லேவியராகமம் - அறிமுகம் – 00
வேதபாடம் - 01
ஜெபம்:
எங்கள் தகப்பனும் தேவனுமானவரே, நாங்கள் உம்மைத் துதிக்கின்றோம். உம்முடைய பிள்ளைகள் என்று நாங்கள் அழைக்கப்படுவதினால், நீர் எங்களுக்குப் பாராட்டின அன்பு மிகப் பெரியது! இந்த நாளிலே நீர் எங்களுக்குத் தந்திருக்கும் உம்முடைய விலையேறப்பெற்ற வேதாகமத்தை நாங்கள் இன்னும் ஆழமாக அறியவும், காணவும், படிக்கவும் விரும்புகிறோம். இதன்மூலம் நாங்கள் உம்மை அறிய விரும்புகிறோம். பரிசுத்த ஆவியானவரே, எங்களுக்கு நீர் உதவிசெய்வீராக. உம்முடைய உதவியின்றி எங்களால் இதைச் செய்ய இயலாது. உம்மை நோக்கிப் பார்க்கிறோம். உம்மையே சார்ந்திருக்கிறோம். இதைப் படிப்பதின் விளைவாக உம்மேல் உள்ள அன்பு எங்களுக்குள் அதிகரிக்குமாறும், உமக்காக இன்னும் இந்தப் பூமியிலே கனி நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு எங்களுக்கு உதவிசெய்யுமாறும் நாங்கள் ஜெபிக்கின்றோம். கலந்துகொள்கிற எல்லாப் பரிசுத்தவான்களையும் உம்முடைய அன்பின் கரங்களுக்குள்ளே ஒப்புக்கொடுக்கிறோம். இந்த நேரத்தையும், நாங்கள் செய்கின்ற இந்த வேலையையும் நீர் ஆசிர்வதிக்கும்படி ஜெபிக்கின்றோம். இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமென்!
உங்கள் எல்லோரையும் லேவியராகமத்திற்கு அன்போடு வரவேற்கின்றேன். எல்லோருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய பெயரில் என் அன்பையும், வாழ்த்தையும் தெரிவிக்கின்றேன்.
லேவியராகமம் புத்தகம்
லேவியராகமம். இந்தப் புத்தகம்தான் யூதக் குழந்தைகள் முதன்முதலாகப் படிக்கும் புத்தகம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன், வாசித்திருக்கிறேன். ஆனால், இந்தப் புத்தகம்தான் கிறிஸ்தவர்கள் கடைசியாகப் படிக்கும் புத்தகமாக இருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். படித்துப் புரிந்துகொள்வது கடினம் என்பதாலா அல்லது இந்தப் புத்தகம் பொருளற்றது, இந்தக் காலத்துக்குப் பொருத்தமற்றது என்பதாலா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், வேதாகமத்தின் 66 புத்தகங்களில், நான் அதிக நேரம் செலவழித்துப் படித்து மகிழ்ந்த புத்தகம் லேவியராகமம்.
முதலாவது லேவியராககமம் என்ற பெயரைக்குறித்த சில விவரங்களைப் பார்ப்போம். இந்தப் புத்தகம் முதலாவது எபிரேய மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் பின்னர் கிரேக்க மொழியிலும், இலத்தீன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்புக்கு Septuagint (செப்துவாஜிந்த்) என்று பெயர். எகிப்தின் மன்னன் இரண்டாம் தாலமி ஃபிலடெல்பஸ் (Ptolemy II Philadelphus) அலெக்சாந்திரியாவில் இருந்த நூலகத்தில் வேதாகமத்தின் ஒரு பிரதியை வைக்க விரும்பினார். எனவே, அவர் எருசலேமிருந்த பிரதான ஆசாரியனாகிய எலெயசாரை அணுகி தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அவர் ஒவ்வொரு கோத்திரத்திலும் ஆறுபேர் வீதம் இஸ்ரயேலர்களின் பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்து 72 யூதஅறிஞர்களைத் தெரிந்தெடுத்து அலெக்சாந்திரியாவுக்கு அனுப்பினார். ஒவ்வொரு அறிஞருக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டது. ஒருவர் மற்றவரோடு கலந்துபேசக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டது. அந்த அறிஞர்கள் எழுபத்திரண்டுபேரும் எபிரேய மொழியில் இருந்த பழைய ஏற்பாட்டை அன்று வழக்கிலிருந்த கொய்னோ என்றழைக்கப்படும் நடைமுறை கிரேக்கமொழியில் எழுபத்திரண்டு நாள்களில் மொழிபெயர்த்து முடித்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி மொழிபெயர்த்தார்கள். அதைப்பார்த்த மன்னன் வியந்தான். ஃபிளேவியஸ் ஜோசிபஸ் தன் புத்தகத்தில் இதை விவரிக்கிறார். எழுபத்திரண்டு என்னும் எண்ணை எழுபது என்னும் முழு எண்ணாக மாற்றி இலத்தீன் மொழியில் செப்துவாஜிந்த் Septuagint என்று பெயரிட்டார்கள்.
அது இலத்தீன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு Vulgate (வல்கேட்) என்று அழைக்கப்பட்டது. இதை Wulgata என்றும் சொல்வார்கள். உச்சரிப்பு மாறலாம். Septuagint, Vulgate. கிரேக்க மொழிபெயர்ப்பு Septuagint, இலத்தீன் மொழிபெயர்ப்பு Vulgate - இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளிலிருந்துதான் இந்தப் புத்தகத்திற்கு லேவியராகமம் என்ற பெயர் வந்தது.
எபிரேய மொழியில் எழுதப்பட்டடிருந்த இந்தப் புத்தகத்திற்கு Torat Kohanim (தோரட் கோஹானிம்) என்ற பெயர் இருந்தது. இதற்கு ஆசாரியர்களின் அறிவுரை அல்லது ஆசாரியர்களுக்கு அறிவுரை அல்லது ஆசாரியர்களுக்கு போதனை (Priestly instruction) என்று பொருள்..
இன்றைக்கு யூதர்கள் லேவியராகமத்திற்குக் கொடுத்திருக்கிற பெயர் Vayikra (வயிக்ரா). “கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு அவனை நோக்கி,” என்பதுதான் லேவியராகமத்தின் முதல் வசனம். கர்த்தர் மோசேயைக் கூப்பிட்டார். Vayikra என்றால் அவனைக் கூப்பிட்டார் அல்லது அவனை அழைத்தார் என்று பொருள். கர்த்தர் அவனை அழைத்தார் என்பதை ஆதாரமாக வைத்து இந்தப் புத்தகத்துக்குப் பெயரிட்டார்கள்.
லேவியராகமம் என்ற பெயர் கிரேக்க மொழிபெயர்ப்பிலிருந்தும் இலத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்தும் எடுக்கப்பட்டது. எபிரேய மொழியில் முன்பு அதன் பெயர் Torat Kohanim. இப்பொழுது அதன் பெயர் Vayikra. சரி, இது லேவியராகமமம் என்ற பெயரைக்குறித்த விவரங்கள்.
லேவியராகமத்தினுடைய இடஅமைப்பு
லேவியராகமத்தின் இடஅமைப்பை நாம் அறிய வேண்டும். லேவியர்களைக்குறித்து நம்மெல்லோருக்கும் கொஞ்சமாவது தெரியும். லேவியர்களைப் புரிந்துகொண்டால் லேவியராகமத்தையும் நாம் புரிந்துகொள்ளலாம். லேவியர்களுக்கும் லேவியராகமத்துக்கும் மிக நெருக்கம் உண்டு. லேவியராகமம் லேவியர்களைக்குறித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இஸ்ரயேலில் மொத்தம் பன்னிரண்டு கோத்திரங்கள் உள்ளன. அதில் ஒன்று லேவி கோத்திரம். லேவி கோத்திரம்தான் ஆசாரியக் கோத்திரம். லேவி கோத்திரம் தேவனுக்கு ஆசாரிய சேவை செய்ய பிரித்தெடுக்கப்பட்டது. லேவியராகமம் என்ற தலைப்பிலிருந்தே இந்தப் புத்தகம் லேவியர்களோடு நெருங்கிய தொடர்புடையது என்று நாம் தெரிந்துகொள்ளலாம். ஆம், இது லேவியர்களோடு, ஆசாரியர்களோடு, சம்பந்தப்பட்டது.
வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவைகள் தோரா Torah என்று அழைக்கப்படுகின்றன. தமிழில் இவை ஐந்நூல் என்றழைக்கப்படுகிறது. தோரா என்றால் படிப்பினை அல்லது அறிவுறுத்தல் என்று பொருள்.
ஆதியாகமத்தில் பார்க்கிற மனிதன் அழிந்துபோனவன், விழுந்துபோனவன், சீரழிந்துபோனவன், சின்னாபின்னமானவன். ஆதியாகமத்தில் பார்க்கிற அழிந்துபோன மனிதன், யாத்திராகமத்திற்கு வரும்போது, அங்கு மீட்கப்படுகிறான். பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் இஸ்ரயேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்படுகிறார்கள். விழுந்துபோன மனிதன், யாத்திராகமத்தில் மீட்கப்படுகிறான். லேவியராகமத்திற்கு வரும்போது, விழுந்துபோய் அதன்பின் மீட்கப்பட்ட மனிதன், இப்போது தேவனை ஆராதிக்கத் தொடங்குகிறான், தேவனைச் சேவிக்கத் தொடங்குகிறான், தன்னை மீட்ட தேவனை நெருங்க ஆரம்பிக்கிறான், தேவனோடு ஏற்பட்ட உறவைப் பராமரிக்க விரும்புகிறான். இதுதான் லேவியராகமத்தினுடைய இடஅமைப்பு.
யாத்திராகமத்திற்கும் லேவியராகமத்திற்கும் இடையேயுள்ள நுட்பமான, முக்கியமான, சில வேறுபாடுகளை நான் காண்பிக்கின்றேன். கவனியுங்கள்.
1. ஒன்று, யாத்திராகமத்தில், மனிதன் தேவனுடைய மன்னிப்பைப் பெறுகிறான், மீட்கப்படுகிறான். மன்னிப்பைப் பெற்ற அல்லது மீட்கப்பட்ட மனிதன் லேவியராகமத்தில் தேவனோடு அதிகமாக நெருங்கிப்போகிறான். லேவியராகமத்தில் தேவன் தம் மக்களுக்கு மன்னிப்பை மட்டும் வழங்கவில்லை: மன்னிக்கப்பட்ட மக்களுக்கு, தேவன் தூய்மையை, பரிசுத்தத்தை, வழங்குகிறார்.
2. இரண்டாவது, யாத்திராகமத்தில் தேவனே மனிதனைத் தேடுகிறார், அணுகுகிறார்; மனிதன் தேவனைத் தேடவில்லை, அணுகவில்லை. தேவன் மனிதனைத் தேடி வருகிறார். ஆனால், லேவியராகமத்தில் பலிகளின்மூலம் மனிதன் தேவனை அணுகிவருகிறான், தேவனிடத்தில் வருகிறான், தேவனை நெருங்குகிறான்.
3. மூன்றாவது, யாத்திராகமத்தில் மனிதன் பாவமன்னிப்பைப் பெறுவதினாலே, மீட்கப்படுவதினாலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக, மீட்பராக, அனுபவிக்க ஆரம்பிக்கிறான். மீட்கப்பட்ட, இரட்சிக்கப்பட்ட இந்த மனிதன் லேவியராகமத்திற்கு வரும்போது கிறிஸ்துவைப் பரிசுத்தராக அனுபவிக்க ஆரம்பிக்கிறான். கிறிஸ்துவை ஆண்டவராகவும், இரட்சகராகவும் அனுபவித்த மக்கள் இப்போது பரிசுத்தராகவும் அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள்.
4. நான்காவது, யாத்திராகமத்தில் மனிதனுடைய குற்றம் அல்லது பாவம்தான் பிரதானமாக முன்னிறுத்தப்படுகிறது: ஆனால், லேவியராகமத்தில், அவனுடைய அசுத்தம் முன்னிறுத்தப்படுகிறது. குற்றம் என்பது வேறு, அசுத்தம் என்பது வேறு. பின்வரும் அதிகாரங்களில் சுத்தம், அசுத்தம் ஆகியவைகளைக்குறித்து நாம் அதிகமாகப் பார்ப்போம்..
5. ஐந்தாவது, யாத்திராகமத்தில் தேவன் சீனாய் மலையிலிருந்து பேசுகிறார். ஆனால், லேவியராகமத்திற்கு வரும்போது, தேவன் சீனாய் மலையிலிருந்து பேசவில்லை, மாறாகக் கூடாரத்திலிருந்து பேச ஆரம்பிக்கிறார்.
இந்தப் பின்புலத்தை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். லேவியராகமத்தைப் படிக்கும்போது, வரக்கூடிய காலங்களில் இந்தப் பின்புலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
6. ஆறாவது, தூரமாயிருந்த மனிதன் தேவனுக்கு அருகில் கொண்டுவரப்படுகிறான். நாம் மீட்கப்படுவதற்குமுன் தேவனைவிட்டுத் தூரமாயிருந்தோம், காணியாட்சிக்குப் புறம்பாயிருந்தோம்.: இரட்சிக்கப்படும்போது தேவனுக்கு அருகில் வந்துவிட்டோம். லேவியராகமத்திற்கு வரும்போது இவ்வாறு தமக்கு அருகில் வந்த மனிதனை அவர் தம் அருகிலேயே வைத்துக்கொள்ள விரும்புகிறார். "நீ என்னை விட்டுப் போய்விடாதே," என்று சொல்வதுபோல் இரட்சிக்கப்பட்ட மனிதனை, பாவமன்னிப்பைப் பெற்ற மனிதனை, தம் பக்கத்திலே வைத்துக்கொள்கிறார். இரட்சிக்கப்பட்ட ஒருவனைத் தேவனுக்கு நெருக்கமாக எப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை லேவியராகமம் விளக்குகிறது.
இந்த இடஅமைப்புக்குப்பின்னால் இருக்கும் இன்னொன்றையும் நான் சொல்ல விரும்புகின்றேன். இந்த ஐந்து புத்தகங்களில் முதல் புத்தகம் ஆதியாகமம். ஆதியாகமத்தில் ஆரம்பம், தொடக்கம், இருக்கிறது. இந்த ஐந்து புத்தகங்களின் ஐந்தாவது கடைசிப் புத்தகமாகிய உபாகமத்தில் பெரும்பாலும் நிறைய பிரசங்கங்கள் இருக்கின்றன. அதுவரை நடந்த எல்லாக் காரியங்களையும் மோசே தொகுத்து, வகுத்து, பகுத்து இஸ்ரயேல் மக்களுக்குக் கூறுகிறார். ஆதியாகமமும் உபாகமமும் ஒரு Bookend. ஒரு நூல்நிலையத்தில் ஆரம்பத்திலும் முடிவிலும் ஒரு Bookend இருக்கும். இரண்டு புத்தகங்களுக்கு இடையில் வேறு பல புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும். இடையிலே இருக்கிற புத்தகங்கள் விழுந்துபோகக்கூடாது என்பதற்காக இரண்டு அற்றங்களில் Bookend வைத்திருப்பார்கள். இவ்வாறு ஒரு முனையில் ஆதியாகமம் இருக்கிறது, மறு முனையில் உபாகமம் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையிலே யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் ஆகிய மூன்று புத்தகங்கள் இருக்கன்றன. இரண்டு அற்றங்களில் இருக்கும் புத்தகங்கள் இடையிலுள்ள புத்தகங்களைத் தாங்யியிருக்கின்றன. இதன்படி பார்த்தால், லேவியராகமம்தான் இந்த ஐந்து புத்தகங்களின் மையம் என்று சொன்னால்கூட அது மிகையாகாது. இடையிலுள்ள மூன்று புத்தகங்களின் மையப் புத்தகமும் லேவியராகமம்தான்.
லேவியராகமத்தினுடைய மையம்
ஐந்து புத்தகங்களின் மையம் லேவியராகமம். மூன்று புத்தகங்களின் மையம் லேவியராகமம். சரி. லேவியராகமத்தின் மையம் என்ன?
லேவியராகமத்தினுடைய மையம் பரிசுத்தம். லேவியராகமத்தில் பரிசுத்தர், பரிசுத்தம், பிரசன்னம், பாவம், பலிகள், பாவமன்னிப்பு, பாவப்பரிகாரம், பாவநிவாரணம்போன்ற வார்த்தைகளைத்தான் நாம் அடிக்கடி வாசிப்போம். எனவே, லேவியராகமத்தினுடைய மையக்கரு அல்லது மையப்புள்ளி அல்லது சாராம்சம் பரிசுத்தம் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். இந்த ஒரு வார்த்தையை நாம் நினைவில் வைத்துக்கொண்டாலே போதும். லேவியராகமத்தைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதாகிவிடும்.
தேவன் எங்கிருந்து பேசுகிறார் என்று நான் ஏற்கெனவே சொன்னேன்,
லேவியராகமத்தின் மையக்கரு, மையப்பொருள், சாராம்சம், பரிசுத்தம் என்பதற்கு நான் ஒரேவோர் எடுத்துக்காட்டு மட்டும் தருகிறேன். "என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக்கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ? ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?" என்று மீகா 6:6, 7இல் வாசிக்கிறோம். இதுபோன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் லேவியராகமத்தில் கிடைக்கும். "உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர்: ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்." "கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக."
மீண்டும் வலியுறுத்துகின்றேன், லேவியராகமத்தினுடைய மையப்பொருள், மையக்கரு, சாராம்சம், பரிசுத்தம்.
தேவன் பரிசுத்தர்; பரிசுத்தமான தேவன் பாளயத்தில் இருக்கிறார்; பாளையத்தில் அவருடைய பிரசன்னம் இருக்கிறது; மனிதன் பாவி; பரிசுத்தமான தேவனை பாவியாக மனிதன் அணுகவேண்டும்; பாவத்துக்குப் பரிகாரம் வேண்டும்; அணுகிய மனிதன் அவருடைய அருகில் இருக்கவேண்டும். இதற்கு என்ன வழி என்பதைச் சொல்லவேண்டும்.
லேவியராகமத்திலிருந்து சில ஆவிக்குரிய கோட்பாடுகளை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒன்றிரண்டு முக்கியமான கோட்பாடுகளை மட்டும் இன்றைக்குச் சொல்லுகிறேன். அடுத்த வாரம், முதல் அதிகாரத்திலிருந்து பார்க்க ஆரம்பிக்கலாம்.
தேவன் ஏன் லேவி கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்?
லேவியன் யார்? லேவியன் பிரிதடுக்கப்பட்டவன். மொத்தம் பன்னிரெண்டு கோத்திரங்கள். பன்னிரெண்டு கோத்திரங்களில் தேவன் லேவி கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார். தேவன் ஏன் லேவி கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்? இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு கானானைநோக்கிப் பயணிக்கிறார்கள். ஆட்டுக்குட்டியைக் கொன்று, அதின் இரத்தத்தை அவர்களுடைய வீடுகளின் நிலைக்கால்களிலும் மேல் நிலைச்சட்டத்திலும் பூசி, இறைச்சியைப் புசித்து, இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் புறப்பட்டுவருகிறார்கள். எகிப்தியரின் எல்லாத் தலைச்சன்பிள்ளைகளும் அன்றிரவு செத்தார்கள். எகிப்தியரின் மனிதர்கள், மிருகங்கள், எல்லா தலைச்சன் பிள்ளைகளும் சாகிறார்கள். இஸ்ரயேலரில் யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை, யாரும் சாகவில்லை. எகிப்தியரின் தலைப்பிள்ளைகள் மரித்தார்கள்; மிருகங்களின் தலையீற்றுகள் மாண்டன.
தேவன் ஏன் லேவி கோத்திரத்தைத் தெரிந்தெடுத்தார் என்பதற்கான காரணத்தை அறிய நாம் இப்பொது எண்ணாகமத்துக்கு வருவோம். எண்ணாகமம் எட்டாம் அதிகாரம் பதினாறாம் வசனம், “இஸ்ரவேல் புத்திரரிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற சகல முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன்.”
இதன் கோட்பாடு என்னவென்றால், எகிப்தியரின் தலைப்பிள்ளைகளுக்குப்பதிலாக இஸ்ரயேல் மக்கள் எல்லோருடைய தலைப்பிள்ளைகளும் தமக்குச் சொந்தம் என்று தேவன் சொல்லுகிறார். பன்னிரெண்டு கோத்திரங்களிலும் இருக்கக்கூடிய முதற்பேறனைத்தும் தேவனுக்குச் சொந்தம் என்பது முதல் கோட்பாடு. ஆனால், பன்னிரண்டு கோத்திரங்களிலும் இருக்கிற தலைப்பிள்ளைகளைத் தனக்கென்று பிரித்தெடுப்பதற்குப்பதிலாக தேவன் ஒரு மாற்று ஏற்பாடு செய்கிறார். அது என்ன மாற்று ஏற்பாடென்றால், "பன்னிரெண்டு கோத்திரங்களிலும் பிறக்கக்கூடிய எல்லா முதற்பேறுகளும் எனக்குச் சொந்தம். அவர்கள் எனக்குச் சேவை செய்யவேண்டும்; எனக்குப் பணிவிடை செய்யவேண்டும்; என்னை ஆராதிக்கவேண்டும்," என்பது தேவனுடைய கோரிக்கை. அப்படி கணக்குப் போட்டுப் பார்த்தால் பன்னிரெண்டு கோத்திரங்களிலும் இருக்கிற தலைப்பிள்ளைகளின் எண்ணிக்கைக்குச் சமமாக, இணையாக, லேவி கோத்திரத்தைத் தெரிந்துகொள்கிறார். அதாவது பன்னிரெண்டு கோத்திரங்களில், லேவி கோத்திரத்தை விட்டுவிடுவோம். மீதியிருக்கும் பதினோரு கோத்திரங்களில் இருக்கும் தலைப்பிள்ளைகளை எண்ணி கணக்கெடுக்கிறார்கள். பிறந்து முப்பது நாட்களாகிவிட்டால் அந்தக் குழந்தை கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். பதினோரு கோத்திரங்களில் மொத்தம் எத்தனை முதற்பேறானவர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, பதினோரு கோத்திரங்களில் மொத்தம் இருபதாயிரம் தலைச்சன் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்பின் லேவி கோத்திரத்தில் இருக்கக்கூடிய ஒரு மாத குழந்தைகள்உட்பட எல்லா ஆண்பிள்ளைகளையும் கணக்கிடுகிறார்கள். லேவிகோத்திரத்தில் தலைச்சன் பிள்ளைகளைக் கணக்கெடுக்கவில்லை. ஒரு மாதக் குழந்தைஉட்பட எல்லா ஆண்மக்களையும் கணக்கெடுக்க வேண்டும். ஆனால், பதினோரு கோத்திரத்தில் இருக்கக்கூடிய முதற்பேறுகளை மட்டும் எண்ணுகிறார்கள். . மொத்தம் இருபதாயிரம் என்று வைத்துக்கொள்வோம். லேவி கோத்திரத்தில் உள்ள எல்லா ஆண்மக்களையும் எண்ணுகிறார்கள். பதினோரு கோத்திரத்தில் இருக்கும் தலைச்சன்பிள்ளைகளுக்குச் சமமாக அவர் லேவி கோத்திரத்தைத் தெரிந்துகொள்கிறார். இருபதாயிரம் தலைப்பிள்ளைகளுக்குச் சமமாக, மாற்றாக, பதிலாக தேவன் லேவி கோத்திரம் முழுவதையும் எடுத்துக்கொள்கிறார்.
லேவிகோத்திரத்தில் இருபதாயிரம் ஆண்மக்கள் இல்லையென்றால், குறைவாக இருந்தால், எத்தனைபேர் குறைவுபடுகிறார்களோ, அத்தனைபேர்களுக்குரிய பணத்தைக் கொடுத்து அவர்களை மீட்டுக்கொள்ளலாம்.
முதற்பலன்
இவ்வாறு, பதினோரு கோத்திரங்களுடைய முதற்பலன்களுக்குப் பதிலாக, ஈடாக, மாற்றாக, தேவன் லேவி கோத்திரம் முழுவதையும் தெரிந்துகொள்கிறார். அவர்களுக்குப்பதிலாக தெரிந்துகொள்கிறார். இதுதான் காரியம்.
முதற்பேறு என்றால் தலைச்சன்பிள்ளை என்று நாம் நினைக்கிறோம். அது ஓரளவுக்கு உண்மைதான். ஒரு கேள்வி கேட்கிறேன். முதற்பேறு என்றால் முதலாவது பிறந்த குழந்தையா அல்லது இரண்டாவது பிறந்த குழந்தையா அல்லது ஏதாவது ஒரு குழந்தையா? என்ன நினைக்கிறீர்கள்? முதற்பேறு என்றால் முதலாவது பிறந்த குழந்தை அல்ல: முதற்பேறு என்பது வரிசைப்பிரகாரமானது அல்ல.
ஆபிராகாமின் பிள்ளைகள் ஈசாக்கு, இஸ்மயேல் ஆகிய இருவரில் இஸ்மயேல்தான் முதலாவது பிறந்தவன். அப்படியானால் அவன்தானே முதற்பேறு. எப்படி ஈசாக்கு முதற்பேறானவனாய் மாறினான்? ஈசாக்கின் பிள்ளைகள் யாக்கோபு ஏசா ஆகிய இருவரில் ஏசாதான் முதலாவது பிறந்தவன். எப்படி யாக்கோபு முதற்பேறாக மாறினான்? யாக்கோபினுடைய பன்னிரெண்டு பிள்ளைகளில் ரூபன்தான் முதலில் பிறந்தவன். எப்படி யூதா முதற்பேறாய் மாறினான்?
முதற்பேறு என்பது வரிசைக்கிரமமானதல்ல. “It’s an office; it’s not an order.”
முதற்பேறு வரிசையைச் சார்ந்ததல்ல. இது வரிசைக்கிரமமாகக் கொடுக்கபடவில்லை. முதற்பேறு என்று சொல்லக் கூடிய இந்த (office) அலுவலை, பொறுப்பை, சிலாக்கியத்தை, கடமையை, தகப்பன் தன் எந்தப் பிள்ளைக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதை முடிவுசெய்வது தகப்பன். இது தகப்பனைப் பொறுத்தது. ஏன் இவனுக்குக் கொடுத்தான், எதற்குக் கொடுத்தான், ஏன் அவனுக்குக் கொடுக்கவில்லை என்பது தகப்பனைப் பொறுத்தது. நாம் நினைப்பதுபோல முதலாவது பிறந்தவன்தான் முதற்பேறு என்பதல்ல, அப்படியல்ல. நான் சொன்னதுபோல It’s not an order; It’s an office. இது ஓர் அலுவல், பொறுப்பு, சிலாக்கியம். முதற்பேறு என்பது ஒருவனுக்குக் கொடுக்கப்பட்ட ஓர் அலுவல், பொறுப்பு, கடமை, சிலாக்கியம். இது தகப்பனுடைய உரிமை, தகப்பனுடைய சிலாக்கியம். இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒன்று, தேவன் லேவியர்களைப் பிரித்தெடுக்கிறார்; இது ஒரு முக்கியமான கோட்பாடு. பிரித்தெடுக்கும் இந்தக் கோட்பாடு ஆதியாகமத்தில் இருக்கிறது. பிரித்தெடுத்தல் அங்கேயே ஆரம்பித்துவிடுகிறது. அன்று முதல் இந்தக் கோட்பாடு தொடர்ந்து போகும். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இது மிகவும் முக்கியமான ஒரு கோட்பாடு. தேவன் ஆதியாகமத்திலே இரவையும் பகலையும் பிரித்தார்; இருளையும் வெளிச்சத்தையும் பிரிக்கிறார். மேலே இருக்கக்கூடிய தண்ணீரையும் கீழே இருக்கும் தண்ணீரையும் பிரிக்கிறார். கீழே இருக்கும் தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்தபின், நிலத்தையும் தண்ணீரையும் பிரிக்கிறார். இன்றைக்கு தேவன் விசுவாசியையும் அவிசுவாசியையும் சேர்க்கிறாரா அல்லது பிரிக்கிறாரா? பிரிக்கிறார். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிக்கிறார். இந்தப் பிரித்தல் தொடர்ந்து போய்க்கொண்டேயிருக்கும்.
2 கொரிந்தியர் 6இல், "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்," என்று வாசிக்கிறோம்.
"பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்," இது மத்தேயு 10:34, 35.
இதற்கு ஒத்த இன்னொரு கடினமான பகுதியைப் பார்ப்போம். லூக்கா 12:51, 52, 53. “நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.” இதை வாசிக்கும்போது மிகவும் இன்பமாக இருக்கிறதா? எப்படி இருக்கிறது?
இது தேவனுடைய கோட்பாடு. God divides, elects & separates. முழு உலகம் இருக்கிறது. முழு உலகத்திலிருந்து தேவன் இஸ்ரயேல் மக்களைப் பிரிக்கிறார், தெரிந்தெடுக்கிறார். அவர்களைப் பிரித்தெடுத்தபிறகு, தேர்ந்தெடுத்தபிறகு அவர்களை வேறுபிரிக்கிறார், வேறுபடுத்துகிறார், தனிமைப்படுத்துகிறார். பன்னிரெண்டு கோத்திரங்கள். பன்னிரெண்டு கோத்திரங்களில் பதினோரு கோத்திரங்கள் ஒரு பக்கம், லேவி கோத்திரம் இன்னொரு பக்கம். ஆம், அவர் லேவிகோத்திரத்தைப் பிரிக்கிறார், வேறுபிரிகிறார். பிரித்தெடுத்த, வேறுபிரித்த, தெரிந்தெடுத்த லேவியரை அவர் தனிமைப்படுத்துகிறார், தனக்கென்று ஒதுக்கிவைக்கிறார். இந்தப் பிரிதல் வேதம் முழுவதும் இழையோடுகிற மிகமிக முக்கியமான கோட்பாடு.
பொதுவாக திருமணங்களில் "தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக," என்று சொல்வார்கள். அதுபோல, "தேவன் பிரித்ததை மனிதன் இணைக்காதிருக்கக்கடவன்." இருளையும் வெளிச்சத்தையும் தேவன் பிரித்தார் என்றால் பிரித்ததுதான். அவ்வளவுதான். பகலையும் இரவையும் பிரித்தாரென்றால் பிரித்ததுதான், நிலத்தையும் நீரையும் பிரித்தாரென்றால் பிரித்தார். விசுவாசியையும் அவிசுவாசியையும் பிரித்தாரென்றால் பிரித்ததுதான், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தாரென்றால் பிரித்ததுதான், நீதியையும் அநீதியையும் பிரித்தாரென்றால் பிரித்ததுதான், அவ்வளவுதான். பிரிப்பதற்குக் காரணம் என்ன, கிறிஸ்து அவ்வளவுதான். கிறிஸ்துவினிமித்தம் இந்தப் பிரிவினை தவிர்க்கமுடியாதது. இதெல்லாம் உண்மையாகுமா, இப்படியெல்லாம் இருக்குமா என்று நினைத்ததுண்டு, காலங்கள் கடந்துபோகும்போதுதான், "ஆமாம்! இதெல்லாம் உண்மைதான்," என்று தெரிகிறது. இது ஒரு பெரிய கோட்பாடு.
தேவன் முதலாவது பிரிக்கிறார், பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்து லேவி கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார். அதைத்தான் எண்ணாகமத்தில் வாசித்தோம், பிரிக்கிறார், அப்புறம் ஒன்றைத் தெரிந்தெடுக்கிறார், தெரிந்தெடுத்து தனிமைப்படுத்துகிறார். நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் பார்ப்போமே. நம் எல்லோருக்குமே பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் எவ்வளவோபேர் உண்டு. ஆனால், ஒரு காலகட்டம் வரும்போது தேவன் பிரிக்கிறார். தேவன் நம்மைத் தெரிந்தெடுக்கிறார். தெரிந்தெடுத்துபின்பு அவர் வேறுபடுத்துகிறார். இந்தக் கோட்பாடு வேதம் முழுவதும் வெளிப்படுத்தின விசேஷம் வரை ஓடும். லேவியராகமத்திலே அது மிகவும் prominent ஆ இருக்கும். தயவுசெய்து இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது ஒன்று.
இதன் அடுத்த பகுதியையும் நாம் பார்க்க வேண்டும். இந்த அம்சத்தை வலியுறுத்த காரணம் என்னவென்றால், லேவியராகமத்தில் சுத்தம் அசுத்தம், பரிசுத்தம் பொதுவானது, என்று பார்ப்போம். சுத்தத்துக்கு எதிர்பதம் அசுத்தம். பரிசுத்தத்துக்கு எதிர்பதம் பொதுவானது. இது உங்களுக்கு உடனே புரியாமல் போகலாம். வரக்கூடிய நாட்களில் இவைகளைப் பார்ப்போம். அப்போது புரிந்துகொள்வீர்கள். லேவியராகமத்தின் மையக்கருவே பரிசுத்தம்தான் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். எது தேவனுக்கு ஏற்புடையது, எது தேவனுக்கு ஏற்புடையதல்ல; தேவன் எதை ஒத்துக்கொள்வார், எதை ஒத்துக்கொள்ளமாட்டார். தேவன் எதை அங்கீகரிப்பார், எதை அங்கீகரிக்கமாட்டார். தேவன் எதில் பிரியமாயிருப்பார், எதில் பிரியமாயிருக்கமாட்டார்.
இரண்டு காரியங்கள் இருக்கும்போது, தேவன் முதலாவது இரண்டையும் பிரிக்கிறார். பின்பு அதில் ஒன்றைத் தெரிந்தெடுக்கிறார், அதன்பின் தாம் தெரிந்தெடுத்ததை வேறுபடுத்துகிறார். தேவன் பிரித்ததைச் சேர்க்கமுடியாது, அதைச் சேர்ப்பது வியர்த்தமாகத்தான் இருக்கும். தேவன் இருளையும் ஒளியையும் பிரித்தார் என்றால் பிரித்ததுதான். அதைச் சேர்க்கமுடியாது. தேவன் பகலையும் இரவையும் பிரித்தார் என்றால் பிரித்ததுதான். அதைச் சேர்க்கமுடியாது. தேவன் சத்தியத்தையும் அசத்தியதையும் பிரித்தார் என்றால் பிரித்ததுதான். அதைச் சேர்க்க முடியாது. இந்தக் கோட்பாட்டை நாம் ஒருநாளும் மறக்கவே கூடாது.
லேவி கோத்திரம் முழுவதையும் தேவன் தனக்கென்று ஏன் எடுத்துக்கொண்டார்
நாம் எண்ணாகமத்தில் பார்த்ததுபோல, தேவன் இஸ்ரயேல் புத்திரரிலிருந்து, சகல இஸ்ரயேலருக்கும் பதிலாக லேவியரை மொத்தமாகத் தெரிந்தெடுத்தார். பதினோரு கோத்திரங்களுடைய முதற்பலனும் தேவனுக்குச் சொந்தம். ஆனால், அவர்களுக்கு ஈடாக, பதிலாக, மாற்றாக லேவி கோத்திரம் முழுவதையும் தேவன் தனக்கென்று பிரித்தெடுத்தார். இதை எண்ணாகமத்தில் பார்த்தோம். வெறும் எண்ணிக்கைக்காகத்தான் தேவன் லேவி கோத்திரத்தைத் தெரிந்தெடுத்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா?அவர்களைத் தெரிந்தெடுத்து தேவன் என்ன செய்தார்? ஏன் எடுத்தார்? ஏன் தெரிந்தெடுத்தார்? ஏன் பிரித்தெடுத்தார்? ஏன் வேறுபடுத்தினார்? மறுபடியும் நாம் எண்ணாகமத்திற்குப் போவோம்.
எண்ணாகமம் 8:19. “லேவியர் இஸ்ரயேல் புத்ததிரருடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படிக்கும் இஸ்ரயேல் புத்திரருக்காக பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும் இஸ்ரயேல் புத்திரர் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரயேல் புத்திரரில் வாதை உண்டாகதபடிக்கும் லேவியரை அவர்களிலிருந்து எடுத்து ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்.”
தேவன் லேவி கோத்திரத்தை ஏன் பிரித்தெடுத்தார் என்பதற்கான காரணத்தை இரண்டு வார்த்தைகளில் சொல்லுகிறேன். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எடுத்தார், கொடுத்தார். தேவன் லேவியர்களை முதலாவது எடுத்தார்: எடுத்து பின்பு யாருக்குக் கொடுத்தார்? ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுத்தார். எப்படிக் கொடுத்தார்? தத்தமாகக் கொடுத்தார். தத்தமாகக் கொடுத்தார் என்றால் தானமாக, ஈவாக, பரிசாக, கொடையாக, கொடுத்தார். முதலாவது எடுத்தார், பின்பு கொடுத்தார். தேவன் எடுத்தார்; எடுத்ததை அவர் வைத்துக்கொள்ளவில்லை. தாம் எடுத்ததை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தானமாகக் கொடுத்தார். எதற்காகக் கொடுத்தார்? இஸ்ரயேல் மக்கள் எல்லாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்வதற்காகக் கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடே எடுத்தார்: ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடே கொடுத்தார். சும்மா எடுக்கவில்லை, சும்மா கொடுக்கவில்லை.
லேவியர்கள் இஸ்ரயேல் மக்களுக்காக ஆரோனுக்குக் கொடுக்கப்பட்ட கொடை, வரம், பரிசு, தானம், தத்தம், ஈவு. எதற்காக? இஸ்ரயேல் மக்களுடைய பாவநிவிர்த்திக்காக ஆரோனுக்கும் அவனுடைய குமாரருக்கும் கொடுக்கப்பட்ட கொடை, வரம், நன்கொடை, பரிசு, தானம்.
லேவிகோத்திரம் பிரித்தெடுக்கப்பட்ட கோத்திரம். லேவிகோத்திரத்திலிருந்துதான் ஆசாரியர்கள் வருகிறார்கள். லேவிக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள்; மெராரி, கெர்சோம், கோகாத்தியர் என்ற மூன்று ஆண்பிள்ளைகள், ஒரு பெண்பிள்ளை. அந்த பெண்பிள்ளைதான் மோசேயினுடைய அம்மா.
லேவியர்களைக்குறித்து நமக்கு நிறைய காரியங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், இரண்டு முக்கியமான காரியங்கள் நிறையப்பேருக்குத் தெரியாது. அந்த இரண்டையும்தான் நான் இப்போது வலியுறுத்துகிறேன். ஒன்று, இஸ்ரயேல் மக்களுடைய எல்லா முதற்பேறுக்கும்பதிலாக, மாற்றாக, ஈடாக, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்தான் லேவியர். இரண்டாவது, தேவன் தாம் எடுத்த லேவியர்களை ஆரோனுக்கும் அவனுடைய குமாரருக்கும் தானமாக, நன்கொடையாக, வரமாக, கொடையாக, ஈவாக, பரிசாக, கொடுத்தார். எதற்காக? இஸ்ரயேல் மக்கள் எல்லாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி கொடுத்தார்.
இராஜரீகமான ஆசாரியக்கூட்டம்.
ஒரு கேள்வி. நாமெல்லாரும் ஆசாரியர்களா இல்லையா? “நீங்களோ உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும் இராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும் பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” இது 1 பேதுரு 2:9. லேவியராகமத்தைப் புரிந்துகொள்ளாமல் 1 பேதுரு 2:9யைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாது. நாம் இராஜரீகமான ஆசாரியக்கூட்டம் என்று பேதுரு எழுதுகிறார். இது உண்மையா? உண்மையாகவே நாம் இராஜரீகமான ஆசாரியக்கூட்டம்தானா? நாம் எழுத்தின்படி ஆசாரியர்களா அல்லது ஆவியின்படி ஆசாரியர்களா? இது "சும்மா நாம் ஆசாரியர்கள்தான்," என்பதுபோல் உள்ளதா அல்லது உண்மையாகவே நாம் ஆசாரியர்கள்தானா?
ஒரு காரியத்தை விவரித்துச் சொல்வதற்காகத் தமிழில் அணிகள் என்று சொல்வார்கள்; உருவக அணி, உவமை அணி, வேற்றுமை அணி என்று பல அணிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, "அவன் காற்றைப்போல் பறந்தான்." அவன் வேகமாக ஓடினான் என்பதே இதன் பொருள். "அவன் மின்னலைப்போல் வந்தான்," என்றால் அவன் மின்னலைப்போல் வரவில்லை; மாறாக அவன் வேகமாக வந்தான். இதுபோல, "நாம் எல்லாரும் ஆசாரியர்கள்," என்று பேதுரு சொல்லும்போது நாம் அனைவரும் உண்மையாகவே ஆசாரியர்கள் என்று சொல்லுகிறாரா அல்லது ஒரு பேச்சுக்கு அப்படிச் சொல்லுகிறாரா? நாம் ஆவியின்படிதான் ஆசாரியர்கள் என்று சொல்கிறாரா அல்லது இல்லை, உண்மையாகவே எழுத்தின்படியும் நாம் ஆசாரியர்கள்தான் என்று சொல்லுகிறாரா? நாம் எழுத்தின்படியும் ஆசாரியர்கள்தான், ஆவியின்படியும் ஆசாரியர்கள்தான். பேதுரு அப்படித்தான் கூறுகிறார். " நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார்," என்று திருவெளிப்பாடு 1:6யிலும் நாம் வாசிக்கிறோம். நாம் ஆசாரியர்கள்.
லேவியர்களைக்குறித்த இரண்டு முக்கியமான காரியங்களைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஒன்று, தேவன் எல்லா இஸ்ரயேல் மக்களுடைய முதற்பேறுகளுக்கும் இணையாக, பதிலாக, மாற்றாக லேவி கோத்திரம் முழுவதையும் தமக்கென்று பிரித்தெடுக்கிறார், தெரிந்தெடுக்கிறார். இது தேவனுடைய மிகப் பெரிய கோட்பாடு. நான் மறுபடியும் சொல்லுகிறேன், God always divides, elects & separates. இது மாறுவதில்லை. மனிதர்கள்தான் எப்படியாவது ஒரு ‘‘uniformity, artificial unityயை உருவாக்கலாமென்று நினைக்கிறோம், முயல்கிறோம். அப்படியல்ல.
தேவன் பிரிக்கிறார், தம்முடைய மக்களையும் தம்முடைய மக்களல்லாதவர்களையும் பிரிக்கிறார்; சுத்தத்தையும் அசுத்தத்தையும் பிரிக்கிறார்; பரிசுத்தத்தையும் பொதுவானதையும் பிரிக்கிறார்; பகலையும் இரவையும் பிரிக்கிறார்; வெளிச்சத்தையும் இருளையும் பிரிக்கிறார்; நீதியையும் அநீதியையும் பிரிக்கிறார். இரண்டாவது, அவர் பிரித்தெடுத்தார், எடுத்தபின்பு அவர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுத்தார்.
சிறைப்பட்டவர்களை சிறையாக்கி
எபேசியர் நிருபத்துக்குச் செல்வோம். எபேசியர் 4:8. “ஆதலால் அவர் உன்னதத்திற்கு ஏறி சிறைப்பட்டவர்களை சிறையாக்கி மனுஷர்களுக்கு வரங்களை அளித்தாரென்று சொல்லியிருக்கிறார்.” இதை நிச்சயமாக வாசித்திருப்போம். ஆனால், இதைப் புரிந்துகொள்வதற்கு முயன்றிருக்கமாட்டோம்.
“அவர் பிரித்தெடுத்தார், எடுத்தபின்பு அவர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தார்,” என்று எண்ணாகமத்தில் பார்த்தோம்.
இதற்கும் எபேசியர் 4:8க்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்களா? மிகவும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. பாருங்கள். “சிறைப்பட்டவர்களை சிறையாக்கி மனிதர்களுக்கு வரங்களை அளித்தார்.” அங்கு "ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தார்" என்று எழுதியிருக்கிறது. இங்கு "மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்' என்று எழுதியிருக்கிறது. அதே வார்த்தைகள். தேவன் லேவியர்களை இஸ்ரயேல் மக்களிலிருந்து எடுத்து ஆரோனுக்கும் அவனுடைய குமாரர்களுக்கும் இஸ்ரயேல் மக்களுடைய பாவநிவிர்த்திக்காகத் தத்தமாகக் கொடுத்தார்; அதுபோல சிறைப்பட்டுக்கிடந்த நம்மை தேவன் எடுக்கிறார், பிரித்தெடுக்கிறார்; அதன்பின் நாம் அவருக்குச் சொந்தம், அவருடைய அன்பின் கைதிகள். தம்முடைய கைதிகளாக அவர் நம்மைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு மனிதர்களுக்காக, மனிதர்களுடைய பாவநிவிர்த்திக்காக வரங்களாக, நன்கொடைகளாக, தானமாக தேவன் கொடுத்திருக்கிறார். அல்லேலூயா!அதே தேவன்! அதே கருத்து! அன்று லேவியர்களை எதற்காக எடுத்தாரோ, கொடுத்தாரோ, அதே காரியத்தைச் செய்வதற்காகதான் தேவன் நம்மையும் பிரித்தெடுத்து வரங்களாக, தானங்களாக, கொடுத்திருக்கிறார். நான் சொல்கிற காரியங்கள் உங்களுக்குப் புரிகிறதா? (நம்மை) இரட்சிக்கப்பட்டவர்களைப் பிரித்தெடுத்து, நம்மைச் சிறைப்படுத்தி, இரட்சிக்கப்படாத உலக மக்களை இரட்சிப்புக்குள் கொண்டுவரும்படியாக அவர்களுக்குக் கொடுத்தார், அவர்களுடைய பாவநிவிர்த்திக்காக கொடுத்தார். லேவியர்களைக்குறித்த இந்த இரண்டு காரியங்கள் பொதுவாக தேவ மக்களுக்குத் தெரியாது. எனவேதான் இந்த இரண்டு குறிப்புகளையும் நாம் கொஞ்சம் அதிகமாக வலியுறுத்துகிறேன்.
எண்ணாகமத்தில் தத்தம் என்பதற்கு gift என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எபேசியரிலும் வரம் என்பதற்கு gift என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. gift - தத்தம், தானம், பரிசு, நன்கொடை, ஈவு, வரம், அன்பளிப்பு. சிந்தியுங்கள்.
எபிரேயருக்கு எழுதின நிருபம் 12:23. “பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை.” இந்த வசனத்தை நாம் அடிக்கடி வாசித்திருப்போம். ஆனால், இதன் ஆழத்தையும், அழுத்தத்தையும் புரிந்திருக்கமாட்டோம். பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபை. (சபை - சர்வசங்கம்) Assembly என்ற சொல் சங்கம் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபை. சபையில் இருக்கும் எல்லா விசுவாசிகளும் தேவனுடைய பார்வையிலே முதற்பேறானவர்களே. சர்வசங்கமாகிய சபையில் இருக்கக்கூடிய எல்லாருமே முதற்பேறானவர்கள்தான். சபை என்பது முதற்பேறானவர்களாலான கூட்டம். இஸ்ரயேல் கோத்திரத்தில் இருந்த முதற்பேறானவர்களுக்குப்பதிலாக லேவிகோத்திரம் முழுவதையும் தேவன் தெரிந்தெடுத்தார். அவர்கள் எல்லாருமே தேவனுடைய பார்வையிலே முதற்பேறானவர்கள் செய்யக்கூடிய அலுவல்களைத்தான் செய்தார்கள். இஸ்யேல் மக்களுக்குப் பதிலாக. பழைய ஏற்பாட்டில் லேவியர்கள் முதற்பேறானவர்களாக என்ன செய்தார்களோ, அதுபோல புதிய ஏற்பாட்டில் சபை என்பது முதற்பேறானவர்களின் சர்வசங்கம். இங்கு எல்லாரும் முதற்பேறானவர்களே. எல்லாரும் லேவியர்களே! எல்லாரும் ஆசாரியர்களே! நாம் எல்லாருமே முதற்பேறானவர்கள்தான்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரேபேறான குமாரனா அல்லது முதற்பேறான குமாரனா?
யோவான் 3:16 “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” இயேசு தேவனுடைய ஒரேபேறான மகன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. ரோமர் 8:29;, “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு...” இங்கு இயேசு முதற்பேறானவர் என்று கூறப்பட்டிருக்கிறது.
இயேசு ஒரேபேறான குமாரனா அல்லது முதற்பேறான குமாரனா? ஒரே பேறான குமாரன் எப்படி முதற்பேறான குமாரனாக மாறினார்? ஒரேபேறான குமாரன் என்றால் ஒரே மகன் என்றும், முதற்பேறான குமாரன் என்றால் முதல் மகன் என்றும் பொருள். ஒரே மகன் எப்படி முதல் மகனாக மாறினார்? இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, அவர் மரித்து உயிர்த்தெழுந்தவரை அவர் மட்டும்தான் தேவனுடைய ஒரே மகன். அவர் மட்டும்தான் தேவனை, "அப்பா பிதா" என்று அழைக்க முடிந்தது. என்றைக்கு அவர் உயிர்த்தெழுந்தாரோ, என்றைக்கு நாம் அவரை விசுவாசித்தோமோ, என்றைக்கு நாம் தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொண்டோமோ, அன்றைக்கு என்றைக்கு நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறினோம். அதுவரை தேவனுக்கு ஒரேவொரு மகன் மட்டுமே இருந்தார். இப்போது அவருக்கு அநேகப் பிள்ளைகள். ஆகவே, அதுவரை முதல் மகனாக மட்டும் இருந்தவர், இப்போது மூத்த மகனாக மாறிவிட்டார். அப்போது ஒரே பிள்ளையாக இருந்த அவர்இப்போது மூத்த பிள்ளையாக மாறிவிட்டார்: ஒரே பிள்ளை இப்போது மூத்த பிள்ளை. ஒரே மகன் இப்போது முதல் மகன். ஒரேபேறானவர் இப்போது முதற்பேறானவர். இப்படிப்பட்ட முதற்பிள்ளைகள், முதற்பலன்கள், எல்லாராலும் நிறைந்ததுதான் சர்வசங்கமாகிய சபை.
நிழலா அல்லது நிஜமா?
ஆசாரியர்களைக் குறித்த இந்த இரண்டு காரியங்களைத்தான் நான் இன்றைக்கு வலியுறுத்த விரும்புகிறேன். இது மிகவும் முக்கியமான காரியம். இது உங்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிய வேண்டும். லேவியராகமத்தின் மையக்கரு பரிசுத்தம் என்று பார்த்தோம்.
லேவியராகமம் என்றாலே பலிகள்தான் நினைவுக்கு வரும். எல்லாவற்றையும் விவரமாகப் பார்ப்போம். இப்போ லேவியராகமத்தைப்பற்றி என்னால் முடிந்த அளவுக்கு ஒரு outline, மேலோட்டமான பார்வை, சுருக்கமான கண்ணோட்டம், தருகிறேன்.
இந்தப் பூமியிலே இருக்கக்கூடிய எல்லாமே நிழலா அல்லது மெய்யா, நிஜமா? எல்லாமே நிழல்தான். மெய், நிஜம் எங்கு இருக்கிறது? பரலோகத்தில் இருக்கிறது. இரண்டு காரியங்கள். லேவியராகமத்தில் கொடுக்கப்பட்ட பலிகள் நிழலா அல்லது நிஜமா? நிழல்தான். வரப்போகிற நிஜத்திற்கு நிழல்.
நன்றாகக் கவனியுங்கள். கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், தண்ணீர் உணவு உடை உறைவிடம் வெளிச்சம் - எல்லாமே நிழல்தான். எல்லாமே நிழல்தான். இந்த நிழலையும் நிஜத்தையும் புரிந்துகொள்வதற்காக நான் சில வித்தியாசங்களைக் கொடுக்கிறேன். சூரியஒளியில் நாம் நடக்கும்போது நம்முடைய நிழல் விழுகிறது. நிழல் என்று சொல்லும்போதே ஒன்றைக் கவனிக்கவேண்டும். என்னுடைய நிழல் இருக்கிறது. இந்த நிழல் நிஜந்தானா அல்லது நிஜமில்லையா? என்னுடைய கேள்வி புரிகிறதா? நிஜத்தினுடைய பிரதிபலிப்புதான் நிழல். ஆனாலும் நிழல், நிஜமா அல்லது பொய்யா? நிழலும் நிஜந்தான்.
என்னுடைய நிழல் ஒரு சிறிய outline என்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு புத்தகத்தில் பல அத்தியாயங்கள் இருக்கும். அந்தப் புத்தகத்தைப்பற்றிய விவரங்கள் புத்தகத்தின் முதல் பக்கத்தில் குறுவடிவில் இருக்கும். நிழல் அதுபோன்றது. அது முழுமையல்ல. இரண்டாவது, நிழலும் ஒரு நிஜந்தான். ஆனால் குறைந்த அளவிலான நிஜம். முழுமையான நிஜம் அல்ல. மூன்றாவது, நிழல் ஒரு copy; நிழல் என்னுடைய ஒரு copyதானே தவிர அசல் அல்ல. நிழல், ஒரு தோற்றம். ஆனால், நிஜம்தான் ஊற்று. அதாவது நிஜமாகிய நான் இருப்பதால்தான் அந்த தோற்றம் வருகிறது. நான் இல்லையென்றால் அந்த தோற்றம் கிடையாது. நிழல், ஒரு பிரதிநிதி, நிஜத்தினுடைய ஒரு பிரதிநிதி. அது முழுக்க முழுக்க தன்னில்தானே, தன்னால்தானே நிலைத்திருக்கமுடியாது. நிஜம் இல்லையென்றால் நிழல் கிடையாது. நிழல் என்னுடைய பிரதிநிதி. நான் இல்லையென்றால் என் நிழல் இல்லை. என் நிழலுக்கு உயிர் கிடையாது. என் நிழலுக்கு வல்லமை கிடையாது. நிஜத்திற்குத்தான் உயிர் உண்டு, வல்லமை உண்டு. நிழல் நிஜத்தைச் சார்ந்துதான் இருக்க வேண்டும். நிஜம் independent ஆக இருக்கும். ஆனால் நிழல் எப்போதுமே dependent தான். நிழல் மறையும். சூரிய வெளிச்சம் போய்விட்டதென்றால் நிழல் மறையும். ஆனால் சூரியவெளிச்சம் இல்லாவிட்டாலும் நிஜம் இருக்கும். நிழல் நிஜத்தினுடைய ஒரு வெளியாக்கம், ஒரு தோற்றம், ஒரு வெளிப்பாடு. அது இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நிழல் நிஜத்தினுடைய ஒரு விளைவு. நிஜம்தான் அதினுடைய ஆதாரம், அடிப்படை. நிழல், நான் ஏற்கெனவே சொன்னதுபோல், சிறிதளவில் ஒரு நிஜமாக இருந்தாலும் அது தாழ்வானது, அது குறைவானது. ஆனால் நிஜம்தான் நிறைவானது. நிழல்கள் எல்லாமே பூமிக்குரியவை, இம்மைக்குரியவை, தற்காலிகமானவை. நிஜம் எப்போதுமே ஆவிக்குரியவை, பரத்திற்குரியவை, நித்தியத்திற்குரியவை. நிஜம்தான் முதன்முதலாக இருந்தது. முந்தைய நிஜம் இருப்பதினால்தான் பிந்தைய இந்த நிழல் வந்தது. நிஜம் மிக மிக மேன்மையானது, உயர்வானது; அதற்கு ஈடுயிணை கிடையாது. நிழல் எப்போதுமே தாழ்வானது. இந்தக் காரியங்களை நீங்கள் நன்றாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
லேவியராகமத்தைப் புரிந்துகொள்ள நிழல், நிஜம் என்ற இந்த இரண்டாவது குறிப்பு மிக மிக முக்கியம். எல்லாமே நிழல்கள்தான். எனினும் நிழலும் நிஜம்தான்: ஆனால் மிகவும் தாழ்வானது.
இந்தக் கருத்தை எபிரேயருக்கு எழுதின நிருபத்தில் ஆசிரியர் பூமிக்குரியவைகள் திருஷ்டாந்தம், சாயல், நிழல், மாதிரி, ஒப்பனை என்று விவரிக்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, "நான் மெய்யான போஜனம். நான் மெய்யான பானம்" என்று கூறினார்.
இதனுடைய தொடர்ச்சியாக நான் கேட்கிறேன், நாம் போட்டிருக்கிற ஆடை நிழலா அல்லது நிஜமா? நிழல் என்றால் நிஜம் யார்? "கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேரும் கிறிஸ்துவையே தரித்துக்கொண்டீர்களே!" நாம் கிறிஸ்துவைத்தான் தரித்துக்கொண்டிருக்கிறோம். நாம் அணிந்திருக்கும் மெய்யான ஆடை நம் கண்ணுக்குத் தெரிவதில்லை: அதனால் அது மெய் என்று நாம் எடுத்துக்கொள்வதில்லை.
நாம் சாப்பிடுகிற சாப்பாடு நிழல்தான், இயேசு கிறிஸ்து "நான்தான் மெய்யான உணவு" என்று சொன்னார். "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வரக்கடவன், நான்தான் மெய்யான பானம்," என்று அவர் சொன்னார். "நான்தான் மெய்யான வழி" என்றார். "நான்தான் மெய்யான ஒளி: என்றார். அவரே மெய். மீதி எல்லாமே நிழல்தான்.
இவ்வாறு வேதாகமத்தில் மெய்யான கூடாரம், மெய்யான பரிசுத்தஸ்தலம், மெய்யான போஜனம், மெய்யான பானம் என்று அடிக்கடி பார்ப்போம்.
ஆவிக்குரியவை அனைத்தும் மெய், பூமிக்குரியவை அனைத்தும் வெறும் நிழல்.
நாம் வாழ்கிற நாடு நிழல்தான். கைவேலையல்லாத ஒரு நாடு நமக்கு உண்டு. நாம் வாழ்கிற வீடு ஒரு நிழல். தேவன்தாமே கட்டி உணடாக்கின நகரம், வீடு, நமக்கு உண்டு. அதுதான் மெய். இந்தப் பூமியில் இருக்கிற எல்லாமே நிழல்.
முதலாவது இருந்தது நிஜமா அல்லது நிழலா? முதலாவது இருந்தது நிஜம். உடன்படிக்கைப்பெட்டி அல்லது வாசஸ்தலம், ஆடைகள் ஆகியவைகளைக் கொடுக்கும்போது இவைகள் பரலோகத்தில் இருப்பவைகளுக்கு ஒப்பனை, மாதிரி, என்று வேதாகமம் கூறுகிறது. எல்லாம் பரலோகத்தில் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் நிழலாகத்தான் தேவன் மோசேக்கு எல்லாவற்றையும் கொடுக்கிறார். உடன்படிக்கைப் பெட்டி, பரிசுத்தஸ்தலம், மகாபரிசுத்தஸ்தலம், கூடாரம் எல்லாவற்றிற்கும் நிஜம் பரலோகத்தில் இருக்கிறது. நிஜத்தின் நிழலைத்தான், மாதிரியைத்தான் தேவன் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கிறார்.
சர்வாங்க தகனபலி, பாவநிவாரணபலி, குற்றநிவாரணபலி, போஜனபலி, சமாதானபலி ஆகிய பலிகளும், பஸ்கா பண்டிகை, புளிப்பில்லா அப்பப்பண்டிகை, முதற்பலன்களின் பண்டிகை, அறுப்பின் பண்டிகை, எக்காளப் பண்டிகை, பாவநிவாரண நாள் பண்டிகை, கூடாரப் பண்டிகை ஆகிய பண்டிகைகள் எல்லாம் நிழல்களே. ஒன்று, வரப்போகிற நிஜத்திற்கான நிழல்கள்; இன்னொன்று, இருந்த நிஜத்திற்கான நிழல்கள். இந்த நிழல்களில் இந்த இரண்டு நிஜங்களும் இருக்கின்றன. ஒன்று, அது கடந்த நித்தியத்தைக் குறிக்கிறது; இரண்டு, அது வரக்கூடிய நித்தியத்தைக் குறிக்கிறது. இந்த இரண்டும் அங்கே இருக்கிறது.
இருமையின் நிஜம்
லேவியராகமத்தைப் படிக்கும்போது இந்த இரண்டுமுக்கியமான குறிப்புகளை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ஒன்று, லேவியர்கள் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். God always divides, elects & separates. இரண்டாவது, இருமையின் நிஜம். இந்த வார்த்தையைப் பயன்படுத்தவேண்டும் என்று நான் நினைக்கிறேன், The reality of duality. இரண்டு தன்மைகள் இருக்கிறது. physical ஆக ஒன்று இருக்கிறது; எழுத்தின்படி அதற்கு ஒரு பொருள் இருக்கிறது. அதே நேரத்திலே அதற்கு spiritual ஆகவும் ஒரு பொருள் இருக்கும்.
இஸ்ரயேல் மக்கள் பலி கொடுக்கிறார்கள் என்றால், அந்தப் பலிகளுக்கு எழுத்தின்படி பொருள் உண்டு. ஆம் எழுத்தின்படி அவர்கள் பலி செலுத்த வேண்டும். ஆனால், உண்மையான பொருள் அதுவல்ல; பலிகளுக்கு இன்னொரு பொருள் உண்டு. பலிகளுக்கு எழுத்தின்படி பூமிக்குரிய ஒரு பொருள் இருக்கிறது. அதே நேரத்தில் அவைகளுக்கு ஆவிக்குரிய, பரத்துக்குரிய பொருளும் இருக்கிறது. அவைகளுக்கு இம்மைக்குரிய ஒரு பொருளும் இருக்கிறது; அதே நேரத்தில் மறுமைக்குரிய பொருளும் இருக்கிறது. காணத்தக்க ஒரு பொருளும் இருக்கிறது, காணமுடியாத ஒரு பொருளும் இருக்கிறது. இதைத்தான் Reality of duality என்று நான் சொல்லுகிறேன். பலிகளுக்கும், பண்டிகைகளுக்கும் இரண்டு பொருள்கள், அர்த்தங்கள், இருக்கின்றன. பௌதீக பொருளும் இருக்கிறது: ஆவிக்குரிய பொருளும் இருக்கிறது. எழுத்தின்படியான ஒரு பொருளும் இருக்கிறது, ஆவியின்படியான ஒரு பொருளும் இருக்கும்.
சில காரியங்களை நாம் எழுத்தின்படிதான் எடுத்துக்கொள்ளவேண்டும். வேறு சில காரியங்களை ஆவியின்படி எடுத்துக்கொள்ளவேண்டும். இன்னும் சில காரியங்களை ஆவியின்படியும் எடுக்கவேண்டும், எழுத்தின்படியும் எடுக்கவேண்டும்.
சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன். "உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்." நாம் நம் கண்களை எழுத்தின்படி பிடுங்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறாரா? நாம் நம் கைகளை எழுத்தின்படி வெட்டியெறிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரா? இந்த வசனங்களை நாம் எழுத்தின்படி எடுக்க வேண்டுமா அல்லது ஆவியின்படி எடுக்கவேண்டுமா? ஆவியின்படி எடுக்கவேண்டும். ஏன்? நமக்குச் சாதகமாக இருக்கவேண்டும் என்பதற்காகவா? இந்த வசனங்களை எழுத்தின்படி எடுத்தால் யாருக்கும் கண் இருக்காது என்பதற்காகவா? இல்லை. நிச்சயமாக இவைகளை எழுத்தின்படி நாம் பின்பற்ற வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கவோ, விரும்பவோ இல்லை என்று வேதாகமத்தை வாசிக்கும்போது நாம் புரிந்துகொள்ளலாம்.
சில காரியங்களை எழுத்தின்படிதான் எடுக்கவேண்டும். எடுத்துக்காட்டாக "உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக," என்பதை எழுத்தின்படிதான் எடுக்க வேண்டும், எழுத்தின்படி கீழ்ப்படிய வேண்டும். இதற்கு ஆவிக்குரிய பொருள் தேடத் தேவையில்லை. எனவே, சில காரியங்களை ஆவியின்படி எடுக்கவேண்டியிருக்கும். வேறு சில காரியங்களை எழுத்தின்படி எடுக்க வேண்டியிருக்கும். இன்னும் சில காரியங்களை எழுத்தின்படியும் ஆவியின்படியும் எடுக்க வேண்டியிருக்கும். இதைத்தான் நான் இருமையின் நிஜம் என்கிறேன். எதை எழுத்தின்படி எடுக்கவேண்டும், எதை ஆவியின்படி எடுக்கவேண்டும், எதை எழுத்தின்படியும் ஆவியின்படியும் எடுக்க வேண்டும் என்பதை நாம் பகுத்துணரவேண்டும், நிதானிக்க வேண்டும். இந்தக் கோட்பாடுகள் லேவியராகமத்தில் மலிந்துகிடக்கின்றன. இந்த இரண்டு காரியங்களோடு நான் இன்றைக்கு முடித்துக்கொள்கிறேன்.
பழைய ஏற்பாட்டில் பலிகள் - எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரமா?
மூன்றாவது இன்னொரு சிறிய காரியத்தை மட்டும் கேட்டுவிட்டு விட்டுவிடுகிறேன். பழைய ஏற்பாட்டில் பலிகள் கொடுத்தார்களே. இந்தப் பலிகள் இஸ்ரயேல் மக்களுடைய எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரமா? அல்லது சின்னச் சின்னப் பாவங்களுக்குத்தான் பரிகாரமா? பாவங்களை இருவகைப்படுத்தலாம். ஒன்று அறிந்துசெய்கிற பாவம், துணிகரமான பாவம்; இன்னொன்று அறியாமல் செய்கிற பாவம். என்னுடைய கேள்வி, பலிகள் அறிந்து செய்த துணிகரமான பாவங்களுக்குப் பரிகாரமா அல்லது அறியாமல் செய்த பாவங்களுக்கு மட்டும்தான் பரிகாரமா? இதைக்குறித்து வருகிற வாரங்களில் பார்க்கலாம்.
இதுவரை பார்த்ததை நான் ஒரு சுருக்கமாகச் சொல்லுகிறேன்; புத்தகத்தின் தலைப்பு, தலைப்பின் பொருள், அதன் இடஅமைப்பு, லேவியராமகத்தின் மையக்கரு ஆகியவைகளைத்தான் நாம் குறிப்பாகப் பார்த்தோம். மேலும் லேவியராகமத்தில் இரண்டு முக்கியமான கோட்பாடுகளை மட்டும் சொன்னேன். ஒன்று, லேவியர்கள் பிரித்தெடுக்கப்பட்டவர்கள்: இரண்டு, Reality of Duality, இருமையின் நிஜம். மூன்றாவது ஒரு கேள்வி கேட்டேன். பதில் சொல்லவில்லை. இத்தோடு நாம் நிறுத்திக்கொள்வோம். வரக்கூடிய நாட்களில் நாம் தொடர்ந்து பார்ப்போம். Praise the Lord!
ஜெபம்:
ஜெபிப்போம்.
அன்பின் பிதாவே,
லேவியராகமத்தைப் புரிந்துகொள்ள உம் ஆவியானவர் எங்களுக்குள் வாசம்செய்வதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். இதில் கலந்துகொள்கிற அனைவரும் லேவியராகமத்தில் உம்மைக் காண, உம் வழிகளை அறிய, உம் இருதயத்தைப் பார்க்க அனுகிரகம்செய்வீராக. லேவியர்களை எடுத்து, கொடுத்ததுபோல, சிறைப்பட்ட எங்களை நீர் சிறையாக்கி தத்தமாக இந்த உலகத்திற்குக் கொடுத்ததற்காக நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். கர்த்தாவே, இந்த நிழலான வாழ்க்கையிலே நாங்கள் நிஜத்தைப் புரிந்துகொள்ள உம் ஆவியானவரால் எங்களை வழிநடத்தும்.
இயேசுவின் நாமத்தில் நல்ல பிதாவே, ஆமென்!