனாக வா,” என்று அவர் சொல்லவில்லை. அல்லது, “எனக்குக் கொடு” என்றும் சொல்லவில்லை.
அவனுடைய response என்ன? அவன் எப்படிப்பட்ட மாறுத்தரம், எப்படிப்பட்ட மறுவினை ஆற்றுகிறான்? “ஆ, தாராளமாய் ஆண்டவரே,” என்று சொல்லியிருக்கலாம்.
நித்திய ஜீவனுக்காக நீ எவ்வளவு தூரம் வருவாய்? உன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் விற்றுவிட வேண்டும். “அப்படி யாரும் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஒன்றும் போகவில்லை. வலைகளைத் தங்களுடைய தகப்பனிடத்தில் விட்டுத்தான் போனார்கள்; அவர் வலையை விற்றுவிட்டு வரச் சொல்லவில்லை,” என்று சிலர் சொல்லலாம்.
நீ உண்மையிலேயே பரத்துக்குரியவன், நித்தியத்துக்குரியவன் என்றால் இகத்துக்குரியவைகளை அல்லது இம்மைக்குரியவைகளப் பற்றி—அவைகளை நீ வழிபாடு செய்ய மாட்டாய்; சிலை வழிபாடு செய்ய மாட்டாய்.
“பரலோகத்திலே உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு? பூமியிலே உம்மைத்தவிர வேற விருப்பம் இல்லை.” அந்த அளவுக்கு நாம் நித்திய ஜீவனையும், தேவனுடைய அரசையும், புதிய படைப்பையும் வாஞ்சிக்க வேண்டும்.
பின்பு “சிலுவை எடுத்துக்கொண்டு” என்பது ஆங்கில வேதாகமத்தில் இல்லை; தமிழில் அது தவறுதலாக உள்ளது, அல்லது ஏதாவது பழைய manuscript-ஆக இருக்கலாம். “வா, என்னைப் பின்பற்று.” Come, follow Me.
நித்திய ஜீவன் — ஒரு நபர்
நித்திய ஜீவன் என்பது ஒரு நபரிடத்தில் உள்ளது. இதைப்பற்றி புதிய ஏற்பாடு எந்த ஐயத்திற்கும் இடம் கொடுக்கவில்லை. நித்திய ஜீவன் என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்ற நபரில் மட்டுமே உள்ளது.
இதை எப்போதுமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மங்கலாக விடுவதில்லை. அவர் ஒன்றும் “இந்தக் கட்டளைகளை எல்லாம் பின்பற்றினால் உனக்கு நித்திய ஜீவன் கிடைத்துவிடும்,” என்று சொல்லவில்லை.
அவனுக்குமுன்பாக ஓர் அளவுகோலை வைக்கிறார். அந்த அளவுகோலின் purpose என்ன? நீ என்னதான் கட்டளைகளை, நல்லொழுக்கத்திற்குரிய கட்டளைகளைப் பின்பற்றினாலும், அந்த நல்லொழுக்க அளவுகோலின்படி நீ நித்திய ஜீவனைப் பெற முடியாது என்பதைச் சொல்வதற்காகத்தான் நல்லொழுக்கம் என்கின்ற அளவுகோலைமுன்பு வைக்கிறார்; தவிர “இந்த நல்லொழுக்கத்தினால் நீ நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளலாம்” என்பது அல்ல.
நல்லொழுக்கத்தினால் ஒரு மனிதனும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியாது. அந்த அறிவு பயனுள்ளது; ஆனால் அது போதாதது.
“என்னிடத்தில் வாருங்கள்” — இளைப்பாறுதல் ஒரு நபர்
நித்திய ஜீவன் என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ளது. மத்தேயு 11:28-ஐ நாம் அறிவோம்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”
இது ஒன்றும் கதை வசனம் அல்ல. இளைப்பாறுதலும், நித்திய ஜீவனும் ஒரு நபர்—ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
அவர் தேவன். அவர் மனிதனானார். “நல்ல போதகரே” என்று அழைக்கும்போது அவர் சொல்கிறார்: “என்னை நீ நல்லவன் என்று சொல்வாயேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் இல்லை.” அதன் பொருள் என்ன? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவன் என்பதுதான்.
அந்தத் தேவன் மனிதனானார். தேவனிடத்தில்தான் நித்திய ஜீவன் உண்டு. அதை மனிதர்கள் பெற வேண்டும் என்றால் அந்தத் தேவன் மனிதனாக ஊனுருக்கொள்ள வேண்டும்.
யோவான் 14:6. “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்.”
யோவான் 10 — வாசலும் மேய்ப்பனும்
யோவான் 10ஆம் அதிகாரம் 7 முதல் 15 வசனங்களை வாசிப்போம். 7-ஐயும் 11-ஐயும் வாசிப்போம்.
“ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” இந்த ஆடுகளுக்கு நிறைவோ, இளைப்பாறுதலோ இல்லை. அவர்கள் இந்தப் பழைய படைப்பின் அழுத்தத்திலும், ஒடுக்கத்திலும், அடிமைத்தனத்திலும், சிதைவின்கீழும், சீர்கேட்டின்கீழும், அழிவின்கீழும், வெறுமையின்கீழும் வாழ்நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் இந்தப் பழைய படைப்பிலிருந்து தப்பிப் பிழைத்து புதிய படைப்புக்குள் செல்வதற்கு ஒரு வாசல் வேண்டும். அந்த வாசல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்ற நபர்.
நம்முடைய நல்லொழுக்கம் அந்த வாசல் அல்ல. நல்லொழுக்கம் நம்மைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடத்தில் நடத்துகின்ற உபாத்தியாக, வாத்தியாராக இருக்கிறது; ஆசிரியராக இருக்கிறது. இது போதாது. இந்த அறிவு பயனுள்ளது; ஆனால் போதாமை உள்ளது. It is good, useful, but inadequate.
“நானே வாசல்” என்று சொல்கிறார். “நான் நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.”
“ஊசியின் காதில் ஒட்டகம்” — சிலுவை வாசல்
நித்திய ஜீவனுக்குள் நுழைவதற்கு எந்த மனிதனாலும் முடியாது. ஒரு நல்ல உவமையின்மூலமாய் அவர் இதைச் சொல்லுகிறார்: செல்வந்தர்கள் தேவனுடைய அரசில்—நித்திய ஜீவனுக்குள், இரட்சிப்புக்குள், புதிய படைப்புக்குள்—நுழைவது கடினம். “ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதைவிட அது கடினமானது.”
இதைப்பற்றி நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? “ஊசியின் காதில் ஒட்டகம்” என்றால் என்ன பொருள்? யாரும் துணி தைக்கும்போது ஊசியில் நூல் கோக்கும்போது ஒட்டகத்தை கோக்க மாட்டார்கள். நிச்சயமாக அது ஒரு பழமொழி தான்.
ஆனால் நான் ஒருமுறை ஒரு செய்தியில் கேட்டேன்; சுவாரசியமாக இருந்தது. சரியோ தவறோ—இந்த சுவாரசியமான சங்கதியை உங்களுக்கும் சொல்லிவிடுகிறேன்.
எருசலேம் நகரத்துக்குள் நுழைவதற்கு அலங்கார வாசல், ஆட்டு வாசல் எனப் பல வாசல்கள் இருந்ததாம். அதுபோல “ஊசி வாசல்” என்று ஒன்று இருந்ததாம். நான் commentaryயை வாசித்துப் பார்த்தேன். அப்படி இருப்பதுபோல் எனக்குத் தோன்றவில்லை. ஆனால் நல்ல கதை; ஆகையால் சொல்லிவிடுகிறேன்.
அந்தக் காலத்துப் பட்டணங்களுக்கு மதில்களும் வாசல்களும் இருந்தன. மக்கள் நகரத்திற்குள் வரும்போது வரி வசூலிக்கப்பட்டது—toll gate. ஒட்டகங்களிலே சரக்குகளைக் கொண்டுவரும்போது, வியாபாரி “ஊசி வாசல்” வழியாக வர வேண்டும்; ஒட்டகமும் சரக்குகளும் வேறு வாசல் வழியாக வர வேண்டும். எந்த வியாபாரியும் தன் ஒட்டகத்தோடு “ஊசி வாசல்” வழியாக வர முடியாது. “ஊசி வாசல்” வழியாக நீ மட்டும்தான் வர முடியும்.
அதைத்தான், “ஊசியின் வழியாக—அல்லது ஊசி வாசல் வழியாக—ஒட்டகம் நுழைவது முடியாத காரியம்,” என்று சொல்லுகிறார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை என்னும் வாசல் வழியாக மட்டும்தான் ஒரு மனிதன் நித்திய ஜீவனுக்குள் நுழைய முடியும்.
சிலுவை: Detect மட்டும் அல்ல — Destroy கூட
பழைய மனிதன், பழைய படைப்பு எனக்குள் பின்னிப் பிணைந்திருக்கிறது. இந்தப் பழைய மனிதன் நித்திய ஜீவனுக்குள் நுழைய முடியாது.
என்னுடைய பழைய படைப்பில் உள்ள நல்லொழுக்கம், என்னுடைய பழைய படைப்பில் உள்ள நற்செல்வங்கள்—இவைகள் எல்லாவற்றோடும், எல்லாச் சரக்குகளோடும்—நான் புதிய படைப்புக்குள், நித்திய ஜீவனுக்குள், தேவனுடைய அரசுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பது முடியாத காரியம்.
பழைய படைப்பைச் சிலுவை தன்னை கடந்துபோக விடாது.
விமான நிலையத்தில் bomb detector, metal detector எல்லாம் வைத்திருப்பார்கள். லக்கேஜ் அந்த detector வழியாகப் போகும். வெடிகுண்டு, வெடிபொருட்கள் அதைக் கடந்துபோக detector விடாது.
அதுபோல சிலுவை என்பது Old creation detector. Old man detector. பழைய மனிதனை அது detect பண்ணிவிடும்.
ஆனால் ஏர்போர்ட்டில் வைத்திருக்கிற அந்த detector-க்கும், இந்த detector-க்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அந்த detector detect மட்டும்தான் பண்ணும். இந்த detector will detect and destroy. அல்லேலூயா.
சிலுவை பழைய மனிதனைக் கண்டுபிடிக்கும் ஒரு கருவி. அதோடு விடாது. கண்டுபிடித்த இந்தப் பழைய மனிதனை அது சுக்குநூறாக்கிவிடும்; அது அரைத்துவிடும்; அது கொன்றுவிடும்; அது தீர்த்துக்கட்டிவிடும்; முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். அல்லேலூயா.
பழைய மனிதன் கொண்டாடத்தக்கவன் அல்ல. அது சிதைந்த, சீர்கெட்ட, அழிந்த, வெறுமையாகப் போகிற ஒரு மனிதன். பழைய மனிதன். அவன் பாவத்திற்கும், மரணத்திற்கும் உட்பட்டவன்.
கிறிஸ்துவில் மட்டுமே நுழைவு
“தங்கள் செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் தேவனுடைய அரசில் நுழைவது எவ்வளவு அரிதாக இருக்கும்” என்று அவர் சொல்கிறார். பழைய படைப்பின்மேல் நம்பிக்கை, ஆசை, இச்சை வைத்திருப்பவர்கள் புதிய படைப்புக்குள்ளும், தேவனுடைய அரசுக்குள்ளும், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியாது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மிக அருமையாகச் சொல்கிறார்: எப்படி ஊசி வாசல்வழியாக உன் ஒட்டகச் சரக்கை கொண்டுபோக முடியாதோ, அதுபோல சிலுவையின் வாசல் வழியாக உன் பழைய படைப்பின் செல்வங்களை, பழைய மனிதனைக்கூட கொண்டுபோக முடியாது.
ஒரேவொரு மனிதன் மட்டும்தான் இந்தச் சிலுவை வாசல் வழியாகச் சென்று வெளியே வந்தார்—ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஏனென்றால் அவரிடத்தில் பழைய மனிதன் இல்லை. ஆனால் அவரில் நம்முடைய பழைய மனிதன் தீர்த்துக்கட்டப்பட்டான்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் மட்டுமே நாமும் இந்தச் சிலுவை வாசலைக் கடந்து புதிய படைப்புக்குள் நுழைய முடியும். கிறிஸ்துவுக்கு வெளியே எந்த சவாரி செய்தும் நான் புதிய படைப்புக்குள்ளும், தேவனுடைய அரசுக்குள்ளும், நித்திய ஜீவனுக்குள் நுழைய முடியாது.
முடிவுரை: நித்திய ஜீவனின் வாசலும் வழியும்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாசலாக இருக்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக இருக்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மெய்யாக இருக்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜீவனாக இருக்கிறார். இந்த வழியின் ஊடாய் நம்மை நடத்திச் செல்கிற நல்ல மேய்ப்பனாக இருக்கிறார்.
நிச்சயமாக இந்தப் பழைய படைப்பின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற தவிக்கின்ற, துடிக்கின்ற, கதறுகின்ற, ஏங்குகின்ற மக்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நித்திய ஜீவனை வைத்திருக்கிறார். ஆனால் அவர்கள் விரும்புவதுபோல வெறுமனே ஒழுக்கத்தின் அல்லது இந்தப் பழைய படைப்பின் ஒழுக்கத்தினாலும், பழைய படைப்பின் செல்வங்களினாலும் அந்த நித்திய ஜீவனைப் பெற முடியாது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மட்டுமே நித்திய ஜீவனுக்குள் நம்மை நடத்த வல்லதாக இருக்கிறது. ஆமென்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் நாம் வைக்கின்ற நம்பிக்கையும், அவரிடத்தில் வந்து அவரைப் பின்பற்றுவது, அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பது மட்டுமே அந்த நித்திய ஜீவனையும், நித்திய ஜீவன் தருகின்ற இளைப்பாறுதலையும், ஓய்வுறுதலையும், நிறைவையும் தர வல்லதாக இருக்கிறது.
தேவன் தருகின்ற இந்த நித்திய ஜீவனும், தேவனுடைய அரசும், அங்கு கிடைக்கின்ற இந்த மனநிறைவும், இளைப்பாறுதலும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இன்று அனுபவமாகவும், வரவிருக்கிற அந்த யுகத்தில் அது நமக்குப் பரிபூரணமாகும் இருப்பதாக. ஆமென்.