Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

03 - லேவியராகமம்

அதிகாரம் 1 – சர்வாங்க தகனபலி பாகம்  2

தேவனுக்கு ஒரு Justice System, அதாவது ஒரு நீதிமுறைமை, நீதிபரிபாலனம், இருக்கிறது. இந்த நீதிமுறைமையில் இரண்டு அம்சங்கள் உள்ளன.

1,         திருச்சட்டம், பிரமாணம், நியாயப்பிரமாணம்,

2,         பலிகள்.

திருச்சட்டம் என்ற நியாயப்பிரமாணம் பாவத்தை வரையறுக்கிறது. எப்படி வாழவேண்டும், எப்படி வாழக்கூடாது, என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது, எப்படி நடக்கவேண்டும், எப்படி நடக்கக்கூடாது  என்று தேவன் சட்டங்கள் கொடுத்திருக்கிறார். அவைகளை மீறும்போது அவைகளுக்குப் பரிகாரமாக, நிவாரணமாக, நிவிர்த்தியாக அவர் பலிகளைக் கொடுக்கிறார்.

"கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்தார்" என்று எபேசியர் 5:2இல் வாசிக்கிறோம். ஆண்டவராகிய இயேசுவே தேவனுக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலி.

"எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரம் உண்டா?" என்று முதல் வகுப்பில் ஒரு கேள்வியைக் கேட்டு அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமலே விட்டுவிட்டேன். நான்காவது, ஐந்தாவது பலிகளான பாவநிவாரண பலிக்கும், குற்றநிவாரண பலிக்கும் வரும்போதுதான் அதற்கு விளக்கமான பதில் சொல்வேன். ஆனால், அதற்குமுன் இப்போது ஒரு வாக்கியத்தில் சொல்வதானால், "பலிகள் எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரம் இல்லை," என்று சொல்லலாம். அறியாமல் செய்த பாவங்களுக்கு மட்டும்தான் பலிகள் பரிகாரம் செய்தன. துணிகரமான  பாவங்களுக்குப் பலிகள் பரிகாரம் இல்லை. இதை நான்காவது ஐந்தாவது பலிகளான பாவநிவாரணபலிக்கும், குற்றநிவாரணபலிக்கும் வரும்போது விவரமாகப் பார்ப்போம்.

லேவியராகமத்தின் முதல் அதிகாரத்தில் தேவன் மீட்கப்பட்ட தம் மக்களுக்கு பலிகளைக்குறித்துச் சொல்கிறார்.

தேவனைத் தொடர்புகொள்ளவேண்டும், தேவனோடு இன்பமான, இணக்கமான, இசைவான, இனிமையான உறவு வேண்டும் என்பதுதான் பலிகளின் நோக்கம். முதலாவது, தேவனோடு நமக்கு அப்படிப்பட்ட உறவு வேண்டும். நமக்குத் தேவனோடு உள்ள உறவின் அடிப்படையில்தான், அந்த உறவிலிருந்துதான், நமக்குப்  பிறரோடு ஒரு உறவு உருவாகும். தேவனோடு எனக்கு இன்பமான, இணக்கமான, இசைவான, இனிமையான உறவு இல்லையென்றால், பிறரோடு எனக்கு எப்படி அப்படிப்பட்ட உறவு உருவாகும்? தேவனோடுள்ள உறவுதான் பிறரோடு உள்ள உறவுகளுக்கு ஆதாரம். பலிகள், தேவனோடு உறவு கொள்வதற்காக.

இரண்டுவிதமான பலிகள்

ஐந்து பலிகளையும் வாசனையின் அடிப்படையில் சுகந்த வாசனையான பலி, சுகந்த வாசனையற்ற பலி என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். அதுபோல இரத்தத்தின் அடிப்படையில் இரத்தம் சம்பந்தப்பட்ட பலிகள், இரத்தம் சம்பந்தப்படாத பலிகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். மிருகங்கள், பறவைகள் இரத்தம் சம்பந்தப்பட்ட பலிகள். மாவு,  தூபம் எண்ணெய் இரத்தம் சம்பந்தப்படாத பலிகள். எனவே, இரத்தம் சம்பந்தப்பட்ட மிருகங்களும், பறவைகளும்தான் பலிகள் என்று தவறாக நினைக்கக்கூடாது. சுகந்த வாசனையான மூன்று பலிகளில் ஒன்றான போஜனபலியில் இரத்தம் கிடையாது. அதில் மாவு, எண்ணெய், தூபம்  சம்பந்தப்பட்டுள்ளன. இதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் பார்த்துக்கொண்டிருக்கின்ற சர்வாங்க தகனபலி மிருகம் சம்பந்தப்பட்டது. மிருகங்களை, முதலாவது, அசுத்தமான மிருகம், சுத்தமான மிருகம் என இரண்டாகப் பிரிக்கலாம். அதன்பின் சுத்தமான மிருகங்களைத் தேவனுக்கு பலி கொடுப்பதற்கு ஏற்ற, உகந்த, பொருத்தமான மிருகங்கள், பொருத்தமற்ற மிருகங்கள் எனப் பிரிக்கலாம். 

பலி செலுத்தப்படும் மிருகங்களின் தகுதி

ஒரு கேள்வி. "இவை பலி செலுத்துவதற்கு ஏற்ற, பொருத்தமான, உகந்த மிருகங்கள், பறவைகள்" என்று எந்த அடிப்படையில், எந்த ஆதாரத்தின்படி, தேவன் தெரிந்துகொண்டார்? வேத வல்லுநர்கள் இதற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள். “குறிப்பிடத்தக்க எந்தக் காரணமும் கிடையாது. தேவன் அப்படி சும்மா randomஆகத் தெரிந்தெடுத்தார்," என்று சிலர் சொல்வார்கள். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? தேவன், "நான் சும்மாதான் இவைகளைத் தெரிந்தெடுத்தேன். இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை," என்று சொல்வாரா? நான் அப்படி நினைக்கவில்லை. 

என்னென்ன காரணங்களுக்காக குறிப்பிட்ட சில மிருகங்களையும் பறவைகளையும் தேவன் சுத்தமான மிருகங்கள், பறவைகள் என்று தெரிந்தெடுத்தார் என்பதற்கு அங்கு ஒரு pattern இருக்கிறது. அதை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

பலி கொடுக்க மிருகங்கள்தான் வேண்டும் என்றால் சிங்கம், புலி, கரடி, தவளை, பாம்பு, கழுதை, நாய், பூனை ஆகியவைகளையும் பலி கொடுத்திருக்கலாமே! தேவன் அப்படித் தெரிந்தெடுக்கவில்லையே! எனவே, எதன் அடிப்படையில் சுத்தமான மிருகத்தையும் அசுத்தமான மிருகத்தையும் தேவன் பிரித்திருக்கலாம் என்றால், ஒன்று, அஞ்ஞானிகளின் தெய்வங்களை நினைப்பூட்டக்கூடிய மிருகங்களையும், பறவைகளையும் தேவன் தவிர்த்திருக்கிறார். அஞ்ஞானிகளும் தங்கள் தெய்வங்களுக்குப் பலி செலுத்தினார்கள். அவர்களுடைய பலிகளிலும் மிருகங்களும், பறவைகளும் சம்பந்தப்பட்டிருந்தன. எனவே, தம் மக்கள் தமக்குப் பலி செலுத்தும்போது அஞ்ஞானிகளுடைய தெய்வங்களோடு தொடர்புடைய மிருகங்களைத் தேவன் அசுத்தமான மிருகங்கள் என்று சொல்லியிருக்கலாம். அஞ்ஞான மதங்களோடும், அஞ்ஞானிகளின் தெய்வங்களோடும் தொடர்புடைய மிருகங்களை தேவன் தெரிந்தெடுக்கவில்லை. இது ஒரு காரணம். 

இரண்டாவது, மற்ற உயிர்களை வேட்டையாடிக் கொன்று சாப்பிடக்கூடிய சிங்கம் புலி கரடிபோன்ற மிருகங்களைத் தேவன் தெரிந்தெடுக்கவில்லை. ஆடு, மாடு, புறா - இவைகள் தாங்கள் வாழ்வதற்காக மற்ற உயிர்களை வேட்டையாடுவதில்லை. கொலை, மரணம், வன்முறைபோன்றவைகளோடு சம்பந்தப்பட்ட  மிருகங்களைத் தேவன் தெரிந்தெடுக்கவில்லை. வேட்டையாடுகிற மிருகங்களை Carnivorous  என்று சொல்வார்கள். பலி கொடுப்பதற்குத் தேவன் தெரிந்தெடுத்த மிருகங்கள் Herbivorous. தேவன் தெரிந்தெடுத்த மிருகங்கள் இலை, புல் போன்றவைகளைச் சாப்பிடக்கூடியவை.

மூன்றாவது, நோய்க்கிருமிகளை எளிதில் கடத்தக்கூடிய மிருகங்களை, சுகாதாரமற்ற மிருகங்களை,  தேவன் பலி கொடுக்கத் தெரிந்தெடுக்கவில்லை என்று சொல்வார்கள்.

நான்காவது, மிருகங்கள் விரிகுளம்புள்ளவையா இல்லையா, அசைபோடக்கூடியவையா இல்லையா என்பதின் அடிப்படையில் தேவன் தெரிந்தெடுத்தார் என்று சொல்வார்கள். இது இன்னொரு காரணம். இப்படிப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்பது போகப்போக உங்களுக்குப் புரியும்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தேவன் பிரித்தெடுத்தார்; தேவன் எப்படி உலக மக்களையும் இஸ்ரயேல் மக்களையும் பிரித்து, இஸ்ரயேல் மக்களைத் தமக்கென்று வேறுபிரித்தாரோ, அதுபோல தேவன் மிருகங்களையும் சுத்தமான மிருகங்கள், அசுத்தமான மிருகங்கள் என்று பிரித்தார். சுத்தமான மிருகங்களைப் பலி கொடுக்கப் பிரித்தெடுத்தார். மீண்டும் ஒருமுறை சொல்லுகிறேன்.

•          அஞ்ஞானிகளின் தெய்வங்களோடு தொடர்புடைய மிருகங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை,

•          தாங்கள் வாழ்வதற்காக மற்ற மிருகங்களை வேட்டையாடும் Carnivorous மிருகங்களைத் தெரிந்தெடுக்கவில்லை.

•          சுகாதாரமற்ற, நோய்க்கிருமிகளைக் கடத்தக்கூடியவைகளைத் தெரிந்தெடுக்கவில்லை. 

•          விரிகுளம்புள்ளதும் அசைபோடுகிறதுமான Herbivorous.மிருகங்களைத் தேவன் தெரிந்தெடுத்தார்.

சர்வாங்க தகனபலி

சர்வாங்க தகனபலியைப்பற்றி சில அடிப்படையான அம்சங்களை நாம் இப்போது பார்ப்போம்.

ஒரு தனி நபர்தான், ஒரு சராசரி இஸ்ரயேலன்தான், ஒரு சாமான்யன்தான், இந்தப் பலியைக் கொண்டுவருகிறான், மனவிருப்பதோடு கொண்டுவருகிறான். எந்தக் கட்டாயமும் இல்லை. எந்த நிர்பந்தமும் இல்லை. இந்தப் பலிதான் இஸ்ரயேல் மக்கள் அடிக்கடி செலுத்திய பலி; சர்வாங்க தகனபலிதான் இஸ்ரயேல் மக்கள் காலையிலும், மாலையிலும், ஓய்வு நாட்களிலும் என எல்லா நேரங்களிலும் செலுத்திய பலி. "தேவனுக்கு என்னை அர்ப்பணிக்கிறேன், நான் இருப்பது தேவனால், தேவன் என்னை ஏற்றுக்கொள்ளவேண்டும், அங்கீகரிக்க வேண்டும், என்மேல் பிரியமாயிருக்க வேண்டும்," என்ற நோக்கத்திற்காக இந்தப் பலி செலுத்தினார்கள்.

ஐந்து பலிகளிலே இதுதான் முதன்முதலாக சொல்லப்பட்டிருக்கிற பலி. முதலாவது, தேவன் ஒரு மனிதனை ஏற்றுக்கொள்ளாதவரை, அவன் கொடுக்கிற எதையும்  ஏற்றுக்கொள்ள மாட்டார். என்னை ஏற்றுக்கொண்டபிறகுதான் நான் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு சிற்றரசன் ஒரு பேரரசனுக்கு நன்கொடை கொடுப்பதுபோல். இதிலே பாவநிவிர்த்தி மிகவும் குறைவாகத்தான் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இதுதான் சர்வாங்க தகனபலியின் முதல் நோக்கம். "தேவனே, நீர் என்னை ஏற்றுக்கொள்வீராக, என்னை அங்கிகரிப்பீராக, என்மேல் பிரியமாயிருப்பீராக, என்னை அங்கிகரியும், என்னை ஏற்றுக்கொள்ளும், என்னை நினைக்கின்றபோது உம் இருதயம் மகிழவேண்டும்." தேவனுடைய அங்கீகாரத்துக்காக அதைக் கொண்டு வருகிறான்.

சர்வாங்க தகனபலிக்கு இதற்கு முந்தைய வரலாறு உண்டு. சர்வாங்க தகனபலி முதன்முதலாக லேவியராகமத்தில் கொடுக்கப்படவில்லை. ஆபிரகாம், நோவா, யோபுபோன்றவர்கள் சர்வாங்க தகனபலி கொடுத்தார்கள்.

சர்வாங்க தகனபலியின் இன்னோர் அம்சம் இது முழுவதும் சுட்டெரிக்கப்படவேண்டிய பலி. இதை நான் பின்னர் விளக்குகிறேன்.  

பலி செலுத்தப்படவேண்டிய வழிமுறைகள், நெறிமுறைகள் மிகவும் முக்கியம், பலிகளோடு சம்பந்தப்பட்ட சட்டங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் கூடாது. மூன்றுவிதமான மிருகங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. அவைகளில் எந்த மாற்றமும் கூடாது.

சுகந்த வாசனையான மூன்று பலிகள் கிறிஸ்து என்ற நபரை வெளிப்படுத்துகின்றன. சர்வாங்க தகனபலி கிறிஸ்து நம் பதிலாளாகத் தம்மைப் பலியாக்கினர் என்பதையும், போஜன பலி கிறிஸ்துவினுடைய குணத்தின் அழகையும், சமாதான பலி கிறிஸ்து நம் சமாதானம் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. சுகந்த வாசனையற்ற இரண்டு பலிகள் கிறிஸ்து சிலுவையில் செய்துமுடித்த வேலையை விவரிக்கின்றன. பாவ நிவாரண பலி நம் பாவ சுபாவத்தையும், குற்றநிவாரண பலி நம் பாவச் செயல்களையும் வெளிப்படுத்துகின்றன.

தேவனைப்பற்றிய அறிவு

வேதாகமத்தின் அடிப்படையான, ஆதாரமான, மிக முக்கியமான ஒரு காரியத்தை நான் சொல்கிறேன். பலிகள் மட்டுமல்ல, முழு வேதகாமமும் எதற்காக? இரண்டே காரணங்கள். ஒன்று, இயேசு கிறிஸ்து யார்? இரண்டு, இயேசு கிறிஸ்து செய்த வேலை என்ன? The Person of Christ and The Work of Christ. இந்த உண்மை பலிகளுக்கு மட்டுமல்ல, முழு வேதாகமத்திற்கும் பொருந்தும். இயேசு கிறிஸ்து யார், அவர் செய்துமுடித்த வேலை என்ன? இதை அறிவதற்கும், வெளிப்படுத்துவதற்கும்தான் பலிகள், பண்டிகைகள், நபர்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்காகத்தான் வேதாகமம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து யார், இயேசு கிறிஸ்து என்ன செய்தார். இந்த இரண்டு அம்சங்களுக்கும் வெளியே, அதாவது அதிகமாகப் போகத் தேவையில்லை, குறைவாக நிற்கத் தேவையில்லை. பலிகள் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

இதுவே நம் வாழ்வின் தலையாய கடமை, தலையாய பொறுப்பு  பலிகளும் சரி, முழு வேதாகமமும் சரி. ஒரேவொரு நோக்கம்.“The purpose of the sacrifices or the purpose of the Bible is to reveal Christ, the Person of Christ and the Work of Christ.” இரண்டு அறிவு மிகவும் முக்கியம். முதல் அறிவு, தேவனை அறிகிற அறிவு. தேவனை சரியாக, நேர்த்தியாக, முழுமையாக அறியாதவாறு நான் யார் என்று எனக்குத் தெரியாது. அவரை அறிகிற முழுமையான அறிவு இருக்கும்போதுதான் என்னுடைய நிலைமை எனக்குத் தெரியும். நான் யார் என்று தெரியும். நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று தெரியும், என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்

"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" (யோவான் 17:3). "என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்...நான் அவரை அறிவதற்காக  அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்" (பிலிப்பியர் 3).

தேவன் எவ்வளவு பரிசுத்தர் என்று தெரியும்போதுதான், நான் எவ்வளவு அசுத்தன் என்று தெரியும். தேவன் எவ்வளவு அன்பானவர் என்று தெரியும்போதுதான் நான் எவ்வளவு அன்பற்றவன் என்று தெரியும். இது உண்மையா? பொய்யா?

ஒரு சிறிய எடுத்துக்காட்டு தருகிறேன். ஏசாயா தீர்க்கதரிசினுடைய தீர்க்கதரிசனம் ஆறு அதிகாரங்களில்  கொடிகட்டிப் பறக்குது. ஆனால், ஆறாம் அதிகாரத்தில் தேவனைப் பார்த்தவுடனே, ஏசாயா சரணாகதியாகி, “ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே,” என்று கதறினான். தேவன் யார் என்று அறியும்போதுதான் நான் எவ்வளவு அசுத்த உதடுகளுள்ள மனிதன் என்று எனக்குத் தெரியும். தேவனைப் பார்க்காதவரை, என்னைப் பொறுத்தவரை நான்தான் உலகத்திலேயே மிகவும் பரிசுத்தவான் என்று நான் நினைப்பேன்.

பேதுரு ஒரு நாள் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார். இரா முழுதும் பிரயாசப்பட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வருகிறார், “உன் வலையை வலது பக்கம் போடு,”என்று சொல்கிறார், நிறைய மீன்கள் கிடைக்கின்றன. இவர் யார் என்று தெரிந்தவுடன் பேதுரு உடனடியாக, “இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும்,” என்றான். இது பேதுருவினுடைய கூற்று.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, அப்போஸ்தலனாகிய யோவான் அவருடைய மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தவன்: ஆனால் திருவெளிப்பாட்டிற்கு வருகின்றபோது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பார்த்தவுடனேயே, “நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்,” என்று சொல்கிறார்.

தேவனைப் பார்க்கின்றபோதுதான் நம்மையும் பார்க்கமுடியும். தேவனை அறியும்போதுதான் நம்மையும் அறியமுடியும். தேவனை சரியாக அறியாதவரை, நாம் யார் என்று நமக்குத் தெரியாது.

ஒரு கேள்வி. நாம் மிகவும் பொறுமைசாலிகளா அல்லது பொறுமையற்றவர்களா? நாம் நம் பிள்ளைகளை, “ஏம்பா, அந்தத் தட்டை கொஞ்சம் எடுத்துட்டுவா,” என்று சொல்வோம். அவன் உடனே எடுத்துக்கொண்டு வரவில்லை. இரண்டாவது தடவை சொல்வோம். வரவில்லை என்றால் மூன்றாவது தடவை, “டேய், நான் உன்கிட்டதான சொன்னேன், காதில் விழுந்ததா இல்லையா?” என்று குரல் தடக்கும், தொனி உயரும். 

அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பும் வழியில் மனைவியைத் தொலைபேசியில் அழைத்து, “நான் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறேன். பசிக்கிறது. சமையல் முடித்து தயாராக வைத்துவிடு,” என்று சொல்கிறோம். மனைவி தடபுடலாக சமையல் செய்கிறார்கள். கணவர் வீட்டுக்கு வந்துவிட்டார். சமையல் இன்னும் முடியவில்லை. "என்னம்மா, சாப்பாடு ரெடியாக வைக்கச்சொன்னேனே. இதைக்கூடச் செய்யவில்லையா? இதைக்கூடச் செய்ய முடியாதா?” என்று வார்த்தைகள் தடிக்கும். இதுதான் நம் இலட்சணம் என்று நமக்குத் தெரியவில்லையே. ஏன்? ஏனென்றால், நாம் நம்  தேவனுடைய பொறுமையை அறியவில்லை.

இந்தப் பலிகள் மட்டுமல்ல, முழு வேதாகமத்தின் நோக்கம் கிறிஸ்து என்ற நபர் யார், கிறிஸ்து என்ன செய்து முடித்தார் என்று வெளியாக்குவதற்கே.

பலிகள் எதற்காக, கிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்காக.

ஐந்து பலிகளில் மூன்று பலிகள் சுகந்த வாசனையான பலிகள் என்றும், இரண்டு பலிகள் சுகந்த வாசனையற்ற பலிகள் என்றும், எந்த வகை மிருகங்களைத் தேவன் தெரிந்தெடுத்தார் என்றும் பார்த்தோம். தேவன் தாவரங்களைச் சாப்பிடக்கூடிய மிருகங்களைத் தெரிந்தெடுத்தார்.

சர்வாங்க தகனபலிக்கு தேவன் காளையைத் தெரிந்தெடுத்தார்.  பலம்வாய்ந்தது, மதிப்புவாய்ந்தது என்பதாலா? பழுதற்ற காளை வேண்டும். இயேசு கிறிஸ்துவை நாம் குழந்தைகளாகவும் அனுபவிக்கலாம், வாலிபர்களாகவும் அனுபவிக்கலாம், பிதாக்களாகவும் அனுபவிக்கலாம் என்றும் பார்த்தோம்.

மூன்று விதமான மிருகங்கள் சர்வாங்க தகனபலியில் பயன்படுத்தப்பட்டன. மாடு, ஆடு, புறா. இயேசு கிறிஸ்துவை இப்படி புறாவைப்போல, ஆட்டைப்போல, மாட்டைப்போல பலவிதமான அம்சங்களில் நாம் அனுபவிக்கமுடியும்.

புறா இயேசு கிறிஸ்துவினுடைய ஏழ்மை, எளிமை, சாந்தம், Humility, Meekness இதைக் குறிக்கலாம்.

ஆடு - perfect obedience, perfect submission. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்." perfect obedience, perfect submission. நம்மை யாராவது இப்படி இழுத்துச்சென்றால் நாம் விடுவோமா? பரிபூரணமான கீழ்ப்படிதல், பரிபூரணமான பணிந்தடங்குதல்.

மாடு - சிலர் "மாடுமாதிரி அவன் சுமை சுமக்கிறான்," என்றும் "மாடுமாதிரி இருக்கிறான், பார். என்ன சொன்னாலும் காதில் ஏறவில்லை," என்றும் சொல்வார்கள். சகிப்புத்தன்மை, பலம், பணிந்தடங்குதல், பாரம் சுமத்தல் - இவைகளெல்லாம் கிறிஸ்துவின் பல்வேறு அம்சங்கள். இவைகளையெல்லாம் அனுபவிக்கவேண்டும்.

புறாவைப்போல எளிமை, ஏழ்மை, சாந்தம், ஆட்டைப்போல் தாழ்மை, பணிவு, கீழ்ப்படிதல், மாட்டைப்போல்  சகிப்புத்தன்மை, பலம் - இவைகள் எல்லாமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குணாம்சங்கள். இப்படி நாம் இயேசு கிறிஸ்துவை பிள்ளைகளைப்போல புறாவாகவும், வாலிபர்களைப்போல ஆடாகவும், பிதாக்களைப்போல மாடாகவும் அனுபவிக்கமுடியும்.

மூன்று காரியங்கள்

தொடர்வோம். ஒருவன் ஓர் ஆட்டையோ, மாட்டையோ அல்லது ஒரு புறாவையோ கொண்டுவந்து ஆசாரியனிடம் கொடுத்துவிட்டு அவன் வீட்டிற்குச் சென்றுவிட்டானா அல்லது  ஆசரிப்புக்கூடாரத்தில் அவன் ஏதாவது செய்தானா? வசனம் 4. "அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து," என்று வாசிக்கிறோம். மிருகத்தைத் கொண்டுவருபவன், மிருகத்தை ஆசாரியனிடம் கொடுத்துவிட்டு, "தேவன் சொன்னபடி மிருகத்தைக் கொண்டுவந்தேன். இதோ வைத்துக்கொள்ளும்; நான் போகிறேன்," என்று சொல்லி விடைபெறவில்லை. அவன் தான் கொண்டுவந்த மிருகத்தின்மேல் கையை வைக்க வேண்டும். it is not a mere touch. அவன் தன் கையை மிருகத்தின்மேல் வைத்து அழுத்தவேண்டும். இரண்டு கைகளையும்  ஆட்டின்மேல் வைத்து அழுத்திப் பிடிக்கவேண்டும். அழுத்திப் பிடித்துக்கொண்டு,

முதலாவது, "இது என் மாடுதான், இது என் ஆடுதான், நான் வளர்த்த மாடுதான், நான் வளர்த்த ஆடுதான். என் சொந்த ஆடு. இந்த மிருகம் எனக்குச் சொந்தம்," என்று ஆசாரியனிடம் சொல்ல வேண்டும். Ownership.

இரண்டாவது, அவன் தான் கொண்டுவந்த மிருகத்தின்மேல் கைகளைவைத்து அழுத்தும்போது அவன் தன்னை அந்த மிருகத்தோடு அடையாளப்படுத்துகிறான். identify பண்ணுகிறான். ஒன்றிக்கிறான். அதாவது, "நான்தான் பலிபீடத்திற்குப் போகவேண்டும். ஆனால், நான் போவதற்குப்பதிலாக, நான் வளர்த்த என் சொந்த ஆட்டை, மாட்டை நான் கொடுக்கிறேன்," என்று அவன் தன்னை அந்த மிருகத்தோடு identify பண்ணுகிறான், அடையாளப்படுத்துகிறான், ஒன்றிக்கிறான்.  Identification.

ஒன்றித்தலில் மூன்று அம்சங்கள் உள்ளன. ஒன்று, எழுத்தின்படி, தேவன் கூறியபடியும், கோரியபடியும், சர்வாங்க தகனபலி கொடுக்கப்பட்டது. இது நிழல் என்று இன்று நமக்குத் தெரியும். அன்று அவர்களுக்கு இது வெறும் நிழல்தான் என்று தெரியாது. எழுத்தின்படி பலி கொடுக்கும் நேரத்தில், அங்கு ஆவியின்படி இன்னும் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன என்பதை நாம் கவனிக்கவேண்டும், அந்தப் பலிகளில் நாம் கிறிஸ்துவையும் பார்க்கவேண்டும், நம்மையும் பார்க்கவேண்டும். எப்படி? எழுத்தின்படி மிருகம் பலிபீடத்தில் பலி கொடுக்கப்படுகிறது. இதன் spiritual Implication ஆவிக்குரிய பொருள் என்ன? இந்த மிருகங்களுக்குப் பதிலாக பலிபீடத்தில் நான் கிடத்தப்பட்டிருக்க வேண்டும். இது ஒன்று. ஆனால், எனக்குப்பதிலாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைப் பலியாக்கினார் என்பது இன்னோர் அம்சம். இவ்வாறு, எழுத்தையும் பார்க்க வேண்டும், ஆவியையும் பார்க்க வேண்டும். ஆவியின்படியான இரண்டு உப அம்சங்களையும் பார்க்க வேண்டும்.

மூன்றாவது, கைகளைவைத்து அழுத்தும்போது, "தேவன் என்னிடத்தில் என்னென்ன எதிர்பார்க்கிறாரோ அவையெல்லாவற்றையும் நான் இந்த மிருகத்தின்மேல் சுமத்துகிறேன், கடத்துகிறேன்," என்ற ஓர் அறிவும், ஓர் உணர்வும், ஒரு புரிதலும் அங்கே இருக்கிறது. transfer

கைகளை வைத்து அழுத்துவதில் நான்கு அம்சங்கள் உள்ளன: Ownership, identification, transfer, acknowledgement. அது என் ஆடு, நானும் இந்த ஆடும் ஒன்று, எனக்குரிய எல்லாவற்றையும் இந்த ஆட்டின்மேல் கடத்துகிறேன், எனக்கு நிகழவேண்டிய எல்லாம் இந்த ஆட்டுக்கு நிகழ்கிறது என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். இது சாதாரணமான தொடுதல் இல்லை.

பொதுவாக இன்று நற்செய்தி அறிவித்துவிட்டு, "நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளுங்கள்: இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்," என்று நாம் மிகவும் மேலோட்டமாகச்  சொல்லிவிட்டுப் போகிறோம். அப்படி அல்ல, People should identify themselves with Christ Jesus. இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகிய எல்லாவற்றோடும் ஒருவன் தன்னை ஒன்றிக்க வேண்டும், அடையாளப்படுத்த வேண்டும்.

My numerous sins transferred to Him, Shall never more be found! Lost in His blood's atoning stream Where every crime is drowned!" என்று C.H.Spurgeon கூறினார்.

"உம்மேல் கடத்தப்பட்ட கணக்கிலடங்காத என் பாவங்களை இனி ஒருபோதும் கண்டுபிடிக்கப்பட முடியாது. பாவநிவிர்த்தியாக்கும் உம் இரத்த ஆற்றில் என் குற்றங்கள் தொலைந்துபோயின" என்று ஸ்பர்ஜன் கூறினார்.

கைகளைவைத்து அழுத்துவதில் இத்தனை ஆவிக்குரிய அம்சங்கள் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இல்லையா? இன்னொரு பழக்கமும் இருந்ததாம். பலி செலுத்த வந்தவன், பலி செலுத்தும் ஆசாரியன் இரண்டுபேருமே மிருகத்தின்மேல் கையைவைத்து ஜெபித்தார்களாம். பல சங்கீதங்களில் தகனபலியைப்பற்றிய குறிப்பு உள்ளது. சங்கீதங்களை வாசிக்கும்போது இது வெளிப்டையாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டு. "சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை." "தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல." "உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது," சங்கீதங்கள் 40, 51, 66.  

பலியைக் கொல்லுதல்

சரி, தொடர்வோம். தேவன் சொன்னபடி ஒருவன் ஒரு பழுதற்ற ஆட்டைக் கொண்டுவருகிறான். அதை அப்படியே மொத்தமாகத் தூக்கிப் பலிபீடத்தில் வைத்துத் தகனிக்கலாமா? இல்லை, கூடாது. பலியாட்டைக் கொல்ல வேண்டும்? ஆட்டின் இரத்தம் சிந்தப்படாதவரை, ஆடு உயிருள்ள ஆடாகவே கருதப்படும். ஆட்டின் இரத்தம் சிந்தியபிறகுதான் மரணம் உறுதிப்படுத்தப்படும். எனவே, பலியாடு கொல்லப்படவேண்டும்: அது சாகவேண்டும். கொன்று அதின் இரத்தத்தைப் பலிபீடத்திற்குக் கொண்டுவரும்போதான் அங்கு மரணம் நிகழ்ந்திருக்கின்றது என்று தெரியும். மரணம் நிகழாதவரை, இரத்தம் சிந்தாதவரை, அது பழுதற்ற காளையாக இருந்தாலும் எந்தப் பயனும் இல்லை. அது கொல்லப்படவேண்டும்.

பலியைக் கொல்வதில் சாமானியனின் பங்கும், ஆசாரியனின் பங்கும்

பலியைக் கொல்வதில் இன்னொரு முக்கியமான அம்சத்தைக் கவனியுங்கள்.

லேவியராகமம் 1:5முதல் 9வரையிலான வசனங்களை வாசிப்போம். "கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன். அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி, அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள். அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி."

ஒருவன் ஒரு பலியைக் கொண்டுவருகிறான். கொண்டுவருபவன்தான் பலியின்மேல்  கையை வைக்கவேண்டும்: அவன்தான் அதைக் கொல்லவேண்டும்: அவன்தான் அதைத் தோலுரிக்கவேண்டும்: அவன்தான் அதை சந்துசந்தாக வெட்டவேண்டும்: அவன்தான் அதைத் தண்ணீரினால் கழுவவேண்டும்.

இன்றைய ஆராதனைமுறையையும், அன்று இஸ்ரயேலர்கள் கூடாரத்தில் பலி செலுத்திய முறையையும் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். இன்று ஒருவன் ஒரு சபைக்குச் சென்றால், எதுவும் செய்யாமல் உட்கார்ந்து எழுந்துவிட்டுப் போய்விடலாம். ஒரு விசுவாசிக்கு பெரிய பொறுப்போ, பங்கோ இருப்பதுபோல் தோன்றவில்லை. ஆனால், ஆசாரிப்புக் கூடாரத்தில் பலி கொண்டுவருபவன் என்னென்ன செய்கிறான் என்று பாருங்கள். 

ஆசாரியனுடைய வேலை என்ன?

"பலி கொண்டுவருபவன்தான் இத்தனை வேலைகளை செய்கிறான் என்றால் அங்கு ஆசாரியனுக்கு என்ன வேலை?" என்று எண்ணத் தோன்றும். ஆசாரியனுடைய வேலை என்ன? பலியின் இரத்தத்தைப் பிடிக்க வேண்டும்; இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றி தெளிக்கவேண்டும்: பலிபீடத்தில் நெருப்பு மூட்டவேண்டும்; பலிபீடத்தில் கட்டைகளை அடுக்கவேண்டும்; பலிபீடத்தில் துண்டங்களையும், தலையையும், கொழுப்பையும் அடுக்கவேண்டும்: பலிபீடத்தில் எல்லாவற்றையும் தகனிக்கவேண்டும்.

பலி கொண்டுவருகிற சாமான்யன், பலி செலுத்துகிற ஆசாரியன் ஆகிய இரண்டு சாராருக்கும் சம பொறுப்பு உண்டு. ஒருவன் கொண்டுவரவேண்டும், கைகளை வைக்கவேண்டும், கொல்லவேண்டும், தோலுரிக்க வேண்டும், சந்துசந்தாக வெட்ட வேண்டும், தண்ணீரால் கழுவ வேண்டும். கொண்டுவந்தவர் பலியைக் கொல்லும்போது, ஆசாரியன் அதன் இரத்தத்தை குறிப்பிட்ட பாத்திரத்தில் பிடிக்கவேண்டும், இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்திற்குக் கொண்டுபோய் அந்த இரத்தத்தைத் தெளிக்கவேண்டும் பலிபீடத்தில்  அக்கினியை மூட்டவேண்டும்,  பலிபீடத்தில்  கட்டைகளை அடுக்கவேண்டும், பலி கொண்டுவந்தவன் வெட்டி, கழுவிக்கொடுத்த துண்டங்களையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்தில்அடுக்கவேண்டும்; பலிபீடத்திலே எல்லாவற்றையும் தகனிக்கவேண்டும்.

நான் மிகச் சாதாரணமான ஒரு காரியத்தைக் கேட்கிறேன். ஆசாரியன் பலிபீடத்தில் கட்டைகளை ஏனோதானோவென்று வைப்பானா அல்லது நேர்த்தியாக அடுக்கிவைப்பானா? காலையிலிருந்து சாயங்காலம்வரை ஆயிரக்கணக்கானவர்கள்  சர்வாங்கதகனபலி கொடுக்கவந்திருப்பார்கள். ஆசாரியன் எல்லாவற்றையும் அடுக்கவேண்டும். கட்டைகளை அடுக்க வேண்டும்; துண்டங்களையும், தலையையும், கொழுப்பையும் அடுக்கவேண்டும். எல்லாவற்றையும் எவ்வளவு meticulousஆகச் செய்திருப்பார்கள் பாருங்கள்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த அன்று கல்லறையைவிட்டு வெளியே போனபிறகு, பேதுரு கல்லறைக்கு வந்து உள்ளே போய்ப் பார்க்கிறார். அங்கு, "சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்" யோவான் 20:7. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும் நிக்கொதேமுவும் நிறைய சீலைகளால் சுற்றி அடக்கம்பண்ணினார்கள். இப்போது அவரைச் சுற்றியிருந்த சீலைகளெல்லாம் சுருட்டிவைக்கப்பட்டிருக்கின்றன. இயேசு உயிர்த்தெழும்பிப் போகும்போது ஒரு தேவதூதனைக் கூப்பிட்டு "நீ எல்லாவற்றையும் சுருட்டி வைத்துவிடு, நான் கலிலேயாவிற்குப் போய்க்கொண்டிருக்கிறேன். எனக்கு நிறைய mission இருக்கிறது, நிறைய vision இருக்கிறது. நிறைய ministry இருக்கிறது. அடுக்கி வைக்கிற வேலை என் வேலையா? எனக்கு எவ்வளவு வேலை இருக்கிறது தெரியுமா? இதை சுருட்டிவைக்க எனக்கு நேரம் இல்லை," என்று நினைத்தாரா? அல்லது அவரே சுருட்டிவைத்தாரா? 

உள்ளான பரிசுத்தம்

கட்டைகளை அடுக்குவது ஒரு சாதாரண காரியம்போல் தோன்றலாம். ஆனால், ஆசாரியன் அடுக்கி வைக்கிறான். பலி கொல்லப்பட வேண்டும், சாக வேண்டும். சரி, இது புரிகிறது. இரத்தம் சிந்தப்பட்ட வேண்டும். எனவே, கொன்றார்கள்.  கொன்றபின்  முழு மிருகத்தையும் பலிபீடத்தில்வைத்து எரித்துவிடலாமே? பலியை எரிக்கத்தானே வேண்டும். அதற்குப்பின் ஏன் அதன் தோலை உரித்து, துண்டங்களையும், குடல்களையும் சந்து சந்தாக வெட்டி பலிபீடத்தில் வைக்க வேண்டும்? கொன்றால் போதாதா? இரத்தம் சிந்தினால் போதாதா? தோலை உரித்தால் போதாதா? ஏன் உள்ளான பகுதிகளையெல்லாம் கழுவி, துண்டு துண்டாக வெட்டி, அதன்பின் பலிபீடத்தில் வைக்கவேண்டும்? இது மிருகத்தின் உள்ளான பரிசுத்தம், உள்ளான தூய்மை, உள்ளான பழுதின்மையைக்  குறிக்கலாம். மிருகம் புறம்பாக மட்டும் பழுதற்றதாக, குற்றமற்றதாக, மாசற்றதாக இருந்தால் போதாது; அது உள்ளாகவும் பூரணமாக, பரிபூரணமாக, முழுமையானதாக, அப்பழுக்கற்றதாக, பழுதற்றதாக இருக்க வேண்டும். உள்ளான பாகங்களைக் கழுவும்போதும், வெட்டும்போதும், அடுக்கிவைக்கும்போதும் அதன் உள்ளான பழுதின்மையை உறுதிசெய்ய முடியும்.

நம்முடைய கண்கள் வெளியே, மேலோட்டமாகத்தான் பார்க்கும், பார்க்க முடியும். வெளியே பார்க்கும் செயல்களைவைத்து நாம் எடைபோடுகிறோம். ஒருவன் விபச்சாரம் செய்யவில்லை என்று வெளியே பார்த்துச் சொல்லலாம். ஆனால் விபச்சாரத்திற்குக் காரணமான இச்சை ஒரு மனிதனுக்குள் இருக்கிறதா இல்லையா என்று எப்படித் தெரியும்? புறம்பான செயல்களைப் பார்த்து ஒருவன் திருடவில்லை என்று நாம் முடிவுசெய்யலாம்; ஆனால், திருடுவதற்குக் காரணமான ஆசை அவனுக்குள் இருக்கிறதா என்று எப்படித் தெரியும்? புறம்பான செயல்களைப்பார்த்து ஒருவன் கொலை செய்யவில்லை என்று நாம் தீர்மானிக்கலாம்.  ஆனால், அந்தக் கொலைக்குக் காரணமான கோபம் அவனுக்குள் இருக்கிறதா இல்லையா என்று எப்படித் தெரியும்? தேவனுடைய நோக்கம் எப்போதுமே உள்ளான பகுதிகள், புறம்பான மாற்றங்கள் அல்ல. தோலை உரித்து, உள்ளான பாகங்களைக் கழுவும்போதுதான் உள்ளம் எவ்வளவு அழகாக அல்லது அழுக்காக இருக்கிறது என்று தெரியும். 

தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” சங்கீதம் 139:23-24. பலி மிருகம் உள்ளாக பழுதற்றது என்று தெரியவேண்டும்.

ஆண்டவராகிய இயேசு ஆவியில் பாவம் இல்லாதவர், ஆத்துமாவில் பாவம் அறியாதவர், உடலில் பாவம் செய்யாதவர். கிறிஸ்துவின் உள்ளான, மறைவான பரிபூரணம் நமக்குத் தெரியவேண்டும். இயேசு கிறிஸ்து அப்படிப்பட்டவர், மாசற்றவர், பழுதற்றவர். "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" என்று அவர் கேட்டார். நாம் இப்படிக் கேட்கமுடியுமா? ஒருவன் நம்மைப்பார்த்து, "நீ ஒரு பொய்காரன்," என்று ஒரு சுடுசொல் சொன்னால், நாம் எப்படி மறுமொழி கொடுப்போம்?

"யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் என்னைச் சோதித்துப்பாருங்கள். இடது, வலது என எங்குவேண்டுமானாலும் சோதித்துப் பாருங்கள். எல்லாவற்றையும் வெட்டிப்பாருங்கள். என் சிந்தனைகள், சொற்கள், செயல்கள், என் உட்காருதல், என் எழுந்திருத்தல், என் போக்குவரத்து, எதை வேண்டுமானாலும் சோதித்துப்பாருங்கள். யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?" என்று இயேசு கேட்டார். "இதோ, இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை." இந்த உலகத்தின் அதிபதி நம்மிடத்தில் வந்தால் அவனுக்குரியது நம்மிடத்தில் இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியுமா, தெரியாதா? அவனுக்குரியது நம்மிடத்தில் இருக்கிறது என்று அவனுக்கு மட்டும் அல்ல, நமக்கும் தெரியும். நம் வீடுகளில்  சாப்பிடும்போது சோற்றுப் பருக்கைகள் கீழே விழுந்தால் எறும்பு, ஈக்கள் வரும். சுத்தமற்றவை இருக்கும்போது ஈக்களும், எறும்புகளும், கொசுக்களும் வரும். 

இயேசு ஒருவரே குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி. அவருடைய ஆவியில் பாவம் இல்லாதவர், அவருடைய ஆத்துமாவில் அவர் பாவம் அறியாதவர், அவருடைய சரீரத்தில் அவர் பாவம் செய்யாதவர். பாவம் இல்லாதவர், பாவம் அறியாதவர், பாவம் செய்யாதவர்.

பலிகளில் இரண்டு அம்சங்களைப் பார்க்க வேண்டும் என்று நாம் பார்த்தோம். எழுத்தின்படி, ஆவியின்படி. எழுத்தின்படி அங்கு பலிகள் கொடுக்கப்படுகின்றன. ஆவியின்படி என்பதின் இரண்டு பகுதிகளைப்  பார்க்க வேண்டும். அதில் நாம் நம்மையும் பார்க்க வேண்டும், இயேசு கிறிஸ்துவையும் பார்க்கவேண்டும். நாம் அழுக்கான, பழுதுள்ள, குற்றமுள்ள ஆடு. பழுதுள்ள ஆடுகளுக்காகப் பழுதற்றவர் பலியானார். குற்றமுள்ள ஆடுகளுக்காக குற்றமற்றவர் பலியானார். இது மிக மிக முக்கியமான காரியம்.

ஏன் பலியைக் கொன்றார்கள், துண்டுதுண்டாக வெட்டினார்கள் என்றால் கொல்லும்போதுதான் அங்கு மரணம் சம்பவிக்கிறது என்று நிரூபணமாகிறது. இரத்தம் சிந்தப்படாதவரை மரணம் சம்பவிக்கவில்லை. இரத்தமே மரணத்தின் நிருபணம். இரத்தம் சிந்தப்படாதவரை மரணம் சம்பவித்ததாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இரத்தம் வந்ததென்றால், மரணம் ஆயிற்று என்பது புலனாகிறது.

ஒரு கேள்வி கேட்கிறேன. நாம் மற்றவர்களுக்கு ஜீவனாக மாறவேண்டுமானால் அதற்கு என்ன வழி? நம்மூலம்  மற்றவர்களுக்கு ஜீவன் பாய்ந்தோடவேண்டுமென்றால் அதற்கு என்ன வழி? ஒரேவொரு வழிதான் உண்டு. நாம் சாகவேண்டும், ஆமென். ":கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்." ஏன் இன்னொருநபரை என்னால் கிறிஸ்துவிடம் கொண்டுவர முடியவில்லை? கிறிஸ்துவின் ஜீவன் என்மூலம்  ஏன் பாய்ந்தோடவில்லை என்பதற்கு அதுதான் பதில்.

சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்துப் போதி

தொடர்வோம். பலி கொடுக்கக் கொண்டுவந்த மிருகத்தை கொண்டுவருபவனோ, ஆசாரியனோ தன் விரும்பம்போல் வெட்டக்கூடாது. மிருகத்தின் கழுத்தில் இருக்கக்கூடிய ஒரு நரம்பைப் பிடித்துச் சரியாக வெட்டவேண்டுமாம். அவ்வளவு மனிதாபிமானத்தோடே வலியில்லாத அளவுக்கு மிருகத்தை வெட்டுவார்களாம். கொல்ல வேண்டும், இரத்தம் வேண்டும் என்பதற்காக எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வெட்டவில்லை.

சரியாக வெட்டவேண்டும்; ஏனோதானோவென்று வெட்டக்கூடாது. சரியாக வெட்டவேண்டும்.  rightly divide.  2 தீமோத்தேயு 2:15இல், "நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு," என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். "நிதானமாய்ப் பகுத்துப் போதி." "சரியாய்ப் பகுத்துப் போதி." மிருகத்தின் கழுத்து நரம்பில் எங்கு, எப்படி வெட்டவேண்டுமோ அங்கு, அப்படி சரியாக வெட்டு. தோலை எங்கிருந்து ஆரம்பித்து எங்கு முடித்து, எப்படி உரிக்கவேண்டுமோ அப்படி உரி. வெட்டி முடித்து அதன்பின் குடலை எடு. அதன்பின் தொடைகளை எடு; அதன்பின் வரிசைக்கிரமமாக ஒவ்வொன்றாக எப்படிக் கழுவவேண்டுமோ கழுவு. அதன்பின் அவைகளை ஆசாரியனிடம் கொடு. ஆசாரியன் அவைகளை முறைப்படி அடுக்குவான், எல்லாவற்றையும் அவ்வளவு  நேர்த்தியாக, சரியாக, துல்லியமாக, முறையாக, நெறிபிறழாது செய்தார்கள்.

மிருகங்கள் இரத்தம் -பலிபீடம் - பரிசுத்தம்

பலி கொடுக்கப்பட்ட மிருகங்களின் இரத்தத்தில் என்ன பரிசுத்தம் இருக்கிறது? மிருகங்களின் இரத்தம் எப்படி பரிசுத்தமாக மாறியது? பரிசுத்தம் ஆட்டின் இரத்தத்திலோ, மாட்டின் இரத்தத்திலோ அல்லது புறாவின் இரத்தத்திலோ இல்லை; மிருகங்களின் இரத்தம் பலிபீடத்தில் தெளிக்கப்படும்போது, பலிபீடத்தில் தெளிக்கப்படுவதால் சுத்தமாகிறது.

பலிபீடம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு அடையாளம். பலிபீடம் எப்போதும்  சிலுவையைக் குறிக்கும். இந்தப் பலிபீடம் ஏற்கனவே பரிசுத்தமாயிருக்கிறது. ஆசரிப்புக் கூடாரத்தில் இருக்கக்கூடிய எல்லாம் கிறிஸ்துவுக்கு அடையாளம். பலிபீடம், உடன்படிக்கைப் பெட்டி, அதின் உள்ளே இருக்கும் பத்துக்கற்பனைப் பலகை, ஆரோனுடைய தளிர்த்தகோல், மன்னா, பொற்பாத்திரம் அனைத்தும் இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளம். எனவே, பலிபீடத்தில் மிருகத்தின் இரத்தம் படும்போது, அந்த இரத்தம் பரிசுத்தமாகிறது. மிருகங்களின் இரத்தம் தன்னில்தானே பரிசுத்தமானதல்ல. அவைகளின் இரத்தம் பலிபீடத்தில் தெளிக்கப்படுகின்றபோது, அது பரிசுத்தமாகிறது.

கொழுப்பு

கொழுப்பு எதற்காக? மிருகத்தின் பாகங்களைத் துண்டுதுண்டாக வெட்டி, பலிபீடத்தில் அடுக்கிவைத்து எரிக்கும்போது கொழுப்பையும் சேர்த்துவைத்தால் பலிகள் சீக்கிரமாக எரியும். ஒன்றை எரிக்கும்போது அதன்மேல் எண்ணெய் ஊற்றினால் அது சீக்கிரமாக எரித்துவிடும். கொழுப்பு அதற்காக. இன்னொரு காரணமும் உண்டு. ஒரு மிருகத்தை எரிக்கும்போது பொதுவாக ஒரு துர்நாற்றம் வரும். இங்கு பலிபீடத்தில் மிருகத்தை எரிக்கும்போது, தேவனுடைய நெறிமுறைகளின்படி, பலிகளின்மேல் எண்ணெய் ஊற்றும்போது, தூபம் காட்டும்போது, அதிலிருந்து ஒருவிதமான நறுமணம் வரும். சுகந்த வாசனை. தேவன் சுகந்த வாசனையை முகர்ந்து பார்த்தார் என்று வேதம் சொல்லுகிறது. தேவன் இவைகளை முகர்ந்து பார்த்து, He was satisfied; He was pleased. எனவே, பலி செலுத்தியபின் கடைசியாக "தேவன் என்மேல் பிரியமாயிருக்கிறாரா?" என்பதுதான் காரியம்.

பலிபீடத்தில் மிருகத்தைத் தகனிக்கும்போது, "பலிபீடத்தில் இருக்கவேண்டிய ஆள் நான். எனக்குப் பதிலாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அங்கு பலியானார்," என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கிநிற்க வேண்டும்.

அக்கினி, நெருப்பு, பரீட்சையின் தீவிரத்தை, மும்முரத்தை, குறிக்கிறது. the intensity of the test. நம் கிறிஸ்தவ வாழ்க்கை இப்படிப்பட்ட வாழ்க்கையாக இருக்கவேண்டும். இதுதான் நம் இயல்பான வாழ்க்கையாக இருக்க வேண்டும். அதுதான் normal, that is not something abnormal. தேவன் பட்சிக்கிற அக்கினி.

அதுபோல, தண்ணீரால் கழுவுகிறார். தண்ணீரையும் இரத்தத்தையும்குறித்து வரக்கூடிய நாட்களில் நிறைய பேசுவோம். தண்ணீரும் இரத்தமும் எப்போதும் சேர்ந்தேபோகும். "தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறார்" என்று எபேசியர் 5:26 கூறுகிறது. திருவசனமாகிய தண்ணீரால் கழுவிச் சுத்திகரித்துப் பரிசுத்தமாக்குகிறார்.

சர்வாங்க தகனபலியில் மூன்று மிருகங்கள் பயன்படுத்தப்பட்டன. மாடு, ஆடு, புறா. இதில் மாட்டின் தோலை உரித்து, பாகங்களைக் கழுவி, துண்டுதுண்டாக வெட்டினார்கள். ஆனால், ஆடுகளின் தோல் உரிக்கப்படவில்லை. ஆடுகளின் தோலை உரிக்காமல் வெட்டினார்கள். புறா வெட்டப்படவேயில்லை; புறாவைக் கிள்ளி இரத்தத்தைத் தெளித்தார்கள். ஆயினும் மாடு, ஆடு, புறா எல்லாம் ஒரேவிதமாகத்தான் சர்வாங்க தகனபலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டன, சுட்டெரிக்கப்பட்டன. ஆடுகள் தோலுரிக்கப்படவில்லை. இது ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் உள்ள வித்தியாசம். புறா வெட்டப்படவில்லை. புறா சிறியதாக இருப்பதால் பலிபீடத்திற்குப் பக்கத்திலே வந்து அதைக் கொண்டு வைத்தார்கள்.

கிரயத்துக்கு வாங்கப்பட்டவர்கள்

சர்வாங்க தகனபலி, இது முழு consecrationக் குறிக்கிறது. ஆண்டவராகிய இயேசு தம்மை முழுமையாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார். நாமும் நம்மை முழுமையாகத் தேவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இதுதான்  சர்வாங்கதகனபலி.

நான் யாருக்குச் சொந்தம்? நான் யாருடையவன்? நான் எனக்குச் சொந்தமா, தேவனுக்குச் சொந்தமா? "கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்." நாம் நம்முடையவர்கள் அல்ல. நாம்  என்னவாயிருக்கிறோம், நம்மிடத்தில் என்ன இருக்கிறது, நம்மால் என்ன முடியும் - இவையெல்லாமே தேவனுக்குத்தான் சொந்தம், நான் என்னுடையவன் அல்ல, என்னால் முடிந்தவைகள் எல்லாம் என்னுடையவைகள் அல்ல, என்னிடம் இருப்பவைகளும் என்னுடையவைகள் அல்ல. தேவன் எனக்கு loanஆகக் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான். இவையெல்லாவற்றையுமே நாம் பலிபீடத்தில் வைத்துவிட வேண்டும்.

கிறிஸ்தவனுடைய வாழ்க்கை

"ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கை is a life of altar and tent," என்று வாட்சமேன் நீ  என்ற பரிசுத்தவான் கூறுகிறார். முதலாவது நம்மையும், நம்மிடம் இருப்பவைகளையும், நம்மால் முடிந்தவைகளையும் பலிபீடத்தில் கிடத்த வேண்டும். அவை சுட்டெரிக்கப்பட வேண்டும். எரிந்து முடிந்தபிறகு மிச்சம் மீதி ஏதாவது இருந்தால் அல்லது தேவனுக்கும், ஆசாரியனுக்கும் உரிய பங்கு போனபிறகு மிச்சம் மீதி ஏதாவது நமக்குக் கொடுத்தால் அதைக் கொண்டுவந்து நாம் கூடாரத்தில் வாழவேண்டும்.

சர்வாங்கதகனபலி - நான் ஏறக்குறைய முடித்துவிட்டேன். சர்வாங்க தகனபலியின் நோக்கம் என்ன? 1) தேவனை நெருங்கி வருவதற்காக; 2) தேவனோடு சமாதானமாக இருப்பதற்காக, 3) தேவனுக்கு தானம், நன்கொடை, அன்பளிப்பு கொடுப்பதற்காக. நான் அவருடைய பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதைக் குறிக்க அவருக்குப் பரிசு கொடுப்பதற்காக. சர்வாங்க தகனபலியில் பாவநிவிர்த்தியைப்பற்றிய அம்சம்  இல்லை என்பது என் அபிப்பிராயம். 4) என்னை அங்கீகரிப்பதற்காக, ஏற்றுக்கொள்வதற்காக, என்மேல் பிரியமாயிருப்பதற்காக, என்னில் இன்புறுவதற்காக. பலியின் புகையை தேவன் முகர்ந்துபார்க்கிறார். அதனால் அவர் என்மேல் இன்பமாயிருக்கிறார், என்னில் இன்புறுகிறார், தேவன் என்னை ஏற்றுக்கொள்கிறார்.

சர்வாங்க தகனபலியின் உட்கருத்து என்னவென்றால்

1) நான் என்னையும், எனக்குரிய எல்லாவற்றையும், என்னுடையதையும் நான் தேவனுக்குக் கொடுக்கிறேன். முழுமையான அர்ப்பணம். Consecration. Devotion.

2) நான்தான் பலிபீடத்தில் கிடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எனக்குப் பதிலாக, ஈடாக, மாற்றாக என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒப்புக்கொடுக்கப்பட்டார். substitution.

3) ஒரு நிவாரணமும் இருக்கிறது.

4) இந்தப் பலியில் மெய்யும் இருக்கிறது, நிழலும் இருக்கிறது.

5) இரத்தம் தெளிக்கப்படுகிறது.

இன்னொரு சிறிய காரியத்தைச் சொல்லி நான் முடித்துக்கொள்கிறேன். லூக்கா 15 ஆம் அதிகாரம் உங்களுக்குத்  தெரியும். இளைய மகன் தகப்பன் வீட்டிற்குத் திரும்பிவருகிறான். அந்த இளைய மகனைப்போல் லேவியராகமம் முதல் அதிகாரத்தில் முதன்முதலாக ஒரு தனி நபர் ஆசாரிப்புக்கூடாரத்துக்கு பலியோடு வருகிறான். இரண்டாவது, தன் இளைய மகன் வீட்டிற்குத் திரும்பிவந்ததும் தகப்பன் அவனுக்கு உயர்ந்த ஆடைகளை உடுத்தி, அவன் கைகளுக்கு மோதிரம் போட்டு, அவன் கால்களுக்கு மிதியடி போடுகிறான். உயர்ந்த ஆடைகள், கைகளுக்கு மோதிரம், கால்களுக்கு மிதியடி - பலி கொண்டுவந்தவன் பலியை அங்கு வைத்துவிட்டு வெளியேறவில்லை. கூடாரத்தில் அவன் தேவனை ஆராதிக்கிறான். மூன்றாவது, இளைய மகன் வீட்டிற்கு வந்தபிறகு, தகப்பன் கொழுத்த கன்றை அடித்து விருந்து உண்கிறான். சர்வாங்க தகனபலியில் தனி நபரின் பலியை ஆசாரியர்கள் கொன்று பலிபீடத்தில் வைத்து எரிக்கிறார்கள்.  நம் வாழ்க்கையிலே நாம் பலி கொண்டுவருகிறவனாகவும் இருக்க வேண்டும், பலியோடு தேவனை ஆராதிப்பவனாகவும் இருக்கவேண்டும்; அந்தப் பலி செலுத்துகிற ஆசாரியனாகவும் இருக்க வேண்டும், ஆமென்!

கேள்வி: Painless or Less Pain?

மிருகத்தைக் கொன்றபோது வலி இருந்திருக்காது, வலி இருக்காது  என்று நான் சொல்லவில்லை. வலி அறியாதபடி அல்ல, humaneஆக மிகவும் மனிதாபிமானத்தோடு, தேவன் நம்மை நெறிப்படுத்துகிறார், சிட்சிக்கிறார். ஓர் அறுவைசிகிச்சை நிபுணர் அறுவைசிகிச்சை செய்யும்போது தேவையான அளவுக்குத்தான் வெட்டுவார். 3 மில்லிமீட்டர்தான் வெட்ட வேண்டும் என்றால் அவர் 5 மில்லிமீட்டர் நீளத்துக்கு வெட்டமாட்டார்.  அதுபோல தேவன் நம்மை நடத்துவார். நடத்தும்போது, தேவைக்கு அதிகமாக வலிகளை அவர் கொடுப்பதில்லை. வலி உண்டு, நான் painless என்று சொல்லவரவில்லை, less pain என்று சொன்னேன். painless என்று சொல்வதற்கும் less pain என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.      

கேள்வி: ஏன் வித்தியாசமான மிருகங்கள்? 

"பெரிய பாவம் செய்தால் மாடு கொண்டுவர வேண்டும்; அதைவிடக் கொஞ்சம் சிறிய பாவம் செய்தால் ஆடு கொண்டுவர வேண்டும்; மிகச் சிறிய பாவம் செய்தால் புறா கொண்டுவர வேண்டும்," என்பல்ல இதன் பொருள். அவனவன் தன் திராணிக்குத்தக்கதாகக் கொண்டுவரவேண்டும். ஒருவனால் மாடு கொண்டுவரமுடியும் என்றால், அவன் மாடு கொண்டுவர வேண்டும். மாடு கொண்டுவர முடிந்தவன் புறா கொண்டு வந்தால் தேவன் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார். ஒருவனால் புறாதான் கொடுக்கமுடியும் என்றால் அவன் மாடுதான் கொண்டு வர வேண்டும் என்று தேவன் நிர்பந்திக்கமாட்டார். தேவன் எவ்வளவு கிருபையுள்ளவர் என்று பாருங்கள்.

பழைய ஏற்பாட்டுத் தேவன் வேறு, புதிய ஏற்பாட்டுத் தேவன் வேறு என்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். பழைய ஏற்பாட்டுத் தேவன் பட்சிக்கிற அக்கினி, ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர் என்றும் புதிய ஏற்பாட்டுத் தேவன் கிருபையுள்ள தேவன் என்றும் நினைக்கிறார்கள்.  பழைய ஏற்பாட்டிலும் அவர் கிருபையுள்ள தேவன்தான். கவனியுங்கள்; "உன் திராணிக்கு உன்னால் ஒரு புறாதான் கொண்டுவர முடியும் என்றால், நீ புறாவைக் கொண்டுவா. என்னோடு உள்ள உறவை நீ நேசிக்கிறாய் என்பதையும்,  உன்னை நீ எனக்கு அர்ப்பணம் செய்ய நீ ஆயத்தமாயிருக்கிறாய் என்பதையும், என்னால்தான் நீ வாழ்கிறாய் என்பதை நீ அங்கீகரிக்கிறாய் என்பதையும்  நான் புரிந்துகொள்கிறேன். உன்னுடைய இருதயத்தை த்தான் நான் பார்க்கிறேன். நீ கொண்டுவருவது ஆடா, மாடா, புறாவா என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. நான் அதைப் பார்க்கவில்லை. உன் உள்ளத்தைத்தான் நான் பார்க்கிறேன்," என்று இந்த வித்தியாசமான மிருகங்களின்மூலம் பேசுகிறார்.

கேள்வி: சர்வாங்க தகனபலியைப்பற்றி லேவியராகமத்திற்குமுன்பே முற்பிதாக்கள் பலிசெலுத்தினார்கள் என்றால் அந்த inspiration, revelation  எப்படி அவர்களுக்குக் கிடைத்தது?

தேவன் ஏதோவொரு வகையில் அவர்களோடு பேசியிருக்கிறார். அவர்கள் பலி செலுத்தினார்கள்.  லேவியராகமத்திற்கு வரும்போது தேவன் அதை ஒழுங்குபடுத்துகிறார், நெறிமுறைப்படுத்துகிறார். ஏன்? தேவன் ஏற்கெனவே கொடுத்த சட்டங்களை, ஒழுங்குகளை, அவர்கள் சரிவரப் பின்பற்றாமல் போயிருக்கலாம்; பிற கலாச்சாரங்களில் இருந்த சில பழக்கங்களைப் பின்பற்றியிருக்கலாம். கொஞ்சம் கூட்டல் கழித்தல் நடந்திருக்கலாம். எனவே, லேவியராகமத்திற்கு வரும்போது, “சரி, நீங்கள் செய்ததெல்லாம் போதும். இப்பொழுது நான் நெறிமுறைப்படுத்துகிறேன், ஒழுங்குபடுத்துகிறேன். உங்கள் கற்பனைகளை மூட்டைகட்டி வைத்துவிடுங்கள்," என்று சொல்வதுபோல் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லுகிறார்.

எடுத்துக்காட்டாக, நிம்ரோத் பாபேல் நகரத்தையும், கோபுரத்தையும் கட்டும்போது அங்கு பலி கொடுக்கிறார்கள். அவர்கள் எப்படிப் பலி கொடுத்திருப்பார்கள் என்று கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். இப்போது தேவன், “நான் இப்போது உங்களை மீட்டுக்கொண்டுவந்திருக்கிறேன். உங்கள் தவறுகளையெல்லாம் நிவிர்த்தியாக்கி என்னோடு நேர்த்தியான உறவு கொள்வதற்கு பலிகளை ஏற்படுத்துகிறேன். இனிமேலாவது சரியாக இருங்கள்,” என்று சொல்வதுபோல்  சொல்லிக்கொடுக்கிறார்.


ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலி கொடுக்கக் கொண்டுபோனது சர்வாங்கதகனபலிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஆபிரகாம் ஈசாக்கைப் பலிபீடத்தில் வைக்கிறார். ஈசாக்குக்குப்பதிலாக அங்கு ஒரு ஆடு வருகிறது. இந்த ஈசாக்கை நம்மோடு identify பண்ணவேண்டும். நாம்தான் அங்கு இருந்திருக்கவேண்டும். ஆனால் literalஆக அங்கு ஒன்று நடக்கிறது. இரண்டையும் பார்க்கவேண்டும், நம்மையும் பார்க்கவேண்டும்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் பார்க்கவேண்டும். என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும்,  நான் போயிருக்கவேண்டும். ஆனால், எனக்குப்பதிலாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வந்தார்.

ஈசாக்கைப் பலிபீடத்தில் வைப்பதற்கு ஆபிரகாம் ஏன் அங்கே கூட்டிக்கொண்டு போகிறார்? ஈசாக்கு பிறப்பதற்கு முன்னே ஆபிரகாமுக்கும் தேவனுக்கும் நல்ல இன்பமான, இணக்கமான, இசைவான, அருமையான உறவு இருக்கிறது! ஈசாக்கு பிறந்தபிறகு, ஆபிரகாம் தேவனைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளிவிட்டு,  ஈசாக்கை முன்னுக்குக் கொண்டுவருகிறார். தாத்தாவாக வேண்டிய வயதில் அப்பா ஆகிவிட்டார் இல்லையா. அதனால், "இது என் பிள்ளை. வயதான காலத்தில் நான் பெற்ற பிள்ளை," என்று கொஞ்ச ஆரம்பித்தார். 

நான் ஒரு கேள்வி கேட்கிறேன். தந்தவர் முக்கியமா அல்லது அவர் தந்தது முக்கியமா? Gift or Giver? தந்தவரை விட்டுவிட்டு அவர் தந்தவைகளைக் கொண்டாடுவதுதான் மனித இயல்பு. மனைவி, கணவன், பிள்ளைகள், பெற்றோர், வீடு, வேலை, சுகம், செல்வம், படிப்பு - இவைகளெயெல்லாம் தந்தவரை நாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவர் தந்தவைகளைக் கொண்டாடுவது மனித இயல்பு. இது விழுந்துபோன மனிதனுடைய இயல்பு.

அதுபோல ஈசாக்கைத் தந்தவரை ஆபிரகாம் தாற்காலிகமாகக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளிவிட்டார். ஈசாக்கு வந்ததும் அவருடைய இருதயம் பிரிந்துவிடுகிறது. தேவன் பார்க்கிறார். "ஈசாக்கு வருகிறதற்குமுன் நம் உறவு அவ்வளவு நெருக்கமாக இருந்தது; அவ்வளவு இன்பமாக இருந்தது. ஈசாக்கு வந்தவுடனே என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டாயே! இந்த ஈசாக்கைப் பலி கொடு; எனக்கு வேண்டியது நீ, ஈசாக்கைக் கூட்டிக்கொண்டுவா." ஒரு வார்த்தை பேசாமல் ஆபிரகாம் அழைத்துகொண்டுபோகிறார். பலிபீடத்தின்மேல் வைக்கிறார், கத்தியை எடுத்ததுமே கர்த்தர் நிறுத்துகிறார். "சரி, இப்போது புரிந்துவிட்டது. தற்காலிகமாக நீ என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டிருந்தாய். இப்போது மறுபடியும் உன் இருதயம் சரியாகிவிட்டது. இப்போது நீ ஈசாக்கை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோ." இப்போது ஆபிரகாமுக்குத் தெரியும். "ஈசாக்கு is my possession; but he is not my own. I possess him, but I don’t own him." Loanஇல் வண்டி வாங்கியிருப்போம். வண்டியை we possess it, we use it. ஆனால் தவணையை ஒழுங்காகக் கட்டவில்லையென்றால் வங்கிக்காரர்கள் எப்போது வேண்டுமானாலும் வண்டியைத் தூக்கிகொண்டுபோய்விடுவார்கள். We possess it, but we do not own it. அதுபோல இந்த உலகத்திலே, நான் மூன்று வார்த்தைகள் சொன்னேன், whatever we are, whatever we have and whatever we can, all belong to Him. நான், என்னிடம் இருப்பவை, என்னால் செய்ய முடிந்தவை எல்லாம் அவருக்குச் சொந்தம்.

கேள்வி: லேவியராகமத்தில் உள்ள பலிகளுக்கும் ரோமர் 12:1, 2 இல் சொல்லப்பட்ட பலிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

லேவியராகமத்தில் மிருகங்களைக் கொன்று, அவை செத்தபின் அவைகளைப் பலிபீடத்தில் வைத்தார்கள். ரோமர் 12இல் ஜீவபலியாக என்றால் நாம் உயிரோடே நம்மைப் பலியாகக் கொடுக்கவேண்டும். மேலும் நாம் நம்மை ஜீவபலியாக ஒவ்வொரு நாளும் ஒப்புக்கொடுக்க வேண்டும். லேவியராகமத்தில் கொண்டுவந்த பலி ஒருமுறை கொடுக்கப்பட்டது. இப்போது நாம் நம்மை ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பது ஒவ்வொருநாளும் நடைபெறவேண்டும். இந்த எண்ணம், இந்த ஆவி நமக்கு வேண்டும். whatever we are, whatever we have and whatever we can, all belong to Him இந்த ஆவி, இந்த அர்ப்பணிப்பு. இவ்வாறு நாம் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக நம்மை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதற்கு நமக்குப் போராட்டம் உண்டு. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. we are not living in the Heavens நாம் விழுந்துபோன உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

Thank you.