Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

தேவனுடைய பணிவிடை - கிறிஸ்துவை வழங்குதல்

Transcribed from a message spoken on May 3, 2015, in Chennai 

By Milton Rajendram

ஊழியம்-பணிவிடை, ஊழியன்-பணிவிடைக்காரன்

இரண்டு காரியங்களை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒன்று, ஊழியம். இரண்டு, சபை. கிறிஸ்தவர்களுக்கு இந்த இரண்டு வார்த்தைகள் பரிச்சயம். நம்முடைய வாழ்க்கை ஒரு நீதியுள்ள, கனிநிறைந்த வாழ்க்கையாக இருப்பதற்கு இந்த இரண்டு காரியங்களைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்த இரண்டு காரியங்களைப்பற்றிய ஒரு தெளிந்த பார்வை நமக்கு இருப்பது மிகவும் அவசியம், மிகவும் பயனுள்ளது. இந்தக் காரியங்களைப்பற்றி நான் பகிர்ந்துகொள்வதற்குக் காரணம் என்னுடைய வாழ்க்கையிலே இந்த இரண்டு காரியங்களால் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்: ஊழியம், சபை.  எனவே, நான் கற்றுக்கொண்ட காரியங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

சில சமயங்களில் சில வார்த்தைகள் அதன் உண்மையான பொருளை இழந்து, இன்றைக்கு வேறொரு பொருளில் பயன்படுத்தப்படுவதால் அந்த வார்த்தைகளை நாம் விட்டுவது நல்லது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள்தான் கிறிஸ்தவர்கள். ஆனால், கிறிஸ்தவம் இன்றைக்கு ஒரு மதமாக, ஒரு பாரம்பரியமாக, இருப்பதால் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தாலும் சரி, விசுவாசிக்காவிட்டாலும் சரி தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்கின்ற ஒரு நிலைமை இருப்பதால் கிறிஸ்தவர்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு விசுவாசிகள், இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள், மறுபடியும் பிறந்தவர்கள், கிறிஸ்துவுக்கு உரியவர்கள், சீடர்கள்போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.

அதுபோல, ஊழியம் என்ற வார்த்தை நல்ல வார்த்தை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஊழியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினபோது அவருடைய எண்ணத்தின்படி அந்த உரோம கிரேக்கக் கால கட்டத்திலே விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் எப்படிப் பணிசெய்வார்களோ அப்படிப் பணிசெய்கிறவன்தான் ஊழியன். விலை கொடுத்து வாங்கின அடிமை என்கிற எண்ணம் இன்றைக்கு நமக்கு மிகவும் அந்நியமானது. “ஒருவனை எப்படி அடிமையாக விலைகொடுத்து வாங்க முடியும்?” என்று நமக்குத் தெரியாததினாலே ஊழியன் என்றால் தலைவர்கள் என்று நாம் நினைக்கின்றோம். அதற்கும் மிஞ்சி ஊழியன் என்றால் ஒரு இராஜாவைப்போன்றவன் என்று நாம் நினைக்கின்றோம். ஆகவே, ஊழியம் என்ற வார்த்தைக்குப்பதிலாக “சேவை” அல்லது “பணிவிடை” என்ற இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். அதுபோல, ஊழியத்தைச் செய்கிறவன் என்ற வார்த்தைக்குப் பதிலாக “சேவகன்” அல்லது “பணிவிடைக்காரன்” என்ற வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன். சேவை, சேவகன்; பணிவிடை, பணிவிடைக்காரன். என்னதான் நாம் கற்பனைசெய்தாலும் ஒரு பணிவிடைக்காரனை ஒரு தலைவனாக, ஒரு இராஜாவாக, நாம் கற்பனைசெய்ய முடியாது. பணிவிடைக்காரன் என்றவுடனே உணவுவிடுதியில் சாப்பாடு பரிமாறுகிறவர், வீட்டு வேலைசெய்கிறவர்போன்ற கற்பனைதான் நமக்கு வரும். பணிவிடைக்காரன் என்பவன், “நீ அதைச் செய், நீ இதைச் செய்,” என்கிறவன் என்று நம்மால் கற்பனை செய்ய முடியாது.

தேவனுடைய நித்தியத் திட்டம்

தேவனுக்கு ஒரு பணிவிடை உண்டு. தேவன் அந்தப் பணிவிடையை நிறைவேற்ற விரும்புகிறார். தேவனுடைய பணிவிடை எதற்காகவென்றால் தேவனுடைய நித்திய நோக்கத்தையும், நித்தியத் திட்டத்தையும் நிறைவேற்றுவதற்காகத்தான். தேவனுடைய நித்திய நோக்கமும், திட்டமும் என்ன? இந்தப் பூமியிலே ஒரு கூட்டம் மனிதர்களிடம் கிறிஸ்துவை உருவாக்கி, அவர்கள்மூலமாக கிறிஸ்து வெளியாக வேண்டும், வெளியாக்கப்பட வேண்டும் என்பதுதான் தேவனுடைய நித்திய நோக்கமும், நித்தியத் திட்டமும் ஆகும். இந்த நோக்கத்தையும், திட்டத்தையும் நிறைவேற்றுவதற்குத் தேவனுக்கு ஒரு பணிவிடை வேண்டும். தேவனுடைய பணிவிடை என்ன, அதை அவர் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

கிறிஸ்துவை வழங்குவதே தேவனுடைய பணிவிடை

“தேவனுடைய பணிவிடை” என்பது “கிறிஸ்துவை நிரப்பீடாகப் பிறருக்கு வழங்குவதே”. இதை நாம் அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும். தேவனுடைய பணிவிடை என்பது கிறிஸ்துவை நாம் பிறருக்கு வழங்குவதே. மனிதர்களுடைய தேவைகள் பலகோடி விதமாக இருக்கலாம். ஆனால், மனிதர்களுடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்கிற ஒன்றேவொன்று, “கிறிஸ்துவை அவர்களுக்கு வழங்குவது, கிறிஸ்துவை அவர்களுக்கு நிரப்பீடாகத் தருவது அல்லது கிறிஸ்துவை அவர்களுக்குப் பரிமாறுவது”.

இது கொஞ்சம் நூதனமாகத் தோன்றலாம். ஒருவன் நோய்வாய்ப்பட்டிருக்கிறான் என்றால், பொருளாதாரத்திலே நெருக்கப்பட்டிருக்கிறான் என்றால் நாம் அவனுக்குக் கிறிஸ்துவை வழங்க வேண்டும், பரிமாற வேண்டும், என்று சொல்லுகிறோம். ஒருவனுடைய வாழ்க்கையிலே பல்வேறு நெருக்கங்களும், வருத்தங்களும், வேதனைகளும், வலிகளும் இருந்தால் தேவன் அவனுக்குக் கிறிஸ்துவை வழங்க விரும்புகிறார், கிறிஸ்துவைப் பரிமாற விரும்புகிறார், என்று நாம் சொல்லுகிறோம்.

கிறிஸ்து மனிதர்களுடைய எல்லாத் தேவைகளுக்கும் போதுமானவர் என்ற உண்மை இந்த முழு வேதாகமத்திலும், குறிப்பாக, புதிய ஏற்பாட்டில் மேலோங்கி நிற்கின்றது. இது சத்தியம். கிறிஸ்துவைத் தவிர வேறு எதைக்கொண்டும் தேவன் மனிதர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கப்போவதில்லை. கிறிஸ்துவைத்தவிர வேறு எதையோகொண்டு மனிதன் தன்னுடைய தேவையைப் பூர்த்திசெய்ய முயல்வான் என்றால் அதை தேவன் ஒருநாளும் அங்கீகரிப்பதோ, ஆமோதிப்பதோ, இல்லை. ஏனென்றால், அவர் தம்முடைய குமாரனைப்பற்றி மிகவும் வைராக்கியமுள்ளவராயிருக்கிறார். கிறிஸ்துவைக்கொண்டு ஒரு மனிதன் தன்னுடைய தேவைகளைத் தீர்க்க வேண்டும், குறைவுகளை நிறைவாக்க வேண்டும் என்பதிலே தேவன் குறியாக இருக்கிறார், கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துவல்லாத ஒன்றைக்கொண்டு ஒருவன் தன்னுடைய வாழ்க்கையை நிரப்பிக்கொண்டு ஒரு பொய்யான திருப்தியடையும்போது அந்த பொய்யான திருப்தியை அவன் வாழ்க்கையிலிருந்து எடுப்பதற்காகத் தேவன் எல்லாவிதமான முயற்சிகளையும் கைக்கொள்வார்.

ஜீவனைப் பரிமாறுவதே பணிவிடை

“நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடு வருவேனென்று அறிந்திருக்கிறேன்,” (ரோமர் 15:29) என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்குச் சொல்லுகிறார். உண்மையிலேயே ஊழியம், சேவை, பணிவிடை என்பது ஒரு மனிதனை அல்லது ஒரு குடும்பத்தை அல்லது ஒரு கூட்டம் மனிதர்களை கிறிஸ்துவின் பூரண ஆசீர்வாதத்தோடு நாம் சந்திப்பதுதான். “நான் ஊழியம் செய்கிறேன், சேவிக்கிறேன், பணிவிடை செய்கிறேன்,” என்று ஒரு மனிதன் சொல்லும்போது அவன் என்ன செய்கிறான்? என்ன செய்யவேண்டுமென்றால் கிறிஸ்துவின் பூரணமான ஆசீர்வாதத்தை நாம் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும்.

மிக முக்கியமாக, 2 கொரிந்தியர் 3ஆம் அதிகாரத்தில் இந்தக் காரியத்தைக்குறித்து எழுதியிருக்கிறது. புதிய உடன்படிக்கையின் சேவை, புதிய உடன்படிக்கையின் பணிவிடை, என்பது மற்றவர்களுக்கு உயிரை வழங்குவது அல்லது ஜீவனைக் கொடுப்பது. பழைய உடன்படிக்கையின் ஊழியம், சேவை, பணிவிடை என்பது மரணத்தைக் கொடுப்பது. புதிய உடன்படிக்கையின் ஊழியம், சேவை, பணிவிடை என்பது உயிரைக் கொடுப்பது அல்லது ஜீவனைக் கொடுப்பது. இந்த ஒரு காரியத்திலே தேவனுடைய மக்களாகிய நாம் தெள்ளத்தெளிவாக இருக்க வேண்டும்.

மரணம் என்றால் செத்துப்போனவன் என்ற அர்த்தம் இல்லை. உண்மையிலேயே மரணச் சூழ்நிலையில் உள்ள ஒரு மனிதனுக்கு அல்லது ஒரு குடும்பத்துக்கு அல்லது ஒரு நிலைமைக்கு நாம் ஜீவனைக் கொண்டுபோகிறோம் என்றால் அதுதான் ஊழியம், சேவை, பணிவிடை. நாம் ஒரு அறிவைக் கொண்டு போகலாம், ஒரு தகவலைக் கொண்டுபோகலாம் அல்லது புறம்பான சில அமைப்புமுறைகளைக் கொண்டு;போகலாம். அவைகள் ஊழியம் ஆகாது. அவைகள் சேவையாகாது. அவைகள் பணிவிடையாகாது. உண்மையிலேயே மரணச் சூழலில் உள்ள நபர்களுக்கு நாம் ஜீவனைக் கொண்டுபோவது மட்டுமே சேவை அல்லது பணிவிடை ஆகும். இந்த வரையறையின்படி நாம் இன்றைக்கு சேவை அல்லது பணிவிடை என்று கருதுகின்ற பல்வேறு காரியங்கள் சேவையுமல்ல, பணிவிடையுமல்ல. ஒரே அளவுகோல். தமிழில் “உரைகல்” என்ற ஒரு வார்த்தை உண்டு. Touchstone இதுதான். இது ஒரு மனிதனுக்கு ஜீவனை அளிக்கிறதா? அது ஜீவனை அளிக்கிறது என்றால் அது சேவை. அது ஜீவனை அளிக்கவில்லை என்றால் அது சேவை அல்ல. இதற்கு நான் சில ஆதாரங்களை உங்களுக்குக் காட்டுகிறேன்.

ஜீவனைக் கொடுக்கும் பாத்திரம்

இரண்டாவது, இந்த ஜீவனை அளிப்பதற்குத் தேவனுக்கு ஒரு பாத்திரம் வேண்டும். ஜீவனை யார் கொண்டுபோவார் என்றால் நாம் சொல்வதுபோல ஊழியக்காரர்கள். ஊழியக்காரர்களுக்குப் பல்வேறு பெயர்களைக் கொடுக்கலாம். அப்போஸ்தலர்கள் என்று சொல்லலாம். மூப்பர்கள் என்று சொல்லலாம் அல்லது உடன் வேலைக்காரர்கள் என்று சொல்லலாம். ஒவ்வொரு கிறிஸ்தவ அமைப்புமுறையிலும் தலைவர்களுக்கு வெவ்வேறு விதமான பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள் Presbyterians மூப்பர்கள் என்று சொல்வார்கள். Apostolic Churches பாஸ்டர் என்று சொல்வார்கள். பிரதரனிலே elder brother என்று சொல்லலாம். பெயர்கள் வெவ்வேறாக இருக்கலாம்.

இந்த ஜீவனைக் கொடுக்கின்ற சேவையை, பணிவிடையை, எல்லாரும் செய்ய வேண்டுமா அல்லது ஒருசிலர்தான் செய்ய வேண்டுமா? எல்லாரும் இதைச் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்குத் தேவனுக்கு ஒருவிதமான பாத்திரம் வேண்டும். தேவனைப் பொறுத்தவரை மரணச் சூழலில் இருக்கின்ற ஒருவருக்கு ஜீவனைக் கொடுப்பது மிகவும் எளிதான காரியம். அவர் தயாராக இருக்கிறார். ஆனால், மரணச் சூழலில் இருக்கிற ஒரு நபருக்கு ஜீவனைக் கொடுப்பதற்கு அவருக்கு ஒரு பாத்திரம் வேண்டும். தேவன் பாத்திரங்களால் மட்டுப்படுத்தப்படுகிறார். ஒரு பாத்திரம் இல்லையென்றால் தேவனால் ஜீவனைக் கொண்டுபோக முடியாது. “இல்லை, இல்லை. தேவன் ஜீவனாக இருக்கிறார். அவர் கையிலே பாத்திரம் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி. அவர் ஜீவனைக் கொண்டுபோய் விடுவார்,” என்று நினைக்கிறீர்களா? அல்லது “தேவன் ஜீவனைக் கொடுக்க விரும்புகிறார். ஆனால் ஒரு பாத்திரம், ஏற்ற பாத்திரம், கிடைத்தால் அவர் ஜீவனை வழங்குவார். ஏற்ற பாத்திரம் கிடைக்க வில்லையென்றால் அவரால் ஜீவனை வழங்க முடியாது,” என்று நினைக்கிறீர்களா? பாத்திரம் தேவையா? தேவையில்லையா? தேவை. உண்மையைச் சொல்லப்போனால் ஏற்ற பாத்திரம் தேவனுடைய கையிலே கிடைக்கவில்லையென்றால் தேவன் தம்முடைய ஜீவனைப் பல சூழ்நிலையிலே வழங்க முடியாது. இன்றைக்குத் தேவன் அப்படிப்பட்ட பாத்திரங்கள் இல்லாததால் மட்டுப்படுத்தப்பட்ட நபராக இருக்கிறார். நாம்தான் அப்படிப்பட்ட பாத்திரங்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பாத்திரங்கள் எங்கேயோ இருந்து வரப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? நாம் எல்லாரும் அப்படிப்பட்ட பாத்திரங்களாக இருக்க வேண்டும். நாம் அப்படிப்பட்ட பாத்திரங்களாக இல்லையென்றால் தேவன் மட்டுப்படுத்தப்படுகிறார். இது இரண்டாவது.

தேவன் பாத்திரத்தை உருவாக்குகிறார்

மூன்றாவது, இந்தப் பாத்திரத்தைத் தேவன் எப்படி உருவாக்குகிறார் அல்லது இந்தப் பாத்திரம் எப்படிப்பட்ட பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதைப்பற்றி இரண்டு குறிப்புகளைச் சொல்வேன். “நான் தேவன் பயன்படுத்தக்கூடிய அப்படிப்பட்ட ஒரு பாத்திரமாக மாறிவிட்டேன்; எனவே, நான் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எங்கெல்லாம் தேவன் ஜீவனைக் கொடுக்க விரும்புகிறாரோ அங்கெல்லாம் என்னைப் பாத்திரமாகக்கொண்டு அவர் அந்த ஜீவனைக் கொடுத்து விடுவார்,” என்று நாம் ஒருநாளும் நினைக்கக்கூடாது. அப்படிப்பட்ட பாத்திரமாக மாறுவதில் நாம் ஒருநாளும் பட்டம் பெற்றுத் தேறிவிடுவதில்லை.

ஒரு மனிதனுடைய உண்மையான தேவை என்னவென்று இன்னொரு மனிதனால் கண்டுபிடிக்கவே முடியாது. அது மிகக் கடினம். என்னதான் மணிக்கணக்காகப் பேசினாலும் ஒருவனுடைய உண்மையான தேவையை மறைக்க முடியும்; உண்மையான நிலை என்ன, உண்மையான தேவை என்ன என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குச் சுற்றி வளைத்துப் பேசலாம். ஒருவனுடைய உண்மையான தேவையைக் கண்டுபிடிக்கிற ஆவிக்குரிய மதிநுட்பமும், ஆவிக்குரிய அறிவும், நமக்கு இல்லை. ஒருவன் கண்ணீரோடு வந்திருப்பான்; நாம் அவனைக் கடிந்துகொண்டு பேசுவோம். ஒருவன் பாவம் செய்துவிட்டு வந்திருப்பார்கள்; நாம் கண்ணீரோடு அணுகுவோம். ஒரு மனிதனுடைய உண்மையான உள்ளான நிலையும், தேவையும் என்னவென்பதை பரிசுத்த ஆவியானவரால் மட்டும்தான் பகுத்துணர முடியும். அவர்தான் ஆழங்களை ஆராய்ந்தறிகிறவர். எங்கோ ஓர் இடத்தில் ஒருவன் ஒரு மிக ஆழமான தேவையிலே இருப்பான். “இப்படிப்பட்ட ஓர் ஆழமான தேவையிலே இந்த மனிதன் இருக்கிறான். நீ போய் அந்தத் தேவையைப் பூர்த்திசெய்,” என்று அதை இங்கே ஒரு மனிதனுக்கு தேவன் உணர்த்துவார்.

ஒரு மனிதனுடைய உள்ளான நிலை நமக்குத் தெரிய வேண்டும் என்று நான் சொன்னேன். ஒருவனைப் புறம்பாக பார்த்து நாம் தீர்மானிக்க முடியாது. ஒருவன் சிரிக்கிறான் என்பதால் எல்லாம் சரியாக இருக்கிறது என்ற அர்த்தம் இல்லை. ஒருவன் நீண்ட மீசை வைத்திருப்பதால் அவனுக்கு சுவிஷேசம் அறிவிக்கவே முடியாது என்று நினைப்போம். ஆனால் நற்செய்தி அறிவித்தவுடன் அவன் அழ ஆரம்பித்து விடுவான். அப்போது நாம் வெட்கப்படுவோம். இப்படிப்பட்ட அனுபவங்கள் நமக்கு உண்டு. எனவே, ஒருவனுடைய உண்மையான உள்ளான நிலையையும், தேவையையும் பகுத்துணர வேண்டும்.

ஆகவே, நாம் அப்படிப்பட்ட பாத்திரங்களாக இருக்கவேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியினுடைய அரசாட்சிக்கு, பரிசுத்த ஆவியினுடைய அரசாங்கத்துக்கு, பரிசுத்த ஆவியினுடைய ஆளுகைக்கு, நடத்துதலுக்கு அடிபணிந்து வாழ்கின்ற மக்களாக நாம் இருக்கவேண்டும். இது மிகக் கஷ்டம். கூட்டத்திற்கு வரும்போது பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்திருப்பது அவ்வளவு கடினமல்ல. ஏனென்றால், மிஞ்சிப்போனால் மூன்று மணிநேரம்தானே! இருபத்து நான்கு மணிநேரமும் பரிசுத்த ஆவியானவருக்கு அடிபணிந்து வாழ முடியுமா? பரிசுத்த ஆவியானவருடைய அரசாங்கதிற்கு, ஆளுகைக்கு, உட்பட்டு பணிந்து வாழ்கின்ற வாழ்க்கை இருந்தால்தான் தேவன் நம்மூலமாய் பிறருக்கு ஜீவனை வழங்க முடியும்.

இப்படிப்பட்ட பாத்திரங்களாக நாம் பயன்படுத்தப்படும்போது ஓர் ஆபத்து உண்டு. அது என்னவென்றால் நாட்கள் செல்லச் செல்ல யாருக்குப் பணிவிடை செய்ய வேண்டும், யாருக்குப் பணிவிடை செய் யக்கூடாது என்பதை நாம் தீர்மானிக்க ஆரம்பிப்போம். உண்மையான பணிவிடைக்காரர்கள் என்றால் அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கும் பணிவிடை செய்ய தேவன் அனுப்புவார்; அவர்களுக்குப் பிடிக்காதவர்களுக்கும் பணிவிடைசெய்ய தேவன் அனுப்புவார். உண்மையாகவே ஓர் அடிமையின் ஆவியும், ஒரு தந்தையின் இருதயமும் இருந்தால்தான் இப்படிப்பட்ட பணிவிடையை அவர்கள் செய்ய முடியும்.

  1. முதலாவது, கிறிஸ்துவைப் பிறருக்கு வழங்குவதுதான், பரிமாறுவதுதான் சேவை, பணிவிடை.
  2. இரண்டாவது, இப்படிக் கிறிஸ்துவை ஜீவனாகப் பரிமாறுவதற்கு பாத்திரங்கள் வேண்டும்.
  3. மூன்றாவது, அந்தப் பாத்திரங்கள் பரிசுத்த ஆவியின் ஆளுகைக்கு உட்பட்டு வாழ வேண்டும். நம்முடைய ஈடுபாடுகள், நாட்டங்கள் நம்மை ஆளுகிறவைகளாயிருந்தால் நாம் பரிசுத்த ஆவியினுடைய ஆளுகைக்கு உட்பட்டு இருக்க முடியாது.
  4. நான்காவது, இந்தப் பாத்திரங்கள் ஒரு தந்தையின் இதயமும், அடிமையின் ஆவியும் உள்ளவர்களாக இருந்தால்தான் தொடர்ந்து தேவனுக்காகப் பணிவிடை செய்ய முடியும். இதை ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.

1. பிறருக்குக் கிறிஸ்துவை ஜீவனாக வழங்குவதே பணிவிடை

முதலாவது, ஒரு மனிதனுக்குள் அல்லது பிறருக்குள் நாம் கிறிஸ்துவை ஜீவனாகத் தருவதுதான் புதிய உடன்படிக்கையின்படி வேலை அல்லது சேவை அல்லது பணிவிடை. “புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி அவரே எங்களைத் தகுதியுள்ளவராக்கினார். அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல் ஆவிக்குரியதாயிருக்கிறது. எழுத்து கொல்லுகிறது. ஆவியோ உயிர்ப்பிக்கிறது” (2 கொரி. 3:6). ஆவியோ உயிர்ப்பிக்கிறது அல்லது பரிசுத்த ஆவியானவர் உயிர் கொடுக்கிறார் அல்லது ஜீவன் கொடுக்கிறார். இதுதான் புதிய உடன்படிக்கையின் சேவை.

கொரிந்தியருக்கு எழுதின இரண்டாவது கடிதத்தின் அடிப்படையில்தான் நான் இந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். இது 2 கொரிந்தியர் கடிதத்தைப்பற்றிய ஒரு பரந்த பார்வை என்றுகூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிச்சிறக்கப்பண்ணி எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும் நாங்கள் தேவனுக்கு கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்துக்கேதுவான மரணவாசனையாகவும் இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்” (2 கொரி. 2:14-16).

நம்முடைய வாழ்க்கையிலே பல்வேறு விதமான மனிதர்கள் குறுக்கிடுவார்கள். பல்வேறு விதமான மனிதர்களை நாம் சந்திப்போம். பல்வேறு விதமான மனிதர்களை நம்முடைய வாழ்க்கையிலே தேவன் குறுக்கிடச் செய்வதற்குக் காரணம், அவர்களிடத்திலே ஜீவன் இல்லை. அவர்கள் மரணத்தில் இருக்கிறார்கள். நமக்குமுன்பு அவர்கள் கடந்துபோவதால் அல்லது நம் வழியிலே அவர்கள் குறுக்கிடுவதால் நாம் அவர்களுக்கு ஜீவனைக் கொடுப்போம் அல்லது ஜீவனைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தேவன் அவர்களை நம்முடைய வாழ்க்கையிலே குறுக்கிடச் செய்கிறார். இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நம்முடைய வாழ்க்கையிலே நாம் சந்திக்கின்ற நபர்களையெல்லாம் தற்செயலாக நாம் சந்திக்கிறோம் என்று நினைகிறீர்களா அல்லது தேவனே நம்முடைய வாழ்க்கையில் நாம் யார் யாரைச் சந்திப்போம், யார் யார் நம்முடைய வாழ்க்கையிலே குறுக்கிடுவார் என்பதை ஏற்பாடு செய்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தேவனே ஏற்பாடு செய்கிறார்.

ஜீவனா, மரணமா?

மனிதர்களுடைய புறத்தோற்றத்தைப் பார்த்து அவர்களுடைய நிலைமையை ஒருபோதும் கணிக்காதீர்கள். அவர்கள் கேலி செய்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள், பகைக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பதைவைத்து நாம் அவர்களுடைய நிலையைக் கணிக்க வேண்டாம். அவர்களுடைய உண்மையான நிலைமை நமக்குத் தெரிய வரும்போது, நாம் தேவனுடைய ஜீவனை அவர்களுக்குப் பரிமாற விரும்பு கிறோம். ஆனால், எப்படிக் கொடுப்பது? நாம் கிறிஸ்துவை அவர்களுக்கு வழங்கி, அந்தக் கிறிஸ்துவை அவர்கள் பெற்றுக்கொண்டால் அவர்கள் வாழ்க்கையின் மரணச் சூழ்நிலை ஜீவனுக்கேதுவாக மாறிவிடும். ஏனென்றால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார். அவர் எந்த இடத்திலே இருக்கிறாரோ அந்த இடத்திலே எப்பேர்ப்பட்ட மரணச்சூழலாயிருந்தாலும் அது ஜீவனுக்கேதுவாக மாறிவிடும். இயேசு கிறிஸ்து ஒரு இடத்திலே இருக்கிறார் என்பதற்கு நிரூபணம், சான்று, சாட்சி அந்த இடத்திலே மரணம் ஜீவனாய் மாறும்.

தேவாலயத்திலிருந்து புறப்படுகின்ற நதியானது எங்கெல்லாம் ஓடிற்றோ அந்த இடங்களிலெல்லாம் உயிர்கள் பிழைக்கும் என்று எசேக்கியேல் 47:9இல் வாசிக்கிறோம். “எங்கள் சபை ரொம்ப நல்ல சபை. நான் ரொம்ப நல்லவன்,” என்று பலர் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை, உங்கள் சபை நல்ல சபையா, நீங்கள் நல்லவரா என்பதற்குச் சாட்சி, சான்று, நிரூபணம் ஒன்றேவொன்றுதான். உயிர்கள் பிழைக்கிறதா அல்லது உயிர்கள் சாகிறதா என்பதுதான் சாட்சி. உங்களைத் தொடர்புகொள்ளும்போது உயிர்கள் பிழைத்தால் உண்மையாகவே தேவன் அங்கு இருக்கிறார். உங்களைத் தொடர்புகொள்ளும்போது இருந்த கொஞ்ச உயிரும் போய்விட்டதென்றால் அங்கே கிறிஸ்து இல்லை. சிலர் ஜீவனைத் தருவதுபோல தந்து அதைப் பறித்துக்கொள்வார்கள்.

“நான் உயிரைப் பறிக்க வந்திருக்கிறேன்,” என்று சாத்தான் முதலிலேயே சொல்வது கிடையாது. முதலாவது, “இது ரொம்ப இன்பமானதுதான், இயல்பானதுதான்,” என்று காட்டிப் பிறகுதான் பறிக்க ஆரம்பிப்பான். “மனிதனின் பார்வைக்குச் செம்மையாய் தோன்றுகிற வழிகள் உண்டு. அதின் முடிவோ மரண வழிகள்”. சாத்தான் ஒரு பாதையிலே நம்மை நடத்தும்போது முதலிலேயே அது மரண வழி என்று தோன்றாது. அது நம் பார்வைக்குச் செம்மையாய்த் தோன்றும். நாம் அதை “இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று வாதிப்போம்.

நாம் சேவை, பணிவிடை செய்கிறோமோ இல்லையா என்பதற்கு நிரூபணம், சான்று, சாட்சி நம்மோடு தொடர்புக்கு வருகின்றவர்கள் பிழைக்கின்றார்களா, ஜீவனைப் பெறுகின்றார்களா இல்லையா என்ற ஒன்றேவொன்றுதான் கேள்வி. அந்த நதி போகின்ற இடமெல்லாம் உயிர்கள் பிழைக்கும். இங்கு உயிர்கள் பிழைக்கிறதா, சாகிறதா என்பதற்கு பெரிய ஆவிக்குரிய அளவுகோல் தேவையே இல்லை. சாதாரண ஆவிக்குரிய அளவுகோல் போதுமானது. நீ கோபமாய் இருக்கிறாயா அல்லது அன்பாய் இருக்கிறாயா என்று உன் மனைவியைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டாம். உங்கள் வீட்டிலே இருக்கிற நாய்க்குட்டியை கேட்டாலே சொல்லிவிடும். இவன் வீட்டிலே உயிர்கள் பிழைக்கிறதா, சாகிறதா என்பதற்கு மனைவி மக்களையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டாம். ஒருவேளை நம்மால் இவர்களுடைய தேவையைப் பூர்த்திசெய்வதற்கு ஒன்றும் பேசவோ அல்லது செய்யவோ அல்லது கொடுக்கவோ முடியாமல் போகலாம். ஆனால், “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிச்சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்” (2 கொரி. 2:14-16).

வாலிபர்களே, உங்களுக்குச் சேவையும், பணிவிடையும் இல்லையென்று நீங்கள் நினைத்தால் பிசாசானவன் உங்கள் கண்களைக் குருடாக்கிவிட்டான் என்று அர்த்தம். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோh அங்கு கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனை, நறுமணம், நிச்சயமாக வீச வேண்டும். நீங்கள் ஒருவேளை ஒன்றும் பேசாமல் போகலாம். நீங்கள் வாழ்கிற விதத்திலிருந்து உங்களுடைய பள்ளித் தோழர்கள், கல்லூரித் தோழர்கள், அறையில் உங்களோடு வாழ்பவர்கள், முக்கியமாக உங்களுடைய பெற்றோர்கள் கிறிஸ்துவின் நறுமணத்தை முகர்வார்கள்.

கர்த்தரை ஏற்றுக்கொண்ட அருமையான தேவனுடைய பிள்ளைகள் இருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் பெற்றோர்கள் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. அவர்களுக்குக் கிறிஸ்துவை எப்படிப் பரிமாறப்போகிறோம்? அவர்களை உட்கார வைத்து, “சிலைகளெல்லாம் பொய். அவைகளுக்குக் கண்ணிருந்தும் பார்க்காது, வாயிருந்தும் பேசாது, காதிருந்தும் கேட்காது. அவைகளைத் தொழுதுகொள் கிறவர்களும் அவைகளைப்போலவே செத்துப்போனவர்கள்,” என்று சொல்லலாமா? இது உண்மையா, பொய்யா? உண்மைதான். வேதாகமம் அப்படித்தான் சொல்லுகிறது. ஆனால், இப்படிச் சொல்வதின் விளைவாக உயிர்களைப் பிழைக்க வைப்பீர்களா அல்லது சாக வைப்பீர்களா? உயிர்களைச் சாகடிப் பீர்கள். “நான் பேசினது சத்தியம்; சத்தியத்தைச் சொன்னதினாலே என்னுடைய பெற்றோர்களுக்கு நான் சத்துருவானேன். நான் கர்த்தருக்காக என் அம்மா அப்பா எல்லாரையும் வெறுத்தேன்,” என்று சொல்லாதீர்கன். நீங்கள் உங்களைப் பெரிய கதாநாயகனாக நினைத்துக்கொள்ள வேண்டாம். கர்த்தருக்காக உங்கள் பெற்றோரைத் தயவுசெய்து நேசியுங்கள்.

உங்கள் பெற்றோர் ஒருவேளை நீங்கள் சொல்கிற சுவிசேஷத்தைக் கேட்காமல் போகலாம். ஆனால், நீங்கள் வீட்டைப் பெருக்குவதையும், துடைப்பதையும், துணி துவைப்பதையும், துணியைக் காயவைப் பதையும், கடைக்குப் போவதையும், வீட்டிலே உள்ள அறையைச் சுத்தம் பண்ணுவதையும் உங்கள் பெற்றோர் வேண்டாம் என்று சொல்லப் போகிறார்களா? வீட்டிலே ரொம்ப நாள் செய்யாமல் ஒரு வேலை தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உங்கள் பெற்றோர் ஆசைப்பட்ட வேலையை, பிள்ளைகள் வெளியூரில் இருப்பதால், செய்ய முடியாமல் போயிருக்கலாம். அப்படியானால் இரண்டு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போய் அந்த வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு வாருங்கள். இப்படிச் செய்வதற்குப்பதிலாக, “தகப்பனையும் தாயையும் வெறுக்காவிட்டால் நீ எனக்குச் சீடனாயிருக்கமாட்டாய் என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்,” என்று வீர வசனம் பேசாதீர்கள். அடுத்த தடவை வீட்டிற்குப் போகும்போது கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்திவிட்டு வாருங்கள். வெள்ளைக் கால்சட்டையும், வெள்ளைச் சட்டையும் போடுவதற்கு ஏதாவது தியாகம் செய்ய வேண்டுமா? அது மிகமிக எளிது. ஆனால், அப்பாவுக்கோ அம்மாவுக்கோ அல்லது உடன்பிறந்தவர்களுக்கோ கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனையை வீசுவது கடினம். அதற்கு ஒரு விலைக்கிரயம் செலுத்த வேண்டும். “நான் சொன்னால் அவர் கேட்கவே மாட்டார். அதனால் அவருக்கு ஜீவனைக் கொடுக்க முடியாது,” என்று சாக்குப்போக்குச் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்லவே வேண்டாம். எப்பொழுதும் நீங்கள் கிறிஸ்துவை, தேவைப்பட்டால் வார்த்தைகளைக் கொண்டு, அறிவியுங்கள். பூவின் நறுமணம் நம்மை ஈர்க்கிறது என்றால் யாரும் நீதிமன்றத்தில் வழக்குப்போட மாட்டார்கள். “இது பக்கத்திலே வருகிறவர்களையெல்லாம் மதமாற்றம் செய்கிறது,” என்று யாரும் சொல்லமாட்டார்கள். தேவனுடைய மக்கள் அப்படிப்பட்ட பூக்களாக, கிறிஸ்துவால் நிறைந்த நறுமணம் வீசுகின்ற பூக்களாக, இருக்க வேண்டும்.

நாம் கிறிஸ்துவை ஜீவனாக வழங்குவதுதான் சேவை, பணிவிடையேதவிர நம்முடைய வாக்குவாதங் களும், சத்தியத்தைத் திட்டவட்டமாக தீர்க்கமாக அறிவிப்பதும் பணிவிடை அல்ல. “நான் சத்தியத்தைத் திட்டவட்டமாக அறிவித்தேன். அதற்குப்பிறகு உங்கள் கால்களில் இருக்கிற தூசியை உதறிவிட்டுப் போங்கள் என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொன்னபடி தூசியை உதறிவிட்டு வந்துவிட்டேன். நியாயத்தீர்ப்பின் நாளிலே சோதோம் கொமோராவிற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் இந்தப் பட்டணங்களுக்கு நேரிடுவது கடுமையாக நடக்கும்,” என்று சொல்லாதீர்கள். உங்களை விட்டால் அப்படியே மேலே இருந்து எலியா மாதிரி அக்கினியை இறக்கி, சுட்டெரித்துவிட்டு, “இயேசுவே தேவன், இயேசுவே தேவன்,” என்று முழங்கிவிட்டு, பாகால் தீர்க்கதரிசிகளைக்; கொன்றுவிடுவீர்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “நீங்கள் இன்ன ஆவி உடையவர்கள் என்பதை அறியீர்களா?” என்பார். என்ன ஆவி உடையவர்கள்?

“பிரதர், நான் இப்போது படிப்பதா, வேலை செய்வதா அல்லது கிறிஸ்துவின் நறுமணத்தை வீசுவதா? என்ற கேள்விக்கு என்ன பதில்? படிப்பதை விட்டுவிட்டு அல்லது செய்கிற வேலையை நிறுத்திவிட்டு “கொஞ்ச நேரம் மணம் வீசுவோம்,” என்று நான் சொல்லவில்லை. “இன்றைக்கு கர்த்தரைப்பற்றி யோசிப்பதையே நான் மறந்துவிட்டேன்,” என்று நாம் சொல்ல முடியாது. மூன்று மணிநேரம் தேர்வு எழுதுகிறீர்கள் அல்லது எட்டு மணி நேரம் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள். தேர்வு எழுதுகிற மூன்று மணி நேரமும் அல்லது வேலை செய்கிற எட்டு மணி நேரமும் கர்த்தரையே நினைத்துக் கொண்டா இருக்கிறீர்கள்? இல்லை. ஆனால், தேவனுடைய பிரசன்னம் எல்லா நேரமும் நம்மோடு இருக்கிறது. கர்த்தருடைய பிரசன்னம் நம்மோடு இருப்பது நம்முடைய ஞாபகசக்தியைப் பொறுத்தது அல்ல. ஆகவே, உங்கள் பெற்றோர்கள்முன், உங்கள் உடன்பிறந்தவர்கள்முன், உங்கள் உறவினர்கள்முன், உங்கள் நண்பர்கள்முன், உங்கள் பகைவர்கள்முன் நற்கந்தம் வீசுகின்ற நறுமணம் உள்ளவர்களாக இருங்கள்.

2. பணிவிடைக்காரர்களாகிய பாத்திரங்கள் உருவாக்கப்படுதல்

இரண்டாவது, தேவன் அப்படிப்பட்ட ஒரு பாத்திரமாய் இந்த சேவகர்களை, பணிவிடைக்காரர்களை, உருவாக்க வேண்டும். மூன்று வருட இறையியல் கல்லூரிகள் இதை உருவாக்க முடியாது. அற்புதமான இறையியல் கல்லூரிகள் மூன்று வருடங்களிலே ஒருவேளை பிளாஸ்டிக் பூக்களை உருவாக்கலாம். உயிருள்ள பூக்களை மூன்று வருடங்களிலே உருவாக்க முடியாது. ஏனென்றால் எடுத்தவுடனே பூ உருவாவதில்லை. முதலாவது ஒரு விதையைப் போட வேண்டும்É அந்த விதை வளரப் பல ஆண்டுகள் ஆகலாம். “மூன்று வருடங்களில் அல்லது மூன்றரை வருடங்களில் நாங்கள் இறையியல் கல்வி கற்றுக் கொடுத்து, காலைமுதல் மாலைவரை பயிற்சிகள் கொடுத்து இவர்களை நாங்கள் பணிவிடைக்காரர்களாக மாற்றிவிட்டோம்,” என்பது அபத்தம், அது பொய். நான் ஆவிக்குரிய கல்விக்கு எதிரான வன் அல்ல. ஆவிக்குரிய கல்வி என்பது அவசியம். ஆனால் ஆவிக்குரிய கல்வி என்பது ஒரு வருடமோ, மூன்று வருடமோ, நான்கு வருடமோ ஒரு பள்ளிக் கூடத்தில் நடப்பது அல்ல. உண்மையான ஆவிக்குரிய கல்வி மனிதர்களுடைய வாழ்க்கையில் நடைபெறுகிறது.

தேவன் நம்மெல்லாரையும் அப்படிப்பட்ட பாத்திரங்களாக உருவாக்க வேண்டுமென்றால் அதற்காக இரண்டு காரியங்களைச் செய்கிறார். ஒன்று, இந்தப் பாத்திரங்கள் இயற்கையான பலத்தால் வாழாமல், அதாவது இயற்கையான திறமையால், இயற்கையான ஞானத்தால், இயற்கையான அறிவால், இயற்கையான சாமர்த்தியத்தால், இயற்கையான வளங்களால் வாழாமல் கிறிஸ்துவால் மட்டுமே வாழக்கூடிய பாத்திரங்களாக அவைகளை உடைக்க வேண்டும். “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை. எங்கள் புறம்பான மனிதனானது அழிந்தும், உள்ளான மனிதனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரி. 4:16). புறம்பான மனிதன் என்பது நம்முடைய ஆத்தும வாழ்வைக் குறிக்கிறது. உள்ளான மனிதன் என்பது நம் ஆவியில் உள்ள கிறிஸ்துவைக் குறிக்கிறது. நம்முடைய புறம்பான மனிதன் என்பது ஆத்தும வாழ்வு, அதாவது இயற்கையான வாழ்வு. இயற்கையான எல்லா வளங்களையும் பற்றிப் பிடித்துக்கொண்டு வாழும் வாழ்க்கை. அவைகளால் வாழாமல், அது ஒவ்வொரு நாளும் அழிந்தும், உள்ளான மனிதனில் கொண்டிருக்கிற கிறிஸ்துவானவர் ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறார்.

ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இந்தப் பாத்திரத்தைத் தேவன் உருவாக்குகிறார். ஏதோவொரு நெருக்கடிமூலம் ஒரு நாளிலே திடுதிப்பென்று அவர் அந்தப் பாத்திரத்தை உருவாக்கி விடுவதில்லை. ஒருவேளை யாக்கோபை யாப்போக்கு ஆற்றங்கரையிலே சந்தித்து அவனுடைய இயற்கையான மனிதனை உடைத்ததுபோல, தேவன் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுகின்ற ஒரு சில சம்பவங்கள்மூலமாக, இழப்புக்கள்மூலமாக, நட்டங்கள்மூலமாக, வருத்தங்கள்மூலமாக, வேதனைகள்மூலமாக உடைத்துப் பயன்படுத்துகின்ற பாத்திரங்களாக நம்மை மாற்றுகின்றார். அதுவும் மிக முக்கியமாக நம் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் நம்முடைய புறம்பான மனிதனை அழித்தும், உள்ளான மனிதனை சிறிது சிறிதாக, சிறிது சிறிதாக, சிறிது சிறிதாகப் புதிதாக்கிக்கொண்டிருக்கிறார். இதே எண்ணத்தை “ஆவியாயிருக்கிற கர்த்தரால்தானே நாம் மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபம் அல்லது மறுசாயலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்” (2 கொரி. 3:18) என்று பார்க்கிறோம். இயற்கையான வளங்களால் வாழ்கிற மனிதன் ஆபத்தமான மனிதன்.

அங்கு சேவை அல்லது பணிவிடை உள்ளதா என்பது ஒருவன் எவ்வளவு சாமர்த்தியமான பேச்சாளன் அல்லது சொற்பொழிவாளன் அல்லது பிரசங்கி என்பதில் இல்லை. அதனுடைய விளைவு என்ன? உயிர்கள் பிழைத்ததா அல்லது உயிர்கள் செத்ததா? நாம் பேசுவதால் குற்றுயிரும் குலையுயிருமாயிருப்பவர்கள் ஜீவனைப் பெற வேண்டும். “அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிற வரைக்கும் நெரிந்த நாணலை முறிக்காமலும் மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்” (மத். 12:20).

இப்போதே இந்தத் திரி மங்கி எரிந்துகொண்டிருக்கிறது. இவர் பேசினார். அந்த திரி பொசுக்கென்று அணைந்து போய்விட்டது. ஆதியாகமத்திலிருந்து திருவெளிப்பாடுவரை ஓங்கி ஓங்கிப் பேசினார். கொஞ்சம் எரிந்த திரியும் அப்போது அணைந்துவிட்டது. ஆனால், அணைந்துவிட்டதே என்று எந்தவித மனந்திரும்புதலோ, வருத்தமோ இல்லை. பிறகு, “நான் பேசினது சத்தியம். அவர் மனந்திரும்பவில்லை. அதனால் அவர் ஜீவனை இழந்துவிட்டார்,” என்று பேசுவார்கள். இல்லை, இல்லை, இல்லை. இந்தப் பாத்திரம் உடைக்கப்படாத பாத்திரம். ஆகவே, அவனால் உண்மையான நிலைமையைக் கண்டடைய முடியவில்லை.

பழைய ஏற்பாட்டிலே இந்தச் சம்பவம் உண்டு. சூனேமியாள் என்ற பெண் எலிசாவைத் தேடி வருகிறாள். அவளுடைய மகன் இறந்துவிடுகிறான். இறந்த மகனை அப்படியே போட்டுவிட்டு அவள் தீர்க்கதரிசியைப் பார்ப்பதற்காக வருகிறாள். ஏனென்றால், தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையைக் கொடுத்ததால்தான் அந்தப் பிள்ளை பிறந்தது. எலிசா தீர்க்கதரிசி தூரத்தில் அந்தப் பெண் வருவதைப் பார்த்து தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து, “நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள்,” என்று சொல்லுகிறான். அவன் ஓடிப்போய் விசாரிக்கிறான். அவன் விசாரித்து நலமாய் இருக்கிறது என்கிறாள். இதுபோன்ற ஒரு பெண்மனியைப் பார்ப்பது மிகவும் அரிது. பழைய ஏற்பாட்டிலே ஆவிக்குரிய பெண்மனி இருந்திருக்கிறார்கள். அவன் ஓடி வந்து, “காரியங்கள் நலமாய் இருக்கிறது,” என்று தன் எஜமானிடத்தில் சொல்கிறான். ஆனால், அவள் உள்ளே வந்தவுடன் எலிசாவினுடைய கால்களில் விழுகிறாள். உடனே கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்.

பொதுவாக தேவனுடைய மக்களுக்கு secretaries இருப்பார்கள். Disciples are more dangerous than the Guru. குரு அப்படிப்பட்ட ஒரு அர்த்தத்தோடு சொல்லியிருக்கவே மாட்டார். “அவர் இந்தப் பொருளிலே இதைச் சொன்னார். அந்தப் பொருளிலே அதைச் சொன்னார்,” என்று இவர்கள் சொல்வார்கள். குரு சொன்ன வார்த்தைகளுக்கு குரு கொடுக்காத பொருளையெல்லாம் சீடர்கள் சொல்வார்கள். அதனால்தான் Disciples are more dangerous than Guru.

“ஐயா 1+1=3 என்று சொன்னால் நீ அல்லேலூயா சொல்ல வேண்டும்,” என்று நான் சிறு வயதிலிருந்து கேட்டிருக்கிறேன். நான் பொய் சொல்லவில்லை. “பிரதர் 1+1=3 என்று சொன்னால் அதிலே ஒரு அர்த்தம் இருக்கும். நீ தனியாகப் போய் அவரிடத்திலே விசாரி. அதற்கு ஒரு ஆவிக்குரிய அர்த்தம் சொல்வார்,” என்று எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். “பிரதர் 1+1=2தானே” என்று பொது இடத்திலே அவரிடம் கேட்டுவிட்டால் அது பெரிய குற்றமாகக் கருதப்பட்டது.

சூனேமியாள் எலிசாவின் கால்களில் விழுந்தவுடன், எலிசா ஏறக்குறைய தன்னைத் தாழ்த்துகிறான். “அவளைத் தடுக்காதே. அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது. கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார்,” என்றான் (2 இரா. 4:19-27).

நம்மோடு தொடர்புக்கு வருகின்ற ஒரு நபருடைய உண்மையான நிலை என்ன என்று நமக்குத் தெரியாவிட்டால் அதற்கு நாம்தான் மனந்திரும்ப வேண்டும்? “நான் மனந்திரும்ப வேண்டிய அவசியம் இல்லை. நான் எதற்கு மனந்திரும்ப வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்?” என்ற எண்ணம் எழுந்தால், இந்தப் பாத்திரம் உடைக்கப்பட்ட பாத்திரம் அல்ல. உடைக்கப்பட்ட பாத்திரம் என்றால், “ஆண்ட வரே, அவனுடைய நிலையை அறிகின்ற ஒரு ஆவிக்குரிய நுட்பமான உணர்வு எனக்கு இல்லையே! என்னுடைய ஆவிக்குரிய உணர்வு அந்த அளவுக்கு உயர்வாக இல்லையே!” என்று மனந்திரும்ப வேண்டும்.

ஏன் உடைக்கப்பட வேண்டும் என்று நான் சொல்கிறேன். உடைக்கப்படுவதென்றால் என்ன? சிலர் தன்னுடைய வாழ்க்கையிலே எத்தனை துன்பங்கள் வந்தாலும் உடைக்கப்படவே மாட்டார்கள்.

ஆத்தும வளங்களால் அல்லது இயற்கையான பலத்தால் வாழ்வது என்ற நம்பிக்கை அற்றுப்போய் விட்டது என்பதுதான் உடைக்கப்படுவது. ஏன் உடைக்கப்பட வேண்டும்? உடைக்கப்பட்ட ஒரு மனிதன்தான் இன்னொரு நபரின் உண்மையான நிலையை, தேவையை, உணர முடியும். நன்றாய் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவர்கள் நோயாளிகளைச் சோதித்துப்பார்த்து என்ன நோய் என்று கண்டுபிடிக்கிறார்கள். நாம் அப்படிப்பட்ட பாத்திரங்களாக இருக்க வேண்டுமென்றால் நோயைக் கண்டறிய வேண்டும். யாரைப் பார்த்தாலும், “நீங்கள் பரிசுத்த ஆவியிலே நிரம்பி ஜெபம் பண்ணுங்கள். உங்கள் பிரச்சினையெல்லாம் தீர்ந்துவிடும். கர்த்தராகிய இயேசுவே என்று பத்து தடவை நல்லா கூப்பிடுங்கள் உங்கள் பிரச்சினையெல்லாம் தீர்ந்துவிடும்,” என்பது தீர்வல்ல.

நான் ஒன்றைச் சொல்லப்போகிறேன். தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு தகப்பன் தன் மகனைப்பற்றி தன் நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் எல்லாரிடமும் மிகவும் பெருமையாகப் பேசுவாராம். ஒருநாள் தன் நண்பரிடம், “என் மகன் கணக்கிலே பெரிய புலி,” என்று சொன்னாராம். “அப்படியா?” என்று நண்பர் வியந்தாராம். அவர் தன் மகனிடம், “2+3 என்ன?” என்று கேட்டாராம். அவன் உடனே, “5” என்று சொன்னானாம். “அப்புறம் 8-3 என்ன?” மகன் அதற்கும் “5” என்று சொல்கிறான். இது சாதாரணக் கழித்தல்தானே என்று நண்பர் நினைத்தாராம். “அப்புறம் 10833–1078 என்ன?” என்று தகப்பான் கேட்டாராம். இது பெரிய எண்தானே! கண் இமைக்கும் நேரத்திலே டப்பென்று அவன், “5” என்று சொன்னானாம். “அப்புறம் √49–2 என்ன?” என்று தகப்பன் கேட்டான். இது ரொம்பக் கஷ்டமான கணக்கு. ஆனால், அதற்கும் அவன் உடனே, “√49–2=5,” என்று சொன்னானாம். நண்பர் அப்படியே ஆச்சரியப்பட்டாராம். “இந்த ஞானமும், இந்த அறிவும் உங்கள் மகனுக்கு எப்படி வந்தது,” கேட்டதற்கு அவருடைய நண்பர், “நான் என்ன கேள்வி கேட்டாலும் நீ 5 என்றுதான் சொல்ல வேண்டும் என்று நாங்கள் வரும்போது அவனிடம் சொல்லித்தான் கூட்டிக்கொண்டு வந்தேன்,” என்று சொன்னாராம்.

இதுதான் நம்முடைய பணிவிடைக்காரர்களுடைய, ஊழியக்காரர்களுடைய, நிலைமை. எந்த நிலைமையில் இருந்தாலும் சரி இவர்களுக்குப் பிடித்த ஒரு சத்தியம் வைத்திருப்பார்கள். அதைத்தான் அவர்கள் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அது காரியம் அல்ல.

ஒருவன் உடைக்கப்பட்ட பாத்திரம் இல்லையென்றால் மனிதர்களுடைய உண்மையான நிலை என்ன என்பதை அறிந்து அதைப் பூர்த்திசெய்கின்ற திராணி அவனுக்கு இருக்காது. யாருடைய பிரச்சினையைப் பார்த்தாலும் உடனே ஓடிப் போய், “உங்கள் பிரச்சினையை நான் தீர்த்துவிடுகிறேன்,” என்று சொல்லவே கூடாது. ஏனென்றால் அந்தப் பிரச்சினைக்குக் காரணம் வேறொரு பிரச்சினையாக இருக்கும். அந்த வேறொரு பிரச்சினைக்குக் காரணம் இன்னொரு பிரச்சினையாக இருக்கும். இன்னொரு பிரச்சினைக்குக் காரணம் இன்னொரு இன்னொரு பிரச்சினையாக இருக்கும். இன்னொரு இன்னொரு பிரச்சினைக்குக் காரணம், இன்னொரு இன்னொரு இன்னொரு பிரச்சினையாக இருக்கும். இதனுடைய ஆதிமூலம் என்ன என்பது நமக்குத் தெரியாது.

“உன் கணவனை அழைத்துக் கொண்டு வா,” என்று சொன்னவுடனே, “எனக்குக் கணவன் இல்லை,” என்று அவள் சொன்னாள்.

எனக்கு ஒரு சகோதரனைத் தெரியும். ஒரு பெண்ணைப் பார்த்து, “உனக்குப் பல கணவர்கள் இருக்கிறார்கள்,” என்று சொன்னார். அவள் அடிக்கப் போய்விட்டாள். இவர் பெரிய தீர்க்கதரிசி என்று நினைத்துக்கொண்டு அப்படிச் சொல்லப் போக, உடனே அவள் புருஷனைக் கூட்டிக் கொண்டுவந்து தகராறு வரப்போய், தகராறை அமர்த்த வேண்டியிருந்தது. இது நடைபெற்ற சம்பவம்.

இன்னொன்று, உடைக்கப்பட்ட மனிதன் அடிப்புவேலையாய்ச் செய்யப்பட்ட ஒரு பாத்திரம் “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் அது தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலன் கொடுக்கும்” (யோவான் 12:24). உடைந்த பாத்திரம் மற்றவர்களுடைய நிலை அறிந்து அவர்களுக்குத் தீவிரமாக என்ன தேவையோ, கிறிஸ்து அவர்களுக்கு எங்கு தேவையோ அந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும். இல்லையென்றால் நாம் சற்று எச்சரிக்கையோடும், கவனத்தோடும், மென்மையாகவும் பேச வேண்டும், நடக்க வேண்டும், வாழ வேண்டும். “எல்லாரும் வரிசையாக நில்லுங்கள். உங்களுடைய எல்லாப் பிரச்சினையையும் நான் தீர்த்துவிடுகிறேன்,” என்று இறங்கிவிடாதீர்கள். ஒரு பிரச்சினையும் இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் அமைதியாக இருந்து உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள். இதற்கு அர்த்தம் தேவனுடைய மக்களுடைய பிரச்சினைகளைப்பற்றிப் பொறுப்பவற்றவர்களாய் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வெட்டு வெடுக்கென்று நாம் ஓடிவிடக் கூடாது.

“ஒருவன் பாவம் செய்தால் உங்களில் ஆவிக்குரியவர்கள் சாந்தகுணமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்” (கலா. 6:1). “நாங்கள் எல்லா உபத்திரவத்திலேயும் ஆறுதல்படுத்தப்பட்டோம். ஏனென்றால் எங்களைப்போன்ற உபத்திரவங்களிலே ஆறுதலில்லாமல் இருப்பவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யும்படிக்கு நாங்கள் பெற்ற ஆறுதலைக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் செய்யும்படிக்கு நாங்கள் ஆறுதல் பெற்றோம்” (2 கொரி. 1:4) என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். ஒன்றைக் கவனிக்க வேண்டும். நான் பெற்ற ஆறுதலைக்கொண்டுதான் மற்றவர்களை ஆற்ற முடியும். நான் பெறாத ஆறுதலை ஒருநாளும் நான் மற்றவர்களுக்கு வழங்க முடியாது. ஆகவே, நாம் ஒரு செய்தியைக் கொடுப்பதால் அல்லது ஒரு போதனையைக் கொடுப்பதால் அல்லது ஒரு வெளிப்பாட்டைக் கொடுப்பதால் நாம் யாருக்கும் எந்த விதத்திலும் உதவப்போவது கிடையாது. அந்த ஆறுதலோ, அந்தத் தேறுதலோ, அந்த வெளிப்பாடோ, அந்தப் போதனையோ அந்தப் பாத்திரத்திற்குள் அடிப்பு வேலைப்பாடாய் உருவாக்கப்பட வேண்டும். செய்தி செய்தியாளருக்குள் அடிப்பு வேலைப்பாடாய் உருவாக்கப்பட வேண்டும். ஒரு செய்தியை கிளிப்பிள்ளைப்போல ஒப்பிப்பது எளிது. நமக்கு இந்த மாதிரி சொற்சிலம்பம் செய்வது மிகவும் பிடிக்கும். The message must be wrought into the messenger.

1 கொரி. 4, 2 கொரி. 4, 6, 11 ஆகிய அதிகாரங்களில் உண்மையாகவே அப்போஸ்தலனாகிய பவுல் தான் சென்ற பாதையை எழுதுகிறார். ஒரு சேவகன் அல்லது ஒரு பணிவிடைக்காரன் எப்படிப்பட்ட பாடுகளும், துன்பங்களும் நிறைந்த வாழ்க்கையின்மூலமாய் உருவாக்கப்படுகிறான் என்பதற்கு இந்தப் பகுதிகளை நீங்கள் வாசியுங்கள். வாசித்து முடித்துவிட்டு யாராவது நம்மில் எழுந்து “நான் அப்போஸ்தலன், நான் தீர்க்கதரிசி, நான் மூப்பன், போதகன்,” என்று தைரியமிருந்தால் முன்வந்து சொல்லலாம். “எல்லாரும் துடைத்துப்போடுகிற கந்தையைப்போல் ஆனேன்.” இந்த அதிகாரங்கள் முழுவதையுமே வாசியுங்கள்.

3. பாத்திரங்கள் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும்

மூன்றாவது, இப்படிப்பட்ட பாத்திரங்கள் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும். வாலிபர்கள்கூட பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட முடியுமா? முடியும். யார் யாரெல்லாம் அவருக்குக் கீழ்ப்படிய முன்வருகிறார்களோ அவர்கள் எல்லாரையும் பரிசுத்த ஆவியானவர் நடத்த முடியும். அப்போஸ்தலர் 8ஆம் அதிகாரத்திலே பிலிப்புவைப் பார்த்து பரிசுத்த ஆவியானவர், “நீ போய் அந்த இரதத்தோடே சேர்ந்துகொள்,” என்று சொல்கிறார். சில சமயங்களில் நான் இப்படி ஆசைப்படுவேன். பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவரையும் இப்படித் துல்லியமாகச் சந்தித்தால் நேரம் வீணாகாது. “அதோ போகிறார் பார். நேரே போய் அவனுக்குச் சொல்ல வேண்டியது இது,” என்று அவர் சொன்னால் எப்படி இருக்கும்! பரிசுத்த ஆவியானவர் இப்படி நடத்துவாரா? நிச்சயமாய் அவர் நடத்துவார். இந்த மாதிரி dramaticஆக, spectacularஆக, நடத்துவார் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆனால், நாம் தேவனுக்காக ஒரு சேவை அல்லது பணிவிடை செய்கிறோமென்றால் அதைப் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டுத்தான் செய்ய வேண்டும்.

இன்னொன்றை நான் கேட்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் என்னுடைய காதுகளிலே பேசுவாரா? “அதோ அவர் இருக்கிறார். அவரிடம் போய் இந்த வாக்கியத்தைச் சொல் அல்லது இதைச் செய் அல்லது இதைக் கொடு அல்லது இதை வாங்கு,” என்று சொல்வாரா? சொல்லமாட்டார். அவர்களைப்பற்றிய ஒரு உணர்வை அல்லது ஒரு எண்ணத்தை நம்முடைய இருதயங்களிலே அவர் வைப்பார்.

4. பாத்திரங்களுக்குத் தந்தையின் இருதயமும், அடிமையின் ஆவியும் தேவை

நான்காவது குறிப்பு. பாத்திரம் என்றவுடனே வேதாகமத்தை தலைகீழாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லுகிறேனா? “நான் இப்போது உடைக்கப்பட்ட பாத்திரம், அடிப்புவேலைப்பாடாய் செய்தி எனக்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது, பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறேன். இப்போது பணிவிடை செய்வதற்கு நான் ஆயத்தமாக இருக்கிறேன். என்னுடைய பணிவிடையைப் பெறுவதற்கு யார் ஆயத்தமாக இருக்கிறார்கள்,” என்பதல்ல. எல்லாத் தேவையையும், எல்லாப் பணிவிடையையும் அன்பினால் உந்தப்பட்டு நாம் செய்ய வேண்டும். பயத்தினால் உந்தப்பட்டு அல்ல. அவர்களுடைய உபகாரத்தைப் பெறுவதற்காக அல்ல. “நான் இந்தப் பத்து ரூபாயைக் கொடுத்தால் அவர்களுடைய உபகாரத்தைப் பெறுவேன் அல்லது நான் இந்த உதவியைச் செய்தால் இந்த ஆதரவைப் பெறுவேன்,” என்பதற்காக யாருக்கும் எந்தச் சேவையும், எந்தப் பணிவிடையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அன்பினால் உந்தப்பட்டு நாம் ஒரு பணிவிடையைச் செய்ய வேண்டும்.

“கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே!” (1 கொரி. 4:15) என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். பிரசங்கம் பண்ணுவதற்கு நம் எல்லாருக்குமே ஆர்வம் உண்டு. என்னைப் பொறுத்தவரை பிரசங்கம் பண்ணுவது மிகவும் ஆபத்தானது. எனக்கு இரகசியமான ஒரு ஆசை உண்டு. நாம் பிரசங்கமே பண்ணக் கூடாது. எவ்வளவோ பிரசங்கங்கள் இருக்கின்றன! ஐந்து வருடத்திற்கு அல்லது யோசேப்பு ஏழு வருடத்திற்குத் தானியத்தை சேகரித்து வைத்ததுபோல, ஏழு வருஷம் பிரசங்கம் இல்லாமல் எடுத்த குறிப்புகளை வைத்து ஏழு வருடத்திற்கு வாழலாம். சில சமயங்களில் ஏன் இந்த செய்தி கொடுக்கிறோம் என்றால் செய்தி இல்லை என்றால் கை கால் உதற ஆரம்பித்துவிடும். “நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவு பண்ணப்படவும் விரும்புகிறேன்,” (2 கொரி. 12:15) என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார். இதை நீங்கள் நன்றாய்க் கவனிக்க வேண்டும். நம்முடைய எதிர்பார்ப்பு என்னவென்றால் நான் அன்புகூர்ந்து யாருக்காவது பணிவிடை செய்திருந்தால் அவர் என்னில் திரும்ப அன்புகூர வேண்டும் அல்லது அவர்கள் நிறையப்பேரைவிட என்மேல் அன்பு வைத்திருக்க வேண்டும். இந்தப் பரீட்சையையெல்லாம் நீங்கள் பிரயோகித்துப் பார்க்க வேண்டும். “உங்களில் நான் எவ்வளவு அதிகமாய் அன்புகூர்ந்தும் அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும்கூட…” இவ்வளவு குறைவாய் அன்புகூருகிறவர்களுக்கு நாம் ஒரு வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நாம் நினைக்கலாம்.

நம்முடைய கூடுகைக்கு வராத ஒரு நபருக்கு நாம் சேவை அல்லது பணிவிடை செய்வோமா? செய்யலாமா? செய்யலாம். நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. நம் கூடுகைக்கு வராத சகோதரனுக்கு பொதுவாக நாம் சேவை செய்ய மாட்டோம். ஒரு நன்மை அல்லது ஒரு பணிவிடை செய்யும்போதே “இவர் நம்முடைய கூடுகைக்கு வருவாரா?” என்ற எண்ணம் மேலோங்கிநிற்கும். பெந்தெகோஸ்தே காரர்கள் அதைவிட அதிகமாகப் போய்விடுவார்கள். தசமபாகம்தான் அவர்களுடைய ஐக்கியத்தினுடைய அடையாளம். ஞானஸ்நானம் கொடுக்கும்போதே, “நீ தசம பாகம் தருவாயா?,” என்று வாக்குறுதி கேட்பார்கள். “நீ இந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு இன்னொரு உணவகத்தில் போய் பில் கட்டினால் யாராவது ஒத்துக்கொள்வானா? இங்கே பால் குடித்து விட்டு வேறொரு இடத்தில் போய் வேலை செய்தால் சம்பளம் கொடுப்பானா? இதை யாராவது ஒத்துக்கொள்வானா?” என்ற பிரசங்கத்தை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை நீ அவர்களுடைய ஐக்கியத்திலே ஐக்கியமாயிருக்கிறாயா என்பதற்கு நிரூபணமே தசமபாகம்தான்.

நான் சொல்கிறேன். நீ இனி ஒரு பைசா தராதே. உண்மையிலேயே தேவையுள்ள குறைச்சலுள்ள பரிசுத்தவான்களுக்குக் கொடு. அப்படியென்ன தேவன் ஒரு பிடி சோறு இல்லாமல் விட்டுவிடுவாரா?

“உங்களால் நான் அவ்வளவு குறைவாக அன்புகூரப்பட்டும் உங்கள் ஆத்துமாக்களுக்காக மிகவும் சந்தோஷமாகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் வாஞ்சிக்கிறேன்,” இதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். நாம் உண்மையிலேயே மற்றவர்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் அதுவும் மிகவும் சந்தோஷமாய்… முக்கி முனகி… தேவனுடைய மக்களுக்கு நாம் பணிவிடை செய்யும்போது நாம் எதிர்பார்க்கின்ற ஒரு வளர்ச்சியோ, பக்குவமோ அல்லது முதிர்ச்சியோ அல்லது பலனோ வரவில்லையென்றால் நாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிடுவோம். அவர்களுக்கு மேற்கொண்டு சேவையும் பணிவிடையும் செய்வதற்கு மிகவும் துக்கப்படுவோம்.

சில சமயங்களில் நாம் இந்த உலகத்து மக்களைப்போல யோசிப்போம். அப்படியல்ல. ஒரு தந்தையின் இதயம் என்றால் எப்படி மெல்கிசேதேக்கு பணிவிடை செய்கிறாரோ அதைப்போல் பணிவிடை செய்வது. பணிவிடை செய்யும்போது நீங்கள் என்னுடைய கூடுகைக்கு, என்னுடைய ஐக்கியத்திற்கு வர வேண்டும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை. போர் புரிந்து வருகிற ஆபிரகாமுக்கு மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுபோய் அவனுக்குப் பணிவிடை செய்தான். அவனை ஆசீர்வதித்தான். அவன் மறைந்துவிட்டான். தோன்றினான், பணிவிடை செய்தான். மறைந்தான். இதுபோன்று நாம் பணிவிடை செய்ய முடிந்தால் மிகவும் நலமாக இருக்கும்.

கடைசியாக, “கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தகுணமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசினுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும்” (2 தீமோ. 2:24-26). ஒரு தந்தையின் இதயம், அன்பு. அது மட்டுமல்ல. உண்மையிலேயே நாம் சேவையும் பணிவிடையும் செய்ய வேண்டுமென்றால் மிகவும் மனத்தாழ்மையோடும், பணிவோடும் செய்ய வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல், “நான் மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் சேவித்தேன்,” என்று சொல்லுகிறார். “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15).

குறிப்பாக உங்களுடைய நண்பர்களுக்கு, உடன்பிறந்தவர்களுக்கு, பெற்றோர்களுக்கு, அயலகத்தாருக்கு தேவன் இப்படிப்பட்ட ஒரு சேவையை நம்மூலமாய்ச் செய்வாரென்றால் நிச்சயமாய் நம்மூலமாய் கிறிஸ்து பலருக்குள் பரிமாறப்படுவார்.

இந்தச் செய்தியினுடைய பாரம் என்னவென்றால் தேவனுடைய மக்கள் எல்லார்மூலமாகவும் நம்மோடு தொடர்புடைய ஒவ்வொருவருக்குள்ளும் சிறிதளவாவது கிறிஸ்து பரிமாறப்பட வேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும், “இன்று யாருக்காவது சிறிதளவாவது கிறிஸ்துவைப் பரிமாற நான் விரும்புகின்றேன்,” என்பது என்னுடைய ஒரு ஜெபம். என்னால் இப்படிப் பரிமாற முடியவில்லையென்றால் அதற்காக நான் மிகவும் வெட்கப்படுவேன். இதற்கு அர்த்தம் நான் ஒவ்வொரு நாளும் பத்துப் பேருக்காவது துண்டுப் பிரசுரம் கொடுப்பேன் என்பதல்ல. நம்மோடு தொடர்புடைய மக்கள் உண்மையிலேயே பிழைக்கும்படிக்கு கிறிஸ்துவைப் பரிமாறுங்கள்.

  1. முதலாவது, சேவை அல்லது பணிவிடை என்பது கிறிஸ்துவை ஜீவனாக மற்றவர்களுக்குள் பரிமாறுவது. அவர்கள் ஜீவன் பெறுகிறார்களா இல்லையா என்பதுதான் அளவுகோல். ஜீவனைப் பெறுகிறார்கள் என்றால் அங்கு சேவை, பணிவிடை, நடைபெறுகிறது. அவர்கள் ஜீவனைப் பெறவில்லையென்றால் அங்கு சேவை, பணிவிடை நடைபெறவில்லை.
  2. இரண்டாவது, அப்படி ஜீவனாய் கிறிஸ்துவைப் பரிமாறுவதற்கு தேவனுக்குப் பாத்திரங்கள் வேண்டும். அந்தப் பாத்திரங்கள் உடைக்கப்பட்ட, தன்னுடைய இயற்கையான வாழ்க்கை உடைக்கப்பட்ட பாத்திரங்களாய் அந்தச் செய்தி அவர்களுக்குள் அடிப்புவேலைப்பாடாய் உருவாக்கப்பட்ட, பாத்திரங்களாய் இருக்க வேண்டும். மூன்றாவது, அந்தப் பாத்திரங்கள் பரிசுத்த ஆவியானவருடைய நடத்துதலுக்கு உட்பட்டுப் பரிமாற வேண்டும். நாம் நம்முடைய விருப்பு வெறுப்புகளை வாழவில்லை. நம்முடைய எல்லாச் சேவைக்கும், எல்லாப் பணிவிடைக்கும் அன்பு ஒன்றே உந்துநோக்கமாக இருக்க வேண்டும். அதைத்தவிர வேறு எதுவும் நோக்கமாக இருக்கக்கூடாது. “நான் இந்த மனிதன்மேல், இந்தச் சகோதரன்மேல், சகோதரிமேல் உண்மையாகவே அன்புகூருகிறேன். அவர்களுடைய வாழ்க்கையில் கிறிஸ்து குறைவுபடுகிறார் அல்லது அவர்களுடைய வாழ்க்கையிலே கிறிஸ்து இல்லை அல்லது அவர்கள் வாழ்க்கைக்குள் கிறிஸ்து வர வேண்டும்,” என்கிற அன்போடு மட்டுமே நான் இதைச் செய்கிறேன். வேறு எந்த நோக்கமும் இல்லை.
  3. தொடர்ந்து அவர்களுடைய வாழ்க்கையின் எல்லாக் காரியங்களுக்கும் அவர்கள் மரிக்க வேண்டும்.
  4. அதுபோல் எல்லா நேரத்திலும் ஒரு தந்தையின் இருதயத்தோடும், சாந்தத்தோடும், வணக்கத்தோடும் “தேவன் எப்படியாவது மனந்திரும்புதலை அருளமாட்டாரா!” என்ற மனப்பாங்கோடு எல்லாப் பணிவோடும் இந்த நோக்கத்தை நாம் பூர்த்திசெய்ய வேண்டும்.

நம்மால் இது முடியுமா? நாம் இதை விரும்புகிறோமா? நீங்கள் இதை விரும்புகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் கேட்ட காரியங்களைவைத்து தேவனிடம் ஜெபியுங்கள். நம்முடைய ஜெபம் எல்லாவற்றிற்கும் தேவன் ஒருநாள் பதில் தருவார். இந்த உலகத்திலே இப்படிப்பட்ட சேவைக்காரரும், பணிவிடைக்காரரும் அதிகமாக இல்லை. துரைத்தனம் பண்ணுகிறவர்கள், அதிகாரம் பண்ணுகிறவர்கள், இறுமாப்புள்ளவர்கள் அதிகம். தேவன் நம்மை இப்படிப்பட்ட வாழ்கின்ற சேவைக்காரராக, பணிவிடைக்காரராக மாற்றுவாராக. ஆமென்.