Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

ஜான் வைக்லிப்பும் ஜான் ஹஸும் கிறிஸ்தவ வரலாற்றில் முக்கியமான சாட்சிகள். அவர்கள் ஒரு புதிய மதத்தை உருவாக்கவில்லை; மறைக்கப்பட்ட சத்தியத்தை வெளிச்சத்திற்குக்  கொண்டுவந்தார்கள். வேதாகமமே இறுதி அதிகாரம் என்று அவர்கள் உறுதியாக நின்றார்கள். சபை பாரம்பரியங்களால் அல்ல, தேவனுடைய வார்த்தையால் வழிநடத்தப்பட வேண்டும் என்று போதித்தார்கள். வைக்லிப் இங்கிலாந்தில் வேதாகமத்தை மக்களிடம் கொண்டுவந்தார். ஹஸ் போஹீமியாவில் அதே சத்தியத்தை தைரியமாக அறிவித்தார். அவர்கள் இருவரும் அதிகாரத்திற்கும் மத அமைப்பிற்கும் எதிராக நின்றார்கள். அவர்களின் வாழ்க்கை எளிதானது அல்ல; எதிர்ப்பு, துன்பம், நிராகரிப்பு—இவையெல்லாம் அவர்களைச் சுற்றியிருந்தன. ஆனால் அவர்கள் பின்வாங்கவில்லை. சத்தியத்திற்காக வாழ்ந்தார்கள்; அதற்காகவே மரித்தார்கள். அவர்கள் விதைத்த விதைகள் பின்னர் சீர்திருத்த இயக்கமாக வளர்ந்தது. இன்று நாம் அறிந்த நற்செய்தி சுதந்திரத்திற்கு அவர்கள் வைத்த அடித்தளம் மறக்கமுடியாதது. அவர்கள் ஒரு வரலாறு அல்ல—ஒரு தொடரும் சாட்சி. அந்தத் தீபம் இன்றும் நமக்குள் எரிகிறது. 


அணைக்கமுடியாத தீ - ஜான் வைக்லிப், ஜான் ஹஸ்

அறிமுகம் 

அன்பானவர்களே,

இன்று வேதாகமம் நம் அனைவரின் கைகளிலும் இருக்கிறது.
இந்த வாய்ப்பையும், இந்தச் சுதந்திரத்தையும்—
நாம் எவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்கிறோம் தெரியுமா?

ஒரு காலத்தில்—
இந்த வேதாகமம் சிலரின் கைகளில் மட்டுமே இருந்தது.
சத்தியம் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது.

அதை உடைக்க சிலர் எழுந்தார்கள்.
அவர்கள் பேசினார்கள்.
அவர்கள் துன்பப்பட்டார்கள்.

அவர்கள்—மரித்தார்கள்.

இன்று,
அந்தச் சாட்சியின் வரலாற்றை நாம் பார்க்கப்போகிறோம்.

மறைந்திருந்த தீ வெளிப்பட்ட நாள் — லூத்தர்

1517ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி, ஜெர்மனியில் வாழ்ந்த மார்ட்டின் லூத்தர் என்ற ஒரு துறவி, விட்டன்பெர்க் ஆலயத்தின் கதவின்மீது தன் புகழ்பெற்ற 95 தீர்மானங்களை ஆணி அடித்தார். அந்தக் காலத்தில், தேவாலயக் கதவுகள்தான் பல்கலைக்கழகங்களின் அறிவிப்புப் பலகைகளாக இருந்தன.

அவர் இதை ஜெர்மன் மொழியில் எழுதவில்லை. இலத்தீன் மொழியில் எழுதினார். ஏன்? ஏனென்றால், இது பொதுமக்களுக்கான அறிவிப்பு அல்ல.
அறிஞர்களுக்கான ஓர் அழைப்பு. ஒரு விவாதம் தொடங்க வேண்டும்.
சபையில் இருந்த தவறுகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
அவை திருத்தப்பட வேண்டும். அதுதான் அவருடைய எண்ணம்.

இந்த நிகழ்ச்சியைத்தான் இன்று நாம் “சீர்திருத்தத்தின் தொடக்கம்” என்று சொல்கிறோம். ஆனால் இது திடீரென தோன்றிய ஒரு தொடக்கம் அல்ல; ஏற்கெனவே பல ஆண்டுகளாக அமைதியாக எரிந்து கொண்டிருந்த ஒரு தீப்பொறி, இந்த நாளில் வெளிப்படையாகத் தெரியவந்தது.

இது சபை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கட்டம். இன்று நாம் விடுதலையோடு கூடுகிறோம்; நம் ஒவ்வொருவரிடமும் வேதாகமம் இருக்கிறது. ஆனால், ஒரு காலத்தில் அது சிலரின் கைகளில் மட்டுமே இருந்தது. இன்று அது எல்லோருக்கும் திறந்திருக்கிறது. இதற்கு இந்த நாள் ஒரு முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் இந்த வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள, நாம் இன்னும் பின்னால் போக வேண்டும். லூத்தருக்கு முன்னதாகவே தேவன் இரண்டு பரிசுத்தவான்களை ஆயத்தமாக்கியிருந்தார். லூத்தர் தீயை வெளிப்படையாகக் காட்டினார்; ஆனால் அந்தத் தீ, அவருக்கு முன்னதாகவே சிலருடைய இருதயங்களில் எரிந்துகொண்டிருந்தது. அந்த இரண்டு பரிசுத்தவான்களும் தங்கள் தலைமுறைக்குப் பணிவிடைசெய்ய தேவனால் எழுப்பப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் காலத்தின் கலாச்சாரத்திற்கும் மத அமைப்புகளுக்கும் எதிராக நின்றார்கள்; உண்மையான சபையின் சாட்சியை நிலைநிறுத்தினார்கள்.

மறைந்திருந்த தீ — சீர்திருத்தத்திற்குமுந்தைய உலகம்

இந்த இரண்டு பரிசுத்தவான்களையும் நன்றாகப் புரிந்துகொள்ள, நாம் அவர்கள் வாழ்ந்த காலத்திற்குள் நாம் செல்ல வேண்டும். அவர்கள் வாழ்ந்த உலகம், நாம் வாழும் உலகத்தைவிட முற்றிலும் மாறுபட்டது. இன்று நாம் சுதந்திரமாக வாழ்கிறோம்; ஆனால் அவர்களைப் புரிந்துகொள்ள, 1300–1400களின் ஐரோப்பாவிற்குள் நுழைய வேண்டும்.

அந்தக் காலத்தில் மேற்கு ஐரோப்பா முழுவதும் ஒரே சபையின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது—அது உரோமன் கத்தோலிக்க சபை. கிறிஸ்தவத்தில் நாம் இன்று பார்க்கிற பிரிவுகள் அப்போது இல்லை. ஒருவன் எந்த சமூக நிலையில் இருந்தாலும், அவனுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை சபை என்ற அமைப்பே வழிநடத்தியது, கட்டுப்படுத்தியது. சபைக்கு வெளியே வாழ்க்கை என்றே ஒன்றில்லை.

சபை — வாழ்க்கையின் மையம்

ஒவ்வொரு கிராமத்திலும் ஓர் ஆலயம் இருந்தது; அந்த ஆலயத்தில் ஒரு குருவானவர் இருந்தார். சபையே இரட்சிப்பின் வாசல் என்று போதிக்கப்பட்டது. மக்கள் தங்கள் பாவங்களைக் குருவானவரிடம் அறிக்கைசெய்து பாவமன்னிப்பைப் பெற்றார்கள். ஞானஸ்நானம், திருமணம், அடக்கம் என ஒருவனுடைய பிறப்புமுதல் இறப்புவரை அனைத்தும் சபையோடு இணைந்திருந்தது.

அந்தக் காலத்தில் ஆலய மணிகள்தான் அவர்களுடைய கடிகாரம். அவைதான் ஒரு நாளின் ஓட்டத்தை நிர்ணயித்தன. மக்கள் தங்கள் வரிகளை சபைக்குச் செலுத்தினார்கள்; அவை உரோமைச் சென்றடைந்தன.

வார்த்தை இருந்தது — ஆனால் புரிதல் இல்லை

ஆலயத்தில் நடந்த ஆராதனை, பாடல்கள், பிரசங்கங்கள் அனைத்தும் இலத்தீன் மொழியிலேயே இருந்தன. கற்றவர்கள் மட்டுமே அவைகளைப்  புரிந்துகொண்டார்கள். கல்லாதவர்கள் கற்களைப்போல் அமைதியாகக் கேட்டார்கள்; ஆனால், புரிந்துகொள்ளவில்லை.

வேதாகமமும் இலத்தீன் மொழியில்தான் இருந்தது. ஆகவே, வேதாகமம் வாசிக்கப்பட்டாலும் அது மக்களின் இதயத்திற்குத் திறக்கப்படவில்லை. அவர்கள் காதுகளால் கேட்டார்கள்; ஆனால் அறியவில்லை. தேவனுடைய வார்த்தை அவர்களுக்குப் பரம்புதிராகவே இருந்தது.

உண்மையில், பெரும்பாலான மக்கள் வேதாகமத்தை ஒருபோதும் பார்த்ததே இல்லை. சில மடாலயங்களில் வேதாகமங்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. அது திருடப்படாமல் இருக்கக் கட்டிவைத்திருந்த சங்கிலி மட்டும் அல்ல—அது சத்தியத்தைக்  கட்டிவைத்திருந்த காலத்தின் ஓர் அடையாளம்.

வார்த்தை இருந்தது; ஆனால் வெளிச்சம் மறைக்கப்பட்டிருந்தது.

அதிகாரம் உயர்ந்தது — சத்தியம் மறைந்தது

அந்தக் காலத்தில், மேற்கு சபையில் போப்பானவர்தான் உச்ச தலைவர். அவருக்கு ஆவிக்குரிய அதிகாரம் மட்டுமல்ல—அரசியல் அதிகாரமும் இருந்தது. சில சமயங்களில் அவர் அரசர்களைவிட அதிக அதிகாரம் கொண்டிருந்தார். அந்த அரசர்களே அவருக்குமுன் தலைவணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் தேவனுடைய வார்த்தைக்கு முரணான பல பாரம்பரியங்களும் போதனைகளும், அறிந்தோ அறியாமலோ, மெதுவாக சபைக்குள் நுழைந்தன.

காலப்போக்கில், கிறிஸ்துவை மையமாகக்கொண்ட விசுவாசம் மறைந்து, சபை மையமாக மாறத் தொடங்கியது. கிருபை மெல்ல முறைகளால் மாற்றப்பட்டது; விசுவாசம் வெளிப்படையான செயல்களால் மாற்றப்பட்டது.

மாற்றப்பட்ட சத்தியம் — மனிதனால் உருவாக்கப்பட்ட முறைகள்

சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ஒன்று “உத்தரிக்கும்ஸ்தலம்” (purgatory). இது பரலோகத்துக்கும் நரகத்துக்கும் இடையில் உள்ள ஓர் இடமாகக் கருதப்பட்டது. நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இறந்தவுடன் நேரே பரலோகத்துக்குப் போவார்கள் என்றும், மிகப் பெரிய பாவிகள் இறந்தவுடன் நேரே நரகத்துக்குப் போவார்கள் என்றும், அற்பப் பாவம் செய்பவர்கள் இறந்தவுடன் பரலோகத்திற்கோ நரகத்திற்கோ செல்லாமல் உத்தரிக்கும்ஸ்தலத்துக்குச் செல்வார்கள் என்றும் போதிக்கப்பட்டது. அங்கு அவர்கள் இந்தப் பூமியில் செய்த அற்பப் பாவங்களுக்கான தண்டனையை அனுபவிப்பார்கள் என்றும், பூமியில் வாழ்பவர்கள் இவர்களுக்காகத் தானதர்மம், புண்ணியம் செய்தால், அவர்களுடைய தண்டனை குறைக்கப்பட்டு அங்கிருந்து சீக்கிரம் பரலோகத்துக்குச் செல்லலாம் என்றும் நம்பப்பட்டது.

மற்றொன்று புனிதப் பண்டங்கள் (relics). இவையும் மதச்சின்னங்களும் மக்கள் வணங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. புனிதர்களின் எலும்புத் துண்டுகள், அப்போஸ்தலர்களின் உடல்பாகங்கள், இயேசுவின் சிலுவையிலிருந்து வந்ததாகக் கூறப்படும் மரத்துண்டுகள் போன்றவை மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டன. இவைகளைப் பார்க்க மக்கள் தொலைதூரம் பயணம் செய்தார்கள். இதனால் தேவனுடைய சிறப்பான கிருபை, வல்லமை, சுகம், பாவமன்னிப்பு தங்களுக்குக் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.

இன்னொன்று மதச்சின்னங்கள் (icons), படங்கள் —மக்கள் வேதாகமத்தைப் புரிந்துகொள்ள முடியாததால், அவர்கள் வணங்குவதற்கு உதவியாக சில அடையாளங்களும் சின்னங்களும் உருவாக்கப்பட்டன. இச்சின்னங்கள், காலப்போக்கில் வணக்கத்தின் மையமாக மாறின.

இந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட முக்கியமான இன்னொன்று  indulgences. இவை போப்பானவர் அங்கீகரித்த சான்றிதழ்கள். இதில் பல வகை. ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை இருந்தது. இவைகளை வாங்கினால் பாவங்களுக்கான தண்டனை குறைக்கப்படும் என்று போதிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில், மக்கள் இதை பாவமன்னிப்பாகவே எடுத்துக்கொண்டார்கள். வாங்கிய தொகைக்கு ஏற்ப தண்டனை குறையும் என்று கூறப்பட்டது. இறந்தவர்களுக்காகவும் இவைகளை வாங்கலாம்; அப்போது அவர்கள் உத்தரிக்கும்ஸ்தலத்தில் குறைவான காலம் மட்டுமே செலவிடுவார்கள் என்றும் நம்பினார்கள்.

சில சமயங்களில்—குறிப்பாக போர்க்காலங்களில்—போரில் பங்கேற்பவர்களுக்கு அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைக்கும் என்ற காரணத்துக்காக மக்கள் போர்களில் இணைந்தார்கள்.

இன்னொரு முக்கிய போதனை “அப்பம்பிட்குதல்” (transubstantiation). திருப்பலியில் குருவானவர் பிட்கும் அப்பம் உண்மையாகவே இயேசுவின் உடலாக மாறுகிறது என்று போதிக்கப்பட்டது. ஆனால் எல்லா ஜெபங்களும் இலத்தீனில் சொல்லப்பட்டதால், பொதுமக்களுக்கு அது ஒரு புரியாத மந்திரமாகவே இருந்தது.

பயத்தின் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை

ஒருவர் சபையிலிருந்து நீக்கப்பட்டால் (excommunicated), அது அந்த நாட்களில் மிகவும் பயங்கரமான தண்டனையாகக் கருதப்பட்டது ஏனெனில் சபைக்குப் வெளியே இரட்சிப்பு இல்லை என்று மக்கள் நம்பினார்கள். அப்படி நீக்கப்பட்டவன் வாழ்க்கையின் அனைத்தையும் இழந்துவிடுவான்.  வேறு  சபைக்குச் செல்ல முடியாது. ஏனென்றால், அன்று வேறு சபைகள் எதுவும் இல்லை. அவருடைய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் முடக்கப்பட்டுவிடும்—ஞானஸ்நானம், திருமணம், அடக்கம்—எதுவும் கிடையாது. அவரோடு தொடர்பு வைத்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள். அவர்களோடு யாரும் உறவுவைக்க மாட்டார்கள்; யாரும் வியாபாரம் செய்ய மாட்டார்கள். எல்லாவற்றையும் விட பயங்கரமானது—அவன் நிச்சயமாக நரகத்துக்குச் செல்வான் என்ற பயம்.

வெளியில் பரிசுத்தம் — உள்ளே வீழ்ச்சி

ஒருபுறம் சபை மிகுந்த அதிகாரத்துடன் இருந்தது; மறுபுறம், பல இடங்களில் குருவானவர்களின் வாழ்க்கை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. அவர்களுடைய இரட்டை வாழ்க்கை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது.

“Friars” என்று அழைக்கப்பட்ட துறவிகள் நகரம்தோறும் சென்று பிரசங்கித்தார்கள். இவர்களில் சிலர் ஒழுக்கக்கேடு, குடிபோதை, பேராசை போன்றவைகளுக்காக மக்களிடையே மோசமான பெயர் பெற்றிருந்தார்கள். அவர்கள் மக்களிடமிருந்து பணம் பறிப்பதில் தீவிரமாக இருந்தார்கள். இதனால், மக்கள் சபையை மதித்தாலும், அதன் உள்ளான நிலையைப்பார்த்து  குழப்பத்திலும் விரக்தியிலும் இருந்தார்கள்.

இந்தக் காலத்தின் நிலையை மிகவும் வெளிப்படையாகக் காட்டும் ஓர் எடுத்துக்காட்டு டான்டே எழுதிய Inferno என்னும் நூல். இந்தக் கற்பனைப் படைப்பில், அவர் சில போப்புகளை நரகத்தில் வைத்து வர்ணிக்கிறார். இது ஓர் இலக்கிய உருவாக்கம் மட்டுமல்ல; அந்தக் காலத்தில் சபையின் நிலைமையைப்பற்றிய மக்களின் மனநிலையையும் பிரதிபலிக்கிறது.

அதாவது, அதிகாரம் உயர்ந்தது; ஆனால் வாழ்க்கை வீழ்ந்தது. வெளியில் பரிசுத்தத்தின் தோற்றம் இருந்தது; உள்ளே சிதைவு இருந்தது.

முடிவில்லா இருள்

ஆனால் பொதுமக்கள் என்ன செய்ய முடியும்?

அவர்கள் மொத்தத்தில் சபையின் அதிகாரத்தின்கீழ் வாழ்வதைத்தவிர வேறு வழியில்லை. ஏனெனில், நித்திய வாழ்விற்கான திறவுகோல் சபையிடம்தான் இருக்கிறது என்று அவர்கள் நம்பினார்கள்.

அவர்கள் சத்தியத்தை அறியாததால் மட்டும் அல்ல—தவறை  சத்தியம் என்று நம்பியதால்—அந்த அமைப்புக்குள் கட்டுப்பட்டிருந்தார்கள். இன்றும் நிலைமை அப்படித்தான்.

மக்கள் இருளிலும் அறியாமையிலும் வாழ்ந்தார்கள். வெளிச்சம் அருகில் இருந்தாலும், அது அவர்களுக்குத் திறக்கப்படவில்லை.

அதிகாரத்துடன் மோதிய சத்தியம் — ஜான் வைக்லிப்

இந்தப் பின்புலத்தில், நாம் இப்போது முதல் பரிசுத்தவானைப் பார்க்கப் போகிறோம்—ஜான் வைக்லிப்.

ஒரு சாதாரண ஆரம்பம்

சுமார் 1330ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் யார்க்ஷயரில், ஒரு சாதாரணக் குடும்பத்தில் ஜான் வைக்லிப் பிறந்தார். அவர் பிறந்த சரியான தேதி தெரியாது; அவருடைய ஆரம்ப வாழ்க்கையைப்பற்றியும் அதிகமான தகவல் இல்லை. ஆனால் அவர் நல்ல கல்வி பெற வேண்டும் என்று அவருடைய தந்தை விரும்பினார் என்று தெரிகிறது.

அந்தக் காலத்தில், நல்ல கல்வி பெறுவதற்குப் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டும். நல்ல வாழ்க்கை வேண்டும் என்றால் பெரும்பாலும் சபையில் ஒரு பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆக்ஸ்போர்டு — அறிவின் மையம்

இதற்காக, வைக்லிப் தன் ஊரிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து ஆக்ஸ்போர்டுக்குச் சென்றார். அங்கு அவர் இறையியல் படிப்பைத் தொடங்கினார். அதோடு சேர்த்து தத்துவம், தர்க்கம், சட்டம் ஆகியவைகளையும் கற்றார். இவை அனைத்தும் இலத்தீன் மொழியில்தான் கற்பிக்கப்பட்டன. அப்போது அவருக்குச் சுமார் 14 அல்லது 15 வயது இருக்கலாம்—அதுதான் அந்நாளில் பல்கலைக்கழகத்தில் சேரும் வழக்கமான வயது.

Black Death — ஒரு அதிர்ச்சி

வைக்லிப் ஆக்ஸ்போர்டில் இருந்த காலத்தில்தான், 1348ஆம் ஆண்டு, “Black Death” என்ற கொள்ளைநோய் பரவியது. இந்த நோயால் அவர் பாதிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஐரோப்பாவின் மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இந்த நோயால் இறந்தார்கள்.

பல ஆசிரியர்களும் மாணவர்களும் இறந்தார்கள். பல்கலைக்கழகம் முற்றிலும் மூடப்படவில்லை; ஆனால் அதன் செயல்பாடு குறைந்தது. வைக்லிப் அங்கு தங்கியிருந்தாரா அல்லது வீட்டிற்குத் திரும்பினாரா என்று உறுதியாகத் தெரியவில்லை.

பலர் இதை தேவனுடைய தீர்ப்பு என்று எண்ணினார்கள். ஆனால் ஒரு பெரிய கேள்வி எழுந்தது: இது தேவனுடைய தீர்ப்பு என்றால், ஏன் குருக்களும் துறவிகளும் கன்னியாஸ்திரிகளும்கூட இறந்தார்கள்?

இதற்கிடையில், பல குருக்கள் இறந்ததால், சபையில் காலியிடங்களை நிரப்ப, இறையியல் கல்வி இல்லாதவர்கள்கூட குருக்களாக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்களுக்குப் புரியாத இலத்தீன் மொழியில் வேதாகமத்தை வாசித்தார்கள்.

ஆனால் இந்த அனுபவம் அவருடைய உள்ளத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

உயர்வு — ஆனால் உள்ளார்ந்த தேடல்

அவர் ஆக்ஸ்போர்டுக்கு திரும்பி தன் படிப்பைத் தொடர்ந்தார்.

வைக்லிப் ஒரு சிறந்த அறிஞர். அவர் இறையியலில் முனைவர் பட்டம் பெற்று, ஆக்ஸ்போர்டில் முக்கியமான அறிஞராக உயர்ந்தார். அவர் Balliol கல்லூரியின் முதல்வர் பொறுப்பிலும் இருந்தார். பின்னர் பல்கலைக்கழகத்தின் முன்னணி இறையியலாளராகவும் தர்க்கவல்லுநராகவும் அறியப்பட்டார்.

அந்தக் காலத்தின் முக்கியமான கல்வி மையங்களில் ஒன்றாக இருந்த ஆக்ஸ்போர்டு, அவருக்கு பேரும் செல்வாக்கும் அளித்தது. ஆனால், இங்கேதான் ஒரு திருப்பம் ஏற்பட்டது.

வேதாகமம் — அவரைச் சோதித்தது

அவர் தன் முனைவர் பட்டத்துக்காக வேதாகமத்தின் பல பகுதிகளை ஆழமாக ஆய்வுசெய்தபோது, சபை மக்களைத் தவறாக வழிநடத்திக்கொண்டிருப்பதை உணர ஆரம்பித்தார். அவர் இதுவரை கற்றுக்கொண்ட போதனைகளும், பின்பற்றிய பாரம்பரியங்களும், அவர் வாசித்த வேதாகமத்தோடு ஒத்துப்போகவில்லை.

அவர் வேதாகமத்தைப் படித்தார்—ஆனால் ஒரு கட்டத்தில், வேதாகமமே அவரைச் சோதிக்க ஆரம்பித்தது. சத்தியம் அவருக்குள் விழித்தெழ ஆரம்பித்தது.

ஒரு ஆபத்தான கண்டுபிடிப்பு

இன்று நமக்கு இவை சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அந்நாளில் இத்தகைய சிந்தனைகள் புரட்சிகரமானவை—ஆபத்தானவை. ஏனெனில் அந்நாளில் சபைதான் அதிகாரம், போப்பானவர்தான் மையம்.

ஆனால் வேதாகமம் மாற்றப்பட்டுவிட்டது என்று வைக்லிப் கண்டார். அதனால், அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

வைக்லிப் தன் ஆய்வின்மூலம், “தேவனுடைய வார்த்தையே உண்மையான அதிகாரம்,” என்ற ஓர் அடிப்படை உண்மையைத் தெளிவாகக் கண்டார்.. “சபை சொல்வதெல்லாம் வேதாகமம் சொல்வதல்ல. வேதாகமம்தான் இறுதியான அதிகாரம்; சபை அல்ல,” என்று அவர் கண்டார். அந்நாளில் இது ஒரு கருத்து அல்ல—ஒரு புரட்சி. ஏனெனில், சபைதான் சத்தியத்தின் மூலம் என்று கருதப்பட்ட காலம் அது. ஆனால் வைக்லிப், சத்தியம் வேதாகமத்தில் இருக்கிறது என்று கண்டார்.

சபையைச் சவாலிட்ட சத்தியம்

ஆகவே, சபையும் போப்பானவரும் தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார். “போப்பானவர் தவறா வரம்பெற்றவர் அல்ல.  அவர் வேதாகமத்திற்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்,” என்றார். இது அந்நாளில் மிகவும் ஆபத்தான கருத்து.

அவர் மேலும், “போப்பானவருக்குக் குருக்களைவிட உயர்ந்த ஆவிக்குரிய அதிகாரம் இல்லை. வழிகாட்டுதலும் வழிநடத்துதலும் மனிதர்களிடமிருந்து அல்ல—தேவனிடமிருந்தும் அவருடைய வார்த்தையிலிருந்தும் வர வேண்டும்,” என்ற ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார்.

இதிலேயே அவர் நின்றுவிடவில்லை.

முறைகளை உடைத்த சத்தியம்

பாவமன்னிப்புச் சீட்டுகள் வழங்குதல், பாவங்களை குருவானவரிடம் அறிக்கை செய்தல்போன்ற சபையின் நடைமுறைகளை அவர் கேள்விக்குட்படுத்த ஆரம்பித்தார். இவைகளுக்கு எந்த உண்மையான ஆவிக்குரிய அர்த்தமும் இல்லை என்று அவர் கண்டார்.

“பாவங்களை மன்னிக்க தேவனால் மட்டுமே முடியும்,” என்று அவர் தெளிவாக அறிவித்தார்.

மேலும், திருப்பலியில் அப்பம்பிட்கும்போது அப்பம் உண்மையாகவே இயேசுவின் உடலாக மாறாது என்றும் அவர் கூறினார். அந்நாளில் இது மிகவும் அதிர்ச்சியான கருத்து. மக்களுக்கு அது ஒரு பரம்புதிரான, அதிசயமான நிகழ்வாகத் தோன்றியது. ஆனால் வைக்லிப் அதை வேதாகமத்தின் வெளிச்சத்தில் மீண்டும் ஆய்வு செய்தார்.

இந்த உண்மைகள் அவருக்குள் மட்டும் இருக்கவில்லை. அவர் பேசத் தொடங்கினார்.

வெளிப்பட்ட முரண்பாடு

அவர் சபையின் ஊழலை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினார். மக்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் குருக்களுக்கு எதிராக அவர் பேசினார்.

ஞானஸ்நானம், திருமணம், இறுதிச் சடங்கு—அனைத்திற்கும் மக்கள் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். வேறு வழியில்லாததால், அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். வைக்லிப் இதைக் கண்டித்தார்.

அவர் குருக்களின் ஆடம்பரமான வாழ்க்கையைப்பற்றியும், செல்வத்தின்மேல் அவர்களுக்கிருந்த ஆசையைப் பற்றியும், மொத்தத்தில் சபையின் பொருளாதார நோக்கத்தைப்பற்றியும் திறந்தவெளியில் பேசினார். சபை—மிகுந்த செல்வத்துடனும் அதிகாரத்துடனும் இருந்தது. ஆனால் கிறிஸ்து—எளிமையிலும் தாழ்மையிலும் வாழ்ந்தார். இந்த முரண்பாடு அவரை ஆழமாக உலுக்கியது.

“சபை கிறிஸ்துவைப்போல இருக்க வேண்டும்; உலக அரசுகளைப்போல அல்ல,” என்று அவர் சொல்லத் தொடங்கினார்.

ஒரு விதை விதைக்கப்பட்டது

அவர் சபையின் அதிகமான செல்வத்தையும் அரசியல் அதிகாரத்தையும் கேள்வி கேட்டார். இங்கேதான் ஓர் அமைதியான ஆனால் ஆழமான மாற்றம் ஆரம்பித்தது.

முன்பு மக்கள் சபை சொன்னதை மட்டுமே கேட்டார்கள். இப்போது அவர்கள் வேதாகமத்தின் சத்தத்தைக் கேட்க ஆரம்பித்தார்கள். வைக்லிப்பின் போதனை மக்களிடையே மெல்லப் பரவத் தொடங்கியது.

அது ஒரு பெரிய சத்தம் அல்ல. ஆனால் அது ஒரு விதை. அந்த விதை மண்ணுக்குள் மறைந்திருந்தாலும், அது வளர ஆரம்பித்தது. வைக்லிப் ஒரு சீர்திருத்தத்தை ஆரம்பிக்கவில்லை. ஆனால் அவர் ஒரு விழிப்புணர்வைத் தொடங்கினார். இதுவரை சபை பேசிக் கொண்டிருந்தது. ஆனால் முதன்முறையாக, மக்கள் வேதாகமம் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தார்கள்.

வைக்லிப் — அதிகாரத்துடன் மோதிய சத்தியம்

அரசியல் — எதிர்பாராத பாதுகாப்பு

அந்த நேரத்தில், இங்கிலாந்தின் அரசருக்கும் போப்பானவருக்கும் இடையில் வரிவசூலிப்பதைப்பற்றிய ஒரு தகராறு நடந்துகொண்டிருந்தது. குருக்கள் செல்வத்தின்மேல் கொண்டிருந்த அதீத கவனத்தையும், சபையின் பொருளாதாரப் பழக்கங்களையும் வைக்லிப் திறந்தவெளியில் கண்டித்ததால், அது அரசரின் நிலைப்பாட்டிற்கு உதவியாக இருந்தது. இதனால், அரசர் வைக்லிப்புக்கு ஆதரவளித்தார். அது மட்டுமல்ல, மூன்றாம் எட்வர்ட்டின் மகனான ஜான் ஆஃப் கான்ட் என்பவரும் வைக்லிப்பின் முக்கியமான ஆதரவாளராக இருந்தார்.

இந்த அரசியல் ஆதரவு, கொஞ்சக் காலத்துக்கு வைக்லிப்பைப் பாதுகாத்தது.
அதனால் அவர் இன்னும் திறந்தவெளியில் பேசினார்.
அவருடைய போதனை மேலும் பரவியது.

தேவன் பயன்படுத்திய சூழ்நிலை

ஆனால் இங்கே ஒரு முக்கியமான உண்மையை நாம் கவனிக்க வேண்டும். அரசர் சத்தியத்தை விசுவாசித்ததால் வைக்லிப்பை ஆதரிக்கவில்லை.
அவர் தன் அரசியல் இலாபத்திற்காக அவரைப் பயன்படுத்தினார். ஆயினும், தேவன் அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தினார்.

அது வைக்லிப்புக்கு இன்னும் சில காலம் விடுதலையோடு பேசுவதற்கான வாய்ப்பாக அமைந்தது.

ஆதரவு மாறியது — சவால் ஆரம்பமானது

ஆனால், உலகத்தின் இயல்பின்படி, அந்த ஆதரவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஜான் ஆஃப் கான்ட் தன் நிலையை மாற்றினார். அரசியல் சூழ்நிலை மாறியது. அதனால், வைக்லிப் தன் பாதுகாப்பை இழந்தார்.

சத்தம் பரவியது — எல்லைகளைத் தாண்டியது

இதற்கிடையில், வைக்லிப்பின் போதனை மக்களிடையே பரவத் தொடங்கியது. அது இங்கிலாந்தில் மட்டும் இல்லாமல், அப்போது  போப்பானவர் இருந்த பிரான்சின் அவினியோன்வரை சென்றடைந்தது.

அதிகாரத்தின் எதிர்வினை

1377ஆம் ஆண்டு, போப்பானவர் பதினோராம் கிரகோரி, வைக்லிப்பை கைது செய்ய உத்தரவிட்டார். அவர் அந்த உத்தரவு நேரடியாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கே அனுப்பப்பட்டது. அதில் ஒரு கடுமையான கேள்வி இருந்தது: “இப்படிப்பட்ட போதனைகளைப் போதிக்கும் ஒருவரை நீங்கள் உங்கள் பல்கலைக்கழகத்தில் வைத்திருக்கிறீர்களா? இது உங்கள் புகழுக்கு இழுக்கு அல்லவா?”

கைது — ஆனால் மௌனம் இல்லை

வைக்லிப் கைது செய்யப்பட்டார். ஆனால் இது ஒரு முடிவு அல்ல. பல்கலைக்கழகத்தின் அப்போதைய வேந்தர் அவருடைய நண்பர்.
அவர் தலையிட்டு, “இவை சபை விதிகளின்படி வேதப்புரட்டு என்று நிரூபிக்க முடியாது” என்று கூறி அவரை விடுவித்தார்.

மீண்டும் மீண்டும் — தடுக்க முடியாத சாட்சி

வைக்லிப் மூன்று முறை கைது செய்யப்பட்டார். பலமுறை விசாரணைக்கு அழைக்கப்பட்டார் . ஒவ்வொரு முறையும்—ஏதோவொரு காரணத்தால்—அவர் விடுவிக்கப்பட்டார். இரண்டு முறை அவரை உரோமுக்கு வருமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் ஒருபோதும் உரோமுக்குச் செல்லவில்லை.

கதவுகள் மூடப்பட்டன — ஆனால் சத்தம் திறந்தது

ஆனால் இப்போது சூழ்நிலை மாறிவிட்டது. அரசியல் ஆதரவு அகன்றது.
சபையின் நடவடிக்கைகள் கடுமையடைந்தன. ஆக்ஸ்போர்டில் அவருக்கான இடம் மெதுவாகக் குறைந்தது. அவர்கள் பயந்தார்கள்: “எத்தனை நாள்வரை அவரைக் காப்பாற்ற முடியும்?” இறுதியில், வைக்லிப் ஆக்ஸ்போர்டை விட்டு வெளியேறினார்.

மனிதன் தனிமை — சத்தியம் பரவல்

அவரால் முன்புபோல் திறந்தவெளியில் போதிக்க முடியவில்லை. ஆனால், ஒரு முக்கியமான காரியம் நடந்துவிட்டது. அவருடைய வார்த்தை மக்களிடையே சென்றுவிட்டது. அவருடைய சிந்தனை விதையாக விதைக்கப்பட்டுவிட்டது. பல மாணவர்களும், சில ஆசிரியர்களும் அவருக்கு ஆதரவாக நின்றார்கள். “சபையின் உண்மையான அதிகாரம் ஒரு நபரிலோ, ஒரு நிறுவனத்திலோ, அல்லது பாரம்பரியங்களிலோ இல்லை—அது தேவனுடைய வார்த்தையில்தான் உள்ளது,” என்ற உண்மையைப் அவர்கள் பிடித்துக்கொண்டார்கள்:

அவரை மௌனமாக்க முயன்றார்கள். ஆனால் அவர் எழுப்பிய சத்தத்தை நிறுத்த முடியவில்லை. ஒரு மனிதனை அவர்கள் தனிமைப்படுத்தினார்கள்.
ஆனால் அவர் விதைத்த சத்தியத்தை அவர்களால் அழிக்க முடியவில்லை.

3. சங்கிலியிலிருந்த வார்த்தை — மக்களின் கைகளில்

1381ஆம் ஆண்டு. வைக்லிப் லட்டர்வொர்த் என்ற சிறிய ஊரில் இருந்த St Mary’s ஆலயத்தில் ஒதுங்கியிருந்தார். ஆனால், அங்குதான் அவருடைய  மிகப்பெரிய பணி தொடங்கியது. அவரும், அவருடைய ஆதரவாளர்களும், “வேதாகமமே அனைத்திற்கும் அடித்தளம்; ஒவ்வொருவருடைய கரத்திலும் வேதாகமம் இருக்க வேண்டும்,” என்று நம்பினார்கள். அந்தக் காலத்தில் இது ஒரு சாதாரண எண்ணம் அல்ல—இது ஒரு புரட்சிகரமான சிந்தனை. ஏனெனில், வேதாகமம் சிலருக்கே உரியது என்று கருதப்பட்ட காலம் அது. ஆனால் வைக்லிப் அதை எல்லோருக்கும் திறக்க விரும்பினார். அதனால், அவர் ஒரு பெரிய பணியைத் தொடங்கினார்: முழு வேதாகமத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும், ஒவ்வொருவரும் அதை வாசிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய மிகப் பெரிய திட்டம்

அப்போது அவருக்கு எபிரேயமும் கிரேக்கமும் தெரியாது. அவரிடம் இருந்தது இலத்தீன் வேதாகமம் (Vulgate) மட்டுமே. அதிலிருந்தே அவர் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். இது ஒரு தனிநபர் முயற்சி அல்ல. இது ஒரு கூட்டுப்பணி.  அவருடைய மாணவர்கள், பேராசிரியர்கள், ஆதரவாளர்கள்—பலர் இதில் இணைந்தார்கள். சிலர் அறிவால் உதவினார்கள். சிலர் உழைப்பால் உதவினார்கள். சிலர் பொருளாதாரமாக உதவியிருக்கலாம்.

ஏனெனில், இது எளிய பணி அல்ல. அப்போது அச்சு இயந்திரம் இல்லை.
(இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது கண்டுபிடிக்கப்படும்.) எனவே, ஒவ்வொரு பக்கமும் கையால் எழுதப்பட வேண்டும். தாள்கள், மை  விலை அதிகம். இந்தக் கடினமான சூழ்நிலையிலும், இந்தப் பணி முன்னேறியது. 1382ஆம் ஆண்டில், அதாவது, ஒரே ஆண்டில், வேதாகம மொழிபெயர்ப்பு நிறைவடைந்தது.

ஒரு முழு வேதாகம பிரதியை உருவாக்க பல மாதங்கள் எடுத்திருக்கலாம். ஒவ்வொரு பக்கமும் கையால் எழுதப்பட்ட அந்தப் பிரதிகள்—வார்த்தையை மட்டும் அல்ல, ஒரு தியாகத்தையும் சுமந்துகொண்டிருந்தன.

(பின்னர் இது John Purvey மூலம் மேலும் திருத்தப்பட்டது.)

இதற்குப் பிறகு, அவர்கள் இன்னொரு முக்கியமான காரியத்தைச் செய்தார்கள்.

முழு வேதாகமத்தை எல்லாருக்கும் கொடுக்க முடியாது. ஆனால் அதன் சிறுசிறு பகுதிகளைக் கொடுக்க முடியும். ஆகவே, முக்கியமான சில வசனங்கள், சில பகுதிகள்—துண்டுத் தாள்களில் நகலெடுத்து மக்களுக்குக் கொடுத்தார்கள். முதன்முறையாக, மக்கள் தங்கள் சொந்த மொழியில் தேவனுடைய வார்த்தையைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் சபையின் எதிர்வினை கடுமையானது. இந்தப் பணி—சபையின் பார்வையில்—சட்ட விரோதமானது. மரண தண்டனைக்குரியது.

இங்கிலாந்தின் Canterbury பேராயராக இருந்த தாமஸ் ஆருண்டெல், வைக்லிப்பை கடுமையாகத் தாக்கினார். “இந்த அருவருப்பான வைக்லிப், பிசாசின் பிள்ளை, அந்திக்கிறிஸ்துவின் சீடன்—வேதாகமத்தை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்துத் தன் அக்கிரமத்தை நிறைவு செய்தான்,” என்று கூறினார். இவர் வைக்லிப்பின் போதனைகளுக்கு, குறிப்பாக ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பிற்குஎதிரானவர். வேதாகமம் பொதுமக்களின் கையில் போகக் கூடாது. அது ஆபத்தானது என்று இவர் வாதித்தார். அவர்களின் வாதம் என்ன? “இதைக் பொதுமக்களிடம் கொடுப்பது முத்துக்களைப் பன்றிகளுக்குமுன் வீசுவதற்கு ஒப்பாகும்.”

அவர்கள் பயந்தது இதுதான்: மக்கள் வேதாகமத்தை வாசித்துவிட்டால்,
அவர்கள் சத்தியத்தை அறிந்துவிடுவார்கள்.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது? சங்கிலியில் கட்டப்பட்டிருந்த வேதாகமம் இப்போது மக்களின் கைகளில் வந்தது. முன்பு சபை பேசியது.
இப்போது தேவனுடைய வார்த்தை பேச ஆரம்பித்தது.

இதுதான் வேதாகமத்தின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு. அதன்பிறகு சுமார் 144 ஆண்டுகள் கழித்து, 1526ஆம் ஆண்டில்தான் வில்லியம் டிண்டேல் வேதாகமத்தை மூல மொழிகளாகிய எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  அவருடைய மொழிபெயர்ப்பு வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் மிகவும் எளிதானது.

ஜான் வைக்லிப் மத்தியகால ஆங்கிலத்தில் (Middle English) மொழிபெயர்த்தார். எனவே, அந்த ஆங்கிலம் இன்றைக்கு வாசித்துப் புரிந்துகொள்வது சற்று கடினம். ஆனால் டிண்டேல் பொதுமக்கள் வாசித்துப் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்த்தார். டிண்டேல் வேதாகமத்தை மொழிபெயர்த்த காலத்தில் அச்சு இயந்திரம் இருந்தது. ஆகவே, அந்த மொழிபெயர்ப்பு மிக வேகமாக மக்களிடையே பரவியது.

ஆனால் வைக்லிப்பின் காலத்தில் நிலைமை வேறுபட்டது. அப்போது அச்சு இயந்திரம் இல்லை. இருந்தாலும்—அவர்களுடைய கைகளில் இப்போது ஆங்கில வேதாகமம் இருந்தது. அவர்கள் அதைக் கையால் நகலெடுத்தார்கள். மக்களுக்குக் கொடுத்தார்கள். மக்கள் அதை ஆர்வத்தோடு வாசித்தார்கள். முதன்முறையாக, மக்கள் வேதாகமத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள்.

வைக்லிப் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொண்டார்: வேதாகமம் மொழிபெயர்க்கப்படுவது மட்டும் போதாது. அது மக்களிடம் செல்ல வேண்டும். தேவனுடைய வார்த்தையை எங்கும் பரப்புமாறு வைக்லிப் தன் ஆதரவாளர்களை ஊக்குவித்தார். தேவனுடைய வார்த்தை வெளியே செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் தன் மாணவர்களை இங்கிலாந்தின் பல நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அனுப்பினார். இவர்கள் சாதாரண பிரசங்கிகள் அல்ல. அவர்கள் வாழ்விலேயே ஒரு செய்தி இருந்தது.

ஆடம்பரமான வாழ்க்கை வேண்டாம், பகட்டான உடைகள் வேண்டாம், உலகச் செல்வங்களில் பற்றுதல் வேண்டாம் என்று வைக்லிப் கற்றுக்கொடுத்தபடி, இந்த ஆதரவாளர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்தார்கள். பலர் எளிய பழுப்பு நிற உடைகளை அணிந்தார்கள். அவர்கள் வாழ்க்கைதான் அவர்கள் போதனையின் சாட்சியாக இருந்தது.

அவர்கள் நகரந்தோறும் பயணம் செய்தார்கள். வேதவசனங்கள் எழுதப்பட்ட துண்டுத் தாள்களை மக்களுக்கு விநியோகித்தார்கள். சந்தைகளில் நின்றார்கள். கிராமத்தின் திறந்த வெளிகளில் நின்றார்கள். வேதவசனங்களைச் சத்தமாக வாசித்தார்கள். அவர்கள் கையில் இருந்தது—
வசனங்கள் எழுதப்பட்ட தாள்கள்.

முதன்முறையாக, மக்கள் தேவனுடைய வார்த்தையை நேரடியாகக் கேட்டார்கள். இந்த மக்களைப் பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொண்டார்கள். அவர்கள் இவர்களை “லொல்லார்டுகள்” என்று கேலியாக அழைத்தார்கள்.

“லொல்லார்டு” என்ற வார்த்தைக்கு “முணுமுணுப்பவன்” என்று பொருள். அவர்கள் பொருளற்ற வார்த்தைகளைப் பேசுகிறவர்கள் என்று கிண்டல் செய்வதுபோல் இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஒருவேளை, அவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது வேதவசனங்களை மனப்பாடமாக முணுமுணுத்துக்கொண்டிருந்ததாலேயே இந்தப் பெயர் வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் முணுமுணுத்தது பொருளற்ற வார்த்தைகள் அல்ல. அது தேவனுடைய வார்த்தை.

லொல்லார்டுகள் தொலை தூர இடங்களுக்கும் சென்றார்கள். வசனத் தாள்களை மக்களுக்குக் கொடுத்தார்கள். மக்கள்—முதன்முறையாக—
தேவனுடைய வார்த்தையை கேட்டார்கள். முன்பு வேதாகமம் சுவர்களுக்குள் இருந்தது. இப்போது அது தெருக்களில் கேட்கப்பட்டது. முன்பு அது சிலருக்கே உரியது. இப்போது அது அனைவருக்கும் சொந்தமானது.

முதல் முறையாக வார்த்தையைச் சந்தித்த மக்கள்

நீங்கள் இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்க்க வேண்டும். தங்கள் வாழ்நாள் முழுவதும் சபையின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள். அதன் பாரம்பரியங்களை மிகச் சிரத்தையோடு பின்பற்றிய மக்கள். ஏழை மக்கள். ஒரு கேள்வி அவர்களின் உள்ளத்தில் இருந்திருக்கலாம்: “நாம் சம்பாதிப்பது எதற்காக? குடும்பத்தை நடத்துவதற்கா? அல்லது பாவமன்னிப்புச் சீட்டுகளை வாங்குவதற்கா?”

மூடநம்பிக்கை நிறைந்த உலகம். சரியான கல்வி இல்லாத பாமரர்கள். வேதாகமத்தை ஒருபோதும் பார்த்ததேயில்லை. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. அந்த மக்கள்தான்—
முதன்முறையாக—தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறார்கள்.

“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.” அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்.

இந்த வார்த்தைகள் அவர்களுடைய காதுகளில் விழும்போது—அது ஒரு போதனை அல்ல. அது ஓர் அழைப்பு. முதன்முறையாக, தேவன்
தங்களைப்பற்றியே பேசுகிறார் என்று அவர்கள் உணர ஆரம்பிக்கிறார்கள்.

“இந்த வார்த்தைகள் பெரியவர்களுக்காக அல்ல…எங்களைப்போன்ற சாதாரண மக்களுக்காகத்தான்!” என்று அவர்கள் உணரும்போது—
அவர்களுடைய உள்ளத்தில் என்ன நடந்திருக்கும்?

பின்னர் அவர்கள் இயேசுவின் உவமைகளைக் கேட்கிறார்கள். விதைக்கிறவன் உவமை, கோதுமை வயல்களின் உவமை, மலைகளில் தொலைந்துபோன ஆடுகளின் உவமை. இவை அவர்களுக்குப் புரியாத தத்துவங்கள் அல்ல. இது அவர்கள் ஒவ்வொருநாளும் காணும் வாழ்க்கை. இது அவர்கள் வாழும் உலகம். முதன்முறையாக, தேவனுடைய வார்த்தை அவர்களுடைய வாழ்க்கையின் மொழியில் பேசுகிறது.

“பெண்களும் குழந்தைகளும் இயேசுவின் அருகில் வந்தார்கள். அவருடைய காலடியில் உட்கார்ந்தார்கள். யாரும் அவர்களைத் தடுக்கவில்லை. இயேசு அவர்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்,” என்று அவர்கள் இன்னொரு  விஷயத்தை அறிகிறார்கள்

இதுவரை அவர்கள் கற்றது என்ன? தூரத்தில் இருக்க வேண்டும். பயப்பட வேண்டும். நடுவில் இருக்கும் குருவானவர்மூலம் மட்டுமே தேவனை அணுக வேண்டும். ஆனால் இப்போது அவர்கள் கேட்கிறார்கள்: “வருங்கள்…”

முன்பு அவர்கள் சபையைப் பார்த்தார்கள். இப்போது அவர்கள் கிறிஸ்துவைப் பார்க்க ஆரம்பித்தார்கள். முன்பு அவர்கள் பயந்தார்கள். இப்போது அவர்கள் அழைக்கப்பட்டார்கள். முன்பு அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
இப்போது அவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள்.

“இந்த வார்த்தை மக்களின் இருதயங்களில் விழுந்தது… அது அமைதியாக இருக்கவில்லை…அது இன்னொரு தேசத்தில் தீயாக வெடித்தது…”

வேதாகமத்தை மொழிபெயர்க்கத் தொடங்கிய அந்தத் தருணத்திலேயே,
வைக்லிப் தன் முடிவைத் தீர்மானித்துவிட்டார் என்று சொல்லலாம். இது ஒரு சாதாரண வேலை அல்ல என்றும், இது ஓர் ஆபத்தான பாதை என்றும், இதனால் தனக்கு என்ன நேரிடும் என்றும் அவருக்குத் தெரியும்.

ஆயினும்—பரிசுத்த வேதாகமத்தை அவர் சாதாரண மக்களுக்குக் கொடுக்கத் துணிந்தார். சபையின் பார்வையில் இது ஒரு பெரிய குற்றம். “இவன் இந்த முத்துகளைப் பன்றிகளுக்குமுன் வீசிவிட்டான். இந்த முத்துகளைப்  பொதுமக்கள் மிதித்து நாசமாக்கிவிடுவார்கள்,” என்று அவர்கள் சொன்னார்கள்.

ஆனால், வைக்லிப்பின் வாழ்க்கை அங்கே முடிவடையவில்லை. சபை அவரைக் கைது செய்து தண்டிப்பதற்குமுன்பே, அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. 1384ஆம் ஆண்டு, புத்தாண்டுக்கு முந்தின நாள், 54 வயதில்—
அவர் தன் வீட்டிலேயே அமைதியாக நித்தியத்துக்குள் நுழைந்தார்.

வைக்லிப்பின் மரணம் சபைக்கு ஒரு வகையில் நிம்மதியைத் தந்தது. “இப்போது இது முடிந்துவிட்டது” என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அங்கே நின்றுவிடவில்லை. அவர்கள் இன்னும் ஒரு காரியத்தைச் செய்ய நினைத்தார்கள். ஒருவன் சபைக்கு எதிராகப் பேசினால்—
எழுதினால்—அல்லது அதன் போதனைகளைக் கேள்விக்கேட்டால் அவனுக்கு என்ன நடக்கும் என்பதை எல்லாருக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக அவர்கள் வைக்லிப்பை ஒரு எச்சரிக்கையாக மாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். எனவே, அவர் இறந்தபிறகும் அவரை விடவில்லை.

சாம்பலிலிருந்து நதிகளுக்கு — அழிக்க முடியாத சாட்சி

சுமார் 30 ஆண்டுகளுக்குப்பிறகு, 1415ஆம் ஆண்டு, கான்ஸ்டன்ஸ் என்ற நகரத்தில் சபையின் ஆலோசனைச் சங்கம் கூடியது. அதில் போப்பானவர்கள், கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், அரசர்கள்—அனைவரும் கலந்து கொண்டார்கள்.

(அந்த காலத்தில் சபையிலேயே குழப்பம் இருந்தது—ஒரே நேரத்தில் மூன்று பேர் தங்களைப் போப்பாகக் கூறிக்கொண்டிருந்தார்கள். அது இப்போது இங்கே நமக்குத் தேவையான விஷயம் அல்ல)

அந்தப் பேரவையில் பின்வரும் கடுமையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • வைக்லிப்பின் அனைத்து எழுத்துக்களையும் எரிக்க வேண்டும்
  • அவரை வேதப்புரட்டன் என்று அறிவிக்க வேண்டும்
  • அவருடைய உடலைக் கல்லறையிலிருந்து தோண்டி எடுத்து எரிக்க வேண்டும்
  • அவருடைய நினைவையே அழிக்க வேண்டும்

இதற்காக, அவர்கள் அவருடைய கல்லறையைத் தோண்டினார்கள். அவருடைய எலும்புகளை எடுத்தார்கள். அவைகளைச் சுட்டெரித்து சாம்பலாக்கினார்கள். அந்தச் சாம்பலை, வைக்லிப் வாழ்ந்த லட்டர்வொர்த் அருகே ஓடிய Swift நதியில் வீசினார்கள்.

“அவரை முழுமையாக அழித்துவிட்டோம்,” என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால், “ஒரு மனிதனை எரிக்கலாம். சத்தியத்தை எரிக்க முடியாது. ஓர்  உடலைச் சாம்பலாக்கலாம். வார்த்தையை அழிக்க முடியாது,” என்று அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

இங்கு ஒரு முக்கியமான விஷயம்—

அவருடைய நினைவு அங்கேயே முடிந்துவிட்டது என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் தேவனுடைய செயல்கள் மனிதனின் தீர்ப்புகளால் நிறுத்தப்படுவதில்லை.

அந்தச் சாம்பல் Swift நதியில் கலந்தது. Swift நதி ஓடியது. அந்த நதி Avon நதியில் கலந்தது. Avon Severn நதியில் கலந்தது. Severn கடலில் கலந்தது.

வைக்லிப் மறைந்தார். ஆனால் அவர் விதைத்த வார்த்தை—ஓடத் தொடங்கியது. நீரோடு சென்றது சாம்பல் மட்டும் அல்ல—ஒரு சாட்சி சென்றது. ஒரு சத்தியம் சென்றது. ஒரு ஒளி சென்றது.

ஒரு மனிதனை அவர்கள் எரித்தார்கள். ஆனால் ஒரு இயக்கத்தை அவர்கள் தொடங்கிவிட்டார்கள்.  அவர் ஏற்றிய ஒளியை அவர்களால் அணைக்க முடியவில்லை. Swift-இல் தொடங்கியது—
நதிகளைத் தாண்டியது—கடலை எட்டியது.

அப்படியே வைக்லிப்பின் போதனை ஒரு இடத்தில் அடைக்கப்படாமல்,
ஒரு காலத்தில் கட்டுப்படுத்தப்படாமல், உலகமெங்கும் பரவியது.

4. சத்தியத்தின் விலை — லொல்லார்டுகளின் பாதை

வைக்லிப்பின் போதனையை ஏற்றுக்கொண்டவர்கள்—ஆங்கில வேதாகமத்தை வாசித்தவர்கள்—அல்லது அதை வைத்திருந்தவர்கள்—தங்கள் உயிரை மட்டும் அல்ல, தங்கள் நிலத்தையும், மாடுகளையும், பொருள்களையும் இழந்தார்கள். அது அவர்களுடைய வாரிசுகளிடமிருந்தும் பறிக்கப்பட்டது. இது சபை அவர்களுக்குக் கொடுத்த தண்டனை.

ஒரு புத்தகத்தை வைத்திருந்ததற்காக—ஒரு வசனத்தை வாசித்ததற்காக—
ஒரு சத்தியத்தை நம்பியதற்காக—அவர்கள் அனைத்தையும் இழந்தார்கள்.

இத்தனை கொடுமைகளுக்கும் இடையில்—லொல்லார்டுகள் நின்றுவிடவில்லை.அவர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்தார்கள். அவர்கள் இங்கிலாந்து முழுவதும் பயணம் செய்தார்கள். வசனத் தாள்களை எடுத்துச் சென்றார்கள். ஆங்கில வேதாகமத்தை மக்களிடம் கொண்டு சென்றார்கள்.

இதன் விளைவாக—பலர் துன்புறுத்தப்பட்டார்கள். சிலர் கைது செய்யப்பட்டார்கள். சிலர் அடிக்கப்பட்டார்கள். சிலர் தீயில் எரிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் மௌனமாக இருக்கவில்லை.  வைக்லிப் கையெழுத்திட்ட சில வேதாகம பிரதிகள் இன்றும் உள்ளன. ஆனால் பெரும்பாலானவை அழிக்கப்பட்டன.

ஆனால்—தாள் மட்டுமே அழிக்கப்பட்டது. தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது. அது செயல்படுகிறது. அதைக் கட்டிவைக்க முடியாது.
அதை எரித்துவிட முடியாது. வைக்லிப்பின் நினைவு அழிக்கப்படவில்லை. அவரை மௌனமாக்க முயன்றார்கள்—ஆனால் அவர் எழுப்பிய சத்தம் தொடர்ந்தது.

தேவனுடைய இறையாண்மையில்—வைக்லிப்பும் லொல்லார்டுகளும் எடுத்துச் சென்ற அந்த வேத ஒளி அணையவில்லை. அது தொடர்ந்து சென்றது. அது பரவத் தொடங்கியது. அது இன்னும் எரிந்துகொண்டே இருந்தது.

“அந்த ஒளி—இங்கிலாந்தில் மட்டும் இல்லை…அது எல்லைகளைத் தாண்டி—
மற்றொரு தேசத்தில்—ஒரு தீயாக எரியத் தொடங்கியது…”

எல்லைகளைத் தாண்டிய தீ — ஹஸின் உலகம்

சரி, நாம் இப்போது ஜான் ஹஸ் என்ற பரிசுத்தவானைப்பற்றிப் பார்ப்போம்.

1382ஆம் ஆண்டு, போஹீமியாவின் அன்னே (Anne of Bohemia), இங்கிலாந்தின் ரிச்சர்ட் II என்பவரைத் திருமணம் செய்தார். அன்னே சாதாரண அரச குமாரி அல்ல. அவர் உரோமப் பேரரசர் நான்காம் சார்ல்சின் மகள். அவர் அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழவில்லை. அவர் அமைதியானர், கருணையுள்ளவர், தேவபக்தியுள்ளவர்.

அவர் மேடையில் பேசவில்லை; ஆனால் வரலாற்றை நகர்த்தினார். அவர் ஒரு சீர்திருத்தவாதியும் இல்லை. ஆனால்—அவர் ஒரு கதவைத் திறந்தார். அவர்மூலம், இங்கிலாந்துக்கும் போஹீமியாவுக்கும் இடையில் ஒரு புதிய தொடர்பு உருவானது. அந்தத் தொடர்பு வெறும் அரசியல் தொடர்பாக மட்டும் இல்லாமல்,
அன்றைய சிந்தனைகளும், வேதாகம ஒளியையும் பரிமாறிக்கொள்ளும் பாதையாகவும் மாறியது.

இரண்டாம் ரிச்சர்ட்டின்  அரசவையில் இருந்த சிலர்— குறிப்பாக ஜான் ஆஃப் கான்ட் போன்றவர்கள்— வைக்லிப்புக்கு ஒரு காலத்தில்  பாதுகாப்பளித்தார்கள்.

இந்தத் திருமணம் ஓர் அரசியல் சம்பவம் மட்டும் அல்ல. இதனால் போஹீமியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் ஓர் ஆழமான தொடர்பு ஏற்பட்டது.

அவரிடம் ஆங்கில வேதாகமத்தின் பல பிரதிகள் இருந்தன. இது அந்த நாட்களில் மிகவும் அபூர்வமான ஒன்று.

இந்தத் தொடர்பின் மூலம், இன்னொரு முக்கியமான விஷயம் நடந்தது. போஹீமியாவின் பிராக் பல்கலைக்கழகத்துக்கும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் தொடர்பு உருவானது. அதனால் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் மாணவர் பரிமாற்றம் நடந்தது. இந்தப் பயணங்களில் ஒன்றுதான் வரலாற்றை மாற்றியது.

இப்படிப் பயணம் செய்த மாணவர்களில் ஒருவர் ஜெரோம் ஆஃப் பிராக் (Jerome of Prague). அவர் ஆக்ஸ்போர்டுக்குச் சென்றார். அங்கே—வைக்லிப்பின் சிந்தனைகளையும் போதனைகளையும் சந்தித்தார். அது ஒரு சாதாரண சந்திப்பு அல்ல. ஒரு தீப்பொறி அவருடைய இருதயத்தில் விழுந்தது. வைக்லிப்பின் போதனைகளும் வாழ்க்கையும் அவரில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் வெறுமனே கேட்டுத் திரும்பவில்லை. அவர் அவைகளை எடுத்துச் சென்றார்.

அவர் வைக்லிப்பின் எழுத்துக்களை நகலெடுத்து, தன் நாட்டுக்குக் கொண்டுசென்று, அவைகளை போஹீமியாவின் மக்களுக்குப் புரியும் மொழியான செக் மொழிக்கு மொழிபெயர்த்தார்.

ஒரு திருமணம் நடந்தது. ஒரு பாதை திறந்தது. ஒரு தேசத்தில் எழுந்த வார்த்தை— மற்றொரு தேசத்திற்குச் செல்ல ஆரம்பித்தது.

வைக்லிப் இங்கிலாந்தில் பேசினார். ஆனால் அந்த வார்த்தை எல்லைகளைத் தாண்டியது. ஒரு மனிதன் விதைத்தான். மற்றொருவன் அதை எடுத்துச் சென்றான். இது ஒரு மனிதனின் பணி இல்லை. இது தேவன் ஆரம்பித்த ஓர் ஓட்டம்.

இந்த வார்த்தை போஹீமியாவை எட்டியபோது…அது ஓர் இதயத்தைத் தொட்டது…அந்த மனிதன்—ஜான் ஹஸ்

இங்கிலாந்திலிருந்து தொலை தூரத்தில், தெற்கு போஹீமியாவில் உள்ள ஹுசினெக் என்ற ஒரு சிறிய கிராமத்தில் ஜான் ஹஸ் பிறந்தார். இது இன்றைய Czech Republic பகுதியாகும் (அப்போது அது போஹீமியா என்று அழைக்கப்பட்டது).

அவருடைய குடும்பத்தைப்பற்றிய தகவல்கள் மிகக் குறைவு. ஏனெனில், அவர் ஒரு சாதாரண—ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய பிறந்த தேதியும் துல்லியமாகத் தெரியாது. அது சுமார் 1370 அல்லது 1371ஆம் ஆண்டாக இருக்கலாம்— அதாவது, வைக்லிப் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு. (வைக்லிப் 1384ஆம் ஆண்டு காலமானார்.)

இதிலும் ஒரு சின்ன விஷயம் இருக்கிறது.

செக் மொழியில் “Hus” என்றால் “வாத்து” என்று பொருள். அதனால், அவருடைய பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் “John Goose” என்று வரும்.

அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தது. சில சமயங்களில் அவர் தன்னைத்தானே “நான் ஒரு வாத்து… ஒரு முட்டாள் வாத்து…” என்று கிண்டலாகச் சொல்வார்.

ஆனால்—அந்த “வாத்து” ஒருநாள் தீயின் நடுவில் நிற்கும் என்று அப்போது யாருக்கும் தெரியாது.

ஹஸ் கல்வி பெற வேண்டும் என்ற ஆவலுடன் வளர்ந்தார். அவருடைய குடும்பம் அவர் சபையில் ஒரு பணியைப் பெற வேண்டும் என்று விரும்பியது. ஏனெனில் அந்தக் காலத்தில்: அது ஒரு நிரந்தரமான வாழ்க்கை, நல்ல வருமானம், சமூக மரியாதை

அதனால், அவர் பிராக் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1396ஆம் ஆண்டு அவர் தன் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். 1400ஆம் ஆண்டு அவர் ஒரு குருவானவராக நியமிக்கப்பட்டார்.

அவர் ஒரு சாதாரண மாணவர் அல்ல. அவர் விரைவில் உயர்ந்தார். பின்னர் அவர் பிராக் பல்கலைக்கழகத்தின் தலைவராக (rector) நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில், பிராக் நகரில் இருந்த ஒரு முக்கிய ஆலயத்தில்
போதகராகவும் இருந்தார்.

இப்போது—அவரிடம் இரண்டு மேடைகள் இருந்தன:பல்கலைக்கழகம், சபை அவர் பேசினால்—மாணவர்கள் கேட்பார்கள். அவர் போதித்தால்—
மக்கள் கேட்பார்கள்.

ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த இந்த மனிதன்—இப்போது ஒரு நகரத்தின் குரலாக மாறியிருந்தார்.

“ஆனால் அவர் இன்னும் ஒரு விஷயத்தைச் சந்திக்கவில்லை…அது—வைக்லிப்பின் வார்த்தை…”

ஜான் ஹஸ் — ஒரு காட்சி, ஒரு கேள்வி, ஒரு திருப்பம்

ஒருநாள், ஹஸ் ஒரு கலைப்படம் பார்த்தார். அதில்—ஒருபுறம் கர்த்தராகிய இயேசு முட்கிரீடம் அணிந்திருந்தார். மறுபுறம் போப்பானவர் தங்கக் கிரீடமும் அலங்கார உடைகளும் அணிந்திருந்தார். அந்தக் காட்சி அவரை உலுக்கியது. அவர் தன்னுள்ளே ஒரு கேள்வியை எழுப்பினார்: “இந்த முட்கிரீடம் அணிந்த மனிதனைப் பின்பற்றுகிறவர்கள்—தங்கக் கிரீடம் அணிவதில் எப்படி மகிழ்ச்சி அடைகிறார்கள்?”

அவருக்கு இது ஒரு வெளிப்புற முரண்பாடாக மட்டும் தோன்றவில்லை. அது ஒரு உள் முரண்பாடு. அவர் தன்னைத்தானே பார்த்தார். “நான் ஏன் சபையில் சேவை செய்ய விரும்புகிறேன்? என்னுடைய நோக்கம் என்ன?” அவருக்குப்  பதில் தெளிவாகத் தெரிந்தது: பணம், நிலையான வாழ்க்கை, மரியாதை. எனவே, இந்த முரண்பாடு சபையில் மட்டும் இல்லை. அது தன் இருதயத்திலேயே இருந்தது என்பதை அவர் உணர்ந்தார்.

அவர் தன்னையும், தன்னைச் சுற்றிய சூழலையும் பார்த்தபோது, ஒரு உண்மை வெளிப்பட்டது: சபை—அதிகாரத்தையும், செல்வத்தையும் அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டிருந்தது. ஆனால் கிறிஸ்து—தாழ்மையிலும் துன்பத்திலும் நடந்தார். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்தவை அல்ல.

இந்தக் காட்சி ஒரு கேள்வியை எழுப்பியது. அந்த கேள்வி ஒரு தேடலைத் தொடங்கியது.

அந்த நேரத்தில்தான், ஹஸ் ஜான் வைக்லிப்பின் எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்தார். அவை ஜெரோம் போன்றவர்களாலும், இங்கிலாந்திலிருந்து திரும்பிய மற்ற மாணவர்களாலும். பிராக் நகரத்துக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. ஹஸ் அவைகளை வாசித்தார். அவர் வேதாகமத்தையும் ஆய்வு செய்தார்.

அந்த வாசிப்பில்—அவர் ஒரு கருத்தை மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. அவர் ஒரு சத்தியத்தைக் கண்டார்.

“இதுதான் சத்தியம்” என்று அவர் உறுதியாக நம்பினார். அதன் பிறகு, அவர் மாறினார். அவர் தன் விரிவுரைகளில் வைக்லிப்பின் எழுத்துக்களைப் பயன்படுத்தத் தொடங்கினார். அவருடைய சிந்தனைகளை பகிரத் தொடங்கினார்.  அவருடைய எழுத்துக்களை நகலெடுத்து பரப்பினார்.

ஒரு காட்சி—ஒரு கேள்வியை எழுப்பியது. ஒரு கேள்வி—ஒரு தேடலைத் தொடங்கியது. ஒரு தேடல்—ஒரு மனிதனை மாற்றியது.

ஜான் ஹசும் ஜான் வைக்லிப்பும் வேதாகமத்தோடு புதிதாக எதையும் சேர்க்கவில்லை. தேவையற்ற அனைத்து பாரம்பரியங்களையும் நீக்கிவிட்டு, மக்களை மீண்டும் வேதாகமத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணம். வேதாகமத்துக்கு முரணான பாரம்பரியங்கள் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றன என்று அவர்கள் கண்டார்கள். அனைவரும் தேவனுடைய வார்த்தைக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான நற்செய்திக்கும் திரும்ப வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஆனால் அவர்கள் போதித்தவை அந்நாளில் சபை போதித்தவைகளுக்கும், பொதுமக்கள் நம்பியவைகளுக்கும் மிகவும் மாறுபட்டவைகளாகத் தோன்றின.

வார்த்தை மீண்டும் பேசத் தொடங்கியது

ஜான் ஹஸ் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தபோது, அவர் பிராக் நகரில் உள்ள பெத்லெஹேம் ஆலயத்தில் பிரசங்கிக்க நியமிக்கப்பட்டார். இந்த ஆலயம் மிகவும் விசித்திரமானது. முதலாவது, அது மிகவும் பெரியது— சுமார் 3000 பேர் உட்கார முடியும். இரண்டாவது—இது மிகவும் தனித்துவமானது. இந்த ஆலயத்தைக் கட்டியவர்கள் ஒரு முக்கியமான நிபந்தனை வைத்திருந்தார்கள்.  அது என்ன நிபந்தனை? அங்கு இலத்தீனில்  பிரசங்கிக்கக்கூடாது. தேசிய மொழியான செக் மொழியில் பிரசங்கிக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இதன் பொருள் என்ன? மக்கள் தேவனுடைய வார்த்தையைப்  புரிந்துகொள்ள வேண்டும்.

“பெத்லெஹேம்” என்றால்  “அப்பத்தின் வீடு” என்று பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப அங்கு மக்கள் தேவனுடைய வார்த்தையால் ஊட்டப்படுவதற்காக வந்தார்கள்.

ஜான் ஹஸ் அந்த ஆலயத்தின் மேய்ப்பராக இருந்தார். அவர் மக்களை உண்மையாக நேசித்தார். அவர் எழுதிய பல கடிதங்கள் இன்றுவரை நம்மிடம் உள்ளன. அவை ஊக்கமளிப்பவை. ஆனால் அவர் எழுதிய கடிதங்களைவிட, அவருடைய பிரசங்கமே அந்நாளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு முறை பிரசங்கித்தார். மேலும் வாரத்தின் மற்ற நாட்களிலும் பலமுறை பிரசங்கித்தார்.

ஒரு கணக்குப்படி—அவர் 3000க்கும் அதிகமான பிரசங்கங்கள் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு தசாப்தத்தில்
வருடத்திற்கு சுமார் 250–300 பிரசங்கங்கள்.

அவர் பேசும்போது—மக்கள் கேட்டார்கள். அவர் வார்த்தையைத் திறந்தபோது—மக்களின் உள்ளம் திறந்தது.

வைக்லிப்பைப்போலவே, ஹஸும் சபையின் ஊழலை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினார்.

அவர் தெளிவாகப் போதித்தார்:

“வேதாகமமே மையமாக இருக்க வேண்டும்; ஒருவனுடைய அதிகாரம் வேதாகமத்திலிருந்தே வர வேண்டும்; சபை என்பது பாரம்பரியங்களால் ஆனது அல்ல; சபை ஒரு நிறுவனம் அல்ல; சபை என்பது போப்பானவர் அல்ல.”

“அனைவரும் வேதாகமத்தை வாசிக்க வேண்டும். வேதாகமம் அனைவருக்கும் உரியது—ஒரு சிலருக்கு மட்டும் அல்ல. எல்லாரும் சத்தியத்தை அறிய வேண்டும்,” என்று அவர் மக்களிடம் கூறினார்.

“அப்பம்பிட்குதல் அனைவருக்கும் உரியது. அதுபோல கிண்ணத்தில் பருகுவதும் அனைவருக்கும் உரியது,” என்ற இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அவர் வலியுறுத்தினார்.

“தேவனால் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும். குருக்களிடம் பாவங்களை அறிக்கை செய்வது பயனற்றது; பாவமன்னிப்புச் சீட்டுகளை வழங்குவதும் வாங்குவதும் வேதாகமத்துக்கு எதிரானது,” என்று அவர் மேலும் போதித்தார்.

சபையின் அடித்தளம் போப்பானவர் அல்ல; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே,” என்று அவர் நம்பினார்; போதித்தார்.

அந்த நாட்களில் பொதுமக்களுக்கு அப்பம் கொடுத்தார்கள்; ஆனால் கிண்ணத்தில் திராட்சைரசம் பருக அனுமதி இல்லை. குருவானவர் மட்டுமே கிண்ணத்தில் பருகினார். இது சரி அல்ல என்று ஹஸ் சொன்னார்.

முன்பு மக்கள் கேட்டது சபையின் குரல். இப்போது அவர்கள் கேட்டது வேதாகமத்தின் குரல். முன்பு சபை மையமாக இருந்தது. இப்போது கிறிஸ்து மையமாக மாற ஆரம்பித்தார்.

அவருடைய இந்தப் போதனைகளுக்காக, ஜான் ஹஸ் 1411ஆம் ஆண்டு சபையிலிருந்து நீக்கப்பட்டார் (excommunicated). இதன் அர்த்தம் என்ன? அந்நாளில், இது ஒரு சாதாரண தண்டனை அல்ல. சபையின் நம்பிக்கையின்படி, இப்படி நீக்கப்பட்டவன் நிச்சயமாக நரகத்திற்குச் செல்வான் என்று கருதப்பட்டது.

ஜான் ஹஸ் அதை நம்பவும் இல்லை; அதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. ஏனெனில் இரட்சிப்பு சபையின்மூலம் வருவது அல்ல. அது தேவனிடமிருந்து வருகிறது என்ற உண்மை அவருக்குத் திட்டவட்டமாகத் தெரியும். தான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று அவருக்குத் தெரியும்.

ஆகவே, அவர் சபையிலிருந்து நீக்கப்பட்டது அவருடைய நம்பிக்கையைக்  குலைக்கவில்லை. ஆனால்—இந்தத் தீர்ப்பின் விளைவுகள் அவரை மட்டுமல்ல, அவரைச் சுற்றியிருந்தவர்களையும் பாதித்தன. அவரோடு தொடர்பு வைத்திருந்தவர்களுக்கும் அதே தண்டனை வழங்கப்பட்டது. அதனால்—மக்கள் பயந்தார்கள். அவரை விட்டு விலகத் தொடங்கினார்கள்.

அவர் அதற்குப் பிறகு பெத்லெஹேம் ஆலயத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. அவர் பிரசங்கித்த அந்த இடம்—அவருக்கு மூடப்பட்டது.; இனி—மேடை இல்லை, சுதந்திரம் இல்லை, பாதுகாப்பு இல்லை. மீதமிருந்தது—ஒரு பாதை மட்டுமே. தலைமறைவு வாழ்க்கை.

முன்பு அவர் சில ஆயிரம்பேர்களிடம்  பேசினார். இப்போது அவர் அமைதியில் மறைக்கப்பட்டார். முன்பு அவர் மேடையில் நின்றார். இப்போது அவர் ஓரத்தில் நின்றார். ஆனால்— அவர் மௌனமாகவில்லை.

“இப்போது ஹஸ் மறைந்து வாழ்கிறார்…ஆனால் அவர் எழுதத் தொடங்குகிறார்…”

அவருக்கு அதிகமான ஆதரவு இருந்தது. அவருடைய ஆதரவாளர்கள் “ஹுசைட்கள்” (Hussites) என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் அவருடன் சேர்ந்து சந்தைகளிலும், கொட்டகைகளிலும், கிராமம்தோறும் சென்று தேவனுடைய வார்த்தையைப் போதித்தார்கள்; மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார்கள்.

சத்தியத்தின் விலை — தீயின் நடுவில் ஒரு சாட்சி

1415ஆம் ஆண்டு, ஹஸ் கான்ஸ்டன்ஸ் சங்கத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டார். அவர் தன் நிலையை விளக்கவும், தன் புதிய போதனைகளை நியாயப்படுத்தவும் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறி அவரைச் சங்கத்துக்கு அழைத்தார்கள். ஒன்று, அவருடைய போதனைகள் புதியவை அல்ல. இரண்டு, இது ஜான் வைக்லிப்பின் எலும்புகளைத் தோண்டி எடுத்து எரித்து, அவருடைய நினைவை அழிக்க வேண்டும் என்று  தீர்மானித்த அதே சங்கம். இந்தச் சங்கம் பல ஆண்டுகளாக ஒரு பெரிய பிரச்சினையை விவாதித்துக்கொண்டிருந்தது. ஜான் ஹஸ் வாழ்ந்த காலத்தில், மூன்றுபேர் தாங்கள்தான் உண்மையான போப்பானவர் என்று சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள். இதைத் தீர்க்கவே இந்தச் சங்கம் கூட்டப்பட்டது. அதே நேரத்தில், அவர்கள் வேதப்புரட்டர்களையும் கண்டுபிடித்து அகற்ற முயன்றார்கள்.

ஹஸ் தான் இந்தச் சங்கத்துக்கு அழைக்கப்பட்டபோது, அவர் அதை ஒரு வாய்ப்பாகக் கருதினார். ஏனென்றால், சங்கத்தில் கூடியிருக்கும் கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், போப்பானவர், அரசர்கள் ஆகியோருக்குமுன் பேச முடியும், அவர்களுக்கு உண்மையைச் சொல்ல முடியும் என்று அவர் நினைத்தார். அவருடைய நண்பர்கள், “சங்கத்துக்குச் செல்ல வேண்டாம்,” என்று கூறினார்கள். ஆனால், அப்போது ஜெர்மனியின் அரசராக இருந்த சிகிஸ்முண்ட் (Sigismund)—பின்னர் உரோமப் பேரரசராக ஆனவர்—அவருக்கு பாதுகாப்பு உறுதி (safe conduct) கொடுத்திருந்தார். அதாவது அவர் பாதுகாப்பாக வந்து பாதுகாப்பாகத் திரும்பிச் செல்ல முடியும் என்று உத்தரவாதம் கொடுத்தார்.

இந்தப் பாதுகாப்பு உத்தரவாதம் இருந்தபோதும், ஹஸ் கொஞ்சம் சந்தேகப்பட்டார். அங்கு போவது ஆபத்தானது என்று அவருக்குத் தெரியும். ஆனால் அங்கு போய் அவர்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருடைய நண்பர்கள் அவரைத் தடுக்க முடிந்தவரை முயன்றார்கள். அவர் எழுதிய கடிதங்களில் இது அவர் எடுத்த ஒரு பெரிய முடிவு என்று தெரிகிறது. சங்கத்துக்குப் போனால் திரும்பிவராமல் போகக்கூடும் என்று அவருக்குத் தெரியும் என்று அவருடைய கடிதங்களிலிருந்து தெரிகிறது. ஆயினும், அவர் சங்கத்துக்குச் செல்ல முடிவு செய்தார்.

அவருடைய நண்பர்கள் நினைத்ததுதான் சரி. அந்த அழைப்பு ஹஸ்சைப் பிடிப்பதற்காக அவர்கள் வைத்த ஒரு கண்ணி.

அவர் பாதுகாப்பைத் தேடவில்லை. அவர் வாய்ப்பைத் தேடினார். அவர் உயிரைக் காக்கப் போகவில்லை. அவர் சத்தியத்தைச் சொல்லப் போனார்.

அவருடைய நண்பர்கள் நினைத்ததுதான் சரி. அந்த அழைப்பு—ஹஸ்சைப் பிடிக்க வைத்த ஒரு கண்ணி.

ஹஸ் கான்ஸ்டன்ஸ் நகரத்துக்குள் வந்தவுடனே கைது செய்யப்பட்டார். அவரை ஓர் இருத்தரையில் சுவரில் சங்கிலியால் கட்டி வைத்தார்கள்.

ஹஸ் போஹீமியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றும், அங்கு அவருக்கு நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்றும் சங்கத்துக்குத் தெரியும். ஆகவே அவர்கள் அவரை “மறுதலிக்குமாறு” (recant) வற்புறுத்தினார்கள். “நான் இதுவரை போதித்ததெல்லாம் தவறு. என் எழுத்துக்களும், போதனைகளும், பிரசங்கங்களும் தவறு; அவை பிசாசினால் உண்டானவை; நான் இனிமேல் சபை சொல்லும் விஷயங்களையே நம்புவேன்,” என்று அவர் சொல்ல வேண்டும். அவர் ஒரு தாளில் கையெழுத்து போட வேண்டும். அவர் மறுத்தார்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் அவரை வற்புறுத்தினார்கள். வாரங்கள் கடந்தன, மாதங்கள் கடந்தன; ஆனால் ஹஸ் மறுக்கவில்லை.

பின்னர் அவர்கள் அவரைப் பயமுறுத்தத்  தொடங்கினார்கள். சங்கம் அவரை வேதவிரோதி என்று அறிவித்து, தீயில் எரித்துக் கொலைசெய்யத்  தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பும் அவரை மாற்றவில்லை.

ஆயர்கள் மீண்டும் மீண்டும் சிறைக்குச் சென்று அவரை மறுதலிக்கச் செய்ய முயன்றார்கள். ஆனால் அவரோ, “நான் போதித்தது வேதாகமத்திற்கு எதிரானது என்று வேதாகமத்திலிருந்து நீங்கள் ஏதாவது காட்டினால், நான் மகிழ்ச்சியுடன் மறுப்பேன். இல்லையெனில், நான் வேதாகமத்தின் சத்தியத்திலும், அதிகாரத்திலும் நிலைத்திருக்கிறேன்,” என்று பதில் கூறினார்.

அவர் சிறையில் இருந்த கடைசி மாதங்களில், அவருடைய சிறைக் காவலர் அவருக்குத் தாளும் மையும் கொடுத்து உதவினார். அவர் கடிதங்கள் எழுதினார். அவர் தேவனுடைய வார்த்தையின்மேல் உறுதியாக நின்றார் என்று தெரிகிறது. அவர் தன் சபைக்கு எழுதிய கடிதத்தில், “அன்பானவர்களே, நான் ஆரம்பத்திலிருந்து உங்கள் இரட்சிப்பைத்தவிர வேறு எதையும் விரும்பவில்லை என்பதை நினைவில்கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தையை நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்; சிறையிலிருந்தாலும் அதை நிறுத்தமாட்டேன்,” என்று எழுதியிருக்கிறார்.

தன் நண்பரான ஒரு குருவானவருக்கு எழுதிய கடிதத்தில், “என் அன்பான சகோதரனே, வேதாகமத்தைப் பிரசங்கிப்பதில் உற்சாகமாக இரு. கிறிஸ்துவின் நல்ல போர்வீரனாக உழை. முதலாவது பரிசுத்தமாகவும், பக்தியாகவும் வாழ்; பின்னர் உத்தமமாகவும் உண்மையாகவும் போதி. மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இரு,” என்று எழுதியிருக்கிறார்.

அவர் தன் கடைசிக் கடிதத்தில், “மார்ட்டின், என் சீடனே, நான் உனக்குத் தேவனுடைய வார்த்தையை விசுவாசமாகக் கற்றுக்கொடுத்த விதத்தை மறந்துவிடாதே. நிக்கோலஸ், தேவனுடைய வார்த்தையை விசுவாசமாகக் காத்துக்கொள். கல்லுஸ், உற்சாகமாகப் பிரசங்கி; நீங்கள் அனைவரும், என் அன்பானவர்களே, அதைக் கவனமாகக் கேட்டு, உங்கள் இருதயங்களில் காத்துக்கொள்ளுங்கள்.” என்று எழுதியிருக்கிறார்.

ஜூலை 1. “நான் போதித்த என் போதனைகளை, உபதேசங்களை, எழுத்துக்களை மறுக்க மாட்டேன்,” என்று அவர் தன் இறுதி அறிக்கையைத் தெளிவாக எழுதினார்.

பாதுகாப்புத் தருவதாகப் பொய் சொன்ன சிகிஸ்முண்ட் அரசன் மீண்டும் மனிதர்களை சிறைக்கு அனுப்பி அவரை மறுதலிக்குமாறு வற்புறுத்தினான்.  “சில வார்த்தைகள் சொன்னாலே போதும்; அவர் உயிருடன் இருக்க முடியும்,”
என்று சொல்லச் சொன்னான்.

ஆனால் ஹஸ் மீண்டும், “நான் தவறு என்று வேதாகமத்திலிருந்து காட்டாவிட்டால், நான் மறுக்கமாட்டேன்,” என்று கண்ணீருடன் கூறினார்.

“அவருடைய அனைத்து எழுத்துக்களும் எரிக்கப்பட வேண்டும்; அவரும் தீயில் எரிக்கப்பட வேண்டும். அவர் ஒரு வேதப்புரட்டன்,” என்று தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

சத்தியத்தின் விலை — தீயின் நடுவில் ஹஸ்

1415 ஜூலை 6, காலை 6 மணிக்கு, ஹஸ் வெளியே கொண்டுவரப்பட்டார். கான்ஸ்டன்ஸ் நகரத்தின் பேராலயத்துக்கு வெளியே நிறுத்தினார்கள். அவருக்காக வழக்காட ஒருபோதும் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர் அணிந்திருந்த குருவானவரின் அங்கியைக் களைந்து, அவரை அவமானப்படுத்தினார்கள். “இதோ! இவன் குருவானவர் அல்ல. வேதப்புரட்டன்!” என்று உலகத்துக்கு அறிவிக்கிறார்களாம்.  பிசாசுகளின் படங்கள் வரையப்பட்ட தாளினால் செய்யப்பட்ட ஒரு கிரீடம் அவருடைய தலையில் வைக்கப்பட்டது.

இறுதித் தருணத்திலும் மக்களும், பேராயர்களும், அவரை மறுக்கச் சொன்னார்கள். ஆனால் அவர் மறுக்கவில்லை. அவர் ஒன்றேவொன்றைச் சொல்ல விரும்பினார். ஆனால், சொல்ல முடியவில்லை. ஆலயத்தின் வாசல் அருகே அவருடைய புத்தகங்களும், எழுத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

அவரை நகரம் முழுவதும் ஒரு காட்சிப்பொருளைப்போல் இழுத்துச் சென்றார்கள். அவர் எரிக்கப்பட வேண்டிய இடத்துக்கு வந்தபோது, அவர் முழங்கால்படியிட்டு வானத்தை நோக்கினார். அங்கு கூடியிருந்த ஆயர்கள், “உன் ஆவியைப் பிசாசுக்கு ஒப்படைக்கிறோம்!” என்று கத்தினார்கள். ஆனால் ஹஸ், “கர்த்தாவே, என் ஆவியை உம் கைகளில் ஒப்படைக்கிறேன். உண்மையும் உத்தமுமான நல்ல தேவனே! நீர் என்னை மீட்டீரே. கர்த்தராகிய இயேசுவே, உமக்காக இந்தக் கொடூரமான மரணத்தை நான் பொறுமையுடன் சகித்துக்கொள்கிறேன். என் எதிரிகளின்மேல் இரக்கமாயிரும்!” என்று ஜெபித்தார்.

கூடியிருந்த மக்கள் கூட்டம் அவரை எள்ளி நகைத்தது. ஏற்கெனவே, அவருடைய தலையை மொட்டையடித்துவிட்டார்கள். கழுத்தை சங்கிலியால் கட்டினார்கள். அவரைச் சுற்றி ஏற்கெனவே தாரில் ஊறவைக்கபட்ட மரக்கட்டைகள் அடுக்கப்பட்டன. தீ மூட்டப்பட்டது.

“நான் எழுதியவை, போதித்தவை, பிரசங்கித்தவை அனைத்தும் நற்செய்தியின் சத்தியம். இன்று நான் அதற்காக மகிழ்ச்சியுடன் மரிக்கிறேன்.” என்று ஹுஸ் கூறினார். தீ அவரை அணைக்கும்வரை அவர் சங்கீதங்களைப் பாடிக்கொண்டே இருந்தார். எரிந்து முடிந்தபின், கூட்டம் கலைந்தது. அவருடைய உடல் சிதைக்கப்பட்டது; எலும்புகள் நொறுக்கப்பட்டன. ஒருவன் அவைகளை ஒரு தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டுபோய் ரைன் நதியில் வீசியெறிந்தான்.

அவருடைய தாக்கத்தைக் குறைத்து, அவருடைய நினைவை அழித்துவிட வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஜான் ஹஸின் குடும்பப் பெயரின் அர்த்தம் “வாத்து” என்பதால், அவருடைய  எதிரிகள் அவரை அவமானப்படுத்துவதற்காக “முட்டாள் வாத்து” என்று அடிக்கடி அழைத்தார்கள். ஹஸ் உயிரோடு இருந்தபோதே, தன் வாழ்க்கையின் இறுதி நாட்களில் தீர்க்கதரிசனமாக, “தேவன் உங்களுக்கிடையில் இப்போது ஒரு வாத்தை அனுப்பியுள்ளார். ஆனால் ஒருநாள் அவர் உங்களுக்கிடையில் ஒரு கழுகை அனுப்புவார்,” என்று எழுதியிருந்தார். ஜான் ஹஸ் தைரியமாக ஏற்றிய அந்தச் சாட்சியின் தீபம், “ஹுசைட்கள்” என்று அழைக்கப்பட்ட அவருடைய சீடர்களால் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டது. அவர்கள் போஹீமியாவின் சாதாரண மக்களிடையே மட்டுமல்ல, ஜெர்மனியிலும் தேவனுடைய வார்த்தையையும் அவருடைய போதனைகளையும் பரப்பினார்கள். சபைத் தலைவர்கள் அவருடைய பெயரை அழிக்க எவ்வளவோ முயன்றும், அவர்களால் முடியவில்லை; அவருடைய பெயர் மறக்கப்படவில்லை.

தீ தொடர்கிறது — லூத்தர் வரை

சுமார் ஒரு நூற்றாண்டுக்குப்பிறகு, ஜெர்மனியின் லைப்ஸிக் (Leipzig) நகரத்தில், ஒரு மனிதன் ஜான் ஹசைப் பின்பற்றுபவன் என்றும், அதனால் ஒரு வேதப்புரட்டன் என்றும் குற்றம் சாட்டப்பட்டான்.

அதற்கு அந்த ஜெர்மன், “Ja, ich bin ein Hussite.” அதாவது, “ஆம், நான் ஒரு ஹுசைட்,” என்று பதிலளித்தான். அந்த மனிதன் வேறு யாருமல்ல—மார்ட்டின் லூத்தர். சில ஆண்டுகளுக்குப்பின், ஜெர்மனியின் விட்டன்பெர்க் ஆலயத்தின் கதவின்மீது தன் 95 தீர்மானங்களை ஆணி அடித்த அதே மனிதன்.

இவ்வாறு, இயேசு கிறிஸ்துவின் சாட்சியும் நற்செய்தியின் தீபமும் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டது.

ஜான் வைக்லிப்பும் ஜான் ஹஸும் நற்செய்தியின் சத்தியத்தால் தனிப்பட்ட முறையில் உந்தப்பட்டவர்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையை மையமாகக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள். நற்செய்தியின் சத்தியத்தை  அனைவரும் அறியவேண்டும் என்பதற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள்.

ஆனால் அவர்கள் உலகமெங்கும் ஏற்படுத்திய அளவற்ற தாக்கத்தை அவர்கள் பார்க்கவில்லை.

ஆகவே, நற்செய்திக்காகவும் தேவனுடைய வார்த்தைக்காகவும் தங்கள் காலத்தின் அரசியல் அதிகாரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் எதிராக நின்ற இந்த உண்மையுள்ள பரிசுத்தவான்களை நாம் நினைவுகூர வேண்டும். தங்கள் தலைமுறையினர் சத்தியத்தை கேட்கவும், தேவனுடைய வார்த்தையை அறியவும், இரட்சிப்பின் உண்மையான வழியை அறியவும் அவர்கள் அனைத்தையும் பணயம் வைத்தார்கள்.

அதே நற்செய்தியின் தீபம்—இயேசுவின் சாட்சியின் தீபம்—நம்மிடமும் வந்தடைந்துள்ளது.


இப்போது—ஓர் இறுதி எச்சரிக்கை. நாம் எங்கே நிற்கிறோம்?

வைக்லிப்பும் ஹஸும் எதற்காக எழுந்தார்கள்?

ஒரு மனிதனை எதிர்க்கவா?
ஓர் அமைப்பை எதிர்க்கவா?

இல்லை.

அவர்கள் எதிர்த்தார்கள்; எதை?
சத்தியத்தை மறைக்கும் மத அமைப்பை;
வேதாகமத்தை மௌனமாக்கும் அதிகாரத்தை;
கிறிஸ்துவை இடமாற்றம் செய்யும் மதத்தை.

அவர்கள் அறிவித்தார்கள்:
கிறிஸ்துவே மையம்;
வேதாகமமே அதிகாரம்;
சபை ஓர் அமைப்பு அல்ல—ஓர் உயிரி.

அவர்கள் இதற்காக வாழ்ந்தார்கள்.
இதற்காகவே மரித்தார்கள்.

ஆனால் இன்று—

நாம் என்ன கட்டியிருக்கிறோம்?

ஒரு போப்பானவரை அகற்றினோம்—
ஆனால் எண்ணற்ற “குட்டி போப்பானவர்களை” உருவாக்கிவிட்டோமா?

பிரிவுகளிலும், சபைகளிலும், ஸ்தாபனங்களிலும்—சுயாதீனக் குழுக்களிலும்—
மீண்டும் மனிதனே மையமாகிவிட்டானா?

போதகரின் வார்த்தை—வேதாகமத்தைவிட அதிக முக்கியம் பெற்றுவிட்டதா?

கிறிஸ்து ஓரமாக்கப்பட்டு—சபை மீண்டும் மையமாகிவிட்டதா?

பாரம்பரியங்கள்—வேதாகமத்தோடு போட்டியிடுகிறதா?

அன்று குருக்கள் மக்களிடமிருந்து பணம் பறித்தார்கள்;
இன்று விசுவாசிகளின் வளங்களை கொள்ளையாடப்படுகின்றனவே!

வளர்ச்சி, எண்ணிக்கை, புகழ்—
இவையே “ஆவிக்குரிய வெற்றி” என்று அழைக்கப்படுகிறதா?

கடுமையான கேள்வி

அப்படியானால்—

வைக்லிப்பும் ஹஸும்
எதற்காக எரிந்தார்கள்?

நாம் மீண்டும்
அதே பாதையில் நடக்கிறோமா?

அன்று அதிகாரம் அவர்களுடைய உடலை எரித்தது;
நாம் சத்தியத்தை எரிக்கிறோமோ?

அவர்கள் வார்த்தையை சங்கிலியால் கட்டினார்கள்;
நாம் அதை மேடைகளில் கட்டிவைத்துவிட்டோமா?

சத்தியம் கட்டுப்படுத்தப்படும் இடத்தில்—
அது உயிரிழக்கும்.

கிறிஸ்து மையத்தில் இல்லாத இடம்—
சபை அல்ல.

அழைப்பு

திரும்புவோம்.

கட்டிடத்துக்கு அல்ல—
கிறிஸ்துவுக்கு.

மனிதர்களிடம் அல்ல—
வேதாகமத்துக்கு.

பாரம்பரியங்களுக்கு அல்ல—
சத்தியத்திற்கு.

மனிதர்களிடம் அல்ல—
தேவனிடம்.

இது விமர்சனம் அல்ல.
இது ஓர் அழைப்பு.

முடிவு

வைக்லிப்பும் ஹஸும்
ஒரு வரலாறு அல்ல—
ஒரு சாட்சி.

அவர்கள் தீயில் எரிந்தார்கள்.

அந்தத் தீ—
இப்போது நம்மிடம் இருக்கிறது.

இப்போது—
அது நம் கைகளில்.

நாம் என்ன செய்யப்போகிறோம்?

அதை காக்கப்போகிறோமா?
அதைப் பகிரப்போகிறோமா?
அல்லது—அதை அணைக்கப்போகிறோமா?

இறுதி வசனம்

“நீங்கள் உலகத்தின் வெளிச்சம்.
மலையின் மேல் இருக்கும் பட்டணம் மறைக்கப்படமாட்டாது.
மனுஷர் உங்கள் வெளிச்சத்தைப் பார்த்து
பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி,
உங்கள் வெளிச்சம் அவர்களுக்குமுன் பிரகாசிக்கட்டும்.”