Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

இந்த வீடியோவில், தேவனுக்காக முழுமையாக ஒப்படைக்கப்பட்ட ஒரு வாழ்க்கையின் சுருக்கமான வரலாற்றைப் பார்க்கிறோம் — ஏமி கார்மைக்கேல். அயர்லாந்தில் பிறந்த ஒரு சாதாரண பெண், தமிழநாட்டின்  குழந்தைகளுக்காகத் தன்னை முழுவதும் கொடுத்தார். அவருடைய வாழ்க்கை வெளிப்படையான புகழின் வரலாறு அல்ல; அது அமைதியான கீழ்ப்படிதலின் வரலாறு. சட்டத்தின் எதிர்ப்பையும், சமூகத்தின் அழுத்தங்களையும், உடல் வேதனைகளையும் அவர் எதிர்கொண்டார். ஆனால் அவர் ஒருபோதும் பின்னடையவில்லை. குழந்தைகளைப் பாதுகாப்பது தேவனுடைய இருதயத்தின் வேலை என்று அவர் நம்பினார். டோனாவூரில் அவர் தொடங்கிய சேவை, அன்பின் உயிருள்ள சாட்சியாக மாறியது. உடைந்த உடலுடன்கூட, எரியும் பேனாவால் அவர் எழுதியது தலைமுறைகளைத் தொடுகிறது. அவர் தேடியது வெற்றி அல்ல; கீழ்ப்படிதல். அவர் விரும்பியது அங்கீகாரம் அல்ல; தேவனுடைய சித்தம். இந்த சுருக்கமான வாழ்க்கை வரலாறு, நம்முடைய அழைப்பையும் விசாரிக்கச் செய்கிறது. நாம் என்ன தேடுகிறோம்? புகழா? அல்லது உண்மையான ஒப்படைப்பா? ஏமியின் வாழ்க்கை நமக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறது — ஓர் இருதயம் முழுமையாகத் தேவனுக்குக் கொடுக்கப்பட்டால், என்ன நடக்கும்? 


  ஏமி கார்மைக்கேல் – அம்மாவாகிய ஒரு மிஷனரி

அமைதியில் பிறந்த அழைப்பு

உலகம் தேவனுடைய வேலையைப் பொதுவாக வெளிச்சத்தில் தேடுகிறது. பெரிய மேடைகள், பெரிய பெயர்கள், பெரிய குரல்கள், பெரிய நகரங்கள், பெரிய கூட்டங்கள்—இங்குதான் தேவன் செயல்படுகிறாரோ என்று மனிதன் நினைக்கிறான். மனிதக் கண்களுக்கு அதுதான் அர்த்தமுள்ள ஊழியம்போலத் தெரிகிறது.

ஆனால் தேவன் தேடும் இருதயம் பெரும்பாலும் வெளிச்சத்தில் இருப்பதில்லை. அது யாரும் கவனிக்காத அழுகையின் இடங்களில், அமைதியான மூலைகளில், தனிமையின் நிழல்களில் இருக்கும். அப்படிப்பட்ட ஓர் இருதயத்தின் வாழ்க்கையைத்தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம். சத்தமில்லாத, அமைதியான வாழ்க்கை, உடைக்கப்பட்ட வாழ்க்கை, தேவனுக்குள் கரைந்துபோன வாழ்க்கை, பிரபலம் இல்லாமல். பெயரில்லாமல். தியாகமாக எரிந்து அணைந்த வாழ்க்கை.

இந்த வாழ்க்கை அன்றும் உரத்த சத்தமாகப் பேசவில்லை. இன்றும் பல தலைமுறைகளைக் கடந்து அமைதியாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறது.

அவர் திருமணம் செய்யவில்லை. அவருக்கு இரத்தசம்பந்தமான குழந்தைகள் இல்லை. ஆனால், ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவரை “அம்மா” என்று அழைத்தார்கள். இவருடைய பெயர்—ஏமி கார்மைக்கேல்.

குழந்தைப் பருவம்

ஏமி 1867ஆம் ஆண்டு, டிசம்பர் 16ஆம் தேதி, அயர்லாந்தில் உள்ள மில்லிஸ்லே என்ற பச்சைபசேல் வயல்கள் நிறைந்த, குளிர்ந்த காற்று வருடிச்செல்கின்ற, அமைதியான ஆலயங்கள் சூழ்ந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். வசதியான குடும்பம். அந்த வீட்டில் வெளிப்படையான ஆவிக்குரிய ஆடம்பரம் இல்லை. விசுவாசம் உரத்த குரலில் வெளிப்படவில்லை. அது வாழ்க்கையில் வெளிப்பட்டது. அந்த வீட்டில் தேவனுக்குப் பயந்து வாழும் இயல்பான வாழ்க்கை இருந்தது.

அவருடைய அப்பா David Carmichael. இவர் மிஷனரியோ, பிரசங்கியாரோ அல்ல. ஆனால் கடுமையான உழைப்பாளி. அயர்லாந்தில் ஒரு மாவு ஆலையின் சொந்தக்காரர். குடும்பத்தைப் பொறுப்போடு தாங்கி நடத்தினார். வரலாறு அவரைப்பற்றி அதிகம் பேசவில்லை. ஆனால் ஏமியின் எழுத்துக்களில் அவர் ஒரு சத்தமில்லாத, உறுதியான நம்பிக்கையுடைய மனிதராகத் தோன்றுகிறார். அவர் ஏமிக்குப் பிரசங்கிக்கக்  கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால், “நீ பேசாவிட்டாலும், நீ வாழ்கிற வாழ்க்கை பேசும்,” என்ற ஒரு மௌனப் பாடம் கற்றுக்கொடுத்தார்.

அவருடைய அம்மா Catherine Jane Carmichael அமைதியானவர். ஆனால் உள்ளத்தில் இரும்புபோல் உறுதியானவர். மொத்தம் ஏழு பிள்ளைகள். ஏமிதான் மூத்தவர். அதனால் சிறுவயதிலேயே பொறுப்பைச் சுமக்கக் கற்றுக்கொண்டார். அவரிடம் தன்னைப்பற்றிய எண்ணத்தைவிட, பிறரைப்பற்றிய எண்ணம் மேலோங்கிநின்றது. அந்த வீட்டில், ஓர் எதிர்கால “அம்மா” மெதுவாக உருவாகிக்கொண்டிருந்தார் என்று அப்போது யாருக்கும் தெரியாது.

ஏமிக்கு அப்போது பத்து வயது. குழந்தைத்தன்மை இன்னும் முழுவதும் விலகாத வயது. ஆனால் இழப்பின் வலியை ஆழமாக உணரக்கூடிய வயது. அவருடைய வாழ்க்கை முதன்முறையாக நிலைகுலைந்தது. 1877–1878இல், அவருடைய அப்பா காலமானார். அப்பா இல்லாத வீடு. அப்பாவின் குரல் இல்லாத மாலை நேரங்கள். ஒதுங்குவதற்கு அப்பாவின் நிழல் இல்லாத வாழ்க்கை ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கியது. இந்த வெற்றிடத்தை வார்த்தைகளால் போதுமான அளவுக்கு விவரிக்க முடியாது.

வெளி வாழ்க்கை பள்ளிக்கூடம், வீடு, தேவாலயம் என வழக்கம்போலத் தொடர்ந்தது. ஆனால் உள்ளத்தில், “இந்த உலகம் நிலையானதா? இன்று இருப்பவர்கள் நாளை இல்லாமல் போகும் இந்த வாழ்க்கையில் நான் எதற்காக வாழ வேண்டும்?” என்ற கேள்விகள் மெல்ல எழ ஆரம்பித்தன.

அவருடைய அப்பா இறந்தபின், அவருடைய அம்மா Catherine சோர்ந்து போகவில்லை. வசதிகள் குறைந்திருக்கலாம். ஆனால் வீட்டில் ஒழுக்கம் குறையவில்லை. தியாகம் குறையவில்லை. “தேவனே முதலாவது” என்ற பாடம் குறையவில்லை. ஏமியின் வாழ்க்கையில் பின்னாளில் வெளிப்பட்ட தாங்கும்திறன், வலியை ஏற்கும் மனப்பக்குவம், அமைதியாகச் சுமக்கும் ஆற்றல்—அவை அனைத்தும் அந்தத் தாயின் நிழலில் உருவானவை.

இந்த உள்ளார்ந்த வளர்ச்சிக்கிடையில், இன்னொரு சிறிய போராட்டமும் நடந்துகொண்டிருந்தது. அது அவருடைய கண்களின் நிறத்தைப்பற்றியது. ஏமியின் கண்கள் நீலநிறம் அல்ல; பழுப்பு நிறம். அந்தக் காலத்து ஐரோப்பிய சமுதாயத்தில் நீலநிறக் கண்கள் அழகின் அடையாளம். மதிப்பின் அடையாளம். ஏமி பலமுறை கண்ணாடிக்குமுன் நின்று, “நான் அழகல்ல. என்னை யாரும் கவனிக்கமாட்டார்கள்,” என்று தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்.

ஓர் இரவு, அந்த எண்ணம் ஜெபமாக மாறியது. அது பெரிய விசுவாச ஜெபம் அல்ல. ஒரு குழந்தையின் நேர்மையான வேண்டுதல். “இயேசுவே, என் கண்கள் பழுப்பு நிறமாக இருக்கின்றன. எனக்கு நீல நிறக் கண்கள் வேண்டும். நாளைக் காலைக்குள் என் கண்களை மாற்றிவிடுங்கள்,” என்று ஜெபித்தார். அடுத்த நாள் காலை, அவர் எழுந்து கண்ணாடியில் பார்த்தார். எந்த மாற்றமும் இல்லை. அதே பழுப்பு நிறக் கண்கள். தேவன் தன் ஜெபத்துக்குப் பதில் தரவில்லை என்று ஒருவேளை ஏமி அப்போது நினைத்திருக்கலாம். ஆனால், “தேவன் தாம் என்ன செய்கிறார் என்பதை முன்னமே அறிந்திருந்தார்,” என்று அவர் பின்னாளில் தன் நாளேட்டில் எழுதுகிறார்.

அந்தக் குழந்தைப் பருவக் கேள்விகள், அந்தச் சிறிய ஜெபங்கள், அந்த மௌன சிந்தனைகள்—அவை எல்லாம் ஏமியின் உள்ளத்தில் ஒரு தேடலை உருவாக்கிக்கொண்டிருந்தன.

இளம் வயதில், அவர் Belfast நகரில் நடந்த ஒரு நற்செய்திக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அது பெரிய நிகழ்வு அல்ல. ஆனால் அந்த நாளில், அவர் ஓர் உண்மையை ஆழமாக உணர்ந்தார். கிறிஸ்துவைப்பற்றி அவர் முன்னமே கொஞ்சம் அறிந்திருந்தார். ஏனென்றால், அவர் ஒரு கிறிஸ்தவ வீட்டில் வளர்ந்தார். ஆனால் அந்த நற்செய்திக் கூட்டத்தில், கிறிஸ்து “அவர் அறிந்த ஒருவராக” அல்ல, “அவருக்காகச் சிலுவையில் மரித்த இரட்சகராக” மாறினார். அது ஓர் உணர்ச்சி வெடிப்பு அல்ல. அது ஓர் உள்ளார்ந்த விழிப்பு. நல்லவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அல்ல, அவருக்குச் சொந்தமானவளாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் அவருக்குள் எழுந்தது. “அந்த நாள் என் வாழ்க்கை எனக்குச் சொந்தமில்லை என்று நான் உணர்ந்த நாள்,” என்று அவர் பின்னாளில் எழுதுகிறார். “நீங்கள் உங்களுடையவர்களல்லவென்று அறியீர்களா?  கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்,” என்ற உண்மை அவருடைய உள்ளத்தில் முத்திரையிடப்பட்டது. அது ஓர் உரிமை மாற்றம்.

உடனே அவர் ஒரு மிஷனரியாக மாறிவிடவில்லை. ஆனால் அவர் தன்னைத்  தத்தம்செய்தார். மனந்திரும்புதல் ஒரு நிகழ்வு. ஆனால் தத்தம்செய்தல் ஒரு நடை. ஏமியின் வாழ்க்கையில் அந்தத் தத்தம்செய்தல் மெதுவாக ஆழமாகத் தொடங்கியது. ஏமி வெளியில் அதிகம் பேசவில்லை. ஆனால் உள்ளே, “இயேசுவே, நீர் என்னைப் பயன்படுத்தலாம்,” என்ற தீர்மானம் உறுதியானது. அது பெரிய கனவுகளோடுகூடிய ஜெபம் அல்ல. அது “என்னை அனுப்பும்,” என்ற ஜெபம்கூட அல்ல. அது, “என்னை உடையும்” என்ற அமைதியான ஒப்புக்கொடுத்தல். தேவன் தன் ஒப்புக்கொடுத்தலை  ஏற்றுக்கொண்டார் என்று அப்போது அவருக்குத் தெரியாது. யாருக்கும் தெரியாது.  

காலம் மெல்ல நகர்ந்தது. ஏமியின் குடும்பம் Belfast நகருக்குக் குடிபெயர்ந்தது. அங்கே அவர் கண்ட உலகம் மில்லிஸ்லேவின் அமைதியான உலகம் அல்ல. அது தொழிற்சாலைகளின் நகரம். எங்கும் புகை சூழ்ந்த கட்டிடங்கள். வறுமை, உழைப்பு, சமூகப் பிரிவுகள் கண்கூடாகத் தெரிந்தன. அங்கு நிறையப் பெண்கள் ஆலைகளில் வேலை செய்தார்கள். அவர்கள் “Shawlies” என்று அழைக்கப்பட்டார்கள். வேலைசெய்யும்போது பாதுகாப்புக்காகத் தொப்பி வாங்கக்கூட வசதி இல்லாதவர்கள். எனவே, தலையில் ஒரு முக்காடு மட்டும் போட்டிருந்தார்கள். இவர்கள்  சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்தார்கள். ஆலயங்களில்கூட அவர்கள் வரவேற்கப்படவில்லை.

ஒருநாள் அந்தப் பெண்கள் தேவாலயத்திற்குவெளியே நின்றுகொண்டிருப்பதை ஏமி கண்டார். உள்ளே செல்லத் தயக்கம். உள்ளே இருந்தவர்களின் பார்வை அவர்களைத் தள்ளிவிட்டது. அந்த நொடியில் ஏமி யோசிக்கவில்லை, விவாதிக்கவில்லை, சும்மா இருக்கவில்லை. அவர் அந்தப் பெண்களின் கைகளைப் பிடித்தார். மெதுவாக. ஆனால் உறுதியாக. அவர்களைத் தேவாலயத்திற்குள் அழைத்துச் சென்றார். உள்ளே இருந்த சிலர் முகம் சுளித்தார்கள். பணக்காரர்களின் பார்வைகள் ஊடுருவக்குத்தின.  அன்று அவர் சொன்ன வார்த்தைகள், அவருடைய வாழ்க்கை எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பதை வெளிப்படுத்தின.

“இவர்களும் தேவனுடைய பிள்ளைகள்தான். இவர்களுக்கு இங்கே இடம் இல்லை என்றால் எனக்கும் இங்கே இடம் இல்லை.”

அது ஒரு சமூகக் கருத்து அல்ல. அது ஒரு தீர்மானம். அந்த நொடியில் ஏமி ஒரு சுவரைத் தாண்டவில்லை. ஒரு சுவரை உடைத்தார். அது அவர் முதன்முறை சிலுவையைத் தொட்ட தருணம். தேவன் ஒருவரைப் பயன்படுத்த விரும்பினால், முதலில் அவரை உடைக்கிறார். பிறகு அவரை உருவாக்குகிறார். ஏமி அந்த உடைபடும் பாதையில் மெதுவாக நுழைந்தார்.

“Go Ye” – உள்ளத்தில் எழுதப்பட்ட வார்த்தை

அவருடைய வாழ்க்கை இன்னும் “மிஷனரி” வாழ்க்கையாக மாறவில்லை. ஆனால், அந்த விதை விதைக்கப்பட்டுவிட்டது. அந்த விதை ஒருநாள் ஒரு மண்ணில் விழும். ஆனால் அதற்குமுன், தேவன் இந்த இருதயத்தை அமைதியாக வடிவமைத்துக்கொண்டிருந்தார்.

வெளியே பார்வைக்கு எல்லாம் நன்றாக இருந்தது. வீட்டில் பொறுப்பான மகள். தேவாலயத்தில் பணிவிடை செய்கிற இளம்பெண். சமூகத்தில் மரியாதைக்குரியவர். ஆனால் இந்த அமைதியின் நடுவில், அவருடைய  உள்ளத்தில் ஒரு குரல் ஒலித்துக்கொண்டேயிருந்தது. “நீ இங்கே இருக்கவேண்டுமா?” “இந்த வாழ்க்கை உனக்குப் போதுமா?”
“நீ பாதுகாப்பாக இருக்க விரும்புகிறாயா அல்லது கீழ்ப்படிய விரும்புகிறாயா?”

அது உரத்த சத்தமாகவோ, கட்டளையாகவோ வரவில்லை. ஆனால் அதை அவரால்  தவிர்க்கவும் முடியவில்லை. அது விரட்டவில்லை, ஊடுருவியது. இந்தக் கேள்விகள் ஒரே நாளில் எழவில்லை. பல வருடங்களாக வளர்ந்தவை. ஜெபத்தின் இடைவெளிகளில், இரவுகளின் அமைதியில், கண்ணீரின் நடுவில்.

அவருடைய உள்ளத்தில் இரண்டு உலகங்கள் மோதின. ஒருபக்கம்—வீடு, அம்மா, உடன்பிறப்புகள், தெரிந்த வாழ்க்கை, பாதுகாப்பு. மற்றொரு பக்கம்—பெயரில்லாத, முகமில்லாத, ஆனால் வலிமையான ஓர் அழைப்பு. அந்த அழைப்புக்கு இன்னும் பெயர் இல்லை. ஆனால் அது உண்மையானது. அது அவரைத் தள்ளவில்லை. ஆனால் விடவில்லை.

அந்த உள்ளார்ந்த போராட்டம் பல வருடங்கள் வளர்ந்தது. ஒருநாள் அது தெளிவான தருணமாக மாறியது. 1887ஆம் ஆண்டு. ஒரு மிஷனரி கூட்டம். அந்தக் கூட்டத்தில் பலர் பேசினார்கள். பல வார்த்தைகள் ஒலித்தன. ஆனால் ஏமிக்கு ஒரு வார்த்தை மட்டும் தெளிவானது. அது மேடையிலிருந்து வரவில்லை. அது அவருடைய காதுகளில் விழவில்லை, அது அவருடைய இருதயத்தில் விழுந்தது.

அந்த வார்த்தை—“Go Ye.” “நீ போ”

அது கட்டளையாக வரவில்லை. அது ஒரு சத்தமாக வரவில்லை. ஆனால் அந்த நொடியில், அதை அவரால் புறக்கணிக்க முடியவில்லை. “Go Ye.” “நீ போ”

அந்த வார்த்தை வந்தவுடன் அவர் எழுந்து நிற்கவில்லை. மேடைக்குப் போகவில்லை. சாட்சி சொல்லவில்லை. கூட்டம் முடிந்தது. மக்கள் வெளியேறினார்கள். ஆனால் அவர் கூட்டத்திலிருந்து வெளியே வந்தபோது, தன் வாழ்க்கை இனி பழையபடி இருக்காது என்று அவர் அறிந்திருந்தார். அவர் அந்தக் குரலுக்குப் பதில் சொன்னார். சத்தமாக இல்லை. ஆனால் உள்ளத்தில்—“நான் போவேன்.”

அவர் தன் முடிவை யாருக்கும் அறிவிக்கவில்லை. அதைத் தாளில்  எழுதவில்லை. அது அவருடைய உள்ளத்தில் எழுதப்பட்டது. மையினால் அல்ல, உயிரால்.

Keswick தாக்கம் – ஒப்படைப்பின் ஆழம்

“Go Ye” “நீ போ” என்ற அந்த வார்த்தை அவருடைய இருதயத்தில் எழுதப்பட்டபிறகு, அது வெறுமனே ஒரு தீர்மானமாக மட்டும் இருக்கவில்லை. அது ஒரு வாழ்க்கை நடைமுறையாக மாறத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில், இங்கிலாந்தில் Keswick movement என்ற ஓர் ஆவிக்குரிய இயக்கம் வளர்ந்துகொண்டிருந்தது. அது வெளிப்படையான பரபரப்பான இயக்கம் அல்ல. அது உள்ளார்ந்த தத்தமசெய்வதைப்பற்றிய இயக்கம். அது Keswick எனப்படும் ஒரு சிறிய நகரத்தில் தொடங்கியது.

அந்த இயக்கம், “நீ கிறிஸ்துவை விசுவாசித்தால் மட்டும் போதாது; நீ முழுவதும் அவருக்குச் சொந்தமானவனாக ஆக வேண்டும். வெற்றி அல்ல காரியம் — தத்தம்செய்தலே காரியம், புகழ் அல்ல காரியாயம் —பரிசுத்தமே காரியம். பெரிய செயல்கள் அல்ல காரியம் —முழுமையான கீழ்ப்படிதலே காரியம்,” என்ற முக்கியமான சில உண்மைகளை வலியுறுத்தியது.

இந்தப் போதனைகள் ஏமியின் உள்ளத்தில் ஏற்கனவே நடந்துகொண்டிருந்த போராட்டத்துக்கு வடிவம் கொடுத்தன. “தேவன் என்னைப் பயன்படுத்துவாரா என்பதல்ல முக்கியம். நான் முழுவதும் அவருக்குச் சொந்தமானவளா என்பதே முக்கியம்,” என்பதை அவர் உணர்ந்தார்.

அந்த Keswick தாக்கம் அவரை மேடைக்காகத் தயார் செய்யவில்லை. அவரைப் பானபலியாக்கத் தயார் செய்தது. அவர் வெற்றியைத் தேடவில்லை.  விசுவாசத்தைத் தேடினார். அவர் சாதிக்க விரும்பவில்லை. அவர் தத்தம்செய்ய  விரும்பினார்.

அந்த உள்ளார்ந்த பரிசுத்தத்திற்கான ஏக்கம், பின்னாளில் இந்தியாவின் வெயிலையும், நோயையும், நிராகரிப்பையும் தாங்கும் ஆற்றலாக மாறியது. அந்தக் காலத்தில் யாரும் அதைக் கவனிக்கவில்லை. ஆனால் தேவன் கவனித்தார். ஓர் இருதயம் மெதுவாக முழுவதுமாக தத்தம்செய்து கொண்டிருந்தது.

“Go Ye” “நீ போ” என்ற அழைப்பு தெளிவானபிறகு, தேவன் அவரை  அவசரப்படுத்தவில்லை. முதலாவது அவருடைய உள்ளத்தில் எழுந்த நாடு—சீனா. ஆனால், அதே நேரத்தில் “அது மிகத் தொலைவில் இருக்கிறதே! மிக ஆபத்தான நாடு! அதிகமாகத் தெரியாத உலகம்,” என்ற எண்ணமும் எழுந்தது. ஆயினும் அந்தப் பாரம் விலக்கவில்லை. ஆனால் அது நிறைவேறவில்லை. சீனாவுக்குக் கதவு திறக்கவில்லை. அது அவருடைய அழைப்பை ஆழப்படுத்தியது. தேவன் ஏமியின் அழைப்பைச் சோதிக்க ஆரம்பித்தார்.

ஜப்பான், இலங்கை – வடிவமைக்கும் தேவன்

அந்தச் சோதனையின் முதல் மேடை—ஜப்பான். 1893ஆம் ஆண்டு, 26 ஆவது வயதில், ஏமி ஜப்பானுக்குச் சென்றார். அது அவருடைய முதல் வெளிநாட்டு மிஷனரி களம். ஆனால் அது அவர் நினைத்தபடி அமையவில்லை. மொழி புரியவில்லை. கலாச்சாரம் மிகவும் அந்நியமாக இருந்தது. தனிமை மனதைச் சுருக்கியது. உடல் தொடர்ந்து சோர்ந்தது. வேலை இருந்தது. சேவை இருந்தது. ஆனால் உள்ளத்தில் ஒரு வெற்றிடம்.

“ஜப்பானில் நான் தேவனுக்காக வேலை செய்தேன். ஆனால் நான் தேவனோடு சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ளவில்லை,” என்று அவர் எழுதினார்:  அது தோல்வியின் ஒப்புதல் அல்ல. ஒரு சீடனின் நேர்மையான வாக்குமூலம்.

சில நேரங்களில், “தேவனே, உண்மையாகவே நீர் என்னை அழைத்தீரா?” என்று அவர் ஜெபித்தார். அந்தக் கேள்வி விசுவாசமின்மையால் எழவில்லை. அது தேவனோடு உண்மையாக நடக்க விரும்பும் ஓர் உள்ளத்தின் கதறல்.

உடல் பலவீனம் அதிகரித்தது. ஜப்பானில் நீண்ட நாட்கள் தங்க முடியவில்லை. அவர் ஜப்பானைவிட்டு வெளியேறினார். அப்போது, “என் உள்ளத்தில் ஒலித்த குரல் தவறா? இந்தக் கதவு நிரந்தரமாக மூடிவிட்டதா?” என்ற இன்னொரு கேள்வி எழுந்தது.

தேவன் இதற்கு உடனடியாக பதில் சொல்லவில்லை. அவர் வழியை மாற்றினார்.

ஜப்பானுக்குப்பிறகு ஏமி தன் 27 ஆவது வயதில் இலங்கைக்குச் சென்றார். அது இலக்கு அல்ல. அது ஒரு பயிற்சி. தேவன் அவரை அவசரப்படுத்தவில்லை. அவர் வடிவமைத்தார்.

அது தேவன் அமைதியாக வேலை செய்த காலம். அங்கே ஏமி சில மிஷனரிகளைச் சந்தித்தார். அந்தச் சந்திப்புகள் சாதாரணமானவை அல்ல. அவை அவருடைய  எதிர்காலத்திற்கான கதவைத் திறந்தன. அங்கு அவர் இந்தியாவில் ஏற்கெனவே மிஷனரிகளாக இருந்த சிலரைச் சந்தித்தார். அவர்களில்  சிலர்  இந்தியர்களைப்போலவே வாழ்ந்தார்கள். அவர்கள் மேடைகளில் பிரபலமானவர்கள் அல்ல; மக்களோடு மக்களாகக் கரைந்து வாழ்ந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தபோது, “உண்மையான ஊழியம் மேடையில் நின்று பேசுவது அல்ல; மக்களோடு ஒன்றாகி வாழ்வது,” என்ற உண்மை ஏமிக்குத் தெளிவானது.

அவர்களில் ஒருவர் Thomas Walker. அவர் தென் இந்தியாவில், குறிப்பாக திருநெல்வேலி பகுதியில், பல ஆண்டுகள் ஊழியம் செய்தவர். மேடைப் பிரசங்கங்களால் புகழ்பெற்றவர் அல்ல. எண்ணிக்கைகளைப்பற்றி பெரிதாகப் பேசாதவர். அவர் வெற்றியை அல்ல; விசுவாசத்தையே அதிகம் வலியுறுத்தினார். “Success is not required of us. Faithfulness is,” என்ற அவருடைய கூற்று, “ஏமி உன் சீனக் கனவின் மௌனத்திலும், ஜப்பானின் தனிமையிலும், இலங்கையின் குழப்பத்திலும் நீ தோற்கவில்லை. நீ உருவாக்கப்பட்டாய்,” என்பதை உறுதிப்படுத்தின. 

Thomas Walker போன்றவர்களைப் பார்த்தபோது, “இந்தியாவில் மிஷனரி ஊழியம் ஒரு romantic அழைப்பு அல்ல. அது மெதுவாக உயிரை உறிஞ்சும் ஊழியம். ஆனால் அதே நேரத்தில் அது உயிரைக் கொடுத்து புதிய உயிர்களை உருவாக்கும் ஊழியம்,” என்று ஏமி புரிந்துகொண்டார். 

தான் போகவிரும்பிய சீனாவுக்குத் தேவன் தன்னை  அனுப்பமாட்டார், மாறாக  இந்தியாவுக்கு அனுப்பப்போகிறார் என்று ஏமிக்கு அப்போது தெரியாது.  இந்தியா அவருடைய கனவு இல்லை. ஆனால் அதுவே தேவனுடைய திட்டம். தமிழ்நாடு வெறுமனே அவர் ஊழியம் செய்யப்போகும் ஒரு மிஷன் களம் அல்ல. அது ஒருநாள் அவருடைய வாழ்க்கையோடு பின்னிப்பிணையப்போகும் மண். அந்த மண் அவரை ஒரு மிஷனரியாக அல்ல, ஒரு தாயாக மாற்றப்போகிறது என்று அவருக்கு அப்போது தெரியாது.

இந்தக் கட்டத்தில் ஏமி, “அழைப்பு என்றால் உடனடி வெற்றி அல்ல. அது உடனடித் தெளிவும் அல்ல. பல நேரங்களில் அது குழப்பத்தைத் தரும். தோல்வியைத் தரும். இதயத்தைச் சுக்குநூறாக உடைக்கும். ஆனால் அந்த உடைதல்களிலேயே தேவன் ஒரு மனிதனை உருவாக்குகிறார்,” என்ற ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொண்டார்.

ஒரு கட்டத்தில் ஏமி மிகவும் சோர்ந்துபோனார். உடல் மட்டும் அல்ல; உள்ளமும்தான்.  “என்னைப் போகச் சொன்னது நீர்தானே? அப்படியானால்  இந்தக் குழப்பங்கள் ஏன்? இந்த உடைதல்கள் ஏன்?” என்று அவர் தேவனிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

அந்த ஜெபங்களுக்கு தேவன் உடனடியாக பதில் தரவில்லை. அந்த மௌனம் தண்டனை அல்ல. தேவன் அவரை உருவாக்கிக்கொண்டிருந்தார்.  “நான் உன்னைப்  பயன்படுத்துவதற்காக மட்டும் அல்ல; ஓர் இடத்திற்காக மட்டும் அல்ல; ஒரு நாட்டிற்காக மட்டும் அல்ல. ஓர் ஊழியத்திற்காக மட்டும் அல்ல. உன்னை உருவாக்குவதற்காக, மாற்றுவதற்காக  அழைக்கிறேன்,” என்ற உண்மை அவருக்குத் தெளிவாயிற்று.

அந்த நொடியிலிருந்து அவர் தேவனைத் தன்னைப் பயன்படுத்தும் தேவனாகப் பார்க்கவில்லை. தான் சார்ந்து வாழவேண்டிய தேவனாகப் பார்க்க ஆரம்பித்தார். தான் பயனுள்ள ஒரு பாத்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மறைந்து, தான் கீழ்ப்படிதலோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

இது சிறிய மாற்றம்போலத் தோன்றலாம். ஆனால் இதுவே பின்னாளில் அவரை ஒரு மிஷனரியாக அல்ல—ஒரு “அம்மா”வாக மாற்றப்போகும் அடித்தளம்.

அழைப்புக்குப் பிறகு, தேவன் அவரை உடனே மேடைக்குக் கொண்டுவரவில்லை. பெரும்பாலும் தேவன் ஒரு கதவை மட்டும் திறக்கிறார். அந்தக் கதவின்வழியாக மனிதன் நடக்க வேண்டும். ஏமி கார்மைக்கேலுக்காகவும் ஒரு கதவு திறந்தது. அந்தக் கதவு—CEZMS.

CEZMS – திறந்த கதவு

19ஆம் நூற்றாண்டு இந்தியாவில் உயர்சாதி இந்துக்களின் வீடுகளிலும்  பாரம்பரியக் குடும்பங்களிலும் பெண்கள் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்களுடைய அந்தப்புரம் zenana என்று அழைக்கப்பட்டது. அது ஒரு ஒதுக்குப்புறமான  தனி அறை என்று நினைக்கவேண்டாம். அது அடைக்கப்பட்ட ஓர் தனி உலகம். அங்கு இளம் பெண்கள், சிறுவயதில் திருமணம் செய்யப்பட்டவர்கள், விதவைகள் கல்வியின்றி, குரலின்றி, பாதுகாப்பின்றி பரிதாபமாக வாழ்ந்தார்கள். வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. இருந்தார்கள்.

தென் இந்தியாவில் சாதி ஆழமாக வேரூன்றியிருந்தது. பெண்கள் கல்வியின்றி, மதச் சடங்குகளுக்குள் கட்டப்பட்டிருந்தார்கள். தேவதாசி முறை, குழந்தைகளைக் கடவுளுக்கு அர்ப்பணித்தல், விதவைகளின் அடக்குமுறை இவைகளெல்லாம் பெண்களை மையமாகக் கொண்ட சமூகக் காயங்கள்.

அந்த  உலகத்துக்குள் ஆண்கள் நுழைய முடியாது. போதகர்கள் செல்ல முடியாது. பிரசங்கக் குரல்கள் எட்டாது.

அந்த நேரத்தில் இங்கிலாந்தில் இருந்த தேவ மக்களுக்கு இந்தியாவில் இருந்த இந்தப் பெண்களைபற்றிய ஒரு பெரிய பாரம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பல ஆண் மிஷனரிகள் ஊழியம்செய்துகொண்டிருந்தார்கள். ஆயினும், அவர்களால் இப்படி வாழ்ந்த பெண்களை அணுகமுடியவில்லை. “இந்தப் பெண்களை அணுக பெண்களே செல்ல வேண்டும்,” என்ற பாரத்தின் காரணமாக உருவான அமைப்புதான் Church of England Zenana Missionary Society. இது பிரசங்க மேடைகளை உருவாக்கவில்லை. பிரபல பிரசங்கிகளைத் தேடவில்லை. பெண்களுக்குள் பெண்களாகச் செல்ல, பிரசங்கிக்க அல்ல—இருப்பதற்கு. விவாதிக்க அல்ல—வாழ்வைப் பகிர்வதற்கு. எண்ணிக்கைக்காக அல்ல—மெதுவாக மாற்றுவதற்கு, யாரும் பார்க்காத இடத்தில், யாரும் கைதட்டாத வாழ்க்கை வாழ்வதற்கு, அதிகாரம் செலுத்தாமல் மக்களோடு மக்களாகக் கலந்து கரைவதற்கு, கிராமப்புற வாழ்க்கைக்கு ஆயத்தமான, தமிழ் கற்கத் தயாரான, வெயிலையும் நோயையும் பொறுக்கும் உடல் வலிமையும், தனிமையைத் தாங்கும் உள்ளமும், ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்கும் பொறுமையும் உடைய பெண் மிஷனரிகளைத் தேடினார்கள். “South India does not need louder preaching; it needs quieter love,” என்பது அவர்களுடைய உறுதிப்பாடு.

ஏமி CEZMSக்கு விண்ணப்பித்தார். ஆனால் அது ஒரு சாதாரண விண்ணப்பம் அல்ல. அவர், “எங்காவது என்னை அனுப்புங்கள்,” என்று எழுதவில்லை.  “Wherever obedience is needed, send me.” “எங்கு கீழ்ப்படிதல் அவசியமோ, அங்கு என்னை அனுப்புங்கள்,” என்று எழுதினார். அது ஊழியத்தின் ஆர்வம் அல்ல. தன் வாழ்க்கையின் ஒப்படைப்பு.

CEZMS நிர்வாகம் அவரைப் பார்த்தபோது, “இந்தப் பெண் நிச்சயமாக மேடை ஏற மாட்டாள். ஊழியத்தைத் தன் பெயரால் கட்டமாட்டாள். அதிகாரம் செலுத்த மாட்டாள். ஆனால் மக்களோடு கலந்துவிடுவாள். மண்ணோடு சேர்ந்துவிடுவாள். She will not control the field; she will belong to the field,” என்று உறுதியாக உணர்ந்தார்கள்.

தேவன் ஏமியைப் பல நாடுகளின்வழியே நடத்தி உடைத்தார். சீனக் கனவு நிறைவேறவில்லை. ஜப்பான் கதவு மூடப்பட்டது. இலங்கை வடிவமைத்தது. இப்போது கதவு திறந்தது.

திருநெல்வேலி – கரைந்த வாழ்க்கையின் தொடக்கம்

அது ஒரு பதவி அல்ல. ஒரு மிஷன் posting அல்ல. அது தேவன் அதுவரை நெய்த பாதையின் நிறைவு.

இந்தியா. 19ஆம் நூற்றாண்டு. விமானங்கள் இல்லை. அயர்லாந்திலிருந்து இலண்டன். அங்கிருந்து நீண்ட கடல் பயணம்—சென்னை. பின்னர் இரயில்—திருநெல்வேலி. அது சுலபமான பயணம் அல்ல. அலைகள். தனிமை. சோர்வு.

கடல் பயணத்தைப்பற்றி, “The sea strips one of all illusions of strength. கடல் ஒரு மனிதனின் பலத்தின் மாயையை உரிந்தெடுக்கிறது,” என்றும்,  இரயில் பயணத்தைப்பற்றி, “India is not something one visits. It is something one survives into love. இந்தியா ஒரு சுற்றுலாத் தலம் அல்ல. அது ஒருவன் தன் உயிரைக்  கொடுத்து நேசிக்கக்கூடிய மண்,” என்றும் எழுதுகிறார்.

1895ஆம் ஆண்டு, நவம்பர் 9. அன்றுதான் ஏமி கார்மைக்கேல் தன் 28 ஆவது வயதில் சென்னையில், தமிழ் மண்ணில் காலடி வைத்தார். அது ஒரு பயணத்தின் முடிவு அல்ல. ஒரு வாழ்க்கையின் தொடக்கம். அவர் காலடி வைத்த மண்—திருநெல்வேலி. பனை மரங்கள். சிவந்த மண். தூசி கலந்த காற்று. கருகும் வெயில். ஆழமான மதப் பிணைப்பு. சமூக எதிர்ப்பு. வெளிநாட்டவர்களுக்கு எளிதான நிலம் அல்ல.

அயர்லாந்தின் குளிரில் வளர்ந்த உடலுக்கு, இங்குள்ள வெயில் அக்கினிச் சூளையாக இருந்தது. மூச்சு நின்றுவிடுமோ என்று தோன்றும் வெப்பம். உடல் உடனே ஒத்துழைக்கவில்லை. Neuralgia—நரம்புகளைப் பிளக்கும் வலி. பலர் உடனே நாடு திரும்பியிருப்பார்கள். ஆனால் ஏமிக்கு அது எச்சரிக்கை அல்ல. உறுதிப்படுத்துதல்.

“நான் இங்கே சுகமாக வாழ வரவில்லை; கீழ்ப்படிந்து இருக்க வந்தேன். This is not a field to conquer. These are people to love. இது வென்று வாகை சூடவேண்டிய களம் அல்ல; இவர்கள் நேசிக்கப்படவேண்டிய மக்கள்,” என்று அவர் தன் நாளேட்டில் எழுதகிறார்.

திருநெல்வேலி—தேவன் தேர்ந்த மண்.

அவரைப் பார்த்த மக்களின் கண்களில், “நம் ஊரில் ஒரு வெள்ளைக்காரத் துரைசானியா?” என்ற அதிர்ச்சி. அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர் என்றால் அதிகாரம் உடையவர்கள், உயர்ந்தவர்கள், நெருங்கமுடியாதவர்கள் என்று மக்கள் நினைதார்கள். “நான் துரைசானியாக இருக்க விரும்பவில்லை. நான் என் மக்களில் ஒருத்தியாக மாற வேண்டும்,” என்ற ஒரு தீர்மானம் ஏமியின் உள்ளத்தில் ஏற்கெனவே பிறந்திருந்தது.

ஆரம்ப நாட்களில் அவருக்கு ஓர் அமைப்பின் பாதுகாப்பு இருந்தது, உணவு இருந்தது, வசதி இருந்தது. ஆனால் அவர் உயரத்தில் நின்றுகொண்டு மக்களை அணுக விரும்பவில்லை. சில நாட்களில் அவர் பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டு வீடு வீடாகச் சென்றார். தன் தொப்பியை நீட்டினார். ஒரு கதவு திறந்தது. ஒரு பெண் வெளியே வந்தாள். “வெள்ளைக்காரச்சி … தொப்பியை நீட்டுகிறாளா?” என்று அவளுடைய கண்களில் ஆச்சரியம். அந்தத் தொப்பியில் கொஞ்சம் கஞ்சி ஊற்றப்பட்டது. அந்தக் கஞ்சியில் சோறு மட்டும் கரையவில்லை. அதிகாரம், உயர்வு, தூரம் – எல்லாம் கரைந்தன.

ஊற்றிய கஞ்சியை எங்கு உட்கார்ந்து குடிப்பது?. மேசை இல்லை. நாற்காலி இல்லை. ஒரு கிழிந்த பாய் மட்டும் இருக்கிறது. “அம்மா… இங்கே எப்படி…” என்று சொல்லிமுடிப்பதற்குள் ஏமி தரையில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தார்.  இது வறுமையின் விளைவு அல்ல. உயரத்தைத் துறந்ததின் வெளியாக்கம். அந்த தரையில் சாதிச் சுவர் இடிந்தது. தூரம் குறைந்தது. இதயங்கள் திறந்தன.

மக்கள் “நீங்கள் யார்?” என்று கேட்டபோது அவர் தன் முழுப் பெயரைச் சொல்லவில்லை. புன்னகையோடு, “அம்மா” என்றார். அந்த நாளிலிருந்து யாரும் அவருடைய பெயரைக் கேட்கவில்லை, அறியவில்லை. அவருக்குப்  பட்டம் இல்லை. பதவி இல்லை. ஒரே அடையாளம்—அம்மா.

“நான் துரைசானியாக இருக்க விரும்பவில்லை. நான் என் மக்களில் ஒருத்தியாக மாற வேண்டும்,” என்ற தீர்மானம்  உடையிலும் வெளிப்பட்டது. ஐரோப்பிய ஆடைகள் அணிவதை நிறுத்தினார்; சேலை கட்டத் தொடங்கினார். அது fashion அல்ல. “வெளிநாட்டவர்” என்ற தூரத்தை உடைக்க, அவர் தன்னை மாற்றிக்கொண்டார். அது மட்டும் அல்ல. தோல் வெள்ளையாக இருக்கிறதே? அதை எப்படி மாற்றுவது? தோலின் நிறத்தை மங்கச் செய்ய காபி டிகாஷன் தடவினார். கரும்புக் கழிவுகளைப் பயன்படுத்தினார். இப்படி எல்லா வகையிலும் அவர் கரைந்தார், குறைந்தார், மறைந்தார்.

அடுத்த சவால்—மொழி. தமிழ் கற்க வேண்டும். இன்று தமிழனே தமிழும் ஆங்கிலமும் கலந்த “தமிங்கலம்” “Tanglish”தான் பேசுகிறான். அப்படியிருக்க, ஓர் ஆங்கிலப் பெண் எளிதாகத் தமிழ் கற்றுக்கொள்ள முடியுமா? எழுத்துக்கள், உச்சரிப்பு, சொற்களின் நீளம், பொருளின் ஆழம் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டுமே! அவர் கற்றார். தமிழ் கற்றார். “தமிழ் கற்பது நம் மூளையைத் தலைகீழாக மாற்றுவதுபோல,” என்று ஏமி பின்னாளில் எழுதுகிறார். பலமுறை அவர் தவறாகப் பேசினார். குழந்தைகள், பெரியவர்கள் எல்லாரும் நகைத்தார்கள். ஆனால், அந்த நகைப்பு அவரைத் துரத்தவில்லை. அவர் சோரவில்லை. தமிழ் கற்பதை நிறுத்தவில்லை. “நகைப்பைத் தாங்கினால்தான் அவர்களுடைய இருதயத்தை அடைய முடியும். மொழியைக் கற்காமல், இருதயத்தை அடைய முடியாது,” என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார். திருக்குறள், தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும் அளவுக்கு அவர் தமிழ்ப்புலமை பெற்றார். அது கல்விக்காக அல்ல. அது இணைப்புக்காக, உறவுக்காக, இதயத்துக்காக.

தேவதாசி முறையுடன் மோதல்

தமிழ்நாட்டின் ஆன்மீகத்தைக் கண்டு முதலில் ஏமி வியந்தார். எங்கு பார்த்தாலும் ஆலயங்கள், ஆலயங்களில் மந்திரங்கள், மக்கள் மேற்கொண்ட விரதங்கள், பக்தியின் வெளிப்பாடு, ஆன்மீக மொழியின் செழிப்பு - இவை அனைத்தையும் கண்ட ஏமி, “ஒ! இந்த மண் ஆழமான தேடலை உடைய மண்.  இங்கு மனிதரகள் வெறும் அன்றாட வாழ்வுக்காக மட்டும் அல்ல, நிரந்தரத்தைத் தேடி அலையும் உள்ளமுடையவர்கள் என்று இந்த மண் சாட்சிபகர்கிறது,” என்று எண்ணினார். ஆனால், அந்த ஆன்மீகத்தின் பின்னால் ஒரு கசப்பான உண்மை மறைந்திருந்ததை அவர் மெதுவாக உணரத்தொடங்கினார். அது அருவருப்பானது, அசிங்கமானது.  அது ஒரு சிக்கலான உலகம்.

புதிய நாடு, புதிய மொழி, புதிய கலாச்சாரம், புதிய பழக்கவழக்கங்கள்—இவைகளுக்குப்பின் ஒரு பழைய இருள் கவ்வியிருந்தது. அதுதான் தேவதாசி முறை. முதலில் ஏமி இதை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. சிலர் இதை “மதச் சடங்கு” என்று சொன்னார்கள்.  வேறு சிலர் இது “குழந்தைகளைக் கடவுளுக்கு அர்ப்பணித்தல்,” என்று விளக்கினார்கள். மாலை, சடங்கு, மந்திரம், கோவில், பூசாரி, ஊர்வலம் – இவைகளைப் பார்க்கும்போது வெளியே பக்திப்பரவசம்போலத் தோன்றும் காட்சிகள். ஆனால் அதன் உள்ளே இருந்தது அழுகை, அச்சம், முடங்கிய எதிர்காலம்.

“மணம் முடித்தல்” என்ற பெயரில் பெண் குழந்தைகள் கோவிலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டார்கள். கடவுளின் பெயரில் அவர்களின் குழந்தைத்தன்மை பறிக்கப்பட்டது. ஆன்மீகம் என்ற பெயரில் அவர்கள் மனித இச்சைகளுக்குப் பலியாக்கப்பட்டார்கள். இதைக் கேட்டபோது ஏமி உடனே பேசவில்லை; எழுதவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை. அவர் அதிர்ந்தார். “இதுவா மதம்? இதுவா ஆன்மீகம்? இதுவா மனித வாழ்க்கை?” என்ற கேள்விகள் அவருடைய உள்ளத்தில் கனமாக விழுந்தன. பார்த்தபோது நடுங்கினார்; அறிந்தபோது உடைந்தார். இறுதியில் அவர் ஒரேவொரு வார்த்தை மட்டும் சொன்னார்: “இது பாவம்.”

பிரீனா – தாய்மை பிறந்த இரவு

மார்ச் 6, 1901. ஏமியின் வாழ்க்கையிலும், இந்திய மிஷன் வரலாற்றிலும் மறக்க முடியாத நாள். அந்த இரவு, ஒரு சிறுமி இருளைக் கிழித்துக்கொண்டு ஓடினாள் —கோவிலிலிருந்து. அவளுடைய பெயர் பிரீனா. அவளுடைய கண்களில் பயம். அவள் ஏமியின் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டு கதறினாள்: “அம்மா… என்னைத் திருப்பி அனுப்பிவிடாதீர்கள். அவர்கள் என்னைச் சித்திரவதைசெய்கிறார்கள்.” சிறுமியின் உடலில் சூடு போடப்பட்ட காயங்கள். அந்தக் காயங்களுக்குள் குழந்தைத்தன்மை மௌனமாக அழுதுகொண்டிருந்தது.

அந்தக் குழந்தையின் கதறல் மேலோட்டமான ஒரு விண்ணப்பம் அல்ல. அது ஓர் உயிரின் கெஞ்சல். ஒரு குழந்தையின் கடைசி நம்பிக்கை. அந்த நொடியில்  ஏமியின் ஊழியம் மாறியது. அதுவரை அவர் ஒரு நற்செய்தியாளர். இப்போது—அவர் ஓர் அம்மா.

அந்தக் குழந்தையிடம் அவர் எதுவும் கேட்கவில்லை. “சட்டப் போராட்டம் வரும், சமூக எதிர்ப்பு வரும், குற்றச்சாட்டு வரும், தன் பாதுகாப்புக்குப் பங்கம் வரும்,” என்று அவருக்குத் தெரியும். ஆயினும், “பயப்படாதே மகளே. இனி நீ என் பிள்ளை. கடவுள் உன்னை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்,” இதுதான் அவர் சொன்ன வார்த்தைகள். இது அவர் அந்த நேரத்துக்குச் சொன்ன வெறும்  ஆறுதலான வார்த்தைகள் அல்ல; இது அவர் அந்தக் கணத்தில் எடுத்த ஓர் உறுதியான தீர்மானம். அது எளிதானதல்ல என்று அவருக்குத் தெரியும். அதே நேரத்தில், இந்தக் குழந்தையைத் திருப்பி அனுப்புவது பாவம் என்றும் அவருக்குத் தெரியும். அவர் ஒரு தாயின் போராட்டத்துக்குள் நுழைந்தார்.

அந்த இரவு பிரீனா தூங்கவில்லை. ஏமியும் தூங்கவில்லை. ஒரு குழந்தை தூங்காமல் இருப்பது சாதாரணம். ஆனால் ஒரு பெண் தூங்காமல் இருப்பது—அது தாய்மை பிறக்கும் இரவு.

பிரீனா ஏமியின் அருகில் சுருண்டு படுத்திருந்தாள். அவளுடைய உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தது. தூக்கத்திலும் பயம் தொடர்ந்தது. ஏமி அவளுடைய தலையில் கை வைத்து மெல்ல வருடினார். ஜெபித்தார். மௌனமாக. அந்த மௌன ஜெபத்தில், ஒரு வாழ்க்கை முழுமையாக மாறிக்கொண்டிருந்தது.

அந்த இரவுக்குப்பிறகு, ஏமி குழந்தைகளைத் தேடவில்லை. குழந்தைகள் அவரைத் தேடி வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு குழந்தையின் கதையும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு கதையிலும் ஒரே வலி—பயம், சிதைந்த குழந்தைத்தன்மை, திரும்பப்போக முடியாத வாழ்க்கை.

ஒருநாள், பிரீனா ஒரு பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். வெளியே பார்த்தால் ஒரு குழந்தை சாதாரணமாக விளையாடுவதுபோலத்தான் இருந்தது. ஆனால் திடீரென்று அவள் சொன்ன வார்த்தைகள் ஏமியின் உள்ளத்தை நொறுக்கின. “இப்போ இந்தப் பொம்மைக்கும் கடவுளுக்கும் கல்யாணம்.” அவள் சிரித்தபடி சடங்குகளை நடிக்கத் தொடங்கினாள். பூஜை, மாலை, அர்ப்பணிப்பு எல்லாம் தொடர்ந்தது.

ஏமி அங்கே நின்றுகொண்டிருந்தார். அந்தப் பிஞ்சு மனதில் ஊறியிருக்கும்  விஷத்தை உணர்ந்தார்.  அவள் தன் கடந்த காலத்தை  நடித்துக்கொண்டிருந்தாள். ஏமியின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. அவர் ஒன்றும் பேசவில்லை. அவளைத் தடுக்கவும் இல்லை. தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு அழுதார். பிறகு, “கர்த்தாவே… இந்தக் குழந்தைகள் உம்முடையவர்கள். இவர்களை என் கைகளில் ஒப்படைத்திருக்கிறீர்,” என்று ஜெபித்தார்.

ஏமியைபொறுத்தவரை அந்த நாளிலிருந்து தேவதாசிமுறை வெறுமனே “ஒரு சமூகப் பிரச்சனை” அல்ல. அது அவருடைய அழைப்பாக மாறிற்று. அவர் கோபத்தால் கொந்தளிக்கவில்லை; தாய்மையால் நிரம்பினார், தத்தளித்தார்.  அதன்பின் அவர் வசனத்தைப் பிரசங்கித்ததோடு நிறுத்தவில்லை. அவர் குழந்தைகளை மீட்டார்.

சிலர் அவரைப் “பைத்தியக்காரி” என்றார்கள். சிலர் “ஆபத்தானவள்” என்றார்கள். சிலர் “மதவெறியர்” என்றார்கள். ஆனால் குழந்தைகள் அவரை “அம்மா,” என்ற ஒரே பெயரால் அழைத்தார்கள்.

இரவுகளில் நடந்த தப்பிப்பு – காவலாகிய தாய்

சுற்றியிருந்த மக்களின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும். தன்னைக் கண்காணிக்கும்  கண்களுக்குத் தப்பி குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். எனவே, அந்த இல்லத்தின் கதவுகள் பகலில் மூடியிருந்தன. இரவில் மட்டுமே திறக்கும்.  இரவில்—அங்கே அமைதியாக நடந்தது மீட்பு.

சில இரவுகளில் கதவு மெதுவாகத் தட்டப்பட்டது. அது பயந்த விரல்களின் தட்டல். கதவு திறக்கப்பட்டது. வாசலுக்கு வெளியே ஒரு சிறுமி. சில நேரங்களில் இருவர். சில நேரங்களில் காயங்களுடன். சில நேரங்களில் நடுங்கிய கண்களுடன். “அம்மா…” அந்த ஒரு வார்த்தை.

ஏமி “யார் அனுப்பினார்கள்?” என்று கேட்கவில்லை. “நாளை என்ன ஆகும்?” என்று கணக்கிடவில்லை. அவர் பார்த்தது—பயம். அவர் செய்தது—அணைத்தல்.

அந்த இருண்ட நாட்களில்தான் டோனாவூர் உருவாகத் தொடங்கியது. அது ஒரு திட்டத்திலிருந்து பிறக்கவில்லை. அது இரவில் அழுத குழந்தைகளின் குரலிலிருந்து பிறந்தது. “ஒரு குழந்தை என்னிடம் வந்துவிட்டால், அவள் என் பிள்ளை. இனி பின்வாங்க முடியாது,” என்பது அவருடைய தீர்மானம். இந்தத் தீர்மானத்திலிருந்துதான் பின்னாளில் டோனாவூர் ஐக்கியம் உருவானது.

சட்டமும் மனச்சாட்சியும் – மோதல்

அந்த மீட்பு அமைதியாகத் தொடங்கியது. அமைதியாகத் தொடங்கிய அந்த மீட்பு, அமைதியாகத் தொடரவில்லை. ஒரு குழந்தை வந்தாள். பிறகு இன்னொரு குழந்தை. அதற்குப்பிறகு இன்னும் சிலர். இது கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் நடக்கவில்லை. கோவில்கள் காலியாகிவிடவில்லை. ஆனால், கோவில்களிலிருந்து குழந்தைகள் காணாமல்போனார்கள்.  “வெள்ளைக்காரி குழந்தைகளைத் திருடுகிறாள். மதம் மாற்றுகிறாள். கோவிலின் அதிகாரத்தைச் சீர்குலைக்கிறாள். சமய மரபுகளை மிதிக்கிறாள்,” என்ற கிசுகிசுக்கள் பிறந்தன. வதந்திகள் பரவின. அவை நாளடைவில் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் மனுக்களாகப் பறந்தன. காவல் நிலையங்களில் புகார்களாக மாறின. நீதிமன்றத்தில் வழக்குகளாக உருவெடுத்தன.

ஒருநாள் ஏமிக்கு ஒரு செய்தி வந்தது. அது ஓர் எளிய அறிவிப்பு அல்ல. அது அவர்மேல் போடப்பட்ட ஒரு வழக்கின் செய்தி. அவர்மேல் சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டு என்ன தெரியுமா? “Child Snatcher.” குழந்தைகளைத் திருடுபவர்.

அந்த வழக்கைக் கண்டு அவர் கொஞ்சம்கூடக் கலங்கவில்லை. ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்தபோது உள்ளம் கலங்கியது.

நீதிமன்றத்தில் ஆங்கிலேயர்களின் சட்டமும், இந்திய மரபும், மதச் சடங்குகளும் நேருக்குநேர் மோதின. நீதிமன்றத்தைப்பொறுத்தவரை ஒவ்வொரு குழந்தையும் ஒரு வழக்கு எண். அவ்வளவுதான். அது மனித உயிர் அல்ல. Habeas Corpus—  “குழந்தையைக் காணவில்லை. இவள் சட்டவிரோதமாகக்  காவலில் வைத்திருக்கிறாள். குழந்தையை உடனே ஒப்படைக்க வேண்டும்.” என்று ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.

ஏமி நீதிமன்றத்தில் அமைதியாக நின்றார். அவர் சத்தம் போடவில்லை. அரசியல் பேசவில்லை. தன்னைப் பாதுகாக்க முயலவில்லை. அவர் ஒரேவொரு வாக்கியம்தான் சொன்னார்:  “இந்தக் குழந்தைகள் கோவிலுக்குத் திரும்பினால், அவர்களுடைய வாழ்க்கை முடிந்துவிடும்.” அது ஒரு சட்டவாதம் அல்ல. ஒரு தாயின் சாட்சி.

ஆனால் நீதிமன்றம் பெரும்பாலும் இருதயத்தின் குரலைக் கேட்பதில்லையே! “குழந்தையை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்” என்ற ஆணை பிறந்தது. நீதிமன்றத்தின் ஆணை தாளில் எழுதப்பட்டது. ஆனால் ஏமியின் இருதயத்தில், “பிள்ளைகளை என்னிடமிருந்து பிரிக்காதீர்கள்,” என்ற வேறோர் ஆணை எழுதப்பட்டிருந்தது.

சட்டம் தன் வேலையைச் செய்தது. ஆணைகள் வந்தன. “குழந்தைகளை ஒப்படைக்க வேண்டும். இந்தச் செயல்கள் சட்டவிரோதம். எதிர்த்தால் தண்டனை,” என்று குறிப்புகள் எழுதப்பட்டன.

இந்த வார்த்தைகள் ஏமிக்குப் புதிதல்ல. ஆனால், “இது வெறும் ஒரு வழக்கு அல்ல. இது சட்டமும் மனச்சாட்சியும் நேருக்கு நேர் மோதும் இடம்,” என்று இப்போது அவர் தெளிவாகப் புரிந்துகொண்டார்.

ஏமி சட்டத்தை இகழவில்லை. அரசுக்கு எதிராகப் பேசவில்லை. ஆனால், “சட்டம் குழந்தைகளைப் பாதுகாக்கவில்லை என்றால், அந்தச் சட்டத்துக்குக் கண்மூடித்தனமாக கீழ்ப்படிவது தேவனுக்குக் கீழ்ப்படியாமையாக மாறிவிடும். மனிதன் எழுதிய விதிகள் ஒரு புறம், தேவன் ஒப்படைத்த உயிர்கள் இன்னொரு புறம். இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டம் இது,” என்ற உண்மையை அவர் புரிந்துகொண்டார்.

“ஒரு பெண் இவ்வளவு தூரம் போக வேண்டுமா? சிறைக்கு போகத் தயாராக இருக்கிறாயா? இந்தக் குழந்தைகள் உன்னுடையவர்கள் அல்ல,” என்று சிலர் அவருக்கு ஆலோசனை கூறினார்கள்.

“நான் சட்டத்தை மீறவேண்டியிருந்தாலும், இந்தக் குழந்தைகளை நான் திருப்பி அனுப்பமாட்டேன். தேவைப்பட்டால் நான் சிறைக்குச் செல்வேன்,” என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அது உணர்ச்சிவசப்பட்டு சொன்ன வார்த்தைகள் அல்ல. அது நீண்ட ஜெபங்களின் விளைவு. தூக்கமில்லா இரவுகளின் சாராம்சம். குழந்தைகளின் முகங்களைப் பார்த்து எடுத்த தீர்மானம்.

“இந்தக் குழந்தைகளைத் திருப்பி அனுப்புவதைவிட, சிறைச்சாலை எனக்கு இலகுவானது,” என்று அவர் எழுதினார்.

ஏமி தன்னை வீராங்கனை என்றோ. புரட்சியாளி என்றோ கருதவில்லை. அவர் தன்னை ஒரு தாயாக மட்டுமே கருதினார். ஒரு தாய்க்கு சில கேள்விகள் தேவையில்லை. சில ஆணைகள் பொருந்தாது. சில சட்டங்கள் நிற்கும் இடத்தில்தான் ஒரு வாழ்க்கை தொடங்குகிறது.

அந்த நாட்களில் ஒவ்வோர் இரவையும், “நாளை காலை இந்தக் குழந்தைகள் என்னிடம் இருக்குமா?” என்ற ஒரே கேள்வியோடு முடித்தார்.  அந்தக் கேள்வி அவரைத் தூங்கவிடவில்லை. ஆனால் அது அவரைப் பின்வாங்கவும் விடவில்லை. பயம் இருந்தது. ஆனால் அதைவிட அதிகமாகப் பொறுப்பு இருந்தது.

அவர் தயாரானார் – வழக்காடுவதற்காக அல்ல, பேசுவதற்காக அல்ல. வெற்றி விழா நடத்துவதற்காக அல்ல. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்காக அல்ல. சிறைக்குச் செல்வதற்காக. சிறையை நினைத்து அவர் பயப்படவில்லை.  ஏனெனில், “கிறிஸ்துவுக்காக எதையாவது இழக்க வேண்டியிருந்தால், அது இழப்பு அல்ல,” என்ற உறுதிப்பாட்டின் அடிப்படையில் அவர் ஏற்கெனவே தன்னை இழந்திருந்தார்.

பகலில் சட்டம் பேசிக்கொண்டிருந்தது. ஆணைகள் எழுதப்பட்டன. விசாரணைகள் நடந்தன. ஆனால் இரவில், ஏமியின் உலகம் முற்றிலும் வேறுபட்டது. இரவு என்பது அவருக்கு ஓய்வின் நேரம் அல்ல; அது காவலின் நேரம். குழந்தைகள் தூங்கினார்கள். ஊர் அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதிக்குள் ஆபத்து ஒளிந்திருந்தது.

சில இரவுகளில், “நாளை காலை அதிகாரிகள் வரலாம். ஒரு குழந்தையைத் திரும்பப் பெற முயற்சி நடக்கலாம்,” என்று திடீரென்று ஒரு செய்தி வரும். அந்தச் செய்தி வந்தவுடன், ஏமி கேள்விகள் கேட்கவில்லை. தாமதிக்கவும் இல்லை. அவர் குழந்தைகளை எழுப்பினார். அமைதியாக, அழுகை இல்லாமல், அச்சம் வெளியில் தெரியாமல் செயல்பட்டார்.

குழந்தைகளுக்கு இது முழுமையாகப் புரியவில்லை. ஆனால் ஏமியின் முகத்தைப் பார்த்தார்கள். அந்த முகத்தில் அவசரம் இல்லை. பதற்றம் இல்லை. இருந்தது ஒரே விஷயம்—பாதுகாப்பு. அந்த முகத்தை நம்பி, அவர்கள் அவரோடு நடந்தார்கள்.

இரவுகளில், மழையில், வழுக்கல் நிறைந்த செம்மண் பாதைகளில், ஏமி குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு நடந்தார். சிலரால் நடக்க முடியவில்லை. சிலர் பயத்தில் நடுங்கினார்கள். அவர்களை அவர் சுமந்தார். அது உடல் சுமை மட்டும் அல்ல; அது உயிர் சுமை. சில இரவுகளில் காடுகளிலும், மலைகளிலும், ஒதுக்குப்புறமான குடிசைகளின் பின்புறத்திலும், மரத்தடிகளிலும், இன்னும் சில நேரங்களில் திறந்த வெளிகளிலும் ஒளிந்தார்கள்.  குழந்தைகள் சோர்ந்து தூங்கிவிடுவார்கள். ஏமி மட்டும் தூங்கவில்லை. ஒவ்வொரு மூச்சையும் கவனித்தார். யாராவது அழுதுவிடுவார்களோ என்று பார்த்தார். அதிகாரிகள் வருகிறார்களா என்று கவனித்தார்.

அந்த இரவுகளில் ஏமி தன்னை தலைமறைவு வாழ்க்கை வாழ்பவளாகவோ, சட்டத்தை மீறுபவளாகவோ பார்க்கவில்லை. அவர் தன்னை ஒரு தாய் என்று மட்டும் அறிந்திருந்தார். ஒரு தாய், தன் பிள்ளைகளை ஆபத்திலிருந்து காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ, அதையே அவர் செய்தார்.

அந்த இரவுகளில் ஏமி ஒரு விசுவாசக் கதாநாயகியாக நடிக்கவில்லை. அவர் அற்புதங்களை எதிர்பார்க்கவும் இல்லை. அவர் செய்தது ஒன்றே—நடந்தார். சுமந்தார். காத்தார். விசுவாசம் அவருக்கு மேடையல்ல; அது நடையின் ஆற்றல்.

காலையில், எல்லாம் மீண்டும் அமைதியாகிவிடும். குறைந்தபட்சம் அமைதியானதுபோல் தோன்றும். குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தார்கள்.  ஏமி சோர்ந்திருந்தார். ஆனால் அவருடைய உள்ளத்தில் சமாதானம் குடியிருந்தது. அந்த சமாதானம் அவர் பெற்ற வெற்றியிலிருந்து வரவில்லை. அது அவருடைய கீழ்ப்படிதலிலிருந்து வந்தது.

அந்த இரவுகளில், சட்டம் தோற்றது என்று யாரும் எழுதவில்லை. ஆனால் ஒரு தாய் வென்றாள். அந்த வெற்றிக்குக் கைதட்டல் இல்லை. புகழ் இல்லை. ஆனால் உயிரோடு இருக்கும் குழந்தைகள் இருந்தார்கள். அதுவே ஏமிக்குப்  போதுமானது.

அந்த இரவுகளில்தான், ஏமியின் தாய்மை முழுமையாக உருவானது. அவர் வெறுமனே குழந்தைகளை மீட்கவில்லை. அவர் அவர்களுக்காகத் தன் தூக்கத்தை, தன் பாதுகாப்பை, தன் எதிர்காலத்தைத் துறந்தார். அந்த இரவுகள் முடிந்தபோதும், அந்த காவல் முடிவடையவில்லை. அது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது.

டோனாவூர் – சட்டம் அறிந்த இல்லமாக மாறியது

குழந்தைகளைத் தூக்கிக்கொண்டும், இழுத்துக்கொண்டும் இவ்வாறு இரவுகளில் தொடர்ந்து தப்பிக்க முடியாது, இது நீண்ட நாட்கள் தொடர முடியாது என்பதை ஏமி புரிந்துகொண்டார். தாய்மையின் தைரியம் அவசியம்; ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்ய அதைவிட அதிகமாக ஞானமாகச் செயல்படவேண்டியிருந்தது. உணர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே ஓர் இல்லம் நிலைக்க முடியாது. அன்பு பாதுகாக்கும்; ஆனால் சட்டம்தான் நிலைநாட்டும். அந்த உண்மையை ஏமி மெதுவாகவும் தெளிவாகவும் உணர்ந்தார்.

எனவே, டோனாவூர் ஒரு மறைவிடமாக மட்டும் இருக்கக்கூடாது, அது ஒரு பாதுகாப்பான இல்லமாகவும், சட்டரீதியாகக் காப்பாற்றப்பட்ட இடமாகவும் மாற வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். இதற்காக அவர் அதிகாரிகளை எதிர்த்து நிற்கவில்லை; மாறாக, சட்டத்தின் வழியே நடக்கத் தொடங்கினார். குழந்தைகளின் பாதுகாவலாளராக சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். இது போராட்டத்தின் புதிய கட்டம்—மோதல் அல்ல, கட்டமைப்பு.

ஏமி சட்டத்தை ஓர் எதிரியாகப் பார்க்கவில்லை. ஆனால் சட்டம் பல நேரங்களில் உயிரைக் காக்கத் தவறுகிறது என்பதையும் அவர் கண்டார். ஆகவே, சட்டத்தின் உள்ளே நுழைந்து, குழந்தைகளின் நலனுக்காக அதைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அவர்மேல் விழுந்தது. சட்ட ஆலோசனைகள் பெற்று, உரிய ஆவணங்கள் தயாரித்து, பாதுகாவலர் உரிமை, பாதுகாப்பு, பொறுப்பு—ஆகியவைகளை உள்ளடக்கி பத்திரங்கள்  பதிவுசெய்தார்.

டோனாவூர் மெதுவாக ஓர் இல்லமாக வடிவெடுக்கத் தொடங்கியது. அது ஒரு மிஷன் அல்ல. ஒரு கட்டிடம் அல்ல. அது ஒரு தாயின் உள்ளத்தில் பிறந்த இல்லம். அந்த இல்லத்தில் முதலாவது விதிகள் இல்லை. பாடத்திட்டம் இல்லை. அட்டவணை இல்லை. முதலாவது இருந்தது—பாதுகாப்பு. “நீ இங்கே பாதுகாப்பாக இருக்கிறாய். யாரும் உன்னைத் திருப்பி எடுத்துச் செல்லமாட்டார்கள்.” இந்த இரண்டு வாக்கியங்கள்தான் அந்த இல்லத்தின் முதல் அடித்தளம்.

அந்த இல்லத்தில் பெயரோ, ஜாதியோ, பூர்வீகமோ, குடும்பமோ, ஊரோ, கோவில் பின்னணியோ முக்கியம் இல்லை. எல்லாருக்கும் ஒரேவொரு அடையாளம்—பிள்ளை. ஏமி தன்னை “நிர்வாகி” என்றோ, “மிஷனரி” என்றோ  அழைக்கவில்லை. ஒரேவொரு பெயர்—அம்மா. அவர் எல்லாருக்கும் அம்மா. அந்தப் பெயரில் அதிகாரமோ, உயர்வோ, தூரமோ இல்லை. அதில் பொறுப்பு, கடமை, அன்பு இருந்தது. அந்தப் பெயர் இருதயங்களைத் திறந்தது.

அந்த இல்லத்தில் குழந்தைகளுக்கு சோறு, கஞ்சி என எளிய உணவு கிடைத்தது. சில நேரங்களில் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் ஒன்று உறுதி—அங்கே பயம் இல்லை. பாதுகாப்பு உண்டு. அந்த வீட்டில் குழந்தைகள் நிம்மதியாகத் தூங்கினார்கள்.


குழந்தைகள் பெயர்களோடு மட்டுமல்ல, அடையாளத்தோடும் வாழத் தொடங்கினார்கள். அவர்கள் மறைக்கப்படவில்லை; காக்கப்பட்டார்கள்.

தாய்மை அவரை மென்மையாக்கவில்லை; அது அவரை தெளிவாக்கியது. உணர்ச்சியை ஞானம் வழிநடத்தத் தொடங்கியபோது, டோனாவூர் ஒரு தற்காலிக தப்பிப்பிடம் அல்ல, ஒரு நீண்டகால இல்லமாக மாறியது.

இந்த மாற்றத்தில் ஏமி தனியாகச்ச செயல்படவில்லை. தமிழ்ச் சகோதரிகள், அர்ப்பணிக்கப்பட்ட பெண்கள், நம்பிக்கையுள்ள ஊழியர்கள்—அனைவரும் இணைந்தார்கள். அது ஓர் அமைப்புபோலத் தோன்றினாலும், உள்ளே அது இன்னும் ஒரு வீடுதான். ஆனால் இப்போது அந்த வீடு சட்டத்தால் காக்கப்பட்டது; மனச்சாட்சியால் வழிநடத்தப்பட்டது.

டோனாவூர் இனி இரவுகளில் ஓடிஒளிய வேண்டிய இடம் அல்ல. அது பகலில் பயமின்றி வாழக்கூடிய ஓர்  இடமாக மாறியது. அதிகாரிகள் வந்தாலும் சரி, ஆணைகள் வந்தாலும் சரி, அந்த இல்லம் இனி மறைய வேண்டியதில்லை. ஏனெனில் அது சட்டத்தின்படி பிள்ளைகளைப் பாதுகாக்கக் கற்றுக்கொண்டது.

ஸ்டாரி கிளஸ்டர் – தாய்மையின் சமூகமாக மாறியது

இந்தக் கட்டத்தில் டோனாவூர் ஊழியம் ஒரு புதிய பரிமாணம் அடைந்தது. அவர் குழந்தைகளை மீட்டதோடு தன் பொறுப்பை முடித்துக்கொள்ளவில்லை. அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தினார். தாய்மை ஒரு கண நேரத் தைரியம் மட்டும் அல்ல; அது வாழ்நாள் பொறுப்பு.

சட்டம் பார்க்கத் தவறிய உயிர்களை டோனாவூர் காப்பாற்றிக் காட்டியது. அந்த இல்லம் பல தலைமுறைகளுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தது.

ஸ்டாரி கிளஸ்டர் – தாய்மையின் சமூகமாக மாறியது

டோனாவூர் ஓர் இல்லமாக நிலைபெற்றபோது, ஏமி, “இந்தப் பணியை  ஒருவர்  மட்டும் சுமக்க முடியாது. ஒரு தாய் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம்; ஆனால் அவர்களை வளர்க்க ஒரு குடும்பம் தேவை. அதுபோல, இந்த இல்லம் நிலைத்திருக்க, நான் மட்டும் போதாது. தாய்மையின் ஆவி பல இருதயங்களில் பகிரப்பட வேண்டும்,” என்று ஏமி தெளிவாக உணர்ந்தார்.

அப்போதுதான் “ஸ்டாரி கிளஸ்டர்” உருவானது. அது ஒரு அமைப்பின் பெயர் அல்ல. அது ஒரு சமூகத்தின் உருவம். நட்சத்திரங்கள் ஒன்றாகச் சேரும்போது வானம் பிரகாசிப்பதைப்போல, பல அர்ப்பணிக்கப்பட்ட பெண்கள் ஒன்றாகச் சேர்ந்தபோது, டோனாவூர் ஓர் உயிருள்ள சமூகமாக மாறியது. ஏமி அவர்களை “உதவியாளர்கள்” என்று அழைக்கவில்லை. “ஊழியர்கள்” என்றும் சொல்லவில்லை. அவர்கள் தாய்மையின் சகோதரிகள்.

இந்த சமூகத்தில் பொன்னம்மாள், அருளைபோன்ற தமிழ்ப் பெண்கள்—பெயர்களாக அல்ல, உயிர்களாக—இந்த இல்லத்தின் தூண்களாக மாறினார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. உலகம் அறிந்த கல்வி கிடையாது. ஆனால் குழந்தைகளின் கண்ணீரின் மொழி தெரியும். அதுவே இங்கே தேவைப்பட்ட தகுதி.

ஸ்டாரி கிளஸ்டர் வாழ்க்கை மிக எளிமையானது. மாட்டு வண்டிகளில் கிராமம் கிராமமாகப் பயணித்தார்கள். சோறு, கஞ்சி—அதுவே அவர்களுடைய உணவு. தரையில் பாயை விரித்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பிரிவுகள் அங்கே இல்லை. ஜாதி, பின்னணி, பழைய வாழ்க்கை—எல்லாம் அந்த வாசலுக்கு வெளியே நிறுத்தப்பட்டன. உள்ளே வந்தபின், ஒரே அடையாளம்—சேவை.

இந்தச்ச சமூகத்தில் அதிகாரம் பேசவில்லை. ஒழுக்கம் பேசவில்லை. அன்பு பேசவில்லை. எல்லாம் ஒன்றாக வாழ்ந்தது. ஏமி அவர்களுக்கு “தலைவி” ஆகவில்லை. அவர் அவர்களுக்கு முன்னால் நடந்து காட்டினார். அதிகமாகப் பேசவில்லை. ஆனால் அவருடைய வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒரு பாடமாக இருந்தது. தியாகம் எப்படி இருக்க வேண்டும்? சுயமறுப்பு எப்படிச் சுமக்க வேண்டும்? குழந்தையைத் தன் சொந்த பிள்ளைபோலக் கவனிப்பது எப்படி? —இவையெல்லாவற்றையும் அவர் சொல்லவில்லை; வாழ்ந்தார்.

ஸ்டாரி கிளஸ்டர் ஒரு பெண் மிஷனரி குழு அல்ல. அது ஒரு தாய்மையின் பயிற்சிப்பள்ளி. அங்கே யாரும் மேடையில் நிற்கவில்லை. யாரும் பெயர் பெற்றவர்கள் ஆகவில்லை. ஆனால் குழந்தைகள் பாதுகாப்பாக வளர்ந்தார்கள். காயங்கள் மெதுவாக ஆறின. பயம் நம்பிக்கையாக மாறியது. அந்த மாற்றமே இந்த சமூகத்தின் வெற்றி.

இந்த சமூகத்தின் அழகு அதன் அமைதியில் இருந்தது. பெரிய அறிவிப்புகள் இல்லை. விளம்பரம் இல்லை. உலகம் திரும்பிப் பார்க்கும் முயற்சியும் இல்லை. ஆனால் அந்த இல்லத்தின் உள்ளே, நட்சத்திரங்கள்போல ஒளிர்ந்த பல பெண்கள், அமைதியாக இருளை விரட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குழந்தையும் அந்த ஒளியின்கீழ் பாதுகாப்பாக வளர்ந்தது.

ஸ்டாரி கிளஸ்டர், ஏமியின் தாய்மையைப் பெரிதாக்கவில்லை; அதை பகிர்ந்தது. இனி டோனாவூர் ஒரேவொரு பெண்ணின் தோள்களில் மட்டும் இல்லை. அது ஒரு சமூகத்தின் இதயத்தில் துடித்தது. அந்த நாளிலிருந்து, ஏமி தனியாக நிற்கவில்லை. தாய்மை, சகோதரத்துவமாக மாறியது. தனிநபர் அழைப்பு, ஒரு சமூக சாட்சியாக வளர்ந்தது.

உடை, ஒழுக்கம், அமைதி – டோனாவூரின் வாழ்க்கை முறை

டோனாவூர் ஓர் இல்லமாக வளர்ந்தபோது, அதன் வாழ்க்கை முறையும் மெதுவாக உருவானது. இது வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட விதிகள் அல்ல. தேவையிலிருந்து, அனுபவத்திலிருந்து, தாய்மையின் உள்ளுணர்விலிருந்து பிறந்த ஒழுங்கு. “குழந்தைகள் பாதுகாப்பாக வளர, சுதந்திரம் மட்டும் போதாது; ஒழுக்கமும் அவசியம்,” என்று ஏமி அறிந்திருந்தார்.

முதல் வெளிப்பாடு—உடை.
ஆடம்பரம் இல்லாத எளிய பருத்தி ஆடைகள். மிதமான நிறங்கள். வறுமையை மகிமைப்படுத்த அல்ல; சமத்துவத்தைப் பாதுகாக்க. உடை இங்கே உயரத்தைக் காட்டவில்லை; மறைத்தது.

அடுத்தது—ஒழுக்கம்.
கடுமை இல்லை; தெளிவு மட்டும். நேரம் மதிகக்கப்பட்டது. வேலை பகிரப்பட்டது. பொறுப்பு உணரப்பட்டது. குழந்தைகள் சிறிய பணிகளில் ஈடுபட்டார்கள்—தண்டனையாக அல்ல; வளர்ச்சியாக. ஒழுக்கம் கட்டுப்பாடு அல்ல; பாதுகாப்பு.

இதன் மையம்—அமைதி.
அமைதி என்பது வெறுமை அல்ல; கவனமான இருப்பு. அதிக சத்தம் இல்லை. தேவையற்ற அழுத்தம் இல்லை. காயமடைந்த உள்ளங்களுக்கு முதலில் தேவை வார்த்தைகள் அல்ல—அமைதி என்று ஏமி நம்பினார்.

டோனாவூரின் வாழ்க்கை உலகத்தைக் கவர்வதற்காக இல்லை; குழந்தைகளைக் காக்கத்தான். வெளியில் பார்த்தால் கடுமைபோல தோன்றலாம். ஆனால் உள்ளே அது ஒரு கரம், ஒரு தழுவல்.

உடை சமத்துவத்தைக் கற்றுத்தந்தது. ஒழுக்கம் பொறுப்பை வளர்த்தது. அமைதி காயங்களை ஆற்றியது.

அங்கே குழந்தைகள் வயதில் மட்டும் அல்ல; உள்ளத்திலும் வளர்ந்தார்கள்.

உடைந்த உடல் – எரியும் பேனா

1931ஆம் ஆண்டு. ஒரு சாதாரண நாளைப்போலத் தோன்றிய அந்த நாள், ஏமியின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பமாக மாறியது. ஒரு கழிவறைக் குழியருகே நடந்துகொண்டிருந்தபோது, ஏமி தவறி விழுந்தார். காலில் பலத்த காயம். நரம்புகள் பாதிக்கப்பட்டன. அந்தக் கணம்முதல், அந்தக் கால்கள் நடக்கவில்லை.

முதலில், இது தற்காலிகம் என்று நினைத்தார்கள். சில வாரங்கள் ஓய்வு. சில மாதங்கள் சிகிச்சை. ஆனால் நாட்கள் மாதங்களாக மாறின. மாதங்கள் ஆண்டுகளாக மாறின. ஏமி படுக்கையைவிட்டு எழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அடுத்த இருபது ஆண்டுகள்—அவர் படுக்கையிலேயே இருந்தார்.

வெளியில் பார்த்தால், அது அவருடைய பணிவிடையின் முடிவாகத் தோன்றியிருக்கலாம். குழந்தைகளுக்காக ஓடி, நடந்து, சுமந்து வந்த வாழ்க்கை—இனி எல்லாம் முடிந்துவிட்டது என்று சாத்தான் எண்ணியிருக்கலாம். ஆனால் தேவன் வேறுவிதமாக எண்ணினார். தேவனுடைய கணக்கில், இது முடிவு அல்ல. இது ஒரு புதிய தொடக்கம்.

ஏமி இதை “சமாதானத்தின் அறை” (Room of Peace) என்று அழைத்தார். அந்த அறையில் மேடை இல்லை. கூட்டம் இல்லை. பயணம் இல்லை. ஆனால் அந்த அமைதிக்குள், ஓர் ஆழமான ஊழியம் பிறந்தது. ஏமி தன் கால்களை  இழந்தார்; ஆனால் தன் பார்வையை இழக்கவில்லை. தன் நடையை இழந்தார்; ஆனால் தன் உள்ளுணர்வை இழக்கவில்லை.

மறைந்த வாழ்க்கை – பேசிக்கொண்டிருக்கும் சாட்சி

படுக்கையில் இருந்தபடியே, அவர் எழுதத் தொடங்கினார். அது நேரத்தைப் போக்குவதற்காக எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல. அது காயப்பட்ட இருதயத்திலிருந்து வழிந்த இரத்தத்துளிகள். அவர் எழுதிய If, Gold Cord, Rose from Brier, Edges of His Ways நூல்கள் மேடைகளில் பேசப்பட்ட பிரசங்கங்கள் அல்ல. அவை இரவுகளில் அழுத ஜெபங்களின் எழுத்து வடிவம்.

ஏமி தன்னை ஒரு எழுத்தாளி என்று அழைக்கவில்லை. ஆனால் அவருடைய  பேனா எரிந்தது. அவருடைய எழுத்துக்களில் ஆடம்பரம் இல்லை. ஆவிக்குரிய  அலங்காரம் இல்லை. ஆனால் உண்மை இருந்தது. சிலுவையில் உருவான வார்த்தைகள் இருந்தன. ஆகவேதான் அந்த நூல்கள் இன்றுவரை உலகெங்கும் காயமடைந்த உள்ளங்களுக்கு மருந்தாக இருக்கின்றன.

அவர் எழுதிய “You can give without loving, but you cannot love without giving.”
(நீங்கள் நேசிக்காமல் கொடுக்கலாம்; ஆனால் கொடுக்காமல் நேசிக்க முடியாது.) என்ற ஒரு வரி அவருடைய முழு வாழ்க்கைகக்கும் முத்தாய்ப்பாய் இருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில், ஏமி வெளியே வரவில்லை. பலர் அவரை மறந்தார்கள். உலக மிஷன் உலகம் புதிய பெயர்களைக் கொண்டாடியது. புதிய மேடைகள் உருவானது. ஆனால் டோனாவூரின் ஓர் அமைதியான அறையில், தேவன் ஒரு பெண்ணின் பேனாவை தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருந்தார்.

அவர் படுக்கையில் இருந்தாலும், டோனாவூர் அவருடைய கண்களிலிருந்து மறையவில்லை. குழந்தைகள் வளர்ந்தார்கள். சமூக ஒழுங்கு தொடர்ந்தது. ஏமி இப்போது எல்லாவற்றையும் இயக்கவில்லை; ஆனால் எல்லாவற்றையும் ஜெபத்தில் சுமந்தார். அவர் முன்னால் நடக்கவில்லை; பின்னால் தாங்கினார்.

இந்த ஆண்டுகள் ஏமியின் வாழ்க்கையில் மறைந்த காலம். ஆனால் அதுவே மிகவும் கனமான காலமும். அவர் வெளியே பேசவில்லை. ஆனால் பல தலைமுறைகளோடு பேசினார். அவர் நடக்கவில்லை. ஆனால் பலரை தேவனிடம் நடத்தினார்.

உடைந்த உடல் ஒரு தடையாக மாறவில்லை. அது தேவனுடைய கரத்தில் ஒரு கருவியாக மாறியது. ஏமியின் வாழ்க்கை இதற்கு சாட்சி. தேவனுடைய ஊழியம் கால்களால் மட்டும் நடப்பதில்லை. அது சில நேரங்களில், உடைந்த உடலிலும், எரியும் பேனாவிலும் தொடர்கிறது.

மறைந்த வாழ்க்கை – பேசிக்கொண்டிருக்கும் சாட்சி

ஏமியின் வாழ்க்கையின் கடைசி ஆண்டுகள் வெளிச்சத்தில் இல்லை. மேடைகளில் இல்லை. செய்தித்தாள்களில் இல்லை. ஆனால் அந்த மறைந்த ஆண்டுகள்தான், அவருடைய சாட்சியை இன்னும் ஆழமாக்கின. உடல் படுக்கையிலே முடங்கியிருந்தாலும், உள்ளம் தேவனுக்குள் இன்னும் விரிந்துகொண்டே இருந்தது. அவர் இப்போது வெளியே சென்று குழந்தைகளைத் தேடவில்லை; குழந்தைகள் அவருடைய அறைக்குள் வந்து அவரைக் கண்டார்கள். அந்த அறை—ஒரு மிஷன் அலுவலகம் அல்ல; ஒரு தாயின் அறை. அங்கே ஆணைகள் இல்லை; ஆறுதல் இருந்தது. திட்டங்கள் இல்லை; ஜெபங்கள் இருந்தன.

அந்த ஆண்டுகளில் ஏமி குறைவாகப் பேசினார்; ஆனால் அதிகமாகக் கேட்டார். குழந்தைகளின் குரல், அவர்களின் சிரிப்பு, சில நேரங்களில் அவர்களின் பயம்—எல்லாம் அவருடைய ஜெபத்தில் இடம் பெற்றன. அவர் இனி ஓட முடியாத நிலை; ஆனால் ஒவ்வொரு மூச்சையும் தேவனுக்குள் ஒப்படைத்தார். “நான் செய்ய முடியாததை நீர் செய்யும்” என்ற அமைதியான நம்பிக்கை, அவருடைய ஒவ்வொரு நாளையும் நிரப்பியது.

அவர் இறுதிவரை தன்னை “பூரணமானவர்” என்று சொல்லவில்லை. அவர் தன் சாதனைகளைப் பட்டியலிடவில்லை. காட்டிய கட்டிடங்களை  எண்ணவில்லை. எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டார்கள் என்ற கணக்கையும் அவர் விரும்பவில்லை. ஏமிக்கு ஒன்றேவொன்றுதான்  முக்கியம் —குழந்தைகள்  பாதுகாப்பாக இருக்கிறாளா? அந்தக் கேள்வியே அவருடைய  ஊழியத்தின் அளவுகோல்.

1951, ஜனவரி 18. தன் 83வது வயதில், அந்தத் தியாக தீபம் அமைதியாக அணைந்தது. மரணப் படுக்கையில் அவர் சொன்ன கடைசி வார்த்தைகளில் ஒன்று—“எல்லாவற்றிற்கும்மேலாக, என் வாழ்க்கையில் தேவ நாமம் மகிமைப்பட வேண்டும்.” அது ஒரு இறுதி வசனம் அல்ல; ஒரு முழு வாழ்க்கையின் சுருக்கம்.

ஏமி “எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்?” என்ற கணக்கில் ஒருபோதும் வாழவில்லை. அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளில் அவர் மீண்டும் மீண்டும் சொல்வது இது: “numbers do not matter” “One child is enough to change a life”. அவர் உயிரோடிருந்த காலத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள்
டோனாவூரின் பாதுகாப்பில் வந்தும் வளர்ந்தும் சென்றார்கள். அவர் இறந்த நாளில் ஏறக்குறைய 900 குழந்தைகள் இல்லத்தில் இருந்தார்கள்.

ஏமி தமிழ்நாட்டுக்கு வந்தபின் ஒருமுறைகூடத் தன் சொந்த நாடான  அயர்லாந்திற்குப் போகவில்லை. அவர் திருமணம் செய்யவில்லை. சொத்து சேர்க்கவில்லை. “இந்தக் குழந்தைகள்தான் என் சொத்து” என்று வாழ்ந்து மறைந்தார். அவருடைய விருப்பப்படி, அவருக்குக் கல்லறை கட்டவில்லை. பெரிய நினைவுச்சின்னம் இல்லை. கல்வெட்டு நிறைந்த நினைவகம் இல்லை. குழந்தைகளுக்காக ஒரு சிறிய பறவை குளியல் தொட்டி மட்டுமே வைக்கப்பட்டது. அதில் பொறிக்கப்பட்ட ஒரே சாட்சி—“அம்மா டோனாவூரின் செம்மண் துகள்கள் ஒவ்வொன்றும் சொல்லும் கதை இதுதான்: ஒரு பெண் தன் வாழ்க்கையை முழுமையாகக் கடவுளிடம் ஒப்புக்கொடுத்தால், அவரால் எதைச் சாதிக்க முடியும்.”

இன்று ஏமியின் பெயர் பல இடங்களில் பேசப்படாமல் இருக்கலாம். ஆனால் அவருடைய வாழ்க்கை இன்னும் பேசுகிறது. அது உரத்த சத்தமாக அல்ல. அமைதியான சாட்சியாக. உடைந்த உடலிலும், எரியும் பேனாவிலும், தூங்காத இரவுகளிலும், தரையில் அமர்ந்த உணவுகளிலும்—அந்த சாட்சி தொடர்கிறது.

Amy Carmichael
அவர் ஒரு காலத்தின் நாயகி அல்ல. அவர் ஒரு மேடையின் நட்சத்திரம் அல்ல. அவர் ஒரு தாய். அந்தத் தாய்மைதான், காலங்களைத் தாண்டியும் பேசிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தேவதாசிமுறை 1947–48 ஆம் ஆண்டுகளில் சட்டத்தால் ஒழிக்கப்பட்டது. ஆனால் அதற்குச் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே,
சட்டமில்லாத காலத்தில், ஏமி கார்மைக்கேல் அந்த முறைக்கு எதிராகத் தனியாக நின்று, குழந்தைகளை மீட்க ஆரம்பித்தார்.

ஏமி - வேறுபாட்டை உருவாக்கிய இருதயம்

ஏமி கார்மைக்கேலைப்பற்றிப் பேசும்போது, “இவரும் மற்ற மிஷனரிகளைப்போல ஒரு மிஷனரிதானே,” ஓர் எண்ணம் எழலாம்.
இல்லை. ஏன்? அவர்  மற்றவர்களைவிட “அதிகம் செய்தார்” என்பதாலா? இல்லை. அவர் மற்றவர்களைவிட வேறுவிதமானவர். அவர் தனித்துவமானவர்.

இந்த வேறுபாடு ஊழியத்தின் முறையில் அல்ல, திட்டங்களில் அல்ல, புள்ளிவிவரங்களில் அல்ல, அது அவருடைய இருதயத்தின் நிலைப்பாட்டில் இருக்கிறது.

1. Mission field அல்ல – People

பலர் இந்தியாவை ஊழியம்செய்ய வேண்டிய ஓர் இடமாக, மாற்றவேண்டிய ஒரு சமூகமாக, வெல்லவேண்டிய நிலமாக  – அதாவது “mission field”ஆகப் பார்த்தார்கள். ஆனால், ஏமி இந்தியாவைப் பார்த்த விதம் வேறு. “This is not a field to conquer. These are people to love,” என்று ஏமி எழுதுகிறார்.

அவர் மக்களை projectஆகப் பார்க்கவில்லை. ஆதாயம்பண்ணவேண்டிய ஆத்துமாக்கள்  என்ற வார்த்தைகக்குள் அடைக்கவில்லை. அவர் அவர்களை வாழும் மனிதர்களாக, வலிக்கும் உள்ளங்களாகப் பார்த்தார்.

2. Preacher அல்ல – Presence

பலர் பிரசங்கித்தார்கள், போதித்தார்கள். ஏமி பேசுவதற்குமுன் மக்களோடு உட்கார்ந்தார், கற்பிப்பதற்குமுன் மக்களிடையே இருந்தார். மக்களை மாற்றுவதற்குமுன் அவர்களைத் தாங்கினார்.

“சில சமயம் தேவன் பேசுவதில்லை. அவர் உட்கார்கிறார்,” என்று ஏமி நம்பினார். எனவே, அவர் பிரசங்கம் செய்யாத நாட்கள் அதிகம். ஆனால் அவர் அவர்களோடு இருந்த நாட்கள் பல வாழ்க்கைகளை மாற்றின.

3. Authority அல்ல – Identification

பலர் தங்களுடைய ஐரோப்பிய அடையாளத்தை விடாமல் வைத்திருந்தார்கள். உள்ளூர் மக்களிடமிருந்து விலகியே இருந்தார்கள்.  தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள்

ஏமி அதற்கு நேர்மாறாக தன் ஐரோப்பிய அடையாளத்தை விட்டார். உடை மாறியது. சேலை கட்டினார். அடையாளம் கரைந்தது.  உள்ளூர் மக்களைப்போல் தரையில் அமர்ந்தார். அவர்கள் சாப்பிடும் பாத்திரத்தில் சாப்பிட்டார். தூரம் உடைந்தது. இது strategy அல்ல. இது symbolism அல்ல. இது, “நான் உங்களைவிட உயர்ந்தவள் அல்ல. நான் உங்களைச் சேர்ந்தவள். நான் உங்களில் ஒருத்தி,” என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாத முழுப் பிரசங்கத்தை வாழ்ந்தார்.

4. Success அல்ல – Faithfulness

பலர் ஊழியத்தின் வெற்றியை எண்ணிக்கையால் அளந்தார்கள். புள்ளிவிவரங்களில் மகிழ்ந்தார்கள். ஏமி கீழ்ப்படிதலை அளந்தார், மனசாட்சியைக் கேட்டார், தேவனுடைய முகத்தை நோக்கினார்

அவர் எழுதிய, “Success is not required of us. Faithfulness is.” என்ற ஒரு வாக்கியம், அவருடைய முழு வாழ்க்கையின் சுருக்கம்.

அவர் தோல்வியடைந்த நாட்களிலும், அவர் அதைத் தோல்வியாகக் கருதவில்லை. ஏனெனில் “நான் கீழ்ப்படிந்தேனா?” என்பதே அவர் கேட்ட கேள்வி.

5. Converts அல்ல – Children

பலர் பெரியவர்களுக்குப் பிரசங்கித்தார்கள். பொதுமக்களின் மறுமொழியை எதிர்பார்த்தார்கள்.  ஏமி குழந்தைகளைக் கவனித்தார், பேச்சற்றவர்களைத் தேடினார், கட்டுண்டவர்களை அணைத்தார். தேவதாசி முறைமையிலிருந்து ஒரு குழந்தை தப்பித்து வந்தபோது, “நீ எந்த மதம்? உன் குடும்பம் என்ன? உன் எதிர்காலம் என்னவாகும்?” என்று அவர் கேட்கவில்லை.  அவர் சொன்ன ஒரே வார்த்தை “நீ என் பிள்ளை.” அந்த நிமிடத்தில், missionary மறைந்தாள்; அம்மா பிறந்தார்.

6. Institution builder அல்ல – Home maker

பலர் பெரிய institutions கட்டினார்கள், systems உருவாக்கினார்கள், structures அமைத்தார்கள். ஏமி ஒரு வீட்டை  உருவாக்கினார். டோனாவூர் ஓர் அநாதை இல்லம் அல்ல, rescue centre அல்ல, mission compound அல்ல. அது குழந்தைகள் அழுதால் ஓடிவரும் இடம், இரவிலும் விளக்கு அணையாமல் இருக்கும் இடம், “அம்மா” என்ற வார்த்தை ஒலிக்கும் இடம்

7. Hero அல்ல – Hidden seed

பலர் பெயர் பெற்றார்கள், வரலாற்றில் இடம் பெற்றார்கள். ஏமி மறைந்தார், பெயரைத் தவிர்த்தார், கல்லறைகூட வேண்டாம் என்றார்.  அவர் விரும்பியது தேவ நாமம் மகிமை பெற வேண்டும், தன் பெயர் மறைய வேண்டும்

அவர் வாழ்க்கை சொல்லும் செய்தி:

தேவன் பெரிய மனிதர்களைத் தேடுவதில்லை. அவர் தன்னை முழுவதும் கொடுக்கத் தயாரான இருதயங்களைத் தேடுகிறார்.

முடிவு – வேறுபாடு எங்கே?

“ஏமி கார்மைக்கேல் என்ன சாதித்தார்? அவர் எத்தனை கட்டிடங்கள் கட்டினார்? எத்தனை ஆயிரம் குழந்தைகளை மீட்டு, வளர்த்தார்? எத்தனை நூல்கள் எழுதினார்?” என்று ஒருவேளை சிலர் கேட்கலாம். ஆனால், இறுதியில் இவை முக்கியம் அல்ல. ஒரேவொரு கேள்விதான் முக்கியம் — அவர் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தாரா? தத்தம்செய்தாரா? பானபலியாக ஊற்றினாரா? ஆம். அவர் தன் வாழ்க்கையைப் பாதுகாக்கவில்லை; தன் பெயரைப் பாதுகாக்கவில்லை; தன் உடலைப் பாதுகாக்கவில்லை; தன் எதிர்காலத்தையும் பாதுகாக்கவில்லை. அவர் தான் தேவனுக்குத் தன்னைத் தத்தம்செய்ததை, ஒப்புக்கொடுத்ததை, மட்டும் பாதுகாத்தார். சட்டம் மோதியது, சமூகம் எதிர்த்தது, நோய் உடலை உடைத்தது, தனிமை இரவுகளை நீட்டித்தது. ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. ஏன்? ஏனெனில் அவர் ஒரு மிஷனரி மட்டும் அல்ல; அவர் ஒரு தாய். ஒரு தாய் கணக்கிடமாட்டாள், அளவிடமாட்டாள், பாதுகாப்பாக வாழ முயலமாட்டாள். ஒரு தாய் கொடுப்பாள் — முழுவதும் கொடுப்பாள்.

அவர் இந்தியாவை வெல்லவில்லை; ஆனால் குழந்தைகளின் பயத்தை வென்றார். அவர் மதத்துடன் போராடவில்லை; ஆனால் இருளுக்குள் ஒளியை  வைத்தார். அவர் உலகத்தை மாற்றவில்லை; ஆனால் சில குழந்தைகளின் உலகத்தை மாற்றினார். அது போதுமா? தேவனுடைய கணக்கில் — அது போதுமானது. ஓர் இருதயம் முழுவதும் தத்தம்செய்தால், தேவன் அதனால் ஒரு நகரையும் மாற்றலாம், ஒரு சமூகத்தையும் மாற்றலாம், ஒரு தலைமுறையையும் மாற்றலாம். ஆனால் அதற்குமுன் அந்த இருதயம் உடைய வேண்டும். ஏமி உடைந்தார்; அதனால்தான் அவர் பயன்படுத்தப்பட்டார். அவர் மறைந்தார்; அதனால் கிறிஸ்து தெரிந்தார். அவர் குறைந்தார்; அதனால் தேவன் பெரிதானார்.

இன்று டோனாவூரின் செம்மண்ணில் அவருடைய காலடிச் சுவடுகள் இல்லாமலிருக்கலாம்; ஆனால் ஓர் உண்மை இன்னும் உயிரோடு நிற்கிறது — ஒரு பெண் தன் வாழ்க்கையை முழுவதும் தேவனிடம் ஒப்படைத்தால், அவரால் என்ன செய்ய முடியும் என்பதற்கான நிலையான சாட்சி. இது வெறுமனே ஒரு வரலாறு அல்ல; இது ஓர் அழைப்பு. இன்று நாம் என்ன தேடுகிறோம்? வெற்றியா? புகழா? அங்கீகாரமா? எண்ணிக்கையா? அல்லது கீழ்ப்படிதலா? தேவன் பெரிய மனிதர்களைத் தேடுவதில்லை; அவர் முழுமையாக ஒப்படைக்கப்பட்ட இருதயங்களைத் தேடுகிறார். இது ஓர் இருதயம் தேவனிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டால் என்ன நடக்கிறது என்பதற்கான சாட்சி.