Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிறிஸ்துவே மெய்ப்பொருள்

Unedited transcript of a message spoken in November, 2014 in Chennai 

By Sakaya Milton Rajendram

முதலாவது கிறிஸ்துவா, மதமா? இரண்டாவது கிறிஸ்துவா, உபதேசமா? மூன்றாவது கிறிஸ்துவா, நியாயப்பிரமாணமா? நான்காவது கிறிஸ்துவா, பக்திமயமான காரியங்களா? ஐந்தாவது கிறிஸ்துவா, ஒரு வழிபாட்டு ஸ்தலமா அல்லது வழிபாட்டுக் கட்டிடமா? ஆறாவது கிறிஸ்துவா, பாரம்பரியங்களா?. ஏழாவது கிறிஸ்துவா, ஒரு மதவைராக்கியமுள்ள கூட்டமா? எட்டாவது கிறிஸ்துவா, ஒரு ஸ்தாபனா அல்லது நிறுவனமா?

நேர்மறையா, எதிர்மறையா

உண்மையிலேயே இது மிகவும் கடினமான ஒரு செய்தி. என்னைப் பொறுத்தவரை எது மக்களுடைய மனதை மிகவும் புண்படுத்துகிறதோ அதுதான் கடினமான செய்தி. பொதுவாக அப்படிப்பட்ட செய்திகளைப் பேசுவதை நான் தெரிந்தெடுக்க மாட்டேன். “நீங்கள் இப்படி எதிர்மறையில் அணுகவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நேர்மறையில் அணுகுங்கள். கிறிஸ்து என்னவாக இருக்கிறார் என்று நீங்கள் பறைசாற்றினால் போதுமானது. கிறிஸ்து என்னவாக இல்லை என்று நீங்கள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை,” என்று சிலர் கருத்துத் தெரிவிக்கலாம். இல்லையா? “இரட்சிப்பு என்றால் என்னவென்று நேர்மறையாகச் சொல்லுங்கள். இரட்சிப்பு என்றால் என்ன இல்லை என்று எதிர்மறையாகச் சொல்ல வேண்டாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நாம் பாவமன்னிப்பைப் பெறுவோம்; நித்திய ஜீவனைப் பெறுவோம்; நித்திய, நித்தியமாய் நாம் தேவனோடு வாழ்வோம் என்று நாம் நேர்மறையாகச் சொல்வோம். கோயிலுக்குப்‍ போவதால் அல்லது திருவிழாக்கள் கொண்டாடுவதால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை, நாம் நித்திய ஜீவனைப் பெறுவதில்லை என்று நீங்கள் எதிர்மறையாகச் சொல்ல வேண்டாம்,” என்று தேவனுடைய மக்கள் சிலர் கூறி நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். இது கேட்பதற்குக் கொஞ்சம் இனிமையாகக்கூட இருக்கும். அது நல்லதுதான்.

எடுத்துக்காட்டாக, “இயேசு கிறிஸ்து ஒருவரே தேவனுடைய குமாரன்; அவரே வழிபாட்டிற்குரியவர்; மரியாள் வழிபாட்டிற்குரியவர் அல்ல. ஆனால் தேவனுடைய மக்கள் பலர் தவறுதலாக, கண்மூடித்தனமாக, மூடநம்பிக்கையினால் மரியாளை வழிபடுகிறார்கள்,” என்று நாம் சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள், “நீங்கள் ஏன் மரியாளைப்பற்றியெல்லாம் பேசவேண்டும்? இயோசுவை நீங்கள் உயர்த்திக்காண்பியுங்கள். அது போதுமானது,” என்று சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ரோமன் கத்தோலிக்க மக்கள் மத்தியிலே நற்செய்தி அறிவிக்கின்ற குரூஸ் திவாகர் என்ற ஒரு சகோதரனை நாம் பார்த்திருக்கிறோம். மிக அருமையாகப் பேசுவார். அவர் அறிவிக்கின்ற நற்செய்தி உண்மையிலே நற்செய்திதான். “நீங்கள் ஏன் அவரைப்போல் பேசக்கூடாது. ஏன் இந்த மாதிரி வம்பு அல்லது பிரச்சினைகளை உண்டாக்குகிற காரியங்களைக்குறித்து பேசுகிறீர்கள்?” என்று சிலர் கேட்பார்கள்.

தீர்க்கதரிசிகள்

ஆனால், இந்த முழு வேதாகமத்தையும் பார்க்கிற ஒருவனுக்கு “இது நேர்மறையானது, இது எதிர்மறையானது” என்று தெரியாது. இன்னும் சொல்லப்போனால் ஒரு தீர்க்கத்தரிசி எப்போதுமே எதிர்மறையானவன்தான். அது ஏசாயாவாக இருக்கட்டும், எரேமியாவாக இருக்கட்டும், எசேக்கியேலாக இருக்கட்டும் அல்லது பல்வேறு தீர்க்கத்தரிசிகளாக இருக்கட்டும். எப்போதெல்லாம் தேவ மக்களுடைய வாழ்க்கை தேவனுடைய இருதயத்துக்கு ஒத்ததாக இல்லையோ அப்போதெல்லாம் ‘தேவனுடைய இருதயம் இன்னது’ என்று அவர்கள் எதிரொலிக்கின்றார்கள்.

“இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்” (மாற்கு 6:4). இது மிகவும் எதிர்மறையானது. இயேசு யூதமக்களை நோக்கி, “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று,” (மத்தேயு 23:37) என்று கூறினார். “இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களின் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள். நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்,” என்றார். ஆபேலின் இரத்தம் சிந்தப்பட்டது, சகரியா வாளால் அறுத்துக் கொலைசெய்யப்பட்டது (எந்த சகரியா என்று தெரியவில்லை), தீர்க்கத்தரிசிகளைக் கல்லெறிந்து கொலைசெய்தது - இவர்களெல்லாம் நேர்மறையாகப் பேசியிருந்தால் ஏன் கல்லெறிந்து அல்லது வாளால் அறுத்துக் கொலைசெய்ய வேண்டும்?

ஏசாயா தீர்க்கதரிசியை எப்படிக் கொலை செய்தார்களாம் தெரியுமா? ஒரு மரத்தைக் குடைந்து அதற்குள்ளே அவனை வைத்து, பிறகு அந்த மரத்தை வாளால் அறுத்தார்களாம். மரத்தை அறுக்கும்போது அவனும் அறுபட்டு சாக வேண்டும். அப்படிப்பட்ட தீர்க்கத்தரிசிகளைப்பற்றி, “அவர்கள் கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்,” என்று எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில் எழுதியிருக்கிறது.

தேவனின் பணிவிடை

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் சில சமயங்களில், “இது கிறிஸ்துவுக்குரியது, இது கிறிஸ்துவுக்குரியது அல்ல,” என்று பேசவேண்டிய ஒரு சேவையை, ஒரு பணிவிடையை, தேவன் தம் தீர்க்கத்தரிசிக்குக் கொடுக்கிறார். அதிலிருந்து நாம் பின்வாங்க முடியாது. தேவன் மோசேயை அழைத்து பார்வோனிடம் போகச் சொன்னதுபோல, ஒருவேளை தேவன் என்னிடம் இதுபோன்ற ஒரு செய்தியைக் கொடுத்துப் பேசச் சொன்னால், நான், “ஆண்டவரே, வேறு யாரையாவது இதைப் பேசச் சொன்னால் நலமாக இருக்கும்,” என்றுதான் சொல்வேன். ஏனென்றால், இது மிகவும் கடினமான செய்தி.

ஆனால், இன்னொன்றையும் நாம் சொல்ல வேண்டும். இதற்கு அர்த்தம் இந்தச் செய்தியை முரட்டுத்தனமாகத்தான் பேச வேண்டும் என்பதல்ல. அப்படியல்ல. சில விஷயங்களைக் கண்டிப்பாகத்தான் பேசியாக வேண்டும். “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே!” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னபோது “வெள்ளையடிக்கப்பட்டக் கல்லறகளே!” என்று மிகவும் தன்மையாகப் பேசியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

நாம் வாழும் காலம்

“இது கிறிஸ்துவுக்குரியது; இது கிறிஸ்துவுக்குரியது இல்லை” என்று “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்,” என்று (1 தெச. 5:21) தேவனுடைய வார்த்தை சொல்லும்போது எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்க வேண்டிய பொறுப்பு தேவனுடைய மக்களுக்கு உண்டு. ஏனென்றால் நாம் வாழ்கின்ற காலங்கள் அப்படி. எப்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலங்களிலே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதா அல்லது தங்கள் யூத மதத்திலேயே பாதுகாப்பாக இருந்துவிடுவதா என்ற கேள்வி பக்தியுள்ள நிறைய மக்களுக்கு இருந்தது. ஓர் எடுத்துக்காட்டு நிக்‍கொதேமு. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி அவனுக்கு மிகவும் உயர்ந்த மதிப்பு இருந்தது. எனவேதான், அவன் அவரைச் சந்திக்க வருகிறான் (யோவான் 3). ஆனால், அதே சமயத்திலே தன்னுடைய யூத மதத்தை விட்டுக்கொடுப்பதற்கு அவனுக்கு மனதில்லை. எனவே, இரண்டிற்கும் ஒரு சமரசமாக பொழுதடைந்தபிறகு அவன் இயேசுவைப் பார்க்க வருகிறான். ஏனென்றால், “நம்முடைய ஆட்களுக்கு தெரியவந்தால் இது கொஞ்சம் சிக்கலாக மாறிவிடும். எதற்கு வீணாக சிக்கலை உண்டுபண்ணவேண்டும்?” என்ற எண்ணம்.

உண்மையில் நிக்கொதேமுவும் நானும் ஒரே மாதிரியான ஆட்கள்தான். நான் நிக்கொதேமுவை நூற்றுக்கு நூறு சதவிகிதம் அங்கீகரிக்கிறேன். எதற்கு வீணாக வம்பை வளர்க்க வேண்டும்? சரி, இயேசுவிடம் பேச வேண்டும். இராத்திரி போய் பேசிக்கொள்வோம். “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்.” ஏற்கெனவே ரொம்ப risk எடுத்து வருகிற ஒரு மனிதன். யூத மதத் தலைவன். இப்படிப்பட்ட ஒருவன் தன்னைத் தேடிவரும்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனிடம் இன்னும் கொஞ்சம் தன்மையோடு பேசியிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா இல்லையா? ஆனால், அவர் நாம் எதிர்பார்ப்பதுபோல் தன்மையோடு பேசவில்லை. “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” “சத்தியத்தைத் தேட வேண்டும் என்ற ஆர்வத்தினால் நீ என்னதான் இராத்திரியில் இரகசியமாக என்னைப் பார்க்கவந்தாலும் நான் புளகாங்கிதம் அடைந்து ’ஆஹா! உன்னைப்போன்ற ஒரு பக்திமானை நான் கண்டதில்லை,” என்ற பாணியில்தான் யேசு அவனோடு பேசுகிறார். அவர் எப்போதுமே முகதாட்சணியம் அற்றவர் என்று புதிய ஏற்பாடு சொல்கிறது. “போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும், அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர்” (மாற்கு 12:14).

“நிக்கொதேமு நம்மைப் பின்பற்றுவானா, பின்பற்றாமல் போய்விடுவானா? நிக்கொதேமுவைப்போன்ற ஒரு யூதமதத் தலைவன் நம்மைப் பின்பற்றினால் மற்ற யூதமதத் தலைவர்களும் நம்மைப் பின்பற்றுவதற்கு எவ்வளவு வழியுண்டாகும்,” என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெட்டு வெடுக்கென்று, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்,” என்று அடித்துச் சொல்லிவிடுகிறார். நிக்கொதேமு பணிவுள்ள ஒரு மனிதன்.

ஒருமுறை யூதத் தலைவர்கள் இயேசு கிறிஸ்துவைக் கண்டனம்பண்ணும்போது, “ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா,” என்று அவன் இயேசு கிறிஸ்துவுக்காகப் பரிந்துபேசுகிறான். ஆனால்

A.W.Tozer எழுதிய ஒரு புத்தகத்திலே நிக்கோதேமுவைப்பற்றி நான் வாசித்திருக்கிறேன். இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தபிறகு உண்மையாகவே அவன் தன்‍னுடைய யூதமதத்தை விட்டு வெளியே வந்துவிட்டான் என்றும், அதன் காரணமாக அவனுடைய சொத்துக்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. அவன் பிள்ளைகள் ஏழைகளாக மாறினார்கள் என்றும் அந்தப் புத்தகத்தில் அவர் எழுதுகிறார். வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள பரிசுத்தவான்களைப்பற்றி வேதத்திற்கு வெளியேயும் ஒரு வரலாறு உண்டு என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்தப் பதற்றம் எப்போதுமே இருந்தது. அதற்காக இயேசு கிறிஸ்து, “நீங்கள் உங்கள் யூத மதத்தை விட்டுவிட்டு வாருங்கள்,” என்று எல்லாரையும் அழைக்கவில்லை. ஆனால், அவர் யூத மதத்திற்கு வெளியேதான் வாழ்ந்தார். “அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்,” (எபி. 13:12, 13) என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது.

தேவமக்களின் பேசுதல்

“கிறிஸ்து இப்படிப்பட்ட பக்திமயமான காரியங்களிலிலிருந்து வேறுபட்டவர். இப்படிப்பட்ட பக்திமயமான காரியங்களெல்லாம் கிறிஸ்து என்று நாம் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது,” என்று வெவ்வேறு காலங்களிலே தேவனுடைய மக்கள் அல்லது தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் பேசியிருக்கிறார்கள். முதலாவது அதைப் பேசின தேவமனிதன் ஸ்தேவான். கிறிஸ்து பக்திமயமான காரியங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் என்று புதிய ஏற்பாட்டில் பேசின, பறைசாற்றின, முழங்கின தேவனுடைய மனிதன் ஸ்தேவான். அப்போஸ்தலர் 7ஆம் அதிகாரத்திலே‍ அதைப்பற்றி எழுதியிருக்கிறது. நீங்கள் அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஸ்தாவானுடைய அடிச்சுவடுகளிலே அப்போஸ்தலனாகிய பவுல் அதை இன்னும் தெள்ளத்தெளிவாக எடுத்துப் பேசுகின்றார். பேதுரு கொஞ்சம் தன்மையானவர். எனவே, “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்,” என்று (1 பேதுரு 3:15) பேதுரு தன்மையாக எழுதுகிறார். இதை என்னால் புரிந்துகொள்ள மு‍டிகிறது. எல்லோரும், தங்களை பவுலாகவும், ஸ்தேவானாகவும் கற்பனைசெய்துகொண்டு முழங்கினால் ஸ்தேவானுடைய விதிக்கும், பவுலுடைய விதிக்கும் அவர்கள் தங்களை ஆயத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பேதுருவின் அறிவுரையைக் கேட்டு, நாம் உண்மையை உண்மை என்றும், பொய்யை பொய் என்றும் சொல்ல வேண்டும். ஆனால், சொல்லும்போது நம்முடைய மனப்பாங்கைக்குறித்தும், தொனியைக்குறித்தும், தேர்ந்தெடுக்கின்ற சொற்களைக்குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “வணக்கத்தோடும், சாந்தத்தோடும் மறு உத்தரவு சொல்ல நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” நாம் சொல்வது சாந்தத்தோடும் வணக்கத்தோடும் இருக்க வேண்டும். ஆனால், சொல்கின்ற கருத்து மாறுவதில்லை. ஆமென். சாந்தத்தோடும் வணக்கத்தோடும் சொல்வது என்றால் வழவழ கொழகொழ என்றிருப்பதல்ல. “நீர் தேவனுடைய குமாரனா?” “நீர் சொல்கிறபடிதான்.” இது மிகவும் வணக்கமும் சாந்தமும் நிறைந்த பதில். ஆனால், இதுபோன்ற ஒரு திட்டவட்டமான, தீர்க்கமான பதிலை மனித வரலாற்றிலே எந்த மனிதனும் கூறியதில்லை.

இந்த செய்தி மிகவும் முக்கியமான ஒரு செய்தி. இதை நீங்கள் ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். சொல்லப்பட்ட வசனங்களையெல்லாம் குறித்துக்கொண்டீர்களோ இல்லையோ! பிலிப்பியர் 3:12, 13 , 14 முன்னுரையாக நாம் குறித்துக்கொண்ட வசனங்கள்.

1. கிறிஸ்துவா, மதமா

முதல் குறிப்பு கிறிஸ்துவா, மதமா? இதற்குரிய வசனத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். யோவான் 9ஆம் அதிகாரத்திலே பார்வையற்ற ஒருவனைப்பற்றி நாம் வாசிக்கின்றோம். அவனை ஜெப ஆலயத்திற்குப் புறம்பே தள்ளிவிடுகிறார்கள். புறம்பே தள்ளப்பட்ட மனிதனை, பார்வையற்றிருந்து பார்வை பெற்றவனை, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சந்திக்கிறார்.

2. கிறிஸ்துவா உபதேசமா

இரண்டு, கிறிஸ்துவா உபதேசமா? நீங்கள் குறித்துக்கொள்ளவேண்டிய வசனங்கள். லூக்கா 10:25. “நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன?” What is written in the Law and how do you read it? யோவான் 5:39, 40. “வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.” எல்லா இறையியல் கல்லூரிகளிலும் பெரிய எழுத்துக்களில் எழுதிப்போடவேண்டிய வசனம். வேதவாக்கியங்களை அக்குவேர் ஆணிவேராக ஆராய்ந்துப் பார்த்தும் ஜீவன் உண்டாயிருக்கும்படி இயேசு கிறிஸ்துவிடம் வரமால் இருப்பதற்கான வாய்ப்பு உண்டா? உண்டு. இந்த வசனம் அதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லுகிறது.

3. கிறிஸ்துவா நியாயப்பிரமாணமா

மூன்று, கிறிஸ்துவா நியாயப்பிரமாணமா? எபிரயெர் 8:10; 10:16; ரோமர் 8:2 குறித்துக்கொள்ளலாம். “அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.” “அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்.” “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.” பழைய ஏற்பாட்டிலே யூத மக்களுக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு ஜீவனுள்ள ஆவியின் பிரமாணம் தேவனுடைய மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய பிரமாணங்கள் நம்முடைய இருதயத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அவருடைய கட்டளைகளை நம் மனதில் எழுதுவதுதான் புதிய உடன்படிக்கை என்று எபிரேயருக்கு எழுதின கடிதத்திலே தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால், எச்சரிப்பாய் ஒன்றைச் சொல்ல விரும்புகிற‍ேன். நியாயப்பிரமாணத்தின்படி வாழ்ந்த மக்களுடைய வாழ்க்கைத் தரம் தேவனுக்குமுன்பாக உயர்வாக இருந்தது என்றால் “நம்முடைய ஆவியிலும் மனதிலும் இருதயத்திலும் பிரமாணம் எழுதப்பட்டிருக்கிறது” என்று சொல்கின்ற மக்களுடைய வாழ்க்கைத் தரம் தேவனுக்குமுன்பாக அதைவிட பல மடங்கு உயர்வாக இருக்க வேண்டும். குறிப்பாக ஒன்று சொல்கிறேன் நியாயப்பிரமாணத்தின்படி வாழ்ந்த மக்கள் தங்கள் வருவாயிலே பத்தில் ஒன்றை தேவனுக்கென்று வேறுபிரித்துக் கொடுக்க முடியும் என்றால் “நியாயப்பிரமாணம் எங்கள் உள்ளத்தில், எங்கள் மனதில், எங்கள் இருதயத்தில் எழுதப்பட்டிருக்கிறது” என்று சொல்கின்ற மக்கள் பத்தில் ஒன்றல்ல அதைவிட அதிகமாகத் தேவனுக்கு என்று ஒதுக்குகிறவர்களாக இருக்க வேண்டும். “ஓ! நியாயப்பிரமாணம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு ஜீவனுள்ள ஆவியின் பிரமாணம்தான் உண்டு. ஆனால் தேவனுக்கென்றோ, தேவனுடைய காரியங்களுக்கென்றோ, தேவனுடைய மக்களுக்கென்றோ, தேவையுள்ள மனிதர்களுக்கென்றோ நாங்கள் பத்தில் ஒன்றுகூட ஒதுக்குவதில்லை” என்றால் இவன் பொய்யன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 5, 6, 7ஆம் அதிகாரங்களில், “வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்,” என்றார். எனவே, புதிய ஏற்பாட்டிலே தசமபாகம், பத்தில் ஒன்று, இல்லை என்பதை நம்முடைய பொருளாசைக்கு மூடுதலாக நாம் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. பத்தில் ஒன்றைவிட அதிகமாய் நாம் தேவனுக்கென்று கொடுக்க வேண்டும். உண்மை என்னவென்றால் நம்முடைய பத்தில் பத்தும் தேவனுக்குரியதுதான். ஆனால் நடைமுறை விதிமுறை பத்தில் ஒன்றிற்கு அதிகமாக நாம் தேவனுக்கென்றும் தேவனுடைய மக்களுக்கென்றும், தேவனுடைய காரியங்களுக்கென்றும் மனப்பூர்வமாக, மனமகிழ்ச்சியோடு ஒதுக்க வேண்டும். சகரியா11:12,13யை சகோதரர்கள் சொல்லி நாம் வாசித்தோம். “உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.”

கலாத்தியர் 1:6. “உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்.” 2 கொரிந்தியர்11:4. “எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.” இது முன்னுரையான வசனமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த வசனங்கள் இன்னொரு இயேசுவைப் பிரசங்கிப்பதைப்பற்றிக் கூறுகின்றன. தேவனுடைய மக்கள் உண்மையான இயேசுவை விட்டுவிட்டு ஒரு கற்பனையான இயேசுவைப் பற்றிக்கொள்கிற வாய்ப்பு உண்டா? உண்டு என்று இந்த இரண்டு வசனங்கள் பதிலளிக்கின்றன. இன்னொரு இயேசு, இன்னொரு சுவிசேஷம், அது நம்முடைய பாரம்பரியங்களைத் தொடாது, நம்முடைய மதமுறைமைகளைத் தொடாது, நம் காரியங்களைத் தொடாது. தமிழில் ரொம்ப கொச்சையாகச் சொல்ல வேண்டுமானால் “தளுக்காக” வாழ்ந்துவிடலாம். கிறிஸ்தவனாக. சிலுவைக்கு அங்கு வேலையே இல்லை; சிலுவை இல்லாத கிறிஸ்து உண்மைக் கிறிஸ்துவல்ல. அவர் ஒரு கற்பனைக் கிறிஸ்து. கிறிஸ்துவல்லாத சிலுவை உண்மையான சிலுவை அல்ல. அது ஒரு கற்பனைச் சிலுவை.

4. கிறிஸ்துவா பக்திமயமான காரியங்களா

நான்கு, கிறிஸ்துவா பக்திமயமான காரியங்களா? எபிரேயர் 10:1. “இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.” நியாயப்பிரமாணம், ஒய்வு நாள், திருவிழாக்கள், பலிகள், தேவாலயம் - இவைகளெல்லாம் எவ்வளவு பெரிய விஷயங்கள்! இல்லையா? இவைகளெல்லாம் நிழல்கள்தான். நிஜம் அல்லது மெய்யாகிய கிறிஸ்து வந்தபிறகு இந்த நிழல்களுக்கு எந்தப் பொருளும் இல்லை என்று எபிரேயருக்கு எழுதின கடிதம் கூறுகிறது.

5. கிறிஸ்துவா வழிபாட்டு ஸ்தலமா

ஐந்து, கிறிஸ்துவா வழிபாட்டு ஸ்தலமா, வழிபாட்டுக் கட்டிடமா? யோவான் 2:19. “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்,” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். “அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.” அவர் அந்த வழிபாட்டு ஆலயத்தைப்பற்றிப் பேசாமல் தம்முடைய உடலாகிய ஆலயத்தைக்குறித்துப்பேசினார்.

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா 

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே 

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே 

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே!


மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா 

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா 

மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா 

மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.


நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே 

சுற்றி வந்து மொண மொணன்று சொல்லு மந்திரம் ஏதடா? 

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


இவைகளை நான் எதற்குச் சொல்லுகிறேன் என்றால் இயேசுவை விசுவாசிக்காதவர்களை நீங்கள் அணுகும்போது, கரடு முரடாக எதையும் பேசாமல் “நம்முடைய சான்றோர்கள்கூட இப்படி யோசித்திருக்கிறார்கள்” என்று எடுத்துரைக்கலாம்.

இவைகளுக்குப் பொருள் விளக்கம் கொடுப்பதற்கு இந்தக் கூடுகை சரியான இடம் அல்ல.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உண்மையான ஆலயம். அவருடைய உடலும் தேவனுடைய மக்களாலான உறவும்தான் தேவனுடைய ஆலயம் என்று சொன்னார். யோவான் 4:21,25யைக் குறித்துக்கொள்ளுங்கள். அந்த சமாரியப் பெண், “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே. நீர் என்ன சொல்லுகிறீர்?” அதுதான் அவளுடைய கேள்வி. “அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் (ஆவியில், உண்மையிலும்) உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்,” என்றார்.

இந்த வசனத்தை வாசித்தவுடன் தொழுகை என்றால் என்ன என்ற கேள்வி எழும். அடுத்து ஆவியோடும் உண்மையோடும் என்றால் என்ன என்ற கேள்வி எழும். அப்புறம் ஆவி என்றால் என்ன, உண்மை என்றால் என்ன என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போவோம். நீங்கள் சிந்தித்துப்பாருங்கள். மத்தேயு 24:1, 2. சீடர்கள் ஒருநாள் இயேசுவிடம் எருசலேம் தேவாலயத்தைக் காட்டி, புகழ்ந்தார்கள். “இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” லூக்கா. 21:5, 6. “பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்துச் சிலர் சொன்னபோது, அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.” லூக்கா. 21:5, 6ரும், மத்தேயு 24 :1, 2ம் ஏறக்குறைய ஒரே வசனங்கள்தான். ஆனால், லூக்கா. 21:5, 6 நமக்குப் பிடிக்கும். ஏனென்றால் சீடர்கள் பக்கத்தில் வந்து அந்தக் கட்டிடத்தைக் காட்டி, “எவ்வளவு அழகாய் இருக்கிறது பாரும்! இந்தக் கற்களைப் பாரும், இந்த சித்திரத்தைப் பாரும், இதன் அழகைப் பாரும்,” என்று சொல்கிறார்கள். ஆண்டவராகிய இயேசு பதில் சொல்லுகிறார். “நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும்.”

யூதர்கள் எருசலேம் தேவாலயத்தைப்பற்றி மிகவும் பெருமைகொண்டிருந்தார்கள். “தேவன் இதை இடிக்க விடமாட்டார்,” என்பது அவர்களுடைய நம்பிக்கை. ஆனால், வெஸ்பாசியன் டைட்டஸ் உரோமப் பேரரசனாக இருந்தபோது யூதர்கள் உரோமப் பேரரசை எதிர்த்துக் கலகம்செய்தார்கள். கலகத்தை அடக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள். கடைசியாக வெஸ்பாசியன் தன் மகன் டைட்டசை எருசலேமுக்கு அனுப்புகிறான். நீண்டநாள் முற்றுகைக்குப்பிறகு எருசலேமின் சுவரை உடைக்கிறான். எல்லாவற்றையும் அடித்துத் தரைமட்டம் ஆக்குகிறான். ஆனால், “தேவாலயத்தை மட்டும் ஒன்றும் செய்ய வேண்டாம்,” என்று அவன் கட்டளை கொடுக்கிறான். ஆனால், அந்த சமயத்திலே போர் சேவகர்கள் மத்தியிலே ஒரு வதந்தி பரவுகிறது. “யூதர்களுடைய தேவாலயத்தில் நிறைய பொன் இருக்கிறது. தங்கம் இருக்கிறது. அந்தத் தங்கத்தை அவர்கள் கற்களுக்கிடையே ஒளித்து வைத்துக் கட்டியிருக்கிறார்கள்,” என்கிற வதந்தி பரவுகிறது. போர்வீரர்களுக்கு ஒரே ஆர்வம். “ஆலயத்தின் ஒவ்வொரு கல்லையும் பெயர்த்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தங்கம் எங்கு இருக்கிறது என்று தெரியும்,” என்ற ஆர்வத்தில் கற்களைப் பெயர்த்தார்கள். ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு அது உடைக்கப்பட்டது.

6. கிறிஸ்துவா பாரம்பரியங்களா

ஆறு, கிறிஸ்துவா பாரம்பரியங்களா? மத்தேயு15:3. “அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்.” 2 இராஜாக்கள் 18:4. “அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.” 

தேவனுடைய கட்டளையைவிட மனிதர்களுடைய பாரம்பரியங்கள் மனிதர்களுக்கு மிகவும் முக்கியம். பேசும்போது மிகவும் பக்திமயமாகப் பேசுவார்கள். “நீங்கள் கை கழுவாமல் சாப்பிடுகிறீர்கள்?, ஜெபம் பண்ணாமல் சாப்பிடுகிறீர்கள், ஜெபம் பண்ணாமல் சாப்பிடுகிறீர்களா?” என்று பக்தியொழுகப் பேசுவார்கள்.

7. கிறிஸ்துவா கூட்டமா

ஏழு, கிறிஸ்துவா கூட்டமா? அப்போஸ்தலர் 21:20-25. “அதை அவர்கள் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் அவனை நோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள். புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள். ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்; அதென்னவென்றால, பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள். அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகொண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக்கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும்; அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள். விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள்.” யாக்கோபு எருசலேமில் உள்ள யூதக் கிறிஸ்தவர்களுக்குத் தலைவராக இருக்கிறார். பவுல் எருசலேமுக்கு வந்தபோது அவர், “சகோதரனே, நம்முடைய ஜனத்திலே இந்த விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர்கள் திரளானபேர் உண்டு. ஆயிரமாயிரம் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் உம்மைக்குறித்து, ‘இவன் எங்கு போனாலும் இந்தத் தேவாலயத்திற்கும், நியாயப்பிரமாணத்திற்கும்எதிராகப் பேசுகிறான்’ என்று கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நீர் அப்படிப்பட்டவர் இல்லை என்று இந்த மக்களுக்கு நிரூபிப்பதற்காக மொட்டை அடிப்பதற்கு நேர்ந்துகொண்ட மூன்றுபேர் இங்கு இருக்கிறார்கள். அவர்களை நீர் கூட்டிக்கொண்டுபோய், நீரும் மொட்டையடித்து, அவர்களுடைய நேர்ச்சைச் செலவையும் நீர் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று சொன்னார்.

“எந்த மனிதனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை” என்று இயேசு கிறிஸ்துவைக்குறித்து சொல்ல முடியுமானால், பவுலைக்குறித்தம் ஏறக்குறைய அப்படிச் சொல்ல முடியும். எந்த மனிதனைக்குறித்தும் கவலைப்படாத அஞ்சாநெஞ்சனாகிய பவுலையே அசைத்தது யாக்கோபுடைய அந்த மன்றாட்டு. ஆனால் தேவன் இடைப்பட்டு, ஒரு கலகத்தை எழுப்பி, பவுல் மொட்டை அடிப்பதையும், மொட்டையடிப்பவர்களுடைய செலவை ஏற்றுக்கொள்வதையும் தடுத்தார். ஒருவேளை தேவன் தம் சாட்சியைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு கலகத்தை எழுப்பலாம். அவருடைய தூய்மையான சாட்சியைக் கருதி.

8. கிறிஸ்துவா ஸ்தாபனமா

எட்டு, கிறிஸ்துவா ஸ்தாபனமா? தேவனுடைய மக்களுடைய கூடுகையை ஒரு ஸ்தாபன சூழலிலும் வைக்கலாம், ஒரு குடும்பச் சூழலிலும் வைக்கலாம். பெரிய வியாபார நிறுவனங்கள்போல் சபை நடத்துகிற வியாபார முதலாளிகள் நிறையப்பேர் இருக்கிறார்கள். வியாபாரம் செய்வதில் கெட்டிக்காரர்கள். சபையை ஒரு வியாபாரம்போல் எப்படி நடத்த வேண்டும் என்று யாராவது கற்றுக்கொள்ள விரும்பினால் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். குளுகுளு வசதியுள்ள ஒரு பெரிய அரங்கம் வேண்டும். குழந்தைகளைக் கவனிக்க ஆட்களும், இடமும் வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிய வேண்டும். சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். internet, facebook, twitterபோன்ற சமூக ஊடகங்களில் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். பெரிய திட்டங்கள் தீட்ட வேண்டும். உறுப்பினர்களின் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும். பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டும். அப்போஸ்தலர் 6:13. ஸ்தேவானைக்குறித்து அவர்கள் கொண்டுவருகிற குற்றச்சாட்டு என்ன? “இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்.” இவன் இரண்டு இடங்களை அடித்து நொறுக்குகிறான். ஒன்று இந்த ஸ்தலம், இன்னொன்று இந்த நியாயப்பிரமாணம். ஏனென்றால், ஒரு ஸ்தாபனம் அல்லது நிறுவனம் என்பது பல நூறாண்டுகளாக இருக்கும் பாரம்பரியம்.

உரோமன் கத்தோலிக்க நிறுவனம் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல புரட்டஸ்டண்ட் நிறுவனம் பல நூற்றாண்டுகளாக நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அதுபோல பெந்தெகொஸ்தே நிறுவனம்.

அருமையான பரிசுத்தவான்களே, இவைகளையெல்லாம் தேவனுடைய பிள்ளைகளைத் தாக்குவதற்காக நாம் ஒரு நாளும் பயன்படுத்த வேண்டாம். இவைகளை நாம் அவர்களுக்கு இடித்துச் சொல்வதற்கு பயன்படுத்த வேண்டாம். மிக முக்கியமாக எளிய, தேவனுடைய மக்களை நாம் ஒரு நாளும் இடித்துரைக்க வேண்டாம். தலைவர்கள் யாராவது உங்கள் கையில் அகப்பட்டால், நீங்கள் அவர்களோடு மனந்திறந்து பேசுங்கள். “கிறிஸ்துவா, கட்டிடமா? கிறிஸ்துவா, பாரம்பரியமா? கிறிஸ்துவா, மதஅமைப்பா? கிறிஸ்துவா நியாயப்பிரமாணமா?” என்று தலைவர்கள்போல இருக்கின்றவர்கள் உங்களுக்குத் தொடர்பில் இருந்தால் நீங்கள் பேசுங்கள். அஞ்ச வேண்டாம். மிஞ்சிப்போனால், கல்லெறிந்து கொலை செய்வார்கள். அவ்வளவுதானே! இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும் என்றால் ரொம்ப நலமாக இருக்கும். ஆனால் தேவனுடைய எளிய மக்களோடு, நாம் வாதிட வேண்டாம். அவர்களோடு எப்படி வணக்கத்தோடு பேசுவது என்று கற்றுக்கொள்ள வேண்டும். யாராவது கழுத்தில் சிலுவை வாய்த்த சங்கிலி தொங்கப்போட்டிருந்தால், “அருமையான சகோதரியே, இதுபோன்ற ஒரு சிலுவையை நம்முடைய இருதயத்திலே ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியானவர் பிரயோகிக்க விரும்புகிறார்,” என்று சொல்லுங்கள். “அந்தச் சிலுவையைப் பார்க்கும்போது, அந்தச் சிலுவையினுடைய வேலையை, வேலைப்பாட்டைப் பார்க்கும்போது, அது உண்மையிலேயே ஒரு தங்கமான சுபாவத்தை, பிதாவினுடைய சுபாவத்தை, நம்முடைய வாழ்க்கையிலே உண்டாக்கும்,” என்று உண்மையாகவே இந்தத் தங்கச் சிலுவையின் பொருள் என்னவென்று அவர்களுக்கு விளக்கம் கொடுக்கலாம். இந்த மாதிரி விளக்கம் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு, அடுத்த பிரசங்கத்திற்கு இதைப் பயன்படுத்தலாம் என்பார்கள். நான் இதுபோல ஒரு சகோதரனிடம் பேசிக் கொண்டிருந்தேன்; உடனே அவர், “ஒரு சபையில் என்னைப் பிரசங்கம் பண்ண அழைத்தார்கள். நீங்கள் பேசினதை வைத்துத்தான் நான் பேசினேன்,” என்றார். “அதை நான் உனக்குத்தானே சொன்னேன். இது ஒரு பிரசங்கம் என்று நினைத்து நான் சொல்லவில்லை,” என்று சொன்னேன். அந்த சகோதரனுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் சொன்னேன். அவரோ அதைப் பிரசங்கமாகப் பயன்படுத்திவிட்டார். Praise the Lord.

எனவே, மற்றவர்களைத் தாக்குவதற்காக அல்ல. நாம் நம்முடைய சாட்சியைத் தூய்மையாய் காத்துக்கொள்வதற்கு, எனக்கு நான் கேட்டுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவா, மதமா? கிறிஸ்துவா, ஒரு கட்டிடமா? கிறிஸ்துவா, பாரம்பரியமா?

நானும், நாமும் - நம் தனிப்பட்ட வாழ்க்கையையும், கூட்டு வாழ்க்கையையும் பொறுத்தவரை கிறிஸ்துவல்லாத, ஆனால் மதிப்புடையதுபோல் தோன்றுகின்ற அந்தக் காரியங்களுக்கு இடங்கொடுக்காமல், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தன்னிகரற்ற, ஒப்பில்லாத, ஈடுயிணையில்லாத, மையமும் மேன்மையுமான இடத்திலே வைத்துக்கொள்வதற்கு நாம் பிரயாசப்பட வேண்டும். அதற்கு இந்தச் செய்தியை நாம் பயன்படுத்திக்கொள்வோம். நம்மிடத்தில் விசாரித்துக் க‍ேட்கிறவர்களுக்கு சாந்தத்தோடும், வணக்கத்தோடும் மறு உத்தரவு சொல்வதற்கு இந்த எட்டுக் குறிப்புக்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மறுபடியும் சொல்லுகிறேன்: சாந்தத்தோடும், வணக்கத்தோடும். தேவனுடைய மக்களுக்கு நான் இதைச் சொல்வதற்கு தேவனாலே பணிக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் எப்பொழுதுமே மறுத்தும், எதிர்த்தும், கண்டித்தும் பேசும்போதுகூட தேவனுடைய மற்ற மக்களோடு சாந்தத்ததோடும் வணக்கத்தோடும்தான் பேச வேண்டும். நம்மில் இன்னும் யாரும் தேவாலயத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையே அறுக்கப்பட்ட சகரியாவினுடைய அழைப்பையும், அபிஷேகத்தையும் பெற்றதாக நான் இன்னும் நினைக்கவில்லை. ஒருவேளை ஒரு ஐந்து, பத்து வருடம் கழித்து அப்படிப்பட்ட அபிஷேகம் வெளியரங்கம் ஆகலாம். ஆகவே சொல்ல வேண்டியதை நாம் தீர்க்கமாகவும், எந்த முகதாட்சணியமும் இன்றிச் சொல்ல வேண்டும். ஆனால், “நான் சொல்லவேண்டிய பிரகாரம் நான் சொல்லாததால் ஒரு பிரச்சினை உண்டாயிற்று” என்றிருக்கக்கூடாது.

எனவே, அருமையான பரிசுத்தவான்களே, அருமையான சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவல்லாத எல்லாக் காரியங்களையும் விட்டு நாம் விலகுவோமாக. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களை நாம் ஊ்க்குவிப்போமாக. ஆனால், அப்படி ஊக்குவிக்கும்போது கூடுமானவரை உங்கள் வார்த்தைகள் கிருபை பொருந்தினதாயும், உப்பால் சாரம் ஏற்றப்பட்டதாயும், வணக்கத்தோடும் சாந்தத்தோடும் இருப்பதாக. “என் மகனே, நான் சொன்ன காரியங்களை நினைத்துக்கொள். கர்த்தர் உனக்குப் புத்தியைத் தந்தருள்வாராக.”