சபை வரலாறு
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த வரலாற்றையும், கடந்த பல நூற்றாண்டுகளாகக் கிறிஸ்துவை வார்த்தையால் அறிவித்து, வாழ்வில் நிரூபித்த தேவ மனிதர்களைப்பற்றிய வரலாற்றையும் அறியாதது வருந்தத்தக்கது. சபை வரலாற்றை யாரும் நமக்குக் கற்பிக்கவுமில்லை, கற்றுக்கொள்ள நாம் முயலவுமில்லை. மாநாடுகளுக்கும், கூட்டங்களுக்கும், சடங்குகளுக்கும், அமைப்புமுறைகளுக்கும் கொடுத்த அதே அளவுக்கு சபை வரலாற்றை அறிவதற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால், நம் ஆவிக்குரிய கிட்டப்பார்வையைத் தவிர்த்திருக்கலாம். சபை வரலாற்றுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைப்பது தவறு. சபை வரலாற்றிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது. நம் கிறிஸ்தவப் பயணத்தில் சபை வரலாறு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சொல்லப்போனால், நம் கிறிஸ்தவப் பயணம் சபை வரலாற்றின் ஒரு தொடர்ச்சி.
சபை வரலாறு என்பது நம் குடும்ப வரலாறாகும். ஏனென்றால், நாம் பரலோகத்திலும், பூமியிலும் இருக்கிற தேவனுடைய முழுக்குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் (எபேசியர் 3:14). ஆகையால், சபை வரலாற்றைக் கற்றுக்கொள்வது என்பது நம் குடும்பத்தின் நிழற்படங்கள் அடங்கிய செருகேட்டைப் பார்த்து, நம் குடும்பப் பரம்பரையை ஆராய்வதுபோன்றதாகும்.