Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

தேவனுடைய வீட்டைக் கட்டுதல்

Transcript of a message spoken by

Milton Rajendram

அறிமுகம்: தேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய வகை

ஒன்று தீமோத்தேயு மூன்றாம் அதிகாரம் 15ஆம் வசனம், ஒன்று பேதுரு இரண்டாம் அதிகாரம் 5ஆம் வசனம் ஆகிய இரண்டு வசனங்களை நாம் வாசிப்போம்.

“தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.”

“ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.”

ஒன்று தீமோத்தேயு மூன்றாம் அதிகாரம் 15ஆம் வசனத்திலே, ஒரு சொற்றொடரை நாம் வாசித்தோம்: “தேவனுடைய வீட்டில் நடக்கவேண்டிய வகை.” ஏறக்குறைய அது ஒரு செய்திக்குத் தலைப்பு தருவதுபோல் இருக்கிறது — தேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய வகை.

ஒன்று பேதுரு இரண்டாம் அதிகாரம் 5ஆம் வசனத்திலே, “நீங்கள் ஜீவனுள்ள கற்களாக, ஆவிக்குரிய வீடாக — spiritual house— கட்டப்பட்டு வருகிறீர்கள்.”

நமக்கு “மாளிகை” என்ற உடனே ஒரு அரண்மனை ஞாபகத்திற்கு வரும். அரண்மனை ஞாபகத்திற்கு வந்தாலும் சரிதான். “நீங்கள் ஓர் ஆவிக்குரிய வீடாக கட்டப்பட்டு வருகிறீர்கள்.”

நாம் தேவனுடைய வீட்டிலே நடக்கின்ற வகை, தேவனுடைய வீட்டைக் கட்டுவதாக இருக்க வேண்டும். தேவனுடைய வீடு என்றாலும் சரி, ஆவிக்குரிய வீடு என்றாலும் சரி — அது ஒன்றைத்தான் குறிக்கிறது. நாம் தேவனுடைய வீட்டிலே நடக்கின்ற வகை, தேவனுடைய வீட்டைக் கட்டுவதாக இருக்க வேண்டும்.

ஆனால் அது எப்படியும் இருக்கலாம்? அதை இடிப்பதாகவும் இருக்கலாம்.

பழைய தமிழிலே நாம் இப்படிச் செய்யுள்களைப் படித்திருக்கிறோம் — “இனியவை நாற்பது, இன்னா நாற்பது.” இனியவை நாற்பது உண்டென்றால், இனியவை அல்லாதவைகள் அல்லது இன்னாதவை நாற்பதும் உள்ளன. ஏறக்குறைய இந்தச் செய்திக்கு நான் இப்படிக்கூட ஒரு தலைப்பை யோசித்தேன் — “கட்டுவன நாற்பது, இடிப்பன நாற்பது.” அது நாற்பதா, நான்கா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் தேவனுடைய வீட்டைக் கட்டுகிற வகை, தேவனுடைய வீட்டில் நடக்கிற வகை — இதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆவிக்குரிய கல்வியின் அவசியம்

நான் அடிக்கடி வற்புறுத்துவது நம்முடைய ஆவிக்குரிய கல்வி. தேவனுடைய மக்களாகிய நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய சீடர்கள். வெறுமனே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் சென்று, எனக்கு நேரிடுகிற துன்பங்களுக்கு ஒரு விடுதலையைப் பெற்றுக்கொண்டு வருகிறவர்கள் அல்ல. நாம் தேவனுடைய மக்கள். நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் கற்றுக்கொள்கின்ற மாணவர்கள், சீடர்கள்.

கல்வி என்பது எப்போதுமே நீளமானது. கல்வி என்பது எப்போதுமே வேதனையானது. எபிரேயர் 12இல் வாசிப்பதுபோல, எந்தக் கல்வியும் தற்காலத்தில் துக்கமாய்க் காணப்படும். ஆகிலும் அந்தக் கல்வியினால் பழக்கப்பட்டவர்களுக்கு, பயிற்றுவிக்கப்பட்டவர்களுக்கு, அது பிற்காலத்தில் நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

உடனடி பலனை நாடுகிறவர்களுக்கு ஆவிக்குரிய கல்வி துக்கமாய்க்  காணப்படும். ஆவிக்குரிய கல்வியின் பலன்கள் பிற்காலத்தில்தான் விளையும்.

ஆனால் மனிதனுடைய தன்மை — “இன்று குலுக்கல், நாளை லட்சாதிபதி.” காத்திருப்பது மனிதனுடைய இயற்கையில் இல்லை.

சில நன்மைகளும் பிற்காலத்தில்தான் விளையும். சில தீமைகளும் பிற்காலத்தில்தான் விளையும். ஆகவேதான் மனிதர்கள் துணிகரமாய் வாழ்கின்றார்கள்.

பாவம் செய்த அடுத்த நொடியில் மின்னல் நம் தலைமேல் இறங்கி நம்மைத் தண்டித்துவிடும் என்றால், ஒரு மனிதன் பாவம் செய்ய மாட்டான். மின்னல் இடி தலைமேல் இறங்குவது இல்லை. அதுபோல நாம் ஒரு நன்மை செய்தவுடன், நீதியாய் நடந்தவுடன் தேவனுடைய ஆசீர்வாதம் நம் தலைமேல் பொழியப்படும் என்றாலும் எல்லா மனிதர்களும் நீதி செய்வார்கள். அப்படியும் தேவனுடைய ஆசீர்வாதம் உடனடியாக நம் தலைமேல் ஊற்றப்படுவதில்லை.

தேவனுடைய நன்மையும் பிற்காலத்தில் விளைகின்றது. தேவனுடைய தீர்ப்பும் பிற்காலத்தில் விளைகின்றது. அதற்குக் காரணம் தேவனுடைய இரக்கம்.

ஆகவே தேவனுடைய வீட்டைக் கட்டுகிற வகையைக்குறித்து நாம் கவனமாய் இருக்க வேண்டும்.

ரோமர் 5–8 : வலிமையின் ஒழுங்கு

கடந்த முறை ரோமருக்கு எழுதிய புத்தகத்தை நாம் பார்த்தபோது:

மரணத்தைவிட ஜீவன் வலிமையானது — ரோமர் ஐந்தாம் அதிகாரம்.
பாவத்தைவிட கிருபை வலிமையானது — ரோமர் ஆறாம் அதிகாரம்.
திருச்சட்டத்தைவிட கிறிஸ்து வலிமையானவர் — ரோமர் ஏழாம் அதிகாரம்.
மாம்சத்தைவிட ஆவியானவர் வலிமையானவர் — ரோமர் எட்டாம் அதிகாரம்.

இதுதான் ரோமர் ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்று முடிவுக்கு வந்துவிடாதீர்கள். மனதில் பளிச்சென்று பதிவதற்காக கொஞ்சம் எளிமைப்படுத்தி சொல்வது என்னுடைய வழக்கம்.

பிறகு ஒன்பது, பத்து, பதினோராம் அதிகாரங்களை ஒரு அடைப்புக்குறிக்குள் உள்ள அதிகாரங்கள் — parenthetical section — என்று நாம் கடந்துபோகிறோம். ரோமர் 12ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுலுடைய சிந்தனை ஓட்டம் மீண்டும் தொடர்கிறது.

ரோமர் 12ஆம் அதிகாரத்தைத் தொடங்கும்போது அவர் சொல்கிறார்: “உங்கள் உடல்களை நீங்கள் ஒப்புக்கொடுங்கள்.”

ரோமருக்கு எழுதிய கடிதத்திலே “உங்கள் உடல்களை நீங்கள் ஒப்புக்கொடுங்கள்” என்று சொல்லும்போது, உடல்களை மட்டும் ஒப்புக்கொடுத்தால் போதும், நம்முடைய உள்ளத்தை ஒப்புக்கொடுக்க வேண்டாம் என்று நீங்கள் தவறாகக் கருதிவிடக்கூடாது. பவுலுடைய சொல்லாடல் எப்படி என்றால், உடலை ஒப்புக்கொடுங்கள் என்றால் உங்கள் முழு மனிதனையும் ஒப்புக்கொடுங்கள் என்பதே பொருள். ஏனென்றால் இந்த உடலில்தான் உள்ளம் இருக்கிறது. இந்த உடலில்தான் மனம் இருக்கிறது. இந்த உடலில்தான் நம்முடைய தீர்மானங்கள் இருக்கின்றன.

ஆகவே நீங்கள் தவறாக, “உடல்களை ஒப்புக்கொடுக்க சொன்னார்? உள்ளம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்; உடலை மட்டும் ஒப்புக்கொடுத்தால் போதும்,” என்று நினைக்கக்கூடாது.

“அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.”

மனம் புதிதாகுதல் – மறுரூபமாதல் – உலகத்தின் அழுத்தம்

தொடர்ந்து, “... உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ஆனால் உங்கள் மனம் புதிதாகிறதற்கும், நீங்கள் மறுரூபமாவதற்கும் ஒரு எதிர்ப்பு இருக்கிறது. அந்த எதிர்ப்பு இந்த உலகத்திலிருந்து வரும். அந்த உலகம் நீங்கள் அந்த உலகத்திற்கு ஒத்தவர்களாக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு அழுத்தம் தரும். ஆனால் நீங்கள் இந்த உலகத்திற்கு ஒத்த வேடம் தரிக்க வேண்டாம். அல்லது இந்த உலகின் அழுத்தங்களுக்கு நீங்கள் ஒத்துப்போக வேண்டாம். உங்கள் மனம் புதிதாக வேண்டும். நீங்கள் மறுரூபமாக வேண்டும்.”

அதனுடைய பொருள் என்ன? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவருடைய மரணம், உயிர்த்தெழுதல்மூலமாகப் பழைய படைப்பிலிருந்து நம்மை மீட்டு வெளியே கொண்டுவந்து, நம்மைப்  புதிய படைப்பாக மாற்றியிருக்கிறார். இரண்டு கொரிந்தியர் 5:17 — “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.”

ஒரு பக்கத்தில் இது செய்து முடிக்கப்பட்டது. ஆனால் இன்னொரு பக்கம் நாம் பழைய படைப்பிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறோம்; புதிய படைப்பாக மாறிக்கொண்டிருக்கிறோம். இந்தத் தொடர் நிகழ்ச்சியை நாம் கவனக்குறைவாக விட்டுவிடக்கூடாது. இது நிகழ்ந்து முடிந்துவிட்டது என்று நினைக்கக்கூடாது. இது நிகழ்ந்துகொண்டிருக்கிற ஒன்று.

ஆகவேதான் இந்த வாழ்க்கையிலே பாடுகளும், போராட்டங்களும், ஏன் தோல்விகளும், வீழ்ச்சிகளும்கூட உள்ளன. கண்ணை மூடிக்கொண்டு, விசுவாசம் என்ற பெயரில் “பழைய படைப்பு என்று ஒன்று இல்லவே இல்லை; எல்லாம் புதிய படைப்புதான்” என்று நினைப்பது ஒரு psychological make up — அவ்வளவுதான். இல்லாத ஒன்றை இருப்பதுபோல் நாம் கற்பனைசெய்து கொள்ளக்கூடாது.

பழைய படைப்பிலிருந்து நாம் வெளியேறிக்கொண்டிருக்கிறோம். புதிய படைப்பாக மாறிக்கொண்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்மை ஒவ்வொரு நாளும் புதிய படைப்பாக மாற்றிக்கொண்டிருக்கிறார். புதிய படைப்பாக அவர் மாற்றுவதில் தலையாய அம்சம் — நம்முடைய மனதைப் புதிதாக்குவது.

புதிய படைப்பாக மாற்றுவது என்றால் நம்முடைய மனதைப் புதிதாக்குவது; நம்மை மறுரூபமாக்குவது; நம்முடைய முழு ஆளுமையையும் புதிதாக்குவது.

நாம் ஒரு தனி மனிதனாக புதிய படைப்பாக மாறவில்லை. மாறாக ஒரு மனித இனமாக புதிய படைப்பாக மாற்றப்பட்டிருக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு தனி மனிதனாக என்னை இரட்சிக்கவில்லை; ஒரு மனித இனமாக, ஒரு புதிய மனித இனமாக, ஒரு புதிய மனித சமுதாயமாக நம்மை மீட்டிருக்கிறார்.

ஒரு விதத்தில் இரட்சிப்பு என்பது தனி மனிதனுக்குரியது அல்ல; அது ஒரு சமுதாயத்திற்குரியது. புதிய மனிதனுக்குரியது. ஆகவே சமுதாயம் இன்றி நான் ஒரு புதிய படைப்பாக மாறிவிட முடியும் என்பது தவறு.

என் மனம் புதிதாவதும், நான் மறுரூபமாவதும் — இந்த இரண்டும் நாம் புதிய படைப்பாக மாறுவதின் வெவ்வேறு வருணனைகள் மட்டுமே. நம் மனம் புதிதாவது என்றால் நாம் புதிய படைப்பாக மாறிக்கொண்டிருக்கிறோம். நாம் மறுரூபமாவது என்றால் நாம் புதிய படைப்பாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

மறுரூபமாதல் தனிமையில் சாத்தியமா?

நாம் நினைக்கலாம்: “ஒரு குகையில் இருந்து கொண்டு, அல்லது ஒரு தீவில் இருந்து கொண்டு என் மனம் புதிதாகுமா? நான் மறுரூபமாவேனா?”

இந்தக் கேள்விக்கு பதில் — ஒரு சமுதாயமாகத்தான் நம் மனம் புதிதாகிறது; நாம் மறுரூபமாக்கப்படுகிறோம்.

நீங்கள் எப்படி எந்த அடிப்படையில் அப்படிச் சொல்கிறீர்கள்?

ஏற்கனவே ஒரு அடிப்படை ஆதாரத்தை நான் கொடுத்துவிட்டேன். இரட்சிப்பு என்பது ஒரு தனி மனிதனுக்குரியது அல்ல; அது ஒரு புதிய மனித இனத்திற்குரியது.

இன்னொரு ஆதாரத்தை தருகிறேன். ரோமர் 12ஆம் அதிகாரத்தில், “உங்கள் மனம் புதிதாக வேண்டும்; நீங்கள் மறுரூபமாக வேண்டும்” என்று சொல்கிற பவுல் அந்த அதிகாரம் முழுவதும் எதைப்பற்றி எழுதுகிறார் என்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

அவர் தொடர்ந்து உங்கள் மனம் புதிதாவதற்கான யுத்திகளையும் உபாயங்களையும் எழுதவில்லை. ஒரு சமுதாயமாக நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று எழுதுகிறார்.

அதன் பொருள் என்ன? மனம் புதிதாக வேண்டும் என்றால், மறுரூபமாக வேண்டும் என்றால், நீங்கள் இப்படிப்பட்ட ஒரு சமுதாயமாக வாழ வேண்டும் என்பதே பொருள்.

ஒன்றாம் வசனத்தில் “உங்கள் உடல்களை” — அதாவது உங்கள் முழு மனிதனையும் — நீங்கள் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள் என்றால், இப்படிப்பட்ட ஒரு சமுதாய வாழ்க்கைக்கு உங்கள் முழு மனிதனையும் ஒப்புக்கொடுங்கள் என்பதே பொருள்.

தேவனுக்கு ஒப்புக்கொடுப்பது என்றால் என்ன? “என் உடலையும், என் முழு வாழ்க்கையையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்” என்று உதடுகள் வழியாக நாம் சொல்லலாம். ஆனால் “ஒப்புக்கொடுத்ததற்குமுன் என் வாழ்க்கை எப்படி இருந்தது? ஒப்புக்கொடுத்தபின் என் வாழ்க்கை எப்படி இருக்கிறது?” என்று ஒரு வேறுபாட்டைக் காட்ட முடியுமா?

பல சமயங்களில் முடியாது. ஏறக்குறைய அது ஒரு sentimental

ஜெபம் . “ஆண்டவரே, என் உடலையும் முழு வாழ்க்கையையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.” அடுத்த திங்கட்கிழமை காலை வாழ்க்கை பழையபடி தொடர்கிறது.

நாம் வேண்டுமென்று அப்படி வாழவில்லை. ஆனால் “ஒப்புக்கொடுத்தேன்” என்பதன் விளைவு என்ன என்பதைக் குறித்து சிந்திக்காததால், அந்த வேண்டுதல் நம் வாழ்க்கையில் தீர்க்கமான மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.

பறவைகளின் உதாரணம்

இந்த முன்னுரையை உங்கள் மனதில் பதிய வைப்பதற்காக ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன்.

பறவைகள் வானத்தில் பறப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அவை தனித்தனியாகப் பறக்குமா? பொதுவாக கூட்டமாகப் பறக்கும். கூட்டமாகப் பறக்கும்போது எந்த வடிவில் பறக்கும்? ‘V’ வடிவில்.

ஏன் ‘V’ வடிவில் பறக்கின்றன? காற்றை வெட்டி முன்னேற உதவுகிறது. சதுர வடிவில் பறந்தால் காற்றை வெட்டிச் செல்ல முடியாது.

ஒரு பறவை தனியாகப் பயணம் செய்யும்போது தன் ஆற்றலை முழுவதும் செலவிட வேண்டும். நூறு பறவைகள் தனித்தனியாகப் பறந்தால் 1000 ஜூல் செலவாகலாம். ஆனால் ‘V’ வடிவில் பறந்தால் ஒவ்வொன்றும் குறைந்த ஆற்றலில் பயணம் செய்யும். மொத்தச் செலவு பாதியாகக் குறையும்.

இதுதான் சமுதாய வாழ்க்கையின் தேவை.

பறவைகளுக்குத் தெரிகிறது — ஒன்றிணைந்து பயணம் செய்தால் பயணம் இலகுவாகும். நம்முடைய பயணம் பறவைகளின் பயணத்தைவிட ஆபத்தானது. எபிரேயர் 3, 4இல் வாசிப்பதுபோல அந்த இளைப்பாறுதலுக்குள் நுழையாமல் போகும் ஆபத்து உண்டு.

ஆகவே ஒரு பறவை சமுதாயம் எவ்வளவு கவனத்தோடு பயணிக்கிறதோ அதைவிட அதிகமாகத் தேவ மக்களின் சமுதாயம் பயணிக்க வேண்டும்.

தேவனுடைய வீட்டைக் கட்டும் நான்கு வகைகள்

நான் “கட்டும் வகைகள் நாற்பது” என்று சொன்னாலும், இன்றைக்கு நான்கு மட்டுமே சொல்லப் போகிறேன்.

முதலாவது — ஒரு சமுதாயத்தின் உறுப்புகளாக உங்களை ஒப்புக்கொடுங்கள். “ஒப்புக்கொடுங்கள்” என்பது “be committed” என்ற ஆங்கிலப் பதத்தின் மொழியாக்கம். ஒரு சமுதாயத்தின் உறுப்புகளாக உங்களை ஒப்புக்கொடுங்கள் — committed ஆகுங்கள்.

இரண்டாவது — நடத்துகிறவர்களுக்கு கணக்கொப்புவியுங்கள். Accountable ஆகுங்கள். அதை நான் சற்று இலகுவாக்கிச் சொல்கிறேன்: நடத்துகிறவர்களுக்கு கணக்கொப்புவிப்பவர்களைப்போல நீங்கள் நடந்துகொள்ளுங்கள்.

மூன்றாவது — சக உறுப்புகளுக்குப் பொறுப்பாயிருங்கள். Responsible ஆகுங்கள்.

முதலாவது commitment. இரண்டாவது accountability. மூன்றாவது responsibility.

நான்காவது — சக உறுப்புகளை அலங்கரியுங்கள். இந்த நான்காவது குறிப்பு நம்மை புண்படுத்தக்கூடும். அதன் தலைப்பு அழகாக இருக்கிறது. ஆனால் அதன் உள்ளடக்கம் அவ்வளவு அழகாகத் தோன்றாது. சக உறுப்புகளை அலங்கரியுங்கள்.

இப்போது இந்த நான்கு குறிப்புகளின்கீழ் நான் என்னுடைய எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

1. ஒரு உள்ளூர் சமுதாயத்தின் உறுப்புகளாக உங்களை ஒப்புக்கொடுங்கள்

இதற்கு ஆதாரமாக நான் எந்த வசனத்தைக் காட்டுகிறேன்? ரோமர் 12ஆம் அதிகாரம் முழுவதையும் காட்டுகிறேன். “தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” என்பதன் பொருள் — தேவன் ஒரு ஆவிக்குரிய வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறார். தேவனுடைய வீடு, தேவனுடைய குடும்பம், தேவ மக்களின் சமுதாயம், சபை — இவை ஒரே பொருளைச் சுட்டுகின்றன.

ஆனால் இங்கு நான் ஒரு திருத்தம் செய்கிறேன். “ஒரு சமுதாயம்” என்று சொன்னால் பொதுவான பொருள். நான் சொல்ல விரும்புவது — ஒரு உள்ளூர் சமுதாயம். A local community. An immediate community. Not a distant community.

உலகளாவிய சபையில் நான் ஒரு உறுப்பாக இருக்கிறேன். அமெரிக்காவில், ஜப்பானில், மணிப்பூரில் தேவனுடைய மக்கள் இருக்கிறார்கள். அவர்களோடு நான் ஆவிக்குரிய உறவு கொண்டிருக்கலாம். ஆனால் நான் இங்கு குறிப்பிடுவது — நான் வாழும் இடத்தில், நான் ஊடாடும் இடத்தில், நான் கூடும் இடத்தில் உள்ள உள்ளூர் சமுதாயம்.

சேலையூர், தாம்பரம் போன்ற இடங்களில் கூடி வாழ்கிற, ஊடாடி வாழ்கிற, கலந்துரையாடி வாழ்கிற, fellowship கொண்டிருக்கிற உடனடி சமுதாயம். இதுவே immediate community.

“உங்கள் உள்ளூர் சமுதாயம் என்ன?” என்ற கேள்விக்கு நமக்குத்  தெளிவான பதில் இருக்க வேண்டும். அப்படி ஒரு உள்ளூர் சமுதாயத்தில் நான் உறுப்பாக இல்லையென்றால் வேதம் அதை அங்கீகரிக்கவில்லை.

ரோமர் 12, 1 கொரிந்தியர் 11, 12, 14 — இவை உலகளாவிய சபையைப்பற்றி எழுதப்படவில்லை. அவை உள்ளூர் சபையைப்பற்றிதான் எழுதப்பட்டவை.

நான் என்னை ஒரு உள்ளூர் சமுதாயத்தோடு அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேசத்தின் அடிப்படையில் மக்கள் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். மொழியின் அடிப்படையில் அடையாளப்படுத்துகிறார்கள். சாதியின் அடிப்படையில் அடையாளப்படுத்துகிறார்கள். தேவனுடைய மக்களாகிய நாம் எந்த அடிப்படையில் அடையாளப்படுத்துகிறோம்? “என் உள்ளூர் சபை” என்ற அடையாளம் நமக்கு இருக்க வேண்டும்.

உள்ளூர் சமுதாயம் — ஓய்வுறும் தளம்

அப்போஸ்தலர் 12ஆம் அதிகாரத்தில், பேதுருவை ஏரோது கைது செய்து சிறையில் அடைக்கிறான். சபையார் அவனுக்காக ஜெபித்தார்கள். உலகளாவிய whatsApp message அனுப்பி ஜெபித்தார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம். எருசலேமிலிருந்த சபை ஜெபித்தது.

பேதுரு அற்புதமாக விடுவிக்கப்பட்டபின் எங்கு சென்றார்? யோவான் மாற்குவின் தாயாகிய மரியாளின் வீட்டிற்கு. அந்த வீட்டில் உள்ளூர் சமுதாயம் கூடியிருந்தது. ரோதை என்ற பெண் கதவைத் திறந்தாள். அவர்கள் ஜெபித்துக்கொண்டிருந்தார்கள்.

பேதுருவுக்கு ஒரு ஓய்வுறும் தளம் இருந்தது. அதுதான் உள்ளூர் சமுதாயம்.

“ஓய்வுறும் தளம்” என்றால் rest house அல்ல. எங்கு போனாலும் நாம் திரும்பி வருகிற இடம். physics-ல் ground state என்று சொல்வோம். electron எவ்வளவு excited state-ல் இருந்தாலும், energy குறைந்ததும் ground state-க்கு திரும்பிவிடும். அதுபோல நம் ground state — உள்ளூர் சமுதாயம்.

உள்ளூர் சமுதாயம் — அனுப்பும் இடம்

அப்போஸ்தலர் 11ஆம் அதிகாரம் கடைசி வசனம் — யூதேயாவில் பஞ்சம். அந்தியோகியாவிலிருந்த பரிசுத்தவான்கள் காணிக்கை அனுப்பினார்கள். பார்னபாவுக்கும் பவுலுக்கும் கொடுத்து, “எருசலேமுக்கு சென்று கொடுத்து வாருங்கள்” என்று அனுப்பினார்கள்.

அப்போஸ்தலர் 12 கடைசி வசனம் — அவர்கள் அந்த ஊழியத்தை முடித்தபின் அந்தியோகியாவிற்குத் திரும்பினார்கள். அது அவர்களுடைய ஓய்வுறும் தளம்.

அப்போஸ்தலர் 13 — அந்தியோகியாவில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது பரிசுத்த ஆவியானவர், “பார்னபாவையும் சவுலையும் பிரித்துவிடுங்கள்” என்றார். சபை ஜெபித்து அனுப்பியது.

அப்போஸ்தலர் 14:26–28 — அவர்கள் சுற்றுப்பயணத்தை முடித்தபின் மீண்டும் அந்தியோகியாவிற்குத் திரும்பி, “கர்த்தர் எங்களால் செய்த காரியங்கள்” என்று அறிக்கை அளித்தார்கள்.

இது சட்டம் அல்ல. “எல்லாரும் இப்படித்தான் செய்ய வேண்டும்” என்று நான் கட்டளை போடவில்லை. ஆனால் இது மேன்மையான உதாரணம்.

உள்ளூர் சமுதாயம் — கூடுகை

1 கொரிந்தியர் 16:2 — வாரத்தின் முதல் நாள்தோறும் சேமித்து வையுங்கள்.
அப்போஸ்தலர் 20:7 — வாரத்தின் முதல் நாள் சீடர்கள் அப்பம் பிட்க கூடி வந்தார்கள்.

பழைய ஏற்பாட்டில் ஓய்வு நாளில் கூடி வர வேண்டும் என்ற கட்டளை இல்லை. ஆனால் பாபிலோன் சிறைப்பிடிப்பின் எஸ்றாபோன்ற வேதபாரகர்கள் ஒரு வழக்கத்தை உருவாக்கினார்கள் — ஓய்வு நாளில் கூடி வார்த்தையைக் கேட்பது.

கூடுகைகள் ஒன்றும் பெரிய பொருட்டல்ல என்று நான் ஒருகாலத்தில் நினைத்திருக்கிறேன். அது ஆபத்தான சிந்தனை. தேவன் நம்மோடு பேசுவதற்கான கடைசி channel — தேவ மக்களின் கூடுகை. அந்த channel இல்லையென்றால், நாம் தவறிச் செல்லும்போது தேவன் நம்மோடு பேச முடியாமல் போகலாம்.

உள்ளூர் சமுதாயம் — பங்குபெறும் வாழ்க்கை

கூடுகையில் வந்து உட்காருவதுகூட ஒரு ஊழியம்.

அப்போஸ்தலர் 28 — பவுல் ரோமுக்கு வரும்போது சகோதரர்கள் அவரை  எதிர்கொண்டு வந்தார்கள். அவர்கள் காணிக்கை கொடுக்கவில்லை. பெரிய செய்தி எதுவும் சொல்லவில்லை. அவரைச் சந்தித்தார்கள். அவர்  தேறுதல் அடைந்தார்.

பல சமயங்களில் தேவ மக்களுக்கு நாம் செய்கிற பெரிய சேவை — “ஒரு இடத்தில் இருப்பது.”

அப்போஸ்தலர் 2:42–46 — அவர்கள் அப்போஸ்தலர் உபதேசத்தில், அந்நியோனிய ஐக்கியத்தில், அப்பம் பிட்குதலில் உறுதியாய் இருந்தார்கள். வீடுகள்தோறும் அப்பம் பிட்டார்கள். கூடுகை மட்டும் அல்ல; கூடி வாழ்ந்தார்கள்.

இது intentional community. ஈடுபாடுள்ள சமுதாயம்.

2. நடத்துகிறவர்களுக்குக் கணக்கொப்புவியுங்கள்

முதலாவது — உங்களுடைய உள்ளூர் சமுதாயம் என்ன என்பதில் தீர்க்கமான பதில் வேண்டும்.

இரண்டாவது — அந்த உள்ளூர் சமுதாயத்தில் நடத்துகிறவர்கள் யார்?

“நடத்துகிறவன்” என்றவுடன் அவனை ஒரு அரக்கனைப்போலப் பார்க்கக்கூடாது. தேவனுடைய மக்களிடையே நடத்துகிறவர்கள் உண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் நடத்துகிற விதத்தைப்பற்றி தேவனுடைய வார்த்தை தெளிவாகப் பேசுகிறது. உலகத்து அதிகாரிகள் எப்படி நடத்துகிறார்களோ அப்படிப்பட்ட நடத்துதல் தேவனுடைய மக்களிடையே இல்லை. ஆனால் நடத்துகிறவர்கள் உண்டு.

(a) நடத்துகிறவர்களைக் கணம் பண்ணுங்கள்

எபிரேயர் 13:17 —“ உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.”

நடத்துகிறவர்கள் கணக்கொப்புவிக்க வேண்டியவர்கள். நாம் செய்தது, செய்யாதது, பேசினது, பேசாதது, தியாகம் செய்தது, செய்யாதது — இவைகளுக்கெல்லாம் ஒருநாள் அவர்கள் கணக்கொப்புவிக்க வேண்டும்.

ஒருபுறம் நடத்துகிற ஆவல் நமக்கு இருக்கலாம். ஆனால் நடத்துகிற பொறுப்பை பயத்தோடும் நடுக்கத்தோடும் ஏற்க வேண்டும். தேவன் நம்மை அந்தப் பொறுப்பிற்கு அழைத்திருந்தால் அதைத் தவிர்க்கக்கூடாது. “வேறொருவர் இருக்கிறார்; அவர் செய்வார்” என்று ஒதுங்கிவிடக்கூடாது.

ரோமர் 13:7 —“எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.”

1 தீமோத்தேயு 5:17 —“நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.”

இதை நான் நடத்துகிறவர்களுக்குச் சொல்லவில்லை. நடத்தப்படுகிறவர்களுக்குச் சொல்லுகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடக்கிற ஒருவன் ஒருநாளும், “என்னைக் கணம் பண்ணு” என்று சொல்லமாட்டான். கர்த்தர்தான் சொல்ல முடியும் — “நான் பிதாவானால் என் கனம் எங்கே?”

தாவீதும் தண்ணீரும்

தாவீதுக்குத் தாகம். பெத்லகேமின் கிணற்றிலிருந்து தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்கும் என்று அவன் ஆசைப்படுகிறான். மூன்று பலசாலிகள் பெலிஸ்தியர் இராணுவத்தின் ஊடாகப் போய் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.

தாவீது அந்தத் தண்ணீரை குடிக்கவில்லை. அதைத் தரையில் ஊற்றிவிட்டான். “இது இவர்களுடைய இரத்தத்திற்குச் சமம். இதை நான் குடிக்க முடியாது” என்றான்.

இதுதான் நடத்துகிறவனின் பண்பு.
இதுதான் நடத்தப்படுகிறவனின் பண்பு.

பிலேமோன் — நடத்துகிற மனப்பாங்கு

பவுல் பிலேமோனுக்கு எழுதிய கடிதத்தைப் பலமுறை வாசித்துப் பாருங்கள்.

“நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.”

அவர் ஒநேசிமுவைத் திருப்பி அனுப்புகிறார். “அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.”

இது நடத்துகிறவனின் மனப்பாங்கு.

கடைசியில் சொல்கிறார்:
“நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்.”

இது கட்டளை அல்ல; அன்பின் ஆவல்.

(b) அவர்களுக்குப் பணிந்தடங்குங்கள்

“கீழ்ப்படிந்து அடங்குங்கள்” — இந்த வார்த்தைகள் கடினமாகத் தோன்றலாம்.

நடத்துகிறவர்கள் இன்னும் மாம்சமும் இரத்தமும் உள்ளவர்கள். எலியா நம்மைப்போலவே மனிதன். ஆனாலும் நடத்துகிறவர்களுக்குப்  பணிந்தடங்க வேண்டும்.

தாவீது — சவுலைக் கொல்லவில்லை. இரண்டுமுறை வாய்ப்பு இருந்தும் கொல்லவில்லை. சவுலின் ஆடையின் ஓரத்தை அறுத்தபோதுகூட மனசாட்சி அவனைத் துன்புறுத்தியது.

கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்” என்றான் (I சாமுவேல் 24:6)

யோவாப் ராப்பா பட்டணத்தை கைப்பற்றியபின் தாவீதுக்கு செய்தி அனுப்புகிறான். “நான் பட்டணத்தைப் பிடிக்கிறதினால், என் பேர் வழங்காதபடிக்கு, நீர் மற்ற ஜனங்களைக் கூட்டிக்கொண்டுவந்து, பட்டணத்தை முற்றிக்கைபோட்டு, பிடிக்கவேண்டும்” (2 சாமுவேல் 12:28).

இதுதான் பணிந்தடங்குதல்.

(c) இசைந்து பணிவிடை செய்யுங்கள்

பிலிப்பியர் 2:22 — “தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.”

2 தீமோத்தேயு 4:10 — “தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்.”

தேமாவும் ஒருகாலத்தில் நற்சாட்சி பெற்றவன். கொலோசெயர், பிலேமோன் கடிதங்களில் உயர்வாகக் குறிப்பிடப்பட்டவன். ஆனாலும் பிறகு விலகிவிட்டான்.

இதோ இரண்டாவது குறிப்பு:

நடத்துகிறவர்களுக்குக் கணக்கொப்புவியுங்கள்.
அவர்களைக் கனம் பண்ணுங்கள்.
அவர்களுக்குப் பணிந்தடங்குங்கள்.
அவர்களோடு இசைந்து பணிவிடை செய்யுங்கள்.

3. சக உறுப்புகளுக்குப் பொறுப்புடையவர்களாக இருங்கள்

ஆதியாகமம் நான்காம் அதிகாரத்தில் தேவன் காயீனிடம் கேட்கிறார்:
“உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?”

அவன் பதில் என்ன?
“என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?”

ஒரு உள்ளூர் சமுதாயமாக நாம் வாழும்போது, நமக்கு ஒரு பொதுப் பொறுப்பும் உண்டு; பரஸ்பரப் பொறுப்பும் உண்டு.

பொதுப் பொறுப்பு

ஒரு மேசையைத் தூக்க ஒருவன் போதுமா? இரண்டு பேர் அதை எளிதாகத் தூக்கலாம். இது பொதுப் பொறுப்பு.

பரஸ்பரப் பொறுப்பு

ஒரு சகோதரிக்கு உடல்நலம் சரியில்லையென்றால் அது பொதுப் பொறுப்பு அல்ல; அது பரஸ்பரப் பொறுப்பு. அவருடைய தேவையில் மற்றவர்கள் உதவுகிறார்கள்.

2 கொரிந்தியர் 8, 9 — யூதேயாவில் பொருளாதாரக் குறைவு. மக்கதோனியா, அகாயா சபைகள் உதவின. நாளைக்கு அகாயாவில் குறைவு வந்தால் வேறொருவர் உதவுவார். இது பரஸ்பரப் பொறுப்பு.

அன்பும் நம்பியும் — ஒரு கதை

இந்தக் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம்; இல்லையென்றால் இப்போது கேளுங்கள்.

இரண்டு நண்பர்கள். ஒருவன் பெயர் அன்பு. இன்னொருவன் பெயர் நம்பி. இருவரும் இராணுவத்தில் போர்வீரர்கள்.

அன்பு Bunkerரின் பின்னால் இருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தான். நம்பி போர்க்களத்தின் நடுவில் போராடிக்கொண்டிருந்தான். துப்பாக்கிச் சூடு பட்டது. நம்பி கீழே விழுந்தான்.

அன்பு தன்னுடைய தளபதியிடம் சொல்கிறான்:
“அதோ நம்பி விழுந்து கிடக்கிறான். எப்படியாவது அவனை இங்கு கொண்டு வந்தால் காப்பாற்றலாம்.”

தளபதி சொல்கிறார்:
“அவனுக்கு ஏற்பட்டிருக்கிற குண்டுக் காயத்தைப் பார்த்தால் அவன் பிழைக்கமாட்டான். போர் தீவிரமாக நடக்கிறது. நீ போனால் நீயும் இறந்துவிடுவாய். நான் ஏன் இரண்டு பேரை இழக்க வேண்டும்?”

அன்பு சொல்கிறான்:
“இல்லை. நான் ஊர்ந்து, தவழ்ந்து போய் எப்படியாவது அவனை இழுத்துக்கொண்டு வருவேன்.”

அவன் ஊர்ந்து செல்கிறான். நம்பியிடம் சேர்கிறான். நம்பி இறப்பதற்கு முன் சொன்ன கடைசி வார்த்தை:

“அன்பு, நீ வருவாய் என்று எனக்குத் தெரியும்.”

ஒருவேளை அன்பு போகவில்லையென்றால் நம்பி இறந்திருப்பான். ஆனால் அவன் மனம் எப்படி இறந்திருக்கும்? “என் நண்பன் வரவில்லை” என்ற வேதனையோடு இறந்திருப்பான்.

அன்பு அவனைக் காப்பாற்ற முடியாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் அருகில் இருந்தான்.

இதுதான் பொறுப்பு.

“நான் போனால் என்ன பயன்? போகவிட்டாலும் சாவான்.” — இது உலக சிந்தனை.

ஆனால் தேவ மக்களுடைய சிந்தனை வேறுபட்டது.

என் சகோதரன் என்னை நம்புகிறான். அவனுடைய நிலை என்னுடைய நிலை என்று அவனுக்குத் தெரிய வேண்டும். அவனுடைய உயிரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், அவன் இறக்கும் நேரத்தில் அவன் அருகில் இருக்க முடிந்தால் அதுவே ஒரு பணிவிடை.

உள்ளூர் சமுதாயத்தில் நாம் இப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

4. சக உறுப்புகளை அலங்கரியுங்கள்

இப்போது நான்காவது குறிப்பு. இது நம்மை அதிகம் சோதிக்கும் பகுதி.

உள்ளூர் சமுதாய வாழ்க்கை ஆசீர்வாதமானதா? ஆம். ஆனால் அது உபத்திரவம் நிறைந்த ஆசீர்வாதமான வாழ்க்கை.

நாம் இன்னும் புதிய வானம், புதிய பூமி, புதிய எருசலேம் நிலைக்கு வரவில்லை. பழைய படைப்பிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறோம். ஆகவே தேவ மக்களிடையே அவலட்சணங்கள் இருக்கும்.

நோவா — காம் — சேம் — யாப்பேத்

ஆதியாகமம் 9.

நோவா திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் — சேம், காம், யாப்பேத்.

காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்.
சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை.

நோவா விழித்தபின் சொன்ன முதல் வார்த்தை:
“காம் சபிக்கப்பட்டவன்.”

கவனியுங்கள். 2 பேதுரு 2இல் நோவா “நீதியைப் பிரசங்கித்தவன்” என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆதியாகமத்தில் அவன் பிரசங்கம் எழுதப்படவில்லை. அவன் வாயிலிருந்து பதிவு செய்யப்பட்ட முதல் வார்த்தை — சாபம்.

யார் அவனை பேச வைத்தான்? காம்.

மூன்று குரங்கு பாடம்

“பார்க்காதே. கேட்காதே. பேசாதே.”

சக உறுப்புகளின் அவலட்சணத்தைப் பார்ப்பதில் பெருமை கொள்ளாதீர்கள்.
“அவனுடைய அவலட்சணம் எனக்குத் தெரியும்” — இது பெருமை அல்ல; பரிதாபம்.

நீதிமொழிகள் 20:19 —
“தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.”

லேவியராகமம் 19:16 —
“உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக”

1 கொரிந்தியர் 13 —அன்பு சகலத்தையும் மூடும்.

மூடுவது என்றால் என்ன? அதை நம்மோடு நம் கல்லறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

ஒரு விஷயம் சமுதாயத்தைப் பாதிக்கக்கூடியதாக இருந்தால் நடத்துகிறவர்களிடம் சொல்லலாம். ஆனால் gossip ஆக பரப்ப வேண்டாம்.

A.W. Tozerரின் மேற்கோள்

A.W. Tozer சொன்னார்:“If you know me as intimately as I know myself, you will never have the same respect for me as you have now.”

நாம் ஒவ்வொருவரும் இதைச் சொல்ல முடியும்.

கத்தோலிக்க பாவ சங்கீர்த்தனம்

கத்தோலிக்கர்களிடம் பாவ சங்கீர்த்தனம் என்ற வழக்கம் உண்டு. சில சமயங்களில் நடத்துகிறவன் பலரின் பாவங்களைக் கேட்க வேண்டியிருக்கும். அவனுடைய மனைவிக்குக்கூட சில விஷயங்களைச் சொல்ல முடியாமல் போகலாம்.

நடத்துகிறவனின் பணி எளிதல்ல.

முடிவுச் சுருக்கம்

இன்று நாம் பார்த்தது:

  1. ஒரு உள்ளூர் சமுதாயத்தின் உறுப்புகளாக உங்களை ஒப்புக்கொடுங்கள்.
  2. நடத்துகிறவர்களுக்குக் கணக்கொப்புவியுங்கள்.
  3. சக உறுப்புகளுக்குப் பொறுப்புடையவர்களாக இருங்கள்.
  4. சக உறுப்புகளை அலங்கரியுங்கள்.

சகோதரன் என்றால் — சக உதரன்.
சகோதரி என்றால் — சக உதரி.
ஒரே இரத்தத்தை உடையவர்கள்.

அவலட்சணங்கள் இருக்கலாம். ஆனால் அவைகளைப் பரப்பாதீர்கள். மூடுங்கள். பொறுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு நேர்த்தியான உள்ளூர் சமுதாய வாழ்க்கை — தேவ மக்களின் மறுரூபமாதலுக்கு வழிவகுக்கும்.

கர்த்தர்தாமே இந்த வார்த்தைகளால் நம்மை மறுரூபமாக்கும் உள்ளூர் சமுதாய வாழ்க்கையில் நடத்துவாராக.

ஆமென்.