"ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்." (ஏசாயா 55:1).
தேவன் இஸ்ரயேல் மக்களின் பாலைவனப் பயணத்தில் அவர்களுக்குத் "தூதர்களின் உணவாகிய" மன்னாவை, "வானத்தின் தானியத்தைக்" கொடுத்தபோதும் (சங். 78:24, 25) அவர்கள் அதை "அற்பமாக" எண்ணி "வெறுத்து" எகிப்தின் மீன்களையும், வெள்ளரிக்காய்களையும், வெங்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைத்து வாடினார்கள் (எண். 21:5). இன்றும் தேவ மக்கள் "முத்துக்களைக்" கூழாங்கற்களாகவும், "பரிசுத்தமானவகளை" அற்பமாகவும் கருதி, தங்கள் இச்சைகளுக்கேற்ற "உணவு"களை நாடுவது வியப்பில்லை! மண்ணான மனிதன் விண்ணின் மன்னாவைவிட மண்ணின் உணவை அதிகமாக விரும்புவது வியப்பில்லை! ஆனால், தாகத்தோடு கதறுகிற ஆவியில் எளிய மக்களுக்குத் தேவையான நல்ல திருப்தியான உணவை தேவன் எப்போதும் வழங்குகிறார். அவர்கள் அதை உண்டு வாழ்கிறார்கள், வளர்கிறார்கள். ஆனால், பரம காரியங்கள்மேல் தாகமும், கதறுதலுமில்லாத தங்களை ஆவியில் செல்வந்தர்கள்போலக் கருதுகிற மக்களோ "திருப்திசெய்யாத" (ஏசாயா 55:2) அருஞ்சுவை 'உணவுகளை ஆடம்பர உணவகங்களில்' உண்ண தங்கள் வளங்களைச் செலவழிக்கிறார்கள். எனவே, அவர்கள் கிருபையிலோ, கிறிஸ்துவின் அறிவிலோ வளராமல், வாழ்நாள் முழுவதும் வெறுமையாக வாழ்வது பெருந்துக்கம்!