02 - லேவியராகமம்
அதிகாரம் 1 – சர்வாங்க தகனபலி - பாகம் - 1
முன்னுரை
முழு வேதாகமத்தையும் ஒரு வருடத்தில் படித்து முடிப்பதற்கு கிறிஸ்தவர்கள் பலவிதமான "வாசிக்கும் திட்டங்களை"ப் பயன்படுத்துகிறார்கள். நல்லது. வரவேற்கிறேன், பாராட்டுகிறேன், உற்சாகப்படுத்துகிறேன். ஆதியாகமத்தில் தொடங்கி வாசித்துக்கொண்டே வருகிறார்கள். யாத்திராகமம் முடிந்துவிட்டது. இதோ! லேவியராகமம் வருகிறது. இஸ்ரயேல் மக்கள் வனாந்தரத்தில் தடுமாறியத்தைப்போலவே, அவர்கள் லேவியராகமத்திலும், எண்ணாகமத்திலும் தடுமாறி, உபாகமத்திற்கும், நியாயாதிபதிகளுக்கும் ஓடிவிடுகிறார்கள். ஏனென்றால், அங்கு மீண்டும் வரலாறு வருகிறது. கதை எல்லாருக்கும் பிடிக்கும். பலிகளைப்பற்றிய அடிப்படையான காரியங்களை அறியாததால், அறிய விரும்பாததால், அவர்கள் லேவியராகமத்தில் தடுமாறுகிறார்கள், திசைமாறுகிறார்கள். மிருகங்கள், பலிகள், இரத்தம்தெளித்தல் போன்றவைகளைப்பற்றிய அடிப்படை விவரங்களைக் கற்றுக்கொள்ளாதவரை லேவியராகமத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அவைகளைப் புரிந்துகொண்டால், நாம் லேவியராகமத்தைப் புரிந்துகொள்வோம். அப்போது அது மூடிய புத்தகமாக இருக்காது, அது திறந்த புத்தகமாக மாறிடும். "உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்," என்று பவுல் பிலிப்பியர் 2:17இல் பானபலியைப்பற்றிக் கூறுகிறார். லேவியராகமத்தைப் புரிந்துகொள்ளாமல் இந்த வசனத்தை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? லேவியராகமத்தைப் புரிந்துகொள்ளாமல் இயேசு கிறிஸ்துவையும், அவருடைய சிலுவை மரணத்தையும் தேவன் விரும்புகிறபடி, எதிர்பார்க்கிறபடி, நாம் புரிந்துகொள்ள முடியாது.
லேவியராகமம் படித்துப் புரிந்துகொள்வதற்குச் சற்று கடினமான புத்தகம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கொஞ்சம் முயன்றால், அதை நாம் புரிந்துகொள்ளமுடியும். லேவியராகமத்தின் இருபத்தேழு அதிகாரங்களையும் வேகமாக முடிக்கவேண்டும் என்பதைவிட ஆழமாகப் படிக்கவேண்டும் என்ற எண்ணமே எனக்குள் மோலோங்கிநிற்கிறது. உங்களுக்கும் அப்படிப்பட்ட எண்ணம்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
லேவியராகமம் 1:1-9
ஐந்து பலிகள்
இன்று நாம் லேவியராகமம் முதல் அதிகாரத்தைப் பார்க்கப்போகிறோம். லேவியராகமம் முதல் அதிகாரம் 1 முதல் 9 வரையிலான வசனங்களை நாம் வாசிப்போம்:
"கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும். அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடார வாசலில் கொண்டுவந்து, அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன். அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி, அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள். அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி."
கடந்த வாரம் நாம் லேவியராகமத்துக்கு ஒரு முன்னுரை பார்த்தோம்: லேவியராகமத்தின் கருப்பொருள் பரிசுத்தம் என்று பார்த்தோம். பரிசுத்தமான தேவனை பாவ மக்கள் எப்படி அணுகமுடியும்? தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள், பலிகளின்மூலம் தம்மை அணுகுவதற்காகத் தேவன் பல வழிமுறைகளை, பல நெறிமுறைகளை, கொடுக்கிறார். அதில் ஒரு வழிமுறை பலிகள்.
லேவியராகமத்தில் ஐந்து பலிகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஐந்து பலிகளை
1. சுகந்த வாசனையான பலி:
2. சுகந்த வாசனையற்ற பலி என நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. சர்வாங்க தகனபலி,
2. போஜனபலி,
3. சமாதானபலி ஆகிய மூன்றும் சுகந்த வாசனையான பலிகள்.
1. பாவநிவாரண பலி,
2. குற்றநிவாரண பலி ஆகிய இரண்டும் சுகந்த வாசனையில்லாத பலிகள்.
இன்று நாம் முதலாவது சர்வாங்க தகனபலியைப் படிக்கப்போகிறோம். “சர்வாங்க தகனம்.” இதுபோன்ற வார்த்தைகள் நமக்கு அந்நியமாகத் தோன்றும்.
தமிழ் வேதாகமத்தின் சுருக்கமான வரலாறு
நாம் பயன்படுத்தக்கூடிய இந்தத் தமிழ் வேதாகமம், முந்நூறு ஆண்டுகளுக்குமுன்பு மொழிபெயர்க்கப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கிற தரங்கம்பாடியில் முந்நூறு ஆண்டுகளுக்குமுன்பு ஊழியம் செய்த ஜெர்மன் மிஷனெரி பர்த்தலோமேயு சீகன்பால்க் என்பவர்தான் முதன்முதலாக வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதன்பின்பு J Philipp Fabricius என்பவர் அதைத் திருத்தி மெருகேற்றினார். பின்பு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் குழுவைச் சேர்ந்தவர்கள் மேலும் திருத்தி கூடுதலாக மெருகேற்றினார்கள். நாம் இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கிற தமிழ் வேதாகமம் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன்பு Henry Bower என்பவர் தலைமையிலான ஒன்பது பேர் சேர்ந்த ஒரு குழுவால் இன்னும் அதிகமாகத் திருத்தப்பட்டது. Henry Bower சென்னையில் பிறந்து வளர்ந்தவர்; இவர் ஓர் ஆங்கிலோ இந்தியர். இவர் சென்னையில் வேப்பேரியில் இருக்கும் ஒரு வேதாகமக் கல்லூரியில் படித்தார்; சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்தார். எனவே, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமத்தைத்தான் இன்றைக்கு நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். மொழியில் நிச்சயமாக மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கின்றன. வார்த்தைகளுடைய பொருள் மாறியிருக்கும்.
தமிழ் வேதாகமத்தின் வரலாற்றை எதற்காகச் சொல்கிறேனென்றால், ‘சர்வாங்கம், ‘தகனம்போன்ற வார்த்தைகளை படிக்கும்போது, பரிச்சயத்தின் காரணமாக, ஒருவேளை அவை நமக்குப் புரிந்ததுபோல் இருக்கும்; சில நேரங்களில் புரியாததுபோலவும் இருக்கும். எனவே, இந்த வார்த்தைகளின் உண்மையான பொருளைத் தேட வேண்டும்.
வ. 1 - ஆசாரிப்புக்கூடாரத்துக்கு அழைக்கிறார்
முதல் பலி, சர்வாங்க தகனபலி. தொடர்ந்து பார்ப்பதற்குமுன் காணிக்கை, பலி என்ற இரண்டு வார்த்தைகளைக் கொஞ்சம் விளக்க வேண்டும்.
காணிக்கையைக் குறிக்க கொர்பான் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு பலிக்கும் ஒரு குறிப்பிட்ட, பிரத்தியேகமான வார்த்தை உண்டு. சர்வாங்க தகனபலிக்கான எபிரேய வார்த்தை OLAH. இவ்வாறு ஐந்து பலிகளுக்கும் ஐந்து வெவ்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சரி, ஆரம்பிப்போம். முதல் வசனம்: கர்த்தர் ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து மோசேயுடன் பேசுகிறார்.
ஆசரிப்பு என்றால் ‘சந்திக்கின்றஅல்லது ‘கூடுகின்ற’என்று பொருள். ஆசரிப்புக்கூடாரம் என்றால் சந்திக்கின்ற கூடாரம் என்று பொருள். ஆம், அது தேவ மக்கள் தேவனைச் சந்திக்கின்ற கூடாரம், தேவனைப் பார்ப்பதற்காக போகிற இடம். இதற்குப் பெயர்தான் ஆசரிப்புக்கூடாரம். ஆசரிப்பு என்ற வார்த்தையை நீங்கள் இதுவரை எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆசரிப்புக்கூடாரம் என்றால் Meeting Place.
தேவன் மோசேயை இங்கு இப்போது ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து அழைக்கிறார். யாத்திராகமத்திலும் தேவன் மோசேயைக் கூப்பிட்டுப் பேசினார். எங்கு கூப்பிட்டார்? சீனாய் மலைக்குக் கூப்பிட்டார்; சீனாய் மலைக்கு அழைத்து, தேவன் மோசேக்குப் பிரமாணங்களை, சட்டங்களை, நியாயப்பிரமாணங்களை, கொடுத்தார். அவர் கொடுத்த பிரமாணங்களின் அடிப்படையில் இப்போது கூடாரம் நிறுவப்பட்டாயிற்று. மறுபடியும் இப்போது தேவன் மோசேயை அழைக்கிறார். ஆனால், சீனாய் மலைக்கு அழைக்கவில்லை; மாறாக, கூடாரத்திற்கு அழைக்கிறார். இரண்டையும் பார்க்கவேண்டும். அன்று தேவன் மோசேயை சீனாய் மலைக்கு அழைத்தார், இன்று இப்போது தேவன் மோசேயைக் கூடாரத்திற்கு அழைக்கிறார். சீனாய் மலைக்கு அழைத்து அவர் பிரமாணங்களைக் கொடுத்தார். இங்கு கூடாரத்துக்கு அழைத்து இப்போது பலிகளைக்குறித்துப் பேசுகிறார். இது மிக மிக முக்கியமான ஒரு காரியம். இதற்கு மிக ஆழமான பொருள் உண்டு.
யாத்திராகமத்தில் தேவன் மோசேயை சீனாய் மலைக்குக் கூப்பிட்டு, சட்டத்தைக் கொடுத்து, பாவம் என்றால் என்ன, பாவம் செய்கின்றபோது, சட்டத்தை மீறுகின்றபோது அதன் விளைவுகள் என்ன என்று அவர் சொல்லிக்கொடுக்கிறார். இங்கு தேவன் மோசேயை கூடாரத்துக்கு அழைத்து வந்து பாவம் செய்தால் அந்தப் பாவத்துக்குப் பரிகாரமான பலிகளைக்குறித்து சொல்லிக்கொடுக்கிறார்.
இதனோடு சம்பந்தப்பட்ட இன்னொரு காரியத்தை நான் சொல்லவிரும்புகிறேன். தேவன் ஒரு மனிதனை அழைக்கிறாரென்றால் அது மிக மிக விலையேறப்பெற்ற காரியம். எடுத்துக்காட்டாக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அல்லது ஒரு நாட்டின் பிரதம மந்திரி அல்லது ஒரு ஜனாதிபதி உங்களைக் கூப்பிட்டால் அது மிகவும் மகிழ்ச்சியான காரியமா அல்லது துக்கமான காரியமா? "என் அலுவலகத்துக்கு வாருங்கள்," என்று அமெரிக்க ஜனாதிபதி உங்களைக் கூப்பிடுகிறார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? போவோமா, போகமாட்டோமா? அவர் எல்லாரையும் தம் அலுவலகத்துக்கு அழைத்துப் பேசுவாரா? பேசமாட்டார். தம்முடைய இருதயத்துக்கு நெருக்கமான முக்கியமான ஒரு காரியத்தை சொல்வதற்காக என்னைக் கூப்பிடுகிறார் என்று நினைப்பேனா நினைக்கமாட்டேனா? அதுபோலத்தான் இது. தேவன் மோசேயைக் கூப்பிடுகிறாரென்றால் தம் இருதயத்தில் என்ன இருக்கிறதென்று சொல்வதற்காக தேவன் மோசேயை அழைக்கிறார். இது முதலாவது காரியம்.
கூடாரம் - தேவனுடைய பிரசன்னம்
இரண்டாவது, கூடாரம். ஒரு சிறிய தகவலை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பழைய ஏற்பாட்டில் ஐந்து புத்தகங்களில் மொத்தம் ஐம்பது அதிகாரங்கள் இந்தக் கூடாரத்தைப்பற்றிப் பேசுகின்றன. அப்படியானால் தேவனுடைய பார்வையில் இந்தக் கூடாரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இந்தக் கூடாரம் தேவனுடைய பிரசன்னத்தின் அடையாளம். தேவன் எங்கும் வியாபித்திருக்கிறவர். தேவன் எங்கும் இருக்கிறவர். ஆனால், தேவன் தம்முடைய மக்களிடையே வாழ விரும்பினார், வாசம்பண்ண விரும்பினார். அதற்காக, தம் மக்கள் தம்மைச் சந்திப்பதற்கு தமக்கு ஓர் இடம் வேண்டும், தம்மோடு உறவுகொள்வதற்கு, தம்மை ஆராதிப்பதற்கு, தம்மிடம் நெருங்கி வருவதற்கு, தம்முடைய உறவைத் தக்கவைத்துக்கொள்வதற்கு, பேணிப் பராமரிப்பதற்குத் தம்முடைய பிரசன்னம் அவர்கள் மத்தியிலே, நடுவிலே இருக்கவேண்டும், என்று தேவன் விரும்பினார். அதற்காக தேவன் ஒரு கூடாரத்தை அவர்கள் நடுவிலே அமைக்கிறார். எனவே கூடாரம் என்பது தேவபிரசன்னம் தேவமக்களிடையே இருக்கிறது.
தேவன் எங்கும் வியாபித்திருக்கிறார். எங்கும் வியாபித்திருக்கும் தேவன் தம் மக்களிடையே பிரசன்னராக இருக்க விரும்பினார். அவருடைய பிரசன்னம்தான் பழைய ஏற்பாட்டிலே கூடாரம்.
இயேசு - கூடாரமடித்தார்.
புதிய ஏற்பாட்டுக்கு வரும்போது, இன்று தேவன் நம்மிடையே வாசம்பண்ண விரும்புகிறார். கவனியுங்கள். கூடாரம் என்பதற்கு Tabernacle என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்ததை, உலகத்தில் வாழ்ந்ததை, "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது," என்று யோவான் 1:14 கூறுகிறது. (ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து) அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவர் நம்மிடையே வாசம்பண்ணினார். இதை Tree of Life என்ற ஒரு ஆங்கில வேதாகமம் "The Word became Flesh and tabernacled among us" என்று மொழிபெயர்த்துள்ளது. இதைத் தமிழில், "இந்த வார்த்தை மாம்சமாகி நம்மிடையே கூடாரமடித்தார்," என்று மொழிபெயர்க்க வேண்டும். எப்படி பழைய ஏற்பாட்டில் தேவன் தம் மக்களிடையே கூடாரமடித்திருந்தாரோ, கூடாரத்திலே வாசம்பண்ணினாரோ, அதுபோல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே வந்து தம் மக்களிடையே கூடாரமடித்தார்: தம் மக்களிடையே வாசம்பண்ணினார். இது மிகவும் ஆச்சரியமான ஒரு காரியம்!
ஒரு சிறிய பரிந்துரை செய்கிறேன். வேதாகமத்திலே வாசம்பண்ணினார் என்று வருகிற இடங்களிலெல்லாம், கூடாரமடித்தார் என்ற வார்த்தையை நீங்கள் பிரயோகித்துப் பாருங்கள். அப்போது உங்களுடைய கண்கள் திறக்கப்படும். "கிறிஸ்து எனக்குள் வாசமாயிருக்கிறார்" என்பது, "கிறிஸ்து எனக்குள் கூடாரமடித்திருக்கிறார்" என்று வரும்.
இன்று, சிறு வடிவில், குறு வடிவில் நாமெல்லாருமே தேவனுடைய ஒரு கூடாரம்தான். என்றைக்கு இயேசு கிறிஸ்துவை நம்முடைய வாழ்க்கையில் சொந்த இரட்சகராக நாம் பெற்றுக்கொண்டோமோ அன்றிலிருந்து அந்தக் கிறிஸ்து நமக்குள் வாசம்பண்ண ஆரம்பித்திருக்கிறார். எனவே, ஒரு வகையிலே நாமெல்லாருமே ஒரு சிறிய கூடாரம்தான். இந்தப் பூமியிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தவரை அவர்தான் தேவனுடைய ஒரேவொரு கூடாரம். ஆனால் என்றைக்கு நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம் இரட்சகராகப் பெற்றுக்கொண்டோமோ அன்றிலிருந்து நாமெல்லாரும் ஒரு கூடாரமாக மாறிவிட்டோம்.
வேதாகமத்திலே கூடாரத்திற்கு – பரிசுத்த ஸ்தலம், வாசஸ்தலம், கூடாரம், ஆசரிப்புக்கூடாரம், சாட்சியின் கூடாரம், Sanctuary, Tabernacle. Tent, Tabernacle of the congregation, Tabernacle of the Testimony என்று பல பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இஸ்ரயேல் - உடன்படிக்கையின் மக்கள்
இரண்டாவது குறிப்பு. இரண்டாவது வசனம் "நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால்..."
இஸ்ரவேல் என்பதை நான் இஸ்ரயேல் என்று குறிப்பிடுகிறேன். ஆங்கிலத்திலும், வேறு பிற மொழிகளிலும் இஸ்ரயேல் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது இஸ்ரயேல்தான் என்று நமக்குத் தெரியும். அதை இஸ்ரவேல் என்று ஏன் மாற்றினார்கள் என்று எனக்குத் தெரியாது. நாத்தானியேலை ஏன் நாத்தான்வேல் என்று மாற்றினார்கள் என்று தெரியாது. இஸ்ரயேல், நாத்தானியேல் என்று குறிப்பிடுகிறேன். ஏல், ஏலி - இது தேவனோடு தொடர்புடையது.
சரி, இரண்டாவது குறிப்புக்கு வருவோம். "இஸ்ரயேல் புத்திரரிடத்தில் சொல்ல வேண்டியது என்னவென்றால்..." வேதாகமம் இரட்சிக்கப்பட்ட தேவ மக்களுக்குரியது. இதை நாம் நம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். வேதாகமம் இரட்சிக்கப்படாத, மறுபடியும் பிறக்காத, தேவனற்ற மக்களுக்குரியதல்ல. வேதாகமம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட மக்களுக்குரியது. தேவன் மோசேயைக் கூப்பிட்டு, இஸ்ரயேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியவைகளைக் கூறுகிறார்.
“இந்த உலகத்திலுள்ள மக்களைத் தேவன் முதலாவது பிரிக்கிறார், God divides. பிரித்து, அதில் ஒன்றை அவர் தெரிந்தெடுக்கிறார்: பின்பு, தாம் தெரிந்தெடுத்ததை வேறுபடுத்துகிறார்,” என்று போன வாரம் ஒரு கோட்பாட்டை நான் சொன்னேன். உலகத்தில் இருக்கும் எல்லா மக்களிலிலிருந்தும் தேவன் இஸ்ரயேல் மக்களைப் பிரித்தெடுத்து, அந்த மக்களுக்கு இப்போது அவர் அறிவுரை சொல்லுகிறார். தேவன் தம் மக்கள் என்று ஒரு கூட்டத்தாரை வைத்திருக்கிறார். தம் மக்கள் என்பவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்: அவரால் மீட்கப்பட்டவர்கள்: மறுபடி பிறந்தவர்கள்: அவர்கள்தான் உடன்படிக்கையின் மக்கள்.
இஸ்ரயேலர்கள் பிறந்த குழந்தைக்கு எட்டாவது நாள் விருத்தசேதனம் செய்தார்கள். விருத்தசேதனம் செய்யப்பட்டபிறகுதான் அந்தக் குழந்தைக்கும் உடன்படிக்கைக்கும் பொருள் உண்டு. விருத்தசேதனம் செய்யப்படாதவரை ஒருவன் உடன்படிக்கையின் மகன் அல்ல. அதுபோல நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு அவரை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது மட்டும்தான் நாம் அவருடைய மக்கள். எனவே, தேவன் தம் மக்களோடுதான் பேசுகிறார். வேதாகமம், முழுக்க முழுக்க அவருடைய சொந்த மக்களுக்குரியதேதவிர இரட்சிக்கப்படாத அல்லது அஞ்ஞானிகளுக்குக் கொடுக்கப்பட்ட புத்தகம் அல்ல. நாம் உடன்படிக்கையின் மக்கள். தேவன் உடன்படிக்கையின் மக்களுக்கு இவைகளைச் சொல்லுகிறார்.
இராஜரீகமான ஆசாரியக்கூட்டம்
1 பேதுரு 2:9 என்ன சொல்லுகிறது என்று சென்ற வாரத்திலே நாம் பார்த்தோம். "நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, இராஜரீகமான ஆசாரியக்கூட்டம்: பரிசுத்த இனம்: அவருக்கு சொந்தமான மக்கள்." இதை வாசிக்கின்றபோது நாம் பரவசமடைய வேண்டும். "ஓ! தேவன் என்னைத் தெரிந்தெடுத்தார். என்னை ஓர் ஆசாரியனாக மாற்றியிருக்கிறார். நான் பரிசுத்த இனம்."
ஜாதி என்ற வார்த்தையை நான் இனம் என்று பயன்படுத்துவேன். புறஜாதி என்ற வார்த்தையை புறவினம் என்று பயன்படுத்துவேன். இதற்கான காரணம் உங்களுக்குத் தெரியும்.
நாம் அவருக்குச் சொந்தமான மக்கள். லேவியராகமம் முதல் அதிகாரம் வசனங்கள் 1, 2 பாருங்கள். இவை இஸ்ரயேல் புத்திரரிடத்தில் சொல்ல வேண்டியவை. வேதாகமம் உலக மக்களுக்குரியதல்ல, தேவ மக்களுக்குரியது என்று பார்த்தோம். தேவன் மோசேயை அழைத்து, "என் மக்களுக்கு, நான் தெரிந்துகொண்ட மக்களுக்கு, நீ சொல்ல வேண்டிய காரியம் என்னவென்று," பேசுகிறார்.
தம் மக்கள்
மத்தேயு 1:21ஐ வாசிக்கலாம். "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்." ஆண்டவராகிய இயேசு உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி என்று நம்மெல்லாருக்கும் தெரியும். ஆனால், இங்கு ஒரு வார்த்தை வருகிறது, கவனியுங்கள். "அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்." மக்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் இங்கு ‘தமது மக்களின்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அதிகமான விளக்கம் இப்போது நான் கொடுக்கப்போவதில்லை. தம் மக்கள், அவர் முன்குறித்த மக்கள், அவர் தெரிந்திடுத்த மக்கள், அவருக்குச் சொந்தமான மக்கள், அவர் பிரித்தெடுத்த மக்கள். இப்போது நான் ஒரேவொரு காரியத்தை மட்டுமே வலியுறுத்துகிறேன். தேவ மக்கள் என்ற ஒரு கூட்டம் உண்டு. தேவன் எப்போதுமே தம் மக்கள், தாம் தெரிந்துகொண்ட மக்கள் என்ற ஒரு கூட்டத்தாரோடு இடைப்படுகிறார். எனவே, இது இஸ்ரயேல் புத்திரருக்குரியது.
இதனுடைய உபகுறிப்பாக சில காரியங்களைச் சொல்லுகிறேன்,
பேசுபவர் யார்? தேவன்.
எங்கு பேசுகிறார்? கூடாரத்தில் பேசுகிறார்.
யாரிடத்தில் பேசுகிறார்? மோசேயோடு பேசுகிறார்.
யாரைப்பற்றிப் பேசுகிறார்? தம் மக்களைப்பற்றிப் பேசுகிறார்.
வ. 2 - தனிநபர்
அதைத் தொடர்ந்து கர்த்தருக்குப் பலி செலுத்த வரும்போது, என்ன செய்யவேண்டும் என்று தேவன் கூறுகிறார். லேவியராகமம் முதல் அதிகாரம் வசனம் 2: “உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலி செலுத்தவந்தால்”. கவனியுங்கள், உடன்படிக்கையில் இரண்டு முக்கியமான அம்சங்கள் உள்ளன. ஒன்று சட்டம், இன்னொன்று பலி. சட்டம் என்றால் பிரமாணம். சட்டம் எதற்காக? பாவத்தை வரையறுப்பதற்கு. பலி எதற்காக? சட்டத்தை மீறி பாவம் செய்யும்போது, தேவனோடுள்ள ஐக்கியம் முறிகிறது. முறிந்த ஐக்கியத்தைச் சரிசெய்ய பலி கொடுக்கவேண்டும் என்று தேவன் மக்களுக்கு சொன்னார். சட்டத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றமுடியாததால், பலிகள் கொடுக்கப்பட்டன.
இந்த வசனத்திலிலுள்ள "உங்களில் ஒருவன்" என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். இதன் பொருள் என்னவென்றால் இந்த சர்வாங்க தகனபலியைச் செலுத்த வருகிறவன் ஒரு தனி நபர். ஒரு தனிப்பட்ட நபர் பலி செலுத்த வருகிறான். தேவன் மக்களோடு இரண்டு வகைகளில் இடைப்படுகிறார். ஒன்று, தனிப்பட்ட நபரோடும் இடைப்படுகிறார். மொத்த இஸ்ரயேல் மக்களோடும் இடைப்படுகிறார். சில நேரங்களில் தனிப்பட்ட நபரோடு இடைப்படுவார்; வேறு சில நேரங்களில் மொத்த இஸ்ரயேல் மக்களோடும் இடைப்படுவார்.
இங்கு இந்த சர்வாங்க தகன பலியைக் கொண்டுவருகிறவன் ஒரு தனி நபர். ஒரு தனிப்பட்ட ஆள்தான் இந்தப் பலியைக் கொண்டுவருகிறான்.
"உங்களில் ஒருவன்." நம் ஒவ்வொருவருக்கும் தேவனோடு ஒரு தனிப்பட்ட, அந்தரங்கமான உறவு வேண்டும். இந்த உறவு மொத்தமாகக் கொண்டுவந்து எல்லாரும் ஏகோபித்த குரலில், "எங்களுக்கும் தேவனுக்கும் உறவு இருக்கிறது," என்று பறைசாற்றும் உறவு இல்லை. தேவனோடு உறவுகொள்ள விரும்புகிற ஒவ்வொருவருக்கும் தேவனோடு தனிப்பட்டவிதத்தில், குறிப்பிட்டவிதத்தில், பிரத்தியேகமாக உறவு வேண்டும்.
பலிகளின் ஆரம்பம்
பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட எல்லாப் பலிகளும் நிழல்களே, ஒப்பனைகளே, மாதிரிகளே என்று முன்னுரையில் பார்த்தோம். இவைகளுக்கெல்லாம் நிஜம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்றும் பார்த்தோம்.
காயீன் ஆபேலின் பலி
நான் ஒரு கேள்வி கேட்கிறேன். லேவியராகமத்தில்தான் இஸ்ரயேலர்கள்தான் முதன்முதலாகப் பலி செலுத்த ஆரம்பித்தார்களா அல்லது அதற்குமுன்பே வேறு யாராவது பலி கொடுத்தார்களா? முதன்முதலாக தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவியாகிய ஏவாளுக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார். ஒரு மிருகத்தைக் கொல்லாமல் மிருகத்தின் தோல் எங்கிருந்து வந்திருக்கும்? எனவே, ஏதேன் தோட்டத்திலேயே தேவன் முதல் பலி செலுத்துகிறார். அடுத்ததாக, காயீனும் ஆபேலும் பலி செலுத்தப் போனார்கள். தேவனுக்கு ஏற்புடையது மிருகத்தினுடைய இரத்தம்தான் என்பதை ஆதாமும், ஏவாளும் ஆபேலுக்கும் காயீனுக்கும் பல தடவை சொல்லியிருப்பார்கள், “நாங்கள் எப்படியெல்லாம் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தோம், தெரியுமா! மிகவும் மனரம்மியமாக வாழ்ந்தோம். ஆனால், எங்கள் மதியீனத்தால் தேவனுடைய கட்டளையை மீறி பாவம் செய்தோம்,” என்று கதைகதையாகச் சொல்லியிருப்பார்கள். ஆனால் அதையும் மறந்து காயீன் என்ன பலி செலுத்தினான் என்று நமக்குத் தெரியும். எனவே, முதன்முதலாக லேவியராகமத்தில் பலி செலுத்தப்படவில்லை. அதற்குமுன்பே காயீனும் ஆபேலும் பலி செலுத்தினார்கள்.
நோவாவின் பலி
அடுத்து பெருவெள்ளத்திற்குப்பிறகு நோவா பலி செலுத்துகிறார். "நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார்," என்று ஆதியாகமம் 8: 20, 21 கூறுகின்றன. நோவா தகனபலி செலுத்தினார் என்றும், அது சுகந்த வாசனையான பலி என்றும் இந்த வசனம் குறிப்பிடுவதைக் கவனித்தீர்களா?
யோபுவின் பலி
அடுத்து யோபு. "ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்" என்று யோபு 1:5இல் வாசிக்கிறோம். யோபு தன் பிள்ளைகளுக்காக சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார் என்று தெரிகிறது.
எனவே, லேவியராகமம் முதல் அதிகாரத்தில்தான் முதன்முதலாக மக்கள் சர்வாங்கதகனபலி செலுத்த ஆரம்பித்தார்கள் என்று நினைக்கவேண்டாம். தேவ மக்கள் தொன்றுதொட்டு சர்வாங்க தகனபலியைச் செலுத்தினார்கள். ஆனால், காலப்போக்கில் அவர்கள் தடம் மாறிப்போயிருக்கலாம். சர்வாங்க தகனபலி செலுத்தும் முறைகளில் அவர்கள் தவறு செய்திருக்கலாம். எனவே, லேவியராகமத்தில் தேவன் அவைகளை அவர்களுக்கு மீண்டும் நினைப்பூட்டுகிறார் அல்லது சரிப்படுத்துகிறார் என்று சொல்லலாம். "ஓ! சர்வாங்கதகனபலி செலுத்தவேண்டிய வழி இது," என்று தேவன் தம் மக்களுக்கு நினைப்பூட்டுகிறார்.
எகிப்தில் பஸ்கா
இஸ்ரயேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுவருகிறபோதும் பலி செலுத்தினார்கள் என்று நமக்குத் தெரியும். இஸ்ரயேலர்கள்தான் முதன்முதலாகப் பலி செலுத்தக்கூடிய பழக்கத்தை ஏற்படுத்தினார்கள் அல்லது பின்பற்றினார்கள் என்று என்ன வேண்டாம். அவர்களைச் சுற்றியிருந்த பிற கலாச்சாரங்களிலும் இதுபோன்ற பலி செலுத்தக்கூடிய பழக்கங்கள் இருந்தன. எனவே, தம் மக்கள் பிற கலாச்சாரங்களில் வாழ்ந்தவர்கள் பலி செலுத்தியதுபோல் செலுத்தாமல், அவர்களுடைய பழக்கங்களைப் பின்பற்றாமல் தமக்கு எப்படிப் பலி செலுத்த வேண்டும் என்று தேவன் தம் மக்களுக்கு விவரமாக எடுத்துரைத்தார்.
ஆதாமின் வீழ்ச்சிக்குப்பிறகு ஆதாமும் ஏவாளும் பலி செலுத்தியிருப்பார்கள். காயீனும் ஆபேலும் பலி செலுத்தினார்கள். நோவா, யோபு இவர்களெல்லாரும் பலி செலுத்தினார்கள். அப்படியானால் தேவன் மீண்டும் ஏன் பலிகளைப்பற்றி இவர்களோடு பேசுகிறாரென்றால், எங்கோ ஓர் இடத்திலே இந்த மக்கள் தேவன் கொடுத்த நெறிமுறைகளை சிதைத்துவிட்டார்கள். தேவன் மீண்டும் அவைகளைத் திருத்தி அவர்களுக்குக் கொடுக்கிறார்
சர்வாங்க தகனபலி - மேலெழும்பும் பலி - பரமேறும் பலி
சரி, நாம் தொடர்வோம்
காணிக்கையைக் குறிக்க கொர்பான் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்று நான் ஏற்கெனவே சொன்னேன். "நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லுகிறீர்கள்," என்று மாற்கு 7:11இல் வாசிக்கிறோம். காணிக்கை என்பது கொர்பான். ஆனால், சர்வாங்கதகனபலியைக் குறிக்க OLAH என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வேதாகமத்தில் சில வார்த்தைகளை எழுத்தின்படி மொழிபெயர்க்கவில்லை. அவைகளின் பொருளைக்குறிக்கும் வகையில்தான் அவைகளை மொழிபெயர்த்துள்ளார்கள்.
சர்வாங்க தகன பலியைக்குறிக்கும் OLAH என்ற வார்த்தையை எழுத்தின்படி மொழிபெயர்த்தால் literal translation மேலெழும்பும் பலி அல்லது பரமேறும் பலி அல்லது அருகில் கொண்டுவரும் பலி என்றுதான் மொழிபெயர்க்கவேண்டும். Ascend, Go up, Bring nearby. ஏன் மேலெழும்பும் பலி அல்லது பரமேறும் பலி என்று மொழிபெயர்க்கவேண்டுமென்றால் அந்தப் பலியின் புகை மிகமிக முக்கியம். தகனபலியின் புகை மேலெழும்புகிறது. கர்த்தர் அதை முகர்ந்து பார்க்கிறார் என்று வேதம் சொல்கிறது. (கர்த்தர் முகர்ந்து பார்க்கிறார் என்று சொன்னவுடன் கர்த்தருக்கு மூக்கு இருப்பதாகக் கற்பனை செய்ய வேண்டாம்.) சரி, மொழிபெயர்ப்புக்கு வருவோம். ஆனால், OLAH என்ற வார்த்தையை மேலெழும்பும் பலி அல்லது பரமேறும் பலி என்று மொழிபெயர்த்தால் அதன் பொருள் சரியாகத் தெரியாமல் போய்விடலாம் என்ற நோக்கத்தில் இந்தப் பலி முழுவதும் சுட்டெரிக்கப்பட்டதால் அதை சுட்டிக்காட்டுவதற்காக சர்வாங்க தகனபலி என்று அழைத்திருக்கலாம். சர்வாங்கம் என்றால் முழுவதும் என்று பொருள். தகனம் என்றால் சுட்டெரித்தல் என்று பொருள். முழுவதும் சுட்டெரிக்கப்படும் பலி என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். இப்படி மொழிபெயர்ப்பது தவறல்ல. ஆனால், நீங்கள் OLAH என்ற வார்த்தையின் முழுமையான பொருளை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்லுகிறேன். OLAH என்ற எபிரேய வார்த்தைக்கு தமிழ் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சர்வாங்கதகனபலி என்ற மொழிபெயர்ப்பு functional translation; it’s not literal translation.
குடும்பத் தலைவன் - ஆசாரியன்
லேவியராகமத்தில் ஆசாரியர்கள் பலி கொடுப்பதற்குமுன்பு தேவமக்கள் எப்படிப் பலி செலுத்தினார்கள் என்றால், அவரவர் வீட்டின் தலைச்சன்பிள்ளை அதாவது முதற்பேறானவன் தன்தன் குடும்பத்திற்காகப் பலி செலுத்தினான். இப்போது தேவன் அந்த முறையை மாற்றுகிறார். "இனி அவனவன் தன்தன் குடும்பத்திற்காக அல்ல, நான் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஏற்படுத்துகிறேன். இந்தக் குறிப்பிட்ட இடத்திலே நான் குறிப்பிட்ட மக்களை ஏற்படுத்துகிறேன். நான் குறிப்பிட்ட முறைமைகளைத் தருகிறேன். இவைகளின்படி இந்தக் குறிப்பிட்ட இடத்திலே குறிப்பிட்ட வகையிலே வந்து என்னைத் தொடர்புகொள்ளுங்கள், என்னோடு உறவு வைத்துக்கொள்ளுங்கள்," என்று அந்த முறைமையை அவர் மாற்றுகிறார்.
ஏன் இத்தனை பலிகள்?
நான் இரண்டு கேள்விகள் கேட்கிறேன். ஏன் இத்தனை பலிகள்? எதற்காக? ஏன் இத்தனை நெறிமுறைகள், வழிமுறைகள்? ஏன் பல்வேறு பலிகள்? ஒரே பலி போதாதா? ஒரே வழிமுறை போதாதா? போதாது. பாவத்தின் தன்மையையும், விளைவுகளையும் விளக்கவும், பாவத்துக்குப் பரிகாரமாகத் தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்த இயேசு என்ற நபரையும், அவருடைய செயல்களையும் விளக்கவும் இத்தனை பலிகள் அவசியம். நாம் நினைப்பதுபோல் பாவம் மேம்போக்கான ஒரு காரியம் அல்ல, இலேசான காரியம் அல்ல. "பாவம் என்றால் பாவம். அவ்வளவுதான். இதில் பெரிய பாவம், சிறிய பாவம் என்றில்லை," என்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். பத்துப்பேரை கொலை செய்வதும், வங்கியில் கொள்ளையடிப்பதும், அம்மாவிடம் பொய் சொல்வதும், கடையில் மிட்டாய் திருடுவதும் ஒன்றா? எல்லாம் சமம்தானா? இல்லை ஒரேவொரு பலி மட்டும் இருந்திருந்தால், ஒரேவொரு பண்டிகை மட்டும் இருந்திருந்தால், "என்னைப் படைத்தவர் யார், என்னை மீட்டவர் யார், அவர் எவ்வளவு பெரியவர், நான் அவருக்கு எவ்வளவு கடன்பட்டவன்," என்று நமக்குத் தெரியாது. பல்வேறு பலிகள்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய பல்வேறு அம்சங்களையும் அவர் நமக்காக செய்து முடித்த எல்லாவற்றினுடைய விவரங்களையும் அடையாளப்படுத்துகின்றன. இயேசு என்ற நபர் யார், அவர் செய்துமுடித்த வேலை என்ன என்பதை அறிய இத்தனை பலிகளும், விவரங்களும், இத்தனை பண்டிகைகளும் அவசியம்.
அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் மூன்றாம் அதிகாரம் 14முதல் 21வரையிலான வசனங்களில் எபேசியர்களுக்காக ஏறெடுக்கும் ஒரு ஜெபம் எழுதப்பட்டிருக்கிறது. அந்த ஜெபத்தில் அவர் பல காரியங்களுக்காக ஜெபிக்கிறார். அதில் அவர்கள், "சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர வேண்டும்," என்றும் அவர் ஜெபிக்கிறார். இந்த வசனத்திலுள்ள "கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும் ஆழமும் நீளமும் உயரமும்," என்பதை "கிறிஸ்துவின் அகலமும் ஆழமும் நீளமும் உயரமும்," என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆம், கிறிஸ்துவின் அம்சங்கள், குணாம்சங்கள், ஐசுவரியங்கள் நிறைய இருக்கின்றன. அன்பு, தாழ்மை பரிசுத்தம், நீதி, கிருபை, இரக்கம் என ஏராளமான தெய்வீகக் குணங்கள் அவருக்குள் இருக்கின்றன. அவருடைய அன்பு அளவிடமுடியாதது. அவருடைய ஒரு குணமாகிய அன்பின் ஆழம், அகலம், நீளம், உயரம் இன்னதென்று உணர்வதே மிகவும் அரிதென்றால், அவருடைய பல்வேறு அம்சங்களை, பல்வேறு குணாம்சங்களை, எப்படி உணர்ந்தறிய முடியம்? தெரிந்துகொள்ளமுடியும்? எனவே, பல்வேறு பலிகள், பல்வேறு பண்டிகைகள், பல்வேறு சட்டதிட்டங்கள் என சிறிது சிறிதாக, அங்கும் இங்குமாக சில அடையாளங்களையும், மாதிரிகளையும், நிழல்களையும் தரும்போதுதான் அவைகளின்மூலமாக நாம் அவரைத் தெரிந்துகொள்ளமுடியும்.
The Person of Christ and The Work of Christ
நான் சொல்லும் காரியம் புரிகிறதா? கிறிஸ்துவுக்குள் அன்பு, தாழ்மை, பரிசுத்தம், நீதி, கிருபை, இரக்கம், பொறுமை என நிறைய குணங்கள், ஐசுவரியங்கள், இருக்கின்றன. அதுபோல அவருக்குள் தெய்வீகம், மனுஷீகம் எனப் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அவர் ஆழம் அகலம் நீளம் உயரம் இன்னதென்று காணமுடியாதவர். இப்படிப்பட்டவருடைய எல்லாக் குணாம்சங்களையும் எப்படி தெரிந்துகொள்வது? இவர் கல்வாரிச் சிலுவையிலே எனக்காகச் செய்துமுடித்த வேலையின் ஆழத்தை உயரத்தை அகலத்தை நான் எப்படி தெரிந்துகொள்வது? இப்படி தேவன் சில சித்திரங்களை, சில படங்களை, தருகின்றபோதுதான், "ஓ! கிறிஸ்து இவ்வளவு விலையேறப்பெற்றவரா! கிறிஸ்து இவ்வளவு பெரியவரா! கிறிஸ்து இவ்வளவு மேன்மையானவரா!" என்று புரிந்துகொள்ளமுடிகிறது. ஒரு சிறிய படத்தைக் கொடுத்துமுடித்துவிட்டால், "ஓ கிறிஸ்து இவ்வளவு சிறியவரா?" என்று எண்ணத்தோன்றும். லேவியராகமத்தைப் படிக்கின்றபோதுதான் நாம் விசுவாசிக்கின்ற கிறிஸ்து எவ்வளவு பெரியவர் என்று தெரியவரும்.
எடுத்துக்காட்டு இந்த ஐந்து பலிகள். இந்த ஐந்து பலிகளிலே முதல் மூன்று பலிகள் சுகந்த வாசனையான பலிகள். இரண்டாவது வரக்கூடிய இரண்டு பலிகள் சுகந்த வாசனையற்ற பலிகள். முதல் பலி, சர்வாங்க தகனபலி. சர்வாங்க தகனபலியைப் பார்க்கின்றபோதுதான், "ஓ! இந்த சிலுவையிலே தொங்க வேண்டிய ஆள் நான்! ஆணிகளால் கடாவப்பட்டிருக்கின்ற வேண்டிய ஆள் நான்! என் இடத்தை அவர் எடுத்துக்கொண்டார்! எனக்குப்பதிலாக இவர் சென்றார்! இது என்னே மா மேன்மை!" என்ற எண்ணமே அவர்பால் நம்மை ஈர்க்கிறது. அவர் எவ்வளவு பெரிய மாபெரும் காரியத்தைச் செய்துமுடித்தார்! இல்லையென்றால், ஒவ்வொருநாளும் ஒரு ஆட்டையோ அல்லது ஒரு மாட்டையோ நாம் இன்றைக்கும் கொண்டுபோகவேண்டியிருக்கும். எத்தனை பேர் வாரவாரம் நாம் ஆலயத்திற்குப் போவோம், ஒவ்வொரு வாரமும் போகின்றபோது "கையில் ஒரு ஆட்டைக் கொண்டுவா அல்லது ஒரு புறாவையாவது பிடித்துக்கொண்டுவா," என்று சொன்னால் நாம் வாரவாரம் கொண்டுபோக முடியுமா? அவர் என்னுடைய Substituteஆக மாறினார் என்பதை சர்வாங்க தகனபலி உணர்த்துகிறது. போஜனபலிக்கு வருகின்றபோது கிறிஸ்துவினுடைய அழகைப் பார்க்கமுடியும். Loveliness அவர் எவ்வளவு அழகானவர்! என்று பார்ப்போம். சமாதான பலிக்கு வருகின்றபோது, கிறிஸ்து இல்லையென்றால் நான் தேவனோடு சமாதானம் ஆவதற்கு எனக்கு வழி இல்லை, வேறு வழி இல்லை என்பதைப் பார்ப்போம்.
அதுபோல சுகந்த வாசனையற்ற பலிகளுக்கு வருகின்றபோது நான் இரண்டு வார்த்தைகளைச் சொன்னேன், சுகந்த வாசனையான பலிகள் கிறிஸ்து என்ற நபர் எப்படிப்பட்டவர் என்பதைக் காண்பிக்கின்றன. சுகந்த வாசனையற்ற பலிகள் இயேசு சிலுவையிலே செய்துமுடித்த வேலையைக் குறித்துப் பேசுகின்றன. The Person of Christ, The Work of Christ. கிறிஸ்து என்ற நபர் யார், அவர் எனக்கு என்ன செய்தார் என்ற இந்த இரண்டு காரியங்களையும் பார்ப்பதற்கு வேதம் முழுவதும் இப்படிப்பட்ட நிழல்கள் ஏராளமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட படங்கள் இல்லையென்றால், நாம் அவரைப் புரிந்துகொள்வது மிகக் கடினம்.
நான் அடிக்கடி இப்படி சிந்திப்பதுண்டு, நம்ஊர்களில் எங்கு போனாலும் சரி கழிவறைகளிலே ஆண்கள், பெண்கள் என்று எழுதியிருப்பார்கள். ஆண்கள் பெண்கள் என்று எழுதியிருந்தால் மட்டும் போதாது, அதன் அருகில் படம் ஒன்று போடவேண்டும். எழுதப் படிக்கத்தெரியாதவர்கள்கூட இந்தப் படத்தைப் பார்த்து புரிந்துகொள்வார்கள். அதுபோல, தேவன் ஆயிரம் காரியங்களை நமக்கு சொல்லிக்கொடுப்பதைவிட ஐந்து படங்களை கொடுக்கின்றபோது, நாம் மிக எளிதாகப் புரிந்துகொள்கிறோம். எனவே இத்தனை பலிகள் எதற்காக? அவர் எப்படிப்பட்டவர், அவர் என்ன செய்து முடித்தார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன்சுவையாக அங்கும் இங்குமாக தேவன் இப்படிப்பட்ட பலிகளைக் கொடுத்திருக்கிறார்.
இந்தப் பலிகளுடைய எல்லா அம்சங்களையும், எல்லா மூலக்கூறுகளையும் பார்க்கின்றபோது, அவர்மேல் உள்ள அன்பு நமக்குப் பெருகும். அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் பார்க்க ஆரம்பித்துவிடுவோம். அவர் சிலுவையிலே செய்து முடித்த காரியங்களுடைய ஆழத்தை, அகலத்தை, உயரத்தை நாம் அதிகமாக அறியவும் உணரவும் அனுபவிக்கவும் ஆரம்பித்து விடுவோம். இதுதான் இந்தப் பல்வேறு பலிகளுக்கான காரணம்.
இத்தனை அறிவுரைகள் எதற்காக?
இரண்டு, பலிகளைக்குறித்து இத்தனை அறிவுரைகள், இத்தனை நெறிமுறைகள் எதற்காக? இவ்வளவு அறிவுரைகளையும் நெறிமுறைகளையும் கொடுத்தபிறகும் மனிதன் தவறு செய்தானே! அப்படியிருக்க எதையும் கொடுக்காமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும்! மனிதனுடைய கற்பனைக்கு அளவே கிடையாது. மனிதன் தனக்கு விருப்பமானதைச் செய்வதிலே மிகவும் நாட்டமுடையவன். ஏனென்றால், அதுதான் விழுந்துபோன மனிதனுடைய இயல்பு.
எடுத்துக்காட்டு காயீன். ஏவாள், வீழ்ச்சிக்குப்பிறகு, தங்கள் வீழ்ச்சியைக்குறித்தும், இரத்தத்தைக்குறித்தும், பலிகளைக்குறித்தும் படித்துப் படித்துச் சொல்லியிருப்பாள். “நாங்கள் இரண்டு பேரும் ஏதேனிலே மிகவும் சந்தோஷமாயிருந்தோம். பாழாய்ப்போன இந்தப் பிசாசு வந்தான்: அவன் சொன்னதைக் கேட்டேன் விழுந்துபோனோம், ஆனால் தேவன் கிருபையாய் இரங்கி, ஒரு மிருகத்தைக் கொன்று, அதன் தோலை எங்களுக்கு உடையாக உடுத்தினார். ஆகவே, தேவனை நெருங்க வேண்டுமென்றால் பலிகளோடுதான் போகவேண்டும்,” என்று கதைகதையாய்ச் சொல்லியிருப்பாள் இந்த ஏவாள். அதையும் மறந்து இந்தக் காயீன் தன் தோட்டத்தினுடைய கனிகளைக் கொண்டுபோனானே! பல தலைமுறைகளுக்குப்பிறகு இது நிகழவில்லை. ஒரேவொரு தலைமுறையிலே இந்தத் தடுமாற்றம், தடம்புரள்தல்.
இவ்வளவு நெறிமுறைகளையும், வழிமுறைகளையும் கொடுத்தபிறகும், உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியர்கள் தோளின்மேல் வைத்துச் சுமக்கவேண்டும் என்று சொல்லியிருக்க, தாவீது அதை ஒரு மாட்டுவண்டியில் வைத்து இழுத்துக்கொண்டு சென்றானே! மனிதன் தவறு செய்யக்கூடியவன். எனவே மனிதனுடைய கற்பனைக்கு இடம் கொடுக்காதபடிக்கு, "உன்னுடைய யுக்திகளையும், உன்னுடைய கற்பனைகளையும், உன்னுடைய நெறிமுறைகளையும் கொண்டுவராதே. இப்படிச் செய்; இப்படிச் செய்யாதே," என்று தேவன் எல்லா விவரங்களையும் கொடுத்துவிடுகிறார். இல்லையென்றால் "அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்," என்று நியாயாதிபதிகள் புத்தகத்தில் சொல்லப்பட்டதுபோல, அவரவர் தத்தம் விருப்பப்படி செய்திருப்பார்கள்.
சரி, எத்தனை பலிகள், பலிகள் எதற்காக, பலிகளின் வழிமுறைகளும், நெறிமுறைகளும் எதற்காக என்று சொன்னேன்.
ஐந்து பலிகள் உள்ளன. தொடர்ந்து பார்ப்பதற்குமுன் ஒரு கேள்வி: கிறிஸ்துவை நேசிக்கிற எல்லாரும் கிறிஸ்துவை ஒரே அளவில் அனுபவிக்கிறோமா? இல்லை. கிறிஸ்தவர்கள் எல்லாரும் கிறிஸ்துவை ஒரே அளவாக ஒரே சீராக நேசிக்கிறோமா? இல்லை. ஆனால், நாம் எல்லாரும் கிறிஸ்துவை நேசிக்கிறோம்; கிறிஸ்து யார் என்பதைப் பார்க்கிறோம். கிறிஸ்து செய்து முடித்ததை நாம் அனுபவிக்கிறோம். ஆனால், எல்லாரும் ஒரே அளவில் நேசிப்பதில்லை, அனுபவிப்பதில்லை.
அப்போஸ்தலனாகிய யோவான், கிறிஸ்தவர்களை தேவ மக்களை, "பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்," என்று 1 யோவான் 2:12-14இல் மூன்று வகைகளாக வகையறுக்கிறார்.
ஒன்று, பிதாக்கள்,
இரண்டு, வாலிபர்கள்,
மூன்று, பிள்ளைகள்.
பிள்ளைகள் - இரட்சிக்கப்பட்டவர்கள். இவர்கள் தேவனோடு உள்ள உறவை அனுபவிப்பார்கள். They are just enjoying their life. பிள்ளைகளுக்கு வேறொன்றும் தெரியாது. "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த இரட்சிப்பு அடைந்துவிட்டோமே," என்று குதிப்பார்கள். பொறுப்பைச் சுமப்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. ஆனால், வாலிபர்கள் அப்படியல்ல. Their life is in full swing, in full activity அவர்கள் உலகத்தை ஜெயிப்பதற்கு பலவான்களாயிருக்கிறார்கள். அடுத்து இன்னொரு கூட்டம் இருக்கிறது, பிதாக்கள், மூப்பர்கள், மூத்தவர்கள். Their life is in maturity. அவர்கள் தேவனை அறிந்திருப்பார்கள். அவர்களிடத்தில் ஒரு முதிர்ச்சி, ஒரு வளர்ச்சி, ஒரு தேர்ச்சி இருக்கும். இப்படி கிறிஸ்துவை, கிறிஸ்து என்ற நபர் யார், கிறிஸ்து என்ன செய்து முடித்தார் என்பதை பலர் பலவிதமாக அனுபவிக்கிறார்கள்.
"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்," என்று யோவான் 1:12 கூறுகிறது. அவரை ஏற்றுக்கொண்ட எல்லாரும் அவருடைய பிள்ளைகள். ஆனால், எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்," என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 8:14இல் கூறுகிறார். இதைத்தான் "Children have the nature of the father; but only the sons and daughters have the character of the Father," என்று சொல்வார்கள்.
எனவே, கிறிஸ்துவை நாம் அனுபவிக்கவேண்டும், கிறிஸ்து எப்படிப்பட்டவர் என்பதைப் பார்க்கவேண்டும் என்பதற்காக தேவன் இத்தனை பலிகளைக் கொடுத்தார்.
பலிகளுக்கான மிருகங்கள்
தொடர்வோம். லேவியராகமம் 1:2 "மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்." முதல் குறிப்பு, சர்வாங்க தகனபலியாக மாடு அல்லது ஆடுதான் கொண்டுவரப்படவேண்டும் என்றால், காட்டில் திரியும் மிருகங்களை அல்ல, மாறாக வீட்டில் வளர்க்கப்படும் மிருகங்களைத்தான் பலி கொடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இது முதல் குறிப்பு. வீட்டில் வளர்க்கப்படும் மாடு அல்லது ஆடு அல்லது ஒரு புறா.
அந்த நாட்களில் சாமான்ய இஸ்ரயேலர்கள் இறைச்சி சாப்பிடுவது அரிது. இறைச்சி சாப்பிடவேண்டுமென்றால் முதலாவது பலி செலுத்தவேண்டும். சில பலிகள் முழுவதும் சுட்டெரிக்கப்பட்டன. எடுத்துக்காட்டு சர்வாங்க தகனபலி. வேறு சில பலிகள் முழுவதும் ஆசாரியனுக்குப் போய்விடும். எடுத்துக்காட்டு போஜன பலி. சில பலிகள் மட்டுமே சாமான்யர்களுக்குக் கிடைக்கும். எடுத்துக்காட்டு சமாதான பலி. இந்தப்பலிதான் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஆனால், சாமான்யர்களால் அடிக்கடி சமாதான பலி செலுத்த முடியாது ஆகவே, அவர்கள் அரிதாகவே இறைச்சி சாப்பிட்டார்கள். வீட்டில் வளர்க்கப்படும் மிருகங்களின் முடி, பால், இறைச்சி எல்லாவற்றையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். வீட்டில் வளர்க்கப்படும் இந்த மிருகங்கள் அவர்களுக்கு விலையேறப்பெற்றவை. தங்களுக்கு மிகவும் விலையேறப்பெற்ற, அரிதான ஒன்றைத்தான் அவர்கள் தேவனுக்குப் பலியாகக் கொண்டுவரவேண்டும்.
சர்வாங்கதகனபலி என்பது இலவசமல்ல.
ஒரு கேள்வி: அன்று இஸ்ரயேலர்கள் மிருகங்களைப் பலியாகக் கொண்டுவந்தபோது அவர்கள் கஷ்டப்பட்டிருப்பார்களா, நஷ்டப்பட்டிருப்பார்களா? அதாவது அவர்களுக்கு இழப்பு, வலி ஏற்பட்டிருக்குமா அல்லது மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டுவந்திருப்பார்களா? ஒரு மிருகத்தைப் பலியாகக் கொண்டுவரவேண்டுமானால் அவர்களுக்கு இழப்பு, வலி, நட்டம் ஏற்பட்டிருக்கும். ஆம், இதுதான் பலி செலுத்துவதில் கோட்பாடு. தேவனுக்கு நாம் ஒன்றைச் செலுத்துவதாக இருந்தால், அதனால் நமக்கு ஒரு நட்டம், ஓர் இழப்பு, ஒரு வலி ஏற்படவேண்டும். தேவனுக்கு நான் செலுத்தக்கூடிய ஒன்றில் எனக்கு ஓர் இழப்போ, ஒரு வலியோ ஏற்படவில்லையென்றால் அதை தேவன் ஏற்கமாட்டார்.
வேதாகமத்திலிருந்து நான் ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறேன்.தாவீது அரசனாக இருந்தபோது ஒரு நாள், "பெயெர்செபாதொடங்கித் தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை," அறிய விரும்பினான். தாவீதின் படைத்தளபதி யோவாப், "கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டாம்?" என்று மறுத்தபோதும், தாவீதின் வார்த்தை மேலிட்டது. அவன் கணக்கெடுதான். ஆனால், தேவன் அதை அங்கீகரிக்கவில்லை. தேவன் தம் தீர்க்கதரிசி காத்தை அனுப்பி, "மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்... மூன்று வருஷத்துப் பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்றுமாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள்," என்றார். ஏழு வருடம் பஞ்சம் அல்லது மூன்று வருடம் எதிரி துரத்த தாவீது புறமுதுகு காட்டி ஓடவேண்டும் அல்லது மூன்று நாள் கொள்ளை நோய். தாவீது கொள்ளைநோயைத் தெரிந்தெடுத்தான். இவன் ஒருவன் செய்த தவறுக்காக "இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்." கடைசியாக தேவன் கொள்ளைநோயை நிறுத்தினார்.
கொள்ளைநோய் நின்றபோது, "கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையிலே நின்றான்." "ஒர்னானின் களத்திலே ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, அங்கே பலி செலுத்துமாறு" தேவன் தாவீதுக்குச் சொன்னபடி தாவீது அங்கு சர்வாங்க தகனபலி செலுத்தப் போனான். ஒர்னான் களத்தில் போரடித்துக்கொண்டிருந்தான். தாவீதைப் பார்த்து, அவன் புறப்பட்டு வந்து, தாவீதை வணங்கினான். தாவீது தான் வந்த நோக்கத்தைச் சொன்னான். அதற்கு ஒர்னான் சர்வாங்கதகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், போஜனபலிக்குக் கோதுமையும் கொடுப்பதாகச் சொன்னான். அப்போது தாவீது சொன்ன பதிலைத்தான் நான் இப்போது சுட்டிக்காட்டப்போகிறேன். ராஜா ஒர்னானைப் பார்த்து, "அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை பெறும் விலைக்கு வாங்குவேன்," என்று சொல்லி தாவீது அந்த களத்தையும் மாடுகளையும் அறுநூறு சேக்கல் பொன்னைக் கொடுத்து விலைக்கு வாங்கினான்.
தேவனுக்கு ஒன்றைச் செலுத்தவேண்டுமென்றால், அதை இலவசமாகக் கொடுக்கக்கூடாது. இலவசமாய்க் கொடுப்பது பலியாகாது. It must cost us something. அது நேரமோ அல்லது உழைப்போ அல்லது பணமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தேவனுக்கு அதைக் கொடுப்பதிலே நமக்கு ஒரு வலியும், ஓர் இழப்பும் ஒரு நட்டமும் இருக்கவேண்டும். இலவசமாக அல்ல, போகிறபோக்கில், சர்வசாதாரணமாக செய்துபோய்விட்டதுபோல் அல்ல; அப்படியல்ல. சர்வாங்கதகனபலி இலவசமல்ல.
பலி-மிருகத்தின் தகுதி
மூன்றாவது வசனம். தகனபலிக்கான மிருகத்தைக் கொண்டுவருதல். "அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடார வாசலில் கொண்டு வரவேண்டும்."
சர்வாங்கம் என்றால் முழுவதும் என்றும், தகனம் என்றால் சுட்டெரிக்கப்படுதல் என்றும் பொருள் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். முழுவதும் சுட்டெரிக்கப்படுவது என்றால் "என்னை முழுமையாக நான் சமர்ப்பிக்கிறேன், முழுமையாக அர்ப்பணிக்கிறேன்," என்று பொருள். This implies our consecration, our devotion. "பலிபீடத்தில் என்னைப் பரனே" என்ற ஒரு பாடல் உண்டு; முடிந்தால் நீங்கள் அதைக் கேட்டுப்பாருங்கள்.
மிகச் சிறந்ததை - உச்சிதமானதைக் கொடுக்கவேண்டும்
மிருகங்களைப்பற்றி இரண்டு நிபந்தனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன; ஒன்று அது காளை; இரண்டாவது அது பழுதற்றது. காளை - பலத்தையும், மதிப்பையும் குறிக்கலாம், அடையாளப்படுத்தலாம். காளை பலமுள்ளது, மதிப்புள்ளது. பழுதற்ற காளை, குறையற்ற காளை, பூரணமான காளை, அப்பழுக்கற்ற காளை.
குறையுள்ள மனிதன் தனக்காகவோ, பிறருக்காகவோ பாவ நிவிர்த்திசெய்யமுடியாது. சாமியார்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் குறையுள்ளவர்கள். அவர்களால் தங்களைத் தாங்களே இரட்சிக்கமுடியாது. அப்படியிருக்கையில் அவர்களால் பிறருக்கு எப்படி இரட்சிப்பை அளிக்க முடியும்? தங்கள் பாவத்துக்கே நிவாரணம் தேட வேண்டிய நிலையில் இருக்கும் பழுதுள்ள சாமியார்களால் மற்றவர்களுக்கு எப்படி நிவாரணம் கொடுக்க முடியும்? இவர்கள் பழுதற்றவர்களா? குறையற்றவர்களா? பூரணமானவர்களா? அப்பழுக்கற்றவர்களா? இவர்கள் நம் ஆண்டவராகிய இயேசு, "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" என்று கேட்டதுபோலவும், "இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை," என்று சொன்னதுபோலவும் கேட்பார்களா, சொல்வார்களா? கேட்கமுடியுமா, சொல்ல முடியுமா?
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவம் இல்லாதவர், பாவம் அறியாதவர், பாவம் செய்யாதவர். ஆண்டவராகிய இயேசுவே இந்தப் பழுதற்ற காலை. இப்படிப்பட்ட பாவமற்ற, அப்பழுக்கற்ற, மாசற்ற, குற்றமற்ற ஒருவர்தான் பிறருக்காக பாவநிவிர்த்திசெய்யமுடியும். இதை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்து முடித்தார் என்று எபிரேயருக்கு எழுதின நிருபத்திலே வாசிக்கிறோம்.
எனவே, மிகச் சிறந்ததைத்தான், மிக உச்சிதமானதைத்தான், தேவனுக்குக் கொடுக்கவேண்டும். ஏனென்றால், தேவன் மிகச் சிறந்ததை, மிக உச்சிதமானதை பெறுவதற்குத் தகுதியானவர்.
ஒரு சிறிய நிகழ்ச்சியை நான் சொல்கிறேன். ஒரு முறை நான் ஊழியத்திற்கு ஒரு வீட்டிற்குப் போயிருந்தேன். வீட்டுக் கூட்டம் முடிந்தபின், குடும்பத் தலைவி என்னிடம் வந்து, அவருடைய ஒரு மகனைக் காட்டி, “அய்யா, இவனை ஊழியத்திற்குக் கூட்டிக்கொண்டுபோங்கள்,” என்று சொன்னார்கள். நான், அருகில் நின்ற இன்னொரு மகனைக் காட்டி, "ஏம்மா, இவனை அனுப்பினால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை இல்லை. இவன்தான் ஒழுங்காகப் படிக்கமாட்டேன் என்கிறான்; இவன்தான் சொன்ன சொல்லைக் கேட்கமாட்டேன் என்கிறான்," என்றார்கள். நன்றாகக் படிக்கிறவனை, கீழ்ப்படிகிறவனை அவர்கள் தங்களுக்காக வைத்துக்கொள்வார்களாம். ஒழுங்காகப் படிக்காதவனை, கீழ்ப்படியாதவனை ஊழியத்துக்கு அனுப்புவார்களாம்.
தேவனுக்குக் கொடுப்பது எப்போதும் மிகச் சிறந்ததாக்க இருக்க வேண்டும், மிக உச்சிதமானதாக இருக்க வேண்டும்.
ஒரு விவசாயிக்கு இரண்டு கன்றுக்குட்டிகள் பிறந்ததாம். பிறப்பதற்கு முன்பே அவர் கர்த்தரிடத்தில், "ஆண்டவரே, இரண்டு கன்றுக்குட்டிகளில் ஒரு கன்றுக்குட்டியை நான் உமக்கு நேர்ச்சையாகக் கொடுத்துவிடுவேன்,” என்று நேர்ந்திருந்தாராம். இரண்டு கன்றுக்குட்டிகள் பிறந்தன. பிறந்த ஒரு நாளில் ஒரு கன்றுக்குட்டி இறந்துவிட்டது. உடனே அவர் தன் மனைவியைக் கூப்பிட்டு, “இரண்டு கன்றுக்குட்டிகளில் ஒரு கன்றுக்குட்டியை நான் நேர்ச்சையாகக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தேன் இல்லையா? எந்தக் கன்றுக்குட்டி தெரியுமா? செத்துப்போச்சே அதுதான்," என்றாராம்.
Our best is but poor but that which we do give must be our best” நாம் தேவனுக்குக் கொடுப்பதே மிகச் சிறந்ததல்ல, மிக தாழ்வானதுதான், ஆனாலும் நம்மிடத்தில் இருக்கக்கூடிய மிகச் சிறந்ததைத்தான் தேவனுக்கு எப்போதும் கொடுக்கவேண்டும்.
இஸ்ரயேல் மக்கள் எப்போதும் இந்தத் தரத்தின்படி வாழவில்லை. கால் ஊனமானதை, கண் ஊனமானதை, நசல் பிடித்ததையெல்லாம் அவர்கள் தேவனுக்குச் செலுத்தினார்கள் என்று மல்கியா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் வாசிக்கின்றோம். " பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார்." "நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்." "தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்"
மிகச் சிறந்ததைத்தான், மிக உச்சிதமானத்தைத்தான், தேவனுக்குக் கொடுக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. எப்படியென்றால், இந்த மனுக்குலத்தின் பாவத்துக்காக மரிப்பதற்கு, இரத்தம் சிந்துவதற்கு, தேவன் ஒரு தேவதூதனை, காபிரியேல் தூதனையோ, மிகாவேல் தூதனையோ, அனுப்பவில்லை, ஒரு கேரூபினையோ ஒரு சேராபீனையோ அனுப்பவில்லை. தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நமக்காக அனுப்பினார் The Best உச்சிதமானவரை, அப்பழுக்கற்றவரை, குற்றமற்றவரை, மாசற்றவரை தேவன் நம்முடைய பாவநிவாரணபலியாக அனுப்பினாரே! அப்படியானால் நாம் நம்முடைய மிகச் சிறந்ததைத்தானே அவருக்குக் கொடுக்கவேண்டும்!
பலி செலுத்தும் இடம் - கர்த்தருக்கு முன்பாக
கொண்டுவருகிற மிருகத்தை எங்கு பலியாகக் கொடுக்க வேண்டும் என்று மூன்றாம் வசனம் கூறுகிறது. கூடாரவாசலில் கொடுக்கவேண்டும். பலி கொடுக்கவேண்டியவர் ஒரு தனிநபர். தனிநபர்தான் பலி கொடுக்கிறார். கொடுக்கவேண்டும்.
இஸ்ரயேல் மக்கள் இறைச்சியை அபூர்வமாகத்தான் சாப்பிட்டார்கள் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். அப்படி மிக அபூர்வமானதை, தங்களுக்கு மிக அருமையானதை, மிக மதிப்புவாய்ந்ததை அவர்கள் பலியாகக் கொடுத்தார்கள். தங்கள் கொடுக்கும் பலி முழுவதும் சுட்டெரிக்கப்படும் என்று தெரிந்திருந்தும் அவர்கள் கொடுத்தார்கள்.
"கர்த்தருடைய சந்நிதியில்" என்ற வார்த்தை மூன்றாம் வசனத்தில் இருக்கிறது. கர்த்தருடைய சந்நிதியில் என்றால் கர்த்தருக்கு முன்பாக, கர்த்தருடைய பிரசன்னத்தில் என்று பொருள்.பலி கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தப்படவேண்டும். ஆசரிப்புக் கூடாரவாசலில் கர்த்தருடைய சந்நிதியில்தான் பலி அங்கீகரிக்கப்படும். கர்த்தருக்கு முன்பாக, கர்த்தருடைய சந்நிதியில்.
அன்பான சகோதர சகோதரிகளே, நம் முழு கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை இரண்டே வார்த்தைகளில் சொல்வதானால் "கர்த்தருக்குமுன்பாக" என்று சொல்லி முடித்துவிடலாம். இந்த ஒரு பதம் நம் வாழ்க்கையை வரையறுக்கிறது. "கர்த்தருக்கு முன்பாக" அல்லது "கர்த்தருடைய சந்நிதியில்" அல்லது "கர்த்தருடைய பிரசன்னத்தில்" என்ற பதம் பழைய ஏற்பாடு முழுவதும் ஏறக்குறைய நூறு தடவை வருகிறது. அதில் ஐம்பது தடவை லேவியராகமத்தில் மட்டும் வருகிறது.
கர்த்தருக்கு முன்பாக. "வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்." இது கொலோசெயர் 3:17. இந்த வசனத்தில் உள்ள 'அவர் முன்னிலையாக' என்ற பதத்தைக் கவனித்தீர்களா? அவர் முன்னிலையாக - அவர் சந்நிதியில், அவர் பிரசன்னத்தில். நம் கிறிஸ்தவ வாழ்க்கையை வரையறுப்பதற்கு இந்த ஒரு பதம் போதும் என்று நான் நம்புகிறேன். வார்த்தையினாலாவது கிரியையினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் அவர் முன்னிலையில் , அவர் சந்நிதியில், அவர் பிரசன்னத்தில், அவருக்குமுன்பாக செய்யுங்கள். கர்த்தருக்கு முன்பாக. நாம் கர்த்தருக்கு முன்பாகப் பேசினால், இன்றைய நம் உரையாடலின் தரம் மிகத் தாழ்ந்தது; கர்த்தருக்கு முன்பாக செய்தால் நம் செயல்களின் தரம் மிகத் தாழ்ந்தது.
கர்த்தருக்கு முன்பாக. நாம் பேசுவதைக் கர்த்தர் கேட்கிறார்; நாம் செய்வதைக் கர்த்தர் பார்க்கிறார். அவருடைய கண்களுக்கு மறைவாக ஒன்றுமில்லை. என்னுடைய சிந்தனைகளைக்கூட அவர் தூரத்திலிருந்து அறிந்திருக்கிறார் என்ற இந்த உணர்வு இருந்தால் என் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கும்?
பலி எங்கோ ஒரு காட்டிலோ அல்லது ஒரு குகையிலோ அல்லது தீவிலோ செலுத்தப்படவில்லை. கர்த்தருக்கு முன்பாகப் பலி செலுத்தினார்கள். நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் நடைமுறை இதுதான். வார்த்தையினாலாவது கிரியையினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் அவர் முன்னிலையில் செய்யவேண்டும். எங்கேயோ, வேறு யாருக்குமுன்பாகவோ அல்ல, கர்த்தருக்கு முன்பாக. இதைத் போதுமான அளவுக்கு நான் சொன்னேனா என்று எனக்குத் தெரியவில்லை.
தேவனுடைய அங்கீகாரம்
மூன்றாம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள "அங்கிகரிக்கப்படும்படி" என்ற வார்த்தையைக் கவனித்தீர்களா? "தான் அங்கிகரிக்கப்படும்படி." நம்மை யார் அங்கிகரிக்க வேண்டும்? என் அதிகாரியா? என் பக்கத்து வீட்டுக்காரரா? நம்மை யார் அங்கிகரிக்க வேண்டும்? யார் என்னை ஏற்கவேண்டும்? யார் என்னை அங்கிகரிக்கவேண்டும்? யார் என்மேல் பிரியமாயிருக்கவேண்டும்?
இரண்டு வசனங்களை மேற்கோள் காட்டி முடித்துக்கொள்வோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யோர்தான் நதியிலே ஞானஸ்நானம் பெற்று கரையேறுகிறார், பிதாவாகிய தேவன் புறத்திலிருந்து சாட்சி கொடுக்கிறார்: "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்."
தாபோர் மலையிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மறுரூபமாகிறார். அங்கும் பிதாவாகிய தேவன் சாட்சி கொடுக்கிறார்: "இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்."
"தேவன் என்மேல் பிரியமாயிருக்கிறாரா? தேவன் என்னை நினைக்கின்றபோது மகிழ்கிறாரா? தேவன் என் சிந்தனைகளையும், என் சொற்களையும், என் செயல்களையும் அங்கிகரிக்கிறாரா? என்னை அவர் ஏற்றுக்கொள்வாரா? அவர் நினைக்கின்றபோது அவருடைய இருதயம் களிகூருமா?" இதுதான் ஒரேவோரு காரியம். இதுதான் பொருட்டு. என்னில் பிரியமாயிருக்கிறாரா? தான் அங்கிகரிக்கப்படும்படி. நான் சொல்லுகிற இந்தக் காரியங்கள் புரிந்துகொள்வதற்குக் கடினமானவைகள் அல்ல.
தேவன் இன்று என்னில், நம்மில், பிரியமாயிருக்கிறாரா?
ஒரு கேள்வி. தேவன் இன்று என்னில், நம்மில், பிரியமாயிருக்கிறாரா, இல்லையா? பிரியமாயிருக்கிறார், எப்படி? நம்முடைய செயல்களினாலல்ல. "எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது" ஏசாயா 64:6. all our righteousnesses are like filthy rags. நம் தகுதியின்படி அல்ல. நம் அழகு, அறிவு, அந்தஸ்து, பணம், பதவி, பட்டம், குலம், கோத்திரம், இனம், ஜாதி, மொழி, கல்வி, நிறம், நாடு என்று எந்தத் தகுதியன்படியும் அல்ல, தேவன் இன்று, இப்போது, உங்களையும் என்னையும் பார்க்கின்றபோது, நம் நிறம், நம் அழகு, நம் உயரம், நம் எடை, நம் தோற்றம்போன்ற புறம்பான எந்தக் காரியத்தையும் பார்ப்பதில்லை. நான் நல்லவனா கெட்டவனா, யோக்கியனா அயோக்கியனா என்று அவர் பார்ப்பதில்லை. தேவன் இன்று இப்போது நம்மைப் பார்க்கின்றபோது, அவருடைய கண்களுக்கு ஒரேவொரு நபர்தான் தென்படுவார். நாம் என்றைக்கு இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராகப் பெற்றுக்கொண்டோமோ அன்று கிறிஸ்து எனக்குள் வந்துவிட்டார், இன்று கிறிஸ்து எனக்குள் வாசம்செய்கிறார். எனவே, தேவன் என்னைப் பார்க்கின்றபோது, அவருடைய கண்கள் நமக்குள் வாசம்செய்கிற கிறிஸ்துவைத்தான் பார்க்கிறது, நம்மைப் பார்க்கவில்லை. நாம் குறைவுள்ளவர்கள், கறையுள்ளவர்கள், குற்றமுள்ளவர்கள், தாழ்வானவர்கள். ஆனால், நம்மைப் பார்க்கவில்லை, மாறாக நமக்குள் வாசம்செய்கிற கிறிஸ்துவைப் பார்க்கின்றார். "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." கொலோ. 1:27
நமக்குள் வாசம்செய்கிற கிறிஸ்துவைப் பார்க்கிறபோது, தேவன், "இவர் என் நேச குமாரன்," என்று மகிழ்கிறார். அவருடைய திருப்தி எப்போதுமே கிறிஸ்துதான். தேவனுடைய திருப்தி எப்போதுமே கிறிஸ்துதானேதவிர நானல்ல. எனவே, அந்தக் கிறிஸ்துவை அவர் நமக்குள்ளே பார்க்கின்றபோது அவருடைய இருதயம் பூரிக்கிறது, அவருடைய இருதயம் மகிழ்கிறது, அவருடைய இருதயம் களிகூர்கிறது. எனவே, தேவன் இன்று நம்மேல் பிரியமாயிருக்கிறார்.
ஒரேவொரு காரியம்தான். We have been accepted in the Beloved. Christ in me is the hope of glory கிறிஸ்துவை உடையவன் அவருடையவன். தேவன் இந்தக் கிறிஸ்துவில் பிரியமாயிருக்கிறார். அந்தக் கிறிஸ்து நம்மில் இருப்பதால் தேவன் நம்மில் பிரியமாயிருக்கிறார். நம்மைப் பொறுத்தவரை விடிந்தால் எழுந்தால் நாம் தோற்றுப்போகக்கூடியவர்கள், எவ்வளவோ தவறுகள் செய்கிறோம், செய்வோம்! எவ்வளவோ பாவங்கள் செய்கிறோம், செய்வோம்; அறிந்தும் செய்வோம் அறியாமலும் செய்வோம்.
பலி செலுத்த வருகிறவன் தான் அங்கிகரிக்கப்படும்படி பலியைக் கொண்டுவருகிறான்.
சரி, இன்று நாம் இத்துடன் நிறுத்திக்கொள்வோம். அடுத்த வாரம் தொடர்வோம். ஆமென்.